மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
கொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடங்கி அண்மித்து இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர், உலகெங்கிலும் வர்க்க போராட்டத்தை ஏற்படுத்தும் ஆழ்ந்த தாக்கங்களுடன், அமெரிக்காவில் ஒரு வேலைநிறுத்த இயக்கம் வேகமெடுத்து வருகிறது.
ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஏற்கனவே வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். செவ்வாயன்று நான்கு மாநிலங்களில் வேலைநிறுத்தத்தைத் தொடங்கிய கெல்லோக் (Kellogg) உணவு உற்பத்தித்துறை தொழிலாளர்கள்; மேற்கு பகுதியில் நியூ யோர்க், மாசசூசெட்ஸ் மற்றும் மேற்கு கடற்கரையின் ஆயிரக்கணக்கான செவிலியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள்; கென்டக்கியில் நூற்றுக்கணக்கான மதுபான உற்பத்தி ஆலை தொழிலாளர்கள்; வடக்கு அலபாமாவில் 1,000 க்கும் அதிகமான வோரியர் மெட் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களும் இதில் உள்ளடங்குவர். சியாட்டிலில் 2,000 மரவேலை தச்சர்களின் ஒரு வேலைநிறுத்தம் சமீபத்தில் தச்சர்களின் ஒருங்கிணைந்த சகோதரத்துவ சங்கத்தால் (United Brotherhood of Carpenters) முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.
பத்தாயிரக் கணக்கான தொழிலாளர்கள் ஏற்கனவே வேலைநிறுத்த நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளனர் அல்லது விரைவில் வேலைநிறுத்த நடவடிக்கைக்கு வாக்களிக்க உள்ளனர். இதில் தொலைக்காட்சி மற்றும் திரைப்பட தயாரிப்புத் துறையின் 60,000 தொழிலாளர்கள், வடக்கு கலிபோர்னியாவில் 24,000 Kaiser Permanente செவிலியர்கள் மற்றும் மிட்வெஸ்டில் 11,000 John Deere ஆலை தொழிலாளர்களும் உள்ளடங்குவர். டேனா இன்க். வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி ஆலையின் 3,500 தொழிலாளர்களின் வேலைநிறுத்த நடவடிக்கைக்கான கோரிக்கைகள் பரந்தளவிற்குச் சென்றன என்றாலும், பெருநிறுவன சார்பு ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்கள் சங்கமும் (UAW) மற்றும் ஐக்கிய எஃகுத்துறை தொழிலாளர்கள் சங்கமும் அவர்கள் விருப்பத்திற்கு மாறாக அவர்களை வேலை செய்ய நிர்பந்தித்துள்ளன.
அமெரிக்காவில் பல தலைமுறைகளாக இல்லாத மிகப் பெரிய வேலைநிறுத்த இயக்கத்திற்கான சாத்தியக்கூறு கட்டமைந்து வருகிறது. இது, அமெரிக்க தொழிலாளர்கள் நம்பிக்கையற்ற பிற்போக்குத்தனமானவர்கள் மற்றும் பின்தங்கியவர்கள் என்று தார்மீக தன்மையற்ற போலி-இடது குழுக்கள் கூறும் வாதங்களைப் பொய்களாக அம்பலப்படுத்துகிறது. தெற்காசியாவில் ஏற்கனவே மில்லியன் கணக்கான தொழிலாளர்களும் ஐரோப்பிய மற்றும் இலத்தீன் அமெரிக்காவில் பத்தாயிரக் கணக்கானவர்களும் ஈடுபட்டுள்ள ஓர் உலகளாவிய வேலைநிறுத்த இயக்கத்தில் அமெரிக்க தொழிலாளர்கள் அவர்கள் இடத்தை எடுக்க நகர்ந்து வருகிறார்கள். தெற்கு ஆபிரிக்காவில், இந்த வார தொடக்கத்தில் 155,000 உலோகத்துறை தொழிலாளர்கள் ஒரு காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினார்கள்.
இந்த பெருந்தொற்றின் போது அவர்கள் உட்படுத்தப்பட்ட சகிக்க முடியாத அளவிலான கூடுதல் வேலைச்சுமைகளுக்கு எதிராகவும், தற்போது 5 சதவீதமாக இருக்கும் ஆனால் அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு ஈடு கொடுக்காத சொற்ப கூலி உயர்வுகளுக்கு எதிராகவும் தொழிலாளர்கள் போராடி வருகிறார்கள். நாடெங்கிலும் தொழிற்சாலைகள், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளில், வேலையிட நிலைமைகள், வாரத்திற்கு ஏழு நாட்களும் வேலை அல்லது வழமையாக நாளொன்றுக்கு 12 அல்லது 16 மணி நேர வேலையுடன், அதிகரித்தளவில் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்த நிலைமைக்கு ஒத்திருக்கின்றன.
முதலாளித்துவ ஆளும் வர்க்கம், எல்லா பொது சுகாதார நடவடிக்கைகளையும் இலாபத்திற்கு அடிபணிய செய்துள்ள இந்த பெருந்தொற்றுக்கான அதன் சொந்த குற்றகரமான விடையிறுப்பின் பொருளாதார விளைவுகளை ஈடுசெய்யும் ஒரு பெரும்பிரயத்தன முயற்சியில் தொழிலாளர்கள் மீது இத்தகைய நிலைமைகளைத் திணித்து வருகிறது. இது இந்த பெருந்தொற்றை அளவிட முடியாதளவுக்கு மோசமாக்கி உள்ளது என்பது மட்டுமல்ல, வெறும் ஒரு சில வாரங்களில் முழுமையாக அகற்றக் கூடிய ஒரு நோய்க்கு தேவையில்லாமல் மில்லியன் கணக்கான உயிர்களைப் பலி கொடுத்தது; இது உலகெங்கிலும் படுமோசமான இடப்பெயர்வையும் பற்றாக்குறைகளையும் உருவாக்கி வருகிறது.
தேவையான மூலப்பொருட்கள் மற்றும் துணைப் பொருட்களுக்கு உலகளவில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறைகள் பகுதிசார் தொற்றுநோயாக ஆகி வருவதுடன், துறைமுகங்களில் வாரக் கணக்கில் கப்பல்கள் நிரம்பி கிடப்பதால் நூற்றுக் கணக்கான கண்டெய்னர் கப்பல்கள் வெளியிலேயே வெறுமனே நின்று கொண்டிருக்கின்ற நிலையில் பல தசாப்தங்களில் இல்லாதளவுக்கு கப்பல் போக்குவரத்துச் செலவுகள் அவற்றின் அதிகபட்ச மட்டங்களுக்கு உயர்ந்துள்ளன. ஆனால், ஆளும் வர்க்கத்தின் நிலைப்பாட்டில், இதுவரையிலான எல்லாவற்றையும் விட மிக மோசமாக, மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் பெருந்தொற்று மற்றும் மரணத்திற்கு அவர்களை உட்படுத்தும் வேலைகளை ஏற்க தயங்குவதால், தொழிலாளர் பற்றாக்குறையைப் போக்க கூலிகளை உயர்த்த அவர்கள் நிர்பந்திக்கப்பட்டிருக்கிறார்களாம்.
மனித சகிப்புத்தன்மையை மீறி தொழிலாளர்களை உழைக்க நிர்பந்தித்தும், நியூசிலாந்து மற்றும் சீனா போன்ற நாடுகளின் அரசாங்கங்கள் அவற்றின் எல்லைகளுக்குள் இந்த பெருந்தொற்றை அகற்றும் அவற்றின் 'பூஜ்ஜிய கோவிட்' மூலோபாயங்களைக் கைவிடுமாறு கோரியும் ஆளும் வர்க்கம் இரண்டு தரப்பிலிருந்தும் அழுத்தமளித்த வருகிறது. உலகெங்கிலும் முதலாளித்துவ வர்க்கம் வர்க்க உறவுகளை மறுசீரமைக்கவும் மற்றும் இடைவிடாத சுரண்டலுக்கு ஒரு 'புதிய வழமையை' உருவாக்கவும் இந்த பெருந்தொற்றைப் பயன்படுத்தி வருகிறது.
தொழிலாளர்கள், அமைப்புரீதியான வடிவங்களை அபிவிருத்தி செய்ய வேண்டும், இதன் மூலம் தான் அவர்கள் அமெரிக்கா எங்கிலும் மற்றும் உலகம் முழுவதும் வெடிக்கும் பல்வேறு போராட்டங்களை ஒன்றிணைத்து ஒரு சர்வதேச மூலோபாயத்தின் அடிப்படையில் அவற்றை முன்னெடுத்துச் செல்ல முடியும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, இதன் அர்த்தம், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் இந்த மே மாதம் தொடங்கப்பட்ட சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியை (IWA-RFC) கட்டமைப்பதாகும். எதிர்த்துப் போராடுவதற்கான பெரும் விருப்பத்தை தொழிலாளர்கள் தெளிவாக எடுத்துக்காட்டியிருந்தாலும், எந்தளவுக்கு அவர்களால் ஆளும் வர்க்கத்தின் கொள்கைகளைச் சவால் செய்யும் ஒரு சக்தி வாய்ந்த இயக்கத்தைக் கட்டமைக்க முடியும் என்பது, வேலைநிறுத்தங்களை ஒடுக்கி தொழிலாளர்கள் எதற்காக போராடுகிறார்களோ அதே நிலைமைகளைத் திணிக்க முக்கியமானதாக விளங்கும் தொழிற்சங்கங்களின் இரும்புப்பிடியிலிருந்து உடைத்து சுதந்திரமடைவதற்கான அவர்களின் ஆற்றலைச் சார்ந்துள்ளது.
பைடென் நிர்வாகமும் ஜனநாயகக் கட்சியும் தொழிற்சங்கங்களின் அதிகாரத்துவ எந்திரத்தை வலுப்படுத்தி, அவற்றை நிர்வாகம் மற்றும் அரசுடன் இன்னும் நெருக்கமாக ஒருங்கிணைப்பதன் அடிப்படையில் ஒரு திட்டவட்டமான பெருநிறுவனவாத மூலோபாயத்தைப் பின்பற்றி வருகின்றன. இதுதான் அமசனில் தொழிற்சங்கமயமாக்கலை பைடென் ஊக்குவித்ததற்கான மற்றும் அமெரிக்க வரலாற்றில் மிகவும் 'தொழிற்சங்க-சார்பு' ஜனாதிபதியாக இருக்க அவர் சூளுரைத்ததற்கான உள்நோக்கமாகும்.
அமெரிக்க ஆசிரியர்களின் கூட்டமைப்பு (AFT) ஆசிரியர்களின் பெருவாரியான ஆட்சேபனைகள் இருந்தாலும் பள்ளிகளை மீண்டும் திறப்பதை முன்னெத்துள்ளது, அத்துடன் AFT சங்கத் தலைவர் ராண்டி வெய்ன்கார்டன் இதை நோக்கியே நாளொன்றுக்கு 15 மணி நேரம் செயலாற்றி வருவதாக கூறப்படுகிறது. ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்கள் சங்கம் டேனா இன்க். மற்றும் ஜோன் டீர் ஆலை தொழிலாளர்களை அவர்களின் ஒப்பந்தங்கள் காலாவதியான பின்னரும் வேலையில் வைத்திருக்கிறது, அங்கே வேலையிடங்களில் அவர்கள் தொடர்ந்து காயமடைகிறார்கள் அல்லது அவர்கள் மொத்தத்தில் வேலை செய்ய வேண்டியிருக்காத இடத்தில் நோய்தொற்றுக்கு உள்ளாகிறார்கள்.
ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர் சங்கம் (முன்னதாக பியட் கிறைஸ்லர் என்றிருந்த) Stellantis ஆலை உடனான அதன் தேசிய ஒப்பந்தத்தில் ஒரு தெளிவற்ற ஷரத்தைப் பேரம்பேசியது, அதன்படி அந்நிறுவனம் வாகனத்துறை தொழிலாளர்கள் தொடர்ந்து 90 நாட்களுக்கு அதன் ஸ்டெர்லிங் ஹைட்ஸ் உற்பத்தி ஆலையில் வேலை செய்ய வைத்துள்ளது. கெல்லாக் உணவுபண்ட தயாரிப்பு நிறுவனத்தின் தொழிற்சங்கமான BCTGM சங்கம் (பேக்கரி, மிட்டாய் தயாரிப்புத்துறை, புகையிலை துறை தொழிலாளர்களின் மற்றும் தானிய அரவை தொழிலாளர்களின் சர்வதேச சங்கம்) கடந்த மாதம் நாபிஸ்கோ தொழிலாளர்களின் ஒரு வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது, அவர்கள் திரும்பவும் 16 மணி நேரம் வேலை செய்ய வேலைக்குத் திரும்பி உள்ளனர்.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்த 'தொழிற்சங்கங்கள்' வேலைநிறுத்தங்கள் நடத்துவதைத் திட்டமிட்டு தடுக்கின்றன அல்லது அவை நடத்தப்படும் போது அவற்றை தனிமைப்படுத்தி வருகின்றன. அவை பணவீக்க விகிதத்தை விட குறைவான கூலி உயர்வுகளைக் கொண்ட தரமற்ற ஒப்பந்தங்களைத் திணிக்கின்றன, அதேவேளையில் இந்த உயிராபத்தான பெருந்தொற்றின் போது தொழிலாளர்களை வேலையில் வைத்திருக்க நிர்வாகத்துடன் சூழ்ச்சி செய்கின்றன. “நீங்கள் ஒரு மணி நேரத்திற்கு 22 டாலர் சம்பாதிக்க விரும்பினால், நீங்கள் மற்றொரு வேலையைத் தேட வேண்டியிருக்கும்,” என்று மிச்சிகன் டேனா ஆலையில் ஒரு UAW நிர்வாகி ஒரு தொழிலாளருக்குக் கூறினார்.
இந்த உத்தியோகபூர்வ தொழிற்சங்கங்கள், நிர்வாகம் நியமித்த ஒரு தொழிலாளர் பொலிஸ் படை என்பதற்கு அதிகமாக வேறொன்றுமில்லை. அவை தொழிலாளர்கள் மீது ஆளும் வர்க்கத்தின் சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கைகளைத் திணித்து வருகின்றன ஏனென்றால் அவை பங்குச் சந்தை முதலீடுகளில் பில்லியன் கணக்கான டாலர்களைப் பணயத்தில் வைத்திருப்பதுடன், இன்னும் கூடுதலாக பில்லியன் கணக்கான தொகைகளைப் பெருநிறுவன தொழிலாளர்-நிர்வாக திட்டங்கள் மூலமாக பெருநிறுவனத்திடம் இருந்து நேரடியாக பெறுகின்றன.
1988 இல், முதலாளித்துவ உற்பத்தியின் பூகோளமயமாக்கலைப் பகுப்பாய்வு செய்கையில், உலக உற்பத்தியைப் பூகோளரீதியாக ஒருங்கிணைப்பது அடிப்படையில் உத்தியோகபூர்வ தொழிற்சங்கங்களின் காலாவதியான தேசியவாத மற்றும் முதலாளித்துவ சார்பு நோக்குநிலையைக் கீழறுக்கும் அதேவேளையில், தொழிலாள வர்க்க போராட்டங்கள் உள்ளடக்கத்தில் மட்டுமல்ல வடிவத்திலும் சர்வதேசரீதியாக அபிவிருத்தி அடைவதற்கான நிலைமைகளை உருவாக்கும் என்பதை ICFI முன்கணித்தது.
மூன்று தசாப்தங்களுக்கு பின்னர், தொழிலாள வர்க்கம் வெகுவாக சர்வதேச அளவில் இணைக்கப்பட்டுள்ளதுடன், முன்னெப்போதையும் விட அதிக எண்ணிக்கையில் உள்ளது. ஒரு நாட்டில் ஏற்படும் வெடிப்புகள் காரணமாக ஆலைகளை மூடினாலும் உலகளாவிய பொருளாதாரம் எங்கிலும் அது அலைமோதும் அளவுக்கு, இந்த விநியோகச் சங்கிலி நெருக்கடியே உலகப் பொருளாதாரத்தின் மிக அதிகளவிலான சர்வதேச ஒருங்கிணைப்பை எடுத்துக்காட்டுகிறது. நிறுவனங்களுக்கு எதிராக திருப்பிப் போராட தொழிலாளர்களுக்குச் சக்தி இல்லை என்று பல தசாப்தங்களாக தொழிற்சங்கங்கள் அவர்களுக்குக் கூறி வந்திருந்தாலும், உண்மையில் அவர்கள் உலகளாவிய உற்பத்தி மற்றும் வினியோக சங்கிலியின் எண்ணற்ற மூலோபாய முக்கிய இடங்களைக் கட்டுப்பாட்டில் கொண்டிருப்பதை அவர்கள் கண்டுணர்ந்து வருகிறார்கள்.
இந்த ஆற்றல் தொழிலாளர்களால் நனவுபூர்வமாக செயல்படுத்தப்பட வேண்டும் மற்றும் ஒழுங்கமைந்த வெளிப்பாடு இதற்கு கொடுக்கப்பட வேண்டும். இதற்கு உலகெங்கிலுமான தொழிலாளர்களின் போராட்டங்களுடன் அவர்கள் போராட்டங்களை இணைக்க, சாமானிய தொழிலாளர் கமிட்டிகளின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி என்ற பதாகையின் கீழ் சாமானிய தொழிலாளர் குழுக்களின் வலையமைப்பைக் கட்டமைப்பது அவசியமாகும்.
உலகில் மிகவும் சக்தி வாய்ந்த சமூக சக்தியான தொழிலாள வர்க்கத்தின் பலத்தை அணித்திரட்டுவது இந்த பெருந்தொற்றை முற்றிலுமாக ஒழிக்க அவசியமான கொள்கைகளுக்காக போராடுவதற்கான அடித்தளத்தை வழங்கும் என்பது மட்டுமல்ல, மாறாக தனியார் இலாபத்திற்காக அல்லாமல் மனித தேவைகளின் அடிப்படையில் முதலாளித்துவ அமைப்புமுறையின் அராஜகம் மற்றும் சமத்துவமின்மையை ஒரு திட்டமிட்ட சோசலிச உலக பொருளாதாரத்தைக் கொண்டு பிரதியீடு செய்வதற்கான அடித்தளத்தையும் வழங்கும்.