David North
1917 சரஷ்ய புரட்சியும் முடிவுறாத இருபதாம் நூற்றாண்டும்

1848 ன் புரட்சிகளும் மார்க்சிச மூலோபாயத்திற்கான வரலாற்று அடித்தளங்களும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்த வாரத்தை முழுமையாக நிரந்தரப் புரட்சி தத்துவம் குறித்த ஒரு ஆய்வுக்காய் அர்ப்பணிப்போம். இந்த விடயத்தில் நமது கவனத்தை செலுத்துவதை நியாயப்படுத்துவது கடினமல்ல. கடந்த அரை வருட கால நிகழ்வுகள், அனைத்திற்கும் முதலாவதாக எகிப்திய புரட்சியானது இந்த தத்துவத்திற்கு ஒரு பெரும் பொருத்தத்தை அளிக்கின்றது. எகிப்திய நிகழ்வுகளின் சமூக இயக்கவியல், இந்த தத்துவத்தின் அடிப்படையில் மட்டுமே புரிந்து கொள்ளக் கூடியதாய் இருக்கிறது. வழக்கம் போல, ஜனநாயகம் குறித்த வெற்று வாய்வீச்சுகளை கொண்டுதான் பல்வேறு முதலாளித்துவ மற்றும் குட்டி முதலாளித்துவ “இடது” அமைப்புகள் இந்த நிகழ்வுகளுக்கு தமது பிரதிபலிப்பை காட்டுகின்றன.

இவ்வாறே, சென்ற ஜனவரியில் பிரான்சின் புதிய முதலாளித்துவ-எதிர்ப்புகட்சியானது (NPA), பசுமைக்கட்சியினர், ஒருமித்த இடது(Unitary Left), பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி, இடது கட்சி, மற்றும் சோசலிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளும் கையெழுத்திட்டிருந்த ஒரு கூட்டறிக்கையில் கையெழுத்திட்டது. அந்த அறிக்கை தெரிவிக்கிறது: “பிரெஞ்சு அரசாங்கமும் ஐரோப்பிய ஒன்றியமும் துனிசிய ஆட்சிக்கான தமது வெளிப்படையான மற்றும் மறைமுகமான ஆதரவை நிறுத்திக் கொண்டு ஒரு உண்மையான ஜனநாயக உருமாற்றத்திற்கு ஆதரவளிக்க வேண்டும்.” அதேநேரத்தில் [சார்க்கோசி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியுடனான] “உண்மையான ஜனநாயக உருமாற்றத்திற்கு” விடுக்கப்பட்டிருக்கும் இந்த பப்லோவாத2 அழைப்பிற்கு தூண்டுதலாக இருந்த சமூக நலன்கள் மனித உரிமைகளுக்கான துனிசிய லீக்கின் ஒரு அறிக்கையில் வெளிப்பாட்டை கண்டது. பாரிய ஆர்ப்பாட்டங்களின் நடுவில் வெளியான இந்த அறிக்கை அறிவித்தது:“சகிக்கமுடியாததாக்கி கொண்டிருக்கும் இந்த ’கொள்ளையின் வெடிப்பை எப்படி நாம் தடுக்கப் போகிறோம்’ என்பதே இப்போது நம் முன் இருக்கும் கேள்வியாகும். இந்தச் சிறுவர்கள் தாக்குவது ட்ராபெல்ஸி குடும்பத்தின் சொத்துகளை மட்டுமல்ல, மாறாக போலிஸ் நிலையங்களையும், எல்லோருடைய சொத்துகளையும் சேர்த்துத்தான்.”

“துனிசியா: சமூக மற்றும் ஜனநாயகப் புரட்சி நடந்து கொண்டிருக்கிறது” என்ற தலைப்பில் NPA வெளியிட்ட ஒரு அறிக்கை பிரகடனப்படுத்தியது:

புதியதொரு தேர்தல் நெறிமுறைகளின் கீழ் சட்டமன்றத்திற்கான சுதந்திரமான ஜனநாயகத் தேர்தலுக்கு தயாரிப்பு செய்வதற்கான பொறுப்புகொடுக்கப்பட்டுள்ள, Destourian ஆட்சியின் பிரதிநிதிகள் அற்ற, ஒரு இடைக்கால அரசாங்கத்தின் அரசியல்சட்டம் மட்டுமே துனிசிய மக்கள் தங்களது தலையெழுத்தை திரும்பப் பெறவும் பெரும்பான்மை மக்களுக்கு நியாயமானதும் நீதியும் உள்ள ஒரு ஒழுங்கை உருவாக்கவும் அனுமதிக்கும். ஒரு நல்ல வாழ்க்கை வாழ்வதற்கு மக்கள் விரும்புகின்ற பட்சத்தில், அந்த விருப்பத்திற்கு விதி தலைவணங்கியே ஆக வேண்டும்!3

ஜனவரியில் கெய்ரோவில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடந்து கொண்டிருந்த சமயத்தில், எதிர்க்கட்சியின் தலைவரான முஸ்தபா ஒமாரின் நேர்காணல் ஒன்றை ISO வெளியிட்டது. எல்பரடேயின் ஜனநாயகத்திற்கான புதிய இயக்கம்” அமைப்பிற்காகவும் அவரது மாற்றத்திற்கான தேசியக் கூட்டணிக்காகவும் (NAC) எல்பரடேயை ஒமார் புகழ்ந்து தள்ளியிருந்தார்.

பிப்ரவரி 1 அன்று, புரட்சிகர சோசலிஸ்டுகள் இராணுவத்தின் மீதான பிரமைகளை ஊக்குவிக்க முனைந்து அறிவித்தனர்: “மக்களின் இராணுவம் என்பது புரட்சியை பாதுகாக்கின்ற இராணுவமாகும்.” அந்த அறிக்கை தொடர்ந்தது: “இராணுவம் மக்களுடன் இருக்கிறதா அல்லது மக்களுக்கு எதிராக இருக்கிறதா? என்று எல்லோரும் கேட்கின்றனர். இராணுவம் என்பது ஒற்றைத் தொகுதி அல்ல. சிப்பாய்கள் மற்றும் இளநிலை அதிகாரிகளின் நலன்களும் வெகுஜன மக்களின் நலன்களும் ஒன்றேயாகும்.”4

வரலாற்றை அலட்சியமாக மதிப்பிடுவது, குட்டி முதலாளித்துவக் கட்சிகளின் திட்டவட்டமான குணாம்சங்களில் ஒன்று. மகத்தான வரலாற்று அனுபவங்களை திறனாய்வு செய்வது, தங்களது சந்தர்ப்பவாத மற்றும் பிற்போக்குவாத அரசியலை குழப்பும் என்பதை அவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் புரட்சிகரப் போராட்டங்களின் வரலாறு குறித்த ஒரு முழுமையான அறிவு இல்லாமல், நடப்பு உலகின் சூழ்நிலையை புரிந்து கொள்வதும் இருபத்தோராம் நூற்றாண்டில் சோசலிசப் புரட்சிக்கான ஒரு மூலோபாயத்தை உருவாக்குவதும் சாத்தியமில்லாததாகும்.

ட்ரொட்ஸ்கி: ஒரு வரலாற்று மனிதர்

இருபத்தோராம் நூற்றாண்டை நிரந்தரப் புரட்சியின் காலம் என்று நியாயபூர்வமாக விபரிக்க முடியும். சென்ற நூற்றாண்டின் மகத்தான புரட்சிகர எழுச்சிகளின் கீழே அமைந்திருக்கக் கூடிய புறநிலை சமூக தர்க்கத்திற்கான வரையறையாகவும் சரி, சர்வதேச தொழிலாளர்’ இயக்கத்தில் புரட்சிகர மூலோபாயம் குறித்த அத்தனை அரசியல் போராட்டங்களுக்கும் கீழமைந்திருக்கக் கூடிய மையமான தத்துவார்த்த மற்றும் மூலோபாய பிரச்சினையாகவும் சரி இருவகையிலுமே இது பொருத்தமானதாகும். 1937 ஏப்ரலில் மெக்சிகோ நகரத்தின் புறநகர்ப் பகுதியில் டுவி ஆணைக்குழுவின் விசாரணைகளின் போது ட்ரொட்ஸ்கியுடனான தனது சந்திப்புகளை நினைவுகூர்ந்த ஒரு கட்டுரையில் அமெரிக்க நாவலாசிரியரான James T. Farrell இந்த மாபெரும் புரட்சியாளரை, “நாமெல்லாம் அப்படியிருக்கவில்லை, இருக்க முடியாது என்ற அர்த்தத்தில் அவர் ஒரு வரலாற்று மனிதர்” என்று வர்ணித்தார். ட்ரொட்ஸ்கி குறித்த இந்த வருணனையில், அல்லது இன்னும் சரியாகச் சொன்னால் இந்த வரையறையில், ஒரு ஆழமான பார்வை அடங்கியிருக்கிறது.

ட்ரொட்ஸ்கி எந்த அர்த்தத்தில் “வரலாற்று மனிதர்”? ஏனென்றால் இருபதாம் நூற்றாண்டின் பல மகத்தான நிகழ்வுகளில் அவர் முக்கிய பங்கு வகித்திருந்தார். போல்ஷிவிக் கட்சியை அதிகாரத்திற்குக் கொண்டுவந்து வரலாற்றின் முதல் தொழிலாளர்’ அரசான சோவியத் ஒன்றியத்தின் ஸ்தாபகத்திற்கு இட்டுச் சென்ற 1917 அக்டோபர் புரட்சியின் முக்கியமான மூலோபாயவாதியாகவும் ஒருங்கிணைப்பாளராகவும் ட்ரொட்ஸ்கி இருந்தார். 1918 இல் செம்படையின் தளபதியாக ஆன பின்பு மூன்றாண்டு கால உள்நாட்டு யுத்தத்தில் எதிர்ப்புரட்சிப் படைகளை வெற்றிகாண்பதற்கு அதனை அவர் வழிநடத்தினார். 1923 இல், சோவியத் ஒன்றியத்தின் கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளான அரசியல் போராட்டத்திற்கு ட்ரொட்ஸ்கி முன்முயற்சி அளித்தார், அது முதலில் இடது எதிர்ப்பின் உருவாக்கத்திற்கும், பின்னர் நான்காம் அகிலத்தின் உருவாக்கத்திற்கும் இட்டுச் சென்றது. சென்ற நூற்றாண்டின் உச்சத்தில் இருந்த ஆளுமைகளில் ஒருவராக ட்ரொட்ஸ்கி இருந்தார் என்பதில் சந்தேகமேயில்லை. அவர் தான் இருபதாம் நூற்றாண்டின் மகத்தான அரசியல் மனிதர் என்றும், வரலாற்றில் அவரது தாக்கம் தான் மிகவும் நெடிய ஒன்று என்றும் என்னால் வாதிட முடியும். இந்த நூற்றாண்டில் அபிவிருத்தி காணக் கூடிய தொழிலாள வர்க்கத்தின் புதிய வெகுஜன சோசலிச இயக்கம், மிகப்பெரும் மட்டத்திற்கு, லியோன் ட்ரொட்ஸ்கியின் தத்துவார்த்த மற்றும் அரசியல் கருத்தாக்கங்களையே அடிப்படையாகக் கொண்டிருக்கும்.

ஆனால் ட்ரொட்ஸ்கியை ஒரு “வரலாற்று மனிதர்” என்று ஃபாரெல் வரையறை செய்தபோது, ட்ரொட்ஸ்கி வரலாற்றில் ஒரு முக்கியமான மனிதர் என்பதை மட்டும் அர்த்தப்படுத்தி அவர் கூறியிருப்பதாக நான் கருதவில்லை. வரலாற்றுடனான ட்ரொட்ஸ்கியின் உணர்வுபூர்வமான ஈடுபாடானது, ஒரு புறநிலைரீதியானதும் மற்றும் விதியினால் ஆளப்பட்ட ஒரு நிகழ்ச்சிபோக்காகும் என்பதன் மீது அவர் கவனத்தை செலுத்துகின்றார். அவரது சிந்தனையிலும் செயல்களிலும் மற்றும் அவரது ஆளுமையின் உருவடிவத்திலும் கூட அவருக்கு ஒதுக்கப்பட்ட இடம் என்பதைக் குறித்தும் அவர் பேசியிருக்க வேண்டும். ட்ரொட்ஸ்கி வரலாற்றைப் படைத்தது உண்மைதான்; ஆனாலும், அவ்வாறு செய்கையில், சமூக மாற்றத்திற்கான ஒரு பாரிய வரலாற்று நிகழ்ச்சிபோக்கில் அவர் தனது செயற்பாட்டின் இடம் மற்றும் முக்கியத்துவம் குறித்தும் மற்றும் தன்னை முற்றாக அர்ப்பணித்துவிட்டிருந்த அவரது தோழர்கள் மற்றும் புரட்சிகர தொழிலாளர்’ இயக்கத்தை பற்றியும் சுய-உணர்மைமிக்க விழிப்புணர்வுடனும் வாழ்ந்தார். தான் வாழும் பூமியும் கூட, தான் அவதானிக்கின்ற ஒரு செறிந்த பிரபஞ்ச வெளிக்குள்ளான ஒரு இடமே என்பதை அறிந்த ஒரு வானியல் அறிஞர், மாலை வானத்தை நோக்குவதை போலத்தான், ட்ரொட்ஸ்கியும், எதற்குள்ளாக புரட்சிகர சோசலிச இயக்கத்தின் வேலையானது கட்டவிழ்ந்திருந்ததோ அந்த பல தசாப்த கால நீள, இன்னும் சொன்னால் பல நூற்றாண்டுகள் நீள பரந்த வரலாற்றுத் தொடர்ச்சி குறித்து நன்கு அறிந்து வைத்திருந்தார்.

வரலாறு ட்ரொட்ஸ்கியினுள் வாழ்ந்தது. அவரது எழுத்துகளைப் பார்த்தால், அவர் ஏறக்குறைய 1793 இல், 1848 இல் மற்றும் 1871 இல் பாரிசில் வாழ்ந்தது போன்று உணர்ந்து எழுதியிருக்கிறார் என்று எனக்கு நம்பத் தோன்றும். வரலாறு குறித்த அவரது வாசிப்பு செயலூக்கமற்றதல்ல. டன்ரோனையும் ரோபெஸ்பியரையும் சமகாலத்தவர்கள் போல எண்ணி அவர்களுடன் இவர் தனது சிந்தனையில் விவாதித்தார். ட்ரொட்ஸ்கி தனது சொந்த நடவடிக்கைகளை வரலாற்றின் கண்ணாடி வழி அவதானித்தார் என்று லுனாசார்ஸ்கி கூறியது உண்மை. ஆனால் வரலாற்று நோக்குநிலை கொண்ட அவரது சுய-நனவில் அகநிலைவாதத்தின் அல்லது சுய-டாம்பீகத்தின் ஒரு சுவடைக் கூட காண முடியாது. தனது காலத்தின் போராட்டங்களில் முழுமனதுடன் ஈடுபட்டிருந்த அவர், சமகால நிகழ்வுகளை வரலாற்று அனுபவங்களுடன் தொடர்புபடுத்திக் கண்டார். மேலும், புரட்சிகரப் போராட்டத்தின் வருங்கால பரிணாமத்தில் எந்த வேலைத்திட்டம் மற்றும் கொள்கைகளுக்காக அவர் போராடினாரோ அவற்றின் தாக்கம் மற்றும் தொடர்புபட்ட பிற விடயங்களை புரிந்துகொள்வதற்கு ட்ரொட்ஸ்கி முனைந்தார். நான்காம் அகிலத்தின் ஸ்தாபிதத்தின் போது அவர் கூறியதைப் போல, ஒரு புரட்சியாளர் “மனித குலத்தின் விதியின் ஒரு துகளை தனது தோள்களில் சுமக்கிறார்.” நிகழ்காலம், கடந்தகாலம், மற்றும் எதிர்காலம் குறித்து தனது சிந்தனையில் ஓயாமல் அவர் நடத்திய இந்த கருத்துப் பரிவர்த்தனைதான் ட்ரொட்ஸ்கியை ஒரு “வரலாற்று மனிதர்” ஆக ஆக்கியது.

வரலாற்று அனுபவத்தின் மீது சளைக்காமல் மீண்டும் உழைப்பது என்பதை தமது தத்துவார்த்த மற்றும் அரசியல் வேலைக்கான அத்தியாவசியமான மூலபாகமாக கொண்டிருந்த புரட்சியாளர்களின் தலைமுறை ஒன்றின் பாகமாக ட்ரொட்ஸ்கி இருந்தார் என்பதையும் கூறியாக வேண்டும். ரிச்சார்ட் டே மற்றும் டானியல் கைடோ ஆகிய வரலாற்றாசிரியர்களால் ஒருங்கிணைக்கப்பட்டு மொழிபெயர்க்கப்பட்ட மதிப்புமிகுந்த ஆவணச் சேகரமான நிரந்தரப்புரட்சிக்கானசாட்சியங்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டிருப்பதன் மூலமாக, ட்ரொட்ஸ்கி ரஷ்ய புரட்சியின் உந்து சக்திகள் குறித்து பகுப்பாய்வு செய்வதற்கும், போல்ஷிவிக்குகளின் வெற்றிக்கு ஒரு தசாப்தத்திற்கும் அதிகமான காலத்திற்கு முன்பே ரஷ்ய எதேச்சாதிகாரத்தை தூக்கியெறிவது கிட்டத்தட்ட நேரடியாக தொழிலாள வர்க்கம் ஒரு சோசலிசப் புரட்சியில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு இட்டுச் செல்லும் என்ற ஒரு முடிவுக்கு அவர் வருவதற்கும் இட்டுச் சென்ற புரட்சிகர மார்க்சிச சிந்தனையின் பரிணாம வளர்ச்சியை மிக முழுமையாக நம்மால் புரிந்து கொள்ள முடிந்திருக்கிறது. இந்தத் தொகுதியில் ட்ரொட்ஸ்கி எழுதியது மட்டுமல்ல, பிளெக்ஹானோவ், ரியாசனோவ், மேஹ்ரிங், லுக்சம்பேர்க், பர்வஸ் மற்றும் காவுட்ஸ்கி எழுதிய முக்கியமான கட்டுரைகளும் கூட இடம்பெற்றுள்ளன. 1905 புரட்சிக்குப் பிந்தைய காலத்தில் ட்ரொட்ஸ்கியால் அபிவிருத்தி செய்யப்பட்ட மிகவும் முன்னேறியதும் திறம்பட்டதுமான நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் சூத்திரமாக்கலின் அபிவிருத்தி குறித்த ஒரு ஆழமான புரிதலுக்கு இந்த ஆவணங்கள் பங்களிப்பு செய்கின்றன.5

இருபதாம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்தின் ஆரம்ப வருடங்களில், இக்கட்டுரைகள், கட்டவிழ்ந்து கொண்டிருந்த ரஷ்ய புரட்சி குறித்த தமது பகுப்பாய்வை, அதற்கு முன்னோட்டமாக நிகழ்ந்த புரட்சிகர நிகழ்வுகளான 1789-94 வரையான மகத்தான பிரெஞ்சுப் புரட்சி, 1848 புரட்சிகள், மற்றும் 1871 இன் பாரிஸ் கம்யூன் ஆகியவற்றுடன் தொடர்புபடுத்திக் காண விழைந்த விதம்தான் இக்கட்டுரைகளின் மிகவும் போற்றத்தக்க அம்சங்களாகும். 1905 ஆம் ஆண்டின் அனுபவத்தின் வழி கடக்க நேர்ந்த தலைமுறையை பொறுத்தவரை, பாரிஸ் கம்யூனோ 1848 புரட்சிகளோ அத்தனை ரொம்பவும் கடந்து விட்ட காலத்தின் நிகழ்வுகளாக இருக்கவில்லை. கால இடைவெளியை பொறுத்தவரை, ரொம் ஹெனஹன்6 படுகொலை செய்யப்பட்ட 1977 ஆம் ஆண்டிற்கும் இன்றைக்கும் இடையிலிருக்கும் இடைவெளியைக் காட்டிலும் பாரிஸ் கம்யூனுக்கும் 1905க்கும் இடையில் தூரம் குறைவு தான். இன்னும் 1848 ஆம் ஆண்டும் கூட அத்தனை தொலைவானதாய் கூறிவிட முடியாது. அதிசயங்களின் ஆண்டின் (annus mirabilis) புரட்சிகர எழுச்சிகளுக்கும் 1905 ஆம் ஆண்டிற்கும் இடையில் வெறும் 57 வருடங்கள் தான் இருந்தன. இன்னும் கொஞ்சம் காலத்தை நீட்டித்துப் போனால் ஐசனோவர் நிர்வாகத்தின் ஆரம்ப வருடங்களுக்குச் சென்று விடலாம். இருபதாம் நூற்றாண்டின் திருப்பத்திலான ஐரோப்பிய சோசலிச இயக்கத்தில், பாரிஸ் கம்யூனின் மூத்தசெயல்வீரர்கள் மட்டுமல்லாமல் 1848 புரட்சியில் பங்குபற்றியவர்களும் கூட இருந்தனர். ஜேர்மனியில் சமூக ஜனநாயகக் கட்சியை ஸ்தாபிப்பதில் பேபெலின் முன்னாள் சக-ஸ்தாபகராக இருந்தவரும் 1848 போராட்டங்களில் பங்கேற்றவருமான வில்ஹெல்ம் லிப்னெக்ட் 1900 ஆம் ஆண்டுவரை வாழ்ந்தார். மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸின் நெருங்கிய நண்பரும் ஜேர்மனியில் பாடென் எழுச்சியில் பங்குபெற்றவருமான அடோல்ப் சோர்ஜ் 1906 ஆம் ஆண்டுவரை வாழ்ந்தார்.

பிரெஞ்சுப் புரட்சி

1789-94 பிரெஞ்சுப் புரட்சியின் மூத்தசெயல்வீரர்கள் எல்லாம் வெகு காலத்துக்கு முன்னரே காட்சியில் இருந்து மறைந்து விட்டிருந்தனர் என்பது உண்மை தான். ஆனால் அந்த நிகழ்வின் தாக்கம் —பொருளாதார ரீதியாக, சமூக ரீதியாக, அரசியல் ரீதியாக மற்றும் சித்தாந்தரீதியாக— அதன் நிழல் இன்னமும் ஐரோப்பாவை வியாபித்து நிற்குமளவுக்கு (இன்று வரை வியாபித்துள்ளது!) மிகத் தீவிரமானதாய் இருந்தது. ஒரு அரசியல் அர்த்தத்தில் பார்த்தால், நவீன உலகம் என்பதே மகத்தான பிரெஞ்சுப் புரட்சியில் செதுக்கப்பட்டது தான் என்று நிச்சயமாகக் கூற முடியும். பங்கு பற்றியவர்கள் மகா தீரத்துடன் போராடிய அந்த மாபெரும் நிகழ்வின் மிகப்பெரும் போராட்டங்கள் தான் வருங்கால புரட்சிகரப் போராட்டங்களை முன்கணித்தன, அவற்றுக்குக் களம் தயாரித்தன. அந்தப் புரட்சியின் கொதிகலத்தில் இருந்துதான் நவீன சமூகப் போராட்டங்களின் அடிப்படையான வார்த்தைகளும் கூடப் பிறந்தன. “Mountain” என்று அழைக்கப்பட்ட தீவிர சமூக மாற்றத்திற்கான ஆதரவாளர்கள், பிரதிநிதிகள் மன்றத்தின் தலைமை அதிகாரிக்கு இடப்பக்கமாக அமர்ந்தனர்; பழமைவாதிகளும் பிற்போக்குவாதிகளும் வலப்பக்கமாக அமர்ந்தனர். “இடது” “வலது” ஆகிய வார்த்தைகள் மட்டுமின்றி “நிரந்தரப் புரட்சி” என்ற பிரயோகமும் கூட பிரெஞ்சுப் புரட்சியில் தான் மூலம் கொண்டிருக்கிறது. ரிச்சார்ட் டே மற்றும் டானியல் கேய்டோ நிரந்தரப் புரட்சிக்கான சாட்சியங்கள் என்ற புத்தகத்திற்கு அளித்த அறிமுகத்தில் சுட்டிக் காட்டியவாறு, நிரந்தரப் புரட்சி (“revolution en permanence”) என்ற கருத்தாக்கம், 1789 ஜூன் மாதத்தில் Third Estate இன் பிரதிநிதிகள் வெர்சாய் டென்னிஸ் மைதானத்தில் எடுத்துக் கொண்ட புகழ்பெற்ற சத்தியப் பிரமாணத்தில் இருந்து தோற்றம் பெற்றதாகும். ‘தேசிய அவையைக் கலைக்க முடியாட்சியாளர் எத்தனை முயற்சிகள் எடுத்தாலும் சரி அதன் அங்கத்தவர்கள் கூடும் இடங்களில் எல்லாம் தேசிய அவை உயிர் பெற்றிருக்கும்’ என்று அவர்கள் பிரமாணம் எடுத்துக் கொண்டிருந்தனர். வேறு வார்த்தைகளில் சொல்வதானால் Third Estate இன் தேசிய அவை அதன் நிரந்தரத்தை அறிவித்தது!

பிரெஞ்சுப் புரட்சி, நவீன அரசியலின் வார்த்தை உருவாக்கங்களுக்கு பங்களிப்பு செய்ததை விட முக்கியமானது, அது நிலப் பிரபுத்துவத்தின் சமூக மற்றும் பொருளாதார அடித்தளத்தை அழித்ததும், ஒரு முதலாளித்துவ அரசை ஸ்தாபிக்கவும் முதலாளித்துவத்தின் அபிவிருத்திக்குமான ஒரு பாதையைத் திறந்து விட்டதுமாகும். அதுவே தவிர்க்கவியலாமல் தொழிலாள வர்க்கத்தின் எழுச்சிக்கும் நவீன வடிவத்தில் அமைந்த வர்க்கப் போராட்டத்தின் எழுச்சிக்கும் இட்டுச் சென்றது. இன்னும் சொன்னால், 1794 ஜூலையில் ஜாக்கோபின் சர்வாதிகாரம் அகற்றப்பட்டதற்கு பின்னர்தான் வருங்கால புரட்சிகளுக்கான முதல் உள்ளுணர்வு, கிராக்கூஸ் பாபேஃப் (Gracchus Babeuf) தலைமையிலான “சம உரிமை படைத்தவர்களின் சதி” யில் (Conspiracy of Equals) வெளிப்பாட்டை கண்டது. நனவான புரட்சிகர நடவடிக்கையின் மூலமாக சமூக சமத்துவத்தை அடைவதற்கான முதல் முயற்சியாக அது இருந்தது.

இந்த உரையிலேயே போதுமான அளவுக்கு பேசி விடக் கூடிய விடயமல்ல இது, ஆனால் புரட்சி, பிரான்சின் சமூகப் பொருளாதார உருமாற்றத்திற்கு மட்டும் இட்டுச் செல்லவில்லை என்பதை ஒருவர் குறித்துக் கொள்ள வேண்டும்; வரலாற்று அபிவிருத்தியின் புறநிலையான உந்து சக்திகளை விஞ்ஞானபூர்வமாக புரிந்து கொள்வதில் ஒரு மிகப்பெரும் முன்னேற்றத்திற்கான உத்வேகத்தை அது வழங்கியது. அந்த முன்னேற்றத்தில் இருந்து தான் மார்க்சிசம் எழுந்து வந்தது. பிரெஞ்சுப் புரட்சிக்கு பின்னர், அரசியல் வாழ்வின் பின்புலத்தில் சட நலன்கள், சொத்து மற்றும் வர்க்க மோதல் ஆகியவற்றின் தீவிர முக்கியத்துவம், மிக முன்னேறிய சிந்தனையாளர்களுக்கு அதிகரித்த அளவில் தெளிவாகியது.

எப்படியாயினும், தொழிற்துறைமயமாக்கம் உள்ளிட்ட பொருளாதார மாற்றங்களின் தாக்கம், புரட்சிக்கான முன்னுணர்வுகளை இன்னும் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாற்றிய சமூக மோதலின் புதிய வடிவங்களுக்கு இட்டுச் சென்றது. 1806 லேயே, கட்டிடத் தொழிலாளர்களின் ஒரு வேலைநிறுத்தம் பாரிஸில் நடந்தது. 1817 ஆம் ஆண்டில் லியோனில் தொப்பி செய்யும் தொழிலாளர்கள் சம்பளக் குறைப்பை எதிர்த்து போராட்டத்தில் இறங்கினர். 1825க்கும் 1827க்கும் இடையில் பாரிஸின் கைவினைஞர்கள் மற்றும் உற்பத்தித்துறை தொழிலாளர்கள் நடத்திய முக்கியமான வேலைநிறுத்தங்கள் நடந்தன. 1830 ஆம் ஆண்டில் பாரிசில் நடந்த வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் பத்தாம் சார்ல்ஸ் மன்னரது வீழ்ச்சிக்கு இட்டுச் சென்றது. ஆனாலும் இந்தப் “புரட்சி”யில் நிதியாதாரம் அளித்தவர்கள்தான் ஆதாயம் பெற்றவர்களாக இருந்தனர். அபிவிருத்தியடைந்து கொண்டிருந்த தொழிலாள வர்க்கத்தின் நிலைமைகள், குறிப்பாக நெசவாளர்களின் நிலைமைகள், மோசமடைந்தது. சாமானிய மக்கள் மீதான வரிகள் உயர்த்தப்பட்டன, அவர்களின் சம்பளங்கள் குறைக்கப்பட்டன. பெருகிய கோபம், இறுதியில் 1831 நவம்பரில் லியோன் நகரத் தொழிலாளர்களின் ஆயுதமேந்திய எழுச்சியின் வடிவத்தில் வெடித்தது. பல நாட்களுக்கு அரசாங்க சிப்பாய்கள் நகரை விட்டுத் துரத்தப்பட்டனர். பல நாட்களுக்கு பின்னர் அரசாங்கம் கட்டுப்பாட்டை மறுஸ்தாபகம் செய்ய முடிந்தது என்றபோதும் கூட, புதிதாக உருவாகிய பாட்டாளி வர்க்கத்தின் எதிர்ப்பில் இருந்து எழுந்த வர்க்கப் போராட்டத்தின் எழுச்சியால் முதலாளித்துவ சொத்துடைமை நலன்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளானதைக் கண்டு முதலாளித்துவ வர்க்கம் அதிர்ச்சியில் உறைந்தது.

லூயி பிலிப்பின் ஆட்சி

பிரான்சில் லூயி பிலிப் தலைமையிலான ஒரு முதலாளித்துவ முடியாட்சிதான் ஆட்சி செய்து கொண்டிருந்தது. முன்னதாக அவரது உத்தியோகபூர்வ பதவியின் பெயர் பிரெஞ்சு மன்னர் என்று இருந்தது. பிரெஞ்சுப் புரட்சியும் பதினாறாம் லூயி இன் தலைசீவப்பட்டதும், பின்னர் அவரது இளைய தம்பியான பத்தாம் சார்ல்ஸ் அகற்றப்பட்டதும் முற்றிலும் வீணாகி விடவில்லை என்பதன் மறைமுகமான ஒப்புதலே இது. லூயி பிலிப்பின் தந்தையான, துயரமான தலைவிதி கொண்ட பிலிப் எகாலிட்டே, பதினாறாம் லூயியின் உறவினராவார். இவர் புரட்சியின் போது அரச குடும்பத்தில் இருந்து முறித்துக் கொண்டு வந்ததோடு அரசர் கொல்லப்படுவதற்கும் ஆதரவாக வாக்களித்திருந்தார். ஆனாலும் அரசகுடும்ப வழி எதிர்ப்புரட்சியின் கருவியாக அவர் ஆகியிருக்கிறாரோ அல்லது ஆகக் கூடுமோ என்ற சந்தேகத்தில் இருந்து அவர் தப்ப முடியவில்லை. 1793 நவம்பரில் அவர் கில்லட்டின் மூலம் கொல்லப்பட்டார். எப்படியிருப்பினும் அவரது மகன் தான் இறுதியில் முடியாட்சிக்கு உயரப் பெற்றார், என்றபோதிலும் அது 1793க்கு முன்னர் நிலவியதற்கு முற்றிலும் மாறுபட்ட அரசியல் மற்றும் சமூக நிலைமைகளின் கீழ் நடந்ததாகும்.

லூயி பிலிப் ஒரு மேலங்கி அணிந்துகொண்டு குடையுடன் காட்சியளித்து தனது ஆட்சியின் முதலாளித்துவ தன்மையை வலியுறுத்துவதற்கு முனைந்தார். ஆனால் அவரது “முதலாளித்துவ ஆட்சி” ‘சக்திவாய்ந்த நிதிய உயரடுக்கினர்’ என்ற முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரேயொரு பிரிவின் நலன்களுக்கு மட்டுமே விசுவாசத்துடன் சேவை செய்தது. இதனால் முதலாளித்துவ வர்க்கத்தின் மற்ற பிரிவுகள், குறிப்பாக தொழிற்துறை மற்றும் உற்பத்தித் துறையுடன் தொடர்புடைய பிரிவுகள் அதிருப்தியடைந்தன. நிதிய உயரடுக்கினரின் ஊழல் பிரான்சின் தொழிற்துறை அபிவிருத்தியை கீழறுக்கும் மட்டத்திற்கு எல்லையற்று விரிந்திருந்தது. லூயி பிலிப்பின் கீழ் பிரெஞ்சு சமூகம் எப்படி இருந்தது என்பதை பிரான்சில் வர்க்கப் போராட்டங்கள் என்ற படைப்பில் காரல் மார்க்ஸ் விவரிப்பதைக் காட்டிலும் சிறப்பாக வேறெவராலும் விவரிக்க முடியாது:

நிதிப் பிரபுத்துவம் தான் சட்டங்களை இயற்றியது என்பதால், அதுதான் அரசு நிர்வாகத்தின் தலைமையில் இருந்தது என்பதால், அதுதான் ஒழுங்கமைந்த பொது அதிகாரங்கள் அத்தனையையும் கையில் கொண்டிருந்தது என்பதால், அதுதான் நடைமுறை விவகாரங்கள் மூலமாகவும் ஊடகங்கள் மூலமாகவும் பொதுக் கருத்தில் மேலாதிக்கம் செலுத்தியது என்பதால் அதே விபச்சாரம், அதே வெட்கமற்ற ஏமாற்று, பணக்காரராவதற்கான அதே வெறிதான் நீதிமன்றத்தில் இருந்து பார்வையற்றோர் உணவகம் வரைக்கும் எல்லா இடங்களிலும் நடந்தது. பணக்காரராவது என்றால் உற்பத்தி செய்து அல்ல, மாறாக ஏற்கனவே அடுத்தவர் சேர்த்து வைத்திருக்கும் பணத்தைக் கொள்ளையடிப்பதன் மூலமாக. ஆரோக்கியமற்ற மற்றும் அறஒழுக்கமற்ற வேட்கைகளின் கடிவாளமற்ற ஒரு உந்துதல், குறிப்பாக முதலாளித்துவ சமுதாயத்தின் உயர்பரப்பில், ஒவ்வொரு தருணமும் முதலாளித்துவ சட்டங்களுடனேயே மோதலுக்கு வந்தது. இந்த மோகங்களுக்குள்ளாக சூதாட்டத்தில் இருந்து சேர்த்த செல்வம் இயல்பாக தனது திருப்தியைத் தேடியது. இங்கு பணமும், அசிங்கமும், இரத்தமும் ஒன்றுகலந்தன. நிதிப் பிரபுத்துவம் என்பது அதன் சேர்க்கை வழிமுறையிலும் சரி அதன் இன்பங்களிலும் சரி, முதலாளித்துவ சமூகத்தின் உச்சப் பரப்பில் உதிரிப் பாட்டாளி வர்க்கம் மறுபிறப்பெடுத்ததாக இருந்தது தவிர வேறொன்றும் இல்லை எனலாம்.”7

ஆனால் நீதிமன்றத்திற்கும் பங்குச் சந்தைக்கும் அப்பால், ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பு பிரான்சில் மட்டுமல்லாது ஐரோப்பா முழுவதிலும் தொடர்ந்து பெருகிக் கொண்டிருந்தது. 1815 இல் நெப்போலியன் இறுதியாக தோற்கடிக்கப்பட்டதற்குப் பின்னர், அரசியல் பிற்போக்குத்தனம் கண்டம் முழுவதிலும் நிலவியது. ஆஸ்திரிய பிரபுவான இளவரசர் மெட்டர்னிச்தான் பிற்போக்குத்தன அமைப்புமுறையை கட்டியமைத்தவராக இருந்தார். உள்ளபடியான நிலையை பாதுகாப்பதற்கான மெட்டர்னிச்சின் வழிமுறை “துப்பாக்கி முனைக் கத்திகளின் ஒரு குவியலைக் கொண்டதாக, விடயங்களுக்கு உள்ளபடி உடன்படுவதை கொண்டதாக இருந்தது. என்னைப் பொறுத்தவரை, இந்த வழியில் செல்வது என்பது நாம் புரட்சியாளர்களின் கரங்களில் சிக்கி விட்டிருக்கிறோம் என்பதைக் குறிப்பதாகும்” என்று ஒரு விமர்சகர் மெட்டர்னிச்சிடம் தெரிவித்தார்.8 ஆனால் சிதைந்து போன நிலையில் மரணித்துக் கொண்டிருக்கும் ஒரு சமூக ஒழுங்கைப் பாதுகாப்பதற்கு மெட்டர்னிச்சிற்கு வேறு எந்த வழியும் புலப்படவில்லை.

வரலாற்றை திரும்பிப் பார்த்தால், புரட்சி நெருங்கிக் கொண்டிருந்ததன் அறிகுறிகள் எங்கெங்கும் தென்பட்டன. 1839 மே மாதத்தில், “Société des saisons” (SDS) 900 அங்கத்தவர்களுடன் ஒகுஸ்ட் பிளோன்ங்கி மற்றும் ஆர்மோன்ட் பார்பெஸ் தலைமையில் பாரிஸில் ஒரு கிளர்ச்சியை ஒழுங்கமைக்க முனைந்தது. நகர சபையை கைப்பற்றி ஒரு இடைக்கால அரசாங்கத்தை அறிவித்தனர். ஆனாலும் அவர்கள் எண்ணிப் பார்த்திருந்த உத்வேகத்துடன் ஒரு கிளர்ச்சி அங்கு நிகழாமல் போனது. அதன் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டனர். உறுதிபூண்ட போராளிகளின் சிறு சிறு எண்ணிக்கையிலானோரின் இந்த ஆரம்ப பரிசோதனைகளின் நேரடி விளைவைக் காட்டிலும் அவற்றின் தாக்கம் பொருளாதாரத் தத்துவம் மற்றும் மெய்யியல் துறையிலான புத்திஜீவித புரட்சிக்கு காரணமாய் இருந்தது. குறிப்பாக பியர்-ஜோசப் புருடோன் 1840 இல் வெளியிட்ட புத்தகத்தை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். இப்புத்தகத்தின் தலைப்பு சொத்து என்பது என்ன? என்ற கேள்வியை முன்வைத்தது. அதற்கு “சொத்து என்பது திருட்டு” என்று இரத்தினச் சுருக்கமான மற்றும் சீண்டக் கூடிய ஒரு பதிலை அவர் அளித்தார்.

மார்க்சிசத்தின் தோற்றுவாய்

அரசியல் பொருளாதாரத்தின் மீதான விமர்சனத்தின் பொருட் சுருக்கம் என்ற தலைப்பிலான இன்னொரு திருப்புமுனையான கட்டுரை 1843 இல் எழுதப்பட்டது.”வர்த்தக விரிவாக்கத்தின் ஒரு இயல்பான விளைபொருளாக அரசியல் பொருளாதாரம் தோன்றியது, அது தோன்றியதை அடுத்து ஆரம்பநிலையான மற்றும் விஞ்ஞானபூர்வமற்ற விற்பனை முறையானது உரிமம் பெற்ற மோசடியின் ஒரு அபிவிருத்தியடைந்த அமைப்புமுறையை கொண்டு, செழுமைப்படுத்திக் கொள்வதின் ஒரு ஒட்டுமொத்த விஞ்ஞானத்தை கொண்டு இடம்பெயர்க்கப்பட்டது”9 என்ற குறிப்புடன் இக்கட்டுரை ஆரம்பித்தது. 23 வயதான பிரெடரிக் ஏங்கெல்ஸ் தான் இதன் ஆசிரியர். விரைவிலேயே இங்கிலாந்தில் தொழிலாள வர்க்கத்தின் நிலை என்ற இன்னுமோர் மகத்தான படைப்பை அவர் எழுதவிருந்தார்.

இருப்பினும் 1840களின் புத்திஜீவித அபிவிருத்திகளில் மிக முக்கியமானது மெய்யியல் துறையில் நிகழ்ந்தது. இத்துறையில் ஹேகலின் கருத்துவாத மெய்யியலின் மீது இளம் காரல் மார்க்ஸ் அளித்த விமர்சனம் சிந்தனையில் ஒரு புரட்சியை உண்டுபண்ணியது. அதுவே பிற்பாடு சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன புரட்சிகர இயக்கத்திற்கான புத்திஜீவித்தன சாரத்தை வழங்கியது. மார்க்சின் சொந்த எழுத்துகளே காட்டுவது போல், அவரது அரூபமான தத்துவார்த்த உழைப்புகளின் வெடிப்புமிகுந்த தாக்கங்கள் குறித்து, அவரது படைப்புகளின் மிக ஆரம்ப கட்டத்திலேயே அவர் அறிந்து வைத்திருந்தார். “விமர்சனம் என்ற ஆயுதம், ஆயுதங்களாலான விமர்சனத்தை இடம்பெயர்க்க முடியாது, சடரீதியான சக்தி சடரீதியான சக்தியைக் கொண்டே தூக்கியெறியப்பட்டாக வேண்டும் என்பது உண்மையே, ஆனால் தத்துவமும் கூட அது வெகுஜனங்களைப் பற்றிக் கொண்டவுடன் ஒரு சடரீதியான சக்தியாக மாறி விடுகிறது”10 என்று 1844 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே அவர் எழுதினார். அடுத்த சில பக்கங்கள் தள்ளி மார்க்ஸ் மேலும் அறிவித்தார், “ஜேர்மன் விடுதலை என்பது மனித குல விடுதலை. இந்த   விடுதலையின்   தலையாக   இருப்பது   மெய்யியல்,   அதன்   இருதயமாக   இருப்பது   பாட்டாளி   வர்க்கம்.”11

1845 ஆம் ஆண்டுக்குள்ளாக மார்க்சும் ஏங்கெல்சும் வரலாற்றின் சடவாதக் கருத்தாக்கத்தை அபிவிருத்தி செய்து விட்டிருந்தனர். புரட்சிகள் எல்லாம் தீர்மானமிக்க தலைவர்கள் மற்றும் அவர்களது சீடர்களால் நடத்தப்பட்ட நன்கு ஒழுங்கமைந்த சதித் திட்டங்களின் விளைபொருட்கள் அல்ல என்பதை அக்கருத்தாக்கம் நிறுவியது. உற்பத்தி சக்திகளின் அபிவிருத்தியானது இதுவரை அவை எதற்குள்ளாக அபிவிருத்தியுற்று வந்திருந்தனவோ நிலவுகின்ற அந்த சமூக உறவுகளுடன் அடக்கமுடியாத மோதலுக்கு வருகின்ற ஒரு சிக்கலான சமூகப்பொருளாதார நிகழ்ச்சிப்போக்கின் அவசியமான விளைவுகளே புரட்சிகள். ஆக, புரட்சியின் மூலத்தை சிந்தனைகளின் நகர்வில் காண முடியாது, மாறாக உற்பத்தி சக்திகளின் ஒரு குறிப்பிட்ட மட்டத்து அபிவிருத்தியால் பக்குவப்படுத்தப்பட்டிருக்கும் சமூகத்தின் சமூகப் பொருளாதார ஒழுங்கமைப்பில் தான் காணக் கூடியதாக இருக்கும். உற்பத்தி சக்திகளின் அபிவிருத்திக்கும் நிலவும் சமூக உறவுகளுக்கும் இடையிலான முரண்பாடு வர்க்கப் போராட்டத்தில் தனது அரசியல் வெளிப்பாட்டைக் காண்கிறது. இதுதான் நவீன சமூகத்தில், உற்பத்தி சாதனங்களை உடைமையாகக் கொண்டிருக்கும் முதலாளித்துவ வர்க்கத்திற்கும் உழைப்பு சக்தியை மட்டுமே உடைமையாகக் கொண்டிருக்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையிலான மோதலின் பிரதான வடிவமாக உருவெடுக்கிறது.

1847 ஆம் ஆண்டில் மார்க்சும் ஏங்கெல்சும் நீதிக் கழகத்தில் (League for the Just) இணைந்தனர், அது விரைவில் கம்யூனிஸ்ட் கழகம் என ஆனது. 1847 இன் பிற்பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை என்ற வடிவத்தில் ஒரு வேலைத்திட்டத்தை எழுதுவதற்கு அவர்கள் கழகத்தால் பணிக்கப்பட்டனர். அது உலக வரலாற்றின் பாதையில் ஏற்படுத்திய மாற்றம் எத்தகைய முக்கியமானது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

கம்யூனிஸ்ட்  கட்சி  அறிக்கை வெளியான சமயத்திற்கெல்லாம், ஐரோப்பா அரசியல் வெடிப்பின் விளிம்பில் நின்று கொண்டிருந்தது. சோசலிச தத்துவாசிரியர்களின் உழைப்புக்கு சுயாதீனமான வகையில், முதலாளித்துவமானது, உழைக்கும் மக்களின் பரந்த பிரிவுகளின் மீது ஒரு நாசகரமான தாக்கத்தைக் கொண்டிருந்த ஒரு பெரும் பொருளாதார நெருக்கடியின் வலியில் முனகிக் கொண்டிருந்தது. 1846-47 ஆம் ஆண்டுகள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முந்தைய வேறெந்த காலத்தின் சமயத்தை விடவும் பெரியதொரு அளவில் மனிதத் துயரத்தை கண்ணுற்றன. விளைச்சலில்லாமல் போய் பரவலான பஞ்சம் தோன்றியதும் பொருளாதார நெருக்கடியை இன்னும் சிக்கலாக்கியது. அயர்லாந்தில் 21,000க்கும் அதிகமான மக்கள் பட்டினியால் உயிர்விட்டனர். நூறாயிரக்கணக்கிலான மக்கள் டைபஸ் மற்றும் காலரா போன்ற நோய்களுக்குப் பலியாயினர். இறந்து போன விலங்குகளின் மாமிசத்தை உண்டு உயிர்பிழைக்க மக்கள் தள்ளப்பட்டனர். பெல்ஜியத்தில், 700,000 மக்கள் பொது நிவாரண ஏற்பாட்டில் உயிர்வாழ்ந்து கொண்டிருந்தனர். இன்னும் ஆயிரக்கணக்கானோர் தானதருமத்தை நம்பி வாழ்ந்தனர். பேர்லினிலும் வியன்னாவிலும் கதியற்ற நிலைமைகளால் மக்களுக்கும் ஆயுதமேந்திய அதிகாரிகளுக்கும் இடையில் மோதல்கள் நிகழ்ந்தன. பிரான்சில் ரொட்டியின் விலைகள் கடுமையாக உயர்ந்தன, உருளைக்கிழங்கின் விலைகள் இரட்டிப்பாயின. வேலைவாய்ப்பின்மை விகிதம் விண்ணைத் தொட்டது.

புரட்சியின் அணுகுமுறை

பிரான்சின் மக்கள் கிளர்ச்சி, லூயி பிலிப்பின் ஆட்சிக்கும் பல்வேறு முதலாளித்துவ அரசியல் போக்குகளைக் கொண்ட (நிதி நலன்களின் சர்வாதிகாரத்திலும் அதிகார நிலைகளில் இருந்து தொழிற்துறை நலன்கள் விலக்கப்பட்டதிலும் அதிருப்தியடைந்த தாராளவாதிகள், மற்றும் சற்றேறக் குறைந்த மட்டத்தில் ஒரு குடியரசை உருவாக்க ஆதரித்த கூடுதல் ஜனநாயகத்தன்மை படைத்த போக்குகள் ஆகியவை இதில் இருந்தன) பெருகி வளர்ந்த எதிர்ப்பு இயக்கத்திற்கும் இடையிலான அரசியல் பதட்டங்களைத் தீவிரமாக்கியது. இந்தப் போக்குகளின் நன்கறிந்த, கூடுதல் தீவிரமான பிரதிநிதிகளில் ஒருவர் தான் அலெக்சாண்டர்-ஒகுஸ்ட் லுதுரு-ரோலன் (1807-1874). இவர் 1848க்கு முன்னதாக ஆட்சியை தனது பேச்சில் மிக ஆவேசமாகத் தாக்குவார் என்பதால், பிரெஞ்சுத் தொழிலாளர்களின் ஆதரவு இவருக்குக் கிட்டியது. இவர் நிறுவிய La Réforme என்ற ஒரு செய்தித்தாள் கணிசமான வாசகர்களைப் பெற்றது. மக்கள் ஆதரவைப் பெற்ற இன்னொரு மனிதர் லூயி பிளோன்ங் (1811-1882). இவர் ஒரு சோசலிஸ்ட் என்றே அறியப்பட்டார் என்றாலும் சோசலிசம் குறித்த இவரது கருத்து ராபர்ட் ஓவன், செயிண்ட் சீமோன் மற்றும் எத்தியான் கபே போன்ற கற்பனாவாத சிந்தனையாளர்களின் செல்வாக்கையே பிரதிபலித்தது. முன்னேற்றம் என்பது மனிதனின் தூய்மை நோக்கும் தன்மையில் இருந்து இயல்பாகப் பாய்வதாக அவர் கருதினார். சோசலிசம் என்பது வன்முறை மிகுந்த புரட்சியால் தோன்றும் என்பதை அவர் எதிர்த்தார். மாறாக அவரது பேச்சில் இருக்கும் அசைக்க முடியாத காரண நியாயத்தில் இருந்தும் தூண்டும் சக்தியில் இருந்தும் தான் தோன்றும் என்று கருதினார். புரட்சி வெடிப்பதற்கு முன்னதாக, பிளோன்ங்க் அவ்வப்போது ஏங்கெல்ஸையும் சந்தித்து வந்தார். ஏங்கெல்சுக்கு இவருக்கும் இவரது கூட்டுக்கலவை யோசனைகளுக்கும் முழுக் கவனம் அளிப்பது என்பது கடினமான வேலையாக இருந்தது. 1847 மார்ச்சில் மார்க்சுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் ஏங்கெல்ஸ், பிளோன்ங் எழுதிய பிரெஞ்சுப் புரட்சியின் வரலாறு குறித்து பின்வரும் கருத்தைக் கூறுகிறார்:

“சரியான ஊகங்களும் எல்லையற்ற பேரார்வமும் விகிதமற்றுக் கலந்த கலவை இது. சார்சலில் இருக்கும்போது முதல் தொகுதியில் பாதி மட்டுமே படித்தேன்... ஆர்வக்கோளாறின் சித்திரத்தையே அதுகொடுக்கிறது [Ça fait un drôle d’effet]. ஏதேனும் நல்லதொரு அவதானத்தைக் கொண்டு ஒருவரை அப்போது தான் ஆச்சரியப்படுத்தியிருப்பார், அதற்குள்ளாக மிகப் பயங்கரமான கிறுக்குத்தனத்தில் தலைக்குப்புற விழுந்து விடுகிறார்.” 12

1847-48 இலையுதிர் காலம் மற்றும் குளிர்காலத்தின் போது, எதிர்க்கட்சியைச் சேர்ந்த முதலாளித்துவப் போக்குகள் எல்லாம் மக்கள் ஆதரவை ஈர்க்க “நிதிதிரட்டல் விருந்து”களுக்கு —ஒரு தட்டு 10 டாலர் நிர்ணயிக்கும் இன்றைய விருந்துகளின் ஆரம்ப வடிவம்— ஏற்பாடு செய்தன. மக்கள் வருகையை அதிகரிக்க விலை தொடர்ந்து குறைக்கப்பட்டது. தீவிர நிலை கொண்டவரான லுதுரு-ரோலனும் சோசலிஸ்டான லூயி பிளோன்ங்கும் பரந்த நடுத்தர வர்க்கத்தையும் தொழிலாள வர்க்கப் பங்கேற்பையும் ஈர்க்கும் வண்ணம் தமது சொந்த விருந்துகளுக்கு கூட்டாக ஏற்பாடு செய்தனர். எதிர்த்தரப்பிலிருந்த வசதியான மற்றும் பழமைவாத முதலாளித்துவ பிரிவினர் இந்த விருந்துப் பிரச்சாரத்தில் மொத்தமாய் அதிருப்தி கண்டனர். லூயி பிலிப்புடன் ஒரு பகிரங்கமான மோதலின் சாத்தியத்தை அவர்கள் சிந்தித்துப் பார்க்கவில்லை, குறிப்பாக இந்த விருந்துகள் தங்களின் விவேக உணர்வுக்கு மாறாக, சொத்துடைமை நலன்களின் கட்டுப்பாட்டிற்கு வெளியே நிகழ்கின்ற மக்கள் போராட்டங்களுக்கு ஊக்குவித்து விடும் என்று அவர்கள் அஞ்சினர். அடோல்ப் தியேர் (இறுதியில் பாரிஸ் கம்யூனின் சமரசமற்ற எதிரியாக வரலாற்றில் இடம்பிடித்தவர்) விருந்து மேசை விரிப்புகளின் கீழே புரட்சியின் செங்கொடி இருப்பதை தான் உணர்வதாக எச்சரித்தார்! முதலாளித்துவ வர்க்கமானது, ஜனநாயகச் சீர்திருத்தத்தின் ஏதேனுமொரு வடிவத்தை வலியுறுத்தியபோதிலும், அரசியல் போராட்டத்தில் தொழிலாள வர்க்கம் தலையீடு செய்யக் கூடும் என்று அஞ்சியது.

முதலாளித்துவ வர்க்கத்தின் பிரிவுகளுக்குள் இருந்த இந்த அச்சமானது 1789-94 பெரும் புரட்சிக்குப் பிந்தைய பிரெஞ்சு சமூகத்தின் (இன்னும் விரிவாய் ஐரோப்பிய சமூகத்தின்) கட்டமைப்பிலான ஆழமான மாற்றங்களின் வெளிப்பாடாக இருந்தது. 1789 இல் Third Estate இன் பிரதிநிதிகள் வெர்சாயில் கூடியபோது, நிலப்பிரபுத்துவ ஆட்சிக்கான வெகுஜன எதிர்ப்புக்குள் இருந்த வர்க்கப் பிளவுகள் அபிவிருத்தியடையாமல் இருந்தன. பதினாறாம் லூயியுடனான மோதலின் போது, தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சோசலிச எதிர்ப்பின், அதாவது நிலப் பிரபுத்துவ சொத்துடைமையை மட்டுமல்லாமல் முதலாளித்துவ சொத்துடைமையையும் அச்சுறுத்திய ஒரு எதிர்ப்பின், பயங்கரத்தை முதலாளித்துவம் எதிர்கொள்ளவில்லை. அதனால் தான் 1790களில் பழைய ஆட்சியை நோக்கிய முதலாளித்துவ வர்க்கத்தின் புரட்சிகர மனோபாவம் அதற்கு அரை நூற்றாண்டு பிந்தைய காலத்தை விடவும் மிக மிகத் தீர்மானகரமானதாக இருந்தது. ஆயினும் ஒன்றை கட்டாயம் குறிப்பிட வேண்டும். பெரும் புரட்சியின் அதீத தீவிரமயம் என்பது, பொதுவாக பதினாறாம் லூயியுடன் ஒரு அரசியல் சமரசத்திற்காய் முனைந்து வேலை செய்து கொண்டிருந்த முதலாளித்துவ வர்க்கத்திடம் இருந்து உருவானதில்லை, மாறாக sans culottes என்று அழைக்கப்பட்ட நகர்ப்புறத்தின் பரந்த வெகுஜன மக்களிடம் இருந்தே உருவானதாகும். அவர்களிடம் இருந்துதான் ஜாக்கோபின் தலைவர்கள் தங்களுக்கான பிரதான ஆதரவினைப் பெற்றனர். அவர்களது தொடர்ந்த கலக எழுச்சிகளால்தான் புரட்சி மேலும் மேலும் இடது நோக்கித் தள்ளப்பட்டது.

1848 ஆம் ஆண்டுக்குள்ளாக, நாம் இதுவரை விவாதித்தவாறு, லூயி பிலிப்பின் ஆட்சிக்கும் முதலாளித்துவ ரீதியான எதிர்ப்பு அணிக்கும் இடையிலான அரசியல் மோதல் தொழிலாள வர்க்கத்தின் எழுச்சியால் மேலும் தீவிர சிக்கலுற்றது. பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய சமூகத்திலான இந்த மாற்றம் 1848 இன் புரட்சிகளில் ஒரு தீர்மானகரமான முக்கியத்துவம் படைத்ததாய் நிரூபணமானது. முதலாளித்துவ தாராளவாதிகள் நடப்பு ஆட்சிகளுக்கான எதிர்ப்பாளர்களாய் தங்களைக் கண்டனர் என்ற போதிலும், அவர்களது எதிர்ப்பையும் ஜனநாயகத்திற்கான அவர்களது உறுதிப்பாட்டையும் தொழிலாள வர்க்கத்தின் சோசலிச அபிலாசைகள் குறித்த அவர்களது மாபெரும் அச்சம் சூழ்ந்து கொண்டது. இந்த முரண்பாடுகள் தான், அதாவது முதலாளித்துவ வர்க்கத்தின் ஜனநாயகப் பாசாங்குகளுக்கும் அவர்களது சடரீதியான நலன்களுக்கும் இடையிலானதும், முதலாளித்துவ சொத்துடைமையைப் பாதுகாப்பதற்கு உறுதிபூண்ட முதலாளித்துவ வர்க்கத்திற்கும் சொத்தற்ற தொழிலாள வர்க்கத்திற்கும் இடையிலானதுமான முரண்பாடுகள் தான், 1848 புரட்சிகளின் முடிவுகளை தீர்மானித்தன.

லூயி பிலிப் ஆட்சியின் அரசியல் நெருக்கடி வெகுகாலமாய் தயாரிக்கப்பட்டிருந்தது. ஆட்சி, புரட்சிக்கு வித்திட்டுக் கொண்டிருந்தது என்ற ஒரு தீர்க்கதரிசன எச்சரிக்கையை 1848 ஜனவரியில் டு ரொக்குவில் கூறியிருந்தார். என்றபோதிலும் மூன்று நாள் கிளர்ச்சி வன்முறையிலேயே ஒட்டுமொத்தமான இற்றுப் போன கட்டமைப்பும் நிலைகுலைந்து விடும் என்பதை வெகுசிலரே எண்ணிப் பார்த்திருந்தனர். டு ரொக்குவில் இன் எச்சரிக்கையை மன்னரே கூட கேலி செய்தார்:“பாரிஸ்காரர்கள் குளிர்காலத்தில் புரட்சியை தொடங்குவதில்லை” என்றார் அவர்.“சூடான சூழலில் தான் அவர்கள் கட்டுமீறுவார்கள். பாஸ்டியில் ஜூலையில் கட்டுமீறினார்கள், பூர்போன் அரியணையை ஜூனில் மீறினார்கள். ஆனால் ஜனவரி பிப்ரவரியில் எல்லாம் அப்படி செய்ய மாட்டார்கள்.”13

பிப்ரவரி 1848 பாரிசில்

1848 பிப்ரவரி 22 அன்று எதிர்ப்பாளர்கள் நடத்த திட்டமிட்டிருந்த ஒரு மாபெரும் விருந்தினை தடுப்பதற்கு, அரசாங்கம் முயற்சித்ததில் தான் பிரச்சினை தொடங்கியது. அதனையடுத்து கூட்டத்தை ஈர்ப்பதற்கு விருந்தின் கட்டணமும் குறைக்கப்பட்டது. அதனால் பின்வாங்கிய அரசாங்கம், விருந்தினை சாம்ப்ஸ்-எலிசே (Champs-Elysées) அருகில் ஏதேனும் ஒரு செழிப்பான பகுதியில் நடத்திக் கொள்ளலாம் என்று உடன்பட்டது, ஆனாலும் விருந்து முடிந்தவுடன் உடனே கலைந்து விட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தது. இந்த அவமதிப்பான நிபந்தனையை ஏற்றுக் கொள்வதற்கும் முதலாளித்துவ வர்க்கத்தை சேர்ந்த ஏற்பாட்டாளர்கள் பலரும் விருப்பத்துடன் இருந்தனர், காரணம் அவர்கள் ஆட்சியைக் கண்டு பயந்தார்கள் என்பதால் மட்டுமல்ல, மாறாக பெரும் கூட்டம் களத்தில் நிற்பது குறித்த அச்சம் அவர்களுக்கேயும் இருந்தது என்பதாலும் தான். ஆனாலும் லுதுரு-ரோலன் மற்றும் Réforme குழுவில் இருந்த அவரது ஆதரவாளர்கள் இதற்கு ஒப்புக்கொள்ள மறுத்தனர். பிப்ரவரி 22 அன்று காலை பிளாஸ் டு லா மட்லன் (Place de la Madelaine) இல் கூடுவதற்கும் பின் அங்கிருந்து சாம்ப்ஸ்-எலிசே வழியாக விருந்து நடைபெறும் இடத்திற்கு கூட்டமாக ஊர்வலம் செல்வதற்கும் அவர்கள் பாரிஸ் மக்களுக்கு அழைப்பு விடுத்தனர். முதலாளித்துவ எதிர்ப்புடன் அடையாளம் காணத்தக்க ஏறக்குறைய அத்தனை செய்தித்தாள்களுமே இந்த அழைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இந்த மொத்த விடயமுமே ஆட்சியுடன் ஒரு மோதலுக்கு இட்டுச் சென்று ஆர்ப்பாட்டக்காரர்களை குருதியாற்றில் அடக்கி ஒடுக்குவதில் முடியக் கூடிய ஒரு சாகச முயற்சி என்பதாக அவை கருதின.

ஒரு மோதல் நடந்தது. கட்டுக்கடங்காத கூட்டம் பேருந்துகளை புரட்டிப் போட்டது, தெரு விளக்குகளை உடைத்தது. ஆயினும் போலிசும், தேசியக் காவல் படையும் சூழ்நிலையைக் கையாளும் திறம்படைத்திருந்ததாகவே தோன்றியது. 22ம் தேதி மாலை, சூழ்நிலை கட்டுப்பாட்டில் இருப்பதான நம்பிக்கையிலேயே லூயி பிலிப் இருந்தார். ஆனால் அடுத்த நாள் கூட்டம் இன்னும் பெரிதாக இருந்தது. தேசியக் காவல் படைக்குள்ளும், குறிப்பாக ஏழை மாவட்டங்களில் இருந்தான பிரிவுகளுக்குள், கிளர்ச்சியின் அறிகுறிகள் பெருகின. அடுத்ததாக, பிப்ரவரி 23 அன்று மாலை, பாரிஸ் தொழிலாளர்கள் கலகத்தில் இறங்கினர். எட்டு மில்லியனுக்கும் அதிகமான நடைபாதைக் கற்களை சேகரித்து விட்டனர், 400,000க்கும் அதிகமான மரங்களை வெட்டி வீழ்த்தினர். பிப்ரவரி 24 ஆம் தேதி காலைக்குள்ளாக, சுமார் 1500 தடுப்பு ஏற்பாடுகள் நகரெங்கிலும் நிலைநிறுத்தப்பட்டிருந்தன. தனது பிரதமர் பிரான்சுவா கிசூ வை பதவிநீக்கம் செய்வதன் மூலமாக ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்தலாம் என்று லூயி பிலிப் நம்பினார். ஆனால் இந்த நடவடிக்கை தாமதமான ஒன்றாகி விட்டது. பாரிஸ் சூழ்நிலையை மதிப்பிட்டதுடன் சென்ற புரட்சியில் தனது புகழ்பெற்ற குடும்பத்திற்கு நேர்ந்த கதியையும் எண்ணிப் பார்த்த லூயி பிலிப் பதவியைத் துறந்து விட்டு நாட்டை விட்டு ஓடினார். புரட்சி வெற்றி பெற்று விட்டது, 500 உயிர்களுக்கும் குறைவாகவே அதற்கு விலை கொடுக்கப்பட்டிருந்தது!

ஆனால் அகற்றப்பட்ட முடியாட்சியின் இடத்தை யார் அல்லது எது பிடிக்கப்போகின்றது? முதலாளித்துவ வர்க்கத்தையும் நடுத்தர வர்க்கத்தின் வசதியான பிரிவுகளையும் பொறுத்தவரை, வெற்றியை உண்மையிலேயே வரவேற்கிறார்களா என்பதிலேயே அவர்கள் நிச்சயமாக இல்லை. லூயி பிலிப் மீது அழுத்தம் கொடுத்து அவரை சிலவகை தேர்தல் சீர்திருத்தத்திற்கு நிர்ப்பந்திக்கவே முதலாளித்துவத்தை சேர்ந்த எதிர்ப்பாளர்கள் முயன்று வந்திருந்தனர். இப்போதோ அவர்கள் கையில் புரட்சி வந்து நிற்கிறது, அதனுடன் லூயி பிலிப்பை வெற்றிகரமாகத் தூக்கியெறிந்ததில் உற்சாகமடைந்த பரந்த தொழிலாளர்களின் எதிர்பார்ப்புகளும் அபிலாசைகளும் முன்நின்று கொண்டிருக்கின்றன. தாராளவாத முதலாளித்துவத்தை சேர்ந்த எதிர்ப்பாளர்களின் மிகவும் நன்கறியப்பட்ட பிரதிநிதிகளில் அநேகரும் விடயங்களின் இந்த துரித மாற்றங்களால் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்து விட்டனர். சமாளித்து தமது அரசியல் சமநிலையைப் பராமரித்துக் கொண்டிருந்த ஒரு சிலரில் ஒருவர் தான் அல்போன்ஸ் டு லமார்டின், பிரபல காதல் கவிஞர். பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கத்தின் மழுங்கிய மற்றும் சுயநலமான அபிலாசைகளை பரவசமான வாய்வீச்சில் வெளிப்படுத்துவதற்கு தமது இலக்கியத் திறன்களைப் பயன்படுத்தியவர்.

வழக்கமான வெற்றாவேசப் பேச்சுகளுக்கும் ஆழமான உரையைப் போன்றதொரு தோற்றத்தை வழங்கக் கூடிய கைதேர்ந்த வாய்வீச்சு வித்தகர்கள் போன்ற இத்தகைய மனிதர்கள் ஒவ்வொரு புரட்சியின் ஆரம்ப கட்டங்களிலுமே மேலெழுச்சி காண்பது வழக்கம். எழுபது வருடங்கள் தாண்டி ரஷ்ய புரட்சியில் அதே பாத்திரத்தை அலெக்சாண்டர் கெரன்ஸ்கி ஆற்றினார். லூயி பிலிப் பதவி துறந்து பறந்து விட்ட பின்னர் இருந்த பெரும் குழப்பத்திற்கு இடையேயும் மக்களிடம் இருந்து வந்த தீவிர அழுத்தத்தின் கீழும், லமார்ட்டின் நகரசபை (Hôtel de Ville) மொட்டை மாடியில் இருந்து இரண்டாம் குடியரசின் ஸ்தாபகத்தை பிரகடனம் செய்தார். உண்மையில் குடியரசுப் பிரகடனத்தை லமார்ட்டின் எதிர்த்தார். ஆனால், 1830 இல் பத்தாம் சார்ல்ஸ் தூக்கியெறியப்பட்டதில் எந்தப் பலனும் காணவில்லை என்பதை நன்கறிந்திருந்த பாரிஸ் மக்கள் மறுபடியும் வெற்றியின் பலன்கள் கிட்டாமல் ஏமாந்து விடக்கூடாது என்பதில் தீர்மானகரமாய் இருந்தனர்.

தேர்தலுக்குப் பின்னர் அதிகாரத்தை பெறுவதற்காய் இருந்த புதிய இடைக்கால அரசாங்கத்தில் முதலாளித்துவத்தின் பழமைவாத பிரதிநிதிகள்தான் ஏறக்குறைய ஒட்டுமொத்தமாய் இருந்தனர். தீவிரமய அடையாளத்துடன் இருந்த ஒரேயொரு மனிதர் அலெக்சாண்டர் லுதுரு-ரோலன் மட்டுமே. லுதுரு-ரோலன் ஐ அரசாங்கத்தில் சேர்க்க வேண்டும் என்று கோரிய லூயி பிளோன்ங், கடைசியில், தன்னையும் ஆல்பேர்ட் என்று அழைக்கப்பட்ட ஒரு தொழிலாளியையும் இடைக்கால அரசாங்கத்தின் செயலர்களாக நியமித்துக் கொள்ள மட்டுமே இயன்றது.

முதலாளித்துவ வர்க்கத்தை பொறுத்தவரை, புதிய குடியரசு என்பது அடிப்படையில் தனது வர்க்க நலன்களைத் தொடர்ந்து பாதுகாக்கவிருக்கும் ஒரு அரசியல் கட்டமைப்பு என்றே கருதியது. ஆனால் தொழிலாள வர்க்கமோ, உழைக்கும் மக்களின் நலன்களுக்கு ஏற்ற வகையில் சமுதாயத்தை மறுகட்டுமானம் செய்கின்ற ஒரு சமூக குடியரசின் தன்மைகளை அரசாங்கம் ஏற்க வேண்டும் என்று கோரியது. புதிய குடியரசானது உழைக்கும் மக்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்தப் பாடுபடும் என்றே இடைக்கால அரசாங்கம் ஆரம்பத்தில் நம்பிக்கையை, அல்லது பின்னர் நிரூபணமானது போல் பிரமைகளை, விதைத்தது. பிப்ரவரி 25 அன்று புதிய அரசாங்கமானது “தொழிலாளர்களுக்கு வாழ்க்கைக்கான ஊதியத்திற்கு உத்திரவாதமளிக்க” உறுதி பூண்டது. “ஒவ்வொரு மனிதருக்கும் வேலைக்கான உரிமைக்கு உத்தரவாதமளிக்க இது வாக்குறுதியளிக்கிறது.” இந்த அறிவிப்பு பெரும் உற்சாகத்துடன் வரவேற்கப்பட்டது. புருடோன் எழுதினார்: “1848 புரட்சியே உன் பெயர் என்ன?” பதில்? “என் பெயர் வேலை செய்வதற்கான உரிமை.”

ஒரு வாரம் கழித்து, மார்ச் 2 அன்று, பாரிஸில் 10 மணி நேர வேலைநாளையும் நாட்டின் பிற பகுதிகளில் பதினொரு மணி நேர வேலைநாளையும் நிலைநிறுத்திய இன்னொரு சட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தியது. அடுத்து இன்னொரு சட்டம் “கொத்தடிமை உழைப்பை” (sweated labour) —ஒரு தொழில் ஒப்பந்ததாரர் குறிப்பிட்டதொரு விலையில் வேலையை பெறுவார், பின் அந்த வேலையை இன்னும் குறைந்த ஊதியத்தில் செய்து கொடுப்பதற்கு தொழிலாளர்களை தற்காலிக அடிப்படையில் பணியமர்த்திக் கொள்வார், இதன்மூலம் ஒப்பந்ததாரர் அடுத்தவர் உழைப்பில் பெரும் இலாபம் ஈட்டிக் கொண்டிருந்தார்— ஒழித்தது. இப்போது வணிகத்தில் ஒரு பரவலான வழிமுறையாக மாறி விட்டிருக்கின்ற, இன்னும் சொன்னால், “தற்காலிக தொழிலாளர் முகமைகள்” என்ற பெயரில் எண்ணிலடங்கா இலாபகர வணிகங்கள் ஸ்தாபிக்கப்பட இட்டுச் சென்றிருக்கின்ற ஒரு நடைமுறை, 175 வருடங்களுக்கு முன்னால் சகிக்க முடியாத ஒன்றாகக் கருதப்பட்டதை நாம் காண்கிறோம்.

இந்த சீர்திருத்த நடவடிக்கைகள் எல்லாம் பெரும் வரவேற்பை பெற்றன, ஆனால் இவற்றை எல்லாம் செயல்படுத்துவதற்கான எந்த திறம்பட்ட வழிமுறையையும் இடைக்கால அரசாங்கம் ஸ்தாபிக்கவில்லை. உழைப்பு மற்றும் முன்னேற்றத்திற்கான அமைச்சகத்தை ஸ்தாபிக்க ஆரம்பத்தில் லூயி பிளோன்ங் (Louis Blanc) அழைப்பு விடுத்திருந்தார். இதனை இடைக்கால அரசாங்கம் நிராகரித்தது. அதற்குப் பதிலாக ஒரு சமரச நடவடிக்கையாக, லூயி பிளோன்ங்கின் வழிகாட்டலின் கீழ் உழைப்பாளர் ஆணையத்தை அது உருவாக்கியது. இந்த ஆணையம் லுக்சம்பேர்க் அரண்மனையில் சந்தித்ததால் பொதுவாக லுக்சம்பேர்க் ஆணையம் என்றே அழைக்கப்பட்டது. தொழிலாளர்களின் நிலைமைகளை விசாரிப்பதற்கும் ஆலோசனையளிப்பதற்கும் மட்டுமே இந்த ஆணையம் அதிகாரம் படைத்ததாக இருந்தது. வாரங்கள் செல்லச் செல்ல, இந்த ஆணையத்தின் கையாலாகாத்தனத்தால் தொழிலாளர்களின் வெறுப்பு தொடர்ந்து அதிகரித்துச் சென்ற வண்ணம் இருந்தது.

வேலைகள் விடயம் தான் இடைக்கால அரசாங்கத்துக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான மோதலுக்கு மையமான மூலாதாரமாய் எழுந்தது. லூயி பிளோன்ங் அர்த்தமுள்ள வேலைகளை வழங்குகின்ற கூட்டுறவு வகைப்பட்ட ஒன்றை ஆரம்பத்தில் கற்பனை செய்து வைத்திருந்தார். அந்த “சமூகப் பட்டறைகளை” (Social Workshops) உருவாக்க அவர் வலியுறுத்தினார். தேசிய பட்டறைகள் எல்லாம் வேலை வழங்கினால் கூட அவை ”ஒப்புக்கான வேலை”யாய் இருந்ததே தவிர உருப்படியாய் எந்த வேலையும் வழங்கவில்லை. தொழிலாளர்களை திருப்திப்படுத்தும் ஒரு வகையில் இந்த வேலைப் பிரச்சினை நிவர்த்தி செய்யப்படத் தவறிய நிலையில், இந்தத் திட்டமானது பாரிசுக்கு வெளியே அதிருப்தியைச் சம்பாதித்தது. குறிப்பாக பாரிஸ் தொழிலாளர்கள் சும்மாயிருப்பதற்கு மானியமளிக்கவே தமது வரிகள் பயன்படுவதாக பரந்த கிராமப்புற மக்கள் நம்பத் தொடங்கினர். வாரங்கள் செல்லச் செல்ல, இந்த விடயம் பிற்போக்கான முதலாளித்துவ அரசியல்வாதிகளின் கையில் சிக்கி, அவர்கள் கிராமப்புற வெகுஜன மக்களை நகர்ப்புற தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகத் தூண்டி விட முனைந்தனர்.

ஊக்கத்தின் முதல் ஆரவார அலை வடிந்து விட்ட நிலையில், அரசியல் சூழல் மேலும் மேலும் தொழிலாளர்களுக்கு எதிரானதாய் திரும்பியது. பிப்ரவரி புரட்சி விடுவித்த சமூக சக்திகளால் மிரண்டு போயிருந்த லமார்ட்டின் மற்றும் பிற முதலாளித்துவ அரசியல்வாதிகள் எல்லாம் தொழிலாளர்களுக்கு எதிராக இடைவிடாது வேலை செய்தனர். ஒரு வரலாற்றாசிரியர் எழுதினார், லமார்ட்டின் (முதலாளித்துவத் தலைவர்): முதல் யுத்தங்களை தன்னம்பிக்கை மற்றும் சிறுபிள்ளைத்தனம் ஆகியவற்றின் ஒரு கலவையில் மூழ்கடித்திருந்தார். ஆனால் அதற்கு சிறிது காலத்திலேயே அவர் ஏழைகளையும், பரிதாபகரமான பாட்டாளி வர்க்கத்தையும் ஒரு தீவிர எதிரியாக கருதத் தொடங்கி, தனது முயற்சிகளை எல்லாம் மக்களுக்கு உறுதியூட்டுவதற்காய் அல்லாமல் அவர்களை மயக்குவதற்காய் செலுத்தத் தொடங்கி விட்டிருந்தார்.... வெகுஜனங்கள் குறித்த ஒரு திகில் அவருக்கு உண்டாகி விட்டிருந்தது.....14

ஆரம்பத்தில், தொழிலாளர்கள் தேர்தலை, தேசிய அவையில் தங்களுக்கு அனுதாபமான பிரதிநிதிகளைக் கொண்டு வருவதற்கான ஒரு வழிமுறையாகவே கண்டனர். ஆயினும், கிராமப்புற மக்களின் நனவில் புரட்சி செல்வாக்கு செலுத்துவதற்கு இன்னும் காலம் பிடிக்கும் என்ற நிலையில், முன்னதாகவே தேர்தல் நடந்தேறுமானால், முடிவுகள் மிகவும் சாதகமற்று இருக்கும் என்பதை அவர்கள் விரைவிலேயே கண்டுகொண்டனர். முதலாளித்துவவாதிகளும் இதே கணக்கை கண்டுகொண்டனர் என்பதால் தேர்தலை முடிந்த அளவுக்கு சீக்கிரம் நடத்த வேண்டும் என்ற முடிவுக்கு அவர்கள் வந்தனர். தேர்தலை தாமதப்படுத்த இடைக்கால அரசாங்கத்திற்கு நெருக்குதலளிக்கும் நோக்கத்துடன் மார்ச் 17 அன்று தொழிலாளர்கள் ஒரு பாரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இடைக்கால அரசாங்கம் தேர்தலை இரண்டு வார காலம் தள்ளி வைக்க ஒப்புக் கொள்ளச் செய்வதற்கே அவர்களால் முடிந்தது. தேர்தல்கள் நடந்தபோது, தொழிலாளர்கள் பயந்திருந்ததைப் போலவே, மிகப்பெருமளவில் பழமைவாத முடிவுகளே வந்தன. ஏப்ரல் 23 அன்று வாக்களிக்கச் சென்ற பாரிய விவசாயிகள், உள்ளூர் பெரும்புள்ளிகளும் மதகுருக்களும் சொல்லியவாறு வாக்களித்தனர்.

அரசியல் சூழல் கூர்மையாக வலது நோக்கித் திரும்பியது. தொழிலாளர்களது கோரிக்கைகளாலும் அவர்களது சோசலிச முழக்கங்களாலும் கோபமடைந்திருந்த முதலாளிகளின் மனோநிலையை குஸ்டேவ் ஃபிளாபேர் தனது Sentimental Education என்ற நாவலில் படம்பிடித்துக் காட்டுகிறார்.

சோசலிசத்தில் நல்லது கெட்டது என இரண்டு வகை இருப்பதை நிரூபிக்க ஆர்னூ முயற்சி செய்து கொண்டிருந்தார். ஆனால் தொழிலதிபரால் அவற்றுக்கு இடையே எந்த வித்தியாசத்தையும் கண்டறிய முடியவில்லை, ஏனென்றால் ‘சொத்து’ என்ற வார்த்தை அவரை பெரும் ஆவேசத்துக்குள் தள்ளியது.

‘இது இயற்கை ஆஸ்தியளித்த ஒரு உரிமை. குழந்தைகள் அவர்களது விளையாட்டுப் பொம்மைகளை விடாமல் பற்றிக் கொள்ளும்; பூமியில் ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு விலங்கும் நான் சொல்வதைப் புரிந்து கொள்வார்கள்; ஒரு சிங்கமாக இருந்தாலும், அதற்கு பேசும் சக்தி இருந்தால், அது தன்னை அந்த நிலத்திற்கு அதிபதி என்று கூறும்! என்னுடைய கதையையே எடுங்கள் கனவான்களே: பதினைந்தாயிரம் பிராங்குகள் மூலதனத்துடன் தொடங்கினேன். உங்களுக்கெல்லாம் தெரியும், தினசரி காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து விடுவேன், முப்பது வருடங்களாக! என்னுடைய செல்வத்தை உருவாக்க நான் பேய் போல் வேலை செய்திருக்கிறேன். இப்போது என்னடாவென்றால் இவர்கள் வந்து என்னிடம் சொல்கிறார்கள், அதனைக் கொண்டு நான் விரும்பியதைச் செய்ய முடியாதாம், என் பணம், என் பணம் அல்லவாம், சொத்து என்பது திருட்டாம்!’

“ஆனால், புருடோன்...”

‘ஆ, புருடோன் பற்றி என்னிடம் பேசாதீர்கள்! அவர் மட்டும் இங்கிருந்தார் என்றால் அவரின் கழுத்தை நெரித்திருப்பேன்!’

உண்மையிலேயே அவர் கழுத்தை நெரித்திருப்பார் தான். குறிப்பாக கொஞ்சம் மது உள்ளே சென்று விட்ட பின்னர், ஃபுமிசோனை தடுத்த நிறுத்த எதுவுமிருக்கவில்லை. கோபம் கொந்தளித்த அவர் முகம் வெடிக்கவிருக்கும் எறிகுண்டின் நிலைமையில் காட்சியளித்தது.15

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய அவை இன்னும் கூடுதலான குரோத நடவடிக்கைகளைக் கொண்டு தொழிலாளர்களை ஆத்திரமூட்டியது. வலதுசாரி கிளர்ச்சிக்கான மத்திய புள்ளியாக தேசிய பட்டறைகள் ஆகின. பிரான்சு முகம் கொடுக்கும் அத்தனை பொருளாதாரப் பிரச்சினைகளுக்கும் காரணம் தேசியப் பட்டறைகளும் தொழிலாளர்களின்’ மட்டமான கோரிக்கைகளுக்கு வளைந்து கொடுப்பதும் தான் என்பதாக பொதுமக்கள் நம்ப வைக்கப்பட்டனர். ஜூன் மாதத்திற்குள்ளாக, “இப்படியே போய்க் கொண்டிருக்க முடியாது” என்பது எண்ணற்ற முதலாளிகள் மற்றும் குட்டி முதலாளிகளின் உதடுகளில் குடிபுகுந்தது. தொழிலாளர்களுடன் ஒரு மோதலுக்கு அரசாங்கம் தயாரிப்பு செய்தது. தொழிலாளர்களை எப்படிக் கையாளுவது எனத் தெரியும் என்று லமார்ட்டின் கொண்டிருந்த நம்பிக்கைக்கு உறுதுணையாக, தொழிலாள வர்க்கத்துடன் அரசாங்கம் மோதலுறும்போது அரசாங்கத்தின் பக்கம் நிற்பதாக லுதுரு-ரோலன் அளித்த வாக்குறுதிகள் இருந்தன.

1848 இன் எதிர்ப்புரட்சி

தேசிய பயிற்சிப்பட்டறைகளில் இருந்த 18 முதல் 25 வயதுக்குள்ளான தொழிலாளர்கள் கட்டாயமாக இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று ஜூன் 21 அன்று அரசாங்கம் அறிவித்தது. மற்ற தொழிலாளர்களில் பாரிஸில் ஆறு மாதத்திற்கும் குறைவாய் வசித்தவர்கள் தேசிய பயிற்சிப்பட்டறைகளில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு நகரை விட்டு அனுப்பப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகள் தொழிலாளர்களை பட்டினியால் அச்சுறுத்தின. ஜூன் 23 அன்று பாரிஸில் பகிரங்கமான மோதல்கள் வெடித்தன. நகரம் முழுவதும் தடுப்புகள் அமைக்கப்பட்டன. இவற்றின் பெரும்பாலானவை கலகக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. போராடியவர்களுக்கு தீர்க்கமான சோசலிச முன்னோக்கு எதுவும் இல்லை. நிர்க்கதியான நிலைமையால் போராட்டத்திற்குள் செலுத்தப்பட்டவர்களாக அவர்கள் இருந்தனர். இந்த சண்டை நான்கு நாட்கள் உக்கிரமாக இருந்தது. தேசிய காவற்படையானது ஜெனரல் கவாய்னாக்கின் தலைமையில் இருந்தது. இப்படைக்கு பிரான்சின் சகல பகுதிகளில் இருந்தும் அணிதிரட்டப்பட்டு அவர்கள் நகருக்கு இரயில் மூலம் அழைத்து வரப்பட்டு வந்தார்கள். ஜெனரலை பொறுத்தவரை அவர் குடியரசின் ஆதரவாளராய் இருந்தார், தன்னை ஒரு பிற்போக்குவாதியாக அவர் கருதிக் கொள்ளவில்லை. ஆனால் தனது ஆயுத பலத்தை தடுப்புகளை நோக்கித் திருப்புவதற்கு அவர் தயங்கவில்லை. சுமார் 500 கிளர்ச்சியாளர்கள் இந்தச் சண்டையில் கொல்லப்பட்டனர். 1,000 தேசிய காவற் படை வீரர்கள் வரை போரில் உயிரிழந்தனர். ஆனால் மோசமான விடயம் கிளர்ச்சி ஒடுக்கப்பட்டதற்கு பின்னர்தான் வந்தது. கிளர்ச்சி செய்தவர்கள் வேட்டையாடப்பட்டு 3,000 பேர் வரை ஈவிரக்கமின்றிக் கொல்லப்பட்டார்கள். இன்னுமோர் 12,000 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் நூற்றுக்கணக்கானோர் இறுதியில் அல்ஜீரியாவில் இருந்த வதை முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர்.

பாரிஸ் படுகொலையை அவதானித்த ஆரம்பகால ரஷ்ய சோசலிஸ்டுகளில் ஒருவரான அலெக்சாண்டர் ஹேர்சன் ஜூன் நிகழ்வுகள் பற்றி இப்படி எழுதினார்: “அந்நாட்களில் கொலை செய்வது கடமையாக ஆகிவிட்டது; யார் பாட்டாளி வர்க்க குருதியில் கை நனைக்கவில்லையோ அவர் மீது முதலாளித்துவ வர்க்கத்தின் சந்தேகக் கண் விழும்படி நிலை இருந்தது.”16 அவர் இன்னொரு இடத்தில் சொன்னார்: “இது மாதிரியான தருணங்கள் ஒருவரை முழு தசாப்த வெறுப்புக்குள் தள்ளி விடுகிறது, ஒருவரின் ஆயுள் முழுக்க பழி வாங்கக் காத்திருக்கும்படி செய்கிறது. இத்தகைய தருணங்களை மன்னிப்பவர்களுக்கு துயரம்தான்!”17

படுபயங்கரமான ஜூன் நாட்கள் முதலாளித்துவ சகாப்தத்தில் சமூக உறவுகளின் உண்மை நிலையையும், முதலாளித்துவ வர்க்கத்திற்கும் தொழிலாளிக்கும் இடையிலான வர்க்கப் போராட்டத்தையும் அம்பலப்படுத்தியது. ஜனநாயகம், குடியரசு, சுதந்திரம் ஆகிய அழகிய முதலாளித்துவ முழக்கங்களுக்கு பின்னால் மறைந்து கிடந்த வர்க்க மோதலின் மூர்க்கமான யதார்த்தத்தை பிரான்சில் 1848 இல் நடந்த நிகழ்வுகள் வெளிக் கொண்டு வந்தன. ஹேர்சென், முதலாளித்துவ தாராளவாதிகளின் சமூக உளவியலை ஆராய்ந்து, 1849 இல் எழுதினார்:

தாராளவாதிகள் புரட்சி என்ற கருத்துடன் நீண்டகாலமாக மகிழ்ச்சியுடன் விளையாடி வந்திருக்கின்றனர். அவர்களது நாடகத்தின் முடிவு பிப்ரவரி 24 அன்று நடந்தது. அவர்கள் இதுவரை எங்கே போய்க் கொண்டிருந்தார்கள், மற்றவர்களை எங்கே வழிநடத்தியிருந்தார்கள் என்பதெல்லாம் கண்களுக்கு நன்கு புலப்படும் வகையில் ஒரு உயரமான மலையுச்சியின் மேலே மக்கட் சூறாவளி அவர்களை சுழற்றியடித்துக் கொண்டுவந்து விட்டிருந்தது. குனிந்து பார்க்கையில், கண்முன்னே விரிந்த பாதாளத்தைக் கண்டு அவர்கள் வெளிறிப் போயினர். தாங்கள் காமாலைக் கண்ணோட்டங்கள் என்று கருதி வந்திருந்தவை மட்டுமல்லாமல், அத்துடன் சேர்ந்து, உண்மையானது என்றும் நிலையானது என்றும் தாங்கள் கருதி வந்ததும் கூட தங்கள் கண்முன்னே நொருங்கிக் கொண்டிருந்ததை அவர்கள் காண நேர்ந்தது. சிலர் சரிந்து செல்கின்ற சுவரைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்ததையும், இன்னும் சிலர் பாதி வழியில் நின்று கொண்டு வருந்திக் கொண்டு போவோர் வருவோரிடம் எல்லாம், இதுவல்ல அவர்கள் விரும்பியது என்று சத்தியம் செய்து கொண்டிருந்ததையும் பார்த்து அவர்கள் மிரண்டு போனார்கள். இதனால் தான் குடியரசை பிரகடனம் செய்த மனிதர்கள் சுதந்திரத்தின் படுகொலையாளர்களாக ஆனார்கள்; இதனால்தான் பல ஆண்டுகளுக்கு நமது காதுகளில் ஒலித்திருந்த தாராளவாதப் பெயர்கள் இன்று பிற்போக்குத்தன பிரதிநிதிகளின், துரோகிகளின், விசாரணையாளர்களின் பெயர்களாக மாறியிருக்கிறது. அவர்களுக்கு சுதந்திரமும், இன்னும் சொன்னால் ஒரு குடியரசும் கூட வேண்டும் எப்போதென்றால் அது அவர்களது சொந்த வளர்த்தெடுக்கப்பட்ட வட்டத்திற்குள் அடங்கியதாக இருந்தால் மட்டுமே...

முடியாட்சி மற்றும் நிலப்பிரபுத்துவ ஒழுங்கை, அதிர்ஷ்டமற்றவர்களின் கண்ணீரை, ஒடுக்கப்பட்ட மக்களின் துயரத்தை, ஏழைகளின் பட்டினியை சமத்துவத்தின் பெயரால் ஒழித்துக் கட்டுவதற்கு மீட்சிக் காலம் (Restoration) முதல் அனைத்து நாடுகளின் தாராளவாதிகளும் அழைப்பு விடுத்து வந்திருக்கின்றனர். சாத்தியமற்ற தொடர்ந்த பல கோரிக்கைகளைக் கொண்டு பல்வேறு மந்திரிமாரை வேட்டையாடி மகிழ்ந்திருக்கின்றனர்; நிலப் பிரபுத்துவ தூண்கள் ஒன்று மாற்றி ஒன்றாக சரிந்தபோது அவர்கள் குதூகலித்திருக்கின்றனர். இறுதியில் அவர்களது விருப்பங்கள் வெளித்தெரிய உரிந்து வருகின்ற வரை மிகவும் உற்சாகமடைந்து வந்திருக்கின்றனர். பாதி சிதைந்த சுவர்களின் பின்னால் இருந்து, பாட்டாளி வர்க்கத்தை சேர்ந்த ஒரு தொழிலாளி, கையில் அவனது கோடரியுடனும் கருப்படைந்த கைகளுடன், பட்டினியுடனும் கோபம் கொப்புளிக்க அரை நிர்வாணமாக —புத்தகங்களிலோ அல்லது நாடாளுமன்ற அரட்டைகளிலோ அல்லது கருணைபொங்கும் வார்த்தைப் பிரயோகங்களிலோ கண்டது போல் அல்லாமல் யதார்த்தத்தில்— வந்து நின்ற போதுதான் அவர்கள் தம் உணர்வுக்கு திரும்பினர். யாரைப் பற்றி நிறைய பேசப்பட்டதோ, யார் மீது அளவுகடந்த பரிதாபம் இறைக்கப்பட்டதோ, அந்த “அதிர்ஷ்டமற்ற சகோதரன்” இறுதியில் கேட்டான், இந்த அத்தனை அருட்கொடைகளிலும் அவனுடைய பங்கு எவ்வளவு என்று, எங்கே அவனது சுதந்திரம், எங்கே அவனது சமத்துவம், எங்கே அவனது சகோதரத்துவம் என்று? தொழிலாளியின் மரியாதைக்குறைவையும் விசுவாசமின்மையையும் கண்டு தாராளவாதிகள் அதிர்ச்சியடைந்து விட்டார்கள். பாரிஸ் தெருக்களில் தாக்குதல் கொண்டு களமிறங்கினார்கள், அவர்களைக் கொளுத்தி கரிக்கட்டைகளாக்கினார்கள், பின் நாகரீகத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்கும் முயற்சியில் இராணுவச் சட்டத்தின் துப்பாக்கி கத்திமுனைகளுக்குப் பின்னால் அவர்களது சகோதரனின் கண்களில் இருந்து மறைந்து கொண்டார்கள்!18

1848 இன் படிப்பினைகள்

மார்க்சை பொறுத்தவரை, பாரிஸில் தொழிலாள வர்க்கம் நசுக்கப்பட்டதானது உலக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சம்பவமாக இருந்தது. நவீன சமூகத்தின் இரண்டு மாபெரும் வர்க்கங்களுக்கு இடையிலான இந்த மோதல் அவற்றின் நலன்களது சமரசத்திற்கு இடமற்ற தன்மையில் இருந்து எழுந்ததாகும். சமூகக் குடியரசு என்பது ஒரு கற்பனை ஊகமாகவே இருந்தது. “முதலாளித்துவம், ஆயுதங்களைக் கைகளில் தாங்கி, பாட்டாளி வர்க்கத்தின் கோரிக்கைகளை மறுக்க வேண்டியிருந்தது” என்று மார்க்ஸ் எழுதினார். “அத்துடன் முதலாளித்துவக் குடியரசின் உண்மையான பிறப்பிடம் பிப்ரவரிவெற்றியல்ல, மாறாக ஜூன் தோல்விதான்.”19 மார்க்ஸ் மேலும் எழுதினார்: “தொழிலாள வர்க்கத்தின் கோரிக்கைகள் முதலாளித்துவக் குடியரசை அதன் தூய வடிவத்தில், அதாவது மூலதனத்தின் ஆட்சியை உழைப்பை அடிமைப்படுத்துவதின் ஆட்சியை பாதுகாப்பது என்ற ஒப்புக்கொண்ட இலக்குடனான அரசாக, வெளிவருவதற்கு தள்ளியிருக்கிறது. அத்தனை தளைகளில் இருந்தும் விடுபட்ட நிலையில் உள்ள முதலாளித்துவ ஆட்சியானது, ஆறாத வடுக்கள் கொண்ட, சமரசமற்ற மற்றும் வெல்ல முடியாத தன் எதிரியை — வெல்ல முடியாத என்று சொல்வதற்கு காரணம், அவர்தம் இருப்பே இதன் சொந்த வாழ்க்கைக்கான நிபந்தனையாக இருக்கிறது— கண்முன்னாலேயே எப்போதும் காண நேரும் நிலையில், முதலாளித்துவ பயங்கரவாதமாக மாறத் தலைப்படுகிறது.”20

பிரான்சிலான நிகழ்வுகள் ஒரு மகத்தான வரலாற்றுத் திருப்புமுனையை குறித்து நின்றன. 1848 பிப்ரவரிக்கு முன்பாக, புரட்சி என்றால் வெறுமனே அரசாங்க வடிவத்தை தூக்கியெறிவதை குறிப்பதாய் இருந்தது. ஆனால் ஜூனுக்குப் பின்னர், புரட்சி என்பதன் அர்த்தம், மார்க்ஸ் அறிவித்தவாறு, “முதலாளித்துவ சமூகத்தை தூக்கியெறிவது” 21 என்றானது.

எந்தவொரு சாதாரணமான வருடத்திற்கும், பிரான்சில் உண்டான புரட்சியே போதுமான அரசியல் சம்பவ வரிசையை வழங்கியிருக்க வேண்டும். ஆனால் 1848, சாதாரண ஆண்டு அல்லவே. பிப்ரவரி புரட்சி ஐரோப்பா முழுவதும் மக்களுக்கு உணர்ச்சியூட்டி, இத்தாலியிலும், ஜேர்மனியிலும், ஆஸ்திரியாவிலும் மற்றும் ஹங்கேரியிலும் பாரிய மக்கள் போராட்டங்களின் அதுவரை கண்டிராத ஒரு அலைக்கு இயக்கமளித்தது. சுவிட்சர்லாந்து, டென்மார்க், ருமானியா, போலந்து மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளிலும் கணிசமான அமைதியின்மை தோன்றியது. முதலாளித்துவ ஆட்சியின் கோட்டையான இங்கிலாந்திலும் கூட, சார்ட்டிஸ்டுகளின் (Chartists) தீவிரப்பட்ட இயக்கம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியது.

இந்த அத்தனை போராட்டங்களும் மகத்தான வரலாற்று முக்கியத்துவம் உடையவை, அத்துடன் அவற்றின் முடிவுகளும் ஐரோப்பாவின் அரசியல் மற்றும் சமூகப் பரிணாம வளர்ச்சிக்கு நீண்டகாலத்திற்கான பின்விளைவுகளைக் கொண்டதாக இருந்தன. ஆயினும், நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் தோற்றுவாய்கள் மற்றும் அபிவிருத்தியின் கோணத்தில் இருந்து பார்த்தால், ஜேர்மனியின் நிகழ்வுகள் தான் மகத்தான முக்கியத்துவம் பெற்றவை ஆகும்.

நேரத்தைக் கருத்தில் கொண்டு, இன்று ஜேர்மன் புரட்சி குறித்து மிகச் சுருக்கமான குறிப்புகளை மட்டுமே சொல்ல இயலும். பாரிஸின் பிப்ரவரிப் புரட்சி தான் பேர்லினில் மார்ச் மாதம் நடந்த எழுச்சிக்கான அரசியல் மற்றும் தார்மீக உத்வேகத்தை வழங்கியது என்பதில் சந்தேகமில்லை. இந்த எழுச்சி வியன்னாவில் நடந்த எழுச்சிக்கு ஒரு சில நாட்கள் தள்ளி நிகழ்ந்தது என்பதையும் இங்கு சுருக்கமாகக் குறித்து வைத்துக் கொள்வோம். பிரஷ்யாவில் இருந்த ஹோஹென்ஸோல்லெர்ன் (Hohenzollern) வம்சம் ஆழமாய் ஆட்டம் கண்டது. 1789-94 பெரும் பிரெஞ்சுப் புரட்சியின் போக்கு திரும்ப நடைபெறுவதாக இருந்தால், ஜேர்மன் முதலாளித்துவ வர்க்கம் முதலாளித்துவப் புரட்சியின் அடிப்படையான கடமைகளை —அதாவது, முடியாட்சியையும் நிலப் பிரபுத்துவத்தின் அத்தனை அரசியல் எச்சசொச்சங்களையும் தூக்கியெறிவது, பழைய குறுமன்னராட்சி மாகாணங்களை கலைத்து விட்டு ஜேர்மன் மக்களை ஒரு பெரிய தேசிய அரசாக ஐக்கியப்படுத்துவது, மற்றும் ஒரு ஜனநாயகக் குடியரசை ஸ்தாபிப்பது ஆகியவை— மேற்கொள்ளும் பொருட்டு அரசகுல ஆட்சிக்கு எதிரான அதன் போராட்டத்தை முன்னெடுத்து நடத்த வேண்டும்.

ஆனால், என்ன நடந்தது என்றால், இந்தக் கடமைகளில் எதையுமே செய்வதற்கு ஜேர்மன் முதலாளித்துவம் திறனற்றதாகவும் விருப்பமற்றதாகவும் இருந்தது என்பது நிரூபணமானது. முதலாளித்துவப் புரட்சி ஜேர்மன் முதலாளித்துவ வர்க்கத்தால் காட்டிக் கொடுக்கப்பட்டது தான் 1848 இல் ஜேர்மனியில் நடந்த கதை ஆகும். இந்த காட்டிக் கொடுப்பின் கீழ் என்ன இருந்தது? வில்லியம் லாங்கர் என்ற பிரபலமான வரலாற்றாசிரியர் எழுதியிருக்கிறார்:

மார்க்சும் ஏங்கெல்சும், 1848 ஜனவரியில் ஜேர்மன் சூழலைப் பார்த்து, எந்தவொரு நாட்டின் முதலாளித்துவ வர்க்கத்திற்கும் நடப்பு ஆட்சிக்கு எதிரான தனது போராட்டத்தை நடத்துவதற்கு இதைவிட ஒரு அருமையான நிலை வாய்த்திருக்குமா என்று தமக்குத் தாமே கேட்டுக் கொண்டனர். பரவலாய் இருந்த அமைதியின்மை மற்றும் அதிருப்தி, அத்துடன் தாராளவாதிகள் தமக்கிருந்த வாய்ப்பை அனுகூலமாக்கிக் கொள்ளத் தவறியமை இவற்றைத் தான் அவர்கள் குறிப்பிட்டார்கள் என்பது வெளிப்படை. ஆனால் இந்தத் தாராளவாதிகள் — முற்போக்கு அலுவலர்கள், புத்திஜீவிகள், தொழில் நிபுணர்கள் ஆகியோரின் உயர் அடுக்கு மற்றும் குறிப்பாக புதிய வணிக அடுக்கு — வேறெங்கிலும் போலவே ஜேர்மனியிலும் புரட்சியை தூண்டுவதற்கு மிகவும் தயக்கம் காட்டினர். பிரான்சில் 1793 பயங்கரத்தின் அதீதங்களை எண்ணிப் பார்த்த அவர்கள், ஒரு முக்கியமான எழுச்சியை ஏறக்குறைய அரசர்களும் பிரபுக்களும் கடந்து செல்வது போல் கடந்து சென்றனர்.22

ஜேர்மன் முதலாளித்துவ வர்க்கத்தைப் பயமுறுத்தியது வெறுமனே 1793-94 சம்பவங்களின் உதாரணம் மட்டுமல்ல. பிரான்சின் சமகால அபிவிருத்திகளும் முதலாளித்துவ சொத்துகளையும் முதலாளித்துவ ஆட்சியின் அடித்தளங்களையும் அச்சுறுத்திய ஒரு சோசலிசப் புரட்சியின் அச்சத்தை மிகத் தெள்ளத் தெளிவாக எழுப்பியது. ஜேர்மன் முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் பிரதிநிதிகள், அத்துடன் ஜேர்மன் குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் மிகத் தீவிரப்பட்ட பிரதிநிதிகள் இவர்களின் ஒட்டுமொத்த நடவடிக்கைகளுமே பாட்டாளி வர்க்கம் குறித்த அவர்களது அச்சத்தால் மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தது. பொருளாதாரம் மற்றும் அரசியல் கட்டமைப்பில் நிலப் பிரபுத்துவத்தின் எச்சங்கள் அனைத்திற்கும் எதிராய், அத்துடன் ஜேர்மன் மாநிலங்களை ஜனநாயக அடிப்படையில் தேசிய அளவில் ஐக்கியப்படுத்துவதை நோக்கி செலுத்தப்படுவதாய் இருக்கக் கூடிய ஒரு தீர்மானகரமான போராட்டத்திற்கு தொழிலாள வர்க்கத்தையும் விவசாயிகளையும் புரட்சிகரரீதியாக அணிதிரட்டுவது முதலாளித்துவ வர்க்கத்திற்கு அவசியமாக இருந்தது. ஆனால் முந்தைய அரை நூற்றாண்டு காலத்தில் முதலாளித்துவம் மற்றும் தொழிற்துறை தொழிலாள வர்க்கத்தின் அபிவிருத்தியை கொண்டு பார்க்கையில், அத்தகையதொரு அணிதிரட்டல் முதலாளித்துவத்தின் வர்க்க நலன்களுக்கு மிகப்பெரும் ஒரு அபாயத்தை கண்முன் நிறுத்தியது. தொழிலாள வர்க்கத்தின் நலன்களைக் காவு கொடுத்து பிரபுத்துவத்துடன் சமரசம் செய்து கொள்வதையே முதலாளித்துவ வர்க்கம் விரும்பியது.

செயிண்ட் போல் தேவாலயத்தில் கூடிய பிராங்பேர்ட் நாடாளுமன்றத்தை முதலாளித்துவ தாராளவாத கோழைத்தனத்தின் உச்சம் என்று சொல்லலாம். ஏராளமான பேராசிரியர்களையும் வழக்கறிஞர்களையும் கொண்ட அதன் பிரதிநிதிகள் முடிவின்றிப் பேசினர், ஆனால் முக்கியமான எதையும் சாதிக்கவில்லை. பாராளுமன்றம், முன்முயற்சி எடுப்பதை பிரஷ்ய பிரபுத்துவத்திடம் வலிந்து ஒப்படைத்ததுடன், ஜேர்மனியை ஐக்கியப்படுத்துவதற்கு புரட்சிகர நடவடிக்கைகளைப் பயன்படுத்துவதையும் நிராகரித்தது. இதனால் இந்தப் பணி பிற்போக்குத்தனமான பிரஷ்ய ஆட்சியிடம் விடப்பட்டு, அது பின்னர் பிஸ்மார்க்கின் தலைமையின் கீழ் நடத்தப்பட்டது.

முதலாளித்துவ வர்க்கம் அதன் “சொந்த” முதலாளித்துவ புரட்சியை காட்டிக் கொடுத்ததில், போராட்டத்தின் ஒவ்வொரு முக்கியமான கட்டத்திலும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகத் திரும்பிய இடது வார்த்தையாடும் குட்டி முதலாளித்துவ தீவிரப் பிரிவினர் ஆற்றிய பாத்திரத்தை மார்க்சும் ஏங்கெல்சும் கடுமையாகக் கண்டனம் செய்தனர். 1848-49 நிகழ்வுகளில் அவர்களின் பாத்திரம் குறித்து ஏங்கெல்ஸ் எதனையும் தவறவிடாத துல்லியத்துடன் விவரித்தார்:

இந்த வர்க்கமானது ஆபத்து எதுவும் அதன் கண்ணில் புலப்படாத வரைக்கும் முழுநீள சவடால்களும் உரத்த குரல் ஆர்ப்பாட்டங்களும் —வெறும் பேச்சு விடயம் என்றால் எந்த மட்டத்திற்கும் இது நீளும்— நிறைந்ததாய் இருக்கும்; ஏதோ சின்னஞ்சிறிய அபாயம் கண்ணில் தட்டுப்படுகிறதென்றால் கூட மனம் கலங்கும், எச்சரிக்கை கூடும், கணக்குப் போட ஆரம்பித்து விடும்; அது தூண்டிய இயக்கம் மற்ற வர்க்கங்களால் கைப்பற்றிக் கொள்ளப்படுகிறது, தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது என்றவுடன் மிரண்டு போய்விடும், உஷாராகி விடும், நடுங்கத் தொடங்கும்; கையிலிருக்கும் ஆயுதங்களைக் கொண்டு போராடுவதைப் பற்றிய ஒரு கேள்வி வந்தவுடன் அதன் குட்டி-முதலாளித்துவ இருப்பைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மொத்த இயக்கத்துக்கும் துரோகமிழைக்கும்; இறுதியில் அதன் முடிவெடுக்க இயலா நிலையின் காரணத்தால் பிற்போக்குத்தனமான தரப்பு வெற்றியைச் சாதித்து விட்ட பின்னர், பெரும்பாலும் ஏமாற்றப்பட்டு மோசமாக நடத்தப்படும் என்பதை பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தில் போலவே ஜேர்மனியிலும் 1830 முதலான அனைத்து அரசியல் இயக்கங்களின் வரலாறும் காட்டுகிறது.23

1850 மார்ச்சில், “கழகத்தின் மத்திய குழுவிற்கு வழங்கிய உரை” என அழைக்கப்படும் ஒரு ஆவணத்தில் மார்க்சும் ஏங்கெல்சும் 1848 புரட்சியின் அரசியல் படிப்பினைகளை சுருங்கக் கூறியிருந்தனர். இந்த அசாதாரணமான ஆவணம், முந்தைய இரண்டு ஆண்டுகளின் புரட்சிகர அனுபவங்களின் அடிப்படையில், ஜனநாயகப் புரட்சியில் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான நலன்கள் மற்றும் வரலாற்றுப் பாத்திரத்தை ஸ்தாபிக்க முனைந்தன. தொழிலாள வர்க்கம், எல்லா நிலைமைகளின் கீழும், முதலாளித்துவ கட்சிகளிடம் இருந்து மட்டுமல்லாமல் ஜனநாயக குட்டி முதலாளித்துவ கட்சிகள் மற்றும் அமைப்புகளில் இருந்தும் தனது அரசியல் சுயாதீனத்தை பாதுகாத்து பராமரிக்க வேண்டும் என்று மார்க்சும் ஏங்கெல்சும் வலியுறுத்தினர். தொழிலாள வர்க்கம், நடுத்தர வர்க்க ஜனநாயகவாதிகளுக்கு எதிராக நிற்பதன் கீழமைந்த சமூக மோதலை அவர்கள் வலியுறுத்திக் காட்டினர்:

மொத்த சமூகத்தையும் புரட்சிகர பாட்டாளி வர்க்கத்தினருக்காய் உருமாற்றுவதற்கான விருப்பத்தில் இருந்து எல்லாம் வெகு தூரத்தில், ஜனநாயக குட்டி முதலாளித்துவவாதிகள் அவர்களால் முடிந்த அளவுக்கு நடப்பு சமூகத்தை அவர்களுக்கு சகித்துக் கொள்ள முடிவதாகவும் வசதியாகவும் இருக்கும்படி ஆக்குகின்ற வழிமுறையாக சமூக நிலைமைகளிலான ஒரு மாற்றத்திற்காக பாடுபடுகிறார்கள்.......

ஜனநாயக குட்டி முதலாளித்துவவாதிகள், புரட்சியை முடிந்த அளவுக்கு சீக்கிரம் முடிவுக்குக் கொண்டு வர விரும்புகிறார்கள் என்ற வேளையில் ... சற்றேறக்குறைய உடைமை வர்க்கம் மொத்தமும் அவர்களது மேலாதிக்க நிலையில் இருந்து விரட்டப்பட்டு, பாட்டாளி வர்க்கம் அரச அதிகாரத்தைக் கைப்பற்றி, ஒரு நாட்டில் மட்டுமல்லாமல் உலகின் முக்கியமான நாடுகள் அத்தனையிலுமே அவற்றின் பாட்டாளி வர்க்கத்திற்கு இடையிலான போட்டி மறைந்து குறைந்தபட்சம் தீர்மானகரமான உற்பத்தி சக்திகளேனும் பாட்டாளி வர்க்கத்தின் கரங்களில் குவிகின்ற அளவுக்கு பாட்டாளி வர்க்கத்தினரின் ஐக்கியம் முன்னேறுகின்ற வரை புரட்சியை நிரந்தரமாக ஆக்குவது நமது நலனும் நமது கடமையும் ஆகும்.24

“நிரந்தரமான புரட்சி”25 என்பதே பாட்டாளி வர்க்கத்தின் யுத்த முழக்கமாக இருக்க வேண்டும் என்ற அறிவிப்புடன் மார்க்சும் ஏங்கெல்சும் தமது உரையை முடித்தனர். அரை நூற்றாண்டுக்கும் அதிகமான காலத்திற்குப் பின்னர், ரஷ்ய சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் இரண்டாம் அகிலத்தின் மகத்தான தத்துவாசிரியர்கள், ரஷ்ய புரட்சியின் அரசியல் இயக்கவியலையும் வரலாற்றுக் கடமைகளையும் புரிந்து கொள்ள முனைந்தபோது, 1848 இன் அனுபவங்களையும் படிப்பினைகளையும் ஆய்வு செய்வதிலும் அதில் மீண்டும் உழைப்பதிலும் இறங்கினர்.

1 Lecture delivered at the summer school held by the Socialist Equality Party (US) in Ann Arbor, Michigan, July 2011.

2 பப்லோவாதம் என்பது 1950 களின் முற்பகுதியில் உருவான ஒரு குட்டி முதலாளித்துவ சந்தர்ப்பவாத போக்கு ஆகும். இது, 1953 இல் நான்காம் அகிலத்தில் இருந்து பிளவுற்றது. இந்த குழுவின் வரலாற்றை பற்றிய மதிப்பானது அத்தியாயம் 11, பக். 274-275 ல் வழங்கப்பட்டுள்ளது.

3 Available: http://www.attac.org/en/tags/tunisia/tunisia-social-and-democratic-revolution-underway

4 Available: http://socialistworker.org/2011/02/07/call-from-egyptian-socialists

5 See Chapter 10 of this volume.

6 Tom Henehan, a leading member of the Workers League (predecessor of the Socialist Equality Party), was shot to death in New York City on October 16, 1977. He was twenty-six years old.

7 [மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் தேர்வு நூல் திரட்டு, தொகுதி. 11, பக் 50-51]

8 [1848: புரட்சியின் ஆண்டு, ஆசிரியர் - மைக் ராப்போர்ட் (நியுயோர்க், 2008), பக். 13]

9 [மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் தேர்வு நூல் திரட்டு, தொகுதி 3, பக். 418].

10 Ibid., p. 182.

11 Ibid., p. 187.

12 Karl Marx and Frederick Engels, [தேர்வு நூல் திரட்டு, தொகுதி. 38, பக். 115]

13 Boris Nicolaevsky and Otto Maenchen-Helfen, Karl Marx: [மேற்கோள் காட்டப்பட்டது,’காரல் மார்க்ஸ்: மனிதனும் போராளியும்’ போரிஸ் நிகோலாவ்ஸ்கி மற்றும் ஓட்டோ மேன்சென் எழுதியது (பென்குவின் புக்ஸ், 1973), பக்.149]

14 Georges Duveau, [1848: ஒரு புரட்சியின் உருவாக்கம், ஆசிரியர் ஜோர்ஜ் டுவோ (நியூயோர்க்: 1967), பக். 85]

15 Gustave Flaubert, Sentimental Education (London: Penguin Books, 1975), pp. 342–343.

16 Alexander Herzen, From the Other Shore (Oxford: Oxford University Press, 1979), p. 53.

17 Ibid., p. 47.

18 Ibid., pp. 59–60

[இன்னொரு கரையில் இருந்து [இலண்டன்: 1956], பக். 59-60)]

19 Karl Marx and Frederick Engels, [தேர்வு நூல் படைப்பு, தொகுதி.10, பக். 67]

20 [அதே புத்தகம், பக். 69]

21 [அதே தொகுதி. பக். 71]

22 William L. Langer, [நவீன ஐரோப்பாவின் எழுச்சி: அரசியல் மற்றும் சமூக எழுச்சி, 1832-1852, ஆசிரியர் வில்லியம் எல். லாங்கர் (நியூயோர்க்: 1969) பக். 387]

23 Karl Marx and Frederick Engels, [தேர்வு நூல் திரட்டு, தொகுதி. 10, பக். 150]

24 [தேர்வு நூல் திரட்டு. தொகுதி. 10, பக். 280-281]

25 [அதே தொகுதி. பக்.287]

Loading