மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
எகிப்தின் சர்வாதிகாரி ஜெனரல் அப்தெல் அல்-சிசி மூன்று நாள் அரசு பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று காலை பாரிஸில் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். வெளியுறவு மந்திரி ஈவ் லு திரியோன் மற்றும் தேசிய சட்டமன்றத் தலைவர் ரிச்சார்ட் ஃபெராண்ட் ஆகியோரை எலிசே மாளிகையில் மக்ரோனுடன் உணவருந்த முன் அல்-சிசி சந்தித்தார்.
அவர்களின் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் ஒரு கூட்டு செய்தியாளர் கூட்டத்தில், மக்ரோன் "எங்கள் இரு நாடுகளையும் இணைக்கும் மூலோபாய கூட்டுப்பங்காண்மை தரத்தை எங்கள் வழக்கமான பரிமாற்றங்கள் விளக்குகின்றன, மேலும் இன்று காலை நாங்கள் மேற்கொண்ட நீண்ட நேர வேலை இந்த பரிமாற்றங்களை ஆழப்படுத்த அனுமதித்துள்ளது" என்று அறிவித்தார்.
ஜூலை 2013 இல் ஆட்சி கவிழ்ப்பில் ஆட்சியைக் கைப்பற்றிய இரத்தக் கறை படிந்த இராணுவ சர்வாதிகாரத்தின் தலைவரான அல்-சிசியை மக்ரோன் பாராட்டினார். 2011 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்க ஆதரவு சர்வாதிகாரி ஹாஸ்னி முபாரக்கை தூக்கியெறிந்த புரட்சியை இந்த சதி கொடூரமாக நசுக்கியது.
அல்-சிசி அவரது "அன்பான நண்பர் ஜனாதிபதி மக்ரோனுக்கு" "நான் பாரிஸிக்கு வந்ததிலிருந்து அன்பான வரவேற்பு" அளித்ததற்கு நன்றி தெரிவித்தார். மக்ரோன் தனது ஒத்தபோக்குள்ளவருக்கு பிரெஞ்சு ஆதரவு குறித்த எந்தவொரு விமர்சனத்தையும் அப்பட்டமாக ஒதுக்கித் தள்ளினார். கூட்டத்திற்கு முன்னதாக, சர்வதேச மன்னிப்பு சபை உட்பட 18 மனித உரிமை அமைப்புகளின் (Amnesty International) ஒரு தொகுப்பு, அல்-சிசிக்கு மக்ரோன் அரசாங்கம் ஆதரவு கொடுத்ததை விமர்சித்து ஒரு பகிரங்கக் கடிதத்தில் கையெழுத்திட்டிருந்தது.
எதிர்கால ஆயுத விற்பனையை எகிப்துடன் வெற்றுத்தன "மனித உரிமைகள்" கடமைகளுடன் பிரான்ஸ் தொடர்புபடுத்துமா என்ற நிருபரின் கேள்வியை நிராகரித்த மக்ரோன், "பாதுகாப்பு மற்றும் பொருளாதார விவகாரங்களில் நமது ஒத்துழைப்பை நான் நிபந்தனைக்குட்படுத்த மாட்டேன்" ஏனென்றால் "மக்களின் இறையாண்மை, நமது நியாயமான மற்றும் பரஸ்பர நலன்களுக்கு மரியாதை ஆகியவற்றை நான் நம்புகிறேன்" என்று மக்ரோன் கூறினார். ஒரு புறக்கணிப்பு என்பது "பயங்கரவாதம் மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு எதிரான போராட்டத்தில் ஒரு பங்காளியின் திறனைக் குறைக்கும்" என்றார்.
இந்த "ஸ்திரத்தன்மை" யின் மையமாக இருப்பது, எகிப்திய தொழிலாள வர்க்கத்தின் பரந்த வறுமை மற்றும் சமத்துவமின்மை நிலைமைகளுக்கு எதிரான எதிர்ப்பை இரத்தம் தோய்ந்த முறையில் ஒடுக்குதல் மற்றும் நாட்டில் எகிப்திய மற்றும் வெளிநாட்டு மூலதனத்தை பாதுகாத்தல் ஆகும். "எகிப்தில் நேரடி பிரெஞ்சு முதலீட்டை அதிகரிக்க, எல்லாவற்றிற்கும் மேலாக, அபிவிருத்தி வாய்ப்புகளில் இருந்து குறிப்பாக உள்கட்டமைப்பில் இலாபம் பெற, இருவரும் இணைந்து செயல்படவேண்டியதன் அவசியத்தை இருவரும் ஒப்புக் கொண்டோம்" என்று அல்-சிசி அறிவித்தார்.
அவர்களுடைய விவாதங்கள் லிபியாவின் போர்க் கொள்கையை மையமாகக் கொண்டிருந்தது; அங்கு பிரான்ஸ் மற்றும் எகிப்து ஆகியவை துருக்கிக்கு எதிராக கூட்டணியமைத்து, எண்ணெய் வளம் நிறைந்த பிராந்தியத்தின் மீது பிராந்தியக் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும் பிராந்திய பினாமியின் ஒரு பகுதியாக இருந்தது. லிபியாவில் சமாதானம் "லிபியா மக்களின் ஸ்திரத்தன்மைக்கு பதிலாக லிபியாவை தங்கள் செல்வாக்கின் ஒரு பகுதியாக மாற்ற முடிவு செய்த பிராந்திய சக்திகளால் அச்சுறுத்தப்பட்டுள்ளது" என்று மக்ரோன் அறிவித்தார். அரசாங்கத்தின் தலைவரிடமிருந்து வந்த இந்த குறிப்பு, 2011ல் பிரித்தானியாவும் அமெரிக்காவும் நாட்டின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தியதோடு அதன் ஜனாதிபதி முயம்மர் கடாபி ஆட்சியை தூக்கியெறிந்து கொலை செய்து, அதிகாரத்திற்கு போட்டியாக இஸ்லாமிய குடிப்படையைக் கொண்டு, நாட்டை ஒரு தசாப்த கால உள்நாட்டு போரிற்குள் மூழ்கடித்தது.
கெய்ரோவின் கசாப்புக் கடைக்காரருக்கு மக்ரோனின் ஆதரவு அறிவிப்பு, கண்டம் முழுவதும் இராணுவ-பொலிஸ் சர்வாதிகாரங்களுக்கான முன் தயாரிப்புகள் குறித்து பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கையாகும்.
2013 ல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, அல்-சிசி தனது ஏழு ஆண்டு ஆட்சியை ஐரோப்பிய மற்றும் அமெரிக்க ஆதரவுடன் பொலிஸ்-அரசு அடக்குமுறை மூலம் பராமரித்து வருகிறார், 60,000 பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல் எதிரிகளை சிறையில் அடைத்தார், "காணாமல் போக" செய்தார். ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானவர்களுக்கு மரண தண்டனை விதிக்க உத்தரவிட்டார். ஒரு நேரத்தில் நூற்றுக்கணக்கான பேருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, பாரிய சோடிப்பு விசாரணைகளில் தண்டனைகளை வழங்க உத்தரவிட்டதுடன், நாட்டின் மிக இழிந்த சிறைகளிலுள்ள கைதிகளை சித்திரவதை செய்யவும் உத்தரவிட்டார்.
மனித உரிமைகள் கண்காணிப்பக (Human Rights Watch- HRW) ஒரு அறிக்கையின்படி, அக்டோபர் மாதம் வெறும் 10 நாட்கள் இடைவெளியில், ஆட்சியானது 49 மரண தண்டனைகளை நிறைவேற்றியது. அரசியல் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட 15 ஆண்களும், இரண்டு பெண்களும், கிரிமினல் குற்றங்களுக்காக 32 பேரும் தண்டிக்கப்பட்டனர். அரசாங்கமானது பொதுவாக மரண தண்டனைகளை அறிவிக்கவோ அல்லது கைதிகளின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிப்பதோ இல்லை என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது. HRW அறிக்கையானது அரசாங்க சார்பு செய்தித்தாள் அறிக்கைகளில் இருந்து வந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டது.
ஆகஸ்ட் 14, 2013 அன்று இராணுவப் படைகளுக்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கைகளில் பங்கு பெற்றதாகக் கூறப்படும் நிலையில், மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் குறைந்தது ஐந்து பேர் தண்டிக்கப்பட்டு ஏழு ஆண்டுகள் காவலில் வைக்கப்பட்டிருந்தனர். மத்திய கெய்ரோவில், கவிழ்க்கப்பட்ட முஸ்லீம் சகோதரத்துவத்தின் ஜனாதிபதி முகமது முர்சியின் ஆதரவாளர்கள் 1,000 க்கும் மேற்பட்டவர்களை படுகொலை செய்து, ஒரு அமைதியான முறையில் நடந்த ஒரு போராட்டத்தில் இராணுவம் ஒரு ஒடுக்குமுறையை நடத்தியது. கெர்டாசா பொலிஸ் நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் பங்கு பற்றியதாக குற்றம் சாட்டப்பட்டனர். 188 பேர் மீதான பாரிய சோடிப்பு விசாரணையின் ஒரு பாகமாக 183 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட்டனர்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் இதுவரை விசாரணை செய்யப்படவில்லை. எகிப்திய சட்டத்தின் கீழ், அரசாங்கம் ஒரு விசாரணைக்கு முன்னர் இரண்டு ஆண்டுகளுக்கு எவரையும் காவலில் வைக்க முடியும். மே மாதம் மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானவர்களின் விசாரணைக்கு முந்தைய தடுப்புக்காவல்களை புதுப்பிப்பதற்கான ஒரு பொதுவான நீதிமன்ற முடிவை விவரித்தது. மே 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் கெய்ரோ மற்றும் கிசா பயங்கரவாத நீதிமன்றங்கள் 485, 745 மற்றும் 414 பேர்களை ஒரு நேரத்தில் காவலில் வைக்க முடிவு செய்தது. பிரதிவாதிகள் யாரும் ஆஜராகவில்லை. விசாரணைகளும் இல்லை. நீதிபதிகள் தங்கள் வழக்கறிஞர்களுக்கு முடிவுகளைத் தெரிவிக்காமலேயே நீதிமன்ற அறைகளை விட்டு வெளியேறினர்.
2016 மற்றும் 2018 க்கு இடையிலுள்ள கைதிகளின் நிலைமைகள் பற்றிய ஒரு அறிக்கையானது ஒப்புதல் வாக்குமூலங்களை பெறுவதற்கு சித்திரவதை பரவலாக பயன்படுத்தப்படுகிறது என்று கூறுகிறது. கைதிகள் மின் அதிர்ச்சிகளுக்கு உள்ளாக்கப்படுவார்கள், கண்கள் கட்டப்பட்டு, கைவிலங்கிடப்பட்டு, அடிக்கப்படுவார்கள், மற்றும் எப்பொழுதும் மணித்தியாலக்கணக்கில் அழுத்த நிலைகளில் தொங்கவிடப்படுவார்கள்.
அந்த தேசிய சிறை வலையமைப்பின் ஒரு உதாரணத்தில், 64 வயதான அகமது அப்தெல்நாபி மஹ்மூர் செப்டம்பர் 2 ஆம் திகதி கெய்ரோவிலுள்ள டோரா அதிகபட்ச பாதுகாப்பு சிறைச்சாலையில் (Tora Maximum-Security Prison II) இறந்தார். அவர் 2018 டிசம்பர் 23 திகதின்று கெய்ரோ விமான நிலையத்தில் மனைவியுடன் கைது செய்யப்பட்டார், மற்றும் 20 மாதங்கள் எதுவித விசாரணையுமின்றி தடுத்துவைக்கப்பட்டார். அரச வழக்குரைஞர்கள் அவர் குறிப்பிடப்படாத "சட்டவிரோத குழுவில்" பங்கேற்றதாக குற்றம் சாட்டியதாகக் கூறப்படுகிறது, மேலும் அவர் எப்போதும் விசாரணைக்கு உட்படுத்தப்படாமலலே இறந்து போனார்.
மஹ்மூத்தின் இரண்டு அமெரிக்க-எகிப்திய மகள்கள் பேஸ்புக்கில் அவரது சிகிச்சையைப் பற்றி அறிவித்தனர், “நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் ஒரு குடலிறக்க நிலை உள்ளிட்ட அவரது நீண்டகால நோய் நிலைமைகள் இருந்தபோதிலும், அவரை பார்வையிடுவது மற்றும் மருத்துவ உரிமைகள் மறுக்கப்பட்டதாகக்” குறிப்பிட்டார்கள். “சிறைச்சாலையின் இழிவான மனிதாபிமானமற்ற நிலைமைகளின் காரணமாக அவருக்கு தோல் வியாதி உருவாகியுள்ளது, கைது செய்யப்பட்ட பின்னர் உடல் மற்றும் உளவியல் சித்திரவதை காரணமாக பின் அதிர்ச்சி மன அழுத்தக் கோளாறு (Post-traumatic stress disorder - PTSD) ஏற்பட்டுள்ளது, அவர் அடித்து தாக்கப்பட்டதால் அவரது உடலின் இடது பக்கத்தை நகர்த்துவதில் சிரமம் ஏற்பட்டது.”
எகிப்திய ஆட்சிக்கு பிரான்ஸ் நிலையான ஆதரவை வழங்கியுள்ளது. 2012 முதல் 2017 வரை எகிப்துக்கு மிகப் பெரிய ஆயுத வழங்குநராக இது இருந்தது, இதில் ரஃபால் போர் விமானங்கள், போர்க் கப்பல்கள் மற்றும் ரெனோல்ட் டிரக் பாதுகாப்பு கவச டாங்கிகள் ஆகிய ஐந்து பில்லியன் யூரோக்கள் ஒப்பந்தமானது அமெரிக்காவினுடைய அதேயளவிற்குச் சேர்ந்து விட்டது. 2013 ஆண்டில் இறக்கப்பட்டதும் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்புக்களை அடக்கப் இராணுவத்தால் பயன்படுத்தப்பட்டதும் பின்னர் தெரியவந்துள்ளது.
பிரெஞ்சு தனியார் நிறுவனங்களானது இராணுவம் மற்றும் காவல்துறைக்கு கண்காணிப்பு மற்றும் மக்கள் கூட்டத்தை பரிசோதிக்கும் கருவிகளை வழங்கியுள்ளன. 2017 ஆம் ஆண்டில் மட்டும், பிரான்ஸ் 1.4 பில்லியன் யூரோக்களுக்கும் அதிகமான இராணுவ மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியுள்ளது.
எகிப்திய சமதரப்பைப் போலவே, மக்ரோன் நிர்வாகமும் தொடர்ந்து அதிகரித்துவரும் சமூக சமத்துவமின்மை, வறுமை மற்றும் நிதிய உயரடுக்கின் செல்வக்கொழிப்பு ஆகியவற்றின் என்றுமில்லாத மட்டங்களுக்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் சமூக வெடிப்புக்கு அஞ்சி மரண பயத்தில் வாழ்கிறது. இரண்டு வருட மஞ்சள் சீருடை எதிப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிரான வேலைநிறுத்தங்கள் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு அதனுடைய அலட்சியமான, அரசியல்ரீதியாக கிரிமினல் விடையிறுப்பு தொடர்பாக வெடிக்கும் கோபத்தை தொடர்ந்து, எதிர்ப்பை அடக்குவதற்கும் சர்வாதிகாரத்தை உருவாக்குவதற்கும் அவர்களின் விவாதத்தின் ஒரு முக்கிய கூறாக அங்கே இரண்டு திட்டங்கள் இருக்கவில்லை, இருவரிடமும் ஒரே திட்டம்தான் இருந்தது.