World Socialist Web Site www.wsws.org |
SEP (Germany) election statement A socialist program against social cuts and unemployment in Europe சோசலிச சமத்துவக் கட்சியின் (ஜேர்மனி) தேர்தல் அறிக்கை ஐரோப்பாவில் சமூக வெட்டுகள் மற்றும் வேலைவாய்ப்பின்மைக்கு எதிரான ஒரு சோசலிச வேலைத்திட்டம் 15 May 2013 செப்டம்பர் 22 அன்று நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலில் ஜேர்மனியின் மூன்று மாநிலங்களில் (Hessian, North Rhine Westphalia, Berlin) சோசலிச சமத்துவக் கட்சி (Partei für Soziale Gleichheit—PSG) மொத்தம் எட்டு வேட்பாளர்களை நிறுத்துகிறது. ஜேர்மன் தேர்தல் விதிப்படி கட்சி வேட்பாளர்களுக்கு அவசியமான ஆயிரக்கணக்கான ஆதரவுக் கையொப்பங்களை PSG இன் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் இப்போது திரட்டி வருகின்றனர். சமூக வெட்டுகளுக்கும், வேலைவாய்ப்பின்மைக்கும் மற்றும் இராணுவவாதத்திற்கும் எதிரான போராட்டத்திற்கும் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கும் ஜேர்மனியிலும் மற்றும் ஐரோப்பாவிலும் இருக்கும் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் ஐக்கியப்படுத்துவதே எமது இலக்காகும். எமது பிரச்சாரம் உலகெங்கும் புரட்சிகர சோசலிச தொழிலாளர் கட்சிகளைக் கட்டியெழுப்புவதற்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு நடத்திவரும் ஒரு உலகளாவிய பிரச்சாரத்தின் பாகமாக இருக்கும். 1930களுக்குப் பின் உலக முதலாளித்துவத்தின் மோசமான நெருக்கடிக்கு இடையே தான் இந்தத் தேர்தல் வருகிறது. பாரிய வர்க்கப் போராட்டங்களின் விளிம்பில் ஐரோப்பா நின்று கொண்டிருக்கிறது. இந்தக் கண்டமெங்கும் நீடித்துள்ள பணக்காரர்கள் மற்றும் ஏழைகளுக்கு இடையிலான பிளவு, பேர்லின் சுவர் மற்றும் “இரும்புத் திரை” ஆகியவற்றின் காலங்களைக் காட்டிலும் இன்று மிக அதிகமாய் ஆழமாய் விரிந்து விட்டிருக்கிறது. நாளுக்கு நாள் அதிகமான மக்கள் தமது அன்றாட வாழ்க்கைக்கும், வாடகைக்கும் அல்லது கல்விக்கும் கூட நிதியளிக்கமுடியாது சென்று கொண்டிருக்கும் நிலையில் சமூகத்தின் ஒரு சிலர் மட்டும் அருவருப்பூட்டும் வகையில் செல்வத்தில் திளைத்துக் கொண்டு தமது கட்டளைகளை இந்த சமூகத்தின் மேல் திணித்துக் கொண்டிருக்கின்றனர். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக, இந்த நிதிப் பிரபுத்துவத்தினர் தமது குற்றத்தனமான ஊகவணிகத்தின் மூலமாக உலகப் பொருளாதாரத்தை உடைவின் விளிம்புக்குக் கொண்டு சென்றனர். அதன்பின் நஷ்டத்திலுள்ள வங்கிகளை மீட்பதற்கென ஐரோப்பிய அரசாங்கங்கள் 1.6 டிரில்லியன் யூரோ மக்கள் பணத்தினை அமைப்புமுறைக்குள் பாய்ச்சினர். இப்போது அந்தப் பணம் சமூக நலம், கல்வி, ஓய்வூதியங்கள் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றின் மீதான வெட்டுகள் மூலம் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து கறக்கப்பட்டு வருகிறது. அங்கேலா மேர்க்கெல் தலைமையிலான அரசாங்கம் தான் இந்த நிகழ்வுப்போக்கிற்கு தலைமைப் பாத்திரம் வகிக்கிறது. 1933 பேரழிவு என்ற ஒன்றே நடக்காததைப் போல நாடகமாடும் ஜேர்மனி, ஐரோப்பாவெங்கும் மிருகத்தனமான சிக்கன நடவடிக்கைகளைத் திணிக்க வலியுறுத்துகிறது. அதன்மூலம் மில்லியன்கணக்கான மக்கள் வேலைவாய்ப்பின்மைக்குள்ளும் வறுமைக்குள்ளும் தள்ளப்பட்டுள்ளனர். ஐரோப்பாவின் பலவீனமான நாடுகளைக் கொள்ளையடித்து சூறையாடி மூலதனத்தை ஜேர்மனிக்குள் திசைதிருப்பி விடுவதற்கு, ஜேர்மனி, ஐரோப்பிய ஒன்றியத்தையும் யூரோவையும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. அதன் ஆணவப் போக்கு தேசிய குரோதங்களையும் போட்டிகளையும் கிளறிக்கொண்டிருக்கிறது. ஐரோப்பிய அரசாங்கங்கள் அடிப்படையாக ஒரு விஷயத்தில் உடன்படுகின்றன: நெருக்கடியின் சுமை ஒட்டுமொத்தமாக தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்தப்பட வேண்டும் என்பது தான் அது. ஐரோப்பிய ஒன்றியம் இப்போது தனது உண்மையான முகத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது. “ஐரோப்பிய ஐக்கியத்தின்” உருவடிவமாக திகழ்வதற்கு பதிலாக, அது ஐரோப்பா மீது நிதிமூலதனம் செலுத்தும் சர்வாதிகாரத்தையே பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டிருக்கிறது. புரூசெல்ஸ் மற்றும் பேர்லினில் இருந்து வரும் உத்தரவுகள் சமூகநல திட்டங்களை அழித்து, மில்லியன் கணக்கான மூத்த குடிமக்களுக்கு அவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த ஓய்வூதியங்களை இல்லாமல் செய்து கொண்டிருப்பதோடு, எண்ணற்ற குடும்பங்களை பற்றாக்குறைக்குள்ளும் துயரத்திற்குள்ளும் தள்ளிக் கொண்டிருக்கிறது. போட்டித்திறன் என்ற பேரில் ஐரோப்பாவெங்கும் ”சீன நிலைமை”களை உருவாக்குவது தான் ஐரோப்பிய உயரடுக்கினரின் நோக்கமாக உள்ளது. கிரீஸின் நிலைமை, ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்காலத்தை எடுத்துக் காட்டுவதாக உள்ளது. மூன்று வருட காலத்திற்குள்ளான ஐந்து சிக்கன நடவடிக்கைத் திட்டங்கள் வேலைவாய்ப்பின்மையை வெடித்துப் பெருக இட்டுச்சென்றுள்ளது. சம்பளங்களும் ஓய்வூதியங்களும் சராசரியாக 40 சதவீதம் வரை சரிந்திருக்கிறது. நாட்டின் சுகாதார மற்றும் கல்வி அமைப்புமுறைகள் நொருங்கிக் கொண்டிருக்கின்றன. வறுமை, பசி, மற்றும் வீடின்மை பரவிக் கொண்டேயிருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தில் இப்போது 26 மில்லியன் மக்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கின்றனர். ஸ்பெயினிலும் கிரீசிலும் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு வயதானவர்களும், மூன்றில் இரண்டு பங்கு இளைஞர்களும் வேலைவாய்ப்பின்றி உள்ளனர். ஜேர்மனியில் உத்தியோகபூர்வ வேலைவாய்ப்பின்மை வெறும் 7 சதவீதமாக இருக்கையில், 42 மில்லியன் தொழிலாளர்களில் 29 மில்லியன் மக்கள் மட்டுமே சமூகக் காப்புறுதி கொண்டுள்ளனர். எஞ்சியவர்கள் எல்லாம் உத்தரவாதமற்ற நிலைமைகளில் வாழ்கின்றனர். இவர்களில் 4 மில்லியன் பேர் மணிக்கு 7 யூரோவுக்கும் குறைவாக ஊதியம் பெறுகின்றனர். சமூகத்தின் இன்னொரு முனையில், நிதிப் பிரபுத்துவத்தினரோ தங்களை இந்த நெருக்கடி மூலம் வளப்படுத்திக் கொண்டுள்ளனர். பங்குச் சந்தையில் பங்கு விலைகள் எல்லாம், எப்போதிலும் அதிகமான விலையில் இருக்கின்றன. ஜேர்மன் மக்கள் தொகையில் மிகச் செல்வம் படைத்த 1 சதவீதத்தினரின் கையில் தான், மொத்த நிதிச் சொத்துகளில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானது உள்ளது. இது எதிர்முனையில் இருக்கும் வறுமைப்பட்ட 90 சதவீதத்தினரின் மொத்த சொத்துகளைவிட அதிகமானதாகும். ஜேர்மனியின் பட்டியலிடப்பட்ட பெருநிறுவனம் ஒன்றின் நிர்வாக்குழு உறுப்பினர் சுமார் 200 தொழிலாளர்களின் ஊதியத்தை சம்பாதிக்கிறார். இது 25 வருடங்களுக்கு முன்பிருந்ததைக் காட்டிலும் 10 மடங்கு அதிகமாகும். கடனினுள் மூழ்கியுள்ள நாடுகளின் பிணையெடுப்பு நிதிகளும் கூட நிதிப் பிரபுத்துவத்தின் வங்கிக் கணக்கில் தான் சென்று சேர்கிறது. கிரீசுக்கு உதவியாக ஒதுக்கப்பட்ட 188 பில்லியன் யூரோவில் 5 பில்லியன் யூரோ மட்டுமே கிரீசின் வரவு-செலவுத் திட்டத்தினை சென்றடைந்தது. எஞ்சியதெல்லாம் வங்கிகளுக்குள்ளும், தனியார் முதலீட்டு நிதியங்களுக்கும் மற்றும் பிற தனியார் கடன் வழங்குவோரிடமும் சென்றுவிட்டது. ஐரோப்பாவெங்கும் சமூகப் பதட்டங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. அதிருப்தியும், கோபமும், வெறுப்பும் பெருகிக் கொண்டிருக்கிறது. இடைவிடாத சமூகத் தாக்குதல்களின் ஒரு பின்புலத்தில், மக்களின் பரந்த அடுக்குகள் முதலாளித்துவத்தின் பொருளாதார சாத்தியமான தன்மையிலும் தார்மீக நியாயப்படுத்தலிலும் நம்பிக்கையிழந்து கொண்டிருக்கின்றனர். ஐரோப்பா “பற்றியெரிவதற்கு” இன்னும் எத்தனை காலம் எடுக்கும் என்பதை முதலாளித்துவ ஊடகங்கள் வெளிப்படையாக விவாதித்துக் கொண்டிருக்கின்றன. தொழிலாளர்கள், இளைஞர்கள், வேலைவாய்ப்பற்றோர் மற்றும் ஓய்வூதியம்பெறுவோர் ஆகியோரின் நலன்கள் ஐரோப்பாவின் உத்தியோகபூர்வ அரசியல் வாழ்வில் வெளிப்பாடு காண வழியின்றி இருக்கிறது. ஆயினும் மேற்பரப்புக்கு கீழே ஒரு பெரும் சமூக பூகம்பம் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு பதிலிறுப்பாக அனைத்துக் ஆளும்கட்சிகளும் தம்மை ஒற்றுமைப்படுத்திக் கொள்கின்றன. அவை தம்மை பழைமைவாத, தாராளவாத, சமூக ஜனநாயக, பசுமைக் கட்சிகள் அல்லது “இடது” கட்சிகள் என என்ன பெயரில் அழைத்துக் கொள்கின்ற போதும், தேசிய நீரோட்டத்தில் இருக்கும் அத்தனை கட்சிகளுமே ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கை கட்டளைகளை ஆதரிக்கின்றன அல்லது அந்த கட்டளைகளுக்கான எதிர்ப்பை ஒரு வலதுசாரி பேரினவாத திசையில் திசைமாற்றி விட முயற்சி செய்கின்றன. ஐரோப்பிய சோசலிச அரசுகளின் ஒன்றியம் பேர்லின் மற்றும் புரூசல்ஸில் இருந்து வரும் சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளுக்கான பரந்துபட்ட எதிர்ப்புக்கு ஒரு குரலையும் அரசியல் நோக்குநிலையையும் PSG இன் தேர்தல் பிரச்சாரம் கொடுக்கும். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் தேசியவாதத்தின் அத்தனை வடிவங்கள் இரண்டையுமே நிராகரிக்கின்ற ஒரே கட்சி PSG மட்டுமே. எங்களது இலட்சியம் ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளாகும். ஐரோப்பாவை சோசலிச அடிப்படையில் ஐக்கியப்படுத்துவதன் மூலமாக மட்டுமே தொழிலாள வர்க்கமானது தமது சொந்த நலன்களை முன்னிலைப்படுத்தவும், ஐரோப்பாவை மீண்டும் தேசியவாதம் மற்றும் போருக்குள் அமிழ்ந்து விடாமல் தடுக்கவும், அத்துடன் கண்டத்தின் பிரம்மாண்டமான செல்வம் மற்றும் உற்பத்தி சக்திகளை ஒட்டுமொத்தமாய் சமூகத்தின் நலன்களுக்கு சேவை செய்வதற்காக பயன்படுத்தவும் முடியும். உலக முதலாளித்துவ அமைப்பு முறையின் திவால்நிலையே பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிக்கான காரணம் ஆகும். முதலாளித்துவத்தை இனி சீர்திருத்த முடியாது. இந்த நெருக்கடியில் இருந்து வெளியில் வருவதற்கும் நெருக்குகின்ற சமூகப் பிரச்சினைகளை கையாளுவதற்கும் முன்னெடுக்கப்படும் முயற்சிகள் எல்லாம் உற்பத்திச் சாதனங்கள் தனியார் உடமைகளாய் இருப்பதிலும், முதலாளித்துவ சந்தையின் அராஜகத்திலும், இலாப அமைப்புமுறையின் பொருளாதாரத் தேவைகளிலும், மேலும் ஆளும் வர்க்கத்தின் தணியாத பேராசைகளினாலும் தோல்வியடைகின்றன. நிதிய தன்னலக் குழுவின் சக்தியை உடைக்காமல் எந்தவொரு தனி சமூகப் பிரச்சினையும் கூடத் தீர்க்கப்பட்டு விட முடியாது. இதற்கு பெரு நிறுவனங்களையும் வங்கிகளையும் சமூக உடைமையின் கீழ் கொண்டுவருவது அவசியமாக இருக்கிறது. தனியார் உடைமையாக இருக்கும்போது இவை பங்குதாரர்கள் மற்றும் உரிமையாளர்களின் இலாபத்திற்காக மட்டுமே பயன்பட்டுக் கொண்டிருக்கின்றன. சமூக உடைமையாக்கப்பட்டு ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும்போது, அவை வேலைகள், கல்வி, கலாச்சாரம், சுகாதாரம், முதியோர் பராமரிப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு போன்றவற்றைப் பாதுகாப்பது போன்ற சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காய் பயன்படுத்தப்பட முடியும். இந்த சோசலிச வேலைத்திட்டத்தை யதார்த்தமாக்கும் இலக்குடன், தேசிய, இன மற்றும் பிற எல்லைகள் கடந்து ஐரோப்பியத் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்காக நாம் போராடுகிறோம். குறிப்பாக கிழக்கு ஐரோப்பா, துருக்கி, வடஆபிரிக்கா மற்றும் இன்னும் பல நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து ஜேர்மனியிலும் ஐரோப்பாவிலும் வாழும் மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்த மக்களை நோக்கி நாங்கள் திரும்புகிறோம். சமூக எதிர்ப்புரட்சிக்கு எதிராகப் போராடுவதற்கு தொழிலாளர்கள் கட்டாயம் ஐக்கியப்பட வேண்டும். தன்னைப் பிளவுபடுத்த செய்யப்படும் முயற்சிகளை வென்று விட்டால் தொழிலாள வர்க்கம் ஒரு வெல்ல முடியாத சக்தியாக ஆகிவிடும். எமது பிரச்சாரத்தில் நாங்கள் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் மற்ற பிரிவுகளுடன் நெருக்கமாக வேலை செய்கிறோம். ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் நாங்கள் எங்களது வேலைத்திட்டத்தை முன்வைக்கிறோம். இப்போதிருக்கின்ற ஸ்தாபனங்கள், அரசாங்கங்கள், மற்றும் கட்சிகளின் அடிப்படையில் ஒரு சோசலிச வேலைத்திட்டம் செயல்படுத்தப்பட முடியாது. தொழிலாள வர்க்கம் அரசியல் நிகழ்ச்சிப்போக்கில் செயலூக்கத்துடன் தலையிட்டு மக்களின் மிகப் பெரும்பான்மையான தொழிலாள வர்க்கத்தில் தங்கியிருக்கும் தொழிலாளர்’ அரசாங்கங்களை ஸ்தாபிக்க போராடுவது இதற்கு அவசியமாக இருக்கிறது. PSG இன் வேலைத்திட்டம் தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் தேவைகளுக்காய் அர்ப்பணிக்கப்பட்டதாகும். அவற்றை இது சோசலிசப் புரட்சியின் வேலைத்திட்டத்துடன் இணைக்கிறது. வேலைகள், கல்வி, சுகாதாரப் பராமரிப்பு, செலவுகுறைந்த வீட்டுவசதி, மற்றும் கண்ணியமான முதிய காலப் பராமரிப்பு ஆகியவை இலாபத்தின் பலிபீடத்திற்கு தியாகம்செய்யப்படமுடியாத அடிப்படை உரிமைகளாகும். தொழிலாளர்களின் போராடும் தன்மையையும் சுயாதீனத்தையும் அதிகரிக்க உதவும் அத்தனை ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களையும் நாங்கள் ஆதரிக்கிறோம். ஆயினும், முதலாளித்துவத்தை பாதுகாப்பதுடன் அதனை எதிர்ப்பவர்களை ஒடுக்குகின்ற தொழிற்சங்கங்கள் மற்றும் அத்தனை பிற அமைப்புகளிலும் இருந்தும் சுயாதீனமான முறையிலேயே இப்போராட்டங்கள் எல்லாம் நடத்தப்பட முடியும் என்பதே இதற்கான முன்நிபந்தனையாகும். தொழிற்சங்கங்கள் எல்லாம் தொழிலாளர்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் இருந்து எப்போதோ அகன்று விட்டன. இப்போது தொழிலாள வர்க்கத்திலிருந்து அந்நியப்பட்டதும் விரோதமானதுமான ஒரு அதிகாரத்துவ அமைப்பையே அவை பிரதிநிதித்துவம் செய்கின்றன. அவர்கள் தொழிலாளர்களை அச்சுறுத்துவதற்கும், ஒடுக்குவதற்குமாக இணை மேலாளர்களைப் போல் தாராளமான ஊதியங்கள் தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு வழங்கப்படுகின்றன. ஜேர்மனியில் ஒவ்வொரு வேலைநீக்கத்திலும், ஊதிய வெட்டிலும் மற்றும் ஆலை மூடலிலும் தொழிற்சங்கங்கள் மற்றும் அவற்றின் தொழிற்சாலை தொழிலாளர் குழுவின் நிர்வாகிகளின் கையொப்பம் இருக்கிறது. மிக சமீபத்தில் போஹுமில் (Bochum) ஓப்பல் ஆலை மூடபட்டபோது, IG Metall தொழிற்சங்கம் மற்றும் அதன் மத்திய தொழிற்சாலை தொழிலாளர் குழுவின் ஆதரவுடன் தான் அது நடந்தது. வேலையிடங்களிலும் குடியிருப்புபகுதிகளிலும் நடவடிக்கைக் குழுக்கள் அமைக்கப்பட்டு தொழிற்சாலை மூடல்கள், வேலையிழப்புகள், மற்றும் சமூக சேவைகளிலான வெட்டுகள் ஆகியவற்றுக்கு எதிரான எதிர்ப்பை ஒழுங்கமைப்பதற்கும், அத்துடன் மற்ற நகரங்கள் மற்றும் நாடுகளில் உள்ள தொழிலாளர்களுடன் வலிமையான இணைப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கும் நாங்கள் வழிமொழிகின்றோம். சர்வாதிகாரத்திற்கும் போருக்கு எதிராக போருக்கு எதிரான போராட்டமும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டமுமே PSG இன் வேலைத்திட்டத்தில் மத்திய இடத்தைப் பெற்றிருக்கின்றன. 80 வருடங்களுக்கு முன்பு போலவே இன்றும் ஆளும் வர்க்கமானது ஆழமடையும் சமூக நெருக்கடிக்குப் பதிலிறுப்பாக அரசு எந்திரத்தை வலிமைப்படுத்துவதையும் இராணுவவாதத்தை அதிகரிப்பதையும் செய்து வருகின்றன. ஜனநாயகத் தேர்தல் எல்லாம் அர்த்தமற்ற ஒரு செயலாக சீரழிந்து விட்டிருக்கின்றன. வாக்காளர்களின் விருப்பம் என்னவாக இருந்தாலும், நிதிச் சந்தைகளாலேயே அரசாங்கக் கொள்கைகள் தீர்மானிக்கப்படுவதாய் இருக்கிறது. சமூக எதிர்ப்பை ஒடுக்கும் பொருட்டு ஐரோப்பா முழுவதிலும் அரசு எந்திரம் வலுவூட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஜேர்மனியில் மத்திய அரசின் அரசியல்சட்ட நீதிமன்றமானது இரண்டாம் உலகயுத்தத்திற்கு பிந்தைய போலிஸ் மற்றும் இரகசிய சேவைகளுக்கு இடையிலான பிரிவை இல்லாதாக்கி விட்டிருப்பதோடு இராணுவம் உள்நாட்டுப் பிரச்சினைகளில் தலையிடுவதற்கும் அங்கீகாரமளித்திருக்கிறது. அமெரிக்கா இந்த விடயத்தில் முன்மாதிரியாகக் கொள்ளப்படுகிறது. 2011, செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குப் பின்னர், தாயகப் பாதுகாப்புத் துறை என்ற ஒன்று கண்காணிப்பு மற்றும் ஒடுக்குமுறைக்கான சகல அதிகாரமும் பொருந்திய அமைப்பாக உருவாக்கப்பட்டது. செல்வாக்கு மண்டலங்கள், சந்தைகள் மற்றும் மூலவளங்களுக்கான சண்டையில் தங்களை மும்முரமாக நுழைத்துக் கொள்வதின் மூலம் தான் ஐரோப்பிய சக்திகள் பொருளாதார நெருக்கடிக்கு தமது பிரதிபலிப்பை காட்டிக்கொண்டிருக்கின்றன. புதிய “ஆபிரிக்காவிற்கான போட்டி”யில் பிரான்ஸ் தலைமையானதொரு பாத்திரம் வகித்துக் கொண்டிருக்கிறது. சீனாவின் பெருகும் செல்வாக்கைக் குறிவைப்பதே இதன் பிரதான இலக்காக இருக்கிறது. லிபியப் போரில் முன்னெடுத்துச் செயல்பட்ட பிரான்ஸ், அதன்பின் மேலும் முன்னேறி, மாலிக்கு தனது சொந்த துருப்புகளை அனுப்பியது. ஜேர்மனியும், ஆரம்பத்தில் சற்று தயக்கம் காட்டினாலும், இப்போது இந்த ஏகாதிபத்தியப் போர்களில் முழு மூச்சாகப் பங்குபெற்று வருகிறது. ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் நோக்கங்களை அதிகமாய் இராணுவ வழிமுறைகள் மூலமாக அடையும் பொருட்டு, பத்துக்கு மேற்பட்ட சர்வதேச போர் பிராந்தியங்களில் ஜேர்மன் இராணுவம் செயலூக்கத்துடன் பங்குபற்றிக் கொண்டிருக்கிறது. “சுதந்திரமான வர்த்தகப் பாதைகளைப் பாதுகாப்பது”, ”மூலப்பொருட்களின் பாதுகாப்பான விநியோகத்தை பாதுகாப்பது”, “இயற்கை மூலவளங்கள், விநியோக வழிகள் மற்றும் சந்தைகளுக்கான அணுகலைப் பாதுகாப்பது மற்றும் அபிவிருத்தி செய்வது” இவையே முன்னுரிமைகள் என பாதுகாப்புத் துறையின் உத்தியோகப்பூர்வ வழிகாட்டல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக, ஜேர்மனி தான் உலகின் மிகப் பெரும் ஆயுத ஏற்றுமதியாளராக இருக்கிறது. தனது பொருளாதார வலிமையின் வீழ்ச்சியை இராணுவ வலிமையைக் கொண்டு நிவர்த்திசெய்ய முயன்று கொண்டும், வெடிப்புமிகுந்த உள்நாட்டு சமூகப் பதட்டங்களை வெளிநாட்டு எதிரிகளின் பக்கம் திருப்பி விட்டுக் கொண்டும் இருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை நோக்கி ஐரோப்பிய நாடுகள் நோக்குநிலை கொண்டிருக்கின்றன. இந்த நூற்றாண்டு தொடங்கியதற்குப் பின், அமெரிக்காவும் அதன் கூட்டாளி நாடுகளும் ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் மற்றும் லிபியாவிலும் என மூன்று பெரிய போர்களில் ஈடுபட்டு அம்மக்களுக்கும் அச்சமூகங்களுக்கும் நாசகரமான பின்விளைவுகளை அளித்துள்ளன. இப்போது அவை சிரியா மற்றும் ஈரானிற்கு எதிராகவும் போர்த் தயாரிப்புகளில் இருக்கின்றன. ஈரானுடன் நட்பான ஜனாதிபதி அசாத்தின் ஆட்சியைத் தூக்கியெறியும் பொருட்டு சிரியாவில் இவை ஒரு குறுங்குழுவாத உள்நாட்டுப் போருக்கு ஊக்கமளித்துக் கொண்டிருக்கின்றன. அவ்வாறு செய்கையில், “பயங்கரவாதத்தின் மீதான போருக்கு” எந்த இஸ்லாமிய சக்திகளைக் போலிக்காரணமாக கூறினார்களோ அந்த சக்திகளுக்கே இப்போது ஆதரவும் ஆயுதமும் வழங்கிக் கொண்டிருக்கின்றனர். மத்திய கிழக்கில் இன்னொரு இரத்த ஆற்றுக்கு தயாரிப்பு செய்து வருவதற்கு இடையே, அமெரிக்கா தனது இராணுவ சக்தியின் கவனத்தை ஆசியப் பசிபிக் பிராந்தியத்தை நோக்கித் திருப்பியிருக்கிறது. இப்பகுதியில் சீனாவின் எழுச்சியைக் குறைப்பதே இதன் நோக்கமாகும். ஜனாதிபதி ஒபாமா அறிவித்த “ஆசியாவிற்கு முன்னுரிமை கொடுத்தலின்” ஒரு பகுதியாக அமெரிக்கா தனது பொருளாதார எதிரிகளை திட்டமிட்டு சுற்றி வளைத்து வருகிறது. அப்பகுதிகளில் தனது பிராந்தியக் கூட்டாளிகளுக்கு ஆயுதமளிப்பது, தென் சீனக் கடலில் பிராந்திய மோதல்களுக்கு எரியூட்டுவது ஆகிய வேலைகளில் அது இறங்கியிருக்கிறது. ஒட்டுமொத்த மனித நாகரிகத்தின் எதிர்காலத்தையும் அச்சுறுத்தக் கூடிய ஒரு அணுஆயுதப் போருக்கு இந்த நிகழ்வுகளின் தர்க்கம் இட்டுச்செல்கிறது. ”பென்டகன் ’இதுவரை சிந்திக்காத ஒன்றை’, அதாவது சீனாவுக்கு எதிராக சாத்தியமாகக் கூடிய போரில் வெற்றி பெறுவதற்கான ஒரு இராணுவ மூலோபாயம் குறித்து, சிந்திக்கத் தொடங்கியிருப்பதாக ஆஸ்திரேலிய மூலோபாயக் கொள்கை நிறுவனம் (ASPI) சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளது. ஏகாதிபத்திய அரசாங்கங்களிடம் அமைதிவாத கோரிக்கைகளை வைப்பதன் மூலம் மூன்றாம் உலகப் போரின் அபாயம் இல்லாதொழிக்கப்பட முடியாது. ஏகாதிபத்தியப் போருக்கு எதிரான போராட்டம் என்பது அப்போரின் மூல காரணமான முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டம் என்பதுடன் பிரிக்கவியலாமல் இணைந்துள்ளது. அதிகரிக்கும் போர் அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டத்தில் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்காக PSGஉம் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் போராடிவருகின்றன. மத்திய கிழக்கு, ஆபிரிக்கா மற்றும் ஆசியப் பசிபிக் பகுதிகளில் போர் மற்றும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பின் அதிகரிக்கும் அபாயங்களை திட்டவட்டமாக எதிர்க்கும் ஒரே அரசியல் சக்தியாக நாங்கள் மட்டுமே உள்ளோம். எங்களது ஆஸ்திரேலியப் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி (ஆஸ்திரேலியா) உம் தனது தேர்தல் பிரச்சாரத்தின் மையத்தில் இந்தப் பிரச்சினையை வைத்துள்ளது. இராணுவவாதத்தையும் அரசு சக்திகளுக்கு வலிமையூட்டலையும் தொழிலாள வர்க்கமும், மக்களின் பரந்த பிரிவினரும் நிராகரிக்கின்றன. இருந்தபோதிலும் இந்த எதிர்ப்பும், சமுக வெட்டுகளுக்கான எதிர்ப்பினைப் போலவே, உத்தியோகப்பூர்வ அரசியலில் எந்த வெளிப்பாட்டையும் காணவில்லை. 2003 இல் ஈராக் போருக்கு எதிரான வெகுஜன ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவளித்த இடது கட்சி மற்றும் போலி-இடது குழுக்கள் எல்லாம் இப்போது சிரியாவுக்கு எதிரான போரின் முழு மூச்சான ஆதரவாளர்களாக நிற்கின்றன. முதலாம் உலகப் போர் சமயத்தில், அமைதிவாதிகள், தொழிற்சங்கங்கள், மற்றும் சமூக ஜனநாயகக் கட்சியின் பெரும் பிரிவுகள் எல்லாம் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் முகாமுக்குள் கடந்துசென்றன. இப்போது இடது கட்சியும் அதன் போலி-இடது ஆதரவுக்குழுக்களும் அதே பாதையில் தான் பயணம் செய்கின்றன. ஒரு புதிய தொழிலாளர் கட்சியைக் கட்டியெழுப்புதல் ஒரு புதிய தொழிலாளர் கட்சியைக் கட்டியெழுப்புவதே PSG இன் தேர்தல் பிரச்சாரத்தின் மையத்தானத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. ஒரு காலத்தில் தொழிலாளர்கள் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக் கொண்ட கட்சிகள் அனைத்தும் முழுமையாக ஆளும் வர்க்கத்தின் முகாமுக்கு நகர்ந்து விட்டிருக்கின்றன. இந்த ஆண்டில் சமூக ஜனநாயகக் கட்சி அது ஸ்தாபிக்கப்பட்ட 150வது ஆண்டினைக் கொண்டாடுகிறது. இன்னும் ஒரு வருடம் பொறுத்திருந்து முதலாம் உலகப் போருக்கு அக்கட்சி ஆதரவளித்த 100வது ஆண்டையும் இணைத்து கொண்டாடியிருந்தால் அது மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும். அது தான் கட்சியின் இப்போதைய கொள்கைகளுக்கு மிகப் பொருத்தமானதாய் இருக்கும். தொழிலாள வர்க்கத்தின் ஒரு மார்க்சிச வெகுஜனக் கட்சியைக் கட்டியெழுப்பிய ஆகஸ்ட் பேபல் மற்றும் வில்ஹேம் லிப்னெக்ட் போன்ற சமூக ஜனநாயகக் கட்சி தலைவர்களுக்கும் சிக்மர் காப்ரியல் மற்றும் பியர் ஸ்ரைன்புரூக் போன்ற இப்போதைய சமூக ஜனநாயகக் கட்சி தலைவர்களுக்கும் எந்தவொரு சம்பந்தமும் கிடையாது. தொழிலாள வர்க்கத்திற்கு கல்வியூட்டி அதனை சமூகத்தை நடத்துமளவுக்குக் இட்டுச்செல்ல முடியும் என்பதில் பேபல் திடமான நம்பிக்கை கொண்டிருந்தார். தொழிலாளர்கள் எதையும் ஞாபகம் வைத்துக் கொள்ள மாட்டார்கள், அவர்களை முட்டாள்களைப் போல நடத்தலாம் என்பது தான் காப்ரியல் மற்றும் அவர் போன்றோரின் சிந்தனையாக இருக்கிறது. நிதி மூலதனத்தின் முகாமில் தான் சமூக ஜனநாயகக் கட்சியின் இரண்டு கால்களும் ஆழமாய் வேரூன்றியிருப்பதை திட்டநிரல் 2010 மற்றும் ஹார்ட்ஸ் IV ஆகியவை மூலமாக சமூக ஜனநாயகக் கட்சி எடுத்துக் காட்டி விட்டது. போருக்குப் பிந்தைய காலகட்டத்தின் பொருளாதார எழுச்சியின் போது சமூக ஜனநாயகக் கட்சி தற்காலிகமாக அதிகாரத்திற்கு வர உதவிய சமூக சீர்திருத்தங்களின் வேலைத்திட்டத்தை பொருளாதார பூகோளமயமாக்கல் முழுமையாக இல்லாதொழித்துவிட்டது. இப்போது மற்ற முதலாளித்துவக் கட்சிகளுக்கும் இதற்கும் இடையில் ஒரு சிறு புள்ளி வித்தியாசம் கூட இல்லாமல் போய் விட்டது. பசுமைக் கட்சியினர் 1968 ஆர்ப்பாட்ட அரசியல் தலைமுறையின் ஒரு விசுவாசமான பிரதிபலிப்பாக உள்ளனர். அவர்கள் இளைஞர்களாய் இருந்தபோது தத்தமது தந்தைகளுக்கு எதிராய் கலகம் செய்தனர். முதலாளித்துவ சமூகத்தின் தளைகளில் இருந்து தனிமனிதனை விடுவிப்பதில் ஆர்வம் காட்டினர். இதில் அவர்கள் தொழிலாள வர்க்கத்தையும் சேர்த்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து அவர்களின் சமூக உயர்வு வலதுபக்கம் நோக்கிய தொடர்ந்த நகர்வும் வந்தது. 1998 இல் அரசாங்கத்திற்குள் அவர்கள் காலடி எடுத்து வைத்ததைத் தொடர்ந்து, தமது அமைதிவாததையும் சமூகப் பிரச்சினைகளுக்கு தாங்கள் உதட்டளவில் செய்து வந்த சேவையையும் கூட கைவிட்டு விட்டனர். இப்போது அவர்களுக்கும் வணிக ஆதரவு தாராளவாத ஜனநாயகக் கட்சிக்கும் (FDP) இடையிலான வித்தியாசம் வாழ்க்கைப் பாணியில் மட்டும் தான். கட்சி உறுப்பினர்களின் சராசரி வருமானம் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்றுள்ள அத்தனை கட்சிகளது அங்கத்தவர்களினது சராசரிகளைவிட மிக அதிகமானதாகும். இவர்கள் சிக்கன நடவடிக்கையையும் இராணுவவாதத்தையும் ஆதரிப்பதோடு லிபியப் போரில் பங்கேற்கத் தவறியதற்காக வலது பக்கத்தில் இருந்து மேர்கல் அரசாங்கத்தின் மீது விமர்சனம் வைக்கின்றனர். எல்லா முதலாளித்துவக் கட்சிகளிலும் மிகவும் உருக்குலைந்து போன நிலையில் இருப்பது இடது கட்சியாகும். அதன் பெயரைத் தவிர வேறு எங்கிலும் ’இடது’ கிடையாது. மற்ற கட்சிகளைப் போலவே இக்கட்சியும் சமூகநல உதவி வெட்டுகளையும், அரசு அமைப்பு மற்றும் இராணுவவாதம் வலுவூட்டப்படுவதையும் ஆதரிக்கிறது. ஐரோப்பாவில் சமூக எதிர்ப்புரட்சிக்கான மிக முக்கியமான கருவியாக இருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தை இது பாதுகாத்துப் பேசுகிறது. இது அரசாங்கத்தில் பங்குபற்றிய சந்தர்ப்பங்களில் எல்லாமே, சமூகச் செலவினத்தை வெட்டியிருப்பதோடு அரசு எந்திரத்தை வலுப்படுத்தியுமிருக்கிறது. வெளியுறவுக் கொள்கையில், இடது கட்சி வெளியுறவு அமைச்சகத்தின் ஒரு அங்கம் போல் செயல்படுகிறது. சிரியாவில் இக்கட்சி ஏகாதிபத்திய-ஆதரவு சிரியஎதிர்ப்பாளர்களுடன் நெருக்கமாகச் செயல்படுகிறது. சிரியாவில் ஏகாதிபத்தியம் தலையீடு செய்வதற்கு அழைக்கும் ஒரு அறிக்கையில் சமூக ஜனநாயகக் கட்சி, பசுமைக் கட்சி, மற்றும் ஆளும் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம் ஆகியவற்றின் முன்னணி உறுப்பினர்களுடன் சேர்ந்து இடது கட்சித் தலைவர் கட்ஜா கிப்பிங்கும் கையொப்பமிட்டிருந்தார். இடது கட்சியின் சமூக வார்த்தைஜாலங்கள் எல்லாம் தொழிலாள வர்க்கத்தைக் குழப்பி ஒரு சுயாதீனமான சோசலிச இயக்கத்தை தடுப்பதற்கே பயன்படுத்தப்படுகின்றன. இந்த விடயத்தில் இடது கட்சி ஒரு நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டதாகும். அதன் வேர்கள் தேசியமயமாக்கப்பட்ட சொத்துடைமையில் ஒரு ஒட்டுண்ணியைப்போல் இருந்ததும் மற்றும் தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியாக ஒடுக்கிய கிழக்கு ஜேர்மனியின் முன்னாள் அரச கட்சிக்கு இட்டுச் செல்லும். முதலாளித்துவம் மறுபுனருத்தானம் செய்யப்படுவதை தொழிலாள வர்க்கத்தின் நலன்களைக் பலிகொடுத்து தங்களின் வளத்தைப் பெருக்கிக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பாகவே அக்கட்சியினர் கருதினர். கிழக்கு ஜேர்மனியின் கடைசிப் பிரதமரான ஹான்ஸ் மோட்ரோ தனது நினைவுகளை பற்றி எழுதியது போல, ஜேர்மன் மறுஐக்கியத்தை நோக்கிய பாதை என்பது அவர்களைப் பொறுத்தவரை, “மிக அவசியமானதாகவும் முழு உறுதியுடன் பின்பற்றவேண்டியதாகவும்” இருந்தது. மேற்கில் இடது கட்சி என்பது அனுபவம்மிக்க முன்னாள் தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர் மற்றும் முன்னாள் சமூக ஜனநாயக் கட்சி நிர்வாகிகள் ஆகியோரை அடித்தளமாக கொண்டிருக்கின்றது. ஹார்ட்ஸ் சட்டங்களுக்கு எதிரான எதிர்ப்பு புரட்சிகர வடிவங்களை எடுப்பதை தவிர்க்கும் பொருட்டு இவ்வதிகாரத்தினர் சமூக ஜனநாயக் கட்சியில் இருந்து விலகி கிழக்கு ஜேர்மன் ஸ்ராலினிஸ்டுகளுடன் கைகோர்த்தனர். சமூக ஜனநாயக் கட்சி மற்றும் பசுமைக் கட்சியினர் ஆட்சியதிகாரத்திற்கு திரும்ப உதவுவது என்பதே அவர்களது இலக்காக இருக்கின்றது. பிரிட்டனின் சோசலிஸ்ட் கட்சி மற்றும் சோசலிச தொழிலாளர் கட்சியுடன் இணைந்த சோசலிச மாற்றீடு (SAV) மற்றும் மார்க்ஸ் 21 - போன்ற போலி இடது குழுக்களுக்கு இடது கட்சியின் இத்தகைய தொழிலாளர் விரோதக் கொள்கைகள் கவர்ந்திழுத்ததால் அவையும் இக்கட்சிக்குள் நுழைந்திருக்கின்றன. தொழிலாள வர்க்கத்தை ஒடுக்குவதன் மூலம் ஆதாயமடைந்திருக்கக் கூடிய ஒரு வசதியான நடுத்தர வர்க்க பிரிவினரின் நலன்களையே இக்குழுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றன. இடது கட்சிக்குள்ளான நுழைவு அவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களாக வழிவகை செய்திருப்பதோடு இடது கட்சி மற்றும் அதன் ரோசா லுக்சம்பேர்க் அறக்கட்டளை ஆகியவற்றின் கணிசமான நிதிய வளங்களை அணுகுவதற்கும் வசதி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. முதலாளித்துவ அரசிற்குள் இன்னும் ஆழமாக தங்களை ஒருங்கிணைத்துக் கொள்வதற்கான வாய்ப்பாகவே பொருளாதார நெருக்கடியை இவை கருதுகின்றன. இடது கட்சிக்குள்ளாக, இவர்களே வலது-சாரி தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் மிகத் தீவிரமான ஆதரவாளர்களாகவும் சிரியாவில் ஏகாதிபத்திய தலையீட்டின் தீவிரமான ஆதரவாளர்களாகவும் உள்ளனர். இந்தக் குழுக்கள் எல்லாம் வர்க்கப் போராட்டத்தில் எதிர்தரப்பின் பக்கத்தில் நிற்கின்றன. தொழிலாளர்களும் இளைஞர்களும் இவர்களது “இடது” வார்த்தைஜாலத்தில் ஏமாந்து விடக்கூடாது. இவர்கள் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் எதிரிகளாவர். முதலாளித்துவத்தின் ஆழமான நெருக்கடி நிலைமைகளுக்குள் சமூக மற்றும் அரசியல் நெருக்கடி குறித்த பெருகும் அதிருப்தியை வலதுசாரி வாய்வீச்சாளர்கள் ஒரு பிற்போக்குத்தனமான தேசியவாத திசையில் திருப்புவதற்கு இயன்றிருக்கிறது என்றால் அதற்கு பாரம்பரியமான “இடது” கட்சிகள் மற்றும் அவர்களைப் பின்பற்றும் போலி-இடது குழுக்களின் அரசியல் திவால்தன்மையே காரணமாகும். இத்தாலியில் பெப்பே கிரிலோவின் ஐந்து நட்சத்திர இயக்கமானது அரசியல் சூழலை ஆவேசமாகக் கண்டிக்கிற நிலையிலும் ஒரு வலது-சாரி திட்டநிரலையே பாதுகாத்து நிற்கிறது. ஜேர்மனியில் பிராட் கட்சியின் வெளிப்படையான வெகுளித்தனத்தையும் மற்றும் அறியாமையையும் ஊடகங்களால் “பாழ்படாத புதிய” கட்சி என்று பாராட்டப்படும் கட்சிகூட வலதுசாரிக் கொள்கைகளையே ஊக்குவிக்கிறது. ஊழலடைந்த முதலாளித்துவ கட்சிகள் மற்றும் அவற்றின் போலி-இடது தொங்குதசைகளிலும் இருந்து ஒவ்வொரு அம்சத்திலும் சோசலிச சமத்துவக் கட்சி வேறுபட்டதாகும். எங்களது வேலைத்திட்டம், எங்களது கோட்பாடுகள் மற்றும் எங்களது உடைபடாத பாரம்பரியம் இவற்றில் தான் எங்களது வலிமை இருக்கிறது. மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ், லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கி, மற்றும் ரோசா லக்சம்பேர்க் போன்ற மகத்தான புரட்சிகர மார்க்சிஸ்டுகளின் தொடர்ச்சியையே நாங்கள் பிரதிநிதித்துவம் செய்கிறோம். சோவியத் ஒன்றியத்தில் தொழிலாளர்’ ஜனநாயகத்தை ஒடுக்கி, அக்டோபர் புரட்சியின் தலைவர்களை கொலை செய்து, ஜேர்மனியில் 1933 இல் உட்பட சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் மாபெரும் தோல்விகளுக்கு பொறுப்பாளியாக இருந்து, இறுதியில் சோவியத் ஒன்றியம் அழிக்கப்படுவதற்குக் காரணமாக இருந்த ஸ்ராலினிசத்திற்கு எதிரான ட்ரொட்ஸ்கியின் போராட்டத்தின் பாதையில் எழுந்த இடது எதிர்ப்பாளர்கள் மற்றும் நான்காம் அகிலத்தினது தொடர்ச்சியே எங்களது சர்வதேச இயக்கமாகும். மா சே துங் மற்றும் கமால் அப்துல் நாசர் தொடங்கி பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஹியூகோ சாவேஸ் வரை போருக்குப் பிந்தைய காலத்தின் ஸ்ராலினிச மற்றும் தேசியவாதத் தலைவர்களுக்கு தங்களை தகவமைத்துக் கொண்டவர்களுக்கு எதிராக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மட்டுமே பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதத்தின் முன்னோக்கைப் பாதுகாத்து வந்திருக்கிறது. சோசலிசம் என்பது முதலாளித்துவ “இடது” அரசியல்வாதிகளின் அரசியல் தந்திரசூழ்ச்சிகளின் மூலமாக வருவதை விடவும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான சர்வதேச இயக்கத்தின் விளைவாக மட்டுமே அடையப்பட முடியும் என்று நாங்கள் எப்போதும் வலியுறுத்தி வந்திருக்கிறோம். இந்த முன்னோக்கு இன்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இரண்டு தசாப்தங்களுக்கு முன்பாக சோவியத் ஒன்றியமும் கிழக்கு ஜேர்மனியும் உடைந்ததென்பது சோசலிசத்தின் தோல்வியை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை, மாறாக சோசலிசத்தின் மீதான ஸ்ராலினிச காட்டிக்கொடுப்பின் உச்சகட்டங்களையே அவை பிரதிநிதித்துவப்படுத்தின. இந்த நிகழ்வுகள் வன்முறையான ஒரு சமூக எழுச்சியின் ஒரு புதிய காலகட்டத்திற்கு இட்டுச்செல்கின்றது. ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக ஐரோப்பாவை முப்பதாண்டு கால போர் மற்றும் புரட்சிகளினது காலகட்டத்திற்குள் மூழ்கடித்த முரண்பாடுகளில் எதுவும் இன்றுவரை தீர்க்கப்படவில்லை. அவை எல்லாமே மீண்டும் வெடித்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. தொழிலாள வர்க்கத்தின் புதிய புரட்சிகரத் தலைமையாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவையும் சோசலிச சமத்துவக் கட்சியையும் கட்டியெழுப்புவதன் மூலமாக மட்டுமே காட்டுமிராண்டித்தனம் மற்றும் போரின் நிலைமைகளுக்கு மீண்டும் திரும்பாமல் தடுக்கப்பட முடியும். இதுவே எங்களது தேர்தல் பிரச்சாரத்தின் மத்திய நோக்கமாக இருக்கும். இதற்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வரலாற்றில் உள்ளடங்கியுள்ள 20ஆம் நூற்றாண்டின் படிப்பினைகளைப் புரிந்து கொள்வது அவசியமானதாகும். அனைத்துலகக் குழுவின் அங்கமான உலக சோசலிச வலைத் தளம் இந்த படிப்பினைகளின் அடிப்படையில் நாள்தோறும் தொழிலாள வர்க்கத்திற்கு அரசியல் நோக்குநிலையை வழங்குகிறது. இது உலகெங்கும் பத்தாயிரக்கணக்கிலான தொழிலாளர்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், சோசலிச எண்ணம் கொண்ட புத்திஜீவிகள் மற்றும் துறை நிபுணர்கள் அனைவரும் சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை ஆதரிக்க வேண்டும் என்று நாங்கள் அழைக்கிறோம். உலக சோசலிச வலைத் தளத்தை வாசியுங்கள்! நடைமுறைரீதியாகவும் நிதிரீதியாகவும் எங்களது பிரச்சாரத்திற்கு ஆதரவளியுங்கள்! சோசலிச சமத்துவக் கட்சியில் அங்கத்தவராக இணையுங்கள்! |
|