World Socialist Web Site www.wsws.org


நிரந்தரப் புரட்சி
லியோன் ட்ரொட்ஸ்கி

அத்தியாயம் 3

"ஜனநாயக சர்வாதிகாரத்தின்" மூன்று மூலங்கள்: வர்க்கங்களும், கடமைகளும் அரசியல் இயங்குமுறையும்

Back to screen version

லெனினிச நிலைப்பாட்டிற்கும் 'நிரந்தர' என்ற நிலைப்பாட்டிற்கும் இடையிலான வேறுபாடு விவசாயிகளின் துணையோடான பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற சுலோகத்தை பாட்டாளி வர்க்கத்தினதும் விவசாயிகளினதும் ஜனநாயக சர்வாதிகாரம் என்ற சுலோகத்திற்கு எதிராக முன்வைத்தலில் தன்னை அரசியல் ரீதியாக வெளிப்படுத்திக் கொண்டது. முதலாளித்துவ ஜனநாயக கட்டத்தை தாண்டிப் பாய்வதோ தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையேயான கூட்டு என்பதுவோ சர்ச்சையல்ல, மாறாக ஜனநாயகப் புரட்சியிலே பாட்டாளி வர்க்கத்திற்கும் விவசாயிகளுக்கும் இடையே ஏற்படும் ஒத்துழைப்பின் அரசியல் இயங்குமுறை என்னவென்பதே சர்ச்சையாகும்.

மிகவும் வரம்பு மீறிய தன்னம்பிக்கையிலிருந்து விலகி, நெஞ்சுரமில்லாதது என்று கூறக்கூடாது, மார்க்சிச லெனினிசத்தின் விதிமுறையின் சிக்கல் தன்மையை ஆதி முதல் அந்தம்வரை சிந்திக்காது வாக்குவாதம் செய்கின்ற றடெக் போன்ற மனிதர்கள் மாத்திரந்தான் ஜனநாயக சர்வாதிகாரம் பற்றிய கட்சி-அரசியல் வெளிப்பாட்டை எழுப்ப முடியும், அப்படியிருக்க புறநிலை வரலாற்றுக் கடமைகளில் இரண்டு வர்க்கத்தினதும் ஒத்துழைப்பில் முழுபிரச்சினையையும் லெனின் சுருக்கியதாக கூறப்படுகிறது. இல்லை, அது அப்படியல்ல.

எடுத்துக் கொண்ட பிரச்சினையில், கட்சிகள் அவைகளின் வேலைத்திட்டங்கள்-பாட்டாளி வர்க்கத்தினதும் விவசாயிகளதும் ஒத்துழைப்பின் அரசியல் மற்றும் ஸ்தாபன வடிவங்கள் போன்ற புரட்சியின் அகவய காரணியிலிருந்து எங்களை அருவப்படுத்திப் பார்த்தோமானால், ஏதோ ஒரே புரட்சிக் கன்னையின் இரண்டு சாயல்களான எனக்கும் லெனினுக்குமிடையே விளங்கிய அனைத்து அபிப்பிராய பேதங்களும் இல்லாமற்போனது மாத்திரமல்ல, மிகவும் மோசமாக போல்ஷிவிசத்திற்கும் மென்ஷிவிசத்திற்கும் இடையே விளங்கிய அபிப்பிராய பேதங்களும் கூட, 1905 ரஷ்ய புரட்சிக்கும் 1848 ஏன் 1789 புரட்சிகளுக்குமிடையே விளங்கிய வித்தியாசங்கள், இதுவரை காலம்வரை வந்த புரட்சிகளுக்குள் பாட்டாளி வர்க்கத்திற்கும் பின்னையதற்கும் இடையிலான உறவு பற்றிய பிரச்சினைகள் எல்லாம் கூட தீர்ந்து போயின. நகரத்திலும் கிராமப்புறத்திலும் உள்ள ஒடுக்கப்பட்ட வெகுஜனங்களின் ஒத்துழைப்பு என்ற அடித்தளத்திலேயே அனைத்து முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிகளும் ஏற்பட்டன. ஒட்டுமொத்த முழு ஜனங்களையும் உசுப்பி விடுவதன் காரணமாகவே புரட்சி குறைந்தபட்சமோ கூடியபட்சமோ தேசம் தழுவியதாகும்.

எங்களுக்கு இடையே இருந்த தத்துவார்த்த மற்றும் அரசியல் அபிப்பிராய பேதம் தொழிலாளர்களதும் விவசாயிகளதும் ஒத்துழைப்பு பற்றியதல்ல. இந்த ஒத்துழைப்பிலேயுள்ள வேலைத்திட்டம், கட்சியின் வடிவங்கள், அரசியல் வழிமுறைகள் பற்றியதாகும். பழைய புரட்சிகளிலே தொழிலாளர்களும் விவசாயிகளும் தாராண்மை முதலாளிகளினதோ அன்றேல் அதன் குட்டி முதலாளித்துவ ஜனநாயக வாதக் கன்னையின் தலைமைக்கு பின்னாலோ "அணி திரண்டார்கள்". கம்யூனிச அகிலம் இந்தப் பழைய புரட்சிகளின் அனுபவத்தை ஒரு புதிய வரலாற்று சூழலிலே திரும்பிச் செய்தது. சீனத் தொழிலாளர்களையும், விவசாயிகளையும் தேசிய தாராண்மை சியாங் கேய் சேக்கின் அரசியல் தலைமைக்கும் பின்பு ஜனநாயக வாங் சிங்-வேயின் அரசியல் தலைமைக்கும் அடிபணிய வைப்பதற்கு அத்தனையையும் செய்தது. லெனின், தொழிலாளர்களதும் விவசாயிகளதும் கூட்டு பற்றிய பிரச்சினையை கிளப்பியபோது தாராண்மை முதலாளித்துவத்திற்கு எதிராக சமரசப்படுத்த முடியாத எதிர்ப்பைக் காட்டினார். அவர் உண்டாக்கிய மாதிரியான ஒரு கூட்டு வரலாற்றில் ஒருபொழுதும் இருந்தது கிடையாது. இந்த வழிமுறை நகரத்திலும் கிராமத்திலும் உள்ள-ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் ஒத்துழைப்பிலே ஒரு புதிய பரிசோதனையாக இருந்தது. ஒத்துழைப்பின் அரசியல் வடிவம் பற்றிய பிரச்சினை இதன் மூலம் புதிதாக முன்வைக்கப்பட்டது. றடெக் இதை இலகுவாக மேலெழுந்தவாரியாக பார்த்தார். அதனால்தான் நிரந்தரப் புரட்சி சூத்திரத்திலிருந்து எம்மை பின்னுக்கு இழுத்துக்கொண்டு போவதும் அல்லாமல் லெனினது "ஜனநாயக சர்வாதிகாரம்" என்ற சூத்திரத்திலிருந்தும் ஒரு வெற்று வரலாற்று சூக்குமத்திற்கு பின்னோக்கி எம்மை இழுத்துக்கொண்டு செல்கிறார்.

ஆம், பாட்டாளி வர்க்கத்தினதும் விவசாயிகளதும் ஜனநாயக சர்வாதிகாரம் எந்தவிதமான கட்சி அரசியல் ஸ்தாபனத்தை மற்றும் அரசு ஸ்தாபனத்தைக் கொண்டிருக்கும் என்பது பற்றிய பிரச்சியையை முன்கூட்டியே எடை போடுவதை லெனின் பல வருடகாலமாக நிராகரித்தார். அவர் தாராண்மை முதலாளித்துவத்துடனான கூட்டுக்கு எதிராக இந்த இரண்டு வர்க்கங்களின் கூட்டை முன் கொணர்ந்தார். ஒரு குறிக்கப்பட்ட வரலாற்றுக் காலகட்டத்தில் ஜனநாயகப் புரட்சியின் கடமைகளை தீர்ப்பதற்காக முழு புறநிலை சூழ்நிலைகளிலிருந்தும் தவிர்க்க முடியாமல் பாட்டாளி வர்க்கத்தினதும் விவசாயிகளதும் புரட்சிகர ஐக்கியம் வருமென்று லெனின் கூறினார். விவசாயிகளால் ஒரு சுயாதீனமான கட்சியை உருவாக்கி இதைச்செய்வதில் வெற்றியடைய முடியுமா? இந்த சர்வாதிகார அரசாங்கத்துள் கட்சி பெரும்பான்மை பலத்தோடா சிறுபான்மை பலத்தோடா விளங்கும்? இந்தப் புரட்சிகர அரசாங்கத்துள் பாட்டாளி வர்க்கத்தின் பிரதிநிதிகளுக்கு என்ன சிறப்பு முக்கியத்துவம் இருக்கும்? இந்த கேள்விகளுக்கு முன்கூட்டியே விடையிறுக்க இயலாது. "அனுபவந்தான் காட்டும்!".

ஜனநாயக சர்வாதிகாரம் என்ற சூத்திரம் இந்த அளவில் அரைவாசி திறந்துவிடப்பட்டுள்ளது. அதாவது பாட்டாளிகள் விவசாயிகள் ஐக்கியத்தின் அரசியல் இயங்குமுறை பற்றிய பிரச்சினை இங்கே திறந்து விடப்பட்டுள்ளது. இதன்மூலம் இது றடெக்கினது மலட்டு சூக்குமத்திற்கு உருமாறாது தொடர்ந்து ஒரு குறிக்கப்பட்ட காலம் வரை, இது அரசியல் வியாக்கியானத்தை எதிர்காலத்தில் அதீதமாக விலக்கும் ஒரு குறியீட்டுக் கணிதச் சூத்திரமாக தொடர்ந்து நீடிக்கும்.

இதனோடு கூட, லெனின் தானே சர்வாதிகாரத்தின் வர்க்க அடிப்படையும் அதன் புறநிலை வரலாற்று நோக்கும் இன்னும் வெளியாகவில்லை என்ற அபிப்ராயத்தை வைத்திருந்தார். அகவய காரணிகளான இலக்கு, நனவான வழிமுறை, கட்சி என்பவற்றின் முக்கியத்துவத்தை லெனின் சிறப்பாக விளக்கியிருந்ததோடு, அதை எங்கள் எல்லோருக்கும் கற்பித்துமிருந்தார். அதனால்தான் லெனின் வரலாற்றிலேயே முதலாவதான தொழிலாளர் விவசாயிகள் கூட்டானது என்ன அரசியல் வடிவத்தை எடுக்குமென்ற ஏறத்தாழ உத்தேச முன் எடை போடலை தவிர்த்துக்கொண்டார். இருந்தபோதும், வெவ்வேறு காலங்களில் இந்தப் பிரச்சினை பற்றிய லெனினின் அணுகுமுறையானது ஒன்றாக இருக்கவில்லை. லெனினது சிந்தனையை மாற்றி எழுத முடியாத மந்திரமாய் எடாமல், வரலாற்று ரீதியில் எடுக்க வேண்டும். லெனின், சினாய் மலைத் தொடரிலிருந்து எழுதி முடித்த கடவுள் கட்டளைகளை கொணரவில்லை. ஆனால் யோசனைகளையும் சுலோகங்களையும் யதார்த்தத்திற்கு பொருந்தக்கூடிய வகையில் அடித்து நெழித்து திட்டவட்டமாகவும் இரத்தினச் சுருக்கமாகவும் ஆக்கி வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு உள்ளடக்கத்தால் நிரப்பி தந்தார். பிரச்சனையின் இந்தப் பக்கம் பிற்காலத்தில் தீர்க்கதரிசன குணாம்சத்தை எடுத்ததோடு, 1917-ன் தொடக்கத்திலே போல்ஷிவிக் கட்சியை பிளவின் விளிம்புக்கு கொண்டு வந்ததை றடெக்கால் கற்றுக்கொள்ள முடியவில்லை. இதை அவர் இலகுவாக உதாசீனம் செய்தார்.

எப்படியிருந்தபோதும் ஓர் உண்மை என்னவெனில், லெனின் ஒரு நாளும் இந்த இரண்டு வர்க்க கூட்டின் கட்சி அரசியல் வெளிப்பாட்டையும் அது எடுக்கும் அரசாங்க வடிவத்தையும் குணாம்சப்படுத்தவில்லை. அதேபோலவே அவர் இந்த உத்தேசமான வியாக்கியானத்தால் கட்சியை கட்டுவதிலிருந்து தவிர்த்துக்கொண்டார். இப்படி கவனமாக இருந்ததன் காரணமென்ன? இந்த குறியீட்டுக் கணித சூத்திரம் முக்கியத்துவத்தில் பெரிதான, அளவினைக் கொண்ட, ஆனால் அரசியல் ரீதியாக ஊசலாடுகின்ற விவசாய வர்க்கத்தை கொண்டிருக்கிறது என்ற உண்மையில் இந்தக் காரணங்கள் தேடப்படும்.

ஜனநாயக சர்வாதிகாரம் பற்றிய லெனினது வியாக்கியானம் என்னவென்பதற்கு நான் சில மேற்கோள்களை காட்ட விரும்புகிறேன். இந்தப் பிரச்சினை சம்மந்தமாக லெனினது சிந்தனையின் பரிணாமத்தை சுற்றி வளைத்து ஒப்புவிக்க வேண்டுமானால் இன்னுமொரு புத்தகத்தை எழுதவேண்டும். 104 (03) பாட்டாளிகளும் விவசாயிகளும் தான் இந்த சர்வாதிகாரத்தின் அடிப்படை என்ற எண்ணக்கருவை அபிவிருத்தி செய்கையில் லெனின் 1905 மார்ச்சில் எழுதினார்: "இந்த சேர்க்கை தான் ஜனநாயக சர்வாதிகாரத்திற்கான நிகழக்கூடியதும் விரும்பக்கூடியதுமான சமூக அடித்தளமாகும். கட்டாயமாக இதன் பிரதிபலிப்பை புரட்சிகர அரசாங்கத்தின் சேர்க்கையில் காணலாம். அத்தகைய சேர்க்கையுடன் அத்தகைய அரசாங்கத்தில் புரட்சிகர ஜனநாயகத்தின் வேறுவேறான பிரதிநிதித்துவங்களின் பங்குபற்றலும் அல்லது மேலாதிக்கம் செலுத்தலும் தவிர்க்க முடியாததாகும்... (லெனின் படைப்பு பாகம் 6, பக்கம் 132 எனது அழுத்தம், சமூக ஜனநாயகமும் இடைக்காலப் புரட்சிகர அரசாங்கமும் என்ற கட்டுரையில்)

இச்சொற்களில், இந்த சர்வாதிகாரத்தின் வர்க்க அடித்தளத்தை மாத்திரம் காட்டவில்லை, இச்சர்வாதிகாரம் என்ன பிரத்தியேக விதமான அரசாங்க வடிவம் எடுக்கும் என்பதையும், குட்டி முதலாளித்துவ ஜனநாயகத்தின் பிரதிநிதிகளின் ஆதிக்கம் இருக்கக்கூடியமையும் பற்றி உருவரை செய்கிறார்.

1907-ல் லெனின் எழுதினார்:

'கனவான்களே நீங்கள் கூறுகின்ற மாதிரி "விவசாயிகளின் விவசாயப் புரட்சி" வெற்றிவாகை சூட வேண்டுமானால், அந்த விவசாயிகள் புரட்சி நாடு முழுவதுமான மத்திய ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும்.' (1905-1907 ரஷ்ய புரட்சியிலே சமூக ஜனநாயக வாதிகளின் விவசாய வேலைத்திட்டம் பாகம் 9, பக்கம் 539)

இந்தச் சூத்திரம் மேலும் வளர்ந்து செல்கிறது. புரட்சிகர சக்தி நேரடியாக விவசாயிகளின் கைகளிலே செறிய வேண்டும் என்ற அர்த்தத்திலேயே இதை விளங்க வேண்டும். இந்தச் சூத்திரம் மேலும் பல விடையங்களை ஆரத்தழுவியுள்ளது. புரட்சி அபிவிருத்தியின் மத்தியிலே இந்தச் சூத்திரம் பரந்த அர்த்தத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அக்டோபர் புரட்சி, பாட்டாளி வர்க்கத்தை விவசாய புரட்சியின் "ஏஜெண்டாக" ஆட்சிக்கு கொண்டு வந்தது என்பதும் அதன் அர்த்தமாகும். பாட்டாளி வர்க்கத்தினதும் விவசாயிகளினதும் ஜனநாயக சர்வாதிகாரம் என்ற சூத்திரத்தின் வியாக்கியானத்தின் விசாலம் அந்த மட்டமாகும். ஒரு குறிக்கப்பட்ட நிலைவரை இதற்கு நாங்கள் அனுமதி வழங்கலாம். இதன் பலமான பக்கம் குறியீட்டுக்கணித குணாம்சத்தில் அமைந்துள்ளது. ஆனால் இதன் ஆபத்தும் அங்கேதான் உண்டு. பெப்ரவரிக்கு பின்னர் இது எங்களுக்குள் துலக்கமாய் வெளிப்பட்டதோடு சீனாவை இது பேரழிவுக்கு இழுத்துச் சென்றது.

யூலை 1905-ல் லெனின் எழுதினார்:

"கட்சி ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என எவரும் பேசியது கிடையாது. புரட்சியில் எவ்வளவுக்கு எவ்வளவு நாங்கள் பங்குகொள்ள முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு பங்குகொள்ள வேண்டுமென்று மாத்திரந்தான் பேசினோம். (பாகம் 6, பக்கம் 228)

(பாரிஸ் கம்யூனும் ஜனநாயக சர்வாதிகாரத்தின் பணிகளும், நாலாவது பதிப்பு IX, 120 முடிவுக்கட்டுரை மாத்திரம்தான். இதிலே இந்தப் பந்தி எழுதப்படவில்லை காரணம் மூலப்பிரதி லெனினது கையெழுத்தில் இல்லை. ஆனால் லெனினது கையெழுத்தால் அதிகமாக திருத்தப்பட்டிருந்தது)

1906 டிசம்பரில் லெனின், கட்சி ஆட்சியைக் கைப்பற்றுவது பற்றிய பிரச்சினையில் கவுட்ஸ்கியோடு ஒத்துப்போகலாம் என்று யோசித்தார்:

"ஆட்சியைக் கைப்பற்றுவது நடக்கக்கூடிய காரியம் மாத்திரமல்ல புரட்சியின் நிகழ்வுப் போக்கில் வெற்றி, சமூக ஜனநாயகவாதிகளின் கைகளில் விழும்" என்று கவுட்ஸ்கி யோசித்தார். ஆனால் வெற்றி நிச்சயம் என்பதை தம்மை சார்ந்தவர்களை நம்பப்பண்ணுவது சமூக ஜனநாயகவாதிகளின் கடமை, ஏனெனில் "கைக்கு வந்த வெற்றியைக் கைநழுவ விடுபவர் வெற்றிகரமாகப் போராட முடியாதவர்கள்" என்று அவர் பிரகடனப்படுத்தினார்." (viii, 58) (ரஷ்ய புரட்சியில் பாட்டாளி வர்க்கமும் அவர்களது நேச சக்தியும் 4-வது பதிப்பு xi, 337)

லெனினால் கொடுக்கப்பட இந்த இரு விளக்கங்களுக்கு இடையிலான இடைவெளி லெனினது முறைப்படுத்திக்கூறலுக்கும் எனது முறைப்படுத்திக்கூறலுக்கும் இடையிலானதை விடவும் சிறிதானது அல்ல. இதனைப் பின்னர் இன்னும் தெளிவாகக்கூட நாம் பார்க்கலாம். இங்கு நாம் எழுப்பவிரும்பும் கேள்வி: லெனினில் உள்ள இந்த முரண்பாடுகளின் பொருள் என்ன? அவை புரட்சியின் அரசியற் சூத்திரத்திலுள்ள 'மாபெரும் அறிந்திராத' வேறு எவருமில்லாத அவரை: விவசாயியை பிரதிபலிக்கின்றன. தீவிரப்போக்குடை சிந்தனையாளர்கள் விவசாயியை ரஷ்ய புரட்சியின் ஸ்பிங்சாக (Sphinx) எப்பொழுதாவது குறிப்பது கைம்மாறு கருதாது அல்ல. றடெக் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் சரி புரட்சிகர சர்வாதிகாரத்தின் தன்மை பற்றிய பிரச்சினையானது தாராண்மை முதலாளித்துவத்திற்கு குரோதமான மற்றும் பாட்டாளி வர்க்கத்திலிருந்து சுயாதீனமான ஒரு புரட்சிகர விவசாயக் கட்சியின் சாத்தியம் பற்றிய பிரச்சினையுடன் கட்டுண்டிருக்கிறது. பிந்தைய கேள்வியின் தீர்மானகரமான அர்த்தம் கிரகித்துக் கொள்வதற்கு கடினமானதல்ல. ஜனநாயகப் புரட்சியின் சகாப்தத்தில் விவசாயி அதன் சொந்த சுயாதீனமான கட்சியை உருவாக்கும் திறனைக் கொண்டிருப்பின், ஜனநாயக சர்வாதிகாரம் அதன் மிக உண்மையான மற்றும் மிகவும் நேரடியான அர்த்தத்தில் அடையப்படக்கூடும், மற்றும் புரட்சிகர அரசாங்கத்தில் பாட்டாளி வர்க்க சிறுபான்மையின் பங்கேற்பு பற்றிய பிரச்சினை முக்கியமானதாக இருக்கும், அது உண்மை, ஆனால் துணை முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். விவசாய வர்க்கம் அதன் இடைப்பட்ட ஸ்தானம் மற்றும் அதன் சமூக சேர்க்கையின் முரண்கூறுகளைக் கொண்டதன்மையின் காரணமாக சுயாதீனமான கொள்கையையும் கொண்டிருக்க முடியாது சுயாதீனமான கட்சியையும் கொண்டிருக்க முடியாது, ஆனால் புரட்சிகர சகாப்தத்தில், முதலாளித்துவ வர்க்கத்தின் கொள்கை அல்லது பாட்டாளி வர்க்கத்தின் கொள்கை இவற்றிற்கிடையில் ஏதாவதொன்றை தேர்ந்தெடுக்குமாறு நிர்பந்திக்கப்படும் என்ற உண்மையிலிருந்து மேற்சென்றால் விஷயம் முற்றிலும் வேறுவிதமாக இருக்கும்.

விவசாயின் அரசியற் தன்மை பற்றிய இந்த மதிப்பீடே ஜனநாயகப் புரட்சியிலிருந்து பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் நேரடியாக வளர்கிறது என்ற வாய்ப்பு வளத்தை திறந்து விடுகிறது. இதில், இயல்பாகவே, விவசாயியை 'மறுத்தலோ', 'புறக்கணித்தலோ' அல்லது 'குறை மதிப்பீடு செய்தலோ' இல்லை. சமுதாயம் ஒட்டு மொத்தத்தின் உயிர் வாழ்க்கைக்குமான விவசாயப் பிரச்சினையின் தீர்மானகரமான முக்கியத்துவம் இல்லாமல், விவசாயப் புரட்சியின் பெரும் ஆழம் கொண்ட மற்றும் பெரும் விரைந்தகற்றுதல் இல்லாமல் ரஷ்யாவில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை பற்றி எந்த பேச்சும் கூட இருக்க முடியாது. ஆனால் விவசாயப் புரட்சியானது, விவசாய வர்க்கம் அதன் சொந்த வரலாற்றுப் பிரச்சினையை அதன் சொந்த தலைமையின் கீழ் மற்றும் அதன் சொந்தப் படைகளை கொண்டு தீர்க்கவியலாத அதன்தன்மையிலிருந்து பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் வளர்வதற்கான நிலைமைகளை உருவாக்கியது என்பது உண்மை. முதலாளித்துவ நாடுகளிலுள்ள தற்போதைய நிலைமைகளின் கீழ், பின்தங்கிய நாடுகளிலும் கூட, அவை ஏற்கனவே முதலாளித்துவ தொழிற்துறை சகாப்தத்தில் நுழைந்துள்ளதால் மற்றும் அவை இருப்புப்பாதைகளாலும் தந்தித்தொடர்புகளாலும் ஒன்றாய் பிணைக்கப்பட்டிருக்கும் வரை - இது ரஷ்யாவுக்கு மட்டுமல்ல, சீனா மற்றும் இந்தியாவுக்கும் - விவசாய வர்க்கமானது பழைய முதலாளித்துவப் புரட்சிகளின் சகாப்தத்தை விட முன்னணி மற்றும் சுயாதீனமான அரசியற் பாத்திரத்தையும் கூட ஆற்றுவதற்கு குறைவாகவே திறன்பெற்றிருக்கும். நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் மிக முக்கியமான சிறப்பியல்புகளுள் ஒன்றை வடிவமைக்கும், இக்கருத்தை ஒரே சீராகவும் தொடர்ச்சியாயும் நான் வலியுறுத்தினேன் என்ற உண்மை, விவசாயியை குறைத்துமதிப்பிடுவதாக என்மீது குற்றம்சாட்டுவதற்கான மிகவும் போதுமானதல்லாத மற்றும், சாராம்சத்தில், முற்றிலும் ஆதாரமற்ற போலிக்காரணத்தையும் கூட வழங்குகிறது.

விவசாயிகளின் கட்சி பற்றிய பிரச்சினையில் லெனினது பார்வைகள் என்னவாக இருந்தன? இப்பிரச்சினைக்கு விடையிறுக்க,1905-17 வரையிலான ரஷ்ய புரட்சியின் காலகட்டம் மீதான லெனினின் கண்ணோட்டங்களின் பரிணாமம் பற்றிய செறிந்த மீள்மதிப்பீடு ஒன்று தேவைப்படும்:

1907ல் லெனின் எழுதினார்:

'குட்டிமுதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் ஐக்கியம் பற்றிய புறநிலை கஷ்டங்களானது அத்தகைய கட்சியின் உருவாக்கத்தை சரிபார்க்கும் மற்றும் தொய்வுடைய, வடிவமற்ற, கூழ்போன்ற Trudoviki போன்ற[1] ஜனங்களின் இன்றைய நிலையில் விவசாய ஜனநாயகத்தை நீண்டகாலத்திற்கு விட்டுவைக்கும் என்பது சாத்தியமானதாகும்.'

1909-ல் லெனின் இதே விஷயத்தை இன்னுமொரு பாணியிலே விளங்கப்படுத்தினார்:

"இங்கே ஒரு சின்னச் சந்தேகமும் இல்லை புரட்சி இந்த மட்டத்தை அடையும்பொழுது.... அந்த அபிவிருத்தி மிக உயர்ந்ததாக இருக்குமானால் புரட்சிகர சர்வாதிகாரம் ஒரு இறுக்கமாக உருவாக்கப்பட்ட ஒரு விவசாயிகள் கட்சியை படைக்கும். இதை வேறுவிதமாக எடை போடுவதன் அர்த்தம் ஒரு பூரண வளர்ச்சியை அடைந்த மனிதனில், ஒரு குறிப்பிட்ட முக்கிய உறுப்புக்கள் அளவில், வடிவத்தில் மற்றும் வளர்ச்சித்தரத்தில், தொடர்ந்து குழந்தை நிலையில் இருப்பதாக எண்ணுவதாக முடியும். (xi, பகுதி 1, 230) *

* (எங்களது புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் போராட்ட இலக்கு)

இந்த ஊகம் ஊர்ஜிதமாக்கப்பட்டதா? இல்லை, அது ஊர்ஜிதமாக்கப்படவில்லை. வரலாற்றால் பூரணமாக அது பரிசோதித்துக் காட்டப்படும் கணம் வரை புரட்சிகர அரசாங்கத்தை பற்றிய குறியீட்டுக்கணித மறுமொழி கொடுக்காதிருக்கும்படி அதுதான் லெனினைத் தூண்டியது. உண்மைதான், லெனின் தனது உத்தேச சூத்திரத்தை யதார்த்தத்திற்கு மேலாக வைக்கவில்லை ஒரு சுயாதீனமான பாட்டாளி வர்க்க அரசியல் கட்சிக்காகப் போராடுவது லெனினின் வாழ்க்கையின் முக்கிய உள்ளடக்கமாக இருந்தது. இருந்தபோதிலும், இழிபாசாங்கினர், விவசாயிகள் கட்சிக்குப் பின்னாலான அவர்களின் வேட்டையாடலில், சீனத்தொழிலாளர்களை கோமின்டாங்கிற்கு அடிபணிய வைத்தார்கள், 'தொழிலாளர்கள் விவசாயிகள் கட்சி' என்ற பெயரில் இந்தியாவில் உள்ள கம்யூனிசத்தின் குரல்வளையை நெரித்தில் போய் முடிந்தார்கள். விவசாயிகள் சர்வதேசியம் என்ற ஆபத்தான கற்பனையை செய்து, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான கழகம் என்பதில் ஏமாற்றித்திரிந்தார்கள்.

இன்று நிலவுகின்ற உத்தியோகபூர்வ சிந்தனை லெனினில் மேற்கூறிய முரண்பாடுகளை கருத்தூன்றி உரைக்க எந்தவித முயற்சியையும் எடுக்கவில்லை. அவை பகுதியளவில் வெளியிலுள்ளவை மற்றும் மேலானவை, பகுதியளவில் யதார்த்தமானவை, அவை எப்பொழுதும் பிரச்சினையிலிருந்தே முளைவிடுகிறது. இப்பொழுது எங்கள் மத்தியில் பழைய பிற்போக்கு பேராசிரியர்களில் இருந்தும் அவர்களின் முதுகெலும்புப் பலத்தால் அல்லாமல் மாறாக அவர்களின் தடங்காணா ஆழம்கொண்ட அறியாமையால் அடிக்கடி வித்தியாசப்படும் விசேஷ 'செம்'பேராசிரியர்கள் தோன்றியுள்ளார்கள். லெனினது சிந்தனை ஆற்றலும் பாண்டித்தியமும்தான் இந்த முரண்பாடுகள் எல்லாவற்றையும் கெட்டித்தனமாக வெட்டியெறிந்து சுத்தமாக்கியது. இவர்கள் தரப்படுத்திய மேற்கோள்களை ஒரு பிரத்தியேக கயிற்றில் கோர்த்து மாலையாக்கி அந்தந்தக் கணத்தின் தேவைக்கேற்ப ஒரு 'தொடருக்கு' மற்றதைச் சுற்றுக்கு விடுவார்கள்.

மிக நீண்ட வரலாற்று இடைவெளிக்கு பின்பு, ஐரோப்பாவிலும் உலகிலும் மிக நீண்ட பிற்போக்கு சகாப்தம் நீடித்த பின்பு, ஓர் அரசியற் கன்னித்தன்மை கழியாத ஒரு நாட்டில் புரட்சி கூர்ப்படையுமானால் எத்தனையோ விடையங்கள் தெரியாமல் இருக்கும் என்பதை ஒரு கணமும் மறக்கக்கூடாது. பாட்டாளிகளதும் விவசாயிகளதும் ஜனநாயக சர்வாதிகாரம் என்ற சூத்திரத்தில் லெனின் ரஷ்ய சமூக நிலைமைகளின் விசேஷ தன்மையை வெளிப்படுத்தினார். அவர் இந்தச் சூத்திரத்திற்கு வெவ்வேறுவிதமான வியாக்கியானம் அளித்தார். ரஷ்ய பிரச்சினையின் பிரத்தியேகத்தன்மை கடைசிவரை ஆராயுமட்டும் அதை அவர் நிராகரிக்கவில்லை. ரஷ்ய பிரத்தியேகத்தன்மை எங்கே கிடந்தது?

மற்ற எல்லா பிரச்சினைகளின் இருப்பிடம் அன்றேல் துணை இருப்பிடமான விவசாயப் பிரச்சனையின் இராட்சதப் பாத்திரமும் பொதுவாக விவசாயிகள் பிரச்சனை, பெரும் எண்ணிக்கையிலான விவசாயப் புத்திஜீவிகள், விவசாயிகள் மேல் அனுதாபங்கொண்டவர்கள், அவர்களது நரோட்னிக் தத்துவம், அவர்களது முதலாளித்துவ விரோத சம்பிரதாயம் வீரியவளர்ச்சி போன்ற ஒட்டுமொத்தமெல்லாம் ஈண்டு குறிப்பிட்டது என்னத்தையென்றால், ஓர் முதலாளித்துவ விரோத விவசாயிகள் கட்சி எங்காவது இருக்குமென்றால் அது குறிப்பாகவும் விசேஷமாகவும் ரஷ்யாவில்தான் இருக்கும்.

ஒரு லிபரல் கட்சி அல்லது பாட்டாளி வர்க்க கட்சியினின்றும் வித்தியாசப்பட்ட ஒரு விவசாயிகள் கட்சியையோ அன்றேல் பாட்டாளிகள் விவசாயிகள் கட்சியையோ உருவாக்கும் பிரயத்தனத்தின்போது, ரஷ்யாவில் இருக்கக்கூடிய அனைத்து ரக விவசாயிகள் அரசியற் கட்சியும் முயற்சித்துள்ளது. சட்டவிரோதக் கட்சியோ பாராளுமன்றக் கட்சியோ அன்றேல் இரண்டும் சேர்ந்ததோ: Zenlga i Volya (நிலமும் விடுதலையும்), Norodnaya Volya (மக்கள் சித்தம்), Chevny Peredel (கறுப்பு மீள்பங்கிடுகை) சட்டபூர்வக் கட்சிகள் Narodnichestvo (மக்கள்) கழகப் புரட்சியாளர்கள், மக்கள் சோசலிஸ்டுகள், (Tvudoviviks) ரூடோவிக்குகள், இடது சோசலிசப் புரட்சியாளர்கள் போன்ற இன்ன பிறவாகும். பாட்டாளி வர்க்க கட்சி தொடர்பாக சுயநிலைப்பாடு எடுக்க ஓர் முதலாளித்துவ விரோத விவசாயிகள் கட்சி படைக்கும் பரிசோதனைக் கூடமாக அரை நூற்றாண்டு காலம் ரஷ்யா விளங்கியது. பிரபல்யமான சமூகப் புரட்சியாளரது பரிசோதனையால் பெரிய நம்பிக்கை ஏற்பட்டது. 1917-ல் ஒரு காலம் வரை இந்தக் கட்சி உண்மையிலேயே மிகப் பெரும்பான்மை விவசாயிகள் அங்கம் வகித்த கட்சியாக விளங்கியது. ஆனால் என்ன நடந்தது? தாராண்மை முதலாளிகளிடம் விவசாயிகளை பூரணமாக காட்டிக்கொடுப்பதற்கு இந்தக் கட்சி தனது செல்வாக்கை பயன்படுத்தியது. சமூகப் புரட்சியாளர்கள் ஏகாதிபத்தியத்தோடு நேசப் புரிந்துணர்வு கூட்டுச் சேர்ந்து ரஷ்ய பாட்டாளி வர்க்கத்திற்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்தினார்கள்.

இந்த சிறந்த பரிசோதனை விளக்குவது விவசாயிகளை அடிப்படையாகக் கொண்ட குட்டி முதலாளித்துவக் கட்சிகள் இரண்டாந்தரப் பிரச்சனைகள் கோலோச்சும் வரலாற்று மந்தமான காலங்களிலே தாம் சுயாதீனமான கொள்கை வைத்திருப்பதாக சாடைகாட்டினாலும், சமுதாயத்தின் புரட்சிகர நெருக்கடியானது சொத்துடமை பற்றிய அடிப்படைப் பிரச்சினையை அன்றைய நாளின் நடப்பாக வைக்கும் பொழுது, குட்டி முதலாளித்துவ 'விவசாயிகள்' கட்சி தானாகவே முதலாளித்துவ வர்க்கத்தின் கைகளில் பாட்டாளி வர்க்கத்திற்கு எதிரான கருவியாகும்.

எனக்கும் லெனினுக்கும் இடையே இருந்த பழைய கருத்து வேற்றுமைகளை வஞ்சகமின்றி அந்த வருடத்திலோ இந்த வருடத்திலோ, மாதத்திலோ, நாளிலோ பொறுக்கியெடுத்த மேற்கோள்கள் என்ற கருத்தில் ஆய்வு செய்யாமல் அவைகளை வரலாற்று முன்னோக்கில் வைத்து ஆய்வு செய்தால் அந்தக் கருத்து வேற்றுமைகள் குறைந்தது எனது சார்பிலாவது மிகத் தெளிவாகும். அதாவது ஜனநாயகக் கடமைகளை தீர்ப்பதற்கு பாட்டாளிகளதும் விவசாயிகளதும் ஐக்கியம் தேவையோ இல்லையோ என்பதல்ல பிரச்சினை மாறாக அந்தப் புரட்சிகர ஐக்கியமானது என்ன கட்சி அரசியல் அரச வடிவங்களை எடுக்கும் அது தொடர்ந்த புரட்சியின் அபிவிருத்தியிலே என்ன பின் முன் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதுதான் பிரச்சினையாக இருந்ததென்று தெரியவரும். அந்த நாட்களில் எனது நிலைப்பாடு சம்மந்தமான கருத்து வேற்றுமையை பற்றியே நான் சொல்லுவேன். புக்காரினதும் றடெக்கினதும் நிலைப்பாடு சம்மந்தமாக அவர்கள் தாமே விடையிறுக்க வேண்டும்.

'நிரந்தரப் புரட்சி' தத்துவத்தின் சூத்திரம் லெனினது சூத்திரத்திற்கு எவ்வளவு அண்மித்தது அண்ணளவாக்கப்பட்டுள்ளது (தோராயமாக்கப்பட்டுள்ளது). பின்வரும் ஒப்பு நோக்குகையால் துலம்பரமாக விளக்கலாம். 1905 வசந்தத்தில் மாஸ்கோவில் அக்டோபர் பொதுவேலை நிறுத்தத்திற்கு முன்பும் டிசம்பர் கிளர்ச்சி எழுச்சிகளுக்கு முன்பும் நான் லஸ்ஸால் இன் பேச்சுக்களுக்கு பின்னரும் முன்னுரையை எழுதினேன். "பாட்டாளி வர்க்கமும் அதே நேரத்தில் முதலாளித்துவ வர்க்கமும் தத்தமது வரலாற்று கட்டளைப்பணியை விவசாயிகளதும் நகர்ப்புற குட்டி முதலாளிகளதும் ஒத்தாசையினால் பூரணத்துவம் செய்யும் என்பது தானாய் உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று. "பாட்டாளி வர்க்கம் கிராமப்புறத்துக்கு தலைமை தாங்கியும் அதைத் தனது இயக்கத்தினால் கவர்ந்தும் கிராமப்புறங்களின் திட்டங்கள் வெற்றியளிக்கும் என்ற ஆவலையும் கொடுக்க வேண்டும். எப்படியிருந்தபோதும்." பாட்டாளி வர்க்கம் தவிர்க்க முடியாதபடி தொடர்ந்து தலைவனாக இருக்கும். இது "பாட்டாளி வர்க்கத்தினதும் விவசாயிகளதும் சர்வாதிகாரமல்ல" மாறாக விவசாயிகளின் ஆதரவோடு கூடிய பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரம்*, (2, ட்ரொட்ஸ்கி, 1905 ஆம் ஆண்டு, பக்கம் 281).

1909 கட்சி மகாநாட்டில் ரோசா லுக்சம்பேர்க்கின் நெருக்குவாரத்தால் போல்ஷிவிக் கட்சியின் பழைய சூத்திரத்திற்கு பதிலாக "விவசாயிகளின் ஆதரவுடனான பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்"[2] சூத்திரம் ஏற்கப்பட்டதை மகாநாடு முடிந்துதான் தாமதம், லெனின் எழுதிய எழுத்துக்களை மேற்கோள் காட்டி 1909-ல் நான் எழுதிய போலந்துக் கட்டுரை எழுத்துக்களையும் 1905-ல் நான் எழுதிய எழுத்துக்களையும் ஒப்புநோக்கிப் பாருங்கள் திடீர் நிலைப்பாடு மாற்றத்தைப் பற்றிப் பேசிய மென்ஷிவிக்குகளுக்கு பதிலளிக்கையில் போல்ஷிவிக்குகள் தேர்ந்தெடுத்த சூத்திரம் சொல்லுகிறது: பாட்டாளி வர்க்கம் தன் பின்னே விவசாயிகள் பின்தொடர அதற்குத் தலைமை தாங்கும்.[3] இந்தச் சூத்திரங்களின் எண்ணக்கருவெல்லாம் ஒன்றென்பது வெளிப்படையாகத் தெரியவில்லையா? இவைகளின் எண்ணக்கருக்கள் பாட்டாளிகளதும் விவசாயிகளதும் சர்வாதிகாரம் என்பதை இரத்தினச் சுருக்கமாக வெளிப்படுத்துவது வெளிப்படையாக தெரியவில்லையா? விவசாயிகளின் ஆதரவுடனான பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரம் என்ற "சூத்திரம்" பாட்டாளிகளதும் விவசாயிகளதும் அதே சர்வாதிகாரம் என்ற எல்லைக்குள் முழுமையாக தங்கியிருக்கவில்லையா? (XI, பாகம் 1 219, 224, எனது அழுத்தம்) (எங்களது புரட்சிப் போராட்டத்தில் பாட்டாளி வர்க்கத்தின் இலக்கு XV 333, 339)

இவ்வாறு லெனின், ஒரு சுயாதீனமான விவசாயிகள் கட்சி மற்றும் புரட்சிகர அரசாங்கத்திலே அதன் அதிகமான மேலாதிக்க பாத்திரம் என்ற எண்ணக்கருவையும் தவிர்த்த ஒரு 'குறியீட்டுக்கணித' சூத்திரத்தின் மீது, பாட்டாளி வர்க்கம் விவசாயிகளுக்கு தலைமை தாங்க வேண்டும், பாட்டாளி வர்க்கம் விவசாயிகளால் ஆதரிக்கப்படும், இதன் விளைவாக புரட்சிகர அதிகாரம் பாட்டாளி வர்க்க கட்சியின் கைகளில் செறிந்திருக்கும் என்று கட்டுமானத்தை வைத்தார். இதுவே இரத்தினச் சுருக்கமாக நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் மையப்புள்ளியாகும்.

இன்று, இந்த வரலாற்றுப் பரிசோதனை நடந்து முடிந்த பின்னர் சர்வாதிகாரப் பிரச்சினை பற்றிய பழைய அபிப்பிராயபேதங்களை பற்றி ஆகக் கூடுதலாகச் சொல்ல முடியுமென்றால் இப்படித்தான் சொல்லலாம்.

லெனின் எப்பொழுதும் பாட்டாளி வர்க்கத்தின் தலைமைத்துவ பாத்திரத்திலிருந்து தொடங்கி தொழிலாளர்களதும் விவசாயிகளதும் புரட்சிகர ஜனநாயகக் கூட்டின் அவசியம் பற்றி அழுத்திக்கூறியதோடு அந்தக்கருத்தை அபிவிருத்தி செய்தார். லெனின் எங்களெல்லோருக்கும் போதித்ததெல்லாம் இதைத்தான், நான் இடைவிடாமல் இந்த ஐக்கியத்தில் தொடங்கி எப்படியென்றாலும் பாட்டாளி வர்க்கத்தின் தலைமை பற்றி எடுத்துக்கூறி இந்தக் கூட்டை மட்டும் கூறியதோடல்லாமல் அக்கூட்டாலான அரசாங்கத்திலும் பாட்டாளி வர்க்கமே தலைமை தாங்க வேண்டுமென்பதை அடித்துக்கூறினேன். இந்த பிரச்சினையிலே வேறெந்த வித்தியாசத்தையும் காண முடியாது.

மேற்சொன்ன விடையம் தொடர்பாக இரண்டு மேற்கோள்களைப் பார்ப்போம் என்று எனக்கும் லெனினுக்குமிடையே முரண்பாடு நிலவியதென்பதை நிறுவிக்காட்ட ஸ்ராலினும் சினோவியேவும் எடுத்தாண்ட 'விளைவுகளும் வாய்ப்புவளங்களும்' என்பதில் இருந்த மேற்கோள், மற்றையது லெனினால் எனக்கெதிராக தர்க்கித்து எழுதப்பட்ட கட்டுரையிலிருந்து, அதே நோக்கத்திற்காக றடெக் எடுத்தாளுவது..

இதோ முதலாவது மேற்கோள்:

"பாட்டாளி வர்க்கம் ஒரு அரசாங்கத்தில் பங்குகொள்வதுங்கூட யதார்த்தத்தில் நடக்கக்கூடிய காரியம்தான் கோட்பாட்டு ரீதியிலும் அது அனுமதிக்கூடியதுதான் அது ஆதிக்கம் செய்யும் முன்னணிப் பாத்திரமாய் பங்கு கொள்வது மட்டுந்தான் அனுமதிக்கக் கூடியது. ஒருவர் அந்த அரசாங்கத்தை பாட்டாளிகளதும் விவசாயிகளதும் சர்வாதிகார அரசாங்கமென்று அன்றேல் பாட்டாளிகளதும் குட்டி முதலாளிகளதும் கூட்டரசாங்கமென்று விவரிக்கக்கூடும். அப்போது பிரச்சினை தீராது மீண்டும் இருக்கும். அந்த அரசாங்கத்தை ஏன் நாடு முழுவதையும் ஆதிக்கம் செலுத்தி யார் ஆளுவது என்பதே அந்தப் பிரச்சினை, நாம் அதை தொழிலாள வர்க்க அரசாங்கமென்று கூறினோமானால் அந்த அரசாங்கத்தை ஆதிக்கம் செலுத்தி ஆளுவது தொழிலாள வர்க்கமென்ற விடை கிடைக்கிறது. (எங்கள் புரட்சி 1906, பக்கம் 250) (இந்த புத்தகத்தின் 202-ம் பக்கத்தைப் பார்க்கவும்)

(1905-ல்! ) நான் விவசாயிகளையும் புத்திஜீவிகளையும் ஒரே தளத்தில் வைத்தேன் என்று சொல்லி (1925-ல்!) சினோவியேவ் ஒப்பாரி வைத்தார். மேலே மேற்கோள் காட்டிய வரிகளிலிருந்து சினோவியேவ் எதையும் எடுக்கவில்லை. குறிப்பிட்ட புத்திஜீவிகள் அந்தக்காலத்திய நிலைமைகளின் விளைபொருளாவர். அன்றைய புத்திஜீவிகள் இன்றிலும்பார்க்க அரசியல்ரீதியாக முற்றிலும் வேறுபட்ட பாத்திரத்தை ஆற்றினர். அந்தக் காலத்தில் பிரத்தியேகமாக புத்திஜீவிஸ்தாபனங்கள் விவசாயிகளின் பேரில் பேசின, சோசலிசப் புரட்சியாளர்கள் தங்களது அமைப்பை பாட்டாளிகள் விவசாயிகள் புத்திஜீவிகள் என்ற 'மும்மூல' சேர்க்கை இயக்கமாகக் காட்டினார்கள். அன்று மென்ஷிவிக்குகள் அந்தக் காலத்தில் முதலாளித்துவ ஜனநாயகம் மலர்கிறது என்பதை நிறுவுவதற்காக ஒவ்வொரு தீவிரப் புத்திஜீவிகளின் கால்களையும் பிடித்துக் கொண்டார்கள். அந்நாட்களில் 'சுயாதீனமான' ஒரு சமூகக் குழு என்ற அடிப்படையில் புத்திஜீவிகளின் திராணியின்மை பற்றியும் புரட்சிகரமான விவசாயிகளின் தீர்மானகரமான முக்கியத்துவம் என்பது பற்றியும் நானே நூற்றுக்கணக்கான முறை திருப்பித் திருப்பிச் சொல்லியிருக்கிறேன்.

எப்படியென்றாலும் நாங்கள் இங்கே ஒரு வசனம் பற்றிய சரிபிழையை கட்டாயமாக ஆராயவில்லை. அந்த வசனத்தைப் பாதுகாக்கும் நோக்கமும் எனக்கில்லை. அந்த மேற்கோளகளின் சாராம்சம் இதுதான்: லெனினது எண்ணக்கருவான ஜனநாயக சர்வாதிகாரம் என்பதன் உள்ளடக்கத்தை நான் பூரணமாக ஏற்றேன் அதன் அரசியல் இயங்குமுறையை பற்றித்தான் மேலும் நிதானமாக வரையறை செய்ய வேண்டும் என்று நான் கோரினேன் அதாவது அந்தக் கூட்டினுள்ளே பாட்டாளி வர்க்கம் குட்டி முதலாளித்துவ பெரும்பான்மை குழாமுக்குள் சிறை வைக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்பதையே கோரினேன்.

இப்பொழுது றடெக் தானே சுட்டிக்காட்டிய 1916 லெனினது கட்டுரையை ஆராய்வோம். அது சம்பிரதாயமாகத்தான ட்ரொஸ்கிக்கு எதிராகத் தொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அது புக்காரின் பியட்டாக்கோவ் இந்த வரிகளின் ஆசிரியரான றடெக் போன்ற மற்றும் அனேக தோழர்களுக்கு எதிராக தொடங்கப்பட்டதாகும். அந்த நாட்களில் லெனின் வெறும் பேருக்கு மாத்திரந்தான் தனது தாக்கத்தை எனக்கெதிராக தொடுத்துள்ளார் என்ற எனது அபிப்பிராயம் முழுமையாகச் சரியாக்கப்பட்டுள்ளது என்பது மிக மதிப்புள்ள இணக்கமாகும். ஆனால் உள்ளடக்கத்தில் உண்மையிலே எனக்கெதிராவல்ல வென்பதை நான் இப்பொழுது விளக்கிக் காட்டுகிறேன், அந்தக் கட்டுரையில் (இரண்டு வரிகளில்) நான் விவசாயிகளை நிராகரித்தேன் என்ற எனக்கெதிரான குற்றச்சாட்டு உள்ளது இதுவே பிற்காலத்தில் இழிபாசாங்கினரதும் அவர்களது சீடர்களதும் பிரதான மூலோபாயமாக விளங்கியது. இதோ றடெக் எழுதிய அந்தக் கட்டுரையின் குறிபொருள் அடங்கிய பந்தி:

லெனின், எனது சொந்த சொற்களான "பாட்டாளி வர்க்கமும் பாட்டாளி வர்க்கம் அல்லாத கிராமப்புற ஜனங்களை பின்தொடரச் செய்து நிலப்பிரபுக்களின் நிலபுலன்களை பறித்தெடுத்து முடியாட்சியை தூக்கியெறிவதுதான் தேசிய முதலாளித்துவ புரட்சியின் ஒட்டுமொத்தமாகும்" என்பதை மேற்கோள்காட்டி, ரஷ்யாவில் பாட்டாளிகளதும் விவசாயிகளதும் சடங்குபூர்வமான புரட்சிகர ஜனநாயக சர்வாதிகாரம் என்பதை ட்ரொட்ஸ்கி கருத்தில் கொள்ளவில்லை என்றார். (XIII, 214)* *(புரட்சியைப் பற்றிய இரண்டு வரிகள் 4-வது பதிப்பு  XXI பக்கம் 382)

நான் விவசாயிகளை "நிராகரித்தேன்" என்று லெனின் சொல்லத்தலைப்பட்ட குற்றச்சாட்டு உண்மையிலே எனக்கெதிரானதல்ல மாறாக புக்காரினுக்கும் றடெக்குக்கும் எதிரானதாகும். இருவரும் ஜனநாயகப் புரட்சியை தாண்டிப்பாய வேண்டுமென்ற நிலைப்பாட்டை எடுத்தவர்களாவர். இது மேற்சொன்னவைகளிலிருந்து மாத்திரமல்ல றடெக் தானே நிறுவிக் காட்டவென்று மேற்கோளாக தேர்ந்தெடுத்த லெனினது கட்டுரையின் "கருப்பொருளே" இதைத்தான் காட்டுகின்றன. உண்மையென்னவெனில் லெனின் நேரடியாக எனது கட்டுரையின் சொற்களை மேற்கோளாக காட்டி ஒரு சுயாதீனமானதும் துணிவானதுமான பாட்டாளி வர்க்க கொள்கை மாத்திரந்தான் பாட்டாளி வர்க்கமல்லாத கிராமப்புற வெகுஜனங்களைப் பின்தொடர வைத்து நிலப்பிரபுக்களின் நிலபுலன்களை பறித்தெடுத்து முடிமன்னனையும் தூக்கியெறியும் போன்றவற்றை சொல்லி மேலும் தொடர்ந்தார். ட்ரொட்ஸ்கி, இதுதான் புரட்சிகர ஜனநாயக சர்வாதிகாரம் என்று கருத்திற்கொள்ளவில்லை, வேறு சொற்களில் சொல்வதென்றால் லெனின் இங்கே உறுதிப்படுத்தி சான்று பகருகிறார். ட்ரொட்ஸ்கி உண்மையில் போல்ஷிவிச சூத்திரத்தின் முழு உள்ளடக்கத்தையும் ஏற்றுக்கொள்கிறார் (பாட்டாளி விவசாயிகளது ஒத்துழைப்பையும் அவ் ஒத்துழைப்பின் ஜனநாயகக் கடமையையும்) ஆனால் இதுதான் அதாவது தேசியப் புரட்சியின் ஒட்டுமொத்தந்தான் ஜனநாயக சர்வாதிகாரம் என்பதை அங்கீகரிக்க மறுக்கிறார். ஆகையால் இதிலிருந்து தொடர்வது என்னவெனில், வெளிப்படையாக 'கூர்மையான' இந்த தர்க்க கட்டுரையில் உள்ள சர்ச்சை புரட்சியின் அடுத்த கட்டத்தின் வேலைத்திட்டத்தையும் அதன் வர்க்க உந்துசக்திகளையும் சம்பந்தப்படுத்தவில்லை, மாறாக நுட்பமாக இந்த சக்திகளின் அரசியல் இயைபுபடுத்தலை, சர்வாதிகாரத்தின் அரசியல் மற்றும் கட்சி குணாம்சத்தை சம்பந்தப்படுத்துகிறது என்பதாகும். அதேவேளை, அந்நாளைய நிகழ்வுப்போக்குகளின் தெளிவற்ற தன்மையின் ஒரு பங்கின் விளைவாகவும் ஒரு பகுதி கன்னைவாத மிகைப்படுத்தல்களின் விளைவாகவும், தர்க்கரீதியான தப்பபிப்பிராயங்கள் போன்றவை புரிந்துகொள்ளக்கூடியதும் தவிர்க்க முடியாதவையுமாகும். ஆனால் சம்பவங்கள் நடந்து முடிந்ததன் பின்னர் பிரச்சினையில் அத்தகைய குழப்பத்தை அறிமுகப்படுத்துவதற்கு றடெக் அப்படி சூழ்ச்சி செய்வது முற்றிலும் புரிந்துகொள்ள முடியாததாகும்.

லெனினுடனான எனது அரசியல் விவாதம் புரட்சியிலே விவசாயிகள் சுயாதீனமாகச் செயற்படும் சாத்தியக்கூறுகள் இருக்கிறதா (எந்த மட்டத்திற்கு சுயாதீனமாகச் செயற்பட முடியும்) குறிப்பாக ஒரு சுயாதீனமான விவசாயிகள் கட்சிக்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்பதாகும். இந்த விவாதத்திலே விவசாயிகளின் சுயாதீனமான பாத்திரத்தை லெனின் மிகையாக மதிப்பிட்டுள்ளார் என்று நான் குற்றஞ்சாட்டினேன். நான் விவசாயிகளின் புரட்சிகரப் பாத்திரத்தை குறைத்து மதிப்பிடுவதாக லெனின் என்னைக் குற்றஞ்சாட்டினார். வாதிக்கப்படும் விஷயம் பற்றிய தர்க்கத்திலிருந்தே இது வந்தது. இரண்டு தசாப்தங்களுக்கு பின்னர் அன்றைக்கிருந்த கட்சி உறவுகளின் உள்ளடக்கத்திலிருந்து துண்டாடி வெளியே எடுத்து, ஒவ்வொரு வாக்குவாதங்களையோ இரண்டாந்தர தவறுகளையோ பரம அர்த்தமுள்ளதாக முதலீடுசெய்து வாக்குவாதங்களின் உண்மையான அச்சு என்னவாக இருந்தது என்பதை அறிய எமது புரட்சியின் அனுபவ வெளிச்சத்தில் தங்கியிராமல், இந்த வேறுபாடுகளின் வார்த்தையளவில் இல்லாத உண்மையான குறியிலக்கு என்னவென்பதை கருத்திற் கொள்ளாமல், இன்று எவரும் இந்த பழைய மேற்கோள்களை பயன்படுத்துவது வெறுக்கத்தக்கது இல்லையா?

புரட்சியின் கட்டங்கள் பற்றிய லெனினது பொழிப்புக் கட்டுரையிலிருந்து தேர்ந்தெடுக்கும் மேற்கோள்களை நான் மட்டுப்படுத்த நிர்பந்திக்கப்பட்டுள்ளேன். இது 1905-ன் பிற்பகுதியில் எழுதப்பட்டது ஆனால் 1926-ல் தான் முதன் முதலாக லெனினது கதம்பம்* என்ற பேரில் 5-வது பாகமாக வெளியிடப்பட்டது. *(புரட்சியின் பருவங்கள் திசையும் முன்னோக்குகளும் 4-வது பதிப்பு x, 73-74 சிறிய லெனின் நூலகம், ஆங்கிலப் பதிப்பு பாகம் Vl, 1905 புரட்சி (1931) பக்கம் 54, 55) இந்தக் கட்டுரையின் பிரசுரமானது எதிர்ப்புக் கன்னைக்காரர்களுக்கு கிடைத்த அழகான பிரசுரமென்றே றடெக் அடங்கலான எல்லா எதிர்ப்புக்காரர்களும் மதிப்பளித்தார்கள் என்பதை இங்கே நான் ஞாபகப்படுத்துகிறேன். ஸ்ராலினிச கட்டுரைகளின் நியாயப் பிரமாணப்படி இக்கட்டுரைகளிலே லெனின் ட்ரொட்ஸ்கிச தவறைவிட்டார். கம்யூனிச அகிலத்தின் நிர்வாக சபையின் 7-வது பிளீனத்தின் தீர்மானத்தின் முக்கிய விடையம் என்னவெனில் அது ட்ரொட்ஸ்கிசம் என்று கண்டித்ததெல்லாம் உண்மையிலே வேண்டுமென்றும் பகிரங்கமாகவும் லெனினது அடிப்படை கட்டுரைக்கு எதிரான கண்டனமாகும். ஸ்ராலினிஸ்டுகள் தங்களது அந்தப் பிரசுரத்தின்பால் மூர்க்கங்கொண்டு பல்லை நெறுமினார்கள். ஆய்வுக்கட்டுரைகளின் இந்த தொகுதியின் பதிப்பாசிரியர் கமனேவ் கொஞ்சமும் நாணமின்றி, எங்களிடையே ஒரு கூட்டு தயாரிக்கப்பட்டிருந்திராவிட்டால் தான் எந்தச் சூழ்நிலையிலும் அந்த ஆவணத்தை பிரசுரிக்க விட்டிருக்கமாட்டேன் என்று வெளிப்படையாக எந்த வெட்கமும் இல்லாமல் "இயல்பாகவே' கூறினார். கடைசியாக போல்ஷிவிக்கிலே கொஸ்ற்சேவா எழுதிய ஒரு கட்டுரையில், இந்த ஆய்வுரைகள், விவசாயிகளை பற்றி முழுமையாகவும் நடுத்தர விவசாயிகளை பற்றிக் குறிப்பாகவும் லெனின் ட்ரொட்ஸ்கிச நிலைப்பாட்டில் இருந்தார் என்ற குற்றத்திலிருந்து அவரைக் காப்பாற்றுமுகமாக கபடத்தனமாக உண்மைக்குப்புறம்பாக திரிக்கப்பட்டிருந்தன.

இதனுடன் சேர்த்து 1909-ல் லெனின் எழுதிய எனக்கும் அவருக்குமிடையேயுள்ள கருத்து வேற்றுமையில் அவரது சொந்த மதிப்பீட்டை இங்கே மேற்கோள் காட்டுகிறேன்.

"இந்த நேரத்தில் ஜனநாயக வெகுஜனங்களின் பிரதிநிதிகள் தொழிலாளர் அரசாங்கத்திலே பங்கு கொள்வதை தோழர் ட்ரொட்ஸ்கி அனுமதித்துள்ளார். அதாவது பாட்டாளிகளதும் விவசாயிகளதும் பிரதிநிதிகளது அரசாங்கத்தை அவர் அனுமதித்துள்ளார். எந்தச் சூழ்நிலையிலே புரட்சிகர அரசாங்கத்திலே பாட்டாளிகள் பங்கு கொள்வதை அனுமதிப்பது என்பது வேறு விடையம் இந்தப் பிரச்சினையிலே போல்ஷிவிக்குகள் ட்ரொட்ஸ்கியை மாத்திரமல்ல போலந்து சமூக ஜனநாயக வாதிகளையும் நேருக்கு நேர் முகங்கொடுப்பதை அதிகமாகத் தவறிவிட்டார்கள். புரட்சிகர வர்க்கங்களின் சர்வாதிகாரம் என்ற பிரச்சினை இந்த அல்லது அந்த புரட்சிகர அரசாங்கத்திலே "பெருபான்மை" பற்றிய பிரச்சினையாகவோ அன்றேல் என்ன சூழ்நிலையிலே அந்த அரசாங்கத்திலோ இந்த அரசாங்கத்திலோ சமூக ஜனநாயகவாதிகள் பங்குகொள்வதை அனுமதிப்பது பற்றிய பிரச்சினையாகவோ குறைக்கப்படத்தக்கதல்ல (XI, பகுதி மி, பக்கம் 229 எனது அழுத்தம்)* *(எங்களது புரட்சியிலே பாட்டாளிகளது போராட்டத்தின் இலக்கு 4-வது பதிப்பு XV, பக்கம் 344)

பாட்டாளிகளதும் விவசாயிகளதும் பிரதிநிதிகளின் அரசாங்கத்தை ட்ரொட்ஸ்கி ஏற்றுள்ளார் என்றும் அதிலிருந்து ட்ரொட்ஸ்கி விவசாயிகளிடமிருந்து "தாண்டிப்பாயவில்லை" என்பதும் இந்த லெனினது மேற்கோள்களிலிருந்து இது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சர்வாதிகாரப் பிரச்சினை அரசாங்கத்திலுள்ள பெரும்பான்மை என்ற பிரச்சினைக்குள் சுருங்கிப்போகக் கூடாதென்று லெனின் மீண்டும் அழுத்திச் சொன்னார். இதுவெல்லாம் விவாதத்திற்கு அப்பால் சென்றுவிட்டது. இங்கு சம்பந்தப்பட்டுள்ளது என்னவென்றால், முதலும் முக்கியமானதுமாக பாட்டாளிகளதும் விவசாயிகளதும் கூட்டுப் போராட்டம் மற்றும் அதன் விளைவாக விவசாயிகள் மீது செல்வாக்கை பெறும் பொருட்டு தாராண்மை அல்லது தேசிய முதலாளித்துவத்திற்கு எதிரான பாட்டாளி வர்க்கத்தின் முன்னனிப்படையின் போராட்டம் ஆகும். ஆனால் தொழிலாளர்களதும் விவசாயிகளதும் புரட்சிகர சர்வாதிகார பிரச்சினையை அரசாங்கத்தில் ஏதாவது பெரும்பான்மை வகிப்பது என்ற பிரச்சினைக்கு சுருக்கக்கூடாது. இருந்தபோதிலும் புரட்சியின் வெற்றியின்போது இந்தப் பிரச்சினை தவிர்க்க முடியாதபடி தீர்க்கமாக எழத்தான் செய்யும். நாங்கள் பார்த்ததுபோல (என்ன நடந்தாலும்) கட்சி ஒரு புரட்சிகர அரசாங்கத்தில் பங்கு கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டால் அப்பொழுது சிலவேளை ட்ரொட்ஸ்கியோடும் போலந்து சமூக ஜனநாயகவாத தோழர்களோடும் முரண்பட நேர்ந்தாலுமென்று அதற்கேற்ற வகையில் செயல்பட லெனின் கவனமாக பிரத்தியேக தயாரிப்பை மேற்கொண்டிருந்தார். பாட்டாளி வர்க்க பிரதிநிதிகள் சிறுபான்மையினராக ஜனநாயக அரசாங்கத்திலே பங்கு கொள்ள வேண்டியது லெனினைப் பொறுத்தவரை தத்துவார்த்த ரீதியில் அனுமதிக்கக்கூடியது. ஆதலால் அபிப்பிராய பேதங்கள் வரக்கூடும் என்று எதிர்பார்த்தார். அப்படி அபிப்பிராய பேதங்கள் எங்களுக்குள் ஏற்படவில்லை என்று நடந்து முடிந்த சம்பவங்கள் நிறுவிக்காட்டியுள்ளன. 1917 நவம்பரில் சமூகப் புரட்சியாளர்களோடும் மென்ஷிவிக்குகளோடும் ஒரு கூட்டரசாங்கம் தொடர்பாக கட்சியின் உயர் மட்டத் தலைமையிலே ஒரு கடுமையான போராட்டம் சீறியெழுந்தது. சோவியத்துக்கள் அடிப்படையில் கூட்டரசாங்கத்திற்கு கொள்கையளவில் ஆட்சேபிக்காமல், போல்ஷிக் பெரும்பான்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்று லெனின் திட்டவட்டமாகக் கோரினார். இந்த போராட்டத்தில் லெனினோடு நான் தோளோடு தோள் சேர்த்து நின்றேன்.

இப்பொழுது றடெக் சொல்வதைப் பார்ப்போம். பாட்டாளிகளதும் விவசாயிகளதும் ஜனநாயக சர்வாதிகாரம் பற்றிய முழுப் பிரச்சினையையும் றடெக் எந்த மட்டத்திற்கு சுருக்கியுள்ளார்?

1905 காலத்திய போல்ஷிவிக் தத்துவம் அடிப்படையிலேயே சரி என நிரூபிக்கப்பட்டதா? என்று றடெக் 'அங்கே' கேட்கிறார். பெட்ரோகிராட் தொழிலாளர்கள் விவசாயிகளது கூட்டு நடவடிக்கை (பெட்ரேகிராது கோட்டை உட்படைகள்) ஜாரிசத்தைத் தூக்கி வீசியது. (1917-ல் ட்ரொட்ஸ்கி). 1905-ன் சூத்திரம், வர்க்கங்களிடையேயான பரஸ்பர உறவுகளின் அடிப்படையை மாத்திரம் தீர்க்கதரிசனம் செய்ததேயொழிய ஒரு ஸ்தூலமான அரசியல் ஸ்தாபனத்தையல்ல.

தயவுசெய்து ஒரு நிமிடம் பொறுங்கள்! பழைய லெனினிச சூத்திரத்தை ஒரு 'குறியீட்டுக்கணித' சூத்திரமாக தீர்மானிப்பதன்மூலம், றடெக் யோசனையற்று ஒரு வெற்றுப் பொது இடமாகச் சுருக்குவது போல அது குறைக்கப்படுவது அனுமதிக்கக்கூடியது என நான் குறிப்பாய் தெரிவிக்கவில்லை. "பாட்டாளிகளும் விவசாயிகளும் சேர்ந்து ஜாரிசத்தை தூக்கியெறிந்ததில் இந்த அடிப்படை விஷயம்" அடையப்பட்டது. ஆனால் அனைத்து வெற்றிவாகை சூடிய புரட்சிகளிலும் இந்த 'அடிப்படை விஷயம்' விதிவிலக்கில்லாமல் அடையப்பட்டன. ஜார்கள் நிலப்பிரபுக்கள், பாதிரிகள் போன்றோர் எங்கும் எப்பொழுதும் பாட்டாளிகளதும் அன்றேல் அவர்களது முன்னோர்களான பிலேபியன்களதும் விவசாயிகளதும் கைகளினால் நையப்புடைக்கப்பட்டார்கள். 16ம் நூற்றாண்டிலும் அதற்கு முன்னரும் ஜேர்மனியில் இதுவே நடந்தது. சீனாவில் தொழிலாளிகளும் விவசாயிகளும் 'இராணுவவாதிகளை' நையப்புடைத்தார்கள். இவைக்கும் ஜனநாயக சர்வாதிகாரத்திற்கும் என்ன சம்மந்தம்? அப்படியாயின் சர்வாதிகாரம் பழைய எந்தப் புரட்சிகளிலும் எழவில்லை, சீனப்புரட்சியிலும் அது எழவில்லை. ஏன் அப்படி எழவில்லை? எனெனில் தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் புறமுதுகால் புரட்சியின் கள்ள வேலையை, முதலாளித்துவத்தை உட்கார வைக்க முயற்சித்தவர்கள் இருந்தார்கள். "அரசியல் ஸ்தாபனத்திலிருந்து" தன்னை உக்கிரமாக சூக்குமப்படுத்திய றடெக் ஒரு புரட்சியின் "மிக அடிப்படை விஷயமான" புரட்சிக்கு யார் தலைமை கொடுப்பது, யார் ஆட்சியை கைப்பற்றுவது என்பதை மறந்துவிட்டார். ஒரு புரட்சி எப்படியென்றாலும் ஆட்சியதிகாரத்துக்கான போராட்டமாகும். இது ஒரு அரசியல் போராட்டம். இங்கே போராடும் வர்க்கங்கள் வெற்றுக்கையால் போராடுவதில்லை. மாறாக "அரசியல் ஸ்தாபனம்" என்ற ஊடகத்தின் மூலமே போராடுவார்கள் (கட்சிகள் போன்றவை).

எங்களை பாவிகள் என்று இடிமுழக்கம் செய்யும் "மார்க்சிய லெனிச விதிமுறையின் சிக்கல் தன்மை பற்றி ஆதி அந்தம் மட்டும் சிந்திக்காத" றடெக் போன்றவர்கள் விஷயத்தை இப்படி விளங்கி வைத்துள்ளார்கள்: "அனைத்து விடயமும், தொழிலாளர் விவசாயிகளது கூட்டரசாங்கத்தல் வேற்றுமையின்றி முடிவுக்கு வரும். இது எந்தவித வேற்றுமையுமற்ற தொழிலாளர் விவசாயிகள் கட்சிகளின் கூட்டரசாங்கமென்று சிலர் எண்ணுகிறார்கள்."

என்ன மரமண்டைகள் 'இவைகள்'! றடெக்குங்கூட என்ன யோசித்தார்? வெற்றிவாகை சூடிய புரட்சியானது புரட்சிகர வர்க்கங்களின் ஒரு பிரத்தியேகமான பரஸ்பர உறவை பிரதிபலிப்பதையும் முத்திரை குத்திச் செல்வதையும் பிணைந்திருக்காதென்றா றடெக் யோசிக்கிறார்? றடெக் 'சமுதாயவியல்' பிரச்சினையை வெறும் வெற்று வசனங்கள் மாத்திரம் மிஞ்ச வேறொன்றும் மிஞ்சாத மட்டத்திற்கு ஆழப்படுத்தியுள்ளார்.

தொழிலாளர்களதும் விவசாயிகளதும் கூட்டினது அரசியல் வடிவத்தை சூக்குமப்படுத்த இவர்களை அனுமதிக்கக் கூடாதென்று இதே றடெக் 1927 மார்ச்சில் கம்யூனிச கல்விக் கழகத்தில் ஆற்றிய உரையில் பயன்படுத்திய பின்வரும் சொற்கள் திறமாக எங்களுக்கு எடுத்துக்காட்டுகின்றன:

"ஒரு வருடத்திற்கு முன்னதாக இந்த அரசாங்கத்தை (கான்ரோன்) விவசாயிகள் தொழிலாளர் அரசாங்கமென்று நாமஞ்சூட்டி பிராவ்தாவில் நான் ஒரு கட்டுரை எழுதினேன். பதிப்பாசிரியர் குழுவில் இருந்த தோழர் ஒருவர் நான் இதிலே தவறிழைத்ததாக ஊகித்து அதைத் தொழிலாளர் விவசாயிகள் அரசாங்கம் என்று மாற்றினார். நான் அதை எதிர்த்து ஆட்சேபிக்காது தொழிலாளர் விவசாயிகள் அரசாங்கமென்று இருக்கவிட்டேன்."

ஆகவே மார்ச் 1927-ல் (1905-ல் அல்ல) விவசாயிகள் தொழிலாளர் அரசாங்கம் என்பது தொழிலாளர் விவசாயிகள் அரசாங்கத்திலும் வேறுபட்டதென்பது றடெக்கினது அபிப்ராயம். பிராவ்தா ஆசிரியருக்கு அது புரியவில்லை. எவ்விதத்திலும் எனக்கு அது விளங்கவில்லை என்பதை ஒப்புக்கொள்ளுவேன். எங்களுக்கு தொழிலாளர் விவசாயிகள் அரசாங்கம் என்பது நன்றாக விளங்கும். விவசாயிகள் தொழிலாளர் அரசாங்கம் என்னவிதத்திலே தொழிலாளர் விவசாயிகள் அரசாங்கத்தினின்றும் வேறுபட்டிருக்கிறது? தயவுசெய்து புதிரான இந்த பெயரடைகளின் இடம்மாற்றலை விளங்கப்படுத்தினால் பெரிய உதவியாக இருக்கும். இங்கே தான் நாங்கள் பிரச்சினையின் இருதயத்தை தொடலாம். 1926-ல் சியாங்கே சேக்கின் கன்ரோன் அரசாங்கத்தை விவசாயிகள் தொழிலாளர் அரசாங்கமென்று றடெக் நம்பினார். 1927-ல் அதே சூத்திரத்தை மீண்டும் உச்சாடனம் செய்தார். உண்மையில் தொழிலாளர் விவசாயிகள் போராட்டத்தை பாவித்து பின்பு அவர்களை இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்துக் கொணர்ந்த ஓர் முதலாளித்துவ அரசாங்கமாக அது நிறுவப்பட்டது. இந்த தவறை எவ்வாறு விளங்கப்படுத்தலாம்? றடெக் இலகுவாக தப்புக்கணக்கு போட்டாரா? இது இலகுவாக, தப்பாய் எடைபோடுவதற்கு அப்பால் உள்ளது. எனக்கு அது விளங்கவில்லை. நான் அதைக் காணவில்லை. நான் ஒரு தவறுவிட்டுவிட்டேன் என்று ஏன் அப்படி அதைச் சொல்லவில்லை. ஆனால் அது அப்படியல்ல இது தகவல்கள் பற்றாமையால் ஏற்பட்ட காரணத் தவறல்ல. ஆனால் அதற்கும் மேலாக இன்று தெளிவானது போல, அவை ஆழமான கோட்பாட்டுத் தவறாகும். தொழிலாளர் விவசாயிகள் அரசாங்கத்திற்கு எதிரான விவசாயிகள் தொழிலாளர் அரசாங்கம் ஆனதொன்றுமல்ல, மாறாக கோமின்டாங் பற்றியதாகும். இதைத்தவிர வேறு எந்த அர்த்தத்தையும் கொள்ள இயலாது. விவசாயிகள், பாட்டாளி வர்க்கத்தை பின்தொடரவில்லையெனில் அவர்கள் முதலாளி வர்க்கத்தை பின்தொடருவார்கள். ஸ்ராலினிச கன்னையின் 'இரண்டு வர்க்க, தொழிலாளர் விவசாயிகள் கட்சிக்கு' எதிரான எனது விமர்சனத்தில் இந்தப் பிரச்சினை போதியளவு தெளிவாக்கப்பட்டுவிட்டது என்றே நான் நம்புகிறேன். (பார்க்க: கம்யூனிச அகிலத்தின் வரைவு வேலைத் திட்டம்: அடிப்படை மீதான ஓர் விமர்சனம்)

தொழிலாளர் விவசாயிகள் அரசாங்கத்திற்கு முற்றிலும் வேறுபடுத்திக் காட்டலில் கன்ரோனின் 'விவசாயிகள்' தொழிலாளர் அரசாங்கம்' என்பது, இன்றைய சீன அரசியல் மொழியில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கு எதிரான ஜனநாயக சர்வாதிகாரம் என்பதன் கருதத்தக்க வெளிப்பாடு மட்டுமே ஆகும்; வேறுவார்த்தைகளில் சொல்வதென்றால் கம்யூனிச அகிலம், 'ட்ரொட்ஸ்கிஸ்ட்' என்று முத்திரை குத்தும் போல்ஷிவிக் அரசியலுக்கு எதிரான ஸ்ராலினிச கோமின்டாங் கொள்கையின் உருவாகும்.

குறிப்புகள்

1. நான்கு டுமாவில் விவசாயிகளது பிரதிநிதிகளாகவிருந்த ட்ருடோவிக்குள் காடேட்டுகள் (தாராண்மைவாதிகள்) மற்றும் சமூக ஜனநாயகவாதிகளுக்கிடையே தொடர்ச்சியாக ஊசலாடிக்கொண்டிருந்தார்கள். - லியோன் ட்ரொட்ஸ்கி.

2. நூற்றுக்கணக்கான மேற்கோள்களில் இந்த மேற்கோள் நிறுவிக்காட்டும் 1905 புரட்சியின்போதே எனக்கு விவசாயிகள் இருப்பு பற்றியதிலும் மேலும் விவசாயப் பிரச்சினை தீர வேண்டும் என்பதிலும் ஐயப்பாடு இருந்தது என்று போகிறபோக்கில் காட்டுவது, அதாவது விவசாயிகளின் முக்கியத்துவம் மாஸ்லோவ், தேல்னகமர், தேல்மன், நெம்ளெ, காச்சின் போன் போன்ற மற்றைய சமூகவியல் வாதிகளால் எனக்கு விளக்கி சொல்லப்படுவதற்கு வெகு காலத்திற்கு முன்னரேயாகும் -லியோன் ட்ரொட்ஸ்கி

3. 1909 மகாநாட்டில் "விவசாயிகள் அதன் பின்னேதொடர தலைமை வகிக்கும் பாட்டாளி வர்க்கம்" என்ற சூத்திரத்தை லெனின் பிரேரித்தார். ஆனால் முடிவில் மென்ஷிவிக்குகளுக்கு எதிராக மகாநாட்டுப் பெரும்பான்மைப் பலத்தைப்பெற்ற போலந்து சமூக ஜனநாயகவாதிகளின் சூத்திரத்தோடு இணங்கிச் சென்றார் -லியோன் ட்ரொட்ஸ்கி


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved