WSWS :Tamil : Ėōč‹

Anti-Dühring by Frederick Engels 1877

Introduction

General

டூரிங்குக்கு மறுப்பு பிரெடெரிக் ஏங்கெல்ஸ் 1877


- முன்னுரை -

பொது நிலை

Use this version to print | Send feedback

நவீன சோசலிசமானது, அதன் சாரப்பொருளில், ஒருபுறத்தில், இன்றைய சமுதாயத்தில் உடமையாளர்களுக்கும் உடமையற்றவர்களுக்கும், முதலாளிகளுக்கும் கூலித்தொழிலாளர்களுக்கும் இடையே நிலவும் வர்க்கப் பகைமைகளையும், மறுபுறத்தில், பொருளுற்பத்தியில் நிலவும் அராஜகத்தையும் கண்டறிவதன் நேரடியான விளைவாகும். ஆனால், அதன் தத்துவார்த்த வடிவில், நவீன சோசலிசமானது பதினெட்டாம் நூற்றாண்டின் மாபெரும் பிரெஞ்சு மெய்யியலாளர்கள் (Philosophers) வகுத்தளித்த கோட்பாடுகளை மேலும் தர்க்கவாத பொருத்தமுடைய ஒரு விரிவாக்கமாய் ஆதியில் வெளித்தோற்றமாக தெரிகிறது. எவ்வளவுதான் அதன் வேர்கள் பொருளாதார உண்மைகளில் ஆழப் பதிந்திருந்த போதிலும், எந்தவொரு புதிய தத்துவத்தையும் (Theory) போலவே நவீன சோசலிசமும் தயாராய் தன் கைக்குக் கிடைத்த அறிவுத்துறை விபரங்களுடன் முதலில் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டியிருந்தது.

வரவிருந்த புரட்சிக்காக, பிரான்சில் மனிதர்களுடைய மனங்களைத் தயார் செய்த அந்த மாமேதைகள் தாமே தீவிர புரட்சியாளர்களாய் இருந்தார்கள். எவ்வகையான வெளி அதிகாரத்தையும் அவர்கள் அங்கீகரிக்கவில்லை. மதம், இயற்கை விஞ்ஞானம், சமுதாயம், அரசியல் நிறுவனங்கள் யாவுமே சிறிதும் தயவு தாட்சண்யமின்றி விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டன. யாவும் தாம் இருப்பதற்குரிய நியாயத்தை அறிவின் தீர்ப்பு-மேடையின் முன்னால் மெய்ப்பித்தாக வேண்டும்; இல்லையேல் இல்லாதொழிந்தாக வேண்டும் என்றாகியது. யாவற்றுக்கும் அறிவு ஒன்றே அளவுகோல் ஆயிற்று. ஹெகல் கூறுவது போல உலகமானது தலையின் மீது நின்ற காலம் அது. முதலாவதாக, மனிதனது தலையும் அதன் சிந்தனையால் வந்தடையப் பெற்ற கோட்பாடுகளும் (Principles) எல்லா மனிதச் செயல்களுக்கும், உறவுகளுக்கும் தாம்தான் அடிப்படையென உரிமை கொண்டாடின என்னும் அர்த்தத்திலும்; நாளடைவில் இத்தோடன்றி இந்தக் கோட்பாடுகளுக்கு முரணாயிருந்த எதார்த்தம் மெய்யாகவே தலைகீழாய் மாற்றப்பட வேண்டியதாயிற்று என்னும் விரிவான அர்த்தத்திலும்; உலகமானது தலையின் மீது நின்றது. அன்று இருந்த சமூக, அரசாங்க வடிவமைப்பு ஒவ்வொன்றும், வழமையான கருத்தமைப்பு ஒவ்வொன்றும் அறிவுக்கு ஒவ்வாததாய் குப்பைக் குழியிலே எறியப்பட்டன. உலகம் இதுகாறும் முற்றிலும் தப்பெண்ணங்களாலேயே தான் வழிகாட்டப்பட அனுமதித்து வந்துவிட்டது. கடந்த காலத்தவை யாவும் பரிதாபத்திற்கும் இளக்காரத்துக்குமே தகுதி உடையவையாக இருந்தன. இப்பொழுதுதான், முதன்முதலாய், இருளகன்று பகலின் ஒளி தோன்றியது. இனி மூடநம்பிக்கையும் அநீதியும் தனிச் சலுகையும் ஒடுக்குமுறையும் அகற்றப்பட்டு, இயற்கை மற்றும் இழக்கவோ துறக்கவோ முடியாத மனித உரிமைகளின் அடிப்படையில் அவற்றினிடத்தில் நிரந்தரமான உண்மையும், நிரந்தரமான நீதியும், சமத்துவமும் அமர்த்தப்பட்டாக வேண்டும்.

இன்று நாம் அறிவோம்: இந்த அறிவின் ராஜ்ஜியம் முதலாளித்துவ வர்க்க ராஜ்ஜியத்தின் கருத்துருவாக்கமே அன்றி வேறொன்றுமல்ல; இந்த நிரந்தரமான நீதியானது முதலாளித்துவ நீதியாய் வந்து நிறைவேற்றம் கண்டது; இந்த சமத்துவம் சட்டத்தின் முன்பான முதலாளித்துவ சமத்துவமாய் குறுகிச் சிறுத்துவிட்டது; முதலாளித்துவ சொத்துடைமை அத்தியாவசிய மனித உரிமைகளில் ஒன்றாய் பிரகடனம் செய்யப்படலாயிற்று; அறிவின் அரசாங்கம், - ரூஸ்ஸோவின் சமூக ஒப்பந்தம் (Social Contract)[21], பிறந்தது, அது முதலாளித்துவ ஜனநாயகக் குடியரசாக மட்டுமே உருவாக முடிந்தது. பதினெட்டாம் நூற்றாண்டின் இம்மாபெரும் சிந்தனையாளர்களால், அவர்களது முன்னோர்களால் எப்படி முடியவில்லையோ அதேபோல, அவர்களுடைய சகாப்தத்தால் அவர்களுக்கு விதிக்கப்பட்ட வரம்புகளை கடந்து அப்பால் செல்ல முடியவில்லை.

ஆனால் பிரபுத்துவ கோமான்களுக்கும் நகரத்தாருக்கும் இடையிலான பகைமையுடன் கூடவே, சுரண்டுவோருக்கும் சுரண்டப்படுவோருக்கும், செல்வந்தர்களாகிய சோம்பேறிகளுக்கும் ஏழைகளாகிய உழைப்பாளர்களுக்கும் இடையே பொதுவான பகைமையும் நிலவி வந்தது. இப்படிப்பட்ட ஒரு நிலைமையால் தான் முதலாளித்துவ வர்க்கத்தின் பிரதிநிதிகள் தம்மை தனியொரு வர்க்கத்திற்கு அல்லாது துயருறும் மனிதகுலம் அனைத்துக்குமே பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்டு முன்வர முடிந்தது. அதுமட்டுமல்ல. தோன்றியது முதலாகவே முதலாளித்துவ வர்க்கம் அதன் எதிரிடையால் இழுத்தடிக்கப்படலாயிற்று: கூலித்தொழிலாளர்கள் இல்லாமல் முதலாளிகளால் இருக்க முடியாது: மத்தியகால கைவினைச் சங்க நகரத்தார் நவீன கால முதலாளிகளாய் வளர்ச்சியுற்ற அதே அளவில் கைவினைச் சங்க துணை வினைஞர்களும் கைவினைச் சங்கங்களுக்கு புறம்பான நாட்கூலியாட்களும் பாட்டாளி வர்க்கத்தாராய் வளர்ச்சியுற்றனர். மொத்தத்தில் முதலாளித்துவ வர்க்கத்தினர் பிரபுத்துவக் கோமான்களுடனான தமது போராட்டத்தில் அக்காலத்திய பல்வேறு உழைப்பாளி வர்க்கங்களின் நலன்களையும் தாம் பிரதிநிதித்துவப்படுத்தியதாய் கூறிக் கொள்ள முடிந்த போதிலும், நவீன பாட்டாளி வர்க்கத்தின் அதிகமாகவோ குறைவாகவோ வளர்ச்சி பெற்ற முன்னோடியாய் இருந்த வர்க்கத்தினது சுயேச்சையான கொந்தளிப்புகளும் ஒவ்வொரு பெரிய முதலாளித்துவ இயக்கத்தின் போதும் ஏற்படவே செய்தன. உதாரணமாய், ஜேர்மனியில் மத சீர்திருத்தத்தின் போதும், விவசாயிகளது யுத்தத்தின் போதும் (அனாபாப்டிஸ்டுகளும்) Thomas Münzerம்; மாபெரும் இங்கிலாந்து புரட்சியில் சமனவாதிகளையும் (The Levellers)[22]; மாபெரும் பிரெஞ்சுப் புரட்சியில்  Babeufஐயும் குறிப்பிடலாம்.

இன்னும் வளர்ச்சி பெறாத ஒரு வர்க்கத்தின் இந்தப் புரட்சிகர எழுச்சிகளுக்கு இசைவாய் தத்துவார்த்த விளக்கங்களும் முன்வைக்கப்பட்டன. பதினாறாம், பதினேழாம் நூற்றாண்டுகளில், இலட்சிய சமுதாய நிலைமைகள்[23] பற்றிய கற்பனாவாதச் சித்திரங்கள், பதினெட்டாம் நூற்றாண்டில் மெய்யான கம்யூனிசத்தன்மை வாய்ந்த தத்துவங்கள் (மொரெல்லியும் மாப்லியும்), சமத்துவத்திற்கான கோரிக்கை இனி அரசியல் உரிமைகளுக்கு மட்டுமானதாய் வரம்பிடப்படவில்லை, தனியாட்களது சமுதாய நிலைமைகளுக்கும் ஆனதாய் விரிவாக்கப்பட்டது. ஒழிக்கப்பட வேண்டியவை வர்க்க தனிச்சலுகைகள் மட்டுமல்ல, வர்க்கப் பாகுபாடுகளே ஒழிக்கப்பட்டாக வேண்டும் என்று கோரப்பட்டது. துறவு மனப்பான்மையும் (வாழ்வின் இன்பங்களை எல்லாம் நிராகரிப்பதும்), ஸ்பார்த்தானிய (Spartan) எளிமையும் கடுமையும் வாய்ந்ததுமான ஒரு கம்யூனிசமே இந்தப் புதிய போதனையின் முதலாவது வடிவம். பின்னர் மாபெரும் மூன்று கற்பனாவாதிகள் தோன்றினர்: முதலாமவர், பாட்டாளி வர்க்க இயக்கத்துடன் கூடவே மத்தியதர வர்க்க இயக்கத்தையும் இன்னமும் ஓரளவு முக்கியத்துவமுடையதாய் கருதிய ஸான் சிமோன்; இரண்டாமவர் பூரியே மற்றவர் ஓவென், இவர் முதலாளித்துவ பொருளுற்பத்தி மிகவும் வளர்ச்சியுற்றிருந்த ஒரு நாட்டில், இவ்வளர்ச்சியின் விளைவாய் பிறந்த பகைமைகளால் உந்தப்பட்டு முறையாகவும் பிரெஞ்சு சடவாதத்துடன் ((Materialism) நேரடித் தொடர்பு கொண்டும் வர்க்கப் பாகுபாட்டின் நீக்கத்துக்கான தமது திட்டங்களை வகுத்தவராவார்.

இம் மூவருக்கும் பொதுவானது ஒன்று உண்டு. இவர்களில் எவரும் இதற்குள் வரலாற்று வளர்ச்சியால் தோற்றுவிக்கப்பட்டுவிட்ட பாட்டாளி வர்க்கத்தின் நலன்களது பிரதிநிதியாய் முன்வரவில்லை. பிரெஞ்சு மெய்யியலாளர்களைப் போலவே இவர்களும் குறிப்பிட்ட ஒரு வர்க்கத்தை விடுவிக்கப்போவதாய் சொல்லாமல் மனிதகுலம் அனைத்தையுமே விடுவிக்கப் போவதாய் கூறிக்கொள்கின்றனர். அவர்களைப் போலவே இவர்களும் அறிவின், நிரந்தரமான நீதியின் ராஜ்ஜியத்தைக் கொண்டுவர விரும்புகிறார்கள். ஆனால் இவர்களுடைய கருத்துப்படி இந்த ஆட்சிக்கும் பிரெஞ்சு மெய்யியலாளர்கள் கூறிய ஆட்சிக்குமிடையே விண்ணுக்கும் மண்ணுக்குமுள்ள கருத்து வேறுபாடு உள்ளது.

இம் மூன்று மெய்யியலாளர்களுடைய கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்த முதலாளித்துவ உலகமானது, பிரபுத்துவத்தையும் சமுதாயத்தின் முந்திய எல்லாக் கட்டங்களையும் போல் அதே அளவுக்கு அறிவுக்கு ஒவ்வாததாகவும் அநீதியாகவும் இருக்கின்றது. ஆகவே அவற்றைப் போலவே சடுதியில் குப்பை குழிக்கு போய்ச் சேர வேண்டியதாகிறது. தூய அறிவும், நீதியும் இதுகாறும் உலகில் ஆட்சி புரியவில்லை என்றால் மனிதர்கள் அவற்றை சரியாய் புரிந்து கொள்ளாதது தான் அதற்குரிய காரணம். மேதாவிலாசம் படைத்த தனிமனிதர் இல்லாமல் போய்விட்டார். இப்படிப்பட்டவர் இப்பொழுது தோன்றிவிட்டார், உண்மையை இவர் புரிந்து கொள்கிறார். இவர் இப்பொழுது தோன்றிவிட்டார், உண்மை இப்பொழுது தெட்டத் தெளிவாய் புரிந்து கொள்ளப்படுகிறது என்பது வரலாற்று வளர்ச்சி எனும் தொடர் இணைப்பில் அவசியத்தின் காரணமாய் நிகழ்ந்த தவிர்க்க முடியாத ஒரு நிகழ்ச்சியல்ல; இனியதொரு சந்தர்ப்பவச நிகழ்ச்சியேயாகும். 500 ஆண்டுகள் முன்னதாகவும் கூட இவர் பிறந்திருக்கலாம், அப்பொழுது மனித குலத்திற்கு இந்த 500 ஆண்டு காலப் பிழையும் பூசலும் துன்பதுயரமும் இல்லாதபடி தவிர்க்கப்பட்டிருக்கும்.

இந்த முறையிலான கண்ணோட்டம் அனைத்து ஆங்கிலேய மற்றும் பிரெஞ்சு சோசலிஸ்டுகளின், வைத்லிங் (Weitling) உட்பட ஆரம்ப ஜேர்மன் சோசலிஸ்டுகளின் முக்கியமான அம்சமாகும். இவர்கள் அனைவருக்கும் சோசலிசமானது முற்றுமுழுதான உண்மை, அறிவு, நீதி ஆகியவற்றின் வெளிப்பாடாகும். சோசலிசம் தன் சொந்த சக்தியினாலேயே அனைத்து உலகையும் வெற்றி கொள்வதற்கு, அது கண்டு பிடிக்கப்பட வேண்டி மட்டும் இருந்தது. முற்றுமுழுதான உண்மையானது காலம், இடம் மற்றும் மனிதனது வரலாற்று வளர்ச்சி ஆகியவற்றை சார்ந்திருக்கவில்லை, ஆதலால் இது எங்கே, யாரால் கண்டு பிடிக்கப்படுகிறது என்பது எதிர்பாராமல் நடைபெறும் தற்செயல் நிகழ்ச்சியே ஆகும். இப்படியெல்லாம் இருந்தும் கூட முற்றுமுழுதான இந்த உண்மையும், அறிவும், நீதியும் வெவ்வேறு தனிப்போக்கின் மூலவருக்கும் வெவ்வேறு வகையினதாகவே இருக்கின்றன. ஒவ்வொருவருடைய இந்தத் தனி வகைப்பட்ட தனிமுதல் உண்மையும், அறிவும், நீதியும் அவரவரது அகநிலை உணர்வாற்றலாலும், வாழ்நிலைமைகளாலும், அறிவின் ஆழத்தாலும், மதிநுட்ப பயிற்சியாலும் நெறியாக்கப்படுவதால் இந்த தனிமுதல் உண்மைகளிடையே எழும் மோதலானது பரஸ்பரம் ஒவ்வாதனவாய் ஒன்றையொன்று விலக்கித் தள்ளுவதை தவிர, வேறு எந்த முடிவையும் வந்தடைவது சாத்தியமன்று. எனவே இதிலிருந்து ஒருவகைப் பல்திரட்டான சராசரியான சோசலிசத்தை தவிர்த்து வேறு எதுவும் தோன்ற வழியில்லை; உண்மையில் இத்தகைய ஒரு சோசலிசம் தான் பிரான்சிலும், இங்கிலாந்திலும் மிகப்பெருவாரியான சோசலிஸ்ட் தொழிலாளர்களின் உள்ளங்களில் இது நாள்வரையில் ஆதிக்கத்தில் இருந்து வந்தது. அதனால், மிகப்பல வேறுபட்ட கருத்துச் சாயல்களுக்கு இடம் தரும் ஒரு குழப்பம், பல்வேறு குழுக்களின் மூலவர்களது போதியளவு எடுப்பில்லாத விமர்சனக் கருத்துரைகள், பொருளியல் தத்துவங்கள், வருங்கால சமுதாயம் பற்றிய சித்திரங்களின் ஒரு குழப்பம்; அருவியிலே உருண்டு மழுங்கிய கூழாங்கற்களை போல் வாதப் பிரதிவாதங்களில் அடிபட்டு உள்ளடக்க தனிக்கூறுகளின் துல்லியமான கூர்முனைகள் எவ்வளவுக்கு எவ்வளவு மழுங்கடிக்கப்பட்டிருக்கின்றனவோ அவ்வளவுக்கு அவ்வளவு எளிதில் தயாரிக்கப்படக் கூடிய ஒரு குழப்பம் இருக்கிறது.

சோசலிசத்தை ஒரு விஞ்ஞானமாக்கும் பொருட்டு முதலில் அதை மெய்யான ஓர் அடித்தளத்தின் மீது அமர்த்த வேண்டியிருந்தது.

இதற்கிடையில் பதினெட்டாம் நூற்றாண்டு பிரெஞ்சு மெய்யியலுடன் கூடவும், அதற்கு பிற்பாடும் புதிய ஜேர்மன் மெய்யியல் உதித்தெழுந்து, ஹெகலினிடம் உச்ச நிலையை வந்தடைந்திருக்கிறது. அறிவாய்வின் (Reasoning) மிக உயர்ந்த வடிவாய் இயங்கியலை மீண்டும் ஏற்றுக்கொண்டதுதான் இந்தப் புதிய ஜேர்மன் மெய்யியலுக்குரிய தனிப்பெருஞ் சிறப்பாகும். பண்டைக் கிரேக்க மெய்யியலாளர்கள் எல்லோரும் பிறவியிலேயே இயற்கையாகவே இயங்கியலாளர்களாய் இருந்தவர்கள். இவர்கள் யாவரினும் சகலகலா வல்லவராய் விளங்கிய அரிஸ்டாட்டில் இயங்கியல் சிந்தனையின் மிக முக்கிய வடிவங்களை பகுத்தாராய்ந்திருந்தார். ஆனால் இதற்கு மாறாக, இயங்கியலை தேர்ந்த திறமையோடு விளக்கிக் கூறி வற்புறுத்திய சிறப்பாளர்கள் பிற்காலத்திய புதிய மெய்யியலிலும் இருந்தார்கள் என்றாலும் கூட (உதாரணம்: டேக்கார்ட் மற்றும் ஸ்பினேசா), அது குறிப்பாய் ஆங்கிலேய செல்வாக்கின் விளைவாய் மேலும் மேலும் இறுக்கமடைந்து, மாறாநிலைவாத சிந்தனை (Metaphysical mode of reasoning) என்று அழைக்கப்பட்ட பாணியில் உறைந்துவிட்டது. இந்த சிந்தனை பாணி தான் பதினெட்டாம் நூற்றாண்டு பிரெஞ்சுக்காரர்களிடத்தும், அவர்களது மெய்யியல் குறித்த விசேஷ நூல்களில் அனேகமாய் முழு அளவுக்கு ஆதிக்கம் செலுத்திற்று. இருப்பினும் குறுகிய பொருளில் மெய்யியல் எனும் துறைக்கு வெளியில் பிரெஞ்சுக்காரர்கள் இயங்கியலில் தலை சிறந்த படைப்புக்களைச் சிருஷ்டித்தனர். தீத்ரோவின் Le Neveu de Rameau [24], ரூஸ்ஸோவின் Discours sur l'origine et les fondements de l'inegalite parmiles hommes ஆகிய இவை இரண்டை மட்டும் நாம் நினைவு கூர்ந்தாலே போதும். இந்த இரு சிந்தனை முறைகளின் சாராம்சத்தை சுருக்கமாய் இங்கு தருகிறோம்: பின்னால் அவற்றை மேலும் விரிவாக ஆராய்வோம்.

இயற்கையின் மீதான பொதுவான பிரதிபலிப்பையோ, மனித குலத்தின் வரலாற்றையோ, நமது அறிவாற்றல் செயற்பாட்டையோ ஆலோசித்து பார்க்கையில், முடிவின்றிப் பின்னிப் பிணைந்து சிக்கலாகிச் செல்லும் உறவுகளையும், எதிர்விளைவுகளையும் கொண்ட ஒரு சித்திரத்தையே முதலில் காண்கிறோம்; இதில் எதுவும் அப்படியே அங்கேயே முன்பிருந்த விதமாகவே தொடர்ந்து இல்லாமல், யாவும் இயங்கிக் கொண்டும், மாறிக்கொண்டும், தோன்றி பின்னர் மறைவதுமாக இருக்கக் காண்கிறோம். உலகைப் பற்றிய இந்த ஆதிநிலையிலான, அறியாப் பருவத்திற்குரிய, ஆனால் உள்ளியல்பில் பிழையற்ற கருத்தோட்டம்தான் பண்டைக் கிரேக்க மெய்யியலின் கருத்தோட்டம். முதன்முதலில் ஹெராக்லிடஸ் இதை தெளிவாக வரையறுத்துக் கூறினார்: ஒவ்வொன்றும் இருந்து கொண்டும், அதே போதில் இல்லாமலும் இருக்கிறது; ஏனெனில் ஒவ்வொன்றும் நிலை உறுதி அற்றதாய் (Fluid) இருக்கிறது, இடையறாது மாறிக்கொண்டும், இடையறாது தோன்றுவதும் மறைவதுமாகவும் இருக்கிறது.

ஆனால் இந்தக் கருத்தோட்டம் தோற்றங்களின் ஒட்டு மொத்தமான சித்திரத்தின் பொதுவான தன்மையைப் பிழையற்ற முறையில் தெரிவிப்பினும், இந்தச் சித்திரத்தில் அடங்கிய விவரங்களை விளக்குவதற்கு இது போதாது. இந்த விவரங்களை புரிந்து கொள்ளாத வரை முழுச் சித்திரத்தையும் பற்றிய தெளிவான கருத்து நமக்குக் கிடைப்பதில்லை. இந்த விவரங்களை புரிந்து கொள்ளும் பொருட்டு இவற்றின் இயற்கை அல்லது வரலாற்றுத் தொடர்புகளிலிருந்து இவற்றை நாம் பிரித்தெடுத்து தனித்தனியே ஒவ்வொன்றையும் அதன் தன்மை, விஷேட காரணங்கள், பலன்கள் முதலானவை குறித்து பரிசீலித்தாக வேண்டும். பிரதானமாய், இது இயற்கை விஞ்ஞானத்துக்கும், வரலாற்று ஆராய்ச்சிக்கும் உரிய பணியாகும். பண்டைக்காலத்திய கிரேக்கர்கள் விஞ்ஞானத்தின் இந்த கிளைகளைக் கீழ்நிலைக்கு உரியனவாய் ஒதுக்கியிருந்தனர். தக்க காரணங்களுடன் தான் இப்படிச் செய்திருந்தனர். ஏனெனில் (இந்த விஞ்ஞானங்கள் செயல்படுவதற்கு வேண்டிய விவரப் பொருட்களை) முதலில் அவர்கள் சேகரிக்க வேண்டியிருந்தது. (இயற்கையிலிருந்தும் வரலாற்றிலிருந்தும் விவரப் பொருட்கள் ஓரளவுக்குச் சேகரிக்கப்பட்ட பின்னர்தான் எவ்விதமான விமர்சனப் பகுத்தாய்வும் ஓப்பீடும், வகைகளிலும் படிகளிலும் இனங்களிலுமான ஒழுங்கமைப்பும் நடை பெறமுடியும். (எனவே) துல்லிய இயற்கை விஞ்ஞானங்களின் அடிப்படைகள் முதன் முதலாய் அலெக்சாந்திரிய காலத்திய கிரேக்கர்களாலும்[25], பிற்பாடு மத்திய காலத்திய அரபுகளாலும் உருவாக்கப்பட்டன. மெய்யான இயற்கை விஞ்ஞானம், பதினைந்தாம் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில் ஆரம்பமாயிற்று; அது முதலாய் மேலும் மேலும் கூடுதலான வேகத்தில் முன்னேறி வந்துள்ளது. இயற்கையை அதன் தனித்தனிப் பிரிவுகளில் பகுத்தாய்தல் வெவ்வேறு இயற்கை நிகழ்ச்சிப் போக்குகளையும், பொருட்களையும் திட்டவட்டமான வகையினங்களில் வகைபிரித்தல், அங்ககச் சேர்மங்களின் (Organic bodies) பல்வேறு வடிவங்களிலும் அவற்றின் உள் அமைப்பியலை ஆராய்தல், இவைதாம் இயற்கையைப் பற்றிய நமது அறிவு கடந்த நானூறு ஆண்டுகளில் பீடு நடை போட்டுப் பிரமாதமான முன்னேற்றம் கண்டதன் அடிப்படை நிபந்தனைகள். ஆனால் இவ்விதமான ஆய்வு முறையானது இயற்கைப் பொருட்களையும், நிகழ்ச்சிப் போக்குகளையும் பிரம்மாண்டமான முழு அமைப்பிலிருந்தும், அவற்றுக்குள்ள தொடர்புகளிலிருந்தும் பிரித்துத் தனிமைப்படுத்தி வைத்து அவற்றைக் கண்ணுறும் பழக்கத்தை, அவற்றின் இயக்கத்தில் அல்லாது, அடிப்படையில் மாறிக் கொண்டிருக்கும் மதிப்புருக்களாய் அல்லாது நிலையாய் இருக்கும் மாறிலிகளாய், அவற்றின் உயிருள்ள வாழ்வில் அல்லாது, மரண நிலையில் வைத்துக் கண்ணுறும் பழக்கத்தை நமக்கு மரபுரிமையாய் விட்டுச் சென்றுள்ளது. பொருட்களைக் கண்டறிவதற்கான இந்த வழிமுறையை பேகனும், லோக்கேயும் (Bacon, Locke) இயற்கை விஞ்ஞானத்திலிருந்து மெய்யியலுக்கு மாற்றிய பொழுது, அது கடந்த நூற்றாண்டிற்கு உரிய தனி இயல்பாகிய குறுகிய மாறாநிலைவாத (Metaphysical) சிந்தனை முறையைத் தோற்றுவித்தது.

மாறாநிலைவாதிக்கு (Metaphysician) பொருட்களும் அவற்றின் மனப் பிரதிமைகளும் (Mental Reflexes), கருத்தினங்களும் (Ideas) தனிமைப்பட்டனவாய் இருக்கின்றன; ஒன்றன்பின் ஒன்றாகவும் ஒன்றிலிருந்து ஒன்று தனியாகவும் பரிசீலிக்கப்பட வேண்டியனவாகிவிடுகின்றன. நிலையான, கெட்டிப் பிடித்து இறுகிய, என்றென்றைக்கும் உறுதியாய் அப்படியே இருக்கத்தக்க பரிசீலனை பொருட்களாகிவிடுகின்றன. ஒன்றுக்கொன்று சிறிதும் இணங்காத எதிரிடைகளில்தான் அவர் சிந்திக்கிறார். "அவருடைய பேச்செல்லாம் 'ஆம்' 'ஆம்' அல்லது 'இல்லை' 'இல்லை' என்பதுதான். அதற்கு அதிகமான எதுவும் பாவத்தில் பிறந்தது." [Matthew 5:37. — Ed..] அவருக்கு ஒரு பொருள் இருப்பதாகவோ அல்லது இல்லாததாகவோதான் இருக்க முடியும்; ஒரு பொருள் ஏககாலத்தில் அதுவாகவும் மற்றும் வேறொன்றாகவும் இருக்க முடியாது. நேர் நிலையும், எதிர்நிலையும் அறவே ஒன்றை ஒன்று விலக்கியே தீரவேண்டும்; காரணமும் விளைவும் ஒன்றுக்கொன்று இறுகிய முரண் நிலையிலேயே இருந்தாக வேண்டும்.

முதற் பார்வைக்கு இந்த சிந்தனை முறை அறிவார்ந்ததாகவே நமக்குத் தோன்றுகிறது, ஏனெனில் இது சர்வ சாதாரணப் பொது அறிவாகும். ஆனால் இந்த சர்வ சாதாரணப் பொது அறிவு அதற்குரிய நான்கு சுவர்களுக்குள் அடைபட்ட அதன் அன்றாட இருப்பிடத்தின் வரம்புகளுக்கும் அடைபட்ட அதன் அன்றாட இருப்பிடத்தின் வரம்புகளுக்குள் புகழ்பெற்று விளங்கினாலும், ஆராய்ச்சி என்னும் பரவலான உலகினுள் அடியெடுத்து வைத்ததும் உடனே விந்தை மிகு வினோதங்களை அனுபவிக்க நேரிடுகிறது. இந்த மாறாநிலைவாத சிந்தனை முறையானது, பரிசீலிக்கப்படும் குறிப்பிட்டாய்வு பொருளுக்கு தக்கவாறு மாறுபடும் அளவைக் கொண்ட பல துறைகளில் நியாகமாகவும் அவசியமாகவும் இருந்தாலுங்கூட, முன்னோ பின்னோ கட்டாயம் ஒருவரம்பை வந்தடைகிறது. இந்த வரம்புக்கு அப்பால் ஒருதலைப்பட்சமானதாய் குறுகிய வரையறைகளுக்குட்பட்டதாய், சூக்குமக் கருத்தியல்பானதாய், தீராத முரண்பாடுகளில் சிக்குண்டு விடுவதாய் மாறுகிறது. இவ்விதமான தனிப்பட்ட விஷயங்களில்/பொருள்களில் சிந்தனையானது, அவற்றுக்கிடையிலான தொடர்புகளை மறந்து விடுகிறது; அவற்றின் இருத்தலை பற்றிய சிந்தனையானது அந்த இருத்தலின் ஆதியையும் அந்தத்தையும் மறந்துவிடுகிறது. அதன் பிரதிபலிப்பாக அவற்றின் இயக்கத்தை மறந்து விடுகிறது. பல்வேறு விஷயங்கள் உட்கொண்டிருப்பதால் ஒன்றைக் குறித்து முழுமையாகவும் தெளிவாகவும் அதனால் தெரிந்து கொள்ள முடியாது.

உயிருள்ளது எதுவும் இதே முறையில் ஒவ்வொரு கணமும் அதுவாகவும், அதேபோதில் அதுவல்லாததாகவும் இருக்கின்றது. ஒவ்வொரு கணமும் அதுபுறத்தே இருந்து தரப்படும் பொருளை கிரகித்துக் கொள்கிறது பிற பொருளை தன்னுள் இருந்து வெளியேற்றுகிறது. ஒவ்வொரு கணமும் அதன் உடலில் சில உயிரணுக்கள் புதிதாக உருவாகித் தோன்றுகின்றன. அதிக நேரத்திலோ, குறைந்த நேரத்திலோ அதன் உடலின் சடபருப்பொருள் முற்றிலும் புதுப்பிக்கப்படுகிறது; சடபருப்பொருளின் பிற அணுக்களால் மாற்றீடு செய்யப்படுகிறது. இவ்விதம் உயிருள்ளது எதுவும் எந்நேரமும் தானேயாகவும் மற்றும் தானல்லாத பிறிதொன்றாகவும் இருக்கிறது.

தவிரவும் நெருங்கிச் சென்று ஆராய்கையில் ஒவ்வொரு முரண்நிலையின் இரு துருவங்களும் - உதாரணமாக, நேர்நிலையும் எதிர்நிலையும் எந்தளவிற்கு ஒன்றுக்கொன்று எதிராய் இருக்கின்றனவோ அதே அளவுக்குப் பிரிக்க முடியாதனவாயும் இருக்கக் காண்கிறோம்; எவ்வளவுதான் ஒன்றையொன்று எதிர்த்துக்கொண்ட போதிலும் பரஸ்பரம் அவை ஒன்றுள் ஒன்று ஊடுருவக் காண்கிறோம். இதேபோல, காரணமும் விளைவும் தனிப்பட்ட உதாரணங்களில் கையாளப்படுகையில் மட்டுமே ஏற்புடைத்த கருத்தோட்டங்களாய் அமையக் காண்கிறோம். இந்த தனிப்பட்ட உதாரணங்களைப் பிரபஞ்சம் முழுமையுடனுமான அவற்றின் பொதுத் தொடர்பினில் பரிசீலிக்க முற்படும்போது, இக்கருத்தோட்டங்கள் ஒன்றோடொன்று இணைந்து கலக்கக் காண்கிறோம்; காரணங்களும், விளைவுகளும் ஓயாமல் இடம்மாறி இங்கே இப்போது விளைவுகளாக இருப்பது அங்கே அப்போது காரணமாகவும், இதற்கு எதிர்மாறாகவும் அமையும். பிரபஞ்ச அளவிலாகிய செயலையும் எதிர்செயலையும் பற்றி சிந்திக்கையில், இக்கருத்தோட்டங்கள் அப்போதைக்கு இங்கு காரணமாக இருப்பதையும் மற்றும் அதற்கு மாறானதாக இருப்பதையும் காண்கிறோம்.

இந்த நிகழ்ச்சிப் போக்குகள், சிந்தனை முறைகள் எவையும் இயக்கமறுப்பியல் அறிவாய்வின் கட்டுக்கோப்பில் இடம் பெறுவதில்லை. ஆனால் இயங்கியலானது, இதற்கு மாறாய் பொருள்களையும், அவற்றின் பிரதிமைகளாகிய கருத்துக்களையும் அவற்றுக்குரிய அத்தியாவசிய தொடர்பிலும், ஒன்றோடொன்று தொடர்புள்ள சங்கிலித்தொடர் கோர்வையிலும், இயக்கத்திலும், மூலத்தோற்றத்திலும், முடிவிலும் உய்த்துணர்ந்து புரிந்து கொள்கிறது. ஆகவே மேற்கூறிய நிகழ்ச்சி போக்குகள் யாவும் அதற்கு தனது செயல்முறையைச் சரியென உறுதிப்படுத்தும் சான்றுகளாகிவிடுகின்றன.

இயற்கை தான் இயங்கியலுக்கான நிரூபணம். நவீன விஞ்ஞானத்தைப் பொறுத்தவரை, அது இந்த நிரூபணத்திற்கு அன்றாடம் மேலும் மேலும் கூடுதலான விவரப்பொருட்களை வழங்கியுள்ளது என்பதை குறிப்பிட்டாக வேண்டும். முடிவாய் பார்க்குமிடத்து, இயற்கையானது, இயங்கியல் வழியில் செயல்படுகிறதே அன்றி இயக்கமறுப்பியல் வழியில் அல்ல என்பதை இவ்விதம் அது தெளிவுபடுத்தியுள்ளது. ஆயினும் இயங்கியல் முறையில் சிந்திக்கக் கற்றுக் கொண்ட இயற்கை விஞ்ஞானிகள் மிகச் சொற்பமே ஆவர். விஞ்ஞானக் கண்டுபிடிப்பின் விளைவுகள் முன்கூட்டியே புனைந்தமைக்கப்பட்ட சிந்தனை முறைகளுக்கு ஒவ்வாதனவாய் இருப்பதால் எழும் இந்த மோதல் தான், தற்போது தத்துவார்த்த இயற்கை விஞ்ஞானத்தில் ஆட்சி செலுத்தி, கற்பிப்போரையும், கற்போரையும், நூலாசிரியர்களையும், வாசகர்களையும் ஒருங்கே திண்டாடச் செய்யும் முடிவில்லாக் குழப்பத்துக்கு காரணமாகும்.

ஆகவே பிரபஞ்சத்தையும், அதன் பரிணாமத்தையும், மனிதகுலத்தின் வளர்ச்சியையும், இந்த பரிணாமம் மனிதர்களது மனத்தில் பிரதிபலிப்பதையும் துல்லியமாய் உருவமைத்துக் காட்டுதல், உருவாதலும் மறைதலுமாகிய, முற்போக்கான அல்லது பிற்போக்கான மாறுதல்களாகிய எண்ணிலடங்காச் செயல்களையும் எதிர்செயல்களையும் இடையறாது கணக்கில் எடுத்துக் கொள்ளும் இயங்கியல் முறைகளால் மட்டும்தான் சாத்தியம். புதிய ஜேர்மன் மெய்யியலானது, இந்த வழியில்தான் சாத்தியம். புதிய ஜேர்மன் மெய்யியலானது இந்த வழியில்தான் நடைபோட்டு வந்துள்ளது. நியூட்டனுடைய நிலையான சூரிய மண்டலத்தையும், பெயர்பெற்ற அந்த ஆரம்ப தூண்டுவிசை (Initial impulse)) ஒரு தரம் அளிக்கப்பட்டபின் என்றென்றும் நிரந்தரமாய் இருக்கக் கூடியதான அதன் நீண்டகால ஆற்றலையும், வரலாற்று நிகழ்ச்சிப் போக்கின் விளைவாக்கி, சூரியனும் அதன் எல்லாக் கிரகங்களும் சுழலும் ஒளிர்வாயு முகிற்படலத்திலிருந்து (Rotating nebulous mass) உருவாயின என்று விளக்கிக் கூறி மெய்யியலில் கான்ட் தமது பணியை ஆரம்பித்தார். சூரிய மண்டலம் இவ்வாறுதான் தோன்றியதெனில் வருங்காலத்தில் அது இறக்கப் போவதும் நிச்சயமே என்ற முடிவையும் இதிலிருந்து அவர் வந்தடைந்தார். அரை நூற்றாண்டுக்கு பின்னர் அவருடைய தத்துவத்தை லாப்ளாஸ் (Laplace) கணிதவழியில் நிலைநாட்டினார். அதற்கும் அரை நூற்றாண்டுக்கு பிற்பாடு, இத்தகைய மங்கலான வாயுத் திரட்சிகள் (Incandescent masses of gas) இறுக்க நிலையின் பல்வேறு கட்டங்களில் அண்ட வெளியில் இருப்பதை நிறமாலைக்கருவி (Spectroscope) காட்டி நிரூபித்தது.[26]

இந்த புதிய ஜேர்மன் மெய்யியல், ஹெகலிய முறையில் உச்சநிலையை வந்தடைந்தது. இந்த முறையில், இதன் பெருஞ்சிறப்பு இதில்தான் காணக்கிடைக்கிறது - இயற்கை உலகு, வரலாற்று உலகு, அறிவுலகு ஆகிய அனைத்தும் முதல் முதலாய் ஒரு வளர்ச்சிப் போக்காய் காணப்பட்டது: அதாவது இடையறாது ஓயாமல் இயங்கியும், திரிந்தும், உருமாறியும் வளர்ச்சியுற்றுவரும் ஒன்றாய் காட்டப்பட்டது. இந்த இயக்கம், வளர்ச்சி அனைத்தையும் தொடர்பான ஒரு முழுமைக்கும் உட்தொடர்பை புலப்படுத்துவதற்கு முயற்சி செய்யப்பட்டது. இந்த நோக்கு நிலையிலிருந்து பார்க்கையில் மனித குல வரலாறு, இதுகாறும் தோன்றியது போல முதிர்ச்சியற்ற தத்துவவியலின் அறிவாய்வு தீர்ப்பு மேடையின் முன்னால் ஒருங்கே கண்டனம் செய்யப்பட வேண்டியவைகளையும், நம் நினைவில் இல்லாதபடி கூடுமான விரைவில் மறந்து விடுவதே உத்தமமென கருத வேண்டியவைகளையும் அர்த்தமற்ற வன்முறைச் செயல்களின் கண்மூடித்தனமான கூத்தாய் தோன்றவில்லை; இதற்கு மாறாய் மனிதனது பரிணாம வளர்ச்சிப் போக்காய் தோன்றியது. இந்த வளர்ச்சிப் போக்கு அதன் அனைத்து கோணல்மாணலான வழிகளினூடாக படிப்படியாய் முன்செல்வதைக் கவனித்து சென்று, வெளிப்பார்வைக்கு தற்செயலாய் (அகஸ்மாத்தானவையாய்) தெரியும் எல்லா இயல் நிகழ்ச்சிகளினூடாகவும் இழையோடும் உள்ளார்ந்த விதியை புலப்படுத்திக் காட்டுவதுதான் இப்பொழுது அறிவாற்றலின் பணி என்றாகிறது.

இப்பிரச்சனைக்கு ஹெகல் தீர்வு காணவில்லை என்பது இங்கு முக்கியமல்ல. இந்தப் பிரச்சனையை எடுத்துரைத்தது தான் அவர் சகாப்தத்தின் சிறப்பாகும். தனியொருவர் எவராலும், எக்காலத்திலும் தீர்வு காண இயலாத ஒரு பிரச்சனை இது. அவர் காலத்தில் ஹெகல், ஸான் சிமோனுடன் கூட - தலையாய சகலகலா வல்லமை வாய்ந்த சிந்தனையாளராய் திகழ்ந்தார் என்ற போதிலும், முதலாவதாக அவரது அறிவின் வீச்சு தவிர்க்க முடியாதபடி எல்லைக்கு உட்பட்டிருந்ததாலும் இரண்டாவதாக அவர் காலத்திய அறிவும், கருத்தோட்டங்களும் வீச்சிலும் ஆழத்திலும் எல்லைக்கு உட்பட்டிருந்ததாலும், அவர் வரம்பினுள் சிக்குண்டிருந்தார். இந்த வரம்புகளுடன் கூட மூன்றாவது ஒன்றையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஹெகல் ஒரு கருத்துவாதி (Idealist). தமது மனத்தின் எண்ணங்களை மெய்யான (நிஜ) பொருட்களின் (Actual things) மற்றும் நிகழ்ச்சிப் போக்குகளின் (Processes) கூடுதல் அல்லது குறைவான சூக்குமச் சித்திரங்களாய் அவர் கொள்ளவில்லை; இதற்கு மாறாக, பொருள்களும், அவற்றின் பரிணாமமும் உலகம் தோன்றுவதற்கு முன்பிருந்தே ஏதோ அநாதியில் (Eternity) இருக்கும் "கருத்தின்" உருவாக்கம் பெற்ற சித்தரங்களே அன்றி வேறல்ல என்பதாய் கொண்டார். இந்த விதமான சிந்தனையானது யாவற்றையும் தலைகீழாய் மாற்றியது. உண்மையில், உலகின் பொருள்களிடையே இருந்துவரும் தொடர்பினை நேர் மாறாகத் திருப்பியது. செயலுண்மைகளின் தனிப்பட்ட தொகுதிகள் பலவற்றையும் ஹெகல் பிழையின்றியும், மிகுந்த விவேகத்துடனும் புரிந்துகொண்டார். என்றாலும் மேற்கூறிய காரணங்களினால், குறைபாடானவையும், செயற்கையானவையும், இட்டுக்கட்டப்பட்டவையும், சுருங்கச் சொன்னால், விவரங்களின் நோக்கில் தவறானவை நிறைய இருந்தன. ஹெகலிய அமைப்பே மகத்தானதோர் அகாலச் சிதைவாய் (Colossal miscarriage) அமைந்தது, இத்தகையவற்றுள் கடைசியானதாகவும் விளங்கிற்று. ஏனெனில் அது தீராத உள்முரண்பாட்டால் பீடிக்கப்பட்டிருந்தது. ஒரு புறத்தில் அது, மனிதகுல வரலாறானது பரிணாம வளர்ச்சிப் போக்காகும் என்ற கருத்தோட்டத்தை தனது ஆதார முதற்கோளாய் கொண்டிருந்தது; இந்தப் பரிணாம வளர்ச்சிப் போக்கு, தனிமுதல் உண்மை (Absolute Truth) என்பதான எதையும் கண்டுபிடிப்பதில், அதன் இயல்பு காரணமாகவே, தனது அறிவாற்றலின் இறுதி காலக்கூறினை (Intellectual final term) காண முடியவில்லை, ஆனால் மறுபுறத்தில் அது, தானேதான் இந்தத் தனிமுதல் உண்மையின் சாரப்பொருள் என்பதாய் உரிமை கொண்டாடிற்று. இயற்கையையும், வரலாற்றையும் பற்றிய அறிவானது அனைத்தையும் தன்னகத்தே கொண்டு என்றென்றைக்குமாய், இறுதிமுடிவானதாக ஆகுதல் என்பது இயங்கியல் சிந்தனையின் அடிப்படை விதிக்கே முரணாகும். புற பிரபஞ்சத்தைப் பற்றிய முறையான அறிவு, பெரு நடைபோட்டு காலத்துக்குக் காலம் முன்னேறிச் செல்லவல்லது எனும் கருத்தை தன்னுள் (இயங்கியல்) கொண்டுள்ளதே அன்றி எவ்வகையிலும் அதை ஒதுக்கி விலக்கவில்லை.

ஜேர்மன் கருத்துவாதத்தின் (German Idealism) இந்த அடிப்படை முரண்பாடு குறித்த கருத்துணர்வு தவிர்க்க முடியாதபடி சடவாதத்துக்கு (Materialism) இட்டுச் சென்றது. ஆனால் இந்த சடவாதம், கவனிக்கவும் (nota bene), பதினெட்டாம் நூற்றாண்டின் வெறும் மாறாநிலைவாத முழுக்க முழுக்க இயந்திரரீதியான சடவாதமல்ல. பாமர புரட்சித்தன்மைக்கு (Naive revolutionary) முரண்பாடாக, முந்தைய வரலாறு முழுவதையும் வெறுமனே நிராகரித்துவிடாமல், நவீன சடவாதம் அதிலுள்ள மனிதகுல பரிணாம வளர்ச்சிப் போக்கைக் காண்கிறது. அதன் இயக்க விதிகளை கண்டறிவதே தனது கடமை எனக் கொள்கிறது. ஒட்டுமொத்தமாய் இயற்கை குறுகிய வட்டங்களில் இயங்கியதாகவும், நியூட்டன் போதித்ததைப்போல் நிரந்தரமான விண்கோள் அமைப்புகளையும் (Celestial bodies), லின்னேயஸ் போதித்தது போல் மாறாத உயிர்வகைகளையும் கொண்டு என்றென்றும் மாற்றமின்றி நிலையாக இருந்ததாகவும், கூறிய கருத்தோட்டமே பதினெட்டாம் நூற்றாண்டு பிரெஞ்சுக்காரர்களிடமும், ஹெகலிடமும் கூட, நிலவி வந்தது. ஆனால் நவீன சடவாதம் இயற்கை விஞ்ஞானத்தின் அண்மைக் காலத்திய கண்டுபிடிப்புக்களையும் தன்னுள் கொண்டுள்ளது; இவன்றின்படி, இயற்கையும் கால அளவிலான அதன் வரலாற்றைப் பெற்றிருக்கிறது. விண்கோள்களும் சாதக நிலைமைகளில் அவற்றின் வாழும் உயிர்வகைகளைப் போலவே பிறந்தெழுந்து கொண்டும் இறந்து மறைந்து கொண்டும் உள்ளன.

மொத்தத்தில் இயற்கை அலைவட்டச் சூழல்களில் (Recurrent Cycles) இயங்குவதாகவே சொல்ல வேண்டியிருப்பினும், இந்தச் சுழல்கள் வரம்பின்றி மிகப்பெரும் பரிமாணங்கள் கொண்டவையாகிவிடுகின்றன. இந்த இரண்டு விஷயங்களிலும் நவீன சடவாதம், சாராம்சத்தில் இயங்கியல் தன்மை கொண்டதாகும். இதர விஞ்ஞானங்களுக்கு மேலே நிற்கும் எந்த மெய்யியலும் இனிமேல் அதற்குத் தேவையில்லை. ஒவ்வொரு சிறப்பு விஞ்ஞானமும், பொருள்களின் முழு முழுமையிலும், பொருள்களைப் பற்றிய நமது அறிவிலும் அதன் நிலையினை தெளிவுபடுத்த வேண்டியிருப்பதால், இந்த முழுமை குறித்துப் பரிசீலிக்கும் சிறப்பு விஞ்ஞானம் அவசியற்றதாகிவிடுகிறது. முந்திய மெய்யியல் அனைத்திலும் மறைந்துவிடாது, இனியும் எஞ்சியிருப்பது சிந்தனையும் அதன் விதிகளையும் பற்றிய விஞ்ஞானம் மட்டும்தான் -அதாவது சம்பிரதாய தர்க்கவியலும் (Formal logic), இயங்கியலும் (Dialectics) மட்டும்தான். ஏனைய அனைத்தும் இயற்கையையும், வரலாற்றையும் பற்றிய ஆக்கபூர்வமான விஞ்ஞானத்தில் உள்ளடங்கி விடுகின்றன.

எவ்வாறிருப்பினும், இயற்கை பற்றிய கருத்தோட்டத்தில் புரட்சி ஏற்படுவதென்பது, ஆராய்ச்சித் துறையால் எந்தளவுக்கு அதற்குரிய நேர்முக விவரப்பொருட்கள் வழங்கப்படுகின்றனென்பதைப் பொறுத்திருக்கிறது என்ற போதினும், அதற்கு மிகவும் முன்னதாகவே குறிப்பிட்ட சில வரலாற்று உண்மைகள் புலனாகி, வரலாறு பற்றிய கருத்தோட்டத்தில் தீர்மானகரமான ஒரு மாறுதலுக்கு வழிகோலியிருந்தன. 1831-ல் முதலாவது தொழிலாளி வர்க்க எழுச்சி லியோனில் நடைபெற்றது. 1838க்கும் 1842க்கும் இடையில் தேச அளவிலான முதலாவது தொழிலாளி வர்க்க இயக்கமாகிய ஆங்கிலேய சார்ட்டிஸ்டுகளின் (English Chartists) இயக்கம் அதன் உச்சநிலையை அடைந்தது. மிகவும் முன்னேறிய ஐரோப்பிய நாடுகளின் வரலாற்றில், ஒருபுறத்தில், நவீனத் தொழில்துறையின் வளர்ச்சிக்கும் மறுபுறத்தில் முதலாளித்துவ வர்க்கம் புதிதாய் பெற்றுக்கொண்ட அரசியல் மேலாண்மைக்கும் ஏற்ப, பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்திற்கும் இடையிலான வர்க்கப் போராட்டம் முன்னிலைக்கு வரலாயிற்று. மூலதனமும் உழைப்பும் ஒருமித்த நலன்கள் கொண்டவை என்றும், தடையில்லாப் போட்டியின் விளைவாய் சர்வவியாபகமான இசைவும், சுபிட்சமும் உண்டாகும் என்றும் முதலாளித்துவப் பொருளியல் கூறியவற்றை, உண்மைகள் மேலும் மேலும் வலிமையாகப் பொய்ப்பித்து வந்தன. இவற்றை எல்லாம் இனி கவனியாது ஒதுக்க முடியவில்லை; அதே போல குறைபாடானதுதான், எனினும் இவற்றின் தத்துவார்த்த வெளிப்பாடாய் அமைந்த பிரெஞ்சு ஆங்கிலேய சோசலிசத்தையும் கவனியாது ஒதுக்க முடியவில்லை. ஆனால் வரலாறு பற்றிய பழைய கருத்துவாத கண்ணோட்டம் இன்னமும் அகற்றப்படாமலே இருந்து வந்தது; இந்தக் கருத்தோட்டம் பொருளாதார நலன்களை அடிப்படையாகக் கொண்ட வர்க்கப் போராட்டங்கள் குறித்து, பொருளாதார நலன்கள் குறித்து ஏதும் அறியாதது; பொருளுற்பத்தியும் மற்றும் பொருளாதார உறவுகள் யாவுமே இதில் இடைக்குறிப்பாகவே, "நாகரீகத்தினுடைய வரலாற்றின்" கீழ்நிலைக் கூறுகளாகவே இடம் பெற்று வந்தன.

கடந்த வரலாறு அனைத்தும் புதிதாக மீண்டும் பரிசீலனை செய்யப்படுவதை இந்த புதிய உண்மைகள் அவசியமாக்கின. இதன்பின் கடந்த வரலாறு அனைத்துமே[27] (அதன் முதிர்ச்சியற்ற புராதன கட்டங்களைத் தவிர்த்து) வர்க்கப் போராட்டங்களின் வரலாறே என்பது புலனாயிற்று. போரிடும் இந்தச் சமூக வர்க்கங்கள் எப்பொழுதுமே பொருளுற்பத்தி முறை மற்றும் பரிவர்த்தனை முறைகளின் விளைவாய் உருவாகின்றன -சுருங்கக் கூறுமிடத்து அவற்றின் காலத்திய பொருளாதார நிலைமைகளின் விளைவாய் உருவாகின்றவை- என்பது புலனாயிற்று. சமூதாயத்தின் பொருளாதாரக் கட்டமைப்புதான் மெய்யான அடித்தளமாய் எப்பொழுதும் அமைகிறது. இதிலிருந்து தொடங்கினால் தான் வரலாற்றின் அந்தந்த காலக்கூறுக்கும், உரிய நீதிநெறி அரசியல் நிறுவனங்களும் மற்றும் மத கருத்துக்களும், மெய்யியல் கருத்துக்களும் பிற கருத்துக்களுமாகிய மேற்கட்டுமானம் அனைத்திற்கும் நாம் முடிவான விளக்கம் காண முடியும். (வரலாற்றை மாறாநிலைவாதத்திலிருந்து ஹெகல் விடுவித்திருந்தார் -வரலாற்றை அவர் இயங்கியல் தன்மையதாக்கியிருந்தார். ஆனால் வரலாறு பற்றிய அவரது கருத்தோட்டம் சாராம்சத்தில் கருத்துவாத வகைப்பட்டதாகவே இருந்தது.) முடிவில் இப்பொழுது கருத்துவாதம் அதன் கடைசிப் புகலிடமாய் அமைந்திருந்த வரலாற்றின் மெய்யியலிலிருந்தும் விரட்டப்பட்டது. இப்பொழுது வரலாற்றுக்கு சடவாத விளக்கம் முன்வைக்கப்பட்டது. இதுகாறும் செய்யப்பட்டது போல மனிதனது "அறிநிலை" (""Knowing"") கொண்டு அவனுடைய "வாழ்நிலைக்கு" "Being" விளக்கம் கூறுவதற்கு பதில், மனிதனது "வாழ்நிலையை" கொண்டு அவனுடைய "அறிநிலைக்கு" விளக்கம் கூறுவதற்கு ஒரு வழி கண்டறியப்பட்டது.

ஆனால் இயற்கை பற்றி பிரெஞ்சு சடவாதிகளுக்கு இருந்த கருத்தோட்டம் எப்படி இயங்கியலுக்கும், நவீன இயற்கை விஞ்ஞானத்திற்கும் ஒவ்வாததாய் இருந்ததோ, அதே அளவுக்கு முந்திய நாட்களது சோசலிசம் இந்த சடவாதக் கருத்தோட்டத்துக்கு ஒவ்வாததாய் இருந்தது. முந்திய நாட்களது சோசலிசம் நடப்பிலுள்ள முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறையையும், அதன் விளைவுகளையும் கண்டன விமர்சனம் செய்தது மெய்தான். ஆனால் அவற்றுக்கு விளக்கம் கூற முடியவில்லை, ஆகவே அவற்றின் மீது ஆளுமை செலுத்த முடியவில்லை. அவற்றை தீயவை என்பதாய் நிராகரிக்க மட்டுமே அதனால் முடிந்தது. (தொழிலாள வர்க்கம் சுரண்டப்படுவதை, முதலாளித்துவத்தில் தவிர்க்க முடியாததாய் இருக்கும் இதனை இந்த முந்திய சோசலிசம் எவ்வளவுக்கு எவ்வளவு கடுமையாய் கண்டித்து சாடியதோ அவ்வளவுக்கு அவ்வளவு குறைவாகவே அதனால் இந்தச் சுரண்டல் எதில் அடங்கியிருந்தது, இது எப்படி ஆரம்பமாயிற்று என்பதைத் தெளிவுபடக் காட்ட முடிந்தது.) ஆனால் இதைச் செய்வதற்கு தேவையாய் இருந்தது என்னவென்றால் 1) முதலாளித்துவ பொருளுற்பத்தி முறையை அதன் வரலாற்று தொடர்பிலும், குறிப்பிட்ட வரலாற்றுக் காலக்கூறில் அது தவிர்க்கமுடியாததாவதிலும் தெளிவுபடக்காட்டி, இவ்விதம் அதன் வீழ்ச்சியும் தவிர்க்க முடியாததாகி விடுவதைத் தெளிவுபடுத்தல்; 2) இன்னமும் தெளிவுபடுத்தப்படாத இரகசியமாய் இருந்து வந்த அதன் சாராம்ச தன்மையை அம்பலப்படுத்திக் காட்டுதல், ஏனெனில், இதைக் கண்டன விமர்சனம் செய்தவர்கள் அதன் மாற்றப்போக்கை தாக்காமல் இதுகாறும் அதன் தீய விளைவுகளையே தாக்கி வந்துள்ளனர். உபரி மதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது மூலம் இவை செய்யப்பட்டன. ஊதியம் தரப்படாத உழைப்பை அபகரித்துக்கொள்வதுதான் முதலாளித்துவ பொருளுற்பத்தி முறைக்கும் அதன் கீழ் தொழிலாளர் சுரண்டப்படுதலுக்கும் அடிப்படையாய் அமைகிறதென்று தெளிவுபடுத்தப்பட்டது. முதலாளி தனது தொழிலாளியின் உழைப்பு சக்தியை சந்தையில் விற்பனைக்குவரும் பரிவர்த்தனை பண்டம் என்ற முறையில் அதற்குரிய முழு மதிப்பையும் கொடுத்து வாங்கிக் கொண்டாலுங்கூட, தாம் கொடுத்ததற்கும் கூடுதலாய் அதிலிருந்து மதிப்பை வடித்தெடுத்துக்கொள்கிறார் என்பது விளக்கிக் காட்டப்பட்டது. உடமையாளர் வர்க்கங்களது கைகளில் தொடர்ந்து மேலும் மேலும் குவிந்து வரும் பெருந்தொகையான மூலதனத்திற்கு ஆதாரமாயுள்ள அந்த மதிப்பு தொகைகள் இறுதியாய் ஆராய்கையில் இந்த உபரி மதிப்பிலிருந்துதான் பெறப்படுகின்றன என்பதும் தெளிவாய் காட்டப்பட்டுள்ளது. முதலாளித்துவ பொருளுற்பத்தியின் பிறப்பும் மற்றும் மூலதனத்தின் உற்பத்தியும் விளக்கப்பட்டன.

வரலாறு பற்றிய சடவாதக் கருத்தோட்டம் மற்றும் உபரி மதிப்பு மூலம் முதலாளித்துவ பொருளுற்பத்தியின் இரகசியம் புலப்படுத்தப்படல் ஆகிய இந்த மாபெரும் இரு கண்டுபிடிப்புகளுக்காக நாம் மார்க்சுக்கு கடமைப்பட்டிருக்கிறோம். இந்த கண்டுபிடிப்புகளின் விளைவாய் சோசலிசம் ஒரு விஞ்ஞானமாயிற்று. இனி அடுத்தபடி செய்ய வேண்டியிருந்த பணி அதன் எல்லா விவரங்களையும் மற்றும் உறவுகளையும் ஆராய்ந்தளிப்பதாகும்.

திருவாளர் ஓய்கேன் டூரிங் பெருமளவு ஆரவாரத்தோடு மேடை மீது ஏறித் தாம் மெய்யியல், அரசியல், பொருளாதாரம் மற்றும் சோசலிசத்தில் முழுமையான புரட்சியை வெற்றிகரமாக நிறைவேற்றிவிட்டதாக பறைசாற்றியபொழுது, தத்துவார்த்த சோசலிசம் மற்றும் காலாவதியாகிவிட்ட மெய்யியல் துறைகளில் நிலைமைகள் தோராயமாக இவ்வாறுதான் இருந்தன.

திருவாளர் டூரிங் நமக்கு அளிக்கும் வாக்குறுதிகள் என்ன, தமது வாக்குறுதிகளை அவர் எவ்வாறு நிறைவேற்றுகிறார் என்பதைப் பார்ப்போம்.


Copyright 1998-2009
World Socialist Web Site
All rights reserved