World Socialist Web Site www.wsws.org


Permanent Revolution & Results and Prospects

IV. Revolution and the Proletariat

நிரந்தரப் புரட்சி & முடிவுகளும் வாய்ப்புக்களும்

IV. புரட்சியும் பாட்டாளி வர்க்கமும்

Back to screen version

ஒரு புரட்சி என்பது, அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான போராட்டத்தில் சமூக சக்திகளுக்கிடையேயான பலத்தை வெளிப்படையாக அளவிடலாகும். அரசு என்பது தானாகவே முடிவு பெற்று விடுவதில்லை. அது மேலாதிக்கம் செய்யும் சமூக சக்திகளின் கைகளில் இயங்கும் ஒரு கருவியே ஆகும். எல்லா இயந்திரத்தை போலவும், இதற்கு ஒரு மோட்டாரும், செலுத்தும் மற்றும் செயல்முறைப்படுத்தும் இயங்குமுறையும் உள்ளன. அரசின் உந்து சக்தி வர்க்க நலனாகும்; அதன் மோட்டார் இயந்திரம் என்பது கிளர்ச்சி, பத்திரிகை, திருச்சபை, பள்ளிப் பிரச்சாரங்கள், கட்சிகள், தெருக்கூட்டங்கள், மனுக்கள், எழுச்சிகள் என்பவையாகும். ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு செலுத்தும் மற்றும் செயல்படுத்தும் இயங்குமுறை என்பன சாதிப்பிரிவுகள், குடும்ப ஆட்சி, சமூகப்பிரிவு அல்லது வர்க்க நலன்கள் என்று இறைவனின் விருப்பத்தைப் பிரதிபலிக்கும் (வரம்பிலா அதிகார ஆட்சி), அல்லது நாட்டு மக்களின் விருப்பம் (பாராளுமன்றவாதம்) என்பவற்றின் சட்டமியற்றும் அமைப்பு ஆகும். இறுதியாக செயற்படுத்தும் இயங்குமுறை அதன் போலீஸ், நீதிமன்றங்கள், அவற்றின் சிறைகள், இராணுவம் இவற்றுடனான நாட்டின் நிர்வாக அமைப்பு ஆகும்.

அரசு என்பது தானாகவே முடிவு பெற்று விடுவதில்லை. மாறாக, அது சமூக உறவுகளை அமைத்தல், சீர்குலைத்தல், மறுசீரமைத்தலுக்கான பாரிய முறையிலான வழிமுறைகளை கொண்டுள்ளது. அதைக் கட்டுப்படுத்துவோரை பொறுத்து அது ஒரு புரட்சிக்கான சக்திவாய்ந்த நெம்புகோலாகவோ அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட தேக்கத்திற்கான ஒரு கருவியாகவோ இருக்க முடியும்.

பெயருக்கு ஏற்ற வகையில் சுய மதிப்பு உடைய ஒவ்வொரு அரசியல் கட்சியும் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டு, எவருடைய நலன்களை அது வெளிப்படுத்தி நிற்கிறதோ, அந்த வர்க்கத்திற்குப் பணி புரிவதற்காக அரசை வைக்கிறது. பாட்டாளி வர்க்கத்தின் கட்சி என்னும் முறையில் சமூக ஜனநாயக கட்சி இயல்பாகவே தொழிலாள வர்க்கத்தின் அரசியல் ஆதிக்கத்திற்குப் பாடுபடுகின்றது.

பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவத்தின் வளர்ச்சியை ஒட்டியே வளர்கிறது மற்றும் வலிமை பெறுகிறது. இந்த அர்த்தத்தில், முதலாளித்துவத்தின் வளர்ச்சி பாட்டாளி வர்க்கம் சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்லும் பாதையின் வளர்ச்சியும் ஆகும். ஆனால், எந்த நாளில் மற்றும் எந்த நேரத்தில் எப்பொழுது அதிகாரம் தொழிலாள வர்க்கத்தின் கைகளில் வரும் என்பது உற்பத்தி சக்திகளால் அடையப்பட்டுள்ள மட்டத்தின் அளவின் மீது நேரடியாக சார்ந்திராமல், வர்க்கப் போராட்டத்தில் இருக்கும் உறவுகள், சர்வதேச நிலைமை, இறுதியில் பல அகநிலைக் காரணிகளான மரபுகள், முயற்சிகள், தொழிலாள வர்க்கம் போராடத் தயாராக இருக்கும் தன்மை இவற்றின் மீது தங்கியுள்ளது.

ஒரு முன்னேற்றம் அடைந்துள்ள நாட்டைவிட பொருளாதாரத்தில் பின்தங்கிய நாட்டில் தொழிலாளர்கள் விரைவில் அதிகாரத்திற்கு வருவது என்பது சாத்தியமானதேயாகும். 1871ம் ஆண்டு பாரிசில் தொழிலாளர்கள் குட்டி பூர்சுவாசியினர் இடமிருந்து வேண்டுமேன்றே அதிகாரத்தை எடுத்துக் கொண்டனர்; அது இரண்டு மாதகாலம் நீடித்தது என்பது உண்மைதான்; ஆனால் பெரு முதலாளித்துவ மையங்களான பிரிட்டன், அமெரிக்கா போன்றவற்றில் தொழிலாளர்கள் ஒரு மணி நேரம் கூட அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்தது ஒருபோதும் கிடையாது. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் ஒரு நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் வளங்கள் இவற்றின்மீது ஏதோ ஒருவழியில் தாமாகவே சார்ந்திருக்கும் என்று கற்பனை செய்வது 'பொருளாதார' சடவாதம் அபத்தமானதாக எளிமைப்படுத்தப்பட்டு விட்டதன் தப்பெண்ணம் ஆகும். இந்தக் கண்ணோட்டத்திற்கு மார்க்சிசத்துடன் எந்தப் பொதுத்தன்மையும் கிடையாது.

எமது கருத்தில், பூர்சுவா தாராளவாதத்தின் அரசியல்வாதிகள் ஆட்சி செலுத்துவதற்கு தங்கள் திறமையை முழுமையாக வெளிப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பு பெறுவதற்கு முன்னரே ரஷ்ய புரட்சியானது, அதிகாரம் தொழிலாளர்களின் கைகளில் செல்லக்கூடிய சூழ்நிலைமைகளை தோற்றுவிக்கும்--புரட்சி வெற்றி பெறும் நிலையில், அது அவ்வாறுதான் செய்தாக வேண்டும்.

1848-49 ன் புரட்சி மற்றும் எதிர்ப்புரட்சி நிலைபற்றி அமெரிக்க செய்தித்தாளான தி ரியூபுன் (The Tribune) இல் மார்க்ஸ் சுருக்கமாகத் தொகுத்து எழுதினார்:

ஜேர்மன் பூர்சுவாசி இங்கிலாந்து மற்றும் பிரெஞ்சு பூர்சுவாசியைவிட பின்தங்கி உள்ளதுபோலவே, தன்னுடைய சமூக மற்றும் அரசியல் வளர்ச்சியில் ஜேர்மனியில் உள்ள தொழிலாள வர்க்கமும், இங்கிலாந்து மற்றும் பிரான்சில் உள்ள தொழிலாள வர்க்கத்தை விட மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. எஜமானரைப் போலவேதான், பணியாளரும். கணக்கிலடங்காத, வலிமை பொருந்திய, தீவிரமான, அறிவார்ந்த பாட்டாளி வர்க்கம் உயிர் வாழ்வதின் நிலைமைகளின் பரிணாமம் என்பது, கணக்கிலடங்காத, செல்வம் கொழிக்கும், தீவிரமான, சக்தி வாய்ந்த மத்தியதர வர்க்கத்தின் உயிர்வாழ்தலின் நிலைமைகளின் அபிவிருத்தியுடன் கைகோர்த்துக்கொண்டு செல்கிறது. மத்தியதர வர்க்கத்தின் பல்வேறு பிரிவுகள் அனைத்தும் குறிப்பாக அதன் மிகவும் முற்போக்கான பிரிவான, பெரிய உற்பத்தியாளர்கள் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றி அரசை தங்களுடைய விருப்பங்களுக்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொள்ளும் வரையில், தொழிலாள வர்க்க இயக்கமானது ஒருபோதும் சுயாதீனமாக இருந்திராததுடன், ஒருபோதுமே தன்னந்தனியாளாய் பாட்டாளி வர்க்கத் தன்மையையும் உடையதாக இருக்காது. அந்த நிலையில்தான் தவிர்க்கமுடியாத வகையில் வேலைகொடுப்போருக்கும், வேலைபெறுவோருக்கும் இடையே பூசல்கள் உடனடியாக நிகழக்கூடியதாக இருக்கின்றன. அவை இனியும் ஒத்திப்போட முடியாது என்ற தன்மையை அடைகின்றன....''

இந்த மேற்கோள் அநேகமாக வாசகர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும், ஏனெனில் சமீப காலத்தில், ஏட்டளவிலான மார்க்சிஸ்டுகளால் இது மிகத் தவறான முறையில் கையாளப்பட்டுள்ளது. ரஷ்யாவில் தொழிலாள வர்க்கத்தின் அரசாங்கம் என்பதற்கு எதிராக, மறுக்க முடியாத வாதமாக இது முன்வைக்கப்பட்டுள்ளது. 'எஜமானனைப் போன்றே, பணியாள்'. முதலாளித்துவ பூர்சுவாசி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு வலிமை படைத்திருக்கவில்லை என்றால், தொழிலாளர்களுடைய ஜனநாயகத்தை நிறுவுதல், அதாவது பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் ஆதிக்கம் என்பதை நிறுவுதல் இன்னும் இயலாத செயலாகும் என்று அவர்கள் வாதிடுகின்றனர்.

எல்லாவற்றிற்கும் மேலாக மார்க்சிசம் என்பது ஒரு பகுப்பாய்வுமுறை - இது நூலின் வாசகங்களைப் பகுப்பாய்வதில்லை, சமூக உறவுகளைத்தான் பகுப்பாய்வு செய்கிறது. ரஷ்யாவில் முதலாளித்துவ தாராளவாதத்தின் வலுவற்ற தன்மை என்பது தொழிலாளர் இயக்கத்தின் வலுவற்ற தன்மை என்ற பொருளைக் கொடுக்கும் என்பது உண்மையா? ரஷ்யாவில் சுயாதீனமான தொழிலாளர் இயக்கம் முதலாளித்துவம் அதிகாரத்தைக் கைப்பற்றும் வரையில் ஏற்பட முடியாது என்பது உண்மையா? வரலாற்றளவில் ஒப்புமை கருத்தாக மார்க்ஸ் கூறியதை உயர்ந்த வரலாற்று அடிப்படை உண்மையாக மாற்றும் முயற்சியில் கீழ் எத்தகைய நம்பிக்கையற்ற சம்பிரதாயவாதம் இருக்கிறது என்பது இத்தகைய வினாக்கள் எழுப்பப்படுவதில் இருந்தே நன்கு புலனாகும் என்று கூறினால் போதுமானது.

தொழிற்துறை செழுமை காலகட்டத்தின்போது, ரஷ்யாவில் ஆலைத் தொழில் வளர்ச்சி ஓர் "அமெரிக்க" தன்மையை கொண்டதாக இருந்தது; ஆனால், உண்மையான பரிமாணங்களில் ரஷ்யாவில் உள்ள முதலாளித்துவ தொழிற்துறை அமெரிக்க தொழிற்துறையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஒரு கைக்குழந்தை போன்றதாகும். ஐந்து மில்லியன் மக்கள், பொருளாதாரத்தில் பங்கேற்கும் மக்கட் தொகையில் 16.6 சதவீதத்தினர், ரஷ்யாவில் உற்பத்தித் தொழிற்துறையில் ஈடுபட்டுள்ளனர்; அமெரிக்காவை பொறுத்தவரை இதற்கு இணையான எண்ணிக்கை 6 மில்லியன் அல்லது 22.2 சதவீதம் ஆகும். இந்தப் புள்ளிவிவரங்கள் ஒப்பீட்டளவில் நமக்கு இன்னும் குறைவாகத்தான் இருக்கிறது. ஆனால், ரஷ்யாவின் மக்கட்தொகை கிட்டத்தட்ட அமெரிக்காவுடையதைவிட இருமடங்கு என்பதை நாம் நினைவு கூரும்போது, அவை முனைப்பானதாக ஆகின்றன. ஆனால், ரஷ்ய, அமெரிக்க தொழிற்துறையின் உண்மை பரிமாணங்களை நன்கு ஆராய்வதற்கு, 1900ம் ஆண்டு அமெரிக்க ஆலைகளும் பெரிய தொழிற்கூடங்களும் 25 மில்லியார்ட் ரூபிள்கள் மதிப்புடைய பொருட்களை விற்பனைக்குக் கொண்டுவரக்கூடிய அளவிற்கு உற்பத்தியை செய்திருந்தன; அதே காலத்தில் ரஷ்ய ஆலைகள் இரண்டரை மில்லியார்ட் ரூபிள்களுக்கும் குறைவான மதிப்புடைய பொருட்களைத்தான் உற்பத்தி செய்திருந்தன என்பது கவனிக்கப்பட்டிருக்க வேண்டும்.[1]

முதலாளித்துவ தொழிற்துறை எந்த அளவிற்கு வளர்ச்சியுற்றிருக்கிறதோ, அந்த அளவிற்கு தொழிற்துறை பாட்டாளி வர்க்கத்தின் எண்ணிக்கை, ஒருமுனைப்படல், கலாச்சாரம் மற்றும் அரசியல் முக்கியத்துவம் தங்கியுள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இந்த தங்கியிருக்கும் நிலை நேரடியானது அல்ல. ஒரு நாட்டின் உற்பத்தி சக்திகளுக்கும், அதன் வர்க்கங்களின் அரசியல் வலிமைக்கும் இடையேயான தொடர்பு எந்தக் குறிப்பிட்ட காலகட்டத்திலும், தேசிய மற்றும் சர்வதேசிய தன்மையின் பல்வேறு சமூக மற்றும் அரசியல் காரணிகளைப் பொறுத்தும் இருக்கும். இவை சில நேரத்தில் பொருளாதார உறவுகளின் அரசியல் வெளிப்பாடுகளை இடம் நகர்த்தும் அல்லது சில நேரம் முற்றிலும் கூட மாற்றிவிடும். அமெரிக்காவின் உற்பத்தி சக்திகளின் ஆற்றல் ரஷ்யாவைவிட பத்து மடங்கு அதிகம் என்றாலும்கூட, ரஷ்ய பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் பங்கு, தன்னுடைய நாட்டின் அரசியலில் அதற்கு இருக்கும் செல்வாக்கு மற்றும் வெகு அருகாமையிலான வருங்காலத்தின் உலக அரசியலில் அது கொள்ள இருக்கும் செல்வாக்கு ஆகியவை அமெரிக்க பாட்டாளி வர்க்கத்தைவிட ஒப்பிடமுடியாத வகையில் உயர்ந்தது ஆகும்.

தன்னுடைய அமெரிக்க பாட்டாளி வர்க்கத்தை பற்றிய சமீபத்திய புத்தகத்தில் காவுத்ஸ்கி ஒருபுறம் பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் அதிகாரத்திற்கும் முதலாளித்துவ வர்க்கத்திற்கும் இடையில், மறுபுறத்தில் முதலாளித்துவத்தின் வளர்ச்சியின் மட்டத்திற்கும் இடையில் நேரடி தொடர்பு இல்லை என குறிப்பிட்டுள்ளார். 'இரண்டு அரசுகள் உள்ளன; இவை ஒன்றையொன்று முற்றிலும் எதிரிடையாக கொண்டுள்ள வகையில் இருக்கின்றன. அவற்றுள் ஒன்றில் வளர்ச்சி மிதமிஞ்சியதாக, அதாவது முதலாளித்துவ உற்பத்தி முறையின் அபிவிருத்தியின் மட்டத்திற்கு அளவுப் பொருத்தமின்றி உறவுகள் பிந்தையதின் கூறுபாடுகளில் ஒன்றின் தன்மையை விட அதிகமாக இருப்பதைக் காணமுடியும்; மற்றொன்றில் இக்கூறுபாடுகளின் வேறுபகுதியைக் காண இயலும். ஒரு அரசில், அமெரிக்காவில், அது முதலாளித்துவ வர்க்கமாக இருக்கும்போது, ரஷ்யாவில் இது பாட்டாளி வர்க்கமாக இருக்கிறது. அமெரிக்காவைவிட வேறு எந்த நாட்டிலும் மூலதனத்தின் சர்வாதிகாரம் என்று பேசுவதற்குத் தக்க தளம் கிடையாது; அதேவேளை ரஷ்யாவில் போன்று போர்க்குணமுள்ள பாட்டாளி வர்க்கம் என்ற வகையிலான முக்கியத்துவத்தை வேறு எங்கும் பெறவில்லை. இந்த முக்கியத்துவம் கட்டாயமாகவும், ஐயத்திற்கும் இடமில்லாத வகையிலும் பெருகும்; ஏனெனில், இந்நாடு நவீன வர்க்க போராட்டதை சமீபத்தில்தான் ஆரம்பித்தது; சமீபத்தில்தான் அதற்கு இயங்குவதற்கு போதிய இடம் கொடுத்துள்ளது.' ஜேர்மனியை சுட்டிக்காட்டி, குறிப்பிட்ட மட்டத்துக்கு அது தன் வருங்காலம் பற்றி ரஷ்யாவிடம் இருந்து கற்கலாம் என்று கவுத்ஸ்கி தொடர்கிறார்: "ரஷ்ய பாட்டாளி வர்க்கம் நமக்கு வருங்காலம் பற்றிக் கற்பிக்க வேண்டும் என்பது உண்மையில் மிகவும் அசாதாரணமான ஒன்று; அதுவும் இது மூலதனத்தின் வளர்ச்சியில் இருந்து வெளிப்படாமல் தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்புக்களில் இருந்து தோன்றுகிறது. உண்மையில் பெரிய உலக முதலாளித்துவ நாடுகளைவிட மிகவும் பின்தங்கிய நிலையில்தான் ரஷ்யா உள்ளது என்ற உண்மை வரலாற்று சடவாத கருத்துருவிற்கு முரண்படுவதாக தோன்றும்; ஏனென்றால், அதன்படி பொருளாதார வளர்ச்சிதான் அரசியல் வளர்ச்சிக்கு அடிப்படையாகும். ஆனால், உண்மையில் இது நம்முடைய எதிர்ப்பாளர்களாலும், விமர்சிப்பவர்களாலும் சித்தரிக்கப்பட்டுள்ள வரலாற்று சடவாத கருத்துருவிற்குத்தான் முரண்படுகிறது. அவர்கள்தான் அதை ஆய்வுக்குரிய வழிமுறை என்று கருதாமல், ஆயத்த முறையிலான, மாறுதலின்றி மீண்டும் மீண்டும் நிகழ்கின்ற அனைத்து தீர்வையும் கொடுக்கும் கருத்துருவாக நினைக்கின்றனர்.' [2] இந்த வரிகளை நம்முடைய ரஷ்ய மார்க்சிஸ்டுகள் படிக்கும்படி பரிந்துரைக்கிறோம்; ஏனென்றால் சமூக உறவுகளின் சுதந்திரமான பகுப்பாய்விற்கு பதிலாக நூல்களில் இருந்து வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திற்கும் ஏற்றவாறு அவர்கள்தான் எடுத்துக் கொள்ளுகிறார்கள். இத்தகைய தங்களைத் தாங்களே மார்க்சிஸ்டுக்கள் என்று பிரகடனம் செய்து கொள்ளுபவர்களை தவிர வேறு எவரும் இப்படி மார்க்சிசத்தை சமரசத்திற்கு உட்படுத்துவதில்லை.

இவ்வாறு காவுட்ஸ்கியின் கருத்தின்படி, ரஷ்ய, முதலாளித்துவ வளர்ச்சி வகையில் பொருளாதார ரீதியில் தாழ்ந்த தரத்தில் உள்ளது, அரசியல்ரீதியில் அது முக்கியத்துவமற்ற முதலாளித்துவ பூர்சுவாசியை கொண்டுள்ளது, அதேநேரத்தில் மிகச் சக்தி வாய்ந்த ஒரு புரட்சிகரமான பாட்டாளி வர்க்கத்தையும் கொண்டுள்ளது. இதன் விளைவாக 'அனைத்து ரஷ்யர்களின் நலன்களுக்கான போராட்டம் இப்பொழுது நாட்டில் இருக்கும் மிக வலிமையான வர்க்கத்தின் மீது, அதாவது தொழிற்துறை பாட்டாளி வர்க்கத்தின் மீது வீழ்ந்துள்ளது. இக்காரணத்தினால், தொழிற்துறை பாட்டாளி வர்க்கம் மகத்தான அரசியல் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது, இக்காரணத்தால் வரம்பிலா முடியாட்சி என்ற கூட்டிற்குள் சிக்கித் திணறிக் கொண்டிருக்கும் ரஷ்யாவின் விடுதலைக்கான போராட்டம் வரம்பிலா முடியாட்சிக்கும் தொழிற்துறை பாட்டாளி வர்க்கத்திற்கும் இடையேயான ஒற்றைப் போராட்டமாக மாற்றப்பட்டுள்ளது; இந்த ஒற்றைப் போராட்டத்தில் விவசாயிகள் கணிசமான பங்கை கொள்ளுவர், ஆனால் அவர்கள் முன்னணிப் பாத்திரத்தை ஆற்ற மாட்டார்கள்.

இவை அனைத்தும் ரஷ்ய 'பணியாளர்' தன்னுடைய 'எஜமானரை' விட முன்னதாகவே அதிகாரத்தை கைப்பற்றி கொள்ளக்கூடும் என்று முடிவெடுக்கத்தக்க காரணத்தை கொடுக்கவில்லையா?

இரண்டு விதமான அரசியல் நம்பிக்கைவாதம் அமையலாம். நம்முடைய வலிமையையும், நலன்களையும் ஒரு புரட்சிகர சூழலில் நாம் மிகைப்படுத்தி, சக்திகளின் உறவுகளினால் நியாயப்படுத்தமுடியாத வகையில் பணிகளை மேற்கொள்ள முடியும். மற்றொருபுறம், முழு நம்பிக்கையோடு நம்முடைய புரட்சிகர பணிகளுக்கு ஒரு வரம்பையும் நிர்ணயிக்கலாம்; அந்த நிலைக்கு அப்பால் சென்றால், தவிர்க்கமுடியாமல் நம்முடைய நிலையின் தர்க்கத்தினால் இயக்கப்படுவோம்.

நம்முடைய புரட்சியின் புறநிலை இலக்குகளில் அது பூர்சுவா தன்மையானது என்றும் அதனால் அதன் தவிர்க்க முடியாத விளைவுகளில், இந்த பூர்சுவா புரட்சியின் முக்கிய பாத்திரம் பாட்டாளி வர்க்கம் என்பதும், புரட்சியின் முழுப் போக்கின் சக்தியால் அது தூண்டப் பெறுகிறது என்ற உண்மையை காணமறுத்து கண்ணை மூடிக்கொண்டு வற்புறுத்துவதன் மூலம் புரட்சியை பற்றிய அனைத்து வினாக்களையும் மட்டுப்படுத்திக்கொள்வது சாத்தியமானது.

பாட்டாளி வர்க்கம் தன்னுடைய கைகளில் அதிகாரத்தை எடுத்துக் கொண்ட பின்னர், கடுமையான எதிர்ப்பின்றி, இராணுவத்தினரால் கட்டாயமாக பறிக்கப்பட்டலான்றி, அந்த அதிகாரத்தை விட்டுக் கொடுக்காது என்பதை மறந்துவிட்டு, ஒரு முதலாளித்துவ புரட்சியின் கட்டமைப்பிற்குள் பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் ஆதிக்கம் என்பது ஒரு இடைக்கால நிகழ்வாக மட்டுமேதான் இருக்கும் என்று நம்மை நாமே மீளவும் உறுதிசெய்து கொள்ளலாம்.

ரஷ்யாவில் உள்ள சமூக நிலைமைகள் இன்னும் ஒரு சோசலிச பொருளாதாரத்தை அமைப்பதற்கு கனிந்து விடவில்லை, அதிகாரத்தை எடுத்துக்கொள்ளும் பாட்டாளி வர்க்கம், கட்டாயமாக, அதன் நிலைப்பாட்டின் அதே தர்க்கத்தினால், தவிர்க்கமுடியாமல் தொழிற்சாலையில் அரசு நிர்வாகத்தை அறிமுகப்படுத்துவதை நோக்கி வற்புறுத்தப்படும். பொதுவான சமூகவியல் வார்த்தைப்பதமான பூர்சுவா புரட்சி என்பது அரசியல்-தந்திரோபாய பிரச்சினைகள், முரண்பாடுகள், ஒரு குறிப்பிட்ட பூர்சுவா புரட்சியின் இயங்குமுறை கவனத்துக்கு கொண்டுவரும் முரண்பாடுகள் கஷ்டங்கள் ஆகியவற்றை எவ்வகையிலும் தீர்க்கவே தீர்க்காது.

பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில், பூர்சுவா புரட்சியின் கட்டமைப்பிற்குள் மூலதனத்தின் ஆதிக்கத்தை நிறுவுதலை புறநிலையான பணியாக புரட்சி கொண்டிருந்தது, ansculottes உடைய சர்வாதிகாரம் என்பது சாத்தியமானது என காட்டியது. இந்த சர்வாதிகாரம் வெறும் தற்காலிக நிகழ்வல்ல, மிக விரைவில் பூர்சுவா புரட்சியினால் சூழ்ந்துள்ள தடைகளை விரைவில் தகர்த்துவிட்டது என்றாலும் தன்னுடைய தாக்கத்தை வரவிருக்கும் நூற்றாண்டு முழுவதும் அது கொடுக்கும். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் புரட்சியில், அதன் நேரடி புறநிலையான பணி, பூர்சுவா தன்மையாக இருந்தாலும், பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் ஆதிக்கம் விரைவிலேயே வெளிப்படுவது தவிர்க்க முடியாதது அல்லது குறைந்த பட்சம் நிகழக்கூடியது என்பதையே எடுத்துக்காட்டியது.

சில யதார்த்தவாத பிலிஸ்டைன்கள் நம்புவதுபோல் இந்த ஆதிக்கம் வெறும் ''தற்காலிக'' நிகழ்வாக இருக்காதிருக்க பாட்டாளி வர்க்கம் தாமே அதனை கவனிக்கும். ஆனால் இப்பொழுது நாம் நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டிய வினா: பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரம் பூர்சுவா புரட்சியின் தடைகளுக்கெதிரே தகர்ந்து போய்விடவேண்டும் என்பது தவிர்க்க முடியாததா அல்லது கொடுக்கப்பட்ட உலக-வரலாற்று சூழ்நிலையில் இந்தத் தடைகளை உடைத்தெறிவதன் மூலம் வெற்றியை அடையக் கூடிய வாய்ப்பை அது கண்டுபிடிக்குமா? இங்குதான் நம்மை தந்திரோபாயம் பற்றிய கேள்விகள் எதிர்கொள்ளுகின்றன: புரட்சியின் வளர்ச்சி இந்தக் கட்டத்தை அருகில் கொண்டு வரக்கூடிய விகிதத்திற்கு ஏற்ப நாம் நனவோடு தொழிலாள வர்க்க அரசாங்கத்தை கொண்டு வருவதற்கு பாடுபடலாமா, அல்லது அரசியல் அதிகாரம் பூர்சுவா புரட்சி தொழிலாளர்கள் மீது திணிக்கத் தயாராக இருக்கும் ஒரு துரதிருஷ்டம் என்று கருதி அந்தக் கணத்தை, தவிர்ப்பது சிறந்ததாக இருக்கும் என்று கருதலாமா?

'யதார்த்தவாத' அரசியல்வாதியான வொல்மார் (Vollmar) 1871 கம்யூன்களின் ஆதரவாளர்கள் பற்றி வெளியிட்ட, "அதிகாரத்தை கைப்பற்றிக் கொள்ளுவதற்கு பதிலாக அவர்கள் உறங்கச் சென்றிருந்தால் நலமாக இருந்திருக்கும்... என்ற வார்த்தைகளையே நாமும் எமக்கு பயன்படுத்த வேண்டுமா?

Notes

1. D. Mendeleyev, Towards the Understanding of Russia, 1906, p. 99.—L.T.

2. K. Kautsky, American and Russian Workers, Russian translation, St. Petersburg, 1906, pp. 4 and 5.—L.T


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved