World Socialist Web Site www.wsws.org


Permanent Revolution & Results and Prospects

நிரந்தரப் புரட்சி & முடிவுகளும் வாய்ப்புக்களும்

முன்னுரை

Back to screen version

ரஷ்ய புரட்சிகர இயக்கத்தின் பல்வேறு தத்துவார்த்த போக்குகளும் அரசியல் அமைப்புகளும் அடிப்படை பிரச்சினைகளில் தங்களை எவ்விதத்தில் வெவ்வேறு குழுக்களாக பிரித்து அமைத்துக் கொண்டன என்பதே ரஷ்ய புரட்சியின் தன்மையின் அடிப்படையான கேள்வியாகும். சமூக ஜனநாயக இயக்கத்திற்குள்ளேயும் நிகழ்வுகள் அதற்கு ஒரு நடைமுறை தன்மையை கொடுத்த பின்னர், இந்தப் பிரச்சினையை தொடர்பாக தீவிர கருத்துவேறுபாடுகளை இக்கேள்வி எழுப்பியது. 1904ம் ஆண்டிலிருந்து இந்த வேறுபாடுகள் மென்ஷிவிசம், போல்ஷிவிசம் என்ற இரண்டு அடிப்படைப் போக்குகளின் வடிவத்தை எடுத்தன. எமது புரட்சி ஒரு பூர்சுவா புரட்சியாக, அதாவது அதன் இயற்கையான விளைவு அதிகாரம் பூர்சுவாசிக்கு மாற்றப்பட்டு, பூர்சுவா பாராளுமன்ற முறைக்கான நிலைமைகள் தோற்றுவிக்கப்படும் என்ற பார்வையை மென்ஷிவிசம் கொண்டிருந்தது. வரவிருக்கும் புரட்சியில் தவிர்க்க இயலாத முறையில் பூர்சுவா தன்மை இருக்கும் என்பதை உணர்ந்திருந்தபோதிலும், பாட்டாளிகள் மற்றும் விவசாயிகளின் சர்வாதிகாரத்தின் மூலம், ஒரு ஜனநாயகக் குடியரசை நிறுவுவதுதான் புரட்சியின் பணியாக இருக்கவேண்டும் என்ற கருத்தை போல்ஷிவிக்குகளின் பார்வை முன்வைத்தது.

மென்ஷிவிக்குகளின் சமூக பகுப்பாய்வு மிகவும் மேம்போக்கானதாகவும், சாராம்சத்தில் தன்னை, வெறும் வறட்டு வரலாற்று ஒப்புமைகளின் தன்மைக்கு குறைத்துக் கொண்டதும் ஆகும்; இது "படித்த" பிலிஸ்தீனியர்களின் (கலை, பண்பாட்டுக்கு எதிரானவர்களின்) இயல்பான முன்மாதிரி வழிவகையே ஆகும். ரஷ்ய பூர்சுவாசி அதன் இரண்டு எதிர்முனைகளிலும் அசாதாரணமான முரண்பாடுகளை தோற்றுவித்துள்ள வளர்ச்சி, பூர்சுவா ஜனநாயகத்தின் பங்கை முக்கியத்துவமற்றதாக்கியது என்ற உண்மையோ, அல்லது பின்னர் நிகழ்ந்த நிகழ்வுகளின் அனுபவங்களோ, அது அதனை "நாட்டின்" தலைமையில் இருத்தி, பாராளுமன்ற முறையை நிறுவி, இயன்ற அளவு பூர்சுவா வளர்ச்சிக்கான ஜனநாயக சூழ்நிலைகளையும் ஏற்படுத்தும், 'சரியான' மற்றும் 'உண்மையான', ஜனநாயகத்திற்காக தளராமல் தேடும் முயற்சியிலிருந்து மென்ஷிவிக்குகளை தடைப்படுத்தி இருக்கவில்லை. எப்பொழுதும், எல்லாவிடத்தும், மென்ஷிவிக்குகள் பூர்சுவா ஜனநாயகத்தின் வளர்ச்சியின் அடையாளங்களை கண்டுபிடிக்க பெரிதும் முயன்றனர்; எங்கு அவை இல்லையோ, அங்கெல்லாம் இவர்களாகவே அவை இருப்பதாக புதிதாக கண்டறிந்தனர். ஒவ்வொரு 'ஜனநாயக' பிரகடனத்தினதும் உரைகளினதும் முக்கியத்துவத்தையும் அவர்கள் மிகைப்படுத்தியதோடு, அதேநேரத்தில் பாட்டாளி வர்க்கத்தின் சக்திகளையும் வாய்ப்பு வளங்களையும் வரவிருக்கும் போராட்டத்தில் அவற்றின் எதிர்பார்ப்புக்களையும் குறைத்து மதிப்பிட்டனர். இந்த தலைமை தாங்கும் பூர்சுவா ஜனநாயகத்தை கண்டுபிடிக்க வெறியுடன் அரும்பாடுபட்டனர்; இதையொட்டி வரலாற்று விதிகளால் தேவைப்படுவது என்று கூறப்படும் ரஷ்ய புரட்சியின் பூர்சுவா தன்மையின் "சட்டபூர்வ தன்மையை" பாதுகாக்க அவர்கள் முனைப்புடன் இருந்ததுடன், புரட்சிக் காலத்திலும் தலைமைதாங்கும் பூர்சுவா ஜனநாயகம் இல்லாத நிலையிலும், மென்ஷிவிக்குகள் தாங்களே அதன் கடமைகளை இயன்ற அளவில் வெற்றியுடன் நிறைவு செய்து முடிப்பதற்கான பொறுப்பையும் மேற்கொண்டனர்.

குட்டி பூர்சுவா ஜனநாயகமானது எவ்விதமான சோசலிச கருத்தியலும் இல்லாமல், எவ்வித மார்க்சிச வர்க்கத் தயாரிப்புமில்லாமல், பெப்ரவரி புரட்சிக் காலக்கட்டத்தில் 'தலைமையேற்று நடத்தும்' பங்கை மென்ஷிவிக்குகள் கொண்டது போன்ற முறையை தவிர வேறு எந்த மாறுபட்ட விதத்திலும் ரஷ்ய புரட்சியின் நிலைமைகளில், நடந்து கொண்டிருக்க முடியாது. பூர்சுவா ஜனநாயகத்திற்கு தீவிரமான சமூக அடித்தளம் இல்லாத தன்மை மென்ஷிவிக்குகளுக்கே விரைவில் அதனை உணர்த்தியது; ஏனெனில் அவர்களால் நீண்டகாலம் உயிர்வாழமுடியாது போனதுடன், புரட்சியின் எட்டாம் மாத்திலேயே அவர்கள் வர்க்கப் போராட்டத்தினால் ஒருபுறமாக தூக்கி எறியப்பட்டனர்.

இதற்கு முற்றிலும் மாறாக, போல்ஷிவிசம் ரஷ்யாவில் பூர்சுவா ஜனநாயகத்தின் புரட்சிகர சக்தி மற்றும் அதிகாரம் ஆகியவற்றில் நம்பிக்கையுடன் எந்தவகையிலும் ஊக்குவிக்கப்படாது இருந்தது. ஆரம்பத்தில் இருந்தே, வரவிருக்கும் புரட்சியில் தொழிலாள வர்க்கத்தின் தீர்க்ககரமான முக்கியத்துவத்தை அது ஏற்றுக் கொண்டிருந்தது; ஆனால் புரட்சியின் வேலைத்திட்டத்தில், மில்லியன் கணக்கான விவசாயிகளின் நலன்களுக்கு அதனை மட்டுப்படுத்தி, அவர்கள் இல்லாமலும் அவர்களுக்கு எதிராகவும் புரட்சியை தொழிலாள வர்க்கத்தினால் முடிவை நோக்கி கொண்டுசெல்லமுடியாது என்பதை ஏற்றுக்கொண்டிருந்தனர். எனவேதான் அவர்கள் (தற்போதைக்கு) புரட்சியின் பூர்சுவா ஜனநாயக தன்மையை ஒப்புக்கொண்டனர்.

ரஷ்ய புரட்சியின் உள் சக்திகளை பற்றிய மதிப்பீட்டையும் அதன் வாய்ப்பு வளங்களையும் பொறுத்தவரை, அக்கால கட்டத்தில் இந்நூலாசிரியர் ரஷ்ய தொழிலாளர் இயக்கத்தின் முக்கிய போக்குகளின் எந்தப்பிரிவுடனும் இணைந்திருக்கவில்லை. அவர் அப்பொழுது ஆதரவு கொடுத்திருந்த நிலைப்பாட்டை கீழ்க்கண்டவாறு கோடிட்டுக் காட்டலாம்: அதாவது, தன்னுடைய முதல் பணிகளை பொறுத்தவரையில் ஒரு பூர்சுவா புரட்சி என்று தொடங்கிய புரட்சி விரைவிலேயே மிகச் சக்தி வாய்ந்த வர்க்க மோதல்களுக்கு அழைப்பு விடும் என்றும் இறுதியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தலைமை தாங்கும் வர்க்கத்திற்கு, பெயர் குறிப்பிடுவதாயின் பாட்டாளி வர்க்கத்திற்கு அதிகாரம் மாற்றப்பட்டால்தான் இறுதி வெற்றி கிடைக்கும் என்பதேயாகும். பாட்டாளி வர்க்கம் ஒருமுறை அதிகாரத்திற்கு வந்த பின்னர், அது பூர்சுவா ஜனநாயக வேலைத்திட்டத்தினை விரும்பாது என்பது மட்டுமல்லாமல், அதனுள் தன்னை மட்டுப்படுத்திக் கொள்ளவும் முடியாது. ரஷ்ய புரட்சியானது, ஐரோப்பிய பாட்டாளி வர்க்கத்தின் புரட்சியாக மாற்றப்பட்டுவிடும் என்ற நிலையில்தான் அது புரட்சியை இறுதி நிலைக்குக் கொண்டு செல்ல முடியும். புரட்சியின் பூர்சுவா-ஜனநாயக வேலைத்திட்டம் மற்றும் அதனுடைய தேசிய வரம்புகளை கடந்து சென்று ரஷ்ய தொழிலாள வர்க்கத்தின் தற்காலிக அரசியல் ஆதிக்கம் நீடித்த சோசலிச சர்வாதிகாரமாக வளர்ச்சியுறும். ஆனால் ஐரோப்பா செயலற்று முடங்கி இருந்தால், பூர்சுவா எதிர்ப்புரட்சி, ரஷ்யாவில் உள்ள உழைக்கும் மக்களின் அரசாங்கத்தை பொறுத்துக் கொண்டிராது, மற்றும் நாட்டை தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் ஒரு ஜனநாயகக் குடியரசு என்ற நிலையில் இருந்து பெரிதும் பின்தள்ளி வைத்துவிடும். எனவே அதிகாரத்தை ஒருமுறை வென்றபின்னர், பாட்டாளி வர்க்கம் பூர்சுவா ஜனநாயகத்தின் வரம்பிற்குள் தன்னை இருத்திக் கொள்ள முடியாது. அது நிரந்தரப் புரட்சியின் தந்திரோபாயங்களை கட்டாயம் ஏற்க வேண்டும் அதாவது, சமூக ஜனநாயகத்தின் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வேலைத்திட்டங்களுக்கு இடையேயான தடைகளை அழித்து, மேலும் கூடுதலான தீவிரமான சமூக சீர்திருத்தங்களை கொண்டுவருதல் மேலும் மேற்கு ஐரோப்பாவின் புரட்சியில் உடனடியான மற்றும் நேரடியான ஆதரவைத் தேடும். இந்த நிலைப்பாடுதான் 1904-06ல் முதலில் எழுதப்பட்டு, இப்பொழுது மறுபதிப்பாகியுள்ள நூலில் அபிவிருத்தி செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டுள்ளது.

ஒரு 15 ஆண்டு காலத்தில் நிரந்தரப் புரட்சியின் நிலைப்பாட்டினை தக்கவைத்துக் கொண்டாலும்கூட, சமூக ஜனநாயக இயக்கத்தினுள் போட்டியிடும் பிரிவுகளை பற்றிய தன் மதிப்பீட்டில் நூலாசிரியர் ஒரு பிழையை செய்திருந்தார். இவை இரண்டு பிரிவுமே பூர்சுவா புரட்சியின் நிலைப்பாட்டில் இருந்து ஆரம்பித்திருந்ததால், இவர்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் ஒரு பிளவை நியாயப்படுத்திவிடக்கூடிய அளவிற்கு ஆழ்ந்து போய் விடாது என்ற கருத்தை ஆசிரியர் கொண்டிருந்தார். அதேநேரத்தில், வரவிருக்கும் நிகழ்ச்சிகளின் போக்கானது ஒரு புறத்தில் ரஷ்ய பூர்சுவா ஜனநாயகத்தின் வலுவற்றதன்மை மற்றும் முக்கியத்துவமற்ற நிலை ஆகியவற்றையும் மறுபுறத்தில் பாட்டாளி வர்க்கம் தன்னை ஒரு ஜனநாயக வேலைத்திட்டத்தினுள் மட்டுப்படுத்திக் கொள்வதற்கான புறநிலையான சாத்தியமற்ற தன்மையையும் தெளிவாக நிரூபித்து விடும் என்று அவர் நம்பினார். இதையொட்டி கன்னைவாத வேறுபாடுகளுக்கான அடித்தளம் அகற்றப்பட்டுவிடும் என்றும் அவர் நினைத்தார்.

புலம் பெயர்ந்திருந்த காலத்தில் இரு பிரிவுகளுக்கும் வெளியே நின்றிருந்ததால், போல்ஷிவிக்குகளுக்கும் மென்ஷிவிக்குகளுக்கும் இடையேயுள்ள உடன்பாடின்மை ஒரு புறத்தில் வளைந்துகொடுக்கும் தன்மையில்லாத புரட்சியாளர்கள் அணிசேர்தலையும், மறுபுறம் கூடுதலானவகையில் சந்தர்ப்பவாதங்களும், சமரசவாதங்களும் நிறைந்த கூறுகளுமாக உண்மையில் இருந்த சூழ்நிலையின் முக்கியமான தன்மையை நூலாசிரியர் முற்றிலும் கருத்திற் கொள்ளவில்லை. 1917ல் புரட்சி வெடித்தவுடன், முன்னேறிய தொழிலாளர்களின் மற்றும் புரட்சிகர அறிவுஜீவிகளின் சிறந்த கூறுகளை ஐக்கியப்படுத்தும் வலுவான மத்தியத்துவம்மிக்க அமைப்பாக போல்ஷிவிக் கட்சி இருந்தது; இந்நிலை சில உட்போராட்டங்களுக்கு பின்னர் முழு சர்வதேச நிலைமை, மற்றும் ரஷ்யாவில் உள்ள வர்க்க உறவுகள் இவற்றுடன் ஒருங்கிசைவில் தொழிலாள வர்க்கத்தின் சோசலிச சர்வாதிகாரத்தை நோக்கி இயக்கும் தந்திரோபாயங்களை வெளிப்படையாக ஏற்றது. மென்ஷிவிக்கு பிரிவை பொறுத்தவரையில், அக்காலகட்டத்தில், நான் முன்னரே குறிப்பிட்டிருந்தபடி பூர்சுவா ஜனநாயகத்தின் கடமைகளை ஏற்கப் போதுமான நிலைக்கு மட்டும் கனிந்திருந்தது.

இப்பொழுது பொதுமக்கள் படிப்பதற்காக இந்நூலை மறுபதிப்பாக அளிக்கும் ஆசிரியர், பல ஆண்டுகள் போல்ஷிவிக் கட்சிக்கு வெளியே இருந்த இவரையும் ஏனைய தோழர்களையும் 1917ம் ஆண்டு ஆரம்பத்தில், தங்கள் விதியை கட்சியின் விதியுடன் இணைத்துக் கொள்ளுவதற்கான நிலையின், கோட்பாட்டு அடிப்படையை விளக்க விரும்புவதோடு மட்டும் இல்லாமல்,--(அத்தகைய தனிப்பட்ட விளக்கம் மட்டுமே புத்தகத்தின் மறுபதிப்பின் காரணமாவதற்கு போதுமானது அல்ல)-- பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரம் ஒரு நிறைவேற்றப்பட்ட உண்மையாக நிறுவப்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே எவ்வாறு ரஷ்ய புரட்சியின் உந்துதல் சக்திகளின் சமூக-வரலாற்று ஆய்வு, தொழிலாள வர்க்கத்தால் அரசியல் அதிகாரம் கைப்பற்றப்படல் ரஷ்ய புரட்சியின் பணியாக இருக்கமுடியும் மற்றும் கட்டாயமாக இருக்க வேண்டும் என்ற அத்தகைய முடிவைத்தான் கொண்டுவரும் என்று முன்னரே கூறியிருந்ததையும் நினைவிற்கு கொண்டுவருகிறது. 1904ம் ஆண்டில் இதன் அடிப்படை கருத்துக்கள் உருப்பெற்ற வகையிலும், 1906ம் ஆண்டு எழுதப்பட்டதுமான இந்தப் பிரசுரத்தை எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் இப்பொழுது வெளியிடுகிறோம் என்ற உண்மையே, பூர்சுவா ஜனநாயகத்தின் பதிலீடாக வந்துள்ள மென்ஷிவிக்குகளின் பக்கம் மார்க்சிச கோட்பாடு சார்ந்திருக்கவில்லை என்பதற்கு தக்க நிரூபணமாகும்.

ஒரு கோட்பாட்டின் இறுதிப் பரிசோதனை என்பது அனுபவம்தான். இப்பொழுது நாம் பங்கு கொண்டுள்ள நிகழ்வுகளின் மூலமும், அவற்றில் நாம் பங்கு கொண்டு வரும் முறையின் வகைகளும், அவற்றின் அடிப்படை தன்மையில் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பே கண்டறியப்பட்டுவிட்டன என்ற உண்மையை எடுத்துக்கொண்டால் மார்க்சிச கோட்பாட்டை நாங்கள் சரியான முறையில் பயன்படுத்தியிருக்கிறோம் என்பதற்கு அசைக்க முடியாத நிரூபணம் ஆகும்

1915ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ம் தேதி Paris Nashe Slovo வில் "அதிகாரத்திற்கான போராட்டம்" (The Struggle for Power) என்ற பெயரில் வந்திருந்த ஒரு கட்டுரையை பிற்சேர்க்கையாக மறுபதிப்புச் செய்துள்ளோம். இந்தக் கட்டுரை ஒரு கருத்து விவாதத்தை கொண்டிருந்தது, மென்ஷிவிக்குகளின் தலைவர்களால் "ரஷ்யாவிலுள்ள தோழர்களுக்கு" என்று எழுதியிருந்த வேலைத்திட்ட ரீதியான 'கடிதத்திற்கு' ஒரு விமர்சனமாக வந்ததாகும். இதில் 1905 புரட்சிக்கு பின்னர் ஒரு தசாப்தத்தில் வர்க்க உறவுகளின் வளர்ச்சி இன்னும் கூடுதலாகவே பூர்சுவா ஜனநாயகம் பற்றிய மென்ஷிவிக்குகளின் நம்பிக்கை குறைமதிப்பிற்கு உட்பட்டுள்ளது என்றும் அதையொட்டி, ரஷ்ய புரட்சியின் தலைவிதி எப்பொழுதும் இல்லாத வகையில் கூடுதலாக பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்துடன் பிணைந்துள்ளது என்றும் முடிவுரையாக கூறியிருந்தோம். ... இதற்கு முந்தைய ஆண்டுகள் முழுவதிலும் கருத்துக்களை பற்றிய மோதலில், அக்டோபர் புரட்சியின் தன்மை பற்றி "வெறும் தீரச்செயல்மிக்க முயற்சி" என்று கூறினால் உண்மையில் ஒருவர் கட்டாயம் மரமண்டையாகத்தான் இருக்க வேண்டும்!

புரட்சியை பற்றிய மென்ஷிவிக்குகளின் அணுகுமுறை பற்றிப் பேசும்போது, மார்டோவ், டான், டெசெரெடெல்லி ஆகியவர்களுடைய "கோட்பாடுகளில்" காணப்படும் கோட்பாட்டு, அரசியல் சீரழிவைத்தான், மென்ஷிவிக் முறையிலான காவுட்ஸ்கியும் தன்னுடைய சீரழிவை காண்கிறார் என்பதைக் கூறத்தான் வேண்டியிருக்கிறது. அக்டோபர் 1917க்குப் பின்னர், சமூக ஜனநாயக கட்சியின் வரலாற்றுப் பணியாக தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தை வெற்றி கொள்ள வேண்டும் என்று கொண்டாலும்கூட, ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி, காவுட்ஸ்கி நிர்ணயித்திருந்த கால அட்டவணையில், குறிப்பிட்ட வழியில் அவ்வாறு அது செய்யாததால், சோவியத் குடியரசு திருத்தப்படுவதற்காக கெரென்ஸ்கி, டெசெரெடெல்லி மற்றும் ஷேர்நேவிடம் ஒப்படைக்கப்படவேண்டும் என்று காவுட்ஸ்கியிடம் இருந்து நாங்கள் கேள்விப்பட்டோம். காவுட்ஸ்கியின் 1905-06 கட்டுரைகளை படித்துவிட்டு திறந்த கண்களுடன் முதலாவது ரஷ்ய புரட்சிக் காலத்தில் செயல்பட்ட தோழர்களுக்கு இன்னும் எதிர்பாராத வகையில்தான் காவுட்ஸ்கியின் பிற்போக்குவாத-வறட்டுப் பண்டிதமுறை விமர்சனம் இருந்திருக்கும். அக்காலக்கட்டத்தில் (ரோசா லுக்சம்பேர்க்கின் நயமான செல்வாக்கிற்குட்பட்டுத்தான், உண்மையில்) காவுட்ஸ்கி, ரஷ்ய புரட்சி ஒரு பூர்சுவா ஜனநாயகக் குடியரசு என்று முடிந்து விடாது என்றும் தவிர்க்க முடியாமல் இது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கு அழைத்துச் சென்றுவிடும் என்று அறிந்து கொண்டதுடன், ஒப்புக் கொள்ளவும் செய்திருந்தார்; ஏனெனில் நாட்டிற்குள்ளேயே வர்க்கப் போராட்டத்தின் தன்மை எய்தியிருந்த நிலையும், முதலாளித்துவத்தின் சர்வதேசநிலையும் அதைத்தான் சுட்டிக்காட்டியிருந்தன. இதன் பின்பு, சமூக ஜனநாயக பெரும்பான்மையுடன் ஒரு தொழிலாளர் அரசாங்கம் நிறுவப்படவேண்டியது பற்றி காவுட்ஸ்கி வெளிப்படையாகவே எழுதினார். வர்க்கப் போராட்டத்தின் உண்மையான போக்கு அரசியல் ஜனநாயகத்தின் மேம்போக்கான, மாறிக்கொண்டிருக்கும் கூட்டுக்களுக்கேற்ப உண்மையில் இருக்கும் என்று அவர் அப்பொழுது கருதியும் பார்க்கவில்லை.

அந்த நேரத்தில் புரட்சி முதல் தடவையாக மில்லியன் கணக்கான விவசாயிகளையும் நகர்ப்புற குட்டி பூர்சுவாக்களையும் கிளர்ந்தெழச்செய்யும் வகையில் தோன்றும் என்றும், அதுவும் உடனே அவ்வாறு ஏற்படாமல் சிறிது சிறிதாக, அடுக்கடுக்காக அத்தகைய விழிப்புணர்வை பெறும் என்றும், பாட்டாளி வர்க்கத்திற்கும் முதலாளித்துவ பூர்சுவாவுக்கும் இடையேயுள்ள போராட்டம் அதன் உச்சக்கட்டத்தை அடையும்போது, விவசாய மக்கள் இன்னும் அரசியல் வளர்ச்சியில் மிகவும் பிற்பட்ட தரத்தில்தான் இருப்பர் என்றும், அதையொட்டி அவர்கள் தங்களுடைய வாக்குகளை விவசாய வர்க்கத்தின் தப்பெண்ணங்களையும் பின்தங்கிய நிலையையும் பிரதிபலிக்கும் இடைநிலையிலுள்ள அரசியல் கட்சிகளுக்கே அளிப்பர் என்றும் காவுட்ஸ்கி புரிந்துகொண்டார். அதிகாரத்தை வெற்றிகொள்வதை நோக்கி புரட்சியின் தர்க்கத்தால் வழிநடத்தப்படும் பாட்டாளி வர்க்கம் தன்னிச்சையாக இச்செயலை காலவரையின்றி ஒத்திப்போட முடியாது என்றும், அத்தகைய தன்னை குறைத்துக் கொள்ளும் தன்மையினால் எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளுக்கு இடமளிக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் புரிந்துகொண்டார். ஆனால் அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் பாட்டாளி வர்க்கம் புரட்சியின் தலைவிதியை, ஒரு குறிப்பிட்ட கணத்திலுள்ள இன்னும் விழிப்படையாத மக்களின் குறைந்த நனவின் தற்காலிக மனநிலைகளில் தங்கியிருக்க செய்யாது என்பதையும், மேலும் இதற்கு மாறாக, தன்னிடம் குவிந்துள்ள அரசியல் அதிகாரத்தை, இதே பின்தங்கிய, அறியாமையில் ஆழ்ந்துள்ள விவசாய மக்கட்தொகுப்பினை அறிவுசார்ந்ததாகவும், ஒழுங்கமைக்கவுமான ஒரு பலம்வாய்ந்த சாதனமாக மாற்றுதற்கு அது திரும்பும் என காவுட்ஸ்கி பின்னர் புரிந்திருந்தார். ரஷ்ய புரட்சியை ஒரு பூர்சுவா புரட்சி என்று அழைத்து அதன் பணிகளை வரம்பிற்கு உட்படுத்துவது என்பது உலகில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளாத தன்மைதான் என்பதையும் காவுட்ஸ்கி புரிந்திருந்தார். ரஷ்ய மற்றும் போலந்து புரட்சிகர மார்க்சிசவாதிகளுடன் இணைந்த முறையில், ஐரோப்பிய பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு முன்பு ரஷ்ய பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்றிவிட்டால், அந்த நிலைமையை பயன்படுத்தி ஆளும்வர்க்கம் எனும் முறையில் தன்னுடைய நிலைமையை பூர்சுவாசியிடம் விரைவாக சரணடையாமல், ஐரோப்பாவிலும், உலகம் முழுவதும் உள்ள பாட்டாளி வர்க்க புரட்சிக்கு உதவும் வகையில் சக்தி வாய்ந்த செயற்பாட்டை வெளிப்படுத்தவேண்டும் என்று மிகச்சரியான முறையில் ஒப்புக் கொண்டார். மார்க்சிச கொள்கைவழியின் உணர்வுடன் தோய்ந்த இத்தகைய உலகம் முழுவதற்குமான முன்னோக்கு, 1917ம் ஆண்டு நவம்பர், டிசம்பரில் அரசியலமைப்பு சட்டமன்றத் தேர்தலில் எப்படி, எவருக்கு விவசாயிகள் வாக்குப்போட உள்ளார்கள் என்பதை நம்பித்தான் இருக்கும் என்று கவுட்ஸ்கியாலோ, நம்மாலோ கருதப்படவியலாது.

15 ஆண்டுகளுக்கு முன் கோடிட்டுக்காட்டப்பட்ட வாய்ப்புவளம் பற்றிய கருத்துக்கள் இப்பொழுது உண்மை நிகழ்வுகள் ஆகியுள்ள நிலையில், பூர்சுவா ஜனநாயக அரசியல் அலுவலகத்தில் இந்தப் புரட்சியின் பிறப்பு முறையாகப் பதிவு செய்யப்படவில்லை என்ற காரணத்தைக்காட்டி, அதற்குப் பிறப்புச்சான்றிதழை கொடுப்பதற்கு காவுட்ஸ்கி மறுக்கிறார். என்ன விந்தையான உண்மை! எத்தகைய நம்பமுடியாத மார்க்சிசம் பற்றிய அவமதிப்பு! ரஷ்ய புரட்சி மீதான இத்தகைய பிலின்ஸ்டைனிய தீர்ப்பை, நம்ப முடியாத அளவிற்கு அதன் மிகப்பெரிய கோட்பாட்டாளர் ஒருவரிடம் பெற்றுள்ளது என்பதை பார்க்கும்போது, இரண்டாம் அகிலத்தினுடைய சீரழிவு இதன் மூலம் வெளிப்படுகிறது என்பது மிகுந்த ஆதார நியாயத்துடன் கூறப்படலாம் என்பதும், இவர் ஆகஸ்ட் 4, 1914-ல் போர்க் கடன்களுக்கு ஒப்புதல் கொடுக்கும் வகையில் வாக்களித்ததைவிடவும் இன்னும் கூடுதலான முறையில் அருவருப்பான வெளிப்பாடாக இது இருக்கின்றது.

பல தசாப்தங்களாக காவுட்ஸ்கி சமூகப்புரட்சி சிந்தனைகளை வளர்த்து, நிலை நிறுத்தியுள்ளார். அவை இப்பொழுது நனவாகிவிட்ட நிலையில், அவற்றை எதிர்கொள்ள பெரும் பீதியடைந்து அவர் பின்வாங்குகிறார். ரஷ்ய சோவியத்தின் அதிகாரத்தால் பெரும் பீதி அடைந்து, ஜேர்மன் கம்யூனிச பாட்டாளி வர்க்கத்தின் மாபெரும் இயக்கத்திடம் ஒரு விரோதமான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். காவுட்ஸ்கி ஒரு ஏழ்மையான பள்ளி ஆசிரியரின் வாழ்க்கையுடன் ஒத்துள்ளார். அவ்வாசிரியர் தன்னுடைய மாணவர்களுக்கு, புழுக்கம் நிறைந்திருந்த நான்கு சுவர்களுக்குள் வசந்த காலத்தின் வர்ணையை பற்றி பல வருடங்களாக திருப்பித் திருப்பிக் கூறிக்கொண்டிருந்தார்; கடைசியில் தன்னுடைய ஆசிரிய நாட்களின் இறுதியில் இந்த ஆசிரியர் வெளியே வந்து சுதந்திரமான காற்றை சுவாசிக்கும்போது, அவர் வசந்த காலத்தை உணரவில்லை, (ஒரு பள்ளி ஆசிரியர் எந்த அளவிற்கு சீற்றம் காண முடியுமோ, அந்த அளவிற்கு) பெரும் சீற்றத்தைக் கொண்டு, வசந்த காலம் என்பது உண்மையில் வசந்த காலம் அல்ல, இயற்கையில் ஏற்பட்டுள்ள ஒரு பெரும் ஒழுங்கற்ற நிலைதான் அது; ஏனெனில் அனைத்து இயற்கை விதிகளையும் மீறி அது விளைந்துள்ளது என்று நிரூபிக்க முயன்றார். இதைப் போல்தான் காவுட்ஸ்கியின் நிலைமையும் உள்ளது. இவ்வகையில் மிகவும் அதிகாரப்பாணியான கல்விச்செருக்குடையவர்களை தொழிலாளர்கள் நம்பாது வசந்தகாலத்தின் குரலை நம்புவது நல்லதுதான்!

மார்க்சின் சீடர்களாகிய நாம், நம்முடைய ஜேர்மன் தொழிலாளர்களுடன் இணைந்து, புரட்சியென்னும் வசந்தம் சமூக இயற்கை விதிகளுக்கு முற்றிலும் உட்பட்டு மார்க்சிச கோட்பாட்டின் விதிகளிற்குட்பட்டே வந்துவிட்டது என்ற நம்பிக்கையில் உறுதியாக நிற்போம்; அதேநேரத்தில் மார்க்சிச கோட்பாட்டின் விதிகளின்படி, மார்க்சிசம் என்பது இது வரலாற்றிற்கு எதிராக ஒரு பள்ளி ஆசிரியரின் கைவிரல் சுட்டிக்காட்டுவதுபோல் அன்றி, உண்மையில் நிகழ்ந்து கொண்டிருக்கும் வரலாற்று நிகழ்ச்சிப்போக்குகளின் வழிகள் மற்றும் வழிமுறைகள் பற்றி ஆராயும் சமூக ஆய்வாகும் என்பதையும் நன்கு உணர்ந்து கொள்ளுவோம்.

1906 மற்றும் 1915 இவற்றின் இரண்டு படைப்புக்களின் உரையையும் எந்த மாறுதல்களையும் ஏற்படுத்தாமல் அப்படியே அளித்துள்ளேன். முதலில் இந்த உரையை இன்றளவிற்குப் பொருந்தும் தன்மையை கொடுக்கும் வகையில் குறிப்புக்கள் எழுதலாம் என்று கருதினேன்; ஆனால் பொருளுரையை படித்தபின் இந்த விருப்பத்தை கைவிட்டு விட்டேன். நான் இன்னும் கூடுதலான விரிவான முறையிலே எழுத வேண்டும் என்றால் புத்தகத்தின் அளவு இருமடங்காகி விடும்; அதற்கு இப்பொழுது நேரமும் இல்லை; மேலும் அத்தகைய 'இரண்டு-அடுக்கு' புத்தகம் வாசகருக்கு வசதியாகவும் இருக்காது. இதையும் விட முக்கியமாகக் குறிப்பிடவேண்டியது என்னவென்றால், இந்நூலின் முக்கிய கருத்துக்களின் தொடர், இப்பொழுதுள்ள நிலைமைகளை பெரிதும் ஒத்து உள்ளது, மற்றும் இன்னும் நல்ல முறையில் நூலை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்துடன் படிக்கும் வாசகர் அது வழங்கும் தற்போதைய புரட்சியின் அனுபவத்திலிருந்து எடுக்கப்பட்ட அத்தியாவசியமான புள்ளிவிவரங்களுடன் விளக்கத்தை மிக எளிதில் செம்மைப்படுத்திக்கொள்ள இயலும்.

லியோன் ட்ரொட்ஸ்கி,

மார்ச் 12, 1919. கிரெம்ளின்


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved