மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
டிசம்பர் 30ம் திகதியன்று சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் அடைந்த வர்த்தக உடன்பாடு, ஐரோப்பிய ஒன்றிய-அமெரிக்க பதட்டங்களை பெருமளவில் தீவிரப்படுத்தியுள்ளது. ஜோ பைடென் வாஷிங்டனில் பதவியேற்கவுள்ள நிலையில், ரஷ்யாவையும் சீனாவையும் எதிர்கொள்ள ஒரு "ஜனநாயக அணி" ஒன்றை உருவாக்க அழைப்புவிடுத்துள்ள நிலையில் இந்த உடன்பாடு எட்டப்பட்டது. எவ்வாறெனினும், ஐரோப்பிய ஒன்றிய-சீனா உடன்பாட்டிற்குப் பின்னர், ஐரோப்பிய முதலாளித்துவத்தின் சக்திவாய்ந்த சக்திகள், ட்ரம்பின் ஜனாதிபதி பதவிக்குப் பின்னர் அமெரிக்காவுடனான நேட்டோ கூட்டணி மீதான அவர்களின் நம்பிக்கை குறைமதிப்பிற்கு உட்பட்டதோடு, வாஷிங்டனுடன் முரண்படுகின்ற ஒரு கொள்கையைப் பின்பற்றுவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது என்பது தெளிவாகிறது.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்களின் சீர்குலைவு, ட்ரம்ப் தனது தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுப்பது மற்றும் வாஷிங்டனின் பேரழிவுகரமான COVID-19 பெருந்தொற்று நோய்க்கு “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்” கொள்கை ஆகியவைகள் நேட்டோவிற்குள்ளேயே உட்பட — சர்வதேச மோதல்களை வெடிக்கும் இயக்கத்திற்கு உட்படுத்துகின்றன.
ஐரோப்பிய ஒன்றியமும் பெய்ஜிங்கும் இந்த ஒப்பந்தம் குறித்து 2012 ஆண்டு முதல் விவாதித்தன, சுவிஸ் Neue Zurcher Zeitung பத்திரிகை இவ்வாறு எழுதியது, "இலையுதிர்காலத்தில் பல வேறுபாடுகள் காரணமாக இது சாத்தியமில்லை என்று தோன்றியது." ஆனால் நவம்பரில் நடந்த அமெரிக்கத் தேர்தல்களுக்குப் பின்னர், டிசம்பர் 18ம் திகதியன்று ஐரோப்பிய ஒன்றியம் ஒரு ஒப்பந்தத்தை எடுக்க "கொள்கையளவில் ஒரு அரசியல் முடிவை" எடுத்தது என்பது வெளிப்பட்டது. அனைத்து கணக்குகளின்படி, இது இரண்டு வாரங்களில் செய்யப்பட்டது, ஜேர்மன் சான்சலர் அங்கேலா மேர்க்கலின் தனிப்பட்ட ஈடுபாட்டிற்கு நன்றி - அவரது முன்னாள் பாதுகாப்பு செயலாளர், ஐரோப்பிய ஒன்றிய ஆணையத் தலைவர் ஊர்சுலா வொன் டெர் லெயன் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் ஆகியோரின் உதவியுடன் இது செய்யப்பட்டது.
வரவிருக்கும் பைடென் நிர்வாகத்தின் அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, ஐரோப்பாவில் தங்களுடைய ஆதரவாளர்களை அணிதிரட்டவும், இந்த உடன்பாட்டை நிறுத்தவும் முயன்றனர். டிசம்பர் 22 திகதியன்று, இடைக்கால அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் ட்டுவீட் செய்தார்: "சீனாவின் பொருளாதார நடைமுறைகள் பற்றிய நமது பொதுவான கவலைகள் குறித்து நமது ஐரோப்பிய பங்காளிகளுடன் பைடென்-ஹாரிஸ் நிர்வாகம் ஆரம்ப கட்ட ஆலோசனைகளை வரவேற்கும்."
ஐரோப்பிய ஒன்றியத்தில் அமெரிக்க செல்வாக்கானது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து லண்டனின் பிரெக்ஸிட்டால் குறைமதிப்பிற்கு உட்பட்டதால், இந்த ஒப்பந்தத்தை விமர்சிக்க தீவிர வலதுசாரி போலந்து ஆட்சி வந்தது. ஐரோப்பிய ஒன்றியம் வாஷிங்டனுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்று போலந்து வெளியுறவு மந்திரி ஜ்பிக்னீவ் ராயு கூறினார்: “ஐரோப்பாவானது சீனாவுடனான முதலீடு தொடர்பான விரிவான ஒப்பந்தமானது (Comprehensive Agreement on Investment with China) ஒரு நியாயமான பரஸ்பர நன்மை பெற வேண்டும். எங்களுடைய அட்லாண்டிக் கடந்த நட்பு நாடுகளை திறம்பட கொண்டு வருவதற்கு எங்களுக்கு கூடுதல் ஆலோசனைகளும் வெளிப்படைத்தன்மையும் தேவையாகும்.”
எவ்வாறாயினும், ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் இந்த ஆட்சேபனைகளை புறக்கணித்தனர், இருப்பினும், 2020 ஆம் ஆண்டின் இறுதியில் ஜேர்மனியின் ஐரோப்பிய ஒன்றிய தலைமைப் பதவி முடிவடைவதற்கு சற்று முன்னர் இந்த ஒப்பந்தத்தை ஒப்புக் கொண்டனர். பிரான்ஸானது இப்போது சுழற்சி முறையில் வரும் ஐரோப்பிய ஒன்றிய தலைமைப் பதவியில் இருப்பதால், அதன் விபரங்கள் 2022 ஆண்டுக்குள் இறுதி செய்யப்படவுள்ளன.
இந்த உடன்பாடானது அமெரிக்க போட்டியாளர்கள் மற்றும் சீனாவின் சொந்த ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் இழப்பில் சீன மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திடமிருந்து பிழிந்தெடுக்கப்பட்ட இலாபங்களில் தங்கள் பங்கை அதிகரிக்க ஐரோப்பிய பெருநிறுவனங்கள் செய்யும் முயற்சியாகும். ஐரோப்பிய வாகன, போக்குவரத்து மற்றும் மருத்துவ உபகரணங்கள், எரிசக்தி மற்றும் நிதித் தொழில்துறைகள் சீன சந்தைகளுக்குள் முன்னோடியில்லாத அணுகலை அனுமதிக்கிறது. இது ஐரோப்பிய நிறுவனங்களுடன் போட்டியிடுவதற்கான சீனாவின் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் திறனையும் கட்டுப்படுத்துகிறது. ஜின்ஜியாங் (Xinjiang) மீதான குற்றச்சாட்டுகளுக்கு வெளிப்படையாக விடையிறுக்கும் வகையில், ILO (சர்வதேச தொழிலாளர் அமைப்பு -International Labour Organization) இன் கட்டாய தொழிலாளர் தொடர்பான அடிப்படை உடன்படிக்கைகளை (Fundamental Conventions on Forced Labor) அங்கீகரிக்க சீனா உறுதிபூண்டுள்ளது.
இந்த உடன்பாட்டைக் குறித்து அமெரிக்க அதிகாரிகள் பைனான்சியல் டைம்ஸிடம் கருத்து தெரிவித்தனர். "ஜேக்கின் ட்டுவீட் செய்தி மிகவும் கவனமாக இருந்தது, ஆனால் செய்தி தெளிவற்றது. … ஜேக் அடிப்படையில் ‘ஏய் விஷயங்களை மெதுவாக்குங்கள்’ என்று சொன்னார், அது நடக்காது” என்று ஒபாமா நிர்வாகத்தின் முன்னாள் அதிகாரி ஒருவர் கூறினார். "எந்த அளவிலும் இது ஒரு பின்னடைவு."
ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் இந்த உடன்பாடு குறித்து கடுமையாக பிளவுபட்டுள்ளனர். ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஆணையர் வால்டிஸ் டோம்ப்ரோவ்ஸ்கிஸ் அதை "சீனா ஒரு மூன்றாவது நாட்டுடன் என்றுமில்லாத உடன்பட்ட மிக இலட்சியமான முடிவுகள்" என்று அழைத்தாலும், பல ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் அதை கண்டித்தனர். சீன விவகாரங்களின் மீதான ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற பிரதிநிதிகள் குழுத் தலைவரான ரெய்ன்ஹார்ட் புடிகோவர் (Reinhard Bütikofer - ஒரு பசுமைக் கட்சி அதிகாரியும் முன்னாள் மாவோயிஷ்ட்டும்) பெய்ஜிங் உடனான உடன்படிக்கையை ஒரு "மூலோபாயத் தவறு" என்று அழைத்தார். அவர் இவ்வாறு ட்டுவீட் செய்தார்: "ஜோ பைடென் நடு விரலை காட்டும்போது நாம் உண்மையில் ஜி ஜின்பிங்க்கு உதவ வேண்டுமா?"
பிரெஞ்சு ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினரான ராபேல் குளுக்ஸ்மான் (Rapha‘l Glucksmann), 1968 க்குப் பிந்தைய மாவோவாத "புதிய தத்துவவாதி" ஆண்ட்ரே குளுக்ஸ்மானின் (André Glucksmann) மகனான இவர், இந்த உடன்பாட்டை கண்டித்தார். ஜின்ஜியாங்கில் அதன் நடவடிக்கைகள் "வலுவான அமலாக்கல் மற்றும் சரிபார்ப்பு பொறிமுறைகளுடன் இணைந்தவை அல்ல" என்ற அமெரிக்க தேசிய பாதுகாப்புக் குழுவின் செய்தித் தொடர்பாளர் ஜோன் உல்யோட்டின் விமர்சனத்தை எதிரொலிக்கும் வகையில், குளுக்ஸ்மான் கூறினார்: "வீகர் (Uighur) அடிமைகளை சுரண்டும் ஆலைகளில் எந்த வெளிச் சாட்சியும் நுழைய முடியாது. எனவே இது வெறும் வார்த்தைகள் தான்."
குளுக்ஸ்மானின் சீற்றங்கள் பிற்போக்குத்தனமான பிரச்சாரங்களாகும். நேட்டோ சக்திகள் இலக்கு கொண்ட இலாபங்களின் அளவு, அது காக்கசஸ், சிரியா மற்றும் இப்பொழுது சீனாவாக இருந்தாலும், சம்பந்தப்பட்ட பிராந்தியத்திலிருந்து பிழிந்தெடுக்க விரும்பும் இலாபங்களின் அளவிற்கு அவரது தார்மீக சீற்றம் தவிர்க்க முடியாமல் நேரடியாக உள்ளது. CIA இன் பேச்சுக் குறிப்புகளிலிருந்து நேரடியாக எடுக்கப்பட்ட ஜின்ஜியாங்கிலுள்ள சிறை முகாம்கள் பற்றிய அவரது கண்டனங்கள் அனைத்தும் வெற்றுக் கூறாக உள்ளது. இது மத்திய தரைக்கடல் மற்றும் பால்கன் பகுதிகளில் ஐரோப்பிய ஒன்றியம் கட்டமைத்து வரும் பாரியளவிலான அகதிகள் சிறை முகாம்களுக்கு மிகவும் நன்றாக இடமளிக்கிறது.
இதற்கு மாறாக, பெய்ஜிங் ஆனது வாஷிங்டனுக்கெதிராக நட்பு நாடுகளை நாடுகையில், சீன அரச செய்தி ஊடகம் இந்த உடன்பாடு படிப்படியாக பதட்டங்களை குறைக்கும், சீனாவிற்கு எதிரான அமெரிக்க அச்சுறுத்தல்களை கட்டுப்படுத்தும் மற்றும் உலக முதலாளித்துவத்திற்கு ஒரு அமைதியான எதிர்காலத்தை உறுதி செய்யும் என்று நம்பிக்கைகளை முன்வைத்திருந்தன.
குளோபல் டைம்ஸ் சீனப் பத்திரிகை இவ்வாறு எழுதியது, "பல மேற்கத்திய செய்தி ஊடகங்கள் இந்த உடன்பாட்டின் மீது ஒரு நெருக்கமான கண் வைத்திருக்க காரணம், அல்லது அடுத்த காலத்தில் சீனா-அமெரிக்க உறவு அதன் செல்வாக்கு பற்றி நாம் சொல்ல முடியும். ... சீனாவும் ஐரோப்பிய ஒன்றியமும் தடையற்ற வர்த்தக உடன்பாடுகளை எட்டினால், ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையே மிக நெருக்கமான தொடர்பைக் குறிக்கும். எனவே, பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, இது பூகோளமயமாக்கலின் அடித்தளத்தை வலுப்படுத்தும். பூகோளமயமாக்கலின் அடித்தளம் பாதுகாக்கப்பட்டவுடன், மோதல் மற்றும் புதிய பனிப்போருக்கான நகர்வுகள் அவற்றின் உந்துதலை இழக்கநேரிடும்."
உண்மையில், இந்த பெருந்தொற்று நோய் என்பது ஒரு தூண்டுதல் நிகழ்வு ஆகும். இது உலக முதலாளித்துவத்தின் சிக்கலான சர்வதேச மற்றும் வர்க்க மோதல்களை பாரியளவில் உக்கிரப்படுத்தியிருக்கிறது. ஆசியா மற்றும் சீனாவின் வளர்ந்து வரும் பொருளாதார எடையை இந்த காலாவதியான அமைப்பினுள் ஒருங்கிணைக்க முடியாது, இதன் திவால்நிலை, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவின் செல்வந்த நாடுகளால் COVID-19 வைரஸைக் கட்டுப்படுத்த இயலாமையால் அம்பலத்திற்கு வந்துள்ளது — அவர்கள் பின்னர் இந்த நோயினால் ஏற்பட்ட இறப்புகளுக்காக சீனாவைக் குற்றம் சாட்டும் பொய்ப் பிரச்சாரங்களை பரப்பினர். பேரழிவு மோதலைத் தவிர்க்கக்கூடிய ஒரே சக்தி சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர அணிதிரட்டலாகும்.
உலக அரசியலை ஸ்திரப்படுத்துவதற்குப் பதிலாக, சீனா-ஐரோப்பிய ஒன்றிய உடன்பாடானது 20ம் நூற்றாண்டில் இரு உலகப் போர்களில் வெடித்த அமெரிக்க, ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான வரலாற்று ரீதியாக வேரூன்றிய மோதல்களை கொழுந்துவிட்டு எரியச் செய்து வருகிறது. 1991 ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிச கலைப்பு, நேட்டோவை அதனுடைய பொது எதிரியை இல்லாததாக்கியதன் மூலம் அபாயகரமான முறையில் குறைமதிப்பிற்கு உட்படுத்தியது. மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கா முழுவதிலும் அடுத்து வந்த தசாப்தங்களில் நவ-காலனித்துவ போர்களில் கொள்ளையடிப்புகளை பிரித்தல் தொடர்பான ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான மோதல்கள் இப்போது ஒரு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன.
2015 ஆம் ஆண்டில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அமெரிக்க எதிர்ப்பை எதிர்த்தன, பெய்ஜிங்கின் ஒரே இணைப்பு ஒரே பாதை முன்முயற்சியின் (BRI) பாரிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியளிக்க சீனாவின் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) உடன் கையெழுத்திட்டன. இந்த முடிவானது அமெரிக்க பொருளாதார மற்றும் பூகோள அரசியல் செல்வாக்கின் பொறிவிற்கு சாட்சியமளித்தது, இது இன்றுவரை தொடர்கிறது.
2016 ஆண்டில் ட்ரம்பின் தேர்தலுக்கும், ஜேர்மன் கார் ஏற்றுமதியை புறக்கணிப்பதாக அவர் அச்சுறுத்தியதற்கும் மேர்க்கெல் விடையிறுக்கும் வகையில், ஐரோப்பியர்கள் “நம்முடைய எதிர்காலத்திற்காக நாமே போராட வேண்டும்” என்று 2017 ல் அறிவித்ததன் மூலம், நேட்டோவிற்குள் பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன. ஐரோப்பிய ஒன்றிய சக்திகளானது வாஷிங்டனின் தடைகளிலிருந்து ஈரான், ரஷ்யா மற்றும் இப்பொழுது சீனா ஆகிய நாடுகளில் இருந்து அவைகளை வெளியே கொண்டுவருதற்கு பயன்படுத்த முயற்சிக்கிறது. இந்த நாடுகள் வர்த்தகப் போர் அல்லது அப்பட்டமான இராணுவ மோதல்களால் அச்சுறுத்தப்படுகின்றன. இப்பொழுது அது COVID-19 வைரஸால் தொழிலாள வர்க்கத்தை அழிக்க அனுமதிக்கும் அதே சமயம், ஐரோப்பிய ஒன்றியம் பில்லியன் கணக்கான யூரோக்களை மீண்டும் இராணுவமயமாக்குவதற்கும் இன்னும் கூடுதலான சுயாதீனமான வெளியுறவுக் கொள்கையை தயாரிக்கவும் திருப்பிவிடுகின்றது.
ஐரோப்பாவானது "சீனாவுடன் ஒரு கடுமையான மோதலில் சிக்கிக் கொள்ள அனுமதிக்காது", என்று Le Monde பத்திரிகை சமீபத்திய உடன்படிக்கை குறித்து எழுதியது, "சான்சலர் அந்த வாய்ப்பு தனித்துவமானது என்று அறிந்திருந்தார்: ஜேர்மனியின் [ஐரோப்பிய ஒன்றிய] தலைவர் பதவி அவருக்கு தேவையான ஆற்றலையும் அதிகாரத்தையும் கொடுத்தது; வாஷிங்டனில் அதிகார மாற்றம் ஜனவரி 20, 2021 அன்று ஜோ பைடென் பதவியேற்றவுடன் குறைக்கப்படக்கூடிய வழியைக் கொடுத்தது. இந்த ஆண்டு, COVID-19 பெருந்தொற்றானது பெய்ஜிங்-வாஷிங்டன் காட்சிகளுக்கு மத்தியில், குறிப்பாக சுகாதாரம் மற்றும் தொழில்நுட்பம் மீது, ஐரோப்பிய "இறையாண்மையை" வலுப்படுத்துவது அவசரமானது என்ற கருத்தை ஜேர்மனியில் வலுப்படுத்தியது."
Foreign Policy பத்திரிகையில் எழுதிய அமெரிக்காவின் சிந்தனைக் குழாமின் ஜேர்மன் மார்ஷல் நிதியத்தின் ஒரு சக உறுப்பினரான நோவா பார்கின் என்பவர் ஐரோப்பிய ஒன்றிய-சீன உடன்படிக்கையின் தாக்கங்கள் குறித்து எச்சரித்தார். அவர் எழுதினார்: "இது பெய்ஜிங்கிற்கு ஒரு புவிசார் அரசியல் கொடுப்பனவாகவும், அட்லாண்டிக் உறவுகளை சீர்செய்வதற்கும், சீனா முன்வைக்கும் மூலோபாய சவால்களில் ஐரோப்பாவுடன் மிகவும் நெருக்கமாக பணியாற்றுவதற்கும் உறுதிபூண்டுள்ள புதிய பைடென் அரசாங்கத்திற்கு அவமரியாதை என்று பார்ப்பது கடினம்."
குறிப்பிடத்தக்க வகையில், 2020 ஆண்டு அமெரிக்க தேர்தல் நெருக்கடியிலிருந்து பேர்லின் முடிவுக்கு வந்தது, போர் மற்றும் ஆட்சி மாற்றத்திற்கான வாஷிங்டனால் இலக்கு வைக்கப்பட்ட அதிகாரங்களுடன் மூலோபாய தொடர்புகளை வளர்ப்பதன் மூலம் நேட்டோவின் சரிவிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்று பார்கின் கூறினார்.
அவர் எழுதினார், "நவம்பரில் ட்ரம்ப் பைடெனிடம் தோற்றார். ஆனால் பேர்லினில் உண்மையிலேயே பெரும் வரவேற்பைப் பெற்ற எண்ணிக்கை, பைடெனை மேலே கொண்டு வந்த 306 தேர்தல் தொகுதியிட வாக்குகள் அல்ல, மாறாக ட்ரம்ப் பெற்ற 74.2 மில்லியன் வாக்குகள் தான் என்று என்னால் கூறப்பட்டது. ட்ரம்ப் விரைவில் காணாமல் போகலாம், ஆனால் அவரது ஆதரவாளர்கள் இங்கே தங்கியிருக்க உள்ளனர். வேறு யாராவது அவரது தேசியவாத போர்க் கூக்குரலை எடுத்துக்கொள்ளுவதற்கு முன்னர் நேரத்திற்கான விடயமாக மட்டும்தான் இது இருக்கிறது. இந்தப் பின்னணியில், மேர்க்கெலின் பார்வையில், முன்னோக்கிய ஒரே பொறுப்பான பாதை, வேலியைப் போடுவதுதான்."
நேட்டோவின் சிதைவுக்கு எதிரான ஒரு ஐரோப்பிய ஒன்றிய-சீன "வேலி" ஆனது பேரழிவு தரும் போர்களையும், உயிர் இழப்பையும் தடுக்கும் என்று வாதிடுபவர்கள் வரலாற்றுக்கு எதிராக கடும் பந்தயங்களை கட்டுகின்றனர். COVID-19 தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான போராட்டத்தைப் போலவே, போருக்கு எதிரான போராட்டமும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மீது விழுகிறது.