World Socialist Web Site www.wsws.org


Permanent Revolution & Results and Prospects

நிரந்தரப் புரட்சி & முடிவுகளும் வாய்ப்புக்களும்
 

III. 1789—1848—1905

Back to screen version

வரலாறு அதுதாமே திரும்பவும் நிகழ்வதில்லை ரஷ்ய புரட்சியை மாபெரும் பிரெஞ்சுப் புரட்சியுடன் எவ்வாறுதான் ஒப்பிட்டுப் பேசினாலும், முந்தையது பிந்தையதின் திரும்பநிகழ்தலாக ஒருபோதும் மாற்றப்படமுடியாதது. 19ம் நூற்றாண்டு பயனற்ற வகையில் கழிந்திருக்கவில்லை.

1789 புரட்சியில் இருந்து, 1848ம் ஆண்டுப் புரட்சி பாரியளவில் வேறுபட்டுள்ளது. பெரும் புரட்சியுடன் ஒப்பிடும்போது, பிரஷ்ய, ஆஸ்திரியப் புரட்சிகள் அவற்றின் முக்கியத்துவமற்ற வீச்சுக்களால் ஒருவரை வியப்பில் ஆழ்த்துகின்றன. ஒருவிதத்தில் பார்த்தால் அவை மிக விரைவாகவே வந்துவிட்டவையோ என்றும், மற்றொரு விதத்தில் பார்த்தால் வெகுவாகத் தாமதித்து வந்தனவோ என்றும் தோன்றும். பூர்சுவா சமுதாயம் கடந்த கால பிரபுக்களுடன் முற்போக்காய் கணக்குத் தீர்த்துக் கொள்ளுவதற்கு தேவையான பலத்தின் அசுரத்தனமான கடும் முயற்சி, நிலப்பிரபுத்துவ எதேச்சாதிகாரத்திற்கு எதிராக எழும் ஒரு ஏகோபித்த நாட்டின் சக்தியாலோ அல்லது தானே தளைகளில் இருந்து விடுவித்துக்கொள்ள முயலும் இந்த நாட்டிற்குள்ளேயேயான வர்க்கப் போராட்டத்தின் வலிமையான அபிவிருத்தியினாலோதான் அடையப்பட முடியும். முதலாவதில், 1789-93 ஆண்டுகளில் நிகழ்ந்த, பழைய அமைப்பிற்கு எதிரான தீவிரமான எதிர்ப்பால் அழுத்தி வைக்கப்பட்டிருந்த தேசியச் சக்தியானது, பிற்போக்குத்தனத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒட்டுமொத்தமாக தீர்ந்துபோனது; இரண்டாவதிலோ இதுகாறும் வரலாறு கண்டிராத முறையில் தோன்றியுள்ள, ஒருகால் இவ்வாறு இருக்கக் கூடும் என்று நாம் கருதுகின்ற நிகழ்வு, வரலாற்றின் இருண்ட சக்திகளைக் கடந்து வருவதற்குத் தேவையான ஆற்றல், 'ஒருவரையொருவர் அழிக்கின்ற' வர்க்கப் போராட்டங்களின் வழிமுறைகள் மூலம், பூர்சுவாசி நாட்டிற்குள்ளேயே தோற்றுவிக்கப்படுகின்றது. இந்த மிகக் கடுமையான உள்நாட்டு சச்சரவு, பெரும் பகுதி ஆற்றலை உறிஞ்சி விடும் மற்றும் பூர்சுவாசி ஒரு தலைமைப் பங்கை வகிக்கும் சாத்தியத்தை அகற்றிவிட்டு, அதனுடைய விரோதியான பாட்டாளி வர்க்கத்தை முன்னணியில் கொண்டு வந்து நிறுத்தி, அதற்கு பத்தாண்டுகளின் அனுபவத்தை ஒரு மாதத்தில் கொடுத்து, அதை நாட்டின் தலைமைப் பொறுப்பிலும் இருத்தி, மிகுந்த கட்டுப்பாட்டுடன் உள்ள அதிகாரத்தின் கடிவாளங்களையும் அதனிடம் ஒப்படைக்கும். இந்த வர்க்கம் உறுதியான உளப்பாங்குடன், எந்த ஐயங்களுக்கும் இடமில்லாமல் நிகழ்வுகளுக்கு ஒரு பலமான வீச்சை வழங்கும்.

ஒரு சிங்கம் திடீரென பாய்வதற்குத் தயாராவது போல் ஒரு நாடு தன்னையே ஒன்றாய் திரட்டுவதன் மூலம் புரட்சி நிறைவேற்றப்பட முடியும். அல்லது ஒரு நாடு ஒட்டுமொத்தமாக நிறைவேற்ற முடியாதிருக்கும் அந்தப் பணிகளை நிறைவேற்றுவதற்காக, போராட்டத்தின் நிகழ்ச்சிப்போக்கில், இறுதியாக தன்னில் ஒரு சிறந்த பகுதியை விடுவித்துக் கொள்வதற்கு பிரிவதன் மூலம், அப்புரட்சி நிறைவேற்றப்பட முடியும். இவை இரண்டும் எதிரிடையான வரலாற்று நிலைமைகளின் வகைகள் ஆகும்; இவற்றின் தூயவடிவில், நிச்சயமாக தர்க்கரீதியான ஒன்றுக்கொன்று நேர்மாறான நிலையிலேயே சாத்தியமாகும்.

பலவற்றில் உள்ளது போல, இதில் இடைப்பட்ட நடுப்பாதை ஒன்று செயல்பட்டால், அது இருப்பதிலேயே மோசமான விளைவை ஏற்படுத்தக் கூடியதுதான், இந்த இடைப் போக்குதான் 1848ல் அபிவிருந்தி அடைந்தது.

பிரெஞ்சு வரலாற்றில் வீரமிகுந்த காலத்தில், ஒரு புதிய ஒழுங்கிற்கான போராட்டத்தில் பிரான்சில் காலத்துக்கு ஒவ்வாமற்போன அமைப்புகளை அகற்றுவதற்கு மட்டும் இல்லாமல் ஐரோப்பா முழுவதுமே பிற்போக்கான சக்திகளை எதிர்ப்பதற்காகவும் கொடுக்கப்பட்டிருந்த, தலைமைப் பணியை வரலாறு அதன் மீது சுமத்தி இருந்த தன்னுடைய சொந்த ஸ்தானத்தின் முரண்பாடுகளை இன்னும் அறிந்திராத, அறிவார்ந்த, சுறுசுறுப்பான, பூர்சுவாக்களை நாம் கண்டோம். தன்னுடைய அனைத்துப் பிரிவுகளிலும், நாட்டின் தலைமையை தாங்கும் நிலையில் தான் இருப்பதாகத்தான் பூர்சுவாசி உறுதியாகக் கருதியது; அது மக்களை தனக்குப் பின்னால் போராட்டத்திற்கு அணிதிரட்டி, அவர்களுக்கு கோஷங்களை கொடுத்து, அவர்களுடைய போரிடும் தந்திரோபாயங்களை ஆணையிட்டது. ஜனநாயகம், நாட்டு மக்களை ஓர் அரசியல் கருத்தியலுடன் ஒன்றாய் பிணைத்திருந்தது. நகர்ப்புற குட்டி பூர்சுவாசிகள், விவசாயிகள், தொழிலாளர்கள் என்று மக்கள் அனைவருமே பூர்சுவாக்களை தங்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுத்தனர். வாக்காளர்கள் தங்களுடைய பிரதிநிதிகளுக்கு கொடுத்திருந்த உத்திரவு குறிப்புக்கள், தமது மீட்பாளர் கடமையை விழிப்புணர்வு கொள்ளும் வகையில் பூர்ஷூவா மொழியில் எழுதப்பட்டிருந்தன. புரட்சியின் போதே, வர்க்க விரோதப் போக்குகள் வெளிப்பட்டிருந்த போதிலும், புரட்சிகர போராட்டத்தின் மிகவும் சக்திவாய்ந்த உள்ளார்ந்த விசை (inertia) பூர்சுவாசியின் கூடுதலான பழைமைவாத சக்திகளை அரசியல் பாதையில் இருந்து அகற்றியிருந்தது. எந்த நில அடுக்கும் அதன் ஆற்றலை அதன் பின்னே உள்ள நில அடுக்கிற்கு மாற்றுவதற்கு முன்னால் அகற்றப்படுவதில்லை. எனவே நாடு ஒட்டுமொத்தமாகவும் தன்னுடைய குறிக்கோள்களுக்காக தீவிரமான மற்றும் கூடுதலான உறுதிப்பாட்டுடைய வழிமுறைகளுடன் தொடர்ந்து போராட வேண்டியிருந்தது. செல்வம் கொழித்திருந்த பூர்சுவா உயர்தட்டுக்கள், இயக்கத்தில் நுழைந்திருந்த தேசிய உட்கருவிடம் இருந்து முறித்துக்கொண்டு சென்று பதினாறாம் லூயியுடன் ஒரு கூட்டு வைத்துக் கொண்டபின், தேசத்தின் ஜனநாயக தேவைகள் இந்த பூர்சுவாவிற்கு எதிராக செலுத்தப்பட்டன; மற்றும் இது ஜனநாயகத்தின் அனைவருக்கும் வாக்குரிமை, குடியரசு போன்ற ஜனநாயகத்தின் தர்க்கரீதியான மற்றும் தவிர்க்க முடியாத வடிவத்திற்கு இட்டுச்சென்றது.

மாபெரும் பிரெஞ்சுப் புரட்சி, உண்மையிலேயே ஒரு தேசிய புரட்சியாகும். மேலும் அதன் தேசிய கட்டமைப்பிற்குள் அதிகமாக இருந்தது யாதெனில், மேலாதிக்கத்திற்கான, அதிகாரத்திற்கான மற்றும் பிரிக்க முடியாத வெற்றிக்கான பூர்சுவாசியின் உலகப் போராட்டம் அதன் நேர்த்தியான வெளிப்பாட்டை கண்டுகொண்டதாகும்.

அனைத்து தாராளவாத அறிவாளிபோல் நடிக்கும் முட்டாள்களின் உதடுகளிலும் ஜாக்கோபினிசம்* என்பது இப்பொழுது ஒரு இழிசொல்லாக உள்ளது. புரட்சி பற்றிய பூர்சுவாசியின் வெறுப்புணர்வு, வெகுஜனங்களைப் பற்றி அது கொண்டுள்ள வெறுப்பு, பலாத்காரத்தை பற்றி அது கொண்டுள்ள வெறுப்பு, தெருக்களிலே தயாரிக்கப்பட்ட வரலாற்றின் பேராற்றல் பற்றிய வெறுப்பு ஆகியவை அனைத்தும் ஜாக்கோபினிசம் என்ற சொல்லை சரியான சீற்றத்துடனும் பயத்துடனும் ஒலிப்பதில் ஒருமுனைப்பட்டுள்ளது. கம்யூனிசத்தின் உலகப் படையினரான நாம், நீண்ட காலத்திற்கு முன்பே நம்முடைய வரலாற்றுக் கணக்கை ஜாக்கோபியனிசத்துடன் தீர்த்துக் கொண்டுவிட்டோம். இப்பொழுதும்கூட சர்வதேச பாட்டாளி வர்க்க இயக்கம் முழுமையும் ஜாக்கோபியனிசத்தின் மரபுகளுக்கு எதிரான போராட்டங்களில்தான் அமைக்கப்படுகிறது மற்றும் வலிமையுடன் வளர்கிறது. அதனுடைய தத்துவங்களை விமர்சனத்திற்கு உட்படுத்தினோம்; அதன் வரலாற்று மட்டுப்பாடுகளை அம்பலப்படுத்தினோம், அதன் சமூக முரண்பாடுகளை, அதன் கற்பனாவாத தன்மையை அம்பலப்படுத்தினோம், அதன் வார்த்தை ஜாலங்களை அம்பலப்படுத்தினோம், பல தசாப்தங்களாக புரட்சியின் புனிதமான மரபியம் என்று கருதப்பட்டிருந்த அதன் மரபுகளில் இருந்து முறித்துக் கொண்டு வெளியேறினோம்.

ஆனால் பொய்யான இகழுரை, சோகை பீடித்த முட்டாள்தனமான அவதூறுகள், எளிதில் செயல்படாத தாராளவாதத்தின் தாக்குதல்கள் இவற்றுக்கு எதிராக ஜாக்கோபினிசத்தைப் பாதுகாத்தோம். தன்னுடைய வரலாற்று இளமையின் மரபுகள் அனைத்தையும் பூர்சுவா வர்க்கம் வெட்கம் கெட்டதனமாகக் காட்டிக் கொடுத்திருக்கிறது. அதன் இன்றையை கூலிப்படையினர் தங்களுடைய முன்னோர்களுடைய கல்லறைகளை அவமதிப்பிற்கு உட்படுத்தி, அவர்களுடைய உயர் இலக்குகளின் சாம்பல்களில் ஏளனம் செய்கின்றனர். பாட்டாளி வர்க்கமோ, பூர்சுவா வர்க்கத்தின் புரட்சிகரமான கடந்த காலத்தின் கௌரவத்தை ஏந்தி, அதைத் தன்னுடைய பாதுகாப்பிற்குள் எடுத்துக் கொண்டுள்ளது. பாட்டாளி வர்க்கம், எவ்வளவுதான் தீவிரமானதாக இருந்தாலும், நடைமுறையில், பூர்சுவா வர்க்கத்தின் புரட்சிகர மரபுகளில் இருந்து முறித்துக் கொண்டுள்ளது. ஆயினும், அதன் மாபெரும் பேரார்வம், வீரம், முன்முயற்சி இவற்றின் புனிதமான மரபியம் என்ற முறையில் அவற்றைக் காக்கின்றது; அதனுடைய இதயத்துடிப்பு, ஜாக்கோபிய பேரவையின் உரைகள், செயல்கள் இவற்றுடன் அனுதாபம் கொள்கிறது.

மாபெரும் பிரெஞ்சுப் புரட்சியின் மரபுகள் அல்லாது வேறு எது தாராளவாதத்திற்கு அதன் கவர்ச்சி தன்மையை கொடுக்கும்? ஜாக்கோபின் காலம், Sans culotte, பயங்கரவாத, 1793ன் ரொபேஸ்பியரின் ஜனநாயகக் காலங்களை போலல்லாது வேறு எந்தக் காலகட்டத்தில் பூர்சுவா ஜனநாயகம் இந்தத் தன்மைக்கு உயர்ந்து மக்களுடைய உள்ளத்தில் பெரும் தீச்சுவாலையை பற்ற வைத்தது?

ஜேர்மனியிலும், ஆஸ்திரியாவிலும் பூர்சுவா தீவிரப்போக்குக் கொள்கை சிறுமைத்தனமான செயல்களிலும் இழிவிலும் தன்னுடைய குறுகிய வரலாற்றை இழுத்து மூடிவிட்டுள்ள இக்காலக்கட்டத்தில், பிரெஞ்சு முதலாளித்துவ-தீவிரவாதப்போக்கின் பல்வேறு சாயல்களும் பெரும்பான்மையான மக்களையும், பாட்டாளி வர்க்கத்தையும் கூட தன்னுடைய செல்வாக்கின்கீழ் கொண்டுவந்து, இன்னும் தக்கவைத்துக்கொள்ளச் செய்வதற்கு ஜாக்கோபினிசத்தை விட வேறு எதனால் இயலும்?

அதன் அருவமான அரசியல் கருத்தியல், புனிதமான குடியரசைப்பற்றிய அதன் வழிபடல், அதன் வெற்றிகரமான பிரகடனங்கள் இவற்றுடன், இறைவனுடைய அருளால் ஆட்சியை நடத்திவரும் மடத்தனமான இரண்டாம் வில்ஹெல்ம் ஜங்கருடைய ஆட்சிக்குச் சற்றும் குறைந்திராத மோசமான பூர்சுவா சமுதாயத்தின் முக்கிய கூறுகளைக் காத்தல் எப்படி என்பதை அறிந்த பிரான்சின் தீவிரவாத போக்கினருக்கும், கிளெமென்சோ, மில்லராண்ட், பிரியண்ட், போன்ற தீவிரவாத சோசலிஸ்டுகளுக்கும், பூர்சுவாசிக்கும் இதர அரசியல்வாதிகளுக்கும், இப்பொழுதும் கூட உரமூட்டி வருவது ஜாக்கோபினிசத்தின் கவர்ச்சி இல்லை எனில் வேறு என்ன? மற்ற நாடுகளில் உள்ள பூர்சுவா ஜனநாயகவாதிகளால் இவர்கள் நம்பிக்கையற்று பொறாமையுடன் நோக்கப்படுகின்றனர். இருந்தபோதிலும்கூட, அவர்கள் தங்களுடைய அரசியல் ஆதாயங்களுக்கு ஆதாரமாக உள்ள தீரம் மிகுந்த ஜாக்கோபினிசத்தின் மீது வசைமாரி பொழிகின்றனர்.

பல நம்பிக்கைகளும் தகர்த்து அழிக்கப்பட்டுவிட்ட பின்னரும் கூட, ஜாக்கோபினிசம் மக்களுடைய நினைவுகளில் ஒரு பெரிய மரபாக நீடித்திருந்தது. நீண்ட காலமாக பாட்டாளி வர்க்கம் அதன் வருங்காலத்தை கடந்த கால மொழியில் உரைத்து வந்தது. "மலையின்" அரசாங்கம் முடிந்து கிட்டத்தட்ட அரை நூற்றாண்டிற்கு பின்னர் 1840லும், 1848 ஜூன் மாத நாட்களுக்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்னரும், ஜேர்மன் எழுத்தாளரான ஹெயின் (Heine) சென்- மார்சோவில் (Saint-Marceau) உள்ள ஃபாபூர்க்கில் (Faubourg) இருக்கும் பல தொழிற்சாலைகளை பார்வையிட்டார். மற்றும் அங்கு 'கீழ் வர்க்கத்தின் உறுதியான பிரிவுகள்' என்ன படித்துக் கொண்டிருந்தன என்பதை கண்டார். பழைய ரொபேஸ்பியரால் எழுதப்பட்டிருந்த பல புதிய உரைகள்; இரண்டு துணைப் பதிப்புக்களில் வெளியிடப்பட்டிருந்த மாரட்டின் துண்டுப் பிரசுரங்கள்; புரட்சியின் வரலாறு என்ற கபேட்டின் புத்தகம்; கார்மெனெனுடைய குரோதம் மிக்க வசைப்பாட்டுக்கள்; Buonarroti உடைய படைப்புக்கள், Babeuf உடைய போதனைகளும் சதித் திட்டங்களும் என இரத்த வாடை வீசும் எல்லா புத்தகங்களையும் அங்கு நான் கண்டேன்... இந்த விதைகளின் பழங்களுள் ஒன்றாக விரைவிலோ, தொலைவிலோ பிரான்சில் ஒரு குடியரசு கிளர்ந்தெழும் அச்சம் உள்ளது" என்று அவர் ஒரு ஜேர்மன் செய்தித்தாளுக்கு எழுதினார்.

1848ல் பூர்சுவாசி, ஓர் ஒப்புமையுள்ள உரிய பங்கை ஏற்கனவே ஆற்ற முடியாதிருந்தது. அதிகாரத்திற்கு செல்வதற்கான அதன் பாதையில் நிற்கும் சமூக அமைப்பை புரட்சிகர முறையில் அழிப்பதை அது பொறுப்பெடுக்கவில்லை மற்றும் விரும்பவில்லை. இந்நிலை ஏன் அப்படி இருந்தது என்பது இப்பொழுது நமக்குத் தெரிகிறது. அதுபற்றி அது முழுமையாக நனவாக இருந்தது, பழைய அமைப்பு முறையில் தன்னுடைய அரசியல் ஆதிக்கத்திற்காக அல்லாமல் கடந்த காலத்தின் சக்திகளுடன் வெறுமனே அதிகாரத்தை பங்கிட்டுக் கொள்ளுவதுதான் அதன் குறிக்கோளாக இருந்தது. பிரெஞ்சு பூர்சுவாசியின் அனுபவத்தால் அது அற்பத்தனமான புத்திசாலித்தனத்தை கண்டிருந்தது; தன்னுடைய காட்டிக்கொடுக்கும் தன்மையினால் ஊழல்கள் மலிந்திருந்தது மற்றும் தன்னுடைய தோல்விகளினால் அச்சுறுத்தலுக்காளாகியிருந்தது. பழைய ஒழுங்கின் கோட்டைகளை தகர்க்க மக்களை வழிநடத்துவதில் அது தோல்வி மட்டும் அடையவில்லை; அதனை முன்னெடுப்பதில் அழுத்தம்கொடுத்த மக்கள் புறமுதுகிட்டு ஓடும் வகையில் அந்த ஒழுங்கின்பால் முதுகைத் திருப்பிக் கொண்டது.

பிரெஞ்சு பூர்சுவாசி தன்னுடைய மாபெரும் புரட்சியைக் கொண்டு வருவதில் வெற்றியைக் கண்டது. அதன் நனவு சமுதாயத்தின் நனவாக இருந்தது மற்றும் அரசியல் உருவாக்கம் பற்றிய பிரச்சினை என்ற வகையில், ஒரு குறிக்கோள் என்ற வகையில் அதன் நனவினூடாக முதலில் கடந்து செல்லாமல் எதுவும் ஒரு நிறுவனமாக ஆகமுடியாது. தன்னுடைய சொந்த பூர்சுவா உலகின் வரம்புகளில் இருந்து தன்னை மறைத்துக் கொள்ளும் பொருட்டு அது பலநேரங்களிலும் நாடக முறையில் தோற்றமளித்தது - ஆனாலும் அது முன்னேறியது.

ஆயினும், ஜேர்மன் பூர்சுவாசி ஆரம்பத்தில் இருந்தே, ஒரு புரட்சியை "ஏற்படுத்தவில்லை", மாறாக புரட்சியில் இருந்து அது தன்னை தொடர்பறுத்துக்கொண்டு இருந்தது. தன்னுடைய ஆதிக்கத்திற்கான புறநிலையான நிலைமைக்கு எதிராக அதனுடைய நனவு எழுந்தது. புரட்சி நிறைவேற்றப்பட முடிந்தது அதனால் அல்ல, அதற்கு எதிராக மட்டுமே ஆகும். ஜனநாயக அமைப்புகள் குறிக்கோளுக்கு போராடுவதற்கானதாக அல்லாமல், அதனுடைய நலன்களுக்கு ஓர் அச்சுறுத்தலாகவே அதன் சிந்தனையில் பட்டது.

பூர்சுவாசி இல்லாமலும் மற்றும் அது இருந்தபோதிலும், 1848ம் ஆண்டில் நிகழ்வுகளுக்கான பொறுப்பை எடுத்துக்கொள்ள ஒரு வர்க்கம் தேவைப்பட்டது. அந்த வர்க்கம், பூர்சுவாசியை தன்னுடைய அழுத்தத்தின் மூலம் முன்தள்ளுவதற்கு தயாராக இருக்க வேண்டியிருந்ததுடன் மட்டுமல்லாமல், முடிவான தருணத்தில் அதனுடைய அரசியல் சடலத்தையும் வழியில் இருந்து தூக்கி எறிந்து விடுவதற்கும் தயாராக வேண்டியிருந்தது. நகர்ப்புற குட்டி பூர்சுவாசியோ, விவசாயிகளோ இதைச் செய்ய இயலாமல் இருந்தது.

நகர்ப்புற குட்டி பூர்சுவாசி கடந்த காலத்திற்கு மட்டும் என்று இல்லாமல் எதிர்காலத்திற்கும் குரோதமாக இருந்தது. மத்தியகால உறவுகளில் இன்னும் சிக்கிக்கொண்டிருந்த நிலைமையில், ஆனால், ஏற்கனவே 'சுதந்திரமான' தொழிற்துறைக்கு எதிராக அதனால் நிற்க முடியவில்லை; தன்னுடைய சுவடுகளை நகர்ப்புறங்களில் பதிக்க இருந்த, ஆனால் ஏற்கனவே நடுத்தர மற்றும் பெரிய பூர்சுவா வர்க்கத்திற்கு வழிவிட்ட, தப்பெண்ணத்தில் மூழ்கி இருந்த, நிகழ்வுகளின் சப்தங்களால் காதடைத்துப் போயிருந்த, சுரண்டியும், சுரண்டப்பட்டும், பேராசை நிறைந்திருந்த, அதன் பேராசையில் உதவியற்றிருந்த குட்டி பூர்சுவாசி, நாளின் மாபெரும் நிகழ்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் தனித்துப் பின்தங்கி நின்றது.

விவசாயிகளால் இன்னும் கூடுதலான அளவிற்கு ஒரு சுயாதீனமான அரசியல் முன்முயற்சியை மேற்கொள்ளுவது இயலாதவாறு இருந்தது. பல நூற்றாண்டுகளாக தளைகளில் கட்டுண்டு, வறுமை பீடித்து, சீற்றத்துடன் விளங்கி, பழைய மற்றும் புதிய சுரண்டல்களின் அனைத்து இழைகளாலும் ஒன்றிணைக்கப்பட்டிருந்த விவசாயிகள், ஒரு குறிப்பிட்ட கணத்தில் புரட்சிகர வலிமைக்கு வளமான ஆதாரமாக விளங்கினர். ஆனால், முறையாக ஒழுங்கமைக்கப்படாது, சிதறி, அரசியல் மற்றும் கலாச்சார நரம்பு மையங்களான நகரங்களில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு, மடத்தனம் நிறைந்தும், தங்களுடைய கிராம எல்லைகளுக்குள்ளே தங்களின் அறிவெல்லைகளை மட்டுப்படுத்திக் கொள்ளுகின்ற, நகரம் என்ன நினைக்கிறது என்பது பற்றி அக்கறையற்ற விவசாயிகளினால் ஒரு தலைமை தாங்கும் சக்தியாக, எந்த முக்கியத்துவத்தையும் கொண்டிருக்க முடியாது. அதனுடைய நிலப்பிரபுத்துவ கடப்பாடுகளின் சுமைகள் நீக்கப்பட்ட உடனேயே விவசாயிகள் சாந்தப்படுத்தப்பட்டு, அதன் உரிமைகளுக்காக பாடுபட்டிருந்த நகரங்களுக்கு, இருண்ட நன்றிகெட்ட தனத்தைத்தநான் பரிசாகக் கொடுத்தனர். விடுவிக்கப் பெற்றிருந்த விவசாயிகள் "ஒழுங்கின்" வெறியர்களாக மாறினர்.

அறிவுஜீவித ஜனநாயகவாதிகள் ஒரு வர்க்கச் சக்தியைப் பெற்றிருக்கவில்லை. ஒரு கணம் இந்தக் குழு தன்னுடைய மூத்த சகோதரியான தாராளவாத பூர்சுவாசியை, அரசியலில் வால் போல் பின்தொடர்ந்தும், மறுகணம் தாராளவாத பூர்சுவாசியை, அதன் சொந்த பலவீனத்தை அம்பலப்படுத்தும் பொருட்டு, அதை முக்கியமான சமயத்தில் கைவிட்டுவிடுவதுமாகவும் இருந்தது. அது தீர்வு காணப்படாத முரண்பாடுகளில் தன்னை குழப்பத்தில் ஆழ்த்திக் கொண்டதுடன் இந்த குழப்பத்தை தான் செல்லுமிடம் அனைத்திற்கும் உடன் அழைத்துச் சென்றது.

பாட்டாளி வர்க்கம், அமைப்பு, அனுபவம், தேவையான அறிவு இன்றி மிகவும் பலவீனமாக இருந்தது. முதலாளித்துவம் பழைய நிலபிரபுத்துவ உறவுகளை அகற்றுவதற்கு போதுமான வகையில் அபிவிருத்தியடைந்திருந்த போதிலும், புதிய தொழிற்துறை உறவுகளின் விளைவான தொழிலாள வர்க்கத்தை, உறுதியான அரசியல் சக்தியாக கொண்டுவர முடியாததாக இருந்தது. ஜேர்மனியின் தேசிய கட்டமைப்பிற்குள்ளேயே பாட்டாளி வர்க்கத்திற்கும், பூர்சுவாசிக்கும் இடையிலான விரோதம், பூர்சுவாசி சிறிதும் பயமின்றி நாட்டின் மேலாதிக்க பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுவதை அனுமதிக்கும் அளவிற்கு போயிருந்தது. ஆனால், தொழிலாள வர்க்கம் அத்தகைய பாத்திரத்தை எடுப்பதற்கு போதுமான அளவு அனுமதிக்கவில்லை. புரட்சியின் உள் உராய்வுகள் அரசியல் சுயாதீனத்திற்காக பாட்டாளி வர்க்கத்தை தயார் செய்தது என்பது உண்மையானாலும், அதேநேரத்தில் செயல்பாட்டின் ஆற்றலையும் ஒற்றுமையையும் வலிமை குன்றச் செய்து, முயற்சியை பலனின்றி வீணடிக்கச் செய்ததுடன், அதன் முதல் வெற்றிகளுக்கு பின்னர் புரட்சியை சலிப்படையச்செய்து, பின்னர் பிற்போக்கின் தாக்குதல்களின் கீழ் பின்வாங்கச் செய்தது.

புரட்சிக் காலத்தில் இருந்த இந்த முற்றுப்பெறாத மற்றும் முழுமையுறாத அரசியல் உறவுகளின் தன்மைக்கு, ஆஸ்திரியா குறிப்பிட்ட வகையில் தெளிவான, சோகம் நிறைந்த சான்றை வழங்கியது.

1848ல் வியன்னா நகர பாட்டாளி வர்க்கம் வியத்தகு வீரத்தையும், அயரா ஆற்றலையும் வெளிப்படுத்தியது. ஒரு தெளிவற்ற வர்க்க உணர்வால் மட்டுமே தூண்டப்பட்டு, போராட்டத்தின் குறிக்கோள்கள் பற்றிய ஒரு பொதுக்கருத்துரு இல்லாமல், ஒரு முழக்கத்தில் இருந்து மற்றொரு முழக்கத்திற்கு தட்டுத் தடுமாறிச் சென்று கொண்டிருந்த அது மீண்டும் மீண்டும் போர்க்களத்திற்கு விரைந்தது. மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் தன்னுடைய செயலால் மக்களிடையே பெரும் செல்வாக்கை பெற்றிருந்த, அதையொட்டி நிகழ்வுகள் மீதும் செல்வாக்கைக் கொண்டிருந்த ஒரே செயலூக்கமான ஜனநாயகக் குழுவான மாணவர்களிடம் பாட்டாளி வர்க்கத்தின் தலைமை குறிப்பிடத்தக்க வகையில் சென்றது. ஐயத்திற்கிடமின்றி, மாணவர்கள் தடையரண்களில் பெரும் தைரியத்துடன் போரிட முடிந்தது என்பதோடு, தொழிலாளர்களுக்கு, பெரும் கௌரவத்துடன் சகோதரத்துவத்தையும் காட்டினர்; ஆனால், அவர்களால் தெருக்களின் "சர்வாதிகாரத்தை" அவர்களுக்கு அளித்திருந்த புரட்சியின் போக்கை தக்க வகையில் முன்கொண்டு வழிநடத்திச்செல்ல முற்றிலும் இயலவில்லை.

ஒழுங்குற அமைக்கப்படாத, அரசியல் அனுபவமும், சுயாதீனமான தலைமையும் அற்றிருந்த பாட்டாளி வர்க்கம் மாணவர்களை பின்பற்றியது. ஒரு நெருக்கடியான நேரத்தில், தொழிலாளர்கள் "தங்கள் மூளைகளுடன் செயலாற்றும் கனவான்களுக்கு", "கைகளினால் உழைப்பவர்களின்" உதவியை தவிர்க்க முடியாமல் அளிக்க முன்வந்தனர். மாணவர்கள் ஒரு நேரத்தில் தொழிலாளர்களை போரிட அழைத்தனர்; வேறொரு நேரத்தில் தாங்கள் அவர்கள் புறநகர்களில் இருந்து நகரத்திற்கு வரும் வழியை அடைத்து நின்றனர். சில சமயம் தங்களுடைய அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தியும், கல்விக் கழக படையணியின் (The Academic Legion) ஆயுதங்களை நம்பி, அவர்கள் தொழிலாளர்களை, அவர்களுடைய தனிப்பட்ட கோரிக்கைகளை முன்வைக்க விடாமல் தடுத்திருந்தனர். இது பாட்டாளி வர்க்கத்தின் மீதான இரக்க மனப்பான்மை கொண்ட புரட்சிகர சர்வாதிகாரத்தின் உயர்தர தெளிவான வடிவமாகும். இத்தகைய சமுதாய உறவுகளின் விளைவு எவ்வாறு இருந்தது? ஏன், இது வந்தது: மே 26 ம் தேதி, வியன்னாவில் இருந்த அனைத்து தொழிலாளர்களும் மாணவர்களின் அழைப்பின் பேரில் மாணவர்களுடைய (கல்விக் கழக படையணியின்) ஆயுதங்கள் களையப்படுவதை தடைசெய்யும் வகையில் திரண்டெழுந்தனர்; தலைநகரின் முழு மக்கட் தொகையும் நகரம் முழுவதும் பல தடை அரண்களை ஏற்படுத்தி, மிகத் திறமையான அதிகாரத்தை கொண்டு, ஆஸ்திரியா முழுவதும் வியன்னாவை ஆயுதபாணியாக்க புதுமுனைப்பு கொண்டபொழுது, முடியாட்சி போரில் ஈடுபட்டிருந்தது மற்றும் அனைத்து முக்கியத்துவத்தையும் இழந்திருந்த பொழுது, மக்கள் கொடுத்த அழுத்தத்தின் விளைவாக படைகள் தலைநகரில் இருந்து வாபஸ் வாங்கப்பட்டிருந்த பொழுது, ஆஸ்திரிய அரசாங்கம் தனக்குப் பின் யார் ஆளவேண்டும் என்று முன்மொழியாது ராஜிநாமா செய்திருந்த பொழுது,-- வேறு எந்த அரசியல் சக்தியும் ஆட்சித் தலைமையிடத்தை எடுத்துக் கொள்ள தயாராக இல்லாதிருந்தது.

தாராளவாத பூர்சுவாசி, இப்படி கொள்ளைக்காரர் பாணியில் அதிகாரத்தை எடுத்துக் கொள்ள வேண்டுமேன்றே மறுத்துவிட்டது; திரோலிற்குத் (Tyrol) தப்பி ஓட்டம் பிடித்த பேரரசர் திரும்பி வரவேண்டும் என்றுதான் அது கனவு கண்டது.

தொழிலாளர்கள் அத்தகைய எதிர்த்தாக்கத்தை விரட்டுவதில் தக்க தீரத்தைக் காட்டினர்; ஆனால் அதனுடைய இடத்தை எடுத்துக் கொள்ளுவதற்கு, போதிய வகையில் அணிதிரட்டப்படவில்லை மற்றும் அது நனவு கொண்டிருக்கவில்லை. மிகச் சக்தி வாய்ந்த தொழிலாளர் இயக்கம் இருந்திருந்தது; ஆனால் ஒரு திட்டவட்டமான அரசியல் குறிக்கோளுடனான பாட்டாளி வர்க்கப் போராட்டம் போதுமான வகையில் அபிவிருந்தி அடையவில்லை. ஆட்சித் தலைமையிடத்தை எடுக்க ஆற்றலில்லாத பாட்டாளி வர்க்கத்தால், இந்த மாபெரும் வரலாற்றுப் பணியை நிறைவேற்ற முடியவில்லை. மற்றும் பூர்சுவா ஜனநாயகவாதிகள், பலமுறையும் நடப்பது போலவே, மிகப் பெரும் அவசர காலத்தில் கள்ளத்தனமாய் பதுங்கி ஓடிவிட்டனர்.

பாட்டாளி வர்க்கத்தைப் பொறுத்தவரையில், இப்படி ஓடிப் போனவர்களை தங்கள் கடமைகளை ஆற்றுமாறு கட்டாயப்படுத்துவதற்கு, இடைக்கால தொழிலாளர்கள் அரசாங்கத்தை அமைப்பதற்கு தேவையான ஆற்றல் மற்றும் பக்குவத்தை விட குறைவான ஆற்றலும் பக்குவமும் தேவைப்பட்டிருக்காது.

சமகாலத்தவர் ஒருவர் இவ்வாறு தோற்றுவிக்கப்பட்ட நிலைமையைப் பற்றி மொத்தத்தில் சுருக்கமாகக் கூறினார்: 'வியன்னாவில் உண்மையில் ஒரு குடியரசு நிறுவப்பட்டிருந்தது; ஆனால் துரதிருஷ்டவசமாக இதை யாரும் பார்க்கவில்லை.' எவருமே கவனத்திற் கொள்ளாத குடியரசு நீண்ட காலத்திற்கு, ஹப்ஸ்பேர்க்குகளுக்கு (Habsburgs) இடமளித்துவிட்டு, அரங்கில் இருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டது. ...சந்தர்ப்பத்தை ஒரு முறை தவறவிட்டால், மீண்டும் திரும்புவதில்லை.

ஹங்கேரி, மற்றும் ஜேர்மனிய புரட்சிகளின் அனுபவத்தினூடாக, லஸ்ஸால் இப்பொழுதில் இருந்து புரட்சிகள் பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்தில்தான் ஆதரவைக் காண முடியும் என்ற முடிவிற்கு வந்தார். 1849 அக்டோபர் 24 ம் தேதி மார்க்சிற்கு எழுதிய கடிதம் ஒன்றில் லஸ்ஸால் கூறுகிறார்: 'எந்த நாட்டையும் விடக் கூடுதலான முறையில் தன்னுடைய போராட்டத்திற்கு, ஒரு வெற்றிகரமான விளைவை காணும் வாய்ப்புக்களை ஹங்கேரி பெற்றிருந்தது. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்ததுபோல் அங்கு இருந்த கட்சியானது பிளவுபட்ட நிலையிலும் கடும் விரோதப் போக்குடனும் இருக்கவில்லை என்பதும் அதற்கான பல காரணங்களில் ஒன்றாகும்; ஏனெனில் புரட்சி ஒரு பெரிய வகையில் தேசிய சுதந்திரத்திற்கான ஒரு போராட்டத்தின் வடிவத்தை பெற்றுவிட்டது. இருந்தபோதிலும், ஹங்கேரி தோற்கடிக்கப்பட்டது, துல்லியமாக தேசியக் கட்சி காட்டிக் கொடுத்ததின் விளைவாகத்தான் இது ஏற்பட்டது.'

'இதுவும், 1848-49ல் ஜேர்மனியின் வரலாறும், ஐரோப்பாவில் எந்தப் புரட்சியும் ஆரம்பத்தில் இருந்து, அது தன்னை முற்றிலும் சோசலிச புரட்சி என்று பிரகடனப்படுத்திக் கொண்டால் ஒழிய வெற்றிகாணமுடியாது என்ற முடிவிற்கு என்னைக் கொண்டு வந்துள்ளது. சமூகப் பிரச்சினைகள் ஒரு புரட்சியில் தெளிவற்ற கூறுபாடாக இருக்கும் தன்மையைக் கொண்டிருந்தால், எந்தப் புரட்சியும் வெற்றியடைய முடியாமல் பின்னணியில்தான் இருக்கும்; அதுவும் தேசிய புத்துயிர்ப்பு அல்லது பூர்சுவா குடியரசுவாதம் என்ற பதாகையின் கீழ் அது நடத்திச் செல்லப்பட்டால், முடிவு அப்படித்தான் இருக்கும்' என்று லஸ்ஸால் தொடர்கிறார்.

இந்த தீர்மானிக்கப்பட்டிருந்த முடிவுகளை விமர்சிப்பதற்கு இங்கு தயங்கி நிற்க வேண்டியதில்லை. ஆயினும், ஏற்கனவே 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், அரசியல் விடுதலை பற்றிய பிரச்சினை நாட்டின் முழு அழுத்தத்தின் ஒருமித்த, ஒருங்கிணைந்த தந்திரோபாயங்களால் தீர்க்கப்பட முடியாமற் போய்விட்டது என்பது சந்தேகத்திற்கிடமில்லா உண்மையாகும். பாட்டாளி வர்க்கத்தின் சுயாதீனமான தந்திரோபாயம்தான், அதன் வர்க்க நிலைப்பாட்டில் இருந்து போராட்டத்திற்கான வலிமையை திரட்டும், மற்றும் அதனுடைய வர்க்க நிலைப்பாட்டில் இருந்து மட்டுமேதான் புரட்சிக்கான வெற்றியை உத்திரவாதம் செய்துகொள்ள முடியும்.

1906ம் ஆண்டில் ரஷ்ய தொழிலாள வர்க்கம் 1848 வியன்னா தொழிலாளருடன், எந்த விதத்திலும் ஒத்த தன்மையை பெற்றிருக்கவில்லை. ரஷ்யா முழுவதும் தொழிலாளர்களின் பிரதிநிதிகளின் சோவியத்துக்கள் பீறிட்டுக் கிளம்பியதுதான் இதற்கு சிறந்த சான்று ஆகும். இவை புரட்சி தோன்றியவுடன் தொழிலாளர்களால் அதிகாரம் கைப்பற்றப்படுவதற்காக முன்கூட்டியே இரகசிய அமைப்புக்களாக தயாரிக்கப்படவில்லை. இல்லை, இவை மக்களாலேயே, தங்களின் புரட்சிகர போராட்டத்தை ஒருங்கிணைக்கும் நோக்கத்தைக் கருத்திற்கொண்டு, திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டவை ஆகும். இந்த சோவியத்துக்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்களுக்குப் பொறுப்பு சொல்லும் நிலையில் இருந்ததால், ஐயத்திற்கு இடமின்றி ஜனநாயக முறை அமைப்புக்களாக இருந்தன. இவை புரட்சிகர சோசலிச உணர்வில் ஒரு மிகவும் உறுதியான வர்க்க கொள்கையை வழிகாட்டுதலாக கொண்டன.

ரஷ்ய புரட்சியின் சமூக சிறப்பியல்புகள் நாட்டை ஆயுதபாணியாக்கும் பிரச்சினையில் தெளிவாக வெளிப்படுகின்றன. ஒரு தேசிய காவலர் படை (Nationa Guard) என்னும் குடிப்படைதான் (A militia) ஒவ்வொரு புரட்சியின் முதல் கோரிக்கையும், முதல் வெற்றியும் ஆக 1789 மற்றும் 1848ல் பாரிசிலும், இன்னும் இத்தாலியின் அனைத்து மாநிலங்களிலும், வியன்னா, பேர்லின் ஆகியவற்றிலும் இருந்தது. 1848ல் தேசிய காவலர் படை, அதாவது சொத்துரிமை மற்றும் ''கல்வியறிவு'' பெற்றிருந்த வர்க்கங்களை ஆயுதபாணியாக்கல் என்பது பூர்சுவா எதிர்ப்பு ஒட்டுமொத்தத்தின் கோரிக்கையாகவும், மிக மிதவாதிகளுடைய கோரிக்கையாகவும் இருந்தது. இதன் குறிக்கோள் வென்றெடுக்கப்பட்ட உரிமைகளை பாதுகாப்பது மட்டுமல்லாமல், அல்லது இன்னும் சொல்லப்போனால் மேலிருந்து திரும்பப் பெறுவதற்கு எதிராக 'வழங்கப்பட்டவற்றை' அனுபவிக்கச் செய்தலாக இருக்கவேண்டும் என்பதோடு, பூர்சுவா தனிச் சொத்துடைமையை பாட்டாளி வர்க்கத்திடம் இருந்து பாதுகாக்கவேண்டும் என்ற கருத்தையும் பெற்றிருந்தது. எனவே, ஒரு குடிப்படைக்கான கோரிக்கை பூர்சுவா வர்க்கத்தின் வர்க்க கோரிக்கை என்பது தெளிவாகிறது. 'ஓர் ஆயுதமேந்திய சாதாரண மக்களுடைய குடிப்படை சர்வாதிகாரம் நடைபெறுவதை இயலாததாக்கிவிடும் என்று இத்தாலியர்கள் நன்கு உணர்ந்திருந்தனர்' என்று ஆங்கில தாராளவாத வரலாற்றாசிரியர் ஒன்றுபடுத்தப்பட்ட இத்தாலியை பற்றி எழுதியுள்ளார். அதையும் தவிர, சாத்தியமான அராஜகம் மற்றும் கீழிருந்து வரும் எந்தவகையான ஒழுங்கின்மைக்கு எதிராகவும் சொத்துரிமை படைத்த வர்க்கங்களுக்கு உத்தரவாதமாக அது இருந்தது' என்றும் அவர் கூறுகிறார்.[1] இந்த "அராஜகத்தை", அதாவது புரட்சிகர வெகுஜனங்களை எதிர்கொள்வதற்கு நடவடிக்கைகளின் மையத்தில் போதிய படைகளை கொண்டிராத, ஆளும் வர்க்கத்தின் பதிலானது பூர்சுவாசியை ஆயுதபாணியாக்குவதாக இருந்தது. வரம்பிலா ஆட்சி, முதலில் உரிமைபெற்ற நகரத்தின் உரிமைக் குடியினர் தொழிலாளர்களை நசுக்கவும், சமாதானப்படுத்தவும் அனுமதித்த பின்னர், அது உரிமைபெற்ற நகரத்தின் உரிமைக் குடியினரை நிராயுதபாணியாக்கியது மற்றும் சமாதானப்படுத்தியது.

ரஷ்யாவில் பூர்சுவா கட்சிகளிடையே குடிப்படைக்கான கோரிக்கைக்கு எந்த ஆதரவும் கிடைக்கவில்லை. ஆயுதங்களின் முக்கியத்துவம் பற்றி புரிந்து கொள்வதற்கு தாராளவாதிகள் உதவி செய்ய முடியவில்லை; வரம்பிலா முடியாட்சி அவர்களுக்கு இது தொடர்பான சில விளக்க படிப்பினைகளை கொடுத்திருந்தது. ஆனால் தொழிலாள வர்க்கத்தை விடுத்தோ, அதற்கு எதிராகவோ ரஷ்யாவில் ஒரு குடிப்படையை தோற்றுவிக்க முடியாது என்பதையும் அவர்கள் நன்கு அறிந்திருந்தனர். முதலாளிகள், மாணவர்கள், வக்கீல்கள் ஆகியவர்கள், அரசாங்கம் கொடுத்திருந்த துப்பாக்கியை தங்கள் தோள்களில் சுமந்தும், தங்கள் இடுப்பில் கத்திகளை அணிந்திருந்த அதேவேளை 1848ன் தொழிலாளர்கள் தங்களுடைய பைகளில் கற்களை நிரப்பிக் கொண்டும் முட்கத்திகளை ஆயுதமாகவும் கொண்டிருந்ததைப்போன்ற நிலையை ரஷ்ய தொழிலாளர்களின் நிலை ஒத்திருக்கவில்லை.

ரஷ்யாவில் புரட்சிக்கு ஆயுதம் கொடுக்கப்பட வேண்டும் என்றால், முதலிலும் முக்கியமாகவும் தொழிலாளர்களுக்கு ஆயுதம் கொடுக்கப்பட வேண்டும் என்று பொருளாகும். இதை அறிந்து, இதற்காக அச்சமுற்ற தாராளவாதிகள் முற்றிலும் ஒரு குடிப்படை வேண்டும் என்ற கருத்தை தவிர்த்துவிட்டனர். பூர்சுவாக்களைப் போலவே, அவர்கள் எவ்வித எதிர்ப்பும் இன்றி தங்களுடைய நிலையை வரம்பிலா அதிகார ஆட்சிக்கு கைவிட்டு சரணடைந்தனர். தொழிலாளர்களுக்கு ஆயுதம் வழங்குவது தவிர்க்கப்படவேண்டும் என்பதற்காகவே பாரிசையும் பிரான்சையும் தீயேர் (Thiers) பிஸ்மார்க்கிடம் அடிபணியச்செய்தார்.

தாராளவாத-ஜனநாயகக் கூட்டணியின் அந்தப் பிரகடனத்தில், அரசியலமைப்பு முறையிலான நாடு என்று அழைக்கப்பட்டிருந்த கருத்தரங்கில், திரு. Dzhivelegov, புரட்சியின் சாத்தியப்பாடுகள் குறித்து விவாதிக்கையில், 'சமுதாயம், தேவைப்படும் நேரத்தில், தன்னுடைய அரசியலமைப்பை பாதுகாப்பதில் உறுதியாக நிற்பதற்கு கட்டாயம் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்' என்று சரியாகவே கூறியுள்ளார். ஆனால், அதன்காரணமாக இதிலிருந்து கிடைக்கும் தர்க்க ரீதியான முடிவு மக்களை ஆயுதபாணியாக்க வேண்டும் என்பதாகும்; எனவே இந்த தாராளவாத தத்துவவியலாளர், இதை தவிர்க்கும் பொருட்டு, 'ஒவ்வொருவரும் ஆயுதமேந்தவேண்டும் என்பது அவசியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்' என்பது 'சேர்த்துக்கொள்ளப்பட வேண்டியது அவசியம்' என்று தெரிவிக்கிறார்.[2] சமுதாயமே எதிர்ப்பை காட்டுவதற்கு தயார் செய்துகொள்ள வேண்டும் என்று கூறுகின்ற அவர், அவ்வாறு எப்படிச் செய்ய முடியும் என்பதை சுட்டிக்காட்டவில்லை. இதில் இருந்து ஏதேனும் முடிவு பெறப்படலாம் என்றால், நம்முடைய ஜனநாயகவாதிகளின் இதயங்களில், எதேச்சதிகாரத்தின் படைகளிடம் இருக்கும் அச்சத்தைக் காட்டிலும், ஆயுதமேந்திய பாட்டாளி வர்க்கத்திடம் கூடுதலான பயம் உள்ளது என்பதே ஆகும்.

அந்தக் காரணத்தினால்தான் புரட்சியை ஆயுதபாணியாக்கும் பணி, அதன் பாரம் முற்றிலுமாக பாட்டாளி வர்க்கத்திடம் விழுகின்றது. 1848ல் பூர்சுவாசியின் கோரிக்கையாக இருந்திருந்த சாதாரண மக்களின் குடிப்படை, ரஷ்யாவில் ஆரம்பத்தில் இருந்தே மக்கள் ஆயுதபாணியாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையாக, எல்லாவற்றிற்கும் மேலாக பாட்டாளி வர்க்கம் ஆயுதபாணியாக்கப்பட வேண்டும் என்று இருந்தது. ரஷ்ய புரட்சியின் விதியானது இந்தக் கேள்வியுடனேயே பிணைந்திருந்தது.

¢footnotes to be added:

ஜாக்கோபினிசம்

ரொபஸ்பியர்

Louis XVI

லஸ்ஸால்

கிளெமென்சு, மில்லராண்ட், பிரியண்ட்

Heine

புரட்சியின் வரலாறு என்ற கேபட்டின் புத்தகம்;

கார்மெனெனுடைய குரோதம் மிக்க வசைப்பாட்டுக்கள்;

Buonarroti உடைய படைப்புக்கள், Babeuf உடைய போதனைகள்


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved