மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநரான டாக்டர் Tedros Adhanom Ghebreyesus அவரது வியாழக்கிழமை உரையில், உலகளவில் உறுதிப்படுத்தப்பட்ட கொரொனாவைரஸ் தொற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 200,000 ஆக உயர்ந்துள்ளதை உறுதிப்படுத்தியதுடன், “இந்த தொற்றுநோயை நாம் தோற்கடிப்பதற்கு, நாம் எப்போதும் கூறிக்கொண்டிருப்பது போல ஒற்றுமையை கடைப்பிடிப்பது மட்டும் தான் ஒரே வழியாக உள்ளது. ஒற்றுமை, ஒற்றுமை, ஒற்றுமை… நாம் அனைவரும் ஒரே மனித இனம் என்ற ஒன்று மட்டுமே உண்மையில் இதற்கு ஆதாரமாகும். இந்நோயானது மனித இனத்திற்கு எதிரான கண்ணுக்குத்தெரியாத எதிரி” என்று அவர் தெரிவித்தார்.
பூகோளம் முழுவதிலுமான மனிதகுலத்தின் ஒற்றுமை என்பது வெறுமனே உயர்ந்த இலட்சியம் அல்ல, மாறாக உலகின் ஒவ்வொரு மூலையிலும் பரவி பல கோடி மக்களை தொற்றுநோய் பாதிப்புக்கு அச்சுறுத்தும் ஒரு கொடிய நுண்கிருமியை எதிர்த்துப் போராடுவதில் உள்ள வாழ்வா சாவா பிரச்சினையில் அவசியமானதாகவும் உள்ளது. எவ்வாறாயினும், இந்த இலட்சியம், முன்னொருபோதும் இமல்லாதளவிலான சமூக சமத்துவமின்மையால் பிளவுப்பட்ட மற்றும் கொலைகார வன்முறை ஊடாக புவி-மூலோபாய நலன்களை பின்தொடர்வதால் பண்பிட்டுக்காட்டப்படும் உலக முதலாளித்துவ சமுதாயத்தின் யதார்த்தத்திற்கு முற்றிலும் எதிரானதாக உள்ளது.
“மனிதகுலத்திற்கு எதிரான கண்ணுக்குத் தெரியாத எதிரியான”, கொரொனாவைரஸ் இற்கு அருகருகே முற்றிலும் கண்ணிற்கு தெரியக்கூடிய மற்றொரு எதிரியான உலக ஏகாதிபத்தியம் உள்ளது.
ஈரான் மற்றும் அதன் 83 மில்லியன் மக்களும் எதிர்கொள்ளும் அதிகரித்தளவிலான நம்பிக்கையற்ற நிலைமைகளைக் காட்டிலும் இதனை வேறெங்கும் வெளிப்படையான தாக்கத்தை காண முடியாது. இத்தாலி மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தொற்று நோயாளிகளின் மூன்றாவது அதிகபட்ச இறப்பு எண்ணிக்கை கொண்ட நாடாக இது உள்ளது. ஒவ்வொரு நாளும் இதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இங்கு தொடர்ந்து கூர்மையாக அதிகரித்து வருவதால், இந்த நாட்டின் அதிகபட்ச இறப்பு எண்ணிக்கையை போல வேறேந்த நாட்டிலும் இல்லை.
ஈரானின் சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளரான கியானுஷ் ஜஹான்பூர் வியாழனன்று, முந்தைய 24 மணிநேரத்திற்குள் 149 பேர் இறந்துவிட்டதால், இந்த நுண்கிருமி தாக்குதலினால் இறந்தோர் எண்ணிக்கை 1,284 ஆக உயர்ந்துள்ளது என அறிவித்தார். அதே காலகட்டத்தில், மேலும் மற்றொரு 1046 புதிய கொரொனாவைரஸ் நோயாளிகள் இருப்பது பதிவாகிய நிலையில், மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 18,407 ஆக உயர்ந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இரண்டு புள்ளி விபரங்களுமே நோயின் அழிவுகள் பற்றிய தீவிர குறைமதிப்பீடுகளாகவே நம்பப்படுகின்றன.
“எங்களது தகவலின் அடிப்படையில், ஈரானில் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு கொரொனாவைரஸ் நோயாளி பலியாகிறார் என்பதுடன், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சுமார் 50 பேர் அதன் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்,” என்று செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
மனித ஒற்றுமையைக் காட்டிலும், இந்த நெருக்கடிக்கான வாஷிங்டனின் பதில்; எண்ணற்ற ஈரானிய உழைக்கும் மக்களின் உயிர்களை விலைகொடுத்து இதை இன்னும் தீவிரப்படுத்தும் ஒரு திட்டமிட்ட முயற்சியாகவே உள்ளது. இந்த தொற்றுநோய், ஒவ்வொரு நாட்டிலும் அழித்தொழிக்கப்பட வேண்டிய எதிரியாக பார்க்கப்படுவதற்கு மாறாக, வெள்ளை மாளிகை, பென்டகன் மற்றும் சிஐஏ ஆகியவற்றால் ஏகாதிபத்திய திட்டமிடலுக்குள் ஒருங்கிணைக்கப்பட வேண்டிய ஒரு புதிய போர் ஆயுதமாகவே பார்க்கப்படுகிறது.
தேசிய ஈரானிய எண்ணெய் நிறுவனத்திடமிருந்து (National Iranian Oil Company-NIOC) பெட்ரோலியம் வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்ட ஐக்கிய அரபு இராஜ்ஜியங்களை தளமாகக் கொண்ட நிறுவனங்களை குறிவைக்கும் வகையில், ஈரானுக்கு எதிரான மற்றொரு சுற்று பொருளாதாரத் தடைகளை திணிப்பது ட்ரம்ப் நிர்வாகத்தின் தவிர்க்க முடியாத முடிவாக உள்ளது. இது, சீனா, ஹாங்காங் மற்றும் தென்னாபிரிக்காவில் உள்ள ஒன்பது தனிப்பட்ட நிறுவனங்களுக்கு எதிராக வாஷிங்டனின் கொடுங்கோலனான வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ மற்றொரு தொகுப்பு பொருளாதாரத் தடைகளுக்கு அறிவித்து இரண்டே நாட்களில் நிகழ்கிறது. அதாவது, கறுப்புப்பட்டியலில் உள்ள நிறுவனங்கள் ஈரானிய பெட்ரோலிய இரசாயனபொருட்கள் சம்பந்தப்பட்ட “முக்கிய பரிவர்த்தனைகளில்” ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டன.
இந்த தொற்றுநோயை வெறுமனே ஆத்திரமூட்டும் மற்றும் இனவெறி அடிப்படையிலான வார்த்தைகளை பாவித்து, “வூஹான் வைரஸ் ஒரு கொலையாளி மற்றும் ஈரானியன் ஆட்சி அதற்கு ஒரு உடந்தை” என்று வெளியுறவுத்துறை செய்தியாளர்கள் கூட்டத்தில் பொம்பியோ தெரிவித்தார்.
அதே மூச்சில், “ஈரானிய மக்கள் உடல்நலத்துடன் இருக்க உதவுவதற்கான” “மனிதாபிமான முயற்சிகளை” மேற்கொள்ள வாஷிங்டன் தயாராக இருந்தது என்றும் அவர் கூறினார்.
ட்ரம்ப் நிர்வாகத்தின் தரங்களின்படி கூட இந்த பொய்கள் மற்றும் பாசாங்குத்தனத்தின் நிலை திகைப்பூட்டும்படியாக உள்ளது. நாட்டின் மத்திய வங்கியை கறுப்புப்பட்டியலில் சேர்த்துள்ள அமெரிக்க பொருளாதாரத் தடைகள், தெஹ்ரானுக்கு “அதிகபட்ச அழுத்தத்தின்கீழ்” அமெரிக்காவால் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படும் அடிப்படை மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களின் விநியோகத்தை கூட சாத்தியமற்றதாக்கியுள்ளது. இது, கொரொனாவைரஸ் தொற்றுநோய் தீவிரமாக பரவுவதற்கு முன்பாகவே ஆரம்பகட்ட மற்றும் தடுத்திருக்க வேண்டிய மரணங்கள் குறித்து பல்லாயிரக்கணக்கானவர்களை கண்டித்தது. தற்போது, ஒரு ஈரானிய மருத்துவ ஆய்வாளரின் மதிப்பீட்டின் படி, கோவிட்-19 நோய் பாதிப்பினால் இறப்போர் எண்ணிக்கை அதிகபட்சமாக 3.5 மில்லியனை எட்டக்கூடும்.
இந்த மனித துன்பம் வாஷிங்டனின் “அதிகபட்ச அழுத்தம்” கொண்ட பொருளாதாரத் தடைகளின் கூட்டுசேதம் அல்ல, இதுவே அதன் நேரடி நோக்கமாகும். அமெரிக்க ஏகாதிபத்தியம், மிருகத்தனமான கூட்டு தண்டனை, பசி மற்றும் நோய் பரவுதல் மூலம், எண்ணெய் வளம் மிக்க பாரசீக வளைகுடா மீதான தனது மேலாதிக்கத்திற்கு எதிரான ஒரு பிராந்திய தடையை அகற்றும் நோக்கத்துடன் தெஹ்ரானில் ஆட்சி மாற்றத்திற்கு தூண்டுதலளிக்க முயல்கின்ற அதேவேளை, சீனாவுடனான போருக்கும் தயாராகி வருகிறது. அதாவது, அமெரிக்க ஆயுதக் களஞ்சியத்தில் இன்னுமொரு ஆயுதமாக கொரொனாவைரஸ் தொற்றுநோய் பார்க்கப்படுகிறது.
பாக்தாத்தின் சர்வதேச விமான நிலையத்தில் ஜனவரி 3 அன்று, ஜெனரல் காசிம் சுலைமானி ஆளில்லா விமான ஏவுகணை தாக்குதலால் படுகொலை செய்யப்பட்டது தெளிவுபடுத்தியது போல, அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் நோக்கங்களை அடைவதற்கு நேரடி ஆக்கிரமிப்பு போரை நடத்த தயாராகவுள்ளது. சுலைமானியின் சட்டவிரோத படுகொலைக்கு அங்கீகாரம் அளித்த அதே உத்தரவைப் பயன்படுத்தி, பேரழிவுகர இராணுவ மோதலுக்கு வழிவகுக்கும் வகையில், ஈரானிய கப்பல்கள், வான் பாதுகாப்பு அமைப்புமுறைகள் மற்றும் பிற இலக்குகளுக்கு எதிராக குண்டுவெடிப்புத் தாக்குதல்களை நடத்த பென்டகனுக்கு ட்ரம்ப் அங்கீகாரம் அளித்தார்.
கொரொனாவைரஸ் பரவுவதை எதிர்கொள்வதில் ஈரானின் முதலாளித்துவ அரசாங்கத்திற்கு ஏற்பட்ட விரக்தி நிலை, நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக எந்தவித உறவுகளையும் கொண்டிராத சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) அவசரமாக தேவைப்படும் மருத்துவப் பொருட்களுக்காக 5 பில்லியன் டாலர் அவசரக் கடனை செலுத்துவதற்கென அது முன்வைத்துள்ள கோரிக்கையின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்திற்குள் அதனை தீர்மானிப்பதற்கான வாக்குகள் வாஷிங்டன் வசம் இருப்பதால், இந்த கடன் கோரிக்கை நிராகரிக்கப்படும். கொரொனா வைரஸ் பரவுவதை தடுக்க போராடுகையில், “அதிகபட்ச அழுத்தம்” கொண்ட பொருளாதாரத் தடைகளின் கிடுக்குப்பிடியை எதிர்கொண்டுள்ள மற்றொரு எண்ணெய் வளமிக்க நாடான வெனிசுவேலா முன்வைத்த இதேபோன்ற கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில், அமெரிக்க கைப்பாவையான ஜூவான் குவாய்டோ (Juan Quaido) உம் மற்றும் அவரைச் சுற்றியுள்ள வலதுசாரி சதிகாரர்களின் குழுவான சிஐஏ ஆதரவுடைய சிறிய குழுவும், இந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கான மற்றும் தணிப்பதற்கான முயற்சிகளை ஒழுங்கமைக்க முடியும்! என்பதுபோல் சர்வதேச நாணய நிதியம் பணத்தை விடுவிக்க முடியாது, ஏனென்றால் அதற்கு ஜனாதிபதி நிக்கோலா மதுரோ (Nicolas Maduro) அரசாங்கத்தின் “அங்கீகாரம் குறித்த தெளிவு” இல்லை என்று இழிந்த முறையில் கூறியது. இதற்கிடையில், கொரொனாவைரஸ் பரவுவதை எதிர்கொள்வதில், இலத்தீன் அமெரிக்காவிலுள்ள வாஷிங்டனின் வலதுசாரி நட்பு நாடுகள், தற்போதுள்ள அரசாங்கத்தை கவிழ்க்கவும், அமெரிக்க கைப்பாவை ஆட்சியை அங்கு திணிக்கவும் எண்ணற்ற ஆயிரக்கணக்கானவர்களின் மரணங்களைப் பயன்படுத்துவதற்கு நம்பிக்கை வைத்து மீண்டும் வெளிசுவேலாவுடனான எந்தவொரு கூட்டுழைப்பையும் நிராகரித்தன.
இந்த குற்றவியல் கொள்கைகளின் விளைவுகள் இலக்குவைக்கப்பட்ட நாடுகளுடன் மட்டும் மட்டுப்படுத்தப்படாது. இந்த கொரொனாவைரஸ் தொற்றுநோய் ஏற்கனவே ஈரானில் இருந்து மத்திய கிழக்கு மற்றும் தெறிகாசியாவின் பெரும்பகுதிகளுக்கு பரவியுள்ளது. ஆப்கானிஸ்தானிலுள்ள ஆக்கிரமிப்பு துருப்புக்கள் தங்களது தாய்நாட்டிற்கு திரும்புவதால் நுண்கிருமி தொற்று பரவக்கூடும் என்று அஞ்சி அங்கேயே அவர்களை தடுத்து வைக்க வேண்டிய கட்டாயத்தில் பென்டகன் கூட இருந்து வருகிறது.
அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியக் குழு, “கோவிட்-19 தொற்றுநோயை எதிர்த்து எவ்வாறு போராடுவது: தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு செயல் திட்டம்” என்ற அதன் மார்ச் 17, 2020 அறிக்கையில், “அனைத்து பொருளாதாரத் தடைகளையும் வர்த்தக போர் நடவடிக்கைகளையும் முடிவுக்குக் கொண்டு வரும்படி” ஒரு கோரிக்கையை எழுப்பியது. இது பின்வருமாறு தெரிவித்தது: “இதன் பிரதிபலிப்பாக ஈரான், வெனிசுவேலா மற்றும் பிற நாடுகள், அடிப்படை மருத்துவ உபகரணங்களைப் பெறுவதை தடுக்கும் பொருளாதாரத் தடைகளால் முடங்கிக் கிடக்கின்றன. இந்நிலையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளால் செயல்படுத்தப்படும் வர்த்தக போர் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். கொரொனாவைரஸ் நோய்தொற்று பூகோள அளவிலான நோயாக உருவெடுத்திருக்கும் நிலையில், அதற்கு பூகோள அளவிலான ஒருங்கிணைந்த பதிலிறுப்பும் தேவைப்படுகிறது.
இந்த உலகளாவிய கொரொனாவைரஸ் தொற்றுநோய், தொழிலாள வர்க்கத்தின் மிக அடிப்படையான நலன்களும், மனிதகுலத்தின் உயிர்வாழ்வும் ஏகாதிபத்தியத்துடன் ஒத்துப்போக முடியாதவை என்பதை மீண்டும் ஒருமுறை மிகத் தெளிவான முறையில் வெளிப்படுத்தியுள்ளது. இந்த நோயை தோற்கடிப்பதற்கும், கிரகத்தைச் சுற்றிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கும் தேவைப்படும் ஒற்றுமையை, சோசலிச சர்வதேசியவாதத்திற்கான பொதுவான போராட்டத்தில் தேசிய எல்லைகளைக் கடந்து தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதன் மூலம் மட்டுமே உருவாக்க முடியும்.