ஆங்கில கால்வாய் மூலம் புலம்பெயர்ந்தவர்களின் கொடூரமான அவலநிலை பற்றி கிளேர் மோஸ்லி கூறுகிறார்: “அவர்கள் உதவி தான் கேட்கிறார்கள், என்றாலும் அவர்கள் குற்றவாளிகளைப் போல நடத்தப்படுகிறார்கள்”

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

Care4Calais என்ற அகதிகள் அறக்கட்டளையின் ஸ்தாபகரான கிளேர் மோஸ்லி (Clare Moseley), இந்த வாரம் ஆங்கில கால்வாயில் தஞ்சம் கோருபவர்கள் கொடூரமாக இறந்துபோனது பற்றி உலக சோசலிச வலைத் தளத்திற்கு பேட்டியளித்தார். மூன்று இளம் குழந்தைகள் உட்பட, ஒரு ஈரானிய குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து உறுப்பினர்கள், செவ்வாய்க்கிழமை காலை டன்கிர்க் கடற்கரையின் கரடுமுரடான கடல் பகுதிகளில் அவர்கள் பயணித்த சிறிய காற்றடைத்த இரப்பர் படகு கவிழ்ந்து போனாதால் இறந்துபோயினர்.

இந்த மரணங்கள் ஜோன்சன் அரசாங்கம் மற்றும் ஒட்டுமொத்த பிரித்தானிய ஆளும் வர்க்கத்தின் இனவெறிமிக்க புலம்பெயர்வு எதிர்ப்பு கொள்கைகளின் நேரடி விளைவாகும். இக் கொள்கைகளில், பாதுகாப்பற்ற நிலையில் புகலிடம் கோருவோருக்கு எதிராக ராயல் கடற்படை கப்பல்கள் மற்றும் ஆளில்லா விமானங்களை (ட்ரோன்கள்) அனுப்புவது, நாடுகடத்தல் நடவடிக்கைகளை முடுக்கிவிடுவது, மேலும் இலண்டன், வேல்ஸ் மற்றும் கென்ட் ஆகிய இடங்களில் உள்ள வதை முகாம்களில் புதிதாக வந்துள்ள அகதிகளை தடுத்து வைப்பது ஆகியவை அடங்கும்.

கிளேர் மோஸ்லி (Credit: YouTube/OfTheRedProdutions)

35 வயது ரசூல் இரன்னாஜாத், அவரது 25 வயது மனைவி ஷெவா முகமது பனாஹி, மற்றும் ஒன்பது வயது, ஆறு வயது மற்றும் 15 மாதங்களே ஆன அனிதா, அர்மின் மற்றும் ஆர்டின் ஆகிய அவர்களது மூன்று குழந்தைகள் என ஒட்டுமொத்த குடும்பமும் தங்களது உயிரை இழந்தனர். இந்த குடும்பம் ஈராக் எல்லைக்கு நெருக்கமாக உள்ள, ஈரானின் சர்தாஷ்ட் (Sardasht) பகுதியைச் சேர்ந்தது. அவர்கள் பிரிட்டனில் அரசியல் தஞ்சம் கோரியிருந்தனர்.

WSWS: செவ்வாயன்று ரசூல் இரன்னாஜாத்தும் அவரது இளம் குடும்பத்தினரும் இறந்துபோனது குறித்து உங்களது மனநிலை எவ்வாறிருந்தது?

கிளேர் மோஸ்லி: ஆரம்பகட்ட பதிலிறுப்பு கொடூரமான ஒன்றாகும். ஏதேனும் நிகழக்கூடும் என்பது அனைவருக்கும் தெரியும், என்றாலும் அது நிகழும்போது, இது அல்ல அது வேறு ஏதேனும் இருக்குமா? என்று நினைக்கத் தோன்றும். ஆனால், இது உண்மை தான் என்பதுடன் கொடூரமானது. உண்மையான மக்கள் தான். எனக்கு அந்த குடும்பத்தை பற்றி தெரியாது, ஆனால் இங்குள்ள மக்கள் அனைவரும் எங்களது நண்பர்களாவர், மற்றும் எங்களால் தெரிந்துகொள்ளக்கூடிய நபர்களாவர், மேலும் எங்களது தன்னார்வத் தொண்டு ஊழியர்கள் அவர்களது குழந்தைகளுடன் விளையாடியுள்ளனர். பண்டகசாலையில் உள்ள எங்களது சில தொண்டு ஊழியர்கள் இதைக் கேட்டு கண்ணீர் சிந்தினர். இவ்வாறு நடந்ததைப் பற்றி அவர்களுக்கு நேரடியாக நான் சொல்ல வேண்டியிருந்தது. அவர்களை சமாதானப்படுத்த என்னிடம் எந்தவித பதிலோ அல்லது புத்திசாலித்தனமோ இல்லை, அவர்களுக்கு நீங்கள் என்னதான் கூற முடியும்?

இது தேவையில்லை. உலகின் ஏனைய பகுதிகளின் பயங்கரமான மற்றும் கொடூரமான நிலைமைகளில் இருந்து இந்த மக்கள் உயிர்தப்பி வந்துள்ளனர், அதிலும் ஐரோப்பாவில் அவர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்று கருதி இங்கு வந்து சேர்ந்துள்ளனர். 48 மணித்தியாலங்களுக்கு முன்னர், அந்த குழந்தைகள் புல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்திருப்பார்கள், மேலும் அவர்கள் பள்ளிக்குச் செல்ல விரும்புவதாக கூறியுள்ளனர், பின்னர் அவர்களின் வாழ்க்கையே முடிந்துவிட்டது. இது மிக மிக ஆழமான தவறாகவும், அதிர்ச்சியூட்டும் நிகழ்வாகவும் உள்ளது.

ஒட்டுமொத்த அகதிகள் சமூகமும் அதிர்ச்சியடைந்துள்ளது. மேலும் இதனால் அனைவரும் நடுங்கிப்போயுள்ளனர். என்றாலும், தற்போது கூட பயணம் செய்ய நினைக்கும் மக்கள் உள்ளனர், அவ்வாறு அவர்கள் எண்ணக்கூடாது என்றே பெரும்பாலும் நாம் விரும்புகிறோம், இருந்தாலும் அந்த எண்ணம் கொண்டவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்றே தெரிகிறது. இது திகிலூட்டுவதாக உள்ளது.

WSWS: ரசூலும் அவரது குடும்பத்தினரும் முதலில் கலேயில் இருந்தனர் என்றும், பின்னர் டன்கிர்க்கில் உள்ள அகதிகள் முகாமிற்கு சென்றனர் என்றும் கூறப்படுகிறதே, இது உண்மையா?

CM: இது சாதாரணமாக நிகழ்வதுதான். வழமையாக என்ன நடக்கிறது என்றால், மக்கள் வந்து சேர்ந்து பின்னர் மெதுவாக அவர்களது சமூகக் குழுக்களுக்குள் சேர்ந்துவிடுகிறார்கள். பெரும்பாலான குர்திஷ் மக்கள் டன்கிர்க்கில் உள்ளனர், எனவே, அவர்கள் கலேக்கு முதலில் வந்து சேர்ந்தாலும், பின்னர் தங்களது சமூகத்தைச் சேர்ந்த பெரும்பாலானோர் டன்கிர்க்கில் இருப்பதைக் கண்டுபிடித்து அங்கு சென்றுவிடுகிறார்கள் என்பது யதார்த்தமே.

WSWS: செப்டம்பர் மாதம் கலேயில் உள்ள முகாம் பொலிசாரால் புல்டோசர் கொண்டு தகர்க்கப்பட்டது பற்றி நான் அறிந்தேன். அப்போது என்ன நடந்தது என்று உங்களால் விளக்க முடியுமா, மேலும் குளிர்காலம் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், கலேயில் உள்ள நிலைமைகள் பற்றிய சில குறிப்புக்களை எங்களது வாசகர்களுக்கு நீங்கள் வழங்க முடியுமா.

CM: அங்குள்ள நிலைமைகள் பரிதாபகரமாக உள்ளன. இந்த ஆண்டு முழுவதுமாக தொடர்ந்து அங்கு அகதிகளின் வெளியேற்றங்கள் நடந்துள்ளன. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை பொலிசார் முகாமிற்குள் சென்று மக்களை வெளியேற்றி வருகிறார்கள். மக்கள் தொடர்ந்து பொலிஸை கண்டு ஓடி ஒளிந்து கொள்கின்றனர். பின்னர், மாதத்திற்கு அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை உண்மையில் ஏராளமானவர்களை அங்கிருந்து வெளியேற்றுகிறார்கள். மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் அதிகாலை நேரத்தில் அவர்கள் முகாம் பகுதியை சுற்றி வளைத்துக் கொள்வார்கள், ஏனென்றால் அப்போது தான் அவர்களால் தப்பிக்க முடியாது என நினைக்கிறார்கள், மேலும் அவர்கள் மக்களைச் சுற்றி வளைத்து பேருந்துகளில் ஏற்றுகிறார்கள், அதிலும் சில சமயங்களில் வலுக்கட்டாயமாக அதைச் செய்கிறார்கள், பின்னர் பிரான்சின் ஏனைய பகுதிகளுக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அதனைத் தொடர்ந்து புல்டோசர் மற்றும் பிற உபகரணங்களைக் கொண்டு அவர்கள் விட்டுச் சென்ற அவர்களது உடமைகள் அனைத்தையும் அழிக்கிறார்கள். அனைத்து கூடாரங்கள், உறங்கும் பைகள் மற்றும் இதுபோன்ற அவர்களது மற்ற உடமைகள் என அனைத்தும் அழிக்கப்பட்டு தூக்கியெறியப்படும். இது எப்போதும் வழமையாக நடக்கிறது, மேலும் இது மிகவும் கொடூரமானது, ஏனென்றால் மக்கள் திரும்ப வரும்போது, அவர்களுக்கு என்று அங்கு எதுவும் எஞ்சியிருக்காது.

WSWS: பொலிசார் மக்களை பேருந்துகளில் ஏற்றி பின்னர் எங்கு கொண்டு செல்கின்றனர்?

CM: அவர்கள் பிரான்ஸ் முழுவதுமாக எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லப்படுகிறார்கள். வெறும் இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் இத்தகைய வெளியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன, கலேயில் அதே பிராந்தியத்தைச் சேர்ந்த பிற பகுதிகளுக்கு மக்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் அதற்கு முன்னைய ஒரு வெளியேற்ற நடவடிக்கையின் போது, ஸ்பானிய எல்லை வரையிலுமாக வெகு தொலைவிற்கு மக்கள் கொண்டு செல்லப்பட்டனர். அதாவது இது எந்தளவிற்கு கடுமையானது என்பதை பொறுத்து, அவர்கள் வெகு தொலைவிற்கு அழைத்துச் செல்லப்படலாம். என்றாலும் சில நாட்களுக்குப் பின்னர் சிலர் திரும்பி வருவதை நாங்கள் காண்கிறோம்.

WSWS: இந்த பகுதிகளுக்கு மக்கள் கொண்டு செல்லப்பட்டு எங்கு தங்க வைக்கப்படுகின்றனர்?

CM: இது வேறுபடும். அவை ஹோட்டல் முதல் பல நோக்கங்களுக்காக கட்டப்பட்ட மையங்கள் வரை என ஏதாவது இருக்கக்கூடும். இந்த குடும்பங்கள் நல்ல தரமான தங்குமிடங்களில் தங்க வைக்கப்படுகிறார்களா என்பதைக் கண்டறிய நீங்கள் முயற்சித்தது உண்டா, அதேநேரத்தில் ஆண்கள் நேர்த்தியான இடங்களில் தங்க வைக்கப்படுகிறார்களா? அதாவது, சில நேரங்களில் மாற்றப்பட்ட விமானக்கொட்டகை போன்ற இடங்களாக இருக்கும். அதிலும், பெரும்பாலும் அவை பயன்படுத்தப்படாத ஹோட்டல்களாக இருக்கும். ஆனால் ஒரு பிரச்சினை என்னவென்றால், பிரான்சில் தஞ்சம் கோருவதற்கு அவர்கள் விரும்பினால் மட்டுமே அவர்களுக்கு முறையான தங்குமிடங்கள் வழங்கப்படுகின்றன. பிரிட்டனைக் காட்டிலும் பிரான்ஸ் ஏராளமான அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளது. பிரான்ஸ் முழுவதிலுமாக அகதிகள் இருக்கின்றனர், என்றாலும் ஒருமுறை கலேக்கு அகதிகள் வந்து சேர்ந்துவிட்டால், அங்கிருந்து அவர்கள் பிரிட்டனுக்கு இடம்பெயர அவர்களிடம் வலுவான காரணம் இருக்க வேண்டும் என்று தெரிகிறது. அவர்களது குடும்பம் அங்கிருப்பது போன்ற அல்லது வேறு ஏதேனும் ஒரு காரணம் இருக்க வேண்டும்.

WSWS: பிரெஞ்சு அதிகாரிகளின் அடக்குமுறையின் காரணமாக கலேயில் உள்ள அகதிகளுக்கு உணவு வழங்கச் செல்வதில் கூட தொண்டு ஊழியர்கள் சிரமங்களை எதிர்கொள்வதாக நான் அறிகிறேன். அந்த சூழ்நிலை பற்றி நீங்கள் விளக்க முடியுமா?

CM: ஆமாம், சமீபத்திய மாதங்களில் உண்மையில் அதிர்ச்சி தரும் மாற்றமாக அது உள்ளது. கலேயின் பெரும் பகுதிகளில் அகதிகளுக்கு உணவு வழங்குவதை முற்றிலும் அவர்கள் தடை செய்கிறார்கள், இது மிகவும் கொடூரமானது. இது உண்மையில் நம்ப முடியாததாகும். ‘இது மனித உரிமைகள் சட்டத்திற்கு புறம்பானது இல்லையா?’, என்று ஒருவர் கேட்கிறார், இதுவும் நடக்கும் என்று நீங்கள் எதிர்பார்த்திருப்பீர்களா. சில பிரெஞ்சு அமைப்புக்கள் ஒன்றிணைந்து, பசியில் வாடும் மக்களுக்கு நாங்கள் உணவு வழங்குவதை உங்களால் தடுக்க முடியாது என்று கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இது எப்படி என்று எனக்கு தெரியாது, என்றாலும் அவர்கள் வழக்கை இழக்காமல் சமாளித்து, அங்கு மேல்முறையீடும் செய்துள்ளனர் – என்றாலும் இது நினைத்து பார்க்க முடியாத விடயமாக உள்ளது. பசியில் வாடும் மக்களுக்கு உணவு வழங்கக் கூட தடை செய்வார்களா என்றால், அதுவும் இங்கு நடந்துள்ளது.

ஏனென்றால் பொலிஸ் நடவடிக்கைகள் அந்தளவிற்கு பரவலாக மேற்கொள்ளப்படுகிறது, நாங்கள் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினை என்னவென்றால், மக்கள் பொலிஸை கண்டு ஓடி ஒளிவதால் அவர்கள் எங்கு மறைந்திருக்கிறார்கள் என்று அவர்களை கண்டுபிடித்து உணவு வழங்குவது எங்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. ஒருவேளை உணவு வழங்க முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ள பகுதிகளில் சென்று அவர்கள் மறைந்திருந்த நிலையில், அவர்களுக்கு உணவு வழங்கக் கூட எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதைப் பற்றி என்னால் எதுவும் கூற முடியவில்லை, மன்னியுங்கள். இந்த நூற்றாண்டில், ஐரோப்பாவில் பசி பட்டினியால் வாடும் மக்களுக்கு உணவு வழங்கக் கூட நாம் முடியாமல் இருக்கிறோம் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா.

WSWS: அதிலும் குறிப்பாக குளிர்காலம் நெருங்குகையில், எந்த மாதிரியான இடங்களுக்குச் சென்று மக்கள் ஒளிந்து வாழ்கிறார்கள், இது பற்றி உங்களது கவலைகள் என்ன?

CM: இது வரையிலும் நடந்ததில் ஒரு ஆறு மாதத்திற்கு முன்னர் இருக்கலாம் என்று நினைக்கிறேன், ஏராளமான மக்கள் துண்டு துண்டாக பிரிந்து கிடந்த வனப்பகுதிகளில் அல்லது நகரின் எல்லை முனையை சுற்றியுள்ள சிறு சிறு ஒட்டுப் பகுதிகளில் தங்கியிருந்தனர். ஆனால், அந்த இடங்களுக்கும் சென்று அங்குள்ள மரங்களை பொலிசார் அகற்றுவதால், அந்தப் பகுதிகளும் திறந்தவெளிகளாக மாறியுள்ளன. மேலும், அந்த இடங்களில் நீங்கள் கூடாரங்கள் அமைப்பீர்களானால், அவற்றையும் கண்காணித்து பொலிசார் அகற்றிவிடுவார்கள். எனவே, பல இடங்களில் கூடாரங்களில் கூட அவர்களால் நிம்மதியாக உறங்க முடியாது என்பது தெரிகிறது. நான் பார்த்ததில் இன்னும் மோசமான விடயம் என்னவென்றால், பயன்படுத்தப்படாத பெட்ரோல் நிலையங்களில் மூடிக் கொள்வதற்கு எதுவுமின்றி டார்மாக்கில் மக்கள் உறங்குகிறார்கள். வீடற்ற மக்கள் நகர மையங்களில் உறங்குகிறார்கள், மேலும் வீடற்ற பெரும்பாலான மக்கள் மற்ற நகரங்களிலும், கடைகளின் நுழைவுப் பகுதிகள் அல்லது பூங்காக்களிலும், பெஞ்சுகளுக்கு அடியிலும் என பொலிசாரின் கண்பார்வையில் சிக்காமல் இருக்க முடிகின்ற இடங்களுக்கெல்லாம் சென்று அவர்கள் மறைந்து தங்கியிருப்பதை உங்களால் காண முடியும்.

WSWS: கலேயில் தற்போது எவ்வளவு பேர் இந்த மாதிரி பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என்று உங்களால் கூற முடியுமா? மேலும், எவ்வளவு புலம்பெயர்ந்தவர்கள் இங்கு உள்ளனர்?

CM: அவர்கள் பெரும்பாலும் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றனர். இங்கு அநேகமாக 1,000 பேர் இருக்கிறார்கள் என்பதுடன் டன்கிர்க்கில் மற்றொரு 400 அல்லது 500 பேர் இருக்கலாம்.

WSWS: ஆங்கில கால்வாயில் புலம்பெயர்ந்தவர்களின் இறப்புகளுக்கு “மக்கள் கடத்தல்காரர்கள்” ஐ ஜோன்சன் அரசாங்கம் குற்றஞ்சாட்டிய சமீபத்திய அறிக்கைகளுக்கு உங்களது பதில் என்ன?

CM: இந்த கூற்றை நான் முற்றிலும் நிராகரிக்கிறேன். மக்கள் கடத்தல்காரர்கள் பயங்கரமானவர்கள் என்பதை நான் ஏற்கிறேன். என்றாலும் ஒருவரது பாதிப்பில் மற்றொருவர் இலாபமீட்டுவது மிகவும் கொடுமையானது, ஆனால் மக்கள் கடத்தல்காரர்கள் என்று மக்களை குறைகூற அவர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் என்றே நான் நினைக்கிறேன். அவர்கள் பிரச்சினைக்கான காரணமாக இருப்பதை விட அதற்கான அடையாளங்களாக உள்ளனர். பிரச்சினை என்னவென்றால், இங்கு தங்களது புகலிட கோரிக்கைகள் நியாயமாக விசாரிக்கப்பட வேண்டும் என்று விரும்பும் மக்கள் எங்களுடன் இருக்கிறார்கள், ஆனால் அதற்கான ஒரே வழி அவர்கள் பிரிட்டனில் இருந்தால் மட்டுமே அவர்களால் புகலிட உரிமையைப் பெற முடியும், அதற்கும் அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி உண்மையாகவே ஆபத்து நிறைந்த பயணத்தை அவர்கள் மேற்கொண்டால் மட்டுமே அதை அவர்களால் பெற முடியும். அதற்கு அவர்களுக்கு ஒரு மாற்றுவழி இருந்திருக்குமானால், மற்றொரு வழி ஏதும் உள்ளது என்று அவர்கள் கருதியிருப்பார்களானால், நிச்சயமாக அதை அவர்கள் பயன்படுத்தியிருப்பார்கள் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அவர்கள் ஒரு படகில் செல்ல விரும்பவில்லை, மிகவும் உறுதியாக தங்களது குழந்தைகளை படகில் ஏற்ற அவர்கள் முற்றிலும் விரும்புவதில்லை. அவர்களுக்கு மாற்றுவழி எதையாவது நாம் வழங்கியிருப்போமானால், அவர்கள் அதை பயன்படுத்தியிருப்பார்கள் என்பதுடன், அவர்களை மக்கள் கடத்தல்காரர்கள் என்று முத்திரை குத்த வழி ஏற்பட்டிருக்காது.

நான் தற்போது கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக இங்கு இருக்கிறேன், ஒவ்வொரு வருடமும் ஒரேமாதிரியான கொள்கைகளையே நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் – ‘மக்கள் கடத்தல்காரர்களை நாம் அடக்கப் போகிறோம்,’ ‘பாதுகாப்பிற்காக நிறைய செலவு செய்யப் போகிறோம்’, ‘பிரெஞ்சு உடன் வேலை செய்யப் போகிறோம்’, என்றாலும் எதுவும் எப்போதும் மாறாது. கொள்கைகள் வேலை செய்வதில்லை என்பதுடன், அதே கொள்கைகளைத் தான் அவர்கள் தொடர்ந்து பின்பற்றி வருகிறார்கள் என்பதற்கான பெரிய ஆதாரம் அங்கு உள்ளது. அவர்கள் உண்மையில் அக்கறை காட்ட மாட்டார்கள், ஏனென்றால் அவர்கள் அவ்வாறு செய்திருந்தால், அவர்கள் மாற்று வழிகளை கண்டறிவார்கள்.

WSWS: பிரிட்டனில் தஞ்சம் கோர அகதிகள் எவ்வாறு விண்ணப்பிக்கிறார்கள், மேலும் எந்த மாதிரியான தடைகளை அவர்கள் எதிர்கொள்கிறார்கள்?

CM: பிரிட்டனில் தஞ்ச கோரி விண்ணப்பிக்க, நீங்கள் பிரிட்டனில் இருந்தாக வேண்டும் என்பதைத் தவிர தஞ்சம் கோர வேறு வழி கிடையாது. அர்த்தம் என்னவென்றால், அவர்கள் சட்டவிரோதமான பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும். அகதிகள் சட்டம் இதை அங்கீகரிப்பதுடன், இது உங்களது தவறு இல்லை என்பதால் உங்களுக்கு அபராதம் எதுவும் விதிக்கப்பட மாட்டாது. தங்களது வாழ்க்கையில் ஒருபோதும் சட்டத்தை மீறாத மக்கள் இங்கு இருக்கின்றனர். உண்மையில், அத்தகைய ஆபத்துக்களை கையிலெடுக்க அவர்கள் விரும்பவில்லை.

WSWS: தஞ்சம் கோருவதற்கான கோரிக்கை அல்லது முறையீடு நிலுவையில் இருந்தாலும், பிரிட்டனில் இருந்து அகதிகளை வெளியேற்ற வகை செய்யும் புதிய சட்டங்கள் பிரிட்டனில் விவாதத்தில் உள்ளன. மேலும், புகலிட கோரிக்கையாளர்களை தொலைதூரத் தீவுகள், பயன்படுத்தப்படாத படகுகள் மற்றும் வட கடலில் உள்ள பயன்படுத்தப்படாமல் விடப்பட்ட எண்ணெய் தளங்களுக்கு அனுப்புவதற்கான திட்டங்களை உள்துறை அலுவலகம் வகுத்துள்ளது.

CM: ஆஸ்திரேலியாவில் நடப்பதை ஒத்த மோசமான நடவடிக்கைகளை அவர்களும் எடுக்கிறார்கள். ஆஸ்திரேலிய அமைப்புமுறை மிகவும் அதிர்ச்சியூட்டும் வகையிலான, மனிதாபிமானமற்ற மற்றும் கொடூரமான அமைப்புக்களில் ஒன்றாகும். அதை அப்படியே நாமும் பின்பற்ற வேண்டுமா?

WSWS: கலேயில் தாங்கள் நடத்தப்படும் விதம் பற்றி அகதிகள் என்ன உணர்கிறார்கள்?

CM: அவர்களுக்கு புரியவில்லை. தமக்கு மனித உரிமைகளும் ஜனநாயகமும் உண்டு என்றும், தங்களை பாதுகாக்க சட்டங்களும் உண்டு என்றும் நம்புவதால் தான் அவர்கள் இங்கு வந்துள்ளார்கள். சர்வாதிகாரம் உள்ள மற்றும் மனித உரிமைகளுக்கு மதிப்பில்லாத எரித்ரியா அல்லது ஈரான் போன்ற நாடுகளிலிருந்து அவர்கள் வந்திருப்பார்களானால், ஐரோப்பா சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்த்தே அவர்கள் இங்கு வருகிறார்கள். அவர்கள் ஏன் இப்படி நடத்தப்படுகிறார்கள் என்பது அவர்களால் புரிந்துகொள்ளக்கூடியதாக இல்லை. தனிநபர்களை பாதுகாக்க எங்களிடம் சட்ட வழிமுறைகள் இருக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் எந்த சட்டங்களையும் மீறவில்லை, அவர்கள் குற்றவாளிகளும் இல்லை, மேலும் அவர்கள் எவரையும் காயப்படுத்தவும் விரும்பவில்லை. அவர்கள் உதவி கேட்டுத்தான் இங்கு வருகிறார்கள். பிரான்சில் அவர்கள் நடத்தப்படும் விதம் கொடூரமானது. மேலும் பிரிட்டனில் அவர்கள் நடத்தப்படும் விதமும் கொடூரமாகிக் கொண்டு வருகிறது. இங்கிலாந்தில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் சிப்பாய்கள் குடியிருப்புகளுக்கு சென்று நீங்கள் பார்த்தால், அங்குள்ள அனைவருமே தாம் நாடுகடத்தப்படவிருக்கிறோம் என்பதை அறிந்து முற்றிலும் பயந்திருப்பார்கள். நாடுகடத்தப்படவிருந்த ஒரு சிரிய நபரிடம் நான் பேசினேன். அவர், ‘இங்கிலாந்து சிரியர்களை எவ்வாறு நாடுகடத்துகிறது? என்றும், மக்களை பாதுகாக்க இங்கிலாந்தில் சட்டங்கள் இருக்கும் என்று நான் நினைத்தேன், அவ்வாறு இல்லையா?’ என்றும் என்னிடம் கேள்விகள் கேட்டார். என்னைப் பொறுத்தவரை உண்மையில் அது பிரச்சினையின் முக்கிய அம்சமாகும். இந்த நபர் சிரியாவில் பெரிதும் சித்திரவதை செய்யப்பட்டுள்ளார், இருப்பினும் மேலும் அதிர்ச்சிகரமான அனுபவமாக, இங்கிலாந்தில் தடுத்து வைக்கப்பட்டு நாடுகடத்தப்பட்ட அவரை நாம் மீண்டும் நரகத்தில் தள்ளியிருக்கிறோம்.

என்னைப் பொறுத்தவரை, Care4Calais சார்பாக என்னால் பேச முடியாது, எல்லைகள் என்பவை ஒரு கட்டத்தில் வரலாற்று அடையாளங்களாக இருந்தனவே தவிர வேறில்லை, மேலும் அவை எப்போதும் மாறிக் கொண்டிருக்கின்றன. அவை ஒரு தன்னிச்சையான வரலாற்று அடையாளங்களே. நீங்கள் உயர் மட்டத்தினருடன் பேச விரும்பினால், அவர்கள் கூட மனிதர்களால் உயரத்தில் வைக்கப்பட்டவர்களே.

ஈரான் அல்லது எரித்திரியாவிலிருந்து சர்வாதிகாரத்தின் பிடியில் இருந்து தப்பித்து வந்த அந்த மக்களுடன் கலேயில் நீங்கள் வேலை செய்கையில் அவர்களது அனுபவங்களின் சாராம்சம் என்னவென்றால், அங்கு தனிநபர்களுக்கான உரிமைகள் இல்லை என்பதே. இந்த நாடுகளில் முழு அதிகாரமும் அரசாங்கம் அல்லது சர்வாதிகாரியின் வசம் உள்ள நிலையில், தனிநபர்களைப் பாதுகாக்க அங்கு எவருமில்லை. இந்நிலையில், மனித உரிமைகளுக்கான வழியும், தனிநபர்களை பாதுகாக்க நீதிமன்றங்களும், நீதிபதிகளும் மற்றும் வழக்கறிஞர்களும் கொண்ட ஒரு அமைப்புமுறையும் நம்மிடம் இருப்பதால், அவர்கள் இங்கு வருகிறார்கள். என்றாலும் பிரிட்டனில் என்ன நடக்கிறது என்றால், வழக்கறிஞர்களை தாக்கும் வகையில் சட்டங்களை மாற்றுவதன் மூலம் இந்த உரிமைகளை நாம் கீழறுக்கிறோம், மேலும் நடக்கும் அனைத்து விடயங்களின் மூலமாக அந்த அமைப்புமுறையை மீறிவிடுகிறோம், மேலும் அது எவ்வளவு நம்பமுடியாத அளவிற்கு மதிப்புமிக்கது என்பதை எவரும் புரிந்து கொண்டதாகவும் தெரியவில்லை. நாம் அந்த அமைப்புமுறையை மீற அனுமதிக்கக்கூடாது, ஏனென்றால், இறுதியில் அகதிகள் தஞ்சம் கோரும் நாடாக இந்நாடு இருப்பதை நாம் தடுத்துவிட்டு, இங்கிருந்து அகதிகளாக மக்கள் வெளியேறும் நாடாக இது மாறிவிடும்.

WSWS: உங்களது சொந்த பின்னணி பற்றி நான் கேட்கலாமா, மேலும் Care4Calais ஐ உருவாக்க உங்களை வழிநடத்தியது எது?

CM: நான் ஒரு பட்டய கணக்கராக டெலோய்ட் நிறுவனத்தில் 14 ஆண்டுகள் பணியாற்றினேன். நான் ஒரு கார்ப்பரேட் மற்றும் நிதிய வகை தொழில்புரிபவராக இருந்தேன், அதேவேளை அரசியல் அல்லது வேறு எதுவும் பற்றி எனக்குத் தெரியாது. தற்செயலாக வார இறுதியை கழிக்க நான் கலேக்குச் சென்றேன், அப்போது அங்குள்ள நிலைமைக் கண்டபோது, எனது வாழ்க்கையை மாற்றும் தருணத்தை நான் சந்தித்தேன். நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று அப்போது உணர்ந்தேன். எனவே, நான் அங்கேயே தங்கிவிட்டேன், பின்னர் ஒருபோதும் இங்கிருந்து செல்ல விரும்பவில்லை. இது முழுமையான விபத்தாகும். ஐரோப்பாவின் மத்தியில் இது நிகழக்கூடும் என்பதை அறிந்து நான் உண்மையில் அதிர்ச்சியடைந்தேன், மேலும் மிகுந்த முக்கியத்துவம் கொண்ட எவரோ ஒருவர் வந்து இதை சரிசெய்யும் வரை நாம் நிர்வகிக்க வேண்டிய ஒரு தற்காலிக சூழ்நிலை இது என்று நான் நினைத்தேன். இது பல ஆண்டுகளாக அப்படியே தொடரும் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை. பின்னர் அரசியலைப் பற்றி நான் அறியத் தொடங்கி, அதில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறிந்தபோது மிகவும் அதிர்ச்சியடைந்து போனேன்.

2020 இல் கலேயில், கலகத்தை ஒடுக்கும் பொலிசார் ஒரு அகதியை தடுக்கின்றனர் Credit: Care4Calais

WSWS: Care4Calais என்ன செய்கிறது, மேலும் நீங்கள் அங்கிருக்கும் இந்த ஐந்து ஆண்டுகளில் விடயங்கள் எந்தளவிற்கு மாறியுள்ளன?

CM: Care4Calais முக்கியமாக நான்கு செயல்களில் ஈடுபடுகிறது. முதலாவதாக, பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தில் கடுமையான சூழலில் உறங்கிக் கொண்டிருக்கும் அகதிகளுக்கு, உடைகள், உணவு மற்றும் உறங்கும் பைகள் ஆகியவற்றை வழங்கும் நேரடி உதவிகளை நாங்கள் செய்கிறோம். இரண்டாவதாக, நாங்கள் ஈடுபட்டுள்ள விடயம் என்னவென்றால், பிரெஞ்சு மற்றும் பிரிட்டன் அரசாங்கத்தின் தடுப்புக் கொள்கைகளை எதிர்த்துப் போராட முயற்சிக்கிறோம். அடிப்படையில், அவர்களை வெளியேற்றுவது, அவர்கள் தங்கியிருக்கும் சூழலில் நிலவும் வெப்பமின்மை, உணவு பற்றாக்குறை மற்றும் சித்திரவதையில் இருந்து பாதுகாப்பு இல்லாமை ஆகியவற்றின் மூலம் அவர்களது மனநிலையை சிதைக்க அவர்கள் முயற்சிக்கிறார்கள். எனவே, சமூகக் கொள்கைகள் மூலமாக போராடி எவரோ ஒருவர் அவர்கள் மீது அக்கறை காட்டுவதை அவர்களை உணரச் செய்ய நாங்கள் முயற்சிக்கிறோம். இங்கிலாந்தில், மிகுந்த பொறுமை பற்றியும், அகதிகளை வரவேற்பது பற்றியும் நாங்கள் பிச்சாரம் செய்கிறோம். மேலும் புதிதாக வந்துள்ள அகதிகளுடன் பணியாற்ற இங்கிலாந்தில் ஒரு புதிய திட்டத்தையும் நாங்கள் தொடங்கியுள்ளோம்.

அகதிகள் பற்றிய விடயம் என்னவென்றால், அவர்களது நாட்டிற்கு திரும்பிச் செல்ல முடியாத அளவிலான மோசமான விடயங்களிலிருந்தே அவர்கள் தப்பித்து ஓடுகிறார்கள். அகதியாக மாறுவதற்கான ஒரு முழுப் புள்ளி இதுவே. இது எனது சொந்த அனுபவத்திலிருந்து தெரிய வந்தது. பயங்கரமான விடயங்களை எதிர்கொண்ட பலரை நான் சந்தித்துள்ளேன், அவர்களது புகலிட கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டாலும் கூட, ‘நான் என் வீட்டிற்குச் செல்கிறேன்’ என்று கூறும் அகதியை ஒருபோதும் நீங்கள் சந்திக்க முடியாது. அது நடக்காது.

WSWS: உலகளவில் தற்போது சுமார் 80 மில்லியன் அகதிகள் உள்ளனர் – இது உலக வரலாற்றில் இதுவரை கண்டிராத மிகப்பெரிய எண்ணிக்கையாகும். வீடுகளை விட்டு வெளியேறுவதற்கு அகதிகளை எது தூண்டுகிறது, மேலும் இதில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்க அரசாங்கங்களின் பங்கு என்ன?

CM: கலே எப்போதும் உலகில் நடந்து கொண்டிருக்கும் மோசமான விடயங்களை பிரதிபலிக்கிறது. நான் முதன்முதலில் வந்தபோது, சிரியாவில் இருந்து வந்த மக்கள் இங்கு இருந்தனர், பின்னர் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை ட்ரம்ப் உண்மையில் கடுமையாக்கிய போது, ஏராளமான ஈரானியர்கள் இங்கு வந்து சேருவதை நான் பார்க்க ஆரம்பித்தேன். ஆறு மாதங்களுக்கு முன்பாக இருக்கும் என்று நினைக்கிறேன், யேமனில் இருந்து ஏராளமானோர் இங்கு வந்து சேருவதை நாங்கள் பார்க்க தொடங்கினோம். உலகில் நடந்து கொண்டிருக்கும் மிக மோசமான விடயம் எதுவாக இருந்தாலும், அதை நாம் கலேயில் காண்கிறோம்.

Loading