மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
இலங்கை பாதுகாப்பு அமைச்சினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக (கே.டி.யு.) மசோதாவை எதிர்க்குமாறு இலங்கையில் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் (IYSSE) அமைப்பு தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களை வலியுறுத்துகிறது. இந்த சட்டமானது உயர்கல்வியை தனியார்மயமாக்குவதையும் நாட்டின் இராணுவமயமாக்கலை அதிகரிப்பதையும் நோக்கிய மேலும் ஒரு நகர்வாகும்.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகமானது 1981ல் இராணுவத்தின் முப்படைகளின் உயர் பதவிகளுக்கு புதிதாக பயிற்சி பெறுவோருக்காக நிறுவப்பட்டது. இது 1986ல் பல்கலைக்கழக மட்டத்துக்கு உயர்த்தப்பட்டதுடன் பொறியியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சட்டம் உள்ளிட்ட கட்டணம் செலுத்தும் படிப்புகளுக்காக 2012 க்கு பின்னர் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சாதாரண மாணவர்களை சேர்க்கத் தொடங்கியது.
புதிய சட்ட மசோதா 1981 சட்டத்தை பதிலீடு செய்வதுடன் கே.டி.யு.வை முழுமையான பல்கலைக்கழகமாக மாற்றி, இராணுவ அதிகாரிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கும் மேலாக, 'மற்றவர்களுக்கும் பல்வேறு துறையில் பாட நெறிகளையும் வழங்குவதற்கு' ஏற்ப அதன் நோக்கங்கள் மற்றும் அதிகாரங்களை விரிவுபடுத்துவது இந்த மசோதாவின் குறிக்கோளாகும்:
1. 'வளாகங்கள், கல்லூரிகள், திணைக்களங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற சிறப்பு நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் பிரிவுகளை பல்கலைக்கழகத்தின் வேண்டுகோளின் படி நிறுவுதல்.'
2. அந்த நிறுவனங்களின் கற்கை நெறிகளை மற்றும் அவற்றுக்கான விருதுகளை அங்கீகரித்தல்.
3. உள்ளூர் மற்றும் வெளிநாட்டு உயர் கல்வி நிறுவனங்களுடன் இணைப்பு.
4. அந்த படிப்புகளுக்கு பல்கலைக்கழகத்தால் கட்டணம் நிர்ணயிக்கப்படும்.
கட்டணங்கள் ஏழை மாணவர்களுக்கு நெருங்க முடியாததாக இருக்கும். ஏற்கனவே, நான்கு வருட பொறியியல் மாணவருக்கு கட்டணம் சுமார் 20 இலட்சம் ரூபாய் (13,000 அமெரிக்க டாலர்) ஆகும்.
இந்த பல்கலைக்கழகம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயல்பட உள்ளதுடன் உயர் கல்வி அமைச்சின் கீழ் இருக்கும் ஏனைய அரச பல்கலைக்கழகங்களை நிர்வகிக்கும் '1978 பல்கலைக்கழக சட்ட விதிகளுக்கு கட்டுப்படாமல் அதனால் செயல்பட முடியும்',
கே.டி.யு. நிர்வாக சபையானது பாதுகாப்பு அமைச்சு மற்றும் ஆயுதப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகளை உள்ளடக்கி இருக்கும். இதற்கு சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளில் இருந்து ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஒரு துணை வேந்தர் தலைமை வகிப்பார்.
பல்கலைக்கழகத்தின் மீது இராணுவ ஒழுக்கம் விதிக்கப்படும். இராணுவ இணைய தளத்தின் படி, கீழ் சூரியவெவவில் அமைந்துள்ள அதன் வளாகத்தில் 'இராணுவ ஊழியர்களின் மேற்பார்வை காரணமாக கண்டிப்பான ஒழுக்கம் பராமரிக்கப்படுகிறது.' மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சீருடை உள்ளதுடன் 'தேசிய பாதுகாப்பு' காரணங்களுக்காக சோதனைக்கு உள்ளாக்கப்படுவர்.
குறிப்பாக, பாதுகாப்பு அமைச்சர், 'பல்கலைக்கழகத்தில் நிலவும் எந்தவொரு சூழ்நிலையும் தேசியப் பாதுகாப்பிற்கு ஆபத்தாக இருப்பது போல் அல்லது தேசிய கொள்கைக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய அல்லது கேடு விளைவிக்கக் கூடியது என்று கருதினால்' அல்லது நிறுவனத்தின் செயல்பாட்டுக்கு இடையூறு ஏற்படுத்தும் என்று கருதினால் 'அவர் அத்தகைய சூழ்நிலையை கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு ஆளுநர்கள் குழுவுக்கு கட்டளையிட முடியும்.'
இந்த மசோதாவானது கல்வி தனியார்மயமாக்கத்தை ஆழப்படுத்துதல் மற்றும் சமுதாயத்தை இராணுவமயமாக்குதலதும் பாகமாகும். பாக்கிஸ்தானில், பாக்கிஸ்தான் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பத்திற்கான தேசிய பல்கலைக்கழகம் என்ற பெயரில் இத்தகைய இராணுவம் நடத்தும் பல்கலைக்கங்கள் பல்லாண்டுகளாக செயல்பட்டு வருகின்றன.
பாக்கிஸ்தான் இராணுவமானது அந்த நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார முடிவுகளை எடுப்பதில் ஒரு முக்கிய சக்தியாக இருப்பதுடன் பொருளாதாரத்தின் மிகுதியான பகுதியை அது கட்டுப்படுத்துகிறது. இலங்கை இராணுவமானது 2018 வரவு-செலவுத் திட்ட ஒதுக்கீட்டில் 29,000 கோடி ரூபாய்களை விழுங்கிக்கொண்டு, இதேபோல் ஒரு சக்திவாய்ந்த நிலையை உறுதிப்படுத்திக்கொண்டுள்ளதுடன் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளை திட்டமிட்டவாறு செயற்படுத்துகிறது. பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான 30 ஆண்டு கால இனவாத யுத்தம் இராணுவத்தை தூக்கிநிறுத்த பயன்படுகிறது.
2015 ஜனவரியில் பதவிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கல்விக்கான பொதுச் செலவை அதிகரிப்பதாக வாக்குறுதி அளித்தார். இந்த வாய்ச்சவடால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் ஒடுக்குமுறை ஆட்சி மீதான சமூக எதிர்ப்பை திசை திருப்புவதன் பேரில் சிறிசேனவை சூழ ஒழுங்கமைக்கப்பட்ட வலதுசாரி 'நல்லாட்சி' இயக்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு தொகை போலி வாக்குறுதிகளில் ஒரு பகுதியாகும்.
கடந்த மூன்று ஆண்டுகளாக, அரசாங்கம் கல்விக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்கவில்லை, இது 2017ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.9 சதவீதமாக இருந்த, அதே வேளை கல்வி வசதிகள் துரிதமாக மோசமடைந்து வருகின்றன.
பல்கலைக்கழக மாணவர்கள் உயர் கல்வி தனியார்மயமாக்கப்படுவதை எதிர்த்து தங்கள் ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்தும் நடத்துவதுடன், வெளிநாட்டுடன் இணைந்த கட்டணம் செலுத்தும் தனியார் மருத்துவ கல்லூரியான தெற்காசிய தொழில்நுட்ப மற்றும் மருத்துவ நிலையத்தை (SAITM) அகற்ற வேண்டும் என்று கோருகின்றனர். மருத்துவ மாணவர்கள் இந்த பிரச்சாரத்தில் இணைந்து ஒன்பது மாத காலமாக விரிவுரையை பகிஷ்கரித்து வருகின்றனர்.
இருப்பினும், போலி-இடது முன்நிலை சோசலிசக் கட்சியின் (மு.சோ.க.) கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் (அ.ப.மா.ஒ.), சைட்டத்தை ஒழிக்க அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் பிரச்சாரத்திற்கு மாணவர் இயக்கத்தை மட்டுப்படுத்தியுள்ளது. அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுப்பதை தீவிரமாக்குவதன் பெயரில் அவர்கள் தொழிற்சங்கங்களுடனும், வலதுசாரி எதிர்க்கட்சி உறுப்பினர்களுடனும் கைகோர்த்துள்ளனர்.
மாணவர் போராட்டங்களுக்கு எதிராக கொடூரமான பொலிஸ் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு மாணவர் தலைவர்களை கைது செய்வதே சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பதிலாக இருக்கின்றது.
ஒரு சூழ்ச்சியாக, அரசாங்கம் சைட்டத்தை 'இரத்து செய்து' அதன் மாணவர்களுக்கு ஒரு தனி தீர்வை வழங்கும் என்றும் அறிவித்தது. அரசாங்கத்தின் முடிவை ஒரு வெற்றியாக வரவேற்ற அ.ப.மா.ஒ., மாணவர் போராட்டங்களை மூடித்துக்கொண்டது. பின்னர் அரசாங்கம் கட்டணம் செலுத்தும் மருத்துவ படிப்புக்காக கே.டி.யு.வில் சைட்டம் மாணவர்களை சேர்ப்பதற்கு முடிவு செய்தது.
அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA), மருத்துவ பட்டங்களை தனியார்மயமாக்குவது சம்பந்தமாக மருத்துவர்கள் மத்தியில் நிலவும் கவலைகளை திசைதிருப்பும் நோக்கில் பல வேலைநிறுத்தங்களை நடத்தியது. ஆனால் பின்னர், சைட்டம் மாணவர்களை கே.டி.யு.வில் சேர்ப்பதற்கு அது பரிந்துரைத்ததுடன் தனது முன்மொழிவை அமுல்படுத்தியதற்காக அரசாங்கத்தை பாராட்டியது.
அரசாங்கம் மற்றொரு பெயரில் சைட்டத்த்தை முன்னெடுக்க தயார் செய்து வருவதனாலும் இலங்கை மருத்துவ சபையை கே.டி.யு.வால் அலட்சியம் செய்ய முடியும் என்பதாலும் இப்போது ஜி.எம்.ஓ.ஏ. இந்த மசோதாவை எதிர்ப்பதாக கூறுகிறது.
அ.ப.மா.ஒ. அழைப்பாளரான லஹிரு வீரசேகர உட்பட அதன் தலைவர்கள், தற்போது கல்வியை தனியார்மயமாக்குவதாகவும் இராணுவமயமாக்குவதாகவும் அரசாங்கத்தை விமர்சித்து வருவதுடன், 'பாரிய எதிர்ப்புக்களை' முன்னெடுப்பதாகவும் அறிவித்துள்ளனர்.
அ.ப.மா.ஒ. மற்றும் ஜி.எம்.ஓ.ஏ. மசோதாவை கைவிடுவதற்காக அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் பயனற்ற பிரச்சாரங்களை ஊக்குவித்து வருகின்றன. இது அரசாங்கத்தின் தனியார்மயமாக்கல் நிகழ்ச்சி நிரல் மீதான மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் டாக்டர்களின் எதிர்ப்பை திசைதிருப்பும் மற்றொரு பொறியாகும்.
2016ல் வழங்கப்பட்ட 150 கோடி அமெரிக்க டாலர் பிணை எடுப்பு கடனுக்கான நிபந்தனையாக, சர்வதேச நாணய நிதியம் (IMF) ஆணையிட்டுள்ள பரந்த பொருளாதார 'மறுசீரமைப்பு' திட்டத்தை ஆளும் கூட்டணி அமுல்படுத்துவதன் ஒரு பாகமே இந்த இலவக் கல்வி வெட்டு ஆகும்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின் கீழ், அரசாங்கம் 2020 ஆம் ஆண்டில் வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறையை அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவிகிதமாகக் குறைக்க வேண்டும். இதன் அர்த்தம், கல்வி மற்றும் சுகாதாரம் உட்பட மானியங்கள் மற்றும் சமூக திட்டங்களை வெட்டித் தள்ளுதல், அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்குதல் மற்றும் வரிகளை அதிகரித்தலுமே ஆகும்.
நெருக்கடி நிறைந்த உலக முதலாளித்துவத்தின் சுமைகளை சுமத்தும்போது ஒவ்வொரு நாட்டிலும் பொதுக் கல்வி மைய இலக்காகிவிட்டது. அமெரிக்காவில், இலட்சக் கணக்கான ஆசிரியர்கள் ஊதிய உயர்வு கோரியும் பாடசாலை நிதிகளை மீண்டும் ஸ்தாபிக்கக் கோரியும், பல மாநிலங்களில் மாணவர்களின ஆதரவுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்,. பிரித்தானியாவில், பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவில், பல்கலைக் கழக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும், பல்கலைக்கழகங்களை கட்டணம் பெறும் நிறுவனங்களாக மாற்றுவதன் பேரில், அவற்றுக்கு தன்னாட்சி உரிமை என்றழைக்கப்படுவதை வழங்குவதற்கு எதிராக பிரச்சாரங்களை முன்னெடுத்துள்ளனர்.
முதலாளித்துவ நெருக்கடி மற்றும் சர்வதேச நிதிய மூலதனத்தினாலும் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் அரசாங்கத்தின் கொள்கைகளை எந்தளவு அழுத்தம் கொடுத்தாலும் அது கைவிடப் போவதில்லை. அரசாங்க தாக்குதல்களை தோற்கடிக்க அரசியல் போராட்டம் தேவை என்பதை விளக்கி மாணவர் மற்றும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஐ.வை.எஸ்.எஸ்.இ. தலையீடு செய்தது.
நூற்றுக்கணக்கான கோடிகளை செலவிட்டால் மட்டுமே அனைவருக்கும் ஒழுக்கமான, தரம் வாய்ந்த முன்னேற்றமான கல்வியை வழங்க முடியும். வங்கிகள், பெரிய நிறுவனங்கள், பிரமாண்டமான பெருந்தோட்டங்கள் ஆகியவற்றின் செல்வத்தை கைப்பற்றுவதன் மூலமும் மற்றும் வெளிநாட்டு கடன்களை நிராகரிப்பதன் மூலமும் மட்டுமே இந்த வேலைத்திட்டத்திற்கு தேவையான பாரிய நிதிகளை பெற்றுகொள்ள முடியும். இத்தகைய திட்டங்களை, ஏழை ஒடுக்கப்பட்ட மக்களையும் இளைஞர்களையும் சூழ அணிதிரட்டிக்கொண்டு, தொழிலாள வர்க்கத்தால் ஸ்தாபிக்கப்படும் தொழிலாளர்களதும் விவசாயிகளின் அரசாங்கத்தால் மட்டுமே செயல்படுத்தப்பட முடியும்.
அ.ப.மா.ஓ., மு.சோ.க. மற்றும் ஏனைய போலி-இடது குழுக்கள் மற்றும் தொழிற்சங்கங்களும் முதலாளித்துவ அமைப்புடன் பிணைந்துள்ளதுடன் அதனுள்ளேயே தீர்வுகளை தேடுவதனால் அத்தகைய போராட்டத்தை தடுக்க முயல்கின்றன. முதலாளித்துவத்தின் இந்த கைக்கூலிகளை மாணவர்கள் நிராகரிக்க வேண்டும்.
சோசலிச வேலைத்திட்டத்திற்கான போராட்டத்தை வழிநடத்தக் கூடிய புரட்சிகர சக்தியான தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திரும்புமாறு ஐ.வை.எஸ்.எஸ்.இ. மாணவர்களுக்கு அழைப்புவிடுக்கின்றது. கடந்த சில மாதங்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வரும் பல்வேறு துறைகளில் உள்ள தொழிலாளர்களின் அனுபவம், அரசாங்கத்திற்கு வண்டுகோள் விடுப்பதன் மூலம் தமது உரிமைகளை பாதுகாக்க முடியாது என்பதை காட்டியுள்ளது. ஒரு அனைத்துலக சோசலிச வேலைத்திட்டத்திற்கான போராட்டமே அவசியமாகும்.
இந்த புரட்சிகர முன்னோக்கிற்காக போராடுவதற்காக ஒரு சோசலிச இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கு முன்வருமாறு மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம். ஐ.வை.எஸ்.எஸ்.இ. ஆனது சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) இளைஞர் இயக்கமாகும். இந்த வேலைத் திட்டத்திற்காக போராட ஐ.வை.எஸ்.எஸ்.இ. கிளைகளை உருவாக்குமாறு மாணவர்களுக்கு நாம் அழைப்புவிடுக்கின்றோம்.