WSWS :Tamil : நூலகம்


I. Dialectics of Nature by Frederick Engels (1883)
INTRODUCTION

I. இயற்கையின் இயங்கியல் பி. ஏங்கெல்ஸ் (1883)
முன்னுரை

Use this version to print | Send feedback

இயற்கையைப் பற்றிய நவீன இயற்கை விஞ்ஞானம் ஒன்று மட்டுமே விஞ்ஞான ரீதியான, முறைப்படுத்தப்பட்ட, பன்முக வளர்ச்சி பெற்றுள்ளது; இந்த வளர்ச்சி பண்டைக் காலத்து மாண்பு மிக்க இயற்கை-மெய்யியல் உள்ளுணர்வுகளுடனும் அராபியர்களின் மிக முக்கியத்துவம் பொருந்திய, ஆனால் துண்டுதுண்டான கண்டுபிடிப்புகளுடனும் -இக்கண்டுபிடிப்புகள் பெரும் பாகம் பலனின்றி மறைந்து விட்டன- வேறுபட்ட வகையில் வளர்ச்சி பெற்றுள்ளது; மிக சமீபத்திய வரலாறு முழுவதையும் போலவே இயற்கையைப் பற்றிய இந்த நவீன ஆராய்ச்சியும், ஜேர்மனியர்களாகிய நாம் மதச்சீர்த்திருத்த காலம் (Reformation)30 என்று குறிப்பிடுகின்ற மகத்தான சகாப்தத்திலிருந்து, அந்தச் சமயத்தில் நம்மை தழுவிய தேசிய துரதிர்ஷ்ட காலத்திலிருந்து, மறுமலர்ச்சிக் காலம் (Renaissance) என்று பிரெஞ்சுக்காரர்களாலும் Cinguecento* என இத்தாலியர்களாலும் -இவற்றில் எந்த பெயரும் அதன் முழுமையை வெளிப்படுத்துவதில்லை- அழைக்கப்படுகின்ற காலத்திலிருந்து தொடங்குகிறது. பதினைந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து இந்தச் சகாப்தம் ஆரம்பிக்கிறது. நகரங்களில் உள்ள நகரத்தார் (Burghers) உதவியுடன் அரசர் குலம் நிலப்பிரபுத்துவ உயர்குடியின் அதிகாரப் பிடிப்பை உடைத்து மகத்தான முடியரசுகளை ஸ்தாபித்தது; சாராம்சத்தில் இவை தேசிய இன அடிப்படையில் அமைந்தன; இவற்றிற்குள்ளிருந்து தான் நவீன ஐரோப்பிய தேசிய இனங்களும் நவீன முதலாளித்துவ சமூகமும் வளர்ந்து வெளிப்பட்டன. நகரத்தாரும் பிரபுக்களும் ஒருவரோடொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்த அதே பொழுதில் ஜேர்மனியில் விவசாயிகளின் போர் கலகம் புரிகின்ற விவசாயிகளை மட்டுமன்றி- இதில் இனி புதுமை எதுவும் இல்லை- அவர்கள் பின்னே சரக்குகளை பொது உடைமையாக்குக என்று கோஷித்துக் கொண்டு கைகளிலே செங்கொடி ஏந்தி வந்த நவீன பாட்டாளி வர்க்கத்தின் முதல் தொகையினரையும் அரங்கில் ஏற்றி, எதிர்கால வர்க்கப் போராட்டங்களை தீர்க்கதரிசனத்துடன் சுட்டிக் காட்டியது. பைஸான்தியனிசம் (Byzantium) பேரரசின் வீழ்ச்சியிலிருந்து காப்பாற்றப்பட்ட கையெழுத்துப் பிரதிகளும் ரோமாபுரியின் இடிபாடுகளிடையே தோண்டியெடுக்கப்பட்ட பண்டைய சிற்பச் சிலைகளும் மேற்கு நாடுகளை திகைப்பில் ஆழ்த்தும்படியான ஒரு புதிய உலகத்தை, பண்டைய கிரேக்க உலகத்தை வெளிப்படுத்தின; அதனுடைய ஒளி பொங்கும் வடிவங்களின் முன்னே மத்திய காலத்தின் ஆவிக் கணங்கள் மறைந்தொழிந்தன; கலைகளின் மலர்ச்சியில் கற்பனைக்கும் எட்டாத சிகரங்களை இத்தாலி எட்டிப் பிடித்தது; ஆதாரச் சிறப்பெய்திய பண்டைக் காலத்தின் பிரதிபிம்பம் போல் அது இருந்தது; அந்தச் சிகரத்தை அதன் பின்னர் அது எட்டவே இல்லை. இத்தாலியிலும் பிரான்சிலும் ஜேர்மனியிலும் ஒரு புதிய இலக்கியம், முதன்முறையாக ஒரு நவீன இலக்கியம் உருப்பெற்றது; இதை சற்றே பின்தொடர்ந்து ஆங்கில, ஸ்பானிய இலக்கியங்களில் ஆதாரச் சிறப்பான சகாப்தங்கள் தோன்றின. பழங்கால Orbis terrarum** எல்லைகள் கடக்கப்பட்டன; உலகம் உண்மையில் அப்பொழுதுதான் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டது; உலகரீதியான வாணிபத்திற்கும் சாதாரண கைத்தொழிலிலிருந்து பட்டறை தொழில்முறை நவீன பெரும் அளவு இயந்திரத் தொழிலுக்கும் தொடக்கப் புள்ளியாக அமைந்தது. மனிதர்களின் சிந்தனையின் மீது திருச்சபை செலுத்திய சர்வாதிகாரம் உடைத்து நொறுக்கப்பட்டது; ஜேர்மன் மக்களில் பெரும்பாலானோர் அதை நீக்கி விட்டு புரோட்டஸ்டென்டு மதத்தை தழுவினர்; அராபியர்களிடமிருந்து பெறப்பட்டு புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கிரேக்க தத்துவவியலால் ஊட்டம் கொடுக்கப்பட்ட சுதந்திரமான சிந்தனையின் உற்சாகமூட்டும் உணர்வு இலத்தீன் மொழி பேசுவோரிடையே மேலும் மேலும் வேரூன்றி 18ம் நூற்றாண்டின் சடவாதத்திற்கு (Materialism) வழிகோலியது.

---------------------------

*-நேர்ப்பொருளில்: 1500க்கள், அதாவது பதினாறாம் நூற்றாண்டு.-ப-ர்.

**-உலகப் பரப்பின்.-ப.ர்.

----------------------------

இதுவரை மனிதகுலம் அனுபவத்தில் கண்டவற்றில் இதுவே மிகஉயர்ந்த முற்போக்கான புரட்சியாகும்; பேராற்றல் உள்ளவர்கள் தேவைப்பட்ட, பேராற்றல் உள்ளவர்களை தோற்றுவித்த யுகம் அது-சிந்தனாசக்தியிலும் உணர்விலும் குணத்திலும் பல விதவிதமான திறமைகளிலும் கல்வித் தேர்ச்சியிலும் அவர்கள் பேராற்றல் உடையவர்களே. நவீன பூர்ஷ்வா வர்க்க ஆட்சியின் ஸ்தாபகர்களுக்கு பூர்ஷ்வா வரையறைகள் சிறிதேனும் இல்லை. நேர்மாறாக, அந்தக் காலத்தின் துணிச்சல்மிக்க தன்மை அவர்களுக்கு உயர்வாகவோ, குறைவாகவோ ஏதோ ஓர் அளவில் உத்வேகம் ஊட்டியது. முக்கியஸ்தன் என்று ஓரளவுக்கு கருதப்பட்ட எவனும் விரிவாகப் பிரயாணம் செய்யாதவனாகவோ, நான்கு அல்லது ஐந்து மொழிகளில் பயிற்சி இல்லாதவனாகவோ, பல துறைகளிலும் புகழ் பெறாதவனாகவோ அநேகமாக இருந்ததில்லை. லியனார்டோ டா வன்சி (Leonardo da Vinci) ஒரு மகத்தான ஓவியக் கலைஞன் மட்டுமல்ல; அவர் கணிதவியல், இயந்திரவியல் (Mechanician), பொறியியல் ஆகிய துறைகளிலும் ஒரு மேதை; பௌதிகவியலின் பல்வேறு கிளைகளும் அவருக்கு முக்கியமான கண்டுபிடிப்புகளால் கடமைப்பட்டுள்ளன. அல்பிரேஹ்ட் டியுரேர் (Albrecht Durer) ஓர் ஓவிய நிபுணன், உலோகச் செதுக்குக் கலைஞன், சிற்பி, கட்டிடவியல் புலவன்; அதுமட்டுமல்ல, அவர் அரண்கள் அமைப்பதில் ஒரு புதிய முறையையே சிருஷ்டித்தவர்; அவருடைய தத்துவத்தில் பல கருத்துக்கள் மொன்டல்ம்பேர் என்பவராலும் நவீன ஜேர்மன் அரண் அமைப்பு விஞ்ஞானத்தாலும் வெகு காலத்திற்குப் பின்னால் மறுபடியும் எடுத்தாளப்பட்டன. மக்கியவேலி என்பவர் ஆட்சிக்கலையில் வல்லுநன், வரலாற்றாளன், கவிஞனும் கூட; அதே சமயத்தில், நவீன காலத்தில் இராணுவ விவகாரங்களைப் பற்றி முதன்முதலில் எழுதிய புகழ் பெற்ற எழுத்தாளனும் அவரே. லூதர் திருச்சபையின் அவுகியஸ் குதிரை இலாயங்களை31 மட்டுமின்றி ஜேர்மன் மொழியிலும் குவிந்து போன அவுகியஸ் குதிரை இலாயங்களையும் அகற்றி சுத்தம் செய்தார்; ஜேர்மன் மொழியின் நவீன உரைநடையை சிருஷ்டித்தவரும் அவரே. மேலும், அவர் வெற்றி முரசு கொட்டும் தேவ கீதத்தின் இராகத்தையும் வார்த்தைகளையும் உருவாக்கினார்; அதுவே பின்னால் 16ம் நூற்றாண்டின் மார்செயேஸ் (Marseillaise) கீதமாகவும் பரிணமித்தது.32 அக்காலத்து மாவீரர்கள் தொழில் பிரிவினையின், அடிமை உழைப்பின் கீழ் இன்னமும் வரவில்லை; ஒருசார்பு தன்மையை உண்டாக்குகின்ற அதன் கட்டுத் தளைகளின் விளைவுகளை அவர்களுக்கு பின்னால் வந்தவர்களிடம் நாம் அடிக்கடி காண்கிறோம். ஆனால் ஏறக்குறைய அவர்கள் அனைவரும் தத்தம் நிகழ்கால இயக்கங்களின், நடைமுறைப் போராட்டங்களின் மத்தியிலே வாழ்ந்து செயலாற்றி வந்தார்கள் என்பதே அவர்களின் பிரத்யேகமான குணாம்சமாகும்; அவர்கள் ஏதாவது ஒரு தரப்பில் நின்று போராட்டத்தில் பங்கு பற்றினர்; ஒருவர் இரண்டையும் கையாண்டும் போராட்டத்தில் பங்கு பற்றினார். ஆகவே அவர்களுடைய குணத்தின் முழுமையும் வலிமையும் சேர்ந்து அவர்களை பூரண மனிதர்களாக்கின. தங்களுடைய படிப்பறைகளில் உட்கார்ந்து கொண்டு ஆராய்ச்சியை மட்டும் செய்து கொண்டிருந்தவர்கள் அப்பொழுது விதிவிலக்காகவே இருந்தனர் -அவர்கள் இரண்டாந்தர, மூன்றாந்தரமான நபர்களாகவோ, ஈடுபட்டு தங்களுக்கு கஷ்டங்களை ஏற்படுத்திக் கொள்ள விரும்பாத அற்பவாதிகளாகவோ இருந்தனர்.

அந்தக் காலத்தில் இயற்கை விஞ்ஞானமும் இந்தப் பொதுப் புரட்சியின் மத்தியிலேதான் வளர்ச்சியடைந்து முற்றிலும் புரட்சிகரமானதாக விளங்கியது; உண்மையில் அது தன்னுடைய வாழும் உரிமையைப் போராடி வென்று கொள்ள வேண்டியிருந்தது. நவீன மெய்யியலுக்கு ஆரம்பமாக இருந்த தலைசிறந்த இத்தாலியர்களுக்கு பக்கத்திலேயே இதுவும் புலன் விசாரணைகளின் சிறைச்சாலைகளின் எரிகம்பத்துக்கும் (Inquisition) தனது தியாகிகளை ஈந்தது. இயற்கையை சுதந்திரமாக ஆராய்வதை ஒடுக்குவதில் புரோட்டஸ்டென்டுகள் கத்தோலிக்குகளை மிஞ்சி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இரத்த ஓட்டத்தை கண்டுபிடிக்கும் தறுவாயில் இருந்த ஸெர்வேட் (Servetu) என்பவரை எரிகம்பத்தில் கட்டி உயிரோடு எரிக்கச் செய்தார் கால்வின் (Calvin); அது மட்டுமல்ல, கால்வின் அவரை உயிருடன் இரண்டு மணி நேரம் நெருப்பில் வறுத்தெடுக்கப்படவும் செய்தார்; விசாரணைகளின் ஜியோர்தோனோ புரூனோவை (Giordano Bruno) உயிரோடு எரித்ததோடு போதும் என்றிருந்தது.

காப்பேர்னிக்கசின் அமரத்துவம் வாய்ந்த நூல் வெளியிடப்பட்டதானது இயற்கை விஞ்ஞானம் தனது சுதந்திரத்தைப் பிரகடனம் செய்த புரட்சிகரமான செயலாக இருந்தது; அது ஏறக்குறைய போப்பாண்டவரின் ஆணைப் பத்திரத்தை பகிரங்கமாக எரித்த லூதரின் செயலைத் திரும்பவும் செய்துகாட்டியதாக இருந்தது; அந்த நூலின் வாயிலாக காப்பேர்னிக்கஸ் -மிகுந்த தயக்கத்துடன், ஒரு விதத்தில் மரணப்படுக்கையில் தாம் படுத்த பிறகேதான்- இயற்கையின் விவகாரங்களில் மதபீடத்தினர் செலுத்திய ஆதிக்கத்திற்கு சவால் விடுத்தார்.33 இயற்கை விஞ்ஞானத்துக்கும் இறையியலுக்கும் இடையே உள்ள பரஸ்பர கோரிக்கைகளை பற்றிய சர்ச்சை இன்று வரை தொடர்ந்தும் சிலருடைய சிந்தனையில் முற்றுப் பெறாமலும் நீடிக்கிறது என்ற போதினும், இயற்கை விஞ்ஞானம் இறையியலிலிருந்து (Theology) விடுதலை பெற்றதானது அந்த நாளிலிலிருந்து தொடங்கிற்று இருந்த போதிலும், அந்த காலத்திலிருந்து விஞ்ஞானங்களின் வளர்ச்சி அசுர நடையில் முன்னேறியது; புறப்பட்ட நிலையிலிருந்து அது விலகிச் செல்லும் தூரத்தின் வர்க்கத்துக்கு தகவுப் பொருத்தமாக அதன் வளர்ச்சியின் வேகம் அதிகரித்தது என்றும் சொல்லக்கூடும். இனிமேல், உயிர்ப்புள்ள (சேதன) பருப்பொருளின் (Organic Matter) உன்னதமான விளைபொருளான மனித மனத்தின் விஷயத்தில் இயக்கத்தின் நியதி என்பது உயிர்ப்பற்ற (அசேதன) பருப்பொருள் (Inorganic Substance) இயக்கத்துக்குரிய நியதிக்கு தலைகீழானதாகும் என்று உலகுக்கு காட்டுவது போல் இருந்தது.

இயற்கை விஞ்ஞானத்தின் இப்போது புதிதாக தொடங்கிய முதல் கட்டத்தின் பிரதான வேலை தன் அருகாமையிலுள்ள விஷயாதாரங்களை உடனடியாக ஜீரணித்துத் தேர்ச்சி பெறுவதே. மிகப் பெரும்பான்மையான துறைகளில் அது அரிச்சுவடியிலிருந்து தொடங்க வேண்டியிருந்தது. யூக்லிட் வடிவ கணிதத்தையும் ப்தாலமியின் சூரிய மண்டல அமைப்புத் தத்துவத்தையும் பண்டைக் காலம் சொத்தாக விட்டுச் சென்றது; அராபியர்கள் தசாம்ச (தசம) முறை, அல்ஜிப்ராவின் தொடக்க விவரங்கள், நவீன காலத்திய எண்கள், இரசவாதம் (Alchemy) ஆகியவற்றை விட்டு சென்றனர்; கிறிஸ்துவ மத்திய காலம் ஒன்றையும் விட்டுச் செல்லவில்லை. அவசியத்தின் நிமித்தமாக, இந்த நிலையில் பூவுலக, விண்ணுலகக் கோள்களின் (Heavenly Bodies) இயந்திரவியல் என்ற இயற்கை விஞ்ஞானத்தின் மிக மிக அடிப்படையான விஞ்ஞானமே முதலிடம் பெற்றது; மேலும் இதற்கு பக்கத்திலேயே, இதற்கு துணையாக நிற்கும் வகையில் கணிதவியல் முறைகளை கண்டுபிடித்து நிறைநேர்த்தியாக்குவதும் நடந்தது. மகத்தான சாதனைகள் இதில் சாதிக்கப்பட்டன. நியூட்டன், லின்னேயஸ் இவர்களால் இனங்கண்டு கொள்ளும் காலத்தின் இறுதிக் கட்டத்தில் விஞ்ஞானங்களின் இப்பிரிவுகள் ஒருவகையான தேர்ச்சி பெற்றதை நாம் காண்கிறோம். மிக முக்கியமான கணிதவியல் முறைகளின் அடிப்படையான லட்சணங்கள் ஸ்தாபிக்கப்பட்டன; விசேஷமாக டெக்கார்ட்டின் பகுப்பு முறை வடிவ கணிதம் (Analytical geometry), நேப்பெரின் லாகரிதம் (logarithms), லேய்ப்னிட்ஸ் (Leibniz), ஒரு வகையில் நியூட்டன் ஆகியோரின் வகையீட்டு, தொகையீட்டு நுண்கணிதம் என்றவாறு. கெட்டிப் பொருள்களின் இயந்திரவியலுக்கும் இது பொருந்தும்; அதனுடைய பிரதான நியதிகள் இறுதியாக தெளிவாக்கப்பட்டன. முடிவாக, சூரிய மண்டலத்தை ஆராயும் வானியலில் கோள்களின் இயக்கத்தை பற்றிய நியதிகளை கேப்ளர் கண்டுபிடித்தார்; பருப்பொருளின் பொதுவான இயக்க நியதிகளின் கண்ணோட்டத்திலிருந்து நியூட்டன் அவைகளை வரையறுத்தார். இயற்கை விஞ்ஞானத்தின் இதர பிரிவுகள் இந்த ஆரம்ப கட்ட நிறைநேர்த்திக்கும் (Preliminary Perfection) கூட வெகு தூரத்திற்கு பிற்பட்டு நின்றன. இந்த காலகட்டத்தின் இறுதிவாக்கில் தான் திரவப் பொருள்கள், வாயுப் பொருள்கள் (The mechanics of fluid and gaseous bodies) ஆகியவற்றின் இயந்திரவியல் மேற்கொண்டு ஆராயப்பட்டது.* இயற்பியல் தனது ஆரம்ப கட்டத்திலிருந்து -ஒளியியலை தவிர- அதிகமாக ஒன்றும் வளர்ந்துவிடவில்லை; வானியலின் நடைமுறைத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய காரணத்தால் ஒளியியல் பிரமாதமாக அபிவிருத்தி பெற்றது. புளோஜிஸ்டன் தத்துவத்தால் (Phlogistic theory)34 வேதியியல் (இரசாயனவியல்) இரசவாதத்திலிருந்து (Alchemy) முதல் தடவையாக விடுதலை பெற்றது. கனிமவியலின் (Mineralogy) கருப்பருவத்தை விட்டு பூவியியல் அதிகமாக ஒன்றும் வளர்ந்துவிடவில்லை; இதனால் தொல்லுயிரியல் (Paleontology) என்பது தோன்றுவதற்கும் முடியாதிருந்தது. கடைசியாக, உயிரியல் துறையில் தாவர, விலங்கியல் சம்பந்தமாக மட்டுமல்லாமல் உடற்கூறியல் (Anatomical), குறிப்பாக உடலியல் (Physiological) சம்பந்தப்பட்ட ஏராளமான விஷயாதாரங்களை சேகரிப்பதும் இனம் பிரித்து வகைப்படுத்துவதும் இன்னும் பிரதான வேலையாக இருந்தன. ஆகவே உயிரின் பல்வேறு வகையான வடிவங்களையும் ஒப்பு நோக்குதலையும் அவை பூகோளரீதியாக எவ்வாறு சிதறி அமைந்துள்ளன என்பதையும் அவைகளின் சீதோஷ்ண, இதர வாழ்க்கைச் சூழ்நிலைகளையும் பற்றி ஆராய்வது என்ற பேச்சிற்கே இடமில்லாமலிருந்தது. இங்கே லின்னேயஸ் இன் (Linnæus சுவீடனை சேர்ந்த தாவரவியல், இயற்பியல் மற்றும் விலங்கியல் வல்லுனர்) பயனாக தாவரவியலும் விலங்கியலும் மட்டுமே ஏறத்தாழ முழுமையை நெருங்கின.

----------------

* கையெழுத்துப் பிரதியின் ஓரத்தில் பி. ஏங்கெல்ஸ் பென்சிலிலே குறித்திருப்பதாவது: "ஆல்ப்ஸ் மலைப் பிரதேச நதிகளைக் கட்டுப்படுத்துவது குறித்து டொரிச் சேல்லி." -ப.ர்.

----------------

 இந்தக் காலக்கட்டம் முழுவதற்கும் இனக்குறிப்பாய் அமைந்த அம்சம் என்னவெனில், ஒரு விசித்திரமான பொதுக் கண்ணோட்டம் விவரமாக விளக்கம் பெற்றிருந்ததேயாகும்; அதன் கேந்தரமான கருத்து இயற்கை பரிபூரணமான மாறாத்தன்மை (Absolute immutability of nature) கொண்டது என்பதே. இயற்கை எந்த முறையில் தோன்றியிருந்தாலும் அது ஒரு தடவை தோன்றிய பின்னர் அது தொடர்ந்து இருந்து வந்திருக்கின்ற காலம் முழுவதும் அது தோன்றிய போதிருந்தவாறே நிலை பெற்றுள்ளது. மர்மமான "ஆதித் தூண்டுதல்" ("First impulse") ஒன்றால் ஒரு தடவை இயக்கப்பெற்ற பின்னர் கோள்களும் அவைகளின் துணைக்கோள்களும் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட நீள்வட்ட பாதைகளின் வழியே நிரந்தரமாக அல்லது பிரபஞ்ச முடிவுக் காலம் வரை வட்டமிட்டுத் திரிந்தவாறுள்ளன. தத்தம் இடங்களில் விண்மீன்கள் (Stars) ஸ்திர நிலை பெற்றன, நிலை மாற்றம் பெற முடியாமலிருக்கின்றன; "பிரபஞ்ச வியாபகமான புவி ஈர்ப்புச் சக்தியின்" காரணமாக தத்தம் இடத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இந்த நில உலகம் சதாசர்வ காலம் அல்லது மாற்றாக அதன் சிருஷ்டியின் முதல் நாளிலிருந்து யாதொரு மாற்றமுமின்றி ஒரே விதமாக இருந்து வருகிறது; இன்றைய "ஐந்து கண்டங்கள்" எப்போதுமே இருந்து வந்திருக்கின்றன; இந்த "ஐந்து கண்டங்களில்" அதே மலைகளும் பள்ளத்தாக்குகளும் ஆறுகளும் அதே சீதோஷ்ண நிலையும் -மனிதனால் இடப்பெயர்ச்சி அல்லது மாற்றம் செய்யப்பட்டதை தவிர- அதே தாவர, மிருக ராசிகளும் (Species) இருந்தன. தாவர, மிருக ராசிகள் (Species) ஒரு தடவை தோன்றியதோடு அப்படியே நிரந்தரமாக ஸ்தாபிக்கப்பட்டு விட்டன; இன ராசிகளின் அந்தந்த வகை ராசிகள் அந்தந்த வகைப்பட்ட ராசிகளையே உண்டாக்கியவாறிருந்தன. கலப்புச் சேர்க்கையால் இங்குமங்கும் சிற்சில புதிய ராசிகள் தோன்றியிருக்கலாம் என்று லின்னேயஸ் ஒப்புக் கொண்டது மிகப் பெரிய விஷயமாக இருந்தது. காலத்தில் வளருகின்ற மனித இனத்தின் வரலாற்றிற்கு நேர்மாறாக அண்டவெளியில் விரிந்து வருகின்ற தன்மை மட்டுமே இயற்கையின் வரலாற்றிற்கு கற்பிக்கப்பட்டது. இயற்கையில் எல்லா மாற்றமும் எல்லா வளர்ச்சியும் மறுக்கப்பட்டன. ஆரம்பத்தில் எவ்வளவோ புரட்சிகரமாக இருந்த இயற்கை விஞ்ஞானம் பூரணமான தேக்கத் தன்மை கொண்ட இயற்கையுடன் திடீரென எதிரே முட்டிக் கொண்டது; தோன்றிய காலத்தில் இருந்தவாறே இன்னும் கூட இருக்கின்ற, ஊழிக்காலம் வரை அல்லது நிரந்தரமாக அதே விதமாக இருந்து விடக்கூடிய இயல்புள்ள இயற்கையை கண்டது.

அறிவுத்துறையிலும் தனது விஷயாதாரங்களை அலசியாராய்வதிலுங்கூட 18ம் நூற்றாண்டின் முதற்பாதியை சேர்ந்த இயற்கைவிஞ்ஞானம் பண்டைக் கால கிரேக்கத்தை விட மேலானதாக எந்த அளவுக்கு இருந்ததோ, அந்த அளவுக்கு இந்த விஷயாதாரங்களை தத்துவரீதியாக பயின்று தன்வயமாக்கிக் கொள்வதில், இயற்கையை பற்றிய பொதுவான கண்ணோட்டத்தின் விஷயத்தில் அது பண்டைக் கால கிரேக்கத்தை விடத் தாழ்ந்திருந்தது. பிரபஞ்சம் என்பது சாராம்சத்தில் ஒரு ஒழுங்கற்ற பெருங்குழப்பநிலையிலிருந்து (Chaos) உதித்ததொன்றாக வளர்ந்து உருப்பெற்றதொன்றாக கிரேக்க மெய்யியலாளர்கள் கருதினர். நாம் ஆராயும் காலகட்டத்தை சேர்ந்த இயற்கை விஞ்ஞானிகளோ எனில், அதை இறுதியாக கெட்டியாகிப் போனதொன்றாக, மாறாத் தன்மை கொண்டதாகக் கருதினர்; அவர்களில் பெரும்பாலோர் அது ஒரு சொடுக்கில் சிருஷ்டிக்கப்பட்டதென்று நம்பினர். விஞ்ஞானம் இறையியலின் (Theology) வலைப்பின்னலில் மிக நெருக்கமாக இன்னும் சிக்கிக் கிடந்தது. இயற்கையை கொண்டே விளக்க இயலாத, வெளியிலிருந்து வருகிற ஒரு தூண்டுதலில் இறுதிக் காரணத்தை எல்லாத் துறைகளிலும் அது தேடிச் சென்று அடைந்தவாறிருந்தது. பிரபஞ்ச வியாபகமான புவிஈர்ப்புச்சக்தி என்று நியூட்டனால் படாடோபமாக பெயர் சூட்டப்பட்ட ஈர்ப்பு சக்தி பருப்பொருளின் ஒரு முக்கியமான குணமாகக் கருதப்பட்டாலும் கூட, கோள்களின் நீள்வட்டப் பாதைகளை முதலில் தோற்றுவித்த அந்த விளக்கப்படாத விலகிச்செல்லும் சக்தி எங்கிருந்து முளைத்தது? எண்ணற்ற தாவர, மிருக வகைகள் தோன்றியது எவ்வாறு? எல்லாவற்றையும் விட மனிதன் எவ்வாறு தோன்றினான்? ஏனெனில் மனிதன் அனாதி காலம் தொட்டு இருக்கவில்லை என்பது உறுதியான சேதி. இப்படிப்பட்ட வினாக்களுக்கு எல்லாவற்றையும் படைத்த சிருஷ்டிகர்த்தாவையே பொறுப்பாக்கி அடிக்கடி இயற்கையியல் விடை கொடுத்து வந்தது. இந்தக் காலப்பகுதியின் தொடக்கத்தில் கோப்பேர்னிக்குஸ் (Copernicus) இறையியலை வெளியேறச் செய்தார்; நியூட்டன் இறைமைக்குரிய ஆதித் தூண்டுதலை பற்றிய கருத்து வைத்து இந்தக் காலப் பகுதியை முடித்தார். இந்த இயற்கையியல் அடைந்த உச்ச நிலையான பொதுக் கருத்து என்னவெனில், இயற்கையின் ஏற்பாடுகளிலே ஒரு செயல்நோக்குள்ள தன்மை இருக்கிறது என்பதே; இதுவே வோல்ஃபின் ஆழமற்ற காரணகாரியவாதம் (Teleology); இதன்படி எலிகளை தின்ன பூனைகள் படைக்கப்பட்டன, பூனைகள் தின்பதற்காக எலிகள் படைக்கப்பட்டன, ஆக இயற்கை முழுவதுமே சிருஷ்டிகர்த்தாவின் விவேகத்துக்கு சான்று கூறவே படைக்கப்பட்டது. அக்காலத்தை சேர்ந்த அன்றைய இயற்கையியலின் தளையுண்டிருந்த நிலையால் தடம் புரளாதவாறு தன்னைக் காத்துக் கொண்டதும், அது ஸ்பினோஸா முதல் மாபெரும் பிரெஞ்சு சடவாதிகள் ஈறாக உலகத்தை உலகத்தை கொண்டே விளக்க வேண்டும் என்று வலியுறுத்தி விபரமாக நியாயப்படுத்தும் வேலையை எதிர்காலத்திய இயற்கை விஞ்ஞானத்திற்கு விட்டதும் அதன் உன்னதமான பெருமைக்குரிய விஷயங்களாகும்.

18ம் நூற்றாண்டின் சடவாதிகளையும் இந்தக் காலகட்டத்திற்குள் நான் உட்படுத்துகிறேன்; ஏனெனில் மேலே கூறிய இயற்கை விஞ்ஞான விஷயாதாரங்களை தவிர அவர்களுக்கு வேறு ஒன்றும் கிடைக்கவில்லை. கான்ட் என்பவரின் சகாப்தகால நூல் அவர்களை பொறுத்தவரை அவர்கள் அறியாத இரகசியமாகவே இருந்தது; அவர்களுக்கு பின்னால் வெகு காலம் கழித்தே லாபிளாஸ் (Laplace) தோன்றினார். இயற்கையை பற்றிய இந்தக் காலாவதியாகவிட்ட கண்ணோட்டம் விஞ்ஞானத்தின் முன்னேற்றத்தால் சல்லடைக் கண்களாக துளைக்கப்பட்டுவிட்ட போதிலும் 19ம் நூற்றாண்டின் முதல் பாதி முழுவதிலும் ஆதிக்கம் செலுத்தியது என்பதையும்* இன்னும் கூட அதன் சாரப்பொருள் அனைத்து பள்ளிகளிலும் போதிக்கப்படுகிறது என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது.**

-----------------

* கையெழுத்துப் பிரதியின் ஓரத்தில் ஒரு குறிப்பு உள்ளது: "இயற்கை பற்றிய பழைய கண்ணோட்டத்திற்கு இருந்த வளையாத் தன்மையே எல்லா இயற்கை விஞ்ஞானத்தையும் ஒரே முழுமையானதாகப் பொதுவாகப் புரிந்து கொள்வதற்கு அடிப்படை அளித்தது: பிரெஞ்சுக் கலைக் களஞ்சியவாதிகள் அதை இன்னமும் வெறுமே இயந்திர முறையிலே-அக்கம் பக்கமாக-செய்து கொண்டிருந்தார்கள்; அதன் பிறகு சான்-சிமோனும் ஹெகல் நிறைவாக்கிய இயற்கை பற்றிய ஜெர்மன் தத்துவஞானமும் ஒரே காலத்தில் செய்தன." --ப-ர்.

** எந்த மனிதரின் விஞ்ஞான சாதனைகள் இந்தக் கருத்து ஒழிக்கப்பட மிக முக்கியமான விஷயாதாரங்களை நல்கியதோ, அதே மனிதர் 1861இல் கூட இந்தக் கருத்தை எவ்வளவு பிடிவாதமாகப் பிடித்துக் கொண்டிருக்க முடிந்தது என்பதைக் கீழ்கண்ட ஆதாரச் சிறப்புள்ள சொற்கள் விளக்கும்:

"நமது சூரிய மண்டலத்தின் எல்லா ஏற்பாடுகளும் -நாம் புரிந்து கொள்ள முடிகின்ற அளவில்-தற்போது இருக்கின்றவற்றை பாதுகாப்பதையும் அவை மாற்றமில்லாமல் நீடித்துத் தொடர்ந்து இருப்பதையும் காப்பதையே குறிக்கோளாக கொண்டுள்ளன. எப்படி மிகப் புராதன காலத்திலிருந்து இந்த பூமியின் மீது உள்ள எந்தப் பிராணியும் தாவரமும் முன்னை விட மேலான நிறைவை அடையவில்லையோ, எவ்வித மாறுதலுக்கும் உட்பட்டிருக்கவில்லையோ, எப்படி எல்லா உயிர்களிலும் கட்டங்களை அக்கம் பக்கமாகத்தான் பார்க்கிறோமே தவிர ஒன்றை தொடர்ந்து மற்றொன்று வந்தாற்போல் அல்லவோ, எப்படி சரீரத்தின் ஸ்தூலத் தன்மையில் நமது இனமும் கூட எப்போதுமே ஒரே விதமாகத்தான் இருந்து வந்திருக்கிறதோ, அதே போலத்தான் அக்கம் பக்கமாக வாழும் வானுலக கோள்கள் எவ்வளவுதான் பலரக தன்மை பெற்றிருந்தாலும், அதைக் கொண்டு இந்த வடிவங்கள் வளர்ச்சியின் பல்வேறு கட்டங்கள் என நாம் அனுமானிக்க நியாயமேயில்லை; அதற்கு பதிலாக, சிருஷ்டிக்கப்பட்ட ஒவ்வொன்றும் தன்னைப் பொறுத்த வரை சமமான அளவுக்கு நிறைவு பெற்றதே" (மேட்லர், தெளிவான வானியல், பேர்லின் 1861, ஐந்தாம் பதிப்பு, பக்கம் 316). (பி. ஏங்கெல்ஸ் எழுதிய குறிப்பு.)

----------------

இயற்கையை பற்றிய இந்தக் குறுகிப் போன கண்ணோட்டத்தில் இதில் உடைப்பு ஏற்படுத்தியவர் ஓர் இயற்கை விஞ்ஞானி அல்ல, ஒரு மெய்யியலாளரே. 1755ல் கான்ட்டினுடைய வானத்தின் பொதுவான இயற்கை வரலாறு மற்றும் தத்துவம் (Allgemeine Naturgesehichte und Theorie des Himmels) என்கின்ற நூல் வெளிவந்தது. ஆதித் தூண்டுதல் என்கிற பிரச்சனை அடிப்பட்டு போயிற்று; பூமியும் சூரிய மண்டல அமைப்பு முழுவதும் காலத்தின் போக்கிலே தோன்றி உருக்கொண்ட ஒன்றாக தெரிந்தன. இயற்பியலே, மாறாநிலைவாதம் (Metaphysics) பற்றி உஷாராக இரு! எனும் எச்சரிக்கையில் சிந்தனைபால் உள்ள வெறுப்பை நியூட்டன் வெளியிட்டாரே, அந்த வெறுப்பை இயற்கை விஞ்ஞானிகளில் மிகப் பெரும்பாலோர் சற்றே குறைத்துக் கொண்டிருந்திருந்தால், கான்ட்டின் ஒளி மிகுந்த இந்தக் கண்டுபிடிப்பு ஒன்றிலிருந்தே அவர்கள் சில முடிவுகளுக்கு வருமாறு கட்டாயப்படுத்தப்பட்டு, அந்த முடிவுகள் அவர்களை முடிவேயில்லாத திரிபுகளினின்றும் பொய்யான திசைகளிலே அளவிடற்கரிய நேரத்தையும் உழைப்பையும் வீணாக்கியதினின்றும் தவிர்த்திருக்கும். ஏனெனில் கான்ட்டின் கண்டிபிடிப்பு எதிர்கால முன்னேற்றம் முழுவதற்குமான தொடக்க முனையை தன்னுள் கொண்டிருந்தது. பூமி தோன்றி உருக்கொண்டதொன்று என்றால், அதனுடைய இன்றைய புவியியல்ரீதியான, பூகோளவியல்ரீதியான, சீதோஷ்ணரீதியான நிலையும், தாவரங்களும் விலங்குகளும் கூட தோன்றி உருக்கொண்டவையே; வெளியில் (Space), அக்கம் பக்கமாக வாழ்ந்ததை பற்றி மட்டுமின்றிக் காலத்திலும் ஒன்றை தொடர்ந்து மற்றொன்றாக வாழ்ந்ததை பற்றியும் அதற்கு வரலாறு இருந்திருக்க வேண்டும். இந்தத் திசையில் உடனடியாக மேற்கொண்டு ஆராய்ச்சிகள் உறுதியாக நடத்தப்பட்டிருந்தால் இயற்கை விஞ்ஞானம் இன்றைய நிலையை விடப் பெருமளவுக்கு முன்னேற்றமடைந்திருக்கும். ஆனால் மெய்யியலால் என்ன நன்மை ஏற்பட முடியும்? பல்லாண்டுகள் கழிந்த பின் லாபிளாசும் ஹெர்ஷெலும் கான்ட் செய்த பணியின் உள்ளடக்கங்களை விளக்கப்படுத்தி அதற்கு உறுதியான அஸ்திவாரத்தை அமைத்து அதன் மூலம் படிப்படியாக "விண்மீன் ஒளிமுகிற்படல அனுமானவுரைக்கு" ("Nebular hypothesis") ஆதரவு கிடைக்கும் வரை கான்ட்டின் நூல் உடனடி பலன்களின்றி கிடந்தது. மேலும் கிடைத்த கண்டுபிடிப்புகள் அந்த அனுமானவுரைக்கு இறுதியாக வெற்றி தந்தன; இவைகளில் முக்கியமானவை: ஸ்திர நிலையிலுள்ள விண்மீன்களின் முறையான இயக்கத்தின் கண்டுபிடிப்பு, பிரபஞ்ச வெளியில் ஓர் எதிர்ப்பு ஊடகம் (A resistant medium) இருப்பது நிரூபணம் ஆதல், பிரபஞ்சப் பருப்பொருளின் இரசாயனரீதியான ஒருமைப்பாடும் கான்ட் வகுத்தபடி சுடர் விடும் விண்மீன் ஒளிமுகில் கூட்டங்கள் (Nebular masses) இருப்பதும் நிறமாலைப் பகுப்பாய்வால் ருசுப்பிக்கப்படல்.*

-------------

* கையெழுத்துப் பிரதியின் ஓரத்தில் ஒரு குறிப்பு உள்ளது: "கான்ட் அவர்களிடமிருந்தே, ஏற்றவற்றங்கள் பூமியின் சுழற்சியை மந்தப்படுத்துகின்றன என்பதும் தற்போது தான் அறியப்பட்டுள்ளது." -ப-ர்.

-------------

இயற்கை என்பது ஏதோ வெறுமே இருக்கும் நிலையிலுள்ளது மட்டுமல்ல, அது தோன்றி உருக்கொண்டு மறைவதும் கூட என்கின்ற உதயமாகி வரும் கருத்தோட்டம் மற்றொரு பக்கத்திலிருந்து ஆதரவு பெற்றிராவிட்டால், இயற்கை விஞ்ஞானிகளில் பெரும்பாலோர் மாறிக் கொண்டிருக்கும் பூமி மாற்றவே முடியாத உயிரினங்களை சுமந்துள்ளது என்பதிலுள்ள முரண்பாட்டை பற்றி அவ்வளவு சீக்கிரத்தில் உணரத் தலைப்பட்டிருப்பார்களா என்று சந்தேகிக்க இடமுண்டு. ஒன்றைத் தொடர்ந்து மற்றொன்றாகவும் ஒன்றின் மீது மற்றொன்று படிந்ததாகவும் உருப்பெற்றமைந்த நில உலகப் படிவங்களை மட்டுமின்றி, மறைந்து போன பிராணிகளின் மேலோடுகளும் எலும்புக்கூடுகளும், மறைந்து போன தாவரங்களின் தண்டுகளும் இலைகளும், கனிகளும் அப்படிவங்களில் புதைந்து கிடப்பதையும் நில அமைப்பியல் (Geology) தோன்றி சுட்டிக் காட்டியது. பூமி முழுவதும் மட்டுமின்றி, அதனுடைய தற்போதைய மேல்பரப்பும் அதன் மீது உயிர்வாழ்கின்ற பிராணிகள், தாவரங்கள் ஆகியவையும் காலப்போக்கில் ஒரு வரலாற்றைக் கொண்டிருந்தது. ஒரு வரலாறு உள்ளது என்பதை அங்கீகரித்து தீர்மானிக்க வேண்டியதாயிற்று. இதை ஆரம்பத்தில் விருப்பமின்றியே அங்கீகரித்தார்கள். பூமியின் புரட்சிகளை பற்றிய குவியேயின் தத்துவம் சொற்களில் புரட்சிகரமானதாகவும், சாராம்சத்தில் பிற்போக்காகவும் இருந்தது. ஒரே ஒரு தெய்வீகப் படைப்புக்கு பதிலாக திரும்பத் திரும்ப நிகழும் சிருஷ்டியின் செயல்களின் முழுத் தொடரை அமர்த்தி விட்டு அவர் அற்புதத்தை இயற்கையின் முக்கியமான சாதனமாக செய்தார். ஒரு சிருஷ்டிகர்த்தாவின் மனோநிலைக்கேற்ற திடீர் புரட்சிகளுக்கு பதில் பூமியின் மெதுவான மாற்றத்தின் படிப்படியான விளைவுகள் எனக் கண்டதின் பயனாக லாயெல் (Lyell) நில அமைப்பியலில் முதல் தடவையாக பகுத்தறிவை புகுத்தினார்.*

-----------

* லாயெனின் கண்ணோட்டத்தின்-குறைந்தபட்சம் அதன் ஆரம்ப வடிவத்தின்-குறைபாடு, பூமி மீது செயல்படுகின்ற சக்திகள் அளவிலும் பண்பிலும் மாறாதவை எனக் கருதியதிலே இருந்தது. அவரைப் பொறுத்தவரை, பூமிக்கு குளிர்ந்து வரும் போக்கு இல்லை; ஒரு திட்டவட்டமான திசையில் பூமி வளர்வதில்லையாம், வெறுமே தொடர்பற்ற, தற்செயலான முறையிலே மாறுகிறதாம். (பி. எங்கெல்ஸஃ எழுதிய குறிப்பு)

------------

லாயெலின் தத்துவம் அதற்கு முந்திய எந்தத் தத்துவத்தையும் விட மாறாத உயிரினங்கள் என்ற அனுமானத்திற்கு முரணாக இருந்தது. பூமியின் மேல்பரப்பும் வாழ்வின் எல்லாச் சூழ்நிலைகளும் படிப்படியாக அடையும் மாற்றம், உயிரினங்கள் படிப்படியாக மாறுவதற்கும் அவை மாறி வரும் சுற்றுச் சார்புகளுக்கேற்றவாறு தங்களை சரிப்படுத்திக் கொள்வதற்கும் உயிர் வகைகளில் மாறுபாடுகள் நிகழ்வதற்கும் நேராக இட்டுச் சென்றது. ஆனால் சம்பிரதாயம் (Tradition) என்பது கத்தோலிக்க திருச்சபையில் மட்டுமின்றி, இயற்கை விஞ்ஞானத்திலும் ஒரு சக்தியே. பல்லாண்டுகளாக லாயெல் கூட இந்த முரண்பாட்டை பார்க்கவில்லை; அவருடைய சீடர்கள் பார்த்ததோ, அதை விடக் குறைவு.

இக்காலத்தில் இயற்கை விஞ்ஞானத்தில் ஆதிக்கம் பெற்று விட்ட தொழில் பிரிவினையை கொண்டே இதை விளக்க முடியும்; இந்த தொழில் பிரிவினை ஒவ்வொருவனையும் அவனுடைய தனித்துறையுடன் வரையறுத்து நிறுத்தி விட்டது; இதனால் விரிந்த கண்ணோட்டத்தை இழக்காதவர்கள் ஒரு சிலர் மட்டுமே. இதற்கிடையே இயற்பியல் (Physics) மகத்தான அளவில் முன்னேறியது; 1842ம் ஆண்டில் ஏறக்குறைய ஒரே சமயத்தில் மூன்று வெவ்வேறான நபர்கள் இந்த முன்னேற்றத்தின் பலன்களை பொதுமைப்படுத்தியளித்தனர்; இயற்கை விஞ்ஞானத்தின் இத்துறைக்கு இவ்வாண்டு சகாப்தகரமானதாகும். ஹயில்பிரோன் (Heilbronn) என்ற நகரில் மாயர் என்பவரும் மாஞ்செஸ்டரில் ஜோவுல் (Joule) என்பவரும் வெப்பம் இயந்திர சக்தியாகவும் இயந்திரசக்தி வெப்பமாகவும் மாறுவதை சோதனையின் மூலம் நிரூபித்துக் காட்டினர். வெப்பத்திற்குரிய இயந்திர வகைப்பட்ட நிகர்மதிப்பு நிர்ணயித்தது இதைப்பற்றிய எல்லா சந்தேகங்களுக்கும் முடிவு கட்டியது. அதே சமயத்தில் இயற்பியலில் ஏற்கெனவே தனித்தனியாக காணப்பட்ட முடிவுகளை வைத்துக் கொண்டு செயல்பட்டதின் மூலம் குரோவ் என்பவர் -இவர் ஓர் ஆங்கில வழக்குரைஞர், இயற்கை விஞ்ஞானத்தை தொழிலாகக் கொண்டவர் அல்ல- இயந்திரசக்தி, வெப்பம், ஒளி, மின்விசை, காந்த விசை என்று சொல்லப்படுகின்ற எல்லா இயற்பியல் சக்திகளும், இரசாயன சக்தி என்றழைக்கப்படுவதும் கூட, குறிப்பிட்ட சூழ்நிலைகளில் ஒன்று மற்றொன்றாக மாறுகின்றன; அப்படி மாறும் பொழுது சக்தி சிறிதேனும் வீணாவதில்லை என்று நிரூபித்தார். இதை நிரூபித்ததின் மூலம் பிரபஞ்சத்தில் உள்ள இயக்கத்தின் மொத்த அளவு ஸ்திரமானது என்ற டெக்கார்ட்டின் கோட்பாட்டை (Descartes' principle) இயற்பியலிலும் அவர் மெய்ப்பித்தார். இத்துடன் இயற்பியலின் மாற்றொணாத "இனங்கள்" என்று கருதப்பட்ட அந்த விசேஷ இயற்பியல் சக்திகள் என்பன பல்வேறு விதமாக வித்தியாசப்பட்டுத்தப்பட்ட பருப்பொருளின் இயக்க வடிவங்களே எனவும் அவை குறிப்பிட்ட நியதிகளுக்குட்பட்டு ஒன்று மற்றொன்றாக மாறுகின்றன எனவும் தீர்மானமாயிற்று. இயற்பியல் சக்திகள் ஏதோ தற்செயலாகத்தான் இவ்விவ்வளவு எண்ணிக்கையுடையனவாக இருக்கின்றன என்ற கருத்து, அவைகளுக்குள் உள்ள உள்தொடர்புகளும் ஒன்று மற்றொன்றாக மாறும் தன்மைகளும் நிரூபிக்கப்பட்டதினால் விஞ்ஞானத்திலிருந்தே ஒழிக்கப்பட்டது. இயக்கத்திலிருக்கும் பருப்பொருளின் நிரந்தரமான வட்டப்போக்கே கடைசிக்கும் கடைசியான முடிவு என்று நிர்ப்பந்தமாக சுட்டிக் காட்டிய ஒரு விளைவுக்கே இயற்பியலும், அதற்கு முன் வந்த வானியலைப் போல், வந்து சேர்ந்தது.

லாவுவஸியேயுக்கு (Lavoisier) பின், குறிப்பாக டால்டனுக்கு (Dalton) பின்னர் வியக்கத்தக்க துரித வளர்ச்சியடைந்த வேதியியல் மற்றொரு பக்கத்திலிருந்து இயற்கையை பற்றிய பழங்கருத்துக்களை தாக்கியது. இதுவரை உயிரினங்களில் மட்டுமே உண்டாக்கப்பட்ட கூட்டுப் பொருள்கள் (Inorganic means of compounds), உயிரற்ற வழிமுறைகளால் தயாரிக்கப்பட்டமை வேதியியலின் நியதிகள் உயிரற்ற பொருட்களுக்கு செல்லத்தக்கவையாக இருப்பதைப் போலவே உயிர்த்தன்மை (Living organism) உள்ள பொருட்களுக்கும் செல்லத்தக்கன என்று நிரூபித்தது; ஆக, உயிர்த்தன்மைக்கும் உயிரற்றதன்மைக்கும் இடையே உள்ள அகழிக்கு, கான்ட் கூட எப்போதுமே கடக்க முடியாதது என்று கருதிய அகழிக்கு பாலமிட்டுப் பெருமளவுக்கு இணைத்தது.

இறுதியாக, இதற்கு முந்திய நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து திட்டமிட்டு நடத்தப்பட்ட விஞ்ஞான ஆய்வு பயணங்களும் யாத்திரைகளும், உலகத்தின் எல்லாப் பகுதிகளிலும் இருந்த ஐரோப்பிய காலனிகளை பற்றி அங்கு வாழ்ந்த நிபுணர்கள் நடத்திய முன்னை விட முழுமையான ஆராய்ச்சிகளும், தொல்லுயிரியல், உடற்கூறுவியல், மனித உடலியல் ஆகியவற்றின் பொதுவான முன்னேற்றமும்- அவை குறிப்பாக உருப்பெருக்கி (மைக்ராஸ்கோப்) முறையாகப் பயன்படுத்தப்பட்ட பிறகும் உயிரணு கண்டுபிடிக்கப்பட்ட பின்னரும் பெற்ற முன்னேற்றமும்- ஆகியவற்றால் உயிரியல் துறை ஆராய்ச்சியிலும் கூட ஏராளமான விஞ்ஞான விஷயாதாரங்கள் சேகரிக்கப்பட்டன; இக்காரணத்தால் ஒப்பு நோக்கும் முறையை (The comparative method) பின்பற்றுவது சாத்தியமாயிற்று என்பது மட்டுமல்ல, அது இன்றியமையாததாகவும் ஆயிற்று.* ஒப்பு நோக்கும் இயற்பியல் பூகோளவியலால், ஒரு பக்கம், பல ரக தாவர, மிருக வகைகளின் வாழ்க்கை சூழ்நிலைகள் ஸ்தாபிக்கப்பட்டன; மற்றொரு பக்கத்தில், பல்வேறு உயிரினங்கள் அவைகளின் ஒரேமாதிரியான உறுப்புகளை வைத்து ஒப்புநோக்கப்பட்டன; அவைகளின் முதிர்ச்சி பெற்ற நிலைகளில் மட்டுமின்றி, அவைகளுடைய வளர்ச்சியின் எல்லாக் கட்டங்களிலும் ஒப்பு நோக்கப்பட்டன. இந்த ஆராய்ச்சி மேன்மேலும் ஆழமாகவும் நுணுக்கமாகவும் செய்யப்பட்டு அதன் பாதிப்பால் வரவர உயிர் வகைகளின் மாற்றவொண்ணா நிலைப்பாடு என்ற இறுகிப் போன கருத்தமைப்பு மேன்மேலும் சிதறியது. தனித்தனியான தாவர, மிருக வகைகள் என்பன மேலும் மேலும் பிரிக்க முடியாதவாறு பின்னி நின்றன என்பது மட்டுமல்ல, Amphioxus (முதுகெலும்பின் கருமூலத் தடங்களை உடைய முதுகெலும்பில்லாத மீன் வகை), Lepidosiren பூச்சியினங்களும்37 கண்டுபிடிக்கப்பட்டன; இதற்கு முந்திய இனவகைபிரித்தல்** என்பது இதனால் கேலிக் கூத்தாக்கப்பட்டது; இறுதியாக, தாவர வகையை சேர்ந்தனவோ அல்லது விலங்கு வகையைச் சேர்ந்தனவோ என்று கூடச் சொல்ல முடியாத உயிரினங்களும் தென்பட்டன. உயிர்ப்புள்ள உலகம் முழுவதின் வளர்ச்சி வரலாற்றுக்கும் தனித்த ஓர் உயிரினத்தின் வரலாற்றுக்கும் உள்ள வியக்கத்தக்க ஒருமைப்பாடு பளிச்சிட்டு தயக்கங்காட்டியவர்களையும் கூட அதை அங்கீகரிக்க நிர்ப்பந்திக்கும் அளவுக்கு தொல்லுயிரியல் பதிவேடுகளிடையே உள்ள இடைவெளிகள் நிறைவு பெற்றன; இருட்குகையில் வழி தெரியாமல் மேலும் மேலும் தடுமாறிப் போன தாவரவியலும் விலங்கியலும் சரியான வழி கண்டுபிடித்து வெளியே வருவதற்குரிய அரியாத்னாவின் சரடாக அது விளங்கியது. சூரிய மண்டலம் காலத்தால் முடிவுற்றது என்பதை கான்ட் தாக்கிய ஏறக்குறைய அதே சமயத்தில் கி.வோல்ஃப் என்பவர் 1759ம் ஆண்டில் உயிரினங்களின் ஸ்திரத்தன்மை என்பதின் மீது தமது முதல் தாக்குதலை தொடுத்து பரிணாமத் தத்துவத்தை பிரகடனம் செய்ததானது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர் விஷயத்தில் ஒரு பிரகாசமான அனுமானமாக இருந்த அது ஓகென், லாமார்க், பாயர் ஆகியோரின் கரங்களில் உறுதியான வடிவம் பெற்றது; பின்னர் சரியாக நூறு வருடங்கள் கழித்து 1859ம் ஆண்டில் டார்வின் மூலமாக வெற்றிகரமாக மேலே கொண்டு செல்லப்பட்டது. ஏறத்தாழ அதே காலத்தில் எல்லா உயிரினங்களின் இறுதியான உடலமைப்பியல் கூறுகளாக ஏற்கனவே காட்டப்பட்ட, பரோடோ பிளாஸம் (Protoplasm) (Biology :the colourless material comprising the living part of a cell, including the cytoplasm, nucleus, and other organelles) என்ற உயிர்த்தாதுவும் உயிரணுவும் (The cell) சுயேச்சையாக உண்டாகின்றன என்பதும் உயிரினங்களின் கீழ்நிலை வடிவங்கள் அவை என்பதும் ஸ்தாபிக்கப்பட்டது. இது உயிர்ப்பற்ற இயற்கைக்கும் உயிர்ப்புள்ள இயற்கைக்கும் இடையே உள்ள அகழியைப் பெரிய அளவுக்கு குறுக்கி விட்டது மட்டுமல்ல; உயிரினங்களின் இனத்தோற்ற தத்துவத்தின் பாதையிலே முன்பு நின்ற இடர்ப்பாடுகளில் மிக முக்கியமானதொன்றை அப்புறப்படுத்தியது. இயற்கையை பற்றிய புதிய கண்ணோட்டம் பிரதான அம்சங்களில் முழுமை பெற்றது; வளையாத் தன்மை யாவும் கரைந்து போயிற்று; ஸ்திரத் தன்மையெல்லாம் கலைந்து போயிற்று; நிலையானதாக கருதப்பட்ட எல்லாவற்றின் விசேஷமான அம்சங்களும் மாறுந்தன்மையுடையன என்றாயின; நிரந்தரமான மாற்றத்திலும் சுழற்றியிலும் இயற்கை முழுவதுமே இயங்கி வருகிறது எனத் தெளிவாக்கப்பட்டது.

------------

*கையெழுத்துப் பிரதியின் ஓரத்தில் ஒரு குறிப்பு உள்ளது: "கருவியல்." --ப-ர்.

**கையெழுத்துப் பிரதியின் ஓரத்தில் ஒரு குறிப்பு உள்ளது. "Ceratodus. அதே போல் archaeopteryx,38 முதலியன." --ப-ர்.

--------------

ஆக மிகச் சிறிய மூலகத்திலிருந்து மிகப் பெரியது வரை, மணலின் மிகச் சிறு துகள்கள் முதல் சூரியன்கள் வரை, புரோடிஸ்டா (Protista) முதல் மனிதன் வரை இயற்கை முழுவதும் நிரந்தரமாக தோன்றுவதிலும் மறைவதிலும், நிற்காமல் மாறிக் கொண்டிப்பதிலும், இடையறாத இயக்கத்திலும் மாற்றத்திலும் தான் நிலை நிற்கிறது என்ற கிரேக்க மெய்யியலின் மகத்தான ஸ்தாபர்களின் கண்ணோட்ட முறைக்கே நாம் மறுபடியும் திரும்பி வந்து விட்டோம். ஆனால் முக்கியமான ஒரு வித்தியாசம் மட்டும் உண்டு; கிரேக்கர்கள் விஷயத்தில் இருந்த ஒளிமிக்க உள்ளுணர்வு நமது விஷயத்தில் அனுபவத்தை ஒட்டிய கறாரான விஞ்ஞான ஆராய்ச்சியின் விளைவாக இருந்தது; இதனால் மேலும் தெளிவுடனும் கச்சிதமான வடிவத்தைப் பெற்றும் விளங்கியது. இந்த வட்ட வளர்ச்சிப் போக்கைப் பற்றிய அனுபவபூர்வமான மெய்ப்புக்களில் சில இடைவெளிகள் இருக்கின்றன என்பது உண்மையே; ஆனால் ஏற்கெனவே உறுதியாக ஸ்தாபிக்கப்பட்டு விட்ட அதனுடன், வருடாவருடம் அந்த இடைவெளிகள் நிறைவு பெற்று வருவதையும் சேர்த்து ஒப்பு நோக்கினால் அவை முக்கியத்துவத்தை இழந்து விடுகின்றன. நட்சத்திர வானியல் (Planetary astronomy), வேதியியல், புவியியல் ஆகிய பிரதான விஞ்ஞானப் பிரிவுகள் விஞ்ஞானரீதியாக நிலைத்து நின்று ஒரு நூற்றாண்டு கூட முற்றாகவில்லை; உடலியலில் ஒப்பு நோக்கும் முறை ஏற்பட்டு ஐம்பது ஆண்டுகள் கூட ஆகவில்லை; மற்றும் கிட்டத்தட்ட எல்லா உயிர் வளர்ச்சியின் அடிப்படை வடிவமான உயிரணு (The cell) கண்டுபிடிக்கப்பட்டு நாற்பதாண்டுகள் கூட இன்னும் ஆகவில்லை. எனவே மேற்கூறிய மெய்ப்புக்களின் விபரங்கள் இடைவெளிகள் இல்லாமல் எப்படி இருக்க முடியும்?!

பால்வெளி மண்டலத்தின் (Milky way) வெளிப்புறத்தில் உள்ள விண்மீன் ராசிகளின் வளையங்களை (Stellar Rings) எல்லையாக கொண்டுள்ள நமது பிரபஞ்ச தீவைச் சேர்ந்த எண்ணற்ற சூரியன்களும் சூரிய மண்டலங்களும் சுழன்று ஓடும் ஒளிவீசும் வாயுப் படலங்கள் குளிர்ந்து இறுகியதால் ஏற்பட்டவையாகும்; விண்மீன்களின் சொந்த இயக்கத்தை பற்றி சில நூற்றாண்டுகள் ஆராய்ச்சிகள் நடந்து அதைக் குறித்து ஓர் உட்பார்வை கிடைத்த பின்னரே ஒருவேளை அவைகளின் இயக்க நியதிகள் வெளியாகலாம். இந்த வளர்ச்சி எல்லா இடங்களிலும் ஒரே விகிதத்தில் நடைபெறவில்லை என்பது தெளிவு. இருண்ட கோள்கள் (Dark Bodies) இருப்பதை அங்கீகரிக்கும்படி வானியல் மேலும்மேலும் நிர்ப்பந்திக்கப்பட்டு வருகிறது; அவை கோள் இயல்பு மட்டும் பெற்றவை அல்ல; எனவே அவை நமது விண்மீன் மண்டலத்தில் (Stellar System), உள்ள ஒளி அணைந்த சூரியன்களேயாம் (Mädler - மேட்லர்). மற்றொரு புறத்தில் (செக்கி என்பவரின் கருத்துப்படி) வாயு ரூபத்தில் உள்ள ஒளிமுகிற் படலங்களின் ஒரு பகுதி இன்னமும் முழு வடிவம் பெற்றிராத சூரியன்கள் என்கிற வகையில் நமது நட்சத்திர மண்டலத்தை சேர்ந்தவையாயுள்ளன; மேட்லர் என்கிற விஞ்ஞானி அறுதியிட்டுக் கூறுவது போல், இதர ஒளிமுகிற்கூட்டங்கள் (Vaporous nebular patches) வெகு தூரத்தில் உள்ள சுயேச்சையான பிரபஞ்சத் தீவுகளாக இருக்கக் கூடும் என்பதற்கான சாத்தியக் கூறுகளும் இதில் உள்ளடங்குகின்றன; இவை எந்த வளர்ச்சிக் கட்டங்களில் உள்ளன என்பது நிறமாலைக் கருவியின் (Spectroscope) மூலம் நிர்ணயிக்கப்பட வேண்டியுள்ளது.

ஒரு தனிப்பட்ட ஒளிமுகிற்படலத்திலிருந்து (Nebular Mass) ஒரு சூரிய மண்டலம் எவ்வாறு உண்டாகிறது என்பதை லாப்பிளாஸ் (Laplace) ஒப்பாரும் மிக்காருமற்ற முறையில் விவரமாக எடுத்துக்காட்டியுள்ளார்; அவருக்குப் பிந்திய விஞ்ஞானம் அவரது கருத்தை மேலும் மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

இவ்விதம் உருவான தனித்தனியான கோள்களின் மீது - சூரியன்கள் மட்டுமின்றிக் கோள்கள், துணைக்கோள்கள் ஆகியவற்றின் மீதும் - ஆரம்ப நிலையில் ஆட்கொண்ட பருப்பொருளின் இயக்க வடிவம் (Motion of Matter) நாம் கூறும் வெப்பம் என்பதேயாகும். சூரியனில் தற்போதுள்ள வெப்பநிலையிலும் கூட. மூலகங்களின் எவ்வித இரசாயனக் கூட்டுப் பொருள்கள் உண்டாகவும் சாத்தியப்பாடு இல்லை; இவ்விதச் சூழ்நிலைகளில் வெப்பம் எந்த அளவுக்கு மின்சாரமாக அல்லது காந்த சக்தியாக மாற்றப்படுகிறது என்பதை தொடர்ந்தாற் போல் நடைபெறுகின்ற சூரிய ஆராய்ச்சிகள் வெளிப்படுத்தும்; வெப்பத்திற்கும் ஈர்ப்பு சக்திக்கும் உள்ள மோதல் ஒன்றினாலேயே சூரியனில் இயந்திர முறையிலான இயக்கம் உண்டாகிறது என்பது ஏறக்குறைய நிரூபிக்கப்பட்டதாகவே கொள்ளலாம்.

தனிக்கோள்கள் சிறிதாக இருக்கின்ற வரை அவை துரிதமாகக் குளிர்ந்து விடுகின்றன; துணைக்கோள்கள், நுண்கோள்கள் (Asteriods), எரி நட்சத்திரங்கள் (Meteors) ஆகியன நமது சந்திரன் வெகு காலத்திற்கு முன்பே அணைந்து போனதைப் போல முதன்முதலில் குளிர்ச்சியடைகின்றன. கோள்கள் இதை விட மெதுவாகவும் மையமாக உள்ள சூரியன் எல்லாவற்றைக் காட்டிலும் மிக மெதுவாகவும் குளிர்ச்சியடைகின்றன.

படிப்படியாகக் குளிர்ச்சி பெறப்பெற இயக்கத்தின் ஒன்று மற்றொன்றாக மாறுகின்ற பௌதீக வடிவங்களின் பரஸ்பரச் செயற்பாடு மேலும் மேலும் முன்னணிக்கு வருகிறது; இறுதியிலே ஒரு குறிப்பிட்ட கட்டத்திலிருந்து அவைகளின் இரசாயன உறவு முக்கியத்துவம் பெற ஆரம்பிக்கின்றன; இதற்கு முன்பு இரசாயனரீதியாக உறக்கத்திலிருந்த மூலகங்கள் இரசாயனரீதியாக ஒன்று மற்றொன்றிலிருந்து வேறுபடத் தொடங்குகின்றன; இரசாயன குணாம்சங்களைப் பெறுகின்றன; ஒன்று மற்றொன்றுடன் இணைகின்றன. வெப்பநிலை குறைய குறைய இந்த இரசாயனக் கூட்டுப் பொருள்களும் தொடர்ந்து மாறுகின்றன; இந்த குறையும் வெப்பநிலை ஒவ்வொரு மூலகத்தை மட்டுமின்றி மூலகங்களின் ஒவ்வொரு தனித்தனியான கூட்டுப் பொருளையும் வெவ்வேறு விதமாகப் பாதிக்கிறது; வாயு ரூபமாக உள்ள பொருளின் ஒரு பகுதி முதலில் திரவமாகவும், பின்னர் திடப்பொருளாகவும் மாறுவதோடு இப்படிச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய சூழ்நிலைகளோடும் இந்தக் கூட்டுப் பொருள்கள் மாறுபாடு அடைக்கின்றன.

கோள்கள் உறுதியான மேலோட்டை பெற்று அதன் மேல்பரப்பில் நீர் திரளும் காலம், மையத்திலுள்ள சூரியனிலிருந்து எவ்வளவு வெப்பம் அதற்கு அனுப்பப்படுகிறதோ, அதை விட அதிகமாகத் தன்னுள் உள்ள வெப்பத்தை இழக்கக் கூடிய நிலையை அடையும் காலத்தோடும் பொருந்துகிறது. அதன் வளி மண்டலம் (Atmosphere) நாம் இப்போது கூறுகிற அர்த்தத்தில் உள்ள பருவநிலை நிகழ்ச்சிகளுக்கு அரங்காகிறது; அதன் மேல்பரப்பு புவியியல் மாற்றங்களின் அரங்காகிறது; கோளின் மிக வெப்பமான, திரவத் தன்மையுள்ள மையத்திலிருந்து மெதுவாகக் குறைந்து வரும் அதன் வெளிப்புற விளைவுகளுடன் நீர்ப்பொழிவால் ஏற்படுத்தப்படும் படிவங்களை ஒப்புநோக்கும் போது பின்சொன்னதினால் நிகழும் புவியியல் மாற்றங்கள் மேலும் மேலும் அதிகமான முக்கியத்துவம் பெறுகின்றன.

கடைசியாக, புரதப் பொருள் உயிர் தகமையுள்ள வரையறையை மீறாத அளவுக்குக் குறைந்தபட்சம் பெரும் பகுதி மேல்பரப்பில் வெப்பநிலையானது சமனமடையும் போது இதர இரசாயனப் பூர்வாங்க நிலைமைகள் சாதகமாக இருந்தால் புரோடோபிளாஸம் (Protoplasm) என்ற உயிர் தாது உண்டாகிறது. இந்த பூர்வாங்க நிலைகள் என்ன என்பதை நாம் இன்னும் அறியவில்லை. இதில் வியப்பொன்றும் இல்லை. ஏனெனில் புரதப் பொருளின் இரசாயன சூத்திரம் கூட இன்னும் ஸ்தாபிக்கப்படவில்லை; இரசாயனத் துறையில் எத்தனை வித மாறுபட்ட புரதப் பொருள்கள் உள்ளன என்பதும் கூட நமக்குத் தெரியாது; முழுமையாகவே ஓர் அமைப்பில்லாத புரதப் பொருள் உயிரின் எல்லா அத்தியாவசிய செய்கைகளையும் - உணவைச் செரித்தல், மலசலங்கழித்தல், அசைவு, சுருங்குதல், தூண்டலுக்கு நெகிழ்தல், இனப்பெருக்கம் ஆகியவற்றை- செயற்படுத்துகிறது என்பது அறியப்பட்டு சுமார் பத்தாண்டுகள்தான் ஆகிறது.

இதிலிருந்து அடுத்த படி, முன்னேற்றம் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் உருவாகி இந்த அமைப்பு உருவமற்ற புரதப் பொருள் ஒரு மென் சவ்வு போர்வையாக உள்ள உட்கருவை (Nucleus and cell membrane) கொண்ட முதல் உயிரணுவை (First cell) உற்பத்தி செய்ய பல ஆயிரம் ஆண்டுகள் பிடித்திருக்கும். உயிர்ப்புள்ள உலகு முழுமையின் அமைப்பியல் வளர்ச்சிக்கே (Morphological development) இந்த முதல் அணு அடித்தளமாக அமைந்தது. தொல்லுயிரியல் பதிவேடுகளின் எல்லா விபரங்களையும் வைத்துப் பார்க்கும்போது முதலில் வளர்ச்சி பெற்றவை உயிரணுத் தன்மை உள்ளதும் அற்றதுமான எண்ணற்ற புரோடிஸ்டா இனங்களே (Non-cellular and cellular protista); இவற்றில் Eozoon canadense41 என்பது மட்டும் நமக்குக் கிடைத்துள்ளது; இவற்றிலிருந்து சில படிப்படியான வேறுபாடுகள் பெற்று முதல் தாவரங்களாகவும் மற்றவை முதல் விலங்குகளாகவும் மாறின. இந்த முதல் விலங்குகளிலிருந்து பிரதானமாக பின்வந்த வேறுபாடுகளினால் அனேக வகுப்புக்கள் (Classes), வரிசை முறைகள் (Orders), குடும்பங்கள் (Families), வம்சங்கள் (Genera), இனங்களான (Species) விலங்குகள் தோன்றி வளர்ந்தன; கடைசியாக, பாலூட்டிகளில் இருந்து நரம்பு மண்டலம் முழு வளர்ச்சி பெற்ற முதுகெலும்புள்ள விலங்குகளும் தோன்றின; இவைகளின் மத்தியிலிருந்து இறுதியாக அந்த பாலூட்டியில் இருந்து இயற்கை தன்னைத்தானே உணரும் சக்தி பெற்ற முதுகெலும்புள்ள விலங்கான மனிதனும் தோன்றினான்.

மனிதன் கூட பாகுபாட்டு முறையினால் (Differentiation) தோன்றியவனே. தனிப்பட்ட முறையில் மட்டுமல்ல -ஒரே ஒரு முட்டை உயிரணுவிலிருந்து (A single egg cell) வளர்ந்து இயற்கையின் மிகச் சிக்கல் நிறைந்த சிருஷ்டியான ஓர் உயிரினமாக மட்டுமல்ல; வரலாற்றுரீதியாகவும் கூட. பல்லாயிர வருடப் போராட்டத்திற்கு பின்னர் பாதத்திலிருந்து கை வேறுபாடு அடைவது என்பதும் நிமிர்ந்த நடை என்பதும் இறுதியாக ஸ்தாபிக்கப்பட்டன; மனிதக் குரங்கிலிருந்து மனிதன் வேறுபட்டு நின்றான்; தெளிவான பேச்சுக்கும் மூளையின் மகத்தான வளர்ச்சிக்கும் அடித்தளம் அமைக்கப்பட்டது; இதனால் மனிதனுக்கும் மனிதக் குரங்கிற்கும் உள்ள அகழி இணைக்க முடியாததாகிறது. கை விசேஷத் திறன் பெறுகிறது -இதன் உட்பொருள் உழைப்புக்குரிய கருவி கிடைக்கிறது என்பதாகும்; உழைப்புக்குரிய கருவி என்னும்போது குறிப்பிட்ட மனிதச் செயல்பாடு என்பதும் இயற்கை மீது மனிதனின் மாற்றும் தன்மையுள்ள எதிர்வினையான உற்பத்தி என்பதும் ஆகிறது. விலங்குகளும் கூட உழைப்புக்குரிய கருவிகளை -குறுகிய பொருளில்- பெற்றுள்ளன; ஆனால் இந்தக் கருவிகள் அவற்றின் உடலுறுப்புகளாக உள்ளன; எறும்பு, தேனீ, பீவர் (The beaver); விலங்குகளும் பொருள் உற்பத்தி செய்கின்றன; ஆனால் சூழ்ந்துள்ள இயற்கையின் மீது அவை விளைவிக்கும் மாற்றம் இவ்வியற்கையின் விஷயத்தில் ஒன்றுமில்லை என்றே சொல்லலாம். ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு தாவர, விலங்கினங்களை மாற்றி வைத்ததினால் மட்டுமின்றி தான் குடியுள்ள இடத்தின் தோற்றத்தையும் பருவநிலையையும், விலங்குகளையும் தாவரங்களையும் கூடத் திருத்தியமைத்து விட்டதின் மூலம் மனிதன் மட்டுமே இயற்கையின் மீது தனது முத்திரையை பதியவைப்பதில் வெற்றி கண்டான்; இதனால் இப்பூவுலகம் அழிகின்ற பொழுதுதான் அவனுடைய செயலின் விளைவுகளும் அழியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இத்தனையையும் அவன் முதன்மையாகவும், முக்கியமாகவும் சாதித்தது தனது கையினால். இயற்கையை மாற்றியமைப்பதில் அவனிடம் இதுவரை உள்ளது மிக வலுவுள்ளதான நீராவி எஞ்சினும் கூட ஓர் உழைப்புக் கருவி என்ற பொருளில் இறுதியாகக் கையைத்தான் சார்ந்துள்ளது. ஆனால் கையின் வளர்ச்சியுடன் படிப்படியாக மூளையும் வளர்ச்சி பெற்றுச் சென்றது; ஆரம்பத்தில் நடைமுறையில் பயனுள்ள தனித்தனி செய்கைகளுக்கு அவசியமான சூழ்நிலைகளை பற்றிய உணர்வும் பின்னர் அதிக சாதக நிலையிலுள்ள மக்களிடையே அந்த உணர்விலிருந்து அந்தச் சூழ்நிலைகளை ஆளும் இயற்கை நியதிகளைப் பற்றிய உட்பார்வையும் வந்தன. இயற்கையின் நியதிகளை பற்றிய அறிவு விரைவாகப் பெருகப் பெருக இயற்கையின் மீது எதிரியக்கமாக செயல்படுவதற்கான சாதனங்களும் வளர்ந்தன; கையுடனும், அதற்கு அக்கம் பக்கமாகவும் ஓரளவுக்கு அதன் காரணமாகவும் மனிதனின் மூளையும் அதை அனுசரித்து வளர்ச்சி பெற்றிருக்கவில்லை எனில், கை மட்டும் நீராவி எந்திரத்தை படைத்திருக்க முடியாது.

மனிதனுடன் வரலாறு தொடங்குகிறது. விலங்குகளுக்கும் அவைகளின் இனத்தோற்றத்திலிருந்து தொடங்கி படிப்படியாக இன்றைய நிலைக்கு எவ்வாறு பரிணமித்தன என்று ஒரு வரலாறு உண்டு. இருந்தாலும் கூட, இந்த வரலாறு அவைகளுக்காக உண்டாக்கப்பட்டதே; அதில் அவைகளே பங்கு பற்றும் அளவுக்கு அவைகளுடைய உணர்வும் விருப்பமும் இல்லாமலே இது நிகழ்கிறது. இதற்கு மாறாக மனிதர்கள் -குறுகிய பொருளில்- விலங்குகளிடமிருந்து எந்த அளவுக்கு விலகிச் செல்கிறார்களோ, அந்த அளவுக்கு அவர்கள் தங்களது வரலாற்றை தாங்களே நனவுபூர்வமாக படைக்கின்றனர்; இதனால் அந்த அளவுக்கு எதிர்பாராத விளைவுகளினுடையவும் வரலாற்றின் கட்டுக்குள் இல்லாத சக்திகளுடையவும் பாதிப்புகள் குறைந்து, முன் கூட்டியே நிர்ணயித்த குறிகோளுடன் வரலாற்று பூர்வமான விளைவு மேலும் துல்லியமாகப் பொருந்துகிறது. ஆனால் இந்த அளவுகோலை மனித வரலாற்றிற்கு வைத்துப் பார்த்தோமெனில், தற்போது மிக அபிவிருத்தியடைந்துள்ள மக்களின் வரலாற்றுக்கு வைத்துப் பார்த்தாலும் கூட, கொள்ளப்பட்ட குறிக்கோள்களுக்கும் பெறப்பட்ட பலன்களுக்கும் பிரம்மாண்டமான தகவு வேறுபாடு இன்னும் கூட உள்ளது என்பதையும் எதிர்பாராத விளைவுகளே மேலோங்கி நிற்கின்றன என்பதையும் திட்டமிட்டு இயக்கி விடப்பட்ட சக்திகளைக் காட்டிலும் கட்டுக்குள் இல்லாத சக்திகளே அதிக வலுவுடன் விளங்குகின்றன என்பதையும் நாம் காண்கிறோம். மனிதர்களின் மிக முக்கியமான சரித்திர பூர்வமான செயல்பாடு, அவர்களை விலங்குகளின் நிலையிலிருந்து மானுட நிலைக்கு உயர்த்தியதும் அவர்களின் இதர எல்லாச் செயல்பாடுகளுக்கும் போதிய அடித்தளமாக உள்ளதுமான செயல்பாடு -அதாவது, அவர்களுடைய வாழ்க்கை தேவைப் பொருள்களை உற்பத்தி செய்து கொள்வது, நம் காலத்தில் சமூக உற்பத்தி எனப்படுவது- கட்டுக்குள் இல்லாத சக்திகளின் எதிர்பார்க்காத விளைவுகளின் பரஸ்பர வினைக்கு உள்ளாக்கப்பட்டு, விரும்பப்படுகின்ற குறிக்கோள் விதிவிலக்காக மட்டுமே அடையப்பட்டும், அதனால் பெரும்பாலாக அதற்கு நேர் எதிராகவே பெறப்பட்டும் இருக்கிற வரை அது வேறு விதமாக இருக்க முடியாது. தொழில்துறையில் மிகவும் முன்னேறியுள்ள நாடுகளில் இயற்கை சக்திகளை நாம் அடக்கி மனிதனுக்காக உழைக்குமாறு ஏவியிருக்கிறோம்; இதன் மூலமாக எல்லையற்ற அளவுக்கு, வயது வந்த நூறு பேர்கள் முன்பு உற்பத்தி செய்யும் அளவுக்கு உற்பத்தியை பெருக்கியுள்ளோம். இதன் பலன் என்ன? அதிகமாகின்ற வேலைப் பளுவும் அதிகமாகி வருகிற மக்களுடைய வறுமையும், பத்தாண்டுகளுக்கு ஒருமுறை பெரிய அளவுக்கு சரிவுமேயாகும். வரலாற்றுரீதியான வளர்ச்சியின் சிகரம் எனப் பொருளாதாரவாதிகள் (Economists) கொண்டாடும் சுயேட்சையான போட்டி, பிழைப்புப் போராட்டம் (Free competition, the struggle for existence) என்பது விலங்கின உலகின் சகஜமான நிலைப்பாடாகும் என டார்வின் எடுத்துக் காட்டிய பொழுது அவர் மனித குலத்தை பற்றி, விசேஷமாக தமது நாட்டவரை குறித்து எவ்வளவு கசப்பானதொரு நையாண்டி நூலை வரைந்து விட்டார் என்பதை அவர் அறியவில்லை. உற்பத்தியும் வினியோகமும் திட்டமிட்டு நடத்தப்படுகின்ற சமூக உற்பத்தி நனவுபூர்வமாக ஸ்தாபன ரீதியான அமைப்புக்குள் கொண்டு வரப்படுகின்ற போதுதான் சமூகத் துறையிலும் மனித குலம் இதர விலங்கின உலகிலிருந்து மேலே உயர்த்தப்பட முடியும்; அதே முறையில் தான் பொதுவான பொருள் உற்பத்தி இதைக் குறிப்பாக உயிரியல் துறையில் மனித குலத்திற்கு செய்தது. சரித்திர ரீதியான பரிணாமம் என்பது அப்படிப்பட்டதொரு ஸ்தாபன ரீதியான அமைப்பைத்தானே தவிர்க்க முடியாத தாக்குகிறது; ஒவ்வொரு நாளும் அதைச் சாத்தியமாக்கவும் செய்கிறது. அந்தக் காலத்திலிருந்து வரலாற்றின் ஒரு புதிய சகாப்தம் தொடங்கும்; அதில் மானுட வர்க்கம்தாமே, எல்லாப் பிரிவுகளையும் சேர்ந்த அதனுடைய செயலாற்றல்களுடன், குறிப்பாக இயற்கை விஞ்ஞானத்துடன் அடையக் கூடிய பெரும் முன்னேற்றம் இதற்கு முந்திய அனைத்தையும் வெகு தூரம் மிஞ்சித் திகழும்.

இருந்தாலும் கூட, "பிறக்கும் அனைத்தும் அழியத் தக்கவையே."* கோடிக்கணக்கான வருடங்களுக்கு பின்னர், லட்சக்கணக்கான தலைமுறைகள் தோன்றி மறைந்த பின்னர் துருவங்களிலிருந்து உந்திக் கொண்டு வரும் உறை பனிப் படலத்தை உருக்கி விடுவதற்கு சூரியனுடைய குறைந்து வரும் வெப்பம் போதாததாகி விடக் கூடிய காலம் தவிர்க்க முடியாமல் வந்தே தீரும்; மனிதகுலம் பூமத்திய ரேகையை சுற்றிச் சூழ்ந்து வாழும் நிலை ஏற்பட்டு கடைசியாக அங்கும் வாழ்வுக்கு போதுமான வெப்பம் இல்லாத நிலையை எய்திவிடும்; பிறகு படிப்படியாக உயிர் வாழ்க்கையின் (Organic life) கடைசி எச்சங்களும் மறைந்து விடும்; சந்திரன் போல் இந்நில உலகம் ஒளி அணைந்து உறைந்து போய் ஆதிக்கும்மிருட்டில் நாளுக்கு நாள் குறுகி வருகிற விண்வெளிப் பாதையில் அதைப் போல் ஒளி அணைந்த சூரியனை வட்டமிட்டு வந்து அதனுள் விழுந்து விடும். இதே போல் இதர கிரகங்கள் முன்னமேயே விழுந்திருக்கும்; மற்ற கிரகங்களும் இதையே பின்பற்றி வரும். இசைவாக அமைந்துள்ள உறுப்புகளைக் கொண்ட ஓர் ஏற்பாட்டில் இருக்கிற, ஒளி பொருந்திய, வெப்பமான சூரிய மண்டலத்திற்கு பதில் சில்லிட்டு மாண்டு போன ஒரு கோளம் பிரபஞ்சத்தின் அண்ட வெளியிலே தன்னந்தனியாக சுற்றி வரும். நமது சூரிய மண்டலத்திற்கு ஏற்படும் கதி நமது பிரபஞ்சத் தீவின் எல்லா மண்டலங்களுக்கும் முன்போ பின்னரோ நிகழ்ந்து தான் தீரும்; கண்ணில் படுவதற்கு உயிருள்ள ஒரு மனிதன் இருக்கும் போது கூட இந்நில உலகை வந்து சேராத ஒளியுள்ள அவ்வளவு தூரத்தில் இருக்கிற எண்ணற்ற பிரபஞ்சத் தீவுகளுக்கும் இது நிகழ்ந்தே தீரும்.

----------------

கேதே, ஃபாவுஸ்ட், பாகம் மி, காட்சி 3 ("ஃபாவுஸ்டின் படிப்பறை).-ப.ர்.

---------------

இவ்விதம் ஒரு சூரிய மண்டலம் தனது ஆயுள் வரலாற்றை முடித்துக் கொண்டு முடிவு எல்லையுள்ள எல்லாவற்றிற்கும் உரிய மரணத்திற்கு பணிந்து விட்ட பொழுது மேற்கொண்டு என்ன? எல்லையற்ற அண்ட வெளியில் சூரியனின் சடலம் சதாசர்வ காலமும் உருண்டு வருமா? ஒரு காலத்தில் வரையறையற்று பல்வேறு வகையாக வேறுபட்டு நின்ற இயற்கை சக்திகள் எல்லாம் கவர்ச்சி என்ற ஒரே ஓர் இயக்க வடிவத்தை மட்டும் நிரந்தரமாக பெற்று விடுமா? "அல்லது"-செக்கி (Secchi) கேட்பது போல் -"மாண்டு போன இந்த மண்டலத்தை ஒளிர்கின்ற ஒளிமுகிலாக ஆரம்ப நிலைக்கு மீண்டும் மாற்றி அதைப் புதிய வாழ்க்கைக்கு மீண்டும் உயிர்த்தெழச் செய்கின்ற வினைகள் இயற்கையில் உள்ளனவா? நாம் அறியோம்."

2 ஜ் 2 = 4 என்று நாம் அறிந்துள்ளதை போல, அல்லது பருப்பொருளின் கவர்ச்சி (Attraction of matter) அது உள்ள தூரத்தை ஒட்டி சதுர அளவில் பெருகும் அல்லது குறையும் என்பதை அறித்துள்ளதை போல, அது நமக்குத் தெரியாது தான். இருந்தபோதிலும், தத்துவ ரீதியான இயற்கை விஞ்ஞானம் இயற்கையை பற்றிய தனது கண்ணோட்டத்தை ஒரு முழுமையுள்ள இசைவான அமைப்பாக முடிந்த வரை நிர்மாணிக்கிறது; அப்படி இல்லையெனில், ஒரு சிந்திக்காத அனுபவவியல்வாதியும் கூட அது இல்லாமல் தற்காலத்தில் ஒன்றும் சாதித்துவிட முடியாது; இதில் நாம் மிகவும் அடிக்கடி முற்றிலும் அறியப்படாத பரிணாமங்களைக் கொண்டு கணக்கிட வேண்டியுள்ளது; முரணற்ற சிந்தனை என்பதே எல்லா சமயங்களிலும் உதவி புரிந்து குறைபாடுள்ள அறிவை நிறைவு செய்ய வேண்டும். நவீன காலத்து இயற்கை விஞ்ஞானம் இயக்கத்தின் அழிக்கவொண்ணா தன்மை என்ற கோட்பாட்டை மெய்யியலில் இருந்து எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது; இந்தக் கோட்பாடு இல்லாமல் இனி அது இருக்க முடியாது. ஆனால் பருப்பொருளின் இயக்கம் (Motion of matter) என்பது வெறும் கொச்சையான இயந்திர இயக்கம் மட்டுமல்ல, வெறும் இடப்பெயர்ச்சி மட்டுமல்ல; அது வெப்பம், ஒளி, மின் அழுத்தம், காந்த அழுத்தம், வேதியியற் சேர்க்கை, வேதியியற் சிதைவு, உயிர்ப்பு, இறுதியாக உணர்வும் ஆகும். பருப்பொருள் (Matter) தனது எல்லையற்ற வாழ்வுக் காலம் முழுவதிலும் ஒரே ஒரு தடவை மட்டுமே - அதுவும் அதனுடைய சாஸ்வதமான நிலைநிற்புடன் ஒப்பிடும் போது மிக நுணுக்கமான குறுகிய காலத்திற்கு மட்டுமே - தனது இயக்கத்தை வேறுபடுத்திக் காட்ட அதனால் சாத்தியமாயிற்று என்றும் அதன் மூலம் இந்த இயக்கத்தின் செழுமை முழுவதும் வெளிப்பட்டது என்றும் இதற்கு முன்பும் பின்பும் அந்தந்தக் காலத்திற்கும் வெறும் இடப் பெயர்ச்சி அளவிற்கு தன்னை குறுக்கிக் கொள்கிறது என்றும் கூறுவதெனில், பருப்பொருள் மாண்டு போகும் தன்மையுடையது, இயக்கம் தற்காலிகமானது என்பதற்கு சமமாகும். இயக்கத்தின் அழிக்கவொண்ணா தன்மை என்பதை வெறும் அளவு நிலையிலே மட்டும் கருதக் கூடாது; பண்பு நிலையிலும் அது கருதப்பட வேண்டும். பருப்பொருளின் சுத்தமான இயந்திர முறையிலான இடப்பெயர்ச்சி என்னும் போது சாதகமான சூழ்நிலைகளில் அது வெப்பம், மின்சாரம், இரசாயன செய்கை, உயிர்ப்பு என்று மாற்றம் பெறும் தன்மை பெற்றிருக்கிறது என்றும் ஆனால் அந்தச் சூழ்நிலைகளை தன்னுள்ளிருந்தே உற்பத்தி செய்து கொள்ள முடியவில்லை என்றும் ஆகிறது என்றால் அப்படிப்பட்ட பருப்பொருள் இயக்கத்தை பறிகொடுத்து விட்டது என்பதேயாகும். அந்த இயக்கம் தனக்கு பொருத்தமான பல வடிவங்களை பெறும் தன்மையை இழந்து விட்டாலும் அது இன்னும் dynamis* பெற்றிருக்க முடியும் என்றும் ஆனால் energeia** மட்டும் இல்லை என்றும் ஆக அது தன்னில் ஒரு பகுதியை அழித்துக் கொண்டது என்றும் ஆகிறது. ஆனால் இவ்விரண்டும் சிந்திக்க சாத்தியமில்லாதவையாகின்றன.

-----------

*_விசை.-ப-ர்.

**_ஆற்றல்.-ப-ர்.

------------

இது மட்டும் உறுதி: ஒரு காலத்தில் நமது பிரபஞ்சத் தீவைச் சேர்ந்த பருப்பொருள், குறைந்த பட்சம் இரண்டு கோடி விண்மீன்களை (Twenty million stars), கொண்ட சூரிய மண்டலங்களை உற்பத்தி செய்யக் கூடிய (மேட்லரின் கருத்துப்படி) அளவுக்கு தனது இயக்கத்தை - அது எவ்வகையானது என்பது இன்னும் அறியப்படவில்லை - வெப்பமாக மாற்றியுள்ளது; அதேபோல் அவை படிப்படியாக மறைவதும் திண்ணம். இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது? நமது சூரிய மண்டலத்தின் எதிர்கால caput mortuum *** சூரிய மண்டலங்கள் உண்டாவதற்கான மூலப் பொருளாக மறுபடியும் மாறுமா என்பதைப் பற்றி செக்கி பாதிரியாருக்கு எவ்வளவு குறைவாகத் தெரியுமோ, அதே போல் நமக்கும் குறைவாகவே தெரியும். இந்த இடத்திலே நாம் சிருஷ்டிகர்த்தாவை ஆதாரம் தேட வேண்டும், அல்லது அசையும் பருப்பொருளுக்குள் இயல்பாகவே அடங்கியுள்ள இயக்கத்தின் மாற்றங்களால் நமது பிரபஞ்சத் தீவை சேர்ந்த சூரிய மண்டலங்கள் உண்டாவதற்கான ஒளியூட்டம் மிக்க மூலப்பொருள் இயற்கையான முறையில் உற்பத்தி செய்யப்பட்டது. ஆகவே இயக்கத்தின் இந்த மாற்றங்களுக்கான சூழ்நிலைகளையும் பருப்பொருளே மறுபடியும் உற்பத்தி செய்தாக வேண்டும், அது கோடானுகோடி வருடங்களுக்கு பின்னர் ஏறக்குறைய தற்செயலாகவாவது நிகழும், ஆனால் தற்செயலாக என்பதில் அவசியம் என்பதும் அடங்கியுள்ளது என்று நாம் தீர்மானிக்கும்படி நிர்ப்பந்திக்கப்படுகிறோம்.

----------------------

***_நேர்ப்பொருளில்: செத்த தலை; இங்கே அணைந்து போன சூரியனும் அதன் மேல் விழுந்த உயிரற்ற கோள்களும் குறிக்கப்படுகின்றன.-ப-ர்.

-----------------------

அப்படிப்பட்ட மாற்றத்திற்கான சாத்தியப்பாடு மேலும் மேலும் ஒப்புக் கொள்ளப்பட்டு வருகிறது. வானத்தில் இயங்கும் கோள்கள் இறுதியாக ஒன்றுக்குள் ஒன்று விழுந்தாக வேண்டும் என்ற கருத்திற்கே அனைவரும் வருகின்றனர்; அது மட்டுமின்றி, அப்படிப்பட்ட மோதல்கள் நிகழும் போது எவ்வளவு வெப்பம் உண்டாக்கப்படும் என்பதும் கூடக் கணக்கிடப்படுகிறது. புதிய விண்மீன்கள் (stars) திடீரெனப் பீறிட்டுக் கொழுந்து விடுவதாகவும் ஏற்கெனவே நாம் அறிந்த விண்மீன்களின் ஒளி திடீரெனச் சுடர்விட்டு பிரகாசிக்கிறது என்றும் வானியல் நமக்கு அறிவிக்கிறது; அப்படிப்பட்ட மோதல்களினால் இந்த நிகழ்ச்சிகளுக்கு எளிதான விளக்கம் கிடைக்கிறது. மேலும், எமது கிரகங்களின் கூட்டம் சூரியனைச் சுற்றி வருகின்றது என்பதும் எமது சூரியன் எமது பிரபஞ்சத் தீவினுள்ளே இயங்குகிறது என்பதும் மட்டுமல்ல, எமது பிரபஞ்சத் தீவு முழுவதும் இதர பிரபஞ்சத் தீவுகளுடன் தற்காலிகமான, தொடர்புச் சமன் நிலையில் அண்டவெளியில் இயங்குகிறது; சுதந்திரமாக மிதக்கும் கோள்களின் தொடர்புச் சமன் நிலையும் கூட அவைகளின் இயக்கம் பரஸ்பர ரீதியாக நிர்ணயிக்கப்பட்டால் மட்டும் நிலைநிற்க முடியும்; அண்டவெளி முழுவதிலும் எல்லா இடங்களிலும் வெப்பநிலை ஒரே மாதிரியாக இல்லை எனப் பலரும் அனுமானிக்கின்றனர். இறுதியாக, நமது பிரபஞ்சத் தீவின் எண்ணற்ற சூரியன்களின் வெப்பத்தில் மிக நுண்ணிய அளவு நீங்கலாக மிகுதி முழுவதும் அண்டவெளியில் மறைந்து விடுகிறது என்பதும் ஒரு சென்டிகிரேட் டிகிரியில் பத்து லட்சத்தில் ஒரு பங்கின் அளவுக்குக் கூட அண்டவெளியின் வெப்பநிலையை அது உயர்த்துவதில்லை என்பதும் நமக்குத் தெரியும். இவ்வளவு பிரம்மாண்டமான அளவு வெப்பம் என்ன ஆகிறது? பிரபஞ்சத்தின் அண்டவெளிக்கு சூடேற்றும் முயற்சியில் அது நிரந்தரமாகச் சிதறி மறைந்து வருகிறதா? நடைமுறையில் அது மாண்டு அழிந்ததா? அல்லது ஒரு டிகிரியில் பத்து அல்லது அதற்கு மேலான பூஜ்ஜியங்கள் உள்ள ஒரு தசாம்ச பின்னத்தின் அளவுக்கு அது அண்டவெளியின் வெப்ப நிலையை உயர்த்துகிறது என்ற பொருளில் தத்துவ ரீதியாக மட்டும் தொடர்ந்து நிலை நிற்கிறதா? இப்படி அனுமானித்தல், இயக்கத்தின் அழிக்கவொண்ணா தன்மையை மறுப்பதற்கொப்பாகும்; விண்கோள்கள் தொடர்ந்து ஒன்றுக்குள் ஒன்று விழுந்து விடுவதினால் தற்போதுள்ள இயந்திரச் சலனம் முழுவதும் வெப்பமாக மாறி அதுவும் அண்டவெளிக்குள் கதிர்வீச்சு முறையில் சென்று விடுகிற படியால் "சக்தியின் அழிக்கவொண்ணா தன்மை" என்றெல்லாம் சொல்லப்பட்ட போதிலும் இயக்கம் என்பது பொதுவாக அழியும் என்ற கருத்திற்கு இடமளிப்பதாக ஆகிறது. (இதற்கிடையே, இங்கே இயக்கத்தின் அழிக்கவொண்ணா தன்மை என்ற சொற்றொடருக்குப் பதில் சக்தியின் அழிக்கவொண்ணா தன்மை என்ற சொற்றொடர் எவ்வளவு பொருத்தமற்றிருக்கிறது என்பதை காணலாம்.) ஆகையால் ஏதாவது ஒரு வழியில்-இவ்வழியைக் காட்டுவது பின்னால் இயற்கை விஞ்ஞான ஆராய்ச்சியின் கடமையாக இருக்கும்-அண்டவெளிக்குள் கதிர்வீச்சு முறையில் சென்ற வெப்பம் இயக்கத்தின் மற்றொரு வடிவமாக மாற முடியும் என்றதும் இந்த வடிவத்தில் அது சேமிக்கப்பட்டு மறுபடியும் செயலாற்றலுக்கு வர முடியும் என்றதுமான முடிவுக்குத்தான் நாம் வர வேண்டும். இதன் மூலமாக, ஒளி இழந்த சூரியன்கள் மறுபடியும் வெண்ணொளி வீசும் ஆவியாக மாறுவதில் உள்ள பிரதானமான முட்டுக்கட்டை நீங்குகிறது.

இதர விஷயங்களைப் பொறுத்தவரை, எல்லையற்ற காலத்தில் உலகங்கள் எப்பொழுதுமே ஒன்றைத் தொடர்ந்து ஒன்று உண்டாகும் என்பதானது, எல்லையற்ற அண்டவெளியில் எண்ணற்ற உலகங்கள் அக்கம் பக்கமாக நிலைபெற்றிருக்கின்றன என்ற கருத்தைத் தர்க்க ரீதியாக முழுமை பெறச் செய்கிறது-இந்தக் கோட்பாட்டின் அவசியம், தத்துவத்தை எதிர்க்கும் போக்குள்ள ட்ராப்பரின் அமெரிக்க மூளையையும் கூடத் துளைத்துள்ளது.*

--------------

* "எல்லையற்ற அண்டவெளியில் பெருமளவு உலகங்கள் உள்ளன என்ற கருத்திலிருந்து எல்லையற்ற காலத்தில் உலகங்கள் தொடர்ந்தாற்போல உண்டாகும் என்ற கருத்திற்கு இட்டுச் செல்லப்படுகிறோம்" (ஜா.வி. டிரேபர், ஐரோப்பாவின் சிந்தனைத் துறை வளர்ச்சி வரலாறு, தொகுதி 2, பக்கம் [325]). (பி. ஏங்கெல்ஸ் எழுதிய குறிப்பு.)

---------------

பருப்பொருள் ஒரு நிரந்தர வட்டத்தில் அசைந்து செல்கிறது: அது ஒரு முழுமையான வட்டம் ஆவதற்குப் பிடிக்கும் காலத்தை அளக்க நமது பூவுலக ஆண்டு ஒரு போதுமான அளவுகோல் அல்ல; இந்த வட்டத்தில் உயிரும் சுய நனவும் செயல்படுகிற இடைவெளி எப்படிக் குறுகலாக வரையறுக்கப்பட்டுள்ளதோ, அதைப் போலவே மிகச் சிகரமான வளர்ச்சிக்கு ஆகும் காலம், உயிர்ப்புள்ள வாழ்வுக்கான காலம் (The time of organic life) குறுகலாக வரையறுக்கப்பட்டுள்ளது; இதை விட இயற்கையை பற்றியும் தங்களைப் பற்றியும் நனவு உள்ள ஜீவிகளின் வாழ்வுக்கான காலமும் குறுகலாக வரையறுக்கப்பட்டுள்ளது; இந்த வட்டத்தில் பருப்பொருளினுடைய குறிப்பிட்ட வரம்புள்ள ஒவ்வொரு வரையறைப்பட்ட செயல்முறையும் -அது சூரியன் அல்லது ஒளிமுகிலான வாயுவாயினும் (sun or nebular vapour), ஒரு தனிப்பட்ட விலங்கோ அல்லது மிருக இனமாயினும், வேதியியற் சேர்க்கை அல்லது சிதைவு ஆயினும் சரி-சமமான அளவில் தற்காலிகமானது; இதில் எதுவும் நிரந்தரமான தன்மை கொண்டதல்ல; ஆனால் சாசுவதமாக மாறிக் கொண்டும் சாசுவதமாக இயங்கியும் வருகிற பருப்பொருளும் எந்த நியதிகளுக்குட்பட்டு அது மாறியும் இயங்கியும் வருகிறதோ, அவையும் சாசுவதமானவை. இருந்த போதிலும், காலத்திலும் (Time) இடவெளியிலும் (Space) இந்தச் சூழல் வட்டம் எவ்வளவு இரக்கமின்றி எத்தனை தடவை முழுமை பெற்றாலும், எத்தனை கோடி சூரியன்களும் பூமிகளும் தோன்றி மறைந்தாலும், ஒரு சூரிய மண்டலத்தில் ஒரே ஒரு கோளில் உயிர்ராசிகள் வாழ்வதற்கான சூழ்நிலைகள் உருவாக எவ்வளவு காலமானாலும், சிந்திக்கும் மூளையுள்ள விலங்குகள் தோன்றுவதற்கு முன்பு எத்தனையோ எண்ணற்ற உயிர்ராசிகள் தோன்றி மறைந்தாலும், அவை தங்கள் வாழ்வுக்கு பொருத்தமான சூழ்நிலைகளை குறுகலான கால கட்டத்திற்கு பெற்று பின்னர் சற்றும் ஈரவிக்கமின்றி அழிக்கப்பட்டாலும்- ஒன்று மட்டும் நிச்சயம்: பருப்பொருள் தனது எல்லா உருமாற்றங்களும் நிரந்தரமான ஒன்றாகவே உள்ளது; அது தனது எந்த குணாம்சத்தையும் இழப்பதில்லை; ஆகவே, மேலும், அது பூமியில் எந்த உறுதியான நியதியின்படி தனது சிகரம் போன்ற படைப்பான சிந்திக்கும் மனதை அழித்து விடுகிறதோ, அதே நியதியின்படி வேறெங்காவது, ஏதாவதொரு காலத்தில் மறுபடியும் அதை உற்பத்தி செய்து தீர வேண்டும்.

1875 - 1876ல்

பி. எங்கெல்சினால் எழுதப்பட்டது

மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் ஆவணங்கள், நூல் II, 1925ல் ஜேர்மன் மொழியிலும் ரஷ்ய மொழியிலும் முதலில் வெளியிடப்பட்டது.

கையெழுத்துப் பிரதியின்படி அச்சிடப்பட்டது

மூலம் ஜேர்மன் மொழியில் எழுதப்பட்டது

II. "The Old Preface to Anti-Dühring"

 On Dialectics

பி. ஏங்கெல்ஸ்

"டூரிங்குக்கு மறுப்புக்குப்"* பழைய முகவுரை

--------

*பி. ஏங்கெல்ஸ், டூரிங்கிற்கு மறுப்பு. திரு. ஒய்கேன் டூரிங் விஞ்ஞானத்தில் நிகழ்த்திய புரட்சி.-ப-ர்.

------------

இயங்கியலைப் பற்றி

பின்வரும் நூல் ஏதோ ஓர் "உள்தூண்டுதல்" காரணமாக எவ்வகையிலும் தோன்றியதல்ல. அதற்கு மாறாக, திரு. டூரிங்கின் புத்தம் புதிய சோசலிச தத்துவத்தின் மீது விமர்சன ஒளியை வீசும்படி என்னைத் தூண்ட, எனது நண்பர் லீப்க்னெஹ்ட் எவ்வளவு பெரிய முயற்சி செய்ய வேண்டியிருந்தது என்பதற்கு அவரே சான்று கூறுவார். இவ்வாறு செய்வது என்று என் மனதில் தீர்மானித்தவுடனேயே, ஒரு புதிய மெய்யியல் அமைப்பின் ஆக அணித்தான நடைமுறைப் பலன் என்று உரிமை கொண்டாடுகின்ற இந்த தத்துவத்தை, அதற்கும் இந்த அமைப்பிற்கும் உள்ள தொடர்பிலும் அலசி ஆராயவும் இவ்வாறாக அந்த அமைப்பையே பரிசீலனை செய்யவும் முன்வருவது தவிர எனக்கு வேறு வழியில்லை. ஆகவே சாத்தியமான எல்லா விஷயங்களை பற்றியும் அதோடு கூட வேறு சிலவற்றை பற்றியும் அவர் பிரஸ்தாபிக்கும் இந்த விரிந்த துறையில் திரு. டூரிங்கைப் பின்தொடர்ந்து செல்ல வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது. 1877ம் ஆண்டு ஆரம்பத்திலிருந்து ஆரம்பித்து லைப்சிக் vorwarts பத்திரிகையில்42 வெளிவந்த தொடர் கட்டுரைகளின் மூலவுரை இதுவே; இங்கு அவை தொடர்புள்ள முழுத் தொகுப்பாக தரப்படுகின்றன.

எவ்வளவுதான் தற்புகழ்ச்சி செய்து கொண்டாலும் விஷயத்தின் தன்மை காரணமாகவே மிகமிக முக்கியத்துவமில்லாததாக இருக்கும் பொழுது ஓர் அமைப்பு பற்றிய விமர்சனம் இவ்வளவு அதிக விவரமாக ஏன் முன்வைக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு சமாதானமாக இரண்டு சந்தர்ப்ப சூழல்களை சுட்டலாம். ஒரு புறத்தில், இன்று முற்றிலும் பொதுவான விஞ்ஞான அல்லது நடைமுறை அக்கறைக்குரியதான, சர்ச்சைக்குரியதான பிரச்சனைகள் மீதான எனது கண்ணோட்டத்தை பல்வேறு துறைகளிலும் உருப்படியான வடிவில் முன்வைப்பதற்கு இந்த விமர்சனம் எனக்கு வாய்ப்பளித்தது. திரு. டூரிங்கின் அமைப்புக்கு ஒரு மாற்றாக இன்னொரு அமைப்பை முன்வைக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குச் சிறிது கூட மனதில் தோன்றவில்லை எனினும் அதே போதில் என்னால் பல்வேறுவகையான விஷயாதாரங்கள் பரிசீலிக்கப்பட்டிருந்த போதிலும், என்னால் முன் வைக்கப்பட்டுள்ள கருத்துகளில் உள்ளார்ந்து கிடக்கும் பரஸ்பரத் தொடர்பை வாசகர் கவனிக்காமலிருக்க முடியாது என்று நம்புகிறோம்.

மறுபுறத்தில், "அமைப்பு உருவாக்கும்" ("System-Creating") திரு. டூரிங் தற்கால ஜேர்மனியில் எவ்வகையிலும் ஒரு தனிப்பட்ட புலப்பாடு அன்று. அந்த நாட்டில் சென்ற சிறிது காலமாகவே மெய்யியல், விசேஷமாயும் இயற்கை பற்றிய மெய்யியல் அமைப்புகள் காளான்களைப் போன்று ஓர் இரவுக்குள் டஜன் கணக்கில் முளைத்தெழுந்து கொண்டிருக்கின்றன; அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றிலான எண்ணற்ற புதிய அமைப்புகளை நான் இதில் குறிப்பிடத் தேவையில்லை. நவீன அரசில் எவ்வாறு ஒவ்வொரு குடிமகனும் அவன் வாக்களிக்குமாறு கோரப்படுகிற எல்லாப் பிரச்சினைகளை பற்றியும் தீர்ப்பளிக்க தகுதிவாய்ந்தவனாக எண்ணப்படுகிறானோ, பொருளாதாரத்தில் எவ்வாறு ஒவ்வொரு நுகர்வோனும் தனது பராமரிப்புக்காக வாங்கும் வாய்ப்புடைய அனைத்துப் பண்டங்களையும் பற்றிய ரசனைத் தேர்ச்சியுள்ளவனாக எண்ணப்படுகிறானோ, அதே மாதிரியான அனுமானங்கள் இப்போது விஞ்ஞானத்திலும் செய்யப்படவிருக்கின்றன. எதைப் பற்றியும் யாரும் எழுதலாம்; தாம் படித்தாராயாத விஷயங்களை பற்றி மக்கள் வேண்டுமென்றே எழுதுவதிலும் இது ஒன்றே கறாரான விஞ்ஞானபூர்வமான முறை என்று முன்வைப்பதிலுமே துல்லியமாயும் இன்றைய "விஞ்ஞான சுதந்திரம்" அடங்கியுள்ளது. இந்த இறுமாப்புடைய போலி விஞ்ஞானத்தின் ஆகக் குறிப்பிடத்தக்க மாதிரியே திரு டூரிங்; இந்தப் போலி விஞ்ஞானம் ஜேர்மனியில் இற்றை நாட்களில் எல்லாவிடங்களிலும் முண்டியடித்து முன்னுக்கு வந்து தனது அதிர்வூட்டும் உன்னத மடமையைக் கொண்டு எல்லாவற்றையும் மூழ்கடித்து வருகிறது. காவியம், மெய்யியல், பொருளாதாரம், வரலாற்றியல் இவைகளில் உன்னதமான மடமை; விரிவுரையாற்றும் மண்டபத்திலும் பொது மேடையிலும் உன்னதமான மடமை; எங்கு நோக்கினும் உன்னதமான மடமை; இதர நாடுகளின் சாமான்யமான எளிமையான மடமையிலிருந்து தம்மை வேறுபடுத்திக் கொண்டு கருத்தாழத்திற்கும் மேன்மைக்கும் உரிமை கொண்டாடுகிற உன்னதமான மடமை; ஜேர்மனியில் செய்யப்பட்ட இதர சரக்குகளைப் போலவே - மலிவான ஆனால் மோசமான- ஜேர்மனியின் அறிவுத்துறைத் தொழிலின் ஆகக் குறிப்பிடத்தக்க பெருமளவிலான உற்பத்திப் பொருளும் உன்னத மடமையே - துரதிர்ஷ்டவசமாக இது ஃபிலடெல்ஃபியா (Philadelphia) பொருட்காட்சியில்43 உற்பத்திச் சரக்குகளுடன் சேர்த்து காட்சிக்கு வைக்கப்படவில்லை. சமீபத்தில் ஜேர்மன் சோசலிசமும் கூட -குறிப்பாக திரு. டூரிங்கின் நல்ல முன்னுதாரணத்திற்கு பின்னர்- கணிசமான அளவில் உன்னத மடமைக்கு ஆளாகியிருக்கிறது; நடைமுறை சமூக-ஜனநாயக இயக்கம் இந்த உன்னத மடமையினால் தவறான வழிக்கு இட்டுச் செல்லப்படுவதற்கு சிறிதும் இடங்கொடுக்கவில்லை என்றால், இயற்கை விஞ்ஞானத்தை தவிர ஏறக்குறைய மற்றெல்லாத் துறைகளிலும் அசௌக்கியமுற்றுள்ள அந்த நாட்டில் இன்று தொழிலாள வர்க்கம் குறிப்பிடத்தக்க அளவு ஆரோக்கியமான நிலையில் உள்ளது என்பதற்கு மேலும் ஒரு சான்றாகும்.

மனித அறிவு என்றைக்கும் சர்வத்தையும் அறிந்த ஞானத்தின் தன்மையைப் பெற முடியாது என்று நேகெலி (Nägeli), மியூனிக் நகரில் நடைபெற்ற இயற்கை விஞ்ஞானிகளின் கூட்டத்தில் ஆற்றிய உரையில் குறிப்பிட்ட போது அவர் திரு. டூரிங்கின் சாதனைகளை கட்டாயம் அறிந்திராதவராக இருந்திருக்க வேண்டும். இந்த சாதனைகள், அதிகப்பட்சம் பொழுதுபோக்குக்கு என்ற அளவில் மட்டுமே இயங்கக் கூடியதான பல துறைகளில் நான் அவரைப் பின்பற்றுமாறு என்னை கட்டாயப்படுத்தின. ஒரு "சாமான்ய மனிதன்" ஏதேனும் ஒரு கருத்தை வெளியிடுவது தகாத் துணிச்சல் என்று பெரும்பாலும் கருதப்பட்ட இயற்கை விஞ்ஞானத்தின் பல்வேறு பிரிவுகளுக்கும் இது குறிப்பாக பொருந்தும். தனது விசேஷ துறைக்கப்பால் ஒவ்வோர் இயற்கை விஞ்ஞானியும் ஒரு கற்றுக்குட்டியே,44 vulgo* ஒரு சாமான்ய மனிதனே என்று அதே மியூனிக் நகரில் திரு. வீர்ஹவால் (Herr Virchow) உரைக்கப்பட்டு பின்னால் வேறிடத்தில் விரிவாக விவாதிக்கப்பட்ட கருத்து எனக்குச் சற்றே ஊக்கமூட்டுவதாக உள்ளது. அப்படிச் சிறப்பான தேர்ச்சியுடைய ஒருவன் அருகாமையிலுள்ள துறைகளிலும் அவ்வப்போது அத்துமீறிப் பிரவேசிப்பதற்கான சுதந்திரத்தை எடுத்துக் கொள்ளலாம், எடுத்துக்கொள்ள வேண்டும்; அந்தத் துறைகளிலுள்ள விசேஷ தேர்ச்சியுடையவர்கள் சிறு பிழைகள், நேர்த்திக் குறைவான சொல்லாட்சி விஷயமாக அவனுக்கு சலுகை காட்டுவது போல, நானும் எனது பொதுவான தத்துவார்த்த கருத்துக்களுக்கு சான்றாக இயற்கையின் மாற்றப்போக்குகளையும் இயற்கையின் நியதிகளையும் எடுத்துக்காட்டும் சுதந்திரத்தை மேற்கொண்டுள்ளபடியால் நானும் அந்தச் சலுகையை எதிர்பார்க்கலாம் என்று நம்புகிறேன். நவீன இயற்கை விஞ்ஞானம் அடைந்துள்ள விளைவுகள், ஓர் இயற்கை விஞ்ஞானியை -அவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்- இன்று எவ்வாறு பொதுவான தத்துவரீதியான முடிவுகளுக்கு வருமாறு வலுவந்தமாக இட்டுச் செல்கிறதோ, அதே தடுக்கமுடியாத வலிமையுடன் தத்துவரீதியான விவகாரங்களில் ஈடுபட்டுள்ள ஒவ்வொருவர் மீதும் வலிந்து செயல்படுகின்றன. இங்கு ஒருவிதத்தில் ஒரு குறை ஈடு செய்யப்படுகிறது. இயற்கை விஞ்ஞானத்தில் தத்துவவாதிகள் கற்றுக்குட்டிகள் (willy-nilly) என்னும் பட்சத்தில் இயற்கை விஞ்ஞானிகளும் இன்று தத்துவத் துறையில், மெய்யியல் என்று இதுவரை அழைக்கப்பட்டு வருகின்ற துறையில் அதே அளவுக்கு எதார்த்தத்தில் அப்படியேதான் உள்ளனர்.

-----------

*-எளிமையாகச் சொல்வதென்றால்.-ப-ர்.

-----------

அனுபவவாத இயற்கை விஞ்ஞானம் அறிவுத் துறைக்குப் பிரம்மாண்டமான அளவில் உருப்படியான விஷயாதாரங்களை திரட்டித் தந்துள்ளது; ஆகவே திட்டமிட்ட முறையில் அவற்றின் பரஸ்பர உள்தொடர்புகளுக்கு ஏற்ப ஒவ்வொரு தனிப்பட்ட ஆராய்ச்சித் துறையிலும் அவற்றை வகைப்படுத்துவது முற்றிலும் அவசர அவசியமாகி விட்டது. தனிப்பட்ட அறிவுத் துறைகளையும் ஒன்றோடொன்று சரியான தொடர்புக்குள் கொண்டு வர வேண்டியதும் அதே அளவுக்கு அவசர அவசியமாகி விட்டது. அப்படிச் செய்யும் பொழுது இயற்கை விஞ்ஞானம் தத்துவத் துறைக்குள் பிரவேசிக்கிறது; இங்கு அனுபவவாதத்தின் முறைகள் பயன்படா, தத்துவரீதியிலான சிந்தனை என்பது இயற்கையான திறன் என்ற அளவில் மட்டுமே ஓர் உள்ளார்ந்த பண்பாகும். இந்த இயற்கையான திறன் வளர்க்கப்பட்டு மேம்படுத்தப்பட வேண்டும்; அதன் மேம்பாட்டுக்கு முந்திய மெய்யியலைப் படித்தாராய்வது தவிர வேறு வழிகள் கிடையாது.

ஒவ்வொரு சகாப்தத்திலும் -ஆகவே நம்முடையதிலும்- தத்துவரீதியான சிந்தனை என்பது ஒரு வரலாற்று விளைபயன் ஆகும்; அது வெவ்வேறு காலங்களில் மிகவும் வெவ்வேறான வடிவங்களையும் அத்துடன் வெவ்வேறு உட்கிடக்கைகளையும் கொள்கிறது. ஆகவே சிந்தனை பற்றிய விஞ்ஞானம் என்பதும் மற்றவைகளைப் போலவே ஒரு வரலாற்றுரீதியான விஞ்ஞானமாகும்; மனித சிந்தனையின் வரலாற்றுரீதியான வளர்ச்சியின் விஞ்ஞானமாகும். அனுபவரீதியான துறைகளில் சிந்தனையை நடைமுறையில் பிரயோகிக்கும் போதும் இது முக்கியத்துவமுடையதாகிறது. ஏனெனில், முதலாவதாக, சிந்தனையின் நியதிகளைப் பற்றிய தத்துவம், "தர்க்கவியல்" என்ற சொல்லைக் குறித்து அற்பவாதிகளின் அறிவாய்வு கற்பனை (Philistine reasoning imagines) செய்து கொள்வது போல, என்றென்றைக்குமாக நிலைநாட்டப்பட்டு விட்டதான ஒரு "நிரந்தரமான உண்மை" (Eternal Truth) ஆகாது. சம்பிரதாய தர்க்கவியல் (Formal logic) அரிஸ்டாட்டின் காலம்முதல் இந்த நாள் வரைக்கும் வன்மையான சர்ச்சையின் அரங்கமாக இருந்து வந்துள்ளது. இயங்கியலை இது வரை ஓரளவுக்கு நெருக்கமாக பரிசீலனை செய்தவர்கள் அரிஸ்டாட்டில், ஹெகல் ஆகிய இரு சிந்தனையாளர்கள் மட்டுமே. ஆனால் இன்றைய நாள் இயற்கை விஞ்ஞானத்திற்கு மிகவும் முக்கியமான சிந்தனா வடிவமாக அமைவது குறிப்பாயும் இயங்கியல் ஒன்றே; ஏனெனில் இயற்கையில் நிகழ்கின்ற பரிணாம மாற்றப் போக்குகளையும் பொதுவான பரஸ்பரத் தொடர்புகளையும் ஒரு பரிசீலனைத் துறையிலிருந்து மற்றொன்றுக்கு மாறுவதில் உள்ள இடைநிலைகளையும் விளக்குகின்ற முறையாக மட்டுமின்றி, அதற்கு ஒப்பான ஒரு மாதிரி அமைப்பையும் அது மட்டுமே அளிக்கிறது.

இரண்டாவதாக, மனித சிந்தனையின் படிப்படியான வளர்ச்சியின் வரலாற்று பூர்வமான பாதையை பற்றியும் பல்வேறு காலங்களில் புற உலகத்திலான பொதுவான பரஸ்பர தொடர்புகள் குறித்த கருத்துக்களை பற்றியும் மற்றொரு கூடுதல் காரணத்திற்காக தத்துவ ரீதியான இயற்கை விஞ்ஞானம் அறிந்திருக்க வேண்டியது அவசியம்; அதாவது இந்த விஞ்ஞானம் தானே பிரகடனம் செய்த தத்துவங்களுக்கு அதுவே ஓர் உரைக்கல்லை வழங்குகிறது. இருந்த போதிலும் கூட, இங்குதான் மெய்யியலின் வரலாற்றை போதியளவு அறிந்து கொள்ளாததன் குறைபாடு மிக அடிக்கடியும் வெளிப்படையாகவும் காட்சியளிக்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே மெய்யியலின் வரலாற்றை போதியளவு அறிந்து கொள்ளாததன் குறைபாடு மிக அடிக்கடியும் வெளிப்படையாகவும் காட்சியளிக்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே மெய்யியலில் முன் வைக்கப்பட்டு, மெய்யியலில் வெகு காலத்துக்கு முன்பே செல்வாக்கை இழந்து விட்டதான உத்தேசக் கருத்துக்களை தத்துவம் உருவாக்கும் இயற்கை விஞ்ஞானிகள் புத்தம்புதிய விவேகமாக அடிக்கடி முன்வைக்கின்றனர்; இந்த உத்தேச கருத்துக்கள் சிறிது காலத்துக்கு புதுப் பாணியாகவும் இருக்கின்றன. வெப்பத்தை பற்றிய இயந்திரத் தத்துவம் (Mechanical Theory) ஆற்றலின் அழியா நிலைக் கோட்பாட்டைப் பல புதிய ஆதாரங்களைக் கொண்டு வலுப்படுத்தி அதை மீண்டும் முன்னணியில் கொண்டு வந்து நிறுத்தியதானது நிச்சயமாயும் அதனுடைய மகத்தான சாதனையே; ஆனால் இந்த கோட்பாடு ஏற்கெனவே டெக்கார்ட்டால் முறைப்படுத்தி முன்வைக்கப்பட்டது என்பதை மதிப்புக்குரிய இயற்பியலாளர்கள் நினைவில் வைத்திருந்தார்கள் என்றால் அந்தக் கோட்பாடு முற்றிலும் புதிய ஒன்றாக மேடையில் தோன்றியிருக்க முடியுமா? இயற்பியலும் வேதியியலும் அனேகமாக முற்றிலுமாக மூலக்கூறுகள் மற்றும் அணுக்களைப் பற்றி மறுபடியும் ஆராய்வதால் பண்டைய கிரேக்க அணு மெய்யியல் அவசியத்தை முன்னிட்டு மறுபடியும் முன்னுக்கு வந்துள்ளது. ஆனால் அதை இயற்கை விஞ்ஞானிகளில் சிறந்தவர்களே எவ்வளவு மேலெழுந்தவாரியாக பார்க்கின்றனர்! இவ்வாறாக, அதை தோற்றுவித்தது லெவ்க்கிப்பஸ் (Leucippus) அல்ல மாறாக டெமாக்கிரீடஸ் (Democritus) தான் என்று கெக்கூலே (Kekulé) எம்மிடம் சொல்கிறார் (வேதியியயலின் நோக்கங்களும் சாதனைகளும்); பண்புரீதியில் வேறுபட்ட மூலக அணுக்கள் நிலவுவதாக முதலில் அனுமானித்தவர் டால்டன் என்றும் வெவ்வேறு மூலகங்களுக்கு தக்கதான வெவ்வேறு எடைகளை முதலில் அவைகளுக்கு சாற்றியதும் அவரே என்றும் அவர் சாதிக்கிறார். ஆனால் பரிமாணத்திலும் வடிவிலும் மட்டுமல்ல எடையிலும் அணுக்களுக்கு வேறுபாடுகளை ஏற்கனவே சாற்றியவர் எபிகூரஸ் (Epicurus) என்பதை, அதாவது அணு எடையை பற்றியும் அணுப் பருமனை பற்றியும் அவர் தமது சொந்த வழியில் ஏற்கனவே அறிந்திருந்தார் என்பதை டியோஜெனிஸ் லயெர்தியஸ் (Diogenes Laertius) எழுதிய நூலில் (புத்தகம் X, 43--44 மற்றும் 61) யாரும் படிக்க முடியும்.

1848ம் ஆண்டு ஜேர்மனி வேறு எதையும் ஒரு முடிவுக்கு கொண்டு வராவிட்டாலும் மெய்யியலில் மட்டும் ஒரு முழுமையான புரட்சியையே நிறைவேற்றி இருந்தது. அந்த நாடு நடைமுறைத் துறைக்குள் குதிப்பதன் மூலம், ஒரு புறத்தில், நவீனத் தொழில்துறை மற்றும் மோசடியின் ஆரம்பத்தை நிலைநாட்டியது; மறுபுறத்தில், கேலிச் சித்திரம் போன்ற நாடோடி மதப் பிரசாரகர்களான ஃபோக்ட், பியூஹ்னர் (Vogt, Büchner) ஆகியவர்களால் தொடக்கப்பட்டு இயற்கை விஞ்ஞானம் பின்னாட்களில் ஜேர்மனியில் அடைந்த மாபெரும் முன்னேற்றத்தை ஆரம்பித்து விட்டது; பேர்லின் நகரத்து பழைய ஹெகலியவாதத்திற்கு இது முற்றிலும் வேண்டியதே. ஆனால் விஞ்ஞானத்தின் கொடுமுடிகளை எட்டிப் பிடிக்க விரும்பும் ஒரு நாடு தத்துவார்த்தச் சிந்தனையின்றி அதைச் சமாளிப்பது சாத்தியமல்ல. இயற்கையின் மாற்றப்போக்குகளின் இயங்கியல் தன்மை மனத்தின் மீது தடுக்க முடியாதவாறு தன்னைத் திணித்துக் கொண்டிருந்த நேரத்தில், தத்துவம் என்ற மலையில் வழி கண்டுபிடித்து ஏறிச் செல்ல இயற்கை விஞ்ஞானத்திற்கு இயங்கியல் மட்டுமே துணை செய்ய முடியும் என்றிருந்த நேரத்தில் ஹெகலியவாதம் மட்டுமல்ல, இயங்கியலும் கூட கழித்து வெளியே தள்ளப்பட்டது. ஆகவே பழைய மாறாநிலைவாதத்திற்கு வேறு வழியின்றித் திரும்பிச் செல்ல வேண்டியதாயிற்று. அது முதற்கொண்டு பொது மக்களிடையே செல்வாக்குப் பெற்று நடப்பிலிருந்து என்னவெனில், ஒரு பக்கம் அற்பவாதிகளுக்கு பொருத்தமாக உருவாக்கப்பட்ட ஷோபன்ஹவரின் (Schopenhauer) ஊக்கமற்ற சிந்தனைகளும்; மறு புறத்தில், ஃபோக்ட், பியூஹ்னர் போன்றோரின் கொச்சையான நாடோடிப் பிரசாரத் தன்மையுள்ள சடவாதமுமே ஆகும். பல்கலைக்கழகங்களில் கதம்பவாதத்தின் மிக வேறுபட்ட பல ரகங்கள் ஒன்றோடொன்று போட்டியிட்டன; பழைய மெய்யியலின் எச்சங்களிலிருந்து மட்டுமே புனையப்பட்டு எல்லாமே மாறாநிலைவாத தன்மை கொண்டவையாக இருந்ததே அவற்றின் பொதுப்படையான ஒரே அம்சம். மூலச்சிறப்புள்ள மெய்யியலின் எச்சங்களில் இருந்து பாதுகாக்கப்பட்டதெல்லாம் ஒருவகையான புதிய கான்ட்டியவாதம் மட்டுமே; அதிலும் கூட நிரந்தரமாக அறியவே முடியாத தன்னிலைப் பொருள் இருப்பதாக முடிந்த முடிபாக கூறும் பகுதியே, பாதுகாக்கப்பட சற்றும் தகுதியில்லா கான்ட்டின் பகுதி அது. இவற்றின் இறுதி விளைவு தற்போது நிலவும் தத்துவார்த்த சிந்தனையிலுள்ள குளறுபடியும் குழப்பமுமேயாகும்.

இயற்கை விஞ்ஞானம் பற்றிய எந்த ஒரு தத்துவார்த்த நூலை ஒருவர் விரித்து நோக்கினாலும், இயற்கை விஞ்ஞானிகளின் மீது இந்த குளறுபடியும் குழப்பமும் எந்தளவுக்கு ஆட்சி செலுத்துகின்றன என்பதையும் தற்போது நடப்பிலுள்ள மெய்யியல் எனப்படுவது அவர்களுக்கு அறவே எவ்வித வழியையும் காட்டவில்லை என்பதையும் அவர்களே உணருகிறார்கள் என்ற அபிப்பிராயத்தை பெறாமல் இருக்க முடியாது. இங்கு மாறாநிலைவாத சிந்தனையிலிருந்து இயங்கியல் சிந்தனைக்கு ஏதாவது ஒரு முறையில் திரும்பி வராமல் தெளிவு பெறுவதற்கான சாத்தியக்கூறு இல்லை. உண்மையிலேயே வேறு வழி கிடையாது.

இந்த திரும்பி வருதல் என்பது பல வேறு வழிகளில் நடைபெற முடியும். மாறாநிலைவாதத்தின் பழைய ப்ரொக்ரூஸ்ட்டினுடைய (Procrustean) படுக்கைக்குள்45 அடங்க முடியாது என மறுக்கும் இயற்கை விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளின் வெறும் வன்மை மூலம் தன்னியல்பாக இயங்கியலுக்கு திரும்பி வர முடியும். ஆனால் அது நீண்ட நெடிய, வருந்தி உழைக்கத்தக்க பாதையாகும்; இதில் மிகப் பெரிய அளவிலான அவசியமில்லாத உரைசலைப் போக்க வேண்டும். இந்த மாற்றப்போக்கு பெரிய அளவுக்கு, குறிப்பாக உயிரியல் துறையில், ஏற்கனவே நிகழ்ந்து வருகிறது. இயற்கை விஞ்ஞானத்துறையிலுள்ள தத்துவவாதிகள் இயங்கியல் மெய்யியலை (Dialectical philosophy) அதனுடைய வரலாற்றுபூர்வமாக நிலவும் வடிவங்களில் மேலும் நெருக்கமாக அறிந்து கொள்வார்களானால் அந்தப் பாதை பெருமளவுக்கு சுருங்கும். அந்த வடிவங்களிடையே நவீன இயற்கை விஞ்ஞானத்திற்கு விசேஷமான பலனை அளிக்கக் கூடிய இரண்டு உள்ளன.

இவற்றில் முதலாவது கிரேக்க மெய்யியல். இங்கு இயங்கியல் ரீதியான சிந்தனை இன்னும் அதன் ஆரம்ப எளிமையுடன் விளங்குகிறது; அது 17வது, 18வது நூற்றாண்டுகளை சேர்ந்த மாறாநிலைவாதம்-இங்கிலாந்தில் பேக்கனும் லோக்கும் (Bacon and Locke) செய்தது போல, ஜேர்மனியில் வோல்ஃப் செய்தது போல- தனது பாதைக்கு குறுக்கே தானே போட்டுக் கொண்ட வசீகரமான தடைகளால் சங்கடப்படவில்லை; இந்தத் தடைகளை போட்டுக் கொண்டதால் மாறாநிலைவாதம் தன்னுடைய சொந்த முன்னேற்றத்தை தானே தடுத்துக் கொண்டது; ஒரு பகுதியை புரிந்து கொள்வதிலிருந்து முழுமையையும் புரிந்து கொள்ள முன்னேறுவதை, விஷயங்களின் பொதுவான பரஸ்பரத் தொடர்புகள் பற்றி ஒரு நுண்ணறிவு பெற முன்னேறுவதை தடைப்படுத்தி கொண்டது. கிரேக்கர்கள் இயற்கையை பகுத்து ஆய்வு செய்து பார்ப்பதில் இன்னும் போதியளவு முன்னேறாத காரணத்தால் அவர்கள் இன்னும் இயற்கையை முழுமையாக, பொதுப்படையாகவே பார்த்தனர். இயற்கைப் புலப்பாட்டின் சர்வவியாபகமான தொடர்பு அதன் பிரத்யேக அம்சங்களில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை; கிரேக்கர்களை பொறுத்தவரை இது நேரடியான சிந்தனை ஆர்வத்தின் விளைவாகவே இருந்தது. இங்கு தான் கிரேக்க மெய்யியலின் பற்றாக்குறை (Inadequacy) காணக்கிடக்கிறது; இதன் காரணமாகத்தான் உலகத்தைப் பற்றிய இதர கண்ணோட்ட முறைகளுக்கு அது விட்டுக் கொடுக்க வேண்டியதாயிற்று. அதன் பின்னர் அதை எதிர்த்து தோன்றிய எல்லா மாறாநிலைவாதிகளையும் விட அதற்குள்ள மேன்மையும் இங்கு தான் உள்ளது. கிரேக்கர்களை பொறுத்த வரை மாறாநிலைவாதம் தனது பிரத்தியேக அம்சங்களில் சரியாக இருந்ததெனில் மாறாநிலைவாதத்தைப் பொருத்தவரை கிரேக்கர்கள் பொது அம்சங்களில் சரியாக இருந்தனர். மனித வளர்ச்சியின் வரலாற்றில் வேறு எந்த மக்களும் உரிமை கொண்டாட முடியாத இடத்தை அந்த சிறிய நாட்டு மக்கள் தங்களது சர்வவியாபகமான அறிவுத் திறனாலும் செயல்பாட்டினாலும் பெற்றிருப்பதனாலேயே மற்றெல்லாத் துறைகளையும் போலவே மெய்யியலிலும் நாம் அடிக்கடி அவர்களது சாதனைகளை நோக்கித் திரும்பி வரும்படி ஏன் நிர்ப்பந்திக்கப்படுகிறோம் என்பதற்கு இதுவே முதல் காரணம். இன்னொரு காரணம், உலகத்தைப் பற்றியதான பிந்திய கண்ணோட்ட முறைகள் ஏறத்தாழ எல்லாமே கிரேக்கத் மெய்யியலின் பல்விதமான வடிவங்களில் கரு உருவில், முளைப்பருவத்தில் அடங்கியிருந்தன என்பதே. ஆகையால் தத்துவார்த்த இயற்கை விஞ்ஞானம், தான் இன்றுபற்றி நிற்கும் பொதுக் கோட்பாடுகளின் தோற்றம் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றின் வரலாற்றை அறிய விரும்புமானால், கிரேக்கர்களிடம் அதே விதமாகத் திரும்பிச் செல்லுமாறு நிர்ப்பந்திக்கப்படுகிறது. இந்த நுண்ணறிவு மேலும் மேலும் உந்தித் தள்ளிக் கொண்டு முன்னணிக்கு வந்து கொண்டிருக்கிறது. கிரேக்கர்கள் அனுபவ ரீதியான இயற்கை விஞ்ஞானத்தைப் பெற்றிருக்கவில்லை என்ற காரணத்தால் பேக்கனுடைய அகந்தையுடன் அவர்களை இழிவாகப் பார்த்து அதே பொழுதில் கிரேக்கர்களுடைய மெய்யியலின்-உதாரணமாக, அணுவியலின் -துண்டுதுணுக்குகளை வைத்துக்கொண்டு- நிரந்தரமான உண்மைகளை போல -தாமே செயல்பட்டு வருகின்ற இயற்கை விஞ்ஞானிகள் தற்போது அரிதாகி வருகின்றனர். இந் நுண்ணறிவு கிரேக்க மெய்யியலுடன் உண்மையான பரிச்சயம் ஏற்படுத்திக் கொள்ள இன்னும் முன்னேற வேண்டும் என்பதே விரும்பத்தக்கது.

ஜேர்மன் இயற்கை விஞ்ஞானிகளுக்கு மிக நெருங்கி வருகிற இயங்கியலின் இரண்டாவது வடிவம் கான்ட் முதல் ஹெகல் வரையிலான மூலச்சிறப்புள்ள ஜேர்மன் மெய்யியலாகும். மேலே குறிப்பிடப்பட்ட புதிய கான்ட்டியவாதம் போக, கான்ட்டுக்கு மறுபடியும் திரும்புவது என்பது ஒரு புதிய பாணியாகி வருகிறது என்ற முறையில் முயற்சி தொடங்கி விட்டது. முன்பு லாப்பிளாஸ் கண்டுபிடித்தார் என்று நம்பி ஒப்புக் கொள்ளப்பட்டதான சூரிய மண்டல அமைப்புத் தத்துவம் மற்றும் பூமியின் சூழற்சி அலைகளின் ஏற்ற இறக்கத்தால் வேகம் குறைக்கப்படுகிறது என்ற தத்துவம் ஆகிய இரு ஒளி மிக்க அனுமான தத்துவங்களை ஆக்கியோர் கான்டே எனக் கண்டுபிடிக்கப்பட்டதும் அவையின்றி இன்று தத்துவ ரீதியான இயற்கை விஞ்ஞானம் எவ்வித முன்னேற்றமும் அடைய முடியாது என்பதனாலும் கான்ட் இயற்கை விஞ்ஞானிகளிடையே மறுபடியும் பெருமையான ஸ்தானம் வகிக்கிறார்; இது அவருக்கு முற்றிலும் பொருத்தமே. ஆனால் கான்ட்டின் நூல்களில் இயங்கியலை பயில முயல்வது என்பது பயனற்ற முறையில் கடினமானதும் எவ்விதப் பயனும் தராததுமான வேலையாகும்; ஏனெனில் இயங்கியலை முற்றிலும் தவறான தொடக்க முனையில் நின்று வளர்த்த போதிலும் அதன் விரிவான சாராம்சத்தினை உட்கொண்டுள்ள ஹெகலின் நூல்கள் தற்போது கிடைக்கின்றன.

ஒருபுறத்தில், "இயற்கை மெய்யியலுக்கு" (Philosophy of nature) எதிர்ச்செயல் -அது இந்தத் தவறான தொடக்க முனையாலும் பேர்லின் நகரத்து ஹெகலியவாதம் நிராதரவாகச் சீரழிந்ததாலும் பெருமளவு நியாயமாயிருந்தது- முழுவதும் ஓய்ந்து வெறும் அவதூறாக மட்டுமே சீரழிந்த பின்னர், மறு பக்கத்தில், இயற்கை விஞ்ஞானம் அதன் தத்துவார்த்த தேவைகளை பொறுத்தவரை இன்றைய கதம்பவாத மாறாநிலைவாதத்தினால் இவ்வளவு வெளிப்படையாகவே கைவிடப்பட்ட பின்னர் திரு. டூரிங் இவ்வளவு மகிழ்ச்சியுடன் செயின்ட் விடூஸ் (St. Vitus’s) நடனத்தை தூண்டிக் கிளப்பாமல் இயற்கை விஞ்ஞானிகளின் முன்னிலையில் ஹெகலின் பெயரை மறுபடியும் உச்சரிப்பது சாத்தியமாகலாம்.

ஆன்மா (Spirit), மனம், கருத்து இதுவே முதல், எதார்த்த உலகம் என்பது கருத்தின் ஒரு நகல் மட்டுமே என்ற ஹெகலினுடைய தொடக்கப் புள்ளியை நியாயப்படுத்தி ஆதரிப்பது என்ற பிரச்சனையே இங்கு எழவில்லை என்பதை முதலிலேயே இவ்விடத்தில் நிலைநாட்டி விட வேண்டும். ஃபாயர்பாக் ஏற்கனவே அதைக் கைவிட்டு விட்டார். விஞ்ஞானத்தின் ஒவ்வொரு துறையிலும் -வரலாற்று விஞ்ஞானத்தைப் போல இயற்கை விஞ்ஞானத்திலும்- ஒருவர் குறிப்பிடப்பட்ட எதார்த்த உண்மைகளிலிருந்து தான் ஆராயப் புறப்பட வேண்டும் என்பதில் நாம் எல்லோரும் உடன்படுகிறோம்; ஆகையால் இயற்கை விஞ்ஞானத்தில் பொருளின் பல்வேறு வடிவங்கள் மற்றும் பருப்பொருளினுடைய இயக்கத்தின் பல்வேறு வடிவங்கள் இவைகளிலிருந்தே தொடங்க வேண்டும். ஆகவே தத்துவார்த்த இயற்கை விஞ்ஞானத்திலும் கூட பரஸ்பரத் தொடர்புகளை புனைந்து எதார்த்த உண்மைகளுக்குள் புகுத்தி பார்ப்பதென்பதல்ல-அதற்கு மாறாக, அவைகளிலிருந்தே கண்டுபிடித்து எடுக்கப்பட வேண்டும்; அப்படிக் கண்டுபிடிக்கப்படுகின்ற பொழுது அவை பரிசோதனை மூலம் முடிந்த வரை சரிபார்க்கப்பட வேண்டும்.

பேர்லின் நகரத்து ஹெகலியவாதிகளில் முதியவர்களும் இளைஞர்களும் பிரசாரம் செய்கிற அந்த ஹெகலிய அமைப்பின் வரட்டுத் தத்துவவாத சாராம்சத்தை ஸ்திரிப்படுத்துவது என்பதும் அதே மாதிரியாக தற்போதைய பிரச்சினையல்ல. எனவே கருத்துவாதத் தொடக்க முனை வீழ்ச்சியடையும் போது அதன் மேல் கட்டப்பட்ட அமைப்பும்-குறிப்பாக இயற்கை பற்றிய ஹெகலிய மெய்யியலும் சேர்ந்து-வீழ்ச்சியடைகிறது. இருந்த போதிலும், ஹெகலுக்கு எதிராக இயற்கை விஞ்ஞானிகள் நடத்திய தர்க்கவாதம்-அவர்கள் அவரைச் சரியாகப் புரிந்து கொண்ட அளவுக்கு-கீழ்கண்ட இரண்டு விஷயங்களை மட்டும் எதிர்ப்பதாக இருந்தது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதாவது, கருத்துவாதத் தொடக்க முனை மற்றும் எதார்த்த உண்மைகளுக்கு சவால் விட்டு எதேச்சையாகக் காட்டப்படும் அமைப்புமேயாகும்.

இத்தனைக்கும் ஈடு செய்த பின்னரும் எஞ்சுவது ஹெகலின் இயங்கியல். "இப்போது பண்பாடு மிக்க ஜேர்மனியில் பெரிதாகப் பீற்றிக் கொள்கின்ற, சிடுசிடுப்பான, அகந்தையுள்ள, இரண்டாம் தரமான அற்பர்களுக்கு"* நேர்மாறாக மறக்கப்பட்ட இயங்கியல் முறையையும் அதற்கு ஹெகலின் இயங்கியலுடன் உள்ள தொடர்பையும் அத்துடன் வேறுபட்டுள்ள தன்மையினையும் மீண்டும் முன்னுக்குக் கொண்டு வந்ததிலும் அதே சமயம் அந்த முறையினை மூலதனம் என்ற நூலில் ஓர் அனுபவவாத விஞ்ஞானமான அரசியல் பொருளாதாரத்தின் உண்மைத் தகவல்களுக்குப் பிரயோகித்ததிலும் முதல்வராகத் திகழ்ந்தார் என்னும் பெருமை மார்க்சையே சார்ந்ததாகும். ஜேர்மனியிலும் கூட மார்க்சை விமர்சனம் செய்வதென்ற பாசாங்கின் பேரில் அவரைப் பார்த்து அப்படியே எழுதுவதன் மூலம் (பல தடவை தவறாகவே) புதிய பொருளாதாரக் கருத்துப் பிரிவினர் விஞ்ஞான பூர்வமற்ற சுதந்திர வர்த்தக முறை ஆதரவாளர்களை விட மேலுயர்ந்து நிற்கும் அளவுக்கு மார்க்ஸ் அதை வெற்றிகரமாகச் செய்தார்.

-------

*இப்பதிப்பு, தொகுதி 6, பக்கம் 32 பார்க்க.-ப-ர்.

-------

ஹெகலுடைய அமைப்பின் இதர எல்லாக் கிளைப் பிரிவுகளையும் போலவே அவருடைய இயங்கியலும் எல்லா எதார்த்தமான பரஸ்பரத் தொடர்புகளும் தலைகீழாக நிற்கின்றன. ஆனால் மார்க்ஸ் கூறுவதைப் போல: "ஹெகலின் கரங்களில் இயங்கியல் அனுபவிக்கின்ற மறைபொருள் தன்மையானது அதன் பொதுவான செயல்பாட்டு வடிவத்தை புரிந்து கொள்ளத்தக்க, நனவான வகையில் முன்வைக்கின்ற முதல் மனிதராக இருக்கவிடாமல் அவரை எவ்விதத்திலும் தடுத்துவிடவில்லை. அவரிடம் அது தலை கீழாக நின்று கொண்டிருக்கிறது. மறைபொருள்வாத ஓட்டுக்குள் (Mystical shell)) உள்ள பகுத்தறிவு முத்தை (The rational kernel) நீங்கள் கண்டுபிடிக்க வேண்டுமென்றால், அது மீண்டும் நேரான நிலையில் திருப்பி நிறுத்தப்பட வேண்டும்."*

----------

*இப்பதிப்பு, தொகுதி 6, பக்கம் 32.-ப-ர்.

----------

இயற்கை விஞ்ஞானத்திலும் கூட உண்மையான தொடர்பு தலையின் மீது நிற்கின்ற, அசல் வடிவத்திற்கு பதில் அதன் நிழலை உண்மையென நினைக்கின்ற தத்துவங்களை நாம் அடிக்கடி சந்திக்கிறோம்; இதன் விளைவாக அவற்றை நேராக நிறுத்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அப்படிப்பட்ட தத்துவங்கள் பெரும்பாலும் கணிசமான காலத்துக்கு மேலோங்கி நிற்கின்றன. ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டு காலம் வெப்பம் ஒரு சாதாரண பருப்பொருளின் ஓர் இயக்க வடிவம் என்பதற்கு பதிலாக ஒரு விசேஷ மர்மப் பருப்பொருளாக கருதப்பட்டு வந்தது குறிப்பாயும் அத்தகைய ஒரு நிகழ்ச்சியாகும்; வெப்பம் பற்றியதான இயந்திரத் தத்துவம் மட்டுமே அதை நேராக நிறுத்தி வைத்தது. இருந்தபோதிலும், கலோரி தத்துவத்தால் ஆட்கொள்ளப்பட்டிருந்த இயற்பியல் தொடர்ந்தாற்போல மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வெப்ப நியதிகளைக் கண்டுபிடித்து குறிப்பாக ஃபூரியே, சாடி கர்னோ (Fourier and Sadi Carnot)) இவர்களின் மூலமாக சரியான கருத்துக்கு வழி வகுத்தது; அது இப்பொழுது தனது முன்னோடியால் கண்டுபிடிக்கப்பட்ட நியதிகளை நேராகத் தூக்கி நிறுத்தும் பணியை, தனது சொந்த மொழியில் அவற்றை பெயர்க்கும்படியான பணியைத் தன் பங்குக்கு ஆற்ற வேண்டியதாயிற்று.* அதே விதமாக வேதியியலில் நூறு வருட பரிசோதனைகளைக் கொண்டு புளோஜிஸ்டன் தத்துவம்46 வேண்டிய விஷயாதாரங்களை முதலில் வழங்கியது; அவற்றின் உதவியால் லவுவஸியே (Lavoisier) பிரிஸ்ட்லியால் பெறப்பட்டதான பிராணவாயுவே அந்த விசித்திரமான புளோஜிஸ்டனுக்கு உண்மையான எதிரிடை என்று கண்டுபிடிக்க முடிந்தது, அதன் மூலம் புளோஜிஸ்டன் தத்துவம் (Phlogistic Theory) முழுவதையும் அப்படியே தூக்கி எறிவதற்கு முடிந்தது. ஆனால் புளோஜிஸ்டன் தத்துவத்தின் பரிசோதனை விளைவுகள் இதனால் சற்றும் பாதிக்கப்படவில்லை. அதற்கு மாறாக, அவை தொடர்ந்து நீடித்தன; அவற்றின் வரையறுப்பு மட்டுமே தலை நேராக்கப்பட்டது; புளோஜிஸ்டன் வகைப்பட்டது என்பதற்கு பதில் தற்போது செல்லத்தக்க இரசாயன மொழியில் பெயர்க்கப்பட்டது. இவ்வாறு அவை தமது செல்தகைமையினை உறுதிப்படுத்திக் கொண்டன.

--------

*கர்னோவின் வினைப்படுத்துகிற சி அப்படியே தலைகீழாக மாற்றப்பட்டு 1/சி=முற்றமுழு வெப்பநிலையாகியது. இப்படி மாறாமல் இதைக் கொண்டு ஒன்றும் செய்யவியலாது. (பி. ஏங்கெல்ஸ் எழுதிய குறிப்பு.)

---------

கலோரிக் தத்துவத்திற்கும் (Caloric Theory) வெப்பத்தின் இயந்திரத் தத்துவத்திற்கும் (Mechanical theory) என்ன உறவுள்ளதோ, புளோஜிஸ்டன் தத்துவத்துக்கும் லவுவஸியே தத்துவத்துக்கும் என்ன சம்பந்தம் உள்ளதோ, அதே மாதிரியான சம்பந்தந்தான் ஹெகலின் இயங்கியலுக்கும் பகுத்தறிவு பூர்வமான இயங்கியலுக்கும் உள்ளது.

1878 மே-ஜூன் தொடக்கத்தில்

பி. எங்கெல்சினால் எழுதப்பட்டது.

மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் ஆவணங்கள்,

நூல் 11, 1925இல்

ஜேர்மன் மொழியிலும் ரஷ்ய மொழியிலும் முதலில் வெளியிடப்பட்டது

கையெழுத்துப் பிரதியின் படி அச்சிடப்பட்டது

மூலம் ஜேர்மன் மொழியில் எழுதப்பட்டது.


Copyright 1998-2009
World Socialist Web Site
All rights reserved