ஜேர்மனி: கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் பெருமளவானோர் இலங்கைக்கு நாடுகடத்தப்படுகின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மார்ச் 30, செவ்வாயன்று, எண்ணிக்கை தெரிவிக்கப்படாத தமிழ் அகதிகள் கூட்டாக டுசுல்டோர்ஃப் நகரிலிருந்து ஒரு விமானத்தில் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர். நாடுகடத்தப்பட்ட அகதிகளின் எண்ணிக்கை குறித்து ஜேர்மன் ஊடகங்களில் எந்த செய்தியும் தெரிவிக்கப்படவில்லை. 100 க்கும் மேற்பட்டோர் நாடு கடத்தப்பட்டதாக தமிழ் நடவடிக்கை குழுக்கள் அறிவிக்கின்றன. இது, தற்போது திட்டமிடப்பட்டுள்ள ஒரு தொடர் கூட்டு நாடுகடத்தலின் ஆரம்ப நடவடிக்கை மட்டுமே.

“Aktion Bleiberecht” (இருப்பதற்கான நடவடிக்கை) என்னும் அமைப்பு, ஏப்ரல் மாதத்தில் பின்வரும் நாடுகளுக்கு அகதிகளை கூட்டாக நாடு கடத்தப்படவுள்ளதாக தங்கள் இணைய தளத்தில் தெரிவிக்கின்றது. அஸர்பட்சான் (31.03), ஆப்கானிஸ்தான் (07.04), பாகிஸ்தான் (20.04), கெனியா (20.04), துனீசியா (21.04), வடக்கு மசெடோனியா மற்றும் சேர்பியா (27.04), பிரிஸ்டினா கொசோவோ (07.05). பெரும் தொற்றுநோயின் மத்தியில் மருத்துவ வசதிகள் மிகக்குறைவாகவும் கொரோனா தடுப்பூசிகள் தட்டுப்பாடகவும் மிகவும் மோசமாக நிலைமையில் உள்ள நாடுகளுக்கு, கூட்டாக நாடுகடத்தப்படுவது இரகசியமாக திட்டமிட்டப்பட்டு உள்ளது.

Pforzheim இல் நாடுகடத்தப்படுவதற்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியினர்

கடந்த இரண்டு வாரங்களாக தமிழ் அகதிகள் ஒரு திட்டமிடப்பட்ட, இரகசியமாக ஒழுங்கமைக்கப்பட்ட பொலிஸ் நடவடிக்கையில் நாடு முழுவதும் வேட்டையாடப்பட்டு நாடுகடத்தப்படும் சிறைகளில் வைக்கப்பட்டு இருந்தனர். பூரென் (Büren) மற்றும் ஃபோர்ஸ்கைம் (Pforzheim) நகரங்களில் உள்ள சிறைச்சாலைகளை தவிர வேறு எங்கு அகதிகள் வைக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிய முடியவில்லை. சிலர் தங்கள் வேலை இடங்களிலும் மற்றவர்கள் அதிகாலையில் வீட்டில் வைத்தும் கைது செய்யப்பட்டனர். இன்னும் சிலர் விசா புதுப்பிப்பதற்கு என வெளிநாட்டோர் அலுவலகங்களுக்கு வரவழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். அவர்களில் எவருக்கும் ஜேர்மனியை விட்டு வெளியேறமாறு முன்னறிவித்தல் கொடுக்கப்படவில்லை. அவர்களில் பெரும்பாலோர் வேலை செய்துவருவதுடன், நாட்டில் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்படும்போது போது சரியான வதிவிட ஆவணங்களை வைத்திருந்தனர். அவர்களில் சிலர் வாழ்க்கை துணையுடனும் குழந்தைகளுடனும் இருக்கின்றனர்.

இந்த அகதிகளை நாடு கடத்துவது அவர்களின் உயிருக்கு உண்மையான அச்சுறுத்தலாக உள்ளது. 2009 இல் இலங்கையில் 26 ஆண்டுகால உள்நாட்டுப் போரின் முடிவு, சிறுபான்மை தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் மீதான அரசு ஒடுக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை. தமிழ் மக்கள் தொடர்ந்து இராணுவ உளவுத்துறையின் கண்காணிப்பில் உள்ளதுடன் மற்றும் பொலிஸ் கொடூரங்களுக்கு உள்ளாகின்றனர். காணாமல் போன பொதுமக்களின் குடும்ப உறுப்பினர்களின் போராட்டங்கள் திட்டமிட்டு கண்காணிக்கப்பட்டு, அதற்கு தலைமை வகிப்பவர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர்.

ஏப்ரல் 2019 இல் 270 பேரைக் கொன்ற ஈஸ்டர் பயங்கரவாத தற்கொலை குண்டு தாக்குதல்களிலுக்கு பின்னர், ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஒட்டுமொத்த முஸ்லீம் மக்களும் ஆளும் கட்சியினதும் எதிர் கட்சிகளினதும் இனவெறி குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுக்கின்றனர். ஜனாதிபதி கோத்தபாய இராஜபக்க்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த இராஜபக்க்ஷ ஆகியோரின் அரசாங்கம் இறந்தவர்களை அடக்கம் செய்யும் உரிமைகளை பறிப்பதன் மூலமும், கோவிட்-19 இனால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த முஸ்லிம் மக்களை கட்டாயமாக தகனம் செய்வதன் மூலமும் முஸ்லிம் எதிர்ப்பு உணர்வுகளுக்கு எரியூட்டியுள்ளது.

வளர்ந்து வரும் தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்களின் எதிர்ப்பின் மீது தாக்குதல் நடாத்தும் நோக்கில் இந்த ஆட்சி பொதுச்சேவை நிர்வாகத்தை இராணுவமயமாக்குகிறது, ஓய்வுபெற்ற 28 படைத்தளபதிகளை முன்னணி அரசாங்க பதவிகளில் நியமிக்கிறது, இதில் கமால் குணரத்ன மற்றும் சவேந்திர சில்வா உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகளால் போர்க்குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களும் உள்ளடங்குகின்றனர்.

மார்ச் 22 அன்று தமிழ் அகதிகள் கைது செய்யப்பட்டபோது, இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை (UNHRC) நிறைவேற்றிய தீர்மானத்தில் ஜேர்மனி முக்கிய பங்கு வகித்தது. இங்கிலாந்து, கனடா, வடக்கு மசிடோனியா, மொண்டினீக்ரோ மற்றும் மலாவி ஆகியவற்றுடன் ஜேர்மனியும் “இலங்கைக்கான முக்கிய குழு” ஆகும். இக்குழு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் தீர்மானத்தை தயாரித்து முன்வைத்தது. "இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்" என்ற தலைப்பில் இத்தீர்மானம் இருந்தது.

இந்தத் தீர்மானம் இலங்கையில் மனித உரிமை மீறல்களில் "மோசமடைந்து வரும் சூழ்நிலைக்கு" வழிவகுக்கும் தற்போதைய நிகழ்வுகள் குறித்து "ஆழ்ந்த கவலையை" வெளிப்படுத்தியது. இந்த தீர்மானம் அரசாங்கத்தின் இனவெறி கொள்கைகளையும், சுயாதீன நீதித்துறை முறையின் தோல்வியை பற்றியும் விமர்சித்தது.

இந்த தீர்மானம் அடிப்படையாகக் கொண்ட ஜனவரி மாத ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அறிக்கையில், “பொது சமூக அமைப்புகள், மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மீது தீவிரமான கண்காணிப்பு மற்றும் துன்புறுத்தல் மற்றும் சுயாதீன ஊடகங்கங்கள் இயங்குவதற்கான கட்டுப்பாடுகளும் காணப்படுவதாக குறிப்பிட்டது. குற்றவியல் புலனாய்வுத் துறை, பயங்கரவாத புலனாய்வு பிரிவு மற்றும் மாநில புலனாய்வு அதிகாரிகள் உட்பட பல பாதுகாப்பு சேவைகளிலிருந்து 40 க்கும் மேற்பட்ட சிவில் சமூக அமைப்புகள் இத்தகைய துன்புறுத்தல்களை கிடைத்ததாகப் பதிவு செய்துள்ளன.”

கடந்த 30 ஆண்டுகளில் ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா மற்றும் சிரியாவில் பல நூறாயிரக்கணக்கான மக்களின் இறப்பு மற்றும் அழிவுகளுக்கு காரணமான ஏகாதிபத்திய போரினை நடாத்திய அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா மற்றும் ஜேர்மனி ஆகியவை ஜனநாயக உரிமைகள், சிறுபான்மையினர் மீதான ஒடுக்குமுறை மற்றும் இலங்கையில் போர்க்குற்றங்களுக்காக பொறுப்புக்கூறல் குறித்து எந்தவித அக்கறையும் கொள்ளவில்லை. சீனாவுடனான உறவை முறித்துக் கொள்ளவும், சீனாவுக்கு எதிரான போருக்கான அவர்களது இராணுவ தயாரிப்பில் சேரவும் ஜனாதிபதி இராஜபக்ஷவை கட்டாயப்படுத்தும் தீர்மானத்தையே அவர்கள் தயாரித்து நிறைவேற்றினர்.

ஜேர்மன் காவல்துறை நாடு முழுவதும் தமிழ் அகதிகளை வேட்டையாடிக்கொண்டிருக்கையில், இலங்கைக்கு எதிராக "ஆழ்ந்த அக்கறை" மற்றும் "மோசமடைந்து வரும் நிலைமை" ஆகியவற்றுடன் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியதானது ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் உண்மையான நோக்கங்களை வெளிப்படுத்துகின்றது. ஜேர்மன் அரசாங்கம் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான ஜேர்மனிக்கான மாற்றீடு AfD என்ற தீவிர வலதுசாரி கட்சியின் வேலைத்திட்டத்தினை முழுமையாக செயல்படுத்துகின்றதே தவிர அகதிகளை பற்றி அக்கறைப்படவில்லை. இத்தீர்மானத்திற்கு வழங்கிய ஆதரவு, ஜேர்மன் இராணுவவாதம் தீவிரமடைவதின் ஒரு பகுதியாகும்.

இத்தீர்மானத்திற்கு தமது எதிர்வினையை காட்டும் முகமாக, முந்தைய அரசாங்கத்தால் 2015 இல் பட்டியலிடப்பட்ட ஆறு புலம்பெயர் குழுக்களை தற்போதைய இலங்கை அரசாங்கம் தடை செய்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் பல தமிழ் தனியாட்கள் பயங்கரவாதிகளாக பட்டியலிடப்பட்டுள்ளனர். நேற்று ஒரு 35 வயது ஆணும் 36 வயது பெண்ணும் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஒரு வலைத் தளத்தையும் யூடியூப் ஒலிஒளியல் வரிசையையும் இயக்கி, “இணையத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சித்தாந்தத்தை” ஊக்குவித்ததாக அவர்களுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் மிச்செல் பெஸ்லெட் ஜனவரி மாதம் ஒரு அறிக்கையில் பின்வருமாறு எழுதினார், “பழிவாங்கல்களை எதிர்கொள்பவர்களை பாதுகாக்க இலங்கை நாட்டினருக்கான புகலிடம் வழங்கும் நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்யுங்கள். மற்றும் சித்திரவதை அல்லது பிற கடுமையான மனித உரிமை மீறல் ஆபத்தை எதிர்கொள்பவர்களை எந்தவிதத்திலும் திருப்பி அனுப்புதலையும் தவிர்க்கவும்”.

நாடுகடத்தப்பட்ட அகதிகள் இராணுவத்தால் பொற்றுப்பேற்கப்பட்டு இராணுவ முகாம்களுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். நாட்டிற்கு திரும்பி வரும் இலங்கை நாட்டினரின் கொரோனா தொடர்பான நிர்வாகத்திற்கு இராணுவமே பொறுப்பாக உள்ளது. பல நகரங்களில் தமிழர்கள் இந்த நாடு கடத்தப்படுவதை எதிர்த்தனர். டுசுல்டோர்ஃப் (Dusseldorf), பூரென் மற்றும் போர்ஸ்கைம் ஆகிய நகரங்களில் நாடுகடத்தப்படுவதை நிறுத்தக் கோரி ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் கூடினர்.

நாடுகடத்தப்படுவதை எதிர்கொண்டு 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்த பூரெனில் தடுத்து வைக்கப்பட்டுள்ள துரைஞானம் ராஜீவனின் விபரங்களை உலகசோசலிசவலைத் தளத்தால் அறியக்கூடியதாக இருந்தது. அவர் திருமணமானவர் மற்றும் 2 முதல் 9 வயது வரையிலான நான்கு குழந்தைகளின் தந்தையுமாவார். அவர் 10 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் தனது குழந்தைகளை மீண்டும் பார்க்க வரமுடியும் என்ற நிபந்தனையுடன் நாடு கடத்தப்பட்டார்.

உலகசோசலிசவலைத் தளம் தொலைபேசி மூலம் போர்ஸ்கைம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அகதியுடன் பேசியது. எம்.பெருமாள் தான் 2009 ஆம் ஆண்டில் உள்நாட்டுப் போரின் முடிவில் கைது செய்யப்பட்ட பின்னர் ஆகஸ்ட் 2010ல் சுவிஸுக்கு வந்ததாக கூறினார். இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் என சந்தேகிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார். அவர் நவம்பர் 2013 இல் மீண்டும் கொழும்புக்கு நாடு கடத்தப்பட்டு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவரால் நடக்க முடியாதளவிற்கு கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டார். அவரது குடும்பத்தினர் இராணுவ உளவுத்துறையினருக்கு பெரும் தொகையை செலுத்திய பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.

அவர் மீண்டும் ஐரோப்பாவுக்கு திரும்பி 2015 ஆம் ஆண்டின் இறுதியில் இத்தாலி வழியாக ஸ்ருட்கார்ட் நகருக்கு வந்தார். 2016 ஆம் ஆண்டின் நடுப்பகுதி முதல் வேலை செய்துவருவதாக அவர் கூறினார். பல உணவகங்களிலும் துப்பரவாக்கும் துறையிலும் பணிபுரிந்த பின்னர், Porsche நிறுவனத்தில் ஒரு வாடகைக்கு அமர்த்தும் துணை நிறுவனத்தால் அவர் பாரம்தூக்கி இயந்திரம் இயக்குபவராக பணியாற்றினார். வேலையில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது அவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு இரண்டு வயதில் மகன் ஒருவர் உள்ளார்.

அவரது உடலில் சித்திரவதைகளை உறுதிப்படுத்தும் மருத்துவரின் சான்றிதழை அவர் முன்வைத்திருந்தாலும் அவரது வழக்கு நிராகரிக்கப்பட்டது. அவருக்கு ஒரு சிங்கள மொழி பேசும் மருத்துவர் இலங்கையில் பல மாதங்களாக சிகிச்சை அளித்துள்ளார். ஒரு ஜேர்மன் மருத்துவர் அவரை பரிசோதித்தபோது அவர் முன்வைத்த சான்றின் சரியான தன்மையை உறுதிப்படுத்தியிள்ளார்.

புகலிடம் கோருவோரின் விண்ணப்பங்கள் வழக்கமாக நிராகரிக்கப்படுகின்றன. மேலும் அவர்களுக்கு ஒரு தற்கால குடியிருப்பு (“Duldung”) அனுமதி வழங்கப்படுகின்றன. அவர்களில் பெரும்பாலோர் ஒரு வழக்கறிஞரை பணியமர்த்தி மற்றும் குடியுரிமை அனுமதி பெற விண்ணப்பிக்கின்றனர். கைது, விசாரணை மற்றும் சித்திரவதைக்கான உறுதியான ஆதாரங்களை வழங்கினால் கூட அவர்களது விண்ணப்பம் அங்கீகரிக்கப்படுவது சாத்தியமற்றதாகின்றது. BAMPF என்ற அகதிகளின் விடயங்களை கையாளும் அமைப்பின் ஊழியர் "தீர்மானிப்பவர்" (Entscheider) என்று அழைக்கப்படுகிறார். இவர் போலீஸ் விசாரணையில் போன்று அகதிகளை மிரட்டுவதற்கு பயிற்சி பெற்றதுடன் அகதி முன்வைத்த அறிக்கைகளுக்கு முரணான வாக்குமூலங்களை வழங்க கட்டாயப்படுத்துவதால், அது விண்ணப்பத்தை நிராகரிக்க வழிவகுக்க இட்டுச்செல்கின்றது.

அகதிகள் தங்கள் உயிர்கள் உடனடி ஆபத்தில் உள்ளனர் என்பதையும், அவர்கள் கைது மற்றும் சித்திரவதைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதையும் நிரூபிக்க தேவையான அனைத்து ஆவணங்களுடனும் தனது சொந்தநாட்டை விட்டு வெளியேறவேண்டும் என்ற அறிவிற்கு பொருந்தாத வாதம் முன்வைக்கப் படுகின்றது. இது புகலிடம் கோருவோரின் வழக்குகளில் பயன்படுத்தப்படும் தன்னிச்சையான நீதிமுறையாக உள்ளது. புகலிட விசாரணை நடைமுறையில் பெரும் முயற்சிக்குப் பின்னர் அவர்கள் ஆவணங்களை சமர்ப்பித்தாலும் இவை நம்பமுடியாதவை என நிராகரிக்கப்படும்.

ஒரு நிர்வாக நீதிமன்ற தீர்ப்பு பின்வருமாறு கூறுகிறது: "முடிவில், வாதி தான் முன்வைத்த கூற்றுக்களை மேலதிக பொய்யான அறிக்கைகளை அளிப்பதன் மூலம் மேம்படுத்த முயற்சிக்கிறார் என வாரியம் நம்புகிறது. இது குறிப்பாக விசாரணைக்கு முன்னர் உடனடியாக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களுக்கு பொருந்தும். இவை நிர்வாக விசாரணையின் எதிர்மறையான முடிவுகளுக்கு பின்னர் அல்லது கூட்டு தீர்ப்புக்களுக்கு பின்னர் 'கொள்முதல்' செய்யப்பட்டன."

இந்த மனிதாபிமானமற்ற அதிகார முடிவுகளின் விளைவாக, புகலிடம் கோரும் விண்ணப்பங்கள் கிட்டத்தட்ட முழுமையாக நிராகரிக்கப்படுகின்றது. இது விரைவில் அல்லது பின்னர் தவிர்க்க முடியாமல் நாடுகடத்தலுக்கு வழிவகுக்கிறது. சித்திரவதை, கொலை, வன்முறை மற்றும் கஷ்டங்களால் நாட்டை விட்டு வெளியேறிய மக்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படும் அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர்.

காவல்துறையினர் எந்த நேரத்திலும், அவர்களை வீதியிலிருந்தோ, பணியிடத்திற்கு வெளியிலிருந்தோ அல்லது படுக்கையிலிருந்தோ வெளியே இழுத்து கைது செய்து மற்றவர்களுடன் சேர்த்து நேற்று, செவ்வாய், மார்ச் 30, 2021 இல் தமிழ் அகதிகளுக்கு நிகழ்ந்ததுபோல் அவர்கள் மரணத்தையும் துயரத்தையும் எதிர்கொள்ளும் நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படமுடியும்.

Loading