மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
கடந்த வார இறுதியில், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான AUKUS இராணுவ கூட்டணி பற்றிய பாரதூரமான அறிவிப்பு, அணு ஆயுத சக்திகளுக்கிடையிலான ஒரு பயங்கரமான போரின் வெடிப்புமிக்க கோடுகளை தெளிவாக்கியுள்ளது. பல மாத கால இரகசிய பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், இந்த ஒப்பந்தம், பசிபிக்கில் இரண்டாம் உலகப் போரில் ஜப்பானுக்கு எதிராக இருந்த இந்த கூட்டணி, இந்த முறை சீனாவுக்கு எதிராக புதுப்பிக்கப்படுகின்றது.
நீண்ட தூர அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களுடன் ஆஸ்திரேலியாவை ஆயுதபாணியாக்கும் அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் முடிவால் ஒப்பந்தத்தின் இராணுவத் தன்மை அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது. பென்டகனின் அணுசக்தி போருக்கான ஒட்டுமொத்த மூலோபாயத்தின் ஒரு பகுதியாக, அவர்களின் ஒரே சிந்திக்கக்கூடிய நோக்கம், மேற்கு பசிபிக்கில் சீன அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் போர்க்கப்பல்களை வேட்டையாடுவது மற்றும் சீன நிலப்பகுதிக்கு எதிராக ஏவுகணைகளை ஏவுவதை இயலுமானதாக்குவதாகும்.
இந்த கூட்டணி, இணையவழிப் போர் மற்றும் செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கணனித் தொழில்நுட்பம் மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில்நுட்பப் பகுதிகளின் ஒத்துழைப்புடன், மேலும் ஆஸ்திரேலியா அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் பலத்தை உருவாக்க உதவுவதன் மூலம் கடலுக்கடியிலான தகமைகளை அதிகரிக்க செய்வதாகும். ஆஸ்திரேலியா, அதன் தென்கிழக்கு ஆசியாவை ஒட்டிய தனது வடக்கு இராணுவ வசதிகளுக்கான அமெரிக்க அணுகலை விரிவுபடுத்தும். இது இரண்டாம் உலகப் போரின்போது இருந்ததைப் போல நாட்டை ஒரு பெரிய அமெரிக்க இராணுவத் தளமாக மாற்றும்.
AUKUS உடன்படிக்கைக்கு சீனா உடனடியாக கண்டனம் தெரிவித்துள்ளது. வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர், 'இது பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை தீவிரமாக குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது மற்றும் ஆயுதப் போட்டியை தீவிரப்படுத்துகிறது' என்று அறிவித்தார். அதே நேரத்தில் வாஷிங்டனில் உள்ள சீன தூதரகம் மூன்று நாடுகளையும் 'பனிப்போர் மனநிலை மற்றும் கருத்தியல் தப்பெண்ணங்களுக்காக' குற்றம் சாட்டியது.
அமெரிக்காவின் அச்சுறுத்தலைப் பற்றி பெய்ஜிங் எவ்வளவு தீவிரமாக வலியுறுத்துகிறது என்பது Global Times இல் ஒரு 'சீன இராணுவ நிபுணர்' இன் கருத்துக்களில் வலியுறுத்தப்பட்டது. அணுவாயுதங்களை கொண்ட நாடுகளான சீனாவும் ரஷ்யாவும் அமெரிக்க மூலோபாய கோரிக்கைகளுக்கு சேவைசெய்யும் ஆஸ்திரேலியாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களின் அச்சுறுத்தலை நேரடியாக எதிர்கொள்கின்றன” என்று அவர் எழுதினார்.
ஒரு புதிய 'பனிப்போர்' பற்றிய சீனாவின் குறிப்புகள் இராணுவ மோதலின் அபாயங்களை முழுவதுமாக குறைத்து மதிப்பிடுகின்றன. வாஷிங்டன் போஸ்ட் நிருபர்கள் பொப் வூட்வார்ட் மற்றும் ரொபேர்ட் கொஸ்டாவின் Peril என்ற புதிய புத்தகம், அமெரிக்க கூட்டுத் தலைமைத் தலைவர் ஜெனரல் மார்க் மில்லி, பெய்ஜிங்கை அமைதிப்படுத்துவதற்கும் மற்றும் சீனாவுக்கு எதிராக அணுசக்தி தாக்குதல் உட்பட இராணுவத் தாக்குதலுக்கு உத்தரவிடுவார் என்று அஞ்சிய ஜனாதிபதி ட்ரம்ப்பை தடுப்பதற்கும் அசாதாரண நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறியதை அடுத்து வரும் AUKUS ஒப்பந்தம், ஐரோப்பிய சக்திகளுக்கிடையேயான பிளவை ஆழமாக்கும். அறிவிக்கப்பட்ட கூட்டணியின் 'அதிகூடிய தீவிரத்தின்' விளைவாக அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கான தனது தூதர்களை பிரான்ஸ் முன்னோடியில்லாத வகையில் திரும்பப் பெற்றது. பாரிசில் உள்ள கவலை, ஆஸ்திரேலியாவிற்கு டீசல் மூலம் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்டுவதற்கான 90 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தின் முடிவை மட்டும் இது குறிக்கவில்லை, அது ஒரு பசிபிக் சக்தியாக இருப்பதில் இருந்து தன்னை ஓரங்கட்டப்பட்டதாலும் கவலை கொண்டுள்ளது.
பைடென் நிர்வாகம் சீனாவுடனான அதன் மோதலை பரந்தளவில் தீவிரப்படுத்தும்போது இந்த புதிய ஒப்பந்தம் பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவை முக்கிய நிலைக்கு உயர்த்துகிறது. ஒரு பென்டகன் அதிகாரி கூறியது போல், அமெரிக்காவிற்கு 'ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தை விட சிறந்த நட்பு நாடுகள் இல்லை.' இதன் விளைவாக, ஐரோப்பா உட்பட சீனாவிற்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ நிலைப்பாட்டை எடுக்க அனைத்து முக்கிய சக்திகளும் அதிக அழுத்தத்தில் உள்ளன. ஆசியாவில், பைடென் நிர்வாகம் ஏற்கனவே நாற்புற பாதுகாப்பு உரையாடல் அல்லது 'குவாட்' எனப்படும் ஜப்பான் மற்றும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுடன் ஒரு அரை இராணுவ கூட்டணியை மேம்படுத்தியுள்ளது. அதன் தலைவர்களின் முதல் நேருக்கு நேர் கூட்டம் இந்த வாரம் வாஷிங்டனில் நடைபெற உள்ளது.
வாஷிங்டனின் போர் உந்துதல் வானத்திலிருந்து விழவில்லை. மாறாக, ஒபாமா நிர்வாகத்தில் ஆரம்பித்த 'ஆசியாவில் முன்நிலை' இல் தொடங்கி, இராஜதந்திர ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் சீனாவை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் தீவிரமான நகர்வுகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. அதே நேரத்தில் இந்தோ-பசிபிக் முழுவதும் அதன் பெரும் இராணுவப் படைகளை மறுசீரமைத்து, கூட்டணி, மூலோபாய கூட்டாண்மை மற்றும் அடிப்படை ஏற்பாடுகளை ஒருங்கிணைத்து சீனாவை சுற்றிவளைக்கவும் மற்றும் போருக்கும் தயாராகின்றது.
சீனாவின் அசாதாரண பொருளாதார வளர்ச்சி, அமெரிக்க உலக மேலாதிக்கத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்ற அச்சமே, அமெரிக்க போர் உந்துதலுக்குப் பின்னால் உள்ளது. அந்த கவலைகள் கோவிட்-19 தொற்றுநோயால் விரிவடைந்துள்ளன. இது உள்நாட்டில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக நெருக்கடியை ஆழப்படுத்தி, மேலும் சீனா மீதான அமெரிக்க பொருளாதார மேலாதிகம் சுருங்குவதற்கும் வழிவகுத்தது. கடந்த ஆண்டு சீனப் பொருளாதாரம் 2.3 சதவிகிதம் வளர்ச்சியடைந்தது, அமெரிக்க மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.3 சதவிகிதம் சுருங்கியது. சில பொருளாதார வல்லுநர்கள் 2025 க்குள் பரந்த பொருளாதார அடிப்படையில் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ள முடியும் என்று கணித்துள்ளனர்.
பாரிய வர்த்தகப் போர் தடைகள் மற்றும் ஹூவாய் போன்ற சீன நிறுவனங்களுக்கு எதிரான தண்டனையான நடவடிக்கைகள் முதல் தென்சீன மற்றும் கிழக்கு சீனக் கடல்களில் ஆத்திரமூட்டும் கடற்படை நடவடிக்கைகள் மற்றும் தைவானுடன் அமெரிக்கா உறவை ஊக்குவித்தல் வரை ட்ரம்பின் அனைத்து சீன எதிர்ப்பு நடவடிக்கைகளையும் தக்கவைத்துக் கொள்வதை பைடென் நிர்வாகம் விரைவாக நிரூபித்துள்ளது. வூஹான் ஆய்வுக்கூட பொய் மற்றும் சீனாவை கொச்சைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட வீகர் 'இனப்படுகொலை' குற்றச்சாட்டுகள் மற்றும் போருக்கான தயாரிப்பில் பொதுமக்களின் கருத்தை விஷமாக்குவது போன்ற ஒரு விஷமத்தனமான பிரச்சாரமும் சேர்ந்துள்ளது.
மார்ச் மாதத்தில், அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் கட்டளையகத்தின் தலைவரான அட்மிரல் பிலிப் டேவிட்சன் சீனாவுடன் அமெரிக்கா ஆறு வருடங்களுக்குள் போரில் ஈடுபடலாம் என்று எச்சரித்தது மற்றும் சீனாவுக்கு எதிராக புதிய ஆயுதங்களை உருவாக்குவது உட்பட தனது கட்டளையகத்தின் வரவு-செலவுத் திட்டத்தை இரட்டிப்பாக்க அழைப்பு விடுத்தார். பதவிக்கு வரவிருக்கும் தலைமை அட்மிரல் ஜோன் அகிலினோ, சீனாவுடனான மோதல் 'பெரும்பாலானவர்கள் நினைப்பதை விட எங்களுக்கு மிகவும் அண்மையில் உள்ளதாக' கருத்து தெரிவித்துள்ளார்.
போருக்கான முன்னேறிய அமெரிக்க ஏற்பாடுகள், அமெரிக்க ஆளும் வட்டாரங்களில், சீனா அமெரிக்காவை பொருளாதார ரீதியாக முந்துகிறது என்ற அச்சத்தால் மட்டுமல்லாமல், கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் ஆழமடைந்து வரும் சமூக சமத்துவமின்மையால் அசாதாரண சமூக பதட்டங்கள் தூண்டப்படுகின்றன. அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் வர்க்கப் போராட்டங்கள் மீண்டும் தோன்றியதற்கு மத்தியில், ஆளும் வர்க்கம் இந்த சமூக பதட்டங்களை வெளிப்புற 'எதிரி'க்கு எதிராக திருப்பிவிட முயல்கிறது.
அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் சர்வதேச அளவில் உள்ள தொழிலாளர்கள் பொய் மற்றும் 'சீன ஆக்கிரமிப்பு' மற்றும் 'மனித உரிமை மீறல்கள்' பற்றிய முற்றிலும் இழிந்த மற்றும் பாசாங்குத்தனமான குற்றச்சாட்டுகளை நிராகரிக்க வேண்டும். ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போன்ற ஒட்டுமொத்த நாடுகளையும் அழித்து மில்லியன் கணக்கானவர்களின் மரணத்திற்கு வழிவகுத்த குற்றம்மிக்க நவீன காலனித்துவ படையெடுப்புகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை நடத்தியது சீனா அல்ல அமெரிக்காவாகும். இந்தப் போர்கள் அனைத்திலும் பிரிட்டனும் ஆஸ்திரேலியாவும் அதன் முக்கிய பங்காளிகளாக இருந்தன.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறிய சமீபத்திய தோல்வி இருந்தபோதிலும், 'பயங்கரவாதத்திற்கு எதிரான போர்' இலிருந்து 'பெரும் சக்திகளுக்கு இடையிலான மோதலுக்கு' தயாராகும் பென்டகன் மூலோபாய மாற்றத்திற்கு ஏற்ப வாஷிங்டன் புதிய மற்றும் இன்னும் பேரழிவு தரும் போர்களை தயாரிக்கிறது.
போரின் அபாயங்களுக்கு சீன கம்யூனிஸ்ட் கட்சி (CCP) ஆட்சியிடம் எந்த முற்போக்கான பதிலும் இல்லை. வாஷிங்டனுடன் ஒரு சமரசத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் தொங்கிக்கொண்டிருக்கும் அதே வேளையில், பெய்ஜிங் மனிதகுலத்திற்கு ஒரு பேரழிவை மட்டுமே முன்வைக்கும் ஒரு ஆயுதப் போட்டியைத் தொடர்கிறது. முதலாளித்துவ உறவுகளை அடிப்படையாகக் கொண்டதும், உலக சந்தை மற்றும் வாஷிங்டனால் கட்டுப்படுத்தப்படும் உலகளாவிய நிதி அமைப்பைச் சார்ந்துள்ள ஒரு பொருளாதாரத்துடன், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி போரைத் தடுக்கக்கூடிய ஒரே சமூக சக்தியான சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு எந்த அழைப்பையும் விட முடியாதுள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு மூன்றாம் உலகப் போரை நோக்கிய விரைவான போக்கிற்கு எதிராக ஒரு ஐக்கியப்பட்ட போர் எதிர்ப்பு இயக்கத்தை உருவாக்க வேண்டுகோள் விடுத்தது. 'சோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும்' என்ற அறிக்கையில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு இந்த இயக்கத்தை உருவாக்க வேண்டிய அடிப்படைக் கொள்கைகளை கோடிட்டுக் காட்டியது:
- போருக்கு எதிரான போராட்டமானது, சமூகத்தின் மாபெரும் புரட்சிகர சக்தியான தொழிலாள வர்க்கம், மக்களின் அத்தனை முற்போக்குக் கூறுகளையும் தனக்குப் பின்னால் அணிதிரட்டி முன்நிற்பதை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்க வேண்டும்.
- புதிய போர்-எதிர்ப்பு இயக்கமானது, முதலாளித்துவ எதிர்ப்புத்தனமானதாகவும் சோசலிசத்தன்மை உடையதாகவும் இருந்தாக வேண்டும், ஏனென்றால் நிதி மூலதனத்தின் சர்வாதிகாரத்திற்கும், இராணுவவாதம் மற்றும் போருக்கு அடிப்படையான காரணமாக இருக்கின்ற பொருளாதார அமைப்புமுறைக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்கான போராட்டத்தின் வழியாக அல்லாமல் போருக்கு எதிரான எந்த பொறுப்புணர்ச்சி வாய்ந்த போராட்டமும் இருக்க முடியாது.
- ஆகவே, புதிய போர்-எதிர்ப்பு இயக்கமானது, அத்தியாவசியமான வகையில், முதலாளித்துவ வர்க்கத்தின் அத்தனை அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளில் இருந்தும் முழுமையாகவும் குழப்பத்திற்கிடமின்றியும் சுயாதீனமானதாகவும், குரோதமானதாகவும் இருந்தாக வேண்டும்.
- எல்லாவற்றுக்கும் மேலாக, புதிய போர்-எதிர்ப்பு இயக்கமானது சர்வதேசமயமானதாக, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு ஒன்றுபட்ட உலகளாவிய போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் பரந்த சக்தியை அணிதிரட்டக்கூடியதாக இருந்தாக வேண்டும். முதலாளித்துவத்தின் நிரந்தரமான போருக்கு தொழிலாள வர்க்கத்தின் நிரந்தரப் புரட்சி முன்னோக்கைக் கொண்டு - தேசிய-அரசு அமைப்புமுறையை ஒழிப்பதும் ஒரு உலக சோசலிசக் கூட்டமைப்பை ஸ்தாபிப்பதுமே அதன் மூலோபாய இலக்காகும் - பதிலளிக்கப்பட வேண்டும். உலகத்தின் வளங்கள் பகுத்தறிவான, திட்டமிட்ட முறையில் அபிவிருத்தி செய்யப்படுவதையும், அந்த அடிப்படையில், வறுமை ஒழிக்கப்படுவதையும் மனித கலாச்சாரம் உயர்ந்த மட்டங்களை எட்டுவதையும் அது சாத்தியமாக்கும்.
சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்பும் பணி இன்று இன்னும் மிக அவசியமானதாக உள்ளது. போருக்கு உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களின் பரந்த பிரிவுகளின் மறைந்திருக்கும் எதிர்ப்பு, போருக்கு மூல காரணமான முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு நனவான அரசியல் இயக்கமாக உருவாக்கப்பட வேண்டும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் அதன் பிரிவுகளை தொடர்பு கொள்ளவும், போர் மற்றும் இராணுவவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்கவும் எங்கள் வாசகர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.