ஆசிரியர்களின் சம்பளக் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரிக்கின்றது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

ஆசிரியர்களின் சம்பளக் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான நிதி நிலையில் அரசாங்கம் இல்லை என, செவ்வாய் கிழமை நடைபெற்ற ஆசிரியர் தொழிற்சங்கங்களின் அதிகாரிகளுடனான ஒரு கூட்டத்தில் இலங்கை பிரதமர் மஹிந்த இராஜபக்ஷ கூறினார். சம்பள உயர்வை வெற்றி கொள்வதற்காக, 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட அரசாங்க பாடசாலை ஆசிரியர்கள் ஜூலை 12 தொடக்கம் ஒரு தேசிய ரீதியிலான “இணையவழிக் கற்பித்தல்” வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ள, கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டத்தினை விலக்கிக்கொள்ளுமாறும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தச் சட்டம் அமுலாக்கப்பட்டால், இந்த இராணுவ– கட்டுப்பாட்டிலான பல்கலைக்கழகம், கட்டணம் அரவிடும் தனியார் கல்வித் திட்டத்தை மேலும் ஸ்தாபிக்க முடியும். கல்வியை தனியார் மயப்படுத்தவும் மற்றும் சமூகத்தை இராணுவமயப்படுத்துவதையும் நோக்கிய அரசாங்கத்தின் நகர்வின் ஒரு பாகமே இந்த சட்டமாகும்.

கொழும்பு ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் ஜூலை 23 நடந்த ஆசிரியர்களின் போராட்டம் [WSWS Media]

இலங்கையின் பொருளாதார நெருக்கடியைக் காரணமாக காட்டி, ஆசிரியர்களின் சம்பளக் கோரிக்கைகள், ஜனாதிபதி கோட்டபாய இராஜபக்ஷ தலமையில், திங்கட்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நிராகரிக்கப்பட்டன. பொருளாதாரம், கொவிட் – 19 தொற்று நோய் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

செவ்வாயக்கிழமை ஆசிரியர் தொழிற்சங்க அதிகாரிகளை சந்திப்பதற்காக, பிரதமர் மஹிந்த இராஜபக்ஷ ஒரு உப – குழுவின் தலைராக நியமிக்கப்பட்டார். இலங்கை ஆசிரியர் சங்கம் (இ.ஆ.ச.), மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) கட்டுப்பாட்டில் இயங்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் (இ.ஆ.சே.ச.), போலி – இடது முன்னிலை சோசலிசக் கட்சியுடன் இணைந்த, ஐக்கிய ஆசிரியர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் தலைவர்களும் மற்றும் ஏனைய கல்வியாளர்களின் தொழிற்சங்க அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

ஊடக அறிக்கைகளின்படி, சம்பளப் பிரச்சினைகள் “தீர்க்கப்பட வேண்டும்” என்பதை அரசாங்கம் அறியும், என மஹந்த இராஜபக்ஷ கூறியுள்ளார். எவ்வாறாயினும், “தற்போதைய பூகோள சூழ்நிலையின் கீழ் மற்றும் நாட்டின் நிதியியல் இக்கட்டான நிலை காரணமாகவும் சம்பளப் பிரச்சினையை இப்போது தீர்ப்பதற்கான நிலைமை அரசாங்கத்துக்கு இருக்கவில்லை” என தொடர்ந்து கூறினார்.

இந்த விடயம், சம்பள ஆணைக்குழுவுடன் கலந்துரையாடப்பட்டு, விரைவில் ஒரு முடிவு எடுக்கப்படும், என, கூடியிருந்த தொழிற்சங்க அதிகாரிகளிடம் கபடத்தனமான முறையில் பிரதமர் “உறுதியளித்தார்.”

ஆசிரியர் தொழிற்சங்கத் தலமைகள், அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டை முழுமையாக ஆதரித்தன என்பதை பிரதமர் அலுவலகத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. சம்பள முரண்பாடுகளைக் குறைக்க 'கொள்கை முடிவு' எடுக்குமாறு பிரதமரை வலியுறுத்தியுள்ள அவர்கள், மேலும் 'நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக சம்பளங்களுக்கு உடனடி அதிகரிப்பு சாத்தியமில்லை என்பதில் அவர்களுக்கு தெளிவான புரிதல் உள்ளது' என்றும் கூறியுள்ளனர்.

வேறு வார்த்தைகளில் கூறினால், ஆசிரியர்களின் சம்பள கோரிக்கைகளை, தொழிற்சங்கங்கள் மீண்டும் ஒருமுறை காட்டிக்கொடுத்துவிட்டன. சில குறிப்பிடப்படாத எதிர்காலத் திகதியில் “சம்பள முரண்பாடுகள் குறைக்கப்படும்” என்ற அரசாங்கத்தின் இன்னொரு வெற்று வாக்குறுதியின் அடிப்படையில், சகல தொழிற்சங்க நடவடிக்கைகளையும் கைவிடுவதற்கு அவர்கள் செயற்படுகின்றார்கள்.

ஆசிரியர் தொழிற்சங்கங்கள் 24 வருடங்களுக்கு முன்னர், 1997ம் ஆண்டே சம்பள அதிகரிப்பு கோரிக்கையை முதன்முறையாக முன்வைத்தன. பின்னர், ஆசிரியர்களால் நடத்தப்படும் ஒவ்வொரு போராட்டங்களையும், அரசாங்கத்தின் போலி வாக்குறுதிகளின் அடிப்படையில் திட்டமிட்ட முறையில் காட்டிக்கொடுத்தன.

செவ்வாயன்று ஒரு ஊடக மாநாட்டில் உரையாற்றிய ஆசிரியர் தொழிற்சங்க அதிகாரிகள், தங்கள் உறுப்பினர்களின் அதிகரித்துவரும் கோபத்தைப் பற்றி பதற்றமடைந்திருந்தனர், அவர்கள் அரசாங்கத்தின் கட்டளைகளை ஏற்றுக்கொண்டதை வெளிப்படுத்தவில்லை.

தனது துணிச்சலான முகத்தை காட்டுவதற்கு முயற்சித்த, இ.ஆ.சே.ச. செயலாளர் மகிந்த ஜயசிங்க, அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாக ஊடகங்களுக்கு சாதாரணமாக கூறினார். வேலை நிறுத்தத்தினை முடிவுக்கு கொண்டுவருவதற்கான எந்தவொரு முயற்சியும், தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டை மீறிய வேலை நிறுத்தத்துக்கு வழிவகுக்கும் என்ற பீதியினால், வேலைநிறுத்தம் தொடரும் என ஜயசிங்க கூறினார்.

பொருளாதார நெருக்கடிகளின் சுமைகளை உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் இராஜபக்ஷ அரசாங்கத்தினதும் மற்றும் பெரு முதலாளிகளினதும் முயற்சிகளுக்கான பிரதிபலிப்பாக, நாடு பூராவும் தொழிலாளர் வர்க்கத்தின் கோபம் மற்றும் சமூக பதட்டம் அதிகரித்து வருகின்றன.

நேற்று, கொத்தலாவல பல்கலைக்கழக சட்டத்துக்கு எதிராக பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்னர். அதே நாளில், சுகாதார சேவையின் மோசமான நிலமைகளுக்கு எதிராக, அரசாங்க தாதிய உத்தியோகத்தர் தொழிற்சங்க அழைப்பின் பேரில் பல வைத்தியசாலைகளில் நூற்றுக்கணக்கான தாதியர்கள் மதிய உணவுநேர ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த மாதம், தொழில்சார் மற்றும் இடர்காலக் கொடுப்பனவு, முறையான பதவி உயர்வு முறையுடன் ஊழியர் தர பதவி உயர்வுகள் மற்றும் தாங்க முடியாத பணிச் சுமைகளைக் குறைத்தல் உட்பட 14 கோரிக்கைகளை முன்வைத்து, 25,000 தாதியர்களால் முன்னெடுக்கப்பட்ட தேசிய ரீதியிலான வேலை நிறுத்தத்தினை, அரசாங்கத்தின் இதே போன்ற வெற்று வாக்குறுதிகளை ஏற்றுக் கொண்ட பின்னர், தாதிய தொழிற்சங்கங்கள் காட்டிக் கொடுத்தன.

தரம் 11 மாணவர்களுக்கான இலங்கையின் முக்கியமான பரீட்சையான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான செயல்முறைப் பரீட்சையுடன் தொடர்புடைய கடமையில் இருந்து விலகுவதன் மூலம், ஜூலை 26 தொடக்கம், ஆசிரியர்கள் தங்களது தொழிற்சங்க நடவடிக்கைகளில் காலடியெடுத்து வைத்தனர். உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்களுக்காக மாணவர்களைத் தயார்படுத்தும் நடவடிக்கையையும் அவர்கள் தடை செய்தனர்.

வேலைநிறுத்தம் செய்யும் ஆசிரியர்களுக்கு எதிராக பிரதான ஊடகங்கள் ஒரு மோசமான பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டன. ஐலண்ட பத்திரிகையின் நேற்றைய ஆசிரியர் தலையங்கம், “அரசாங்க ஆசிரியர்கள் ஒரு நல்ல கொடுக்கல் வாங்கல்களுக்கு தகுதியானவர்கள்” என குறிப்பிட்ட அதேநேரம், “பொது துறையினருக்கு சம்பளம் அதிகரிப்பதற்கு இது சரியான நேரம் தானா? என்பதே கேள்வியாகும். பொருளாதாரம் ஒட்சிசன் ஆதரவில் உள்ளது,” என அது மேலும் கூறியது.

அரசாங்கத்தின் வார்த்தைகளில் பேசிய அந்த ஆசிரியர் தலையங்கம், “ஊதிய உயர்வு என்பது வரி அதிகரிப்பு மற்றும் துன்ப துயரங்களில் இருந்து விலகி இருக்க போராடும் பொதுமக்களின் துயரங்கள் அதிகரிப்பதைக் குறிக்கும்” என அறிவித்தது. பின்னர் ராஜபக்ஷ நிர்வாகத்தை பாராட்டிய அது, உரிய காலத்துக்கு முன்னர் 'அரசாங்கம் ஒரு பில்லியன் டொலர் பிணைமுறி கடனை திருப்பிச் செலுத்தியமை மகிழ்ச்சியளிப்பதுடன் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்க” உதவுகிறது, என்று குறிப்பிட்டது.

அரசாங்கம், பெருவணிகம் மற்றும் அவர்களின் ஊடகங்களும் மனித உயிர் வாழ்வை விட இலாபத்துக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதை உறுதி செய்வதற்கான முயற்சிகளில் ஒன்றுபட்டுள்ளன. மோசமான பொருளாதார நெருக்கடியின் சுமையை தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகள் மீது சுமத்த ஆளும் உயரடுக்கின் முயற்சிகளுக்கு தொழிற்சங்கங்கள் உதவுகின்றன என்பதை ஆசிரியர்கள், சுகாதாரத் தொழிலாளர்கள் மற்றும் ஏனைய அரசாங்க ஊழியர்களின் போராட்டங்கள் மேலும் வெளிப்படுத்துகின்றன.

சோசலிச சமத்துவக் கட்சி, அரசாங்கத்தின் சார்பில் தொழிற்சங்கங்கள் ஏற்பாடு செய்யும் காட்டிக்கொடுப்பை நிராகரிக்குமாறும், ஜூலை 26 அன்று வெளியிட்ட ஆசிரியர்-மாணவர்-பெற்றோர் பாதுகாப்பு குழுவின் அறிக்கையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளவாறு, தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதற்கான போராட்ட வேலைத் திட்டத்தை முன்னெடுக்குமாறு ஆசிரியர்களை வலியுறுத்துகிறது.

இந்த கொள்கைகள் மற்றும் தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள் சம்பந்தாமன கலந்துரையாடலை நடத்தும், ஜூலை 30 அன்று, வெள்ளி இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ள இணையவழிக் கூட்டத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு இங்கே பதிவு செய்துகொள்ளுங்கள்

இன்று இரவு ஆசிரியர்-மாணவர்-பெற்றோர் பாதுகாப்பு குழு ஏற்பாடு செய்துள்ள இணையவழி கூட்டத்தில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ள, தீவு முழுவதிலும் இருந்து பல ஆசிரியர்கள், WSWS நிருபர்களிடம் கருத்து தெரிவித்தனர்.

கொழும்பு பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில் பௌதீகவியல் ஆசிரியரான சதீர, “கல்வியை தனியார்மயமாக்குவதை எதிர்த்து பாடசாலை ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது மிக முக்கியம். ஆனால், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் போராட்டங்களை ஒன்றிணைக்க தொழிற்சங்கங்களும் மாணவர் சங்கங்களும் எதுவும் செய்யவில்லை,” என்று குறிப்பிட்டார்.

'இந்த நேரத்தில் ஆசிரியர்களின் பங்குபற்றல் முன்னெப்போதையும் விட பரந்ததாக தெரிகிறது. ஆனாலும், நிகழ்ச்சி நிரல் பழையதேதான்.” அரசாங்கம் ஏற்கனவே ஊதிய உயர்வை எதிர்க்கிறது. எங்கள் கோரிக்கைகளை கொடுக்க முடியாது என்று அரசாங்கம் ககூறும்போது, அரசாங்கத்தை சவால் செய்ய ஆசிரியர்கள் ஏனைய தொழிலாள வர்க்கத்துடன் ஒன்றுபட வேண்டும்.”

ஹோமகமவில் உள்ள ஒரு பாடசாலையில் உயர் தரம் கற்பிக்கும் ஆசிரியரான தர்மரத்ன கூறியதாவது: “இது உயர்ந்த பொறுப்பான வேலை என்றாலும், ஆசிரியர்களின் சம்பளம் மிகக் குறைவு. உண்மையில், ஒவ்வொரு அரசாங்கமும் இலவச கல்வியைக் வெட்டியதன் விளைவாகும்.

'தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியதாகக் கூறி அரசாங்கம் போராட்டங்களை தடை செய்த போதிலும், கம்பனிகள் தங்கள் சொந்த இலாபத்திற்காக தொழிற்சாலைகளில் தொழிலாளர்களை வேலைக்கு கொண்டுவரவும், தொற்று நோய்க்கு அவர்களின் உயிரைத் தியாகம் செய்யவும் நிறுவனங்களை அனுமதித்துள்ளன. இதுவரை தொழிற்சங்கத் தலைவர்கள் சொல்வதையே ஆசிரியர்கள் கேட்டு வந்துள்ளனர். ஆனால் இந்தப் போராட்டத்தை முன்நகர்த்த முற்றிலும் வேறுபட்ட ஒரு வேலைத் திட்டம் தேவை என நான் நம்புகிறேன்' என்று தர்மரத்ன கூறினார்.

மேல் மாகாணத்தில் உள்ள மத்துகமவில் இருந்து, பமுதித்த கூறியதாவது: “ஆசிரியர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் விவசாயிகளின் சமீபத்திய போராட்டங்கள் நாட்டில் ஒரு பெரிய சமூக நெருக்கடியை வெளிப்படுத்துகின்றன. இணையவழி கற்பித்தலில் ஈடுபடுவதால் ஆசிரியர்கள் மீதான அழுத்தம் இரட்டிப்பாகியுள்ள போதிலும் எந்த அரசாங்க ஆதரவும் அவர்களுக்கு கிடையாது.”

வட மத்திய மாகாணத்தின் இரண்டாவது பெரிய நகரமான பொலன்றுவயில் ஒரு ஆசிரியரான மகேஸ், “வீழ்ச்சியடைந்த வருமானம், தனியார் வகுப்புகளை நிறுத்துதல் மற்றும் உயரும் வாழ்க்கைச் செலவுகள் ஆகியவற்றின் எதிரொலியாக ஆசிரியர்கள் போராட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது,” எனக் கூறினார். “இந்த முறை ஆசிரியர்களின் எதிர்ப்பை தொழிற்சங்கங்கள் சீரழிக்க நாம் அனுமதிக்கக்கூடாது. ஆசிரியர்-மாணவர்-பெற்றோர் பாதுகாப்புக் குழுவில் சேருவதன் மூலம் தொழிற்சங்கங்களின் துரோகத்திற்கு எதிராக ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களால் ஒரு பரந்த போராட்ட முன்னணியை உருவாக்க வேண்டும்,” என அவர் மேலும் கூறினார்.

Loading