இலங்கை தேர்தலில் ஏற்பட்ட சரிவுக்குப் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆழ்ந்த நெருக்கடியில் உள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இலங்கையில் தமிழ் பிரதான முதலாளித்துவக் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகஸ்ட் 5 அன்று நடந்த பொதுத் தேர்தலில், 10 ஆசனங்களை மட்டுமே பெற்றது. கூட்டமைப்பு கடந்த பாராளுமன்றத்தில் 16 ஆசனங்களைக் கொண்டிருந்தது. அதன் ஒட்டுமொத்த வாக்கு, அது 2015 தேர்தலில் பெற்ற 515,963 வாக்குகளிலிருந்து கூர்மையா வீழ்ச்சியடைந்து 327,168 ஆக குறைந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை அமைப்பு (டெலோ) மற்றும் தமிழீழ மக்கள் விடுதலை அமைப்பு (புளொட்) ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். தமிழரசுக் கட்சியே தமிழ்தேசியக் கூட்டமைப்புக்கு தலைமை வகிக்கின்றது.

தேர்தலில், தமிழரசுக் கட்சி தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா மற்றும் அதன் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கே. துரைராஜசிங்கம் ஆகியோர் தோற்கடிக்கப்பட்டனர். ஏனைய தலைவர்கள் இப்போது கட்சியின் உயர்மட்ட பதவிகளைப் பிடிக்க முயல்கின்றனர். மேலும் பிளவுகளைத் தவிர்ப்பதற்காக, தற்போதைய அலுவலர்களை வெளியேற்றி, முறையே புளொட் மற்றும் டெலோ தலைவர்களை தமிழ் கூட்டமைப்பின் பேச்சாளர்களாக மற்றும் அமைப்பாளராக நியமிக்க திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

எத்தகைய ஒட்டுப் போடும் நடவடிக்கைகளை எடுத்தாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் வெடிக்கும் நெருக்கடியை தீர்க்க முடியாது. இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நெருக்கடி மட்டுமன்றி, ஒட்டுமொத்த தமிழ் முதலாளித்துவ-தேசியவாத முன்னோக்கினதும் திவால்நிலையின் வெளிப்பாடாகும்.

2019 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது, வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க.) வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான “குறைவான தீமை” என தூக்கிப் பிடித்தது.

ராஜபக்ஷ தமிழ் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளிடையே வெறுக்கப்படுபவர் ஆவார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் கீழ் பாதுகாப்பு செயலாளராக இருந்த அவர், பிரிவினைவாத தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிரான இரத்தக்களரி போரின் இறுதி ஆண்டுகளில் தாக்குதல்களுக்கு தலைமை தாங்கினார். இலங்கை இராணுவம் 2009 மே மாதம் போரை முடித்தது. ஐ.நா. அறிக்கைகளின் படி இதன் போது குறைந்தபட்சம் 40,000 பொதுமக்களைக் கொன்றதன் மூலம் புலிகளை நசுக்கியது, ஐ.நா. படி, மேலும் பல குற்றங்களைச் செய்தது.

ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ஷ வெற்றி பெற்ற பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திடீரென ஒரு திருப்பத்தை ஏடுத்து, “தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றும் அரசியலமைப்பு மாற்றத்தை” செய்ய ஒப்புக் கொண்டால் அரசாங்கத்தை ஆதரிப்பதற்கான தனது விருப்பத்தை அறிவித்தது. கட்சி கொழும்பில் “அதிகாரத்தில் இருப்பவர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும்” என்று கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் கூறினார்.

போர்க்குற்றங்களுக்கு பொறுப்பான ஒரு அதிகாரிக்கு ஆதரவளிக்க முடிவெடுத்தமை இந்த கட்சிக்கு எதிரான வெகுஜனக் கோபத்தை மேலும் தூண்டியது.

2009 இல் விடுதலைப் புலிகளின் தோல்வியை அடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூர்மையான வலதுசாரி மாற்றத்தை மறுக்க முடியாது.

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புவிசார் அரசியல் நலன்களுக்கு சேவை செய்யும் அதே வேளை, கொழும்புடனான ஒரு "அரசியல் கொடுக்கல் வாங்கலுக்கு" அமெரிக்க ஆதரவை நாடுவதை நோக்கி தமிழ் கூட்டமைப்பு வெளிப்படையாகத் திரும்பியது. இந்தியாவுடனான இராணுவ மற்றும் மூலோபாய உறவுகளை வலுப்படுத்தும் அதே வேளை, வாஷிங்டன் சீனாவுக்கு எதிராக கடுமையாக நிற்கிறது.

வாஷிங்டன் மற்றும் புது தில்லி இரண்டும் புலிகளுக்கு எதிரான மஹிந்த ராஜபக்ஷவின் போரையும் அவரது ஜனநாயக விரோத ஆட்சி முறையையும் ஆதரித்தன. எவ்வாறாயினும், இராணுவ தளபாடங்களையும் முதலீடுகளையும் பெறுவதற்காக, பெய்ஜிங்குடனான ராஜபக்ஷவின் வளர்ந்து வந்த உறவுகளுக்கு இரு நாடுகளும் விரோதமாக இருந்தன. இந்தியப் பெருங்கடலில் மூலோபாய ரீதியில் அமைந்துள்ள இலங்கையை அதன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வாஷிங்டன் விரும்பியது.

2015 இலங்கை ஜனாதிபதித் தேர்தலில், வாஷிங்டன், மஹிந்த ராஜபக்ஷவை வெளியேற்றுவதற்காக ஒரு ஆட்சி மாற்ற நடவடிக்கையை மறைமுகமாக திட்டமிட்டு, அவருக்குப் பதிலாக மைத்ரிபால சிறிசேனவை ஜனாதிபதியா நியமித்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் போலி-இடது குழுக்களுடனும் இணைந்து இந்த சதி நடவடிக்கைக்கு முழு ஆதரவளித்தது. சிறிசேன “நல்லாட்சியை” கொண்டு வருவதாகவும், வாழ்க்கை மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்துவதாகவும் கூட்டமைப்பு வஞ்சத்தனமாக பிரச்சாரம் செய்தது.

புதிய அரசாங்கம் மனித உரிமை மீறல்களை விசாரிப்பதாகவும், போரினால் ஏற்பட்ட சமூக அழிவை சரிசெய்வதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியளித்தது. அது சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தின் ஏறத்தாழ ஒரு பங்காளியாகவே மாறியது.

எவ்வாறாயினும், அதிகாரப் பகிர்வுக்கான கூட்டமைப்பின் கோரிக்கைகளில் வாஷிங்டனுக்கு எந்த அக்கறையும் கிடையாது. ஆனால் அது அதன் புவிசார் அரசியல் நலன்களுக்கு சாதகமானதாக கருத்தும் கொழும்பு ஆட்சியை ஸ்திரப்படுத்துவதற்கு கூட்டமைப்பு ஒத்துழைக்க வேண்டும் என விரும்பியது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த ஐந்து ஆண்டுகளில் அமெரிக்க கோரிக்கைகளுக்கு கீழ்ப்படிந்து பின்பற்றுகிறது. போர்க்குற்ற விசாரணைகளை அடக்குவதற்கும், தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான கோரிக்கைகளைத் தடுப்பதற்கும், இராணுவம் ஆக்கிரமித்துள்ள நிலங்களை விடுவிப்பதைத் தடுப்பதற்கும், காணாமல் போன நபர்களின் வழக்குகளில் நீதியை மறுப்பதற்கும் கொழும்பு ஆட்சிக்கு சம்பந்தனும் சுமந்திரனும் உதவினார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக, தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் தொடர்ச்சியான எதிர்ப்பையும் மீறி சர்வதேச நாணய நிதியம் ஆணையிட்ட சிக்கன திட்டத்தை சிறிசேன-விக்ரமசிங்க ஆட்சி அமுல்படுத்துவதற்கு தமிழ்த் கூட்டமைப்பு ஒத்துழைத்தது. குறிப்பாக 2018 இல் தொடங்கி, சர்வதேச வர்க்கப் போராட்டங்களுக்கு மத்தியில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் தொழிலாளர்களின் ஐக்கியப்பட்ட வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. இது இறுதியில் கொழும்பில் "ஐக்கிய அரசாங்கத்தை" கவிழ்த்து, தமிழ் தொழிலாளர்கள் மற்றும் வறியவர்ளின் பார்வையில் தமிழ் கூட்டமைப்பை மேலும் இழிவுக்குள்ளாக்கியது.

இந்தத் தேர்தல் 1948 இல் உத்தியோகபூர்வமாக சுதந்திரமடைந்ததற்குப் பிறகு நாட்டை மாறி மாறி ஆட்சி செய்த பாரம்பரிய முதலாளித்துவக் கட்சிகளின் கட்சிகளின் -விக்ரமசிங்கவின் ஐ.தே.க. மற்றும் சிறிசேனாவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.)- சரிவைக் கண்டது.

கொழும்பில் உள்ள தங்கள் சகாக்களைப் போலவே, தமிழ் தேசியவாதக் கட்சிகளும், கொவிட்-19 பூகோளத் தொற்றுநோய்களுக்கு மத்தியில், பெருவணிகமும் அரசாங்கமும் சமூக உரிமைகள் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்துவதற்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மத்தியில் சமூக கோபம் வளர்ச்சியடைவதையிட்டு பீதியடைந்துள்ளன.. ஜனாதிபதி ராஜபக்ஷ தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக இராணுவ சர்வாதிகாரத்தை நோக்கி வேகமாக நகர்கிறார்.

முதலாளித்துவ கட்சிகள், தொழிலாள வர்க்கத்தின் மீதான அச்சத்திலும் பகைமையிலும் ஒன்றுபட்டுள்ளன. இதுவும் ராஜபக்ஷவை தமிழ் கூட்டமைப்பு அணுகுவதற்கான அடிநிலைக் காரணமாக இருக்கின்றது. குறிப்பிடத்தக்க வகையில், அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் தங்கள் சகாக்களுடன் சேர்ந்து ஜனாதிபதியின் கொள்கை உரையை வாக்களிக்காமல் அங்கீகரித்தன.

தீவின் மீதான ஏகாதிபத்திய காலனித்துவ ஒடுக்குமுறையில் வரலாற்று ரீதியாக வேரூன்றியிருக்கும் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரான இனவாத பாகுபாடு மற்றும் இரத்தக்களரிக்கான பொறுப்பு, பிரதானமாக கொழும்பு ஆளும் கும்பலுக்கு உரியதாகும். எவ்வாறெனினும், தங்கள் சொந்த தேசியவாத அரசியலின் ஆதரவில் தங்கியிருக்கும் தமிழ் முதலாளித்துவ கட்சிகள், தமிழ் தொழிலாளர்கள் மற்றும் வறியவர்களுக்கு ஒரு பேரழிவை உருவாக்கின. இந்த பேரழிவில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸிலிருந்து பிரிந்து 1949 இல் உருவான தமிழரசுக் கட்சி, கடந்த ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக, முக்கிய பங்கு வகித்துள்ளது.

அப்பொழுது யு.என்.பி அரசாங்கத்தின் பங்காளியாக இருந்த ஏ.சி.டி.சி அதன் 1948 குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்தது, இது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை ரத்து செய்து, தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்த வகுப்புவாத பாகுபாட்டைத் தொடங்கியது. அப்போதிருந்து, ஐ.டி.ஏ.கே தமிழ் தேசியவாதத்தின் ஒரு சாம்பியனாக முன்வந்துள்ளது, அதே நேரத்தில் கொழும்பு ஆட்சிகள் தமிழ் எதிர்ப்பு பிரச்சாரங்களை தீவிரப்படுத்தின.

1964 இல், லங்கா சம சமாஜா கட்சி, (ல.ச.ச.க.), சிங்கள-பௌத்த மேலாதிக்கத்தை அடிப்படையாகக் கொண்ட, சிறிமாவோ பண்டாரநாயக்கவின் முதலாளித்துவ கூட்டணி அரசாங்கத்திற்குள் நுழைந்து, சோசலிச சர்வதேசவாத கொள்கைகளை காட்டிக்கொடுத்தமை, தமிழ் தேசியவாத கட்சியை பலப்படுத்தியது. அடுத்து வந்த ஆண்டுகளில், இது 1970 களில் பிரிவினைவாத புலிகள் உட்பட தமிழ் ஆயுதக் குழுக்கள் தோன்றுவதற்கு வழி வகுத்தது.

எல்லாவற்றுக்கும் மேலாக, 1972 அரசியலமைப்பு பௌத்தத்திற்கும் சிங்கள மொழிக்கும் உத்தியோகபூர்வ முன்னுரிமை அளித்தது. இந்த அரசியலமைப்பின் சிற்பி ஸ்ரீ.ல.சு.க. தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தின் அமைச்சராக இருந்த ல.ச.ச.க. தலைவர் கொல்வின் ஆர்.டி சில்வா ஆவார்.

இதற்கு பதிலிருப்பாக, தமிழரசுக் கட்சியும் தமிழ் காங்கிரசும் இணைந்து 1972 இல் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியை (TULF) உருவாக்கின. 1976 இல், யாழ்ப்பாணத்திற்கு அருகிலுள்ள வடுகோட்டையில் நடத்திய அதன் மாநாட்டில், சுயநிர்ணயத்தை மீண்டும் வலியுறுத்தி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு ஒரு தனியான “மதச்சார்பற்ற, சோசலிச தமிழீழ அரசுக்கு” அழைப்பு விடுத்தது.

தமிழரசுக் கட்சியும் ஏனைய தமிழ் கட்சிகளும், தொழிலாளர்களை இன அடிப்படையில் பிளவுபடுத்த தமிழ் தேசியவாதத்தைப் பயன்படுத்தின. இது கொழும்பு உயரடுக்கினதும் பேரினவாத குழுக்களினதும் சிங்கள-இனவாத ஆத்திரமூட்டல்களுக்கு மட்டுமே உதவியது. இது 1983 இல் தொடங்கிய மூன்று தசாப்த கால உள்நாட்டுப் போரில் உச்சக்கட்டத்தை அடைந்தது.

இன்று, தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, விடுதலைப் புலிகளின் மிச்ச சொச்சங்களும் மற்றும் 2001 இல் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்புமாக அனைத்துமே இதேபோன்ற பாதையைப் பின்பற்றுகின்றன: அதாவது, புது டில்லி மற்றும் வாஷிங்டனின் ஆதரவோடு அதிக அதிகாரத்திற்காக கொழும்பு உயரடுக்கினருடன் பேரம் பேசும் அதே வேளை, இறுதியில் அமெரிக்க நலன்களுக்கு இணங்குவதாகும். இது தமிழ் தேசியவாதத்தின் பிற்போக்கான முட்டுச் சந்தாகும்.

ல.ச.ச.க. செய்த மாபெரும் காட்டிக்கொடுப்புக்கும் தமிழ் தேசியவாதத்திற்கும் எதிரான அரசியல் போராட்டத்தை முன்னெடுத்தது சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) மற்றும் அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமுமே (பு.க.க.) ஆகும். 1968 இல் பு.க.க. ஸ்தாபிக்கப்பட்டதில் இருந்தே அது முன்னெடுத்த போராட்டங்கள் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. எங்கள் போராட்டம் ட்ரொட்ஸ்கிச நிரந்தர புரட்சியின் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. முதலாளித்துவ வளர்ச்சி தாமதமான நாடுகளில், சர்வதேச அளவில் சோசலிச புரட்சிக்கான தொழிலாள வர்க்கத்தின் ஐக்கிய போராட்டத்தால் மட்டுமே ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்பட முடியும்.

சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் தொழிலாளர்களின் சர்வதேச ஐக்கியத்திற்காகப் போராடும் சோ.ச.க., சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் நின்று, வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இலங்கை இராணுவத்தை வெளியேற்றக் கோருவதுடன் சர்வாதிகாரம், போர் மற்றும் சமத்துவமின்மையை எதிர்க்கிறது. தெற்காசிய மற்றும் சர்வதேச அளவில் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசு என்பதே அதன் முன்னோக்கு ஆகும். சோ.ச.க.வின் இடைவிடாத போராட்டத்தை வாசித்து, இந்த கட்சியை கட்டியெழுப்ப முன்வருமாறு தமிழ் உழைக்கும் மக்களுக்கும் இளைஞர்களுக்கும் நாம் அழைப்பு விடுக்கின்றோம்.

Loading