World Socialist Web Site www.wsws.org |
THE THIRD CHINESE REVOLUTION AND ITS AFTERMATHResolution Adopted by 1955 SWP Conventionமூன்றாம் சீனப்புரட்சியும் அதற்குப் பின்னரும்1955 SWP கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானம்Back to screen versionமூன்றாம் சீனப் புரட்சி கோமின்டாங் ஆட்சியை அகற்றி, சீனாவில் ஒரு நூற்றாண்டுக் காலமாக நடந்துவந்த கடிவாளமற்ற ஏகாதிபத்தியக் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. காலதாமதமான முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியின் கடமைகளை அது மேற்கொண்டது, நாட்டின் சிதறலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தது, விவசாயத்தின் மீது நிலப்பிரபுக்களும், கந்து வட்டிக்காரர்களும் கொண்டிருந்த ஆதிக்கத்தை வேரோடு சாய்த்தது, குடும்பங்களில் நிலவிய ஆசிய உறவுகளை அழித்ததோடு பிற நிலபிரபுத்துவமுறைக் குப்பைகளையும் துடைத்தெறிந்தது. பொருள்சார்ரீதியாகவும் கலாச்சாரரீதியாகவும் நாடு முன்னேற்றம் கண்டிருக்கிறது; அத்துடன் எழுத்தறிவின்மைக்கு எதிரான போராட்டத்தையும், இழிஒழுக்கம் மற்றும் கயவர்களுக்கு எதிரான பிரச்சாரத்தையும் கையிலெடுத்திருக்கிறது. மூன்றாம் சீனப் புரட்சி முதலாளித்துவ அரசை இல்லாதொழித்துள்ளது; தொழிற்துறை, நிதியியல், கடன்வசதி ஆகிய முக்கிய துறைகளை அரசாங்கத்தின் உடமையாக வைத்திருப்பதன் அடிப்படையில் திட்டமிடுதலை ஸ்தாபித்திருக்கிறது; அத்துடன் வெளிநாட்டு வர்த்தகத்தில் ஏகபோகத்தை அறிமுகப்படுத்தியது. புரட்சியானது அதனுடைய வெற்றிகளின் காரணத்தால், சீனாவை ஏகாதிபத்தியத்தின் ஆதிக்க வளையத்திலிருந்து பிரித்து உலக முதலாளித்துவத்திற்கு சீர்செய்ய முடியாத ஒரு பயங்கர அடியைக் கொடுத்தது. இது பின்வரும் சக்திகளுக்கு இடையிலான உலக உறவை முற்றிலும் மாற்றியது: a) ஏகாதிபத்திய சக்திகளுக்கும், காலனித்துவ மற்றும் அரைக் காலனித்துவ நாடுகளுக்கும் இடையே; b) முதலாளித்துவ நாடுகளுக்கும் சோவியத் முகாமிற்கும் இடையே; c) ஸ்ராலினிசத்திற்கும் சமூக ஜனநாயகத்திற்கும் இடையே; மற்றும் இறுதியாக d) அதன் உலகளாவிய அமைப்புக்குள் புதிய முரண்பாடுகளையும் மற்றும் மாறும் இடை உறவுகளையும் ஸ்ராலினிசம் முகங்கொடுத்தது. இதையொட்டி புரட்சிகர முன்னணிப் படையினரின் முன் ஏராளமான பல புதிய பிரச்சினைகள் வந்து நின்றன. மூன்றாம் சீனப் புரட்சியின் விரிவெல்லை, பரிமாணம் மற்றும் உத்வேகம் ஆகியவை மற்றும் அவற்றினால் விளையும் வர்க்க உறவுகள், அத்துடன் ஸ்ராலினிசத் தலைமையாலும், மற்றும் நாட்டின் பிற்போக்குத்தன மரபினாலும், ஏகாதிபத்தியம் மற்றும் கிரெம்ளின் அதிகாரத்துவம் கொடுக்கும் தொடர்ந்த அழுத்தத்தினாலும் சுமத்தப்பட்ட வரம்புகள் ஆகியவற்றை நாம் மூன்றாம் சீனப் புரட்சியின் தலைவிதி, மனிதகுலத்தினுடையதைப் போலவே, முன்னேறிய முதலாளித்துவ நாடுகளுக்கு புரட்சி விரிவாக்கம் காண்பதில் தான் பிணைந்துள்ளது. அது பிறவெங்கிலும் போல சீனாவிலும் புரட்சிகர வெற்றிகளைப் பாதுகாப்பதில் - அதாவது உள்முகமாகவும் வெளியிலிருந்தும் அவற்றை நோக்கி வரும் ஆபத்துக்களை முன்கணிப்பது, தக்க நேரத்தில் அந்த ஆபத்துகளுக்கு எதிராக எச்சரிப்பது, மற்றும் பொதுவாக தொழிலாளர்களை அவர்களுடைய சோசலிசத்திற்கான போராட்டத்தை சோவியத் மற்றும் சீன வெகுஜன வெற்றிகளுடன் இணைப்பதை நோக்கி வழிநடத்தி அதன் மூலமாக உலக சோசலிச ஒழுங்கின் இறுதி வெற்றியை உறுதி செய்வது ஆகியவற்றில் - தொழிலாள வர்க்கத்தின் முன்னணிப் படையினர் பெற்றிருக்கும் திறனில் அதிகமாக சார்ந்திருக்கிறது. சீனப் புரட்சியும் ஏகாதிபத்தியமும் சர்வதேச அரசியல் துறையில் மூன்றாம் சீனப் புரட்சி, போருக்குப் பிந்தைய வர்க்க உறவுகள் மற்றும் சக்திகள் ஆகியவற்றை ஒரு புதிய முறையில் நிர்ணயித்துள்ளது. சீனா என்கிற தலைமைப் பரிசுக்காகவே பசிபிக்கில் அமெரிக்கா போர் புரிந்தது. ஜப்பான் தோல்வி அடைந்த பின்னர், அமெரிக்க ஏகபோகவாதிகள் சீனாவை தம் கைப்பிடிக்குள் கொண்டு வந்து அந்த நாட்டை சியாங் கே-ஷேக்கின் மூலம் ஆள்வதற்கு எதிர்பார்த்தனர். அமெரிக்க முதலாளித்துவத்தின் போருக்குப் பிந்தைய பொருளாதாரப் பிரச்சினைகளுக்கான தீர்வு இந்த விஸ்தாரமான மற்றும் அபிவிருத்தியடையாத நாட்டில் இருப்பதை அவர்கள் கண்டனர். நுகர்வுப் பொருட்களுக்கான சந்தையாகும் சாத்தியவளம், மூலப்பொருட்களின் பாரிய வளங்கள் ஆதாரவளங்களின் செறிவு, ததும்பி வழியும் மலிவு உழைப்பு என மூலதன முதலீடுகளுக்கு ஒப்பற்றதொரு களத்தை இங்கு அது கண்டது. போரிலும் யால்ட்டாவிலும் தான் வெற்றி கொண்டதாக அமெரிக்கா நம்பிய விடயங்களை அதற்குப் பதிலாக புரட்சி எடுத்துக் கொண்டது. 1947-48ல் ஏற்பட்ட தலைகீழ் மாற்றம் சோவியத் ஒன்றியத்தின் அரசியல் மற்றும் பிராந்திய வகையிலான தனிமைப்படலை அகற்றிவிட்டது. அது கிட்டத்தட்ட நான்கு மில்லியன் சதுர மைல்களையும், 550 மில்லியனுக்கு அதிகமான மக்கள் தொகையையும் உலகப் பொருளாதாரத்தில் சோவியத் துருவமுனைக்குச் சேர்த்தது. சீனாவும் சோவியத் ஒன்றியமும் ஒன்றாக இடைவெளியற்ற 12.2 மில்லியன் சதுர மைல்கள் கொண்ட நிலப்பகுதியை, அதாவது பூமியின் பரப்பில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தின. இப்பகுதியின் மொத்த மக்கள் தொகை 750 மில்லியன் என்று இருந்தது. இந்த வெளிப்பட்ட புள்ளிவிபரங்கள் மூன்றாம் சீனப் புரட்சியின் சர்வதேசத் தாக்கத்தை நன்கு சுட்டிக்காட்டுவதாய் இருக்கின்றன. உலக அரங்கில் இப்புரட்சி அதன் சக்தியை நிரூபித்தது. சீனப் புரட்சிகர இராணுவம்தான் யாலு ஆற்றுப்பகுதியில் இருந்து மக்கார்தரின் படைகளை விரட்டியடித்து, கொரியா முழுவதையும் வெற்றிகொள்ள அமெரிக்கா போட்ட திட்டங்களை கைவிடச் செய்தது. சீனா அளித்திருந்த பொருள்சார் உதவிகள்தான் —அந்நாட்டின் புரட்சி அளித்த ஊக்கமிக்க உத்வேகம் பற்றிக் கூறத் தேவையில்லை — வியட் மின் ஏகாதிபத்தியத்தினை வெற்றி காண உதவியது. புரட்சியின் மூலம் ஒரு அரைக் காலனித்துவ சரிவுநிலையிலிருந்து உலக சக்தி என்னும் நிலைக்கான சீன எழுச்சி, ஒரு பெரியளவு மக்கள் எண்ணிக்கையும் மற்றும் மஞ்சூரியா, திபெத், வட கொரியா, வடக்கு இந்தோ-சீனா ஆகியவற்றுடன் சேர்ந்து மிகப் பெரும் நிலப்பகுதியும் ஏகாதிபத்திய சுற்றுவட்டத்திலிருந்து தம்மை பிரித்தெடுத்துக் கொண்டு விட்டதைக் குறித்து நின்றது. இது சர்வதேச சக்திகளின் இடையிலான உறவை, அதிலும் குறிப்பாக முதலாளித்துவத்தின் காலனித்துவ துருவமுனை முழுவதிலுமான சமூக உறவுகளை மாற்றியமைத்திருக்கிறது. காலனித்துவ பரந்த வெகுஜனங்ளின் மீது சீனப் புரட்சி கொண்டிருந்த தாக்கம் உள்நாட்டு முதலாளித்துவ வர்க்கத்தை “நடுநிலைவாதம்” ("neutralism") என்ற பதாகையை ஏந்த வைத்திருக்கிறது. எப்படி காந்தி இந்திய மண்ணில் மந்தமான எதிர்ப்பிற்கு உருவடிவமாக நின்றாரோ அதே வகையில் தான் நேரு இன்று உலக அரங்கில் இந்த நடுநிலைவாதத்திற்கு உருவடிவம் கொடுத்து நிற்கிறார். வெகுஜனங்ளின் மீதான அச்சம் என்கின்ற அதே காரணத்திற்காக. சுதேச முதலாளித்துவங்கள் சீனப் புரட்சியை நடுநிலைப்படுத்த, அதாவது நிரந்தரப் புரட்சியை சீன எல்லைகளுக்குள் மட்டுப்படுத்த இயலுமானளவிற்குதான் அவற்றால் அதிகாரத்தில் தொடர முடியும். சீனப் புரட்சியும் போரின் நிச்சயமும் மூன்றாம் சீனப் புரட்சி பிற பின்விளைவுகளையும் கொண்டிருந்தது. ”ஜனநாயக” ஏகாதிபத்தியவாதிகளுக்கும் கிரெம்ளின் அதிகாரத்துவத்திற்கும் இடையே இருந்த போர்க்காலக் கூட்டணி, ஐரோப்பிய புரட்சியைக் கட்டுப்படுத்துவதில் கிரெம்ளினுடைய உதவி தங்களுக்கு இனித் தேவையில்லை என்று ஏகாதிபத்தியவாதிகள் முடிவெடுத்தபோது முறிந்து போயிற்று. ஆசியாவின் பரந்த மக்கள் மற்றொரு முனையில் அவர்கள் மீது மற்றொரு போராட்டத்தைத் தொடக்கிபோது ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகத் தாக்குதல் நடத்துவதற்கு ஏகாதிபத்தியவாதிகள் தயாராயினர். இப்போராட்டத்தில், இந்தோ-சீனா, கொரியா, மலேசியா போன்று பல நாடுகளில் தோன்றிய இரத்தளக்களரி நிறைந்த உள்ளூர் பிராந்தியப் போர்களின் மூலம் பனிப்போர் கூர்மையடைந்தது. சோவியத் ஒன்றியத்தின் மீது திட்டமிடப்பட்டிருந்த ஏகாதிபத்தியத் தாக்குதல் ஒத்திவைக்கப்படுவதற்கு ஆசியாவின் பரந்த மக்களே பிரதானக் காரணம் ஆகும்; அதற்குப் பதிலாக இன்னும் விரிந்த அளவிலான ஒரு போருக்கான தயாரிப்பை நடத்தும் கட்டாயத்திற்கு அமெரிக்கா தள்ளப்பட்டது. முக்கியமாக மூன்றாம் சீனப் புரட்சியினால் உலக சக்திகளின் புதிய உறவு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், ஏகாதிபத்தியவாதிகள் மூன்றாம் உலகப் போரிலான வெற்றி குறித்து உறுதிப்படக் கூற முடியவில்லை என்றாயிற்று. இதனையடுத்து அமெரிக்க இராணுவ மற்றும் இராஜதந்திர மூலோபாயமானது மிதமிஞ்சிய உலக மேலாதிக்கத்தை எட்டுவதை நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தது. சீனப் புரட்சியும் சமூக ஜனநாயகமும் மாஸ்கோவைப் போலவே, பெய்ஜிங்கில் இருந்த ஸ்ராலினிசவாதிகளும் பிரிட்டனிலும் பிற இடங்களிலும் இருந்த சமூக ஜனநாயகவாதிகளுடன் தங்கள் உறவுகளை மேம்படுத்திக் கொள்வதற்கு மூன்றாம் சீனப் புரட்சியைப் பயன்படுத்தினார்கள், தொடர்ந்து பயன்படுத்துவார்கள். செம்மையான சீர்திருத்தவாதிகள் புரட்சியை விடவும் வெறுப்பதோ அல்லது அஞ்சுவதோ வேறு எதுவும் கிடையாது. இதைத்தான் அவர்கள் சீன எழுச்சியின்போது நிரூபித்தனர். அவர்கள் கொரியாவில் ஏகாதிபத்தியத் தலையீட்டிற்கு ஆதரவு கொடுத்தனர். சீனப் புரட்சி விரிவடைவது குறித்த தங்களுடைய பெரும் அச்சத்தை அதில் அவர்கள் வெளிப்படுத்தினர். பெய்ஜிங் தனது குறுந்தேசியவாத நோக்கங்களுக்கு உறுதிபூண்டதன் பிறகும், தமது சொந்த முதலாளித்துவத்தினரின் நலன்களுக்கு சேவையாற்றிய நிலையிலும் மட்டும் தான் அவர்கள் சீனப் புரட்சியுடன் சமாதானம் செய்து கொண்டு அதனுடன் நட்பு பாராட்டுவதாய்ப் பாசாங்கு செய்ய முடிந்தது. சீனாவிற்கான ஒரு பயணம், அங்கு சமாதான சகவாழ்விற்கான ஒரு அழைப்பு என்பது ஒரு இடது மூடுதிரையை கொடுக்கும் மலிவான விலையாகும், குறிப்பாக பெய்ஜிங் செலவுகளை ஏற்றுக் கொள்ளும்போது. சீனப் புரட்சியும் கிரெம்ளின் அதிகாரத்துவமும் கிரெம்ளின் அதிகாரத்துவம் சவாலற்று கடிவாளமற்று தனது ஆட்சியைச் செலுத்திக் கொண்டிருந்த ஸ்ராலினிசத்தின் மிகப் பிரம்மாண்டமான சர்வதேச எந்திரத்துக்குள், அது இப்போது சீனப் புரட்சியை புதிய இடையுறவுகளுடன் எதிர்கொள்ள நேர்ந்தது. கிரெம்ளின் அதிகாரத்துவம் தான் முன்னர் ஒட்டுமொத்த ஒரே “உலகத் தலைவராக”, அனைத்து அறிவு, மதிநுட்பம், அதிகாரம் இன்னும் பல பலவிற்கும் ஒரே உறைவிடமாக இருந்திருந்தது. இப்பொழுது மாஸ்கோவின் அரசியல் ஏகபோகம் மீட்க முடியாத வகையில் இழக்கப்பட்டுவிட்டது. இன்று பீக்கிங்கிற்கு குறைந்தபட்சம் சம அளவில் குரலும் வலுவும் இருக்கின்றன. ஸ்ராலினிசத்தின் உலக ”ஒற்றைச்சிற்பம்” ("monolith") ஏற்கனவே மாஸ்கோ மற்றும் பெய்ஜிங் செல்வாக்கு பிராந்தியங்களாக செதுக்கி உருமாற்றப்பட்டு அது கூட்டாளிகள் இருவருக்குமே முன்னெதிர்பார்த்திராத பெரும் பிரச்சினைகளைக் கொண்டுவந்தது. மாவோ & குழுவினர் குருசேவ் & குழுவினர் மட்டத்திற்குத் தேசியவாதிகளாக இருந்தனர், ஆனால் இரு தரப்பும் வெவ்வேறு தேசிய மண்ணில் அல்லவா இயங்குகின்றன. அங்கு தான் கருத்துபேதத்தின் விதைகள் பொதிந்திருந்தன. பொருளாதார மற்றும் இராணுவ தளபாடங்களுக்கு பீக்கிங் மிக அதிக அளவில் மாஸ்கோவைச் சார்ந்திருக்க வேண்டும் என்கிற உண்மைதான் மாவோ & குழுவை ஒரு புறத்தில் மிகவும் நம்பியிருக்கும் நிலையிலும், மற்றொரு புறம் எதிர்ப்புணர்வைக் காட்ட வேண்டிய நிலையிலும் வைத்துள்ளது. தனியொரு நாட்டில் சோசலிசம் என்னும் ஸ்ராலினிச வேலைத்திட்டத்திற்கு இணங்க, உலகெங்கிலுமுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் தமது ‘நலன்களை’ கிரெம்ளினின் இராஜதந்திரத் தேவைகளுக்குக் கீழ்ப்படுத்திக் கொண்டன. மாவோ அதிகாரத்துவமும், தன்னுடைய நாட்டில் “சோசலிசத்தைக்” கட்டமைக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. அது இனியும் தனது நலன்களை கிரெம்ளினின் நலன்களுக்குக் கீழ்ப்படியச் செய்ய முடியாது. அதன் பொருள்சார் அடித்தளம் இனியும் மாஸ்கோவிலிருந்து தருவிக்கப்படுவதில்லை, மாறாக அதன் சொந்த அரசு அதிகாரத்தில் இருந்தே பெறப்படுகிறது. உலகிலேயே அதிக மக்கள்தொகையைக் கொண்ட ஒரு விவசாய தேசத்துடனான ஒரு கூட்டணியை சீனப் புரட்சி கிரெம்ளின் மீது சுமத்தியது; அத்தேசம் முக்கிய பொருட்களுக்கும், தொழில்துறைக்கான, போக்குவரத்துக்கான, சுரங்கத்துறைக்கான மற்றும் விவசாயத்துறைக்கான கனரக உபகரணங்களுக்கும் அத்துடன் அதனுடைய ஆயுதப்படைகளை நவீனப்படுத்துவதற்கான கருவிகளுக்கும் மிகப் பெரும் தேவையைக் கொண்டிருக்கிறது. ஆனால் இவையனைத்துமே கிரெம்ளினுக்கே உடனடியாகத் தேவைப்படுவன தான். சோவியத்தின் உற்பத்தி சக்திகளை குறுகலான தேசியவாத வரம்புகளுக்குள் அடக்கி வைக்க செய்யப்பட்ட பல தசாப்த முயற்சிகளுக்குப் பிறகு, முதல் சந்தர்ப்பத்தில் சீனாவுடன் கிரெம்ளின் அதிகாரத்துவம் திடீரென தனது புதிய அரசுகளுக்கு-இடையிலான கடமைப்பாடுகளுக்கு இணங்கிய வகையில் திட்டமிடுவதற்கான தேவைக்கு முகம் கொடுக்கிறது.
இவைதான் ஸ்ராலினிசத்தின் பழைய முரண்பாடுகள் என்னும் வலையைக்
கிழித்தெறிந்து அதன் நெருக்கடியை மோசமடையச் செய்த புதிய முரண்பாடுகளாகும். சீனாவில் ட்ரொட்ஸ்கிசப் பாதை கீழ்க்கண்ட அடிப்படை முன்மொழிவுகளிலிருந்து முன்வருகிறது: கோமின்டாங் பிரதிநிதித்துவப்படுத்தும் சீன முதலாளித்துவம் காலதாமதமான ஜனநாயகப் புரட்சியின் கடமைகளை, அவற்றில் முதலாவதும் அதிமுக்கியமானதுமாக நாட்டின் நிலப் பிரச்சினையைத் தீர்த்து நாட்டை ஐக்கியப்படுத்துவதை, நடத்தி முடிக்காது, அதனால் இயலாது. இது வர்க்கப் போராட்ட வழிமுறைகள் மூலம்தான், ஏகாதிபத்தியத்திற்கும் மற்றும் அதிகப்பட்சம் ஒரு தற்காலிகமான, நம்பத்தகாத கூட்டாளி என்றே சொல்லத்தக்க உள்நாட்டு முதலாளித்துவத்திற்கும் எதிரான போராட்டத்தின் மூலம்தான், சாதிக்கப்பட முடியும். அந்நேரத்தித்திற்கான தலைமையின் தன்மை எப்படி இருந்தாலும், புரட்சி அதனுடைய ஜனநாயக தொடர்நிகழ்வுகளுக்குள் நுழைந்துவிட்ட பின், அது முதலாளித்துவ வரம்புகளுக்குள் கட்டுப்பட்டு நின்றுவிடாது, மாறாக அவற்றை மீறி, கடந்து செல்லும். சீன மண்ணில் புரட்சி கட்டவிழ்ந்தவுடன், அது தேசிய எல்லைகளுக்குள் தொடர்ந்து நிற்க முடியாது, மாறாக பிற தேசங்களுக்கும் பாய்ந்து செல்லும். இறுதியாக, சீனப் புரட்சியின் வெற்றி என்பது முன்னேறிய நாடுகளில் தொழிலாளர்கள் பெறும் வெற்றியைத் தான் சார்ந்துள்ளது. ட்ரொட்ஸ்கிசத்தின் இந்த அடிப்படை முன்மொழிவுகள் இரண்டாம் சீனப் புரட்சியிலும், மற்றும் அதேபோல் 1947 வரை நடந்த வெகுஜன எழுச்சிகளிலும் துன்பியலான வகையில் உறுதிப்படுத்தப்பட்டன; 1947-49 இல் நடைபெற்ற மூன்றாம் சீனப் புரட்சி மற்றும் அதற்குப் பின்னான நிகழ்வுகளால் இவை நேரியமாக உறுதிப்படுத்தப்பட்டன. 1925-27 புரட்சியானது “கட்டம் கட்டமான புரட்சி” என்னும் மென்ஷிவிக் தத்துவத்தால் தகர்க்கப்பட்டது; சீனா ஒரு பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்திற்கு இன்னும் தயாராகவில்லை என்றும், உள்நாட்டு முதலாளித்துவத்திற்கு ஒரு முற்போக்கான இலக்கும் ஜனநாயகப் புரட்சியில் பூர்த்தி செய்வதற்கு ஒரு தலைமைப் பாத்திரமும் இருக்கிறது என்றும் அத்தத்துவம் பறைசாற்றியது. “நான்கு வர்க்கங்களின் கூட்டு” என்ற ஸ்ராலினிச வர்க்க-ஒத்துழைப்புப் பாதையானது தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவத்திற்கு முற்றிலும் கீழ்ப்படியச் செய்ததோடு, நிலப்பிரபுக்களின் ஆதரவைப் பெறுவதற்காக நிலச் சீர்திருத்தத்தை நிராகரித்து, எதிர்த்தது. ஸ்ராலினிசச் சீரழிவுக்கு எதிரான ரஷ்யாவின் இடது எதிர்ப்பாளர்களது போராட்டத்தில் சீனப் பிரச்சினை சோவியத் ஒன்றியப் பிரச்சினைக்கு அடுத்ததாகப் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாக இருந்தது. இப்பிரச்சினையின் விளைவாகத் தான் உலகக் கம்யூனிச இயக்கம் பிளவுண்டது; இந்தப் பிளவு தான் நான்காம் அகிலத்தின் ஸ்தாபகத்திற்கு இட்டுச் சென்றது. இரண்டாம் சீனப் புரட்சியின் தோல்வி அடுத்த இருபது ஆண்டுகளுக்கு சியாங் கேஷேக்கின் குருதி கொட்டிய சர்வாதிகாரத்தைத் திணித்தது. இத் தசாப்தங்களின்போது, சீன முதலாளித்துவம் வெளிநாட்டு ஏகாதிபத்தியத்தின் ஒரு முகமையாக தன்னை அம்பலப்படுத்திக் கொண்டது; சீனாவின் பரந்த மக்களுக்கு எந்தவித சலுகைகளை அல்லது சீர்திருத்தங்களைக் கொடுக்கவோ அல்லது ஜனநாயக வழிமுறைகளின் மூலம் ஆட்சி செலுத்துவோ திறமற்று அம்மக்களுக்கான எதிரியாக தன்னை அம்பலப்படுத்திக் கொண்டது; வெகுஜனங்ளின் மொத்த ஆதரவையும் இழக்கும் அளவுக்கு அது மிகவும் திறனற்றதாயும் ஊழல் நிறைந்ததாயும் இருந்தது. அது அதிகாரத்தில் தொடர்ந்து இருக்க முடிந்ததென்றால் ஒருபுறம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவாலும், மறுபுறம் ஸ்ராலின், மாவோ & குழுவினரின் ஆதரவுடன்தான் பதவியில் இருக்க முடிந்தது. சியாங்கின் குருதி கொட்டிய சர்வாதிகாரத்திற்கு அமெரிக்கா நிதிகளையும் ஆயுதங்களையும் வழங்கியது என்றால் ஸ்ராலினிஸ்டுகள் தங்களுடைய கொள்கைகளால் சீனாவின் பரந்த மக்களை அவருடைய கொள்கைகளுக்குக் கீழ்ப்படியும்படி செய்தனர். மாவோ & குழு – சீனப் புரட்சியின் மீதான ஒரு தளை 1936ம் ஆண்டு இறுதிக்குள், ஜப்பானியப் படைகள் சீனாவின் கடலோரப் பகுதிகளைக் கைப்பற்றி தங்கள் ஸ்பரிசக்கொம்பை பிரதானப்பரப்பிற்குள்ளும் நீட்டியிருந்தன; சியாங்கிற்கு எதிரான வெளிப்படையான கலகத்தில் வெகுஜனங்கள் இறங்கியிருந்தனர். நகரங்களில் ஆயிரக்கணக்கான வேலைநிறுத்தங்களும் மற்றும் ஆர்ப்பாட்டங்களும் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களால் நடத்தப்பட்டன; கிராமப் புறங்களில் விவசாயிகள் எழுச்சி பெற்றனர். வெளிநாட்டுப் படையெடுப்பிற்கு எதிரான ஒரு போராட்டம் இவ்வகையில் உள்நாட்டு அடக்குமுறையாளருக்கு எதிரான ஒரு போரில் இணைந்தது. சியாங் மலைப்பகுதிகளில் தஞ்சம் அடைந்தார்; அவருடன் சீன முதலாளித்துவத்தின் ஒரு பகுதியும் சென்றது. மற்றவர்கள், குறிப்பாக நிலப்பிரபுக்கள், ஜப்பானியர்களுடன் இணைந்து குலாவினர். சீனாவில் உறுதியாகவும் வலுவாகவும் இருந்த அனைத்தும் நகரங்களில் இருந்தும், சிறுநகரங்களில் இருந்தும் எழுச்சி பெற்று கிராமப் புறங்களுக்குச் சென்று இத்தேசிய புரட்சிகரப் போருக்காகத் திரண்டன. இதற்கிடையில், சியாங் தனிப்பட்ட வகையில் போரை ஜப்பானியர்களுக்கு எதிராக செலுத்தாமல் மாறாக ஸ்ராலினிச ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த பகுதிகளுக்கு எதிராகச் செலுத்தினார். சியன் இராணுவச் சாவடியில் அவர் கைது செய்யப்பட்டார். மாவோ, சௌ மற்றும் குழுவினர்தான் அவரை விடுவித்தனர். பரந்த வெகுஜனங்ளின் இயக்கம் உச்சத்தில் இருந்த இந்தக் கட்டத்தில்தான் துல்லியமாக ஸ்ராலினிஸ்டுகள் தங்கள் “சோவியத்துக்களை” கலைத்தனர், ”செஞ் சேனை”யையும் கலைத்தனர், நிலச் சீர்திருத்தத்தையும் கைவிட்டனர். சுருங்கக் கூறின், ஜப்பானிய-எதிர்ப்புப் போராட்டம் என்கிற பேரில் ஒவ்வொன்றையும் மறுபடியும் வர்க்க ஒத்துழைப்பிற்குக் கீழ்ப்படியச் செய்தனர். யால்டா உடன்பாடுகளின் ஒரு பாகமான இந்தப் பாதையை அவர்கள் போர்க்காலம் முழுவதிலும் கடைப்பிடித்தனர். ஜப்பானியர்கள் சரணடைந்ததை தொடர்ந்து, அமெரிக்கா ஸ்ராலினுடைய இசைவுடன், பழைய கோமின்டாங் ஆட்சியை ஏற்படுத்த முற்பட்டது. போருக்குப் பிந்தைய உலகின் புரட்சிகர அலையின் ஒரு பகுதியாக சீன வெகுஜனங்களிடமிருந்து ஒரு புதிய எழுச்சி வெளிப்பட்டது. நடப்பு ஒழுங்கமைப்பிற்கு எதிரான களச் சண்டைக்காக தொழிலாளர்களும், விவசாயிகளும், மாணவர்களும் தத்தமது பதாகைகளின் கீழ் கொண்டு வந்த அழுத்தத்தை சீன ஸ்ராலினிஸ்டுகள், மேற்கு ஐரோப்பிய ஸ்ராலினிஸ்டுகளைப் போலவே, மீண்டும் ஒரு முறை எதிர்த்து நின்றனர். ஆனால் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள ஸ்ராலினிஸ்டுகளை தங்களுடைய மந்திரிசபைகளில் வரவேற்ற ஐரோப்பிய முதலாளித்துவம் போல் இல்லாமல், அவர்களின் முன்னேறுதலை சியாங் எதிர்த்து நின்றார். மாறாக அவர் மாவோ & குழுவினருக்கு எதிரான அழித்தொழிப்புப் போரைத் தொடங்கினார். மார்ச் 1947ல் கூட (சியாங்கின் துருப்புக்கள் யேனனை ஆக்கிரமித்திருந்த நேரம்) சியாங்கின் ஆட்சியைத் தூக்கியெறிய வேண்டும் என்ற கோஷத்தை சீனக்கம்யூனிஸ்ட் கட்சி எழுப்பாததுடன், விவசாயச் சீர்திருத்த வேலைத்திட்டம் எதையும் கூட அளிக்கவில்லை. அக்டோபர் 10, 1947 அன்றுதான் “மக்கள் விடுதலை இராணுவத்தின்” சார்பில் ஓர் அறிக்கை வெளியானது; சியாங்கை தூக்கியெறிய வேண்டும், “புதிய சீனா” கட்டமைக்கப்பட வேண்டும் என்று அது வெளிப்படையாக வாதிட்டது; மேலும் நிலப்பிரபுக்கள் மற்றும் பணக்கார விவசாயிகளுடைய நிலங்களைப் பறிமுதல் செய்வதனூடாக விவசாயச் சீர்திருத்தத்தையும் அறிவித்தது; அதே நேரத்தில் ”தொழில்துறை, வர்த்தகத்துறை நிறுவனங்களுக்கு”ச் சொந்தமான நிலங்கள் விலக்கு அளிக்கப்பட்டன. தற்காத்துக் கொள்வதற்கு சீன முதலாளித்துவம் மற்றும் நிலப்பிரபுத்துவத்துடன் வெளிப்படையாக முறித்துக் கொள்ளும் கட்டாயம் ஏற்பட்ட போதும், ஸ்ராலினிஸ்டுகள் அதைத் தங்களுடைய திவாலான ‘நான்கு வர்க்கக் கூட்டின்’ கீழ்தான் செயல்படுத்த முற்பட்டனர். உள்நாட்டுப் போரின் அவசரத் தேவைகள் விவசாயச் சீர்திருத்தங்களைச் செய்வது, நிலபிரபுத்துவ உறவு முறைகளை அழிப்பது போன்ற ஜனநாயக கடமைகளை செயல்படுத்துவதை சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் மீது சுமத்தின. புரட்சிக் காலம் முழுவதும் அதன் பாதையின் மீது மாவோவும் குழுவினரும் தன்னிச்சையான கட்டுப்பாடுகளையும் வரம்புகளையும் தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டிருந்தனர். விவசாயச் சீர்திருத்தம் “கட்டங்களாக” மேற்கொள்ளப்பட்டு, கொரியா யுத்தத்தின் போதும் அதற்குப் பின்பும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தாக்குதல் நிலப்பிரபுக்களின் எதிர்ப்புக்கு தூண்டுதல் அளித்த பின்னர் தான் இது நிறைவுபெற்றது. புரட்சியின் மீது தன்னிச்சையான கட்டுப்பாடுகளைச் சுமத்தியதன் மூலம், மாவோவும் குழுவினரும் அதன் மீதான தங்களது அதிகாரத்துவக் கட்டுப்பாட்டைப் பாதுகாத்துக் கொண்டனர். புரட்சியின் ஒவ்வொரு ஏற்றக் கட்டத்திலும், ஒவ்வொரு அதிமுக்கியமான கட்டத்திலும் அவர்கள் வெகுஜனங்களுடன் மோதலில் நின்றனர். போராட்டத்தை முடிந்த அளவு இராணுவ மட்டத்துடன் மட்டுப்படுத்துவது என்பதே அவர்களது நோக்கமாக இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, இவ்விதத்தில்தான் அவர்கள் சீனத் தொழிலாளர்கள் ஒரு சுயாதீன சக்தியாக அரங்கில் வெளிப்படுவதைத் தடுக்க முடிந்தது. பெருநகரங்களிலும் சிறுநகரங்களிலும் ஒரேவகையில், சீனத் தொழிலாளர்கள், உள்நாட்டுப்போரில் அதிகாரத்துவத்தின் இராணுவம் நடந்து கொண்ட விதத்தினாலும், அதேபோல் “விடுதலை இராணுவப்படை” வரும் வரை விடுதலைக்கு காத்திருக்க வேண்டும் என்று வந்த உத்தரவுகள் மூலம் மற்றும் “தொழில்துறை, வர்த்தகத்துறை” முதலாளிகளின் தயவை நாடி தொழிலாளர்களின் போராட்டங்கள் வேண்டுமென்றே ஊக்கச் சிதைவிற்கு உட்படுத்தப்பட்டதனாலும், பெரும் விரக்திக்கும் ஆர்வமில்லாத நிலைக்கும் ஆளாயினர். மூன்றாம் சீனப் புரட்சின் ஸ்ராலினிச உருக்குலைவு மூன்றாம் சீனப்புரட்சி, ஸ்ராலினிச தலைமையாலும் கட்டுப்பாட்டினாலும் உருக்குலைந்தது. விவசாயச் சீர்திருத்தம் என்பது நிலமற்ற மற்றும் வறிய விவசாயிகளுக்கு ஏதோ அதிகாரத்துவத்திடம் இருந்து வழங்கப்பட்ட பரிசு போன்றதான தோற்றம் உருவாக்கப்பட்டது; தொழிலாளர்களின் “விடுதலை”க்கும் அப்படியே; கோமின்டாங் ஆட்சி தூக்கியெறியப்பட்டதும் அப்படியே; ஜனநாயக வரிசைத்தொடரை தாண்டி முதலாளித்துவ உறவுகளைத் தாண்டி புரட்சியின் அடுத்தடுத்த கட்டவிழ்வும் மற்றும் அது கொண்டுவந்த பாட்டாளி வர்க்க வெற்றிகளும் கூட அப்படியே. புரட்சி, ஸ்ராலினிச உருக்குலைவிற்கு உட்பட்டதால் அதன் வளர்ச்சிக்கு கூடுதல் விலை கொடுக்க நேர்ந்ததோடு அது வலிப்புடன் கூடிய நீடித்ததுமாக்கியது: எந்த வேளையிலாவது நகரங்களில் இருந்த வெகுஜனங்கள் எழுச்சி செய்வதற்கு சீனக்கம்யூனிஸ்ட் கட்சி அழைப்புவிடுத்திருந்தால், சியாங்கின் படைகளும் ஆட்சியும் இற்றுப் போன மரத்துண்டுகளைப் போல சரித்துவீழ்த்தப்பட்டிருக்கும். சீன ஸ்ராலினிஸ்டுகள் அதிகாரத்தில் பயணம் செய்ய முடிந்ததென்றால் அதற்குக் காரணம் இரண்டாம் சீனப் புரட்சியின் போதும் மற்றும் அதன் பின்னும் சீனத் தொழிலாள வர்க்கம் தொடர்ந்து பெற்ற தோல்விகளால் விரக்தியுற்றிருந்ததும், அத்துடன் நகரங்களை, அனைத்திற்கும் மேலாய் பாட்டாளி வர்க்கத்தை, நாட்டுப்புற இராணுவப் போராட்டத்திற்குக் கீழ்ப்படியச் செய்வது அதன்மூலம் தொழிலாளர்கள் ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக எழுச்சி காண்பதைத் தடுப்பது என்கிற CCP யின் திட்டமிட்ட கொள்கையும் தான். இவ்வாறாக அரசியல் காரியாளர்களும் அறிவும் கொண்டு, அதற்குக் கூடுதல் பக்கபலமாக, இராணுவப் படைவலிமையும் கொண்ட ஒரே அமைப்பாக பரந்த வெகுஜனங்ளின் கண்களில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தோற்றமளித்தது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் தரமிழந்த குட்டி முதலாளித்துவ வர்க்கத்தினராக இருந்தனர். அவர்களது காரியாளர்கள் நிரந்தரப் புரட்சிக்கு எதிரான சீனக் கம்யூனிஸ்ட் கட்சி இன் போராட்டங்களின் நெடிய வரலாற்றுப் பாதையிலும் அத்துடன் சேர்த்து ட்ரொட்ஸ்கிஸ்டுளை உடலியல்ரீதியாக திட்டமிட்டு அழித்தொழிப்பதிலும் பயிற்றுவிக்கப்பட்டனர். ஸ்ராலினிச பள்ளியில் பயின்ற அவர்கள், இந்தப் போராட்டத்தின் பாதையில் ஒரு அதிகாரத்துவமாக உருப்பெறத் தொடங்கினர். இரண்டாம் சீனப் புரட்சியின் தோல்விக்குப் பின், அவர்கள் நகரங்களில் இருந்து பின்வாங்கி ஆயுதமேந்திய விவசாயிகளின் அடித்தளத்தை ஸ்தாபித்தனர். ஓர் இருபது வருட காலம் அவர்கள் இந்த ஆயுதமேந்திய சக்தியை பின்தங்கிய மற்றும் சிதறிக் கிடந்த விவசாய வெகுஜனங்கள் மீது ஆட்சி செலுத்தப் பயன்படுத்தினர். இவ்விதத்தில் கடிவாளமற்ற, சிடுமூஞ்சித்தனமான மற்றும் சுயவிருப்பத்திற்கேற்ப செயல்படுகின்ற அதிகாரத்துவம் திண்மை பெற்றது. ஒவ்வொரு கட்டத்திலும் தமது நலன்கள், தமது அதிகாரம், தமது சலுகைகளைப் பத்திரப்படுத்திக் கொள்ளும் பொருட்டு ஏமாற்று மற்றும் கெடு கொடுப்பதான வழிமுறைகளை அவர்கள் புரட்சியின் மீது பிரயோகித்தனர். ஒவ்வொரு வெற்றியும் பரந்த மக்கள் மீது கூடுதல் உதாசீனமும் அச்சமும் கொண்டவர்களாகவும், தண்டனையிலிருந்து விலக்கீடுபெற்று வர்க்கப் போராட்டத்தை ஏமாற்ற முடியும் என்பதில் கூடுதல் உறுதிபெற்றவர்களாகவும் அவர்களை ஆக்கியது. அவர்களது மிகப் பெரும் சொத்தாக இருந்தது என்னவென்றால் வெகுஜனங்களின் மனதில் இது 1917 ரஷ்யப் புரட்சியுடன் முடிச்சுப் போடப்பட்டிருந்தது தான். ரஷ்யாவின் தொழிலாளர்களும் விவசாயிகளும் சாதித்திருந்ததையே சீன மண்ணில் மீண்டும் காண்பதாக பரந்த மக்கள் நினைத்தனர். சோவியத் ஒன்றியத்தின் கௌரவம், அத்துடன் சேர்ந்து சோவியத் தொழிற்துறை வெற்றிகள் மற்றும் இரண்டாம் உலகப் போரிலான சோவியத்தின் வெற்றிகள் ஆகியவை, மாவோவும் குழுவினரும் புரட்சியின் மீதான அவர்களது ஏகபோகத்தைப் பராமரித்துக் கொள்ள நிர்ணயகரமானவையாக நிரூபணமாயின. இந்த ஏகபோகத்தைப் பத்திரப்படுத்திக் கொள்ள ஒவ்வொரு எதிர்ப்புக் கூறையும், அதில் முதலாவதும் முதன்மையானதுமாக சீன ட்ரொட்ஸ்கிஸ்டுகளை, உருரீதியாக அவர்கள் அழித்தொழித்தனர். சியாங்கின் ஆட்சி மிக நெடுங்காலம் தாக்குப்பிடிக்கக் காரணமாக இருந்த 1925-27 இன் குற்றங்கள், மற்றும் 1936-37 இல் அவை மறுபடியும் நிகழ்த்தப்பட்டமை ஆகியவற்றுக்கு இறுதித் தீர்ப்பு நாளில் பதில் கூற வேண்டியிருக்கும் என்கின்ற மாவோயிச அச்சத்தின் சிகரமாக அமைந்தது தான் சென் துஷியூவின் கல்லறை தகர்க்கப்பட்டமை ஆகும். நிரந்தரப் புரட்சி மேலோங்கி நிற்கிறது சீனாவில் உயர்ந்து நிற்பது மாவோவினுடைய வேலைத்திட்டம் அல்ல; சியாங்குடன் கூட்டணி என்கின்ற பாதையும் அல்ல மாறாக அவருக்கு எதிரான போராட்டம் தான்; ஜனநாயகக் கடமைகளுக்கான தீர்வு சியாங்குடன் கைகோர்த்து அல்ல, மாறாக சியாங்கிற்கு எதிரான, நிலப் பிரபுக்களுக்கு எதிரான, “அதிகாரத்துவ” முதலாளிகளுக்கு எதிரான மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான வர்க்கப் போராட்ட வழிமுறைகளின் மூலம் தான், அது உருக்குலைந்த வடிவிலென்றாலும். “புதிய சீனா” 1917 ரஷ்யப் புரட்சியின் போக்கில் இருந்து மாறுபட்ட போக்கை பின்பற்றும் என்பது தான் மாவோவின் திட்டத்திற்கு அப்பாற்பட்டு, சோவியத் ஒன்றியத்தில் போலவே சீனாவில் புரட்சியை முதலாளித்துவக் கட்டமைப்பிற்குள் வைத்திருக்கப்பட முடியவில்லை; அதிலும் குறிப்பாக அமெரிக்க இராணுவத் தாக்குதல்கள் மற்றும் முற்றுகைகளுக்குப் பின்னர். “அதிகாரத்துவ மூலதனத்தை மட்டும்” தேசியமயமாக்குவது என்று தொடங்கிய மாவோ, இப்போது தன்னுடைய முதலாளித்துவ கூட்டாளிகளுக்கு எதிராகத் திரும்பவும், பொருளாதாரத்தின் முக்கிய பிரிவுகளை தேசியமயமாக்கவும், வெளிநாட்டு வர்த்தகத்தின் மீது ஏகபோகத்தை சுமத்தவும், திட்டமிடலை ஸ்தாபிக்கவும் மற்றும் புரட்சிகர வெற்றிகளைக் காப்பாற்ற தொழிலாளர்களை அணிதிரட்டவும் நேரிட்டது. புரட்சியை சீனாவின் எல்லைகளுக்குள் கட்டுப்படுத்தி வைத்திருக்கவும் அவ்வகையில் ஏகாதிபத்தியங்களுடன் ஒரு உடன்பாட்டைக் கொண்டிருக்கவுமான மாவோவின் முயற்சிகளையும் மீறி, புரட்சியை எல்லைக்குள் வைத்திருக்க முடியாமல் போனது, அதனால் ஏகாதிபத்தியங்களை நடுநிலையில் வைத்திருக்கவும் முடியவில்லை. இறுதியாக, அமெரிக்கா தலைமையில் ஏகாதிபத்திய சக்திகளின் கூட்டணி ஒன்று கொரிய மண்ணில் நடத்திய எதிர்ப்புரட்சிகரத் தலையீட்டுக்கு எதிராக புரட்சி பாதுகாக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. சீன மண்ணில் நிரந்தரப் புரட்சியின் தொடர்நிகழ்வுகள் ஒவ்வொன்றுடனும் ஸ்ராலினிசம் மோதிக் குறுக்கிட்டதால் புரட்சி உருக்குலைக்கப்பட்டு அதன் பாட்டாளி வர்க்கத் தன்மையையும் மங்கச் செய்திருக்கிறது.
1949 இலையுதிர்காலத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தன்னை அதிகாரத்தில் நிறுவிக் கொண்டபோது, அது “நான்கு வர்க்கக் கூட்டு” என்னும் அதன் வேலைதிட்டத்தையும் “கட்டம் கட்டமான புரட்சி” என்ற, அதாவது சீனாவின் பாதையானது முதலாளித்துவ அபிவிருத்தியின் “புதிய” கட்டம் என்று கூறப்படுவதன் வழி கடந்தாக வேண்டும் என்கின்ற, தத்துவத்தையும் தொடர்ந்து பற்றி நின்றது. யாலு நோக்கி அமெரிக்க இராணுவப் படைகள் நகரத் தொடங்கி, சீனா மீது பொருளாதாரத் தடைகளை ஏகாதிபத்தியங்கள் சுமத்தியபோது முதலாளித்துவத்துடன் சீனாவைக் கட்டியிருந்த கயிறுகள் அறுந்து போயின. அப்பொழுது நாட்டில் இருந்த ஏகாதிபத்தியங்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதையும் மற்றும் அதே நேரத்தில் உள்நாட்டு முதலாளித்துவத்திற்கு எதிரான பிரச்சாரத்தையும் (“மூன்று-எதிர்ப்பு மற்றும் ஐந்து-எதிர்ப்பு இயக்கங்கள்) தொடக்குவதையும் தவிர சீனக் கம்யூனிஸ்ட் கட்சி க்கு வேறு வழி இருக்கவில்லை. உள்நாட்டுப் போரின் போக்கானது, ஒரு முந்தைய கட்டத்தில், மாவோ அதிகாரத்துவத்தை கோமின்டாங் உடன் கூட்டை ஏற்படுத்திக் கொள்ளும் அதன் முயற்சிகளைக் கைவிடச் செய்து பதிலாக அதிகாரத்தைத் தானே ஏற்றுக் கொள்ளும் கட்டாயத்திற்கு தள்ளியது. ஏகாதிபத்தியத் தலையீட்டிற்கு எதிரான போராட்டத்தின் உள்ளார்ந்த தர்க்கமாய் அமைந்திருக்கும் புறநிலை இயக்கவியல், அதிகாரத்துவத்தை முதலாளித்துவத்துடன் முறித்துக் கொள்வதற்கும், முக்கியமான உற்பத்திக் கருவிகளைத் தேசியமயமாக்கவும், வெளிநாட்டு வர்த்தகத்தில் ஏகபோகத்தை சுமத்தவும், திட்டமிடுதலை ஸ்தாபிக்கவும், மற்றும் இவ்வகையில் இன்றிருக்கும் சீனாவின் தொழிலாளர் அரசின் (ஒரு ஸ்ராலினிச நகைப்புக்கிடமான வடிவத்தை அது எடுத்திருந்தாலும்) அடித்தளத்தில் அமைந்திருக்கும் உற்பத்தி உறவுகள் மற்றும் ஸ்தாபனங்களை அறிமுகப்படுத்துவதற்கான பாதையை திறந்துவிடவும் தள்ளின. மூன்றாம் சீனப் புரட்சியின் ஸ்ராலினிச உருக்குலைவின் காரணத்தால் சீனா ஒரு உருக்குலைந்த தொழிலாளர் அரசாக உள்ளது. புரட்சியின் வெற்றிகளுக்கும் அதிகாரத்துவ ஆட்சியாளர்களுக்கும் இடையே உள்ள முரண்பாடு சீன சமூகத்தின் மையமான உள் முரண்பாடாகும்; இதுதான் அதன் இயக்கத்தை நிர்ணயிக்கிறது. அதே நேரத்தில், ட்ரொட்ஸ்கிசவாதிகள் சீனா விடயத்திலான தங்கள் கொள்கைகளுக்கு அடித்தளமாகக் கொள்ளும் ஆரம்பப் புள்ளியும் இதுவே. புரட்சிகர சீனா இன்று பின்வரும் முரண்பாடுடைய உறவுகளால் குணாம்சப்படுத்தப்படுகின்றது: (1) சீனாவின் உற்பத்தி சக்திகள் பின்தங்கியவை; தொழிற்துறையில் இலகுரகப் பொருட்களின் துறை மேலோங்கியுள்ளது; பொருளாதாரம் பேரளவில் விவசாயம் மற்றும் மூலப்பொருட்கள் உற்பத்தி செய்வதான பொருளாதாரமாய் இருக்கிறது; நுகர்பொருட்கள், வர்த்தகம் மற்றும் பிற துறைகளைப் பொறுத்தவரை, முதலாளித்துவ உறவுகள்தான் “திட்டமிட்டபடி” ஆதிக்கம் கொண்டுள்ளன; சுருங்கக் கூறின், சீனாவின் உற்பத்திச் சக்திகளானவை அரசுடைமையாக்கப்பட்ட சொத்துக்கு ஒரு சோசலிசத் தன்மையைக் கொடுப்பதற்குப் போதுமான அளவில் இருந்து வெகு தொலைவில் உள்ளன. (2) உள்நாட்டு முதலாளிகளது மூலதனத் திரட்சியை நோக்கிய போக்கும் அத்துடன் உலகளாவிய தேவையால் உருவாக்கப்படும் தொடக்க நிலைத் திரட்சியை நோக்கிய போக்கும் முதலாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் கணக்கிலடங்கா சல்லடை ஓட்டைகள் வழியே வழிந்து வருகின்றன. (3) பங்கீட்டு நிர்ணயநெறிகள் ஒரு முதலாளித்துவ குணாம்சத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளன; சீன சமூகத்தை புதிய முறையில் வேறுபடுத்திக் காட்டுவதில் கீழமைந்துள்ளன. (4) பொருளாதார வளர்ச்சி சுரணடப்படுவோரின் சில பிரிவினரை மெல்ல மெல்ல உயர்த்துகின்ற அதே சமயத்தில், நகரங்களிலும் கிராமங்களிலும் சலுகை பெற்ற அடுக்குகள் விரைவாக உருவாவதையும் ஊக்கப்படுத்துகிறது. (5) விவசாயத்தில், தேவை பெருகிக் கொண்டே செல்வது விவசாயிகளிடமிருந்து அதைச் செய்ய வைத்துப் பெற ஆட்சியை நிர்ப்பந்திக்கிறது; அதேசமயத்தில் உற்பத்திசெய்யப்பட்ட பொருட்களை அவர்களுக்குப் போதுமான அளவில் விநியோகிக்க முடிவதில்லை, இது விவசாயிகளுடன் ஒரு நேருக்கு நேர் மோதலைக் கொண்டு வரும் சாத்தியத்தைப் படைத்துள்ளது. (6) சமூகக் குரோதங்களை சுரண்டியும், புரட்சியின் தலைவர்களாக தமது கௌரவத்தையும் அத்துடன் சேர்த்துச் சுரண்டியும், சீன ஸ்ராலினிச அதிகாரத்துவமானது சோசலிசத்தில் இருந்து அன்னியப்பட்ட கடிவாளமில்லாத ஒரு சாதியாக தன்னை உறுதிபடக் காலூன்றிக் கொண்டிருக்கிறது. (7) புரட்சியானது, ஆளும் அதிகாரத்துவத்தால் உருக்குலைந்த நிலையிலும், புதிய சொத்து உறவுகள் மற்றும் திட்டமிடுதலில் அதன் பாட்டாளி வர்க்கப் பண்பை வெளிப்படுத்துகிறது; இந்தப் புதிய உற்பத்தி உறவுகள் மற்றும் ஸ்தாபனங்களின் உயர்ந்த தன்மை தொழில்துறையின் மற்றும் சீனப் பாட்டாளி வர்க்கத்தின் ஒரு எதிர்நீச்சலிடும் வளர்ச்சியை தொகைரீதியாகவும் பண்புரீதியாகவும் உத்தரவாதமளிப்பதால், அதன் சமூகப்பலம் அதிகரித்து அதை ஸ்ராலினிச ஆட்சி வழிமுறைகள், மேலாண்மை மற்றும் நிர்வாகத்துடன் மோதலுக்குக் கொண்டு வரும்; இப்புதிய சூழலில், இளம் சீனப் பாட்டாளி வர்க்கம் திறமைகளிலும் கலாச்சாரத்திலும் மட்டுமன்றி, அதற்கு மேலாகவும் வளர்ச்சியுறும். (8) இன்று வெகுஜன ஆட்சியாகத் தோற்றமளிக்கும் மாவோ ஆட்சி, சீன சமூகத்தில் தமது மையப் பாத்திரம் குறித்து முதலாய் விழிப்படையக் கூடியதும் அத்துடன் ரஷ்ய அதிகாரத்துவம் வெற்றிகரமாகச் சுரண்டிக் கொள்ள முடிந்ததான தனிமைப்படல் மற்றும் அடுத்தடுத்த உலகத் தோல்விகளின் எண்ணத்தால் பாதிப்படையாமல் இருக்கக் கூடியதுமான தொழிலாளர்களுடன் முன்னிலும் அதிகமாய் மோதலுக்கு வரும். (9) மாவோவின் தலைமை புரட்சிகரச் சீனாவின் மீது சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிச தேசியவாதப் பாதையைச் சுமத்த முற்படும் நிலையில், இன்று மூன்றாம் சீனப் புரட்சி ஒரு முக்கிய வரலாற்றுத் திருப்புமுனைக் கட்டத்தில் உள்ளது. (10) திரளும் முரண்பாடுகளின் மேலதிக வளர்ச்சி சோசலிசத்துக்கு இட்டுச் செல்லத்தக்க அதே அளவுக்கு முதலாளித்துவத்திற்கும் திருப்பி இட்டுச்செல்ல முடியும். (11) முதலாளித்துவத்திற்கான பாதையில் எதிர்ப்புரட்சியானது, விழிப்படைந்தும் எண்ணிக்கையில் அதிகரித்தும் வருகிற சீனப் பாட்டாளி வர்க்கத்தினது எதிர்ப்பை உடைக்க வேண்டியிருக்கும். (12) சோசலிசத்திற்கான பாதையில் தொழிலாளர்கள், அதிகாரத்துவத்திற்கும் அத்துடன் சேர்த்து இப்பொழுது அதற்குத் தலைமைதாங்கும் மாவோ தலைமைக்கும் முடிவு கட்ட வேண்டியிருக்கும். சீனாவின் எதிர்காலப்பாதை அரசியல் ஒழுங்கமைப்பு விடயத்தில் மாவோ அதிகாரத்துவம் மூன்றாம் சீனப் புரட்சியின் அதே பாதையிலேயே ஒரு சர்வாதிபத்திய அரசு அதிகாரத்தை சுமத்துவதில் வெற்றிகண்டுள்ளது. அவர்கள் இப்பொழுது இந்த அதிகாரத்துவ மேற்கட்டுமானத்தை பாட்டாளி வர்க்க அஸ்திவாரத்தின் மீது, புரட்சியின் வெற்றிகளின் மீது கட்டமைக்க முயல்கின்றனர். சோவியத் ஒன்றியத்தின் குணாம்சமாக மாறி ஆட்சிக்கு நிரந்தர நெருக்கடியை வழங்கியிருக்கக் கூடிய இத்தீர்க்க முடியாத முரண்பாடு, இப்பொழுது சீன மண்ணிலும் மறுஉற்பத்தி செய்யப்பட்டு, சீனத் தொழிலாளர்களின் முன் அதிகாரத்துவ சாதிக்கு எதிரான அரசியல் புரட்சியின் வலிமையான அவசியத்தை முன்வைக்கிறது. சீனப் புரட்சி தாமதப்பட்ட ஜனநாயகப் புரட்சியின் கடமைகளுக்கு முகங்கொடுத்த வரையில், பீக்கிங்கின் தலைமை ஐக்கியத்தையும் இசைவையும் காட்ட முடிந்தது. ஆனால் புரட்சிக்கு தனக்கே உரிய தர்க்கம் உள்ளது. 1955ம் ஆண்டு தலைமையில் ஏற்பட்ட பிளவு நாட்டைத் தொழிற்மயமாக்குதல் என்னும் ஒத்திப் போட முடியாத பணியை ஆட்சி கையாள வேண்டியிருந்த தருணத்தில் தான் துல்லியமாக நடந்தது. ஒரு மிகப் பின்தங்கிய நாட்டில் இதை எப்படிச் சாதிப்பது என்பதைப் பற்றி அது முடிவெடுக்க வேண்டியிருந்தது. சீனப் புரட்சி முன்னேறிய நாடுகளுள் விரிவாக்கம் எதனையும் காண முடியவில்லை. இத்தொழிற்துறைமயமாக்கம் பின் எப்படிச் சாதிக்கப்பட முடியும்? உலகப் பொருளாதாரத்தின் மூலதன வளங்களைச் சீனா பயன்படுத்திக் கொள்ள இயலாது —அவை இன்னும் உலக ஏகாதிபத்தியத்தின், பிரதானமாக அமெரிக்காவின், விரோதக் கரங்களில்தான் இருக்கின்றன. போதுமானதாக இல்லாத உதவியைத்தான் அதிகப்பட்சமாக கிரெம்ளின் வழங்க முடியும். வேண்டுமானால் சீன முதலாளித்துவத்தின் எஞ்சிய கூறுகள் சீனாவின் தொழிற்துறைமயமாக்கத்துக்கு சிறிய பங்களிப்பைத் தர முடியலாம், 1954 செப்டம்பரில் ஏற்றுக் கொள்ளப்பட்ட புதிய அரசியலமைப்பு அரசுடைமைச் சொத்து, கூட்டுறவுச் சொத்து, ”தனித்தனியான உழைக்கும் மக்களின் [வாசிக்கவும்: வசதியான விவசாயிகளும் அதிகாரத்துவவாதிகளும்] சொத்து”, மற்றும் முதலாளித்துவ உடைமைத்துவம் (ஷரத்துகள் 5, 11, 12) என “நான்கு பொருளாதார” வகைப்பாடுகளை கருத்தில் கொண்டது என்றபோதிலும். ஆறு ஆண்டு காலம் ஆட்சியில் இருந்திருக்கும் நிலையில், மாவோ தலைமை, ஒரு தன்னிறைவு கொண்ட தொழிற்துறையை சீனாவின் சொந்த வளங்களைக் கொண்டே கட்டமைக்க எல்லாவற்றையும் பணயம் வைத்துள்ளது. சீனாவின் பொருளாதாரத் தேவைகளுக்கு முதலாளித்துவப் பாதையில் தீர்ப்பதற்கு வழிகாணாத நிலையில், மாவோ ஆட்சி சோவியத் பொருளாதாரப் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளது. ஆனால் இந்தப் பாதைக்கான இன்னொரு காரணம், தரமிழந்த (declassed) ஒரு குட்டி முதலாளித்துவ உருவாக்கமாக இருக்கும் ஸ்ராலினிசத்தின் சமூகத் தன்மையில் வேரூன்றியிருக்கிறது. “உபரி உற்பத்தியின் மீதான கட்டுப்பாடு அதிகாரத்துவம் அதிகாரத்திற்கு செல்வதற்கான பாதைக்கு வழிதிறந்தது” (ட்ரொட்ஸ்கி). தன் வருமானம், அதிகாரம் மற்றும் சலுகைகளைப் பாதுகாத்துக் கொள்ளுவதற்கு, அதிகாரத்துவம், தேசிய உபரி உற்பத்தி மீதான ஒழுங்குபடுத்தும் அதிகாரத்தைக் கொண்டுள்ளதாக இந்த ஏகபோக நிலைப்பாட்டை தனக்கு உறுதி செய்து கொள்ள வேண்டும். “உபரி உற்பத்தியை கையில் கொண்டுள்ளவர் தான் அரச அதிகாரத்தை தன் கையில் வைத்திருப்பவர்” (ட்ரொட்ஸ்கி). உற்பத்தி நிகழ்முறையில் தனக்கான ஒரு அடித்தளம் இல்லாத நிலையில், ஸ்ராலினிச அதிகாரத்துவம் குட்டி முதலாளித்துவத்துடன் கூட்டணி காண முற்படுகிறது. ஆனால் இங்கும் வர்க்கப் போராட்டம் தன்னை பிரகடனப்படுத்திக் கொள்ளுகிறது. அதிகாரத்துவம் விவசாயிகளுடன் துரிதமாய் மோதலுக்குள் வருகிறது. தேசிய உபரி உற்பத்தி விவகாரத்தில் அதிகாரத்துவமும் குட்டி முதலாளித்துவமும், புரட்சி நடந்த தேசிய மண் என்பதைப் பொருட்படுத்தாமல், நண்பர்களாய் இருந்ததில் இருந்து விரைவாய் விரோதிகளாய் மாறுகின்றன. அத்தகைய ஒரு மோதல்தான் இன்றைய சீனாவில் உருவெடுத்து வருகிறது. அது கடுகளவு நிலத்தில் விவசாயம் செய்யும் தனித்தனியான 400 மில்லியன் வெகுஜனங்களைக் கொண்ட விவசாயிகளுடனான மோதலாகும். வேறுபட்ட நிலைமைகள் மற்றும் சிறப்பியல்பான சூழல்களின் கீழ் பீக்கிங்கின் 1955ம் ஆண்டுப் பொருளாதாரக் கொள்கையானது அதன் அடிப்படை அம்சங்களில் ஸ்ராலின் முதலில் ரஷ்யாவிற்கு அறிவித்த அதே பொருளாதாரக் கொள்கையை மறுஉற்பத்தி செய்கிறது, அதுவும் அதே அடிப்படைக் காரணங்களுக்காக. மார்ச் 1955 மாநாடு பின்வரும் இலக்கை நிர்ணயிக்கும் ஒரு தீர்மானத்தை ஏற்றது. “மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களில் நாம் ஒரு சோசலிச சமூகத்தைக் கட்டமைக்க முடியும். ஆனால் சோசலிச தொழில்துறையைக் கொண்ட மிக உயர்ந்த நிலையிலான ஒரு அரசைக் கட்டமைப்பதற்கு, பல தசாப்தங்கள் உறுதியான, கடுமையான உழைப்பு அவசியமாக இருக்கும். ஐம்பது ஆண்டுகள், அதாவது 20ம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதிக் காலம் முழுவதும் ஆகும் என்று கூட நாம் கூறலாம். நாம் தீர்வுகாண வேண்டியிருக்கும் பணி அத்தகைய மாபெரும் வரலாற்றுப் பணி ஆகும், மாபெரும் மற்றும் மகத்தான பணி.” (ஏப்ரல் 5 Pekin People’s Daily ன் முன்னணித் தலையங்கம், மாஸ்கோவின் பிராவ்டா ஏப்ரல் 6, 1955ல் வெளியிடப்பட்டவாறு) சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினிசப் போக்கு வெற்றி அடைவதற்கு, ஒரு எதிர்ப்புரட்சி தேவைப்பட்டது. அந்த எதிர்ப்புரட்சி, லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் கீழ் ரஷ்யப் புரட்சியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற ஒரு ஒட்டுமொத்தத் தலைமுறையையும் உருரீதியாக அழிக்க வேண்டியிருந்தது. தன்னுடைய அதிகாரத்துவ ஆட்சியைச் சுமத்தும் முன், ஸ்ராலின் லெனினிசக் கட்சியையும் அகிலத்தையும் அழிக்க வேண்டியிருந்தது. இதற்கு மாறாக, சீனாவில் மாவோவின் கீழ் புரட்சிகர அலையை அதிகாரத்தை நோக்கிச் செலுத்திய அதே அடிப்படைக் காரியாளர்கள்தாம் இப்பொழுது ஸ்ராலினுடைய தடங்களைப் பின்பற்றுகின்றனர். இக்காரணத்தை ஒட்டி, பீக்கிங்கின் பாதை மாற்றத்தில் உள்நாட்டிலும் சர்வதேசரீதியாகவும் சம்பந்தப்பட்டவை மற்றும் பின்விளைவுகள் குறித்துப் புரிந்து கொள்வது கூடுதல் சிரமமானதாக ஆகியிருக்கிறது, அதிலும் குறிப்பாக, சீன வெகுஜனங்களுக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சாமானிய உறுப்பினர்களுக்கும். சோவியத் ஒன்றியத்தில், பிரச்சினைகள் பல ஆண்டுகள் விவாதிக்கப்பட்டன, அத்துடன் ட்ரொட்ஸ்கியின் தலைமையில் ரஷ்ய இடது எதிர்ப்பாளர்களின் போராட்டம் ஸ்ராலினின் பொய்மைப்படுத்தல்கள், அடக்குமுறைகள், போலிக்குற்றச்சாட்டுக்கள் ஆகியவற்றையெல்லாம் மீறி, சோவியத் அபிவிருத்திகளின் தன்மையையும் அர்த்தத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டியது. சீனாவில் கொள்கை பற்றிய வேறுபாடுகள் மிகக் குறுகிய உயர்மட்ட வட்டங்களுக்குள் வேலி போடப்பட்டிருக்கிறது. பூசல்கள் அனைத்தும் இரகசியத்தாலும், மாற்று வேடங்களாலும், தவறான தகவல்களாலும் மூடப்பட்டுள்ளன. 1955 மார்ச் மாநாடு உடனடியாக மத்திய, பிராந்திய, மாவட்ட மற்றும் உள்ளூராட்சி மட்டத்தில் சிறப்பு “கட்டுப்பாட்டு ஆணையங்களை” உருவாக்குவதன் மூலம் நாடு தழுவிய அழித்தொழிப்பு எந்திரமொன்றை அமைக்க உத்தரவிட்டது. இவ்வாறாக இரு உயர்மட்டத் தலைவர்கள் (காவோ காங், ஜாவோ ஷூஷி) அழிக்கப்பட்டமை களையெடுக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டதைக் குறித்து நின்றது. பெய்ஜிங்கின் உள்முக ஆட்சிக்கும் மாஸ்கோவினால் அமைக்கப்பட்டதற்கும் இடையிலான ஒற்றுமை சீன இராணுவப் படைகளில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பதவிகள் மற்றும் விருதுகளால் மேலும் அடிக்கோடிடப்பட்டிருக்கிறது. ஒரு அதிகாரி சாதியின் எழுச்சி என்பது மாவோவின் தலைமையின் கீழ் நிகழ்ந்தேறி வரும் சமூக அடுக்காக்க நிகழ்முறையை சுருங்க எடுத்துக்காட்டுகிறது. ஐம்பது வருடங்களுக்கான உழைப்பும் தியாகமும் யாரிடம் இருந்து கோரப்படுகிறதோ அந்த சீனத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலாத நிலையில், தமது பரந்த மக்கள் அடித்தளத்தை பயன்படுத்தி முடித்து விட்டு, ஆட்சியானது தனக்கென்று ஆதரவு நிலைகளை, எல்லாவற்றுக்கும் மேல் இராணுவப் படைகளில், உருவாக்க திட்டமிட்டு முனைகிறது. இப்போக்கு போகப் போக இன்னும் திட்டவட்டமானதாக மாறும். தொழிற்துறைமயமாக்கும் வேலைத்திட்டமும் மற்றும் விவசாயத்திலான நெருக்கடியும் மாவோ அதிகாரத்துவத்தை சீனப் பாட்டாளி வர்க்கத்தின் தீவிர ஆதரவை நாடும் கட்டாயத்திற்கு உட்படுத்துகிறது. ஆனால் அதிகாரத்துவத்தின் நலன்களோ தொழிலாளர்களின் நலன்களுடன் மோதலில் வருகின்றன. மேலும், திட்டத்தைச் செயல்படுத்துகையில், அதிகாரத்துவம் தொழிலாளர்களின் ஒரு பிரிவை முதலாளித்துவ நிறுவனங்களில் தனியார் முதலாளிகளுக்கு இலாபங்களை உத்தரவாதம் அளிக்கும் வேலைச் சூழலில் உழைக்கும் கட்டாயத்திற்கு உட்படுத்துகிறது. சீனத் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதானது இடதிலிருந்தான எதிர்ப்பிற்கு, எல்லாவற்றுக்கும் மேல் ட்ரொட்ஸ்கிசவாதிகளுக்கு, எதிரான தத்துவார்த்த பயங்கரவாதத்துடன் கைகோர்த்து வருகிறது. தேசிய அவையில் செப்டம்பர் 1954ல் ஒரு நிகழ்ச்சி உரையில் மத்திய மக்கள் அரசாங்கக் குழுவின் துணைத் தலைவர் லியு ஷாவோ ஷி இவ்வாறு கூறினார்: “சோசலிசத்தைக் கட்டுவதில் நமது நலன்களைப் பலவீனப்படுத்தும் நோக்கில், தந்திரமான நம் எதிரிகள் சிலரை கூலிக்கு அமர்த்தியுள்ளனர். அவர்கள் ட்ரொட்ஸ்கிசவாதிகள் மற்றும் ஷென் துசியூவாதிகள் போல “இடது” என்று பாசாங்கு செய்கிறார்கள், ஆனால் நம் நாட்டை சோசலிச முறைக்கு மாற்றுவதற்கு நாம் எடுக்கும் குறிப்பிட்ட நடவடிக்கைகளை எதிர்க்கின்றனர். நாம் “வேலையை முழுமையாகச் செய்யவில்லை” என்றும் நாம் “அளவுக்கதிகமாய் சமரசம் செய்துள்ளோம்” என்றும் ”மார்க்சிசத்தில் இருந்து நாம் விலகிச் சென்று விட்டோம்” என்றும் அவர்கள் கூறுகின்றனர். இத்தகைய அபத்தமான கருத்துகளின் மூலம் அவர்கள் மக்களைக் குழப்ப முற்படுகின்றனர். தேசிய முதலாளித்துவத்துடன் நமது கூட்டணியைத் துண்டிக்க வேண்டும் என்றும் உடனடியாக அவர்களிடம் இருப்பதை எல்லாம் பறிக்க வேண்டும் என்றும் அவர்கள் ஆலோசனை சொல்கின்றனர். நம்முடைய விவசாயக் கொள்கை “மிகவும் மெதுவாகச் செல்கிறது” என்றும் அவர்கள் குறைகூறுகின்றனர். விவசாயிகளுடன் கொண்டுள்ள கூட்டை நாம் முறிக்க வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர். இத்தகைய கருத்துக்கள் முற்றிலும் அபத்தம் இல்லையா? அவர்கள் விரும்புவதை நாம் செய்தோம் என்றால், அது ஏகாதிபத்தியத்தினரையும் துரோகி சியாங் கேய்-ஷேக்கையும்தான் திருப்திப்படுத்தும் (People's China, No. 19, 1954, page 17.) ட்ரொட்ஸ்கிசவாதிகளுக்கு எதிரான இச்சமீபத்திய தாக்குதல் புதிய சூழலில் தொழிலாளர்களின் போராட்டத்தை சூழ்ச்சித் திறத்துடன் கையாளுவற்கான அதிகாரத்துவத்தின் அரசியல் தயாரிப்பைத்தான் பிரதிபலிக்கிறது. மாவோ & குழுவினர் ஒருபொழுதும் தங்களுடைய வேலைத்திட்டத்தையும் கொள்கைகளையும் வர்க்கப் போராட்டத்தின் உத்வேகத்திற்கோ, பரந்த வெகுஜனங்ளின் தேவைகள் மற்றும் அபிலாசைகளுக்கோ இசைவாக ஒருபோதும் கொண்டிருப்பதில்லை. மாறாக, அதிகாரத்துவம் இடைவிடாமல் வெகுஜனங்களுடன் மோதல் பாதையில்தான் உள்ளது. புரட்சிகர இடதிற்கு மிகவும் முக்கியமான விடயம் இதுதான், அதிகாரத்துவமே தானாக ட்ரொட்ஸ்கிய வேலைத்திட்டம் தொழிலாள வர்க்கத்திடம் கொண்டிருக்கும் ஆழமான வேர்களை வெளிப்படுத்துகிறது. ஆட்சிக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே உள்ள இந்த நிரந்தரமான மோதல்தான் இறுதியில் ஆட்சியின் வீழ்ச்சியைக் கொண்டுவரும். பெய்ஜிங்கின் புதிய கொள்கை உள்நாட்டில் மாவோயிசத்தின் கொள்கை அதன் விரிவாக்கத்தை வெளியுறவுக் கொள்கையில் காண்கிறது. சீனாவிலுள்ள ஸ்ராலினிசத் தலைவர்கள் இருவகையான அச்சத்தால் பீடிக்கப்பட்டுள்ளனர்: ஏகாதிபத்தியத் தாக்குதல் குறித்த அச்சம் மற்றும் நிரந்தரப் புரட்சி குறித்த அச்சம். இப்பொழுது மாவோவும் குழுவினரும் “சமாதான சகவாழ்வு” போன்ற ஏற்கனவே நன்கு நிறுவப்பட்டுள்ள நிலைப்பாட்டின்படி இந்தநிலையை அடுத்த “ஐம்பது ஆண்டுகளுக்கு” தொடர்கிறார்கள். இத்தேசியவாதக் கொள்கை வெளியுறவுக் கொள்கையில் மிகப் பிற்போக்குத்தனமான பின்விளைவுகளை கொண்டிருக்க கடமைப்பட்டுள்ளது. ஏனெனில் உலக முதலாளித்துவத்தை “நடுநிலைப்படுத்தும்” கொள்கை என்பது இவர்களுக்கு சீனா தொழிற்துறைமயம் ஆக்கப்பட வேண்டும் என்பதற்காக. சீனாவை காலனித்துவ புரட்சியின் முக்கிய கோட்டை என்பதில் இருந்து ஆசியாவிலும் மற்ற இடங்களிலும் எஞ்சியுள்ள காலனித்துவ ஆக்கிரமிப்புகளில் ஏகாதிபத்திய ஆட்சியைப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரு முட்டுத்தூணாக மாற்றுவதற்கும் உள்நாட்டு முதலாளித்துவத்திற்கு தமது ஆட்சியை வலுப்படுத்திக் கொள்வதற்கு பெய்ஜிங் மற்றும் மாஸ்கோ மூலம் உள்நாட்டு ஸ்ராலினிஸ்டுகளை நம்பியிருக்கலாம் என்பதான ஒரு உத்தரவாதத்தை காணச் செய்வதற்குமான ஒரு திட்டமிட்ட பாதை என்பதே இதன் அர்த்தமாகும். முறையாக 1955 மார்ச் தேசிய மாநாட்டில் ஏற்கப்பட்ட பீக்கிங்கின் பொருளாதாரக் கொள்கையின் அரசியல் சுருக்கம், உலக முதலாளித்துவத்தை நடுநிலைப்படுத்தும் “தத்துவத்தின்” பிரகடனத்தில் சுருக்கமாகக் கூறப்படுகிறது. லெனினுக்குப் பிந்தைய சகாப்தத்தில் “தனியொரு நாட்டில் சோசலிசம்” (ரஷ்யா) என்கின்ற பேரில் மேற்கு ஐரோப்பாவில் பாட்டாளி வர்க்கப் புரட்சிகளை ஸ்ராலின் எப்படித் தடம்புரளச் செய்தாரோ அதேவகையில் சீன ஸ்ராலினிஸ்டுகள் “தனியொரு நாட்டில் சோசலிச”த்தின் (சீனா) நன்மைக்காக காலனித்துவப் புரட்சியை தடம்புரளச் செய்ய தயாரிப்புடன் இருந்தனர் என்பதை 1955 ஏப்ரலில் பான்டங்கில் சௌ வழங்கிய அறிவிப்பு கூறுகிறது. முடிவுரை: மூன்றாம் சீனப் புரட்சி, அது கொண்டுவந்த சமூக உருமாற்றங்கள், உலக முதலாளித்துவத்திற்கு அது கொடுத்த அடிகள் ஆகியவற்றின் தாக்கம் 1917ல் நடந்த ரஷ்யப் புரட்சிக்கு அடுத்தாற்போல் முன்னிலையில் உள்ளன. “ரஷ்யப் பிரச்சினை” உலக அரசியலில் கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களுக்கு முக்கிய அச்சாக இருந்திருக்கிறது; இப்பொழுது அது தன் நீட்சியையும், ஆழத்தையும் “சீனப் பிரச்சினையில்” காண்கிறது. சோவியத் ஒன்றியத்துடனேயே எந்த நீடித்த உடன்படிக்கைகளுக்கும் வர இயலாமல் இருந்த உலக ஏகாதிபத்தியம், இன்று சோவியத் ஒன்றியமும் சீனாவும் தம்மில் ஒருவர் சேதப்படுத்தத் துணியாத ஒரு கூட்டணிக்குள் ஒன்றாக வீசப்பட்டிருக்கும் நிலையில் அவற்றுடனான எந்த நீடித்த உடன்படிக்கைக்கும் வருவதற்கு அது முன்னிலும் அதிகமாய் திறனற்று இருக்கிறது. இவற்றிற்கு எதிராக அமெரிக்க ஏகாதிபத்தியத்தினர் இப்போதுவரை ஒரு முழுமூச்சான போரை நடத்தவில்லை என்றால் அதற்கு ஒரு காரணம் ஒரே காரணம் தான் உண்டு. கொரியாவின் போர்க்களங்களில் காட்டப்பட்ட வலிமை அத்தகையதொரு போரை இப்பொழுது வெல்லமுடியாது என்று அவர்களை நம்ப வைத்திருக்கிறது. இதுதான் இன்றைய முட்டுக்கட்டான நிலைக்கான பிரதான காரணம் ஆகும்; இது தற்காலிகமாகத்தான் இருக்க முடியும். ஒன்று, அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒரு முழுமூச்சான போரில் இறங்கும், இல்லையேல் சீனப் புரட்சியானது அதன் விரிவாக்கத்தை மற்ற நாடுகளில், எல்லாவற்றிற்கும் மேலாக, முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் கண்டு அத்துடன் முதலாளித்துவத்திற்கு நிரந்தரமாய் முற்றுப்புள்ளி வைக்கும். ஆனால் ஒன்று மட்டும் உறுதி; பீக்கிங் மற்றும் கிரெம்ளின் அதிகாரத்துவத்துவங்களின் பாதையில் தீர்வு ஏதும் கிடையாது. அவற்றின் குறுகிய தேசியவாதப் பாதையும், அவற்றின் சகவாழ்வு நிலைப்பாடும் உலக சோசலிசப் புரட்சியின் தேவைகளுடன் அவற்றை நேரடி மோதலுக்குக் கொண்டு வருகிறது; ஆனால் அது அவற்றை ஏகாதிபத்தியத் தாக்குதலில் இருந்து காப்பாற்றுவதற்கில்லை. முதலாளித்துவ நாடுகளில் உள்ள தொழிலாள வர்க்கத்தின் நலன்கள், சீனா மற்றும் சோவியத் ஒன்றியத்தில் இருக்கும் தொழிலாளர்களுடைய நலன்களைப் போன்றே, நிரந்தரப் புரட்சியின் வேலைத்திட்டத்தில்தான் வெளிப்படுகின்றன; அந்த வேலைத்திட்டத்தின் அடிப்படையில்தான் நான்காம் அகிலம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. [SWP விவாத அறிக்கை A-31 அக்டோபர் 1955ல் இருந்து மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளது] |