Chapter 4: The SWP and American Stalinism 1940 ம் ஆண்டு சர்ச்சையை "ஸ்ராலினிச வெறுப்பு நோய்'' வைரசின் ஆரம்ப அறிகுறி என்று பண்டா படம் பிடித்துக் காட்ட எடுத்த முயற்சி ஒரு வெட்கம் கெட்ட புரளி மட்டத்தை அடைந்துள்ளது. கலந்துரையாடலின் எந்த ஒரு நேரத்திலும் சோசலிசத் தொழிலாளர் கட்சி, ஸ்ராலினிஸ்டுகளை முதலாளித்துவ அரசுக்கு எதிராகப் பாதுகாக்க வேண்டிய அதன் வர்க்கக் கடமையைப் புரிந்திருக்கவில்லை என்று உருப்பெறாத மட்டத்தில் கூடத் தொனிக்கவில்லை. அப்பொழுதுதான் சோசலிசத் தொழிலாளர் கட்சி, கட்சியின் கன்னைகளுக்கு இடையிலான நீடித்த ஒரு போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்திருந்தது. (Shactman-Burnham) சட்மன்-பேர்ண்ஹாம் குட்டி முதலாளித்துவ சிறுபான்மையினருக்கு எதிரான கசப்பான இப் போராட்டத்தில் கனன் டிராட்ஸ்கியுடன் ஒருமித்து ஒத்துழைத்தார். சட்மன்-பேர்ண்ஹாம் குட்டி முதலாளித்துவ கன்னை, சோவியத் ஒன்றியம் ஒரு சர்வாதிகார ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் தமைமையின் கீழ் உள்ளது என்ற அடிப்படையில் சோவியத் ஓன்றியத்தை பாதுகாப்பதை நிராகரித்தது. 1940 ம் ஆண்டு செப்டம்பரில் நடந்த கட்சி மாநாட்டில் பர்ண்ஹாம் மற்றும் சட்மனுக்கு எதிரான போராட்டத்தின் மையமான படிப்பினைகளைக் கனன் மீளாய்வு செய்தார். இது சம்பந்தமாக நாம் நினைவிற் கொண்டிருக்க வேண்டியது என்னவென்றால், குட்டி முதலாளித்துவ சித்தாந்தவாதியான பேர்ண்ஹாமுடனான போராட்டம் ஸ்ராலினிஸ்டுகளைப் பண்புருவாக்கம் செய்கின்ற பிரச்சினையில் இருந்து ஆரம்பித்தது என்பதை. "ஏறக்குறைய இரு வருடங்களுக்கு முன்னர், கார் நெருக்கடியின் பொழுது, பேர்ண்ஹாமும் அவரைச் சுற்றித் திரிபவர்களுடனுமான உண்மையான முதல் மோதல் அவர்கள் கார் தொழிற் சங்கத்தில் ஏற்பட்ட பிளவு சம்பந்தமாக அவர்கள் கொண்ட நிலைப்பாடு பற்றியதாகும். (CIO) சி.ஐ.ஓ வுடன் கார் தொழிலாளர்களிற் பெருந்திரளானோர் சென்று கொண்டிருக்கின்றார்கள் என்பது உண்மையாக இருந்த பொழுதும் -- அதன் மூலம் அவர்கள் ஸ்ராலினிஸ்டுகளுடன் சென்று கொண்டிருந்த பொழுதும் -- பேர்ண்ஹாம், எமது ஆதரவை மாட்டின் (Martin) பக்கம் திருப்ப முயன்றார். அது மட்டுமல்ல ஸ்ராலினிஸ்டுகள் தொழிலாள வர்க்கத்தின் ஒரு பகுதியினர் அல்ல என்ற தத்துவத்தின் அடிப்படையில், அவர் எமது ஆதரவை (AFL) ஏ.எஃப்.எல் பக்கம் திருப்ப முயன்றார். இப்பிரச்சினை, போலந்தை ஆக்கிரமித்ததோடு மீண்டும் உச்ச கட்டத்தை அடைந்தது. பேர்ண்ஹாம், சோவியத் ஒன்றியம் ஒரு "ஏகாதிபத்தியம்" என்ற தத்துவத்தின் அடிப்படையில் செம்படைக்கு எதிராக அப்பட்டமான நிலைப்பாட்டைக் கட்சி எடுக்க வேண்டும் என்றார். இப்பிரச்சனை பின்லாந்து ஆக்கிரமிப்புடன் மேலும் கூர்மையாக வளர்ந்தது. அதன் பின் (Browder) பிரவுடருக்கு எதிராக அரசாங்கத்தால் கடவுச் சீட்டு பற்றிய வெளிப்படையாக ஜோடிக்கப்பட்ட குற்றம் சுமத்தப்பட்ட பொழுது, பிரவுடர் எந்த ஒரு முறையான தொழிலாளர் போக்கையும் பிரதிநிதித்துவம் செய்யவில்லை என்ற அடிப்படையில், பேர்ண்ஹாம் பிரவுடரைப் பாதுகாப்பதை எதிர்த்தார். சோவியத் அதிகாரத்துவத்தின் ஒரு முகவர் என்ற அடிப்படையில் பிரவுடர் மறைமுகமாக உலகின் மிகப் பெரும் தொழிலாளர் இயக்கத்தினை -- சோவியத் அரசை, அவர் பிரதிநிதித்துவம் செய்கின்றார் என்பதை பேர்ண்ஹாம் காணத் தவறினார். அடிப்படை ரீதியில் இந்த விஷயத்தில் ஐக்கிய அமெரிக்க அரசுகளில் உள்ள ஜனநாயக ஏகாதிபத்தியத்தின் அழுத்தத்தினால் பேர்ண்ஹாம் செயல் தூண்டுதலைப் பெற்றுள்ளார். இத் தருணத்தில் ஸ்ராலினிஸ்டுகள் ரூஸ்வெல்ட் (Roosevelt) நிர்வாகத்துடன் முட்டிக் கொண்டிருக்கும் நிலையில் இருந்தனர். பேர்ண்ஹாம் கன்னை ஸ்ராலினிஸ்டுகளுக்கு எதிராக "விட்டுக் கொடுக்கா" நிலைமையைக் கடைப் பிடித்தது. இது முதலாளித்துவ ஜனநாயகவாதிகளின் ஆரவாரமிடலுக்கு மலிவான மற்றும் இலகுவான முறையில் அடிபணிந்து போவதைப் பிரதிநித்துவம் செய்தது. அவர்களது கருத்துகள், தொழிலாள வர்க்க இயக்கத்தினுள் உள்ள ஒரு அரசியல் போக்காக கம்யூனிஸ்ட் கட்சியை எந்த ஒரு முறையிலும் ஏற்றுக்கொள்ள உள்ள எதிர்ப்பினால் வடிவம் பெற்றது. இங்கு நாம் எவரிடம் இருந்தும் அப்படியான ஒரு கருத்தின் வெளிப்பாட்டை இன்று கேட்கவில்லை.1 இந்த மேற்கோளை நிரூபிப்பது போல, பண்டா பேர்ண்ஹாம் கொண்டிருந்த அதே நிலைப்பாட்டை ஸ்ராலினிசத்தை தொழிலாளர் இயக்கத்தினுள் உள்ள முறையான போக்கு என்பதை ஏற்றுக் கொள்ள மறுத்த பேர்ண்ஹாமின் நிலைப்பாட்டை, கட்சி பிளவுறும் கட்டம் வரை சோசலிசத் தொழிலாளர் கட்சி எதிர்த்துப் போராடிய நிலைப்பாட்டை, பண்டா ஏமாற்றும் வகையில் கனனினதும் மற்றும் சோசலிசத் தொழிலாளர் கட்சியினதும் நிலைப்பாடு என்கின்றார். ஆனால் 1939 - 40 இல் சோசலிசத் தொழிலாளர் கட்சி எடுத்த நிலைப்பாடு, மற்றும் 1940 இல் கனன் வெளியிட்ட அறிக்கை என்பன, கனனின் "ஸ்ராலினிச வெறுப்பு நோய்" மனநிலையில் ஏற்பட்ட தற்காலிக மாற்றமாகச் சிலவேளை இருக்கலாம், அதன் பின் சோசலிசத் தொழிலாளர் கட்சி மீண்டும் அந்த நிலைப் பாட்டிற்குத் திரும்பியதா? ஆகஸ்ட் 1946 இல் வலதுசாரி (Morrow-Goldman) மொரோ -கோல்ட்மன் கன்னைக்கு எதிரான போராட்டத்தின் மத்தியில் இதைப் பற்றி மேலும் கூடுதலாகப் பின்னர் கூற வேண்டியுள்ளது- சோசலிசத் தொழிலாளர் கட்சியின் அரசியல் குழு சட்மனைட்டுகளைப் பற்றிய ஒரு பிரதான தத்துவார்த்த ஆய்வினை வெளியிட்டது. இதன் தலைப்பு, "புரட்சிகர மார்க்சிசமா அல்லது குட்டி முதலாளித்துவ திருத்தல்வாதமா?" இப்பத்திரம் நெறிப்படுத்தப்பட்ட முறையில் சோசலிசத் தொழிலாளர் கட்சியை சட்மனின் தொழிலாளர் கட்சியிடம் இருந்து பிரித்து வைக்கும் வேலைத் திட்ட வேறுபாடுகளை விவரித்தது. சட்மனின் தொழிலாளர் கட்சியுடன் மீண்டும் ஒன்றாக இணைய வேண்டும் என்று மொரோவும், கோல்ட்மனும் பிரேரித்தார்கள். "ஸ்ராலினிசக் கட்சிகள் பற்றிய நமது வேறுபட்ட மதிப்பீடுகள்" என்ற தலைப்பிட்ட பகுதியின் கீழ் சோசலிசத் தொழிலாளர் கட்சியின் அரசியல் குழு கூறுகையில்: ரஷ்யப் பிரச்சனையில் நமது வேலைத் திட்டத்துடன் தொழிலாளர் கட்சி முறித்துக் கொண்டது, ஸ்ராலினிசக் கட்சிகளை மதிப்பிடுவது சம்பந்தமாகவும் நாம் அவற்றைத் தந்திர உபாய ரீதியில் அணுகும் முறை பற்றியும் நமக்கிடையில் மிகவும் கூர்மையான வேறுபாடுகளை உண்டாக்கியுள்ளது. மற்றைய துறைகளில் போல் இங்கும், பேர்ண்ஹாம் முன்னோடியாக இருந்தார். அவர் 1937 இல், சோசலிசத் தொழிலாளர் கட்சியின் அரசியல் குழுவில், ஸ்ராலினிசக் கட்சிகளை, தொழிலாளர் இயக்கத்திற்கு வெளியில் உள்ளவையாகப் பார்க்க வேண்டும், மற்றும் நாம் அவற்றை நாசி அல்லது பாசிசக் கட்சிகளை நடத்துவது போல அவற்றையும் நடத்த வேண்டும் என்று பிரேரித்தார். தொழிலாளர் கட்சி மிகவும் எச்சரிக்கையுடன் அட்டவதானமாக ஸ்ராலினிசக் கட்சிகள் பற்றிய நமது கணிப்பீட்டை சிறுகச் சிறுக கடிந்து இறுதியில் 1939 இல் பேர்ண்ஹாமின் நிலைப்பாட்டிற்கு அல்லது அதற்கு மிகவும் நெருக்கமாக உள்ள நிலைப்பாடு ஒன்றிற்கு வந்தடைந்தது..... நாம் முதலாளித்துவ நாடுகளில் உள்ள ஸ்ராலினிசக் கட்சிகளை சமூக ஜனநாயகத் துரோகிகளைப் போல, துரோகத் தலைமைகளால் வழி நடத்தப்படும் தொழிலாள வர்க்கக் கட்சிகள் என்று மதிப்பிடுகின்றோம். சமூக ஜனநாயக அதிகாரிகள் தமது குறிப்பிட்ட சொந்த சுதேசிய முதலாளித்துவங்களின் முகவர்கள் என்பதை நாம் நிச்சயமாகப் புரிந்துள்ளோம். ஆனால் ஸ்ராலினிச அதிகாரிகள் கிரிம்ளினின் சிலராட்சியின் முகவர்கள். ஆனால் அவர்களுக்கிடையில் பொதுவானதாக இருப்பது என்னவென்றால், அவர்களால் தொழிலாளர்கள் ஆட்சிக்குப் போராட முடியாது. அவர்கள் ஆட்சியைப் பிடிக்க விரும்புவார்களாயின், அது முதலாளித்துவத்தின் முகவர்கள் என்ற முறையில் மட்டுமே. வழமையாக, இது முதலாளித்துவத்தின் நேரடிப் பிரதிநிதிகளுடனான கூட்டு ஒன்றிலேயாகும்.2 "அமெரிக்க ஸ்ராலினிசமும், ஸ்ராலினிச விரோதமும்" என்ற தலைப்பின் கீழ் 1947 ஏப்ரல் - மேயில் (Militant) "மிலிரண்ட்" பத்திரிகையில் கனன் தொடர் கட்டுரைகளை எழுதினார். இவை பின்னர் ஒரு சிற்றேடு வடிவத்தில் வெளியிடப்பட்டன. அமெரிக்க நாடாளுமன்றத்தின் அமெரிக்க அல்லாத நடவடிக்கைகள் குழுவின் முன் வாக்குமூலம் கொடுக்க உடன்பட்ட ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவர்களுள் ஒருவரான (Ruth Fischer)ருத் ஃபிஷ்ஷர் உடனான தத்துவார்த்த விவாத்தின் பின்னர் இது எழுதப்பட்டது. இதில் கனன் சோசலிசத் தொழிலாளர் கட்சி ஸ்ராலினிசத்திற்கு எதிரான போராட்டத்தில் அது கொண்டுள்ள மனப்பான்மையை வரையறை செய்தார். நாம் நீண்ட காலமாக ஸ்ராலினிசத்தை எதிர்த்து வந்ததோடு அதனோடு எவ்வித சமரசம் செய்வதையும் எதிர்த்து வந்துள்ளோம், எதிர்த்து வருகிறோம் என்பது தெரிந்ததே. இந்த விஷயம் சம்பந்தமாக நாம் 18 வருடங்களுக்கு முன்னரே ஆரம்பித்தோம். அதன்பின் அதற்குத் தொடர்ந்தும் சம்மட்டி அடி கொடுத்து வருகின்றோம். ஸ்ராலினிசத்தின் மற்றைய எதிர்ப்பாளர்களுடனான ஒத்துழைப்பை நாம் வரவேற்கின்றோம். ஆனால் ஸ்ராலினிசத்தின் தன்மை பற்றி ஒரு சிறிதளவு அடிப்படை ரீதியான உடன்பாடு இருப்பதோடு, ஸ்ராலினிசத்திற்கு எதிரான போராட்டம் பொதுவான முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக, அதிலிருந்து பிரிக்கப்பட்டதாகவோ அல்லது அதற்கு முரண்பட்டதாகவோ இல்லாது இருந்தால்தான் அப்படியான ஒத்துழைப்பு பலன் உள்ளதாக இருக்கும்." தவறான புரிதல் இருக்கக் கூடாது என்பதற்காக, ஆரம்பத்தில் இருந்தே நமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த விரும்புகின்றோம். மனித இனத்தை அச்சுறுத்தும் மிகப் பெரிய எதிரி வாஷிங்டனில் உள்ள ஏகாதிபத்திய இருகட்சி சதிக் கும்பலாகும். அமெரிக்க புரட்சியாளர்களின் முதலாவதும், பிரதானதுமான கடமை, யுத்தத்திற்கும், பிற்போக்கிற்கும் எதிரான போராட்டத்தை ஐக்கிய அமெரிக்க அரசுகளில் தொடுப்பது என்று நாம் கருதுகின்றோம். இது ஸ்ராலினிசத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒத்துழைப்பதற்கான முதற் கூற்றாகும். இக் கூற்று சம்பந்தமாக எம்முடன் உடன்படாதவர்கள், இந்நாளில் நிலவும் நிலைமையைப் புரிந்து கொள்ளாதவர்கள், நாம் பேசும் மொழியைப் பேசாதவர்கள். காரிய மனைப்பான்மை கொண்ட ஒவ்வொரு வர்க்க நனவுள்ள தொழிலாளிக்கும் ஸ்ராலினிசத்தின் நயவஞ்சக இயல்பைப் பற்றிய புரிதல்தான் மெய்யறிவின் ஆரம்பமாகும். முதலாளித்துவ விரோதிகளாக உள்ள அனைத்து ஸ்ராலினிச விரோதிகளும் ஒன்றாக வேலை செய்ய முயல வேண்டும். ஆனால் ஸ்ராலினிச விரோதம் அதுவாகவே, பொதுவான போராட்டத்திற்கு ஒரு வேலைத் திட்டமாகாது. அது ஒரு மிகவும் பரந்துபட்ட பதமாகும். அது வெவ்வேறு மக்களுக்கு வெவ்வேறு பொருளைக் கொண்டுள்ளது. நாம் நமது போராட்டத்தை 18 வருடங்களுக்கு முன் ஆரம்பித்த பொழுது இருந்த ஸ்ராலினிச விரோதிகளிலும் பார்க்க இன்று அதிக ஸ்ராலினிச விரோதிகள் உள்ளனர். குறிப்பாக, ஸ்ராலினிசம் பலவீனமாகவும், (Trumanisam) ட்ரூமன்வாதம் பலமானதாகவும் உள்ள இந்த நாட்டில், சிறப்பாக நியூயோர்க்கில் அவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அவர்களில் எல்லோரும் போலிகளும் அல்லர். ஆனால் இன்று தளிர்விட்டுத் திரளாகத் தோன்றியுள்ள பெருங் கூச்சலிடும் ஸ்ராலினிச விரோதிகளில் மிகச் சிலர்தான் எம்முடன் அல்லது நாம் அவர்களுடன் எவ்வித உறவையும் கொண்டுள்ளோம். இது அவர்களைப் பொறுத்தளவில் அல்லது நம்மைப் பொறுத்தளவில் தவிர்த்து விலகுவதினாலோ அல்லது சண்டை பிடிப்பதினாலோ ஏற்பட்டதல்ல. ஆனால் நாம் வேறுபட்ட மெய்யென ஏற்றுக் கொள்ளப்பட்ட மூலக் கூற்றுகளில் இருந்து, ஆரம்பித்ததினாலும் வேறுபட்ட முறைகளைக் கையாண்டு போராட்டத்தை நடத்துவதினாலும் மற்றும் வேறுபட்ட இலக்குகளை இலக்கு வைப்பதினாலுமாகும்..... ஸ்ராலினிசம் முதலாளித்துவ நாடுகளில் எல்லாவற்றிலும் முதலாக தொழிலாள இயக்கத்தினுள் உள்ள ஒரு அரசியல் செல்வாக்காகும். அது இந்தச் செல்வாக்கை செலுத்துவது, ஒரு போலீஸ் சக்தியாகவோ அல்லது பயங்கரவாதக் கும்பலாகவோ அல்ல, ஆனால் ஒரு அரசியல் கட்சியாகவே செலுத்துகிறது. ஸ்ராலினிசத்திற்கு எதிரான போராட்டம் எல்லாவற்றிலும் முதலாகவும், எல்லாவற்றிலும் மேலாகவும் ஒரு அரசியல் போராட்டமாகும். இந்த அரசியல் போராட்டம் தெளிவாகவும், ஐயப்பாடின்றியும், ஆரம்பத்திலிருந்து முடிவுவரை முதலாளித்துவ விரோதமானதாக இருந்தாலேயன்றி, மாற்றத்தை நாடும் தொழிலாளர்களிடையில் -- இவர்கள்தான் தீர்க்கமானவர்கள் -- எந்தவொரு தாற்பரிய முன்னேற்றத்தையும் ஒரு பொழுதும் அடைய முடியாது. ட்ரூமன் வாதத்தினால் சிறிதளவு கறைபட்ட அல்லது கறைபட்டதாகத் தோன்றுகின்ற எந்த ஒரு பிரச்சாரத்திற்கும் ஐரோப்பாவின் முதலாளித்துவ விரோத தொழிலாளர்கள் செவிமடுக்க மாட்டார்கள். ஐக்கிய அமெரிக்க அரசுகளில் இப்பொழுது அந்த வகையான "ஸ்ராலினிச விரோதம்" பிரபலமாகவுள்ளது. ஆனால் அது ஏற்றுமதிக்கு முற்று முழுதாக உதவாதது.3 "கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தொழிலாள வர்க்க இயக்கமா?" என்ற தலைப்பின் கீழான, கட்டுரைத் தொடரின் ஆறாவது கட்டுரையில் கனன் எழுதுகையில்: கடந்த கால் நூற்றாண்டில் ஏற்பட்ட ஒரு புதிய இயல் நிகழ்வு தான் ஸ்ராலினிசம். அது பல வகைகளில் தனித்தன்மை கொண்டுள்ளது. ஆனால் அது தொழிலாளர் இயக்கத்தினுள் உள்ள ஒரு போக்கு என்ற சாராம்ச ரீதியான உண்மையை இது மாற்றவில்லை. அது தொழிற் சங்கங்களுள் வேர் ஊன்றியுள்ளது: முற்போக்குத் தொழிலாளர்களில் ஒரு பகுதியினரின் மேல் அது அதன் செல்வாக்கைச் செலுத்துகின்றது. முற்றிலும் இக்காரணத்தினாலேயே, தொழிலாளர்களின் விடுதலைப் போராட்டங்களுக்கு அது இப்படியான மிகப் பெரும் பிரச்சனையாகவும், இப்படியான மிகப் பெரும் தடையாகவும் உள்ளது. எமது கருத்தின்படி, இந்த மூலக்கூற்றில் இருந்து முன்னேறாது, ஸ்ராலினிசத்திற்கு எதிராகப் பலனுள்ள. ஒரு போராட்டத்தைத் தொடுக்க முடியாது. ஸ்ராலினிசமானது, எல்லா (Internal) உட் பிரச்சனைகளையும் போல தொழிலாளர் இயக்கத்தின் ஒரு உட்பிரச்சனையாகும், இதைத் தொழிலாளர்களால் மட்டும்தான் தீர்த்துவைக்க முடியும்.4 1953 இல் சோசலிசத் தொழிலாளர் கட்சியுள் இருந்த அமெரிக்க பப்லோவாதிகள் "கனனின் சிற்றேட்டின் காலம் கடந்து வாழ்ந்த 'ஸ்ராலினிச விரோத' நிலைப்பாட்டை" கண்டனம் செய்தனர். அவர்கள் ''அது கொச்சைப் படுத்தப்பட்ட ஸ்ராலினிசத்தின் ஒரு பகுதியாக மாறியது." இது ஒரு துறையில் அல்லது மற்றொரு துறையில் என நம்மை மீண்டும், மீண்டும் தொல்லைப் படுத்தியது என்றன." இப்பொழுது ஸ்ராலினிசம் சம்பந்தமான பிரச்சனையில் சோசலிசத் தொழிலாளர் கட்சி 1940, 1946 மற்றும் 1947 இல் வகுத்த நிலைப்பாட்டை நாம் மீளாய்வு செய்தோம். ஆவணங்களின் அடிப்படையில், சோசலிசத் தொழிலாளர் கட்சி ஒரு பொழுதும் கம்யூனிஸ்ட் கட்சியைத் தொழிலாள வர்க்கத்தின் ஒரு முறையான பகுதி என்று கருதவில்லை என்ற குற்றச்சாட்டு ஒரு கட்டுக்கதை என்பதை நிரூபித்துள்ளோம். ஸ்ராலினிசத்திற்கு எதிரான போராட்டத்தில், அது தொழிலாளர் இயக்கத்தின் ஒரு பகுதி என்ற உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும், மற்றும் அதன் பிரதிநிதிகள் முதலாளிகளினதும் அவர்களது அரசினதும் தாக்குதல்களில் இருந்து நிபந்தனையின்றிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கனன் வலியுறுத்தினார். இந்தக் கட்டத்தில், இதுவரை முன் வைக்கப்பட்டுள்ள ஆதாரங்களின் அடிப்படையில் எந்த ஒரு நடுநிலையான அறங்கூறாயமும் பண்டாவை ஒரு மோசமான வரலாற்றாசிரியர் அல்லது ஒரு அருவருக்கத்தக்க பொய்யன் என்று தீர்ப்புக் கூறும் என்ற நம்பிக்கையில் நாம் நமது வாத விளக்கத்திற்கு ஓய்வளிக்க முடியும். ஆனால் பண்டாவின் மோசடிகளை அடி முதல் முடி வரை முடிந்த அளவு அம்பலப்படுத்துவோம் என்று உறுதிமொழி தந்துள்ளோம். எனவே வாசகரின் பொறுமையைக் கனிவோடு வேண்டிய வண்ணம், நாம் தொடர்ந்து முன்னேற தங்கள் அனுமதியை அளியுங்கள். "றோசன் பேக்குகளை(Rosenberg) மரண தண்டனைக்கு உள்ளாக்கியது சம்பந்தமாக வெட்கமற்ற மற்றும் முழுதும் மர்மமான மௌனத்தைக்" கனன் கடைப்பிடித்தார் என்றதும் மற்றும் அவர் "ஐக்கிய அமெரிக்க அரசுகளின் கம்யூனிஸ்ட் கட்சி அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட பொழுது திகைக்க வைக்கும் அளவிலான அரசியல் உதாசீனத்தைக்" கடைப்பிடித்தார் என்றதுமான பண்டாவின் குற்றச்சாட்டு ஒரு சேறடிப்பாகும். ஆனால் பண்டா அதனுடன் நின்றுவிடவில்லை. அவர் கனன் நடந்துள்ளதாகக் கற்பித்துள்ள நடத்தையை விளக்குவதற்காகக் கற்பனை நோக்கொன்றைப் புதிதாகப் புனைந்துள்ளார். அவர் சோசலிசத் தொழிலாளர் கட்சியின் தலைவர் "இடது ஜனநாயகவாதிகளுக்கு" இயைந்து போகின்றார் என்று கூறுகின்றார். துரதிஷ்டவசமாக "இடது ஜனநாயகவாதிகள்" என்பதன் மூலம் எதை அர்த்தப்படுத்துகின்றார் என்று விளக்கவில்லை. பொதுவாக இவை காணற்கரிய பறவைகளாகும். ஆனால் 1950 ம் ஆண்டுகளின் ஆரம்பப் பகுதியில், மக்காதியின் (McCarthyite) ஐயுறவு வேட்டையின் பொழுது அவை இல்லாத பறவை இனத்தைச் சேர்ந்தவையாக இருந்தன. "இடது ஜனநாயகவாதிகளுக்கு" கனன் இயைந்து போனார் என்ற குற்றம் - அவற்றை அவரால் கண்டு பிடிக்க முடிந்தது என்று ஒரு கணம் பேச்சுக்கு ஏற்றுக் கொண்டால் - இது முற்று முழுதாக பண்டாவால் ஜோடிக்கப்பட்டுள்ளது என்பதே. 1940ம் ஆண்டுகளின் பிற்பகுதி முழுவதிலும், மற்றும் 1950 ம் ஆண்டுகளிலும் கெடுபிடி யுத்தம் தொடங்கியதோடு, கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட சூனிய வேட்டை மற்றும் பொய்ப் புனைவுகள் இவற்றிற்கு எதிராகச் சோசலிசத் தொழிலாளர் கட்சி கொள்கை மாறாது நிலையாக அதைப் பாதுகாத்தது. இந்த நிலைப்பாட்டை கம்யூனிஸ்ட் கட்சி, சோசலிசத் தொழிலாளர் கட்சி சம்பந்தமாகக் கடைப்பிடிக்க மறுத்தது. அதனுடைய தலைவர்களுக்கு எதிராக ஐக்கிய அமெரிக்க அரசுகளின் அரசாங்கம் பொய்க் குற்றங்களைச் சுமத்திய பொழுது கம்யூனிஸ்ட் கட்சி, "காலற்ற முதுபெரும்" (James Kutcher) ஜேம்ஸ் குற்ச்சர் போன்ற சோசலிசத் தொழிலாளர் கட்சி உறுப்பினர்களுக்கு எதிரான சூனிய வேட்டையைத் தொடர்ந்தும் ஆதரித்தது. கம்யூனிஸ்ட் கட்சியைப் பாதுகாப்பது சம்பந்தமாக சோசலிசத் தொழிலாளர் கட்சியின் நிலைப்பாடு, சிமித் சட்டத்தின் கீழ், 1948 ம் ஆண்டில் 12 ஸ்ராலினிசத் தலைவர்களுக்கு எதிராகக் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்ட பொழுது பகிரங்கமாக, விபரமாக எடுத்துக் கூறப்பட்டது. இதே சட்டத்தை ஏழு வருடங்களுக்கு முன்னர் கனனுக்கும் மற்றைய சோசலிசத் தொழிலாளர் கட்சித் தலைவர்களுக்கும் எதிராகப் பயன்படுத்தியதைக் கம்யூனிஸ்ட் கட்சி மிகவும் உற்சாகத்துடன் ஆதரித்தது. ஃபரல் டொப்ஸ் (Farrell Dobbs) சோசலிசத் தொழிலாளர் கட்சியின் அரசியல் குழுவின் சார்பில் 1948 ஜூலை 28, தேதியிட்ட கடிதத்தை எழுதினார். அதில் அவர் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவிற்கு அதன் தலைவர்களுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்குகளை எதிர்த்துப் போராட ஐக்கிய முன்னணி ஒன்று அமைக்க வேண்டும் என்று பிரேரித்தார். சிமித் சட்டத்தின் கீழ் உங்களது கட்சியின் 12 தலைவர்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இது, இந்த வாயடைப்புச் சட்டத்தில், வாஷிங்டனில் உள்ள ஆட்சியாளர்களுக்கு ஒரு கொடிய ஆயுதம் ஒன்று உண்டு என்பதையும், இதன் முனை தொழிலாள வர்க்கத்தின் அரசியல் மற்றும் தொழிற் சங்க இயக்கத்தின் மேல் குறி வைத்துள்ளது என்பதையும் மீண்டும் ஒரு முறை கூர்மையாக நினைவு படுத்தியுள்ளது...... இப்பொழுது நீங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளீர்கள், சிமித் சட்டத்திற்கு முதல் இரையாகிய நாம் உங்களுக்கு நமது உதவியை முன் வைக்கின்றோம். உங்களுடைய ஜனநாய உரிமைகளை இல்லாமற் செய்ய நடக்கும் சதியை முழு இயக்கத்தின் - அதனுள் உள்ள அனைத்துப் போக்குக்களின் ஐக்கியப்பட்ட போராட்டத்தின் மூலமே தோற்கடிக்க முடியும் என்று நம்புகின்றோம். உங்கள் கட்சிக்கும் எமது கட்சிக்கும் இடையில் உள்ள தடங்காணா ஆழமுடைய அரசியல் வேறுபாடுகள், குடி மக்களின் உரிமைகளை தற்காக்க தொழிலாள வர்க்கத்தின் பரந்துபட்ட ஐக்கிய முன்னணி அமைக்கும் பாதையில் தடையாக அமைய இடம் கொடாதீர்கள் என்று நாம் உங்களை கேட்கின்றோம். சிமித் சட்டத்தின் கீழ் நாம் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட பொழுது நீங்கள் டிராட்ஸ்கிஸ்டுகளைப் பாதுகாக்க முன்வராதிருந்த பொழுது, நீங்கள் குற்றவாளிகள் என்று வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிரான நமது எதிர்ப்பை நாம் ஏற்கனவே பகிரங்கமாக்கியுள்ளோம். நாம் மேலும் உங்கள் பாதுகாப்பு சம்பந்தமாக உங்களுக்கு உதவ நாம் முழுமையாகத் தயாராக உள்ளோம்.5 இந்த அழைப்பிற்கு ஸ்ராலினிஸ்டுகள் என்றும் பதிலளிக்கவில்லை. அரசின் தாக்குதல்களுக்கு எதிராகத் தொழிலாள வர்க்க இயக்கங்களைப் பாதுகாக்கும் சோசலிசத் தொழிலாளர் கட்சியின் கொள்கைக்கு ஏற்றதாக இந்த அழைப்பு இருந்தது. அதன் பின் பண்டா றோசன் பேக்குகளைப் பற்றிக் குறிப்பிடுகின்றார். "இடது ஜனநாயகவாதிகளுக்கு" கனன் இயைந்து போகும் பொழுது றோசன் பேக்குகள் மரணதண்டனைக்கு உள்ளாக்கப்பட்டது பொருட்படுத்தப்படாமல் விடப்பட்டுள்ளது என்றுள்ளார். மீண்டும் நாம் ஆதார மூலங்களைத் திருப்பிப் பார்ப்போம். ஜூலியஸ் (Julius) மற்றும் (Ethel Rosenberg) இதெல் றோசன்பேக் ஜூன்19, 1953 இல் மரணதண்டனைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். 1953 ஜூன் 1 ம் தேதி மிலிரன்ட் பத்திரிகையின் முதற் பக்க தலைப்பு, ''சூனிய வேட்டையாளர்கள் அழிவு நாள் தீர்ப்புக்குள்ளான ஜோடியை சாவு நாற்காலிக்குத் தள்ளல்" என்று இருந்தது. "தொழிற்சங்க அலுவலர்களின் கோழைத்தனமான மௌனத்தை" பகிரங்கமாகக் கண்டித்த சோசலிசத் தொழிலாளர் கட்சி, "நாடு முழுவதும் உள்ள தொழிற்சங்கத்தினரைத் தமது தொழிற்சங்க இயக்கங்கள் மற்றும் அலுவலர்களிடம் இருந்து செயலைக் கோரும்படி" அழைப்பு விட்டது. "றோசன் பேக்குகளைக் காப்பாற்ற அதிக காலம் கடந்துவிடவில்லை" என்று பிரகடனப்படுத்தியது மிலிரன்ட், அது "மரணதண்டனையை நிறைவேற்றுபவனின் கைகளைத் தடுத்து நிறுத்தச் செய்வன அனைத்தையும் செய்ய வேண்டும்" என்றது. மிலிரனின் மறுநாள் இதழின், 1953 ஜூன் 8ம் தேதி பத்திரிகையின் தலைப்பு "சூனியக்கார எரிப்பாளர்கள் றோசன் பேக்குகளை சட்டத்தைப் பயன்படுத்திக் கொலை செய்வதை நிறுத்தக்கோரு! என்றது. இதைத் தவிர முதற் பக்கம், "இந்த அநியாயத்தை எதிர்த்து தொழிலாளர்கள் போராடியாக வேண்டும்" என்ற தலைப்பிடப்பட்ட ஆசிரியர் தலையங்கத்தையும் தாங்கி இருந்தது. ஒரு வாரத்திற்குப் பின்னர் 1953 ஜூன், 15ம் தேதி இதழின் முதற்பக்க தலைப்பு "றோசன் பேக் வழக்கில் அரச மன்னிப்புப் பெற இறுதி கட்டப் போராட்டம் ஜோடியைக் காப்பாற்றும் முயற்சியில் உலக எதிர்ப்புகள் ஓங்கல்" என்றது. முதற் பக்கம், சோசலிசத் தொழிலாளர் கட்சி றோசன் பேக்குகளுக்கு மன்னிப்புப் பெற உத்தியோக ரீதியாக அறைகூவல் விடுத்தது. இதில் அதன் தேசியச் செயலாளரான (Farrel Dobbs) ஃபரெல் டொப்ஸ் கையெழுத்திட்டிருந்தார். மரண தண்டனை செயற்படுத்தப்படுவதற்கு ஒரு சில மணி நேரத்திற்கு முன் அச்சிடப்பட்ட அடுத்த இதழான, 1953 ஜூன் 22 தேதியிடப்பட்ட இதழில், மிலிடனின் முதற் பக்க தலைப்பு "அரசாங்கம் இரத்தத்தைக் கோருகின்றது, நீதிமன்றம் றோசன் பேக்குகளை சாவுக்குத் தள்ளியுள்ளது" என்றது. அதோடு சோசலிசத் தொழிலாளர் கட்சி றோசன் பேக்குகளைப் பாதுகாக்க நடாத்திய பகிரங்கக் கூட்டத்தைப் பற்றிய செய்திக் கட்டுரையும் பத்திரிகையின் முதற் பக்கத்தில் இருந்தது. இறுதியாக 1953 ஜூன் 29ம் தேதிய அதன் இதழில், முதற் பக்கக் கட்டுரையின் தலைப்பு "றோசன் பேக்குகளின் கொலையைக் கண்டு குமட்டல் உணர்ச்சி திடீரென்று உலகெங்கும் அலைவீசல்" என்று தீட்டப்பட்டிருந்தது. சோசலிசத் தொழிலாளர் கட்சி ஸ்ராலினிஸ்டுகளை அரசின் அடக்குமுறைக்கு எதிராக துல்லியமாகப் பாதுகாத்துள்ளது. அப்படியாயின் பண்டா, "கனனின் ஸ்ராலினிசம் பற்றிய கட்டுரைகள், ஐக்கிய அமெரிக்க அரசுகளின் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான அடக்குமுறை பற்றி திகைக்க வைக்கும் அளவிற்கு அரசியல் உதாசீனத்தை வெளிப்படுத்தியது. அது அவர் ஒருபொழுதும் கம்யூனிஸ்ட் கட்சியைத் தொழிலாள வர்க்கத்தின் முறையான பகுதி என்று ஒரு பொழுதும் கருதவில்லை என்ற குற்றச்சாட்டை உறுதிப்படுத்துகின்றது" என்று கூறுவதை என்னவென்று கூறுவது? ஸ்ரானிஸ்டுகளுக்கு எதிரான அடக்குமுறை பற்றிய அரசியல் உதாசீனம், கம்யூனிஸ்ட் கட்சியைப் பாதுகாக்க மறுப்பதைத் தவிர வேறு எதையும் பொருட்படுத்தாது. இதைத்தான் திட்டவட்டமாக பண்டா கூறுகின்றார். ஏனென்றால் அவர் அடுத்த பந்தியில் "கனனின் கோழைத்தனமான தவிர்த்திருத்தல்" பற்றிக் குறிப்பிடும் பொழுது கூறுகின்றார். இது நாம் ஏற்கனவே எடுத்துக் காட்டியது போல ஒரு பொய்யாகும். ஸ்ராலினிசம் பற்றிக் கனன் எழுதியவைக்கும் எதிரான தாக்குதலைப் பொறுத்தவரை, பண்டா கொக்கிரான் (Cochran) மற்றும் கிளாக்கின் (Clarke) பழைய பப்லோவாத நிலைப்பாட்டை கிளிப்பிள்ளை போல மீண்டும் கூறுகின்றார். முதலாளித்துவ சூனிய வேட்டைக்கு எதிராகக் கம்யூனிஸ்ட் கட்சியை அரசியல் ரீதியாகப் பாதுகாப்பதை, ஸ்ராலினிஸ்டுகளுக்கு அரசியல் குற்ற மன்னிப்பு வழங்குவதுடன் சமமானதாகக் கொள்ள கனன் மறுத்ததை இவர்கள் இருவரும் எதிர்த்தனர். ஸ்ராலினிஸ்டுகளுக்கு எதிரான அடக்குமுறை உருவாக்கிய அனுதாபத்தைப் பயன்படுத்தி பப்லோவாதிகள் இத் துரோகிகளுடன் அரசியல் சமரசம் காணும் மனநிலை ஒன்றை உண்டு பண்ண முயன்றார்கள். கனன் இந்த மோசடி முயற்சியை, சூனிய வேட்டையைப் பயன்படுத்தி ஸ்ராலினிச சார்பு சமரசவாத வடிவில் திருத்தல்வாதத்தைச் சோசலிசத் தொழிலாளர் கட்சியுள் புகுத்தும் முயற்சியைக் கனன் நிராகரித்தார். இக்காரணத்தினால் பப்லோவாதிகள் அவரை "ஸ்ராலினிச வெறுப்பு நோயாளி" என்று பெயர் சூட்டினர். கனனின் மற்றும் சோசலிசத் தொழிலாளர் கட்சியின் "ஸ்ராலினிச வெறுப்பு நோய்" க்கான இறுதி "நிரூபணம்" கொரியாவிற்குள் ஐக்கிய அமெரிக்க அரசுகளின் தலையீட்டுடன் தொடர்பானதாகும். கொரிய யுத்தத்தின் ஆரம்பகால கட்டத்தில் மிலிட்ரண்ட் மூன்றாம் முகாமின் நிலைப்பாட்டைக் கடைப்பிடித்ததும், இச்சம்பவத்தில், கனனின் தலையீடு - கிரநேடா ஆக்கிரமிப்புக்கு நோர்த்தின் எதிர்ப்புப் போன்று -- சமாதானவாத -- ஒழுக்க நெறி கேடுற்றதினால் மனம் புண்பட்டவரின் தலையீட்டின் தன்மையைக் கொண்டிருந்தது. மீண்டும் ஒரு முறை பண்டா பப்லோவாதப் பத்திரத்தில் "கட்சி நெருக்கடியின் வேர்கள்" என்ற பத்திரத்தில் தோன்றிய குற்றச்சாட்டுகளில் முற்று முழுதாகத் தங்கியிருக்கின்றார். கொக்கிரானும், கிளாக்கும், தமது கலைப்புவாத அரசியல் நிலைப்பாட்டினை ஆதரிக்க, ஸ்ராலினிசம் பற்றிய சோசலிசத் தொழிலாளர் கட்சியின் நிலைப்பாடு அதை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முகாமிற்குள் எடுத்துச் செல்லுகின்றது என்று நிரூபிக்க முயன்று கொண்டிருந்தனர். கொரியா சம்பந்தமாக சோசலிசத் தொழிலாளர் கட்சி வகுத்த நிலை இதை நிரூபித்துவிட்டது என்றனர். கொக்கிரான் மற்றும் கிளார்க்கின் படி : கொரிய யுத்தத்திற்கு, அரசியல் குழுவின் நேரடி வழிகாட்டலின் கீழ் செயற்படும் வாரப் பத்திரிகையின் முதற் கருத்து ஒரு மூன்றாம் முகாம் நிலைப்பாடாகும். அது இரண்டும் குட்டிச்சுவராகட்டும், கிரெம்ளினும் அமெரிக்க ஏகாதிபத்தியமும் குட்டிச்சுவராகட்டும் என்றது. எமது நிலைப்பாடு பூமின் (Poum) மற்றும் யூகோஸ்லாவிய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாடுகளில் இருந்து வேறுபடவில்லை. அதே போல அது சட்மன் வாதிகளின் நிலைப்பாட்டில் இருந்து அதிக தொலைவில் இருக்கவில்லை. உலக யுத்தத்திற்கு பின் இப்பொழுது கொரிய யுத்தம்தான் முதலாவது பெரிய நெருக்கடியாகும். அது முந்தைய கருத்துருக்கள் அத்தனையையும் பரீட்சித்தது. அது "ஸ்ராலினிசத்துடன் சமரசத்திற்குச் செல்லும்" அரசியல் போக்குகளிடம் இருந்துதான் பிரதான அபாயம் உள்ளது என்ற கனனின் அடிப்படை வாதத்தின் முற்று முழுதான பொய்மையை அது நேரடியாக நிரூபித்தது. இதற்கு நேர்மாறாக, இயக்கத்தின் மிகப் பெரும் அழுத்தங்களின் கீழ், அரசியல் குழுவின் முதல் நாட்டம், எதிர்த் திசையில் விட்டுக் கொடுப்பதாக, மூன்றாம் முகாமின் பக்கம் விட்டுக் கொடுப்பதாக இருந்தது. அரசியல் குழு சார்பு ரீதியாக ஒரு குறுகிய காலத்துள் தனது நிலைப்பாட்டை தலைமைத் தோழர்களின் எதிர்ப்புகளின் அழுத்தத்தின் கீழ் திருத்திக் கொண்டது என்பது உண்மைதான். ஆனால் அரை - சட்மன்வாத நிலைப்பாடு எடுக்கப்பட்டது என்ற உண்மை இருக்கத்தான் செய்கிறது.6 1950 ஆண்டு ஜூன் மாதத்தின் பிற்பகுதியில் யுத்தம் வெடித்த பின்னர் வெளிவந்த மிலிட்ரன்ட் பத்திரிகையின் முதல் மூன்று இதழ்களின் அரசியல் நிலைப்பாட்டில் பலவீனங்கள் இருந்தன. ஆனால் அவை "மூன்றாம் முகாமின்" சட்மன்வாத தன்மையைக் கொண்டிருக்கவில்லை. சட்மன் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை ஆதரித்தார். யூகோஸ்லாவிய கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரையில், டிட்டோவால் ஸ்ராலினிசத்திடமிருந்து அரசியல் ரீதியில் முறித்துக் கொண்டு அதற்கு எதிராகக் கோட்பாடு ரீதியான போராட்டத்தைத் தொடுக்கும் ஆற்றல் இல்லாமையும் கொரியாவில் ஐக்கிய நாடுகள் தொடுத்த "போலீஸ் நடவடிக்கைக்கு" அவர் கொடுத்த ஆதரவும் அம்பலப்படுத்தியது. (பூமின் நிலைப்பாடு சம்பந்தமாக நாம் கருத்துத் தெரிவிக்க முடியவில்லை ஏனென்றால் இப்பிரச்சனை சம்பந்தமாக நம்மிடம் பத்திரங்கள் இல்லை) முதல் இதழில் இருந்து, சோசலிசத் தொழிலாளர் கட்சி, ஐக்கிய அமெரிக்க அரசுகளின் தலையீட்டை எதிர்த்தது. அது இரண்டையும், ட்ரூமன் (Truman) நிர்வாகத்தையும் மற்றும் ஐக்கிய நாடுகளையும் கண்டித்தது. 1950 ஜூலை 3, இதழின் தலைப்பு, "தமது விதியைத் தாம் நிர்ணயிக்கும் கொரிய மக்களின் உரிமை மேலுள்ள கையை எடு" என்று இருந்தது. சோசலிசத் தொழிலாளர் கட்சியின் ஆரம்ப நிலைப்பாட்டின் பிரதான பலவீனம், அது வட கொரிய பரந்த மக்களின் போராட்டத்தில், ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஒடுக்கப்படும் மக்களின் மாபெரும் புரட்சிகர, இயக்கத்தைக் காணத் தவறியதாகும். இதற்குப் பதிலாக, அது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும், சோவியத் ஸ்ராலினிஸ்டுகளுக்கும் இடையிலான அரசியல் மோதல் என்ற குறுகிய பட்டகையினூடு அது பார்த்தது. இந்த நிலைப்பாட்டை மாற்றச் செய்த தீர்க்கமான தலையீடு கனனிடம் இருந்து வந்தது. யுத்தம் வெடித்த பொழுது கனன் கலிபோனியாவில் இருந்தார். அவர் சோசலிசத் தொழிலாளர் கட்சியின் அரசியல் நிலைப்பாடு சம்பந்தமாகத் தனது அதிருப்த்தியைத் தெரிவித்தார். அவர் விமானம் மூலம் நியூயோர்க் நகருக்குச் சென்றார். அங்கு அவர் விரிவுபடுத்தப்பட்ட அரசியல் குழுவின் 1950 ஜூலை 22 ம் தேதி சிறப்புக் கூட்டத்தில் பேசுகையில் பின்வருமாறு கூறினார்: அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான காலனித்துவ போராட்டத்தின் ஒரு பகுதிதான் கொரிய சமாச்சாரமாகும். சீனா சம்பந்தமான அதே மனப்பான்மையை நாம் கொண்டிருக்க வேண்டும். இந்த விஷயம் அதிலும் பார்க்க கூடிய கூர்மையுடன், ஏனென்றால் அமெரிக்கா நேரடியாகத் தலையிட்டுள்ளது. உலக நிலைமையின் அபிவிருத்தியில் இது ஒரு மிகவும் முக்கிய காரணிகளில் ஒன்று என்று நமக்குத் தோன்றுகின்றது. ஆசிய மக்களின் பிரமாண்டமான பலம் இதன் மூலம் கண்கூடாகத் தெளிவு படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் மொஸ்கோவால் ஒரு கயிற்றில் எவ்வகையிலும் முன்னும் பின்னும் இழுக்கப்படவில்லை. அது ஒரு நிஜமான மக்களின் இயக்கமாகும். அது இன்று உலகில் மிகவும் புரட்சிகரமான காரணியாக உள்ளது. அது சம்பந்தமாக எவ்வித ஐயப்பாடும் இல்லாத மனப்பான்மையைக் கொண்டிருக்க வேண்டும். இன்று நிகழ்வுகள் உருவெடுக்க ஆரம்பித்துள்ளது போல, அது தன்னை அமெரிக்க இராணுவ சக்திக்கு எதிரான ஆசிய மக்களின் இயக்கமாக மேலும் மேலும் வடிவம் கொள்ளத் தொடங்கும். சரியான கோரிக்கைகள் பத்திரிகையில் இங்கும் அங்குமாக எல்லாம் கூறப்பட்டுள்ளன. ஆனால் அது அளவு மிஞ்சிச் சிதறலாக உள்ளது. அத்தோடு அது சமச்சீர் படுத்தும் குற்றம் சாட்டுதலின் கீழ் புதைந்துபோய் உள்ளது. நமது பிரச்சாரத்தின் பிரதான மையமாக இந்தக் கோரிக்கைகள் முனைப்பாக நிற்க வேண்டும். கொரியாவை விட்டு வெளியேறு!, கீழை நாடுகளில் இருந்து வெளியேறு!, துருப்புகளை மீளப் பெறு!, கொரிய மக்களை தமது விவகாரங்களைத் தாமே தீர்க்க விடு! சீன அனுபவத்தின் பின் நேர்ந்த நேர்வுகளில் இருந்து ஒரு விஷயம் துல்லியமாக வருகின்றது, அதாவது நாம் படிப்படியாக அதைக் கற்பதோடு, உள்வாங்கிக் கொண்டும் வருகின்றோம். இவை பிரமாண்டமான பரந்த மக்களின், இலட்சோப லட்ச மக்களின் உண்மையான புரட்சிகர இயக்கங்களாகும். ஆனால் ஒரு வாய்ப்புக் கேடு என்னவென்றால், அவை எல்லா இடங்களிலும் ஸ்ராலினிசத் தலைமைகளின் கீழ் ஆரம்பிக்கின்றன. ஆனால் அதை நாம் நமது ஆதரவை வாபஸ் வாங்கவோ அல்லது நமது ஆதரவை ஒவ்வாமை ஒதுக்கீடுகள் மூலம் மழுங்கடிக்கவோ ஒரு நிபந்தனையாக்குவோமாயின், நாம் நடைமுறையில் சட்மன்வாதிகள் சடங்கு ரீதியாகவும் மற்றும் மட்டு மீறிய அர்த்தத்திலும் செய்வதைத்தான் செய்வோம். நிஜமான போராட்டங்களில் இருந்து ஒதுங்கி நிற்க அவர்கள் எப்பொழுதும் காரணங்களைக் கண்டுபிடித்துக் கொள்ளுகின்றார்கள். உலகிலும் மிகப் பெரும் புரட்சிகர சாத்தியக் கூறுகளை முன் வைக்கும் உண்மையான புரட்சிகர இயக்கங்கள் மட்டுமல்லாது அவை சுதந்திரம் நோக்கிய போக்கின் வளர்ச்சியையும் வளர்க்கின்றன. யூகோஸ்லாவிய வளர்ச்சியில் இருந்து சிலவற்றைக் கற்றோம். ஒரு பொம்மையாட்ட அர்த்தத்தில், ஆசியாவில் உள்ள இந்த பரந்த இயக்கங்களை கிரிம்ளின் தொலைவுக் கட்டுப்பாட்டைக் கையாண்டு இந்த இயக்கங்களை கையாள முடியுமா என்பது பற்றி எனக்கு மிகவும் ஐயப்பாடு உண்டு. கீழை நாடுகளின் மேல் மேலாதிக்கம் செலுத்த அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் கண்மூடிப் பிசகான இராணுவ வேலைத்திட்டத்திற்கு வடிவமைக்கும் பொழுது, நாம் "இரண்டும் குட்டிச் சுவராகட்டும்" என்று சிறிதளவு கூடத் தொனிக்கக் கூடிய எந்த ஒரு கொள்கையில் இருந்து நாம் முற்று முழுதாக வெளியேறிவிட வேண்டும். காலனித்துவ கிளர்ச்சி எழுச்சியில் கோடான கோடி மக்கள் சம்பந்தப்பட்டுள்ளார்கள். அவர்கள் அனேகமாக முழு சமநிலையையும் குலைத்துவிடும் தீர்க்கமான சக்தியாக மாறக் கூடும். இன்றைய கட்டத்தில் அவை ஸ்ராலினிசத்தினால் வழி நடத்தப்படுகின்றன என்ற உண்மையைப் பொருட்படுத்தாது நாம் இந்த இயக்கங்கள் அத்தனையையும் - பிலிப்பைன்சில், இந்தோனேசியாவில், இண்டோச்சீனாவில், சீனாவிலேயே மற்றும் கொரியாவின் கிளர்ச்சி எழுச்சி இயக்கங்களை - ஆதரிக்க வேண்டும். கொரியா என்ற ஸ்தூலமான விஷயத்தில், ஒரு நாளுக்கான கொள்கையாக அல்லாது, இதன் பின்னரும் ஏற்படக் கூடிய அமெரிக்க செயல் வேட்டை நடவடிக்கைகள் சம்பந்தமாக நமது எதிர்ச் செயலின் ஒரு பாணியாக ஒரு கொள்கையை நிறைவேற்றுவது அவசியம் என்று நாம் கருதுகின்றோம். அதை எப்படி நாம் செய்யப் போகின்றோம், ஒவ்வொரு விஷயத்திலும் எந்தத் திட்டவட்டமான முழக்கங்கள் என்பன பற்றி நாம் தனிய விவாதித்துக் கொள்ளலாம். ஆனால் பிரதான அம்சம் பற்றித் தெளிவாக இருக்க வேண்டும். பத்திரிகையில் அதுதான் நமது நிலைப்பாட்டின் அச்சாணியாக அமைய வேண்டும். மேலும் கூர்மையான ஏகாதிபத்திய விரோத நிலைப்பாடு. மற்றும் காலனிய இயக்கத்தை மேலும் கூர்மையான முறையில் பாதுகாத்தல்.7 இந்தத் தலையீடு, கொரியப் புரட்சியை அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் பாதுகாக்கும் போராட்டத்தின் மையத்தில் சோசலிசத் தொழிலாளர் கட்சியை நிறுத்தியது. விரிவுபடுத்தப்பட்ட அரசியல் குழுவில் நடந்த கலந்துரையாடலை அடிப்படையாகக் கொண்டு, அமெரிக்க தலையீட்டைக் கண்டிக்கும் பகிரங்க அறிக்கை ஒன்றைக் கனன் வரைந்தார். அமெரிக்க சட்ட மாமன்றத் தலைவருக்கான பகிரங்கக் கடித வடிவில் எழுதப்பட்ட நன்கு பிரபலமான இக் கட்டுரையை, பண்டா கொச்சையாக "சமாதானவாத - ஒழுக்க முறை ரீதியிலான மனம் புண்படலின்" வெளிப்பாடு --- கிரேநெடா ஆக்கிரமிப்பிற்கு நோர்த்தின் எதிர்ப்பைப் போன்று" என்று சேறடிக்கப்பட்டுள்ளது. கனன் அவருடைய பலவீனங்களுடன் இல்லாது இருக்கவில்லை. அவர் பாரிய தவறுகளைச் செய்துள்ளார். புரட்சிகர இயக்கத்தினுள் அவருடைய நீண்ட பணிக் காலத்தின் முடிவுறும் தசாப்தத்தில் அவர் சோசலிசத் தொழிலாளர் கட்சியின் மேல் அமுக்கிக் கொண்டு வந்திருந்த கடுமையான வர்க்க அழுத்தங்களுக்குத் தனது எதிர்ப்பாற்றலை இழந்து சரணடைந்தார். ஆனால் கொரிய யுத்தத்தை எதிர்கொள்கையில் கனனின் பலங்கள் முன்னணிக்கு வந்தன. இவற்றுள் ஒன்றாக தொழிலாளர் இயக்கத்தினுள் அரை நூற்றாண்டு காலமாக தொடுத்த போராட்டத்தின் மூலம் அவர் வளர்த்தெடுத்திருந்த அவரது இயற்கைத் திறமாக இருந்த கிளர்ச்சியாளனின் ஆற்றல் இருந்தது. அவருக்கு அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்தைப் பற்றி "நுண்ணிய உள்ளுணர்வு" இருந்தது. இதை டிரொட்ஸ்கி பாராட்டினார். பேர்ண்ஹாம் மற்றும் சட்மனுக்கு எதிரான போராட்டத்தில் கனனின் பங்களிப்பான "பாட்டாளி வர்க்கக் கட்சிக்கான போராட்டம்" என்ற நூலை டிரொட்ஸ்கி "உண்மையான தொழிலாளர் தலைவரின்" படைப்பு என்றார். கம்யூனிச விரோத மக்காதி (McCarthyite) வெறியாட்டத்தின் மத்தியில் சட்ட பிரச்சனைகளின் காரணமாக (அதாவது கட்சியை ஒரு இயக்கம் என்ற அடிப்படையில் பாதுகாத்துக் கொள்ள) தனிப்பட்ட அறிக்கையாகத் தயாரிக்கப்பட்ட கொரிய யுத்தத்தைப் பகிரங்கமாகக் கண்டிக்கும் அறிக்கையில் கனன் அமெரிக்க தொழிலாளர்களின் நனவிற்குப் பாதை அமைக்க முயன்றார். அமெரிக்கத் தொழிலாளர்களின் வர்க்க ஐக்கிய உணர்வுகளுக்கு மற்றும் முதலாளிகளின் மேல் அவர்களுக்கு உள்ள அவநம்பிக்கைக்கு அறைகூவல் விட்டார். அமெரிக்க ஆக்கிரமிப்பு கிளப்பியுள்ள மையமான பிரச்சனைகளை விளக்குவதோடு இராணுவ வாதத்திற்கு மற்றும் ஒடுக்குதலுக்கு எதிரான அவர்களின் இயலறிவு ரீதியான வெறுப்புக்குக் குரல் கொடுத்தார். சில வேளை பண்டாவிற்குக் கனனின் இலக்கிய நடை நயம் பிடிக்காமல் இருக்கக் கூடும். ஆனால் அது ஒரு பொழுதும் சோசலிசத் தொழிலாளர் கட்சித் தலைவரின் தலையீடு வெறுமனே "சமாதானவாத - ஒழுக்க நெறி கேடுற்றதினால் மனம் புண்படல்" என்ற முட்டாள்த் தனமான கூற்றை நியாயப்படுத்தாது. 1950 ஜூலை 31ம் தேதிய பகிரங்கக் கடிதத்திலிருந்து நாம் மிகவும் முக்கிய பகுதிகளை மேற்கோள் காட்டுவோம்: கனவான்களே, நான் கொரியாவில் உங்களது நடவடிக்கைகளுடன் உடன்படவில்லை. தனிப்பட்ட குடிமகன் என்ற ரீதியில் உங்களது கொள்கையை அடிப்படை ரீதியில் பின்வருமாறு மாற்றிக் கொள்ளும்படி மனுச் செய்கின்றேன்: அமெரிக்க துருப்புக்களைத் திருப்பி அழைத்து கொரிய மக்களைத் தனியவிடு. இந்தக் கோரிக்கைக்கான காரணங்களைப் பின்வரும் பந்திகளில் விபரமாக முன் வைக்கின்றேன். ஆனால் வாதத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர், நான் உங்களைப் பற்றி என்ன கருதுகின்றேன் என்பதை உங்களுக்குக் கூற, நான் உங்களது அனுமதியை இரந்து கேட்கின்றேன். நீங்கள் ஒரு கயவர் கூட்டம். நீங்கள் மனித இனத்திற்குத் துரோகிகள். உங்களது முரட்டுத் தனத்தையும், ஈனத்தனத்தையும் நான் வெறுக்கிறேன். நான் என்றும் நேசித்து வந்த எந் நாட்டைப் பற்றி நான் வெட்கப்பட என்னைச் செய்துள்ளீர்கள். எந்த ஒரு இனத்தையும் போல எனது இனமும் நல்லது என்று எண்ணிவந்த என்னை நீங்கள் எனது இனத்தைப் பற்றி வெட்கப்பட வைத்து விட்டீர்கள். கொரியாவில் அமெரிக்க தலையீடு, ஒரு கோர ஏகாதிபத்திய படையெடுப்பாகும். அது இந்தோ-சீனாவிற்கு எதிரான பிரெஞ்சு யுத்தத்திலிருந்தோ அல்லது இந்தோனேசியாவின் மேல் நெதர்லாந்தின் தாக்குதலில் இருந்தோ வேறுபட்டதல்ல. அமெரிக்க இளைஞர்கள் 10,000 மைல்களுக்கு அப்பால் கொல்லவும், கொல்லப்படுவதற்கும் அனுப்பப்படுகின்றார்கள். அவர்கள் அனுப்பப்படுவது கொரிய மக்களை விடுதலை செய்வதற்காக அல்ல, ஆனால் அவர்களைப் போரில் வென்று கீழ்ப்படுத்தி அடிமைப்படுத்தவேயாகும். இது அட்டூழியமானது. இது ஒரு கோரச் செயலாகும். கைப்பொம்மை றீ (Rhee) ஆட்சியின் விலை கொடுத்து வாங்கப்பட்டு பணம் கட்டப்பட்டு வரும் முகவர்களைத் தவிர -கொரிய மக்கள் முழுமையாக ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்துப் போராடுகின்றார்கள். இதன் காரணமாகத்தான் கொரியாவில் இருந்து பத்திரிகைகளுக்கு அனுப்பப்படும் செய்திகள், "ஊடுருவும்" தந்திரோபாயங்கள், "கெரில்லாக்களின்" அதிகரிக்கும் நடவடிக்கைகள், "எளிதில் மாறிக் கொண்டிருக்கும்" போர் முனை, "சுதேசிகளின்" "சிடுசிடுப்பான" மற்றும் "நம்ப முடியாத" தன்மைகள் என்பன பற்றி மேலும், மேலும் குறை கூறுகின்றன. கொரிய மக்கள் வோல் ஸ்றீட்டின் "விடுதலையாளனுக்கு" எதிராகக் கொடிய வெறுப்பைக் கொண்டுள்ளார்கள். அவர்கள் அமெரிக்காவினால் பொறுப்பேற்று அதன் ஆதரவில் உள்ள மிருகத்தனமான, மற்றும் ஊழல்மிக்க சிக்மன் றீ (Syngman Rhee) சர்வாதிகாரத்தை மரணம் வரை வெறுக்கின்றார்கள். இது தென் கொரியாவை அவல நிலையின், சித்திரவதையின் மற்றும் சுரண்டலின் சிறைக் கூடாரமாக்கி உள்ளது-- சம்பவங்கள் நிரூபித்துள்ளது போல ஜூன் 25ம் தேதி ஏற்பட்ட வெடிப்பு கொரிய மக்கள் தாமே தமது நாட்டை ஐக்கியப்படுத்த, அன்னிய மேலாதிக்கத்தில் இருந்து தம்மை விடுவிக்க மற்றும் முழுமையான தேசிய சுதந்திரத்தை வெல்ல அவர்களுக்கு உள்ள பிரமாண்டமான விருப்பத்தை வெளிப்படுத்துகின்றது. கிரெம்ளின் இப்போராட்டத்தைத் தனது பிற்போக்கு நோக்கங்களுக்குப் பயன்படுத்த முயலுகின்றது. அதனால் வாஷிங்டனுடன் மற்றுமொரு உடன்பாடு பெற முடியுமாயின் நாளை இப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்துவிடும். ஆனால் போராட்டமோ, கொரிய மக்களின் இதய பூர்வமான ஆதரவை திணற வைக்கும் அளவிற்குத் தன்னகத்தே பெற்றுள்ளது. இது மேற்கத்திய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகக் கோடானு கோடி காலனித்துவ மக்கள் தொடுக்கும் மகத்தான கிளர்ச்சி எழுச்சியின் ஒரு பகுதியாகும். இதுதான் நிஜமான உண்மை, பிரச்சனையின் நிஜப் பொருள். காலனித்துவ அடிமைகள், தொடர்ந்தும் அடிமைகளாக இருக்க விரும்பவில்லை.8 இந்த அறிக்கையானது நான்காம் அகிலத்தின் பகுதிகளால், கொரியாவின் மேல் ஐக்கிய அமெரிக்க அரசுகளின் படையெடுப்பை எதிர்த்து உலகம் முழுவதும் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டப் பயன்படுத்தப்பட்டது வேறுபட்ட சூழ்நிலைமைகளின் கீழ், கனனின் இந்த அறிக்கையை "கிரனெடா ஆக்கிரமிப்பிற்கு எதிரான நோர்த்தின் எதிர்ப்புடன்" ஒப்பிடுவதையிட்டு இந்த நூல் ஆசிரியர் தான் அளப்பரிய பாராட்டுக்களை பெற்றதாகக் கருதுவார். 1983 அக்டோபரில் கிரனெடா மேல் ஐக்கிய அமெரிக்க அரசுகள் படையெடுத்தது பற்றித் தொழிலாளர் கழகம் எடுத்த நிலைப்பாட்டைப் பண்டா மற்றும் சுலோட்டர் 1983ம் ஆண்டில் கண்டனம் செய்தார்கள். அவர்கள் புரட்சிகர தோல்விவாத நிலைப்பாட்டைத் தொழிலாளர் கழகம் வகுக்கவில்லை என்று சாடினார்கள். இந்தத் தாக்குதலின் அடிப்படையாக அமைந்திருந்தது புலட்டின் பத்திரிகையின் தலைப்பு சம்பந்தமான கருத்து வேறுபாடாகும். படையெடுப்பு பற்றி ஜனாதிபதி றீகன் தனது அறிக்கையைத் தொலைக்காட்சியில் வாசித்த மறுநாளே, ஜனாதிபதி ஒரு பொய்யன் என்று கண்டனம் செய்யும் தலைப்புடன் புலட்டீன் பத்திரிகை வீதிகளில் விற்பனையாயிற்று. இது ஒரு "பிரச்சாரவாத" எதிர்ப்பு நடவடிக்கை என்று நமக்குக் கூறப்படுகின்றது! தொழிலாளர் கழகம் அதன் அறிக்கையில், தொழிற் கட்சியை அமைப்பதன் மூலம் முதலாளிகளுக்கு எதிராகத் தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியில் ஐக்கியப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியது. இந்த வலியுறுத்தலைச் சிறப்பாக சுலோட்டரும் பண்டாவும் எதிர்த்தார்கள். தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுதந்திரம் பற்றிய இந்தப் "பலமான வலியுறுத்தலுக்கு" அவர்கள் வன்மையாக ஆட்சேபம் தெரிவித்தார்கள். இந்த விமர்சனம் வலது புறத்திலிருந்து தொடுக்கப்பட்ட ஒரு தாக்குதலாகும். அத்தோடு இது கன்னைவாத தேவைகளுக்காகத் தொடுக்கப்பட்டது மட்டுமல்லாது அது பொய்யானதும் கூட. 1985ம் ஆண்டின் இலையுதிர் காலத்தில் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் நெருக்கடி வெடித்தெழுந்தது. 1982 இல் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் அரசியல் மற்றும் தத்துவார்த்த வேலைகள் சம்பந்தமாக தொழிலாளர் கழகம் விமர்சனம் செய்திருந்தது. இதற்குத் தொழிலாளர் கழகத்திற்குத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று சுலோட்டரும், பண்டாவும், ஹீலியுடன் கூட்டாகச் சதி செய்ததை தொழிலாளர் புரட்சிக் கட்சியின் நெருக்கடி வெடித்தெழுந்ததைத் தொடர்ந்து சுலோட்டரும் பண்டாவும் ஒத்துக் கொண்டார்கள். அனைத்துலகக் குழுவினுள் தொழிலாளர் கழகத்தின் நிலையை கீழறுப்பதற்காகப் பொய்யாகத் தொழிலாளர் கழகம் டிராட்ஸ்கிச கோட்பாடுகளின் அடிப்படையில் கிரனெடாவின் மேலான படையெடுப்பை எதிர்க்கத் தவறிவிட்டது என்ற புனைவு செய்யப்பட்டது. ஹூலி, பண்டா மற்று சுலோட்டர் ஆகியோர் இப்படியான நடவடிக்கைகளை கையாண்டனர் என்ற உண்மை தொழிலாளர் புரட்சிக் கட்சித் தலைமையின் சீரழிவின் அளவை எடுத்துக் கூறுகின்றது. கொரிய யுத்தம் சம்பந்தமாக சோசலிசத் தொழிலாளர் கட்சி எடுத்த நிலைப்பாடு பற்றிய பண்டாவின் விமர்சனங்களை, அவர் இரண்டாம் உலக யுத்தம் சம்பந்தமாக அது எடுத்துக் கொண்ட நிலைப்பாடு பற்றி கூற இருப்பவையுடன் ஒப்பிடுகையில் அவை மென்மை நயம் உள்ளனவாக உள்ளன. இதைப் பற்றி அடுத்த அத்தியாயத்தில் அலசிப் பார்ப்போம் |
Copyright 1998-2003 World Socialist Web Site All rights reserved |