World Socialist Web Site www.wsws.org


Permanent Revolution & Results and Prospects

II. The Towns and Capital

நிரந்தரப் புரட்சி & முடிவுகளும் வாய்ப்புக்களும்

II. நகரங்களும் மூலதனமும்

Back to screen version

நகர்ப்புற ரஷ்யா என்பது மிகச் சமீபத்திய வரலாற்றின் விளைவாகும்; இன்னும் துல்லியமாக கடந்த சில தசாப்தத்தில்தான் தோன்றியவையாகும். 18ம் நூற்றாண்டின் முதல் காற்பகுதியில், முதலாம் பீட்டருடைய ஆட்சிக்கால முடிவில், சிறுநகர மக்கட்தொகை 328,000க்கு சற்றே கூடுதலாக, அதாவது நாட்டின் மொத்த மக்கட் தொகையில் கிட்டத்தட்ட 3 சதவீதமாகத்தான் இருந்தது. இதே நூற்றாண்டின் இறுதியில் இது 1,301,000 என்று மொத்த மக்கட்தொகையில் கிட்டத்தட்ட 4.1 சதவீதமாக உயர்ந்தது. 1812 அளவில், நகர்ப்புற மக்கட்தொகை 1,653,000 என்று உயர்ந்து மொத்த மக்கட் தொகுப்பில் 4.4 சதவீதமாக உயர்ந்தது. 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில்கூட மொத்த தொகையில் 7.8 சதவீதத்திற்கு அதிகமாகாமல் 3,482,000 ஆகத்தான் இருந்தது. இறுதியில் கடைசியாக எடுக்கப்பட்ட கணக்கின்படி (1897) நகரங்களில் இருந்த மக்கட்தொகை, மொத்தத்தில் கிட்டத்தட்ட 13 சதவீதமாக 16,289,000 ஆக இருந்தது.

நகரத்தை நிர்வாகப் பிரிவு என்று எடுத்துக் கொள்ளாமல், ஒரு சமூகப்-பொருளாதார உருவாக்கம் என்று கருதினால், மேலே உள்ள புள்ளி விவரங்கள் நகர்ப்புற வளர்ச்சியின் உண்மையான தோற்றத்தை கொடுக்காது: ரஷ்ய அரசின் வரலாறு, அறிவியல்சாரா வகையிலான காரணங்களுக்காக நகரங்களுக்கு சாசனம் உரிமைகள் கொடுக்கப்பட்டு அல்லது நகரங்களிலிருந்து திருப்பப் பெற்றுக் கொள்ளப்பட்டதுமான பல கணக்கிலடங்கா நிகழ்வுகளை நமக்கு தெரிவிக்கிறது. ஆயினும்கூட, சீர்திருத்தத்திற்குட்பட்ட ரஷ்யாவின் முந்தைய காலத்தில் இந்நகரங்களின் முக்கியத்துவமற்ற நிலையையும், கடந்த தசாப்தத்தில் பெரும் பரபரப்புடன் அவை வளர்ந்த தன்மையையும் இப்புள்ளிவிவரங்கள் அளிக்கின்றன. மிகாய்லோவ்ஸ்கியின் கணக்கீட்டின்படி, 1885ல் இருந்து 1887 வரையிலான காலத்தில் நகர்ப்புற வளர்ச்சி 33.8 சதவிகிதம் என்று ரஷ்ய மக்கட் தொகையின் மொத்தத்திலேயே (15.25 சதவிகிதம்) என்று இருமடங்கிற்கும் மேலான விரிவைக் கண்டது; இது கிராமப்புற மக்கட்தொகையின் வளர்ச்சியை (12.7 சதவிகிதம்) காட்டிலும் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாகும். இத்துடன் தொழிற்துறை கிராமங்களையும், மிகச்சிறு கிராமங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், (விவசாயம் அல்லாத வகையில்) நகர்ப்புற மக்களின் வளர்ச்சி மிகத் தெளிவாகத் தெரிகிறது.

ஆனால், நவீன ரஷ்ய சிறுநகரங்கள் பழைய நகரங்களில் இருந்து அவற்றில் வசிப்போர்களின் எண்ணிக்கை என்பதில் மட்டுமின்றி, அவர்களுடைய சமூக முன்மாதிரியில் இருந்தும் வேறுபட்டுள்ளது: அவை வணிக மற்றும் தொழில்துறை வாழ்க்கையின் மையங்களாகும். நம்முடைய பழைய சிறுநகரங்களில் பெரும்பாலானவை எந்தப் பொருளாதார பங்கையும் அரிதாகவே ஆற்றின; அவை இராணுவ, நிர்வாக மையங்களாகவோ அல்லது கோட்டைகளாகவோ இருந்ததோடு, வசித்து வந்த மக்கள் ஏதேனும் ஒரு வகை அரசு சேவையில் இருந்து, அரசு கருவூல செலவில் வாழ்க்கை நடத்தி வந்தனர்; பொதுவாக பெருநகரம் என்பது, நிர்வாக, இராணுவ, வரி திரட்டும் மையமாகத்தான் இருந்தது.

அரசுப் பணியில் இல்லாத மக்கள், எதிரிகளில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளுவதற்காக, ஒரு சிறுநகரம் அல்லது அதைச் சுற்றியுள்ள இடங்களிற்குள்ளே தங்கியிருக்க தீர்மானித்தபொழுது, தங்களுடைய பழைய விவசாயத் தொடர்புடைய பணிகளை தொடருவதற்கு இந்நிலை சிறிதளவும் குறுக்கீடு செய்யவில்லை. எம். மில்யுகோவின்படி, பழைய ரஷ்யாவில் மிகப் பெரிய நகரமாக இருந்த மாஸ்கோ கூட 'ஓர் அரசரின் கோட்டையாக, அதில் வாழ்ந்து வந்த மக்களில் பெரும்பான்மையோர், அரசரின் கீழ் வேலை அல்லது பரிவாரத்தில் ஒருவர், பாதுகாவலர்கள், வேலையாட்கள் என்று ஏதேனும் ஒரு வகையில் அரண்மனை பணிகளுடன் தொடர்பு கொண்டவர்களாக இருந்தனர். 1701ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கீட்டின்படி மொத்தம் இருந்த 16,000 வீடுகளில், 7,000 குடும்பங்களுக்கு மேற்படாதோர், அதாவது 44 சதவீதம் பேர் குடிபெயர்ந்தவர்களாகவும் கைவினைஞர்களாகவும் இருந்தனர்; இவர்களும் கூட அரசின் புறநகர்ப்பகுதியில் வாழ்ந்து அரண்மனைக்காக வேலை செய்தனர். எஞ்சியிருந்த 9,000 மக்களில் 1,500 பேர் திருச்சபை ஊழியர்களாகவும், ஆளும் சமூகப் பிரிவினை சேர்ந்தவர்களாவும் இருந்தனர்'. இவ்வாறு, ரஷ்ய நகர்ப்புறங்கள், ஐரோப்பிய மத்தியகாலங்களில் கைவினை மற்றும் வணிக சிறுநகரங்கள் ஆகியவற்றில் காணப்பட்டதை போல் இல்லாமல், ஆசிய எதேச்சாதிகார ஆட்சியின் கீழ் இருந்த நகரங்களை போன்றே, நுகர்வோர்கள் என்ற பங்கைத்தான் கொண்டிருந்தனர். இதேகாலத்தில் மேற்கு ஐரோப்பிய சிறுநகரங்கள் வெற்றிகரமான முறையில் கைவினைஞர்கள் கிராமங்களில் வசிக்கும் உரிமை பெற்றிருக்கவில்லை என்ற கோட்பாட்டை வெற்றிகரமாக நிறுவிவிட்டிருந்தனர்; ஆனால், ரஷ்ய சிறுநகரத்தினரோ அத்தகைய இலக்குகளுக்காக பாடுபடவே இல்லை. அப்படியானால் உற்பத்தித் தொழிற்துறையும், கைவினைத் தொழிலும் எங்கிருந்தன? கிராமப்புறத்தில், விவசாயத்துடன் இணைந்திருந்தன.

அரசால் ஆழ்ந்த கொள்ளைக்கு உட்பட்டிருந்து, பொருளாதாரத்தில் தாழ்ந்திருந்த நிலையானது, செல்வக் குவிப்பிற்கோ அல்லது சமூக தொழிற் பிரிவினைக்கோ இடம் அளிக்கவில்லை. மேற்கு ஐரோப்பாவுடன் ஒப்பிடும்போது இருந்த குறுகிய கோடைகாலம் கூடுதலான குளிர்கால ஓய்வுத் தன்மையை கொடுத்திருந்தது. இக்காரணங்களினால் உற்பத்தித்துறை விவசாயத்தில் இருந்து எப்பொழுதுமே பிரிக்கப்படாமல், நகரங்களில் குவிப்பு பெற்றிராமல், கிராமப்புறத்திலேயே விவசாயத்திற்கு துணையாக நிற்கும் ஒரு வேலையாகத்தான் இருந்தது. 19ம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில், முதலாளித்துவ தொழில்துறை பரந்த வகையில் வளர்ச்சியடைய தலைப்பட்டவுடன், அது நகர்ப்புற கைவினைத்தொழிலை எதிர்கொள்ளவில்லை, முக்கியமாக கிராம கைத்தொழில்கள்தாம் போட்டியாக இருந்தன. 'ரஷ்யாவில் அதிக பட்சம் இருந்த ஒன்றரை மில்லியன் ஆலைத் தொழிலாளர்களுக்கு, நான்கு மில்லியனுக்கும் குறையாத விவசாயிகள்தான், தங்களுடைய கிராமங்களிலேயே, உள்ளூர் உற்பத்தியில் ஈடுபட்டிருந்தனர். அதேவேளை அவர்கள் அவர்களது விவசாய தொழில்களை தொடர்ந்து கொண்டிருந்தனர். இந்த வர்க்கத்தில் இருந்துதான் ...ஐரோப்பிய ஆலைகள் எழுச்சியுற்றன; ஆனால் இவை ரஷ்யாவில் ஆலைகளை நிறுவப்பட்ட முறைகளில், ஒரு சிறுபங்கையேனும் கொண்டிருக்கவில்லை' என்று எம். மிலியுகோவ் எழுதியுள்ளார்.

ஆனால், இன்னும் கூடுதலான மக்கட்தொகை பெருக்கமும், அதன் உற்பத்தித் திறனும் சமூக தொழிற் பிரிவினைக்கான அடிப்படையை ஏற்படுத்தின. இயல்பிலேயே இந்த நிலைமை நகர கைவினைகளுக்கும் பொருந்தும். ஆயினும், முன்னேற்றம் அடைந்துள்ள நாடுகளின் அழுத்தத்தின் விளைவாக, இந்த அடிப்படை பெரிய அளவிலான முதலாளித்துவ தொழிற்துறையால் கைப்பற்றப்பட்டது. எனவே, சிறுநகர கைவினைகள் வளர்ச்சியுறுவதற்கான போதிய கால அவகாசத்தை கொண்டிருக்கவில்லை.

ஐரோப்பாவில் ஒரு சிறுநகர மக்கள் தொகையை அமைப்பதற்கு தேவையான முக்கிய உட்கருவாக இருந்த, அதே கூறுகளை உட்கொண்டிருந்த, நான்கு மில்லியன் கிராமப்புற கைவினைஞர்களும், கைவினைக் கழகங்களில் எஜமானர்களாக அல்லது வேலையாட்களாக நுழைந்தனர். மற்றும் பின்னர் மேலும் மேலும் தங்களைத் தாங்களே கைவினைக் கழகங்களுக்கு புறத்தே விடப்பட்டவராக கண்டுகொண்டனர். இம்மியும் பிசகாமல் இதே கைவினைஞர் வர்க்கம்தான் மாபெரும் புரட்சியின்போது பாரிசின் புரட்சிகர பகுதிகளில் இருந்த மக்களில் பெரும்பாலானவர்களாக இருந்தார்கள். இந்த உண்மை மட்டுமே, அதாவது எமது நகர கைவினைஞர்களின் முக்கியத்துவம் அற்ற தன்மை, நம்முடைய புரட்சிக்கு கணக்கிலடங்காத விளைவுகளைக் கொடுத்தது.

தற்கால நகரத்தின் அடிப்படையான பொருளாதார சிறப்பியல்பு அது நாட்டுப்புறம் வழங்கும் மூலப்பொருட்களை கொண்டு தன்னுடைய தொழில்களில் ஈடுபடுகின்றது என்ற உண்மையில் இருக்கிறது. இந்தக் காரணத்தால் போக்குவரத்து நிலைமைகள் இதில் முக்கிய பங்கை கொண்டுள்ளன. புகையிரத போக்குவரத்து அறிமுகப்படுத்தப்பட்டதால் மட்டுமே அத்தகைய பெருந்திரளான மக்கள் செறிந்து வாழ்வதை சாத்தியமாக்கியவாறு நகர்ப்புறத்திற்கான அளிப்பின் வளங்களை அந்த அளவு விரிவுபடுத்த முடிந்தது. பெரும் ஆலைத் தொழிலின் வளர்ச்சியிலிருந்து மக்கள் தொகையினர் செறிந்து வாழ்வதற்கான அவசியம் எழுந்தது. குறைந்த பட்சம் சிறிதளவேனும் பொருளாதார, அரசியல் முக்கியத்துவத்தைக் கொண்டிருந்த நவீனகால நகரங்களில் இருந்த மக்கட் தொகையின் உட்கரு, கடுமையாக வேறுபடுத்தப்பட்டிருந்த வர்க்கமான கூலித் தொழிலாளர் ஆவர். மாபெரும் பிரெஞ்சுப் புரட்சியின்போது அதிகமாக இன்னும் கணிசமான அளவு அறிந்திருக்கப்படாத இந்த வர்க்கம்தான் எமது புரட்சியில் ஒரு மிக முக்கியமான பங்கை ஆற்ற விதிக்கப்பட்டிருந்தது.

ஆலைத் தொழில் முறை, பாட்டாளி வர்க்கத்தை முன்னணிக்கு கொண்டு வருவதோடு மட்டும் அல்லாமல் முதலாளித்துவ ஜனநாயகத்தின் காலடியின் கீழிருந்த தளத்தையும் கூட தகர்த்து விடுகிறது. முந்தைய புரட்சிகளில் பிந்தையது கைவினைஞர்கள், சிறு கடைக்காரர்கள் போன்ற நகர்ப்புற குட்டிமுதலாளித்துவ வர்க்கத்தில் அதன் ஆதரவைப் பெற்றிருந்தது.

ரஷ்ய பாட்டாளி வர்க்கத்தால் விகிதத் தொடர்பின்றி அரசியலில் பெரும்பங்கு ஆற்றப்பட்டதற்கு மற்றொரு காரணம் ரஷ்ய மூலதனம் அதிகமான அளவு அந்நிய மூலத்தை கொண்டிருந்தது. காவுட்ஸ்கியின் கருத்தின்படி, பாட்டாளி வர்க்கத்தின் எண்ணிக்கை, வலிமை மற்றும் செல்வாக்கு ஆகியவற்றின் வளர்ச்சியில் விளைந்த உண்மை முதலாளித்துவ தாராளவாதத்தின் வளர்ச்சிக்கு அளவுப் பொருத்தமற்றதாக இருந்தது.

நாம் முன்பே கூறியபடி, ரஷ்யாவில் முதலாளித்துவமானது கைத்தொழில் முறையில் இருந்து வளர்ச்சி பெறவில்லை. அது ஐரோப்பாவின் பொருளாதார பண்பாடு அனைத்தையும் தனக்கு பின்னே அணிவகுத்து வைத்துக் கொண்டு, தனக்கு உடனடியான போட்டியாளராக உதவியற்ற கிராம கைவினைஞர்களையோ அல்லது பரிதாபத்திற்குரிய நகர்ப்புற கைவினைஞர்களையோ முன்னே எதிர் கொண்டு ரஷ்யாவை வென்றது. இதில் அது தனக்கு துணையாக அரை பிச்சைக்காரர்களாகிவிட்ட விவசாயிகளை உழைப்புச் சக்தி உடைய ஒரு களஞ்சியமாக கொண்டிருந்தது. நாட்டை முதலாளித்துவத்தின் தளைகளில் பிணைத்து வைப்பதற்கு வரம்பிலா முடியரசு பல வகையிலும் உதவியிருந்தது.

இது, முதலாவதாக ரஷ்ய விவசாயியை உலகப் பங்குச் சந்தைக்கு வரி செலுத்துபவராக மாற்றியது. நாட்டிற்குள் மூலதனம் இல்லாமல் இருந்த நிலையும், அரசாங்கத்திற்கு இடைவிடாமல் தேவைப்பட்டிருந்த நிதியினாலும், கடும் வட்டி உடைய வெளிநாட்டுக் கடன்களுக்கான தளத்தை அது உருவாக்கியது. இரண்டாம் கத்தரினுடைய ஆட்சிக் காலத்தில் இருந்து விட் மற்றும் துர்நாவோ மந்திரிசபை வரையில், ஆம்ஸ்டெர்டாம், லண்டன், பேர்லின், பாரிஸ் ஆகிய நகரங்களில் இருந்த வங்கி நிதியத்தினர் சர்வாதிகாரத்தை மகத்தான பங்குச் சந்தை ஊககளமாக மாற்றும் முயற்சியில் முறையாக ஈடுபட்டிருந்தனர். கணிசமான உள்நாட்டுக் கடன்கள் என்று அழைக்கப்படும் கடன்கள், அதாவது உள்நாட்டு நிதி அமைப்பு துறைகளின் மூலம் பெறப்படும் கடன்கள் எந்த விதத்திலும் வெளிநாட்டில் இருந்து பெறப்படும் கடன்களில் இருந்து வேறுபடாத தன்மையைத்தான் பெற்றிருந்தன; ஏனென்றால் உண்மையில் அவை வெளிநாட்டு முதலாளிகளிடம் இருந்து பெறப்பட்டிருந்த கடன்தொகைகள்தாம். மிகப் பெரிய வரிவிதிப்புக்களின் மூலம் விவசாயிகளை பாட்டாளி வர்க்கமயமாக்கியும், திவாலாக்கியும் விட்ட முழுமுதல் முடியரசு ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் இருந்து பெற்ற மில்லியன்களை படையினர், போர்க் கப்பல்கள், சிறைச்சாலைகள், இரயில்வேக்கள் என்று உருமாற்றம் செய்தது. இந்தச் செலவில் பெரும்பகுதி, பொருளாதார ரீதியான பார்வையில் முற்றிலும் உற்பத்தித் தன்மையைக் கொண்டிருக்கவில்லை. தேசிய உற்பத்தியின் பெரும் பகுதி வெளிநாட்டிற்கு வட்டி என்ற வடிவில் அனுப்பப்பட்டது மற்றும் ஐரோப்பாவின் நிதிய மேல்தட்டினர் ஆட்சியை வளப்படுத்தியது மற்றும் வலுப்படுத்தியது.

கடந்த பத்து ஆண்டுகளில் பாராளுமன்ற முறை இருக்கும் நாடுகளில் ஐரோப்பிய நிதிய முதலாளித்துவ வர்க்கம் தன்னுடைய அரசியல் செல்வாக்கை தடையின்றி வளர்த்திருந்து, வணிக மற்றும் தொழிற்துறை முதலாளிகளை பின்னுக்குத்தள்ளி இருந்தது. ஜாரிச அரசாங்கத்தை அதன் பணியாளராக மாற்றியது, அது உண்மை; என்றாலும், அது ரஷ்யாவிற்குள்ளேயே முதலாளித்துவ முறையிலான எதிர்ப்பின் ஒரு பிணைந்திருக்கும் பகுதியாக வரவேண்டும் என்ற விருப்பத்தை கொள்ளவில்லை; அவ்வாறு அது வந்திருக்கவும் முடியாது. டச்சு நாட்டு வங்கித்துறை தலைவர்களான Hoppe and Co. ஜார் மன்னர் போலுக்கு 1798ல் கடன்கள் வழங்குவதற்கான நிபந்தனைகளில், "அரசியல் சூழ்நிலைகள் எத்தகைய மாறுதல்களுக்கு உட்பட்டிருந்தாலும், வட்டி கட்டப்பட்டாக வேண்டும்" என்று முன்வைத்திருந்த கோட்பாடுகளைத்தான், தன்னுடைய பரிவுணர்வுகளிலும், எதிர்ப்பு முறைகளிலும் இது வழிகாட்டிநெறியாக கொண்டிருந்து கடைபிடித்து வந்தது. இன்னும் நேரடியான முறையில் தடையற்ற முடியாட்சியை தக்கவைத்துக் கொள்ளுவதற்கு ஐரோப்பிய பங்குச் சந்தை அக்கறையை கொண்டிருந்தது. ஏனெனில் வேறு எந்த அரசாங்கமும் இந்த அளவிற்கு வட்டி வசூலிப்பதற்கு ஆதரவை தந்திருக்காது. ஆயினும், ரஷ்யாவுக்குள் ஐரோப்பிய மூலதனம் இறக்குமதி செய்யப்பட்டதற்கு அரசு கடன்கள் மட்டும் ஒரு வழிமுறையாக இருக்கவில்லை. செலுத்தும் பணமாக ரஷ்ய அரசின் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் பெரும் பகுதியை உறிஞ்சிய இதே பணம், ரஷ்ய பகுதிகளுக்குள் வணிக-தொழிற்துறை மூலதனம் என்ற வடிவில் திருப்பி அனுப்பப்பட்டு, நாட்டில் இன்னும் தொடப்பட்டிராத இயற்கை வளங்களால் ஈர்க்கப்பட்டு, அதிலும் குறிப்பாக இதுவரை எந்த எதிர்ப்பையும் வெளிப்படுத்த பழக்கப்பட்டிருந்திராத மற்றும் அமைப்பு ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்டிராத உழைப்புச் சக்தியாலும் ஈர்க்கப்பட்டது; 1893-99 நமது தொழில்துறை செழுமையின் பிந்தைய காலகட்டம், ஐரோப்பிய மூலதனம் இவ்வாறு உக்கிரமாகக் குடிபெயர்ந்த காலகட்டமும் ஆகும். முன்பு பெரும்பாலும் ஐரோப்பிய மூலதனம் என்னும் வகையில் பிரான்சிலும், பெல்ஜியத்திலும் பாராளுமன்ற அரசியல் அதிகாரத்தை வென்ற இந்த மூலதனம்தான் ரஷ்யாவில் தொழிலாள வர்க்கத்தை திரட்டியது.

இந்தப் பின்தங்கிய நாட்டை பொருளாதாரத்தினால் அடிமைப்படுத்திவிட்டதன் மூலம், ஐரோப்பிய மூலதனம் அதன் மூல நாடுகளை கடக்கவேண்டி இருந்த இடைநிலை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார கட்டங்களின் ஒட்டுமொத்த தொடர்களிலும் உற்பத்தி மற்றும் செய்தித் தொடர்பு வழிமுறைகளின் அதன் பிரதான கிளைகளை திட்டமிட்டது. ஆனால் அதன் பொருளாதார ஆதிக்கத்தை மேற்கொள்ளும் பாதையில் மிகக் குறைவான தடைகளை அது சந்தித்ததானது, அதன் அரசியல் பங்கில் அதிக முக்கியத்துவமற்றதை நிரூபிக்க இருந்தது.

மத்தியகாலத்து மூன்றாம் சமூகப் பிரிவு (புரட்சிக்கு முந்திய பிரெஞ்சு பூர்சுவாசி) என்பதில் இருந்து ஐரோப்பிய பூர்சுவாசி வளர்ச்சியுற்றிருந்தது. முதல் இரண்டு சமூகப் பிரிவுகள் ஏற்படுத்தியிருந்த கொள்ளை மற்றும் வன்முறை இவற்றிற்கு எதிரான எதிர்ப்பை, தானே சுரண்ட ஆவல் கொண்டிருந்த மக்களின் நலன்களின் பெயராலேயே எழுப்பியது. மத்திய காலங்களின் முடியாட்சி-சமூகப் பிரிவுகள் என்பது அதிகாரத்துவ வரம்பிலா ஆட்சி என்ற அதன் மாற்றுப்போக்கில், மதகுருமார்கள் மற்றும் பிரபுக்களின் பாசாங்குகளுக்கு எதிரான அதன் போராட்டத்தில் நகரங்களில் இருந்த மக்களுடைய ஆதரவில் தங்கியிருந்தது. இதனை முதலாளித்துவ வர்க்கம் தன்னுடைய சொந்த அரசியல் உயர்விற்கு பயன்படுத்தியது. இவ்வாறு, அதிகாரத்துவத்தின் வரம்பிலா தன்மையும், முதலாளித்துவ வர்க்கத்தின் வளர்ச்சியும் ஒரே நேரத்தில் நிகழ்ந்தன; இவை இரண்டும் 1789ல் மோதலுக்கு வந்தபொழுது, முதலாளித்துவ வர்க்கம் நாடு முழுவதும் அதற்குப் பின்னர் நிற்பதாக நிரூபித்தது.

ரஷ்யாவில் வரம்பிலா அதிகார ஆட்சி மேற்கத்திய நாடுகளின் நேரடி அழுத்தத்தில் வளர்ச்சியுற்றது. இங்குள்ள பொருளாதார நிலைமைகள் ஒரு முதலாளித்துவ பூர்சுவா தோன்றுவதை அனுமதிப்பதற்கு மிகமுன்னரே, அந்நாடுகளில் இருந்த அரசாங்க மற்றும் நிர்வாக வழிவகைகள் இங்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டன. ரஷ்ய நகரங்கள் பொருளாதாரத்தில் சிறிதும் முக்கியத்துவமற்ற பங்கை கொண்டிருந்த காலகட்டத்தில், இந்த அரசியல் முறையோ மிகப் பெரிய நிலைத்த இராணுவத்தையும், ஒரு மையப்படுத்தப்பட்ட அதிகாரத்துவ மற்றும் நிதிய அமைப்புக்களையும் கொண்டிருந்ததோடு ஐரோப்பிய வங்கிகளிடம் விடுவிக்க முடியாத கடனுக்குள் நுழைந்து விட்டிருந்தது.

மேற்கில் இருந்து வரம்பிலா அதிகார ஆட்சியின் நேரடி ஒத்துழைப்புடன் மூலதனம் நுழைந்ததுடன், ஒரு குறுகிய காலத்தில் ஏராளமான பழைய, பிற்பட்டிருந்த சிறுநகரங்களை வணிக, தொழில்துறை மையங்களாக்கி, முன்பு மக்கட் தொகை அதிகம் இருந்திராத இடங்களில் ஒரு குறுகிய காலத்தில் ஏராளமான வணிக, தொழில் நகரங்களையும் தோற்றுவித்தது. இந்த மூலதனம் அடிக்கடி தனிமனிதரைச் சுட்டாத பெரிய பங்குக் கம்பெனிகளின் வடிவில் தோன்றியது. 1893-1902 என்ற தொழிற்துறை செழுமைக் காலகட்டத்தில், மொத்தப் பங்கு மூலதனம் இரண்டு மில்லியார்ட் ரூபிள்களை அடைந்தது; 1854-1892 காலத்தில் இது 900 மில்லியன்கள்தான் உயர்ந்திருந்தது. அதேநேரத்தில், மிக பாரியளவான மக்கட் திரளாக தான் குவிந்திருப்பதை பாட்டாளி வர்க்கம் உடனடியாக உணர்ந்தது; அதேவேளை தனக்கும் சர்வாதிகார ஆட்சிக்கும் இடையே எண்ணிக்கையில் குறைவான சாதாரண 'மக்களிடம்' இருந்து பிரிந்து, தனிமைப்படுத்தப்பட்டிருந்த, பகுதி-வெளிநாட்டினரான, எந்த வரலாற்று ரீதியான மரபுகளும் இல்லாத, இலாபம் என்ற பேராசையினால் மட்டுமே உந்தப்பட்டிருந்த ஒரு முதலாளித்துவ வர்க்கம் நிற்பதையும் கண்டது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved