ஜெருசலேம் தினத்தில் நெத்தனியாகு ஆத்திரமூட்டல்களை முடுக்கிவிட்டதால் காசாவில் இஸ்ரேல் 24 பேரைக் கொன்றது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

முற்றுகையிடப்பட்ட பாலஸ்தீனிய பிராந்தியமான காசாவுக்கு எதிராக இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதில் குழந்தைகள் உட்பட 24 பேர் கொல்லப்பட்டனர்.

ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக பாரிய வன்முறைத் தாக்குதல் நடத்தப்பட்ட தினத்தை குறிக்கும் விதமாக, தெற்கு இஸ்ரேல் மற்றும் ஜெருசலேம் பகுதியில் ஆயுதக்குழுவினர் சில ராக்கெட்களை ஏவி முன்னரே தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இஸ்ரேல் இராணுவம், காசாவுடனான தனது எல்லையில் தனது படைகளை தடுத்து நிறுத்தியுள்ளதாகவும், போர் விரிவாக்கத்திற்கு சாத்தியமுள்ள ஒரு பெரும் பயிற்சியை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாகவும் அறிவித்துள்ளது.

மே 10, 2021, திங்கட்கிழமை, ஜெருசலேமின் பழைய நகரத்தில் உள்ள அல்-அக்ஸா மசூதி வளாகத்தில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலின் போது காயமடைந்த ஒருவரை பாலஸ்தீனியர்கள் வெளியேற்றுகின்றனர். (AP Photo/Mahmoud Illean)

கிழக்கு ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதி வளாகத்தில் அதிகாலையில் வழிபாட்டாளர்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தபோது 1,000 பாதுகாப்புப் படையினர் அங்கு திடீரென நுழைந்து, உணர்ச்சிகளை மழுங்கச் செய்யும் கையெறி குண்டுகள், கண்ணீர்ப்புகைக் குண்டுகள் மற்றும் இரப்பர் தோட்டாக்களை எறிந்து தாக்கியதில் 330 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காயமடைந்தனர், அப்போது துப்பாக்கி சுடும் வீரர்களும் கூரைகளில் தாக்குதல் நடத்த தயாராக நின்றனர். ஜெருசலேம் மற்றும் மேற்குக் கரை முழுவதிலும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் ஒரு சில நாட்கள் நடத்திய தாக்குதலில் 700 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளனர்.

நூற்றுக்கணக்கான வழிபாட்டாளர்களை பொலிசார் மசூதிக்குள் அடைத்து வைத்தனர், மருத்துவர்களும் மருத்துவக் குழுவினரும் வளாகத்திற்குள் நுழைவதைத் தடுத்து, காயமடைந்தவர்களுக்கு உதவ முயன்றவர்களை அடித்துத் தாக்கினர். அவர்கள் வளாகத்திற்குள் இருந்த மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர், அங்கு சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தவர்கள் மீது அவர்கள் மிளகு வாயுவை பீச்சியதுடன், கையெறி குண்டுகளையும் வீசினர்.

இஸ்லாமில் உள்ள மூன்றாவது புனித தளமான மசூதிக்குள் நடத்தப்பட்ட இந்த திடீர் தாக்குதல், வடக்கு அரபு நகரமான உம் அல்-பாஹ்ம் மற்றும் அருகிலுள்ள வாடி அரா, அத்துடன் கடந்த வாரம் ஒரு யூத கல்லூரிக்காக பாலஸ்தீனியர்களுக்கு சொந்தமான வீடுகளை கையகப்படுத்தும் திட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை எதிர்கொண்ட ஜாஃபாவும் உட்பட, நாடெங்கிலுமாக கோபமிக்க பல ஆர்ப்பாட்டங்களைத் தூண்டியுள்ளது.

அரபு சுற்றுப்புறங்கள் வழியாக இஸ்ரேலின் குடியேற்றக் குழுக்களும் தீவிர வலதுசாரி சக்திகளும் திட்டமிட்டு நடத்திய கொடி அணிவகுப்புக்கு முன்னதாக, 1967 போரில் ஜோர்டானிலிருந்து கைப்பற்றப்பட்ட கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் சட்டவிரோதமாக இணைத்துக் கொண்டதன் ஆண்டு நிறைவைக் குறிக்கும் ஜெருசலேம் தினத்தின் போது நடத்தப்பட்ட இந்த ஒடுக்குமுறை, பாலஸ்தீனியர்களுடனான போரைத் தொடங்க வேண்டுமென்றே வடிவமைக்கப்பட்ட மற்றொரு ஆத்திரமூட்டலாக இருந்தது.

இஸ்ரேலிய குடியேற்றவாசிகளின் நில அபகரிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள், குடியேற்ற விரிவாக்கம், மற்றும் ஜெருசலேமின் பழைய நகரத்தின் வடக்கேயுள்ள ஷேக் ஜார்ராவில் இருந்து ஏராளமான பாலஸ்தீனியர்கள் திட்டமிட்டு வெளியேற்றப்பட்டது ஆகியவற்றுக்கு மத்தியில், ஏப்ரல் 12 அன்று ரமலான் தொடங்கியதிலிருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படையினரால் பெருகிவரும் பதட்டங்கள் மற்றும் அவர்களது இரத்தக்களரியான அடக்குமுறைமிக்க வாரங்களில் இது மிகுந்த வன்முறை கொண்டு நடத்தப்பட்ட ஒடுக்குமுறையாகும். சமூக உறவுகளின் வெடிக்கும் நிலைக்கு, ஆயிரக்கணக்கான இளைஞர்களை வேலையின்றி தவிக்கவிட்ட தொற்றுநோயின் தாக்கம் ஒரு காரணியாக உள்ளது.

பாலஸ்தீனியர்கள் திட்டமிட்டு வெளியேற்றப்படுவது நகரத்தை நீதிமயமாக்கும் அரசாங்கத்தின் பரந்த செயல்முறையின் ஒரு பகுதியாகும், அதாவது இதன் மூலம், பாலஸ்தீனியர்கள் கிழக்கு ஜெருசலேமின் ஒரு பகுதியை தலைநகரமாகக் கொண்டு அவர்களுக்கு சொந்தமான ஒரு குட்டி-அரசை அமைப்பதை சாத்தியமில்லாமல் ஆக்குவதாகும். சியோனிச மதத் தலைவரான பெசலெல் ஸ்மொட்ரிச் மற்றும் யூத சக்தியின் இட்டாமர் பென்-க்விர் உள்ளிட்ட தீவிர வலதுசாரி சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஆதரவாளர்களை ஷேக் ஜார்ரா மூலம் வழிநடத்தி, பாலஸ்தீனியர்களை இழிவுபடுத்தி, “அரேபியர்களுக்கு மரணம்” என்று கோஷமிட்டனர். ஸ்மொட்ரிச், தன்னை ஒரு “பயங்கரவாத” ஆதரவாளர் என்று கண்டிக்கும் மன்சூர் அப்பாஸ் (Mansour Abbas) மற்றும் அவரது ஐக்கிய அரபு பட்டியலை சேர்ந்தவர்களுடனான அனைத்து பேச்சுவார்த்தைகளையும் நிறுத்த, Yesh Atid கட்சிக்கு தலைவராக இருக்கும் மற்றும் நெத்தன்யாகுவுக்கு பதிலாக ஒரு கூட்டணியை ஒன்றிணைக்க முயலும், எதிர்க்கட்சித் தலைவர் யாயிர் லாபிட் (Yair Lapid) உடனான பேச்சுவார்த்தைக்கு வலதுசாரி கட்சிகளுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

வியாழக்கிழமை இரவு, நூற்றுக்கணக்கான வலதுசாரி யூத இஸ்ரேலியர்கள் ஜெருசலேமின் வீதிகளில் அணிவகுத்து பாலஸ்தீனியர்களுடன் மோதியதால், 21 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது உட்பட, 100 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காயமடைந்தனர். வெள்ளிக்கிழமை இரவு, நூற்றுக்கணக்கான கலகப் பிரிவு பொலிசார் அல்-அக்ஸா மசூதி வளாகத்தைத் தாக்கி, வழிபாட்டாளர்களுடன் இரத்தக்களரியான மோதலைத் தூண்டிய நிலையில், 200 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் அதில் காயமடைந்தனர், அவர்களில் 88 பேரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல நேரிட்டது. அப்போது நூற்றுக்கணக்கான வழிபாட்டாளர்கள் குடியிருப்பாளர்களுடன் தங்கள் ஒற்றுமையைக் காட்ட முயன்றதால் ஷேக் ஜார்ராவில் வன்முறை மோதல்கள் வெடித்தன.

சனிக்கிழமை இரவு, பழைய நகரத்திற்கு வெளியே மோதல்கள் வெடித்ததில், ஒரு வயது குழந்தை உட்பட 80 பேர் காயமடைந்தனர், மேலும் ஞாயிற்றுக்கிழமை, ஷேக் ஜார்ரா வெளியேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பாலஸ்தீனியர்களை கலகப் பிரிவு பொலிசார் தாக்கியதில் காயமடைந்த 14 பேருக்கு சிகிச்சையளிக்க வேண்டியிருந்தது.

கிழக்கு ஜெருசலேமில் இஸ்ரேலின் மிருகத்தனமான ஒடுக்குமுறைக்கு எதிராகவும், இஸ்ரேலில் உள்ள பல அரபு நகரங்கள் மற்றும் கிராமங்கள், அத்துடன் துறைமுக நகரமான ஹைஃபா மற்றும் வடக்கு நகரமான நாசரேத், மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ரமல்லா ஆகிய பகுதிகளிலுள்ள ஏராளமான ஷேக் ஜார்ரா குடும்பங்களுக்கு ஆதரவளித்தும் அங்கு நடந்த பல ஆர்ப்பாட்டங்கள் கடும் அடக்குமுறையை எதிர்கொண்டன.

முக்கியமாக பாலஸ்தீனிய இளைஞர்களால் கடந்த சில நாட்களாக நடத்தப்படும் இந்த ஆர்ப்பாட்டங்கள், அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் இஸ்ரேலின் பாலஸ்தீனிய குடிமக்களின் முன்கண்டிராத ஈடுபாட்டைக் குறிக்கின்றன. இது, ஒரு தன்னிச்சையான இயக்கமாகும் என்பதுடன், ஃபத்தா ஆதிக்கம் செலுத்திய பாலஸ்தீனிய ஆணையம், காசாவில் ஹமாஸ் மற்றும் இஸ்ரேலிலுள்ள அரபு தலைவர்கள் உள்ளிட்ட அதன் பாரம்பரிய தலைவர்களிடமிருந்து அதிகரித்தளவில் விரோதப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை, ஷேக் ஜார்ராவில் உள்ள பாலஸ்தீனியர்களை அவர்களது வீடுகளிலிருந்து வெளியேற்ற திட்டமிட்டது குறித்த சர்வதேச கண்டனத்தை நெத்தன்யாகு முற்றிலும் நிராகரித்து, ஜெருசலேமில் கட்டக்கூடாது என்ற அழுத்தத்தை இஸ்ரேல் “உறுதியாக நிராகரிப்பதாக” அறிவித்தார். ஜெருசலேமின் அமைதியை கீழறுக்கும் பாலஸ்தீனியர்கள் போன்ற எந்தவொரு தீவிரவாதக் கூறுகளையும் இஸ்ரேல் அனுமதிக்காது என்றும் அவர் அறிவித்தார். மேலும், “நாங்கள் சட்டம் ஒழுங்கை தீவிரமாகவும் பொறுப்புடனும் செயல்படுத்துவோம். அனைத்து மதங்களுக்குமான வழிபாட்டு சுதந்திரத்தை நாங்கள் தொடர்ந்து பாதுகாப்போம், ஆனால் வன்முறை கலவரங்களை அனுமதிக்க மாட்டோம்,” என்றும், “காசா பகுதியிலிருந்தான எந்தவொரு ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கும் இஸ்ரேல் வலுவான பதிலடி கொடுக்கும் என்று பயங்கரவாத குழுக்களுக்கு நான் சொல்லிக் கொள்கிறேன்,” என்றும் அவர் கூறினார்.

அல்-அக்ஸா வளாகத்திற்குள் நுழையவிடாமல் தடுக்க, ஜெருசலேம் தின கொடி அணிவகுப்பை ஒத்திவைக்கவும், பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தவும், பாதையை மாற்றவும், சர்வதேச பிரமுகர்களிடமிருந்தும், அவரது சொந்த பாதுகாப்பு அதிகாரிகளிடமிருந்தும் வந்த பல கோரிக்கைகளை அவர் நிராகரித்துவிட்டார். அவரும் பொது பாதுகாப்பு அமைச்சர் அமீர் ஒஹானாவும், ஆயிரக்கணக்கான பொலிஸ் அதிகாரிகளின் பாதுகாப்புடன் அணிவகுப்பின் பாதை மாற்றப்படாமல் அப்படியே முன்னோக்கிச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். நெத்தன்யாகு பாதுகாப்புப் படையினரின் “நியாயமான போராட்டம்” என்று பாராட்டி அவர்களை பாதுகாத்ததுடன், “இஸ்ரேலிய காவல்துறையும் நமது பாதுகாப்புப் படையினரும் தற்போது காண்பித்து வரும் உறுதியையும்” பாராட்டினார்.

திங்கள் பிற்பகல், அணிவகுப்பு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர், ஆயிரக்கணக்கான மத மற்றும் தீவிர தேசியவாத இளைஞர்கள் அங்கு கூடியிருந்தபோதும், அவர்களுக்கு நாங்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறோம் என்று பொலிசாரிடம் கூறுவதை தாங்கள் நிறுத்திக் கொண்டதாக ஒழுங்கமைப்பாளர்கள் அறிவித்தனர். பாலஸ்தீனிய கிழக்கு ஜெருசலேமில் டமாஸ்கஸ் வாயில் (Damascus Gate) மற்றும் முஸ்லீம் பகுதி (Muslim Quarter) உள்ளிட்ட பழைய நகரத்திலிருந்து தொடங்கும் அணிவகுப்பை மாற்றியமைக்க தீர்மானித்து நெத்தன்யாகுவிடமிருந்து வந்த உத்தரவிற்கு பதிலிறுப்பாக இது மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகளால் கூறப்பட்டது.

இந்த நேரத்தில் தான், 2007 முதல் முதலில் இஸ்ரேல் பின்னர் எகிப்தின் சட்டவிரோத முற்றுகைக்குட்பட்டிருந்த காசாவை கட்டுப்படுத்தும் முஸ்லீம் சகோதரத்துவத்துடன் இணைந்த குழுவான ஹமாஸ், அல்-அக்ஸா மசூதி வளாகம் மற்றும் ஷேக் ஜார்ராவிலிருந்து இஸ்ரேல் அதன் பாதுகாப்புப் படைகளை மீளப் பெற “மாலை 6 மணி வரையிலான காலக்கெடுவுடன் இறுதி எச்சரிக்கை” விடுத்தது. இறுதி எச்சரிக்கை காலாவதியான நிலையில், இஸ்ரேலிய இராணுவம் அபாயச்சங்கொலியை எழுப்பத் தொடங்கியது, சட்டமன்றத்தை (Knesset) வெளியேற்றியது, மற்றும் ஜெருசலேம் பகுதியில் நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதல் பற்றிய செய்திகள் வந்ததை அடுத்து கொடி அணிவகுப்பை கலைத்தது.

மே 12, புதன்கிழமை மாலை ரமலான் முடிவடைவதைக் குறிக்கும் ஈத் அல்-பித்ருக்கு (Eid al-Fitr) முன்னதாக கொந்தளிப்பை அதிகரிப்பதற்கு தயார் செய்ய ஒரு தேசிய பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டத்திற்கு நெத்தனியாகு அழைப்புவிடுத்துள்ளார்.

Loading