இலங்கை தமிழ் தேசியவாதிகள் இந்தியாவின் இந்து-பேரினவாத பாஜகவுடன் கூட்டணி நாடுகின்றனர்

கோவிட்-19 இறப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில், இலங்கையில் உள்ள தமிழ் தேசியவாத கட்சிகள் இந்தியாவின் ஆளும் இந்து-மேலாதிக்க பாரதீய ஜனதா கட்சிக்கு (BJP) அழைப்புவிடுகின்றன. இது அனைத்திற்கும் மேலாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் உந்தப்படும் போர் பதட்டங்களுக்கு மத்தியில் நிகழ்கின்றது. ஈரானுடன் இணைந்த ஆயுதக்குழுக்களின் மீது சமீபத்தில் சிரியாவில் குண்டுவீச்சு நடத்திய பதவிக்கு வந்துள்ள பைடென் நிர்வாகம், சீனாவை அச்சுறுத்துவதோடு, சீனாவிற்கும் வாஷிங்டனின் முக்கிய பிராந்திய நட்பு நாடான இந்தியாவிற்கும் இடையே இந்தியப் பெருங்கடல் பகுதி முழுவதும் பதட்டங்களை தீவிரப்படுத்துகிறது.

Indian Prime Minister Modi of the BJP (Source: Wikipedia)

பாரதீய ஜனதா கட்சியிடம் தமிழ் தேசியவாதிகள் முன்வைத்துள்ள முறையீடுகளின் வர்க்க உள்ளடக்கம் மிகவும் வெளிப்படையானது. பாரதீய ஜனதா கட்சி முஸ்லிம்களின் வகுப்புவாத படுகொலைகளைத் தூண்டும் நீண்ட, இரத்தக்களரியான பாரம்பரியத்தைக் கொண்ட ஒரு வன்முறையான கம்யூனிச எதிர்ப்பு கட்சியாகும். இது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் "சமூக நோய்யெதிர்ப்பு சக்தி பெருக்கம்" என்ற மோசமான தொற்றுநோய் கொள்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளதுடன், அதேபோல் சீனாவுக்கு எதிராக வாஷிங்டனுடன் கூட்டணி வைத்ததுள்ளது. பாரதீய ஜனதா கட்சியிடம் முறையிடுவதன் மூலம், தமிழ் தேசியவாதிகள் "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கம்" என்ற சமூக படுகொலை கொள்கைகளைத் தொடரவும், வகுப்புவாத வெறுப்புகளைத் தூண்டுவதற்கும், வலதுசாரிகளுடன் கூட்டணிகளை நாடுவதற்கும் மற்றும் தொழிலாள வர்க்க எதிர்ப்பிற்கு எதிரான ஏகாதிபத்திய போர்க் கொள்கைகளுக்கும் ஆதரவளிக்கின்றனர்.

பிப்ரவரி 15 ம் தேதி திரிபுரா மாநில முதல்வர் பிப்லாப் டெப்பின் கருத்துக்களுக்கு அவர்கள் தமது பிரதிபலிப்பை காட்டுகின்றனர். அவர் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இலங்கையை பா.ஜ.கட்சி கைப்பற்ற வேண்டும் என்று விரும்பினார் என்று கூறினார். "நாங்கள் நேபாளத்திலும் இலங்கையிலும் கட்சியை விரிவுபடுத்த வேண்டும், அங்கு அரசாங்கத்தை உருவாக்க அங்கு வெல்ல வேண்டும்" என்று ஷா வை மேற்கோளிட்டுள்ளார். டெப், சீன கம்யூனிஸ்ட் கட்சியையும் தாக்கினார்: “கம்யூனிஸ்டுகள் தங்கள் கட்சி உலகின் மிகப்பெரிய கட்சி என்று கூறுகின்றனர். ஆனால் அமித் ஷா பாரதீய ஜனதா கட்சிதான் உலகின் மிகப்பெரிய கட்சி என கூறினார்.”

இலங்கையில் இந்து-தீவிரவாத சிவசேனையை வழிநடத்தும் மறவன்புலவு சச்சிதானந்தன் விரைவில் டெபின் கருத்துக்களுக்கு ஒப்புதல் அளித்தார். பாரதீய ஜனதா கட்சியை "தெற்காசிய பிராந்தியத்தில் இந்துக்களுக்கான பாதுகாப்பான இயக்கம்" என்று அழைத்த அவர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இந்துக்களின் உலகளாவிய பாதுகாவலர் என்று பாராட்டி, இலங்கையில் பாரதீய ஜனதா கட்சியை கட்டியெழுப்ப அழைப்பு விடுத்தார்: “அத்தகைய இயக்கமும், மோடி மற்றும் [இந்திய உள்துறை அமைச்சர்] அமித் ஷா போன்ற தலைவர்களும் தான் இலங்கையில் இந்துக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியும். இதனால்தான் பாரதீய ஜனதா கட்சியை இங்கே தொடங்க முடிவு செய்துள்ளோம்” என்றார்.

இது தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான மிகவும் ஆத்திரமூட்டும், அப்பட்டமான ஒரு வன்முறைமிக்க அச்சுறுத்தலாகும். பாரதீய ஜனதா கட்சி அதன் சிக்கன நிகழ்ச்சி நிரலுக்கு எதிரான பெருகிவரும் வேலைநிறுத்தங்களையும், விவசாயிகளின் ஆர்ப்பாட்டங்களையும் மற்றும் தொற்றுநோய்க்கு முன்னர் முஸ்லீம் விரோத குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக வெடித்த வெகுஜன ஆர்ப்பாட்டங்களையும் வன்முறையால் அடக்குவதற்கு முயன்றுள்ளது. மேலும், 1987-1990 இல் இலங்கையின் வடகிழக்கு தமிழ் பெரும்பான்மையினர் வாழும் பிரதேசங்களின் பெரும்பகுதியை இந்தியா அரசு ஏற்கனவே ஆக்கிரமித்துமுள்ளது.

இலங்கையில் பல முக்கிய தமிழ் தேசியவாத அரசியல்வாதிகள் டெப்பை ஆதரித்தனர். கடந்த மாதம் இந்து மத தலைவர்கள் தலைமையில் பொத்துவில் முதல் பொலிகண்டி நோக்கிய அணிவகுப்பில் இணைந்த தமிழ் தேசியக் கட்சியின் தலைவரான கே. சிவாஜிலிங்கம், இந்து வெறியர்களின் அழைப்பிற்கு ஒப்புதல் அளித்து, “உலகம் முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளன. அப்படியானால், பாரதீய ஜனதா கட்சியின் பெயரில் இன்னொரு சர்வதேச கட்சி ஏன் இருக்கக்கூடாது?” என்றார்.

இலங்கையின் வடக்கு கடற்கரையிலிருக்கும் மூன்று சிறிய தீவுகளில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் ஒப்பந்தத்தை சீன நிறுவனத்திற்கு வழங்கவுள்ள இலங்கை அரசாங்கத்தின் முடிவை அவர் கண்டித்தார். "ஈழத்தமிழர்கள் இந்த மண்ணில் சீன நிறுவனங்களை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்," என்று சிவாஜிலிங்கம் மேலும் கூறினார்: "இந்த சீன ஒப்பந்தம் உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும். இல்லையென்றால், தமிழ் மக்கள் விடயங்களை தமது கைகளில் எடுத்துக்கொள்ள நேரிடும். அரசாங்கம் இதை புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.

இலங்கை அரசாங்கம் சீன-விரோத நிலைப்பாட்டை எடுக்காவிட்டால், அமெரிக்க மற்றும் இந்திய துருப்புக்கள் இலங்கையை ஆக்கிரமிக்கக்கூடும் என்று சிவாஜிலிங்கம் அச்சுறுத்தினார்: “இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில், நீங்கள் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் எதிராக செயல்பட்டால், நிச்சயமாக ஒரு பெரிய மோதல் நிகழும். இலங்கையின் அமெரிக்க அல்லது இந்திய துருப்புக்கள் வடக்கு மற்றும் கிழக்கில் தரையிறங்கி தங்கியிருக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை” என்றார்.

இந்தியா, தமிழீழ அரசை தன்னுடன் இணைக்கும் இலங்கையின் இனரீதியான பிரிவினையை ஆதரிப்பதாக அவர் மிரட்டினார்: “உலகில் பல நாடுகள் உடைந்து துண்டு துண்டாகியுள்ளன என்பதை புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் விரும்பினால், இலங்கைத் தீவு இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, ஒன்று தமிழீழ மாநிலமாகவும், மற்றொரு பகுதி இலங்கை மாநிலமாகவும் மாறலாம். மாநில முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட்டு எல்லோரும் இந்தியாவின் புது டெல்லி நாடாளுமன்றத்திற்கும், மேல் சபைக்கும் செல்ல வேண்டியிருக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்” என்றார்.

மோடி அரசாங்கத்திற்கு அழைப்புவிட்ட அவர், “நீங்கள் உங்கள் பாதுகாப்பை தேடிக்கொள்ள வேண்டும். ஈழத்தமிழர்களான நாங்கள் அதற்கு ஆதரவாக நிற்போம்” என்றார்.

தமது பங்கிற்கு ஏனைய தமிழ் தேசியவாதிகளும் இலங்கையில் பாரதீய ஜனதா கட்சியை நிறுவுவதற்கு ஒப்புதல் அளித்தனர். இது கொழும்பில் இலங்கை அரசாங்கத்துடன் தங்கள் சூழ்ச்சிக்கையாளல்களுக்கு உதவக்கூடும் என ஊகிக்கின்றனர். வடக்கு மற்றும் கிழக்கின் இனரீதியான தமிழர் கட்டுப்பாட்டை ஆதரித்தால் பாரதீய ஜனதா கட்சியை இலங்கைக்கு "வரவேற்கிறேன்" என்று தமிழ் தேசிய கூட்டணி (TNA) உறுப்பினர் எஸ்.சிறீதரன் கூறினார். "சிங்கள தேசம், தமிழ் மக்களின் கலை, கலாச்சாரம், சுயாட்சி, இறையாண்மை, தமிழ் தேசியவாதம் மற்றும் மொழி ஆகியவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று அவர் மேலும் கூறினார்.

இத்தகைய கருத்துக்கள் பிராந்தியத்தில் தொற்றுநோய் மற்றும் பெருகிவரும் பூகோள மூலோபாய பதட்டங்களின் மத்தியில், தமிழ் தேசியவாதிகள் வலது நோக்கி தீவிரமாக நகர்ந்துகொண்டிருப்பதை எடுத்துக்காட்டுகின்றன. 2009 ல் இலங்கை உள்நாட்டுப் போரின் முடிவில் தமிழீழ விடுதலைப் புலிகள் ((LTTE) போராளிகளின் தோல்வி மற்றும் அவர்கள் படுகொலை செய்யப்பட்டதிலிருந்து, சிக்கன கொள்கைகள் மற்றும் பொலிஸ்-அரசு நடவடிக்கைககுக்கு எதிரான வேலைநிறுத்தங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் சிங்கள, தமிழ், முஸ்லீம் தொழிலாளர்களும் இளைஞர்களும் ஒன்றாக அணிதிரண்டுள்ளனர். இது, அவர்களது தேசியவாத அரசியலுக்கு குழிபறிப்பதை கண்டு இலங்கையின் சிங்கள, தமிழ், முஸ்லிம் முதலாளித்துவ பிரிவினரை திகைப்படையவும், பயமுறவும் செய்துள்ளது.

தமிழ் முதலாளித்துவ தேசியவாதிகள் கீழிருந்து எழும் ஒரு இயக்கத்திற்கு பயந்து பதிலளித்தாலும், அவர்கள் இன்னும் வெளிப்படையாக நவ காலனித்துவ, வகுப்புவாத மூலோபாயத்தை பின்பற்றுகின்றனர். 2015 ஆம் ஆண்டில், கொழும்பில் அமெரிக்க ஆதரவுடைய ஆட்சி மாற்ற நடவடிக்கைக்கு அவர்கள் ஆதரவளித்து, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த இராஜபக்க்ஷவை வெளியேற்ற உதவினர். வாஷிங்டன் அவரை சீனாவுடன் மிக நெருக்கமாக இருப்பதாகக் கண்டது. அதற்கு பின்னர் அமெரிக்க ஆதரவுடைய, சிக்கன-சார்பு அரசாங்கம் அமைக்கப்பட்டது. எவ்வாறாயினும், 2019 ல் அது சரிந்த பின்னர், இராஜபக்க்ஷ சகோதரர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தபின், தமிழ் தேசியவாதிகள் தமது வலதுசாரி மற்றும் சீன எதிர்ப்பு வார்த்தையாடல்களில் இன்னும் வெறித்தனமாக மாறினர்.

தொற்றுநோய் இந்த மோதல்களை முன்னோடியில்லாத மட்டத்தில் தீவிரப்படுத்தியுள்ளது. பொதுத்துறை ஊழியர்கள், வாகன துறை, போக்குவரத்து துறை தொழிலாளர்களின் நீடித்த பாரிய வேலைநிறுத்தங்கள் மற்றும் இலட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டங்களால் மோடி அரசு அதிர்ந்து போயுள்ளது. இப்போது, தெற்காசியா முழுவதும் மீண்டும் தொற்றுநோய்கள் மற்றும் இறப்புகள் அதிகரித்து வருகையில், முதலாளித்துவத்தின் அனைத்து பிரிவுகளும் ஒரு கொலைகார "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" கொள்கையை பின்பற்றுவதுடன், இது தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே கடுமையான எதிர்ப்பைத் தூண்டிவிட்டுள்ளது.

வாஷிங்டன் மற்றும் புது தில்லியின் நிலைப்பாட்டில் இருந்து தமிழ் தேசியவாதிகளின் பாரதீய ஜனதா கட்சி சார்பு வார்த்தையாடல்களில் வெகுதூரம் சென்றிருக்கலாம் என்பதற்கான அறிகுறிகள் உள்ளன. பிப்ரவரி 24 அன்று, இலங்கைக்கான அமெரிக்க தூதர் அலைனா டெப்லிட்ஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களான மாவை. எஸ். சேனாதிராசா, எஸ்.ஸ்ரீதரன், மற்றும் சி.வி.கே. சிவஞானம் ஆகியோரை சந்தித்தார். அவர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் (TNPF) யாழ்ப்பாண மேயர் வி. மணிவண்ணனையும் சந்தித்தார். மணிவண்ணன் அமெரிக்க துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸினது தமிழ் வம்சாவளியை பற்றி பாராட்டியதாகவும், அமெரிக்க உதவிக்கு வேண்டுகோள் விடுத்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றது. இந்த சந்திப்புகளுக்குப் பின்னர், கிழக்கிலிருந்து-வடக்கிற்கான அணிவகுப்பின் போதான தமிழ் தேசியவாதிகளின் இந்துவாத வலைத்தள ஒளிப்பதிவுகள் பல அகற்றப்பட்டன.

பாரதீய ஜனதா கட்சிக்கான தமிழ் தேசியவாதிகளின் ஆதரவானது, இலங்கையிலும் சர்வதேசரீதியாகவும் தொழிலாளர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகும். தொழிலாளர்களும் உழைக்கும் மக்களும் 1987-1990 இல் இலங்கையை ஆக்கிரமித்த பகுதிகளில் இந்திய இராணுவம் விட்டுச்சென்ற கொடூரமான இரத்தக்கறைகளையும், கொள்ளையடிப்பையும், பாலியல் கொடூரங்களையும் மறந்துவிட முடியாது. ஆனால் தமிழ் தேசியவாதிகள் புதுதில்லியில் தமது கூட்டினரை நாடுகின்றனர். எவ்வாறாயினும், சர்வதேச ரீதியாக வர்க்க, பூகோள அரசியல் பதட்டங்கள் வெடிக்கும் பரிமாணங்களை அடைகையில், முதலாளித்துவ தேசியவாதிகள் மேலும் வலதுபுறம் நோக்கி செல்கின்றனர்.

இலங்கையில் இந்திய தலையீடும், 1991 இல் சோவியத் ஒன்றியம் ஸ்ராலினிச ஆட்சியால் கலைக்கப்பட்டும் மூன்று தசாப்தங்கள் ஆகின்றன. அப்போதிருந்து, இந்திய முதலாளித்துவமும் தமிழ் தேசியவாத கட்சிகளும் தங்களை ஏகாதிபத்திய ஆதிக்கம் செலுத்தும் உலக முதலாளித்துவ சந்தையில் தம்மை முழுமையாக ஒருங்கிணைப்பதில் வெகுதூரம் வலதுசாரிப்பக்கம் நகர்ந்துள்ளன. அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் மோடியிடம் ஆதரவைப் பெறுவதை நோக்கமாகக் கொண்ட தமிழ் தேசியவாதிகளின் சீனா எதிர்ப்பு சீற்றங்கள், தொழிலாள வர்க்கத்தின் மீதான அவர்களின் கடுமையான விரோதத்திலிருந்து பிரிக்க முடியாதவை.

மோடியிடம் முறையிடுவதன் மூலம், அவர்கள் இலங்கையில் தொழிலாளர்கள் போராட்டங்களின் புதுப்பிக்கப்பட்ட எழுச்சிக்கு எதிராக, தமது கூட்டுக்களை நாடுகின்றனர். அதவேளையில், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள், பேரழிவுகரமான தொற்றுநோய்க்கு எதிரான சுகாதாரத் தொழிலாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்களின் போராட்டங்கள், ஆசிரியர்களின் போராட்டங்களும் மற்றும் கடந்த வருடத்தின் இறுதி மாதங்களில் வடக்கு, கிழக்கு உட்பட தீவு முழுவதும் பாரிய ஆர்ப்பாட்டங்களும் நிகழ்ந்தன.

இலங்கை மற்றும் இந்திய ஆட்சிகளின் பிற்போக்கு அரசியலுக்கும், அவர்களின் தமிழ் தேசியவாத கூட்டினருக்கும் மாற்றாக சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே ஒரு மாற்றீட்டை முன்வைத்துள்ளது. இது புது டெல்லி, கொழும்பு மற்றும் தமிழ் தேசியவாதிகளின் சதிகளுக்கு எதிராக அப்பிராந்தியத்தின் இன, தேச எல்லைகளை கடந்து அரச அதிகாரத்துக்கும் சோசலிசத்துக்குமான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேசரீதியான அணிதிரட்டலையும் ஐக்கியப்படுத்தலையும் முன்வைக்கின்றது. இதுதான் ஏகாதிபத்திய போர் உந்துதலையும், தொற்றுநோயையும் தடுப்பதற்கான ஒரு விஞ்ஞான ரீதியான கொள்கையை முன்வைப்பதற்கான ஒரே வழியாகும்.

Loading