WSWS : Tamil : õóô£Á

இரண்டாம் உலக யுத்தத்தில் புரட்சிகரத் தோற்கடிப்புவாதம்
முன்னுரை
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
 

Chapter 5: Revolutionary Defeatism in World War 2

இரண்டாம் உலக யுத்தத்தில் புரட்சிகரத் தோற்கடிப்புவாதம்

Use this version to print | Send this link by email | Email the author

.ரூஸ்வெல்ட் நிர்வாகம், ரீம்ஸ்ரேர்ஸ் தொழிற்சங்கத்தின் வலதுசாரி அதிகாரத்துவத்துடன் நெருக்கமாகச் செயற்பட்ட வண்ணம், 1941ம் ஆண்டின் வசந்தகாலத்தின் மற்றும் கோடைக் காலத்தின் ஆரம்ப நாட்களில், ஐக்கிய அமெரிக்க அரசுகள் இரண்டாம் உலக யுத்தத்தினுள் சேரும் தறுவாயில், மினெஸ்ரா (Minnesota) வில் உள்ள ருவின் நகரத்தில், சோசலிசத் தொழிலாளர் கட்சிக்கு எதிராகவும், மற்றும் தொழிற்சங்கங்களினுள் அதன் மிக முக்கியமான அடித்தளமாக அமைந்திருந்த லோக்கல் (உள்ளூர்) 544 க்கு எதிராகவும், மிகப் பிரமாண்டமான அரச தாக்குதல் ஒன்றைத் தயாரித்துத் தொடுத்தது.

ஜூன் 27, 1941 இல் FBI (அமெரிக்க தேசிய புலனாய்வுத் துறை) யின் முகவர்கள் சோசலிசத் தொழிலாளர் கட்சியின் மினியாபொலிஸ் (Minneapolis) நகர சென்ட் போல் அலுவலத்தினுள் திடீரெனப் புகுந்து பெருந்தொகையான வெளியீடுகளையும், கட்சிப் பத்திரங்களையும் கைப்பற்றிச் சென்றனர். இதன் பின் இரு வாரங்கள் கடந்து சில நாட்களின் பின் - ஜூலை 15, 1941இல், சோசலிசத் தொழிலாளர் கட்சியின் தேசியச் செயலாளர் ஜேம்ஸ் பி. கனன் உட்பட கட்சியின் 28 உறுப்பினர்களை மற்றும் மினியாப் பொலிஸ் நகரின் சோசலிசத் தொழிலாளர் கட்சியின், ஏறக்குறைய அனைத்துத் தலைவர்களையும், மத்திய தனிச் சிறப்பு நடுவர்கள் குழு, இரு குற்றக் கணிப்புக் கூறுகளின் கீழ், அரச துரோகம் செய்ததாகத் தீர்ப்பளித்தது.

குற்றத் தீர்ப்பின் முதலாவது குற்றக் கணிப்புக் கூறின்படி, சோசலிசத் தொழிலாளர் கட்சி ''அரசாங்கத்தை வன்முறை மற்றும் பலாத்காரம் கொண்டு கவிழ்க்கும் சதியைத் தயாரித்தது'' எனக் குற்றம் சாட்டியது. இரண்டாவது குற்றக்கணிப்புக் கூறு, இதற்கு முந்திய வருடத்தில் நிறைவேற்றப்பட்ட சிமித் சட்டத்தின் அடிப்படையில் சோசலிசத் தொழிலாளர் கட்சி ''ஆயுதப் படைகளுள் கீழ்படியாமையைத் தூண்டிவிட்டதோடு, ஐக்கிய அமெரிக்க அரசுகளை வன்முறை மூலம் கவிழ்க்க'', வாதிடுவதாகவும் குற்றம் சுமத்தியது.

அரசாங்கம் தொடுத்த வழக்கை ஸ்ராலினிஸ்டுகள் மிகவும் உற்சாகத்தோடு வரவேற்றார்கள். இந்த வழக்கு சோசலிசத் தொழிலாளர் கட்சியைச் சட்டம் கொண்டு சிரச்சேதம் செய்துவிட மிரட்டல் விட்டது. இதனால் கனனும் அவரது சக பிரதிவாதிகளும் வருடக் கணக்கில் சிறைப்படுத்தப் படக்கூடிய சாத்தியக்கூறை எதிர் கொண்டனர்.

நீதிமன்ற விசாரணை அக்டோபர் 27, 1941 இல் ஆரம்பித்தது. அது பேழ் (PEARL) துறைமுகத்தின் மேல் ஜப்பானியத் தாக்குதல் நடந்த, மற்றும் ஜனாதிபதி ரூஸ்வெல்ட் ஜப்பானின் மேல் யுத்தப் பிரகடனம் செய்த மறுநாள் -டிசம்பர் 8, 1941 இல் முடிவடைந்தது. கனன் சாட்சிக் கூண்டில் நவம்பர் 18 முதல் நவம்பர் 21 வரை ஏற்றப்பட்டார். இந்த நாட்களில் வழக்கு விசாரணை அதன் உச்சக் கட்டத்தை அடைந்தது. சோசலிசத் தொழிலாளர் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், மினியாபொலிஸ் வழக்கில் கனனின் சக பிரதிவாதியுமான அல்பேட் கோல்ட்மன், பிரதிவாதிகளின் வழக்குரைஞராகச் செயற்பட்டார். கனன் பிரதிவாதிகளின் வழக்குரைஞரான அல்பேல்ட் கோல்ட்மனின் கேள்விகளுக்கும், அரசாங்கத் தரப்பு வழக்குரைஞரான ஷீவின்ஹோற்றின் (Schweinhaut) கேள்விகளுக்கும் பதிலளித்தார். அப்பொழுது அவர், ஏகாதிபத்திய யுத்தத்திற்கு எதிரான சோசலிச தொழிலாளர் கட்சியின் புரட்சிகர எதிர்ப்பு வேலைத்திட்டத்தைத் தற்காத்தார். அவரது சாட்சியம், மார்க்சிசத்தினதும், அதன் புரட்சிகர முன்னோக்கினதும் தத்துவார்த்த மற்றும் அரசியல் அத்திவாரங்களின் ஒரு சுருக்கமான தொகுப்புரையாக அமைந்தது.

கனன், சோசலிசத் தொழிலாளர் கட்சியை சட்ட விரோதமாக்கப் போவதாக மிரட்டிய அரசாங்கத்தின் குற்றச்சாட்டுக்களை மறுத்தார். அதேநேரத்தில் அவர், ஏகாதிபத்திய யுத்தத்திற்கு கட்சியின் எதிர்ப்பை உறுதியாகப் பேணிக் காத்தபடி, அதன் சோசலிசப் புரட்சிக்கான வேலைத் திட்டத்தைப் பாதுகாத்தார். விசாரணைக் கூண்டில் சோசலிசம் (Socialism on Trail) என்ற தலைப்பிடப்பட்ட ஒரு சிற்றேடாக அவரது இந்தச் சாட்சியம் வெளியிடப்பட்டது. இச் சிற்றேடு நான்காம் அகிலத்தின் அடிப்படைப் பாடப் புத்தகமாக மாறியதோடு, உலகம் எங்கும் இருந்த அதன் காரியாளர்களால் வாசிக்கப்பட்டது.

குற்றம் சுமத்தப்பட்டவர்களில் பதினெட்டுப் பேருக்கு எதிராக, இரண்டாவது குற்றக்கணிப்புக் கூறின் கீழ், குற்றவாளிகள் என்ற தீர்ப்பு வழங்கப்பட்டு, அவர்களுக்கு ஒன்றரை வருடங்கள் வரை சிறைத் தண்டனைகள் விதிக்கப்பட்டன. குற்றம் சுமத்தப்பட்ட இவர்களின் மேல் முறையீடுகள் இறுதியில் மறுக்கப்பட்டன. கனன் ஜனவரி 1, 1944 இல் சிறை சென்றார். அதன் பின்னர் அவர், ஒரு வருடத்திலும் சிறிது அதிகமான காலத்தின்பின் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.

ஸ்ராலினிஸ்டுகளால் வழிநடத்தப்பட்ட யுத்த ஆதரவு மற்றும் ரூஸ்வெல்ட் ஆதரவு ''பாசிச எதிர்ப்பு'' மக்கள் முன்னணியை நிராகரித்த ஒரே ஒரு தொழிலாள வர்க்கக் கட்சி சோசலிசத் தொழிலாளர் கட்சியாகும். இதன் காரணமாக ஐக்கிய அமெரிக்க அரசுகளில், இரண்டாம் உலக யுத்தத்தின் பொழுது தொழிலாள வர்க்க இயக்கத்தினுள் சிறையிடப்பட்ட ஒரே ஒரு அரசியல் போக்காகச் சோசலிசத் தொழிலாளர் கட்சி இருந்தது.

மினியாப்பொலிஸ் நீதிமன்ற விசாரணை நடந்து நாற்பத்தைந்து வருடங்களின் பின், சோசலிசத் தொழிலாளர் கட்சி எடுத்த நிலைப்பாடு ''மிகப் பெருமளவில் ட்ரொட்ஸ்கிசம் காட்டிக் கொடுக்கப்பட்டமை'' என மைக் பண்டாவால் கண்டனம் செய்யப்படுகின்றது, இதில்:

அரைப் பாதுகாப்புக் கொள்கைக்காக.... புரட்சிகரத் தோற்கடிப்பு வாதத்தின் மூலோபாயம் மற்றும் தந்திரோபாயம் என்பன கனனால் வெட்கமின்றிக் கைவிடப்பட்டன. இந்தக் குற்றவியல் தனமான காட்டிக் கொடுப்பை சர்வதேச செயற் குழுவும், சர்வதேச செயலாளர் குழுமமும் அங்கீகரித்தன. இதை ஜி. முனிஸ் (G.Munis) மட்டுமே சவால் விட்டார்.

கனனின் அரசியல் கோழைத்தனம் மற்றும் அவர் ஐக்கிய அமெரிக்க அரசுகளின் பின்தங்கிய தொழிலாள வர்க்கப் பகுதிகளுக்கு அடிபணிந்தமை, பிரிட்டனில் உள்ள தொழிலாளர் சர்வதேசக் கழகத்தின் - புரட்சிக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அதன் நடைமுறைக்கான ஒரு மாதிரியாக மாறியது. கனனின் ''விசாரணைக் கூண்டில் சோசலிசம்'' என்ற புத்தகம் உலக டிராட்ஸ்கிஸ்டுகளின் திருமறை நூலாகவும், யுத்தத்திற்குப் பின்னர் மேலும் டிராட்ஸ்கிசத்தை திரித்தல்கள் செய்வதற்கான அடிப்படையாகவும் மாறியது.

மினியாபொலிஸ் நீதிமன்ற விசாரணையில் சோசலிசத் தொழிலாளர் கட்சி கடைப்பிடித்த நிலைப்பாட்டை இப்படிக் கோரமாகக் கண்டனம் செய்வதன் மூலம் பண்டா அனைத்துலகக் குழுவைப் புதைக்க வேண்டும் என்று அவர் விட்ட அறைகூவலை ஏற்புடையதாக்க நாடுகின்றார். பண்டாவின்படி இந்த ''மிகப்பெரும் அளவில் ட்ரொட்ஸ்கிசம் காட்டிக் கொடுக்கப்பட்டமை'' - என்ற குற்றத்தை மன்னித்துக் குறைவாகக் காட்டக் கூடிய காரணிகள் எவையும் இருக்கவில்லை. இவை நான்காம் அகிலத்தினால் பேரழிவுமிக்க தவறுகளைத் தடுத்து நிறுத்த முடியாத ஒரு தொடரைத் தொடக்கி வைத்தன. பண்டா எழுதுவதன் படி:

நான்காம் அகிலத்தினுள் சோசலிசத் தொழிலாளர் கட்சிக்கு இருந்த பிரமாண்டமான செல்வாக்கானது, ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் அது அழிவுகரமானது என்பதை நிரூபித்தது. யுத்தத்தின் பொழுது, சோசலிசத் தொழிலாளர் கட்சிக்கு இணையான முறையில் நான்காம் அகிலத்தின் பல பகுதிகள் இடைநிலைவாதக் (மத்தியவாதம்) கொள்கைகளைத் தமதாக்கிக் கொண்டன- இது ஐரோப்பாவில் இடைநிலைவாதக் கட்சிகள் மற்றும் குழுக்களுக்கு நெகிழ்ந்து மாற்றியமைத்துக் கொள்வதற்கு ஊக்கமளித்தது. இது கனனின் நெருங்கிய பின்பற்றாளரும், அவரை மெச்சுபவருமான ஹீலியை, உண்மையில் சர்வதேசத் தொழிலாளர் கழகத்திலிருந்து விட்டு விலகி, ஃபென்னர் புரொக்வேயுடன் (Fenner Brokway இப்பொழுது பிரபு) ஒன்றாக இணைவதை முன்வைக்கச் செய்தது. இது ஐரோப்பாவில் நான்காம் அகிலத்தின் பகுதிகளை பாசிச எதிர்ப்புப் போர் இயக்கத்தில் பங்குகொள்ளாது ஒதுங்கி இருக்கச் செய்ததோடு அவற்றைப் புரட்சிகர தோற்கடிப்புவாத நிலைப்பாட்டை முன்வைக்கும் போராட்டத்தில் ஒரு சிறிய பங்கை அல்லது எந்தவொரு பங்கையும் வகிக்காதிருக்கச் செய்தது.

சோசலிசத் தொழிலாளர் கட்சி மினியாப்பொலிசில் செய்த ''குற்றவியல் தனமான காட்டிக் கொடுப்பை'' பண்டா கண்டனம் செய்வதை வாசித்தபின், தகவல் தெரியாத வாசகர் ஒருவர், கனன் நீதிமன்றத்திற்கு வரும்பொழுது ஐக்கிய அமெரிக்க அரசுகளின் நட்சத்திரங்களும், பட்டை வரிகளையும் கொண்ட கொடியை அசைத்த வண்ணமும், சோசலிசத்திற்கும் தனக்கும் தொடர்பில்லை என்று கூறியவண்ணமும், யுத்தம் நடக்கும் காலப் பகுதியில் வேலை நிறுத்தம் தொடுப்பதில்லை என்று அமெரிக்கத் தொழிலாளர் இயக்கம் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று அழைப்பு விட்டபடியும், யுத்த முயற்சிக்கு உதவி அளிக்க வெற்றிக்கடன் பத்திரங்களை விற்க முன்வந்தார் என்றும் எண்ணுவராயின், அவரைக் குறைகூற முடியாது. ''மிகப்பெரும் அளவில் ட்ரொட்ஸ்கிசம் காட்டிக் கொடுக்கப்பட்டமை'' ஏன் கனனையும் மற்றும் சோசலிசத் தொழிலாளர் கட்சியின் 17 தலைவர்களையும் உறுப்பினர்களையும், அமெரிக்க ஏகாதிபத்தியம் சிறையிடுவதில் கொண்டு சென்று விட்டது என்பதற்கான விளக்கத்தை வாசகரால் தெரிந்து கொள்ள இயலாது போயிருக்கும்.

சோசலிசத் தொழிலாளர் கட்சி ''குற்றவியல்தனமான காட்டிக் கொடுப்பைச்'' செய்த குற்றவாளி என்று குற்றம் சுமத்துவது, வார்த்தைகள் கவலையுடன் கவனிக்கத்தக்கதாய் எடுத்துக் கொள்ளப்படுமாயின், சமூக வெறிக்கு அது அடிபணிந்து ஏகாதிபத்திய யுத்தத்தை ஆதரித்தது என்பதைத் தவிர வேறெந்த ஒரு அரசியல் பொருளையும் அதற்குக் கொடுக்க முடியாது. இரண்டாம் உலக யுத்தத்தின் பொழுது சோசலிசத் தொழிலாளர் கட்சியைப் பொறுத்தவரை இந்தக் குற்றச்சாட்டு அப்பட்டமாகப் பொய்யானதாகும்.

பண்டாவின் பொய்மைப்படுத்தல்களின் மிகப்பெரும் பகுதி நீண்ட காலத்திற்கு முன்னர் உயிர்நீத்த நான்காம் அகிலத்தின் எதிரிகளின் பழைய குற்றச்சாட்டுகளில் இருந்து எடுக்கப்பட்டவையாகும். தோலின் கீழ் புதைந்து கிடந்து இற்றுக் கொண்டிருக்கும் குண்டின் துகள்கள், மெதுவாக மேல் பரப்பிற்குக் கசிவதுபோல, பழைய திரிபுவாத மற்றும் குறுங்குழுவாத தத்துவார்த்த விவாதத்துகள்கள் வருடக் கணக்கில் பண்டாவின் மூளையினுள் புரைத்துச் சீழ்க்கொண்டு, இப்பொழுது வெளியே பித்துக் கொள்ளித்தனமான மற்றும் விசித்திர கற்பனைக் கதம்பமான வடிவங்களில் அவற்றை வெளியே பீச்சுகின்றது.

மினியாப்பொலிஸ் விசாரணைகளுக்கு எதிராகப் பண்டா தொடுத்துள்ள தூற்றுதலின் ஊற்றுக்கால், 1942ம் ஆண்டில் ஸ்பானிய ட்ரொட்ஸ்கிஸ்டான கிராண்டிசோ முனிஸ் எழுதிய பத்திரமாகும். இவர் ஸ்பானிய புரட்சியின் தோல்வியின் பின் மெக்சிக்கோவிற்கு குடிபெயர்ந்த ஸ்பானிய ட்ரொஸ்கிஸ்டாவார். இப்பத்திரத்திற்குக் கனன் விரிவான பதிலைக் கொடுத்தார். அப்பொழுது கனன் இப்பத்திரத்தின் உள்ளடக்கம் அதிதீவிர இடதுசாரித்தன்மை மற்றும் குறுங்குழுவாத தன்மை கொண்டது என்பதை அம்பலப்படுத்தினார். முனிசின் விமர்சனங்களும் அவற்றிற்குக் கனனின் பதிலும் நான்காம் அகிலத்துக்குள் விநியோகிக்கப்பட்டிருந்தன.

சோசலிசத் தொழிலாளர் கட்சித் தலைமையின் நிலைப்பாட்டிற்கு, நான்காம் அகிலத்தின் காரியாளர்களிடம் இருந்து திணற வைக்கும் அளவிற்கு ஆதரவு கிடைத்தது. கனனுடைய வாதங்கள் எவ்வளவோ ஆற்றல் வாய்ந்தனவாக இருந்ததினால் முனிசின் வாதங்களைக் கொக்கிரான்வாதிகள் கூட பயன்படுத்த முயற்சிக்கவில்லை. இதை, முனிஸ் 1953ம் ஆண்டின் தறுவாயில் ஒரு அரச முதலாளித்துவவாத (State capitalist) நிலைப்பாட்டைக் கடைப் பிடித்ததுடன் அவர் நான்காம் அகிலத்தை விட்டுச் சென்றதைக் கொண்டு, சிலவேளை விளக்கம் கொடுக்க முடியும். ஒரு திரட்டுவாதி என்றபடியால், பண்டா தான் குறிப்பிடும் மற்றும் தான் அடிப்படையாகக் கொண்டு முடிவுகளுக்கு வரும் வரலாற்றுச் சம்பவங்களின் மேற்பரப்பின் மேல், வெறும் மேலோட்டமாகச் செல்லுகின்றார். அவர், எவர் ஒருவராவது வரலாற்று நிலைச்சான்றுகளை ஆராய அக்கறை கொண்டு, ஒவ்வொரு குறிப்பிட்ட சர்ச்சையையும் அதன் அரசியல் தோற்றுவாய் மற்றும் அதன் சூழமைவில் படிக்க அக்கறை கொள்ளமாட்டார் என்று எண்ணிக் கொள்ளுகின்றார்.

புரட்சிகரப் போராட்டத்திற்குப் பாதையைத் தேடும் தொழிலாளர்களினால் பண்டாவின் இழிதரமான உழைப்பை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் அவர், தொழிலாளர்களை சரியானதென்று ஏற்றுக்கொள்ளச் செய்யவோ, அல்லது அவர்களுக்கு கல்வியறிவு ஊட்டுவதற்காகவோ எழுதவில்லை. அடக்க முடியாது அவர் ஆசை கொள்ளும் அவரது கூற்றை செவிமடுப்போர் யாரென்றால், நெஞ்சுறுதியிழந்த மற்றும் வர்க்க நிலையிழந்த குட்டி முதலாளித்துவ மிதவாதிகளும், மற்றும் உதிரிப்பாட்டாளி வர்க்க புத்திஜீவிகளுமாவர். இவர்கள் பண்டா உண்மையைக் கூறுகின்றாரா அல்லது இல்லையா என்பதைப் பற்றி அக்கறை கொள்ளாதவர்கள். இவர்கள், தாம் நான்காம் அகிலத்தை விட்டோடியதை நியாயப்படுத்தத் தேவையான வாதங்களை வாங்கத் தேடிக்கொண்டு இருப்பவர்களாவர். இப்படியானவர்களைப் பொறுத்தவரையில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்கு எதிராகத் தொடுக்கப்படும் வாதங்கள் நியாய பூர்வமானவை ஆகும். அவை ''கலந்துரையாடலுக்குரிய'' விடயங்களுமாகும். நிச்சயமாக அவர்கள் ''கலந்துரையாடல்'' பற்றிக் கொண்டுள்ள கருத்து, விசித்திரமானதாகும். ஏனென்றால் வரலாற்று நிலைச்சான்றுகள் மற்றும் சவால் விட முடியாத உண்மைகளைப் பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லாதது மட்டு மல்லாது, இவற்றை அடிப்படையாகக் கொண்ட வாதங்களினால் அவர்களை மனத்தோடு ஏற்கச் செய்யவும் முடியாது.

சோசலிசத் தொழிலாளர் கட்சியை அது ''குற்றவியல்தனமான காட்டிக் கொடுப்பை'' செய்ததாகச் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு, தனிய கனனின் மேல் தொடுக்கப்பட்ட தாக்குதல் மட்டுமன்றி, ட்ரொட்ஸ்கியின் மேல் தொடுக்கப்பட்ட தாக்குதலாகும். சோசலிசத் தொழிலாளர் கட்சி மினியாப்பொலிஸ் விசாரணையில் கடைப்பிடித்த பாதுகாப்புத் தந்திரோபாயங்கள், 1940ம் ஆண்டு கோடைக் காலத்தில் சோசலிசத் தொழிலாளர் கட்சியுடன் ட்ரொட்ஸ்கி நடாத்திய கலந்துரையாடலின் பொழுது, அவர் அபிவிருத்தி செய்த இராணுவக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டிருந்தன.

''மிகப்பெரும் அவசரத்துடன்'' தான் எழுதியதாகக் கூறும் முனிசின் விமர்சனம், 1942 ம் ஆண்டு ஜனவரி மாதத்தின் ஆரம்பப் பகுதியில் வெளியிடப்பட்டது. அதில் அவர், ''கனனும் அவரது சக பிரதிவாதிகளும் '',

தம்மைத் தாமே சுருக்கிக் கொண்டார்கள்; அவர்களுடைய கருத்துக்களின் புரட்சிகர முக்கியத்துவத்தைக் குறைத்துக் கொண்டார்கள்; பரந்த மக்களுக்குத் தாம் பேச வேண்டும் என்பதை மறந்து, நடுவர் குழுவின் (jury) மனங்களில் நன்மதிப்பைப் பதியச் செய்ய முயன்றனர். சில தருணங்களில் அவர்கள் கோட்பாடுகளை மறுதலிக்கும் கட்டத்தை எட்டுகின்றனர். முடிவுறும் பொழுது கோல்ட்மன் நடத்திய உரையில் உள்ள ஒரு சில நல்ல வார்த்தைகள், அவர் ஆற்றிய முதல் உரையிலும், கனனை விசாரித்த பொழுதும் ஏற்பட்ட வருந்தத்தக்க சாதகமற்ற எண்ணப்பதிவை இல்லாதாக்க முடியாது.

சோசலிசத் தொழிலாளர் கட்சியின் விசாரணையின் மூலோபாயத்திற்கு முனிஸ் கிளப்பிய எதிர்ப்பின் சாராம்சம் என்னவென்றால், கனனும், கோல்ட்மனும் அரசாங்கத்தின் குற்றச்சாட்டுக்களை மறுத்து, கட்சியின் சட்டரீதியான நிலைமையைத் தற்காத்துக் கொள்ள முயற்சித்தனர் என்பதாகும். சோசலிசத் தொழிலாளர் கட்சியை, அது நாசவேலையை நிராகரித்ததையும் அரசாங்கத்தைப் பலாத்காரம் கொண்டு கவிழ்க்க அழைப்புவிடத் தவறியதையும், முனிஸ் விமர்சித்தார். அவருடைய வாதங்கள் பொறுப்பு அற்றவையாகவும் வர்க்க நிலைப்பாட்டில் வேர் ஊன்றிய அரசியல் ஸ்திரமின்மையையும் வெளிப்படுத்தின. தனது தனிப்பட்ட உளச்சோர்வை வாய்ச்சவாடல் கொண்டு மூடிமறைக்க முயற்சிக்கும் குட்டி முதலாளித்துவ புத்திஜீவியின் மிகைப்படுத்தப்பட்ட தோற்ற நிலையின் மேல் நின்றவண்ணம் முனிஸ், ஏறக்குறைய ஓரு நூற்றாண்டாக மார்க்சிஸ்டுகள் முதலாளித்துவ நீதிமன்றங்களில் தற்காப்பிற்காக முறைப்படுத்திக் கூறியவற்றை நிராகரித்தார்.

விசாரணை முழுவதும், சோசலிசத் தொழிலாளர் கட்சி தனது நடவடிக்கைகள் தொழிலாள வர்க்கத்தைப் புரட்சிகரப் போராட்டத்திற்கு பிரச்சாரம் மற்றும் கிளர்ச்சி மூலம் தயார் செய்வதில்தான் அமைந்துள்ளது என்று வலியுறுத்தியது. அது சோசலிசத் தொழிலாளர் கட்சி செயற்கை ரீதியாக அதிருப்தியையோ அல்லது குழப்பத்தையோ உருவாக்கவில்லை என்று கூறியது. கனன் தனது சாட்சியத்தை:

சோசலிசத்திற்காக உந்துகின்ற நிஜமான புரட்சிகரக் காரணிகள், சோசலிசத்திற்காக நாடிச் செல்லுகின்ற நிஜமான சக்திகள் என்பன, முதலாளித்துவ அமைப்பிற்குள்ளேயே உள்ள முரண்பாடுகளாகும். நமது கிளர்ச்சி எதை ஆற்ற முடியும் என்றால் சமூகப் புரட்சிக்கான வழியில் எது சாத்தியமானது, மற்றும் எது நிகழக் கூடியது என்பதைத் தத்துவார்த்த ரீதியில் முன்காண முடியும்; அதற்காக மக்களுடையை மனங்களைத் தயாரிக்க முடியும்; அதன் தேவையைப¢ புரியச் செய்து ஏற்கவைக்க முடியும்; அதை தீவிரப்படுத்த அவர்களை அணிதிரளச் செய்ய முடியும்; அத்தோடு மிகவும் சிக்கனமான மற்றும் கை கூடும் முறையில் அதனைக் கொண்டுவர முடியும். இதை மட்டும்தான் கிளர்ச்சியால் செய்ய முடியும்.

இப்படியான அறிக்கைகள் முனிசை சினந¢தெழச் செய்தன. ஏனென்றால் அவர், விசாரணைக் கூண்டில் நிற்கும் ஒரு புரட்சியாளனின் முதற்கடமை, உதிரத்தை உறையச் செய்யும் பேச்சுத்திறன் மூலம் நீதிமன்றத்தின் சுவர்களை அதிரவைப்பதே என்று உறுதியாக நம்பினார். கோல்ட்மனுக்கும் கனனுக்கும் இடையில் ஏற்பட்ட பின்வரும் பரிமாற்றத்தை அவர் மேற்கோள் காட்டினார்.

கோல்ட்மன்: ஐக்கிய அமெரிக்க அரசுகளில் தொழிலாளர்களும், விவசாயிகளும் தமது சொந்த அரசாங்கத்தை நிறுவி, தமது சொந்த முறைகளைக் கையாண்டு ஹிட்லரைத் தோற்கடிக்கும் வரை சோசலிசத் தொழிலாளர் கட்சியானது பெரும்பான்மை மக்களுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும்- அது அப்படியல்லவா?

கனன்: அவ்வளவுதான் நம்மால் செய்ய முடியும். அதை மட்டும்தான் நாம் செய்யப் போவதாகக் கூறுகின்றோம்.

இதற்கு முனிஸ் ''இவை எல்லாம் தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தின் அற்புதங்கள் பற்றிய சில சொற் பொழிவுகளுக்குப் பின், நாம் கையைக் கட்டிக் கொண்டு இது தானாகவே உருவாகிக் கொள்ளும் என்று இருப்பதற்குச் சமமாகும். அல்லது இது எந்தச் செப்படிவித்தை மூலம் உருவாக்கப்படும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும்'', என்று பதிலளித்தார்.

லெனினின் படைப்புகளின் திரட்டில் இருந்து அரசாங்க வழக்குரைஞர் ஷிவென்ஹொட் நீதிமன்றத்தில் வாசித்த வசனத்தைக் கனன் நிபந்தனையின்றி ஏற்றுக் கொள்ள மறுத்ததை, லெனினைக் கனன் ''நிராகரித்தார்'' என்று முனிஸ் கூறுவதன் மூலம், விசாரணை சம்பந்தமாக முனிசின் கிட்டத்தட்ட வலிப்பு நோயாளி போன்ற மிகை உணர்ச்சியான மனப்பான்மை நகைப்புக்குரிய முறையில் எடுத்துக் காட்டப்பட்டது.

''கிளர்ச்சி எழுச்சி ஏற்படும் நேரத்தில் சிவில் மற்றும் இராணுவ அதிகாரிகளின் தலைவர்களை ஈவிரக்கமின்றித் துடைத்துக் கட்டுவது நமது கடமையாகும்.....``.

நீங்கள் இதோடு உடன்படவில்லையா?

கனன்: ஆம். எனக்கு இது தெரியாது. இது எந்த ஒருமுறையிலும் நமது கட்சியின் கொள்கை பற்றிய கூற்று என்று...... யாரையும் துடைத்துக்கட்டுவதுடன் நாம் உடன்படவில்லை. அது ஆயுதப் போராட்டமாக உண்மையில் இருக்கும் பட்சத்தில், யுத்தத்தின் விதிகள் அப்பொழுது அதற்குப் பொருந்தும்.

கனன் ''அது ஆயுதப் போராட்டமாக இருக்கும் பட்சத்தில், யுத்தத்தின் விதிகள் அப்பொழுது அதற்குப் பொருந்தும்'' என்று விரைந்து திறமையுடன் விலக்கித் திருப்பிவிட்டது - முனிசிற்குப் போதுமான அளவு புரட்சிகரமாக இருக்கவில்லை. கருத்தைப் பெரிதும் கவரும் நிகழ்ச்சிகளின் கோவை பக்கம் இருக்கும் முனிசின் குட்டி முதலாளித்துவ ஈர்ப்பு, அரசாங்க வழக்குரைஞரைப் பார்த்து, சோசலிசத் தொழிலாளர் கட்சியின் அரசியல் குழு, மரணதண்டனையைச் சுட்டு நிறைவேற்றும் படைப்பிரிவின் முன்நிறுத்தப்பட இருக்கும் அரசாங்க அதிகாரிகளின் பட்டியலைத் தயாரித்து விட்டது, மற்றும் இந்த விசாரணைக்குப் பொறுப்பானவர்கள்தான் அப்படிச் சுவரின் முன்னால் வரிசையில் துப்பாக்கிகளின் வேட்டுகளை எதிர்கொள்ள நிறுத்தப்பட உள்ளனர், என கனன் அரசாங்க வழக்குரைஞரை எச்சரித்திருந்தால், முனிஸ் கூடுதலாகத் திருப்தியடைந்திருப்பார்!

கனன் மற்றும் கோல்ட்மன் சோசலிசப் புரட்சியானது எல்லாச் சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் வன்முறை ரீதியான வடிவத்தை எடுக்கும் என்று வெறுமனே முன்மதிப்பிட்டு உரைக்க முடிந்ததை முனிஸ் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கருதினார். ''முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிராக வருந்திய வண்ணம் பலாத்காரத்தைப் பயன்படுத்த நாம் இசைய வேண்டிய நிலையில் நம்மை நாம் காண்பதையிட்டு, ஏன் நாம் பொறுத்து அருளும்படி கேட்கக்கூடாது'' என்று முனிஸ் வசைப்பாங்குடன் எழுதினார்.

முனிசிற்குப் பதிலளிக்கையில் கனன், 1917 இல் லெனின் எழுதியவற்றை மேற்கோள் காட்டிச் சோசலிசத் தொழிலாளர் கட்சி விசாரணையின் பொழுது கடைப்பிடித்த வழிமுறையானது ''பொறுமையாகத்'' தொழிலாள வர்க்கத்திற்குக் கட்சியின் வேலைத்திட்டத்தை ''விளக்கும்'' கொள்கையை அடிப்படையாகக் கொண்டிருந்தது என்பதை நிரூபித்துக் காட்டினார். அத்தோடு அவர் போல்ஷேவிக்குகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் தறுவாயில் இருந்திருந்த நிலைக்கும், 1941 இல் சோசலிசத் தொழிலாளர் கட்சி அமெரிக்கத் தொழிலாளர் இயக்கத்தினுள் வகுத்திருந்த நிலைபற்றியும், முனிஸ் கவனிக்கத் தவறியிருக்கும் பட்சத்தில், அவை மிகவும் வேறுபட்டவை என்பதையும் சுட்டிக் காட்டினார்.

``பரந்த அடித்தளம் ஒன்று இல்லாத கட்சி இன்னமும் தொழிலாளர்கள் மத்தியில் பரந்தளவில் அறியப்பட இருக்கும் ஒரு கட்சி, தொழிலாளர்களை பிரச்சாரப் பாதையில் மற்றும் பொறுமையான விளக்கங்களுடன் அணுகவேண்டும். அதனால் ஒழுங்கமைக்க முடியாத ''நடவடிக்கைகளில்'' இறங்கவேண்டும் என்று பொறுமையிழந்து முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு அது எவ்வித கவனமும் செலுத்தக் கூடாது. அதே போல சில தரப்பட்ட நிலமைகளின் கீழ், அதற்குப் பாதகமாகக் கூடிய ''பாலத்காரத்தின்மேல்'' மிகைப்படுத்தப்பட்ட வலியுறுத்தல்களைப் பொருட்படுத்தக் கூடாது. எவ்வளவு விடாப்பிடியாகக் கவனமாக, ஏன் முன் எச்சரிக்கையாகக் கூட, ஆத்திர மூட்டல்களைத் தவிர்ப்பதற்காகச் சிறுபான்மையாக அது இருக்கும்வரை, லெனினது கட்சி ''சமாதான ரீதியாகப் பிரச்சாரம் செய்தல்'' என்னும் அதனது சூத்திரத்தை இறுகப் பற்றிக் கொண்டது. எமது கட்சி, இன்றைய நேரத்தில், இன்று அதற்கு இருக்கும் பலத்துடன் ''மேலும் துணிவான'' பாதையிற் செல்ல வேண்டும் என்பது, ஒரு கோரக் கனாக்காட்சி உயிர்துடிப்புள்ள நிலவும் நிலைமையிலிருந்து எப்படி வேறாகப் பிரிந்து நிற்கின்றதோ, அப்படி எல்லாவற்றையும் முற்றுமுழுதாகக் கற்பனையாகக் கொண்டுள்ளது. லெனின் எழுதுகையில்:

தீர்க்கமான நடவடிக்கைக்கான எதையும் பொருட்படுத்தாத முதல் நடவடிக்கையை நாம் எடுப்பதை அரசாங்கம் விரும்பும். ஏனென்றால் இது அதற்குச் சாதகமாக அமையும். எமது கட்சி சமாதான ஆர்ப்பாட்டம் என்ற முழக்கத்தை முன் வைத்துள்ளதைக் கண்டு அது எரிச்சலூட்டப்பட்டுள்ளது. பார்த்துக் கொண்டு காத்திருக்கும் குட்டி முதலாளித்துவ வர்க்கத்திற்கு நாம் இம்மியளவும் எமது கோட்பாடுகளை விட்டுக் கொடுக்கக்கூடாது. இயக்க ரீதியாகக் கூட்டிணைப்புத் தேவைப்படும் இடத்தில், அகநிலைரீதியான விருப்பங்களின் அடிப்படையில் அது அதன் கொள்கைகளை வடிவமைத்துக் கொள்ளுமாயின் பெரும் தீங்கை விளைவிக்கக்கூடிய தவறைச் செய்த குற்றத்திற்கு பாட்டாளி வர்க்கக் கட்சி உள்ளாகும். பெரும்பான்மையினர் நம்முடன் உள்ளனர் என்று உறுதியுறக் கூறிவிட முடியாது: இந்த விடயத்தில் நாம் கடைப்பிடிக்கும் பொன்மொழி எதுவாக இருக்க வேண்டும் என்றால்: எச்சரிக்கையாக இருத்தல், எச்சரிக்கையாக இருத்தல், எச்சரிக்கையாக இருத்தல், என்பதாகும்''. (லெனின் தொகுப்பு நூல்கள், தொகுப்பு xx, நூல்1, பக்கம் 279)

முன் கூறியவற்றிலிருந்து, நாம் பாலாத்காரத்திற்கான ''பொறுப்பை'' மினியாப்பொலிசிலுள்ள நீதிமன்றத்தின் முன்னாலான வாக்குமூலத்தில் ஒப்புக் கொள்ள மறுத்தது " நடுவர் குழுவுடன் (jury) இணக்கம் காணுவதற்காக'' என்று குற்றம் சாட்டப்பட்டது போல, நாம் புதிதாகக் கண்டுபிடித்த சிறப்பான உத்தி ஒன்றல்ல. நமது இயக்கத்தின் அரசியல் நோக்கங்களுக்கு, குறிப்பிட்ட சூழ்நிலமைகளின் கீழ் சேவை செய்வதற்காகப் பிரச்சனையை வடிவமைப்பதை லெனினிடம் இருந்து நாம் எடுத்துள்ளோம். சட்ட ரீதியான தன்மையை நாம் உதாசீனப் படுத்தவில்லை; அப்படி நாம் செய்யவேண்டிய தேவையும் இல்லை. குற்றப் பத்திரிகையில் கூறியிருப்பதுபோல நாம் ''பலாத்காரத்திற்காக'' வாதிட வேண்டியதில்லை.

நாம் சமாதானவாதிகள் அல்ல. இது உலகிற்கு தெரியும். நமது விசாரணையில் அரசாங்கத் தரப்பு வழக்குரைஞர் மீண்டும் ஒரு தடவை, ட்ரொட்ஸ்கிஸ்டுகளால் வழிநடத்தப்பட்ட மாபெரும் மினியாப்பொலிஸ் வேலை நிறுத்தங்கள், பாலத்காரம் இல்லாது இருக்கவில்லை என்றும் இப்பலாத்காரத்திற்கு இரையானவர்கள் தொழிலாளர்கள் மட்டும் அல்ல என்றும், நாம் இந்நிலைச்சான்றுடன் தொடர்பில்லை என்று தட்டிக்கழிக்கவோ, அல்லது அதற்காக நாம் மன்னிப்புக் கோரவோ இல்லை.

தொழிலாளர்கள் வெற்றியுடன் வெளிவந்த வேலைநிறுத்தப் போர் ஒன்றைக் குறிப்பிட்டு: ''இது ட்ரொட்ஸ்கிசம் நடைமுறையில் தனது தன்மையை எடுத்துக் காட்டுகின்றதா?'' என்று கேட்டார். அதற்கு அவர் நேரடியான பதிலைப் பெற்றார். நீதிமன்றத்தின் பதிவேடு கூறுகின்றது.

பதில் : ஆம் என்னால் உங்களுக்கு எனது கருத்தைத் தெரிவிக்க முடியும், அப்படிப்பட்ட பலாத்காரத்திற்கு எதிராக தொழிலாளர்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதில் ட்ரொட்ஸ்கிசத்தின் செல்வாக்கிற்குச் சிறிது பங்கிருந்தது என்பதுபற்றி நான் மிகப் பெரியளவில் பெருமைப்படுகிறேன்.

கேள்வி : சரி, நீங்கள் எப்படிப்பட்ட பலாத்காரத்தை அர்த்தப்படுத்துகின்றீர்கள்?

பதில்: இதற்காகத்தான் -தொழிலாளர்களை வீதியிலிருந்து விரட்டுவதற்காகத்தான் போலீசார் அணியமைக்கப்பட்டுள்ளனர். அவர்களது சொந்த மருந்திலிருந்து அவர்கள் ஒரு விழுங்கு (Dose) மருந்தைப் பெற்றனர். அப்படிப் பட்ட பலாத்காரத்தில் இருந்து தம்மைத் தற்காத்துக்கொள்ள தொழிலாளர்களுக்கு உரிமையுண்டு என்று நான் கருதுகிறேன். இது அரச துரோகம் என்றால், அதை எவ்வளவு அதிகமாகப் பயன்படுத்த முடியுமோ, அவ்வளவுக்கு நீங்கள் அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

கனன், பிரச்சாரம் மற்றும் கிளர்ச்சிகளின் எல்லைகளைக் கடந்து யுத்த முயற்சிகளைத் தடுக்கக் கட்சி முயற்சிக்காது என்று வலியுறுத்தி வந்ததினால், முனிஸ், மீண்டும், மீண்டும் கனனைத் தாக்கினார். குறிப்பாக அவர், கனனின் பின்வரும் அறிக்கையை ஆட்சேபனைக்கு உரியதாகக் கண்டார்:

ஆம், நாம் ஒரு சிறுபான்மையாக இருக்கும்வரை, எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்திற்கு கட்டுப்படுவதை விடத் தேர்ந்தெடுப்பதற்கு வேறு ஒன்றும் இல்லை. ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மை மக்களால் யுத்தத்திற்குச் செல்வது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. நமது தோழர்கள் அதனுடன் இசைந்துபோக வேண்டியுள்ளது. இராணுவத்தில் சேர்க்கப்படுவதற்கு அவர்கள் தகைமை உள்ளவர்களாக இருக்கும் வரை, அவர்கள் அதை அவர்களது தலைமுறையின் ஏனையோருடன் ஏற்றுச் சென்று, அவர்களின்மேல் திணிக்கப்பட்டுள்ள கடமையைச் செய்ய வேண்டும். பெரும்பான்மையினரை வேறுபட்ட கொள்கை ஒன்றை சரியென ஏற்றுக்கொள்ளச் செய்யும் வரை, இதனை அவர்கள் செய்ய வேண்டியவர்களாக உள்ளனர்.

யுத்தத்திற்கு செல்ல மக்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளது (''கனன் ரூஸ்வெல்ட் தீர்மானத்தை, அது ஏதோ உண்மையில் பெரும்பான்மை மக்களுடன் ஒத்துப்போவது போல'') என்று, சோசலிசத் தொழிலாளர் கட்சியின் தலைவர் கூறியுள்ளார் என்ற கருத்தை, முதலில் கனனைத் தப்பாக மேற்கோள்காட்டி முன்வைக்க முயன்றதன் பின், முனிஸ்:

ஆம், நாம் யுத்தத்திற்கு கீழ்ப்படிகின்றோம். நமது போராளிகள் யுத்தத்திற்குச் செல்லுகின்றார்கள். ஆனால் அவர்கள் அப்படிச் செய்வது, அது பெரும்பான்மையின் தீர்மானம் என்பதினால் அல்ல, ஆனால் அது எம்மேல் முதலாளித்துவ சமுதாயத்தினால் எப்படி கூலிச் சுரண்டல் திணிக்கப்படுகின்றதோ, அப்படி முதலாளித்துவ சமுதாயத்தின் பலாத்காரத்தால் எம்மேல் திணிக்கப்படுகின்றது. தொழிற்சாலையில் எப்படி ஆலை முதலாளிக்கு எதிராகப் போராடுகின்றோமோ, அதேபோல முதலாளித்துவ அமைப்பிற்கு எதிரான பொதுவான போராட்டத்தின் ஒரு செயற்பாடாக, நாம் யுத்தத்திற்கு எதிராகவும், அதை உண்டுபண்ணும் அமைப்பிற்கு எதிராகவும் போராட ஏற்படும் அனைத்து சந்தர்ப்பங்களையும் நமக்கு நாம் சாதகமாக்கிக் கொள்ளவேண்டும். என்று வாதிட்டார்.

இவையெல்லாம் குட்டி முதலாளித்துவ அராஜகக் குப்பை கூளமாகும். பலாத்காரத்தின் காரணமாகப் புரட்சியாளர்கள் யுத்தத்திற்குக் ''கீழ்படிகின்றார்கள்'' என்பது, உண்மையில் ஒரு கோழைத் தனமான நிலைப்பாடாகும். புரட்சியாளர்கள் ஆளும் வர்க்கத்தின் பலாத்காரத்திற்கு அஞ்சி யுத்தத்திற்குக் கீழ்ப்படிவதில்லை. ஆனால் ஏகாதிபத்திய யுத்தத்திற்கு எதிரான அவர்களது எதிர்ப்பு, முதலாளித்துவத்திற்கு எதிராகத் தொழிலாள வர்க்கத்தைப் புரட்சிகர வழிகளில் அணிதிரட்டத் தொடுக்கப்படும் போராட்டத்தினூடு அது வெளிப்படுத்தப்படுகின்றது. மார்க்சிஸ்டுகள் யுத்தத்திற்கு எதிராக நிஜமான பரந்த மக்களின் புரட்சிகரப் பேராட்டங்களுக்காக, தனிப்பட்ட ரீதியான வெடித்தெழல்களை எதிர்க்கின்றார்கள். இக்காரணத்தினால் புறநிலை ரீதியான நிலைமைகளும், கட்சியின் கிளர்ச்சியும் ஏகாதிபத்திய யுத்தத்தை ஒரு உள்நாட்டு யுத்தமாக மாற்றும்வரை - மார்க்சிஸ்டுகள் தமது தலைமுறையினருடன் யுத்தத்திற்குச் செல்ல வேண்டும். நாச வேலைக்கு, மார்க்சிஸ்டுகளின் எதிர்ப்பின் அரசியல் அடித்தளம் இதுவாகும். இது தனிநபர் பயங்கரவாதத்திற்கு மார்க்சிஸ்டுகளின் பொதுவான எதிர்ப்பின் ஒரு சிறப்பு வடிவமாகும்.

மினியாப்பொலிசில் சோசலிசத் தொழிலாளர் கட்சியின் தலைவர்கள், ''அமெரிக்க முதலாளித்துவ வர்க்கமே, உனது சமுதாயத்தின் பலாத்காரம், ஆயுதங்களின் ஜட ரீதியான பலாத்காரத்தை எம்மேல் திணிப்பதால், நாம் உனது யுத்தத்திற்குக் கீழ்ப்படிகின்றோம்''. என்று முனிசின் கூற்றிற்கு ஏற்ப பிரகடனப்படுத்தியிருக்க வேண்டும். கனன் இதற்கு பதிலளித்தார்:

இது சரியானது அல்ல. இது அப்படியாயின், தனிப்பட்ட ரீதியில் எதிர்ப்பதை நாம் கண்டிப்பதற்கு நமக்கு உரிமை இல்லை. அவர்களது சோசலிசக் கருத்துக்களினாலும், நடவடிக்கைகளினாலும், போர்க்குணம் மிக்க தொழிலாளர்கள் பாசிச சிறைகளிலும், சித்திரவதை முகாம்களிலும் சிறைப்படுத்தப்பட்டிருப்பதற்கு அவர்கள் விட்டுக்கொடுத்திருப்பது "ஆயுதங்களின் ஜடரீதியான பலாத்காரத்தின் நிர்ப்பந்தத்திற்கு" ஊடாகவேயாகும். எனவே, தனிநபர்கள், அல்லது சிறு குழுக்கள் விட்டோடச் சாதகமான நிலைமைகள் தோன்றும் பொழுதெல்லாம், இந்நடவடிக்கை சம்பந்தமாக பெரும்பான்மைச் சிறைக் கைதிகளுக்குக் காத்திருக்காதும், ஏன் அவர்களுடன் ஆலோசிக்காதும், தப்பிச்செல்ல ஊக்குவிக்கப்படுகின்றனர். மற்றும் உதவியும் அளிக்கப்படுகின்றனர். இப்படிப்பட்ட தனிப்பட்ட விட்டோடல்களினால் புரட்சிகர இயக்கம் பலன் பெறுகின்றது. ஏனென்றால் இவற்றினால் சிறையுள் பெருமளவு துண்டிக்கப்பட்டுள்ள சிறைக் கைதியின் புரட்சிகர செயலாற்றலை மீண்டும் அதன் முன்னைய நிலைக்குக் கொண்டுவர முடிகின்றது. உதாரணத்திற்குப் புரட்சியாளர்களின் விமர்சனங்களுக்கு உள்ளாகாது ட்ரொட்ஸ்கி இரு தடவைகள் சைபீரியாவிலிருந்து ''தப்பி ஓடினார்''.

யுத்தத்தில் கட்டாய இராணுவ சேவை என்பது முற்றிலும் வேறுபட்ட விடயமாகும். இந்த விடயத்தில் செயலூக்கத்துடன் அல்லது செயலற்ற நிலையில் யுத்தத்தை ஆதரிக்கும் பெரும்பான்மைத் தொழிலாளர்களுக்குதான் நாம் பிரதானமாக விட்டுக் கொடுக்கின்றோம். ஏனென்றால் நாம் நமது சோசலிச இலக்குகளைப் பெரும்பான்மையினர் இல்லாது அடைய முடியாது. நாம் அவர்களுடன் கூடச் செல்லவேண்டும், அவர்களது கஷ்டங்களிலும் இன்னல்களிலும் பங்கு கொள்ளவேண்டும். பொதுவான அனுபவங்களின் அடிப்படையில் பிரச்சாரத்தின் மூலம் நாம் அவர்களை நம்பக்கம் வென்றெடுக்கவேண்டும். இப்படியான நிலைமைகளினுள் இராணுவ சேவையை ஏற்றுக் கொள்வது ஒரு புரட்சிகரத் தேவையாகும்.

சோசலிசத் தொழிலாளர் கட்சி நாசவேலை செய்வதை நிராகரித்ததற்கு முனிஸ் வன்மையாகத் தனது எதிர்ப்பைத் தெரிவித்தார்; ''நாசவேலையும், தோற்கடிப்புவாதமும் ஏகாதிபத்திய யுத்தத்திற்கு எதிராகப் பரந்த மக்களின் பிரதிவிளைவின் இரு பிரதான கூறுகளாக ஒரு குறிப்பிட்ட ஒரு கட்டத்தில் ஒன்றாக ஐக்கியப்படும். கட்சியானது தன்னை யுத்தத்திற்கு எதிரான முடிவற்ற மலட்டு பேச்சினுள் பழிப்புக்கிடமான நிலையுள் தள்ளிவிடாது, தோற்கடிப்புவாதத்தை மறுதலிக்கக் கூடாதது மட்டுமல்லாது, அதனால் மறுதலிக்கவும் முடியாது''.

இரண்டாவது வசனத்தில் முனிஸ் நாசவேலையை, அதாவது ஒரு குறிப்பிட்ட தந்திரோபாயத்தை தோற்கடிப்புவாதத்துடன், அதாவது ஒரு பொதுக் கொள்கையுடன் எப்படித் திடீரென ஒன்றாகக் காட்டுகின்றார் என்பதை மிகவும் கவனமாகக் கவனித்துக்கொள்ளவும். இதன் மூலம் அவர் தோற்கடிப்பு வாதத்திலிருந்து நாசவேலையை எடுத்துவிட்டால், அது யுத்தத்திற்கு எதிரான முடிவற்ற மலட்டுப் பேச்சிற்கு சமமானது என்று முன் வைக்கின்றார். அவர் தொடருகையில்:

விசாரணையில் இருந்து ஒருவர் உள்ளுணரக் கூடியதாக இருப்பது என்னவென்றால், நடுவர் குழுவிற்கு (jury) சிறப்பாக ஏதோ ஒன்றைக் கூறிய பிரச்சனை அல்ல என்பதே எனக்கு மேலும் வருந்தத்தக்கதாக தோன்றுகின்றது. சில தருணங்களில், பிரதிவாதிகள் நாசவேலை செய்வதை உண்மையில் ஒரு குற்றமாகக் கருதுகின்றார்கள், என்பதற்கு ஆதாரம் உண்டு. தப்பாக நான் கொள்ளப்படாவிட்டால் -நான் நம்புகின்றேன், நான் தப்பாகக் கொள்ளப்படமாட்டேன் என்று- இது ஒரு அபாயகரமான முன்பே எளிதில் ஆளாகும் ஒழுக்க நெறியாகும். ஏகாதிபத்திய யுத்தத்திற்கு எதிராகப் பரந்த மக்களின் எதிர்நடவடிக்கை நாசவேலையாகத்தான் அமையும். அதைப்பற்றி ஏன் வெட்கப்பட வேண்டும்? இன்றைய யுத்தம் என்னும் கோரக் குற்றத்திற்கு எதிராகப் பரந்த மக்கள் தாம் இயன்ற முறையில் செயற்பட்டால் அதைப் பற்றி ஏன் வெட்கப்பட வேண்டும்? இதை ஒரு கோட்பாடாகச் சரியானது என்று வாதிட்டு, இன்றைய யுத்தத்தின் தலைவர்களின் மேல் பொறுப்பை தூக்கி வீசமுடியும். யுத்தமானது முதலாளித்துவ வர்க்கத்தினால் பரந்த மக்களுக்கு எதிராகவும் மற்றும் நாகரிகத்திற்கும், மனித இனத்திற்கும் எதிரான இராட்சத நாச வேலையாக இருக்கும் பொழுது, பரந்த மக்களின் எதிர்கால நாசவேலையை, நம்மால் கண்டிக்க முடியுமா?. இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ளுவதற்குப் பதிலாக, நமது தோழர்கள் பேசுவதைக் கேட்ட தொழிலாளர்கள், அவர்கள் செல்லும் பொழுது நாசவேலைக்கு எதிரான தப்பெண்ணம் ஊட்டப்பட்டுச் சென்றிருப்பார்கள்.

பரந்துபட்ட புரட்சிகர நடைமுறை என்ன என்று புரிந்து கொள்ளாத விரக்தியடைந்த குட்டி முதலாளித்துவ மிதவாதியின் உண்மையான குரல் இதுவாகும். விசாரணையில் கிளப்பப்பட்ட பிரச்சனையானது தனிநபர் நாசவேலையாகும். இந்தத் தந்திரோபாயத்தை ''ஏகாதிபத்திய யுத்தத்திற்கு எதிரான பரந்த மக்களின் எதிர்ச்செயல்'' என்று புகழ்வது, முனிஸ் அராஜகவாதத்துடனான அவரது தத்துவார்த்த மற்றும் அரசியல் முறிவை ஒரு பொழுதும் முழுமை ஆக்கவில்லை என்பது அம்பலமாகின்றது. விசாரணைக் கூண்டிலிருந்து சோசலிசத் தொழிலாளர் கட்சியின் பிரதிவாதிகள்,'' உங்களது யுத்ததிற்கு எதிராக எல்லா வழிவகைகளையும் கையாண்டு போராடுவோம்'', என்று பிரகடனப்படுத்தி இருக்கவேண்டும், என்ற முனிசின் வலியுறுத்தலுக்குப் பதிலளிக்கையில், கனன் விளக்கினார்:

நாம் சிறுபான்மையாக இருக்கும் பொழுது, நாம் அரசியல் எதிர்ப்பு, விமர்சனம் மற்றும் தொழிலாளர் வேலைத் திட்டத்திற்கும், தொழிலாளர் அரசாங்கத்திற்குமான பிரச்சாரம் ஆகிய மார்க்சிச ஆயுதங்கள் கொண்டு போராடுவோம். சமாதானவாதிகள் தவிர்த்திருக்கும் வழிகள், அராஜவாதிகளின் தனிநபர் நாசவேலை என்னும் வழிகள், மற்றும் பிளாங்குவின்வாதிகளின் (Blanquist) சிறுபான்மையினரின் ஆயுதம் தாங்கிய கிளர்ச்சி எழுச்சி அல்லது திடீர் சதி எழுச்சி வழிகள் என்பனவற்றை நாம் நிராகரிக்கின்றோம்.

ஒரு சிறுபான்மையாக உள்ள புரட்சிகரக் கட்சி ஏன் யுத்தத்திற்குக் ''கீழ்ப்படிந்து'' செல்லுகின்றது என்பதற்கு முனிசின் பிரதான காரணம் பற்றிய தவறான விளக்கம், தொழிலாளர்களின் வளர்ச்சிக் கட்டத்தை விட்டுவிட்டுத் தாவிச் செல்லும் போக்கு, ''எல்லா வழிவகைகளையும்'' கையாண்டு, யுத்தத்திற்கு எதிராக பேசும்பொழுது, பேச்சில் சரிநுட்பமான துல்லியம் இல்லாமை -இத் தவறுகள் அவரை புரட்சிகர சோசலிசத்தின் சிறுபான்மையாக உள்ள கட்சிக்குப் பயன்படுத்தத் திறந்திருக்கும் பலன் தருகின்ற வழிவகைகளைப் பற்றி அதேயளவு வரையறை எதுவும் இல்லாத மற்றும் கவனமாகச் சிந்தித்துப் பார்க்காத வடிவமைத்துக் கூறல்களுக்கு இட்டுச் செல்லுகின்றது.

''செயல்பாடு'' பற்றிய என்றும் நிலைத்திருக்கும் பேச்சானது, சிறுபான்மையாக உள்ள கட்சியினரிடம் அதன் பிரச்சார இயக்கத்துடன் -அதன் ''விளக்கங்களை''த் தவிர- ''செயற்பாடுகள்'' என்று தெளிவற்ற முறையில் வர்ணிக்கப்படும், ஆனால் திட்டவட்டமாக வரையறுக்கப்படாத ஆயுதங்கள் இருப்பதாகக் கூறுவது, பிரச்சனையைக் குழப்பியடிப்பதோடு, அதை மங்கவைத்து, அராஜக மற்றும் பிளாங்குவின்வாத தன்மைகொண்ட உணர்வுகளுக்குக் கதவுகளைத் திறந்துவிடும். அனைத்து மார்க்சிச ஆசிரியர்களைப்பின் தொடர்ந்து, அப்படியான கருத்துருக்களைத் தவிர்ப்பது இப்பொழுது அதனுடைய உண்மையான பணியை ஆற்ற: பரந்த மக்களுக்கு விளக்கிப் பெரும்பான்மையை வென்றெடுக்க ஒரு நல்ல ஆரம்பத்தை ஆரம்பித்து வைப்பதற்கு முன்னர் அது தன்னைத் தானே பயனின்மைக்கும் அழிவிற்கும் தீர்த்து ஒதுக்கிவிடுகின்ற இந்த அபாயத்திலிருந்து கட்சியைப் பாதுகாத்துக் கொள்வது அவசியமாகும்.

எனவேதான் விசாரணை என்னும் அரங்கை, நாசவேலையை நாம் நிராகரிப்பது பற்றி அவ்வளவு துல்லியமாக எடுத்துக் கூறப் பயன்படுத்தினோம். இக்காரணத்தினாலேயே இது சம்பந்தமான குற்றச்சாட்டுக்களை நாம் இவ்வளவு அழுத்தம் திருத்தமாக நிராகரித்தோம். முனிசின் அனுமதியுடன் - ''வீரம்'' இன்மையின் காரணமாக அல்ல, ஆனால் நாம் மார்க்சிஸ்டுகள் என்ற ரீதியில், நாசவேலை, பயங்கரவாதம் அல்லது பரந்த மக்களின் செயற்பாட்டிற்குப் பதிலாகத் தனிநபர்களினதோ, அல்லது சிறு குழுக்களினதோ, செயல்களைப் பிரதியீடு செய்யும் எந்த ஒரு உபாயத்திலும் நமக்கு நம்பிக்கை இல்லாததன் காரணமேயாகும்.

இது பற்றி இரு நிலைப்பாடுகள் இருக்க முடியாது. மார்க்சிசத்தில் நிபுணத்துவம் பெற்றவர்கள் முழு மொத்தமாக ஒருபக்கம் நிற்கின்றனர் -நாசவேலைக்கு எதிராக, அது புரட்சிகரப் போராட்டத்தின் ஒரு சுதந்திரமான வழிமுறை அல்ல என்று நிற்கின்றனர். இந்த ''ஆயுதம்'' அராஜகவாதத்தின் படைக்கலக் கொட்டிலிற்குச் சொந்தமானதாகும்.

இந்தவரிகள் முனிசை மட்டும் தவறென நிலை நாட்டவில்லை. தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர வர்க்க நனவை அபிவிருத்தி செய்யும் வரலாற்றுப் பணியை சிறுமைப்படுத்துவதை ஒரு பழக்கமாக்கிக் கொண்ட சந்தர்ப்பவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும் எதிராகக் கனனின் வாதங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.

முனிசினுடைய விமர்சனங்கள் எதைப் பிரதிபலித்தனவென்றால், தொழிலாள வர்க்கத்தின் தோல்விகளின் பளுவால் கீழே அமுக்கப்பட்டு, பரந்த மக்களின் புரட்சிகர ஆற்றல்களின்மேல் முற்று முழுதாக எந்த ஒரு நம்பிக்கையும் இல்லாத தனிமைப்படுத்தப்பட்ட அறிவுஜீவியின் குழம்பிய நிலை நோக்கையும் மற்றும் உள உரம் குலைந்து போனதையுமேயாகும். புரட்சிகரத் தோற்கடிப்புவாதம் பற்றிய அவரது கருத்துரு வீரகாவியப் பாங்கோடு கூடியளவு ஒத்ததாக இருந்ததே ஒழிய மார்க்சிசத்துடன் அல்ல. சோசலிசத் தொழிலாளர் கட்சி, தான் சட்டரீதியாக இருப்பதை முழுமுனைப்புடன் அது எடுத்ததோடு அது வெளிப்படையாகச் செயற்படும் அதன் உரிமையை விட்டுக்கொடுக்க ஆர்வத்துடன் மறுத்தது என்ற கருத்துருவே, அமெரிக்க ஏகாதிபத்தியதிற்கு ஒரு விட்டுக் கொடுத்தலாக முனிசிற்குத் திகைப்பைக் கொடுத்தது.

சோசலிசத் தொழிலாளர் கட்சியின் பாதுகாப்பு மூலோபாயத்தைப் பற்றிய முனிசின் விமர்சனத்தை நாம் தொடருவதற்கு முன்னர், சோசலிசப் புரட்சிரக் கட்சி முதலாளித்துவ நீதிமன்றத்தினுள் நின்ற பொழுது, மைக்கல் பண்டாவும், ஜெரி ஹீலியும் தொழிலாளர் புரட்சிக் கட்சி முதலாளித்துவ நீதி மன்னறத்தில் ஆஜராகும் போது சோசலிசப் புரட்சியின் வேலைத்திட்டத்தை எப்படிப் பாதுகாத்தனர் என்பதை நாம் ஆராய்ந்து பார்ப்போம்.

முதலாளித்துவப் பத்திரிகையான ஒப்சேவரில், தொழிலாளர் புரட்சிக் கட்சியின் பாடசாலை வளாகத்தில் ஆயுதங்கள் பதுக்கியுள்தாக ஒரு அவதூறான கட்டுரை வெளிவந்ததைத் தொடர்ந்து, செப்டம்பர் 1975 இல் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் கல்வி மையத்தின் மேல் திடீர் சோதனையைப் போலீஸ் நடாத்தியது. தொழிலாளர் புரட்சிக் கட்சியானது சரியான முறையில் நற்பெயர் கெடுக்கும் செய்தி வெளியீட்டுக்கு எதிராக வழக்கைத் தொடுத்தது. வழக்கு அக்டோபர் - நவம்பர் 1978 இல் விசாரணைக்கு வந்தது.

பண்டா என்றாலும் சரி, ஹீலி என்றாலும் சரி தொழிலாளர் புரட்சிக் கட்சியின் சார்பில் சாட்சியம் அளிக்கவில்லை. இதற்குப் பதிலாக அவர்கள் கட்சியின் கோட்பாடுகளை விரிவாக எடுத்துக் கூறுவதைக் கட்சியின் மத்திய குழுவின் மற்றைய மூன்று உறுப்பினர்களுக்கு -கொறின் ரெட்கிறேவ், வனசா ரெட்கிறேவ் மற்றும் றோய் பட்டர்ஸ்பி- மற்றும் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் வழக்குரைஞரிடமும் விட்டு விட்டனர். ஒப்சேவர் பத்திரிகை சுமத்திய குற்றச்சாட்டுக்களின் தன்மையை எடுத்துக் கொண்டால், விசாரணையில் பிரதான பிரச்சனை எதுவென்றால், பலாத்காரம் சம்பந்தமாக தொழிலாளர் புரட்சிக் கட்சியின் நிலைப்பாடாக இருந்தது. புரட்சிகரக் கோட்பாடுகள் அத்தனையையும் மீறி, தொழிலாளர் புரட்சிக் கட்சி விசாரணையின் தொனியை எதிர்வாதி வழக்குரைஞரான திரு. ஜோன்வில்மேர்ஸ் கியூ.சிக்கு விட்டுவிட்டது. எதிர்வாதி வழக்குரைஞர், நீதிமன்றத்தை மற்றும் நடுவர் குழுவை (jury) சாந்தப் படுத்துவதற்காக மிகவும் கவனமாக தனது வாதத்திற்கு வடிவம் கொடுத்தார். அக்டோபர் 25, 1978ம் தேதி நியூஸ் லைன் அவரின் ஆரம்ப அறிக்கையை வெளியிட்டது.

''முறையீட்டாளர்கள் 'மார்க்சிசத்தை மிகவும் தணியாப் பற்றுடன் நம்புகின்றார்கள்'' என்று வில்மர்ஸ் தொடர்ந்தார்.

''அவர்கள் இந்த நாட்டில் புரட்சி ஒன்றைக் கொண்டுவர விரும்புகின்றார்கள். ஆனால் அடிப்படை ரீதியில் மாற்றம் என்ற பொருளிலன்றி, வீதிகளில் சுட்டுத் தீர்க்கும் பொருளில் அல்ல''.

''அவர்கள் முதலாளித்துவத்தைக் கவிழ்த்து சோசலிச சமுதாயத்தைக் கட்டுவதற்காகத் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவது பற்றி பேசுகின்றார்கள்''.

''ஆனால் அவர்கள் வன்முறையையும் பலத்காரத்தையும், அடிப்படை ரீதியில் எதிர்க்கின்றார்கள். அவர்கள் தமது நம்பிக்கைகள் பற்றி மக்களுக்குக் கல்வியூட்டுவதன் மூலமும் பிரச்சாரத்தின் மூலமும் தமது இலக்குகளை அடைய முடியும் என்று எண்ணுகின்றார்கள்''.

இந்த ஆரம்ப அறிக்கை, தொழிலாளர் புரட்சிக் கட்சியின் சாட்சிகளினால் அடுத்துவந்த வாரங்களில் சவால் விடப்படாமலும், திருத்தப்படாமலும் விடப்பட்டது. இது மார்க்சிசத்தை நிராகரிப்பதற்குச் சமமாகும். பலாத்காரத்திற்கும், வன்முறைக்கும் ஆணித்தரமான எதிர்ப்பைப் பிரகடனப்படுத்தியது. கனனும் கோல்ட்மனும் 1941ல் கையாண்ட வாத வடிவமைப்புகளுடன் இது பொதுவாக எதையும் கொண்டிருக்கவில்லை. மினியாப்பொலிஸ் விசாரணையில் இருந்து பின்வரும் சாட்சியத்தை மேற்கோள்காட்ட எம்மை அனுமதியுங்கள்:

கேள்வி: சமூக அமைப்பின் மாற்றத்தைப் பொறுத்தவரை, அது பலாத்காரத்துடன் ஒன்றாகச் சேர்ந்து அல்லது ஒன்றாகச் சேராமல் ஏற்படுவதுபற்றி மார்க்சிஸ்டுகளின் கருத்து என்ன?

பதில்: எல்லா மார்க்சிஸ்டுகளின் கருத்து என்னவென்றால் அது பலாத்காரத்துடன் சேர்ந்து வரும் என்பதாகும்.

தொழிலாளர் புரட்சிக் கட்சி வேறொரு நிலைப்பாட்டை எடுத்தது. நியூஸ் லைன் வியாழக்கிழமை, அக்டோபர் 26, 1978 இல், இதற்கு முதல் நாள், கொரின் ரெட்கிறேவ் கொடுத்த சாட்சியத்தை வெளியிட்டது. அது ட்ரொட்ஸ்கிசக் கோட்பாடுகளைப் பரிகாசம் செய்தது:

பிற்பகலின் பொழுது திரு. ரெட்கிறேவ் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் அரசியல் கொள்கைகள் பற்றி பிரதிவாதிகளின் வழக்குரைஞரான திரு.கொலின் ரோஸ்-முன்றோ, கியூ.சியினால் குறுக்கு விசாரணை செய்யப்பட்டார்.

தொழிலாளர் ஆட்சிக்கான போராட்டத்தைப் பற்றிக் கேட்கப்பட்ட பொழுது திரு.ரெட்கிறேவ் ''அது சமாதன முறைகள், சட்டரீதியான மற்றும் அரசியல் அமைப்பு முறைகள் மூலம் தொடரப்பட்டு வருகின்றது'' என்றார்.

''தொழிலாளர் புரட்சிக் கட்சியின் வழிநடத்தலின் கீழ், ஆயுதம் ஏந்திய கிளர்ச்சி எழுச்சி இல்லையா?'' என்று வழக்குரைஞர் கேட்டார்.

''எமது இலக்குகளைப் பொறுத்தவரை இன்றுவரை அப்படி எதுவும் இல்லை''. என்று திரு. ரெட்சிறேவ் பதிலளித்தார்.

கட்சியானது ஆயுதம் ஏந்தும் சாத்தியக்கூறு பற்றி - பலாத்காரத்தைப் பலாத்காரம் கொண்டு சந்திக்க - பிரிட்டனில் பாசிச அரசு ஒன்று ஏற்படும் பட்சத்தில், கட்சி அதைப்பற்றிச் சிந்திக்கும்'' என்று திரு.ரெட்கிறேவ் நீதிமன்றத்திற்குக் கூறினார்.

''ஜனநாயகத்தின் எல்லா வடிவங்களும் ஒழித்துக் கட்டப்பட்டு, பெரும்பான்மை மக்கள் தமது ஜனநாயக உரிமைகளை இழந்துள்ள நிலமையாக இது இருக்கும்''.

இந்த வாக்குமூலம், முதலாளித்துவ ஜனநாயகத்தின் வர்க்கத்தன்மை பற்றிய மார்க்சிசத்தின் அடிப்படை ரீதியான அனைத்துப் படிப்பினைகளையும் மறுதலித்தலுக்குச் சமமானதாகும். ஆயுதம் ஏந்தும் சாத்தியக்கூறு பாசிச அரசுக்கு எதிரான போராட்டத்திற்கு மட்டுமே மட்டுப்படுத்தப் பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து அளிக்கப்பட்ட வாக்குமூலம், இதைவிட மோசமானதாக இருந்தது.'' ஒரு கிளர்ச்சி எழுச்சிக்கு, எங்கிருந்து தொழிலாள வர்க்கம் ஆயுதங்களைப் பெறும்'' என்று கேட்டதற்கு'' அவை, ஜனநாயக உரிமைகளைத் தாமே பாதுகாத்துக் கொள்ள விரும்பும் இராணுவத்தின் பகுதியினரிடம் இருந்து வரக்கூடும்'' என்று திரு. ரெட்கிறேவ் கூறினார்.

''இப்படியான ஜனநாயக உரிமைகளின் வரலாறு கடந்த காலத்தில் அப்படித்தான் இருந்தது, அதுதான் போர்த்துக்கலிலும் நடந்துள்ளது.''

தொழிலாளர் புரட்சிக் கட்சியின் உத்தியோக ரீதியான வேலைத்திட்டம் தொழிலாளர் பாதுகாப்புக் காவலர்களுக்கு விடுத்துள்ள அழைப்பை விளக்கும்படி கட்டாயப்படுத்திய பொழுது, நியூஸ் லைன் பின்வரும் சந்தர்ப்பவாத வாக்குமூலத்தை வெளியிட்டது. ''திரு.ரெட்கிரேவ், தாக்குதல்கள் நடந்துள்ள குடிபெயர்ந்து வந்தவர்கள் வாழும் பகுதிகளில், எங்கெல்லாம் பாசிசத் தாக்குதல்கள் நடந்து போலீசினால் அப்பகுதிகளில் பாதுகாப்புக் கொடுக்க முடியாத பொழுதுதான், கட்சி தொழிலாளர் பாதுகாப்புக் காவலர்களுக்கு அழைப்பு விட்டது. போலீசாரே தம்மால் நிலமையைச் சமாளிக்க முடியவில்லை என்று ஒத்துக் கொண்டுள்ளனர், என்று கூறினார்.''

வேறுவார்த்தைகளில் கூறினால், ரெட்கிறேவின் வாக்குமூலம், முதலாளித்துவ அரசின் மற்றும் அதன் முகவர்களின் பலாத்காரத்திற்கு எதிரான தற்காப்புப் போராட்டத்திற்கான அமைப்புகளாகத் தொழிலாளர் பாதுகாப்புக் காவலர்களை முன் வைக்கவில்லை. ஆனால் அது தொழிலாளர் பாதுகாப்புக் காவலர்களைப் போதுமானதாக இல்லாத போலீஸ் படையினருக்கு ஒரு குறைநிரப்புத் துணைப்படையாகத்தான் முன்வைத்தது!

சனிக்கிழமை அக்டோபர் 28, 1978 இல் நியூஸ் லைன், தொழிலாளர் புரட்சிக் கட்சியின் தலைமை பேச்சாளர்களாகச் செயற்பட்ட கொரின் ரெட்கிறேவிடம் இருந்து மேலும் வாக்குமூலங்களை வெளியிட்டது: ''பலாத்காரத்தை நான் கற்பிக்கவில்லை. நான் ஒரு பொழுதும் பலாத்காரத்தை நடைமுறைப்படுத்துவதில்லை, மற்றும் நான் பலாத்காரத்தை எதிர்க்கிறேன். இந்தப் பாதையிற்தான் எனது கட்சி எப்பொழுதும் நடைபோட்டுள்ளது''.

அடுத்த சாட்சி வனஸா ரெட்கிரேவாகும். அக்டோபர் 31, 1978 ம் தேதி நியூஸ் லைனில் வெளிவந்த அறிக்கையின்படி :

ஆயுதம் ஏந்திய கிளர்ச்சி எழுச்சியைப் பற்றிய கட்சியின் குறிப்புரைகளைப் பற்றிக் கேட்கப்பட்ட பொழுது, அவர் திட்டவட்டமாகக் குறிப்பிடப்பட்ட நிலைமைகளை இவை குறிப்பிடுகின்றன என்றார்.

இது சோசலிச வேலைத் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சோசலிச அரசாங்கம் ஒன்று, சிறுபான்மைக் குழுக்களால் தாக்கப்படக் கூடிய நிலமையில் சாத்தியமான அபாயங்களைப் பற்றியதாகும். அவர் சிலியில் டாக்டர் அலெண்டேயின் அரசாங்கம் பாசிஸ்டுகளால் கவிழ்க்கப்பட்டதை உதாரணமாகக் காட்டினார்.

அடுத்த சாட்சி றோய் பட்டர்ஸ்பியாகும். நவம்பர் 1, 1978ம் தேதி நியூஸ் லைனின் செய்தி அறிக்கையின்படி, கட்சி ''ஆயுதம் ஏந்திய கிளர்ச்சிக்கு'' அழைப்பு விட்டதைப் பற்றிக் கேட்கப்பட்ட பொழுது திரு.பட்டர்ஸ்பி: ''தொழிலாள வர்க்கம் சோசலிசத்திற்கு இடைமருவிச் செல்ல பிரிட்டனில் எல்லாச் சாத்தியக் கூறுகளும் உள்ளன. ஆனால் ஆட்சியானது பாசிஸ்டுகளால் கைப்பற்றப்படும் பட்சத்தில், ஆயுதம் ஏந்திய கிளர்ச்சி எழுச்சியைப்பற்றி சிந்திக்க வேண்டிய தேவை ஏற்படக்கூடும்'' என்றார்.

விசாரணை நடந்தபொழுது பண்டா தொழிலாளர் புரட்சிக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தார். அவர் ஹீலியுடன் கூட்டாகக் கட்சியின் பேச்சாளர்கள் நீதிமன்றத்தினுள் எடுக்கப் போகும் அரசியல் நிலைப்பாட்டை நிர்ணயித்தார். கனனும் அவரது சக பிரதிவாதிகளையும் போலன்றி, தொழிலாளர் புரட்சிக் கட்சி குற்றவியல் நடவடிக்கைகளைக் கூட எதிர் கொள்ளவில்லை. தொழிலாளர் புரட்சிக் கட்சி முதலாளித்துவ பத்திரிகை ஒன்றிற்கு எதிராகத் தன் விருப்பத்தின்படி ஒரு வழக்கைத் ஆரம்பித்து வைத்தது. ஆனால் அதை அது நடுவர் குழு (jury) மேல் தனக்குச் சாதகமான நல்லெண்ணத்தை ஏற்படுத்த முடியும், சில்லறை நன்மைகளைப்பெற முடியும், மற்றும் தீர்ப்பாகப் பெரும்பணத் தொகையை சிலவேளை பெறமுடியும் என்ற நம்பிக்கையில் இந்த வழக்கைத் தொடுத்தது. தொழிலாளர் புரட்சிக் கட்சி புரட்சிகரமான சோசலிச கோட்பாடுகளைத் காக்கவில்லை.

இந்த வழக்கு சம்பந்தமாக எது கருத்தை ஈர்க்கின்றது என்றால், புரட்சிகரப் பலாத்காரம் சம்பந்தமாக அதன் நிலைப்பாட்டை சோக உணர்ச்சியைத் தூண்டுகிற முறையில் வெறுமனே வெட்டிச் சரித்ததாகும். ஆனால் இந்த வாக்குமூலமானது இதை மட்டுமன்றித் தொழிலாள வர்க்கத்தை கல்வியறிவூட்டுவது சம்பந்தமாகச் சிறிதளவுதன்னும் எண்ணிப் பார்த்ததாக எந்தவொரு அறிகுறியையும் காட்டவில்லை. மினியாப்போலிசில் நடந்த விசாரணையைப் போலன்றி, ஒப்சேவர் பத்திரிகைக்கு எதிரான வழக்கானது தொழிலாள வர்க்க இயக்கத்தின் தத்துவார்த்த மற்றும் அரசியல் ரீதியில் வளமூட்ட முற்றுமுழுதாக எதையும் வழங்கவில்லை. இதற்குப் பதிலாக அது தொழிலாளர் புரட்சிக் கட்சியின் தலைவர்களின் வாக்குமூலங்கள் தொழிலாளர் மத்தியில் முதலாளித்துவ ஜனநாயகம் பற்றிய பிரமைகளைப் பலப்படுத்தியதோடு முதலாளித்துவ அரசு சம்பந்தமாகக் கட்சியினுள் ஒரு சந்தர்ப்பவாத நிலைப்பாட்டையும் வளர்க்கப் பணி புரிந்தது.

1941 மினியாபொலிஸ் சாட்சியத்திற்கு எதிராகப் பண்டாவின் கடுகடுத்த கண்டனமும், தொழிலாளர் புரட்சிக் கட்சி 1978 இல் நீதிமன்ற நடவடிக்கைகளில் கடைப்பிடித்த நிலைப்பாடும் கனன் கூறியகூற்றை: ''நிஜ வாழ்க்கையில் தற்காப்பிற்காகக் கவனமாக வடித்தெடுத்து வடிவமைக்கப்பட்ட கூற்றுக்களை ஒரு பொருட்டாக மதியாது செயற்பாட்டிற்கு விடப்படும் அறைகூவல்களுக்கும்'' இடையில் உள்ள வேறுபாடு வழமையாக எதில் முடிவது என்றால், நிஜமான செயற்பாட்டிற்கும் அதைப்பற்றி வெறுமனே பேசுவதற்கும் இடையில் உள்ள வேறுபாட்டிலேயாகும்.'' 

Copyright 1998-2003
World Socialist Web Site
All rights reserved