The Permanent Revolution
WSWS : Tamil
Font download
 
º¡Â¬ó 1
º¡Â¬ó 2
܈Fò£ò‹ 1
܈Fò£ò‹ 2
܈Fò£ò‹ 3
܈Fò£ò‹ 4
܈Fò£ò‹ 5
܈Fò£ò‹ 6
܈Fò£ò‹ 7
܈Fò£ò‹ 8
܈Fò£ò‹ 9
܈Fò£ò‹ 10

 

 

 

அத்தியாயம் 8

மார்க்சிசத்தில் இருந்து அமைதிவாதத்திற்கு

Use this version to print | Send feedback

மிகப் பயமுறுத்தும் அறிகுறியாக, றடெக்கினது கட்டுரையில் ஒரு பந்தி கட்டாயமாக எங்களுக்கு விருப்பமான மைய விடயத்திலிருந்து வேறாக நிற்கிறது. இருந்தபோதும் அது றடெக் ஒரே சீராக இன்றைய மையவாத தத்துவத்திற்கு திரிபடைந்து போனதோடு நெருங்கிய தொடர்புடையது. அவர் மறைமுகமாக முன்னெடுக்கும் தனியொரு நாட்டில் சோசலிச தத்துவத்தை பற்றி நான் கூறுகிறேன். றடெக்கின் தவறுகளின் 'பக்க நிலைப்பாடு' அதன் மேலதிக அபிவிருத்தியில் ஏனைய எல்லா வேறுபாடுகளையும் விஞ்சி நிற்பதால், ஒருவர் இதனைக் கட்டாயம் ஊன்றிக் கவனிக்க வேண்டும், அவற்றின் அளவு நிச்சயமாக பண்பாக மாறியிருக்கிறது என்று காட்டுகிறது.

புரட்சியை அச்சுறுத்தும் ஆபத்துக்களை விவாதிக்கும்பொழுது, றடெக் எழுதுகிறார், "ரஷ்யாவில் 1905ம் ஆண்டு பொருளாதார அபிவிருத்தி மட்டத்திற்கேற்ப இந்த [பாட்டாளி வர்க்க] சர்வாதிகாரத்தை மேற்கு ஐரோப்பிய பாட்டாளி வர்க்கம் உதவிக்கு வந்தால் மாத்திரம் தொடர்ந்து பாதுகாக்கலாம் என்ற உண்மையைப் பற்றி லெனின் ...நனவாக இருந்தார் என்று. (எனது அழுத்தம்-ட்ரொட்ஸ்கி)

ஒரு தவறையடுத்து மற்றத் தவறு எல்லாவற்றிற்கும் மேலாக, வரலாற்று முன்நோக்கை மிக மோசமாக சீர்கெடுத்தது. உண்மையில் லெனின் ஐரோப்பாவின் சோசலிசப் புரட்சியில்லாமல், ரஷ்யாவில் ஜனநாயக சர்வாதிகாரத்தை (பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையல்ல) காப்பாற்ற முடியாதென்று, ஒரு முறை மாத்திரமல்ல பலமுறை சொன்னார். இந்த சிந்தனையானது ஒரு சிவந்த நூல் போல் 1906 ஸ்டொக்லோம் கட்சிக் காங்கிரஸ் நாட்களின் லெனினது அனைத்துக் கட்டுரைகளிலும் சொற்பொழிவுகளிலும் ஊடுருவி நின்றது (தேசியமயமாக்கல் போன்ற பிரச்சனைகளில் பிளக்கானேவிற்கு எதிரான தர்க்கமாக). அந்த காலங்களில் லெனின் மேற்கு ஐரோப்பாவில் சோசலிசப் புரட்சி நடைபெறுவதற்கு முன்னதாக ரஷ்யாவில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற பிரச்சனையை கிளப்பவேயில்லை. ஆனால் இந்த கணத்தின் மிக முக்கியமான பிரச்சனை இங்கே நிற்கவில்லை. '1905-ல் ரஷ்யாவின் பொருளாதார அபிவிருத்தி மட்டம்' என்பதன் அர்த்தமென்ன? 1917-ல் அது எந்த மட்டத்தில் இருந்தது? இந்த மட்டங்களின் வித்தியாசத்தில் தான் தனியொரு நாட்டில் சோசலிச தத்துவம் எழுந்தது. கம்யூனிச அகிலத்தின் வேலைத்திட்டமானது, முழு பூகோளத்தையும் சுயாதீனமாக சோசலிசத்தை கட்டியெழுப்ப போதிய மட்டத்தில் உள்ள நாடுகளாகவும் மற்றயவை அந்த மட்டத்தில் இல்லாத நாடுகளாகவும் பிரித்து, அதிலிருந்து உருவாக்கிய புரட்சிகர மூலோபாயங்கள் ஒரு தொகை உதவாத முட்டுச் சந்துகளாகும். பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் அதிகாரத்திற்கு பொருளாதார மட்ட வித்தியாசங்கள் சந்தேகத்திற்கிடமின்றி மிக முக்கியமான காரணியாகும். 1905-ல் நாம் எந்த காரணங்களால் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கு உயர முடியாது போனதோ அந்த காரணங்களாலேயே ஜனநாயக சர்வாதிகாரத்திற்கும் உயர முடியாமல் போனது. 1917-ல் நாம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிர்மாணித்தோம். அது ஜனநாயக சர்வாதிகாரத்தை விழுங்கிவிட்டது. 1917-ன் பொருளாதார அபிவிருத்தி மட்டம் 1905-ன் பொருளாதார மட்டம் போன்றதே. ஆனால் மேற்கு ஐரோப்பிய பாட்டாளி வர்க்கம் தகுந்த சந்தர்ப்பத்தில் உதவி செய்தால் மாத்திரந்தான் இந்த சர்வாதிகாரம் தன்னைத்தானே பராமரித்து சோசலிசமாக வளரும். கட்டாயமாக இந்த தகுந்த சந்தர்ப்பத்தை 'முன்னதாகவே' கணிக்க முடியாது. இது அபிவிருத்தியினோடும் போராட்டத்தினோடும் தீர்மானிக்கக்கூடிய ஒன்று. சர்வதேச சக்திகளின் உறவுகளே தீர்மானகரமானதும் முடிவானதும் என்ற அடிப்படை பிரச்சனைக்கு எதிராக ரஷ்யாவின் 1905-லும் 1917-லும் அபிவிருத்தி வித்தியாசங்கள் நிறுத்தப்படுகின்றது. அவை அவைகளுக்குள்ளே முக்கியமாக இருந்தபோதும் அவை இரண்டாந்தர காரணியாகும்.

இந்த தெளிவற்ற வித்தியாசமான மட்டம் என்பதையிட்டு றடெக் தானே திருப்தி அடையவில்லை. லெனின் காட்டிய புரட்சியின் உட்பிரச்சனைகளுக்கும் உலக பிரச்சனைகளுக்கும் உள்ள தொடர்புகளை சுட்டிக்காட்டிய பின்பு (நல்ல வேளையாக) றடெக் மேலும் சொல்கிறார்:

"ரஷ்யாவில் சோசலிச சர்வாதிகாரத்தை பராமரிப்பது என்பதற்கும் மேற்கு ஐரோப்பிய பாட்டாளி வர்க்கத்திலிருந்து உதவி வருவது என்ற இரண்டுக்கும் உள்ள தொடர்பு பற்றிய கருத்துருவை லெனின் கூர்மைப்படுத்தி சொல்லவில்லை. அதாவது ஏற்கனவே வெற்றியடைந்த மேற்கு ஐரோப்பிய பாட்டாளி வர்க்கத்தின் உதவி, அதாவது அது அரசு உதவியாகக் கட்டாயம் இருக்க வேண்டும் என்று ட்ரொட்ஸ்கியின் முறைப்படுத்தலில் அளவுக்திகமாய் கூர்மைப்படுத்தி சொன்னதுபோல லெனின் சொல்லவில்லை." (அழுத்தம் என்னுடையது-ட்ரொட்ஸ்கி)

உண்மையாக இந்த வரிகளை வாசிக்கும்பொழுது என்னால் எனது கண்களை நம்பமுடியவில்லை. இழிபாசாங்கினரின் ஆயுதக்கிடங்கிலிருந்து எடுத்த இந்த உதவாக்கரை ஆயுதம் என்னத்தை சாதிப்பதற்காக றடெக்கிற்கு தேவைப்பட்டது? இந்த பழைய கள்ளை புதிய மொந்தையில் கொடுக்கும் ஸ்ராலினிச அற்பங்கள் எங்களுக்கு எப்பொழுதும் பழக்கமானவைதான். எல்லாவற்றிற்கும் மேலாக லெனினினது அடிப்படைப் பாதையிலுள்ள முக்கியமான அடிச்சுவடுகள் பற்றி றடெக்கிற்கு அற்ப அறிவே உண்டென்று அந்த மேற்கோள் காட்டும். ஸ்ராலினைப் போல் அல்லாமல் லெனின் பாட்டாளி வர்க்கத்தால் அதிகாரம் கைப்பற்றப்படுவதுடன் முதலாளித்துவ ஆட்சிகளின் மேலான ஐரோப்பிய பாட்டாளி வர்க்கத்தினது அழுத்தத்தை ஒருபோதும் வேறுபாட்டைக்காட்ட ஒப்பிடாதது மாத்திரமல்ல, மாறாக அவர் வெளியிலிருந்து புரட்சிகர உதவி கிடைக்க வேண்டியதை என்னிலும் பார்க்க மேலாக முறைப்படுத்தியிருந்தார். ஐரோப்பாவிலே சோசலிசப் புரட்சி இல்லாமல் நாங்கள் ஜனநாயகத்தை பத்திரப்படுத்தி வைக்க முடியாதென்று (ஜனநாயகப் புரட்சியைக்கூட!) முதலாவது புரட்சி சகாப்தத்திலே, லெனின் ஓய்வு ஒழிச்சலின்றி திருப்பித் திருப்பிச் சொன்னார். பொதுவாகச் சொல்வோமானால் 1917-1918-களிலும் அதன் பின்பும் லெனினால் எங்கள் புரட்சியின் தலைவிதியைப் பற்றி எப்படியென்றாலும் ஐரோப்பாவிலே தொடங்கிய சோசலிசப் புரட்சியோடு தொடர்பில்லாமல் மதிப்பிடவில்லை மற்றும் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. அவர் இதை வெளிப்படையாகவே அடித்துக் கூறினார். உதாரணமாக "ஜேர்மனியிலே புரட்சி வெல்லாவிடில் நாங்கள் அழிந்து போவோம்" என்று அவர் இதை 1918-ல் சொன்னார், அதாவது 1905-ன் 'பொருளாதார மட்டத்தோடு' அல்ல; அவரது எண்ணத்திலே எதிர்கால தசாப்தங்களை கொள்ளவில்லை, உடனடியாக முன்னுள்ள காலத்தை கருத்திற் கொண்டுதான் சொன்னார். அவை மாதங்கள் இல்லையென்றால், சில வருடங்கள் சம்பந்தப்பட்டவையாகும்.

லெனின் பலடசின் தடவை பிரகடனப்படுத்தினார்: நாங்கள் தாக்குப் பிடித்ததன் காரணம் என்னவென்றால், அதிர்ஷ்டவசமான சூழ்நிலைமைகளின் சேர்மானங்கள் எங்களை சர்வதேச ஏகாதிபத்தியத்திடமிருந்து சொற்பகாலம் பாதுகாத்தன. (சொற்ப காலம்! - ட்ரொட்ஸ்கி) இன்னும் மேலே: "சர்வதேச ஏகாதிபத்தியம் எப்படியென்றாலும் எந்த சூழ்நிலைமைகளுக்கு உள்ளும் சோவியத் குடியரசோடு அக்கமும் பக்கமுமாக வாழ மாட்டாது... முட்டி மோதல்கள் இங்கே தவிர்க்க முடியாதன." அப்படியென்றால் முடிவென்ன? அது பாட்டாளி வர்க்கத்தின் 'அழுத்தத்தில்' அமைதிவாத நம்பிக்கையா அன்றேல் முதலாளித்துவ வர்க்கத்தை 'நடுநிலைப்படுத்தலில்' அமைதிவாத நம்பிக்கையா? இல்லை. முடிவு இப்படிச் சொல்கிறது: 'இங்கேதான் ரஷ்ய புரட்சியின் மாபெரும் கஷ்டம் இருக்கிறது. சர்வதேச புரட்சியை உடனடியாக கோரவேண்டிய அத்தியாவசியம் இருக்கிறது.'1 எப்பொழுது இப்படி சொல்லப்பட்டது எழுதப்பட்டது? 1905-ல் புரட்சியை நசுக்குமாறு முதலாம் நிக்கோலா இரண்டாம் வில்ஹெல்மோடு பேச்சுவார்த்தை நடத்திய பொழுதல்ல மற்றும் நான் கூர்மையான சூத்திரத்தை பிரயோகித்த பொழுதல்ல, ஆனால் 1918-ல், 1919-ல் தொடர்ந்த வருடங்களில்.

இப்படித்தான் லெனின் சொன்னார் கம்யூனிச அகிலத்தின் மூன்றாம் காங்கிரசை திரும்பிப் பாருங்கள்.

"இது எங்களுக்கு தெளிவாக விளங்கும். சர்வதேச உலகப் புரட்சியின் வெற்றியின் ஆதரவு இல்லாமல் (ரஷ்யாவில் - ட்ரொட்ஸ்கி) பாட்டாளி வர்க்கப் புரட்சி முடியாத காரியமாகும். புரட்சிக்கு முன்பும் ஏன் அதற்கு பின்பும் கூட நாம் எண்ணினோம். முதலாளித்துவம் அபிவிருத்தியடைந்த நாடுகளில் உடனடியாக, குறைந்தபட்சம் வெகுசீக்கிரத்திலாவது புரட்சி வெடிக்க வேண்டும். அல்லாவிடில் நாம் அழிந்துவிடுவோம். இந்த நம்பிக்கை எப்படியிருந்தாலும், எல்லா நிலைமைக்குள்ளும் சோவியத் அமைப்பை பாதுகாக்க எவ்வளவு செய்ய முடியுமோ அவ்வளவையும் செய்தோம். என்ன வந்தாலும் சரி. ஏனெனில் நாங்கள் எங்களுக்காக மட்டும் பாடுபடவில்லை. சர்வதேச புரட்சிக்காகவும் வேலைசெய்து கொண்டிருந்தோம் என்பதை அறிவோம். எங்களுக்கு தெரிந்திருந்த இந்த விஷயத்தை நாங்கள் திடமாக ஏற்றுக்கொண்ட இந்த விஷயத்தை அக்டோபர் புரட்சிக்கு முன்பும், புரட்சி நடந்த உடனடிக் காலங்களிலும் பிரேஸ்ட்-லிற்றோவ்ஸ்க் (Brest-Litovsk) உடன்படிக்கையில் நாங்கள் கையெழுத்திட்ட நாட்களிலும் திருப்பித் திருப்பிச் சொன்னோம். அதைப்பற்றி பொதுவாகக் கூறுவோமானால், அது சரியானது. ஆயினும், உண்மையை சொல்லப்போனால் நாங்கள் எதிர்பார்த்த மாதிரி சம்பவங்கள் நேர்கோட்டில் செல்லவில்லை.' (கம்யூனிச அகிலத்தின் மூன்றாம் காங்கிரசின் அறிக்கை. ரஷ்ய பதிப்பு பக்கம் 354) [ஜூலை 5, 1921, லெனினது பேச்சு மொத்தப் படைப்பு 32, பக்கம் 456]

1921-ல் இருந்து நானும் லெனினும் 1917-1919-களில் எதிர்பார்த்தது போன்று இயக்கம் நேர்கோட்டில் செல்லவில்லை (1905-ல் மாத்திரமல்ல). இருந்தபோதும் இது தொழிலாளர் அரசுக்கும் முதலாளித்துவ உலகத்திற்கும் இடையேயுள்ள சமரசப்படுத்த முடியாத முரண்பாட்டுக் கோட்டினோடு அபிவிருத்தியடைந்தது. இரண்டில் ஒன்று அழிய வேண்டும்! மேற்கிலே பாட்டாளி வர்க்கப் புரட்சி வெற்றிக்கு அபிவிருத்தியடைந்தால் மாத்திரம் தான் தொழிலாளர் அரசு மரண ஆபத்திலிருந்து இராணுவ ரீதியில் மாத்திரமல்ல பொருளாதார ரீதியிலும் பாதுகாக்க முடியும். இந்த பிரச்சனையில் லெனினது நிலைப்பாடும் எனது நிலைப்பாடும் வேறு வேறான இரண்டு நிலைப்பாடுகள் என்று கண்டுபிடிக்க முயற்சிப்பது தத்துவார்த்த ஒழுங்கின்மையின் உச்சமாகும். குறைந்தபட்சம் லெனினை திருப்பி வாசியுங்கள், லெனினை அவதூறு செய்யாதீர்கள், ஸ்ராலினிச ஊசிப்போன கூழை எங்களுக்கு ஊட்டாதிர்கள்!.

ஆனால் கீழ்நோக்கி வேகமாய பாய்வது இங்கோடு நிற்கவில்லை. லெனின் உலகப் பாட்டாளி வர்க்கத்தின் "எளிய" (சாரம்சத்தில், சீர்திருத்தவாத, புர்செல்லியன் -றிuக்ஷீநீமீறீறீவீணீஸீ) உதவியை போதியளவு எண்ணிப்பார்த்தார், அதேவேளை ட்ரொட்ஸ்கியோ தனித்து அரசு உதவியை, அதாவது புரட்சிகர உதவியை "மிகைப்படுத்திக் கோரினார்" என்ற கதையை றடெக் கண்டுபிடித்த பின்பு, மேலும் தொடர்கின்றார்.

"இந்த புள்ளியில் கூட லெனின் சரியென்று அனுபவங்கள் காட்டியுள்ளன. ஐரோப்பிய பாட்டாளி வர்க்கம் இன்று ஆட்சியை கைப்பற்றக் கூடிய நிலையில் இல்லை. இருந்தபோதும் அது எங்களுக்கு எதிராக உலக முதலாளித்துவ வர்க்கம் அதிகமான சக்திகளை ஈடுபடுத்தவிடாமல் தடுப்பதற்கு ஏற்ற பலமுள்ளதாக இருக்கிறது. அதன்மூலம் சோவியத் அதிகாரத்தை பாதுகாக்க அது உதவியது. முதலாளித்துவ உலகத்தினுள்ளேயே உள்ள முரண்பாடுகளுடன் சேர்ந்து தொழிலாள வர்க்க இயக்கம் பற்றிய அச்சம், முதலாளித்துவ தலையீடு முடிவுக்கு வந்த நாட்களில் இருந்து எட்டு வருட காலங்களின்பொழுது சமாதானத்தை உத்தரவாதம் செய்த பிரதான சக்தியாக இருந்தது."

இந்த உரை, எங்கள் காலத்து இலக்கிய காரியஸ்த்தர்களின் பின்நிலைமைகளுக்கு எதிரான சொந்தப்படைப்பாக ஒளிராத போதும், வரலாற்றுக் காலக்குளறுபடி, அரசியற் குழப்பம் மற்றும் படுமோசமான கொள்கை தவறுகளோடான அதன் சேர்க்கைக்காக பார்த்தாலும் பெறுமதியானதாகும்.

றடெக்கின் சொற்களில் இருந்து, 1905-ல் லெனின் தனது இரண்டு தந்திரோபாயங்கள் என்ற குறுநூலில் (றடெக் குறிப்புரைக்கும் புத்தகம் இது ஒன்றுதான்) 1917-ன் பின்பு அரசுகளுக்கும் வர்க்கங்களுக்கும் இடையேயுள்ள உறவுகளினால் எங்களுக்கு எதிரான பெரிய அளவிலான இராணுவ நடவடிக்கையின் சாத்தியம் நீண்ட நாட்களுக்கு விலக்கி வைக்கப்படக்கூடும் என்று முன்கூட்டியே கூறினார் என்று தொடர்கிறது. இதற்கு மாறுபட்டதன்மையில், ட்ரொட்ஸ்கி 1905-ல் "ஏகாதிபத்திய யுத்தத்திற்கு பின்பு என்ன மாதிரியான சூழ்நிலை நிலவும் என்று முன்கூட்டியே காணவில்லை. ஆனால் தனித்து அந்த நாளைய யதார்த்தமான பலம்வாய்ந்த கொஹென்சொல்லேர்ன் (Hohenzollern) இராணுவம், மிகப்பலம் வாய்ந்த ஹப்ஸ்பேர்க் இராணுவம், பலம்வாய்ந்த பிரெஞ்சு பூர்ஸ் (Bourse) போன்றவற்றையே கணக்கிட்டார். இது உண்மையிலே ஒரு பயங்கரமான காலக்குளறுபடி, அதன் நகைப்பிற்கிடமான உள்முரண்பாடுகளினால் இன்னும் சிக்கலாகியுள்ளது. நான் '1905 அபிவிருத்தி மட்டத்துடன்' பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் வாய்ப்பு வளத்தை எண்ணிப்பார்க்கவில்லை என்பதுவே றடெக்கை பொறுத்த மட்டில் எனது முக்கியமான தவறாகும். இப்பொழுது எனது இரண்டாவது தவறு வெளிப்படையானதாகின்றது. 1905 புரட்சியின் பொழுது என்னால் முன்வைக்கப்பட்ட பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கான வாய்ப்புவளம், 1917-ன் பின் ஏற்பட்ட சர்வதேச நிலைமைக்குள்ளே தான் வந்தது என்பதை நான் கவனத்தில் கொள்ளவில்லையாம். ஸ்ராலினது வழக்கமான வாதங்கள் இப்படித்தான் இருக்கும். "அது எங்களுக்கு வியப்பு அல்ல, 1917-லும் 1928-லும் அவரது "அபிவிருத்தி மட்டம்" எங்களுக்கு நன்றாக தெரியும்" ஆனால் றடெக் அத்தகைய கூட்டத்திற்குள்ளே எப்படி வீழ்ந்தார்?

இப்பொழுது இதுகூட கேடானதல்ல. கேடு எங்கேயென்றால் மார்க்சிசத்தையும் சந்தர்ப்பவாதத்தையும் எந்த எல்லைக்கோடு பிரிக்கிறதோ அதைத் தாண்டிப்பாய்ந்து விட்டார். புரட்சிகர நிலைப்பாட்டையும் அமைதிவாதத்தையும் என்ன எல்லைக்கோடு பிரிக்கிறதோ அதைத் தாண்டிப் பாய்ந்துவிட்டார். போருக்கு எதிராக போராடுவதை தவிர செய்வதற்கு ஒன்றுமில்லை. எப்படி எந்த வழியிலே போரைத் தடுப்பது அல்லது நிறுத்துவது. முதலாளித்துவத்தின் மேல் பாட்டாளி வர்க்கம் அழுத்தம் கொண்டு வருவதினாலா? அன்றேல் பாட்டாளி வர்க்கம் உள்நாட்டு யுத்தத்தினால் முதலாளித்துவத்தை தூக்கியெறிவதினாலா? றடெக் தற்செயலாக எங்களுக்கிடையேயுள்ள சச்சரவினுள் பாட்டாளி வர்க்கத்தின் ஓர் அடிப்படைக் கொள்கையை புகுத்தினார்.

நான் விவசாயிகளை மாத்திரம் அசட்டை செய்யவில்லை, பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவத்தின் மேல் நெருக்குவாரம் கொண்டு வருவதையும் அதனோடு சேர்த்து பாட்டாளி வர்க்க புரட்சியை பிரத்தியேகமாக கருத்திற் கொண்டேன் என்றும் றடெக் சொல்ல விரும்பினாரா? தால்மானோ செமார்ட்டோ மொன்மொசோ போன்று அவர் அப்படியொரு அர்த்தமற்ற ஒன்றை பாதுகாக்க போகிறார் என்பதை ஏற்பது கஷ்டம். கம்யூனிச அகிலத்தின் மூன்றாம் காங்கிரசில் அந்த நாளைய அதீத இடதுசாரிகள் (Zinoviev, Thalheimer, Thaelman போன்றோர்) சோவியத் யூனியனை பாதுகாப்பதற்காக மேற்கிலே புரட்சிச்சதி (றிutsநீலீவீsனீ) செய்யும் தந்திரோபாயத்தை பிரேரித்தார்கள். எங்களுக்கு அவர்கள் செய்யக்கூடிய ஆகச்சிறந்த உதவி, எங்களின் பேரில் புரட்சி சாகசம் செய்வதிலும் பார்க்க வரிசைக் கிரமமாகவும் திட்டமிட்ட முறையிலும் அவர்களது கட்சியை கெட்டியாக்கி ஆட்சியை கைப்பற்ற தயாராவது தான் என்று லெனினும் நானும் அவர்களுக்கு கூடிய ஜனரஞ்சக முறையில் விளங்கப்படுத்தினோம். அந்த நேரத்தில் றடெக் கவலைக்கிடமாக லெனினதும் ட்ரொட்ஸ்கியினதும் பக்கமல்ல மாறாக சினேவியேவதும் புக்காரினதும் பக்கமாக நின்றார். றடெக்கால் அதைக் கட்டாயம் திருப்பி ஞாபகப்படுத்த முடியும். அப்படி இயலாவிட்டாலும் மூன்றாவது காங்கிரசின் கூட்ட அறிக்கைகள் அதை ஞாபகப்படுத்தும். லெனினதும் எனதும் நியாயங்களின் சாராம்சம் பகுத்தறிவற்ற அந்த அதீத இடதுசாரித்தன "உச்சமுறைப்படுத்தலுக்கு" எதிராகப் போராடியதாகும். கட்சி பலம் பெறுவதும் பாட்டாளி வர்க்கத்தின் அழுத்தம் வளர்வதும் உள்நாட்டு, சர்வதேச உறவுகளிலே உள்ள மிக கரிசனையான காரணங்களே அன்றி மார்க்சிசவாதிகளான எங்களுக்கு "அழுத்தம்" ஆட்சியதிகாரத்தை கைப்பற்றும் புரட்சிகர போராட்டத்தின் ஒரு செயலாகும். அது பூரணமாக போராட்ட அபிவிருத்திகளிலே தங்கியுள்ளன என்று பின்பு நாங்கள் அவர்களுக்கு விளங்கப்படுத்தினோம். இந்த காரணத்தால் மூன்றாம் காங்கிரசின் முடிவில் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளின் ஒரு பெரிய பிரத்தியேக கூட்டத்தில் லெனின் ஒரு சொற்பொழிவு ஆற்றினார். அந்தச் சொற்பொழிவு ஆத்மீக வாதத்திற்கும் சம்பவங்களுக்கு காத்திருக்கும் போக்குகளுக்கும் எதிராக அமைந்திருந்ததோடு பின்வரும் போதனையோடு முடிவுற்றது. அன்பு நண்பர்களே, சாகசத்தில் ஈடுபடாதீர்கள், ஓய்ந்துவிடாதீர்கள். அழுத்தத்தினால் மாத்திரம் நாங்கள் நீண்ட நாளுக்கு நீடித்திருக்க மாட்டோம்.

யுத்தத்தின் பின்பு ஐரோப்பிய பாட்டாளி வர்க்கம் ஆட்சியைக் கைப்பற்றக் கூடியதாக இருக்கவில்லை. ஆனால் அது முதலாளித்துவம் எங்களை நசுக்குவதை தடுத்தது. நானும் இது தொடர்பாக பல தடவை சொற்பொழிவாற்றியிருக்கிறேன். இருந்தபோதும் ஐரோப்பிய பாட்டாளி வர்க்கம் எங்களை நசுக்கவிடாமல் தடுக்கக்கூடியதாக இருந்தது. ஏனெனில் பாட்டாளி வர்க்கத்தின் அழுத்தமும் ஏகாதிபத்தியத்தின் பாரதூரமான பின்விளைவுகளும், உலக முரண்பாடுகள் உக்கிரமடைந்ததும் ஒருங்கே பொருந்தியதனாலாகும். எந்த காரணிகள் இதிலே தீவிரமானவை என்று சொல்வது கஷ்டம் ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான போராட்டமோ பொருளாதார பொறிவோ அல்லது பாட்டாளி வர்க்கத்தின் நெருக்குவாரமோ ஆனால் இந்த பிரச்சனையை இப்படி அணுகக்கூடாது. அமைதியான "நெருக்குவாரங்கள்" மட்டும் போதாது என்பதை ஏகாதிபத்திய யுத்தம் தெளிவுபடுத்தியது. நாளாவித "நெருக்கு வாரங்களுக்கு" மத்தியிலும் அது உண்டானது. கடைசியாக மிக முக்கியமானது என்னவெனில் சோவியத் குடியரசின் முன்னைய ஆபத்தான வருடங்களில் ஐரோப்பிய பாட்டாளி வர்க்கத்தின் நெருக்குவாரம் பயன்தரக் கூடியதாக இருந்தது. ஏனெனில் அந்த காலங்களில் ஐரோப்பிய பாட்டாளி வர்க்கம் நெருக்கு வாரம் கொடுக்கவில்லை. மாறாக ஆட்சியை கைப்பற்ற போராடியது அதுவும், திரும்பத் திரும்ப உள்நாட்டு யுத்த வடிவத்தை எடுத்தது.

1905-ல் யுத்தம் இருக்கவில்லை. ஐரோப்பிய பொருளாதார பொறிவு இருக்கவில்லை. முதலாளித்துவமும் இராணுவ வாதமும் முன்பு இரத்த வெறிகொண்டு விசராட்டம் ஆடியது. அந்த நாட்களில் சமூக ஜனநாயக வாதிகளின் "நெருக்குவாரம்" வில்ஹெல்ம் இரண்டையோ அல்லது பிரான்ஸ் ஜோசேப்பையோ தங்களின் படைகளோடு போலந்து இராஜ்ஜியத்திற்கு அணிவகுப்பதையோ அல்லது பொதுவாக ஜாருக்கு உதவியாக வருவதையோ சம்பூரணமாக தடுக்க முடியாமல் போனது. 1918-ல் கூட ஜேர்மன் பாட்டாளி வர்க்கத்தின் அழுத்தத்தால் பால்டிக் மாகாணங்களையும் உக்கிரேனையும் கொஹென்சொல்லேர்ன் ஆக்கிரமிப்பை தடுக்க முடியாமல் போனது. அவர் மொஸ்கோவை அடைய முடியாமற் போனார் என்றால், அது அவரது இராணுவப் படைகள் போதுமானதாக இல்லாதிருந்ததன் காரணமாகவே ஆகும். அப்படி இல்லையென்றால் எப்படி மற்றும் ஏன் பிரெஸ்ட் சமாதான உடன்படிக்கை பற்றி நாம் ஒரு முடிவுக்கு வந்தோம்? எப்படி நேற்றைய சம்பவம் இலகுவாக மறக்கப்பட்டது. லெனின் ஒரு நாளும் பாட்டாளி வர்க்க அழுத்தத்தில் நம்பிக்கை வைக்கவில்லை. ஜேர்மனியிலே புரட்சி வரவில்லையென்றால் நாம் கட்டாயம் அழிந்து போவோம் என்று திருப்பித் திருப்பி அழுத்திச் சொன்னார். பெரும் காலகட்டம் இதில் நலையீடு செய்திருந்தபோதும், சாராம்சத்தில் இது சரியாகும். பிரமை வேண்டாம். தேதியிடப்படாத தடையுத்தரவை நாம் பெற்றுள்ளோம். முன்பு போலவே ஒரு மூச்சு விடும் இடைவெளி நிலைக்குள்ளேயே நாம் வாழ்கின்றோம்.

பாட்டாளி வர்க்கம் ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற முடியாத நிலைமையிலேயே ஆனால் முதலாளித்துவம் தனது சக்தியை யுத்தத்திற்கு பயன்படுத்துவதை பாட்டாளி வர்க்கம் தடைசெய்யக் கூடிய நிலைமை நிலவுவதென்றால் அதுதான் ஆகக்கூடிய நிரந்தரமற்ற வர்க்க சமநிலை நிலவும் நிலைமையாகும். ஒரு சமநிலையை ஏன் நிரந்தரமற்ற சமநிலை என்போம் என்றால் அது நீண்டகாலம் நீடிக்காததாலே ஆகும். ஓர் இலேசான தாக்கத்தாலேயே அதை இந்த பக்கத்திற்கோ அல்லது அந்த பக்கத்திற்கோ கவிழ்த்து விடலாம். பாட்டாளி வர்க்கம் ஆட்சிக்கு வரும் அல்லது முதலாளி வர்க்கம் ஆட்சிக்கு வரும். ஒரு தொகை தொடர் மரண அடிகளினால் புரட்சிகர நெருக்குவாரத்தை பலவீனப்படுத்தி முதலாளி வர்க்கம் தான் சுயாதீனமாக செயற்படும் நிலைமைகளை மீண்டும் பெற்று எல்லாவற்றிற்கும் மேலாக அது யுத்தமா சமாதானமா என்ற பிரச்சனையில் அதை நிர்ணயிக்கும் சுதந்திரத்தை பெற்றுவிடும்.

முதலாளித்துவ அரசின்மேல் பாட்டாளி வர்க்கத்தின் நெருக்குவாரம் நிரந்தரமாக வளர்ந்து செல்லும் காரணி என்றும் அது தலையீட்டுக்கு எதிரான உத்தரவாதம் என்றும் ஒரு சீர்திருத்தவாதி மாத்திரம்தான் சொல்லுவான். சுருக்கமாக இந்த கருத்தியலில் இருந்து பிறந்ததுதான் உலக முதலாளித்துவத்தை நடுநிலைப்படுத்துவதன் மூலம் ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்டி வளர்க்கலாம் என்னும் தத்துவம் (ஸ்ராலின்) ஆந்தை மங்கல் ஒளியில் பறந்து சென்றது போல, ஸ்ராலினிச தத்துவமான பாட்டாளி வர்க்க நெருக்குவாரத்தின் மூலம் முதலாளித்துவத்தை நடுநிலைப்படுத்தலாம் என்ற தத்துவம் பிறந்ததற்கான சூழ்நிலைகள் ஏற்கனவே மறையத் தொடங்கும் பொழுதே இது தோன்றியது.

யுத்தத்திற்கு பிந்தியகால அனுபவத்தை பிழையாக எடை போட்டு ஏமாறும் நம்பிக்கையான ஐரோப்பிய பாட்டாளி வர்க்கத்தின் புரட்சி இல்லாமலே அதற்கு பதிலாக பொதுவாக ஐரோப்பிய பாட்டாளி வர்க்கத்தின் "ஆதரவோடு" நாங்கள் சமாளித்து விடலாம் என்ற காலத்தில் உலக நிலைமைகள் திடீரென மாறியது. பாட்டாளி வர்க்கத்தின் தோல்விகள் முதலாளித்துவம் நிலைபெறுவதற்கு வழி திறந்துவிட்டன. யுத்தத்தின் பின்பு முதலாளித்துவம் சீர்குலைந்து போதல் நிறுத்தப்பட்டது. புதிய சந்ததி, ஏகாதிபத்திய நரபலி பயங்கரத்தை ருசிபாராது வளர்த்துவிட்டது. அதன் பலாபலன் ஐந்தோ அல்லது எட்டு வருடங்களுக்கு முன்பு போன்றன்று இப்பொழுது முதலாளித்துவம் தனது யுத்த எந்திரத்தை சுதந்திரமாக கட்டவிழ்த்து விட்டுவிட்டது.

உழைக்கும் வெகுஜனங்கள் இடது நோக்கி நகர, இந்த நிகழ்வுப்போக்கு தொடர்ந்து மேலும் வளர்ந்து கொண்டுபோக முதலாளித்துவ அரசின் மேல் இன்னுமொரு தடவை அவர்களின் அழுத்தம் கூடிக்கொண்டு போகும். ஆனால் இது இரண்டு பக்கம் கூருள்ள ஒர் வாளாகும். தொழிலாள வர்க்கத்திடமிருந்து வளரும் ஆபத்தானது, பிற்கால கட்டத்தில் முதலாளித்துவத்தை நிர்ணயமான அடியெடுத்து வைக்கச் சொல்லித் தள்ளும். அது தன்னுடைய வீட்டில் தானே எஜமான் எனக்காட்ட, தொற்று நோயின் முக்கிய இடமான சோவியத் குடியரசை அழிக்க முயலும். யுத்தத்திற்கு எதிரான போராட்டத்தை நிர்ணயிப்பது அரசாங்கத்திற்கு மேல் அழுத்தம் கொண்டு வருவதல்ல. மாறாக ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான புரட்சிகரப் போராட்டமாகும். பாட்டாளி வர்க்க போராட்டத்தின் "அமைதிவாத" விளைவு ("Pacifist" Effects), அதன் சீர்திருத்தவாத விளைவுபோல் ஆட்சியை கைப்பற்றுவதற்கான போராட்டத்தின் பக்க விளைவாகும். அவை ஒரு சார்பு ரீதியான பலமே அன்றி அவை வெகு சீக்கிரத்தில் எதிரிடையாக மாறும். அதாவது அவை முதலாளித்துவத்தை யுத்தப்பாதைக்கு போகச்சொல்லி முடுக்கும். றடெக் ஆக ஒரு பக்கத்தை மட்டும் குறிப்பிடும். முதலாளிகளுக்கு தொழிலாள வர்க்கத்தின் மேல் உள்ள பயம் என்பதுவே சமூக அமைதிவாதிகளுக்கு (Social - Pacifists) ஏறத்தாழ முழுநிறைவான நம்பிக்கையாகும். புரட்சியின் மேலுள்ள "பயம்" எதையும் நிர்ணயிக்காது. புரட்சியே நிர்ணயிக்கும். இதன் காரணமாகவே, லெனின் 1905-ல் கூறிய முடியாட்சியின் மீட்சிக்கு எதிரான மற்றும், 1918-ல் மீண்டும் சொன்ன முதலாளித்துவ மீட்சிக்கு எதிரான ஒரே உத்திரவாதம் பாட்டாளி வர்க்கத்தின் அழுத்தமல்ல, மாறாக ஐரோப்பிய புரட்சி வெற்றி பெறுவதாகும். இதுவே இந்தப் பிரச்சனையை சரியான முறையில் அணுகும் வழியாகும். "மூச்சு விடுங்காலம்" நீண்ட குணாம்சத்தை பெற்றாலும், லெனினது இந்த முறைப்படுத்தலானது இன்றுகூட முழுக்க முழுக்க சரியாகும். நான் கூட இந்த பிரச்சனையை இப்படியே முறைப்படுத்தினேன். நான் 1906-ல் விளைவுகளும் முன்னோக்குகளும் என்பதில் பின்வருமாறு எழுதினேன்:

'துல்லியமாக, பாட்டாளி வர்க்கத்தின் கிளர்ச்சி பற்றிய பயம் முதலாளித்துவ கட்சிகளை சமாதானத்திற்கு ஆதரவாய் சடங்குபூர்வ அறிக்கைகளை விடுவதற்கு, சர்வதேச சமாதான சபை பற்றியும் ஐக்கிய ஐரோப்பாவை அணிவகுப்பது பற்றியும் கனவு காண்பதற்கு நிர்பந்திக்கும் அதேநேரத்தில் பெருந்தொகை பணத்தை இராணுவச் செலவிற்கு ஒதுக்க வாக்களிக்கும். இந்த பரிதாபகரமான, பகட்டுப் பேச்சுக்கள் அரசுகளுக்கு இடையிலான குரோதங்களையோ அல்லது ஆயுத மோதல்களையோ நிறுத்தாது.' (எங்களது புரட்சி, விளைவும் முன்னோக்கும், பக்கம் 283)

ஆறாவது காங்கிரசின் அடிப்படை தவறானது, ஆட்சியைக் கைப்பற்றும் போராட்டத்திலிருந்து யுத்தத்திற்கு எதிராக போராடுவதை பிரித்தலில் இருக்கிறது, ஸ்ராலின் புக்காரின் அமைதிவாத தேசிய சீர்திருத்தவாத முன்னோக்குகளை பாதுகாக்க, அது யுத்த ஆபத்துக்கெதிரான புரட்சிகர தொழில்நுணுக்க பரிகாரத்திற்கு (Revolutionary-Technical Recies) ஓடித் திரிந்தது.

ஆறாவது காங்கிரசை வழி நடத்தியவர்களான தனியொரு நாட்டில் சோசலிசத்தை கட்டியெழுப்பும் அதிர்ச்சியடைந்த சிற்பிகள் சாராம்சத்தில் அச்சமடைந்த அமைதிவாதிகள் உக்கிரமான "அழுத்தம்" கொடுப்பதன் மூலம் முதலாளித்துவத்தை "நடுநிலையாக்கும்" முறையை மனனம் செய்யத் தூண்டினார்கள். அவர்களது தலைமைத்துவம் ஒரு தொகை நாடுகளில் புரட்சியை தோல்விக்கு இட்டுச் சென்று சர்வதேச பாட்டாளி வர்க்க முன்னணிப் படையை அதிக தூரம் பின்னுக்கு தள்ளியிருந்தது. அவர்களுக்கு தெரிந்திருந்தும் அன்றிலிருந்து அவர்களால் அதற்கு உதவி செய்ய முடியாமல் போனதோடு தொடக்கத்தில் அவர்கள் யுத்தப் பிரச்சனையை புரட்சி பிரச்சனையோடு இரண்டற பிணைத்து வைத்துள்ள மார்க்சிசத்தின் "கூர்மையான முறைப்படுத்தலை" கைவிடச் செய்வதற்கு விடாமுயற்சி செய்தார்கள். அவர்கள் யுத்தத்திற்கு எதிராக போராடுவதை தனித்து செய்யக்கூடிய கடமையாக மாற்றினார்கள். அவர்கள் தேசிய கட்சிகளை இக்கட்டான மணித்தியாலம் வரை நித்திய உறக்கத்திற்கு அனுமதித்துவிட்டு யுத்த அபாயம் நிரந்தரமானதென்றும், ஒத்திப்போட முடியாதென்றும், உடனடியானதென்றும், பிரகடனப்படுத்தினார்கள். உலகத்திலே நடக்கும் விடையங்களெல்லாம் யுத்தத்திற்காகவே நடக்கின்றன. இனிமேல் யுத்தம் முதலாளித்துவத்தின் கருவியல்ல. மாறாக முதலாளித்துவமே யுத்தத்தின் கருவியாகிவிட்டது. அதன் விளைவாய் கம்யூனிச அகிலத்தின் யுத்தத்திற்கு எதிரான போராட்டமானது ஒரு தொகுதி சடங்கு சம்பந்தமான சூத்திரமாக மாற்றப்பட்டு, அவை ஒவ்வொரு சம்பவங்களிலும் தானாகவே திருப்பித் திருப்பி உச்சாடனம் செய்யப்பட்டதாய், அவற்றின் விளைபயனை இழந்து, ஆவியாகும். ஸ்ராலினிச தேசிய சோசலிசம், கம்யூனிச அகிலத்தை முதலாளித்துவத்தின் மேல் "அழுத்தம்" கொணரும் துணைக்கருவி ஆக்குகிறது. றடெக் தனது அவசரமான சீரற்ற நுனிப்புல் மேய்ந்த விமர்சனத்தால் மார்க்சிசத்துக்கல்ல, இந்த போக்குக்கே துணைபுரிகின்றார். அவர் திசையறி கருவியைத் தவறவிட்டுவிட்டு, ஓர் அன்னியச் சுழியில் அகப்பட்டுவிட்டதனால் வேறோர் கரையில் சேரக்கூடும்.

அல்மா-அட்டா, அக்டோபர் 1928.

NOTES

1. (லெனின் தொகுப்பு XV பக்கம் 12) [யுத்தமும் சமாதானமும் பற்றிய பிரச்சனையின் பேரில் சொற்பொழிவு, 7 மார்ச், 1918]

 
 
©World Socialist Web Site
All rights reserved