World Socialist Web Site www.wsws.org |
Chapter 39The History of the Russian RevolutionVolume Three: The Triumph of the SovietsThe Problem of Nationalitiesரஷ்யப் புரட்சியின் வரலாறுதொகுதி 3: சோவியத்துகளின் வெற்றிதேசியங்களின் பிரச்சினைLeon Trotskyமொழி என்பது மனிதருக்கிடையிலான தகவல் பரிவர்த்தனையின், எனவே தொழிற்துறையின் மிக முக்கியமான சாதனமாய் இருக்கிறது. தேசங்களை ஒன்றிணைக்கும் பண்டப் பரிவர்த்தனையின் வெற்றியுடன் சேர்ந்து இது தேசியமயமாகிறது. இந்த அடித்தளத்தின் மீது தேசிய அரசு என்பது முதலாளித்துவ உறவுகளின் கட்டற்ற இயக்கத்திற்கு மிகச் சவுகரியமான, இலாபகரமான மற்றும் இயல்பான தளமாக நிலைநிறுத்தப்படுகிறது. மேற்கு ஐரோப்பாவில் முதலாளித்துவ தேசங்களின் உருவாக்க சகாப்தம் என்பது, நெதர்லாந்தின் சுதந்திரத்திற்கான போராட்டத்தையும் மற்றும் தீவு நாடான இங்கிலாந்தின் தலைவிதியையும் விட்டு விட்டால், மகா பிரெஞ்சுப் புரட்சியுடன் தொடங்குகிறது. இது அத்தியாவசியமான வகையில் ஏறக்குறைய நூறு வருடங்களுக்குப் பின்னர் ஜேர்மன் சாம்ராஜ்யத்தின் உருவாக்கத்துடன் நிறைவுபெற்றது. ஆனால் ஐரோப்பாவில் தேசிய அரசு இனியும் உற்பத்தி சக்திகளைக் கட்டுப்படுத்த முடியாமல் ஏகாதிபத்திய அரசாக மிகைவளர்ச்சி பெற்று விட்டிருந்த அந்த காலகட்டத்தில், கிழக்கில் பாரசீகம், பால்கன்கள், சீனா, இந்தியா போன்றவற்றில் தேசிய ஜனநாயகப் புரட்சிகளின் சகாப்தம் என்பது 1905ன் ரஷ்யப் புரட்சியில் இருந்து தனது உத்வேகத்தைப் பெற்று அப்போது தான் தொடங்க ஆரம்பித்திருந்தது. 1912ம் ஆண்டின் பால்கன் போர் தென்கிழக்கு ஐரோப்பாவில் தேசிய அரசுகளின் உருவாக்கத்தின் நிறைவைக் குறித்து நின்றது. அதனையடுத்து வந்த ஏகாதிபத்தியப் போரானது, ஆஸ்திரிய-ஹங்கேரியின் கூறுபாட்டிற்கு வழிவகுத்து, ஒரு சுதந்திரப் போலந்தின் ஸ்தாபகம், மற்றும் ஜாரின் சாம்ராஜ்யத்தில் இருந்து விலகிய சுதந்திர எல்லை அரசுகளின் உருவாக்கத்துடன் ஐரோப்பாவில் தேசியப் புரட்சிகள் நிறைவு செய்யாத வேலையை தற்செயலாய் நிறைவு செய்தது. ரஷ்யா ஒரு தேசிய அரசாக உருவாக்கப்படவில்லை, மாறாக தேசியங்களால் ஆன ஒரு அரசாக உருவாக்கப்பட்டது. இது அதன் தாமதமான அபிவிருத்தி குணாம்சத்திற்கு உரியதாய் இருந்தது. விரிந்த விவசாயம் மற்றும் குடிசைக் கைத்தொழில்களின் ஒரு அடித்தளத்தின் மீது, வணிக மூலதனமானது உற்பத்தியை உருமாற்றுவதன் மூலமாக ஆழமாய் நடைபெறவில்லை, மாறாக தனது செயல்பாட்டு எல்லையை அதிகரிப்பதன் மூலமாய் அகலமாய் விரிந்து சென்றது. புதிய நிலங்களைத் தேடியும் வரித் தொல்லைகளில் இருந்து சுதந்திரம் தேடியும் விவசாயக் குடியேற்றங்கள் அவர்களை விடவும் கூடுதலாய் பின் தங்கியிருந்த பழங்குடியினர் வசித்து வந்த புதிய பிரதேசங்களுக்குள் ஊடுருவிக் கொண்டிருந்தன, அவர்களைப் பின் தொடர்ந்து வணிகரும், நிலப்பண்ணையாரும் மற்றும் அரசாங்க அதிகாரியும் மையத்தில் இருந்து சுற்றளவு எல்லையை நோக்கி முன்னேறினர். அடித்தளத்தில் அரசின் விரிவாக்கம் என்பது விவசாயத்தின் விரிவாக்கமாய் இருந்தது, அதுவோ தனது அத்தனை ஆதிகாலத் தன்மை இருந்தாலும் தெற்கிலும் கிழக்கிலும் இருந்த நாடோடிகளைக் காட்டிலும் ஒரு குறிப்பிட்ட மேலோங்கிய குணத்தை வெளிப்படுத்தியது. இந்த பிரம்மாண்டமான மற்றும் தொடர்ந்து விரிந்து கொண்டே சென்ற அடிப்படையின் மீது தன்னை அமைத்துக் கொண்ட அதிகாரத்துவ வகையிலான அரசு, மேற்கிலே ஒரு உயர்ந்த கலாச்சாரத்தைக் கொண்டிருந்தபோதும் தங்களது சிறு எண்ணிக்கையாலோ அல்லது உள்முக நெருக்கடி நிலையினாலோ தமது சுதந்திரத்தைப் பாதுகாக்க முடியாமல் இருந்த சில நாடுகளை (போலந்து, லித்வேனியா, பால்டிக் அரசுகள், பின்லாந்து) தமது ஆளுகைக்குட்படுத்தும் அளவுக்கு வலிமையுடையதாய் ஆனது. நாட்டின் பிரதான மக்கள்தொகையான எழுபது மில்லியன் மகா ரஷ்யர்களுடன், கொஞ்சம் கொஞ்சமாய் சேர்த்துக்கொள்ளப்பட்ட தொண்ணூறு மில்லியன் “வெளிப்பிரதேசத்தினரும்” கலாச்சாரத்தில் ரஷ்யாவை விஞ்சி நின்ற மேற்கத்தியர்கள், கலாச்சார மட்டத்தில் தாழ்ந்து நின்ற கிழக்கத்தியர்கள் என இரண்டு பிரிவுகளாய் கூர்மையாய் பிளவுபட்டிருந்தனர். இப்படித் தான் ஆளும் தேசியத்தைச் சேர்ந்தவர்கள் வெறும் 43 சதவீதமே இருக்கும்படியான மக்கள்தொகையைக் கொண்ட ஒரு சாம்ராஜ்யம் உருவாக்கப்பட்டது. எஞ்சிய 57 சதவீதத்தில் பல்வேறு கலாச்சாரத்தின் வேறுபட்ட மட்டத்தைச் சேர்ந்த தேசியங்கள் இடம்பெற்றிருந்தன. இதில் 17 சதவீதம் உக்ரைனியர்கள், 6 சதவீதம் போலியர்கள், 4½ சதவீத வெள்ளை ரஷ்யர்களும் அடங்குவர். அரசின் பேராசைத் தேவைகளும் ஆளும் வர்க்கங்களின் கீழ் விவசாய அடித்தளத்தின் வலிமைகுறைந்த தன்மையும் சுரண்டலின் மிகக் கடுமையான வடிவங்களுக்கு வழிவகுத்தன. ரஷ்யாவிலான தேசிய ஒடுக்குமுறை என்பது மேற்குப்பக்கம் மட்டுமின்றி கிழக்கு எல்லையில் இருந்த அண்டை அரசுகளைக் காட்டிலும் கூட ஒப்பிடமுடியாத அளவுக்கு முரட்டுத்தனமாய் இருந்தது. இந்த தேசியங்களைச் சேர்ந்த பரந்த எண்ணிக்கையிலானோர் உரிமைகள் இல்லாதிருந்தனர், அந்த இல்லாமையின் கூர்மையானது ஜாரிச ரஷ்யாவின் தேசியப் பிரச்சினைக்கு ஒரு மிகப் பிரம்மாண்டமான வெடிப்பு சக்தியைக் கொடுத்தது. தேசியரீதியாய் ஒரே இயல்புடையதாக அமைந்த அரசுகளில் முதலாளித்துவப் புரட்சிகள் சக்திவாய்ந்த மையநோக்குவிசைப் (centripetal) போக்குகளை அபிவிருத்தி செய்து பிரான்சில் போல பெரும்பான்மைக்கு எதிரான சிறுபான்மைக்கு அரசியல் உரிமையை வழங்குவதையும் அல்லது இத்தாலியில் மற்றும் ஜேர்மனியில் போல தேசிய பிளவுபாடுகளை வெல்கின்ற சிந்தனைக்குள் துரிதமாய் அழைத்துச் சென்று கொண்டிருந்த அதேசமயத்தில், துருக்கி, ரஷ்யா, ஆஸ்திரியா-ஹங்கேரி போன்ற தேசியரீதியாய் பன்முகத்தன்மையுடைய அரசுகளிலோ இதற்கு நேரெதிரான வகையில் தாமதப்பட்ட முதலாளித்துவப் புரட்சியானது மையவிலக்கு (centrifugal) சக்திகளை கட்டவிழ்த்துவிட்டது. எந்திரவியக்க வார்த்தைகளில் கூறுகையில் இந்த நிகழ்வுப்போக்குகள் வெளிப்படையாய் நேரெதிர் தன்மை கொண்டதாய் இருந்தாலும், அவற்றின் வரலாற்று செயல்பாடு ஒன்று தான். இரண்டிலுமே தேசிய ஐக்கியத்தை ஒரு அடிப்படையான தொழிற்துறை களஞ்சியமாக பயன்படுத்துவது குறித்த பிரச்சினை தான். இந்த நோக்கத்திற்காக ஜேர்மனி ஐக்கியப்படுத்தப்பட வேண்டியிருந்தது, ஆஸ்திரியா-ஹங்கேரியோ பிரிக்கப்பட வேண்டியதாய் இருந்தது. ரஷ்யாவில் மையவிலக்கு தேசிய இயக்கங்களின் இந்த அபிவிருத்தியின் தவிர்க்கவியலாதன்மையை ஆரம்பத்தில் தெரிந்து கொண்ட லெனின், தேசங்களின் சுய-நிர்ணய உரிமைக்கான, அதாவது அரசுகளாய் பிரிப்பதை நிறைவு செய்வதை சூத்திரப்படுத்திய பழைய கட்சி வேலைத்திட்டத்தின் அந்த புகழ்பெற்ற 9 ஆம் பத்திக்காக மிகக் குறிப்பாக ரோசா லுக்சம்பர்கிற்கு எதிராக பல வருடங்கள் விடாப்பிடியாய் போராடினார். இதில் போல்ஷிவிக் கட்சியானது எந்த வகையிலும் பிரிவினைக்கான அரசியல் கொள்கை எதனையும் கையிலெடுத்திருக்கவில்லை. எந்த தேசிய இனத்தையும் பொதுவான அரசின் எல்லைகளுக்குள்ளாக பலவந்தமாய் தக்கவைத்திருப்பது உட்பட தேசிய ஒடுக்குமுறையின் ஒவ்வொரு வடிவத்துக்கும் எதிராக சமரசமின்றிப் போராடுவதற்கான கடமைப்பாட்டை அது ஏற்றுக் கொண்டிருந்தது, அவ்வளவு தான். இந்த வழியில் மட்டும் தான் ரஷ்யப் பாட்டாளி வர்க்கம் கொஞ்சம் கொஞ்சமாக ஒடுக்கப்பட்ட தேசியங்களின் நம்பிக்கையை வென்றிருக்க முடியும். ஆனால் இது விடயத்தின் ஒரு பக்கம் மட்டுமே. தேசிய விவகாரத்தில் போல்ஷிவிசத்தின் கொள்கைக்கு இன்னொரு பக்கமும் இருந்தது, இது தோற்றத்தில் முதலாவதற்கு நேரெதிரானதாய் தோன்றினாலும் உண்மையில் அதன் துணைப்பிரச்சினையே. கட்சியின் மற்றும் பொதுவாக தொழிலாளர்’அமைப்புகளின் கட்டமைப்பிற்குள்ளாக, போல்ஷிவிசமானது, தொழிலாளர்களை ஒருவருக்கெதிராய் இன்னொருவரைத் திருப்பி விடுகின்ற அல்லது அவர்களது ஐக்கியத்தை குலைக்கின்ற தேசியவாதத்தின் ஒவ்வொரு சுவடுக்கும் எதிராக சமரசமற்று போராடுகிறதான ஒரு இறுக்கமான மத்தியத்துவத்திற்கு வலியுறுத்தியது. முதலாளித்துவ அரசுகளுக்கு ஒரு தேசிய சிறுபான்மை இனத்தின் மீது கட்டாய குடியுரிமையையோ, அல்லது ஒரு அரசு மொழியையோ கூட திணிப்பதற்கான உரிமையை முற்றாக மறுத்த போல்ஷிவிசமானது அதே சமயத்தில், பல்வேறு தேசியங்களையும் சேர்ந்த தொழிலாளர்களை அவர்கள் சுயவிருப்புடனான வர்க்க ஒழுங்கின் மூலமாக சாத்தியமான அளவுக்கு மிக நெருக்கமாய் ஒன்றுபடுத்தும் உறுதிபட்ட புனிதமான வேலையைச் செய்தது. இவ்வாறாக கட்சி கட்டுவதில் தேசிய-கூட்டமைப்புக் (National-Federation) கோட்பாட்டை அது பரிசீலனைக்கு இடமின்றி நிராகரித்தது. ஒரு புரட்சிகர அமைப்பு வருங்கால அரசுக்கான மாதிரி அல்ல, மாறாக அதனை உருவாக்குவதற்கான சாதனம் மட்டும் தான். அந்த தயாரிப்புப் பொருளை வடிவமைப்பதற்கேற்றவாறு ஒரு சாதனம் தகவமைத்துக் கொள்ள வேண்டுமே தவிர, அதுவே அந்த தயாரிப்புப் பொருளினுள் உள்ளடக்கிவிட முடியாது. இவ்வாறாக தேசிய இனங்கள் மத்தியரீதியாய் ஒடுக்கப்படுவதை இல்லாதொழிப்பது கடமையாக இருக்கின்றபோதிலும் கூட ஒரு மத்தியமயப்படுத்தப்பட்ட அமைப்பு புரட்சிகரப் போராட்டத்தின் வெற்றிக்கு உறுதியளிக்க முடியும்,. ரஷ்யாவின் ஒடுக்கப்பட்ட தேசங்களுக்கு முடியாட்சியைத் தூக்கியெறிவதென்பது தவிர்க்கமுடியாதவகையில் தங்களது சொந்த தேசியப் புரட்சியைக் குறித்து நிற்கிறது. ஆயினும் இந்த விடயத்தில் பிப்ரவரி ஆட்சியின் மற்ற துறைகளில் காண்கிற அதே விடயத்தையே நாம் காண்கிறோம்: உத்தியோகபூர்வ ஜனநாயகமானது, ஏகாதிபத்திய முதலாளித்துவ வர்க்கத்தை சார்ந்து நிற்கும் அதன் அரசியல் நிலை என்கின்ற சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ள வரைக்கும் அது பழைய தளைகளை உடைத்து வெளிவர முற்றிலும் இயலாததாய் நின்றது. மற்ற பிற தேசங்களின் தலைவிதியை தீர்த்துவைக்கின்ற உரிமையில் யாரும் தலையிடாமல் பார்த்துக் கொண்டு, அது, மகா ரஷ்ய முதலாளித்துவத்திற்கு அதன் மேலாதிக்க நிலையை வழங்கியிருந்த செல்வம், அதிகாரம் மற்றும் செல்வாக்குக்கான அந்த ஆதாரவளங்களைத் தொடர்ந்து பொறாமையுடன் காவல்காத்து வந்தது. இந்த சமரசவாத ஜனநாயகம் வெறுமனே ஜாரிச தேசியக் கொள்கையின் பாரம்பரியங்களை விருப்ப சுதந்திர (libertarian) வாய்வீச்சின் மொழியில் மொழிபெயர்த்தது, அவ்வளவே: இப்போது அது புரட்சியின் ஐக்கியத்தை பாதுகாக்கும் பிரச்சினையாக ஆகியிருந்தது. ஆனால் ஆளும் கூட்டணி இன்னுமொரு மிகக் கூர்மையான வாதத்தைக் கொண்டிருந்தது: போர்க்கால ஆழ்ந்த சிந்தனை. தனித்தனி தேசியங்களின் சுதந்திரத்தை நோக்கிய அபிலாசைகள் ஆஸ்திரிய-ஜேர்மன் இரகசியத் துறையின் (Austro-German General Staff) வேலையாக சித்தரிக்கப்பட்டாக வேண்டும் என்பதே இதன் அர்த்தம். இங்கும் காடெட்டுகள் (Kadets) முதல் வயலினை வாசிக்க சமரசவாதிகள் (Compromisers) சேர்ந்து வாசித்தனர். புதிய அரசாங்கமானது, அந்த வெறுப்பூட்டும் சட்டச் சிக்கலை, அயல்பிரதேசத்தினர் என்கின்ற சிக்கலான மத்தியகால கேலிக்கூத்துகளை முற்றுமுதலாய் தொடாமல் விட்டுவிட முடியாது என்பது உண்மைதான். ஆனால் தனித்தனி தேசங்களுக்கு எதிரான விதிவிலக்கான சட்டங்களைத் தடைசெய்வதோடு மட்டும் நின்றுவிடுவதற்கு, அதாவது மகா ரஷ்ய அரசு அதிகாரத்துவத்தின் முன்னால் மக்களின் அனைத்து பகுதிகளுக்கும் ஒரு வெற்று சமத்துவத்தை நிலைநாட்ட அது நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. இந்தப் பூர்வாங்க சமத்துவம் யூதர்களுக்கு அநேகத்தை வழங்கியது, ஏனென்றால் அப்போது அவர்களது உரிமைகளை வரம்புபடுத்துகின்ற சட்டங்களின் எண்ணிக்கை 650 ஐ தொட்டிருந்தது. மேலும் நகரவாசிகளாகவும் எல்லா தேசியங்களிலும் மிகவும் சிதறிக் கிடப்பவர்களாகவும் இருந்ததால் யூதர்களால் அரசு சுதந்திரத்தையும் கோரமுடியவில்லை அல்லது பிராந்திய சுயாட்சியையும் கூடக் கோர முடியவில்லை. நாடு மொத்தத்திலுமான யூதர்களை பள்ளிகள் மற்றும் பிற ஸ்தாபனங்களைச் சுற்றி ஒருமைப்படுத்த வேண்டும் என்று கூறிச் செயல்பட்ட “தேசிய-கலாச்சார தன்னாட்சி” என்று அழைக்கப்படுவதான திட்டத்தைப் பொறுத்தவரை, ஆஸ்திரிய தத்துவாசிரியரான ஒட்டோ பவரிடம் (Otto Bauer) இருந்து பல்வேறு யூதக் குழுக்களும் இரவல் பெற்றிருந்த இந்த பிற்போக்குத்தனமான கற்பனாவாதம் சுதந்திரத்தின் முதல் தினங்களில் சூரியக் கதிர்கள் பட்ட மெழுகு போல் உருகி ஓடி விட்டது. ஆனால் கருணையுதவிகளாலோ அல்லது தவணைமுறையில் கிடைக்கும் தொகைகளாலோ திருப்தியடைவதில்லை என்கிற காரணத்தால் தான் ஒரு புரட்சி புரட்சியாக இருக்கிறது. மிக அவமானகரமான தேசிய வரம்புகளை இல்லாதொழித்ததானது குடிமக்களிடையே தேசிய சம்பந்தமற்ற ஒரு பூர்வாங்க சமத்துவத்தை நிலைநாட்டியது, ஆனால் இது உள்ளவாறே இவற்றின் பெரும்பகுதியை மகா ரஷ்ய அரசின் மாற்றாந் தாய் பிள்ளைகள் அல்லது தத்துப் பிள்ளைகளின் நிலையில் விட்டுவிட்டிருந்த தேசியங்களுக்கு இடையே இருந்த சமனற்ற நிலையை மிகக் கூர்மையாக வெளிக்காட்டுவதாகவே ஆனது. சம உரிமைகள் பிரகடனம் குறிப்பாக ஃபின்லாந்தினருக்கு பொருட்டாக இருக்கவில்லை, ஏனென்றால் அவர்கள் ரஷ்யர்களுடனான சமத்துவத்தை விரும்பவில்லை மாறாக ரஷ்யாவிடமிருந்து சுதந்திரத்தை விரும்பினர். உக்ரைனியர்களுக்கு இது ஒன்றும் அளிக்கவில்லை, ஏனென்றால் அவர்களது உரிமைகள் முன்பே சமமாகத் தான் இருந்தது, அவர்கள் பலவந்தமாக ரஷ்யர்கள் தான் என்று பிரகடனப்படுத்தப்பட்டனர். ஜேர்மன் நிலப் பிரபுவின் பண்ணைகள் மற்றும் ரஷ்ய-ஜேர்மன் நகரத்தால் ஒடுக்கப்பட்டிருந்த லெட்லாந்தினர் மற்றும் எஸ்தோனியர்களது நிலையிலும் இது எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை. நீதியெல்லை வரம்புகள் மூலமன்றி பொருளாதார மற்றும் கலாச்சார இரும்புப்பந்து மற்றும் சங்கிலியால் அடிமட்டத்தில் கிடத்தப்பட்டிருந்த மத்திய ஆசியாவின் பின் தங்கிய மக்கள் மற்றும் பழங்குடியினரது தலைவிதியில் அது கொஞ்சம் கூட வெளிச்சத்தை ஏற்றவில்லை. இந்தக் கேள்விகள் அனைத்தையும் கொண்டுவருவதற்கும் கூட தாராளவாத-சமரசவாத (Liberal-Compromisist) கூட்டணி மறுத்தது. ஜனநாயக அரசு மகா ரஷ்ய அதிகாரியின் அதே பழைய அரசாகத் தொடர்ந்தது, அவர் தனது இடத்தை வேறு யாருக்கும் விட்டுக் கொடுக்கத் தயாராயில்லை. எல்லைப் பகுதிகளில் மக்களிடையே புரட்சி ஆழமாய் ஊறிச் செல்லச் செல்ல, ரஷ்ய அரசு மொழி என்பது அங்கே உடைமையுள்ள வர்க்கங்களின் மொழி என்பது மிகத் தெளிவாக ஆகிக் கொண்டு வந்தது. பூர்வாங்க ஜனநாயகத்தின் ஆட்சி, அதன் ஊடக சுதந்திரம் மற்றும் கூட்டம் கூடுவதற்கான சுதந்திரத்தின் மூலம், பின் தங்கிய மற்றும் ஒடுக்கப்பட்ட தேசியங்கள், தங்களது சொந்த பள்ளிகள், தங்களது சொந்த நீதிமன்றங்கள், தங்களது சொந்த அதிகாரிகள் என எந்த அளவுக்கு கலாச்சார அபிவிருத்தியின் மிக அடிப்படையான சாதனங்களும் கூட தங்களிடம் இல்லாதிருக்கிறது என்பதை மிகவும் வேதனையுடன் அறிந்து கொள்வதற்கே வழிவகை செய்தது. ஒரு வருங்கால அரசியல்சட்ட அவை குறித்த குறிப்புகள் அவர்களை எரிச்சலூட்டவே செய்தன. இடைக்கால அரசாங்கத்தை உருவாக்கியிருந்த அந்த நாடாளுமன்றத்திலும் இதே கட்சி தான் ஆதிக்கம் செலுத்தும் மற்றும் தனது ரஷ்யமயமாக்கும் பாரம்பரியத்தை தொடர்ந்து செய்து தனது பொறாமையுடனான பேராசையின் மூலம் அந்தக் கோட்டைத் தாண்டி ஆளும் வர்க்கங்கள் போகாது என்பதைத் தெளிவாக்கும் என்பதை அவர்கள் நன்கு அறிந்திருந்தனர். ஃபின்லாந்து முதலில் இருந்தே பிப்ரவரி ஆட்சியின் சதையில் குத்திய முள் போல் ஆனது. பின்லாந்தில், “டோர்பார்களின்” பிரச்சினை ஒன்று, அதாவது சிறு அடிமைப்படுத்தப்பட்ட குத்தகைக்காரகளின் விவசாயப் பிரச்சினையின் கசப்புணர்வின் காரணத்தால், ஆலைத் தொழிலாளர்கள் மக்கள்தொகையில் வெறும் 14 சதவீதம் தான் இருந்தனர் என்றாலும் கிராம மக்களை தம்முடன் கொண்டுசென்று கொண்டிருந்தனர். ஃபின்லாந்தின் சேய்ம் (Seim) கட்சிதான் உலகத்தில் சமூக ஜனநாயகக் கட்சியினர் பெரும்பான்மை பெற்ற ஒரு நாடாளுமன்றமாக இருந்தது: 200 தொகுதிகளில் 103 ஐ வென்றிருந்தனர். தங்களது ஜூன் 5 சட்டத்தின் மூலம் போர் மற்றும் வெளியுறவுக் கொள்கை குறித்த பிரச்சினைகளில் தவிர சேய்ம் ஒரு இறையாண்மை அதிகாரமாய் செயல்படும் என அறிவித்து, ஃபின்லாந்தின் சமூக ஜனநாயகவாதிகள் “ரஷ்யாவின் தோழமைக் கட்சிக்கு” ஆதரவு கோரி விண்ணப்பித்தனர். ஆனால் அவர்களின் விண்ணப்பம் முகவரி மாறி அனுப்பப்பட்டது என்றானது. முதலில் “தோழமைக் கட்சி” செயல்பட அனுமதித்து இடைக்கால அரசாங்கம் ஒதுங்கி நின்று கொண்டது. செய்ட்ஸெ தலைமையிலான ஒரு ஆலோசனைக் குழு ஹெல்ஸிங்ஃபோர்ஸ் சென்று வெறுங்கையுடன் திரும்பி வந்தது. அதன்பின் பெட்ரோகிராடின் சோசலிஸ்ட் அமைச்சர்களான கெரென்ஸ்கி, செனோவ், ஸ்கோபெலேவ், செரெடெலி ஆகியோர் ஹெல்ஸிங்ஃபோர்ஸில் இருந்த சோசலிஸ்ட் அரசாங்கத்தை பலவந்தமாய் கலைத்துவிட முடிவு செய்தனர். தலைமையக படைத் தலைவரான முடியாட்சிவாதியான லுகோம்ஸ்கி, ரஷ்ய இராணுவத்திற்கு எதிராக ஏதேனும் செயல்பாடு நிகழுமானால் “அவர்களது நகரங்கள், மற்றும் எல்லாவற்றுக்கும் முதலில் ஹெல்ஸிங்ஃபோர்ஸ், தரைமட்டமாகி விடும்” என்று ஃபின்லாந்தின் மக்கள் அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் எச்சரிக்கை விடுத்தார். இந்தத் தயாரிப்பிற்குப் பின்னர் அரசாங்கம் சேய்மை கட்சியை கலைக்கும் ஒரு கொண்டாட்டமான –கம்பீர- அறிக்கையை விநியோகித்தது, இது அதன் எழுத்து நடையிலும் கூட முடியாட்சியில் இருந்து நகலெடுக்கப்பட்டதாய் இருந்தது. தாக்குதலின் முதல் நாளில் எல்லையில் இருந்து திரும்பப் பெற்ற ரஷ்ய படையினர்களை அவர்கள் ஃபின்லாந்து நாடாளுமன்றத்தின் வாசற்கதவருகே நிறுத்தினர். இவ்வாறாக ரஷ்யாவின் புரட்சிகர வெகுஜனங்கள் அக்டோபருக்கான தங்கள் பாதையில், வர்க்க சக்திகளின் போராட்டத்தில் ஜனநாயகக் கோட்பாடுகள் பெறக் கூடிய தரமான இடம் குறித்து ஒரு நல்ல படிப்பினையைப் பெற்றனர். ஆளும் வர்க்கங்களின் இந்தக் கடிவாளமில்லாத தேசியவாதத்திற்கு முகங்கொடுத்த நிலையில், ஃபின்லாந்தின் புரட்சிகரத் துருப்புகள் ஒரு உருப்படியான மனோபாவத்தைக் கையாண்டன. ஹெல்ஸிங்ஃபோர்ஸில் செப்டம்பர் ஆரம்பத்தில் நடந்த சோவியத்துகளின் ஒரு பிராந்திய காங்கிரசில் அறிவிக்கப்பட்டது: “சேய்மின் அமர்வுகளைப் புதுப்பிப்பது உகந்தது என்று ஃபின்லாந்தின் ஜனநாயகம் காணுமானால், அதனைத் தடுப்பதற்கான எந்த முயற்சியும் சோவியத் காங்கிரசால் ஒரு எதிர்ப்புரட்சிகர நடவடிக்கையாகவே காணப்படும்.” இது இராணுவ உதவிக்கான ஒரு நேரடியான சலுகை. ஆனால் சமரசவாதப் போக்குகள் மேலாதிக்கம் செலுத்திய ஃபின்லாந்தின் ஜனநாயகம் கிளர்ச்சிப் பாதையை எடுக்கத் தயாராயில்லை. ஒரு புதிய கலைப்புக்கான அச்சுறுத்தலின் கீழ் நடந்த புதிய தேர்தல், அரசாங்கம் யாருடன் சேர்ந்து கொண்டு சேய்மை கலைத்திருந்ததோ அவர்களுடன் உடன்பாடு கொண்ட முதலாளித்துவ கட்சிகளுக்கு 200ல் 180 தொகுதிப் பெரும்பான்மையை வழங்கியது. ஆனால் இங்கு எந்தப் பிரச்சினைகளில் கிரானைட் மலைகள் மற்றும் பேராசை பிடித்த உரிமையாளர்களின் பகுதியான வடக்கின் சுவிட்சர்லாந்து பரிசீலனைக்கு இடமின்றி உள்நாட்டுயுத்தத்திற்கு அழைத்துச் செல்வதாய் இருந்ததோ அதே உள்நாட்டுப் பிரச்சினைகள் முன்னணிக்கு வருகிறது. ஃபின்லாந்தின் முதலாளித்துவ வர்க்கம் பாதி பகிரங்கமாக தனது இராணுவப் படையினர்களை தயார் செய்து கொண்டிருந்தது. அதேசமயத்தில் செஞ்சேனை வீரர்களின் இரகசியமான கருக்களும் உருவாகிக் கொண்டிருந்தன. முதலாளித்துவ வர்க்கம் ஆயுதங்களுக்கும் வழிகாட்டுநர்களுக்கும் ஸ்வீடன் மற்றும் ஜேர்மனியை நோக்கித் திரும்பியது. தொழிலாளர்கள் ரஷ்ய துருப்பினரிடையே ஆதரவைக் கண்டனர். இதனிடையே நேற்றுவரை பெட்ரோகிராட் உடனான உடன்பாட்டிற்கு விருப்பம் கொண்டிருந்து வந்த முதலாளித்துவ வட்டங்களில் ரஷ்யாவிடம் இருந்து முழுமையாக பிரிவதற்கான ஒரு இயக்கம் அபிவிருத்தியுற்றுக் கொண்டிருந்தது. அவர்களது முன்னணி செய்தித்தாளான Khuvudstatsbladet எழுதியது: “ரஷ்ய மக்களிடம் ஒரு அராஜகவாத வெறி இருக்கிறது... இந்த சூழ்நிலைகளில் நாம் அந்தக் குழப்பத்தில் இருந்து முடிந்த அளவுக்கு நம்மை பிரித்துக் கொள்ள வேண்டாமா?” இடைக்கால அரசாங்கமானது சட்டமன்றம் கூடுவதற்கு காத்திராமல் சலுகைகளை அளிக்க வேண்டிய நிலையில் தான் இருப்பதை உணர்ந்தது. இராணுவம் மற்றும் வெளியுறவு விவகாரங்கள் தவிர்த்து ஃபின்லாந்தின் சுதந்திரத்தை “கொள்கையளவில்” அங்கீகரித்து அக்டோபர் 23 அன்று ஒரு தீர்ப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் கெரென்ஸ்கியின் கையால் கொடுக்கப்பட்ட “சுதந்திரம்” அதிக மதிப்பு கொண்டிருக்கவில்லை: அவரது வீழ்ச்சிக்கு இரண்டு நாட்கள் முன்பு தான் இது வழங்கப்பட்டிருந்தது. சதையில் குத்திய இரண்டாவதும் இன்னும் மிகப் பிரம்மாண்டமானதுமான முள் உக்ரைன். ஜூன் ஆரம்பத்தில் ராடா (Rada) அழைப்பு விடுத்திருந்த உக்ரைனிய படைவீரர் காங்கிரஸ் ஒன்றை நடத்துவதை கெரென்ஸ்கி தடை செய்தார். உக்ரைனியர்கள் பணியவில்லை. அரசாங்கத்திற்கான அவமானத்தில் இருந்து காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு கெரென்ஸ்கி இந்த காங்கிரசுக்கு நிகழ்வுக்குப் பிந்தைய சட்டப்பூர்வ அங்கீகாரத்தை வழங்கியதோடு ஒரு அறிவிப்புத் தந்தியையும் அனுப்பினார், இதனைப் பெறுகையில் அங்கே கூடியிருந்த பிரதிநிதிகள் எல்லாம் பரிகாசச் சிரிப்பினை உதிர்த்தனர். இந்தக் கடுமையான படிப்பினையும் கூட மூன்று வாரங்கள் கழித்து மாஸ்கோவில் நடைபெறவிருந்த முஸ்லீம்களின் ஒரு இராணுவக் காங்கிரசுக்கு தடை விதிப்பதில் இருந்து கெரென்ஸ்கியைத் தடுக்க முடியவில்லை. அதிருப்தியடைந்திருந்த தேசங்களுக்கு, ’நீங்கள் பறித்துக் கொள்வது தான் உங்களுக்குக் கிடைக்கவிருப்பது’ என்கின்ற செய்தியை பட்டவர்த்தனமாக்குவதில் ஜனநாயக அரசாங்கம் கவலை கொண்டதாய் தோன்றியது: ராடா (Rada) தேசிய சுதந்திரத்தை எதிர்ப்பதாக பெட்ரோகிராடின் மீது குற்றம் சுமத்தி ஜூன் 10 அன்று விநியோகித்த தனது முதல் “பிரகடன அறிக்கை”யில் அறிவித்தது: “இதுமுதல் நமது சொந்த வாழ்க்கையை நாமே எழுப்புவோம்.” காடேட்டுகள் உக்ரைனியத் தலைவர்களை ஜேர்மனிய முகவர்கள் எனக் கூறிக் கண்டனம் செய்தனர்; சமரசவாதிகள் அவர்களுக்கு உணர்வுப்பூர்வமான நயமான கண்டிப்புகளைக் கொண்டு அறிவுரை அளித்தனர்; இடைக்கால அரசாங்கம் கியேவுக்கு ஒரு தூதுக்குழுவை அனுப்பியது. உக்ரைனின் கொதிப்பான சூழலில், கெரென்ஸ்கி, செரெடெலி மற்றும் டெரெஸ்செங்கோ ஆகியோர் ராடாவை சந்திப்பதற்கு சில நடவடிக்கைகள் எடுக்க கடமைப்பட்டதாய் கருதினர். ஆனால் தொழிலாளர்கள் மற்றும் சிப்பாய்கள் மீதான ஜூலை தாக்குதல்களுக்கு பின்னர், அரசாங்கம் உக்ரைன் பிரச்சினையிலும் வலது நோக்கித் திசையை மாற்றியது. அரசாங்கம், “ரஷ்ய முதலாளித்துவ வர்க்கத்தின் ஏகாதிபத்திய போக்குகளால் நிரம்பி” ஜூலை 3 உடன்பாட்டை உடைத்திருப்பதாக ஆகஸ்ட் 5 அன்று ராடா அறுதிப் பெரும்பான்மையுடன் குற்றம் சாட்டியது. ”அரசாங்கம் தனது வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான நேரம் வந்தபோது தான் தெரிந்தது, இடைக்கால அரசாங்கம் ஒரு அற்பமான திருட்டு வேலையைச் செய்தது, அது ஒரு மாபெரும் வரலாற்றுப் பிரச்சினையில் இருந்து மாயாஜாலம் மூலம் வெளியேற நம்பிக்கை கொண்டிருக்கிறது.” இந்தத் திட்டவட்டமான மொழி, அரசாங்கத்தின் அதிகாரமானது, அது அரசியல்ரீதியாக நெருக்கமாக இருக்க கூடிய வட்டங்களிலும் கூட எந்த இலட்சணத்தில் இருந்தது என்பதற்கு ஒரு போதுமான குறிப்பை வழங்குகிறது. ஏனென்றால் நீண்ட காலத்தில் உக்ரைனிய சமரசவாதியான வின்னிசெங்கோ கெரென்ஸ்கியில் இருந்து ஒரு சராசரியான வழக்கறிஞரில் இருந்து சராசரியான புதின எழுத்தாளர் வேறுபடும் அளவுக்குத் தான் வேறுபட்டு நின்றதாக அடையாளம் காணப்பட்டார். செப்டம்பரில் அரசாங்கம் இறுதியாக சட்ட மன்றத்தால் விதிக்கப்படும் வரம்புகளுக்குள், ரஷ்யாவின் அனைத்து தேசியங்களையும் அங்கீகரிக்கின்ற, அதாவது “சுய நிர்ணயத்துக்கான உரிமை” யை அங்கீகரிக்கின்ற ஒரு தீர்ப்பை விநியோகித்தது. ஆனால் தனது வரம்புகளை தவிர மற்ற எல்லாவற்றிலுமே மிகத் தெளிவற்றதாய் இருந்த, அத்துடன் ஒட்டுமொத்தமாய் எந்த உத்தரவாதமும் இல்லாமல் உள்முகமாக வருங்காலத்துக்கான முரண்பாடான வாக்குறுதியாய் இருந்த இது எவருக்கும் நம்பிக்கையை விதைக்கவில்லை. இடைக்கால அரசாங்கத்தின் நடவடிக்கைகள் ஏற்கனவே அதற்கு எதிராய் உரக்கக் குரல் கொடுத்துக் கொண்டிருந்தன. செப்டம்பர் 2 அன்று செனட், அதாவது பழைய சீருடை இல்லாமல் புதிய உறுப்பினர்களை அனுமதிக்க மறுத்த அதே அங்கம், உக்ரைனிய பொதுச் செயலகத்திற்கு அதாவது கியேவில் இருக்கும் அமைச்சரவை கபினட்டிற்கு, வழங்கப்பட்டு அரசாங்கத்தில் உறுதிப்படுத்தப்பட்டிருந்த வழிகாட்டல் உத்தரவுகளை பிரசுரிக்க மறுப்பதென முடிவு செய்தது. காரணம்: ’இந்த செயலக உருவாக்க அடிப்படையாக எந்த சட்டமும் இல்லை, எனவே ஒரு சட்டவிரோத ஸ்தாபனத்துக்கு வழிகாட்டல் உத்தரவுகளை வழங்க சாத்தியமில்லாதது.’ கம்பீரமான நீதிபதிகள் உண்மையையும் மறைக்கவில்லை, அதாவது அரசாங்கத்திற்கும் ராடாவுக்கும் இடையில் ஏற்பட்ட அந்த ஒப்பந்தமே சட்ட மன்றத்தின் உரிமைகளின் ஒரு தட்டிப் பறிப்பு தான் - இந்த ஜாரிச செனட்டர்கள் இப்போது கலப்படமற்ற ஜனநாயகத்தின் மிகவும் வளைந்துகொடுக்காத கட்சியினராக ஆகியிருந்தனர். இந்த தீரத்தின் காட்சியில் வலது பக்கமிருந்தான எதிர்ப்பாளர்கள் எதனையும் பணயம் வைக்கவில்லை: ஏனென்றால் ஆளும் வர்க்கங்களின் இதயத்தைப் பின்பற்றியே எதிர்ப்புப் பாதை செல்வது அவர்களுக்குத் தெரியும். ஃபின்லாந்துக்கான ஒரு குறிப்பிட்ட மட்ட சுதந்திரத்தை - பலவீனமான பொருளாதாரப் பிணைப்புகளால் ரஷ்யாவுடன் ஐக்கியப்பட்டிருந்தது - ரஷ்ய முதலாளித்துவ வர்க்கம் மென்று விழுங்கிக் கொண்டது என்றாலும் உக்ரைனிய தானியம், டோனெட்ஸ் நிலக்கரி, மற்றும் கிரிவோரோக் பகுதியின் தாதுப்பொருட்க்கள் இதற்கெல்லாம் “தன்னாட்சி” கொடுப்பதற்கு அது உடன்படுவதற்கு சாத்தியமில்லை. அக்டோபர் 19 அன்று கெரென்ஸ்கி உக்ரைனின் பொதுச் செயலருக்கு ஒரு தந்தி உத்தரவை அனுப்பினார். உக்ரைனிய சட்ட மன்றத்திற்கு ஆதரவாக அங்கு ஆரம்பித்திருந்த ஒரு குற்றவியல்தன்மை பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பாக நேரில் விளக்கமளிக்க பெட்ரோகிராட்க்கு உடனே வருமாறு அதில் கூறப்பட்டிருந்தது. அதே சமயத்தில் ராடா குறித்து விசாரணையைத் தொடக்க கியேவின் மாவட்ட நீதிபதிக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் இந்த அச்சுறுத்தல்கள் எல்லாம் உக்ரைனுக்கு எந்த பயத்தையும் கொடுக்கவில்லை, ஏனென்றால் பெருந்தன்மையான நடவடிக்கைகள் பின்லாந்துக்கு களிப்பைக் கொடுத்திருந்தனவே. இந்த சமயத்தில் உக்ரைனிய சமரசவாதக் கட்சியினர் பெட்ரோகிராடில் இருந்த தங்களது மூத்த சகோதரர்களை விடவும் எண்ணற்ற அளவில் மிகப் பாதுகாப்பாய் உணர்ந்தனர். தேசிய உரிமைகளுக்கான அவர்களது போராட்டத்தை சூழ்ந்திருந்த நம்பிக்கையூட்டும் சூழலைத் தவிர, உக்ரைனில் ஒப்பீட்டளவில் குட்டி முதலாளித்துவக் கட்சிகள் பெற்றிருந்த ஸ்திரநிலையானது (ஏராளமான பிற ஒடுக்கப்பட்ட நாடுகளில் போலவே) பின்தங்கிய நிலை என்கின்ற ஒற்றை வார்த்தையில் விவரிக்கத்தக்க பொருளாதார மற்றும் சமூக வேர்களைக் கொண்டிருந்தது. டோனெட்ஸ் மற்றும் கிரிவோரோக் பள்ளத்தாக்குகளில் வேகமான தொழிற்துறை அபிவிருத்தி இருந்தபோதிலும், ஒட்டுமொத்தமாய் உக்ரைன் தொடர்ந்து மகா ரஷ்யாவின் பின்னால் தான் வந்து கொண்டிருந்தது. உக்ரைனின் பாட்டாளி வர்க்கம் ஒருபடித்தான தன்மை குறைந்ததாகவும் அதிகம் புடம்போடப்படாததாகவும் இருந்தது. போல்ஷிவிக் கட்சியானது எண்ணிக்கையிலும் குணத்திலும் பலவீனமாய் இருந்தது; மென்ஷிவிக்குகளிடம் இருந்து முறித்து வெளிவருவதில் மெதுவாய் இருந்தது; அத்துடன் பரிதாபகரமாக அரசியல் மற்றும் குறிப்பாக தேசியச் சூழ்நிலையில் பார்வையைக் குறுக்கி இருந்தது. உக்ரைனின் கிழக்கத்திய தொழிற்துறைப் பகுதிகளிலும் கூட, அக்டோபர் மத்தியளவுக்கு தாமதமாய் நடந்த சோவியத்துகளின் ஒரு பிராந்திய மாநாட்டிலும் கூட லேசான சமரசவாதக் கட்சியினரின் பெரும்பான்மை காணப்பட்டது! உக்ரைனிய முதலாளித்துவ வர்க்கம் ஒப்பீட்டளவில் இன்னும் பலவீனமாய் இருந்தது. ஒட்டுமொத்தமாய் ரஷ்ய முதலாளித்துவத்தின் சமூக ஸ்திரமின்மைக்கான காரணங்களை எடுத்துப் பார்த்தால் நமக்குத் தெரியும் அதன் மிகச் சக்திவாய்ந்த பிரிவு என்பது ரஷ்யாவிலும் கூட வசித்திராத வெளிநாட்டினரைக் கொண்டதாய் இருந்தது என்கின்ற உண்மையும் அதன் காரணங்களில் ஒன்று என்பது. எல்லைப் பகுதிகளில் இந்த உண்மையுடன் இன்னொரு காரணமும் சேர்ந்து கொண்டது, அதுவும் முக்கியத்துவத்தில் குறைவற்றது: அங்கிருக்கும் சொந்த உள்நாட்டு முதலாளித்துவ வர்க்கமே பெரும்பான்மையான எண்ணிக்கையிலான மக்களின் அதே தேசிய இனத்தை சாராதவர்களாக இருந்தது. இந்த எல்லைப் பகுதியில் நகர மக்களின் சேர்க்கைவிகிதம் நாட்டின் மொத்தமக்களின் சேர்க்கைவிகிதத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாய் இருந்தது. உக்ரைனிலும் வெள்ளை ரஷ்யாவிலும் நிலப்பண்ணை, முதலாளி, வழக்கறிஞர், பத்திரிகையாளர், எல்லாம் மகா ரஷ்யர்களாய் இருந்தனர், ஒரு போலந்து இனத்தவரோ ஒரு யூதரோ அயல்நாட்டினராய் கருதப்பட்டார்; கிராம மக்கள் மொத்தமும் உக்ரைனியர்களாக மற்றும் வெள்ளை ரஷ்யர்களாக இருந்தனர். பால்டிக் அரசுகளில் நகரங்கள் ஜேர்மன், ரஷ்யன் மற்றும் யூத முதலாளிகளுக்கு புகலிடமாய் இருந்தன; நாடு முழுமையாக லெட் இனத்தவர் மற்றும் எஸ்தோனியர்களைக் கொண்டதாய் இருந்தது. ஜோர்ஜியாவின் நகரங்களில் ரஷ்ய மற்றும் ஆர்மீனிய மக்கள் தொகைதான் மேலோங்கியதாய் இருந்தது, இது போலத்தான் துருக்கியின் அஜர்பைஜானிலும். நாட்டின் அடிப்படையான மக்களில் இருந்து வாழ்க்கை மற்றும் கலாச்சார மட்டத்தில் மட்டுமல்லாமல் இந்தியாவில் ஆங்கிலேயர்கள் இருந்ததைப் போல மொழியாலும் கூட பிரிக்கப்பட்டதாய் இருந்தது. தமது உடைமைகளைப் பாதுகாத்துக் கொள்வது மற்றும் அதிகாரத்துவ எந்திரத்துக்கு வருவாய் சேர்ப்பது ஆகிய கடமையுடனும் அத்துடன் மற்ற நாடுகளின் ஆளும் வர்க்கங்களுடன் நெருக்கமான பிணைப்பும் கொண்டிருந்த இந்த எல்லைப்பகுதிகளை சேர்ந்த நிலப்பண்ணைகள், ஆலைமுதலாளிகள் மற்றும் பெருவியாபாரிகள் தங்களைச் சுற்றி ரஷ்ய அதிகாரிகளின் (குமாஸ்தாக்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், மற்றும் ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கு தொழிலாளர்களும் இதில் இருந்தனர்) ஒரு சின்ன வட்டத்தை உருவாக்கி நகரங்களை ரஷ்யமயமாக்கம் மற்றும் காலனியாக்கத்தின் மையங்களாக மாற்றினர். கிராமங்கள் அமைதியாக இருந்தவரை அவற்றைப் புறக்கணிப்பது சாத்தியமாய் இருந்தது, ஆனால், அவை பொறுமையிழந்து கொஞ்சம் கொஞ்சமாய் தமது குரலை உயர்த்தத் தொடங்கியபோது, நகரம் தனது தனியந்தஸ்தான நிலையைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு அதை எதிர்த்தது, தொடர்ந்து எதிர்த்து வந்தது. அதிகாரி, பெருவியாபாரி, வழக்கறிஞர் ஆகியோர் தொழிற்துறையிலும் கலாச்சாரத்திலுமான தமது மேல் நிலைகளைத் தக்கவைத்துக் கொள்வதற்கான போராட்டத்தை ”தேசப்பற்று வெறி” பெருகி வருவதன் மீதான ஒரு உச்ச ஸ்தாயிலான கண்டிப்புக் குரலின் வடிவத்தின் கீழ் மறைத்துக் கொள்ள விரைவாகக் கற்றுக் கொண்டனர். தனது நிலையை பாதுகாத்துக் கொள்வதற்காக ஒரு ஆளும் தேசத்தின் விருப்பமானது எப்படி ஒரு வெற்றி பெற்ற தேசம் அது கொள்ளையடித்ததை பாதுகாத்துக்கொள்ள சுலபமாய் அமைதிவாதம் என்னும் வடிவத்தை எடுக்கிறதோ அதைப் போல பலசமயங்களில் “தேசியவாதத்திற்கப்பாற்பட்டதாக” ஆடையணிந்து கொள்கிறது. இவ்வாறாக காந்தியின் முன் மக்டொனால்ட் தான் ஒரு சர்வதேசியவாதியைப் போல உணர்கிறார். இவ்வாறே, ஜேர்மனியை நோக்கிய ஆஸ்திரியர்களின் சாய்வு Poincaré க்கு பிரெஞ்சு அமைதிவாதத்திற்கு எதிரான ஒரு குற்றமாய் தோன்றுகிறது. மே மாதத்தில் ரடாவின் குழு ஒன்று இடைக்கால அரசாங்கத்திற்கு பின்வருமாறு எழுதியது: “உக்ரைனின் நகரங்களில் வாழும் மக்கள் தங்கள் முன்னால் இந்த நகரங்களில் ரஷ்யமயமாக்கப்பட்ட வீதிகளைக் காண்கிறார்கள்.....அத்துடன் இந்த நகரங்கள் எல்லாம் மொத்த உக்ரைனிய மக்களின் கடலில் சிறு தீவுகள் மட்டுமே என்பதை அவர்கள் முற்றிலுமாய் மறந்து போகின்றனர்.” ரோசா லுக்சம்பேர்க் அக்டோபர் புரட்சியின் வேலைத்திட்டத்திற்கு எதிராக வைத்த தனது உயிரிழந்துபோன -posthumous- தர்க்கத்தில், முன்னாளில் பொருளற்றுப்பேசும் குட்டி முதலாளித்துவ புத்திஜீவித் தட்டின் ஒரு “பொழுதுபோக்காக” மட்டுமே இருந்த உக்ரைனிய தேசியவாதம், சுய-நிர்ணயம் என்னும் போல்ஷிவிக் சூத்திரத்தின் நொதியினால் செயற்கையாய் வளர்த்தெடுக்கப்பட்டது என்று திட்டவட்டமாய் கூறியபோது, அவர் என்னதான் பிரகாசமான மூளை படைத்திருந்தாலும் அவர் ஒரு தீவிரமான வரலாற்று தவறினுள் விழுந்து விட்டார். உக்ரைனிய விவசாய வர்க்கம் கடந்த காலத்தில் தேசியக் கோரிக்கைகளை எழுப்பவில்லை என்றால் அதன் காரணம் உக்ரைனிய விவசாய வர்க்கம் பொதுவாக அரசியல் இருப்பின் உயரத்துக்கு வளர்க்கப்பட்டிருக்கவில்லை. பிப்ரவரிப் புரட்சி செய்த தலைமையான சேவை - சொல்லப்போனால் அதன் ஒரே சேவை இதுதான், ஆனால் இந்த ஒன்றே பெருமளவு போதுமானது - இதில் தான் அமைந்திருக்கிறது, அதாவது ரஷ்யாவின் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுக்கும் தேசங்களுக்கும் கடைசியாக பேசுவதற்கு ஒரு வாய்ப்பினை அது வழங்கியிருக்கிறது என்பதில். தங்களது சொந்தத் தாய் மொழியின் வழி அல்லாமல் விவசாய வர்க்கத்தின் இந்த அரசியல் விழிப்புணர்வென்பது வேறுவகையில் நடந்தேறியிருக்க முடியாது, பள்ளிகள், நீதிமன்றங்கள், சுய-நிர்வாகம் ஆகியவற்றைச் சூழ்ந்த அனைத்து பின்விளைவுகளுடனும். இதனை எதிர்ப்பதென்பது விவசாயிகளை மீண்டும் இருட்டுக்குள் தள்ளுவதற்கான முயற்சியாகத் தான் அமையும். நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் தேசியத்தில் அமைந்திருந்த வித்தியாசம் சோவியத்துகளிலும் வேதனையுடன் உணரப்பட்டது, அவை அதிகமாய் பெருநகர அமைப்புகளாய் இருந்த நிலையில். சமரசவாதக் கட்சிகளின் தலைமையின் கீழ் சோவியத்துகள் அடிக்கடி அடிப்படை மக்களின் தேசிய நலன்களை உதாசீனப்படுத்தும். உக்ரைனில் சோவியத்துகளின் பலவீனத்துக்கான காரணங்களில் இது ஒன்று. ரீகா மற்றும் ரெவால் சோவியத்துகள் லித்துவேனியர்கள் மற்றும் எஸ்தோனியர்களின் நலன்கள் குறித்து மறந்து போயின. பக்குவில் இருந்த சமரசவாத சோவியத் அடிப்படை துர்கோமென் மக்களின் நலன்கள் மீது வெறுப்பை உமிழ்ந்தது. சர்வதேசியவாதம் என்னும் மோசடிப் பதாகையின் கீழாக சோவியத்துகள் அடிக்கடி உக்ரைனியர்கள் அல்லது முஸ்லீம்களின் தற்காப்பு தேசியவாதத்திற்கு எதிரான ஒரு போராட்டத்தை நிகழ்த்தி நகரங்களின் ஒடுக்குமுறையான ரஷ்யமயமாக்கல் இயக்கத்துக்கு ஒரு திரையை வழங்கும். சிறிது காலம் தள்ளி, போல்ஷிவிக்குகளின் ஆட்சி என்னும் தீப்பற்றலால் இந்த எல்லைப் பகுதிகளின் சோவியத்துகள் கிராமங்களின் மொழியை பேசத்தொடங்கின. இயற்கை மற்றும் சுரண்டல் இரண்டினாலும் அவர்கள் அவ்வாறு ஆக்கப்பட்டிருந்த சைபீரியாவின் அந்நியபிரதேசத்தினரின் பொதுவான பொருளாதார மற்றும் கலாச்சாரப் பின் தங்கிய நிலைமை தேசிய அபிலாசைகளின் ஆரம்ப நிலைக்குக் கூட எழுவதற்கு அவர்களை அனுமதிக்கவில்லை. வொட்காவும் வரிகளும் கட்டாய மரபுக்கோட்பாடுகளும் தான் நினைவு தெரிந்த நாள் முதல் அரசமைப்பின் பிரதான சாதனங்களாய் இருந்து வந்துள்ளன. இத்தாலியர்கள் பிரெஞ்சுத் தீமை என்றழைத்த, பிரெஞ்சுக்காரர்கள் நெப்போலியத் தீமை என்றழைத்த அந்த நோய் சைபீரிய மக்களால் “ரஷ்யத் தீமை” என்று அழைக்கப்பட்டது. எந்த ஊற்றுமூலங்களில் இருந்து நாகரிகத்தின் விதைகள் வந்தன என்பதை இது காட்டுகிறது. பிப்ரவரிப் புரட்சி அந்த மட்டத்திற்கு எட்டவில்லை. வேட்டையாடுபவர்களின் துருவப் பிரதேசத்தின் மான் வளர்ப்பவர்களும் தங்களின் விடியலுக்கு இன்னும் வெகு காலம் காத்திருக்க வேண்டியிருந்தது. மத்திய ஆசியாவில் வடக்கு காகசஸ் பகுதியில் வோல்காவை ஒட்டிய பகுதி முழுவதும் மக்களும் பழங்குடியினரும் (முதன்முதலாய் இவர்கள் பிப்ரவரிப் புரட்சி மூலமாகத் தான் தங்களது வரலாற்றுக்கு முந்தைய இருப்பிலிருந்து விழிக்கப் பெற்றிருந்தனர்) இன்னும் தேசிய முதலாளித்துவ வர்க்கத்தையோ அல்லது தேசியப் பாட்டாளி வர்க்கத்தையோ கொண்டிருக்கவில்லை. விவசாயிகள் அல்லது மேய்ச்சல்காரர்களுக்கு மேலே ஒரு சிறிய அடுக்கு தங்களது உயரடுக்கு நிலையில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு ஒரு புத்திஜீவித்தட்டாக உருக்கொண்டிருந்தது. அது இன்னும் தேசிய அளவிலான சுய-நிர்வாக வேலைத்திட்டத்தின் அளவுக்குக்கூட எழுந்திருக்கவில்லை. தங்கள் சொந்த எழுத்தறிவு, தங்களது சொந்த ஆசிரியர்கள், சில சமயங்களில் தமது சொந்த மதகுருமார்கள் போன்ற விடயங்களில் தான் இந்தப் போராட்டம் இருந்தது. அரசின் கற்றறிந்த எஜமான்கள் மனமுவந்து இந்த உலகத்தில் தாங்கள் எழுவதற்கு அனுமதிக்க மாட்டார்கள் என்பதை மிக ஒடுக்கப்பட்டவர்கள் இந்த வழிகளில் கடுமையான அனுபவத்தில் கற்றுக் கொள்ளத் தள்ளப்பட்டார்கள். பின்தங்கியவர்களிலும் மிகவும் பின்தங்கியவர்களாய் இருந்தவர்கள் இவ்வாறாக தமது கூட்டாளியாக மிகப் புரட்சிகரமான வர்க்கத்தை எதிர்நோக்க தள்ளப்பட்டனர். வோடியாக்ஸ், சாவசஸ், சைரியன்ஸ், டகெஸ்தான் மற்றும் துர்கெஸ்தானின் பழங்குடியினர் ஆகிய அவர்களது இளம் புத்திஜீவித்தட்டின் இடது கூறுகளின் வழியாக போல்ஷிவிக்குகளை நோக்கிய தமது பாதையை அவர்கள் கண்டனர். காலனித்துவ உடைமையாகவிருந்த தலைவிதி, குறிப்பாக மத்திய ஆசியாவில், மையத்தில் ஏற்பட்ட தொழிற்துறைப் பரிணாமவளர்ச்சியுடன் சேர்ந்து முற்றிலுமாய் மாறவிருந்தது. வர்த்தகக் கொள்ளை உட்பட நேரடியான மற்றும் பட்டவர்த்தனமான கொள்ளையில் இருந்து ஆசிய விவசாயிகளை தொழிற்துறைக் கச்சாப் பொருட்களுக்கான, குறிப்பாக பருத்திக்கான, விநியோகஸ்தர்களாக மாற்றிய கூடுதல் மறைமுகமான (அந்நியமான) வழிமுறைகளுக்கு அது கடந்து சென்றது. இந்த அடுக்குரீதியாய் ஒழுங்கமைந்த சுரண்டலானது, முதலாளித்துவத்தின் காட்டுமிராண்டித்தனத்துடன் தந்தை வழி சமூகத்தின் காட்டுமிராண்டித்தனத்தையும் சேர்த்து, ஆசிய மக்களை அதீதமான தேசிய அவலநிலையில் வெற்றிகரமாய் பிடித்து வைத்துக் கொண்டது. இந்த விடயத்தில் பிப்ரவரி ஆட்சி எல்லாவற்றையும் உள்ளபடியே விட்டு விட்டது. ஜாரிசத்தின் கீழ் பஷ்கிர்கள், புரியாத்கள், கிர்கிஸ்கள், மற்றும் பிற நாடோடிப் பழங்குடியினரிடம் இருந்து பறித்த சிறந்த நிலங்கள் அனைத்தும் பூர்விக மக்களிடையே புகலிடங்களை ஏற்படுத்திக் கொள்வதற்காய் பரவிக் கிடந்த நிலப்பண்ணைகள் மற்றும் செல்வம்படைத்த ரஷ்யப் பெருவிவசாயிகளின் வசம் தான் தொடர்ந்து இருந்து கொண்டிருந்தது. இங்கே சுதந்திரத்தின் ஒரு தேசிய உணர்வை விழிக்கச் செய்வதென்பது முதலாவதாய், நில உடைமையின் ஒரு செயற்கையான பிரிப்பு முறையை உருவாக்கி நாடோடிகளைப் பட்டினி போட்டு கொஞ்சம் கொஞ்சமாய் இல்லாமல் அழித்துக் கொண்டிருந்த இந்த காலனியாதிக்கத்தினருக்கு எதிரான ஒரு போராட்டத்தைக் குறித்ததாய் இருந்தது. இந்த காலனியாதிக்கத்தினரோ தங்கள் தரப்பில் ஆசியர்களின் இந்தப் “பிரிவினைவாதத்திற்கு” எதிராக ரஷ்யாவின் ஐக்கியத்தை, அதாவது தாங்கள் பறித்து வைத்திருந்ததன் அங்கீகாரத்தை, ஆவேசமாய் பாதுகாத்து நின்றனர். பூர்விக இயக்கங்கள் மீது காலனியாதிக்கத்தினர் கொண்டிருந்த வஞ்சம் டிரான்ஸ்பைகல் (Transbaikal) பிரதேசத்தில் விலங்கியல் வடிவங்களை ஏற்றது. கிராமப்புற அலுவலக பணியாளர்கள் மற்றும் எல்லையில் இருந்து திரும்பும் கீழ்மட்ட படையதிகாரிகளில் இருந்து அணிதிரட்டிய மார்ச் சமூகப் புரட்சிகரவாதிகள் அமைப்பின் தலைமையின் கீழ் மேலான இனப்படுகொலை முழுவீச்சில் நடந்தது. பழைய ஒழுங்கினை சாத்தியமான காலத்துக்குப் பாதுகாத்துக் கொள்ளும் கவலையில், காலனியாதிக்க பகுதிகளில் இருந்த சுரண்டல்காரர்கள் மற்றும் ஒடுக்குமுறையாளர்கள் அனைவரும் அதுமுதல் நாடாளுமன்றத்தின் இறையாண்மை உரிமைகளுக்காய் விண்ணப்பித்தனர். இங்கு தனது உறுதிபடைத்த அரணைக் கண்ட இடைக்கால அரசாங்கம் தான் இந்தச் சொல்நடையை அவர்களுக்கு வழங்கியிருந்தது. இன்னொரு பக்கத்தில், ஒடுக்கப்பட்ட மக்களின் தனியந்தஸ்து படைத்த மேற்தட்டு வட்டாரங்களும் மேலும் மேலும் நாடாளுமன்றத்தின் பெயரால் அழைப்புவிட்டுக் கொண்டிருந்தனர். கீழிருந்தான ஒரு அழுத்தம் தமது நிலையைச் சிக்கலாக்கும் சமயங்களில் எல்லாம் மலைவாழ் மக்கள் மற்றும் வடக்கு காகசஸ் பகுதிகளின் பழங்குடியினருக்கு விழிப்பூட்டுவதற்கு மேலாக இஸ்லாமிய சட்டத்தை (ஷரியத்தின் பச்சைப் பதாகையை) தூக்கிபிடிக்க கூடிய முஸ்லீம்களின் மதகுருவும் கூட இப்போது “அரசியலமைப்புசபைக் கூட்டம் வரும் வரை” பிரச்சினையை ஒத்திவைத்துக் கொண்டிருந்தனர். நாடு முழுவதுமே இது பழைமைவாதத்தின் சுலோகமாக, பிற்போக்குவாதத்தின் சுலோகமாக, சிறப்பு நலன் மற்றும் தனியந்தஸ்தின் சுலோகமாக ஆனது. அரசியலமைப்பு சபைக் கூட்டத்திற்கு விண்ணப்பம் செய்வதென்பதென்றால், தள்ளிப் போடுவதென்றும் கால அவகாசத்தை பெறுவதென்றும் அர்த்தமானது. தள்ளிப் போடுவதன் அர்த்தம், உங்கள் சக்திகளை ஒன்றுகூட்டுங்கள், புரட்சியின் கழுத்தை நெரியுங்கள் என்பதாகும். ஆயினும் தலைமையானது மதகுருக்கள் மற்றும் நிலப்பிரபுத்துவ பண்ணையாளர்களின் கரங்களில் விழுந்தது ஆரம்பத்தில் மட்டுமே, பின் தங்கிய மக்களிடையே மட்டுமே, ஏறக்குறைய முஸ்லீம்களிடையே மட்டுமே. பொதுவாக கிராமங்களில் தேசிய இயக்கத்தின் தலைமையில் கிராமப்புற ஆசிரியர்கள், கிராம அலுவலக பணியாளர்கள், கீழ்நிலை நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள், மற்றும் கொஞ்ச மட்டத்திற்கு, வியாபாரிகள் இருந்தனர். மிக மதிப்பு பெற்றதாகவும் நன்கு வசதி கொண்டதாகவும் இருந்த கூறுகளைக் கொண்டதாய் இருந்த ரஷ்ய அல்லது ரஷ்யமயமாக்கப்பட்ட புத்திஜீவித் தட்டின் அருகருகாமையில், எல்லை நகரங்களில் இன்னொரு இளம் அடுக்கும் உருவானது. இந்த அடுக்கு தனது கிராமப்புற மூலத்துடன் நெருக்கமாய் பிணைக்கப்பட்டதாயும் மூலதன வரவை அடையமுடியாததாயும் இருந்தது. இயல்பாகவே இந்த அடுக்கு, அடிப்படை விவசாய வெகுஜனங்களின் தேசிய நலன்களையும், ஒரு பகுதியாய் சமூக நலன்களையும் கூட, அரசியல்ரீதியாய் பிரதிநிதித்துவப்படுத்தும் கடமையை தனக்கு வரித்துக் கொண்டது. இந்த தேசியவாத அபிலாசையின் நிலைப்பாட்டில் ரஷ்ய சமரசவாதிகளுடன் குரோதமான உறவு கொண்டிருந்தனர் என்றாலும், இந்த எல்லைப் பகுதி சமரசவாதிகள் அதே அடிப்படை வகையையே சார்ந்தவர்களாக இருந்தனர், இன்னும் பெரும்பகுதி அதே பெயரிலேயே இருந்தனர். உக்ரைனிய சமூகப் புரட்சியாளர்கள் மற்றும் சமூக ஜனநாயகவாதிகள், ஜோர்ஜியர்கள் மற்றும் லெட்லாந்து மென்ஷிவிக்குகள், லித்துவேனிய “ட்ருடோவிக்குகள்” ஆகியோர் தங்களது பெயரளவிலான மகா ரஷ்ய பெருந்தகைகளைப் போலவே புரட்சியை முதலாளித்துவ ஆட்சியின் கட்டமைப்பிற்குள் ஒடுக்க முயற்சி செய்தனர். ஆனால் இங்கிருந்த பூர்விக முதலாளித்துவ வர்க்கத்தின் மிகவும் பலவீனப்பட்ட தன்மையானது மென்ஷிவிக்குகளையும் சமூகப் புரட்சியாளர்களையும் ஒரு கூட்டணிக்குள் நுழைவதற்குப் பதிலாக அரசு அதிகாரத்தை தமது சொந்தக் கரங்களில் எடுத்துக் கொள்வதற்குத் தள்ளியது. மத்திய அரசாங்கத்தை விடவும் விவசாய மற்றும் தொழிலாளர் பிரச்சினைகளில் கூடுதல் தூரம் செல்ல நிர்ப்பந்தமுற்ற நிலையில், இந்த எல்லைப்புற சமரசவாதிகளுக்கு இராணுவத்திற்கும் மற்றும் நாட்டினர்க்கும் முன்னால் கூட்டணி இடைக்கால அரசாங்கத்தின் எதிர்ப்பாளர்களாய் காட்டிக்கொள்ளக் கூடிய மிகப் பெரும் அனுகூலம் கிட்டியது. இவையனைத்தும், ரஷ்யாவின் சமரசவாதிகள் மற்றும் எல்லைப்புறப் பகுதிகளின் சமரசவாதிகளுக்கு மாறுபட்ட தலைவிதிகளை உருவாக்க என்றில்லாவிட்டாலும், குறைந்தபட்சம் அவர்களது எழுச்சி மற்றும் வீழ்ச்சிக்கு ஒரு மாறுபட்ட உத்வேகத்தைக் கொடுப்பதற்கேனும் போதுமானதாய் இருந்தது. ஜோர்ஜிய சமூக ஜனநாயகவாதிகள் சிறிய ஜோர்ஜியாவின் பரம ஏழைகளாய் இருந்த விவசாய வர்க்கத்திற்கு தலைமைதாங்கி தங்களுக்குப் பின்னால் அழைத்துச் சென்றது மட்டுமல்ல, ஒட்டுமொத்த ரஷ்யாவுக்கும் “புரட்சிகர ஜனநாயக” இயக்கத்தை தலைமை நடத்துவதற்கும் உரிமை கோரினர், அதில் அவர்களுக்கு வெற்றி கிட்டாமலும் இல்லை. புரட்சியின் முதல் மாதங்களில் ஜோர்ஜிய புத்திஜீவித்தட்டின் தலைவர்கள் ஜோர்ஜியாவை தேசியத் தந்தைநாடாய் கருதவில்லை, மாறாக ஒட்டுமொத்த நாட்டிற்கும் தலைவர்களை வழங்க பணிக்கப்பட்டிருந்த ஆசிர்வதிக்கப்பட்ட தெற்கத்திய மாநிலமாகவே கருதினர். மாஸ்கோ மாநில அரசுகளின் மாநாட்டில் புகழ்பெற்ற ஜோர்ஜிய மென்ஷிவிக்குகளில் ஒருவரான சென்கெலி, “ஜோர்ஜியர்கள் எப்போதும், ஜாரிசத்தின் கீழும் கூட, நேர்மையாகவும் திறமாகவும் “ஒரே தந்தை நாடு, ரஷ்யா” என்றே கூறி வந்திருந்தனர்” என்று பெருமையடித்துக் கொண்டார். “அப்படியானால் ஜோர்ஜிய தேசத்திற்கு நாம் என்ன சொல்வது” என்று இதே சென்கெலி ஒரு மாதம் கழித்து ஜனநாயக மாநாட்டில் வினவினார். “இது முழுக்க மகா ரஷ்யர்களின் புரட்சிக்கு சேவை செய்து கொண்டிருக்கிறது.” தனித்தனியான பிராந்தியங்களுக்கான தேசியரீதியான உரிமைகோரல்களை தடுப்பதற்கு அல்லது மட்டுப்படுத்துவதற்கு அவசியம் நேரும்போதெல்லாம் ஜோர்ஜிய சமரசவாதிகள், யூதர்களைப் போலவே, மகா ரஷ்யர்களின் அதிகாரத்துவத்திற்கு எப்போதும் “சேவை செய்து” கொண்டிருந்தனர் என்பது ஓரளவு நன்கறியப்பட்ட உண்மையே. ஆயினும் தங்களை முதலாளித்துவ ஜனநாயகத்தின் கட்டமைப்பிற்குள் சுருட்டி வைத்திருக்க ஜோர்ஜிய சமூக ஜனநாயகவாதிகள் நம்பிக்கை கொண்டிருந்த வரையில் தான் இது தொடர முடிந்தது. போல்ஷிவிசத் தலைமையில் வெகுஜனமக்கள் வெற்றி பெறும் வாய்ப்பு பகுதியாய் தோற்றமளிக்கத் தொடங்கியிருந்ததால், ஜோர்ஜிய சமூக ஜனநாயகவாதிகள் ரஷ்ய சமரசவாதிகளுடன் தங்களது உறவுகளைத் தளர்த்திக் கொண்டு ஜோர்ஜியாவினுடைய பிற்போக்குக் கூறுகளுடன் நெருக்கமாய் ஒன்றுபட்டனர். சோவியத்துகள் வெற்றி பெற்ற செய்தி கிடைத்த நிமிடமே, ஒரே ரஷ்யாவுக்கு குரல்கொடுத்த இந்த ஜோர்ஜியக் கட்சியினர் அனைவரும் பிரிவினை மேளத்தைத் தட்ட ஆரம்பித்து, டிரான்ஸ்ககாசியாவின் (Transcaucasia) ஏனைய மக்களுக்கு தங்களது நாட்டுவெறி மனோபாவத்தின் மஞ்சள்நிற நச்சுப் பற்களை வெளிக்காட்டினர். சமூக முரண்பாடுகள் இதுபோல் தவிர்க்கவியலாமல் தேசிய வேடத்தை அணிந்து கொள்வதென்பது(எனினும் ஒரு பொதுவிதியாகவே எல்லைப் பிரதேசங்களில் இது குறைவாக அபிவிருத்தியுற்றிருந்தது) அக்டோபர் புரட்சியானது ஏன் மத்திய ரஷ்யாவை விடவும் அநேகமான ஒடுக்கப்பட்ட தேசங்களில் கூடுதலான எதிர்ப்பாளர்களைச் சந்திக்க வேண்டி வந்தது என்பதைப் போதுமான அளவுக்கு விளக்குகிறது. ஆனால் இன்னொரு பக்கத்தில், தேசியங்களின் மோதல் அதன் வெகு இயல்பாகவே பிப்ரவரி ஆட்சியை வன்மையாக உலுக்கியதோடு மத்தியில் புரட்சிக்கான போதுமான அளவு சாதகமான சூழல்களையும் உருவாக்கியது. இந்த சூழல்களில் தேசியக் குரோதங்கள் அவை வர்க்க முரண்பாடுகளுடன் ஒன்றுசேரும் சமயங்களில் எல்லாம் குறிப்பாக கொதிக்கும் நிலைக்குச் சென்றது. லெட்லாந்து விவசாயிகளுக்கும் ஜேர்மன் சீமான்களுக்கும் இடையில் காலம் காலமாய் இருந்து வந்த குரோதமானது ஆயிரக்கணக்கான உழைக்கும் லெட்லாந்து இனத்தவரை போர் வெடிப்பின்போது மனமுவந்து பங்கேற்கத் தள்ளியது. லெட்லாந்து விவசாயிகளிடம் இருந்து உருவான குறிபார்த்துச் சுடும் படைப்பிரிவினர் படையணியில் சிறந்த துருப்புகளாய் இருந்தனர். ஆயினும் மே மாத அளவுக்கு ஆரம்பத்திலேயே அவர்கள் ஏற்கனவே ஒரு சோவியத் அரசாங்கத்திற்கு சார்பாக வந்திருந்தனர். அவர்களது தேசியவாதம் என்பது முதிர்ச்சியற்ற போல்ஷிவிசத்தின் வெளிக் கூடாய் இருந்தது. இதே போன்றதொரு நிகழ்முறை எஸ்தோனியாவிலும் நடந்தது. வெள்ளை ரஷ்யாவில், அதன் போலந்து அல்லது போலந்துமயமாக்கப்பட்ட நிலப்பண்ணைகள், பெருநகரங்கள் மற்றும் சிறு நகரங்களிலான யூத மக்கள், மற்றும் அதன் ரஷ்ய அதிகாரிகள் ஆகியோரைக் காட்டிலும் இருமடங்காகவும் மும்மடங்காகவும் இருந்த ஒடுக்கப்பட்ட விவசாய வர்க்கம், அக்டோபருக்கு சற்று முந்தைய காலத்தில், அருகிலிருக்கும் எல்லையின் செல்வாக்கின் கீழ், தேசியரீதியாய் மற்றும் சமூகரீதியாய் தான் அவமதிக்கப் பெறுவதான உணர்வை போல்ஷிவிக்குகளின் பாதைக்கு ஆதரவாய்த் திருப்பியது. சட்ட மன்றத்திற்கான தேர்தலில் வெள்ளை ரஷ்யர்களின் பெரும்பான்மை மக்கள் தங்களது வாக்குகளை போல்ஷிவிக்குகளுக்கு அளித்தனர். சமூக அவமதிப்புடன் விழிப்படைந்த தேசிய மகிமையை இவ்வாறாய் பிணைத்திருந்த இந்த நிகழ்வுப்போக்குகள் அனைத்தும் இப்போது பின்னாலிழுப்பதும் முன்னால் நகருவதுமாய் இருந்ததோடு இராணுவத்தில் ஒரு மிகத் தீவிரமான கூர்மைப்பட்ட வெளிப்பாட்டைக் கண்டது. இங்கே தேசியப் படையணிகளை உருவாக்குவதற்கான ஒரு உண்மையான உணர்ச்சி பரபரப்பு இருந்தது, இவை போர் மற்றும் போல்ஷிவிக்குகளை நோக்கிய அவற்றின் மனோபாவத்தைப் பொறுத்து மத்திய அரசாங்கத்தால் ஒரு சமயம் அரவணைக்கப்பட்டது, இன்னொரு சமயம் சகித்துக் கொள்ளப்பட்டது, மற்றுமொரு சமயத்தில் துன்புறுத்தப்பட்டது. லெனின் புரட்சியின் “தேசிய”த் துடிப்பு மீது ஒரு உறுதியான கரம் வைத்திருந்தார். செப்டம்பர் இறுதிவாக்கில் அவர் எழுதிய நெருக்கடி கனிந்திருக்கிறது என்கிற பிரபலமான கட்டுரையில், ஜனநாயக மாநாட்டில் தேசியத்துக்கான பிரிவினர் “தீவிரமய விடயத்தில் தொழிற்சங்கங்களுக்கு அடுத்த இரண்டாமிடத்தில் இருந்தனர், அத்துடன் கூட்டணிக்கு எதிரான வாக்குகளின் சதவீதத்தில் (55க்கு 40 சதவீதம்) சோவியத் கூட்டத்தினரை விடவும் உயரமான இடத்தில் நின்றிருந்தனர்” என்பதை தொடர்ந்து சுட்டிக் காட்டுகிறார். அதாவது ஒடுக்கப்பட்ட மக்கள் இனியும் மகா ரஷ்ய முதலாளித்துவ வர்க்கத்திடம் இருந்து எந்த அனுகூலத்தையும் நம்பிக் கொண்டு இருக்கவில்லை. ஒரு சமயத்திற்கு ஒரு நடவடிக்கை எனவும் மற்றும் புரட்சிகரப் பறிமுதல்களின் வடிவத்திலும் சுயாதீனமான நடவடிக்கையால் தங்களது உரிமைகளைப் பெறுவதற்கு அவர்கள் மேலும் மேலும் முயற்சி செய்து கொண்டிருந்தனர். தொலைதூர வெர்க்னியுடின்ஸ்கில் பரியத்துகளின் அக்டோபர் காங்கிரசில் பேசிய ஒருவர் ”அந்நிய பிரதேசத்தாரின் நிலையில் பிப்ரவரிப் புரட்சி ஒன்றையும் அறிமுகம் செய்யவில்லை” என்று அறிவித்தார். அவர் சூழ்நிலையை விவரித்த விதம், இன்னும் போல்ஷிவிக்குகளின் பக்கத்திற்குச் சென்று விடவில்லை எனினும் குறைந்தது அவர்களை நோக்கி மேலும் மேலும் நட்புரீதியான ஒரு நடுநிலையையேனும் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்பதாய் ஆக்கியது. பெட்ரோகிராட் கிளர்ச்சியின் அதே நாட்களின் போது கூடிய அனைத்து உக்ரைனிய சிப்பாய்கள் காங்கிரஸ், உக்ரைனிய சோவியத்துக்கு அதிகாரத்தை மாற்றுவதற்கு எதிராகப் போராடுவதற்கு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதே சமயத்தில் மகா ரஷ்ய போல்ஷ்விக்குகளின் கிளர்ச்சியை “ஜனநாயக-விரோத நடவடிக்கை” யாய் கருதுவதற்கு அது மறுத்து விட்டதோடு அந்தக் கிளர்ச்சியை அடக்க சிப்பாய்கள் அனுப்பப்படுவதை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதற்கும் அது வாக்குறுதியளித்தது. இந்த இரட்டைத்தன்மை, தேசியப் போராட்டத்தின் குட்டி முதலாளித்துவக் கட்டத்தை துல்லியமாக குணாம்சப்படுத்துவதுடன், எல்லாவகையான இரட்டைத்தன்மைகளுக்கும் ஒரு முற்றுப் புள்ளி வைக்க நோக்கம் கொண்டிருந்த பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு வழிவகையளித்தது. இன்னொரு பக்கத்தில், எல்லைப் பகுதிகளில் இதுவரை எல்லா இடங்களிலும் எப்போதும் மத்திய அதிகாரத்தை நோக்கி மையம் கொண்டு வந்திருந்த முதலாளித்துவ வட்டாரங்கள் இப்போது பல சந்தர்ப்பங்களில் நிழல்போன்ற தேசிய அடித்தளம் கூட இருக்காத ஒரு பிரிவினைவாதத்திற்கு ஆதரவாக மாறியிருந்தன. நேற்று வரை ரோமானாவ்களின் முதல் அரணான ஜேர்மன் சீமான்களை பாராட்டிக்கொண்டு பின்னால் சென்று கொண்டிருந்த பால்டிக் முதலாளித்துவ வர்க்கம் பிரிவினைவாதப் பதாகையின் கீழ் போல்ஷிவிக் ரஷ்யாவுக்கும் மற்றும் தன் சொந்த வெகுஜனங்களுக்கும் எதிரான போராட்டத்தில் தனது நிலைப்பாட்டை எடுத்தது. இந்தப் பாதையில் இன்னும் கூடுதல் கவலைதரும் நிகழ்வுகளும் தோன்றின. அக்டோபர் 20 அன்று “கோசாக் துருப்புகள், காகாசிய மலைவாசிகள் மற்றும் ஸ்டெப்பி (விரிந்த மரங்களற்ற சமவெளிப் பகுதி) பகுதியின் சுதந்திர மக்கள் ஆகியோரின் தென்-கிழக்கு ஒன்றியம்” என்கின்ற ஒரு புதிய அரசு உருவாக்கத்திற்கு அடித்தளங்கள் இடப்பட்டன. இங்கே ஏகாதிபத்திய மத்தியவாதத்தின் தலைமை அரணாக இருந்த டோன், குபான், டையர், ஆஸ்ட்ராகான் கோசாக்குகளின் தலைவர்கள் ஒரு சில மாதங்களுக்குள் கூட்டாட்சிக் கொள்கைகளின் உணர்வுமிக்க பாதுகாவலர்களாக மாறியிருந்தனர், இந்த அடித்தளத்தில் முஸ்லீம் மலைவாசிகள் மற்றும் ஸ்டெப்பிவாசிகளின் தலைவர்களுடன் ஐக்கியப்பட்டு நின்றனர். இந்த கூட்டாட்சி அமைப்பின் எல்லைகள் வடக்கில் இருந்து வரக்கூடிய போல்ஷிவிக் அபாயத்துக்கு எதிரான ஒரு தடையாக சேவை செய்ய இருந்தது. ஆயினும், போல்ஷிவிக்குகளுக்கு எதிரான உள்நாட்டுப் போருக்கு முதன்மையான பயிற்சிக் களத்தை உருவாக்குவதற்கு முன்னதாக, இந்த எதிர்ப்புரட்சி பிரிவினைவாதமானது நேரடியாக ஆளும் கூட்டணிக்கு எதிராகச் சென்று, தன்னை நம்பிக்கையிழக்கச் செய்யவும் பலவீனப்படுத்தவும் சென்றது. இவ்வாறாக, தேசியப் பிரச்சினையானது மற்ற அனைத்துடனும் சேர்ந்து கொண்டு இடைக்கால அரசாங்கத்துக்கு ஒரு மெடுசாவின் தலையை போன்ற நிலையைக் கொண்டு வந்தது. அதாவது மார்ச் ஏப்ரல் நம்பிக்கைகள் என்னும் ஒவ்வொரு தலைமுடியும், இப்போது வஞ்சம் மற்றும் பழியின் ஒரு பாம்பாக மாறியிருந்தது.
************************************************************* தேசிய இனங்கள் பிரச்சினை பற்றிய ஒரு மேலதிக குறிப்பு போல்ஷிவிக் கட்சியானது எந்த வகையிலும் பிப்ரவரி புரட்சிக்குப் பின் உடனடியாக தேசியப் பிரச்சினை விவகாரத்தில் தொலைநோக்கில் அதன் வெற்றியை உத்தரவாதம் அளிக்கக் கூடிய அணுகுமுறை எதனையும் ஏற்றுக் கொண்டு விடவில்லை. இது அவை பலவீனமான மற்றும் அனுபவமற்ற கட்சி அமைப்புகளைக் கொண்டிருந்த எல்லைப் பகுதிகளில் மட்டுமல்ல, பெட்ரோகிராட் மையத்திலும் கூட உண்மையாக இருந்தது. போர் சமயத்தில் கட்சி மிகவும் பலவீனமுற்றிருந்தது, அதன் காரியாளர்களின் தத்துவார்த்த மற்றும் அரசியல் மட்டமும் மிகவும் கீழ்சென்றுவிட்டிருந்தது. அதனால் தேசியப் பிரச்சினை விவகாரத்திலும் கூட லெனின் வந்துசேரும் வரை அதன் உத்தியோகபூர்வ தலைவர்கள் மிகவும் குழப்பமான மற்றும் அரைகுறையான நிலைப்பாடுகளையே எடுத்திருந்தனர். போல்ஷிவிக்குகள் தங்களது பாரம்பரியத்தைப் பின்பற்றி ஒரு தேசம் சுய நிர்ணயத்தை கொண்டிருக்கும் உரிமையைப் பாதுகாத்து நின்றனர் என்பது நிச்சயமாய் இருந்தது. ஆனால் மென்ஷிவிக்குகளும் கூட இதே சூத்திரத்தை வார்த்தையளவில் பிடித்துக் கொண்டிருந்தனர். இரண்டு வேலைத்திட்டங்களின் வார்த்தைகளும் ஒரேமாதிரியாக தோன்றின. அதிகாரப் பிரச்சினை தான் தீர்மானிப்பதாய் இருந்தது. தேசிய, அதேபோல் விவசாயப் பிரச்சினையிலும் போல்ஷிவிக் சுலோகங்களுக்கும் மற்றும் ஜனநாயக வடிவங்களின் வேடத்தில் தான் என்றாலும் ஒரு முதலாளித்துவ-ஏகாதிபத்திய ஆட்சியை பாதுகாப்பதாய் அமைந்தவற்றுக்கும் இடையிலிருக்கக் கூடிய சமரசமற்ற முரண்பாட்டை புரிந்து கொள்வதற்கு கட்சியின் தற்காலிகத் தலைவர்கள் முற்றிலும் திறனற்றவர்களாய் இருந்தனர். ஜனநாயக நிலைப்பாடு தனது மிகவும் அறிவற்ற வெளிப்பாட்டை ஸ்ராலினின் பேனா முனையிலிருந்து கண்டது. மார்ச் 25 அன்று, தேசிய மட்டுப்படுத்தல்களை ஒழிப்பதில் அரசின் ஆணையின்கீழ் விவாதிக்கின்ற ஒரு கட்டுரையில், ஸ்ராலின் தேசியப் பிரச்சினையை ஒரு வரலாற்று அளவுகோலில் சூத்திரப்படுத்த முயற்சித்தார். அவர் எழுதுகிறார், “தேசிய ஒடுக்குமுறைக்கான சமூக அடித்தளமாய் இருப்பது, அதற்கு உந்துசக்தியாய் இருப்பது, அழுகலடைந்து வருகின்ற நிலப் பிரபுத்துவமே.” தேசிய ஒடுக்குமுறையானது முதலாளித்துவ சகாப்தத்தின் போது முன்கண்டிராத வண்ணம் அபிவிருத்தியுற்றது, காலனித்துவ கொள்கைகளில் அது தனது மிகக் காட்டுமிராண்டித்தனமான வெளிப்பாட்டைக் கண்டது என்கிற உண்மை இந்த ஜனநாயக ஆசிரியரின் அறிவுவரம்புக்கு அப்பாற்பட்டிருந்ததாய் தோன்றுகிறது. அவர் தொடர்ந்து எழுதுகிறார், “இங்கிலாந்தில், அதாவது எங்கு நிலவுடமை பிரபுத்துவம் முதலாளித்துவத்துடன் சேர்ந்து அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டிருந்ததோ, எங்கு இந்த பிரபுத்துவத்துவத்தின் வரம்பற்ற அதிகாரம் எல்லாம் வெகு காலத்துக்கு முன்பே இல்லாதொழிந்து போயிருந்ததோ அங்கே தேசிய ஒடுக்குமுறை கடுமையற்றதாகவும், மனிதாபிமானமற்ற தன்மை குறைந்ததாகவும் இருந்தது. இதில் போர் சமயத்தில், அதிகாரம் நிலப்பிரபுக்களின் கைகளுக்கு மாறி விட்டிருந்த சமயத்தில்(!) தேசிய ஒடுக்குமுறையானது கணிசமாய் வலிமையடைந்திருந்ததை (அயர்லாந்து மற்றும் இந்தியாவை கொடுமைப்படுத்தியதை) கணக்கில் இருந்து விட்டுவிட வேண்டும்.” அயர்லாந்தும் இந்தியாவும் ஒடுக்கப்பட்டதற்கு காரணகர்த்தாக்கள் நிலப்பிரபுக்களாம், அவர்கள் போரின் புண்ணியத்தால் வெளிப்படையாக லாயிட் ஜோர்ஜ் என்னும் மனிதரின் பேரில் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டனராம். ஸ்ராலின் தொடர்ந்து எழுதுகிறார், “சுவிட்சர்லாந்திலும் வட அமெரிக்காவிலும், அதாவது எங்கு நிலப்பிரபுத்துவம் இல்லை, ஒருபோதும் இருந்ததில்லையோ (!), எங்கு அதிகாரம் பிளவுபடாமல் முதலாளித்துவத்தின் கரங்களில் இருந்ததோ, அங்கு தேசிய இனங்கள் சுதந்திரமாக அபிவிருத்தியுற்றிருக்கின்றன. பொதுவாகப் பார்த்தால் தேசிய ஒடுக்குமுறை எந்த இடத்தையும் காணவில்லை...” அமெரிக்காவில் நீக்ரோ, இந்தியர், குடியேறிய மக்கள் மற்றும் காலனித்துவ பிரச்சினைகளை ஆசிரியர் முழுமையாக மறந்து விடுகிறார். நிலப்பிரபுத்துவத்தை ஜனநாயகத்துடன் குழப்பமான நிலையில் ஒப்புநோக்கவே வந்து நிற்கிற இந்த நம்பிக்கையில்லாத பிராந்தியரீதியான பகுப்பாய்வில் இருந்து தூய தாராளவாத அரசியல் முடிவுகள் வரையப்படுகின்றன. “அரசியல் அரங்கில் இருந்து நிலப் பிரபுத்துவத்தை அகற்றுதல், அதனிடமிருந்து அதிகாரத்தைப் பறித்தல் என்பன அதாவது தேசிய ஒடுக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைப்பது, பின் தேசிய சுதந்திரத்திற்கு அவசியமான நடைமுறை நிலைமைகளை உருவாக்குதலாகும்”. “ரஷ்யப் புரட்சி எந்த மட்டத்திற்கு வெற்றி பெற்றுள்ளதோ அந்த மட்டத்திற்கு அது நடைமுறையில் இந்த நிலைமைகளை உருவாக்கியுள்ளது”என்று ஸ்ராலின் எழுதுகிறார். இந்த இடத்தில் உண்மையில் நாம் காண்பது ஏகாதிபத்திய “ஜனநாயக”த்திற்கு இந்த விஷயத்தில் மென்ஷிவிக்குகள் எழுதியிருக்கும் எதனையும் விட மிகவும் கொள்கைப்பட்ட வக்காலத்தேயாகும். எப்படி வெளியுறவுக் கொள்கையில் ஸ்ராலின், கமனேவுடன் சேர்ந்து, ஜனநாயக அமைதியை இடைக்கால அரசாங்கத்தைக் கொண்டு ஒரு தொழிற்பங்கீடு மூலமாக சாதிக்க நம்பிக்கை கொண்டிருந்தாரோ, அதேவகையில் உள்நாட்டுக் கொள்கையில் பிரின்ஸ் லுவோவின் ஜனநாயகத்தில் அவர் தேசிய சுதந்திரத்துக்கான “நடைமுறை நிலைமைகளை”க் கண்டார். உண்மையைச் சொன்னால், பிற்போக்குத்தனமான நிலப்பிரபுக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தாராளவாத முதலாளித்துவமும், அதனைப் பின் தொடர்ந்த ஒட்டுமொத்த குட்டி முதலாளித்துவ ஜனநாயகமும், இவர்களுடன் தொழிலாள வர்க்கத்தின் தேசப்பற்று மிகுந்த மேல் அடுக்கும் தேசிய உரிமைகளின் ஒரு உண்மையான சமத்துவத்திற்கு - அதாவது மேலாதிக்க தேசியத்தின் தனியந்தஸ்துகளை இல்லாதொழிப்பதற்கு சமரசமற்ற வகையில் குரோதம் கொண்டிருந்தது என்கிற உண்மையை முடியாட்சியின் வீழ்ச்சியானது முதலில் முழுமையாக அம்பலப்படுத்தியிருந்தது. அவர்களது ஒட்டுமொத்த வேலைத்திட்டமும் தணிக்கும் வேலையாக, கலாச்சார இனிப்புப் பூச்சாக, மகா ரஷ்ய மேலாதிக்கத்திற்கு ஜனநாயக மறைப்பு செய்வதாகக் குறைந்து போனது. ஏப்ரல் மாநாட்டில், தேசியப் பிரச்சினையில் லெனினின் தீர்மானத்தைப் பாதுகாத்து, ஸ்ராலின், “தேசிய ஒடுக்குமுறை என்கின்ற அமைப்புமுறை....அந்த நடவடிக்கைகள் ஏகாதிபத்திய வட்டாரங்களில் ஏற்றுக் கொள்ளப்படுவதாகும்” என்கிற ஆய்வுமுடிவில் இருந்து முறையாகத் தொடங்குகிறார். ஆனால் அங்கிருந்து நேராகத் தவிர்க்கவியலாமல் பாதை விலகி திரும்பவும் தனது மார்ச் நிலைப்பாட்டுக்கு செல்கிறார். “ஒரு நாடு எந்த அளவு ஜனநாயகப்பட்டதாய் இருக்கிறதோ, அந்த அளவுக்கு அதன் தேசிய ஒடுக்குமுறை பலவீனமாய் இருக்கும், அதேபோல் எதிர்திசையில் இருந்தும் இதனைக் கூறலாம்.” இது பேசியவரின் சொந்தச் சுருக்கமும், அவர் லெனினிடம் இருந்து இரவல் பெறாததுமாகும். ஜனநாயக இங்கிலாந்து தான் நிலப் பிரபுத்துவ மற்றும் சாதிகளால் பின்னப்பட்ட இந்தியாவை ஒடுக்கிக் கொண்டிருக்கிறது என்கின்ற உண்மையானது, முன்பு போலவே, அவரது குறுகிய பார்வை எல்லையில் இருந்து தப்பித்து விடுகிறது. ஸ்ராலின் தொடர்ந்து சொல்கிறார், “பழைய நிலப் பிரபுத்துவம்” மேலாதிக்கம் செலுத்தி வந்திருக்கின்ற ரஷ்யாவில் இருந்து மாறுபட்ட வகையில், “இங்கிலாந்திலும் ஆஸ்திரிய-ஹங்கேரியிலும் தேசிய ஒடுக்குமுறையானது ஒருபோதும் இன-ஒழிப்பின் வடிவத்தை எடுத்திருக்கவில்லை.”நிலப் பிரபுத்துவம் இங்கிலாந்தில் “ஒருபோதும்” ஆதிக்கம் செலுத்தியிருக்கவில்லை என்பது போலவும், ஹங்கேரியில் இந்த நாள் வரை அது ஆதிக்கம் செலுத்தி வரவில்லை என்பது போலவும்! “ஜனநாயக”த்தையும் பலவீனமான தேசங்களை கழுத்தை நெரிப்பதையும் ஒன்றுபடுத்தும் வரலாற்று அபிவிருத்தியின் கூட்டிணைவுத் தன்மையைப் பொறுத்தவரை ஸ்ராலினுக்கு அது ஒரு மூடப்பட்டு விட்ட புத்தகமாகவே இருந்தது. ரஷ்யா தேசிய இனங்களால் ஆக்கப்பட்ட ஒரு அரசின் வடிவத்தை எடுத்ததென்றால் அது அதன் வரலாற்றுரீதியான தாமதநிலையின் விளைவு ஆகும். ஆனால் தாமதநிலை என்பதே ஒரு சிக்கலான கருத்தாக்கம் தவிர்க்கவியலாமல் முரண்பாடானதும் கூட. பின் தங்கிய நாடு முன்னேறிய நாட்டின் தடங்களை பின் தொடர்ந்து செல்வதில்லை. இது ஒரேமாதிரியான தூரத்தினை பராமரித்து அதன் உலகளாவிய பொருளாதாரத்தின் ஒரு சகாப்தத்தில் பின் தங்கிய நாடுகள், அபிவிருத்தியின் பொதுவான சங்கிலியில் முன்னேறிய நாடுகளில் இருந்தான அழுத்தத்தின் கீழ் பங்குபெறச் செய்யப்பட்டு, இடையிலமைந்த கட்டங்களின் மொத்த வரிசையையும் தாவிச் செல்கின்றன. மேலும் உறுதியாக ஸ்தாபிக்கப்பட்ட சமூக வடிவங்களும் மற்றும் பாரம்பரியங்களும் இல்லாதிருப்பது பின்தங்கிய நாட்டினை, குறைந்தபட்சம் சில குறிப்பிட்ட வரம்புகளுக்குள்ளேனும், சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் சர்வதேச சிந்தனையின் மிகச் சமீபத்திய கடைசி வார்த்தையை மிகவும் வரவேற்பதாய் இருக்கிறது. ஆயினும் இந்தக் காரணத்தால் பின்தங்கிய நிலை பின்தங்கிய நிலையாய் இல்லாமல் போய் விடுவதில்லை. இந்த ஒட்டுமொத்த அபிவிருத்தியும் ஒரு முரண்பாடான மற்றும் கூட்டிணைந்த தன்மையைப் பெறுகிறது. வரலாற்றுத் துருவங்களின் ஒரு வியாபகம் என்பது பின்தங்கிய விவசாயிகளும் மற்றும் முன்னேறிய பாட்டாளி வர்க்கமும் முதலாளித்துவத்தின் இடைக்கட்ட உருவாக்கங்களை விட வியாபகமாய் இருக்கும் ஒரு தாமதமாக அபிவிருத்தியடைந்த தேசத்தின் சமூகக் கட்டமைப்புக்குப் பொருத்தமானதே. ஒரு வர்க்கத்தின் கடமைகள் இன்னொன்றின் தோள்கள் மீது ஏற்றி வைக்கப்படுகிறது. தேசிய அளவிலும் கூட, மத்தியகால எச்சசொச்சங்களை வேரோடு களைவதென்பது பாட்டாளி வர்க்கக் கூட்டத்தின் மீது தான் விழுகிறது. ஒரு ஐரோப்பிய நாடாகக் கருதுகையில் ரஷ்யாவின் வரலாற்றுரீதியாய் பின்தங்கிய நிலையை, இருபதாம் நூற்றாண்டில் அது கட்டாய நில வாடகையையும் அதனை வேலியிட்டு நின்ற பண்ணையடிமைத் தனம் மற்றும் சேரிக்குடியிருப்புகள் ஆகிய இரண்டு காட்டுமிராண்டித்தனங்களையும் இல்லாதொழிக்க வேண்டியிருந்தது என்கிற உண்மையை விடவும் தெளிவாய் குணாம்சப்படுத்தி காட்டுவது வேறெதுவுமில்லை. ஆனால் ரஷ்யாவின் சாட்சாத் தாமதமான அபிவிருத்தி என்கின்ற அதே காரணத்தினால் தான் அது இந்த பணிகளைச் செய்வதில் புதிய மற்றும் முழுக்கவும் நவீனமான வர்க்கங்களையும், கட்சிகளையும், வேலைத்திட்டங்களையும் பயன்படுத்தியது. ரஸ்புதீனின் கருத்து மற்றும் வழிமுறைகளுக்கு ஒரு முடிவு கட்ட அதற்கு மார்க்சின் சிந்தனைகளும் வழிமுறைகளும் அவசியப்பட்டது. அரசியல் தத்துவத்தை விட அரசியல் நடைமுறை என்பது இன்னும் மிகவும் ஆதிகாலத்தையதாக இருந்தது என்பது உண்மையே. சிந்தனைகளை விடவும் விஷயங்கள் மாறுவது இன்னும் கடினம் தானே. ஆனால் எப்படியிருப்பினும் தத்துவம் என்பது முழுக்கவும் நடைமுறை நடவடிக்கைக்கான கோரிக்கைகளைத் தான் சுமந்து செல்கிறது. விடுதலையையும் ஒரு கலாச்சார உயர்ச்சியையும் சாதிப்பதற்கு, ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் தங்களது தலைவிதியை தொழிலாள வர்க்கத்தின் தலைவிதியுடன் பிணைக்க நிர்ப்பந்தமுற்றன. இதற்கு அவை தங்களது சொந்த முதலாளித்துவ மற்றும் குட்டி முதலாளித்துவக் கட்சிகளிடம் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டியிருந்தது - வரலாற்று அபிவிருத்தியின் பாதையில் அவை ஒரு நீண்ட வீறு கொண்ட பாய்ச்சலை செய்ய வேண்டியிருந்தது. அதிகாரத்துக்கான பாட்டாளி வர்க்கத்தின் போராட்டம் என்கின்ற புரட்சியின் அடிப்படையான நிகழ்வுப்போக்குக்கு தேசிய இயக்கங்கள் இவ்வகையாய் அடிபணிதல் என்பது ஒரேமூச்சில் சாதிக்கப்பட்டு விடவில்லை, மாறாக பல்வேறு கட்டங்களாய், மேலும் வெவ்வேறு பிராந்தியங்களிலும் வெவ்வேறு வகையாய் சாதிக்கப்பட்டது. கெரென்ஸ்கிக்கும், போருக்கும் மற்றும் ரஷ்யமயமாக்கத்திற்கு குரோதத்தை காட்டிய உக்ரைனிய, வெள்ளை ரஷ்ய மற்றும் டர்டார் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் சிப்பாய்கள் ஆகவே தங்களது சமரசவாத தலைமையையும் கடந்து பாட்டாளி வர்க்கக் கிளர்ச்சியின் கூட்டாளிகளாய் ஆயினர். போல்ஷிவிக்குகளின் புறநிலை ஆதரவாய் இருந்த நிலையில் இருந்து ஒரு முன்னேறிய கட்டத்தில் நனவுடன் போல்ஷிவிக் பாதைக்கு செல்வதற்கும் அவர்கள் கடமைப்பட்டவர்கள் ஆனார்கள். பின்லாந்து, லாட்வியா மற்றும் எஸ்தோனியாவில் மற்றும் கூடுதல் பலவீனமாய் உக்ரைனில், அடுக்காக வீழ்ச்சியடைந்த தேசிய இயக்கமானது அக்டோபருக்குள்ளாக எத்தகைய கூர்மையான வடிவங்களை எடுத்திருந்தது என்றால், அயல்நாட்டுத் துருப்புகளின் தலையீடு மட்டும் தான் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் வெற்றியைத் தடுக்க முடிந்திருக்கும். தேசிய விழிப்புணர்வு என்பது மிகவும் அரும்புநிலை வடிவங்களில் நடந்தேறிக் கொண்டிருந்த ஆசியக் கிழக்கில், ஓரளவுக்கும் கணிசமான தாமதத்துடனும் தான் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையின் கீழ் வர முடிந்தது - உண்மையில் பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தை வென்றிருந்த பின்னர்தான். ஒட்டுமொத்தமாய் இந்த சிக்கலான மற்றும் முரண்பாடான நிகழ்வுப்போக்கினை நீங்கள் எடுத்துப் பார்த்தால் முடிவு வெளிப்படையாய் புரிந்து கொள்ள முடியும்: தேசிய நீரோட்டமும், விவசாய நீரோட்டத்தைப் போலவே, அக்டோபர் புரட்சியின் பாதையில் பாய்ந்து கொண்டிருந்தது. அரசியல், விவசாய மற்றும் தேசிய விடுதலை மற்றும் பண்ணையடிமை முறையை ஒழிப்பது ஆகிய மிகவும் அடிப்படையான பணிகளில் இருந்து வெகுஜனங்கள் திரும்பவியலாமலும் தடுக்கவியலாமலும் பாட்டாளி வர்க்க ஆட்சி என்னும் சுலோகத்திற்குச் சென்றமை என்பது “வீரவார்த்தைஜால” கிளர்ச்சியாலோ, முன்கூட்டிச் சிந்தித்திருந்த திட்டங்களாலோ, தாராளவாதிகளும் சமரசவாதிகளும் நினைத்தது போல நிரந்தரப் புரட்சித் தத்துவத்தில் இருந்தோ விளைந்ததல்ல, மாறாக ரஷ்யாவின் சமூகக் கட்டமைப்பில் இருந்தும் உலகளாவிய சூழலின் நிலைமைகளில் இருந்தும் தான் விளைந்திருந்தது. இந்த அபிவிருத்தியின் கூட்டிணைந்த நிகழ்வுப்போக்கை மட்டுமே நிரந்தரப் புரட்சித் தத்துவம் சூத்திரப்படுத்தியது. இங்கே இது ரஷ்யாவுக்கு மட்டுமான பிரச்சினை அல்ல. தாமதப்பட்ட தேசியப் புரட்சிகளை பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிக்கு கீழ்ப்படியச் செய்வதென்பது உலகெங்கும் செல்லுபடியாகும் ஒரு நியதியைப் பின்பற்றுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் போர்கள் மற்றும் புரட்சிகளின் அடிப்படையான பிரச்சினை ஒரு தேசியச் சந்தையை உற்பத்தி சக்திகளுக்கு உத்தரவாதமளிப்பதாக இருந்ததென்றால் உற்பத்தி சக்திகளுக்கான இரும்புத் தளைகளாக ஆகி விட்டிருக்கும் தேசிய எல்லைகளில் இருந்து உற்பத்தி சக்திகளை விடுதலை செய்வது தான் நமது நூற்றாண்டின் பிரச்சினையாக இருக்கிறது. விரிந்த வரலாற்று அர்த்தத்தில் பார்த்தால், ரஷ்யாவின் தேசிய இயக்கங்கள் சோவியத் சர்வாதிகாரத்துக்கான படிக்கட்டுகளாய் ஆயினவோ அதைப் போல கிழக்கின் தேசியப் புரட்சிகள் பாட்டாளி வர்க்கத்தின் உலகப் புரட்சியின் கட்டங்களாகவே மட்டுமே இருக்கின்றன. லெனின், ஜாரிச ரஷ்யாவிலும் சரி உலகம் முழுவதிலும் சரி ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் அபிவிருத்தியில் பொதிந்திருந்த புரட்சிகர சக்தியை போற்றத்தக்க ஆழ்ந்த அறிவுடன் மதிப்பீடு செய்தார். சீனாவை அடிமைப்படுத்தும் நோக்கத்துடன் அதன் மீது ஜப்பான் தொடுக்கும் போரையும், தனது விடுதலைக்காக சீனா ஜப்பானுக்கு எதிராகப் புரியும் போரையும் ஒரே வகையில் “கண்டனம் செய்கின்ற” கபடவேடமணிந்த “சமரசவாதம்” லெனினிடம் இருந்து வசவைத் தவிர வேறெதனையும் பெற முடியவில்லை. அவரைப் பொறுத்தவரை ஏகாதிபத்திய ஒடுக்குமுறைக்கான போர்களில் இருந்து நேரெதிர் வகையில் தேசிய விடுதலைக்கான ஒரு போர் என்பது தேசியப் புரட்சியின் இன்னொரு வடிவமே. அது சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் விடுதலைப் போராட்டத்தில் ஒரு அத்தியாவசியமான கண்ணியாக காலெடுத்து வைக்கிறது. ஆயினும் தேசியப் போர்கள் மற்றும் புரட்சிகள் குறித்த இந்த மதிப்பீடு எந்த வகையிலும் காலனித்துவ மற்றும் அரைக் காலனித்துவ தேசங்களின் முதலாளித்துவ வர்க்கம் ஒரு புரட்சிகர இலக்கினைக் கொண்டிருந்தது என்று அர்த்தப்படுத்தவில்லை. அதற்கு நேரெதிராய், பின்தங்கிய நாடுகளின் இந்த முதலாளித்துவம் தனது பால் பற்கள் முளைத்த நாட்களில் இருந்தே அந்நிய மூலதனத்தின் முகாமையாகத் தான் வளர்ந்து வருகிறது, அந்நிய முதலீட்டின் மீதான அதன் பொறாமையுடனான வஞ்சம் எல்லாம் இருந்தபோதிலும் கூட அதனுடனான அதே முகாமில் தான் அது ஒவ்வொரு தீர்மானகரமான சூழ்நிலையிலும் எப்போதும் இருந்து வருகிறது, எப்போதும் இருந்து வரும். சீனாவின் தரகு முதலாளித்துவம் காலனித்துவ முதலாளித்துவத்தின் சிறந்த உதாரண வடிவம், கோமிண்டாங் இந்த தரகு முதலாளித்துவவாதத்தின் சிறந்த உதாரணக் கட்சி. குட்டி முதலாளித்துவத்தின் புத்திஜீவித்தன தட்டு உள்ளிட்ட மேல் தட்டுகள் தேசியப் போராட்டங்களில் ஒரு செயலூக்கமிக்க அவ்வப்போது மிகவும் உரத்த குரலிலான ஒரு பாகத்தையும் கூட வகிக்கலாம், ஆனால் அவை ஒரு சுயாதீனமான பாத்திரத்தை ஆற்றுவதற்கு முற்றிலும் திறனற்றவையாய் இருக்கின்றன. தொழிலாள வர்க்கம் மட்டுமே, தேசத்தின் தலைமையில் அமர்ந்து ஒரு தேசிய அல்லது ஒரு விவசாயப் புரட்சியை முழுமையாக நடத்தி முடிக்க முடியும். இதில் தான், அதாவது ஒடுக்கப்பட்ட தேசங்களின் போராட்டத்தின் முற்போக்கான வரலாற்று முக்கியத்துவம் குறித்து லெனின் கற்பித்ததில் இருந்து இவர்கள் காலனித்துவ நாடுகளின் முதலாளித்துவ வர்க்கத்திற்கு ஒரு புரட்சிகர நோக்கம் இருப்பதாக ஒரு முடிவிற்கு வந்ததில் தான் இந்த இழிபாசாங்கினரின், எல்லோருக்கும் மேல் ஸ்ராலினின், அபாயகரமான தவறு தங்கியிருக்கிறது. ஒரு ஏகாதிபத்திய சகாப்தத்தில் புரட்சியின் நிரந்தரத் தன்மையை புரிந்துகொள்ளத் தவறியமை; அபிவிருத்திப் பாதை குறித்த ஒரு வறட்டுப் பண்டிதத்தனமான திட்டநோக்கு; உயிர்ப்பான மற்றும் ஒருங்கிணைந்த நிகழ்வுப்போக்கினை கால இடைவெளியால் அவசியமாய் பிரிக்கப்பட்டதாக கற்பனை செய்யப்பட்ட உயிரற்ற கட்டங்களாய் துண்டுபோட்டமை - இந்தத் தவறுகளனைத்தும் ஸ்ராலினை ஜனநாயகம் அல்லது யதார்த்தத்தில் ஒரு ஏகாதிபத்திய சர்வாதிகாரமாக அல்லது ஒரு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமாக இருந்தாக வேண்டிய “ஜனநாயக சர்வாதிகாரம்”குறித்த இழிவான கருத்தியல்படுத்தலுக்குக் கொண்டு சென்றது. படிப்படியாக ஸ்ராலினின் குழுக்கள் இந்தப் பாதையில் பயணம் செய்து தேசியப் பிரச்சினையில் லெனினின் நிலைப்பாட்டுடனான ஒரு முழுமையான முறிவுக்கும், அத்துடன் சீனாவில் தங்களது பெருங்கேடான கொள்கைக்கும் சென்றிருந்தன. 1927 ஆகஸ்டில், எதிர்ப்பாளர்களுடனான (ட்ரொட்ஸ்கி, ரகோவ்ஸ்கி, மற்றும் பிறர்) மோதலில், ஸ்ராலின் போல்ஷிவிக்குகளின் மத்திய குழுவின் ஒரு நிறைவு அமர்வில் கூறினார்: “ஏகாதிபத்திய நாடுகளிலான ஒரு புரட்சி என்பது ஒரு விடயம்; அங்கே முதலாளித்துவ வர்க்கத்தை பொறுத்தவரை.... புரட்சியின் எல்லாக் கட்டங்களிலும் அது எதிர்ப்புரட்சிகரமானதாக இருக்கும்.... காலனித்துவ மற்றும் ஏகாதிபத்திய சார்பு நாடுகளில் ஒரு புரட்சி என்பது வேறான இன்னொன்று, இங்கே தேசிய முதலாளித்துவ வர்க்கம் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் மற்றும் ஒரு குறிப்பிட்ட தேதியில் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தமது நாட்டின் புரட்சிகர இயக்கத்தை ஆதரிக்கும்.” தன் கருத்துகள் மீது தனக்கே நம்பிக்கையில்லாத காரணத்தால் தான் இந்த முழுமையடையாத கருத்துகளையும் சமாளிப்புகளையும் வழங்கிய ஸ்ராலின், இங்கே மார்ச்சில், தான் ரஷ்ய முதலாளித்துவத்தை வர்ணித்த அதே அலங்காரக் குணாதிசயங்களை காலனித்துவ முதலாளித்துவங்களுக்கும் அளிக்கிறார். தனது ஆழமான உயிரோட்டமான தன்மைக்கு விசுவாசமானதாய் ஸ்ராலினின் சந்தர்ப்பவாதம் ஏதோ ஈர்ப்பு விதியால் உந்தப்பட்டது போல் எந்தப் பாதைகளில் ஆயினும் எப்போதும் ஒரே திசையில் பாய்கிறது. தத்துவார்த்த வாதங்களின் தேர்வு என்பது இங்கு வெறும் தற்காலிகமாமானதொரு விடயமாய் ஆகிவிடுகிறது. மார்ச்சில் இடைக்கால அரசாங்கத்திற்கு தான் உருவாக்கிய மதிப்பீட்டை சீனாவின் “தேசிய” அரசாங்கத்துக்கு பொருத்தமுடையதாக்குவதில் இருந்து தான் கோமிண்டாங் உடனான ஸ்ராலினின் மூன்றாண்டு கால ஒத்துழைப்பு விளைந்தது. இது நவீன வரலாற்றின் மிகவும் அதிர்ச்சிகரமான நிகழ்வுகளில் ஒன்றிற்கு அழைத்துச் சென்ற ஒரு கொள்கையாகும். சீன முதலாளித்துவத்துடன் ஏப்ரல் 11, 1927 வரையிலும், அதாவது அது ஷாங்காய் பாட்டாளி வர்க்கத்தின் மீது தனது இரத்த ஆறு பாயச் செய்யும் படுகொலையை நிகழ்த்தும் நாள் வரையிலும், இழிபாசாங்கினரின் போல்ஷிவிசம் உண்மையான ஆயுதம்தரித்த தகமையுடன் -அரச குடும்பத்து வாள் தாங்கியின் நிலையில்- உடனிருந்தது. ஸ்ராலின் சாங் காய் ஷேக் உடனான தனது ஆயுத தோழமையை நியாயப்படுத்தும் முயற்சியில், “எதிர்ப்பாளர்கள் அணியின் அடிப்படையான பிழை எங்கே இருக்கிறது என்றால், அது மற்ற மக்களை ஒடுக்கிய ஒரு ஏகாதிபத்திய நாட்டில் நடந்த புரட்சியான 1905ன் ரஷ்யப் புரட்சியை ஒரு ஒடுக்கப்பட்ட நாட்டின் புரட்சியான சீனப் புரட்சியுடன் ஒன்றாக அடையாளம் காண்கிறது” என்றார். இதிலும் கூட, ரஷ்யாவின் புரட்சியை, “மற்ற மக்களை ஒடுக்கும்” தேசத்தின் நிலைப்பாட்டில் இருந்து பார்க்காமல், மாறாக சீனர்களுக்கு சளைக்காத ஒடுக்குமுறையைக் கண்ட ரஷ்யாவின் “மற்ற மக்களின்” அனுபவத்தின் நிலைப்பாட்டில் இருந்து பார்ப்பது குறித்து அவர் ஒருபோதும் சிந்தித்திருக்கவில்லை என்பது அதிர்ச்சியூட்டுவதாய்த் தான் இருக்கிறது. ரஷ்யாவின் மூன்று புரட்சிகளின் போது அதற்குக் கிட்டிய வானளாவிய அனுபவத்தில், நீங்கள் ஒன்றைத் தவிர எல்லா விதமான தேசிய மற்றும் வர்க்கப் போராட்ட வகையினையும் காணலாம். அதாவது எந்த ஒரு ஒடுக்கப்பட்ட தேசத்தின் முதலாளித்துவமும் தனது சொந்த மக்கள் விடயத்தில் ஒரு விடுதலையடையச் செய்யும் பாத்திரமாற்றியிருந்ததான வகையை மட்டும் நீங்கள் காண முடியாது. அதன் அபிவிருத்தியின் ஒவ்வொரு கட்டத்திலும் எல்லா எல்லைப்பகுதி முதலாளித்துவமும் அவை என்ன வண்ணங்களில் நடனமாடிக் கொண்டிருந்தாலும் சரி, சாராம்சத்தில் அனைத்து ரஷ்ய மூலதனத்தின் முகவர்களாய் இருந்த மத்திய வங்கிகள், டிரஸ்ட்டுக்கள், மற்றும் வணிக நிறுவனங்களை பரவலாய் சார்ந்திருந்தன. அவை முதலாளித்துவ வர்க்கத்தை ரஷ்யமயமாக்கல் இயக்கத்திற்கும், தாராளவாத மற்றும் ஜனநாயகவாத புத்திஜீவித்தட்டின் பரந்த அடுக்குகளை முதலாளித்துவ வர்க்கத்திற்கும் அடிபணியச் செய்தன. ஒரு ஒதுக்கப்பட்டமுதலாளித்துவமாக -எல்லைப் பகுதி முதலாளித்துவம் – அது மிகவும் “முதிர்ச்சி”யடைந்திருக்குமாயின் அது அந்த அளவுக்கு பொதுவான அரசு எந்திரத்துடன் நெருக்கமாய் பிணைந்திருந்தது எனப் பொருளளித்தது. ஒட்டுமொத்தமாய் எடுத்துப் பார்த்தால், சர்வதேச நிதி மூலதனத்திற்கு ஆளும் முதலாளித்துவம் ஆற்றிய அதே பாத்திரத்தையே ஒடுக்கப்பட்ட தேசத்தின் முதலாளித்துவம் ஆளும் முதலாளித்துவத்திற்கு ஆற்றியது. காழ்ப்புணர்ச்சிகள் மற்றும் தங்கியிருக்கும் நிலைகளின் இந்த சிக்கலான படிநிலை, கிளர்ச்சி செய்யும் வெகுஜனங்களுக்கு எதிராய் போராடுவதில் இந்த முத்தரப்பின் அடிப்படையான ஒற்றுமையை ஒரு நாளிலும் கூட அகற்றி விடவில்லை. எதிர்ப்புரட்சிக் காலகட்டத்தில் (1907-1917), தேசிய இயக்கங்களின் தலைமை சுதேச முதலாளித்துவத்தின் கரங்களில் இருந்த சமயத்தில், ரஷ்ய முடியாட்சியுடன் இணைந்து வேலைசெய்வதற்கான ஒரு ஒப்பந்தத்தை எதிர்நோக்கி நிற்பதில் ரஷ்யத் தாராளவாதத்தை விடவும் அது மிக ஒளிவுமறைவற்ற வகையில் நின்றது. ஏகாதிபத்திய தேசபக்தியை வெளிக்காட்டுவதில் போலந்து, பால்க்கன், டர்டர், உக்ரைனிய, யூத முதலாளித்துவங்கள் ஒன்றுடன் ஒன்று போட்டிபோட்டன. பிப்ரவரி புரட்சிக்குப் பின்னர் அவை கடேட்டுகளின் பின்னால், இல்லையென்றால் கடேட்டுகளைப் போல, தமது சொந்த சமரசவாதக் கட்சியினரின் முதுகின் பின்னால் மறைந்து கொண்டன. எல்லைத் தேசங்களின் முதலாளித்துவ வர்க்கங்கள் 1917 இலையுதிர் காலத்தில் பிரிவினைவாதப் பாதையில் நுழைந்தன, தேசிய ஒடுக்குமுறைக்கு எதிரான ஒரு போராட்டத்தில் அல்ல, மாறாக முன்னேறி வருகின்ற பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு எதிரானதொரு போராட்டத்தில். ஒட்டுமொத்தத்தில் ஒடுக்கப்பட்ட தேசங்களின் முதலாளித்துவ வர்க்கங்கள் புரட்சிக்குக் காட்டிய குரோதமென்பது மகா ரஷ்யர்களின் முதலாளித்துவ வர்க்கம் காட்டியதற்கு எந்த விதத்திலும் சளைத்ததாக இருக்கவில்லை. மூன்று புரட்சிகளின் இந்தப் பிரம்மாண்டமான வரலாற்றுப் படிப்பினை, எனினும், இந்த நிகழ்வுகளில் பங்குபெற்ற பலரது மூளைகளில், குறிப்பாக ஸ்ராலினின் மூளையில், எந்த ஒரு சுவடையும் விட்டுச் செல்லவில்லை. காலனித்துவ தேசங்களுக்குள் வர்க்கங்களின் இடையுறவுகள் குறித்த இந்த சமரசவாதக் கருத்தாக்கம், அதாவது குட்டி முதலாளித்துவ கருத்தாக்கம், 1925-1927 சீனப் புரட்சியைக் கொன்ற அதே கருத்தாக்கம், அந்தப் பிரிவில் அந்த வேலைத்திட்டத்தை கிழக்கத்திய ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஒரு சிக்கவைக்கும் பொறியாக மட்டும் மாற்றுவதற்கு இந்த இழிபாசாங்கினரால் கம்யூனிச அகிலத்தின் வேலைத்திட்டத்திற்குள் அதன் பின்னும் கூட அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. தேசியப் பிரச்சினையில் லெனினின் கொள்கையின் உண்மையான தன்மையைப் புரிந்து கொள்வதற்கு, வித்தியாசங்களை ஒப்பிட்டுப் பார்க்கும் வழிமுறையை பயன்படுத்தி, அந்தக் கொள்கையை ஆஸ்திரிய சமூக ஜனநாயகவாதிகளின் கொள்கையுடன் ஒப்புநோக்குவது ஒரு சிறந்த யோசனையாகும். தேசியப் புரட்சிகளின் வெடிப்பு அடுத்து வரும் பல தசாப்தங்களுக்குத் தொடரவிருக்கிறது என்கின்ற அனுமானத்தின் மீது தான் போல்ஷிவிசம் தனது அடித்தளத்தை அமைத்துக் கொண்டிருந்தது, அந்த உணர்வுடன் தான் முன்னேறிய தொழிலாளர்களுக்கு அது வழிகாட்டல்கள் வழங்கியது. ஆஸ்திரிய சமூக ஜனநாயகக் கட்சியோ, இதற்கு நேரெதிரான வகையில், ஆளும் வர்க்கங்களின் கொள்கைக்கு அடிமைத்தனப் போக்குடன் தன்னைக் கீழ்ப்படியச் செய்து கொண்டது; ஆஸ்திரிய-ஹங்கேரி முடியாட்சியில் பத்து தேசங்களின் கட்டாய கூட்டு- குடியுரிமையை அது பாதுகாத்தது, அதே சமயத்தில், இந்த வெவ்வேறான தேசிய இனங்களின் தொழிலாளர்களது ஒரு புரட்சிகர ஐக்கியத்தை சாதிப்பதற்கு முற்றுமுதலாய் திறனற்று, கட்சி மற்றும் தொழிற்சங்கங்களில் அவர்களை செங்குத்தான பிரிவினைக் கோடுகளைக் கொண்டு வேலிபோட்டு விரட்டியது. கார்ல் ரென்னர் என்கின்ற ஒரு கல்விபடைத்த ஹப்ஸ்பேர்க் நிர்வாகி ஹப்ஸ்பேர்க்களின் ஆட்சியின் மறுமலர்ச்சிக்கு ஏதேனும் வழி கிடைக்காதா என ஒருநாள் அவரே தானாக ஆஸ்திரிய-ஹங்கேரி முடியாட்சியின் இழப்பால் வாடும் தத்துவாசிரியராகி விட்டிருப்பதை கண்டுகொள்ளும் வரை ஆஸ்திரிய மார்க்சிசத்தின் எழுத்துக்களில் தேடிச் சளைப்படையவே இல்லை. மத்திய சாம்ராஜ்யங்கள் நசுக்கப்பட்டபோது, ஹப்ஸ்பேர்க் வம்சம் மீண்டும் தனது செங்கோலின் கீழ் தன்னாட்சி தேசங்களின் ஒரு கூட்டமைப்பு என்கின்ற பதாகையைத் தூக்கிப் பிடிக்க முயன்றது. முடியாட்சியின் கட்டமைப்புக்குள்ளாக ஒரு அமைதியான அபிவிருத்தியை அனுமானித்துக் கொள்வதை அடித்தளமாகக் கொண்டிருந்த ஆஸ்திரிய சமூக ஜனநாயகத்தின் உத்தியோகபூர்வ வேலைத்திட்டம் இப்போது ஒரே விநாடியில் நான்கு வருட கால போரின் இரத்தக் கறையை மறைத்துக் கொண்டிருந்த முடியாட்சியின் வேலைத்திட்டமாகவே ஆகிவிட்டிருந்தது. ஆனால் பத்து தேசங்களை ஒன்றாகப் பிணைத்திருந்த அந்த துருப்பிடித்த வலயம் தூள்தூளாய் சிதறியிருந்தது. வேர்செயில்ஸ் அறுவைச்சிகிச்சையால் உறுதிபெற்றிருந்த உள்முக மையவிலக்குப் போக்குகளின் ஒரு விளைவாக ஆஸ்திரிய-ஹங்கேரி சிதறிப் போனது. புதிய அரசுகள் உருவாக்கப்பட்டன, பழையவை மறுகட்டுமானம் செய்யப்பட்டன. ஆஸ்திரிய ஜேர்மன்கள் ஒரு அதளபாதாளத்தை சுற்றி வந்து கொண்டிருந்தனர். அவர்களது பிரச்சினை என்பது இனியும் மற்ற தேசங்களின் மீதான அவர்களது ஆதிக்கத்தைப் பாதுகாப்பது குறித்ததாய் இருக்கவில்லை, மாறாக தாங்களாக ஒரு அந்நிய ஆதிக்கத்தினுள் விழுந்துவிடாமல் தடுப்பதாக இருந்தது. அதன்பின் ஆஸ்திரிய சமூக ஜனநாயகக் கட்சியின் “இடது” பிரிவை பிரதிநிதித்துவம் செய்த ஓட்டோ பவர், தேசிய சுய-நிர்ணயத்துக்கான சூத்திரத்தை முன்கொண்டுவருவதற்கு இதனைப் பொருத்தமான தருணமெனக் கருதினார். முந்தைய தசாப்தங்களின் போது ஹப்ஸ்பேர்க்குகள் மற்றும் ஆளும் முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிராக பாட்டாளி வர்க்கத்தின் போராட்டத்திற்கு உத்வேகமாக அமைந்திருக்கக் கூடிய அதே வேலைத்திட்டம் இப்போது, நேற்றுவரை ஆதிக்கம் செலுத்துவதாய் இருந்து விட்டு இன்றோ விடுதலையடைந்து விட்டிருந்த ஸ்லாவிய மக்களின் பக்கத்திலிருந்து அபாயத்தை எதிர்நோக்கும் நிலையிலிருக்கின்ற ஒரு தேசத்திற்கு தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரு கருவியாக அது கொண்டுவரப்பட்டது. எப்படி ஆஸ்திரிய சமூக ஜனநாயகத்தின் சீர்திருத்தவாத வேலைத்திட்டம் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் மூழ்கிக் கொண்டிருக்கும் ஒரு முடியாட்சி பற்றிக் கொள்ள முயன்ற ஒரு வைக்கோல் இழையாக மாறியிருந்ததோ, அதைப் போலவே, சுயநிர்ணயத்துக்கான சூத்திரமும் இந்த ஆஸ்திரிய-மார்க்சியவாதிகளால் நலிவுறச்செய்யப்பட்டு இப்போது ஜேர்மன் முதலாளித்துவ வர்க்கத்திற்கு பாதுகாப்பு நங்கூரமாகவிருந்தது. 1918 அக்டோபர் 3 அன்று, மிகக்குறைந்தளவில் கூட விடயம் அவர்களைச் சார்ந்திருக்கவில்லை என்கின்ற சமயத்தில், பாராளுமன்றத்தின் (Reichsrath) சமூக ஜனநாயகக் கட்சி பிரதிநிதிகள் முன்னாள் சாம்ராஜ்யத்து மக்களுக்கு சுயநிர்ணயத்துக்கு இருந்த உரிமையை பெருந்தன்மையுடன் “அங்கீகரித்தனர்”. அக்டோபர் 4 அன்று முதலாளித்துவக் கட்சிகளும் கூட சுயநிர்ணய வேலைத்திட்டத்தை ஏற்றுக் கொண்டன. இவ்வாறாக ஆஸ்திரிய-ஜேர்மன் ஏகாதிபத்தியவாதிகளை ஒருநாள் இடைவெளியில் முந்தி விட்ட சமூக ஜனநாயகவாதிகள் உடனடியாக தங்களது காத்திருத்தல் கொள்கையை தொடர்ந்தனர், விடயங்கள் என்ன திருப்பத்தை எடுக்கும் வில்சன் என்ன சொல்லப் போகிறார் என்பது இன்னும் நிச்சயமில்லாதிருந்தது. அக்டோபர் 13 அன்று தான், அதாவது இராணுவம் மற்றும் முடியாட்சியின் முடிவான நிலைக்குலைவு - ஓட்டோ பவரின் வார்த்தைகளில் சொல்வதானால் - “நமது தேசியவேலைத்திட்டம் எதைக்கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்ததோ அந்தப் புரட்சிகர சூழலை”உருவாக்கியிருந்த சமயத்தில்தான் ஆஸ்திரிய-மார்க்சியவாதிகள் சுயநிர்ணயப் பிரச்சினையை நடைமுறை வடிவத்தில் எழுப்பினர். மிகவும் உண்மையாய் சொல்வதானால் அவர்களுக்கு இப்போது இழக்க எதுவுமிருக்கவில்லை. பவர் மிகவெளிப்படையாக விளக்குகிறார், ”மற்ற தேசங்களின் மீதான தமது ஆளும் உரிமை நிலைகுலைந்து விட்ட நிலையில் ஜேர்மன் தேசிய முதலாளித்துவமானது எந்த வரலாற்று இலட்சியத்தின் காரணத்தால் அது ஜேர்மன் தந்தைநாட்டில் இருந்து ஒரு பிரிவினையை தானாக அனுபவித்து வந்ததோ அது முடிந்து போனதாகக் கருதியது”. இவ்வாறாக சுற்றுக்குவிடப்பட்ட புதிய வேலைத்திட்டமானது ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அவசியமாய் இருந்ததால் அல்ல, மாறாக அது இனியும் ஒடுக்கியவர்களுக்கான அபாயமாக இல்லாதுபோய்விட்டதால் தான். சொத்துடைமையுடைய வர்க்கங்கள் வரலாற்றுரீதியாய் ஒரு நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுவிட்ட நிலையில், சட்டரீதியாக தேசியப் புரட்சியை அங்கீகரிக்க கடமைப்பட்ட நிலையில் தங்களைக் கண்டது, ஆஸ்திரிய-மார்க்சிசம் அதைத் தத்துவார்த்தரீதியாய் அங்கீகரிப்பதற்குப் பொருத்தமான தருணமாய் இதனைக் கண்டது. அவர்கள், இது ஒரு முதிர்ந்த புரட்சி, காலமெடுத்து, வரலாற்றுரீதியாகத் தயாரிப்பு செய்யப்பட்டு நடந்தது என்றனர். எப்படியாயினும் எல்லாம் முடிந்து விட்டதல்லவா. இங்கே சமூக ஜனநாயகத்தின் உணர்வு நமக்கு முன்னால் உள்ளங்கையில் உள்ளது போல் தெளிவாய் காணக் கிடைக்கிறது! சோசலிசப் புரட்சியை பொறுத்தவரை விடயமே வேறு, அது சொத்துடைமை வர்க்கங்களிடம் இருந்து எந்த அங்கீகாரத்தையும் நம்பிக் கொண்டிருக்க முடியாது. அது தள்ளிப் போடுவதற்கும், சமரசப்படுவதற்கும், பெருமை கொள்ளையடிக்கப்படுவதற்கும் விடப்பட வேண்டியிருந்தது. சாம்ராஜ்யமானது பலவீனமான, அதாவது தேசிய, கோடுகளின் வழியே பிரிக்கப்பட்டதால் ஓட்டோ பவர் புரட்சியின் தன்மையைப் பொறுத்தமட்டில் பின்வரும் முடிவுக்கு வந்தார்: “அது எந்த வகையிலும் ஒரு சமூகப் புரட்சி அல்ல, மாறாக ஒரு தேசியப் புரட்சி.” யதார்த்தத்தில் இந்த இயக்கமானது அதன் வெகு ஆரம்பத்தில் இருந்தே ஒரு ஆழமான சமூகப் புரட்சிகர உள்ளடக்கத்தை கொண்டிருந்தது. ஆஸ்திரியாவின் சொத்துடைமை வர்க்கங்கள் மொத்த இராணுவத்தையும் கைதியாய் சிறைப்பிடிக்க கூட்டிற்கு வெளிப்படையாய் அழைப்பு விடுத்தன என்கின்ற உண்மையில் இருந்தே அதன் “தெளிந்த தேசிய”த் தன்மை ஓரளவு நன்கு விளங்கப்படுத்தப்படுவதாய் இருக்கின்றது. வியன்னாவை இத்தாலிய துருப்புகளைக் கொண்டு கைப்பற்ற ஜேர்மன் முதலாளித்துவ வர்க்கம் இத்தாலிய ஜெனரலிடம் கெஞ்சியது! புரட்சிகர நிகழ்வுப்போக்கில் உள்ள சமூக உள்ளடக்கத்தில் இருந்து தேசிய வடிவத்தை ஏதோ அவை இரண்டு சுயாதீனமான வரலாற்றுக் கட்டங்களை குறிப்பதைப் போல இவ்வகையில் இழிவாகவும் பண்டிதத்தனத்துடனும் பிரிப்பது - இங்கே ஓட்டோ பவர் எவ்வளவு நெருக்கமாக ஸ்ராலினிடம் செல்கிறார் எனப் பார்க்கிறோம்!. இது ஒரு உபயோகமானமுறையில் மிகவும் அர்த்தமுடையது. சமூக ஜனநாயகக் கட்சி சமூகப் புரட்சி எனும் அபாயத்துக்கு எதிரான தனது போராட்டத்தில் முதலாளித்துவத்துடன் கூட்டுவேலை செய்வதை நியாயப்படுத்துவதே அதன் நோக்கமாகும். புரட்சி என்பது, வரலாற்றை முன்கொண்டு செல்லும் வாகனம் என்கின்ற மார்க்சின் சூத்திரத்தை நீங்கள் ஏற்றுக்கொண்டால், அப்போது ஆஸ்திரிய-மார்க்சிசம் அதில் முட்டுக்கட்டை போடும் இடத்தைப் பிடித்துக் கொள்ளும். முடியாட்சி உண்மையில் நிலைகுலைந்து போன பின்னரும் கூட, அரசாங்கத்தில் பங்குபெற அழைப்பு விடப்பட்ட சமூக ஜனநாயகமானது அப்போதும் பழைய ஹப்ஸ்பேர்க் அமைச்சகத்துடன் முறித்துக் கொள்வதற்கு மனத் தயாரிப்பு கொள்ளும் திராணியின்றி இருந்தது. தேசியப்புரட்சியானது அரசசெயலகத்திற்கு முன்னைய அமைச்சர்களை அறிமுகப்படுத்துவதுடன் மட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. அக்டோபர் 9க்குப் பின்னர், அதாவது ஜேர்மன் புரட்சியானது Hohenzollern ஐ தூக்கிவீசி விட்டிருந்த பின்னர்தான், ஆஸ்திரிய சமூக ஜனநாயகவாதிகள் ஒரு குடியரசைப் பிரகடனப்படுத்துவதற்கு அரச சபையிடம் முன்மொழிந்தனர். வெகுஜன இயக்கங்களை கண்டு ஏற்கனவே நடுநடுங்கிக் கொண்டிருந்த தமது முதலாளித்துவக் கூட்டாளிகளையும் அச்சுறுத்தி இதற்குள் செலுத்தினர். மனச்சாட்சியற்ற முரண்நகையுடன் ஓட்டோ பவர் கூறுகிறார், “நவம்பர் 9 மற்றும் 10ல் அப்போதும் முடியாட்சியின் பக்கம் நின்று கொண்டிருந்த கிறிஸ்தவ சோசலிஸ்டுகள் நவம்பர்11 அன்று தமது எதிர்ப்பைக் கைவிட முடிவு செய்தனர்....” சமூக ஜனநாயகவாதிகள் இந்த கறுப்பு நூற்றவர்களின் முடியாட்சிக் கட்சியினை விட இரண்டு முழு நாட்கள் முற்போக்காய் இருந்துள்ளனர்! இந்த புரட்சிகரத் துணிச்சலுக்கு முன் மானுடத்தின் சாகச நாயகர்கள் எல்லாம் வெளிறிப் போவார்கள் போங்கள். ரஷ்ய மென்ஷிவிக்குகள் மற்றும் சமூகப் புரட்சியாளர்கள் விடயத்தில் போல தனது விருப்பத்திற்கு எதிராக ஆஸ்திரிய சமூக ஜனநாயகமானது புரட்சியின் ஆரம்பத்தில் இருந்தே தேசத்தின் தலைமையில் தானாக இடத்தைப் பெற்றது. அவர்களைப் போலவே இதுவும் எல்லாவற்றுக்கும் மேல் தனது சொந்த சக்தியைக் கண்டு அஞ்சியது. கூட்டணி அரசாங்கத்தில் சமூக ஜனநாயகவாதிகள் எவ்வளவு சாத்தியமோ அவ்வளவு குறைந்த இடத்தை மட்டும் பிடிக்க முயன்றனர். ஓட்டோ பவர் இதனைப் பின்வருமாறு விளக்குகிறார்: “புரட்சியின் முற்றுமுழுதான தேசியத் தன்மைக்கு பொருத்தமாக, சமூக ஜனநாயகவாதிகள் முதலில் அரசாங்கத்தில் ஒரு மிகக் கண்ணியமான அளவு பங்கேற்பையே கோரினர் என்கின்ற உண்மையானது அடிப்படையாக இருக்கிறது.” அதிகாரம் பற்றிய கேள்வி சக்திகளின் உண்மையான இடைத்தொடர்பின் அடிப்படையில், புரட்சிகர இயக்கத்தின் வலிமையின் அடிப்படையில், ஆளும் வர்க்கங்களின் திவால்நிலையின் அடிப்படையில், கட்சியின் அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் அந்த மக்களால் தீர்மானிக்கப்படவில்லை, மாறாக நிகழ்வுகளின் உண்மையான பாதையின் மீது சில மெத்தப்படித்த வகைப்பாட்டாளர்கள் ஒட்டிய “முற்றுமுழுதான தேசியப் புரட்சி” என்கின்ற பண்டிதத்தனமான சின்ன பெயரட்டையால் தீர்மானிக்கப்பட்டதாம். அரசசபையின் தலைமைச் செயலரின் பதவியில் இருந்த கார்ல் ரென்னர் இந்த புயல் அகலக் காத்திருந்தார். மற்ற சமூக ஜனநாயகத் தலைவர்கள் எல்லாம் முதலாளித்துவ அமைச்சர்களின் உதவியாளர்களாக தங்களை மாற்றிக் கொண்டனர். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், சமூக ஜனநாயகவாதிகள் அலுவலக மேசைகளின் கீழ் ஒளிந்து கொண்டனர். ஆயினும் சமூக சதைப்பகுதி அனைத்தையும் ஆஸ்திரிய-மார்க்சிசவாதிகள் முதலாளித்துவத்திற்காகப் பாதுகாத்து வைத்திருக்கையில் அதன் தேசிய வெளிஓட்டை மட்டும் சாப்பிட்டுக் கொண்டிருப்பதில் வெகுஜனங்களுக்கு திருப்தியிருக்கவில்லை. முதலாளித்துவ அமைச்சர்களை தொழிலாளர்களும் சிப்பாய்களும் உலுக்கியெடுத்து விட்டதோடு சமூக ஜனநாயகவாதிகளை ஒளிந்திருப்பதில் இருந்து வெளியில் வரவும் அவர்கள் நிர்ப்பந்தித்தனர். மாற்று இல்லாத தத்துவாசிரியரான ஓட்டோ பவர் இதனையும் விளக்குகிறார்: “தேசியப் புரட்சியை சமூகப் புரட்சியின் பக்கத்திற்குத் தள்ளிய அடுத்து வந்த நாட்களின் நிகழ்வுகள் தான் அரசாங்கத்தில் நமது பலத்தை அதிகரித்தது.” இதைப் புத்திக்கூர்மையுடனான மொழியில் மொழிபெயர்த்தால் இப்படி வரும்: வெகுஜனங்களின் தாக்குதலால்தான் சமூக ஜனநாயகவாதிகள் மேசைகளுக்குக் கீழேயிருந்து தவழ்ந்து வெளியில் வருவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டனர். ஆனால் இது ஒரு கணமும் அவர்களது செயல்பாட்டை மாற்றி விடவில்லை. அவர்கள், கற்பனைப் பரவசவாதத்திற்கும் சாகசவாதத்திற்கும் எதிரான ஒரு போரைத் தொடக்கத்தான் அதிகாரத்தைக் கையிலெடுத்தனர். எந்த சமூகப் புரட்சி, “அரசாங்கத்தில் அவர்களது பலத்தை அதிகமாக்கியிருந்ததோ” அதற்கு இந்த துதிபாடிகள் இப்போது சூட்டியிருந்த பெயர்கள் தான் இவை. வியன்னா வங்கியமைப்பை -Kreditanstalt ஐ- பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர பரவசத்தில் இருந்து பாதுகாக்கும் காவல் தேவதைகளாக தமது வரலாற்றுக் கடமையை 1918ல் இந்த ஆஸ்திரிய-மார்க்சிசவாதிகள் வெற்றிகரமாக நிறைவேற்ற முடிந்ததென்றால் அதற்கு ஒரே காரணம் ஒரு உண்மையான புரட்சிகரக் கட்சியின் பக்கத்தில் இருந்து அவர்கள் எந்தவொரு தடையையும் சந்திக்கவில்லை என்பது தான். ரஷ்யா மற்றும் ஆஸ்திரிய-ஹங்கேரி ஆகிய தேசியங்களால் ஆன இரண்டு அரசுகள் தமது மிக சமீபத்திய தலைவிதியின் மூலம், போல்ஷிவிசத்திற்கும் ஆஸ்திரிய-மார்க்சிசத்திற்கும் இடையிலான வித்தியாசத்தின் மீது ஒரு முத்திரையை பதித்திருக்கின்றன. ஒன்றரை தசாப்த காலம் முழுமைக்கும், லெனின், மகா ரஷ்ய மேலாதிக்கத்தின் அத்தனை சுவடுகளுடனும் சமரசமற்ற மோதல் செய்துகொண்டு, ஜார்களின் சாம்ராஜ்யத்தில் இருந்து துண்டித்துக் கொள்வதற்கு ஒடுக்கப்பட்ட தேசங்கள் அனைத்திற்கும் உள்ள உரிமையை உபதேசித்து வந்தார். ரஷ்யாவைத் துண்டுபோடுவதற்கு ஆசை கொண்டிருப்பதாய் போல்ஷிவிக்குகள் குற்றம் சாட்டப்பட்டனர், ஆனால் தேசியப் பிரச்சினையின் இந்த துணிவான புரட்சிகர சூத்திரம் தான் போல்ஷிவிக் கட்சிக்கு ஜாரிச ரஷ்யாவின் சிறிய மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் அழிக்கமுடியாத நம்பிக்கையை வென்று தந்தது. ஏப்ரல் 1917ல் லெனின் கூறினார்: “நாங்கள் ஒரு சோவியத் குடியரசை வைத்திருக்கிறோம் எனக் கண்டால் உக்ரைனியர்கள் துண்டித்துக் கொள்ள மாட்டார்கள், ஆனால் ஒரு மிலியுகோவ் குடியரசை வைத்திருக்கிறோம் என்றால் துண்டித்துக் கொள்வார்கள்”. இந்த விடயத்தில் அவர் கூறியது மிகச் சரியென நிரூபணமாயிற்று. தேசியப் பிரச்சினையிலான இரண்டு கொள்கைகளின் ஒப்பிடமுடியாத வித்தியாசத்தை பரிசோதித்துக் கொள்வதற்கு வரலாறு வசதி செய்துள்ளது. ஆஸ்திரிய-ஹங்கேரி, அங்கு ஒரு கோழைத்தனமான அரைகுறைக் கொள்கையின் உணர்வினால் பாட்டாளி வர்க்கம் கற்பிக்கப்பட்டதால், ஒரு பயங்கரமான உலுக்கலில் துண்டுதுண்டாக சிதறி விட்டது, மேலும் இந்த நிகழ்வுப்போக்கின் முன்முயற்சி பிரதானமாக சமூக ஜனநாயகக் கட்சியின் தேசியப் பிரிவுகளால் எடுக்கப்பட்டது. அதே சமயத்தில் ரஷ்யாவில் ஜாரிசத்தின் சிதைவுகளின் மேல் தேசியங்களாலான ஒரு புதிய அரசு உருவாக்கப்பட்டுள்ளதுடன் பொருளாதாரரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் போல்ஷிவிக் கட்சியால் நெருக்கமாய் ஒன்றிணைக்கச் செய்யப்பட்டுள்ளது. சோவியத் ஒன்றியத்தின் இனிவரும் தலைவிதி என்னவாய் இருந்தாலும் - அது ஒரு அமைதியான சரணாலயமாய் இருப்பதில் இருந்து இன்னும் வெகு தொலைவில் இருக்கிறது - லெனினின் தேசியக் கொள்கை என்பது மானுடத்தின் என்றென்றைக்குமான பொக்கிஷங்களில் தனக்குரிய இடத்தைக் காணும். |
|