Chapter 7: The fourth International in World War 2

இரண்டாம் உலக யுத்தத்தில் நான்காம் அகிலம்

Back to screen version

மார்க்சிசத்திலிருந்து விட்டோடும் குட்டி முதலாளித்துவ ஓடுகாலிகளின் மேல் பதிந்திருக்கும் முத்திரை, அவர்களது இயக்கங்களின் மரபுகளின் மேல் அவர்கள் கொண்டிருக்கும் அவமதிப்பே என்று நீண்ட காலத்திற்கு முன்னரே ட்ரொட்ஸ்கி எழுதியுள்ளார். பண்டா இதற்கு ஏற்ப இரண்டாம் உலக யுத்தத்தின் பொழுது தலைமறைவாக இருந்து பாசிசத்திற்கு எதிராகப் போராடிய, மடிந்த எண்ணற்ற ட்ரொட்ஸ்கிசத் தியாகிகளின் நினைவுகளைக் கிண்டல் செய்யும் அளவிற்கு சென்றுள்ளார்.

ஐரோப்பிய ட்ரொட்ஸ்கிஸ்டுகள் "பாசிச எதிர்ப்பு இயக்கத்தில் பங்கு கொள்வதைத் தவிர்த்திருந்தனர். மற்றும் அவர்கள் புரட்சிகரத் தோற்கடிப்புவாத நிலைப்பாட்டை முன்வைக்கும் போராட்டத்தில் சிறிய அல்லது எந்த ஒரு பங்கையும் வகிக்கவில்லை" என்ற பண்டாவின் புதிரான குற்றச்சாட்டில் அனைத்து கோட்பாடு ரீதியான பிரச்சனைகள் சம்பந்தமாக அவரின் அரசியல் சிடுமூஞ்சித்தனம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

நாசிகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஸ்ராலினிஸ்டுக்களினாலும், அவர்களது முதலாளித்துவ நேச அமைப்புக்களினாலும் தலைமை தாங்கப்பட்ட உத்தியோக ரீதியான "எதிர்ப்பு" இயக்கங்களின் - மக்கள் முன்னணியின் [Popular Front] வர்க்க ஒத்துழைப்பிலும் மற்றும் அமெரிக்க, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியங்களுக்கு ஆதரவளிப்பதிலும் வேரூன்றி இருந்த கொள்கைகளுக்கு எதிராக மிகவும் கடுமையான போராட்டத்தின் மூலம், புரட்சிகரத் தோற்கடிப்புவாதம் விடாப்பிடியாக ட்ரொட்ஸ்கிஸ்டுகளால் மட்டும்தான் கடைப்பிடிக்கப்பட்டது என்பதை பண்டா வெளிப்படையாகவே மறந்துள்ளார். பின்னர் நாம் விளக்குவது போல, இதுமட்டுமன்றி, எதிர்ப்பு இயக்கங்களின் மக்கள் முன்னணியின் வர்க்கங்களுக்கு அப்பாற்பட்ட "தேசிய விடுதலை" என்றதன் அடிப்படையை சரியென்று ஆதரித்த மற்றும் தொழிலாளர் ஆட்சிக்கும் சோசலிசத்திற்குமாக முதலாளித்துவ எதிர்ப்பு போராட்டத்தின் மூலமே நாசிசத்திற்கு எதிரான போராட்டம் வரலாற்று ரீதியாகச் சாத்தியமானது என்பதை மறுத்த, திரிபுவாதிகளுக்கு எதிராக ஒரு கசப்பான போராட்டதை நான்காம் அகிலம் தொடுக்க வேண்டியிருந்தது.

யுத்தத்தின் பின்னர், எதிர்ப்பு இயக்கத்தில் நான்காம் அகிலம் பங்கு கொள்ளாது தவிர்த்துக் கொண்டுள்ளது என்று உரத்துக் கத்தியவர்கள், உலக இயக்கத்தினுள் இருந்த அதீத வலதுசாரிப் பகுதியினராகும். பீலிக்ஸ் மொறோவாலும் (Filex Morrow) அல்பேட் கோல்ட்மனாலும் (Albert Goldman) தலைமை தாங்கப்பட்ட இவர்கள், சட்மன்வாதிகளுடன் (Shachtmanties) ஏகாதிபத்திய ஜனநாயகத்திற்கு அடிபணிந்து, கம்யூனிச விரோதிகளாக உருமாற்றம் பெறுகின்ற மாற்றுப் போக்கில் இருந்தார்கள்.

"புரட்சிகரத் தோற்கடிப்புவாதத்தை முன்வைக்கும் போராட்டத்தில்" ட்ரொட்ஸ்கிஸ்டுகள் "சிறிய அல்லது எந்த ஒரு பங்கையும் வகிக்கவில்லை" என¢று தூற்றுவது, அரசியல் அறிவிற்கு ஒவ்வாததொன்றாகும். ஏனென்றால் நான்காம் அகிலத்திற்கு வெளியே, தொழிலாள வர்க்க இயக்கத்தினுள் ஏகாதிபத்திய யுத்தத்தை எதிர்த்த வேறு எந்த ஒரு போக்கும் இருக்கவில்லை! பாசிஸ்ட்டுக்கள், "ஜனநாயக" ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் ஸ்ராலினிஸ்ட்டுகளினது "மக்கள் முன்னணியினால்" ட்ரொட்கிஸ்டுகள் வேட்டையாடப்பட்டு அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டனர். ஏனென்றால் அவர்கள் புரட்சிகரத் தோற்கடிப்புவாத மற்றும் பாட்டாளிவர்க்க சர்வதேசிய பதாகையை விடாப்பிடியாகப் பற்றி நின்றனர்.

அதற்கு முந்தைய தசாப்தத்தில் ட்ரொட்ஸ்கி ஒன்று சேர்த்த மற்றும் பயிற்றுவித்த காரியாளர்களை, இரண்டாம் உலக யுத்தம் பரீட்சித்தது. போராட்டம் தனிப்பட்ட ரீதியில் பெரும்பாலும் சோகமானதாக இருந்த பொழுதும் வாழ்வா, சாவா என்ற போராட்டத்தில், ட்ரொட்ஸ்கிஸ்டுகள் மீண்டும், மீண்டும் தாம் நீரோட்டத்திற்கு எதிராக நீச்சல் போடக் கூடியவர்கள் என்பதை நிரூபித்தார்கள். ஐரோப்பாவில், மத்திய கிழக்கில், தென் அமெரிக்காவில் மற்றும் ஆசியாவில் நான்காம் அகிலத்தின் காரியாளர்கள் சோசலிசப் புரட்சியின் வேலைத் திட்டத்தைப் பாதுகாத்தார்கள்.

ஓடுகாலி பண்டா, இத்தனை வெறுப்பு இகழ்ச்சியுடன் தள்ளி ஒதுக்கும் புரட்சிகரப் போராட்டத்தின் நிலைச்சான்றை [Record] நாம் சுருக்கமாக மீளாய்வு செய்வோமாக.

பிரெஞ்சு ட்ரொட்ஸ்கிஸ்ட்டுகளான மார்க் புர்கிஸ் (Marc Bourhis) மற்றும் பியர் குக்குவன் (Pierre Gueguen) நாசிகளினால் அக்டோபர் 22, 1941 இல் மரணதண்டனைக்கு உள்ளாக்கப்பட்டனர். அவர்களுடைய தோழர் யூல்ஸ் ஜொவ்விறே (Jules Joffre) 1942 இல் சுட்டுக் கொல்லப்பட்டார். 1943 அக்டோபரில், பிரெஞ்சுப் பகுதியின் செயலாளர் மார்செல் ஹிக் (Marcel Hic) கெஸ்ராப்போவால் (Gestapo - ஹிட்லரின் உளவுப் படை) கைது செய்யப்பட்டு, பூகென்வால்டிற்கு (Buchenwald) நாடு கடத்தப்பட்டு, பின்னர் டோறாவிற்கு (Dora) அனுப்பப்பட்டு அங்கு கொலை செய்யப்பட்டார். டசின் கணக்கான மற்றைய ட்ரொட்ஸ்கிஸ்டுகள் கைது செய்யப்பட்டு, நாசி மரண முகாம்களில் உயிரிழந்தனர். அடக்குமுறை நிலவிய பொழுதும் ட்ரொட்ஸ்கிச சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையான லா வெறிற்ரே யின் (La Verité) [PCI] 15,000 இதழ்கள் சுற்றைக் கொண்ட அதன், 73 தலைமறைவு வெளியீடுகளை ஆகஸ்ட் 1940 முதல் வெளியிட்டது.

1943 இல் நான்காம் அகிலத்தின் ஐரோப்பிய செயலாளர் குழுமம் அமைக்கப்பட்ட பின்னர், பிரெஞ்சுத் தோழர்களின் தத்துவார்த்த ஏடான நான்காம் அகிலம் (Quatrième International) வெளியிடுவதற்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள். ட்ரொட்ஸ்கிஸ்டுகள், ஜேர்மன் மொழியில், ஆர்பைற்றர் அன்ட் சொல்டாற் (Arbeiter und Soldat - தொழிலாளியும் இராணுவமும்) என்ற பத்திரிகையை வெளியிட்டார்கள். இப் பத்திரிகை ஜேர்மன் தொழிலாள வர்க்க இராணுவத்தினரின் மத்தியில் சுற்றுக்கு விடப்பட்டது. புரட்சிகர சர்வதேசியத்தின் இந்த வீரம் மிக்க வெளிப்படுத்தலுக்கு, மார்க்சிசத்திற்கு வென்றெடுக்கப்பட்ட பல இராணுவத்தினர் உட்பட பல ஜேர்மன் மற்றும் பிரெஞ்சுத் தோழர்களின் உயிர்களையும் விலை கொடுக்க நேர்ந்தது.

ஆர்பைற்றர் அன்ட் சொல்டாற் பத்திரிகையின் ஆசிரியர், போல் விடெலின் (Paul Widelin) 1944 ம் ஆண்டின் வசந்த காலத்தில் கெஸ்டாப்போவால் பாரிசில் கைது செய்யப்பட்டார். அவர் விரைவாக கைதிகளைச் சுட்டு மரண தண்டனையை நிறைவேற்றும் படைப் பிரிவின் முன் நிறுத்தப்பட்டுச் சுடப்பட்டார். ஆனால் அவர் கொல்லப்படவில்லை. வழிப்போக்கர் ஒருவரால் எடுத்துச் செல்லப்பட்டு ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து செய்தியை ட்ரொட்ஸ்கிச தலைமறைவு அமைப்பிற்கு விடெலினால் அனுப்ப முடிந்தது. தலைமறைவு அமைப்பினர் அவரை மீட்க ஏற்பாடுகளைச் செய்தனர். ஆனால் மீட்கப்படுவதற்கு முன்னர், விடெலின் ஆஸ்பத்திரியில் பணிபுரிபவர் ஒருவரால் காட்டிக் கொடுக்கப்பட்டபோது, கெஸ்டாப்போ அவரைப் பிடித்தது. இம்முறை கெஸ்டாப்போவால் விடெலின் கொல்லப்படுவது உறுதியாயிற்று.

ஒல்லாந்து நாட்டில் ட்ரொட்ஸ்கிசத்துடன் சம்பந்தப்பட்ட கட்சியான RSAP யின் ஒன்பது உறுப்பினர்கள் நாஸிகளினால் பகிரங்க விசாரணைக்கு உள்ளாக்கப்பட்ட பின்னர், அவர்களுக்கு எதிரான மரணதண்டனை ஏப்பிரல் 12, 1942 இல் நிறைவேற்றப்பட்டது. மரண தண்டணைக்கு உள்ளாக்கப்பட்டவர்களில் கென்க் சினிவலெட்டும் (Hennk Sneevliet) உள்ளடங்குவார். இவர் சுடும் அணியின் முன் சுட்டுக் கொல்லப்படுவதற்காக நிறுத்தப்பட்டிருந்த பொழுது கம்யூனிச சர்வதேச கீதத்தைப் பாடினார்.

பெல்ஜியத்தில், ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் தலைவர் லியோன் லெஸ்சொயில் (Leon Lesoil) 1941 இல் கைது செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். கைதிகளைச் சுடும் நாஸிகளின் படைப் பிரிவுகளினால் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்ட அவரது தோழர்களில் ரெனேறி,( Renery) வான் பெல்லி, (Van Belle) மற்றும் லெமென்சுமாகும் (Lemmens). பெறுமதிமிக்க யூதப் பிரச்சனை (The Jewish Question) என்ற ஆய்வின் ஆசிரியரான பேராற்றல் மிக்க இளம் ட்ரொட்ஸ்கிஸ்ட் ஏ.லியோன், (A.Leon) 1944 இல் கைது செய்யப்பட்டார். அவர் அவுஸ்விற்ஸ் (Auschwitz) முகாமிற்கு நாடுகடத்தப்பட்டு அங்கு படுகொலை செய்யப்பட்டார். இந்தக் காட்டுமிராண்டி அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட பொழுதும், பெல்ஜிய நாட்டுத் தோழர்கள், லெனினின் குரல் (Lenin´s Voice) என்ற பெயர் கொண்ட பிரெஞ்சு மொழிப் பத்திரிகையை வெளியிட்டனர். அதன் சுற்று 10,000 ம் பிரதிகளாக இருந்தது. அதோடு அவர்கள் வர்க்கப் போராட்டம் (The Class Struggle) என்ற பெயர் கொண்ட ஃபிலெமிஷ் (Flemish) மொழிப் பத்திரிகையையும் வெளியிட்டனர். இதன் சுற்று 7,000 ம் பிரதிகளாக இருந்தது.

கிரேக்க நாட்டில், ட்ரொட்ஸ்கிச "ஆக்கியோ - மார்க்சிஸ்ட்டுகளின்" (Archeo - Marxists) தலைவர் பன்ரிலிஸ் பொவுலியோபுலிஸ் (Pantelis Pouliopoulis) அவருடைய 17 தோழர்களுடன் ஜூன் 1943 இல் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டார். அவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட இருக்கும் இடத்திற்குக் அவர் கொண்டுவரப்பட்ட பொழுது தன்னைச்சுட்டு மரண தண்டனையை நிறைவேற்றும் படைப் பிரிவின் சிப்பாய்களுடன், சிப்பாய்களின் சொந்த மொழியிற் பேசி அவர்கள் மத்தியில் கிளர்ச்சியை ஏற்படுத்தினார். சிப்பாய்கள் தமக்குக் கொடுக்கப்பட்டுள்ள படுபாதகப் பணியைச் செய்யமாட்டோம் என்று பிரகடனப்படுத்திய பொழுது, நாசி இராணுவ அதிகாரிகள் தலையிட்டுத் தாமே மரண தண்டனைகளை அவர்களுக்கு நிறைவேற்ற வேண்டிய நிலமை ஏற்பட்டது.

இத்தாலிய ட்ரொட்ஸ்கிஸ்ட் பிளாஸ்கோ (Blasco) ஸ்ராலினிஸ்டுகளால் படுகொலை செய்யப்பட்டார். இதனை நேரிற் பார்த்த ஒருவரின் அக்காலத்திய அறிக்கை செப்டம்பர் 30, 1944 ம் தேதிய மிலிரன்ட் (Militant) இதழில் வெளியிடப்பட்டது. அது இத்தாலியில் ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் வேலைகளை விவரித்தது:

இத்தாலியின் ட்ரொட்கிஸ்டுகள் பிரதானமாக தொழிலாளர்களாகும். அவர்கள், பாசிசத்திற்கு எதிரான கடுமையான தலைமறைவுப் போராட்டத்தில் பட்டுத் தேறிப் பரீட்சிக்கப்பட்டவர்கள். அவர்கள் முசோலினியின் சிறைக் கூடங்களின் நீண்டகால அனுபவசாலிகள். ரோம் நகரைச் சேர்ந்த ட்ரொட்ஸ்கிசத் தொழிலாளி ஒருவருடன் - உரம் பாய்ந்த புரட்சிகரப் போராளி ஒருவருடன் - நான் பேசினேன். அவரிடம் இருந்துதான் நான் ரோமில் பெரிய ட்ரொட்ஸ்கிசக் குழு ஒன்று இருக்கின்றது என்பதையும், அதேபோல மிலானிலும் உண்டு என்பதையும் நான் அறிந்தேன்.

எட்டு வருடங்களாக அவர் அடைபட்டிருந்த முசோலினியின் சிறைகளினுள்ளேயே, இந்தத் தொழிலாளி முதலில் ட்ரொட்ஸ்கிஸ்டுகளை சந்தித்தார். இந்தச் சிறைக் கூடங்கள் புரட்சிகரக் கல்விக்கான நிஜப் பல்கலைக்கழகங்களாகத் திகழ்ந்தன. சிறையில் அவர்கள் ட்ரொட்ஸ்கிசக் குழுவொன்றை அமைத்திருந்தார்கள். அச் சிறையிலிருந்த மிலான் நகரத்தைச் சேர்ந்த புரட்சியாளர்களிடம் இருந்து, "நூற்றுக் கணக்கான" ட்ரொட்ஸ்கிஸ்டுகள் மிலானின் தொழிற்துறைப் பகுதியில் உள்ளனர் என்பதை, எனக்குத் தகவலை தந்தவர் அறிந்துள்ளார்.

1944ல் பிரான்ஸ் தொடர்ந்தும் நாசிகளினால் ஆக்கிரகிக்கப்பட்டிருக்கும் நிலையில், கெஸ்ராப்போவின் பிடியில் இருந்து தப்புவதைச் சமாளித்துக் கொண்டு நான்காம் அகிலத்தின் ஐரோப்பியப் பகுதி ஒரு ஆறு நாள் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்திருந்தது. அது வெளியிட்ட அறிக்கை, இம் மாநாட்டின் வரலாற்று முக்கியத்துவத்தைச் சரியாகச் சுருக்கிக் கூறிற்று :

''முழுமையான நான்கு வருட யுத்தம் ஒன்றினால் இரத்தம் தோய்ந்துபோயுள்ள ஐரோப்பாவில், ஏகாதிபத்தியங்களின் மிகப் பயங்கரமான நெம்பு கோலால் நசுக்கப்பட்டு, மிகக் கொடிய மற்றும் மிகவும் நெறிப்படுத்தப்பட்ட அடக்குமுறைக்கு இரையானவர்களை ஏகாதிபத்தியங்களின் சிறைகள் மற்றும் ஒடுக்குமுறை முகாம்கள் நிறைத்துக் கொண்டிருக்கும் பொழுது, நமது இயக்கத்தால் அதன் ஐரோப்பிய ஒருங்கு கூடுதலை நடத்தி, அதன் போராட்ட அரசியல் நோக்கு நிலையை வகுத்ததோடு, அதை வரையறுக்கவும் முடிந்துள்ளது. இது மட்டுமே அது உயிர்ப்பூட்டப்பட்டுள்ள அதன் உயிர் வீரியத்தை, அதன் சர்வதேச ஆற்றலுருவை, மற்றும் அதன் புரட்சிகர ஆர்வ முனைப்பை திறம்பட வெளிப்படுத்தியுள்ளது.'' 1.

இந்த அசாதாரண ஒன்றுகூடலில் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் மக்களின் எதிர்ப்பு இயக்கங்கள் (Popular Resistance Movements) சம்பந்தமாகக் கொள்ள வேண்டிய மனப்பான்மை பற்றி விவாதித்தனர். ஸ்டாலினிஸ்டுகளால் மற்றும் ஆங்கில - அமெரிக்க ஏகாதிபத்தியங்களால் பரப்பப்பட்டு வரும் தேசியவாத வெறியை எதிர்க்கும் அதே வேளையில், நாசிகளுக்கு எதிரான போராட்டத்திற்கு ஈர்க்கப்பட்டுவரும் பரந்த மக்களை ஊடுருவ வேண்டிய தேவையை அப் பிரதிநிதிகள் (The delegates) ஏற்றுக் கொண்டார்கள். ஆக்கிரமிக்கப்பட்ட நாடுகளில் ஸ்டாலினிஸ்டுகளின் உறுதுணையுடன் மறுபடி கட்டியமைக்கப்பட்ட முதலாளித்துவ அரசுகளை நாசிகளின் இடத்தில் மாற்றீடு செய்ய எடுக்கப்படும் முயற்சிகளுக்கு எதிராகச் சோசலிசப் புரட்சியின் முன்னோக்கிற்காகப் போராடுவது இன்றியமையாததாகும். ''இரண்டாவது ஏகாதிபத்திய யுத்தத்தை கலைத்து விடுதலும், புரட்சிகர எழுச்சியும்'' என்ற தலைப்பிடப்பட்ட பத்திரத்தில் மாநாடு பின்வருமாறு பிரகடனப்படுத்தியது :

"பாட்டாளி வர்க்கமானது அதன் சொந்த முதலாளித்துவ வர்க்கத்தோடான கூட்டை மறுக்க வேண்டும் என்ற பொழுதும், அது ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் ஒடுக்குதலுக்கு எதிரான பரந்த மக்களின் போராட்டம் பற்றி மெத்தனமாக இருக்க முடியாது. பாட்டாளி வர்க்கமானது, முதலாளித்துவத்திற்கு எதிரான பொதுப் போராட்டமாக உருமாறுவதற்கு உதவுவதற்காகவும், விரைவு படுத்துவதற்காகவும் அது இப் போராட்டத்தை ஆதரிக்கின்றது. இந்த மனப்பான்மை, தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் முகவர்கள் பரந்த மக்களைத் தமது பிடிக்குள் கொண்டுவந்து முதலாளித்துவ இராணுவத்தையும் அரசையும் மீண்டும் கட்டியெழுப்ப, அவர்கள் பயன்படுத்த எடுக்கும் முயற்சிகளுக்கு எதிராக மிகவும் வலுவான போராட்டத்தைத் தொடுக்க வேண்டும் என்பதைப் பொருட்படுத்துகின்றது.

இதற்கு மாறாக தொழிலாளர்களின் ஆட்சி அதிகாரத்தின் கருக்களை (தொழிலாளர் படை, தொழிலாளர் குழுக்கள் என்னும் இன்னோரன்னவற்றை) அபிவிருத்தி செய்ய அனைத்தும் செயற்படுத்தப்பட வேண்டும். அதே நேரத்தில் தேசியவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும் எதிராக அதி விடாமுயற்சியுடனான போராட்டம் தொடுக்கப்பட வேண்டும்." 2.

இந்தப் பத்திரம் மக்களின் எதிர்ப்பு இயக்கங்களினுள் ஊடுருவலின் முக்கியத்துவத்தை திட்டவட்டமாக வலியுறுத்தியது. அது "பரந்துபட்ட மக்கள் போராடுவதற்கு அவர்களுக்கு இருக்கும் இந்த மனத்திடத்தை கணக்கில் எடுத்துக் கொண்டு, இந்தப் போராட்டம் எடுக்கும் தேசிய வடிவங்களின் விளைபயனாக ஏற்படும் பல அபாயங்கள் இருந்த பொழுதும், அதை நான்காம் அகிலம் வர்க்க இலக்குகளை நோக்கி வழிநடத்திச் செல்ல முயற்சிக்க வேண்டும்" 3. என்று கூறிற்று இந்த முடிவை நோக்கி, பத்திரம் ட்ரொட்ஸ்கிசக் காரியாளர்களை "எதிர்த்துப் போராடும் போராளிகளின் அணிகளுள் அதனுள் மறைந்து பொதிந்திருக்கும் புரட்சிகரச் சக்திகளை ஒரு அரசியல் மற்றும் இயக்க ரீதியாக வர்க்க அடிப்படையில் மறு அணிதிரட்டும் நோக்குடன் இந்தப் பிரச்சாரம் ஊடுருவச் செய்யப்பட வேண்டும் " 4. என்று அறை கூவல் விட்டது.

பெரிய எதிர்ப்பு இயக்கங்களுள் செயற்பட்ட ட்ரொட்கிஸ்டுகள் கெஸ்டாப்போவால் கைது செய்யப்படக்கூடிய அபாயத்தை எதிர்கொண்டதோடு மட்டுமன்றி, அவர்கள் அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி எப்படி சோசலிசத் தொழிலாளர் கட்சிக்கு எதிராக F.B.Iயுடன் ஒத்துழைத்ததோ அப்படி நான்காம் அகிலத்திற்கு எதிராக நாசிகளுடன் ஒத்துழைப்பதில் கணநேரம் கூடத் தயக்கம் காட்டாத ஸ்ராலினிஸ்டுக்களால் கண்டு பிடிக்கபடாது தப்பவும் வேண்டியிருந்தது.

ஐரோப்பிய கண்டத்தில் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் தொடுத்த போராட்டத்தை "மறக்க" பண்டா முடிவு செய்துள்ளார். நான்காம் அகிலம் யுத்த காலத்தில் பிரிட்டனில் தொடுத்த போராட்டத்தைப் பொறுத்தவரை, சுதந்திர தொழிற் கட்சி சம்பந்தமாக ஹீலி செய்த அரசியல் தவறு ஒன்றைத் தவிர அவரால் எதையும் நினைவுபடுத்த முடியவில்லைப்போற் தோன்றுகின்றது. இந்தக் குறிப்பிட்ட குற்றச்சாட்டு உண்மையானது அல்லது இல்லையா என்பது எதுவாக இருந்தாலும் - ஹீலி ஒரு கண நேரம் இந்த இடைநிலைவாத (மத்தியவாதம்) இயக்கத்தில் சேரச் சிந்தித்தார் - அது நான்காம் அகிலம் இரண்டாம் உலக யுத்தத்தின் பொழுது நடந்து கொண்ட முறைபற்றி எவ்வித தொடர்பையும் கொண்டிருக்கவில்லை.

எதை பண்டா குறிப்பிடத் தவறுகின்றார் என்றால், தொழிலாளர் சர்வதேசக் கழகத்தினதும் மற்றும் புரட்சிகர சோசலிசக் கழகத்தினதும் நீண்ட தாமதத்தின் பின்னர் ஏற்பட்ட கூட்டிணைப்பின் பின்னர் - தனது முந்தைய தவறைச் சரி செய்தபின், ஹீலி வகுத்த ஒரு பிரதான பங்கின் மாற்றுப் போக்கை - புதிதாக அமைக்கப்பட்ட புரட்சிக் கம்யூனிஸ்ட் கட்சி ஏறக் குறைய உடனடியாக வின்சன்ற் சேர்ச்சில் (Winston Churchill) தலைமையிலான யுத்த காலக் கூட்டரசாங்கத்தின் தாக்குதலுக்கு உள்ளாகியது எனும் விடயத்தையாகும்.

1944 மார்ச் கூட்டிணைப்பு மாநாட்டில், மாநாட்டின் 69 பேராளர்களும் "பாட்டாளி வர்க்க இராணுவக் கொள்கை" சம்பந்தமாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். அத் தீர்மானம் அதன் பிரகடனத்தில் கூறியதாவது :

ஒரு தலைமுறையின் பொழுது, நான்கு வருடங்களுக்கு மேலாகக் கொழுந்து விட்டு எரியும் மனித இனத்தை முதலாளித்துவமானது இரண்டாம் உலக யுத்தத்தினுள் மூழ்கடித்துள்ளமை, முதலாளித்துவ உற்பத்தி முறையின் தவிர்க்க முடியாத நெருக்கடியின் விளைபயன் என்பது, நீண்டகாலத்திற்கு முன்னர் புரட்சிகர மார்க்சிஸ்டுகளால் முன் கூறப்பட்டுள்ளது. முட்டுச் சந்திலிருந்து பரந்துபட்ட மனித இனத்தை முதலாளித்துவம் வெளியில் இட்டுச் செல்ல முடியாமையை இது எடுத்துக் காட்டுகின்றது.... ஆளும் வர்க்கத்தின் ஏகாதிபத்திய கொள்கையை பொறுமையுடன் விளக்குவதும் மற்றும் "பாசிசத்திற்கு எதிரான யுத்தம்" மற்றும் "ஐனநாயகத்திற்கான யுத்தம்" என்ற போலி மற்றும் பொய் கூறும் "முழக்கங்களை அம்பலப்படுத்துவதும் புரட்சிகர சோசலிஸ்டுக்களின் கடமையாகும்." 5.

பிரிட்டிஷ் தொழிலாள வர்க்கத்தின் வளரும் தீவிரம், அலையலையாக வெடித்த வேலை நிறுத்தங்களில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலூக்கமான பங்குகொள்ளல் என்பனவற்றிற்கு சேர்ச்சிலின் பதில், ட்ரொட்ஸ்கிசக் கட்சியின் நான்கு தலைவர்களை 1944 ஏப்பிரலின் ஆரம்ப நாட்களில் கைது செய்வதாக இருந்தது. புரட்சிக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஜோக் ஹஸ்ரன், (Jock Haston) மற்றும் றோய் ரியேர்ஸ், (Roy Tearse) ஹீற்ரன் லீ, (Heaton Lee) ஆன் கீன் (Ann Keen) ஆகியோரைக் கைதுசெய்து, 1927 ம் ஆண்டு தொழிற் தகராறு மற்றும் தொழிற் சங்கங்களின் சட்டத்தின் கீழ் சட்ட விரோதமானவை என்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ள ரைனிசைட் (Tyneside) வேலைநிறுத்தங்களை "முன்னேற்றினார்கள், உதவினார்கள், தூண்டிவிட்டார்கள்" என்று அவர்கள் மீது குற்றம் சுமத்தினர். இந்த இழிபுகழ் பெற்ற சட்டத்தின் கீழ் விசாரணைக்கு நிறுத்தப்பட்ட அவர்கள், குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்ட பிரிட்டிஷ் தொழிலாள வர்க்கத்தின் முதற் பிரதிநிதிகளாவர். தோல்விகண்ட 1926 ம் ஆண்டு பொது வேலை நிறுத்தத்தின் பின் நிறைவேற்றப்பட்டதே இச்சட்டமாகும்.

லீ மற்றும் ரியேர்சுக்கு 12 மாதச் சிறைத் தண்டனையும், ஹஸ்ரனுக்கு ஆறுமாத சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது. தொழிலாளர் இயக்கத்தினுள் எதிர்ப்புப் புயல் வெடித்திருக்காது இருந்திருக்குமாயின் இச் சிறைத் தண்டனைகள் மேலும் நீண்டனவாக இருந்திருக்கும் .

எங்கெல்லாம் அதற்குக் காரியாளர்கள் இருந்தார்களோ அங்கெல்லாம் நான்காம் அகிலம் அதன் புரட்சிகர வேலைத்திட்டத்திற்காகப் போராடியது. எகிப்தில் ஃபாரூக் (Farouk) மன்னனின் கைப் பொம்மை அரசாங்கம் ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் செய்தி இதழான அல் மஜ்டா அல் ஜடிடா வைத் (Al Majda Al Jadida) தடை செய்தது. பாலஸ்தீனத்தில் ட்ரொட்கிஸ்டுகள் ஹீபிரு, (Hebrew) அராபிய, மற்றும் ஆங்கில மொழிகளில் பத்திரிகைகளை வெளியிட்டார்கள். அவர்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தில் அராபிய - யூதத் தொழிலாளர்களின் ஐக்கியத்திற்காகப் போராடும் அதே வேளையில் மூர்க்கமாக சியோனிச அரசு ஒன்று அமைப்பதை எதிர்த்தார்கள்.

பிரிட்டனில் ட்ரொட்ஸ்கிஸ்டுகளுக்கு எதிராக அரசாங்கம் நடத்திவரும் வேட்டையாடலை மேற்கோள் காட்டி மொன்ரிவடியோவில் (Montevvido) இயங்கி வந்த நான்காம் அகிலத்தின் போராளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உருகுவே (Uruguay) அரசாங்கம் கோரிக்கை வைத்தது. பிரதிநிதிகள் சபையில் உள்துறை அமைச்சர் புரட்சிகர தொழிலாளர் கழகத்தின் பத்திரிகையான கொன்ரிறா லா கொறின்ரேவை (Contra la Corrienta - நீரோட்டத்திற்கு எதிராக) கையில் உயர அசைத்த வண்ணம் மிகை உணர்ச்சிவசப்பட்ட உரை நிகழ்த்தினார். அப்பொழுது அவர், "இவர்கள் இப்பொழுது நமது மத்தியில் உள்ளனர். அவர்கள் கூறுகின்றார்கள், இது உண்மையில் ஒரு ஏகாதிபத்திய யுத்தம் என்று; தொழிலாள வர்க்கம் வாக்களிப்பதில் நம்பிக்கை வைக்கக் கூடாதென்று; அவர்கள் பாராளுமன்றவாதத்தைத் தூற்றுகின்றார்கள்; அவர்கள் கூறுகின்றார்கள் நீதியின் வெற்றிகள் அகற்றப்பட்டு அவற்றின் இடத்தில் சமூக அவல நிகழ்ச்சியான நேரடி புரட்சிகர நடவடிக்கை நிலை நாட்டப்பட வேண்டும் என்று." 6.

ட்ரொட்ஸ்கிஸ்டுகள் யுத்தத்தை எதிர்க்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டிற்கு புரட்சித் தொழிலாளர் கழகம், "ஆம்! நாம் குற்றவாளிகள்தான்!!" என்று பகிரங்கக் கடிதம் ஒன்றில் பிரகடனம் செய்தது :

நாம் உள்துறை அமைச்சர் கூறுவது போல - இந்த யுத்தத்தை ஒரு ஏகாதிபத்திய யுத்தம் என்று பண்புருவாக்கம் செய்கின்றோம். ஏனென்றால் இந்த யுத்தத்தில் பங்கு கொள்ளும் நாடுகளுள் சோவியத் ஒன்றியத்தைத் தவிர மற்றைய அனைத்து நாடுகளும் பங்கு கொள்வது ஏகாதிபத்திய நலன்களுக்காகவேயாகும். நிஜமாகவும், உண்மையாகவும் இந்த யுத்தமானது ஜனநாயகத்திற்கானதாக இருக்கும் எப்பொழுதென்றால், யுத்தத்தை நடத்துவதை மக்கள் தமது சொந்தக் கைகளில் எடுக்கும் பொழுதேயாகும். இந்தக் கொள்கை ஒரு ஹிட்லரின் வெற்றிக்குச் சாதகமானதாக உள்ளதா? நாசிவாதம் வளர்வதற்குச் சாதகமாக இருந்த ஒரு செயலைத் தன்னும் எவராவது ஒருவரால் சுட்டிக் காட்ட முடியுமா என்று சவால் விடுகின்றோம். நம்மைப் போல வேறு எவரும் ஹிட்லரின் தோல்வியை விரும்பவில்லை. பிரிட்டிஷ் மற்றும் யாங்கி முதலாளிகள் நாசிசத்தின் பொருளாதார வளர்ச்சியை ஆதரித்த பொழுது, 1930 ம் ஆண்டிலிருந்து ட்ரொட்ஸ்கிசம் மட்டும்தான் நாசிகளின் அபாயத்தைப் பற்றி எச்சரித்த ஒரே ஒரு சக்தியாகும். 7.

இந்தப் பகிரங்கக் கடிதம் உருகுவேயில் பரந்தளவில் விநியோகிக்கப்பட்டு தொழிலாள வர்க்க இயக்கத்தினுள் கலந்துரையாடப்பட்டது.

இரண்டாம் உலக யுத்தத்தின் பொழுது நான்காம் அகிலத்தின் வேலையைப் பற்றிய எந்த ஒரு எடுத்துக் கூறலையும் இலங்கை மற்றும் இந்திய ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் வீரம்செறிந்த மற்றும் எழுச்சியூட்டும் நடவடிக்கைகளை எடுத்துக் கூறத் தவறுவோமாயின் அதை ஒரு பொறுப்புணர்ச்சி வாய்ந்த ஒரு எடுத்துக் கூறலாகக் கொள்ள முடியாது. ஏனென்றால் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான அவர்களது சளையாத போராட்டம், நடைமுறையில் புரட்சிகரத் தோற்கடிப்புவாதத்தினை எடுத்துக் காட்டியது.

இலங்கை ஒரு பிரிட்டிஷ் காலனி நாடாகத் தொடர்ந்து இருந்துவந்த பொழுது, இலங்கை சமசமாஜக் கட்சி (LSSP) 1935 டிசம்பரில் 50 தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களால் அமைக்கப்பட்டது. ஒரு குறுகிய காலத்தினுள் LSSP யானது ஏறக்குறைய எழுபது லட்சம் தொழிலாளர்களினதும், விவசாயிகளினதும் ஆதரவைப் பெற்றது. அது ரயில்வேத் தொழிலாளர்கள், பொதுவான கூலித் தொழிலாளர்கள், மற்றும் தோட்டத் தொழிலாளர்களை இயக்க ரீதியாக அணிதிரட்டியது. LSSP விவசாயிகளில் மிகவும் ஏழைகளாக உள்ள பகுதியினர் மத்தியிலும் தனது வேலைகளைச் செய்தது. பரந்த மக்கள் மத்தியில் அது ஆற்றும் பணியுடன் வாக்காளர் மத்தியிலான தனது வேலைகளையும் ஒன்றிணத்தது. LSSP அதன் முதற் தேர்தல் பிரச்சாரத்தில் இலங்கை அரச சபைக்கு என்.எம். பெரேராவையும் (N.M. Pereira) மற்றும் டி.பி.ஆர்.குணவர்த்தனாவையும் (D.P.R.Goonewardene) வெற்றி பெறச் செய்தது. 1942 இல் LSSP, அது நான்காம் அகிலத்தின் பகுதியாக இணைவதை அறிவித்தது.

ஜெர்மன், பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் யுத்தம் வெடித்தெழுந்ததையடுத்து, 1939 செப்டம்பரில் பெரேராவும், குணவர்த்தனாவும் அவர்களது பாராளுமன்றக் காப்புரிமை மீறப்பட்டு கைது செய்யப்பட்டார்கள். அதே நேரத்தில் LSSP யின் மற்றைய இரு தலைவர்களான கொல்வின் டி சில்வாவும் (Colvin De Silva) எட்மண்ட் சமரக்கொடியும் (Edmond Sammarakkody) கைது செய்யப்பட்டார்கள். கட்சியின் அச்சகங்கள் கைப்பற்றப்பட்டு அவற்றின் வெளியீடுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கட்சிக்கு எதிராகத் தோட்ட முதலாளிகள் சங்கத்தின் ஆயுத துப்பாக்கிப் படையினால் [Armed Rifle Corps] பயங்கரவாதப் பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்டது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் LSSP க்கு எதிராக சட்டத்தை மீறிய அடக்குமுறையைத் தொடுத்தது. இந்த அடக்குமுறை மார்ச் 13, 1942 இல் LSSP யை பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல் சேர் அன்ட்ரோ கல்டிக்கொற் (British Governor - General Sir Andrew Caldecott) உத்தியோக ரீதியாகச் சட்ட விரோதமாக்குவதற்கு முன்னரே கட்டவிழ்த்து விடப்பட்டது.

இந்தக் கோர ஒடுக்குமுறையின் மத்தியில்  LSSP, வங்கத்துப் புரட்சிகர சோசலிசக் கழகம் (Revolutionary Socialist League of Bengal) மற்றும் ஐக்கிய மாகாணங்களின் மற்றும் பிகாரின் போல்ஷேவிக் - லெனினிஸ்ட் கட்சி (ஙிஷீறீsலீமீஸ்வீளீ - லிமீஸீவீஸீவீst றிணீக்ஷீtஹ் ஷீயீ tலீமீ ஹிஸீவீtமீபீ றிக்ஷீஷீஸ்வீஸீநீமீ ணீஸீபீ ஙிவீலீணீக்ஷீ) என்பன 1941 மார்ச் மாதத்தில் மாநாடு ஒன்றை நடத்தின. மாநாடு இந்தியாவிற்கு ஒரு ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டத்தின் உருவரையை வகுத்தது. இது பின்னர் கலந்துரையாடலுக்கு விடப்பட்டது. இதைத் தொடர்ந்து 1941 நவம்பர் மாதத்தில் முழு இயக்கத்தினதும் தலைமையாகச் செயற்பட தற்காலிக குழு ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டது. அதன் பின் வேலைத்திட்டத்தின் வரைவு மிகவும் பரந்தளவிலான கலந்துரையாடலின் பின் கட்சியின் வேலைத் திட்டமாக 1942 மே மாதத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு அகில இந்தியக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

அகில இந்தியக் கட்சியை ஆரம்பிக்க நடந்து கொண்டிருக்கும் தயாரிப்புகளின் மத்தியிலும், 1942 ம் ஆண்டில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக வெடித்த மிகப்பெரும் பரந்துபட்ட கிளர்ச்சி எழுச்சியுடன் ஒன்று சேர்ந்தாற் போல 1942 ஏப்பிரலில், அவர்களை அடைத்து வைத்திருந்த ஒடுக்கு முகாமிலிருந்து என.எம்.பெரேராவும், குணவர்த்தனாவும் ட்ரொட்ஸ்கிசத்திற்கு தாம் வென்றெடுத்த சிறை அதிகாரியின் உதவியுடன் துணிச்சல் மிக்கவாறு தப்பிச் சென்றனர். சிறைக் கைதிகளுக்கு என்று சிறை அதிகாரி, நாகரிகமான மற்றும் பகட்டான உடைகளை சிறையினுள் கடத்திச் சென்றதோடு, தேவையான இரட்டைச் சாவிகளையும் செய்து கொண்டு வந்திருந்தார். உரிய நேரத்தில் பெரேராவும், குணவர்த்தனாவும், சமரக்கொடி மற்றும் டி சில்வாவுடன் விஜயம் செய்யும் பெரும் உயர் பதவியினர் போலத் தம்மை உடுத்திக் கொண்டு ஆசாரங்களும் நாகரிக நயத்துடனும் சிறையிலிருந்து வெளியேறினார்கள். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளுக்கு ஏற்பட்ட மானபங்கத்தை முழுமையடையச் செய்ய, ஏற்பட்ட ஊறிற்கு மேலும் வசையைச் சேர்ப்பது போல, தப்பிச் செல்பவர்கள் சிறையிலிருந்து வெளியே சென்றதும் சிறையின் சுவரிற்கு மேலால் சாவிகளை திருப்பி எறிந்து விட்டுச் சென்றனர்.

தாம் மிகவும் அஞ்சும் எதிர்ப்பாளர்களின் தப்பிச் செல்லலினால் அதிர்ச்சியுற்ற பிரிட்டிஷ் அதிகாரிகள் அவர்களைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு பரிசளிக்கப்படும் என்று அறிவித்தனர். இறுதியாக ஜூலாய் 15, 1943 இல், பம்பாயில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தினுள் ஊடுருவியிருந்த குல்கர்ணி (Kulkarni) என்று பெயரிடப்பட்ட ஸ்டாலினிச உளவாளியின் துரோகத்தினால் பெரேராவும், குணவர்த்தனாவும் கைது செய்யப்பட்டார்கள். அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைப் போல இந்தியாவிலும் ஸ்டாலினிஸ்டுகள், ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை அடக்குவதற்கும் மற்றும் ஒடுக்குவதற்கும் ஏகாதிபத்திய அதிகாரிகளுடன் நேரடியாக ஒத்துழைத்தார்கள்.

இலங்கைத் தலைவர்கள் விசாரணைக்காக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவதற்கு ஐந்து மாதங்களுக்கு முன்னர் இந்தியச் சிறைகளில் அவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். ட்ரொட்ஸ்கிசத்தினது கொள்கைகள் மற்றும் வேலைத்திட்டத்தைப் பாதுகாக்க பெரேராவும், குணவர்த்தனாவும் கண்டி நகரில் பெப்ரவரி 14, 1944 ல் ஏகாதிபத்திய நீதிமன்றத்தின் முன் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர் :

நாம் ஏன் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தோம்? இங்கிலாந்து வங்கியின் முகவரும் பிரிட்டனில் உள்ள முதலாளித்துவ வர்க்கத்தின் கருவியுமான சேர் அன்ட்ரோ கல்டிக்கொற் (Sir Andrew Caldecott) என்னைக் கைது செய்யவும் மற்றும் என்னைத் தடுப்புக் காவலில் வைக்கவும் என்ன உரிமை உண்டு? என்று நான் சவால் விடுகின்றேன். அவர்களுக்கு உள்ள மேலதிக பலத்தைத் தவிர பிரிட்டனின் ஆளும் வர்க்கத்திற்கு இந்தத் தீவின் மேல் ஆட்சி புரிய என்ன உரிமை உண்டு? எந்தளவிற்கு நாசிகளுக்கு டென்மார்க் மற்றும் நோர்வே மக்களின் மேல் ஆட்சி புரிவதற்கு அல்லது ஜப்பானிய ஏகாதிபத்தியவாதிகளுக்கு போமோசா (Formosa) மற்றும் யாவாவின் (Java) மேல் ஆட்சி புரிவதற்கு உரிமை உண்டோ, அந்தளவு உரிமைதான் பிரிட்டனுக்கும் இந்தத் தீவின் மக்கள் மேல் ஆட்சிபுரிவதற்கு உரிமை உண்டே தவிர, அதற்கு மேலாக எதுவும் இல்லை. பிரிட்டிஷ் ஆளும் வர்க்கம் இந்தத் தீவிற்குக் கடற் கொள்ளையர்களாக வந்தார்கள். அவர்கள் தொடர்ந்தும் சூறையாடுபவர்களாகவே இருந்து வந்துள்ளார்கள். பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் பகலில் பொய்ச் சத்தியங்கள் மூலமும், இரவில் போலிப் பத்திரங்களை உண்டாக்குவதன் மூலமும்தான் கட்டப்பட்டது.

நான் தீவிற்கு 1932 இல் திரும்பியதிலிருந்து என்றும் எனது உடனுழைப்பாளர்கள் குட்டி முதலாளித்துவ அறிவு ஜீவிகள் மத்தியிலும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் முன்னேறிய பகுதிகள் மத்தியிலும் விஞ்ஞான சோசலிசக் கருத்தைப் பரப்ப விடாமுயற்சியாக முயன்று வந்துள்ளேன். இருபதாம் ஆண்டுகளில் பிரமாண்டமான வலிமையையும் போர்க்குணத்தையும் வெளிப்படுத்திய தன்னியல்பான தொழிலாளர் இயக்கம், முப்பதாம் ஆண்டுகளின் ஆரம்பப் பகுதியில் அதன் ஆற்றலைத் தொழிற் சங்கவாத அரசியல் என்னும் தேங்கிய நீர்நிலையில் விரையம் செய்தது. மார்க்சிசத்தைப் பரப்புகின்ற மூன்றுவருட வேலையின் பின், நாம் விஞ்ஞான சோசலிசத்தின் கருத்துக்களில் ஊறிய போதுமான அளவு பெரிய கருவை அபிவிருத்தி செய்திருந்ததினால், எம்மால் இலங்கை சமசமாஜக் கட்சியை 1935 டிசம்பரில் ஆரம்பிக்க முடிந்தது. நாட்டு மக்கள் கட்சியின் வரலாற்றை அறிவார்கள். கட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்தே ஏகாதிபத்தியத்திற்கு எதிரான மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான ஒவ்வொரு போராட்டத்திலும் அது தன்னை முன்னணியில் நிறுத்திக் கொண்டது என்று கூறினால் போதுமானதாகும்.

LSSP யின் தலைமை அதன் ஆரம்ப நாட்களில் இருந்து ஸ்டாலினிச கம்யூனிஸ்ட் அகிலத்தின் தலைமையின் கீழ் வர மறுத்தது. அது லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கி ஆகியோர் தமது காலத்தில் எந்த கோட்பாடுகளுக்காக நின்றார்களோ, அவற்றிற்கு அது விசுவாசமாக இருந்து வந்தது. ஸ்டாலினிச கள்ளச் சரக்கைக் கட்சியினுள் கடத்த முயன்ற ஸ்டாலினிஸ்டுகளை, அது ட்ரொட்ஸ்கியின் போதனைகளின் செல்வாக்கின் கீழ், 1940 மார்ச்சில் கட்சியிலிருந்து வெளியேற்றியது. LSSP யானது 1942 இல் ட்ரொட்ஸ்கியாலும் மற்றும் சர்வதேச இடது எதிர்ப்பின் தோழர்களாலும் நிறுவப்பட்ட நான்காம் அகிலத்தின் ஒரு பகுதியாக மாறியது.

இரண்டாவது ஏகாதிபத்திய உலக யுத்தம் செப்டம்பர் 1939 இல் வெடித்த பொழுது கட்சி இந்த யுத்தத்தை ஒரு ஏகாதிபத்திய யுத்தம் என்று அதை பண்புருப்படுத்திப் புரட்சிகரத் தோற்கடிப்புவாத நிலைப்பாட்டை எடுத்தது. எனது உடனுழைப்பாளர்களும் நானும் வர்க்கப் போராட்டத்தையும் மற்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தையும், தொடர்ந்தும் உக்கிரப்படுத்தி வந்தோம். யுத்தமானது அரசியலை வேறு முறைகளில், அதாவது கூடிய பலாத்கார முறைகளில் தொடருவதாகும். யுத்தத்தின் பண்பியல் அதை நடத்தும் வர்க்கத்தால் நிர்ணயிக்கப்படுகின்றது. யுத்தமானது ஒரு ஏகாதிபத்திய யுத்தமாக இருந்தது, தொடர்ந்தும் அது சந்தைகளுக்காகவும், கச்சாப் பொருள் வளங்களுக்காகவும் மற்றும் காலனிகளுக்காகவுமே இருந்து வருகின்றது. "ஜனநாயக" வல்லரசுகளும் மற்றும் உடன்படிக்கை இணைப்பு வல்லரசுகளும் [Axis powers] எதற்காகச் சண்டை போடுகின்றன என்றால் எந்தக் குழு உலகத்தில் மேலாதிக்கம் செய்யப் போகின்றது என்பதை நிர்ணயிக்கவேயாகும். ஜனநாயகமும் பாசிசமும் வேறொன்றுமல்ல, ஒரே நாணயத்தின் இரு பக்கங்களே. அளவு கடந்து கனிந்த மற்றும் நிலை இழிவுற்ற முதலாளித்துவத்தைத் தொழிலாள வர்க்கம் கவிழ்த்து அதன் சொந்த அரசாங்கத்தின் வடிவமைப்பைப் - பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை - நிறுவத் தவறுமாயின் பாசிசமாக முதலாளித்துவம் அபிவிருத்தி அடையும்.

யுத்தத்தைப் பற்றிய தனது பண்புருப்படுத்தலை சோவியத் ஒன்றியம் யுத்தத்தினுட் புகுந்த பொழுது கட்சி மாற்ற மறுத்தது. இருந்த பொழுதும் அது விரைந்து, சோவியத் ஒன்றியத்தையும், சீனாவையும் தவிர யுத்தத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து நாடுகளையும் பொறுத்தவரை இந்த யுத்தம் ஒரு ஏகாதிபத்திய யுத்தம் என்று வரையறுத்தது. ஊனமுற்றிருந்த பொழுதும், சோவியத் ஒன்றியமானது ஒரு தொழிலாள வர்க்க அரசாகும். எனவே சோவியத் ஒன்றியம் ஒரு முற்போக்கு யுத்தத்தை, அக்டோபர் புரட்சியின் வெற்றிகளைப் பாதுகாக்கப் போராடுகின்றது. கட்சி சோவியத் ஒன்றியத்தை இந்த யுத்தத்தில் ஆதரிக்கின்றது. தொழிலாள வர்க்கம் சுதந்திரமாக எல்லா உதவிகளையும் இந்த யுத்தத்தில் சோவியத் ஒன்றியத்திற்கு அளிக்கக் கட்சி அதன் ஆற்றலுக்கு உட்பட்ட அனைத்தையும் செய்து வருகின்றது. அது ஹிட்லரின் ஐரோப்பாவில் எதிர்ப் புரட்சி சக்திகளுக்கு எதிரான ஒரு இராணுவ வெற்றிக்காக நிற்கின்றது.

ஜப்பானிய ஏகாதிபத்தியத்தின் நுகத்தடியில் இருந்து விடுபடச் சீனத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் தொடுத்துவரும் தேசிய விடுதலைக்கான யுத்தத்தை நாம் ஆதரிக்கின்றோம். ஆனால் கட்சியானது இந்த யுத்தத்தில் காலனித்துவ பரந்த மக்களின் மற்றும் பிரிட்டனின் தொழிலாள வர்க்கத்தின் சக்திகள் கொண்டு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தைத் தோற்கடிக்க வேலை செய்கின்றது

யுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஏகாதிபத்திய வல்லரசுகளின் ஆளும் வர்க்கங்கள் ஒரு பொழுதும் எதிர்பார்த்திராத சமூக மற்றும் அரசியல் சக்திகளை இந்த யுத்தம் இயக்கி விட்டுள்ளது. பாசிசம் செம்படையின் சம்மட்டித் தாக்குதல்களின் கீழ் ஐரோப்பாவில் இப்பொழுதே நிலை குலைந்து தள்ளாட்டம் கண்டுள்ளது. ஆனால் பாசிசம் பிரிட்டனில் மற்றும் அமெரிக்காவில் உருவம் பெற ஆரம்பித்துள்ளது.

மிக்காடோவின் (விவீளீணீபீஷீ) சாம்ராஜ்ஜியத்தின் கதி மாற்றமுடியாத முறையில் முடிவு செய்யப்பட்டுவிட்டது. மிக்காடோவின் கடுதாசியாலான வீடானது தீயிற் பொசுங்கிவிடும். ஆனால் உதய சூரியனின், நிலச்சுவாந்தார்களுடன் மற்றும் முதலாளிகளுடன் அநேகமாக கணக்குத் தீர்க்க இருப்பது ஜப்பானில் உள்ள தொழிலாள வர்க்கமேயன்றி அமெரிக்காவினதோ அல்லது பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தினதோ ஆயுதப் படைகள் அல்ல. யுத்தம் முடிவதற்கு முன்னர் ஐரோப்பா மற்றும் ஆசியாவில் உள்நாட்டு யுத்தம் பரவும். சோவியத் ஒன்றியம் வரவிருக்கும் ஆண்டுகளில் உலகத்தை வடிவமைப்பதில் மேலாட்சியான பங்கை வகிக்கும்.

புரட்சிகள் இன்று நிகழும் நிகழ்ச்சி நிரலில் உள்ளன. 1917 ஆண்டு அக்டோபர் புரட்சியில் இருந்து ஐரோப்பிய தொழிலாள வர்க்கம் பலன் பெறவில்லை என்று கூறுவதற்கு இடம் இல்லை. பாசிசம் வீழ்ச்சி காணும் நேரத்தில் தொழிலாள வர்க்கப் புரட்சிகள் ஐரோப்பாவில் வெடித்தெழ விருக்கின்றன. ஜப்பானிய ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சி காலனித்துவ புரட்சிக்கு வழிவகுக்கும். லெனின் இந்த சகாப்தத்தை யுத்தங்களின் மற்றும் புரட்சிகளின் சகாப்தம் என்று பண்புருப்படுத்தினார்.

விரைவாக ஒன்றன் பின் ஒன்றாக இந்திய சமுதாயத்தில் வெடித்துவரும் நெருக்கடியைச் சாதகமாகக் கொண்டு இந்தியாவில் உள்ள நான்காம் அகிலத்தினரின் சின்னஞ் சிறிய குழுவிற்கு உதவி செய்வதற்காக நான் சிறையில் இருந்து ஏப்பிரல் 1942 இல் தப்பினேன். இந்தியா அதன் வரலாற்றில் ஒரு மிக முக்கிய நெருக்கடியில் இருக்கும் பொழுது நானும் எனது உடன் உழைப்பாளர்களும் அங்கு இருக்கக் கூடியதாக நாம் தப்பும் நேரத்தை வகுத்தோம். ஆகஸ்ட் 1942 இலிருந்து இந்தியாவில் ஏற்பட்ட இயக்கத்தில் ஐயத்துக்கு இடமின்றி நாம் மிகமிகச் சிறிய பாகத்தை நம்மால் ஆற்ற முடிந்தது என்பதுபற்றி நாம் மகிழ்ச்சி அடைகின்றோம்.

நாம் 1943 ஜூலை 15ம் தேதி கைது செய்யப்பட்டோம். இந்தியாவில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் சிறைகளில் ஐந்து நீண்ட மாதங்களைச் செலவிட்ட பின்னர், நாம் மீண்டும் இலங்கையில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் சிறைக் கிடங்குகளுக்கு வந்துள்ளோம். காலம் நம்பக்கம்தான் உள்ளது. ஏகாதிபத்தியத்தின் இறுதிநாள் வந்துவிட்டது. எதிர்காலம் தொழிலாள வர்க்கத்துடன்தான் உள்ளது. சமசமாஜக் கட்சியின் தலைமையின் கீழ் வரும் வருடங்களில் இலங்கைத் தொழிலாள வர்க்கம் அதன் பங்கை ஆற்றும். 8.

குணவர்த்தனாவின் மற்றும் பெரேராவினது இந்த அறிக்கை கண்டியில் இருந்த இரு இளம் - மைக்கல் மற்றும் அந்தோனி வன் டேர் பூர்டன் (Anthony Van Der Poorten) - சகோதரர்களின் அரசியல் கல்வியூட்டலுக்குப் பங்களித்தது என்று நம்புவதற்கு நல்ல காரணம் உண்டு. அத்தோடு அது அவர்களது முதலாளித்துவ வளர்ப்பு முறையுடன் அவர்களை முறிக்கச் செய்து, ட்ரொட்ஸ்கிஸ்டுகளாகச் சோசலிசப் புரட்சிக்குத் தம்மை அர்ப்பணிக்கவும் அவர்களுக்கு உள்ளூக்கத்தைக் கொடுத்தது. இருந்த பொழுதும் இரண்டாம் உலக யுத்தத்தின் பொழுது நான்காம் அகிலத்தின் அபிவிருத்தியின் இந்தப் பெருமைமிக்க அத்தியாயத்தை பண்டாவால் - ட்ரொட்ஸ்கிச இயக்கத்தினுள் மைக்கல் வன் டேர் பூர்டன் இருந்த நாற்பது வருடங்களில், அவர் பயன்படுத்திய பெயர்- குறிப்பிடவில்லை. நான்காம் அகிலத்தை அழிக்க முயற்சிப்பதன் மூலம் அவர் தன்னுள் எது மிகச் சிறந்ததாக இருந்ததோ, அதைப் படுகொலை செய்ய நிர்பந்திக்கப் பட்டுள்ளார்.

1953ம் ஆண்டிற்குப் பின்னர் LSSP சரணாகதி அடைந்தமை, அது அதன் ஆரம்ப வருடங்களில் ஆற்றிய மிகப் பெரிய சாதனைகளின் பெருமைகளின் நற்பெயரைக் எப்படிக் கெடுத்துவிட முடியாதோ அப்படி பண்டாவின் சீரழிவு அவர் ஒரு காலத்தில் அளித்த பங்களிப்பின் தனிச்சிறப்பை இல்லாமற் செய்துவிட முடியாது. இதற்குப் பதிலாக அவரின் காட்டிக் கொடுப்பை அவரின் நம்பிக்கையூட்டிய ஆரம்ப ஆண்டுகளுடன் ஒப்பிட்டால், காட்டிக் கொடுப்பின் வரலாற்று அளவு, அதன் முழுப் பிரமாண்டமான தன்மையுடன் எடுத்துக் காட்டப்படும்.

குறிப்புகள்:

1.சோசலிசத் தொழிலாளர் கட்சியின் தேசிய கல்வித் துறை, நான்காம் அகிலத்தின் வரலாற்றை நோக்கி, ஜூன் 1973, பாகம் 2, பக்கம் 31.

2. அதே நூல், பக்கம் 31.

3. அதே நூல், பக்கம் 32.

4. அதே நூல், பக்கம் 32.

5. மிலிரன்ட்,6 மே 1944 .

6. மிலிரன்ட், 8 ஜூலை 1944.

7. மிலிரன்ட்,9 செப்டம்பர் 1944.

8. மிலிரன்ட்,14 அக்டோபர் 1944.

 
Copyright 1998-2003
World Socialist Web Site
All rights reserved