World Socialist Web Site www.wsws.org


Permanent Revolution & Results and Prospects

V. The Proletariat in Power and the Pesantry

நிரந்தரப் புரட்சி & முடிவுகளும் வாய்ப்புக்களும்

V. அதிகாரத்தில் உள்ள பாட்டாளி வர்க்கமும் விவசாயிகளும்

Back to screen version

புரட்சியில் உறுதியான வெற்றி கிடைக்கும் பட்சத்தில், போராட்டத்தில் முக்கிய பாத்திரத்தை ஆற்றும் வர்க்கத்திடம் அதிகாரம் சென்றடையும்; வேறு வார்த்தைகளில் கூறுவதெனில், அதிகாரம் பாட்டாளி வர்க்கத்தின் கைகளில் போய்ச்சேரும். இது பாட்டாளி வர்க்கமல்லாத சமூக குழுக்களின் புரட்சிகர பிரதிநிதிகள் அரசாங்கத்தில் நுழைவதை தடுத்துவிடாது என்று உடனடியாக நாம் கூறவேண்டும். அவர்கள் அரசாங்கத்திற்குள் வரலாம், வரவேண்டும்: ஒரு தெளிந்த கொள்கை பாட்டாளி வர்க்கத்தை, நகர்ப்புற குட்டி பூர்சுவாக்களின் முக்கிய தலைவர்கள், புத்திஜீவிகள், விவசாயிகள் போன்றோரை அதிகாரத்தில் பங்கு பெறுவதற்கு அழைப்பு விடுமாறு கட்டாயப்படுத்தும். இதில் பிரச்சினை என்னவென்றால், அரசாங்க கொள்கையின் உள்ளடக்கத்தை எவர் நிர்ணயிப்பர், அரசாங்கத்திற்குள் உறுதியான பெரும்பான்மையை எவர் அமைப்பர்? என்பதாகும்.

மக்களின் ஜனநாயக கருத்துடைய பிரிவினரின் பிரதிநிதிகள், ஓர் அரசாங்கத்தில் தொழிலாளர்களின் பெரும்பான்மையுடன் நுழைவது என்பது வேறு; பாட்டாளி வர்க்கத்தின் பிரதிநிதிகள் ஒரு முற்றிலும் பூர்சுவா-ஜனநாயக அரசாங்கத்தில் கௌரவமான கைதிகளாக வைக்கப்பட்டுள்ளது போல் பங்குகொள்ளுதல் என்பது வேறு.

பல தடுமாற்றங்கள், பின்வாங்குதல்கள், காட்டிக்கொடுத்தல்கள் ஆகியவை இருந்த போதிலும்கூட, தாராளவாத முதலாளித்துவ பூர்சுவாக்களின் கொள்கை தீர்மானகரமாக இருந்தது. பாட்டாளி வர்க்கத்தின் கொள்கை மேலும் தீர்மானகரமாகவும் முற்றுப் பெற்ற தன்மையையும் கொண்டிருந்தது. ஆனால் அறிவுஜீவிகளுடைய கொள்கை, தங்களுடைய சமுக ரீதியான இடைநிலைத் தன்மை மற்றும் அவர்களின் வளைந்து கொடுக்கும் அரசியலின் காரணமாகவும் விவசாயிகளுடைய கொள்கை, அவர்களின் சமூக வேற்றுமை, அவர்களின் இடைப்பட்ட நிலை மற்றும் பழமைத்தனம் ஆகியவற்றின் கண்ணோட்டத்திலும்; நகர்ப்புற குட்டி பூர்சுவாக்களின் கொள்கை, குணநலனற்ற தன்மை, இடைப்பட்ட நிலை, அரசியல் மரபு சிறிதும் அற்ற நிலை என்பதின் காரணமாகவும் - இந்த மூன்று சமூகக் குழுக்களின் கொள்கையும் முற்றிலும் உறுதியற்ற தன்மை, ஒழுங்குற அமைக்கப்படாத நிலையில், சகலவிதமான சாத்தியங்களையும் கொண்டிருந்ததால் முழு அளவில் ஆச்சரியங்களையும் கொண்டிருந்தது.

பாட்டாளி வர்க்கத்தின் பிரதிநிதிகள் இல்லாத ஒரு புரட்சிகர ஜனநாயக அரசாங்கம் பற்றி கற்பனை செய்து பார்த்தாலே, அத்தகைய கருத்துப் படிவத்தின் பொருளற்ற தன்மை உடனடியாக தெரிந்துவிடும். சமூக ஜனநாயகவாதிகள் அத்தகைய புரட்சிகர அரசாங்கத்தில் பங்குபெற மறுப்பது, அத்தகைய அரசாங்கத்திற்கு முற்றிலும் இயலாத் தன்மையை கொடுக்கும் என்பதோடு, மற்றும் இவ்வாறு புரட்சியை காட்டிக் கொடுப்பதற்கும் சமமாகிவிடும். ஆனால், பாட்டாளி வர்க்கம் அத்தகைய அரசாங்கத்தில் ஆதிக்கம் பெற்றுத் தலைமை வகிக்கும் நிலையில் பங்கு பெறுவது என்பது புறநிலை ரீதியாக பெரிதும் நடக்கக் கூடிய செயல் என்பது மட்டுமின்றி, கொள்கையளவில் அனுமதிக்கக் கூடியதேயாகும். அத்தகைய அரசாங்கத்தை பாட்டாளிகள் மற்றும் விவசாயிகளின் சர்வாதிகாரம் என்றோ அல்லது பாட்டாளி வர்க்கம், விவசாயிகள் மற்றும் புத்தி ஜீவிகளின் சர்வாதிகாரம் என்றோ அல்லது தொழிலாள வர்க்கம் மற்றும் குட்டி பூர்சுவாக்களின் கூட்டணி அரசாங்கம் என்றோகூட அழைத்தாலும், தீர்க்கப்படாத வினா இதுதான்: அரசாங்கத்திற்குள்ளும் அதன் மூலம் நாட்டிலும் அதிகார செல்வாக்கை பயன்படுத்துவதில் மேலாதிக்கம் செலுத்த இருப்பது யார்? மேலும், நாம் தொழிலாளர்கள் அரசாங்கம் என்று பேசும்பொழுது, மேலாதிக்கம் தொழிலாள வர்க்கத்தை சேர்ந்தது என்று இதன்மூலம் நாம் விடை கூறுகிறோம்.

ஜாக்கோபின் சர்வாதிகாரத்தின் கருவி என்ற முறையில் தேசிய பேரவையானது ஜாக்கோபினரால் மட்டும் நிறைந்திருக்கவில்லை. அதையும்விட மேலாக, ஜாக்கோபினர்கள் அதில் சிறுபான்மையில் இருந்தனர். என்றாலும் சான்ஸ்குலோட்டுக்களின் (Sansculottes) செல்வாக்கு, பேரவை சுவர்களுக்கு வெளியே இருந்தது மற்றும் நாட்டைப் பாதுகாக்கும்பொருட்டு உறுதியான கொள்கைக்கான தேவை ஆகியன ஜாக்கோபினர்களின் கையில் அதிகாரத்தை தந்திருந்தது. இவ்வாறு, பேரவை பெயரளவிற்கு ஜாக்கோபினர்கள், ஜிரோண்டிஸ்டுக்கள் (Girondists) மற்றும் நிலையற்றிருந்த மையம், "சதுப்பு நிலத்தாளர்" என்று பிரதிநிதிகளை கொண்டிருந்த வகையில் தேசிய பிரதிநிதித்துவம் இருந்தாலும், அது சாராம்சத்தில் ஜாக்கோபினருடைய சர்வாதிகாரம்தான் இருந்தது.

ஒரு தொழிலாளர்கள் அரசாங்கம் என்று கூறும்போது, நம்முடைய பார்வையில் தொழிலாள வர்க்க பிரதிநிதிகள் மேலாதிக்கம் செய்து வழிநடத்தும் அரசாங்கம்தான் புலப்படுகிறது. தன்னுடைய அதிகாரத்தை திடப்படுத்திக் கொள்ளும் முறையில், பாட்டாளி வர்க்கம் புரட்சியின் தளத்தை விரிவாக்கப்படுத்திக் கொள்ளத்தான் வேண்டும். குறிப்பாக கிராமப்புறத்தில் உழைக்கும் மக்களின் பல பிரிவுகளும், புரட்சியின்பால் ஈர்க்கப்பட்டு அரசியலில் புரட்சியின் முன்னணிப் படையான நகர்ப்புற தொழிலாளர் அரசின் தலைமையேற்று நடத்தும்போதுதான் ஒழுங்குபடுத்தப்படுவர். புரட்சிகர கிளர்ச்சிகளும், அமைப்புக்களும் பின்னர் அரசின் வளங்களின் உதவியுடன் நடத்தப்படும். சட்டம் இயற்றும் அதிகாரமே மக்களை புரட்சிகரமயமாக்கும் கருவியாக மாறும். நம்முடைய சமூக-வரலாற்று உறவுகளின் தன்மை முதலாளித்துவ புரட்சியின் முழுச்சுமையையும் பாட்டாளி வர்க்கத்தின் முதுகுகளில் இறக்கிவைப்பதுடன், தொழிலாளர்களின் அரசாங்கத்திற்கு மாபெரும் இடர்பாடுகளை தோற்றுவிக்கும் என்பது மட்டுமல்லாமல், தன்னுடைய இருப்பின் முதல் காலகட்டத்தில் அதற்கு விலைமதிப்பற்ற அனுகூலங்களையும் கொடுக்கும். இது பாட்டாளி வர்க்கத்திற்கும் விவசாயிகளுக்கும் இடையே உள்ள உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

1789-1793 மற்றும் 1848 புரட்சிகளில் அதிகாரம் முதலில் வரம்பிலாதிகார ஆட்சியில் இருந்து, பூர்சுவா வர்க்கத்தின் மிதவாத கூறுகளை அடைந்தது; இந்தப் பிந்தைய வர்க்கம்தான், புரட்சிகர ஜனநாயகத்தை பெறுவதற்கு முன்னரோ அல்லது அதனைப் பெறுவதற்குத் தயாரிப்பு செய்வதற்கு முன்னரே கூடவோ, விவசாயிகளை விடுவித்திருந்தது (அது எப்படி என்பது, வேறு விஷயம்). விடுதலையுற்ற விவசாயிகள் 'நகரமக்களின்' அரசியல் வித்தைகளில், அதாவது புரட்சியின் கூடுதலான முன்னேற்றப் போக்கில் அனைத்து நலன்களையும் இழந்து, தன்னை 'ஒழுங்குமுறையின்' அடித்தளத்தில் இருக்கும் கனமான அஸ்திவாரக்கல் போல் இருத்திக் கொண்டு, புரட்சியை சீசரிச அல்லது பழைய ஆட்சி முறையான வரம்பிலா அதிகார ஆட்சியின் பிற்போக்குத்தனத்திற்கு காட்டிக் கொடுத்துவிட்டது.

ரஷ்ய புரட்சியானது, ஜனநாயக முறையின் மிக அடிப்படையான பிரச்சினைகளை தீர்ப்பதற்கான எந்தவிதமான பூர்சுவா-அரசியலமைப்பு ஒழுங்கை உருவாக்குவதை உடனடியாகவோ, நீண்ட காலத்திற்கோ அனுமதிக்காது. சீர்திருத்தவாத-அதிகாரத்துவத்தினரான, 'அறிவொளி புகட்டும்' (Enlightened) முயற்சிகளை மேற்கொண்டுள்ள விட்டே மற்றும் ஸ்டோல்பின் (Witte and Stolypin) உயிர்வாவதற்கான தங்களின் சொந்த போராட்டத்தினாலேயே செல்லுபடியாகா நிலையை அடைந்துவிடுவர். இதன்விளைவாக, விவசாயிகளின் மிகுந்த அடிப்படை புரட்சிகர நலன்களின் விதி கூட, ஏன் விவசாயிகள் ஒட்டுமொத்தமாக கூட, ஒரு சமூகப் பிரிவு என்ற வகையில் முழுப்புரட்சியுடன், அதாவது பாட்டாளி வர்க்கத்தின் விதியுடன் பிணைந்திருப்பர்.

அதிகாரத்தில் உள்ள பாட்டாளி வர்க்கமானது, விவசாயிகளை அடிமைத்தளையிலிருந்து விடுவித்த வர்க்கமாக, அவர்கள் முன்னே நிற்கும். பாட்டாளி வர்க்கத்தின் ஆதிக்கம் என்பது ஜனநாயக சமத்துவம், சுதந்திரமான தன்னாட்சி, வரிகளின் முழுச்சுமையும் செல்வம் கொழிக்கும் வர்க்கங்களுக்கு மாற்றப்படல், நிலையான இராணுவம் கலைக்கப்பட்டு ஆயுதமேந்திய மக்கள் தோன்றுதல், வலுக்கட்டாயமாக திருச்சபை மேற்கொள்ளும் வசூலிப்புக்கள் அகற்றப்படல் என்பவை மட்டுமல்லாது விவசாயிகளால் நில உரிமைகளில் மேற்கொள்ளப்பட்டிருந்த அனைத்து புரட்சிகரமான மாறுதல்களுக்கும் (அரசுடமையாக்கல்களுக்கும்) அங்கீகாரத்தை தரும். அரசானது இன்னும் கூடுதலான முறையில் விவசாயத்துறையில் மேற்கொள்ளுவதற்கு இந்த மாற்றங்களை ஆரம்பப் புள்ளியாக பாட்டாளி வர்க்கம் கொள்ளும். அத்தகைய நிலைமைகளில் ரஷ்ய விவசாயிகள் புரட்சியின் முதலும், மிகக் கடினமான காலக்கட்டத்திலும் பாட்டாளி வர்க்க ஆட்சி (தொழிலாளர் ஜனநாயகம்) நிலைத்திருப்பதில், புதிய சொத்துரிமைக்காரர்களுக்கு துப்பாக்கி முனை சக்தியினால் அவர்கள் பெற்றிருந்த உடைமைகளை காப்பதிலும் அவற்றின் புனிதத்தை போற்றுவதிலும் ஆர்வம் காட்டிய பிரான்சின் நெப்போலியன் போனபார்ட்டின் இராணுவ ஆட்சிக்காலத்தை தக்க வைப்பதில் அங்கிருந்த விவசாயிகள் காட்டியது போன்ற அக்கறையையே காட்டும். இதன் அர்த்தம் விவசாயிகளின் ஆதரவை பெற்றுள்ள பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் கூட்டப்பட்ட நாட்டின் பிரதிநிதித்துவ அங்கம், பாட்டாளி வர்க்கத்தின் ஆட்சிக்கான ஜனநாயக முறையிலான ஒப்பனை தவிர வேறொன்றுமில்லை.

ஆனால் விவசாயிகள், பாட்டாளி வர்க்கத்தை புறத்தே தள்ளி அதன் இடத்தை கைப்பற்றிக் கொள்ள முடியாதா? இது ஒருகாலும் இயலாததாகும். அனைத்து வரலாற்று அனுபவங்களும் இத்தகைய ஊகத்தை கொள்ளுவதை எதிர்க்கின்றன. வரலாற்று அனுபவம் விவசாயிகள் முற்றிலும் சுயாதீனமான அரசியல் பங்கை எடுத்துக் கொள்ள இயலாதவர்கள் என்று காட்டுகிறது. [1]

முதலாளித்துவத்தின் வரலாறு, கிராமப்புறத்தை நகரத்திற்கு கீழ்ப்படிந்ததாக்கும் வரலாறு ஆகும். ஐரோப்பிய நகரங்களின் தொழிற்துறை வளர்ச்சி, நாளடைவில் விவசாயத்துறையில் நிலமானிய வகையிலான உறவு தொடர்ந்திருப்பதை இயலாததாக்கிவிட்டது. ஆனால், கிராமப்புறம் தாமே நிலமானிய முறையை அகற்றும் புரட்சிகரப் பணியை மேற்கொள்ளக் கூடிய ஒரு வர்க்கத்தை உற்பத்தி செய்யவே முடியவில்லை. மூலதனத்திற்கு விவசாயத்தை அடிபணியச் செய்திருந்த நகரமோ, ஒரு புரட்சிகர சக்தியை உருவாக்கி கிராமப்புறத்தின் மீதான அரசியல் ஆதிக்கத்தைத் தன் கைகளில் எடுத்துக் கொண்டு, நாட்டில் புரட்சியை பரப்பி, கிராமப்புறத்தின் சொத்துடைமை உறவுகளை நிலைநாட்டியது. இன்னும் கூடுதலான வளர்ச்சி ஏற்பட்ட முறையில், கிராமப்புறம் இறுதியில் மூலதனத்தின் பொருளாதார அடிமையாக சரிந்து, விவசாயிகள் முதலாளித்துவ கட்சிகளின் அரசியல் அடிமைகள் ஆயினர். இந்தக் கட்சிகள் பாராளுமன்ற அரசியலில் நிலப்பிரபுத்துவ முறையை புதுப்பிக்கும் வகையில், விவசாயிகளை தங்கள் தேர்தல் வேட்டைக்கள பகுதிகளாக மாற்றின. நவீன பூர்சுவா அரசு, வரிவிதிப்புக்கள், இராணுவவாதம் இவற்றின் மூலம் விவசாயிகளை கந்துவட்டியினரின் மூலதனப் பிடிகளில் எறிந்துள்ளது; அரச பாதிரிமார்கள், அரச பள்ளிக்கூடங்கள், இராணுவப் பாசறை வாழ்க்கையின் ஊழல்கள் ஆகியவை விவசாயிகளை கந்துவட்டியினரின் அரசியலின் பலிக்கடாக்களாக மாற்றிவிட்டன.

ரஷ்யன் பூர்சுவாசி தன்னுடைய முழுப் புரட்சிகர நிலையையும் பாட்டாளி வர்க்கத்திடம் விட்டுவிடும். விவசாயிகளின் மீதான புரட்சிகரமான மேலாதிக்கத்தையும் கூட விட்டுவிடும். அந்த நிலைமையில், பாட்டாளி வர்க்கத்திடம் அதிகாரம் மாற்றப்பட்டு, தொழிலாளர்களின் ஜனநாயக ஆட்சியைப் பின்பற்றி நடப்பதைவிட விவசாயிகளுக்கு வேறு செய்வதற்கு ஒன்றும் இல்லை. பொதுவாக முதலாளித்துவ ஆட்சியின் பின்னே அணிவகுத்து நின்றிருந்தபோது எந்த அளவு நனவுடன் அது இருந்ததோ, அதைவிட அதிகமாக இல்லாவிட்டாலும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஆனால், விவசாயிகளின் வாக்குகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டிருந்த அனைத்து முதலாளித்துவ கட்சியும் விவசாயிகளை அபகரிக்கவும் ஏமாற்றவும் அதனது அதிகாரத்தை பயன்படுத்துவதற்கு அவசரப்படும். பின்னர் நிலைமை இன்னும் மோசமான நிலைக்கு உள்ளாகும்போது, மற்றொரு பூர்சுவா கட்சிக்கு இடத்தை கொடுக்கும்; இவ்வாறு இல்லாமல் தொழிலாள வர்க்கமானது, விவசாயிகளின் ஆதரவுடன் அனைத்து சக்திகளையும் பயன்படுத்தி கிராமப்புறத்தின் கலாச்சார மட்டத்தை உயர்த்தி, விவசாயிகளின் அரசியல் நனவையும் வளர்க்கும். மேலே நாம் கூறியுள்ளதில் இருந்து, 'பாட்டாளிகளினதும் விவசாயிகளினதும் சர்வாதிகாரம்' என்ற கருத்தியல் பற்றி எத்தகைய பார்வையைக் கொண்டிருக்கிறோம் என்பது தெளிவாகும். கொள்கையளவில் நாம் அதை அனுமதிக்கின்றோமா என்பதும், நாம் அத்தகைய அரசியல் ஒத்துழைப்பு வடிவத்தை "விரும்புகிறோமா அல்லது, விரும்பவில்லையா" என்பதும் உண்மையில் ஒரு பொருட்டல்ல. குறைந்த பட்சம் நேரடி, உடனடி அர்த்தத்தில் நாம் அது அடையமுடியாதது என்றுதான் சாதாரணமாக கருதுகிறோம்.

உண்மையில் அத்தகைய கூட்டணி, இருக்கும் பூர்சுவா கட்சிகளுள் ஒன்று விவசாயிகளின்மீது கட்டுப்பாட்டை கொண்டிருக்கின்றது அல்லது விவசாயிகள் தங்களுடைய சக்திவாய்ந்த சுயாதீன கட்சியை அமைத்திருப்பர் என்ற முன்கருத்தை கொண்டிருக்கும்; ஆனால் இந்த இரண்டில் ஒன்றோ அல்லது இரண்டுமோ சாத்தியமற்றது என்பதை காட்டும் முயற்சியைத்தான் நாம் செய்துள்ளோம்.

குறிப்புக்கள்

1.விவசாயிகள் சங்கம் (Peasant Union) பின்னர் உழைப்பாளர்கள் குழு (Group of Toil -Trudoviki) என்று அழைக்கப்பட்ட குழுவின் எழுச்சியும் வளர்ச்சியும் டுமாவில், இந்த அல்லது பின்னர் விளைந்த வாதங்களுக்கு எதிரான முறையில் இருந்தனவா? சிறிதுகூட அவ்வாறு இல்லை. விவசாயிகள் சங்கம் என்பது என்ன? தெளிவாகவே விவசாயிகளின் தாழ்ந்த தட்டுக்கள் அல்லாது - ஒரு ஜனநாயகப் புரட்சி மற்றும் விவசாய சீர்திருத்த அரங்கின் மீதாக விவசாயிகளின் இன்னும் கூடுதலான நனவைக் கொண்டிருக்கும் கூறுகளுடன் சேர்த்து, தங்களுக்கு ஆதரவு தருவதற்காக மக்கட்திரளை எதிர்பார்த்து நிற்கும் தீவிர ஜனநாயகத்தின் சில கூறுபாடுகளையும் சேர்த்து அரவணைக்கும் ஓர் சங்கம் ஆகும்.

இதன் இருப்பிற்கே காரணமான, விவசாயிகள் சங்கத்தின் விவசாய திட்டத்தை பொறுத்தவரையில் ('நிலத்தை பயன்படுத்துவதில் சமத்துவம்'), கீழ்க்கண்ட கருத்து கூறப்பட்டே ஆகவேண்டும்: விவசாய இயக்கம் விரிவான முறையில் அகன்றும், ஆழ்ந்தும் இருந்தால் நிலப்பறிப்பு, பங்கீடு இவற்றை விரைவில் நடத்த வேண்டும் என்ற உணர்விற்கு வந்துவிட்டால், ஆயிரக்கணக்கான முரண்பாடுகளை கொண்ட வர்க்கம் உள்ளூர், அன்றாட, தொழில்நுட்ப தன்மையின் விளைவாக இயக்கத்தின் சிதைவுப்போக்கு விரைவில் ஏற்பட்டுவிடும். இதன் உறுப்பினர்கள் தங்களுடை பங்கை விவசாய கமிட்டிகள் என்று கிராமங்களில் உள்ள விவசாய புரட்சி அமைப்புக்களில் செலுத்துவர்; ஆனால், விவசாய கமிட்டிகள், பொருளாதார-நிர்வாக அமைப்புக்கள் ஆகியவை, தற்கால சமுதாயத்தின் அடிப்படை கூறுபாடுகளில் ஒன்றாகிய, கிராமப்புறம் நகர்ப்புற அரசியலில் நம்பியிருக்கவேண்டிய தன்மையை அகற்றிவிட இயலாது.

உழைப்பாளர்கள் குழுவின் தீவிரப்போக்கும் உருவற்ற நிலையும் விவசாயிகளின் புரட்சிகர விருப்புகளில் இருந்த முரண்பாடான தன்மையின் வெளிப்பாடு ஆகும். அதன் அரசியலமைப்பு பிரமைகளின் காலகட்டங்களில் அது சிறிதும் பயனற்று "காடெட்டுகளை" (அரசியல் யாப்பு வழிப்பட்ட ஜனநாயக வாதிகள்) பின்பற்றியது. டுமா கலைக்கப்படவிருந்த காலகட்டத்தில், இது இயல்பாகவே சமூக ஜனநாயக குழுவின் வழிகாட்டு முறைக்குள் வந்திருந்தது. விவசாயிகள் பிரதிநிதிகளை பொறுத்தவரை சுதந்திரம் இல்லாமையானது, ஒரு உறுதியான முன்முயற்சிகளை காட்டவேண்டிய அவசியம் ஏற்படும் நேரத்தில், அதாவது புரட்சியாளர்கள் கரங்களில் அதிகாரம் செல்லவேண்டிய நேரத்தில் அதில் குறிப்பிட்ட தெளிவற்றதன்மையைக் காட்டும்.. [L.T]


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved