மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
மே 2022 இல் நடைபெறவுள்ள பிலிப்பைன்ஸ் தேர்தல்களில் தமது வேட்பாளர் மனுக்களை தாக்கல் செய்ய பலர் முன்வந்துள்ளபோதும், கடந்த இரண்டு வாரங்களாக பகிரங்க அரசியல் மோதல்கள் மற்றும் பின்னறை சூழ்ச்சி கணிசமாக அதிகரித்துள்ளன. தேர்தல் போட்டிகள், மனிதர்களின் நினைவில் தீவிரமான ஒன்றாக நிலைத்திருப்பதை உறுதிப்படுத்துமளவிற்கு, அதன் பதட்டங்கள் முன்னோடியில்லாத வகையில் சமூக அமைதியின்மை மற்றும் புவிசார் அரசியல் நெருக்கடியால் தூண்டப்பட்டுள்ளது.
அக்டோபர் 8ஆம் திகதி இறுதித்தவணைக்கு முன்னர் தொண்ணூற்று ஏழு போட்டியாளர்கள் ஜனாதிபதி பதவிக்கு உத்தியோகபூர்வ வேட்புமனுவை தாக்கல் செய்தனர். அடுத்த மாதம் அரசியல் கொடுக்கல்வாங்கல் மற்றும் கூட்டணிகளின் உருவாக்கத்தால் அடையாளப்படுத்தப்படும். ஏனெனில் நவம்பர் 15 வரை பதவிக்கான அனைத்து உத்தியோகபூர்வ வேட்பாளர்களும் வாபஸ் பெறலாம் மற்றும் வேறு பதவிக்கும் போட்டியிடலாம்.
ஜனாதிபதி பதவிக்கான முன்னணி வேட்பாளர்களை ஆய்வு செய்தால், பிலிப்பைன்ஸில் ஆளும் உயரடுக்கினர் நாட்டின் வரலாற்றில் மிகவும் வலதுசாரி தேர்தல் பிரச்சாரத்தை நடத்தத் தயாராகி வருகின்றனர்.
இதில் முக்கியமான மூன்று கேள்விகள் உள்ளன:
30,000 க்கும் மேற்பட்ட வறிய பிலிப்பினிய மக்களைக் கொன்ற கொலைகார 'போதைப்பொருள் மீதான போரை' நடத்திய ரோட்ரிகோ டுரேற்ற நிர்வாகத்தின் பாசிச கொள்கைகளை புதிய நிர்வாகம் தொடருமா?
இதனுடன் தொடர்புபட்டு, புதிய நிர்வாகமானது உழைக்கும் மக்களிடமிருந்து வரும் எவ்விதமான போராட்டத்தை எப்படி ஒடுக்கும். ஏனெனில் முதலாளித்துவ வர்க்கம் 20 சதவிகிதத்திற்கும் குறைவான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டதால் தொற்றுநோயால் பாதிக்கப்படும் நாட்டில் உற்பத்தியை அதிகரிக்க முயற்சிக்கிறது?
இறுதியாக, இப்பகுதியில் போர் பதட்டம் ஒரு உச்ச நிலையை எட்டும்போது, அடுத்த ஜனாதிபதி மணிலாவின் புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளை வாஷிங்டனில் இருந்து பெய்ஜிங்கை நோக்கிய டுரேற்றவின் மறுநோக்குநிலையை தொடருவாரா அல்லது அவர்கள் இந்த கொள்கையிலிருந்து பின்வாங்குவார்களா?
பதவி விலகும் ஜனாதிபதி ரோட்ரிகோ டுரேற்ற இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக வருவதற்கு அரசியலமைப்பு தடை விதிக்கப்பட்டுள்ளது. பரவலாக எதிர்பார்க்கப்படும் அலுவலகமான துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என்று கடந்த வாரம் அவர் ஆச்சரியமான அறிவிப்பை வெளியிட்டார். டுரேற்ற ஒரு சமீபத்திய கருத்துக் கணிப்பை மேற்கோள் காட்டி அவரது புகழ் குறைந்து வருவதைக் குறிப்பிடுகிறார். இருப்பினும் அவரது முக்கிய கணக்கீடு, தனது ஒரு விசுவாசமான வாரிசின் வெற்றியைப் பெற முயற்சிப்பதாகும்.
போதைப்பொருள் மீதான அவரின் போருக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) டுரேற்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார், மேலும் அடுத்த ஜனாதிபதியால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணையின் அணுகுமுறை மற்றும் முடிவை பெரிய அளவில் ஒழுங்கமைக்க முடியும்.
ஜனாதிபதி பதவிக்கான முன்னணி வேட்பாளர்களில் 1972 முதல் 1986 'மக்கள் சக்தி' புரட்சியில் அவர்கள் வெளியேற்றப்படும் வரை ஒரு கொடூரமான இராணுவ சட்ட ஆட்சியின் மூலம் நாட்டை ஆட்சி செய்த முன்னாள் சர்வாதிகாரிகளான பேர்டினாண்ட் மற்றும் இமெல்டா ஆகியோரின் மகனான பேர்டினாண்ட் 'போங்பாங்' மார்க்கோஸ் ஜூனியர் அடங்குகின்றார். மார்க்கோஸின் வேட்புமனு தாக்கல், சர்வாதிகாரத்தை வரலாற்று ரீதியாக மீழ் உயிர்ப்பு செய்வதற்கான வெளிப்படையான முயற்சியையும் மற்றும் இன்று அதன் முறைகளையும் பயன்படுத்தப்படலாம் என்பதை காட்டுகின்றது.
மார்க்கோஸ் அவரது பெற்றோரின் ஆட்சியின் போது அரசியல் அப்பாவியாக இருக்கவில்லை. அவர் வயது முதிர்ந்தவராக இருந்ததுடன் மற்றும் 1980 களில் அவர் மார்க்கோஸின் சர்வாதிகாரத்தின் ஒரு பகுதியாக வடக்கு மாகாணமான இலோகோஸ் நோர்டேவின் துணை ஆளுநராகவும் ஆளுநராகவும் இருந்தார். அவர் தனது குடும்பத்தினால் அரசிலிருந்து திருடப்பட்ட பில்லியன் கணக்கான டாலர்களைப் பயன்படுத்தி பணக்காரராக வளர்ந்தார்.
மார்க்கோஸ், இராணுவச் சட்ட சர்வாதிகாரத்திற்கு மறுவாழ்வு கொடுப்பதை தனது பிரச்சாரத்தின் ஒரு மையமாக ஆக்கியுள்ளார். இதனை பிலிப்பைன்ஸ் வரலாற்றின் 'பொற்காலம்', கட்டுப்பாடு மற்றும் முன்னேற்றத்தின் ஒரு காலம் எனக் குறிப்பிட்டுள்ளார். அதன்படி நாட்டின் பாடப்புத்தகங்களை மீண்டும் எழுத அவர் பரிந்துரைக்கிறார். மேலும் அவரது ஆதரவாளர்கள் கடந்த காலத்தை உண்மையிலேயே மிகப்பெரிய அளவில் பொய்யாக்க பிரதான மற்றும் சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்கின்றனர்.
ஜனாதிபதி பதவிக்கு மற்றொரு முன்னணி போட்டியாளர், ஜனாதிபதி மகள் சாரா டுரேற்ற-கார்பியோ ஆவார். தெற்கு நகரான டவாவோவின் நீண்டகால நகர முதல்வர் மற்றும் துணை நகர முதல்வராக டுரேற்ற-கார்பியோ தனது தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி குற்றச்செயல்கள் எனக் கூறப்பட்டவற்றை ஒடுக்க பாசிச இரும்பு ஆட்சியை மேற்பார்வையிட்டார். டுரேற்ற-கார்பியோ ஜனாதிபதியாக போட்டியிட விரும்புவதாக அறிவிக்கவில்லை, மேயராக மீண்டும் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். அடுத்த மாத காலப்பகுதியில் அவர் அதற்கு பதிலாக 2016 இல் அவரது தந்தை பயன்படுத்திய ஒரு தந்திரோபாயம் போல், அதனை வாபஸ் பெற்று ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட திரும்பலாம். டுரேற்ற-கார்பியோ ஜனாதிபதியானால் பதவி விலகும் ஜனாதிபதியின் பாசிசக் கொள்கைகளின் அதே தொடர்ச்சியை பிரதிநிதித்துவப்படுத்துவார்.
ஜனாதிபதிக்கான முன்னணி வேட்பாளர்களின் பட்டியல் இதேபோன்ற பாசிச மற்றும் தீவிர வலதுசாரி பெயர்களால் நிறைந்துள்ளது. இது கொலைகாரர்கள் மற்றும் தீயவர்களின் அரசியல் போக்கிரி காட்சிக்கூடமாக உள்ளது. அவற்றில் பின்வருவோர் அடங்குவர்:
மார்க்கோஸ் சர்வாதிகாரத்தின் கீழ் இராணுவத்தின் சித்திரவதை அமைப்பின் தலைவராக இருந்த செனட்டர் பன்ஃபிலோ 'பிங்' லாக்சன். இவர் பிலிப்பைன்ஸ் தேசிய காவல்துறையின் தரத்திற்கு உயர்வதற்கு முன், குற்றவாளிகள் எனப்பட்டவர்களின் சட்டவிரோத கொலைக்காக தேசியளவில் தீயபெயர் பெற்றவர்.
குத்துச்சண்டை வீரராக புகழ்பெற்ற செனட்டர் மானி பாக்கியாவோ டுரேற்றவின் 'போதைப்பொருள் மீதான போரின்' தீவிர ஆதரவாளர் மற்றும் மரண தண்டனையை மீட்டெடுப்பதற்கும், பன்னிரண்டு வயதிலேயே 'குற்றவாளிகளுக்கு' பரவலாகப் பயன்படுத்துவதற்கும் வாதிடுகிறார்.
முன்பு ஒரு தொலைக்காட்சி பிரபலமாக இருந்த மணிலா நகர முதல்வர் இஸ்கோ மோரேனோ டுரேற்றவின் முன்னணி ஆதரவாளராக இருந்தார். மற்றும் அவரது வலதுசாரி ஜனரஞ்சகவாதத்திற்கு பெயர் பெற்றவரும், சட்டம்ஒழுக்கிற்கு அழைப்பு விடுத்து மற்றும் நகரத்தின் கணிசமான சீன பிலிப்பைன்ஸ் மக்களை இதற்கு பலிக்கடாவாக்குகின்றார்.
துணை ஜனாதிபதி லெனி ரோபிரேடோவின் வேட்புமனுவின் பின்னால் டுரேற்றக்கு எதிரான முதலாளித்துவ அடிப்படையிலான எதிர்ப்பாளர்கள் அணிவகுத்து நிற்கின்றனர். ரோபிரேடோ லிபரல் கட்சியின் (LP) தலைவராக உள்ளார். இது மார்க்கோஸிற்கு எதிரான முன்னணி ஆளும் வர்க்க போட்டியாளரான பெனிக்னோ அக்கினோ (1983 இல் படுகொலை செய்யப்பட்டது) மற்றும் ஜனாதிபதிகள் கொரசோன் அக்கினோ (1986-1992) மற்றும் பெனிக்னோ அக்கினோ ஜூனியர் (2010–2016) ஆகியோரின் கட்சியாகும்.
டுரேற்றவினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட அப்பட்டமான பாசிசம் மற்றும் வலதுசாரி ஜனரஞ்சகவாதத்திற்கு எதிராக மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தின் பாதுகாவலராக ரோபிரேடோ பரவலாக சித்தரிக்கப்படுகிறார். எவ்வாறாயினும், உண்மை என்னவென்றால், லிபரல் கட்சி டுரேற்றவின் உருவாக்கம் மற்றும் நாட்டில் தீவிர வலதுசாரி அரசியலின் தற்போதைய அரசியல் சூழல் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகித்தது. பெனிக்னோ அக்கினோ ஜூனியர் நிர்வாகம் தான் அப்போது லிபரல் கட்சியின் உறுப்பினரான தவாவோ நகரசபைத் தலைவரை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நபராக மாற்றி, நாடு முழுவதும் நகரசபைத் தலைவர்களுக்கான முன்னோடி வழி என அவரது 'இரும்பு ஒழுக்ககட்டுப்பாட்டை' சித்தரிக்கிறது.
அடிப்படையில், லிபரல் கட்சி மற்றும் அக்கினோ நிர்வாகத்தின் கொள்கைகள் மற்றும் தன்மை பற்றிய கசப்பான பொது ஏமாற்றமே மார்க்கோஸின் இராணுவச் சட்ட ஆட்சியைச் சுற்றியுள்ள திருத்தல்வாதத்தின் சூழலை சாத்தியமாக்கியது. சர்வாதிகாரத்தின் ஜனநாயக எதிர்ப்பாளர்களாக தங்களைக் காட்டிக்கொண்ட அக்கினோ நிர்வாகங்கள் தொழிலாள வர்க்கம் மற்றும் விவசாயிகள் மீதான மிருகத்தனமான அடக்குமுறைகளால் குணாதிசயப்படுத்தப்பட்டன. இதில் இராணுவம் மற்றும் காவல்துறையினரால் நிராயுதபாணிகளான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான பல படுகொலைகள் அடங்கும். அவர்களின் பாரிய எந்தவொரு சர்க்கரை பண்ணைகளையும் பாதிக்கும் எந்த அர்த்தமுள்ள நில சீர்திருத்தத்தையும் அவர்கள் முறியடித்தனர். உண்மையில் லிபரல் கட்சி மற்றும் அக்கினோ நிர்வாகங்கள் தான் மார்க்கோஸ் குடும்பத்தினரை பிலிப்பைன்ஸுக்கு திரும்பவும், அவர்களது அரசியல் முக்கியத்துவமும் மற்றும் நம்பகத்தன்மை மீட்டமைக்கப்படவும் முக்கிய காரணமாக இருந்தன.
பாசிச மற்றும் வலதுசாரி பிரமுகர்களுடன் பயனுள்ள கூட்டணியின் லிபரல் கட்சியின் கொள்கையை ரோபிரேடோ தொடருவார். லிபரல் கட்சியின் செனட்டர் பதவிக்கான பட்டியலில் தீவிர வலதுசாரி மாக்தலோ கட்சியின் சென்.அன்டோனியோ ட்ரில்லானஸ் உள்ளார். ஒரு கடற்படை அதிகாரியாக ஒரு இராணுவ சதித்திட்டத்தில் அதிகாரத்தைக் கைப்பற்ற இரண்டு சந்தர்ப்பங்களில் முயற்சித்ததற்காக ட்ரில்லேன்ஸ் முக்கியத்துவம் பெற்றார். மாக்தலோ கட்சி ஒரு இராணுவ ஆட்சியை உருவாக்கி, அப்போதைய ஜனாதிபதி குளோரியா மக்கபகல்-அரோயோவிடம் இருந்து ஆட்சியை பிடிக்க முயன்றது.
ரோபிரேடோ தனது சொந்த அரசியல் கட்சியின் நற்பெயர் எவ்வளவு கெட்டுப்போகிறது என்பதை அங்கீகரிக்கிறார். லிபரல் கட்சி பல தசாப்தங்களாக மஞ்சள் நிறத்துடன் தொடர்புடையது. 'மக்கள் சக்தி' மற்றும் மார்க்கோஸின் வெளியேற்றத்தை கொண்டாடும் ஒவ்வொரு பதாகையும் மஞ்சள் நிறத்தில் உள்ளது. இப்போது அவர் தலைவராக இருக்கும் கட்சியின் வெறுக்கப்படும் பாரம்பரியத்தை புதைப்பதற்கான மிக மேலோட்டமான முயற்சியாக ரோபிரேடோ தனது பிரச்சாரமானது இளஞ்சிவப்பு நிறத்தைப் பயன்படுத்துவதாக அறிவித்தார்.
வாஷிங்டன் அதன் முன்னாள் காலனியில் நடத்தப்பட்ட ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு முக்கிய, சில நேரங்களில் தீர்க்கமான பாத்திரத்தை வகித்திருக்கிறது. இரத்தக்களரியான மார்க்கோஸ் சர்வாதிகாரம் நிக்சன், ஃபோர்ட், கார்ட்டர் மற்றும் ரீகன் நிர்வாகங்களின் ஆதரவையும் அனுமதியையும் பெற்றது. கொரசோன் அக்கினோவின் நிர்வாகம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவுடன் முடுக்கிவிடப்பட்டு நீடித்தது.
சீனாவின் பொருளாதார உயர்வை எதிர்கொண்டு வாஷிங்டன் தனது உலகளாவிய மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கான தீவிரமான நகர்வுகள் உலகை ஒரு பேரழிவு தரும் உலகப் போரின் விளிம்பிற்கு கொண்டு வந்துள்ளது மற்றும் முழு ஆசிய-பசிபிக் பிராந்தியத்தையும் தொடர்ச்சியான வெடிக்கும் புள்ளியாக மாற்றியுள்ளது. இந்தச் சூழலில், சீனாவிலிருந்து முதலீட்டைப் பெற விரும்பும் டுரேற்ற, வாஷிங்டனில் இருந்து பெய்ஜிங்கிற்கு மணிலாவின் இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை கணிசமாக மாற்றியமைத்தார்.
இதானால் எதிர்வரவிருக்கும் தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளரின் புவிசார் அரசியல் விசுவாசங்களும் ஒரு அடிப்படை கேள்வியாகும். பெரும்பாலான முன்னணி வேட்பாளர்கள் டுரேற்றவின் கொள்கைகளின் தொடர்ச்சியை ஆதரிப்பதாகத் தெரிகிறது. இருப்பினும் பெரும்பாலானவர்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளனர். இருப்பினும், வாஷிங்டனின் நலன்களுடன் தெளிவாகப் பிணைக்கப்பட்ட ஒரே வேட்பாளர் ரோபிரேடோ ஆகும்.
பல மாதங்களாக, வேட்புமனுவை அறிவிப்பதற்கான காலக்கெடு நெருங்கிவிட்டதால் ரோபிரேடோ தயங்கி அவர் போட்டியிட விரும்புவதை தெரிவிக்க மறுத்துவிட்டார். இது அவர் அரசியல்ரீதியான நேர்மையின் காரணமாகத் தெரியவில்லை. அவருடைய தயக்கம் உண்மையானதாக இருந்தது. அக்டோபர் 4 ம் தேதி, மணிலாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் இடைக்கால பொறுப்பாளர், ஹீதர் வரியாவா, துணை ஜனாதிபதியின் அலுவலகத்திற்குச் சென்று ரோபிரேடோவை தனிப்பட்ட முறையில் சந்தித்தார். பிலிப்பைன்ஸும் அமெரிக்காவும் 'வலுவான நட்பு நாடுகள்' என்று வரியாவா கூறியதாக பத்திரிகைகளில் மேற்கோள் காட்டப்பட்டது. மேலும் வாஷிங்டன் நாட்டிற்குத் தேவையான தடுப்பூசிகளை வழங்கும் என உறுதியளித்தார்.
அந்த பிற்பகலில், ரோபிரேடோவின் தரப்பினர் மறுநாள் காலையில் ரோபிரேடோ ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடுவதாக அறிவித்தனர். அக்டோபர் 5 அன்று, பிரகாசமான இளஞ்சிவப்பு உடையணிந்த ரோபிரேடோ, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார்.
1சாம்பையன் என்ற குடை அரசியல் அமைப்பானது, சீனாவுடனான உறவை எதிர்ப்பதும் மற்றும் தென் சீனக் கடலில் மணிலாவின் உரிமையை அதிகரிப்பதும் மட்டுமே அக்கறை கொண்ட லெனி ரோபிரேடோவின் ஜனாதிபதி வேட்பாளர் போட்டிக்கு தனது ஒப்புதலை வழங்குவதாக அறிவித்தது.
பிலிப்பைன்ஸில் உள்ள ஸ்ராலினிசம் மற்றும் போலி-இடது அரசியலின் பல்வேறு பிரிவுகள் பல்வேறு முதலாளித்துவ வேட்பாளர்களுடனும், குறிப்பாக ரோபிரேடோவுடன் உறவுகளை வைத்துள்ளன. 1990 களில் பிலிப்பைன்ஸ் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (CPP) மற்றும் பல்வேறு சமூக ஜனநாயக அமைப்புகளிலிருந்து பிரிந்து உருவான ஒரு அரசியல் அமைப்பான அக்பயான் லிபரல் கட்சியுடன் திறம்பட இணைந்தது. அக்பயான் நாடாளுமன்ற உறுப்பனரான சென். ரிசா ஹொன்டிவேரோஸ் மற்றும் லிபரல் கட்சியும் ரோபிரேடோ மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட போட்டியிடுகின்றன.
போபோய் லக்மனால் நிறுவப்பட்ட பல்வேறு அரசியல் அமைப்புகள், 1990களில் பிலிப்பைன்ஸின் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற Sanlakas, Partido Lakas ng Masa, Laban ng Masa உட்பட ரோபிரேடோவுடன் அவரது நீண்ட தயக்க காலத்தில் உறவுகளை ஏற்படுத்த முயன்றன. அக்டோபர் 3 ம் தேதி, Laban ng Masa வின் தலைவரான வால்டன் பெல்லோ, “Laban ng Masa சாத்தியங்கள் பற்றி பேச கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக ரோபிரேடோவுடன் ஒரு சந்திப்பை நாடியது. ஆனால் அவரும் அவருடைய தரப்பினரும் எங்களுக்கு நேரத்தை கொடுக்கவிரும்பவில்லலை”. அவர் 'முன்னாள் டுரேற்றவின் கூட்டாளிகள்' மற்றும் 'வலதுசாரிகள்' ஆகியவற்றுடனான 'தொடர்புக்காக' ரோபிரேடோவை கண்டனம் செய்தார்.
Laban ng Masa ஏமாற்றத்துடன் 'தொழிலாள வர்க்கத்தின் சுயேட்சை வேட்பாளராக' தொழிற்சங்கத் தலைவர் லியோடி டு குஸ்மன் இனை நிறுத்துவதாக அறிவித்தது. டு குஸ்மனும் ரோபிரேடோவும் ஒரே நாளில் தங்கள் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர்.
ஒரு நாளுக்குள், இந்த 'சுயாதீன தொழிலாள வர்க்கம்' வேட்பாளர் என்று கூறப்படுபவர் ரோபிரேடோவின் வேட்புமனுவை பாராட்டி ஒரு உத்தியோகபூர்வ கட்சி அறிக்கையை வெளியிட்டார்: 'Laban ng Masa ஜனாதிபதி பதவிக்கு VP லெனி ரோபிரேடோவின் வேட்புமனுவை வரவேற்கின்றது. நாங்கள் அவரது மேடையிலிருந்து கேட்க ஆவலுடன் காத்திருக்கிறோம் ... டுரேற்றவை அவர் எப்படி சிறைக்குள் கொண்டுவர விரும்புகிறார் என்பது பற்றியும் கேட்க ஆவலுடன் காத்திருக்கிறோம் ... எங்களுக்கும் எங்கள் ஜனாதிபதி வேட்பாளருக்கும் இந்த முக்கிய விடயங்களில் அவளுடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பை வரவேற்கிறோம்” என அதில் குறிப்பிட்டார்.
பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியும், அதன் அரசியல் நிலைப்பாட்ட பின்பற்றும் பல்வேறு சட்டபூர்வமான அமைப்புகளும் ஒரு வேட்பாளரையும் இன்னும் அங்கீகரிக்கவில்லை. ஆனால் அவர்கள் ஒருவருடன் உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள வேலை செய்கிறார்கள். பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர் மற்றும் தத்துவார்த்த தலைவர் ஜோஸ் மா. சிஸன், பாக்கியோ, மோரேனோ மற்றும் ரோபிரேடோ ஆகியோரின் வேட்புமனுக்கள் குறித்து முகப்புத்தகத்தில் உற்சாகமான அறிக்கைகளை வெளியிட்டுள்ளார்.
பிலிப்பைன்ஸின் கம்யூனிஸ்ட் கட்சி 2016-17 இல் டுரேற்றக்கு முழு ஆதரவு அளித்து, அவர்கள் அவரை இடதுசாரியாக ஊக்குவித்தனர். மற்றும் போதைப்பொருட்களுக்கு எதிரான அவரின் போரை ஆதரித்துடன் மற்றும் அவரது அமைச்சரவைக்கு வேட்பாளர்களை தேர்ந்தெடுத்தனர். வலதுசாரியாக அல்லது பாசிசவாதியாக இருந்தாலும் கட்சி அவர்களுடன் கூட்டணி வைக்காதுவிட்டாலும் வேட்பாளருடனான உறவிலிருந்து நன்மைகளைப் பெற முடியும் என்று கட்சித் தலைமை நம்பினால் ஆதரிக்கும் என்றது.
பிலிப்பைன்ஸில் தேர்தல்கள் மிகவும் இரத்தக்களரியானதாகவே உள்ளன. இதன்போது நூற்றுக்கணக்கானோர் அடிக்கடி உயிரிழக்கிறார்கள். தொழிலாள வர்க்கத்தை எவ்வாறு ஒடுக்குவது என்பதோடு வாஷிங்டன் மற்றும் பெய்ஜிங் உடனான உறவுகளுக்கு இடையே எப்படி பேச்சுவார்த்தை நடத்துவது என்ற ஆளும் உயரடுக்கின் பல்வேறு பிரிவுகளுக்கிடையேயான மோதல் என்பது ஒரு கொலைகார விவகாரமாகும். அதில் பாதிக்கப்பட்டவர்கள் ஏழைகள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுமாவர்.
பிலிப்பைன்ஸில் இடதுசாரி என்று அழைக்கப்படும் எந்த கட்சியும் இந்த முழு அழுகிய விவகாரத்திலிருந்தும் மற்றும் முதலாளித்துவ வர்க்கத்தின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் தொழிலாள வர்க்கத்தை உடைக்க போராடவில்லை. தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனம், தேசியவாதத்தின் பெயரால் உயரடுக்குடனான கூட்டணியினால் அல்லாது, ஒரு சர்வதேசவாத, சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அதன் சொந்த நலன்களைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தின் மூலம் மட்டுமே பாதுகாக்க முடியும். இதுதான் இன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவால் மட்டும் முன்னெடுக்கப்படும் ட்ரொட்ஸ்கிசத்தின் வேலைத்திட்டமாகும்.