இலங்கை: இனவாத யுத்தத்திற்கு 25 வருடங்கள்

இனவாத யுத்தம் நிகழ்கால வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள விதம்


விஜே டயஸ்

ஒரு யுத்தத்திற்கான காரணங்களை யுத்த தீச்சுவாலையை மூழச்செய்த உடனடி காரணிகளைக் கொண்டு விளக்க முயல்வது எப்போதும் தவறான முடிவுக்கே இட்டுச் செல்லும். பரந்த அளவிலான மக்களை பற்றிப் பிடித்த விதத்தில், யுத்த தீச்சுவாலைகள் வெடிப்பது நீண்ட காலமாக பொறிபறந்து வளர்ச்சி கண்டுவரும் தீப்பிளம்பு பற்றி எரியும் போதேயாகும்.

சகல தீப்பிளம்புகளும் எங்கும் எப்போதும் ஒரே பணியை ஆற்றுவதில்லை. சில தணிந்து போகலாம் அல்லது தணிக்கப்பட்டுவிடலாம். ஆனால், அவற்றின் சூட்டிலும் உத்வேகம் பெறும் வெவ்வேறு தீப்பொறிகள் யுத்தப் பிளம்புகளை தோற்றுவிப்பதில் வெற்றிகாணும். தொகை பண்பாக மாறுகின்றது என்ற இயக்கவியல் விதி இங்கு செல்லுபடியாகின்றது 

தமிழர் விரோத இனவாத யுத்தம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பால் பொலிஸ் பரிசோதகர் பஸ்தியாம்பிள்ளை உட்பட 1983ல் 13 பேர் வடக்கில் கொலை செய்யப்பட்டதால் ஆரம்பமானதாக சிங்கள இனவாதிகள் கூறிக்கொள்கிறார்கள். தாராளவாத முகமூடி போட்டுக் கொண்டுள்ள முதலாளித்துவக் கையாட்கள் இனவாத யுத்தம் 1983 கறுப்பு ஜுலையின் பெறுபேறு என்கின்றனர்.

வரலாற்றாசிரியர்களாக வேஷம் போடுவோரும் இனவாத யுத்தத்திற்கு இரு விதமான காரணங்களை காட்டுகின்றனர். சிங்கள, தமிழ் தேசிய இனங்கள் இரண்டையும் சேர்ந்த அதில் ஒரு சாரார் யுத்தத்திற்கான காரணங்களை பிரித்தானிய ஆட்சிக்காலம் வரை நீடிக்கின்றனர். இதில் பலர் இனவாத விதிமுறைகளை நடைமுறைக்கிடுகையில் இந்நாட்டு பிற்போக்கு சிங்கள-தமிழ் முதலாளித்துவத்தின் பொறுப்பை பூசி மெழுக முயற்சிக்கின்றனர். இங்கு ஏகாதிபத்தியவாதிகளுடன் சேர்ந்து பிரிவினைக்கு முதலில் நடவடிக்கை எடுத்தது தமிழ் தேசிய இனத்தின் முதலாளிகளா அல்லது சிங்கள தேசிய இனத்தின் முதலாளிகளா என்பதை தேடுவது, முதலில் தோன்றியது முட்டையா அல்லது கோழியா என்பதை தேடுவது போன்றதாகும். ஏகாதிபத்திய அவசியங்களின்படி, பிரிவினையை எதிர்பார்த்த சிங்கள மற்றும் தமிழ் தேசிய இனங்கள் இரண்டினதும் முதலாளிகள் அனுமதி கிடைத்த இடத்திலேயே அதைப் பற்றிக்கொண்டனர்.

பிரித்தானியர்களின் ''பிரித்தாளும்'' விதிமுறை, சிங்கள-தமிழ் முதலாளிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் இல்லாமல் நடைமுறைக்கிடப்பட்ட ஒன்றல்ல. ஏகாதிபத்தியவாதிகளுக்கும் தேசிய முதலாளிகளுக்கும் இடையே இங்கு நிலவிய இருதரப்பு ஒத்துழைப்புக்குமான காரணம், அவர்களிடையே இருந்து வந்ந கருத்து வேறுபாடுகளை காட்டிலும் அவர்கள் இரு சாராரும் இந்நாட்டு சிங்கள தமிழ் தொழிலாளர், ஒடுக்கப்படும் மக்களின் ஐக்கியத்தின் மூலம் எழுச்சி பெறும் சவாலைப் பற்றி பீதியும் எதிர்ப்பும் அடைந்ததேயாகும். அது வர்க்க உறவு மற்றும் வர்க்க ஆட்சி பற்றிய விடயமாகும்.

இரண்டாம் பிரிவைச் சேர்ந்த ''வரலாற்றாசிரியர்கள்'' 1948ன் பின்னைய யூ.என்.பி - ஸ்ரீ.ல.சு.க. அரசாங்கங்களின் இனவாதக் கொள்கையை யுத்தத்திற்கான காரணங்களாக காட்டுகின்றார்கள். இந்தப் பிரிவில் பெரும்பான்மையாக அடங்குவோர் இடதுசாரி வேஷம் போட்டுக் கொண்டுள்ள குட்டி முதலாளித்துவ தீவிரவாதிகள் ஆவர்.

1948ம் ஆண்டின் சுதந்திரம் எனப்படுவது, தேசிய சுதந்திரத்துக்கும் தேசிய ஐக்கியத்துக்கும் எதிராக ஏகாதிபத்தியவாதிகளும் தேசிய முதலாளித்துவ ஆட்சியாளர்களும் முன்னெடுத்த சதியின் பெறுபேறு என்பதில் சர்ச்சைக்கு இடமில்லை. 1949ன் பிரஜா உரிமைச் சட்டம் போலவே 1956ன் சிங்களத்தை மட்டும் அரச மொழியாக்கிய சட்டமும் சிங்கள முதலாளித்துவ ஆட்சியின் கீழ் நடைமுறைக்கிடப்பட்ட இனவாத பாகுபாடுகளுக்கு நல்ல உதாரணங்கள் ஆகும்.

ஆனால், 1948ன் சுதந்திரம் எனப்படுவதைப் போலவே 1956ன் பிற்போக்கு மசோதாவுக்கும் எதிராக நின்று முதலாளித்துவ காட்டுமிராண்டி விதிமுறையைத் தோற்கடிக்கும் வல்லமை வாய்ந்த ஒரு அரசியல் சக்தி இருக்கவில்லையா? உண்மையிலேயே இருந்தது. இடதுசாரி வேஷம் போடும் தீவிரவாதிகள் அவ்வாறில்லை எனக் கூறுவது அவர்கள் பேணிக்கொள்ள முயலும் பழைய இடதுசாரி அரசியல் அமைப்புக்களின் காட்டிக்கொடுப்புக்கும் துரோகத்திற்கும் முந்தைய வரலாற்றுக்கே காலால் எட்டி உதைப்பதாகும்.

இந்தச் சம்மந்தப்பட்ட காலப்பகுதியில் சிறப்பாக போல்ஷிவிக்-லெனினிஸ்ட் சமசமாஜ கட்சி, 1950க்கு முன்னர், யூ.என்.பி. க்கும் சமரசவாத தமிழ் முதலாளித்துவக் கட்சிகளுக்கும் எதிராக இன பேதங்களுக்கு அப்பால் தொழிலாளர் வர்க்கத்தையும் ஒடுக்கப்படும் மக்களையும் அணிதிரட்டுகின்றதும் வழிநாடாத்துகின்றதுமான முக்கிய அரசியல் சக்தியாக விளங்கியது. 1953 ஹர்த்தால் போராட்டம் காட்டியதை போல், அந்த ட்ரொட்ஸ்கிச இயக்கம் முதலாளித்துவ ஆட்சியை தூக்கி வீசும் வல்லமை கொண்டிருந்தது. இந்த அரசியல் இயக்கத்தின் பிற்காலத் துரோக நடவடிக்கைகளுக்கும் இனவாத யுத்தத்துக்கும் இடையே நிலவும் உறவைக் கவனத்தில் கொள்ளாமல், முதலாளித்துவ அரசாங்கங்களின் இனவாத விதிமுறைகளைக் குற்றம் சாட்டுவதானது புறநிலை ரீதியாக முதலாளி வர்க்கம் சம்பந்தமாக பரிந்துரைக்கும் விதிமுறைகள் மூலம் வரலாற்றை விளக்குவதாகும். அது திரிப்பே அன்றி வரலாறு அல்ல.

1960-70களில் அரசியல் கட்சி நடவடிக்கை

அரசியல் கட்சிகளின் பணி, புறநிலை அபிவிருத்திகளினுள் அகநிலை காரணிகளாக செயற்படும் வர்க்க ரீதியான அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் திட்டவட்டமான பணிகளை இட்டு நிரப்புகின்றன. அந்தப் பணியை நோக்காது வரலாறு சப்பந்தமாக நிஜ புரிந்துணர்வைப் பெறமுடியாது. வரலாறு சம்மந்தமான அத்தகைய விளக்கங்கள் புறநிலை வாதத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்.

1964 சமாசமாஜ-ஸ்டாலினிசக் கட்சிகளின் காட்டிக்கொடுப்பு இல்லாது இருந்திருக்குமானால், 1948 ஏகாதிபத்திய சார்பு சதிக்கும் 1956 சி.ல.சு.க. இனவாத அரசியலுக்கும் முற்றுப்புள்ளி வைத்து, பிற்காத்தில் மூண்ட இனவாத யுத்தத்தை தவிர்க்க இடம் இருக்கவில்லையா? அவ்வாறு இல்லை எனக் கூறுவது முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனத்துக்கு பதிலீடு இல்லை எனவும் முதலாளித்துவ ஆட்சியைத் தூக்கிவீசி, மனித இனத்தின் அமைதியான வாழ்க்கைக்கு வழியமைக்க இப்புவியில் இடமில்லை எனவும் கூறுவதற்கு சமமானதாகும்.

சி.ல.சு.க. அரசாங்கத்துடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு சமசமாஜக் கட்சி 1964ல் இழைத்த மாபெரும் காட்டிக்கொடுப்பினால் முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனத்துக்கு எதிராக சோசலிச மாற்றீட்டுக்கு இந்நாட்டின் சிங்கள தமிழ் தொழிலாளர்- ஒடுக்கப்படும் மக்களுக்கு இருந்து வந்த சோசலிச பதிலீட்டு தீர்வுக்கான வாய்ப்புக்கள் இழுத்து மூடப்பட்டது. அது மட்டுமன்றி 1970-75 முதலாளித்துவ கூட்டரசாங்க காலத்தில் அத்தகைய ஒரு முற்போக்கு பதிலீட்டுக்காக சிங்கள-தமிழ் தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களிடையே வளர்ச்சி கண்டுவந்த முயற்சிகளை முதலாளித்துவ அரச பலத்தைக் கொண்டு இரத்தத்தில் மூழ்கடிக்கும் பொல்லாக முதலாளித்துவக் கூட்டரசாங்கத்தின் பங்காளி என்ற விதத்தில் சமசமாஜ மற்றும் ஸ்டாலினிசக் கம்யூனிஸ்ட் கட்சிகள் மாறின. இது 1970க்கு முன்னர் அகநிலைவாதிகளால் கண்டு கொள்ள முடியாது போன 1964ன் மாபெரும் காட்டிக்கொடுப்பின் அழிவுகரமான நடைமுறைப் பாத்திரத்தை வெளிக்காட்டியது.

எனவேதான் நாம் இனவாத யுத்தத்தின் வேர் அந்தக் காலப்பகுதியை நோக்கி வேரூன்றியுள்ளது எனச் சுட்டிக்காட்டுகின்றோம்.

1970-1977 காலத்தில் இருந்து வந்த முதலாளித்துவ கூட்டரசாங்கம் மூலம், சிறப்பாக 1972 தொடக்கம் அத்திவாரம் இடப்பட்டு யூ.என்.பி.யினால் அப்பட்டமான யுத்த மட்டத்துக்கு கட்டி எழுப்பப்பட்ட தமிழர் விரோத இனவாத யுத்தம், இன்று இரண்டாவது பொதுஜன முன்னணி கூட்டரசாங்கத்தின் கீழ் முன்னொருபோதும் இல்லாத காட்டுமிராண்டித் தனத்துடன் முன்னெடுக்கப்படுகின்றது. அன்று சிறிமாவோ பண்டாரநாயக்காவின் தலைமையில் இருந்த கூட்டரசாங்கத்துக்கு தோள்கொடுத்த சமசமாஜ-ஸ்டாலினிச கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள், யூ.என்.பி.க்கு வழியமைத்துக் கொடுத்து மட்டுமன்றி, பின்னர் யூ.என்.பி. அரசாங்கம் முன்னெடுத்துச் சென்ற இனவாத யுத்தத்திற்கும் ஆதரவளித்தனர் என்பதை அறியாதோர் கிடையாது. 1987ல் இந்திய இராணுவத்தை தருவித்து, தமிழ்ப் பொதுமக்களை இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்க யூ.என்.பி அரசாங்கம் எடுத்த தீர்மானத்தினை அங்கிகரித்தது வரையும் அவர்கள் இரத்தவெறி ஆர்வத்துடன் யூ.என்.பி. யின் இனவாத யுத்தத்தின் வக்கீல்களாகினர்.

தமிழ்ப் பொது மக்களை யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சிக்கும், கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கியும் அங்கிருந்து வவுனியாவின் சித்திரவதை முகாம்களுக்கும் குடும்பத்தோடு கலைத்த இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்ட பொதுஜன முன்னணி அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொணரும் பொருட்டு, சமசமாஜ-ஸ்டாலினிச கட்சிகள் மட்டுமல்லாது ஏனைய சகல குட்டி முதலாளித்துவ கட்சிகளும், தீவிரவாதக் குழுக்களும் தோள் கொடுத்தன என்பது அப்படி ஒன்றும் இரகசியம் அல்ல. நவசமசமாஜ கட்சி, மலையக மக்கள் முன்னணி, ஜே.வி.பி, மற்றும் ஜனதா மிதுரோவும் அவ்வாறே விடுதலைப் புலிகள் உட்பட சகல தமிழ் முதலாளித்துவ அமைப்புக்களும் சந்திரிகா குமாரதுங்காவை ஜனாதிபதியாக்க தோள் கொடுத்தனர். இந்த அடிபணிவானது ஜனாதிபதி வேட்பாளரின் குள்ளத்தனங்களைக் காட்டிலும், அடிபணிந்தவர்களது அரசியல் வங்குரோத்தினையும் முறைகேடுகளையும் எடுத்துக் காட்டியது. பிற்போக்கு தலைவிரித்தாடும் இந்த வங்குரோத்துக்கும் முறைகேடுகளுக்கும் எதிராக உறுதியாகப் போராடிய ஒரே அரசியல் அமைப்பு, அனைத்துலக குழுவின் தலைமையிலான நான்காம் அகிலத்தின் இலங்கை பகுதியான சோசலிச சமத்துவக் கட்சி (புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம்) மட்டுமே ஆகும்.

யுத்தத்தின் பேரழிவு

தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத யுத்தம் இன்றைய பொதுஜன முன்னணி அரசாங்கத்தின் கீழ் முன்னேரு போதும் இல்லாத அளவுக்கு உக்கிரம் கண்டதன் மூலம் சிங்கள-தமிழ் தேசிய இனங்களுக்கு உருவாக்கப்பட்டுள்ள பேரழிவு அளப்பரியதாகும்.

அரசாங்கத்தின் ஆண்டின் முழுச் செலவில் நூற்றுக்கு 25 வீதம் இப்போது மக்கள் படுகொலை யுத்தத்துக்கு செலவிடப்படுகிறது. அது ரூபா 5000 கோடிக்கும் அதிகமாகும். 1995ல் அரசாங்கம் சுகாதார செலவுகளுக்கு 1095 கோடி ரூபாய்களை செலவிட்டது. கல்விச் செலவுக்கு 1890 கோடி ரூபாய்களை செலவழித்தது. இதனை 1994ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 1995ல் பொதுஜன முன்னணி அரசாங்கத்தின் கீழ் பாதுகாப்பு செலவு நூற்றுக்கு 50 சதவீதத்தினால் அதிகரித்ததோடு பொதுமக்களின் உயிர்களைக் காக்கவும் எதிர்கால சந்ததியினரின் கண்களைத் திறக்கவும் அவசியமான சுகாதார, கல்வி சேவைகளுக்காகவும் செலவான செலவுடன் ஒப்பிடும்போது அதில் எந்தவிதமான அதிகரிப்பும் ஏற்படவில்லை. அந்நிலையில் 1996ல் வரவு செலவு திட்டத்தில் சுகாதாரத்திற்கும் கல்விக்கும் ஒதுக்கப்பட்ட தொகையையும் விட, இனவாத யுத்தத்துக்கும் இராணுவமயமாக்கத்துக்கும் ஒதுக்கிய தொகை அதனையும் தாண்டி மேலும் 30 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டது. அந்த விதத்தில், இதனை 1994ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது நூற்றுக்கு 80 வீதத்தினால் அதிகரிக்க பொதுஜன முன்னணி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பொது மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் முதலாளித்துவ அரசியல் அடக்குமுறை இயந்திரமான இராணுவத்தினதும் பொலிசினதும் கொலைகாரப் படையாட்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் அவசியங்களை இட்டுநிரப்ப செலவிடக்கூடிய பெருமளவிலான பணத்தைக் கொண்டே இந்த அதிகரிப்புச் செய்யப்பட்டுள்ளது. 1985-95 க்கும் இடைப்பட்ட ஒரு தசாப்த காலத்தில் யூ.என்.பி.-பொதுஜன முன்னணி அரசாங்கங்களின் கீழ் ஆயுதப் படைகளின் எண்ணிக்கை உலகில் வேறு எந்த ஒரு நாட்டிலும் இல்லாத அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

1985-95 தசாப்தத்தில் இலங்கை இராணுவத்தின் எண்ணிக்கையிலான அதிகரிப்பு கம்போடியா, ஈரான், பர்மா முதலான நாடுகளில் முறையே (நூற்றுக்கு) 153, 68, 54 வீதங்களாக விளங்கியது. ஆனால், அதே காலப்பகுதியில் இலங்கையில் இராணுவ-பொலிஸ் படைகளின் தொகை நூற்றுக்கு 483 வீதத்தால் உயர்ந்துள்ளது. அதாவது கம்போடியாவைக் காட்டிலும் மும்மடங்கு அதிகரித்துள்ளது. படைகளின் எண்ணிக்கையைப் பொறுத்தமட்டில் இன்று இலங்கை உலகில் 34வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்நாட்டின் சனத்தொகையும் பரப்பளவும் சிறியது என்பதை மனதில் கொண்டால் இங்கு மக்கள் படுகொலைகள் உக்கிரம் கண்டுள்ளது பளிச்சிடும். 1985ல் 22,000 ஆக இருந்த இலங்கை இராணுவத்தின் எண்ணிக்கை இன்று 126,000ஐத் தாண்டியுள்ளது. யுத்தத்தில் உயிரிழக்கும் படையினரின் வெற்றிடத்தை நிரப்புவதற்கு மட்டுமன்றி படைக்கு ஆள் சேர்க்கும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகிறது. இது இளம் தலைமுறையினரை மக்கள் படுகொலைக்காரர்களாகவும், மக்கள் படுகொலை யுத்தத்தின் பலிகடாக்களாகவும் மாற்றும் ஒரு பொறிக்கிடங்காக விளங்குகிறது.

யூ.என்.பி.யைப் போலவே பொதுஜன முன்னணி அரசாங்கமும் இளைஞர், யுவதிகளை திரட்டுவது அவர்கள் தம்மையும் பொது மக்களையும் வாழவைக்க வழிவகுக்கும் தொழில்களுக்கு அல்ல, மக்கள் படுகொலை இராணுவத்துக்கேயாகும். இளம் தலைமுறையினரின் சிருஷ்டித் திறன்மிக்க உற்பத்திச் சக்திகள் கசக்கிப் பிழியப்படுவதோடு அலுக்கோசு கொலைகாரப் படையாகவும் அவர்கள் மாற்றப்படுகின்றனர். அவர்களால் கொலைசெய்யப்பட்டோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்தையும் தாண்டியுள்ளதோடு கொலையுண்ட படையினரின் எண்ணிக்கை பல்லாயிரங்களைத் தாண்டியுள்ளது.

கொலையுண்ட லட்சக் கணக்கானோரிடையே முதலாளித்துவக் குடும்பங்களில் இருந்து வருவோரின் எண்ணிக்கையை தனியொருவரின் கைவிரல்களைக் கொண்டே கணித்துவிடலாம். முதலாளி வர்க்கத்தினால் தமது சுய அவசியங்களுக்காக தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்கள் இரத்தக் களரியில் மூழ்கடிக்கப்பட்டுள்ளார்கள் என்பதற்கு மேலும் சாட்சி வேண்டுமா? இனவாத யுத்தத்தினை மையமாக கொண்டு கட்டவிழ்க்கப்பட்டுள்ள இந்த மக்கட் படுகொலையின் முக்கிய பயங்கர பணி யூ.என்.பி.-பொதுஜன முன்னணி அரசாங்கங்களினால் இட்டு நிரப்பபட்டுள்ள அதே வேளையில், தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட முதலாளித்துவ, குட்டி முதலாளித்துவ தமிழ் இயக்கங்களின் துணை நடவடிக்கைகளின் கொடுமைகளை எந்த விதத்திலும் குறைந்தவையாக நோக்க முடியாது.

இனவாத யுத்தத்தினதும் அதன் பின்னணியில் வளர்ச்சி கண்டுள்ள ஒடுக்குமுறை அரச இயந்திரத்தினதும் நச்சுத்தனமான பெறுபேறுகள் வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கு மட்டும் மட்டுப்பட்டது என்ற கருத்து ஒரு பயங்கரமான நப்பாசையாகும் என்பது இதுகாறும் சகலரும் புரிந்து கொள்ளக் கூடிய அளவுக்குத் தெளிவாகியுள்ளது.

சமூக சீரழிவு

இனவாத யுத்தம் என்பது முழு நாட்டையும் படுகொலைக்குள்ளும், பயங்கரங்களுக்குள்ளும் மூழ்கடிக்கும் ஒரு ஆரம்ப நடவடிக்கையாகும் என சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் (பு.க.க.) மட்டுமே தோடர்ந்து சுட்டிக்காட்டி வந்துள்ளன. இதன் உண்மை, 1988-90 காலப்பகுதியில் இடம்பெற்ற இளைஞர் படுகொலைகள் மூலம் நாடு பூராவும் பரந்து விரிந்து, இன்னமும் இடத்துக்கு இடம் வெறிபிடித்துள்ள அரசியல் காடைத்தன இயக்கங்கள் மூலமும், தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களது போராட்டங்களையும் ஊர்வலங்களையும் இரத்தத்தினால் மூழ்கடிக்க இராணுவ-பொலிஸ் அதிகாரத்தினைப் பயன்படுத்துவதன் மூலமும், மின்சாரசபை ஊழியர் போராட்டத்தில் தலைதுக்கியது போல் அவசரகால சட்ட ஆட்சியின் கீழ் தொடுக்கப்பட்ட மக்கள் படுகொலை இயக்கங்கள் மூலமும் ஒப்புவிக்கப்பட்டுள்ளது. இவை யூ.என்.பி.-பொதுஜன முன்னணி அரசாங்கங்களின் கீழ் முன்னெடுக்கப்பட்ட மக்கள் படுகொலை இயக்கங்களாகும். இவற்றுக்கு மேலதிகமாக முதலாளித்துவ அமைப்பின் கீழ் வாழ்க்கைக்கு வழியில்லாத நிலமைக்குள் தள்ளப்பட்டு குழம்பிப் போயுள்ள மக்கள், கொலைகள், கொள்ளைகளில் ஈடுபடுவதோடு தற்கொலை செய்துகொள்ளவும் திரும்பியுள்ளமை பொறுக்க முடியாத சமூகச் சீரழிவினை வெளிக்காட்டுகின்றது.

பொதுஜன முன்னணி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் 1995 ஜுன் 1ம் திகதி தொடக்கம் 1996 ஜுன்1ம் திகதி வரையிலான ஒரு வருட காலத்துள் 1270 கொலைகள் இடம்பொற்றுள்ளதாக அறிக்கை செய்யப்பட்டுள்ளது. அதாவது ஒரு நாளைக்கு ஏறக்குறைய 5 கொலைகள் இடம்பெற்றுள்ளன. இந்த வருடத்தில் 2246 கொள்ளைச் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. அவ்வாறானால் ஒரு நாளைக்கு 7 கொள்ளைகள் இடம்பெற்றுள்ளன. 565 வாகன கொள்ளையடிப்புகள் 43 கற்பழிப்பு சம்பவங்களும் இக்காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சமூகக் கலாச்சார மரபுகள் மூலம் போடப்பட்டுள்ள தடைகளின் கீழ் கற்பழிப்பு பற்றிச் செய்யப்படும் முறைப்பாடுகள் இலங்கை போன்ற நாடுகளில் வரையறுக்கப்பட்டுள்ளது என்பதை கணக்கில் கொள்ளும்போது இந்தப் புள்ளி விபரம் எந்தளவுக்குப் பரந்துபட்டுள்ள சமூக முறைகேடுகளின் ஒரு சிறிய வெளிப்பாடு மட்டுமே என்பதை புரிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது. பொலிஸ் அறிக்கைகள் மூலம் அம்பலமாகும் இந்த சமூக அழிவு, வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் இடம்பெற்றவை மட்டுமே. இனவாத யுத்தப் பிராந்தியமான வடக்கு-கிழக்கில் இடம்பெறும் கொலைகள், சமூக ஊழல்கள் இதைக் காட்டிலும் பிரமாண்டமானவை என்பதைக் கூற வேண்டுமா?

காதில் கேட்டவுடன் மெய்சிலிர்க்க வைக்கும் அளவிலான சமூகப் பேரழிவுகள் நடைபெறும் இன்றைய நிலைக்கு பொறுப்புச் சொல்ல வேண்டியது யார்? சாதாரண பொதுமக்களா? அல்லது அம்மக்களைச் சிறைப்படுத்தி ஆதாள பாதாளத்தில் வீழ்ந்துள்ள முதலாளித்துவ அமைப்பும் அதன் ஆட்சியாளர்களுமா? அதனுடன் இணைந்த இன்னொரு கேள்வியும் உள்ளது. பொது மக்களின் பேரில் பேசிக்கொண்டு முதலாளித்துவ ஆட்சியின் மரணத்தை தள்ளிப்போட 1970-77 கூட்டரசாங்கத்துக்கும், யூ.என்.பி. க்கும் போல் இன்றைய பொதுஜன முன்னணி அரசங்கத்துக்கும் முண்டு கொடுத்துள்ள துரோக அரசியல் கட்சிகளும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களும் இந்த நச்சுப் பொறுப்பில் இருந்து விடுபட முடியுமா? இந்தக் கேள்விகளை எழுப்புவதே அவற்றுக்கு சரியான பதில்களை வழங்கும். நாம் மேலும் கேள்விகளை எழுப்பிப் பார்ப்போம். இந்தத் துரோகத்துடன் கூட்டுச் சேராமல் யூ.என்.பி. முதலாளித்துவ கூட்டரசாங்க ஆட்சியை தூக்கி வீசவும் தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொணர்ந்து, சமுக சமத்துவத்தையும் நீதியின் அடிப்படையில் சமாதானமான சுபிட்சமான சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் பொருட்டும் பொது மக்களுக்கு வழிகாட்டிய கட்சி இருந்ததா? அதற்குப் பதில் ''நிச்சயமாக ஆம்'' என்பதேயாகும். அது சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமே ஆகும்.

நாம் மீண்டும் தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்கள் முதலாளித்துவ ஆட்சியின் கீழ் முகம் கொடுக்கும் சமுகப் பேரழிவுகள் பற்றிய பிரச்சனைக்குத் திரும்புவோம். இதற்கு முன்னர் சுட்டிக் காட்டியது போல், இராணுவமயமாக்க வேகத்தைப் போலவே தற்கொலை சம்பவங்கள் அளவுகணக்கற்ற விதத்தில் அதிகரிப்பதிலும் இலங்கை உலகிலேயே முதலிடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளது. சனத்தொகையின் ஒவ்வொரு இலட்சத்துக்கும் 47 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஒரு நாளைக்கு 22பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர். தற்கொலை செய்து கொள்வோரிடையே அதிகமானோர் கடன் பளுவைச் செலுத்த முடியாமை, தனது குடும்பத்துக்கு ஒரு வேளை சாப்பாடு கொடுக்க முடியாமை, வேலை நீக்கம் போன்ற காரணங்களினால் இந்த நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். தாங்க முடியாததும் விடுவித்துக்கொள்ள முடியாததுமான தரித்திர நிலைமைக்குள் தாம் அகப்பட்டுக்கொண்டுள்ளோம் என்ற மன உளைச்சலில் அவர்கள் தமது உயிரை மாய்த்துக்கொள்ள நெருக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் இங்ஙனம் தற்கொலை செய்து கொள்வது அவர்களைப் பற்றிப்பிடித்துக் கொண்டுள்ள நாற்றம் கண்ட முதலாளித்துவ சமூக அமைப்புக்கு எதிராக சுமத்தப்படும் பலத்த குற்றச்சாட்டாகும்.

இந்தச் சமுகச் சீரழிவு முதலாளித்துவ அமைப்பின் கீழ் உக்கிரம் கண்டுள்ளதை அம்பலமாக்கும் இன்னோரு விடயம் நாடு பூராவும் சிறுவர் பாலியல் உழைப்பு பரந்து பட்டு வருவதாகும். 6 வயதுக்கும் 14 வயதுக்கும் இடைப்பட்ட 10000 க்கும் அதிகமான சிறுவர் சிறுமியர் இந்தக் மோசமான தொழிலுக்கு பலியாக்கப்பட்டுள்ளதாக ஆய்வு அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. 2001ம் ஆண்டளவில் இலங்கையில் எயிட்ஸ் நோயாளிகள் எண்ணிக்கை 80000ஐ தாண்டும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. முழுச் சனத்தொகையில் கிட்டத்தட்ட சரி அரைவாசிப் பேர் மாதம் ரூபா.500க்கும் குறைவான வருமானம் பெற்று வாழ்க்கையை ஓட்டும் நிலையில், அழிவுமிக்க பெறுபேறுகள் சகல வகையிலும் வெளிப்பாடாகத் தொடங்கி உள்ளது.

17 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த யூ.என்.பி. அரசாங்கத்தைப் போலவே இன்றைய பொதுஜன முன்னணி அரசாங்கமும் தொழிலாளர் சம்பளத்தை அதிகரிக்கும் பிரச்சாரங்களுக்கு அரச குண்டர் படைகளைப் பாவித்தும் நலன்புரிச் சேவைகளை வெட்டியும் பொதுமக்களை வறுமையின் பிடிக்குள் தள்ளுவதும் இனவாத யுத்தத்தின் கல் உருளையை பாவித்தாகும். யுத்தம் நடக்கும் வரை எதையும் கேட்க வேண்டாம்! ஆளும் வர்க்கத்தின் யுத்தக் கோஷம் அதுவே. இப்போது நடத்திவரும் மக்கட் படுகொலை யுத்தத்தை ஒரு முடிவுக்குக் கொணர்ந்து, தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களின் கோரிக்கைகளை வழங்குவதாக வாக்குறுதி அளிப்பதானது, சிங்கள-தமிழ் இரண்டு தேசிய இனங்களதும் பொதுமக்களுக்கு எதிராக உள்நாட்டு யுத்தத்தை தொடுப்பதற்குத் தயாராகும் வரை நடாத்தும் மோசடியாகும்.

இந்த மோசடி ஜே.ஆர். ஜயவர்த்தனாவின் கீழும் அவ்வாறே ஆர்.பிரேமதாச, டீ.பீ.விஜயதுங்கவின் கீழும் பாவிக்கப்பட்டவையாகும். சகல துரோகத் தலைவர்களினாலும் தூக்கிப்பிடிக்கப்பட்ட சந்திரிகா குமாரதுங்க மீண்டும் திணிப்பதும் இந்த மோசடியையேயாகும்.

ஒரே வழி

இனவாத யுத்தத்தை நிறுத்தவும் தமிழ் முதலாளித்துவ பிரிவனைவாதத்தினை தோற்கடிக்கவும் தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களை வறுமையில் இருந்து மீட்கவும் முதலாளித்துவத்தை தூக்கி வீசி, சோசலிச சமத்துவத்தின் அடிப்படையில் தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொணர்வது அத்தியாவசியமாகும். இதற்காக சிங்கள, தமிழ் இரு தேசிய இனங்களையும் சேர்ந்த பொதுமக்களை அரசியல் ரீதியில் அணிதிரட்டும் கட்சியை கட்டியெழுப்புவது சோசலிச சமத்துவக் கட்சியேயாகும்.

வேலையின்மை, வறுமை, தொற்றுநோய்கள் மற்றும் படிப்பறிவின்மை உக்கிரம் கண்டுவரும் நாட்டில் பொதுமக்களின் நலனுக்காக உடன் நிறுத்தப்பட வேண்டிய யுத்தத்தை தள்ளி வைத்துவிட்டு, ஏகாதிபத்தியச் சார்பு முதலாளி வர்க்கமும் அவர்களின் பொதுஜன முன்னணி அரசாங்கமும் ஊழையிடுவது கொலைகார இனவாத யுத்தத்தின் வெற்றிகளைப் பற்றியேயாகும். பொதுமக்களைப் பற்றி அவர்களுக்கு எந்தவிதமான அக்கறையும் கிடையாது என்பதற்கு வேறு சாட்சியும் வேண்டுமா?

முதலாளி வர்க்கமும் அவர்களின் அரசாங்கமும் மக்களின் நலன்களையிட்டு எதுவித அக்கறையும் கொள்ளாததற்கு காரணம் அவர்கள் தப்பெண்ணங்களைக் கொண்டுள்ளதால் அல்ல. அவர்களது நடைமுறையைத் தீர்மானிக்கும் முதலாளித்துவ சமூக அமைப்பு காலாவதியாகிப் போய் மனித இனத்தின் மீது காட்டுமிராண்டித்தனத்தை திணிக்கும் ஒரு அமைப்பாக பரிணாமம் கண்டுவிட்டதனாலாகும். மக்கள் படுகொலை இனவாத யுத்தம் போலவே கொலைகார மோதுதல்களை தூண்டும் முதலாளித்துவ பிரிவினைவாதத்தையும் இதில் இருந்து வேறுபடுத்த முடியாது.

''தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத யுத்தம் எமது யுத்தம் அல்ல'' என்ற தொழிலாளர் வர்க்க ஒடுக்கப்படும் மக்களின் நிலைப்பாட்டையும் மனோபாவத்தையும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் உறுதியாகத் தொடர்ந்தும் சுட்டிக்காட்டி வந்துள்ளது. அது காட்டுமிராண்டித்தனம் கோலோச்சும் முதலாளி வர்க்கத்தின் யுத்தமாகும்.

முதலாளி வர்க்கமும் அவர்களின் யூ.என்.பி - பொதுஜன முன்னணி அரசாங்கமும் நடத்திவரும் மக்கள் படுகொலை யுத்தத்தின் பின்னணியைத் தயார் செய்து கொடுப்பதில் சமசமாஜ, ஸ்டாலினிச கம்யூனிஸ்ட், நவசமசமாஜ, இ.தொ.கா, ஜே. வீ. பி. தலைமைகள் இட்டு நிரப்பிய நச்சுத்தனமான அரசியல் பாத்திரத்துக்கு வெளியே இனவாத யுத்தத்தின் பிற்போக்கு பணியை புரிந்து கொள்ள முடியாது. இனவாத யுத்தத்தின் முக்கிய சிருஷ்டி பணியை இந்த துரோகத் தலைமைகளே இட்டுநிரப்பி உள்ளன.

இனவாத யுத்தத்திற்கான திட்டத் தயாரிப்புக்கள் செய்யப்பட்ட தருணத்தில் இருந்து யுத்தத்தை எதிர்த்து நின்று வந்த ஒரே அரசியல் அமைப்பு புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமே (இப்போது சோசலிச சமத்துவக் கட்சி) என்பதை இங்கு குறிப்பிட்டு, அந்த இனவாத யுத்தச் சதியின் அடி வேரை தெளிவுபடுத்தும் பணியை அடுத்துவரும் பகுதிகளிடம் ஒப்படைத்து இந்தப் பகுதியை நிறைவு செய்வோம்.

1972 அரசியலமைப்பும் தமிழர் விரோத தாக்குதல் உக்கிரமடைதலும் 

தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெறும் இனவாத யுத்தம் 25 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. அவ்வாறு கொள்ளக் காரணம் அந்த யுத்தத்திற்கு அடிக்கல் நாட்டும் வேலைகள் ஸ்ரீலங்கா- சமசமாஜ - கம்யூனிஸ்ட் கூட்டரசாங்கத்தின் கீழ் 1972ல் இருந்து ஆரம்பமாகிவிட்டதேயாகும். இதை நாம் கடந்த பகுதியில் சுட்டிக்காட்டினோம்.

1972ல் இடம்பெற்றது என்ன? அந்த ஆண்டில் கூட்டரசாங்கம் சிங்கள-பெளத்த இனவாத அரசியலமைப்புச் சட்டத்தை நிறைவேற்றியது. அது சிங்கள-பெளத்த மக்கட் பிரிவினரை தமிழ் மக்களுக்கு எதிராக யுத்த ரீதியில் தூண்டிவிடும் ஒரு நனவான ஆத்திரமூட்டும் நடவடிக்கையாக விளங்கியது.

1972 அரசியலமைப்புச் சட்டத்தின் இலக்கு என்னவாக இருந்தது? இதைப் புரிந்து கொள்வதற்கு 1945ல் இயற்றி 1947ல் நடைமுறைக்கிட்டதும் 1972வரை அமுலில் இருந்ததுமான அரசியலமைப்புச் சட்டத்தின் அரசியல் பின்னணியையும் செயற்பாட்டையும் பற்றி சிறிது தெரிந்துகொள்வது உதவியாக இருக்கும்.

1947 அரசியலமைப்புச் சட்டம், பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளுக்கும் இலங்கையில் அதி வலதுசாரி படு பிற்போக்கு முதலாளித்துவ ஆட்சியாளர்களுக்கும் இடையே பொதுமக்களுக்கு எதிராக செய்து கொள்ளப்பட்ட ஒரு சதியின் பெறுபேறாகும். இந்த அரசியலமைப்புச் சட்டம் சம்பந்தமாக கருத்து வெளியிடுவதற்கு சிங்கள-தமிழ் தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களுக்கு எந்தவிதமான சந்தர்ப்பமும் வழங்கப்படவில்லை. அத்தோடு முதலாளி வர்க்கத்தின் தீவிரவாதிகளாகக் கோலம் போட்டுக் கொண்ட பகுதியினருக்கும் கூட அத்தகைய வாய்ப்பு வழங்கப்படவில்லை.

டொனமூர் அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் இருந்து வந்த முதலாளித்துவ அமைச்சரவை 1944ல் தயாரித்த அரசியலமைப்பு வரைவே 1947 அரசியலமைப்புச் சட்டத்துக்கு அடிப்படையாக இருந்து வந்தது. அரசியலமைப்புச் சட்ட வரைவினைத் தயார் செய்ய டீ.எஸ். சேனநாயக்கவின் தலைமையில் இருந்த அமைச்சரவையைத் தூண்டியது 1943 மே மாதத்தில் பிரித்தானிய குடியேற்ற அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட கொள்கைப் பிரகடனமாகும்.

ஏகாதிபத்திய இரண்டாம் உலக யுத்தம் அதன் உச்சக் கட்டத்தை அடைந்திருந்த இந்தக் காலகட்டத்தில், பிரித்தானியாவின் ஆசிய காலனிகள் யப்பான் ஏகாதிபத்தியத்தின் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருந்தன. யுத்தத்தின் காட்டுமிராண்டித்தனத்துக்கும், முகங்கொடுத்திருந்த அச்சுறுத்தலின் தன்மைக்கும் சமாந்தரமாக, பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள் தமது காலனித்துவ கைக்கூலி முதலாளிகளைக் கொண்டு இத்தருணத்தில் பொது மக்களுக்கு எதிரான ஒடுக்கு முறைகளைத் தீவிரமாக்கினர்.

மக்கள் விரோத ஒடுக்குமுறையானது தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களை அணிதிரட்டிக் கொண்டு தேசிய சுதந்திரத்துக்கும் சோசலிசத்துக்குமாகப் போராடிய லங்கா சமசமாஜக் கட்சி சட்டவிரோதமாக்கப்பட்டதன் மூலம் அப்பட்டமான முறையில் வெளிப்பாடாகியது. 1940 ஜூன் மாதத்தில் சமசமாஜக் கட்சியின் அரச சபை எம்.பீ.க்கள் இருவர் உட்பட முன்னணித் தலைவர்களும் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை இல்லாமல் சிறையில் தள்ளப்பட்டதோடு கட்சியின் அரசியல் நடவடிக்கைகளும் தடைசெய்யப்பட்டன. சமசமாஜக் கட்சி அந்தரங்கமாகச் செயற்படத் தள்ளப்பட்ட போதிலும் அதன் தொழிற்சங்கங்கள் இன்னமும் இருந்துவர இடமளிக்கப்பட்டது. 1942 மார்ச்சில் அந்த அனுமதியும் இரத்துச் செய்யப்பட்டது. ஏகாதிபத்திய யுத்தத்துக்கு தோள்கொடுத்தபடி, பிரித்தானிய காலனித்துவ ஆட்சியைக் கொண்டிருக்க முழு மூச்சாக நின்று வந்த ஸ்டாலினிசக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்த பொதுஜன ஒடுக்குமுறைக்கு மத்தியில் தொழிலாளர்களில் ஒரு பகுதியினரை முற்றுகையிட்டுக்கொள்ளவும், இலங்கை தேசிய காங்கிரசின் முதலாளிகளுடன் சேர்ந்து கொண்டு தமது ஏகாதிபத்தியச் சார்பு துரோக நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் வாய்ப்புக் கிடைத்தது.

அமைச்சரவையின் அரசியலமைப்புச் சட்ட வரைவு முன்வைக்கப்பட்ட போது டீ.எஸ். சேனநாயக்க இலங்கை தேசிய காங்கிரசில் இருந்தும் வெளியேறி இருந்தார். காங்கிரசின் முதலாளித்துவ தீவிரவாதிகளின் கோரிக்கைகளைக் கூட ஏகாதிபத்திய எஜமானர்களைப் போலவே தேசிய முதலாளித்துவ வர்க்கத் தலைவரான அவராலும் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. அமைச்சரவை வரைவு தயார் செய்யப்பட்டது, இரண்டாம் உலக யுத்த காலத்தில் பிரித்தானிய ஏகாதிபத்திய ஆட்சி பொதுமக்கள் மீது திணித்த மிலேச்ச ஒடுக்குமுறைகளினால் மதங்கொண்டிருந்த தேசிய முதலாளிகளின் விருப்பு வெறுப்புகளின் பேரிலாகும். எனினும் 1944ல் நியமனம் செய்யப்பட்ட சோல்பரி ஆணைக்குழுவின் சிபார்சுகளின்படி, ஐவர் ஜென்னிங்சினால் தயார் செய்யப்பட்ட "சோல்பரி அரசியலமைப்பு" யுத்தத்தின் பின்னைய காலப்பகுதியில் ஏகாதிபதிய சார்பு ஆட்சியின் திட்டம் எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதைக் கணக்கில் கொண்டு தயாரிக்கப்பட்டதாகும்.

சிங்கள முதலாளிகள் ஏகாதிபத்தியவாதிகளுடன் சேர்ந்து சகல சலுகைகளையும் தமது மடியில் போட்டுக் கட்டிக்கொள்ள முயற்சி செய்தாலும் -அத்தருணத்தில் ஒரு தொகை இனவாத சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு இருந்ததால்- உறிஞ்சப்பட்டிருந்த தோட்டத் தொழிலாளர்களதும் ஏனைய சிங்கள-தமிழ் தொழிலாளர் வர்க்கத்தினதும் ஐக்கியத்தின் அச்சுறுத்தலின் எதிரில், சிங்கள-தமிழ் மற்றும் இன, மத முதலாளித்துவ குழுக்களிடையே இடம்பெறும் குத்து வெட்டுக்களினால் தோன்றக் கூடிய அரசியல் ஆபத்துக்களை பிரித்தானிய ஆட்சியாளர்கள் புரிந்துகொண்டிருந்தனர். சோல்பரி அரசியலமைப்புக்கு சிறுபான்மையினரின் உரிமைகளைக் காக்கும் சில நிபந்தனைகள் சேர்க்கப்பட்டன. இதற்குக் காரணம் நளின் டி சில்வா, குணதாச அமரசேகர போன்ற இனவாத முதலாளித்துவ பரிந்துரையாளர்கள் கூறுவது போல், சிறுபான்மை மக்கள் குழுக்கள் சம்பந்தமாக பிரித்தானியர்களிடையே தலை தூக்கிய அனுதாபம் அல்ல. ஒரு ஆளும் வர்க்கம் என்ற முறையில், தாம் பெற்றிருந்த அனுபவத்தின் அடிப்படையில் அன்றைய முதலாளித்துவ ஆட்சிக்கு இருந்து வந்த அச்சுறுத்தல்களை புரிந்து கொண்டதே அதற்கு காரணமாகும். அந்த நிலைமைகளுக்கு அவசியமான முறையில் பொதுமக்களைக் குழப்பியடிக்கவும் ஒடுக்குமுறைக்கு முதலாளித்துவ பகுதியினரைப் பிளவுபடுத்தவும் (இந்தியாவில் போன்று) மறுபுறத்தில் ஏகாதிபத்திய அவசியங்களுக்காக இனத்துவ முதலாளித்துவ பகுதியினரை திரட்டி, தொழிலாளர்- ஒடுக்கப்படும் மக்களின் அச்சுறுத்தலை நசுக்கிவிடும் அளவுக்கு ஒரு ஆளும் வட்டத்தை பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள் நியமித்திருந்தனர்.

1947ல் இருந்து தொழிற்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தின் 29வது சரத்தின்படி, பாராளுமன்றத்தில் நிறைவேற்றக்கூடிய சட்டங்களுக்கு ஒரு சில வரையறைகள் விதிக்கப்பட்டிருந்தன.

(அ) எந்த ஒரு மதப் பிரிவினரதும் சமய செயற்பாட்டை தடை செய்தல் அல்லது கட்டுப்படுத்தல்.

(ஆ) ஏதாவதொரு மக்கள் குழுவையோ அல்லது மதப் பிரிவையோ சேர்ந்த தனிநபர்களை, வேறு பொது மக்கள் குழுவையோ அல்லது மதங்களையோ சேர்ந்தவர்கள் கீழ்ப்படுத்தும் தடைகளுக்கு அல்லது வரையறைகளுக்கு கீழ்ப்படுத்தல்.

(இ) எந்த ஒரு மக்கட் குழுவையோ அல்லது மதத்தினையோ சேர்ந்த தனியாட்களுக்கு வேறு மக்கட் குழுக்களையோ அல்லது மதங்களையோ சேர்ந்த தனியாட்களுக்கு வழங்கியிராத சலுகைகளை அல்லது நன்மைகளை வழங்குதல்.

(ஈ) எந்த ஒரு மத அமைப்பினதும் அமைப்பு விதிகளை அந்த அமைப்பின் நிர்வாக அதிகாரிகளின் அங்கீகாரம் இல்லாமல் மாற்றுதல்.

இவற்றை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்களால் செய்ய முடியாமல் இருந்தது. அத்தகைய சட்டங்கள் நிறைவேற்றப்படுமானால் அவை அரசியலமைப்புக்கு அமைய செல்லுபடியற்றதாகும்.

அனைத்து அரசியலமைப்புச் சட்டங்களும் அந்தந்த காலப்பகுதியில் நிலவிய வர்க்க சமபல நிலையின் வெளிப்பாடாகும். அவ்வாறே அந்த சமபல நிலையைத் தமக்குச் சார்பான விதத்தில் திருப்பிக் கொள்ளும் ஆளும் வர்க்கத்தின் முயற்சியின் ஒரு பெறுபேறுமாகும்.

தமிழ் மற்றும் சிறுபான்மைக் குழுக்களின் முதலாளித்துவப் பகுதியினருடன் சேர்ந்துகொள்ளாமல் இலங்கையில் ஏகாதிபத்தியச் சார்பு முதலாளித்துவ ஆட்சியை நடத்திச் செல்ல வாய்ப்புக் கிடையாது என சிங்கள முதலாளி வர்க்கப் பகுதியினருக்கு எச்சரிக்கை செய்தவர்களும் அவர்களுக்கு அதைப் புரிய வைத்தவர்களும் பிரித்தானியர்களே. ஆளும் வர்க்கத்தின் நோக்கில் அதன் சரியான தன்மை, அந்த ஆண்டின் சோல்பரி அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கும் மற்றும் அது 1947ல் அமுலுக்கு இடப்பட்டதற்கும் இடையே கழிந்து சென்ற இரண்டு ஆண்டுகளுள் அது நிரூபிக்கப்பட்டது.

சிங்கள தமிழ் முதலாளித்துவக் கூட்டு

1945ல் ஆரம்பமாகி 1947 பொது வேலை நிறுத்தம் மூலம் உச்சக் கட்டத்தை அடைந்த ஒரு தொகை தொழிலாளர் போராட்டங்கள் இந்த இரண்டு வருட காலத்தினுள் வெடித்தன. லங்கா சமசமாஜக் கட்சியும் போல்ஷவிக் லெனினிஸ்ட் கட்சியும் (நான்காம் அகிலத்தின் பகுதி) சட்ட விரோத நிலைமையில் இருந்து விடுபட்டு மீண்டும் வெளிப்படையாகச் செயற்படத் தொடங்கியதோடு ஸ்டாலினிஸ்டுகளின் ஏகாதிபத்தியச் சார்பு கருங்காலி இயக்கத்துக்கு எதிராகத் தொழிலாளர்களை அணிதிரட்டிக்கொள்ள முடிந்தமை அந்தப் போரட்டங்களின் பின்னால் இருந்து வந்த முக்கிய அரசியல் காரணியினாலே ஆகும். நடேசையரின் தலைமையிலான இலங்கை இந்திய காங்கிரஸின் மூலம் தோட்டத் தொழிலாளர்களை அணிதிரட்ட நடாத்திய ஒரு தொகை போராட்டம் இதனுடன் இணைந்து கொண்டது. இந்தப் புரட்சிகர தொழிலாளர் போராட்டங்களை இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கும் இலக்குடனேயே சிங்கள-தமிழ் முதலாளிகளின் கூட்டு நிர்மாணிக்கப்பட்டது. 1947 பொது வேலை நிறுத்தத்தில் கொலன்னாவையில் இருந்து புறப்பட்ட தொழிலாளர் ஊர்வலத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, அரசாங்க லிகிதர் சேவை சங்கத்தின் (GCSU) கந்தசாமியை கொலை செய்ததன் மூலம் இந்தப் பிற்போக்கு கூட்டின் மக்கள் விரோத காட்டுமிராண்டி இலக்கு இரத்தத்தினால் பொறிக்கப்பட்டது.

பாகுபாடுகளுக்கு இடம் வைக்காமல் பல்வேறு மக்கள் குழுக்களுக்கு இடையேயும் சமத்துவத்தை ஸ்தாபிதம் செய்யும் நோக்குடன் சோல்பரி அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்ட 29வது சரத்து, மக்களை ஏமாற்றி முதலாளித்துவ பிரிவினரிடையே ஒரு கூட்டுக்கு வழிவகுப்பதாக விளங்கியது என்பது இன்னொரு விதத்தில் நிரூபிக்கப்பட்டது. அது இந்திய பிறப்புரிமை கொண்ட தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமையை ஒழித்துக் கட்டும் சட்டம் 1949ல் சமர்ப்பிக்கப்பட்டதன் மூலம் நிரூபிக்கப்பட்டது.

1949 ஆகஸ்ட்டில் சமர்ப்பிக்கப்பட்ட இந்திய பாகிஸ்தானிய குடியுரிமை மசோதா, இலங்கையில் வசித்த ஒரு மக்கள் பிரிவினருக்கு எதிராகத் திட்டவட்டமான பாகுபாடு காட்டுவதாகவும் அவர்களின் உரிமைகளை பிடுங்கிக் கொள்வதாகவும் விளங்கியது. அது அரசியலமைப்புச் சட்டத்தின் 29வது சரத்தினால் தவிர்க்கப்படவில்லை. அது மட்டுமன்றி, அந்த காட்டுமிராண்டி மசோதாவுக்கு ஆதரவாக ஜி.ஜி. பொன்னம்பலத்தின் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ஆதரவை யூ.என்.பி. வெற்றிகொள்ளவும் முடிந்தது. இந்த மசோதா அரசியலமைப்புக்கு முரணானது, சட்டவிரோதமானது எனக் காட்டி சிங்கள-தமிழ் தொழிலாளர் வர்க்கத்தையும் ஒடுக்கப்படும் மக்களையும் அதற்கு எதிராக அணிதிரட்டப் போராடியது போல்ஷிவிக்-லெனினிஸ்ட் சமசமாஜக் கட்சியும் லங்கா சமசமாஜக் கட்சியுமே ஆகும்.

1950ல் ஒன்றிணைந்து கொண்ட இந்த இரண்டு சமசமாஜக் கட்சிகளதும் தலைவர்கள், 1972 பிற்போக்கு குடியரசு அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம், சோல்பரி அரசியலமைப்பின் 29வது சரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த பாதுகாப்புகளில் இருந்தும் சிறுபான்மைக் குழுக்களை தள்ளி வைக்க பங்களிப்பு செய்தனர். சோல்பரி அரசியலமைப்பின் 29வது அரசியலமைப்பு இருந்து வந்த நிலைமையிலும் குடியுரிமை மசோதா, சிங்களத்தை மட்டும் அரச மொழியாக்கும் சட்டம் போன்ற தமிழ் பேசும் மக்களுக்கு பாகுபாடு காட்டும் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது உண்மையே. எனினும் குறைந்தபட்சம் அந்த சரத்தின் பாதுகாப்பினை உத்தரவாதம் செய்ய இந்நாட்டின் தொழிலாளர் வர்க்க அரசியல் இயக்கமொன்று போராடிக்கொண்டுள்ளதையிட்டு தமிழ் மக்களுக்கு இருந்து வந்த நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் 1972ல் சமசமாஜ துரோகத்தின் மூலம் சிதறடிக்கப்பட்டது.

சோல்பரி அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் நிறைவேற்றப்பட்ட தமிழ் மக்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுகின்றதும் அவர்களின் ஜனநாயக உரிமைகளை பிடுங்கிக்கொள்கின்றதுமான சகல சட்டங்களும் 1972 அரசியலமைப்புச் சட்டத்தினுள் உறிஞ்சிக்கொள்ளப்பட்டது மட்டுமன்றி, பெளத்த மதம் அரச மதமாக பிரகடனம் செய்யப்பட்டதன் மூலம், அவை இன்னொரு அடி முன்னெடுக்கவும் பட்டன. 1972 அரசியலமைப்புச் சட்டத்தின் இரண்டாவது சரத்து, "இலங்கை மக்கள் குடியரசு பெளத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கும் அதே சமயம் அதன் பிரகாரம் பெளத்த மதத்தினைப் பாதுகாப்பதும் வளர்ப்பதும் அரசின் பொறுப்பாகும்" என்றது.

பெளத்த மதத்தை கோலோச்ச செய்யும் இந்த நடவடிக்கையானது முக்கியமாக அன்று பெரும்பான்மையாக இந்து சமயத்தினை பின்பற்றும் தமிழ் மக்களுக்கு எதிராகவே முன்னெடுக்கப்பட்டது என்பதை ஆளும் வர்க்கம் அங்கீரித்து ஒப்புக்கொண்டது.

இதனை இரண்டு விடயங்கள் சுட்டிக்காட்டின: 1. கத்தோலிக்க, கிறிஸ்தவ மத ஸ்தாபனங்களின் அங்கீகாரம் அதற்குக் கிடைத்தமை. 2. யூ.என்.பி. சிறப்பாக அந்த சரத்துக்கு ஆதரவு வழங்கியமை.

தமிழ் முதலாளித்துவக் கட்சிகளின் பிரதிபலிப்புகள் மூலமும் இந்த அங்கீகாரம் வெளியாகிற்று. 1972 அரசியலமைப்புச் சட்டதுக்கு எதிராக தமிழரசுக் கட்சி, தமிழ் காங்கிரஸ் மற்றும் தோட்டத் தொழிலாளர்களிடையே பரவி இருந்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் ஒன்றிணைந்தன. இவை ஒன்றிணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியை அமைத்தன. தமிழ் மக்களிடையே பலவீனம் கண்டுவரும தமது அரசியல் ஆளுமையை கட்டியெழுப்பும் பொருட்டு 1972 அரசியலமைப்பினால் தொடுக்கப்பட்ட தமிழ் மக்கள் விரோத தாக்குதலை பயன்படுத்திக் கொள்ள கூட்டாக தமிழ் முதலாளித்துவக் கட்சிகள் அங்ஙனம் முடிவு செய்தன.

சிங்கள-தமிழ் மக்கள் குழுக்களுக்கு இடையே மோதுதலை புதிய மட்டத்துக்கு உயர்த்தும் நோக்கத்துடன் 1972 அரசியலமைப்புச் சட்டம் வரையப்பட்டது எனவும், அது தமிழர் விரோத இனவாத யுத்தத்துக்கான அடிக்கல் நாட்டலாக விளங்கியது எனவும் நாம் வலியுறுத்தக் காரணம், அது முன்னொரு போதும் இல்லாத விதத்தில் இனவாத துருவப்படுத்தலுக்கு வழிவகுத்ததேயாகும்.

சிங்கள-தமிழ் தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்கள் சம உரிமைகளை அனுபவிக்க வேண்டும் என்ற அடிப்படையில் அவர்களை ஐக்கியப்படுத்துவதற்காக முன்னர் போராடிய சமசமாஜக் கட்சி, 1964 முதலாளித்துவ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டரசாங்கங்கத்தினுள் நுழைந்துகொண்டு இழைத்த மாபெரும் காட்டிக் கொடுப்பின் நடைமுறைப் பெறுபேறாகவே இது இடம்பெற்றது. இது துருவப்படுத்தப்பட்ட இரண்டு இனக் குழுக்களுக்கிடையே யுத்த மோதுதல் அரசியலை நிகழ்ச்சி நிரலில் புகுத்தியது.

1972 ஸ்ரீலங்கா-சமசமாஜ-கம்யூனிஸ்ட் அரசியலமைப்பு, அக்கட்டத்தில் குமுறிக் கொண்டிருந்த தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களின் போராட்டங்களின் பேரிலான பிற்போக்கு முதலாளித்துவ பிரதிபலிப்பாக விளங்கியது.

மக்கள் போராட்டம்

1970 மே பொதுத் தேர்தலில் ஒரு தொகை மோசடி வாக்குறுதிகள் மூலம் பொது மக்களை ஏமாற்றி, பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைப் பலத்துடன் ஆட்சிக்கு வந்த ஐக்கிய முன்னணி அரசாங்கம் ஒரு சில மாதங்கள் கழிவதற்கும் முன்னரே தொழிலாளர்களதும் ஒடுக்கப்படும் மக்களதும் வெறுப்புக்கும் ஆத்திரத்துக்கும் இலக்காகியது. ஐக்கிய முன்னணியின் வாக்குறுதிகளால் உற்சாகமடைந்து அது ஆட்சிபீடம் ஏறத் தொழிற்பட்ட மக்கட் பகுதியினர், அரசாங்கம் அமைக்கப்பட்டது தான் தாமதம் தத்தமது கோரிக்கைகளின் அடிப்படையில் போராட்டங்களில் இறங்கினர். சமசமாஜ-கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்களுக்குள் அணிதிரண்டு போய் இருந்த தொழிலாளர்கள் ஓரளவிற்கு சகிப்புடன் நடந்து கொண்ட போதிலும், வீடுகளை இழந்த ஏழை மக்கட் பகுதியினர் தனிப்பட்ட முதலாளிகளதும் அரசாங்கத்தினதும் காணிகளைக் கூட்டாகக் கைப்பற்றிக் கொண்டு பகிர்ந்து கொள்ளும் இயக்கத்தை நாடு பூராவும் பல்வேறு பிராந்தியங்களிலும் ஆரம்பித்தனர். அரச பலத்தை கட்டவிழ்த்து விடுவதன் மூலம் இந்த ஏழை மக்களைக் கலைத்து தனிப்பட்ட முதலாளித்துவக் காணிச் சொந்தக் காரர்களின் உரிமைகளை பாதுகாக்க ஸ்ரீலங்கா-சமசமாஜ-கம்யூனிஸ்ட் கூட்டரசாங்கம் ஒரு கணமும் தாமதம் காட்டவில்லை.

சமசமாஜ-கம்யூனிஸ்ட் தலைவர்கள் தொழிலாளர் வர்க்க அமைப்புக்களையும் தொழிற்சங்கங்களையும் முதலாளித்துவ கூட்டரசாங்க அரசியலுக்குள் கால் கட்டுப் போட்டுவிட்டிருந்த ஒரு சமயத்தில், சகிக்க முடியாத வாழ்க்கைச் சுமைகளால் நலிந்து போய்வந்த ஏழை மக்கள், தொழிலாளர் வர்க்கத்தின் சுயாதீன வேலைத் திட்டத்தினைக் கொண்ட ஒரு தலைமை இல்லாமல் செய்யப்பட்டதன் தீய விளைவாக தமது போராட்டங்களில் இருந்து பின்வாங்கச் செய்யப்பட்டனர். ஒடுக்கப்பட்ட ஏழை மக்கள் தமது அடிப்படை உரிமைகளை முதலாளித்துவ சொத்து அமைப்புக்கும் அரசுக்கும் எதிராக உறுதியாக போராடக் கூடியதும் போராடுகின்றதுமான தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் தலைமையின் கீழேயே வெற்றி கொள்ள முடியும் என்ற மறக்க முடியாத விஞ்ஞானபூர்வமான மார்க்சிய உண்மை மீண்டும் ஒரு தடவை ஊர்ஜிதமாகியது.

எனினும் ஜே.வி.பி. இந்த உண்மைக்கு மாறாக, தமது குட்டி முதலாளித்துவ இயக்கத்தை ஏழை மக்களதும் இளைஞர்களதும் விடுதலையாளனாகப் பிரகடனம் செய்து கொண்டு செயற்பட்டது. 1970ல் பிற்போக்கு ஐக்கிய முன்னணி அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொணர்வதற்கு செயற்பட்டதன் விளைவாக, ஏழை மக்கள் மற்றும் இளைஞர்களிடையே தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டிருந்த ஜே.வி.பி., அரசாங்கத்துக்கு எதிராக பொறுமையிழந்து வந்த ஒடுக்கப்படும் மக்களுக்கிடையே சந்தர்ப்பவாத ரீதியில் தமது அடிப்படையை ஏற்படுத்திக் கொள்ள முயன்றது. அங்கு அது சமசமாஜ-கம்யூனிஸ்ட் அரசியல் கட்சிகளின் துரோகத்தினை முழு தொழிலாளர் வர்க்கத்தினதும் இலாயக்கற்ற தன்மையாகக் காட்டியும், அசிங்கமான சிங்கள பெளத்த சிந்தனா முறையைக் கொண்ட குப்பை கூழங்களை தவிர்க்க முடியாத விதத்தில் பயன்படுத்தியும் ஏழை மக்களையும் இளைஞர்களில் ஒரு பகுதியினரையும் தமது குட்டி முதலாளித்துவ இயக்கத்தினுள் ஈர்த்துக்கொள்வதில் வெற்றி கண்டது.

முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் யூ.என்.பி., ஐக்கிய முன்னணி என்ற இரு சாராரும் ஜே.வி.பி. யின் சர்ந்தர்ப்பவாதத்தைப் பற்றியும் குட்டி முதலாளித்துவ அரசியல் வங்குரோத்தையிட்டும் விழிப்பாக இருந்து வந்தன. ஆதலால், அந்த இரு சாராரும் ஜே.வி.பி.யை தம்பக்கம் ஈர்த்துக்கொள்ள உள்ள வாய்ப்பையும் அவ்வாறு முடியாதவிடத்து, ஜே.வி.பி. யின் அரசியல் மலட்டுத்தனத்தை பயன்படுத்தி அதனை இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கவும் கணக்கிட்டுக் கொண்டு செயற்பட்டனர். அந்தக் கணிப்பின்படியே ஐக்கிய முன்னணி அரசாங்கம் 1971 ஏப்பிரல் வரை ஜே.வி.பி. சுதந்திரமாக தமது அரசியல் பிரச்சாரங்கள் மூலம் அரசாங்கத்தை சவால் செய்ய இடமளித்து பார்த்திருந்ததே தவிர, பாதுகாப்புத் துறையினர் வழங்கிய அறிக்கைகளைக் கணக்கில் எடுக்காமல் விட்டதனால் அல்ல. இந்த விடயத்தையிட்டு நாம் கவனம் செலுத்துவது முதலாளித்துவ ஆளும் வர்க்கத்துக்கும் அதன் ஐக்கிய முன்னணி அரசாங்கத்துக்கும் மார்க்சிசத்தை நனவான முறையில் காட்டிக்கொடுத்த கட்சிகளின் திட்டவட்டமான ஆதரவு கிடைத்து வந்தது என்பதை கணக்கில் கொண்டேயாகும். அதைப் பற்றி இன்று போலவே அன்றும் நனவற்ற முறையிலும் குருடாகவும் இருந்தது அரசியல் ரீதியில் வங்குரோத்தான ஜே.வி.பி. யேயாகும்.

1971 ஏப்பிரலில் ஜே.வி.பி. நடாத்திய கிளர்ச்சி, ஐக்கிய முன்னணியும் யூ.என்.பி. யும் கூட்டாக கட்டவிழ்த்துவிட்ட அரச ஒடுக்குமுறையின் மூலம் இரத்த வெள்ளத்தில் நசுக்கப்பட்ட போதிலும் ஏழை மக்களுக்கிடையே ஐக்கிய முன்னணியின் ஆதரவு அடியோடு முழுமனே சிதறுண்டு போய் இருந்தது என்ற யதார்த்தத்தையிட்டு அரசாங்கம் கண்களை மூடிக்கொள்ள விரும்பவில்லை. இதுவரை காலமும் குட்டி முதலாளித்துவ மத்தியதர வர்க்க பகுதியினரை அடிப்படையாகக் கொண்டு ஏகாதிபத்தியச் சார்பு முதலாளித்துவ ஆட்சியைக் காக்க மேற்கொண்ட தமது மூலோபாய வேலைத் திட்டங்களை மீளச் சீர்செய்து கொள்ளும் பிரச்சினையை ஆளும் வர்க்கம் ஒதுக்கித் தள்ளிவிடவில்லை.

இரண்டு முக்கிய காரணிகள்

இச்சமயத்தில் தலைநீட்டிய இரு வேறு முக்கிய காரணிகள் முதலாளித்துவ ஆட்சியில் மூலோபாய மாற்றத்தினை வேண்டி நின்றன:

1. 1971 ஆகஸ்ட்டில் தங்கத்துக்கும் அமெரிக்க டாலருக்கும் இடையே இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் நிலைநாட்டப்பட்ட பெறுமதி உறவுகள் தகர்ந்தமை. பிரெட்டன்வூட்ஸ் உடன்படிக்கையின்படி 1 அவுன்ஸ் தங்கம் 35 டாலர்களுக்கு சமம் எனவும், அந்த நிலையான பெறுமதி அமைப்பின்படி ஏனைய நாடுகளின் நாணயங்களின் பெறுமதியை தீர்மானம் செய்யவும் இருந்து வந்த உடன்பாடு, அமெரிக்க ஜனாதிபதி றிச்சர்ட் நிக்சனால் ஒருதலைப்பட்சமான முறையில் உடைத்தெறியப்பட்டது. இது உலகம் பூராவும் பணவீக்கம் அலை அலையாக பெருக்கெடுக்க காரணமாகியது. சிறப்பாக எண்ணெய் உற்பத்தி நாடுகள் தமக்குக் கிடைக்கும் டொலர்களின் பெறுமதி குறைந்து போவதை ஈடு செய்யும் பொருட்டு எண்ணெய் விலையை அதிகரித்தன. இதனால் சகல பொருட்களதும் விலைகளும் அத்தோடு எண்ணெய்யை அடிப்படையாகக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் உரம், விவசாய இரசாயனப் பொருட்களின் விலைகளும் வேகமாக அதிகரித்தன. இதன் விளைவாக கிராமப்புற ஏழை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த உதவி மானியங்களைத் தொடர்ந்தும் வழங்குவது ஐக்கிய முன்னணி அரசாங்கத்துக்கு ஒரு பெரும் பிரச்சினையாகியது.

2. இந்தப் பணவீக்க சூழ்நிலையில் இதுவரை காலமும் மெளனமாக இருந்துவந்த மற்றும் ஜே.வி.பி.யினால் தள்ளி வைக்கப்பட்டு இருந்ததுமான தொழிலாளர் வர்க்கம் தமது வேலை நிறுத்தப் போராட்டங்களின் மூலம் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களில் இறங்கியமை, 1973-75 காலப்பகுதியில் பிரித்தானியாவிலும் ஸ்பெயினிலும் போர்த்துக்கல்லிலும் அவ்வாறே ஐரோப்பா பூராவும் பரந்து வந்ததும், இந்தியாவினுள் இந்திராகாந்தி அரசாங்கத்துக்கு எதிராக பரந்து வந்ததுமான ஒரு தொகை புரட்சிகர தொழிலாளர் போராட்டங்களின் முன்னோடியாக, 1971ன் கடைப்பகுதியில் இலங்கைத் தொழிலாளர்கள் போராட்டங்களை ஆரம்பித்தனர். இலங்கை வங்கி ஊழியர்கள் போராட்டம் அதில் முக்கிய இடத்தைப் பிடித்துக் கொண்டது.

வங்கி ஊழியர்கள் தமது போராட்டத்துக்கான தயாரிப்பு நடவடிக்கையாக 1971 டிசம்பர் 13ம் திகதி நடைபெற்ற மாநாட்டில் தமது தொழிற்சங்கத் தலைமையில் இருந்து சமசமாஜவாதிகளை வெளியேற்றினர். அதைத் தொடர்ந்து நியமனம் செய்யப்பட்ட தலைமை ஒரு மத்தியவாத தலைமையாக இருந்த போதிலும் சமசமாஜக் கட்சியை பாவித்து தொழிலாளர் வர்க்கத்துக்கு கால்கட்டு போடும் ஆளும் வர்க்க உபாயம் சிதறுண்டு போகும் என்பதற்கு அது நல்லதொரு சாட்சியாக விளங்கியது. புதிய தலைமையின் கீழ் 1972 மார்ச்சில் வெடித்த வங்கி ஊழியர் வேலை நிறுத்தம், தீவெங்கிலும் கைத்தொழில், வர்த்தக நடவடிக்கைகளை ஸ்தம்பிக்கச் செய்தது. தொழிலாளர் வர்க்கத்தினுள் தலைநீட்டி இருந்த இந்த எச்சரிக்கை, ஏழைகளின் போராட்டத்தைக் காட்டிலும் முதலாளித்துவ ஆட்சிக்கு ஆபத்தானதாக விளங்கியது.

ஐக்கிய முன்னணி அரசாங்கம் 1972 மேயில் குடியரசு அரசியலமைப்புச் சட்டத்தை நிறைவேற்றியது இந்த அரசியல் பின்னணியிலேயே ஆகும்.

துரோகத் தலைவர்களைக் கொண்டு தொழிலாளர் வர்க்கத்தை நெறிப்படுத்திக்கொள்ள முடியாதெனில், உதவி மானியங்களை வழங்கி, கிராமப்புற ஏழைகளுக்கும் இளைஞர்களுக்கும் கால் கட்டுப் போட இருந்து வந்த வாய்ப்புக்கள் அடைப்பட்டுப் போனால் முதலாளித்துவ ஆட்சியை காக்க இப்போது செய்ய வேண்டியது என்ன? ஆளும் வர்க்கத்தின் ஐக்கிய முன்னணி அரசாங்கத்தினதும் எதிரில் தோன்றிய தீர்க்கமான பிரச்சினை இதுவேயாகும்.

1972 அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் சிங்கள-தமிழ் மக்களை ஆளுக்காள் மோதவைக்கும் உடன்பிறப்பைக் கொல்லும் யுத்தத் திட்டங்களுக்குள் அடைத்துப் போடுவது ஆளும் வர்க்கத்தின் புதிய மூலோபாயமாகியது. முதலாளி வர்க்கத்துக்கு அவசியமாக இருந்த இனவாதத்துக்கு தோள் கொடுத்து, ஜே.வி.பி. யினால் கிளறிவிடப்பட்ட தொழிலாளர் விரோத அவ்வாறே சிங்கள-பெளத்த பேரினவாத அட்டூழியங்களில் இருந்தும் தொழிலாளர் ஒடுக்கப்படும் மக்களை அனைத்துலகவாதத்தின் கீழ், முதலாளித்துவ ஆட்சிக்கு எதிராக அணிதிரட்டப் போராடிய புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் அமைக்கப்பட்டு இன்னமும் நான்கு ஆண்டுகள் கடந்து விடாத நிலையில், ஜே.வி.பி. யை இழுத்து, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கி வைத்திருப்பதன் இலாபத்தை முதலாளி வர்க்கம் பற்றிக் கொண்டது.

1947ல் இருந்து நடைமுறைக்கு வந்த சோல்பரி அரசியலமைப்புச் சட்டம், யுத்தத்துக்கு பின்னைய முதலாளித்துவ ஆட்சியின் சார்புரீதியான உறுதிப்பாட்டை இலக்காகக் கொண்டு முன்வைக்கப்பட்டிருக்குமாயின், 1972 அரசியலமைப்புச் சட்டம் ஏகாதிபத்திய உலக அமைப்பின் வெடிப்பின் புதிய சுற்றின் தொடக்கத்துடன் எழுந்த வர்க்கப் போராட்டங்களை இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கும் காட்டுமிராண்டி எதிர்பார்ப்புக்களுடன் தயார் செய்யப்பட்டதாகும். இனவாதத்தைத் தூண்டுவதற்கு மேலாக முழு மக்களதும் சிவில் உரிமைகளை நசுக்கித் தள்ளப் பயன்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்ட அதிகாரங்களைச் சாதாரண சட்டங்களாக்கிக் கொண்டு, 1972 அரசியலமைப்புச் சட்டம் இந்தக் காட்டுமிராண்டி இலக்குகளை வெளிக்காட்டிக் கொண்டது.

சிங்கள, தமிழ் மக்களைப் பிளவுபடுத்தி உடன்பிறப்பைக் கொல்லும் யுத்தத்தினுள் அவர்களைத் தள்ளும் பொருட்டு 1972 அரசியலமைப்பை சட்டமாக்கிய ஸ்ரீலங்கா-சமசமாஜ-ஸ்டாலினிச முதலாளித்துவ கூட்டரசாங்கத்தின் பங்காளிகளே 1994ல் பொதூஜன முன்னணி அரசாங்கத்தின் கீழ் வரையப்பட்ட புதிய அரசியலமைப்பை மீண்டும் தோளில் சுமந்து கொண்டுள்ளனர். அதிகாரங்களைப் பரவலாக்கி, ஜனநாயகத்தை ஊர்ஜிதம் செய்யும் பொருட்டு ''அரசியல் தீர்வு'' என்ற பேரில் தூக்கிப்பிடிக்கப்படும் புதிய அரசியலமைப்பை சுற்றி பேராசையுடன் சகல குட்டி முதலாளித்துவ தீவிரவாதிகளும் பல்வேறு கருத்தரங்குகளிலும் கலந்துரையாடல்களிலும் சதிராடுகின்றார்கள். சஞ்சிகைகளுக்கும் பத்திரிகைகளுக்கும் ஆய்வுக்கட்டுரைகளைத் தீட்டுகின்றார்கள். இவை எல்லாம் பொதுஜன முன்னணி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக இனவாத யுத்தத்தினை உக்கிரமாக்கி உள்ள ஒரு நிலையிலேயே இடம்பெறுகின்றன. யுத்தத்தின் பேரால் பொதுமக்களின் ஜனநாயக உரிமைகள் அடக்கி ஒடுக்கப்பட்டுள்ளன. புதிய அரசியலமைப்பு எத்தகைய ஒடுக்குமுறை முதலாளித்துவ ஆட்சியை கொணரப்போகின்றது என்பதைப் புரிந்து கொள்ள இந்த அரசியலமைப்புச் சட்டம் தயார் செய்யப்படும் அரசியல் பின்னணியே போதுமானது.

இனவாத யுத்தத்துக்கு அடிப்படையான 1972 அரசியலமைப்புச் சட்டம் தயார் செய்யப்பட்ட காலப்பகுதி இதற்குப் பெரிதும் சமமானது.

இன்றைய ஜனாதிபதியின் தாயார் சிறிமாவோ பண்டாரநாயக்க, இன்று போல் அல்லாது அன்று பெரும் நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்ட பிரதமராக விளங்கினார்.1970 ஜூலை 19ம் திகதி அரசியலமைப்பு நிர்ணய சபை என்ற பேரில் நவரங்கஹலவில் (புதிய நாடக அரங்கு) கூடிய முதலாளித்துவ பாராளுமன்ற நடிகர் நடிகைகள் முன்னிலையில் பேசிய சிறிமாவோ பண்டாரநாயக்கவின் அறிக்கை, ஜனநாயகத்துக்கு இரு புறத்திலும் குழி தோண்டுவதாக விளங்கியது. அவர் கூறியதாவது:

''நான் அரசியலமைப்புச் சட்டத்தை முன்கூட்டியே எதிர்பார்த்துக் கொண்டிருக்கவில்லை. எமது புதிய அரசியலமைப்பு எமது தேசத்தின் ஒற்றையாட்சிப் பண்பை பலப்படுத்த உதவுவதாக இருக்க வேண்டும் என்பதை மட்டும் நான் கூறியாக வேண்டும். எம்மிடையே சிங்களம், தமிழ், முஸ்லீம், பறங்கியர் மற்றும் நானாவித இனக்குழுக்களும் பெளத்த, இந்து, கிறிஸ்தவ, இஸ்லாம் போன்ற பல மதக்குழுக்களும் இருந்த போதிலும் நாம் ஒரு தேசிய இனமாகச் செயற்பட வேண்டும்.''

நிலமானித்துவ பிரபு வம்சத்தைச் சேர்ந்த ஒரு அம்மணி, தமது பண்ணை அடிமையின் திருமண வைபவத்துக்கு சென்று சாய்மனைக் கதிரையில் நீட்டி நிமிர உட்கார்ந்து கொண்டு, தாமும் தமது அடிமைகளும் ஒரே குடும்பத்தின் பங்காளிகள் எனக் கூறினால் அதில் பொதிந்திருக்கும் வஞ்சனைக்கு மேலான எதுவும் இந்த அறிக்கையில் பொதிந்திருக்கவில்லை, என்பதை இந்த அரசியலமைப்பு நிர்ணய சபையின் நடவடிக்கைகள் நீண்ட காலம் செல்வதற்கு முன்னரே காட்டிக்கொண்டு விட்டது. ஏகாதிபத்தியச் சார்பு முதலாளித்துவ ஆட்சியின் தலைவியான சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ''ஜனநாயக மதிப்பு'', தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களின் அடிப்படையில் அல்லாது முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் அவசியங்களினால் வழிநடத்தப்படுவதே அதற்குக் காரணம்.

இன்றைய ''அரசியல் தீர்வை'' முன்வைக்கும் போது ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் கடந்தகால தீவிரவாத மிகைப்படுத்தல்களை தூக்கிப் பிடிப்பதன் மூலம் அவரது அரசியல் பின்னணி இருட்டடிப்புச் செய்யப்படுவதோடு, அவர் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் பற்றிய பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் அவசியத்தினால் பீடிக்கப்பட்டுள்ளதாகவும் காட்டப்பட்டு வருகின்றது. சில தமிழர்கள் சம்பந்தமாக கடந்த காலத்தில் அவர் கொண்டிருந்த தனிப்பட்ட விருப்பும் ஆதரவும் இதற்கு சாட்சியாகக் காட்டப்பட்டது. இந்தக் கதையளப்பில் ஈடுபட்டுள்ள மந்திரவாதிகள், முதலாளித்துவத்தின் நாற்றமெடுப்புச் சகாப்தத்தில் முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தினால் ஜனநாயக உரிமைகளைக் காக்க முடியாது என்ற பொது உண்மையை குழிதோண்டிப் புதைக்கின்றார்கள். ஜயவர்த்தனவின் தந்திரங்களில் அல்லது பிரேமதாசவின் களவுகள் அல்லது காடைத்தனங்களுக்கு கைநீட்டியவாறு அவர்களின் ஆட்சிக் காலங்களில் இடம்பெற்ற மக்கட் படுகொலைகள் மற்றும் இனவாத யுத்தம் உட்பட நாசகார நடவடிக்கைளை சிருஷ்டித்த நிஜ காரணிகளை அவர்களால் விளக்கிக் காட்ட முடியாது. அது மட்டுமன்றி, முதலாளித்துவ அரசியல்வாதிகளால் அன்று தொடக்கம் இன்று வரை ஏதேனும் ஒரு இடத்தில் வெளியிடப்பட்டுள்ள வாயளவிலான தீவிரவாத அறிக்கைகளைக் கொண்டும் அவர்களின் பணியை புரிந்து கொள்ள முடியாது. முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் பிற்போக்கு நடவடிக்கைகள் ஊற்றெடுப்பது, சமூக உற்பத்தி செயற்பாட்டினுள் அவர்கள் வகிக்கும் பிற்போக்கு நிலைப்பாடுகளில் இருந்தாகும். இனவேறுபாடுகள் தணிந்து போய் விடுவதில்லை. முதலாளி வர்க்க பகுதியினர் அவற்றை உலகம் பூராவும் உக்கிரம் அடைபவையாக மாற்றியுள்ளனர். இலாபப் பொதியை காத்துக் கொள்ள அவர்கள் எடுக்கும் கையாலாகாத்தனமான முயற்சியாக, அதற்குக் குறுக்கே நிற்கும் தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களை இரத்தத் தடாகத்தில் மூழ்கடித்து நாசமாக்கிவிட துடிப்பதே காரணமாகும்.

லங்கா சமசாமாஜ கட்சி தொழிலாளர் வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் வேலைத்திட்டத்தை அடிப்படையாக கொண்டிருக்கும் வரை, தமிழ் மக்கள் உட்பட்ட தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்கட் பகுதியினரின் ஜனநாயக உரிமைகளை காக்க வாயளவில் மட்டுமன்றி செயலளவிலும் போராடிய வரலாற்றை தனதாக்கிக் கொண்டிருந்தது. அத்தகைய ஒரு கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான கொல்வின் ஆர்.டி. சில்வா, உற்சாகத்துடன் சிங்கள-பெளத்த பேரினவாதமயமானதும் பொதுமக்கள் ஒடுக்குமுறையை இலக்காகக் கொண்டதுமான 1972 அரசியலமைப்புச் சட்டத்தின் வரைஞர் ஆகியதை அவரின் தனிப்பட்ட நெறிகேடாக மட்டும் விளக்க முடியுமா? இல்லை. அது தொழிலாளர் வர்க்கத்தின் சுயாதீன அரசியல் வேலைத்திட்டத்தினைக் கைவிட்டுவிட்டு சமசமாஜக் கட்சி தீர்க்கமான முறையில் முதலாளித்துவ முகாமுக்குள் மாறிக்கொண்ட கூட்டரசாங்க அரசியலின் ஒரு பெறுபேறாகும்.

முதலாளித்துவ சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவியான சிறிமாவோ பண்டாரநாயக்க, சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர் முதலான பிரிவினருக்கு ஒரு தேசிய இனமாக தொழிற்படுவதற்கு வழங்கிய மோசடி மிக்க வாக்குறுதியை வீசி எறிந்தார் எனினும், ஜனநாயக உரிமைகளை காக்கும் போராட்ட வரலாறு படைத்த சமசமாஜ கட்சித் தலைவர் வழங்கிய வாக்குறுதி சம்பந்தமாக பொதுமக்கள் எதிர்ப்புக்களைக் கொண்டிருந்தனர். 1970 கூட்டரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர், முதலாவது சிம்மாசன உரைக்கு நன்றி தெரிவிக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் பேசிய கொல்வின் ஆர்.டி. சில்வா, ''இலங்கையர்களை உண்மையில் சுதந்திர, சுயாதீனமான, இறைமை கொண்ட மக்களாக மாற்றும் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை வரைவதற்கு நாம் செயற்பட்டு வருகிறோம்'' என்றார். நாற்றம் எடுத்த முதலாளித்துவ அமைப்பின் பாதுகாப்புக்கு அர்ப்பணம் செய்துகொண்டுள்ள ஒரு முதலாளித்துவ ஆட்சியினால் இதை நிறைவேற்ற முடியுமா? என்ற பிரச்சனையை அணுகாத சகல தீவிரவாதிகளும், இன்று போல் அன்றும் அந்த வாக்குறுதிகளை தோள்களில் சுமந்துகொண்டு மக்களை குழப்புவதில் ஈடுபட்டனர்.

1972 ஜூலை மாதத்தில் "அரசியலமைப்புச் சபை" என்ற பெயரில் பாராளுமன்றம் புதிய நாடக அரங்கில் கூடிய போது, யூ.என்.பி. மட்டுமன்றி சகல தமிழ் முதலாளித்துவ கட்சிகளும் அதை அங்கீகரித்து அதில் பங்குகொண்டன. இன்று போலவே அன்றும் இந்த அங்கீகாரத்தின் மீது பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்த சகல கட்சிகளதும் பிரதிநிதிகளைக் கொண்ட புதிய அரசியலமைப்புத் தொடர்பான செயற்குழு, பணியை ஆரம்பித்தது.

அவசரகாலச் சட்ட ஆட்சி

முதலாளித்துவ பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் விழுந்தடித்துக்கொண்டு பொதுமக்களின் கள்ளக் கையொப்பங்களில் நிறைவேற்றிக்கொண்ட அரசியலமைப்பு நிர்ணயசபை, இன்று போல் அன்றும் அவசரகாலச் சட்டம் அமுலில் இருந்துவந்த நிலையிலேயே தனது பணியை முன்னெடுத்தது. 1971ல் இருந்து தொடர்ச்சியாக அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட்டது. வெளியீட்டுச் சுதந்திரத்தை மட்டுப்படுத்துவதற்காக லேக் ஹவுஸ் நிறுவனத்தை அரசமயமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதோடு சகல அச்சடிக்கப்பட்ட பிரசுரங்களும் உத்தரவு பெற்ற செய்தி அதிகாரிகளின் கீழ் கொணரப்பட்டது.

புதிதாக வரையப்பட்டுவந்த புதிய அரசியலமைப்புச் சட்டம் ஜனநாயகத்தை கட்டிக் காக்கும் இலட்சணம், தொழிலாளர் வர்க்கத்தின் சுயாதீன அரசியல் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் நின்று, கூட்டரசாங்கத்துக்கு எதிராக தமிழ்-சிங்கள தொழிலாளர் ஒடுக்கப்படும் மக்களை அணிதிரட்ட போராடிய புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் (சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடி) தொழிலாளர் செய்தி,கம்கரு புவத், இளைஞர் செய்தி ஆகிய பத்திரிகைகள் 1971ல் இருந்து ''சீல்'' வைக்கப்பட்டதன் மூலம் எல்லாவற்றுக்கும் மேலாக அம்பலமாகியது.

அன்று நவசமசமாஜக் கட்சியின் இன்றைய தலைமையானது சமசமாஜக் கட்சியினுள் பதுங்கிக் கொண்டு, 1971ல் ஆரம்பமான இளைஞர் படுகொலைகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் முழுமனதாக ஆதரவு வழங்கியதோடு, 1972 அரசியலமைப்புச் சட்ட நிறைவேற்றத்தின் பின்னணியில் இருந்துவந்த அவசரகாலச் சட்ட ஆட்சியின் பங்காளியாகவும் விளங்கியது. முதலாளித்துவ ஆளும் வர்க்கத்துக்கான தமது தொண்டர் சேவையை எதுவிதமான குறைச்சலும் இன்றி இட்டு நிரப்பும் பொருட்டு, ஏப்ரல் கிளர்ச்சியின் எதிரில் இடைஞ்சல்களுக்கு உள்ளான முதலாளித்துவ அரசின் ஆயுதப்படைகளுடன் கைகோர்த்துக்கொண்டு அலுகோசு வேலையில் இறங்கும் பொருட்டு, சமசமாஜக் கட்சித் தலைமையின் கீழ் அன்னம் படைப்பிரிவு (ஹங்ச றெஜிமேன்துவ) என்ற ஒன்றை அமைக்கவும் கூட கருணாரட்ன தலைமையிலான தற்போதைய நவசமசமாஜத் தலைவர்கள் நடவடிக்கை எடுத்தனர். தமிழர் எதிர்ப்பு இனவாத யுத்தம் உச்சக் கட்டத்தை அடைந்த நிலைமையில் தமிழ் ஆயுதக் குழுக்களின் தாக்குதல்களுக்கு உள்ளான முதலாளித்துவ அரச படைகளின் முதுகெலும்பை நிமிர்த்தும் பொருட்டு, ஒடுக்கப்படும் இளைஞர்களை ஈடுபடுத்தி சங்கிலிப்படைகள் அமைக்கும்படி யூ.என்.பி.அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கியதன் மூலம் நவசமசமாஜக் கட்சி பிற்காலத்தில் இந்த அலுகோசு வேலைத்திட்டத்தை மேலும் முன்னெடுத்தது.

சமசமாஜ-ஸ்டாலினிச தலைவர்கள் ''மக்களின் சுதந்திரம், சுயாதிபத்தியம், இறைமை''யை ஊர்ஜிதம் செய்ய வாக்குறுதி அளித்து, பொதுமக்களின் மீது திணித்த 1972 பிற்போக்கு அரசியலமைப்புச் சட்டத்துக்கு முன்னுரையாக மற்றுமோர் நச்சுத்தனமான மசோதா நிறைவேற்றப்பட்டது. அது1972 ஏப்ரல் மாதத்தில் அதாவது, புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படுவதற்கு இன்னமும் ஒன்றரை மாதங்கள் இருக்கையில் நிறைவேற்றப்பட்ட "குற்றவியல் ஆணைக்குழு மசோதாவாகும்". முதலாளித்துவ நிறைவேற்று அதிகாரத்தின் நச்சுத்தனமான தடியடிகளால் நசுங்கி வந்தவர்கள் முதலாளித்துவ நீதிமன்றத்தின் எதிரில் முறைப்பாடு செய்து, நிவாரணம் கேட்க இருந்து வந்த கந்தலான உரிமையும் இந்த மசோதாவின் மூலம் பறிக்கப்பட்டது. தமது அரசியல் எதிரிகளை சுதந்திரமாக இழுத்துச் செல்லவும், கைகால்களைக் கட்டிப்போட்டு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கவும் அரச படைகளுக்கும் அதிகாரிகளுக்கும் இதன்மூலம் எல்லையற்ற சுதந்திரம் வழங்கப்பட்டது.

ஸ்டாலினிசத்தின் தொழிற்பாடு

1965-70 யூ.என்.பி. ஆட்சிக்காலப் பகுதியில், பிரமாண்டமான வாழ்க்கைச் சுமைகளால் நசுங்குண்டு வந்த மக்களிடையே பதட்ட நிலை அதிகரித்து வருகையில், தொழிலாளர்களை வார்த்தையாலங்களின் மூலம் வெறியூட்டி, ஸ்தம்பிக்க வைக்கவும் இளைஞர்களுக்கு கயிறு கொடுத்து முதலாளித்துவ பொறியில் மாட்டிவைக்கவும் ''கிளருங்கள் கிளருங்கள் கிளர்ந்து எழுங்கள்! நாட்டின் சகல புறத்திலும் கிளர்ந்து எழுங்கள்!" என்ற மோசடி சுலோகங்களைக் கோசித்துவந்த ஸ்டாலினிஸ்டுக்கள், 1972 அளவில் கூட்டரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் புதிய இராகத்தை இசைக்கத் தொடங்கினர். அதாவது ''1970ல் மக்கள் வெற்றியை காப்பதற்கும் அதை முன்கொண்டு செல்வதற்கும் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் இயக்கத்தைக் கட்டியெழுப்பவேண்டும்'' என்ற திருப்பத்தைப் போடுவதாகும்.

ஸ்டாலினிஸ்டுக்கள் இந்த மோசடி வேசம் போடப் பொருத்தமான விதத்தில், குற்றவியல் ஆணைக்குழு மசோதாவினை, ''ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் முற்போக்கு வேலைக்கு இடையூறாக விளங்கும்" அரசாங்கத்தின் உள்ளேயான ஒரு சதிகாரர்களின் வேலையாக'' வருணித்தனர். அந்த சதி எனப்படுவதற்கு சிறிமாவோ பண்டாரநாயக்க தொடக்கம் என்.எம்.பெரேரா, கெனமன் வரையிலான தமது மீட்சிக்கான தலைவர்கள் சகலரும் சம்பந்தப்பட்டிருந்தனர் என்பதைக் குறிப்பிடாமல் இருப்பதில் கவனமாக இருந்து கொண்ட ஸ்டாலினிஸ்டுகள், 1972 ஏப்ரல் 10ம் திகதி ''அத்த'' பத்திரிகையில் தமது முக்கிய தொழிற்சங்கத் தலைவர் ஒருவரின் உரையின் அறிக்கையொன்றை குறிப்பிட்டு பின்வருமாறு எழுதியிருந்தனர்:

''பொதுமக்களையும் தொழிலாளர் வர்க்கத்தையும் அரசாங்கத்தில் இருந்து அந்நியப்படுத்துவதற்காக அரசாங்கத்தின் உள்ளேயும் வெளியேயும் இருந்து கொண்டுள்ள பிற்போக்காளர்கள் தமது இயக்கத்தை நடத்திக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜக் பெரெரா, சமிபத்தில் நிறைவேற்றப்பட்ட குற்றவியல் ஆணைக்குழு மசோதாவை அதற்கு ஒரு உதாரணமாகக் காட்டினார்.''

ராவய, யுக்திய, தியச, பிரவாத போன்ற சஞ்சிகைகள் மூலமும் ஜே.வீ.பி.யின் பல்வேறு வெளியீடுகள் ஊடாகவும் சந்திரிகா குமாரதுங்காவை சிம்மாசனம் ஏற்றுவதற்கு வியர்வை சிந்தி இன்று களைத்துப்போயுள்ள தீவிரவாத போர்வை போர்த்தியுள்ள முதலாளித்துவக் கைக்கூலிகளும் இப்போது முரண்பட்டுக்கொள்ளத் தொடங்கியுள்ளதைப் பேலவே, அந்தச் சகலரின் சார்பிலும் முன்கூட்டியே அன்று ஸ்டாலினிஸ்டுக்கள் குள்ளத்தனமான முறையில் கூச்சல் போடத் தொடங்கினார்கள். முதலாளித்துவ கூட்டரசாங்க அரசியலுக்கு எதிராகத் தொழிலாளர் வர்க்கம் சுயாதீனமான வழியில் இறங்கி, முதலாளித்துவ எதிர்ப்புக் கொள்கையின் அடிப்படையில் ஒடுக்கப்படும் மக்களையும் அணிதிரட்டுவதைத் தவிர்க்கும் கடைகெட்ட மோசடிக்கு குறைந்த எதுவும் இன்று போலவே அன்றும் அந்த முறைப்பாட்டுக்குள் உள்ளடங்கியது கிடையாது. உருவாகியுள்ள 'துரதிஷ்டவசமான நிலையை ஆழமாக ஆய்வு செய்யும் பொருட்டு', அரசாங்க கூட்டுத்தாபன ஊழியர்களின் சம்மேளனத்தை கூட்டிய ஸ்டாலினிஸ்டுக்கள், அன்று நிலவிய சூழ்நிலையை பற்றிய ஒரு சாராம்சத்தை, சம்மேளனம் நடைபெற்ற நாளான 1972 ஏப்ரல் 9ம் திகதி வெளியான அத்தபத்திரிகையில், 'பொது அரசியல் போராட்டத்தை தேர்ந்தெடுப்போம்' என்ற தலையங்கத்தின் கீழ் வெளியிட்டிருந்தனர்.

''ஐக்கிய முன்னணி பதாகையின் கீழ் உறுதியான போராட்டத்தில் ஈடுபட்ட பொது முற்போக்கு மக்களை போலவே, தொழிலாளர் வர்க்கத்தினது எதிர்ப்புக்கள் எதிர்பாராத விதத்தில் தகர்ந்து கொட்டி வருகின்றன... ஏகாதிபத்திய ஏழு கட்சிக் கூட்டை தோற்கடிக்க மனப்பூர்வமாக தொழிற்பட்ட மக்கள் பகுதியினர் இடையே விரக்தியும் வெறுப்பும் கொண்ட ஒரு தன்மை படிப்படியாக வளர்ச்சிகண்டு வருகிறது." (அத்த பத்திரிகை -1972 ஏப்ரல் 9) தொழிலாளர்-ஒடுக்கப்பட்ட மக்களை முதலாளித்துவ ஆட்சியுடன் கட்டிப்போடும் புதிய சூழ்ச்சிகளின் துணையை நாட ஸ்டாலினிஸ்டுக்கள் தள்ளப்பட்டனர். இதற்குக் காரணம் பொது மக்களிடையே வளர்ச்சி கண்ட இந்த விரக்தியேயாகும். இந்தச் சூழ்ச்சிகள் மூலம் சிருஸ்டிக்கப்பட்ட நச்சு வாயுக்களின் பின்னணியில் இனவாத யுத்த திட்டமான 1972 அரசியலமைப்பு நிர்ணயம் சகலரதும் ஒத்துழைப்புடன் முன்னோக்கிச் சென்றது.

இனவாத யுத்தத்தை உக்கிரமாக்கி பொதுஜன ஒடுக்குமுறையை தீவிரப்படுத்தும் அதேவேளை, ஒரு அரசியல் தீர்வு கண்கட்டி வித்தையை முன்வைத்து, அதன் பின்னணியில் மக்களை இடுப்புவரை ஆணி அறையும் இன்றைய வேலைத்திட்டம், 1972 அரசியலமைப்புச் சட்ட நிர்ணயத்துடனும் கைகோர்த்துக் கொண்டுள்ளது. மீண்டும் அத்த பத்திரிகையில் இருந்து மேற்கோள் காட்டுவதன் மூலம் ஸ்டாலினிஸ்டுக்கள் அன்று அந்த நிலைமையை குறிப்பிட்ட விதத்தினைக் காட்டுவது பொருத்தமானது:

''இன்று இந்நாட்டின் விலைவாசி வேகமாக உயர்ந்து வருவதோடு இதனால் அரச, கூட்டுத்தாபன துறை ஊழியர்களும் நாட்டின் பொது மக்களும் பெரும் கஷ்டங்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது. எனினும் அரச, கூட்டுத்தாபன ஊழியர்களின் சம்பளம் ஒரு சதத்தினாலும் அதிகரிக்கப்படவில்லை. ''(அத்த -1972 ஏப்ரல் 10)

இலவு காத்த கிளிகளைப் போல அன்று சமசமாஜ-ஸ்டாலினிச தலைவர்கள், முதலாளித்துவ கூட்டரசாங்கம் ஜனநாயகத்தை பகிர்ந்து தரும் என்ற நம்பிக்கையை கொண்டிருந்தனர். அதற்குள் தலைகீழாக விழுந்த தீவிரவாதிகள் இன்று போலவே அன்றும் பொதுமக்களை அரசியல் ரீதியில் நிராயுதபாணியாக்கி, முதலாளித்துவ தாக்குதல்களுக்கு பலிகடாக்களாக்க செயற்பட்டனர்.

இந்த அரசியல் மூலோபாயங்களின் படிப்பினையை இன்றைய தலைமுறையினருக்கு வழங்குவதற்கு இலாயக்கான அமைப்பாக சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே உள்ளது. அன்று சிறிலங்கா-சமசமாஜ-கம்யூனிஸ்ட் கூட்டரசாங்கத்தின் சகல மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கும் எதிராகப் போராடிய புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் அரசியல் கொள்கையின் வாரிசாக அது விளங்குவதே அதற்குக் காரணமாகும்.

தரப்படுத்தல்

இனவாத யுத்தத்தின் பேரழிவுகளை தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடும் பொருட்டு தொடுக்கப்பட்ட ஆத்திரமூட்டல்கள் நிறைந்த 1972 சிங்கள-பெளத்த அரசியலமைப்புக்கு முன்னோடியாக, தமிழ் குட்டி முதலாளித்துவ தட்டினரையும் இளைஞர்களையும் ஆயுதப் போராட்டப் பாதையில் தள்ளிவிடும் மற்றொரு மாற்றமும் கூட்டரசாங்கத்தினால் செய்யப்பட்டது. அது 1971 பல்கலைக்கழக புகுமுக தகுதி தொடர்பாக மாணவர்கள் மீது திணித்த தரப்படுத்தலாகும். தரப்படுத்தலின் கீழ் ஒரே வினாப் பத்திரத்துக்கு விடையிறுக்கும் மாணவர்கள் பல்கலைக் கழகம் நுழைவதற்கான வாய்ப்பு தமிழ்-சிங்கள தேசிய இனங்கள் இரண்டினையும் சேர்ந்தவர்களுக்கு இரண்டு விதத்தில் வழங்கப்பட்டது. உதாரணமாக மருத்துவக் கல்லூரிக்கு நுழைவதற்கு தமிழ் தேசிய இனத்தின் மாணவர் ஒருவர் 1971ல் 400மொத்தப் புள்ளிகளில் குறைந்த பட்சம் 250 புள்ளிகளைப் பெற்றிருக்க வேண்டி இருந்த அதே வேளை, தெற்கில் சில பகுதிகளில் சிங்கள மாணவர் 229 புள்ளிகளை பெற்று அதை அடைய முடிந்தது. சிங்கள, தமிழ் மாணவர்கள் ஒரே ஆங்கில மொழியில் பதிலிறுத்த போதிலும் கூட, தமிழ் மாணவர்கள் இந்த இனரீதியான பாகுபாடுகளுக்கு உள்ளானார்கள். கண்களில் எதிரில் பளிச்சிட்ட இத்தகைய பாகுபாடுகள் இடம்பெற்றிருந்த நிலையில் கூட இன்றுவரை நாளின் டி சில்வா, குணதாச அமரசேகர போன்ற முன்னணி இனவாத கழிசடைகள் தமிழ் மக்களுக்கு இடம்பெற்றுள்ள விசேட அநீதிகள் என்ன என வெட்கமற்ற முறையில் கேள்வி எழுப்புகின்றார்கள்.

படித்த இளைஞர்களின் உயர் கல்வி உரிமைக்குத் தொடுக்கப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு மெருகூட்டும் பொருட்டு, தமிழ் விடைத்தாள் திருத்துபவர்கள் தமிழ் மாணவர்களுக்கு விசேட சலுகைகள் காட்டி அதிக புள்ளிகள் வழங்கினர் எனக் கூச்சலிடப்பட்டது. பல்கலைக்கழக தமிழ் விரிவுரையாளர்கள் இந்தக் கரிபூசல்களுக்கு ஒரே குரலில் எதிர்பைத் தெரிவித்ததோடு விசாரணையை ஒன்றையும் நடத்தும்படியும் கோரினர். அதைத் தொடர்ந்து நியமிக்கப்பட்ட தமிழ், சிங்கள பல்கலைக்கழக தமிழ் விரிவுரையாளர்கள் கொண்ட கமிட்டி, அத்தகைய மேலதிக புள்ளிகளை வழங்குவதற்கான வாய்ப்புக்கள் புள்ளி வழங்கும் திட்டத்தின் கீழ் கிடையாது எனவும் ஆதலால், குற்றச்சாட்டு பொய்யானது எனவும் குறிப்பிட்டது. எனினும் இனவாதப் பாகுபாடுகள் காட்டும் தரப்படுத்தல் நின்று விடவில்லை.

1971க்குப் பின்னர், சிறப்பாக விஞ்ஞான பாடங்கள் தொடர்பாக பல்கலைக்கழக கல்வித் துறைகளில் தமிழ் மாணவர் எண்ணிக்கையை சிங்கள மாணவர்களுடன் ஒப்பிடுமிடத்து வேகமாக வீழ்ச்சி கண்டு சென்றது. 1972ல் சிங்கள மாணவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கு 63 வீதமாக இருக்க, தமிழ் மாணவர்கள் எண்ணிக்கை நுற்றுக்கு 33.6 வீதமாகியது. அது, 1973ல் சிங்கள மாணவர் எண்ணிக்கை நூற்றுக்கு 67.4 வீதமாகவும் தமிழ் மாணவர் என்ணிக்கை 29.5 வீதமுமாக மாறியது. 1974ல் சிங்கள மாணவர் நூற்றுக்கு 75.4 வீதமாக தமிழ் மாணவர் எண்ணிக்கை நூற்றுக்கு 20.9 வீதமாகிற்று. 1975ல் சிங்கள மாணவர் எண்ணிக்கை 78 வீதம் வரை உயர்ந்த அதே வேளையில், தமிழ் மாணவர் எண்ணிக்கை நூற்றுக்கு 19 வீதத்துடன் நின்று கொண்டது. இனவாதிகளின் பிரச்சாரத்தின் பெறுபேறாக சிங்கள முதலாளித்துவ, மத்தியதர வர்க்க இளைஞர்கள் அதிகளவிலானோர் கொழும்பில் கற்றுக்கொண்டு ஊவா பிரதேசத்தில் இருந்து பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் மோசடியின் கீழ் உயர்கல்வி வாய்ப்புக்கள் கிடைத்த போதிலும், தொழிலாளர்-ஒடுக்கப்படும் ஏழை மக்கள் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு அதனால் கிடைத்த வாய்ப்புக்கள் எதுவும் கிடையாது. முதலாளித்துவ சிறிலங்கா-சமசமாஜ-ஸ்டாலினிச கம்யூனிஸ்ட் கூட்டரசாங்கத்தினால் உருவான தரப்படுத்தலின் தாக்கம் காரணமாக வளர்ச்சி கண்ட தமிழ் ஒடுக்கப்படும் மக்களின் பதட்ட நிலையை இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கும் பொருட்டு, துப்பாக்கிகாரர்களாக இராணுவத்தில் சேர்க்கப்பட்டு வருவோரும் இந்த பெரும்பான்மை ஏழை இளைஞர்களே.

1972 அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் தமது மொழிக்கும் கலாச்சார நடவடிக்கைகளுக்கும் இதுவரை காலமும் இழைக்கப்பட்டு வந்த பாகுபாடுகள் நின்றுவிடும் என முதலாளித்துவ தமிழரசுக் கட்சியும் தமிழ் காங்கிரஸ் கட்சியும் எதிர்பார்த்த போதிலும் அது நிறைவேறவில்லை. தமிழ் முதலாளித்துவத் தலைவர்கள் முதுகை வளைத்துக்கொண்டு, முதலாளித்துவ அமைப்பினுள் ஏதேனும் ஒரு மாயையை திணித்து, தமிழ் ஒடுக்கப்படும் மக்களை தூங்கச் செய்ய முயற்சித்தனர். சிங்களத்தையும் தமிழையும் அரச மொழிகளாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையைக் கூட கைவிட்டு விட்டு, சிங்களத்தையும் தமிழையும் வடக்கு-கிழக்கு நிர்வாக மொழிகளாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கும் அளவுக்கு கூட அரசியலமைப்பு நிர்ணய சபையினுள் அவர்கள் குழிபறிந்து போயினர். எனினும் அந்த சமரசத்தையும் கூட முதலாளித்துவ கூட்டரசாங்கம் நிராகரித்தது. முதலாளித்துவ பாராளுமன்ற விளையாட்டு தொடர்பாகவும் தமது தேசிய ஜனநாயக உரிமைகள் நசுக்கப்படுவதற்கு எதிராகவும் தமிழ் மக்களிடையே வளர்ச்சி கண்டு வந்த எதிர்ப்பின் காரணமாக, அரசியலமைப்பு நிர்ணய நடவடிக்கைகள் ஆரம்பமாகி ஒரு ஆண்டின் பின்னர் -1971 ஜூனில்- அதில் இருந்து விலகிக் கொள்ள தமிழரசுக் கட்சி முடிவு செய்தது.

முதலாளித்துவ ஆட்சியைக் காப்பதற்கும் தமிழ் மக்களின் அபிலாசைகளை பிரதிநிதித்துவம் செய்வதாக நடிப்பதற்கும் இடையேயான முரண்பாடுகளுக்குள் தமிழரசுக் கட்சி அகப்பட்டுப் போய்க் கிடந்தது. தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அரசியலமைப்பு நிர்ணய சபையை பகிஷ்கரித்து நிகழ்த்திய உரை இதை நன்கு தெளிவு படுத்தியது; ''விவாதத்துக்கு உள்ளாகியுள்ள பிரச்சனை தொடர்பாக உடன்பாட்டுடன் கூடிய ஒரு தீர்வுக்காக நாம் சமரசத்துக்கு விருப்புக் கொண்டுள்ளோம். அரசியலமைப்பில் சேர்க்கப்பட எமக்கு அவசியமாக உள்ள குறைந்த பட்ச உரிமைகள் பற்றி, பிரதமருக்கும் அரசியலமைப்பு விவகார அமைச்சருக்கும் நாம் தெரிவித்தோம். பிரதமருடன் அரசியலமைப்பு விவகார அமைச்சருடனும் நாம் நடத்திய பேச்சுவார்த்தைகள் மிகவும் சினேகபூர்வமாகவும் எமது கருத்துக்கள் ஆழமான கவனத்துக்கு உள்ளாகும் என தோன்றிய போதிலும் அடிப்படைப் பிரேரணைகளில் எந்தவிதமான திருத்தத்தையும் செய்ய அவர்கள் தயாராகவில்லை.''

ஆட்சியின் மூலோபாய மாற்றம்

உருவாகியுள்ள பொருளாதார, அரசியல் வேறுபாடுகள் மூலம் முதலாளித்துவ ஆட்சி ஒரு மூலோபாய மாற்றத்தை வேண்டி நின்றது. இது தமிழ் முதலாளித்துவ தலைவர்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணமாகியது. இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னைய உலகப் பொருளாதார அமைப்பின் காவலாளி போல் விளங்கிய, தங்கத்துக்கும் டொலருக்கும் இடையேயான உத்தியோகபூர்வமான உறவு, 1971 ஆகஸ் 15ம் திகதி நீக்கப்பட்டது. இது முதலாளித்துவ அமைப்பின் உலகளாவிய ரீதியிலான நெருக்கடியின் ஆழத்தை எடுத்துக்காட்டியது. இலங்கையைப் பொறுத்தமட்டில் இதன் தாக்கம் நேரடியானதாயும் திட்டவட்டமானதாயும் விளங்கிற்று. முன்னைய யூ.என்.பி. ஆட்சியின் கீழ் இடம்பெற்ற உதவி மானிய வெட்டுக்களுக்கு எதிராக, ''சந்திரனில் இருந்தென்றாலும் அரிசி கொணர்ந்து தருவோம்'' எனப் பொய் வாக்குறுதி வழங்கி ஆட்சிக்கு வந்த கூட்டரசாங்கம், 1971 நவம்பரில் சமர்ப்பித்த இரண்டாவது வரவு செலவு திட்டத்தில் உணவு மானியத்தையும் நலன்புரி சேவைகளையும் வெட்டத் தொடங்கியது. உலக சந்தையில் எண்ணெய் விலை பன்மடங்காக அதிகரித்ததுடன் அரசாங்கம் வெளிநாட்டு செலாவணி தொடர்பாக பாரதூரமான நெருக்கடிக்கு முகம் கொடுத்தது. உள்நாட்டில் உணவு உற்பத்தி வேகமாக வீழ்ச்சி கண்டு வந்ததோடு உணவு தட்டுப்பாடு பட்டினி மட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. இதனால் உருவாகும் பொதுமக்களது கொதிப்பை நசுக்குவதற்கான நடவடிக்கைகள் ஆளும் வர்க்கத்துக்கு அவசியப்பட்டது.

ஒடுக்கப்படும் மக்கள் தமது அவசியங்களின் பேரில் நடத்தும் போராட்டத்தில் அணிதிரளக் கூடிய ஒரு சமூக சக்தியாக தொழிலாள வர்க்கம் தலை உயர்த்துவதையிட்டு ஆளும் வர்க்கம் எல்லையற்ற பீதி கொண்டிருந்தது. அதைத் தவிர்க்கும் பொருட்டு, 1964ல் சமசமாஜ-ஸ்டாலினிச தலைவர்கள் அரசாங்கத்தில் கூட்டுச் சேர்ந்து கொண்டார்களேயாயின், 1972 அளவில் அந்த கூட்டரசாங்க மூலோபாயம் சிதறுண்டு போய் வந்தது. பொது மக்கள் மீது சகிக்க முடியாத சுமைகளைத் திணிப்பது தொடர்பாக மக்களின் வெறுப்பு அன்று நிதி அமைச்சராக விளங்கிய என்.எம்.பெரேராவுக்கு எதிரானதாக விளங்கிற்று. இந்தக் குழிபறிந்துபோன முண்டுகளின் துணையோடு அதிகாரத்தைக் கொண்டிருப்பது இனி பெரும் சிக்கலானது என்பதை முதலாளித்துவ ஆளும் வர்க்கம் புரிந்து கொண்டு வந்தது.

கூட்டரசாங்க அரசியலில் எதிர்ப்புரட்சித் தன்மையை அரசியல் ரீதியில் இன்னமும் புரிந்து கொண்டிராது விடினும், சமசமாஜ-ஸ்டாலினிஸ்ட் தலைவர்கள் அரசாங்கத்தை பாதுகாக்கப் போட்ட முடிச்சுக்களை அறுத்துக் கொண்டு தொழிலாளர் வர்க்கத்தின் கோரிக்கைகளும் பிரச்சாரங்களும் வெடித்துக் கிளம்பின. உடனடியாக 50 ரூபா சம்பள உயர்வு வழங்கும்படியும் குறுங்கால விடுமுறை வெட்டு, புகையிரத பருவச் சீட்டுக்களுக்கு விதித்த 30 மைல் கட்டுப்பாடு, வேலைத்தல உணவகம் ஆகிய சேவை நிலமைகள் வெட்டுக்களை நிறுத்தும்படியும் தொழிலாளர்கள் பிரச்சாரத்தில் இறங்கினர்.

அரசாங்க திணைக்களங்களை கூட்டுத்தாபனங்களாக மாற்றுவதை நிறுத்தும்படியும் அரச ஊழியர்களை 55 வயது கட்டாய ஓய்வுபெறச் செய்வதை நிறுத்தும்படியும் ஓய்வூதியத்தை சகல கூட்டுத்தாபன ஊழியர்களுக்கும் உத்தரவாதம் செய்யும்படியும் கோரும் ஒரு தொகை கோரிக்கைகளை தொழிலாளர்கள் இதில் சேர்த்துக் கொண்டிருந்தனர்.

முதலாளித்துவ அமைப்புக்கும் அதன் ஆட்சிக்கும் முழுச் சவாலாக வெடித்துக்கொண்டிருந்த இத்தகைய தொழிலாளர் வர்க்க அணிதிரள்வுகளைக் குழப்பத்தில் மூழ்கடித்து கலைத்துவிட தமக்கு 1964ல் இருந்துவந்த அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான ஆளுமை சிதறுண்டு போய் விட்ட ஒரு நிலையில், தொழிலாளர்களுக்கு புதிய நச்சு வாயுக்களை ஏற்றுவதன் மூலம் அவர்களை ஸ்தம்பிக்க வைக்க வேண்டும் என்பதை சமசமாஜ-ஸ்டாலினிச துரோகிகள் நன்கு புரிந்துகொண்டிருந்தனர். எனவேதான் முதலாளி வர்க்கத்தின் பாதுகாப்புக்காக இனவாதத்தை தூண்டிவிட்டு, தொழிலாளர் வர்க்கத்தை பிளவுபடுத்துவதையும் பொதுஜன அடக்குமுறையையும் இலக்காகக் கொண்டே 1972 அரசியலமைப்புச் சட்ட வரைஞராக சமசமாஜ தலைவர் கொல்வின் ஆர்.டி.சில்வா விளங்கியமையும், அந்த அரசியலமைப்பின் முன்னணி பாதுகாவலர்களாக சமசமாஜ-ஸ்டாலினிச கட்சிகளை முதன்மையாகக் கொண்ட குட்டி முதலாளித்துவ தீவிரவாத இயக்கங்கள் விளங்கியமையும் தற்செயலானது அல்ல.

துரோகத் தலைமைத்துவத்திற்கு எதிராக பு.க.க. போராட்டம்

முதலாளித்துவ அரச அடக்குமுறைக்கு இலக்காகி பொதுமக்களிடையே மிகவும் மதிப்பிழந்துபோனதன் காரணமாக, தொழிலாளர் வர்க்க புரட்சிகர முன்னணிப் படையணிக்கு, அன்று இன்னமும் சமசமாஜ-ஸ்டாலினிச அரசியலில் சார்ந்திருந்த தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் நனவான பகுதியினரை மக்கள் முன்னணி அரசியலில் இருந்து பிரித்து எடுக்கும் பணி புறநிலை ரீதியில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது. அதற்கான பொருத்தமான பிரச்சார உபாயமாக சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் ''சமசமாஜ-ஸ்டாலினிச தலைவர்களை அரசாங்கத்தில் இருந்து விலகுமாறும் சோசலிச வேலைத் திட்டத்துக்கு அர்ப்பணம் செய்துகொண்ட ஒரு அரசாங்கத்தை அமைக்குமாறும்'' நெருக்கும் இயக்கத்தை முன்னெடுத்தது. இது தொழிலாளர் வர்க்கத்தின் சுயாதீன அரசியல் வேலைத்திட்டத்தை நிராகரித்து, இறுதியில் முதலாளி வர்க்கத்தின் கைக்கூலிகளாக செயற்படுவதற்கு அர்ப்பணம் செய்து கொண்ட குட்டி முதலாளித்துவ தீவிரவாத இயக்கங்களது பிரமாண்டமான எதிர்ப்பின் மத்தியில் தொழிலாளர் வர்க்கத்தை நனவான அரசியல் சக்தியாக அணிதிரட்டி, அதன் சிறந்த பிரிவினரை கட்சியின் பக்கம் வென்றெடுத்து, புரட்சிகர காரியாளர்களாக உருவாக்குவதை இலக்காகக் கொண்டிருந்தது.

முதலாளித்துவ கூட்டரசாங்கம், தமிழர் எதிர்ப்பு இனவாத யுத்தத்திற்கான பின்ணிடையை உருவாக்கி, தமது புதிய அரசியலமைப்புச் சட்டத்தை நிறைவேற்றிய 1972 மே மாதத்தில், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. தமது பத்திரிகைகள் தடை செய்யப்பட்டிருந்த ஒரு நிலையிலும், அதிகாரம் பெற்ற பத்திரிகை அதிகாரியின் தணிக்கைக்கு உள்ளாக்கி பிரசுரங்கள் வெளியிடத் தள்ளப்பட்ட ஒரு நிலையிலும் கூட, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் அச்சிட்டு வெளியிட்ட பிரசுரத்தின் மூலம் ட்ரொட்ஸ்கிச நிரந்தர புரட்சிக் கோட்பாட்டின் அடிப்படையில் பொதுமக்களுக்கு அரசியல் முன்னோக்கை திடசங்கற்பத்துடன் வழங்கியது. அதில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டது:

"ஸ்டாலினிஸ்டுகள் இரண்டு கட்டப் புரட்சி மூலம் ஜனநாயகப் புரட்சியின் பணிகளை 'முற்போக்கு முதலாளித்துவ வர்க்கத்துடன்' ஒன்றிணைந்து ஆற்ற வேண்டும் என்ற உயிராபத்தான வர்க்க அவசியங்களுக்கு தொழிலாளர் வர்க்கத்தை கீழ்படுத்துகின்றனர். தொழிலாளர் வர்க்கத்தினதும் ஒடுக்கப்படும் மக்களதும் அடிப்படை உரிமைகளையும் கோரிக்கைகளையும் வெற்றிகொள்வதற்கு முக்கிய தடையாக இருப்பது, இந்த முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிர்ப் புரட்சிக்கான கட்டத்தை உருவாக்கிக் கொடுக்கும் மக்கள் முன்னணி அரசியலேயாகும்.

''...சகல போராளிகளும் சமசமாஜ, கம்யூனிஸ்ட் கட்சிகளையும் தொழிற்சங்கங்களையும் முதலாளித்துவ கூட்டரசாங்கத்தில் இருந்து பிரித்து, தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க வல்லதும் முதலாளித்துவ சொத்துக்களை ஒழித்துக் கட்ட சபதம் பூண்டதுமான சமசமாஜ-கம்யூனிஸ்ட் கட்சி, தொழிற்சங்கங்களினை அடிப்படையாகக் கொண்ட ஒரு அரசாங்கத்தினை அமைக்க போராடும்படி நெருக்க வேண்டும்.

''முதலாளித்துவ கூட்டரசாங்கத்துக்கு முண்டுகொடுக்கும் சமசமாஜ-கம்யூனிஸ்ட் தலைவர்களும் சீர்திருத்தவாத தொழிற்சங்கத் தலைவர்களும் இந்தப் போராட்டத்தை எதிர்ப்பர். தொழிலாளர் வர்க்கத்தின் இழப்புக்களின் பேரில் முதலாளி வர்க்கத்தினை பாதுகாக்கும் அந்த துரோகிகளைத் தொழிலாளர் வர்க்கத்தினுள் இருந்து துரத்தி அடிக்கவும் நிஜ மாக்சிச தலைமையைத் தொழிலாளர் வர்க்கத்தினுள் கட்டியெழுப்பவும் நடவடிக்கை எடுப்பதன் மூலம் மட்டுமே தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களின் கோரிக்கைகளை வெற்றி கொள்ள முடியும்.

"தொழிலாளர் வர்க்கத்தின் சகல போராளிகள் முன்நிலையிலும் இந்தப் பிரச்சனை உருவாகியுள்ளது. அந்தச் சவாலுக்கு முகம் கொடுக்க வேண்டும். அதில் இருந்து விடுபட்டு ஓடமுடியாது.''

இரண்டரை வருட காலங்கள் -1975 பெப்பிரவரி வரை- காங்கேசன்துறை இடைத் தேர்தலை நடத்துவதை நிராகரித்ததன் மூலம் 1972 முதலாளித்துவ கூட்டரசாங்கத்தின் அரசியலமைப்பின் இனவாத யுத்த இலக்குகள் மேலும் வெளிச்சத்துக்கு வந்தன. நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தின் பேரில் தமிழ் மக்கள் தமது கருத்துக்களை தெரிவிப்பதற்கான ஒரு சந்தர்ப்பத்தைத் தன்னும் வழங்காதிருப்பது ஆளும் வர்க்கத்தின் தீர்மானமாக விளங்கியது. சமசமாஜ-ஸ்டாலினிச தலைவர்கள் இந்த முடிவுக்கு தோள் கொடுத்து வந்தனர் 

தம்மீது திணிக்கப்பட்டுள்ள அரசியலமைப்புச் சட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்க பொதுமக்களின் எந்த ஒரு தரப்பினருக்கும் வாய்ப்பு வழங்காதிருப்பது சர்வாதிகார ஆட்சி முறையின் ஒரு இலட்சணமாகும். முதலாளித்துவ ஜனநாயகத் திரைமறைவில் பொது மக்களுக்கு எதிராக உள்நாட்டு யுத்தத்தின் பாதையில் ஆளும் வர்க்கம் திரும்பியுள்ளமை இதன் மூலம் பிரபல்யமாகியுள்ளது. தமிழ் மக்களைப் பொறுத்த மட்டில் முதலாளித்துவ பிரிவினைவாத அரசியலை நோக்கி அவர்களைத் தள்ளவும், இரத்தம் சிந்தும் இனவாத யுத்தத்தின் மூலம் அவர்களை நசுக்கித் தள்ளவும் அத்திவாரமிடப்பட்டது 1972ம் ஆண்டின் அரசியலமைப்பின் மூலம், இற்றைக்கு 25 ஆண்டுகளுக்கு முன்னராகும் என்பதை அது நிரூபிக்கின்றது.

இடைத் தேர்தலில் கருத்து வெளிப்பாட்டுக்கான சந்தர்ப்பம் தமிழ் மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதோடு மட்டும் நின்றுவிடாது இன்னும் நச்சுத்தனமான இனவாத நடவடிக்கைகள் பலவற்றை 1972-75 காலப்பகுதியில் முதலாளித்துவ கூட்டரசாங்கம் எடுத்தது.

இதற்கு முன்னர் குறிப்பிடப்பட்ட பல்கலைக்கழக அனுமதியில் தமிழ் மாணவர்களுக்கு பாகுபாடு காட்டுவதை இலக்காகக் கொண்ட 1971ம் ஆண்டின் தரப்படுத்தல் கொள்கை மேலும் இனவாத அடிப்படையில் வலுப்படுத்தும் நடவடிக்கை 1972ல் இடம்பெற்றது. அப்போது க.பொ.த. (உயர்தர) விஞ்ஞானப் பாடங்கள் தொடர்பாக இதுவரை காலமும் நடைமுறையில் இருந்து வந்த செய்முறைப் பரீட்சை இரத்துச் செய்யப்பட்டது. இந்தப் பிற்போக்கு நடவடிக்கையானது செய்முறைப் பரீட்சை முறை விஞ்ஞான கூடங்கள் இல்லாத கிராமப்புறப் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு அநீதியானது என்ற பிரச்சாரத்துடனேயே செய்யப்பட்டது. கிராமப்புறப் பாடசாலைகளில் நடைமுறையில் இருந்து வந்த கல்வி நடவடிக்கைகளை முன்னேற்றமான கற்பித்தல் முறைகளின் மட்டத்திற்கு தூக்கிநிறுத்தும் அவசியம் பற்றி எந்த ஒரு முதலாளித்துவப் பரிந்துரையாளரும் பேசியது கிடையாது. அதற்குப் பதிலாக அவர்கள் செய்தது எல்லாம், ஏழை பாடசாலைகளின் மட்டத்திற்கு ஏற்ற விதத்தில் கல்வி முறையை மாற்றியதேயாகும். பொது மக்களின் அவசியங்களை இட்டு நிரப்ப முடியாத முதலாளித்துவத்தின் சீர்திருத்தங்களை எதிர்பார்த்து நிற்கும் சகலரதும் பிற்போக்கு நடைமுறை இதன் மூலம் வெளியரங்குக்கு வந்தது. இன்று உலகளாவிய ரீதியில் இவர்கள் வடிக்கும் முதலைக் கண்ணீரானது "பொருளாதார அபிவிருத்திக்கும் முதலீட்டாளர்களை ஈர்க்கவும்" உலகில் உள்ள மிகக் குறைந்த மட்ட சம்பளம் அனைத்து நாடுகளதும் சம்பள மட்டம் ஆக வேண்டும் என்பதாகும்.

தேசியவாத சீர்திருத்தங்களின் கூச்சல்காரர்கள் இன்று இத்திசையிலேயே பயணம் செய்து கொண்டுள்ளனர். பேராதனைப் பல்கலைக்கழக வரலாற்று பேராசிரியரான சீ.ஆர்.டி. சில்வா 1977ல் எழுதிய ஒரு கட்டுரையில், இந்தச் செய்முறைப் பரீட்சையை இரத்துச் செய்ததைப் பற்றிக் கூறியதாவது: "இந்த வேலைத்திட்டம் கிராமப் புறங்களில் உள்ளவர்களுக்கு சம வாய்ப்புக்களை உத்தரவாதம் செய்வதாக அமைச்சு கூறினாலும், யாழ்ப்பாண தமிழ் மக்கள் இதனை விஞ்ஞான, தொழில்நுட்ப துறைகளில் தாம் கொண்டிருந்த முன்னுரிமையை ஒழித்துக் கட்டுவதற்கான ஒரு முயற்சியாகவே அர்த்தப்படுத்திக் கொண்டனர்". தமிழ் மக்களின் "அர்த்தப்படுத்தல்" 1977 அளவில் போதுமான அளவுக்கு நிரூபிக்கப்பட்டுவிட்டதை பல்கலைக் கழகங்களுக்குள் நுழையும் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி சுட்டிக்காட்டியது.

1974ல் இடம்பெற்ற மற்றுமோர் பாகுபாடு, தமிழ் இளைஞர்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டுவதை முதலாளித்துவ ஸ்ரீலங்கா-சமசமாஜ-கம்யூனிஸ்ட் கூட்டரசாங்கம் மேலும் தீவிரமாக்கியது. அது பல்கலைக்கழக அனுமதியின் பேரில் அமுலுக்கு வந்த மாவட்ட கோட்டா முறையை ஏற்படுத்துவதாகும். இது பிராந்திய வாதத்தினையும் இனவாதத்தினையும் மேலும் கட்டவிழ்த்துவிடுவதாக இருந்தது. 1971 தரப்படுத்தல் வேலைத்திட்டத்தின் கீழ் தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்குள் நுழைவதை கட்டுப்படுத்தி அதன் வாய்ப்பினை சிங்கள குட்டி முதலாளித்துவ தட்டினரின் கைகளில் ஒப்படைத்த போதிலும், இந்த வேலைத் திட்டத்தினால் பிராந்திய மற்றும் இனக்குழுக்கள் ஊக்கமடைந்து தலைநிமிர்த்தத் தொடங்கி இருந்தன.

இனவாதத்தின் அடிப்படையில் ஒரு மக்கள் பிரிவினருக்கு எதிராக பாகுபாடு காட்டுதல் ஆரம்பமாகும் போது அதில் இருந்து ஏனைய இனக்குழுக்கள் இடையே உருவாகும் உயிர்காப்புப் பீதியினாலும், ஆரம்ப இனவாத பாகுபாடுகளால் அடைந்த நலன்களின் ஒரு பங்கினை பங்கிட்டுக் கொள்ளவும் ஒவ்வொரு வகையிலான முதலாளித்துவ, குட்டி முதலாளித்துவக் குழுக்களிடையே நாய்ச் சண்டை ஏற்படுவது இயற்கை.

முஸ்லீம் முதலாளித்துவக் கோரிக்கை

முஸ்லிம் மக்களிடையே பிரபல்யம் அடைந்திருந்த முதலாளித்துவத் தலைவரான பதியுதீன் முஹமது கல்வி அமைச்சராக இருந்து வந்த நிலைமையில், சிங்கள அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக உக்கிரமாக்கிய இனவாதப் பாகுபாடுகள் மூலம், சிங்கள குட்டி முதலாளித்துவ வர்க்கம் தட்டிக் கொண்ட வாய்ப்புக்களின் ஒரு பங்கு தமக்கும் வேண்டும் என பதியுதீன் முஹமதைச் சூழ முஸ்லிம் முதலாளிகள் அணிதிரண்டனர். சிங்கள மற்றும் தமிழ் மொழிகளின் அடிப்படையில் இடம்பெற்ற தரப்படுத்தல், தமிழ் மூலம் பரீட்சைக்குத் தோற்றும் முஸ்லிம் இனத்தவர்களுக்கு அநீதியானது என்பது அவர்களின் இனவாத விளக்கமாக விளங்கியது. தமிழ் மக்களிடையே பாகுபாடுகளுக்கு எதிராக வளர்ச்சி கண்டுகொண்டிருந்த எதிர்ப்பை நசுக்கும் பொருட்டு, தமிழ் மொழிபேசும் மக்களிடையேயும் மத அடிப்படையில் மேலும் பிளவை உண்டுபண்ணுவது வாய்ப்பானது எனக் கருதிய முதலாளித்துவ கூட்டரசாங்கம், உடனடியாக முஸ்லிம் கோரிக்கையின் நீதியைப் புரிந்து கொண்டு, அதற்கான சிகிச்சையாக பல்கலைக்கழக அனுமதிக்கு மாவட்டக் கோட்டா முறையை நடைமுறைப்படுத்தியது.

இந்த மாவட்ட கோட்டா முறையின்படி பல்கலைக்கழக கல்விக்கான வாய்ப்பு, அந்தந்த மாவட்ட ஜனத்தொகை விகிதாசாரத்தின்படி பங்கிட முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் தமக்கு கூடுதலான வாய்ப்புகள் கிட்டும் என மன்னார், அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் வசித்த முஸ்லிம் மக்கள் நினைத்தனர். கண்டிய சிங்கள இனவாதிகளும் இதே பேராசை பிடித்த நிலைப்பாட்டிலேயே நின்று கொண்டிருந்தனர். அவர்களின் நிலைப்பாட்டில் பெரிதும் நாற்றம் கண்டது என்னவெனில், தம்முடைய பங்களிப்புடன் பிரஜா உரிமை இல்லாமல் ஆக்கப்பட்டவர்களும், எந்த விதமான கல்வி வசதிகளுக்கும் உரிமை கொண்டாடாத நிலைக்குத் தள்ளப்பட்டவர்களுமான தோட்டத்துறை தமிழ் மக்களின் எண்ணிக்கையும் தமது மாவட்ட ஜனத்தொகையுடன் சேர்க்கப்பட்டு அதன் மூலம் மாவட்ட கோட்டா முறையின் கீழ் கூடுதல் வாய்ப்புக்களை திரட்டிக்கொள்ளலாம் என்ற அவர்களின் எதிர்பார்ப்பாகும்.

இந்த எந்த ஒரு நடவடிக்கையும் தமிழ் மக்களுக்கு பாகுபாடு காட்டும் இலக்கில் இடம்பெறவில்லை எனவும், தமிழ் மக்களுக்கு விசேடமான அநீதி எதுவும் இடம்பெறவில்லை எனவும் கூறுகையில், நளின் டி. சில்வா மற்றும் குணதாச அமரசேகர தலைமையிலான இனவாத கழிசடைகள், தாம் குருடர்கள் என்பதை காட்டிக்கொள்வது மட்டுமன்றி, முதலாளித்துவ அமைப்பின் கையாட்களாக இவர்கள் ஸ்திரமாக கூறுவது என்னவெனில், வறிய மக்கள் மீதான உண்மையான பற்றினுள் மூழ்கிப்போயுள்ள முதலாளிகள், சமூக நியாயங்களுக்காகவே இதை செய்தனர் என்றாகும். இந்நடவடிக்கையின் மூலம் கிராமப்புற ஏழை மக்களின் குழந்தை குட்டிகளுக்கு கிடைத்த நிவாரணம் எத்தகையது? இதை நன்கு அறிந்தோர் அந்த மாகாண மக்களே. தமிழ் மக்களுக்கு எதிரான பாகுபாடுகள் இனவாத யுத்த மட்டத்தை நோக்கி வளர்ச்சி கண்டதற்கு சமாந்தரமாக, கிராமப்புற இளைஞர் படுகொலைகள் மற்றும் டயர் தீச்சுவாலைகளுடன் துப்பாக்கி வேட்டுக்களும் தீப்பிளம்புகளும் புறப்பட்ட விதத்தையும அறிந்தோர் அவர்களே. இதற்கிடையே இனவாத பிணந்தின்னும் காக்கைகள் வடக்கிலும் தெற்கிலும் கொலைக்குப் பலியானவர்களின் பிணங்களை சுற்றி வளைத்துக்கொண்டு கரைந்தன. பல்கலைக் கழகங்களுக்குள் நுழைவது மட்டுமல்ல, பாடசாலை கல்வியைக் கூட ஒழுங்குமுறையாக கற்றுக்கொள்ள வாய்ப்புக் கிடைக்காது, அரச படைகளில் அலுகோசு வேலைகளில் இறக்கப்பட்டு தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத யுத்தத்திற்கு இட்டுச் செல்லப்படுவதன் மூலம் கொலைக்கு உள்ளாகும் அல்லது தெற்கில் இளைஞர் படுகொலைகளுக்கு இலக்காகும் எந்தவொரு இளைஞனைப் பற்றித் தன்னும் எந்தவிதமான அனுதாபமும் இந்த இனவாத பிணந்தின்னி காக்கைகளுக்கு கிடையவே கிடையாது.

கல்வித்துறைகளிலான பாகுபாடு மூலம் பின்தங்கிய சிங்கள மக்கள் பகுதியினரிடையே ஆர்வத்தைத் தூண்டிவிட்ட ஸ்ரீலங்கா-சமசமாஜ-கம்யூனிஸ்டு கூட்டரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக இனவாத யுத்த தாக்குதல்களுக்கு விரைவாக நடவடிக்கை எடுத்தது.

1974 ஜனவரி மாதத்தின் இரண்டாவது வாரம் யாழ்ப்பாண நகரம் விழாக்போலம் பூண்டிருந்தது. அது அனைத்துலக தமிழ் ஆராய்ச்சி மாகாநாட்டின் பேரில் இடம்பெற்றது. பல்வேறு நாடுகளிலும் வாழும் பரந்த அளவிலான தமிழ் புத்திஜீவிகள் கலந்து கொண்ட இம்மாகாநாட்டினை யாழ்ப்பாணத் தமிழ் மக்கள் ஒரு கெளரவமாகக் கொண்டனர். சிறப்பாக இந்நாட்டு தமிழ் மக்களின் கலாச்சார, கல்வி உரிமைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த ஒரு காலகட்டத்தில் இடம்பெற்ற இந்த மாகாநாடு அம்மக்களிடையே ஒரு பலம் வாய்ந்த ஆர்வத்தை துளிர்விடச் செய்தது. யாழ்ப்பாண நகரம் கலாச்சாரக் காட்சிகளால் நிறைந்திருந்தது.

அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டின் இறுதி நாளான ஜனவரி 19ம் திகதி மாலை, பொதுமக்கள் அணிதிரண்டிந்த ஒரு பொதுக் கூட்டம் இடம்பெற்றது. முதலாளித்துவ கூட்டரசாங்கம், பொலிசைப் பயன்படுத்தி செய்த ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளுக்கு அதை ஒரு தருணமாக்கிக் கொண்டது. பொலிசார் திடீரென ஆகாயத்தில் வேட்டுக்களைத் தீர்க்கத் தொடங்கினர். பொதுமக்கள் கிலிகொண்டு ஒடத் தொடங்கினர். மின்சாரக் கம்பி வயர்களில் பட்ட துப்பாக்கிச் சூட்டில் அறுந்து போன வயர்கள், ஓடிய மக்கள் மீது விழுந்தன. இதனால் ஒன்பது பேர் மின்சாரம் பாய்ந்து இறந்தனர்.

இது உண்மையில் பிற்காலத்தில் யூ.என்.பி. அமைச்சர்கள் தனிப்பட்ட முறையில் கலந்துகொண்டு நடாத்திய வாக்குச் சீட்டுக் கொள்ளைக்கு மத்தியில், யாழ்ப்பாணத்தின் பெறுமதிமிக்க நூல் நிலையத்தினைச் சாம்பலாக்கி ஆத்திரமூட்டும் யுத்த நடவடிக்கைகளுக்கு முன்நடவடிக்கையாகியது. இதனை முதலாளித்துவ கூட்டரசாங்கத்தின் பொலிசார் நடத்தினர்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக

இனவாத யுத்த தீச்சுவாலைகளை மூட்டுவதற்கு ஸ்ரீலங்கா-சமசமாஜ-கம்யூனிஸ்ட் கூட்டரசாங்கம் தொடர்ந்து வந்த வேலைகள் தோட்டத்துறை தமிழ் தொழிலாளர்களுக்கு எதிராக மற்றுமோர் கட்டத்தை எட்டியது.

1974 ஜனவரி 29ம் திகதி கைச்சாத்தான ஸ்ரீமா-இந்திரா காந்தி ஒப்பந்தம் மூலம் மேலும் 75,000 தோட்டத் தொழிலாளர்களை இந்தியாவுக்கு நாடு கடத்த தீர்மானம் செய்யப்பட்டது. 1964 ஸ்ரீமா -சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவுக்கு அனுப்பத் தீர்மானிக்கப்பட்ட 525,000 பேருடன் இந்தப் புதிய தொகையும் சேர்க்கப்பட வேண்டும். 1964 மாபெரும் காட்டிக்கொடுப்பின் கீழ் ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு இணக்கம் தெரிவித்த சமசமாஜ-கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்தப் புதிய நடவடிக்கைகளையும் ஒருமனதாக அங்கீகரித்தன.

1949 குடியுரிமை மசோதாவின் மூலம், மலைநாட்டு தமிழ் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக இனவாத சிங்கள முதலாளித்துவ அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கிய அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ், முழுத் தமிழ் மக்களுக்கும் எதிராக பாகுபாடு காட்ட வழிசமைத்துக் கொடுத்தது என்பதை தமிழ் மக்கள் இத்தருணத்தில் நன்கு புரிந்துகொண்டிருந்தனர். ஆதலால் தமிழ் தொழிலாளர் ஒடுக்கப்படும் மக்கள் ஸ்ரீமா-இந்திரா ஒப்பந்தத்தை தமக்கு எதிராக உக்கிரமடையும் இனவாத தாக்குதலின் ஒரு பாகமாக புரிந்து கொண்டிருந்தனர்.

இந்தத் தமிழ் பொதுஜன அபிப்பிராயம், அன்று அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் தலைவர்களின் நிலைப்பாட்டுக்கு எதிராக விளங்கியதைப் போலவே இன்று தமிழ் காங்கிரஸ் தமிழரசுக் கட்சியை உள்ளடக்கிய தமிழர் விடுதலைக் கூட்டணியின் முதலாளித்துவ தலைமை கொண்டிருந்த கருத்துக்கும் முரண்பட்டதாக விளங்கியது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளரான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் வெளியிட்ட அறிக்கை, ஸ்ரீமா-இந்திரா உடன்படிக்கைக்கு வக்காலத்து வாங்கும் விதத்தில் கூறியதாவது: அது "நாடற்றவர் என்ற அவல நிலையில் இருந்து தோட்டத் தொழிலாளர்களை விடுவிப்பதாகும்" என்றது.

தமிழ்நாட்டு முதலாளிகளதும் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்ட இந்திய மத்திய அரசாங்கம் இலங்கையில் சிங்கள இனவாத ஆட்சியாளர்களினால் தமிழ் மக்களுக்கு எதிராக உக்கிரமாக்கப்பட்ட தாக்குதல்களுக்கு பரிகாரமாக வடக்கில் கச்சதீவினை இலங்கைக்கு வழங்க முன்வந்ததும் இந்தத் தருணத்திலேயேயாகும்.

கடலில்போகும் மீனவர்களின் ஒரு தற்காலிக ஓய்வுக்களமாக மட்டுமே இது பயன்பட்டது. மக்கள் குடியிருப்பு இல்லாத இந்தக் காட்டுத் தீவை இலங்கைக்கு எழுதிக் கொடுத்தமையை, முதலாளித்துவக் கூட்டரசாங்கம் ஒரு மாபெரும் வெற்றியாகக் காட்டிக் கொண்டது. 1948ல் மலர்க் கொத்துக்களைச் சார்த்தி பெற்ற சுதந்திரம் எனப்பட்டது, ஏகாதிபத்தியவாதிகளும் தேசிய முதலாளிகளும் பொதுமக்களை ஏமாற்றுவதற்காக சிருஷ்டித்த ஒரு சதியாகியதைப் போலவே, கச்சதீவு வெற்றியும் இந்தியத் துணைக்கண்டத்தில் ஏகாதிபத்திய முதலாளித்துவப் பிடி தொடர்ந்தும் நீடிப்பதற்காக இனவாதக் குத்துவெட்டல்களைத் தூண்டிவிடும் பிற்போக்குத் திட்டத்தின் ஒரு பாகமே தவிர வேறொன்றும் அல்ல. பின்னர் இனவாத யுத்தப் பிளம்புகளின் மத்தியில் இலங்கையிலும் இந்தியாவிலும் மீனவர்களைத் தண்டிக்கவும் சித்திரவதைக்கு உள்ளாக்கவும் ஒரு சுவர்க்கமாக கச்சத்தீவு எல்லையை பாவிக்கின்றமை இதை நன்கு நிரூபித்துள்ளது.

இத்தகைய துன்பகரமான சூழ்நிலை இல்லாமல் இருந்திருந்தாலும், கச்சதீவு வெற்றி முதலாளித்துவ கூட்டரசாங்கத்தால் காட்சிப்படுத்தப்பட்ட விதத்தில் ஆழமான கேலிக்கூத்தை உள்ளடக்கிக் கொண்டிருந்தது.

உலக நிலைமையின் பாரதூரமான மாற்றம்

சீர்திருத்தவாத சமசமாஜக் கட்சித் தலைவர்கள் முதலாளித்துவக் கூட்டரசாங்கத்தை திணித்தபோது இருந்த வந்த உலக நிலைமை இன்று பாரதூரமான விதத்தில் மாற்றம் கண்டுவிட்டது. யுத்தத்தின் பின்னைய உலக ஏகாதிபத்திய அமைப்பின் எதிரில் தலைகுனிந்து, நான்காம் அகிலத்தின் சுயாதீன புரட்சிகரப் பணியை நிராகரித்த பப்லோவாதத்தின் கைத்தேங்காயாகச் செயற்பட்ட சமசமாஜக் கட்சியும் அதன் தலைமையும், முதலாளித்துவம் அதனது அடிப்படை முரண்பாடுகளைத் தீர்த்துக் கொண்டுவிட்டது என்ற மாயையில் மூழ்கி இருந்தன. இந்த மாயைக்கு இணங்க கணக்குப் போட்டுக் கொண்ட இவர்கள், ட்ரொட்ஸ்கிச அனைத்துலக் குழுவுக்கு எதிராக, சோசலிசத்தின் ஊடாகப் பாராளுமன்றப் பாதை ஒன்றும், முதலாளிகளை இடதுபக்கம் (இடதுசாரிகளாக) தள்ளிச் செல்லும் சந்தர்ப்பமும் திறக்கப்பட்டுள்ளதாகக் கூறிக்கொண்டனர். 

இந்த மார்க்சிச எதிர்ப்பு, ஸ்டாலினிச சார்பு நப்பாசைகள் 1971 ஆகஸ்ட்டில் தங்கத்துக்கும் டாலருக்கும் இடையேயான மதிப்பு தொடர்பான உடன்பாடு சிதறுண்டு போனதாலும் அதன் பெறுபேறாக, சகல பொருட்களின் விலைகளும் அவ்வாறே சிறப்பாக எண்ணெய் விலையும் பன்மடங்கால் அதிகரித்ததாலும் தோன்றியது. சமசமாஜ-ஸ்டாலினிச தலைவர்கள் முதலாளித்துவ கூட்டரசாங்கத்தில் பதுங்கிக் கொண்டு, இந்த உலக முதலாளித்துவ நெருக்கடியை பொதுமக்களின் கண்களில் இருந்து மூடி மறைக்க தலைகீழாக நின்று வந்தனர். அது முக்கியமாக அனைத்துலகக் குழுவின் தலைமையிலான நான்காம் அகிலத்தின் இலங்கைப் பகுதி சமர்ப்பித்த உலக சோசலிச முன்நோக்கிற்கு எதிராக இடம்பெற்றது.

மார்க்சிச அரசியல் பொருளாதாரத்தினை எந்த விதத்திலும் புரிந்து கொண்டிராத சமசமாஜக் கடசித் தலைவரான கலாநிதி என்.எம்.பெரேரா, தாம் கலாநிதிப் பட்டத்தை தீட்டிக்கொள்ள சார்ந்திருந்த கீன்சியன்(Keynesian)பொருளாதாரக் கோட்பாட்டின் அடிப்படையில் புதிய கீன்ஸ் ஆகிவிட முயற்சித்தார். கீன்சின் கோட்பாடுகளின்படி ஸ்தாபிதம் செய்யப்பட்ட பிரெட்டென்வூட்ஸ் ஒப்பந்தம் தங்கத்துக்கும் டாலருக்கும் இடையே சிருஷ்டித்த நிலையான உறவு வீழ்ச்சி கண்டுள்ள நிலைமையில், கடதாசி தங்கத்தை(paper gold)அங்கீகரிக்கும் ஒரு அர்த்தமற்ற கோட்பாட்டை அவர் முதலாளித்துவ உலகுக்கு முன்வைத்தார். எந்தவொரு பொறுப்புள்ள முதலாளித்துவப் பொருளியலாளரும் அவரின் வழித்தடுமாற்றம் நிறைந்த கோட்பாட்டுக்கு இணக்கம் காட்ட முன்வந்ததில்லை. ஆதலால், அது சமசமாஜ தலைமை அலுவலகத்திலும் முதலாளித்துவ கூட்டரசாங்க தஸ்தாவேஜுக்களிடையேயும் மீண்டும் தலையெடுக்க முடியாத விதத்தில் புதையுண்டு போயிற்று.

அர்த்தமற்ற அது வெடித்துச் சிதறுண்டு போனதன் பின்னர், சமசமாஜக் கட்சி தலைவர்களும் கதியற்றுப் போன கூட்டரசாங்கமும் இலங்கையில் எண்ணெய் தோண்டும் முயற்சியில் தொங்கினர். இதற்குப் பெரும் ஊக்கமாக கச்சதீவு வெற்றி பறைசாற்றப்பட்டது. ஸ்டாலினிச கம்யூனிஸட் கட்சி உடனடியாக சோவியத் யூனியனில் இருந்து எண்ணெய் அகழ்வாராய்ச்சி நிபுணர்ளைத் தருவித்துக் கொண்டு இந்தச் செப்படி வித்தைக்கு மேலும் கோலங்கள் போட்டது.

எனினும் இந்த மோசடி 'சந்திரனில் இருந்து அரசி எடுத்துத் தருவோம்' என கூட்டரசாங்கம் 1970 பொதுத் தேர்தலில் வழங்கிய பொய் வாக்குறுதிகளுக்கு ஒன்றும் குறைவானது அல்ல. இப்போது அவர்கள் கச்சதீவின் நாற்புறமும் உள்ள மணல்களைத் தோண்டி எண்ணை எடுப்பதாக நாடுபூராவும் அலைந்து வாக்குறுதி அளித்தனர்.

இந்தப் பொய்யளப்புக்களின் பின்னணியில் வடக்கு-கிழக்கு தமிழ் மக்களுக்கு எதிராக தொடுக்க ஆரம்பித்திருந்த இனவாத யுத்தத்தின் காட்டுமிராண்டித்தனம் விளங்கியது. இந்த எண்ணெய் வளத்தை குழி தோண்டி புதைக்கும் கொடூரமான இயக்கமே தமிழ் மக்களின் எதிர்ப்பு இயக்கம், என்ற மிகைப்படுத்தல் அந்த இலக்கை நோக்கி முன்னெடுக்கப்பட்டது. இந்தப் பொய் வாக்குறுதிகளால் கவரப்பட்ட பொது மக்களை தட்டுத் தடுமாற வைத்த இன்றைய நவசமசமாஜ கட்சித் தலைவர்கள் உட்பட சமசமாஜ - கம்யூனிஸ்ட் கட்சிகளின் அங்கத்தவர்களில் எவரையும் ஒரு பொறுப்புள்ள அரசியல் தலைமையாக எவரும் பெயர் குறிப்பிட முடியுமா? இந்தப் பிரச்சினைக்கான பதிலை சகல வர்க்க நனவுள்ள தொழிலாளியும் ஒடுக்கப்படும் மக்களும் இளைஞர்களும் தீர்க்கமான முறையில் மனம் கொண்டாக வேண்டும்.

பிற்போக்கு, இனவாத 1972 அரசியல் அமைப்புச் சட்டத்தினை நிறைவேற்றியமையும் அதன் அடிப்படையில் தொடுத்த இனவாத யுத்த நடவடிக்கைகளையும் அங்கீகரித்த சமசமாஜ-ஸ்டாலினிச தலைவர்கள், பொது மக்களை அரசியல் ரீதியில் நிராயுதபாணியாக்கும் பொருட்டு இழைத்த சகல வேலைகளுக்கும் இன்று பொதுமக்களே நட்டஈடு கொடுக்க நேரிட்டுள்ளது. 1940 களில் தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களின் சார்பில் ஏகாதிபத்தியச் சார்பு முதலாளித்துவ ஆளும் வர்க்கத்திற்கும் ஸ்டாலினிசத்திற்கும் எதிராக ஈவிரக்கமற்ற முறையில் போராடி கட்டி எழுப்பிய அரசியல் உருவத்தை, 1964 காட்டிக்கொடுப்பின் பின்னர் முதலாளித்துவ ஆட்சியின் பங்குதாரர்களாக மாறியதன் மூலம் அவமானத்திற்கு உள்ளாகிய சமசமாஜ கட்சித் தலைவர்கள், 1975ல் வரட்டிப் பாண் கடையாகியது ஒன்றும் புதுமை அல்ல.

1975ல் சிறிமாவோ பண்டாரநாயக்க, சமசமாஜ தலைவர்களுக்கு சவால் விடுத்து, அதே ஆண்டில் நடைபெற்ற ஹர்த்தால் நினைவு தினக் கூட்டத்தில், அந்தத் தலைவர்கள் செவல பண்டாவின் பிற்போக்கு உருவத்தை அவமானப்படுத்தியதாக குற்றம் சாட்டிய போது, அது பெரும் புதுமையான சம்பவமாகியது. அத்தருணத்தில் கூட்டரசாங்க அரசியலின் கீழ் பொது மக்கள் மத்தியில் சமசமாஜக் கட்சித் தலைவர்களின் உருவமே அவமானத்திற்கு உள்ளாகி இருந்தது என்பதை முதலாளித்துவ ஆட்சியாளர் என்ற வகையில் நன்கு அறிந்தே அவர் இந்த சவாலை விடுத்தார். முதலாளித்துவ சார்பு சந்தர்ப்பவாதத்தினுள் சேடம் இழுக்கும் அளவுக்கு தலைமூழ்கிப் போயிருந்த சமசமாஜ தலைவர்கள் அநாதை நிலைக்கு தள்ளப்பட்டனர்.

தமது உருவத்தை எப்பாடுபட்டேனும் குறைந்தபட்சம் ஒரு சில அமைச்சர் பதவிகளையும் அவற்றைச் சுற்றி குந்தி எழும்பும் வயிற்றுமாரி கொசு கும்பல்களின் வயிற்றுப்பிழைப்பையும் கணக்கில் கொண்டு, பிரதமரிடம் மன்னிப்புக் கோரியேனும் அரசாங்கத்தில் தொங்கிக்கொள்ள சமசமாஜ தலைமைப் பீடத்தில் கொல்வி. ஆர். டி. சில்வா பிரேரித்தமையும் ஒரு பரிதாபகரமான முயற்சியாகியது. சமசமாஜ கட்சிக்குள் இருந்துகொண்டே அத்தருணத்தில் விக்கிரமபாகு கருணாரட்னவுடன் அணிதிரண்டிருந்த வாசுதேவ நாணயக்காரவும் இந்த நரித் தந்திரத்தை அங்கீகரித்தமையும் பின்னர் அம்பலத்திற்கு வந்திருந்தது. ட்ரொட்ஸ்கிசத்தின் அடிப்படையில் கம்பீரமாகத் தோன்றினாலும் தேசியவாத சந்தர்ப்பவாதத்தில் தலைமூழ்கி சீரழிந்து போனமைக்காக நல்ல படிப்பினை இந்த பரிதாபகரமான சந்தர்ப்பத்துக்குள் பொதிந்து போயுள்ளது.

யுத்தத்திற்குப் பிந்திய அரசியலில் பிளவு: 1975ன் பின்னர்

1964ல் தொழிலாளர்களின் 21 கோரிக்கைகள் இயக்கம் முதலாளித்துவ ஆட்சியை சவால் செய்யும் விதத்தில் வளர்ச்சி கண்டு வருகையில், அரசாங்கத்தை காக்கும் பொருட்டு கம்பளம் விரித்து அழைத்துக் கொள்ளப்பட்ட சமசமாஜத் தலைவர்கள், அதில் இருந்து 11 ஆண்டுகளின் பின்னர் 1975ல் காலால் உதைக்கப்பட்டு கலைக்கப்பட்டமையானது உலகளாவிய ரீதியில் பற்றிப் படர்ந்து வந்த வலதுசாரிப் போக்கினை சுட்டிக்காட்டியது. 1968-75க்கு இடைப்பட்ட காலத்தில் உலக முதலாளித்துவ அமைப்பு முகம் கொடுத்த நெருக்கடி நிலைமையின் மத்தியில் தோன்றிய மக்கள் கிளர்ச்சி அலைகளை பின்வாங்கச் செய்து சீரமைத்துக் கொண்ட ஆளும் வர்க்கத்தின் பிற்போக்கு பதில் நடவடிக்கையும் அதன் மூலம் வெளிப்பாடாகியது. இலங்கையில் சமசமாஜ-கம்யூனிஸ்ட் தலைவர்களைப் போலவே உலகம் பூராவும் ஸ்டாலினிச மற்றும் சீர்திருத்தவாத முதலாளித்துவ கையாட்கள் பப்லோவாதிகளின் உதவியுடன் பிரான்ஸ், ஜேர்மனி, ஸ்பெயின், போர்த்துக்கல், பிரித்தானியா போன்ற ஏகாதிபத்திய நாடுகளிலும் அவ்வாறே இந்தியத் துணைக்கண்டம் போன்ற பின்தங்கிய நாடுகளிலும் பற்றிப் படர்ந்து வந்த ஒரு தொகை மக்கள் கிளர்ச்சிகளை முதலாளித்துவ சிறையினுள் சிறைபிடித்து வைக்க முயன்றனர். 1975ல் வியட்நாமிலும் கம்போடியாவிலும் லாவோசிலும் அமெரிக்க ஏகாதிபத்திய கைப்பொம்மை ஆட்சியாளர்கள் வெளியேற்றப்பட்டமை இந்த மக்கள் கிளர்ச்சியின் உச்சக் கட்டமாக விளங்கியது. தேசியவாத ஸ்டாலினிஸ்ட்டுகள், இவற்றையும் சோசலிச விடுதலையை நோக்கிய பாய்ச்சலாக அல்லாது காலனித்துவ பின்தங்கிய நிலைமையின் அதி உயர்ந்த கட்டமாக வரையறுத்துக்கொள்வதில் கண்டிப்பாக இருந்தனர். எனினும், தொழிலாளர் வர்க்கமும் ஒடுக்கப்படும் மக்களும் தமது ஆட்சி அதிகாரத்திற்கு சவால் விடுப்பது சம்பந்தமாக, அவர்கள் தொடர்பாக பீதியும் ஆத்திரமும் கொண்ட ஆளும் வர்க்கம் 1975 கடைப்பகுதியில் நடவடிக்கையில் இறங்கிக்கொண்டன.

இந்தியாவில் இந்திரா காந்தி பிரசித்திபெற்ற அவசரகால சட்ட ஆட்சியை உருவாக்கிக் கொண்டு பொது மக்களுக்கு எதிராக 1975ல் களத்தில் குதித்தார். 1971ல் சுதந்திரம் எனப்படுவதை பெற்றுக்கொண்ட பங்களாதேஷின் விடுதலை நாயகனாக நடித்த முஜுபுர் ரஹுமான் 1975ல் தனிக்கட்சி ஜனாதிபதி சர்வாதிகாரத்தினை திணித்தார். அதே ஆண்டில் அவரின் மரண சடங்கின் மீதாகவே இராணுவம் "மார்ஷல் சட்ட" ஆட்சிக்கு பங்களாதேஷ் மக்களை கீழ்ப்படுத்தியது. பாகிஸ்தானில் அலி பூட்டோ ஜனநாயகத்துடன் கொண்டிருந்த இரத்தம் தோய்ந்த காதலை முடிவுக்கு கொண்டுவந்து, 1977ல் ஷியா ஹுல் ஹக் ஆட்சியைக் கைப்பற்றினார்.

இலங்கையினுள் கூட்டரசாங்கத்தின் கீழ் பீலிக்ஸ் பண்டாரநாயக்கவை சுற்றி திரண்ட அதிகாரம் படைத்தவர்களின் கும்பல், சமசமாஜக் கட்சி தலைவர்களின் துரோகத்தினால் குழம்பிப்போயிருந்த தொழிலாளர் வர்க்கத்தின் மீதும் ஒடுக்கப்படும் மக்கள் மீதும் மிலேச்சத் தாக்குதல் தொடுப்பதற்கு களம் அமைத்துக்கொள்ள இணைந்து கொண்டது. இந்நிலையில் சமசமாஜக் கட்சி இழைத்த காட்டிக்கொடுப்பிற்கு அதற்குக் கிடைத்த பரிசு கால் உதையாகும்.

இதன் மூலம், சமசமாஜ-கம்யூனிஸ்ட் தலைவர்களை கூட்டரசாங்கத்தில் இருந்து வெளியேறுமாறு புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் விடுத்த கோரிக்கையை சூழ, தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்காக பொது மக்களிடையே முன்னெடுத்த இயக்கத்தின் காலப் பொருத்தம் மேலும் ருசுப்படுத்தப்பட்டது. தொழிலாளர் வர்க்கத்தினதும் தமிழ் மக்கள் உட்பட ஒடுக்கப்படும் மக்களினதும் உரிமைகளைக் காக்கும் போராட்டத்திற்கு அத்தியாவசியமான நிலைமை, முதலாளி வர்க்கத்தில் இருந்து முற்றிலும் சுயாதீனமாக அரசியல் நடைமுறையில் கால் ஊன்றுவதாகும். ட்ரொட்ஸ்கிச நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டின் மையமான இதற்கு புறமுதுகு காட்டியவர்களுக்கு வரலாற்றில் இந்த நூற்றாண்டு பூராவும் கிடைத்துள்ள கசையடி படுமோசமானது. சமசமாஜ தலைவர்களுக்கு கிடைத்த காலுதை இதில் இருந்து வேறுபட்டது அல்ல.

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் தொழிலாளர் வர்க்க சுயாதீன அரசியல் நடைமுறைக்காக முன்னெடுத்த போராட்டம் நனவான தொழிலாளர் இளைஞர் பகுதியினர் இடையே ஈர்ப்பை வெற்றிகொண்ட போதிலும் இன்னமும் அது பொது மக்கள் இயக்கத்தினுள் சிறிதாக விளங்கியது. இதன் கொடிய எதிரியாக சமசமாஜ-ஸ்டாலினிச தலைவர்களைப் போலவே சகல வகையறாக்களைச் சேர்ந்த திரிபுவாதிகளும் குட்டி முதலாளித்துவ தீவிரவாதிகளும் செயல்பட்டனர். இவர்கள் சகலரும் வலதுசாரிகளை பலப்படுத்துவதிலும் 1977ல் யூ.என்.பி. க்கு ஐந்தில் நான்கு பாராளுமன்ற பெரும்பான்மை பலத்தை கையளிப்பதிலும் பங்காளர்களாக விளங்கினர்.

தமிழ் முதலாளித்துவக் கட்சிகளின் பரிணாமம்

இந்த வலதுசரி அழுத்தம் தமிழ் முதலாளித்துவ அரசியல் இயக்கத்தின் உள்ளும் சமகாலத்தில் வெளிப்படச் செய்தது.

இந்த வலதுசாரி ஈர்ப்பானது தமிழர் விடுதலைக் கூட்டணி தனித் தமிழீழ அரசு பற்றிய சுலோகத்தைக் கையாண்டதன் மூலம் வெளிப்பாடாகியது. 1975 பெப்பிரவரி 6ல் நடைபெற்ற காங்கேசன்துறை இடைத்தேர்தல் வெற்றியின் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணிப் பிரச்சாரங்களில் அடிநாதமாக விளங்கியது இதுவே.

காங்கேசன்துறை இடைத்தேர்தலில் முதலாளித்துவ கூட்டரசாங்கத்தின் வேட்பாளராக நிறுத்தப்பட்டவர் தமிழ் தேசிய இனத்தைச் சேர்ந்த ஸ்டாலினிஸ்டான வி. பொன்னம்பலம் ஆவார். அது ஸ்டாலினிசம் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் உரிமைகளைத் துவம்சம் செய்ய ஆரம்பத்தில் இருந்து எடுத்த திருப்பத்தைக் குறித்து நிற்கின்றது. இங்கு நிச்சயமாக ஒருவருக்கு நினைவுக்கு வருவது ஸ்டாலினுக்கு எதிராக லெனின் தமது நோய்ப்படுக்கையில் இருந்தபடியே நடாத்திய போராட்டக் காலகட்டமாகும். ஸ்டாலினுக்கு எதிராக லெனின் சமரசம் அற்ற முறையில் போராடிய ஒரு அம்சம், ஜோர்ஜியா சோவியத் யூனியனுடன் இணைக்கப்பட்டதில் இருந்து ஜோர்ஜியன் தேசிய இனத்தவர்களுக்கு எதிராக ஜோர்ஜியன் தேசிய இனத்தவரான ஸ்டாலினால் ரூஷ்ய பேரினவாதத்தினைக் கட்டியணைத்துக் கொண்டு பலாத்காரத்தையும் காடைத்தனங்களையும் கையாண்டதாகும். அது பற்றிய விபரங்களை தர இந்தக் கட்டுரையில் அவகாசம் இல்லாத போதிலும், அந்த காட்டுமிராண்டி பேரினவாத சம்பிரதாயங்களை முன்னெடுத்த இலங்கை ஸ்டாலினிஸ்டுகள், தமது வேட்பாளரை தமிழ் மக்களிடையே தேர்ந்தெடுத்துக் கொண்டு சிங்கள பேரினவாத முதலாளித்துவ அரசாங்கத்தின் பிரதிநிதியாக காங்கேசன்துறைத் தொகுதிக்கு நிறுத்தியமை நிச்சயமாக சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும்.

இடைத் தேர்தலில் தமிழர் ஐக்கிய முன்னணியின் வேட்பாளர் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றார். வெற்றியின் பின்னர் செல்வநாயகம் ஆற்றிய உரையில், அனைத்து சிங்கள அரசாங்கங்கள் மீதும் குற்றஞ்சாட்டி பின்வருமாறு குறிப்பிட்டார். "ஆட்சியிலிருந்த சகல சிங்கள அரசாங்கங்களும், எமது அடிப்படை உரிமைகளை மறுத்தும் எம்மை ஒடுக்கப்பட்ட மக்களின் நிலைமைக்குத் தள்ளுவதற்காக சுதந்திரத்தில் இருந்து பெருக்கெடுத்த அதிகாரத்தைப் பயன்படுத்தியும் வந்துள்ளன என்பது துன்பகரமானது. நான் எனது மக்களுக்கும் நாட்டுக்கும் கூற விரும்புவது என்னவெனில், ஏற்கனவே தமிழ் மக்களுக்குரிய இறைமையை அனுபவித்த தமிழீழ தேசிய இனம் சுதந்திரமடைய வழங்கப்பட்ட ஒரு ஆணையாக நான் இந்த தேர்தலின் தீர்ப்பை கணிக்கின்றேன் என்பதையே ஆகும். தமிழர் ஐக்கிய முன்னணியின் சார்பில் நான் இந்த ஆணையை நடைமுறைக்கிடுவதாக எனது உறுதியான வாக்குறுதியை வெளிப்படுத்துகின்றேன்."

அதில் இருந்து தனித் தமிழீழ அரசுக்காக தமிழர் ஐக்கிய முன்னணி தொடுத்த பிரச்சாரத்தின் முக்கிய பேச்சாளராக அ. அமிர்தலிங்கம் விளங்கினார். அது அவரின் அரசியல் வாழ்க்கையில் ஒரு பெரும் குத்துக்கரணமாக விளங்கியது. அதற்குக் காரணம், தனித் தமிழ் அரசு பற்றிய கோரிக்கை 1964ல் முதலில் தலைநீட்டிய போது அதன் முக்கிய எதிர்ப்புப் பேச்சாளராக அவர் விளங்கியதேயாகும்.

தனித் தமிழீழ அரசு பற்றிய கருத்து முதன் முதலில் சுந்தரலிங்கத்தினால் 1960களின் முற்பகுதியில் முன்வைக்கப்பட்டது. அக்கருத்தின் அடிப்படையில் சுந்தரலிங்கம் ஈழத் தமிழர் ஒற்றுமை முன்னணி என்ற ஒரு கட்சியையும் அமைத்துக்கொண்டு, 1960 மார்ச், ஜூலை பொதுத் தேர்தல்களிலும் போட்டியிட்டார். அந்தத் தேர்தல் இயக்கத்தில் தமிழரசுக் கட்சி சார்பில் சுந்தரலிங்கத்துக்கு எதிரான தேர்தல் பிரச்சாரத்தில் முன்னணியில் நின்றவர் அமிர்தலிங்கம்.

இருப்பினும் 1960 டிசம்பரில் தமிழரசுக் கட்சி செயற் குழுவினுள் சுந்தரலிங்கத்தின் கருத்து ஒரு பிரேரணை உருவில் வவுனியாவைச் சேர்ந்த ஏ. சிற்றம்பலத்தினால் சமர்ப்பிக்கப்பட்டது. அது 1960ல் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் தமிழரசுக் கட்சி அரசாங்கத்துடன் நடாத்திய பேச்சுவார்த்தைகள் முறிந்து போனதன் பின்னராகும். கமிட்டியின் 37 பேர் பிரேரணைக்கு ஆதரவாகப் பேசிய நிலைமையில், அதற்கு எதிரான விவாதத்துக்கு மீண்டும் முன்னணியில் நின்றவர் அமிர்தலிங்கமே. இன்னமும் அத்தகைய ஒரு பிரச்சாரத்துக்கு காலம் வரவில்லை என அவர் சுட்டிக்காட்டினார். "பிரிந்து போவது பற்றி யோசிப்பதற்கு இன்னமும் காலம் வந்துவிடவில்லை" என அவர் அன்று கண்டிப்பாகக் குறிப்பிட்டார்.

1975 அளவில் தமிழர் ஐக்கிய முன்னணியினுள்ளும் அமிர்தலிங்கத்தினுள்ளும் உருவான பரிணாமத்தின் பின்னணியில் இருந்த முக்கிய காரணி, சமசமாஜ-கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்குகொண்ட முதலாளித்துவ கூட்டரசாங்கத்தின் 1972 அரசியலமைப்புச் சட்டமும் அதன் அடிப்படையில் யுத்தப் பாதையில் தமிழ் மக்களுக்கு எதிராக ஒடுக்குமுறையும் அடக்குமுறையும் உக்கிரமாக்கியமையும் விளங்கியது. ஒரு தமிழ் முதலாளித்துவக் கட்சி என்ற முறையில், தமிழர் விடுதலைக் கூட்டணியானது தமிழ் மக்களிடையே சிங்கள இனவாதத் தாக்குதல்களுக்கு எதிராகத் தோன்றிய எதிர்ப்புக்களைச் சுரண்டிக் கொண்ட தமிழ் முதலாளிகளின் வசதி வாய்ப்புக்களை உறுதிசெய்யும் தனிநாட்டை இலக்காகக் கொண்டே ஒழுங்கமைக்கப்பட்டது. அது தமிழ் தொழிலாளர் ஒடுக்கப்படும் மக்களை விடுதலை செய்யும் அவசியத்தினால் உருவானது அல்ல. தமிழ் மக்களை சுரண்டிக்கொள்ளும் அவகாசத்தினை வழங்குவதற்கான பிற்போக்கு முதலாளித்துவ அவசியங்களுக்கு மட்டும் அவர்கள் தயாரானார்கள்.

1975 இலும் அதன் பின்னரும் கொழும்பு ஆளும் வர்க்கம் தமிழ் மக்கள் மீது தொடுத்த தாக்குதல்கள் உக்கிரமாக்கப்பட்டதைப் பற்றி எந்தவொரு மன்னிப்பும் வழங்காவிட்டாலும், தனி அரசு கோட்பாட்டை நோக்கி தமிழ் முதலாளித்துவக் கட்சிகள் திரும்பியமை, உலக அரசியல் நிலைமையினுள் வலதுசாரி நிலைப்பாடுகள் பலமடைந்ததுடன் தொடர்புபட்டதே என்பதை கூறாமல் இருக்க முடியாது.

முதலாளித்துவ கூட்டரசாங்கத்தினைப் போலவே, இனவாத தமிழ் முதலாளித்துவக் கட்சிகளின் பிற்போக்கு வேலைத்திட்டங்களைத் தோற்கடிக்கும் சாத்தியம், இன்று போலவே அன்றும் அனத்துலகவாத புரட்சிகர வேலைத்திட்டத்தினை அடிப்படையாகக் கொண்ட, தொழிலாளர் ஒடுக்கப்படும் மக்களை ஐக்கியப்படுத்தவும் அணிதிரட்டவும் போராடிய ட்ரொட்ஸ்கிச அமைப்புக்கே உரியதாக விளங்கியது.

1975 பெப்பிரவரியில் இடம்பெற்ற காங்கேசன்துறை இடைத் தேர்தலை வென்றதன் பின்னர் தமிழர் ஐக்கிய முன்னணியின் தலைவரான எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தினால் வெளியிடப்பட்டதும் அமிர்தலிங்கத்தினால் மக்கள் பிரச்சாரத்துக்காக முன்வைக்கப்பட்டதுமான தனிநாடு கோரிக்கை, 1976 மே 14ம் திகதி நடைபெற்ற கட்சியின் வட்டுக்கோட்டை மகாநாட்டில் அக் கட்சியின் உத்தியோகபூர்வமான அரசியல் நிலைப்பாடாகியது. அந்த மகாநாட்டில் தமிழர் ஐக்கிய முன்னணியை தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி (TULF) எனப் பெயர் மாற்றவும் தீர்மானம் செய்யப்பட்டது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் அந்தத் தீர்மானத்தின் பின்னணியில், அனைத்துலக மற்றும் தேசிய ரீதியிலான ஒரு அரசியல் பரிணாம நிலைமையும் இருந்து கொண்டிருந்தது.

1. கூட்டரசாங்கத்தின் குடியரசு அரசியலமைப்பு சட்டத்தின் ஆண்டு நிறைவான 1975 மே 22ம் திகதி, தமது கொழும்பு தெற்கு தேர்தல் தொகுதியில் இருந்து இராஜினாமாச் செய்த யூ.என்.பி. தலைவர் ஜே.ஆர். ஜயவர்தன, இடைத் தேர்தலை நடத்தும்படி கோரிக்கை விடுத்தார். அன்றைய கூட்டரசாங்கத்திற்குப் பதிலாக எதுவிதமான ஈடாட்டமும் இல்லாது ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்ய சபதம் பூண்ட, ஒரு பயங்கரமான வலதுசாரி அரசாங்கத்தினை ஆட்சிப் பீடம் ஏற்றுவதற்கு மத்தியதர வர்க்கத்தினையும் குட்டி முதலாளித்துவத் தட்டினைரையும் அணிதிரட்டும் முயற்சியின் ஒரு திருப்பு முனையாக அது விளங்கியது.

யூ.என்.பி. அத்தகைய 'ஒரு துணிச்சலான' ஆரம்பிப்பில் இறங்கியமை, அனைத்துலக அரசியல் நிலைமையின் தாக்கத்தினால் ஏற்பட்டது அல்ல என பிறப்பிலேயே குருடாகப் பிறந்த ஒரு தேசியவாதியினால் மட்டுமே கூற முடியும். 1975ம் ஆண்டு ஏப்பிரலின் முதல் இரண்டு கிழமைகளும் அமெரிக்க ஏகாதிபத்தியம் இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னர் பெற்ற பிரமாண்டமான தோல்விகளால் நிறைந்து போயிருந்தது. கம்போடியா, லாவோஸ், வியட்னாமைக் கைப்பற்றிக் கொண்டிருந்த அமெரிக்கப் படைகள், பொது மக்களின் போராட்டங்களின் எதிரில் உயிரைப் பிடித்துக் கொள்வதற்காக கிடுநடுக்கம் பிடித்து ஓட்டம் பிடிக்கும் நிலை உருவானது. தெற்காசியாவில் இந்த ஆட்சி மையங்கள் சிதறடிக்கப்பட்ட ஒரு நிலைமையில், வெகு விரைவில் வேறு முகாம்களை அமைத்துக் கொள்ளும் அவசியம் ஏகாதிபத்தியவாதிகளுக்கு ஏற்பட்டது. இலங்கையில் யங்கி டிக்கி (ஜே.ஆர். ஜயவர்தன) இதற்குப் பொருத்தமான கைப்பொம்மையென அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் கண்டனர். அதற்கு அவரின் ஆட்சியை உறுதியாக்க செய்யவேண்டிய சகலதையும் செய்ய அவர்கள் முன்வருவர் என எதிர்பார்க்க முடிந்தது. 1975 மே மாதத்தில் யூ.என்.பி.யின் "துணிச்சலான" சவாலின் பின்னணியாக, இந்த பிற்போக்கு ஏகாதிபத்திய ஆதரவு விளங்கியது.

இந்த ஏகாதிபத்திய திட்டங்களை சவால் செய்வதை முதலாளித்துவ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான கூட்டரசாங்கம் நிராகரித்தது. கொழும்பு தெற்கு தொகுதியில் சமசமாஜக் கட்சி தொடர்ந்து வெற்றிபெற்று வந்திருந்த போதிலும், கூட்டரசாங்கம் யங்கி டிக்கியுடன் தேர்தலில் போட்டியிட சிங்கள இனவாத கூச்சல்களுக்குப் பேர் போனவரான ஆர். ஆர். சூரியப்பெருமவையே நிறுத்தியது. இவர் பிற்போக்கு முகாமில் இருந்து கொண்டு காலத்துக்கு காலம் முகாமை மாற்றிக் கொண்டு, தோல்வி கண்டு வந்தவராவார். யங்கி டிக்கியை வெற்றியீட்ட வைக்கும் அமெரிக்கத் திட்டத்திற்கு இணங்க இது இடம்பெற்றது என்பதில் எதுவித சந்தேகமும் கிடையாது. சிறப்பாக கொழும்பு தெற்கு தேர்தல் தொகுதியைச் சேர்ந்த வெள்ளவத்தை, கிருலப்பனை பகுதிகளில் வாழ்ந்த இலட்சோப லட்சம் தமிழ் மக்களை அரசியல் ரீதியில் மேலும் குழப்பியடித்து நிராயுதபாணியாக்க இது திட்டமிடப்பட்டு நடைமுறைக்கிடப்பட்டது என்பதில் ஐயம் கிடையாது. தமிழர் ஐக்கிய முன்னணி வெளிப்படையாக இல்லாது போனாலும் யூ.என்.பி. க்கே ஆதரவு வழங்கியது. தொண்டமான் தமது யூ.என்.பி. ஆதரவு நிலைப்பாட்டை முன்கூட்டியே பகிரங்கப்படுத்திக் கொண்டிருந்தார்.

ஏகாதிபத்தியவாதிகளுக்கு ஏற்ற விதத்தில் யூ.என்.பி. ஆட்சியை அமைப்பதற்கான இந்த ஆரம்ப நடவடிக்கைக்கு ஏற்றவாறு, சமசமாஜ-ஸ்டாலினிச துரோகிகளும் பங்கு கொண்ட முதலாளித்துவ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டரசாங்கத்தினதும் மற்றும் தமிழ் முதலாளித்துவப் பகுதியினரதும் வேலைத் திட்டங்களுக்கும் எதிராக, அந்த இடைத் தேர்தலினுள் சவால் செய்த ஒரே அரசியல் கட்சி புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் மட்டுமேயாகும். அனைத்துலக சோசலிச கொள்கையை அடிப்படையாகக் கொண்ட புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்துக்கு முதலாளித்துவ கூட்டரசாங்கம் ஒரு பெரும் சவாலாக இருக்காதது போலவே, ஆட்சியைக் கைப்பற்றத் துடித்துக்கொண்டிருந்த யூ.என்.பி.யும் ஒரு சவாலாக இருக்கவில்லை. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் அன்று மத்திய குழு உறுப்பினரான ஆனந்த வக்கும்புரவை இடைத்தேர்தல் வேட்பாளராக நிறுத்தி, சிங்கள-தமிழ் தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களை அணிதிரட்டி இட்டு நிரப்ப வேண்டிய அனைத்துலக சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையிலான போராட்டத்தில் இறங்கியது. கூட்டரசாங்கத்தின் வலதுசாரி ஈர்ப்பு மற்றும் யூ.என்.பி.யின் சவாலுக்கும் மத்தியில் சிங்கள-தமிழ் தேசிய இனங்கள் இரண்டையும் சேர்ந்த தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்கள் முகம் கொடுத்து வந்த பெரும் ஆபத்துக்களை சுட்டிக்காட்டி, அவர்கள் எடுக்க வேண்டிய அரசியல் தயாரிப்புக்களை தெளிவுபடுத்தியது புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் மட்டுமே ஆகும். அந்தத் தெளிவுபடுத்தல்களின் பொருத்தத்தையும் செல்லுபடியான தன்மையையும் அளவிட வேண்டியது பு.க.க. பெற்றுக் கொண்ட வாக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் அல்ல. அன்று போலவே பிற்காலத்திலும் பொது மக்கள் புறநிலை ரீதியில் கண்ட வரலாற்று நிலைமைகளுக்கு இணங்கவே அளவிட்டாக வேண்டும். அன்று பு.க.க. முன்வைத்த அரசியல் ஆய்வுகளுக்கும் மாற்று வேலைத் திட்டத்துக்கும் முழுப் புள்ளி கிடைக்கின்றது.

2. கொழும்பு தெற்கு தொகுதி இடைத் தேர்தலில் ஜே.ஆர். ஜயவர்தன அதிகப்படியான பெரும்பான்மை (25,800) வாக்குகளால் வெற்றி கண்டதன் பின்னர் கூட்டரசாங்கத்தின் வலதுசாரி பயணம் யூ.என்.பி.யுடன் போட்டிக்கு இடம்பெற்றது. ஜூலை 18ம் திகதி இடம்பெற்ற இடைத் தேர்தலின் சூடு இன்னமும் தணியாத ஒரு நிலையில், முதலாளித்துவ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, சமசமாஜக் கட்சித் தலைவர்களை கூட்டரசாங்க்ததில் இருந்து வெளியில் தள்ளத் தீர்மானித்தது. 1975 ஆகஸ்ட் 12ம் திகதி இடம்பெற்ற ஹர்த்தால் நினைவுதினக் கூட்டத்தில் என்.எம். பெரேரா நிகழ்த்திய பேச்சு இதற்கு சாட்டாக கொள்ளப்பட்டது.

என்.எம். பெரேரா அன்று நிகழ்த்திய உரை, இன்று வாசுதேவ நாணயக்கார போன்றவர்கள் பொதுஜன முன்னணி அரசாங்கத்தின் எதிரில் செய்யும் கோழைத்தனமான கெஞ்சல்களைக் காட்டிலும் அப்படி ஒன்றும் சவாலானதாக இருக்கவில்லை. சமசமாஜ தலைவர் அரசாங்கத்துக்கு நினைவூட்டியது எல்லாம் மக்களை குழப்ப தம்மால் சோடிக்கப்பட்ட கட்டுக் கதையையேயாகும். அதாவது "சோசலிசத்தை நோக்கிய பயணத்தை விரைவுபடுத்தவே நாம் அரசாங்கத்தில் சேர்ந்துகொண்டுள்ளோம்" என்பதேயாகும்.

இந்தப் பொய் கட்டுக்கதைகளுள் ஒழிந்துகொண்ட சமசமாஜ தலைவர்கள், கூட்டரசாங்கத்தினுள் நுழைந்து கொண்ட நாளில் இருந்து அதுவரை ஆற்றிய ஏகாதிபத்தியச் சார்பு கடமை பற்றி எந்தவிதமான சந்தேகத்துக்கும் இடம் இருக்கவில்லை. எனினும், சிறப்பாக ஐரோப்பா பூராவும் 1968-75க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் பரந்து வந்த தொழிலாளர் வர்க்கப் போராட்டத் தொடர்களினால் உருவான பீதியில் இருந்து தலையெடுக்க துரோத் தலைவர்களின் ஒத்துழைப்பை பயன்படுத்திக் கொண்ட ஏகாதிபதியவாதிகள், இலங்கையில் வர்க்கக் கிளர்ச்சிகளின் நிலைமைகளை முன்கூட்டியே சிதறடித்துவிட ஊக்கத்துடன் செயற்பட்டனர். இரத்தம் தோய்ந்த துரோகங்களினால் பொதுமக்களின் எதிரில் நாற்றம் கண்டுபோய்க் கிடந்த சமசமாஜத் தலைவர்களை வெளியே தள்ளி, வலதுசாரி அகதிகளாக்குவது அதற்கு உதவியாக இருக்கும் என அவர்கள் கணக்குப் போட்டனர்.

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் விடுத்த எச்சரிக்கை

எதிர்வந்து கொண்டுள்ள இந்த நிலைமையைப் பற்றி முன்கூட்டியே எச்சரிக்கை செய்தது ட்ரொட்ஸ்கிச நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டின் அடிப்படையில் மக்கள் முன்னணி வாதத்தை எதிர்த்துப் போராடி வந்த புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் மட்டுமேயாகும். "முதலாளித்துவ அரசாங்கத்தில் இருந்து வெளியேறு" என சமசமாஜ-ஸ்டாலினிச தலைவர்களை நெருக்க பு.க.க. முன்வைத்த சுலோகத்தைச் சூழ, முன்கூட்டியே தனது அரசியல் சுயாதீனத்தினை மீண்டும் ஸ்தாபிதம் செய்யப் போராடாமல் இருந்திருக்கும் அளவுக்கு, தொழிலாளர் வர்க்கம் அரசியல் ரீதியில் நிராயுதபாணியாகி, ஒடுக்கப்படும் மக்களின் ஆதரவில் இருந்து தனிமைப்பட்டும் இருந்தது. பிற்போக்காளர்களின் கால் உதையை வாங்கிக் கொண்டு ஈடாட்டம் கண்டவர்களாக பின் கதவினால் வெளியே தூக்கி வீசப்படும் "தொழிலாளர் கட்சிகள்" அத்தகைய ஒரு நிலைமையில் இட்டு நிரப்பக்கூடிய முற்போக்குப் பாத்திரம் எதுவும் கிடையாது. சமசமாஜக் கட்சி தனது நடைமுறை மூலம் அன்றில் இருந்து இன்றுவரை இந்த உண்மையை நிரூபித்துக்கொண்டுள்ளது.

நாம் மேலே காட்டிய ஒரு அரசியல் பின்னணியின் கீழேயே தனிநாடு கோரிக்கையையும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியாகப் பெயர் சூட்டிக்கொள்வதையும் நிறைவேற்றிக்கொண்டிருந்த வட்டுக்கோட்டை மகாநாடு, தமிழர் ஐக்கிய முன்னணியால் நடாத்தப்பட்டது.

இத்தகைய ஒரு பின்னணியானது முதலாளித்துவ, முதலாளித்துவ சார்பு அரசியல் கட்சிகளுக்கு இடையேயான கொடுக்கல் வாங்கலாக அரசியல் மேற்கட்டுமானத்தில் இடம்பெற்ற சம்பவங்களை மட்டும் அல்லாது வர்க்கப் போராட்டங்களின் தீவிரத்தையும் உள்ளடக்கிக் கொண்டிருந்தது. சிங்களம் பேசும் தொழிலாளர் வர்க்கத்தினை முதலாளித்துவ கூட்டரசாங்கம் தொடுக்கும் தாக்குதல்களில் இருந்து மீட்டு போராட்டப் பாதையில் இழுத்து வைத்திருந்ததைப் போலவே, வடக்கில் ஒடுக்கப்படும் தமிழ் மக்களும், கூட்டரசாங்கம் இனவாத தாக்குதல்களுக்குள் கட்டிப்போட்டு தமது வாழ்க்கைக்கு தொடுத்த தாக்குதல்களுக்கு எதிராகவும் கிளர்ந்து போராடும் நிலைமைக்கு கிளம்பினர். இத்தகைய ஒரு கூட்டுத் தாக்குதலை நசுக்குவதற்கு அப்பால், தாங்கிப் பிடித்துக்கொள்ளக் கூடிய நிலைமையிலும் முதலாளித்துவ அரசின் ஆயுதப் படைகள் இருக்கவில்லை. ஏகாதிபத்தியச் சார்பு முதலாளித்துவ சேவைக்கு அர்ப்பணம் செய்த ஆயுதப் படைகளின் தலைமையும் கூட சிறிலங்கா சுதந்திரக் கட்சி - யூ.என்.பி. ஆகிய இரண்டுக்கும் இடையில் சிறைபட்டுக் கிடந்தது.

இந்த நிலைமையில் இருந்து தலையெடுப்பதற்காக, சமசமாஜக் கட்சியை அரசாங்கத்தில் இருந்து வெளியேற்றி அகதி நிலைமைக்குள் தள்ளுவது சாத்தியமானது என ஆளும் வர்க்கம் சிந்தித்த அதே வேளை, தமிழ் மக்களை பொறுத்த மட்டில் தமிழர் ஐக்கிய முன்னணி தலைவர்களை சிறைக்குள் தள்ளி அதை இட்டு நிரப்பிவிட முடியும் எனவும் எண்ணியது.

தமிழர் ஐக்கிய முன்னணியின் வட்டுக்கோட்டை மகாநாடு நடைபெற்று ஒரு கிழமை கழிவதற்குள் அதன் தலைவர்களை கைது செய்ய வேண்டும் என்ற தீர்மானத்துக்கு முதலாளித்துவ ஸ்ரீலங்கா-கம்யூனிஸ்ட் அரசாங்கம் வந்தது.

கூட்டரசாங்கத்தினால் குடியரசுத் தினமாகப் பிரகடனம் செய்யப்பட்டிருந்த மே 22ம் திகதி இடம்பெறும் கொண்டாட்டங்களைப் பகிஷ்கரிக்குமாறு கோரி துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த குற்றத்தின் பேரில் 1976 மே 21ம் திகதி அ. அமிர்தலிங்கம் வீ.என். நவரத்தினம், கே.பி. இரத்தினம், கே. துரைரத்தினம், எம். சிவசிதம்பரம் முதலான தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மே 22ம் திகதி தம்புள்ளையில் நடைபெற்ற பகிரங்கக் கூட்டத்தில் பேசிய பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க பின்வருமாறு குறிப்பிட்டார்: "குடியரசு அரசியலமைப்பையும் நாட்டின் அமைதியையும் காப்பதற்கு தமிழரசுக் கட்சிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க எனக்கு நேரிட்டது" என்றார்.

அவர் ஒரே வசனத்தில் பொருத்திச் சொன்ன இரண்டு காரணங்களும் பொய்யானவை. 1. குடியரசு தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளுவதைக் கட்டாயமாக்கும் சரத்துக்கள் அரசியலமைப்பில் இருக்கவில்லை. ஆதலால் விழாவைப் பகிஷ்கரிக்கும்படி கோருவது அரசியலமைப்புக்கு முரணானது அல்ல. ஆதலால் அத்தகைய கோரிக்கையை விடுத்தவர்களை கைது செய்வது அரசியலமைப்புச் சட்டத்தினைக் காப்பதாக இருக்கவில்லை.

2. இந்தக் நூலின் ஆரம்பத்தில் குறிப்பிட்டவாறு 1972 அரசியலமைப்புச் சட்டம் தொழிலாளர் வர்க்கத்துக்கும் தமிழ் மக்கள் உட்பட ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் எதிரான உள்நாட்டு யுத்தத்தின் திட்ட வரைவாக விளங்கியது. அதனைக் காப்பது என்பது சமாதானத்தைக் காப்பதன் எதிரிடையாக விளங்கியது. அரசியலமைப்புக்கு எதிர்ப்புக் காட்டியவர்களை கைது செய்வது என்பது நாட்டில் சமாதானத்தைக் காப்பதாகி விடாது. மாறாக, யுத்தத்தினை நோக்கி மேலும் ஒரு படி முன்செல்வதாகும். அந்தப் பிற்போக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் வரைஞரான கொல்வின் ஆர். டி. சில்வாவின் முதுகில் விழுந்த கால் உதையில் அதுவே பொறிக்கப்பட்டு இருந்தது.

தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களுக்கு எதிராக சோடிக்கப்பட்ட உயர் நீதிமன்ற வழக்கின் தன்மையும் அதையே சுட்டிக்காட்டியது. நீதிமன்ற வழக்கு விசாரணை, ஜூரிகள் அற்ற விதத்தில் சிறப்பு அவசரகாலச் சட்டத்தின் கீழ் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

உயர்நீதிமன்ற நீதிபதிகள் மூவரைக் கொண்ட ஒரு நீதிமன்றத்துக்கு, சந்தேக நபர்களை பற்றிய ஒரு வழக்கு விசாரணையை நடத்த நியாய ஆதிக்கம் கிடையாது என்பதே தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிலைப்பாடக விளங்கியது. அப்பட்டமாகச் சொன்னால் அதன் அர்த்தம்: நிறுவப்பட்ட நீதிமன்றம் சட்டவிரோதமானது.

வழக்கு விசாரணைக்கு வந்து இரண்டு மாதங்களின் பின்னர் -1976 செப்டெம்பர் 19ம் திகதி இந்தச் சட்டப் பிரச்சினை மீது தீர்ப்பு வழங்கப்பட்டது- மாபெரும் சட்ட வல்லுனராக துள்ளிக்கொண்டிருந்தவரும் பிற்போக்கு வலதுசாரியாகப் புகழ் பெற்றவருமான நீதி அமைச்சர் பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கவின் நிலைப்பாட்டையன்றி தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிலைப்பாட்டையே நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அதாவது அமுலில் இருந்த அவசரகாலச் சட்டம் சட்டவிரோதமானது. நீதிமன்றம் எதிரிகளை விடுதலை செய்தது.

தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்த அரசாங்கம், நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்தது. அதன் இலக்காக இருந்தது தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்களை எதுவிதத்திலும் சிறைக்குள் தள்ளி விடுவது அல்ல. 1977ல் நடைபெற இருந்த பொதுத் தேர்தல் நெருங்கி வந்து கொண்டிருந்த வேளையில் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் தேர்தல் இலாபத்துக்கான பிற்போக்கு உடன்படிக்கை ஒன்றை செய்து கொள்ளும் நோக்கத்தை அரசாங்கம் கொண்டிருந்தது. எனினும் நீதிமன்றத்தின் முதல் தீர்ப்பை மேன் முறையீடு இல்லாமல் ஒதுக்கி விடுவது முடியாது போயிற்று. ஏனெனில் அந்த தீர்ப்பு பாரதூரமான நிர்வாக நெருக்கடியைத் தோற்றுவித்தது.

நடைமுறையில் இருந்துகொண்டிருந்த அவசரகாலச் சட்டம் சட்டவிரோதமானதாயின் அதன் கீழ் அது வரை காலமும் எடுக்கப்பட்ட சகல நிர்வாக நடவடிக்கைகளும் செல்லுபடியாகாது போகும். அது முதலாளித்துவ ஆட்சியின் வீழ்ச்சியை தோற்றுவித்தது. பாராளுமன்றம் என்ற திரையினால் மூடி பொலிஸ்-இராணுவ ஆட்சிக்கு கதவுகளைத் திறந்து விடும் அவசரகாலச் சட்ட ஆட்சி வீழ்ச்சி காணுமானால், முதலாளி வர்க்கத்தின் புறத்தில் இருந்து கொண்டுள்ள தீர்ப்பு, இராணுவ-பாசிச சர்வாதிகாரத்துக்கு மாறுவதாகும். அன்று அதைச் செய்யக் கூடியதாக இருந்ததா? ஒரு புறத்தில் தெற்கில் தொழிலாளர் வர்க்கம் கொதித்து வர்க்கப் போராட்டப் பாதையில் இறங்கக் கர்ஜித்துக் கொண்டிருந்த நிலையில், வடக்கில் தமிழ் இளைஞர் பகுதியினர் ஆயுதம் தாங்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். இராணுவ சர்வாதிகாரத்துக்கு மாறிச் செல்வது என்பது பெரும் ஆபத்துக்களைக் கொண்ட ஒரு சூதாட்டமாக மாற இடமிருந்தது.

ஆதலால் ஸ்ரீலங்கா-கம்யூனிஸ்ட் கூட்டரசாங்கம் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் செய்துகொள்ளும் சமரசத்தின் மூலம் அதன் தலைவர்களுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்ளவும் அவசரகாலச் சட்ட ஆட்சியைச் சட்டரீதியானதாக்கவும் முயன்றது.

அரசாங்கத்தின் மேன்முறையீட்டினை ஆய்வு செய்த உயர் நீதிமன்ற நீதியரசர் விக்டர் தென்னக்கோன் உட்பட உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஐவரைக் கொண்ட சபை, அவசரகாலச் சட்டம் சட்ட ரீதியானது எனத் தீர்ப்பு வழங்கியது. அப்போது எழுந்து நின்ற சட்டமா அதிபர் 'தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு எதிரான வழக்கை தொடர்ந்தும் முன்னெடுப்பது இல்லை' எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

முதலாளித்துவ அரசின் இன்றியமையாத பாகமான நீதிமன்றத்தின் பக்கச் சார்பற்ற தன்மை எனப்படுவதைப் போலவே முதலாளித்துவ கட்சிகளுக்கு இடையே பேரம் பேசுவதிலும் அதன் நாற்றம் கண்ட தன்மைக்கு இது நல்ல ஒரு எடுத்துக்காட்டான சந்தர்ப்பமாகும்.

யூ.என்.பி.யுடனான கூட்டை நோக்கி

எனினும் ஸ்ரீலங்கா-கம்யூனிஸ்ட் கூட்டரசாங்கத்தின் கணக்குகள் சறுக்கிப் போயின. வழக்கில் இருந்து விடுதலையான தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்கள் உடனடியாக யூ.என்.பி.யுடன் கூட்டு அமைப்பது பற்றிய பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தனர்.

அது தமிழ் மக்களை இனவாத முதலாளித்துவ கூட்டரசாங்கத் தாச்சியுடன் கட்டிப் போடுவதற்குப் பதிலாக அடுப்புக்குள் தள்ளிவிடும் ஒரு விதிமுறையாகும் என்பதை அறியாமல் தமிழர் விடுதலைக் கூட்டணி எடுத்த தீர்மானம் அல்ல. அது தமிழ் முதலாளி வர்க்கம் நனவான விதத்தில் எடுத்த ஒரு தீர்மானம் ஆகும். சிறப்பாக அமெரிக்க ஆட்சியாளர்களை முன்னணியில் கொண்ட ஏகாதிபத்தியவாதிகள் யூ.என்.பி. க்கு வழங்கியிருந்த ஆதரவுக்கு அமைய எடுத்த ஒரு தீர்மானமாகும்.

அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள், முதலாளித்துவ ஸ்ரீலங்கா-கம்யூனிஸ்ட் கூட்டரசாங்கம் தொடர்பான தமது எதிர்ப்பையும் மாற்று ஏகாதிபத்தியச் சார்பு யூ.என்.பி. தொடர்பான தமது நட்பையும் மீண்டும் ஸ்திரப்படுத்திக் கொண்டது "அணிசேரா மகாநாடு" எனப்படுவதன் பின்னராகும். "அணிசேரா மகாநாடு" ஏகாதிபத்தியவாதிகளுக்கும் சோவியத் ஸ்டாலினிச முகாமுக்கும் இடையேயான சுற்று மாற்றுக்களுக்கு, பின்தங்கிய நாடுகளில் ஏகாதிபத்திய சார்பு முதலாளித்துவ ஆட்சியாளர்கள் திணித்த ஒரு மேடையாகியது. மூன்றாம் உலகம் எனப்படுவதன் குரலாகக் காட்டிக் கொண்ட இந்த மேடை உண்மையில் அந்தப் பின்தங்கிய நாடுகளில் வாழ்ந்த "நான்காம் உலகைச் சேர்ந்த" ஒடுக்கப்படும் மக்களின் இரத்தத்தை உறிஞ்சிக் குடித்த இருபக்கமும் தலைகள் உள்ள பாம்புகளின் இருப்பிடமாகியது.

1976 ஜூலை-ஆகஸ்ட் காலங்களில் அந்த ஊர்வன கும்பல் இலங்கைக்கு வந்தது சரிந்து வீழ்ந்து வந்த முதலாளித்துவக் கூட்டரசாங்கத்துக்கு பிராணவாயு ஏற்றுவதற்கேயாகும். இன்னமும் தமது ஏகாதிபத்தியச் சார்பு தன்மையை முழுமனே அம்பலமாக்கிக் கொள்ளாமல் இருந்து வந்த காஸ்ட்ரோ, கடாபி, அரபாத் போன்றவர்களை அணைத்துக்கொண்ட சிறிமாவோ பண்டாரநாயக்க, இக்கட்டத்தில் அரசாங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்த சமசமாஜக் கட்சித் தலைவர்கள் உட்பட முழு இடதுசாரி வேடதாரி கும்பல்களதும் ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் கூட்டுச் சேரா நாடுகளின் தலைவியாகிக் கொண்டார். ஆனாலும் ஏகாதிபத்தியவாதிகளோ அக்கட்டத்தில் யூ.என்.பி. ஆட்சியாளர்களை இலங்கையில் ஆட்சிக்கு கொணரத் தீர்மானம் செய்திருந்தனர். தமிழர் விடுதலைக் கூட்டணியின் முதலாளித்துவத் தலைவர்கள் சாய்ந்தது ஏகாதிபத்திய சூறாவளி வீச்சுக்கு அமைய யூ.என்.பி. பக்கம் ஆகும். அது தற்செயலானது அல்ல. அது இந்தச் சகாப்தத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் குழுக்களின் மீது ஆதிக்கம் கொண்டிருந்த சகல முதலாளித்துவ இயக்கங்களதும் ஏகாதிபத்தியச் சார்பு தன்மையைச் சுட்டிக்காட்டியது. இத்தகைய முதலாளித்துவ தேசியவாத இயக்கங்கள் தொழிலாள-ஒடுக்கப்படும் மக்கள் பக்கம் ஆதரவுத் தேடித் திரும்பவில்லை. பொது மக்களை ஒடுக்கும் முதலாளித்துவ ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள் பக்கமே திரும்பின.

ஒடுக்கப்படும் மக்களைப் பற்றி அனுதாபம் கொண்டுள்ளதாகக் காட்டிக் கூச்சல் போடும் முதலாளித்துவத் தலைவர்கள், தலைவிகளின் கால்சட்டைகளிலும் சேலைத் தலைப்புக்களிலும் தொங்கிக் கொண்ட இடதுசாரி தீவிரவாதிகள், என்றும் தமது ஏகாதிபத்தியச் சார்பு முதலாளி வர்க்கத்தின் இந்தப் பிற்போக்குத் தன்மையை மூடி மறைக்க முயன்று வந்தனர். இந்த மூடிமறைப்புக்களில் அவர்கள் கட்டித் தொங்கவிட்ட குஞ்சம் எதுவெனில், தொழிலாளர் வர்க்கப் புரட்சியாளர்கள், தமது சுயாதீன அரசியல் விதிமுறைகளை கை கழுவிவிட்டு, முதலாளித்துவ மோசடிக்காரர்களின் சுலோகங்களிலும் வேலைத் திட்டங்களிலும் தொங்கிக் கொள்ள வேண்டும் என்பதேயாகும். இதற்கு உதாரணமாக, இத்தகைய ஊமைக் கோட்டானொன்றின் சமீபகாலக் குரலைக் காட்ட முடியும். சந்திரிகா குமாரதுங்கவின் அரசியல் தீர்வுப் பொதியினை கற்றுக்கொள்ளச் சபதம் பூண்ட 'தியச' சஞ்சிகையின் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த அஹிங்சக பெரேரா என்பவர், 1970பதுகளின் நடுப்பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு வழங்கும் நற்சான்றிதழ் வருமாறு; "அரச நிர்வாகிகள் தமது உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறித்துக்கொள்ளும் போது, அதற்கு எதிராக அணிதிரள தமிழ் தலைவர்கள் சிங்கள சமூகத்துடன் உறவை கட்டியெழுப்பிக் கொண்டு முற்படாததற்குக் காரணம், சிங்களத் தீவிரவாதிகள் சிறுபான்மை தேசிய இனங்களுக்கு தொடுத்த தாக்குதலேயாகும்." (சிங்களவர்களுக்கு இல்லாத தமிழர்களுக்கு உள்ள பிரச்சினை என்ன? பக்கம் 21)

கழுதைத்தனத்தை வெளிப்படுத்தும் இந்த ஆய்வின்படி "அரச நிர்வாகிகள்" அல்லது "சிங்கள சமூகம்" அல்லது "சிங்கள தீவிரவாதிகள்" அல்லது "தமிழ் தலைவர்கள்" ஆகியவற்றில் ஒன்றுக்குத் தன்னும் வர்க்கத் தரம் கிடையாது. ஆதலால் "சிங்கள சமூகம்" சிறுபான்மை தேசிய இனங்களுக்கு தாக்குதல் தொடுக்கும் "சிங்களத் தீவிரவாதிகள்" கொண்டதாக மாறுகிறது. அது மட்டுமன்றி வர்க்கமற்ற "தமிழ் தலைவர்கள்" இதற்குப் பதில் நடவடிக்கையாக "சிங்கள சமூகத்துடன்" உறவுகளை வெறுக்கின்றார்கள். தீர்வுப் பாற்கடலில் இருந்து தோன்றும் வெண்ணெய் படலத்தைப் போன்ற ஒரு பொதுஜன முன்னணியின் அரசியல் தீர்வுப் பொதியைப் பற்றி, இதைக் காட்டிலும் திரிக்கப்பட்ட பார்வையும் அங்கவீனமான ஆய்வும் வேறு இருக்க முடியுமா?

அத்தகைய ஒன்று இருக்க முடியாது என நாம் சந்தேகித்து இருந்தால் எமக்கு நல்லதே நடக்கட்டும். அத்தகை கருத்துக்கள் இருக்கவே செய்கின்றன. அஹிங்சக பெரேராவின் மேற்சொன்ன உன்னத வாக்கியங்களை உள்ளடக்கிய கட்டுரைகள் நூலாக வெளிவந்த போது, அதற்கு முன்னுரை வரைந்த பேர்வழி அதை திரையிட்டுக் காட்டுகின்றார். அது வேறு யாரும் அல்ல. அரசியல் அரங்கில் நீண்டகாலமாக விநோத பாத்திரங்களை வகித்து வந்த பேராசிரியர் கார்லோ பொன்சேகாவே. அஹிங்சக பெரேராவின் நூலுக்கு வழங்கியுள்ள தமது முன்னுரையின் இறுதி பந்தியில் அவர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

"தேசியவாத செயற்பாட்டு முறைகள் மனித செயற்பாட்டு முறைகளில் இருந்து வேறுபட்டதல்ல. ஆதலால், அவை முக்கியமாக வழிநடாத்தப்படுவது பொருளாதாரக் காரணிகளாலா என்பது சந்தேகத்துக்கு இடமானது. மார்க்சின் சிந்தனையில் முதல் இடம் வகிப்பது பொருளாதாரக் காரணிகளாகும். ஆதலால் தேசியவாத செயற்பாட்டு முறைகளில் உள்ள தன்மையை புரிந்துகொள்ள கார்ல் மார்க்சைக் காட்டிலும் உதவுவது உயிரின பண்புகளை சிறந்த முறையில் ஆய்வு செய்த சர்ள்ஸ் டார்வினின் சிந்தனை மரபுகள் என நான் நினைக்கின்றேன்." (முன்னுரை: சிங்களவர்களுக்கு இல்லாத தமிழர்களுக்கு உள்ள பிரச்சினை என்ன?)

இலங்கையில் நாகரீகத்தின் ஆரம்ப காலம் தொட்டே, தேசிய இனங்களுக்கு தேசிய அரசும் இருந்து வந்ததாகக் கூறும் சிங்கள இனவாதிகளுக்கும் அப்பால் செல்லும் கார்லோ பொன்சேகா, ஆதி மனிதனின் காலத்தில் இருந்தே தேசியவாத பண்புகள் இருந்ததாகவும் கூறுகின்றார். இது இப்படியானால், தேசியவாதத்தில் இருந்து மீட்சி பெறவே முடியாது. தேசியவாத இனவாத மோதுதல்களை நியாயப்படுத்தும் இரத்தப் பிசாசுகள் இடையே மட்டுமே அத்தகைய கருத்துக்கள் வேரூன்றும். சுயநிர்ணய உரிமையை முன்வைத்து பொதுஜன முன்னணியின் "அரசியல் தீர்வுப் பொதியை" தூக்கிப் பிடித்து இனவாத யுத்தத்துக்கு வக்காலத்து வாங்கும் அஹிங்சக பெரேரா, கார்லோ பொன்சேகாவுக்கு கம்பளம் விரிக்கும் போது வெளிப்பட்டிருப்பதும் இதுவே. பெரேரா இவ்வாறு குறிப்பிடுகின்றார்: "முன்னுரையின் இறுதியில் பேராசிரியர் கார்லோ பொன்சேகா தலையீடு செய்துள்ளமையானது இந்த விடயத்தை மேலும் கற்றுக்கொள்பவர்களுக்கு மேலுமொரு விசேடமான வழிகாட்டியாக இருக்கும் என நான் நம்புகிறேன்."

லங்கா சமசமாஜக் கட்சியை வெளியேற்றி ஸ்தாபித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி-கம்யூனிஸ்ட் கட்சி கூட்டரசாங்கத்தின் ஆயுள் காலத்தை நீடிக்கும் பொருட்டு இடம்பெற்ற சதி, 1976 டிசம்பரில் வெடித்த தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு பகுதியினரின் பொது வேலை நிறுத்தத்தினால் சின்னாபின்னமாக்கப்பட்டது. அது மட்டுமல்ல அந்தப் பிற்போக்கு கூட்டையும் உடைத்தெறிந்தது. ஸ்டாலினிச கம்யூனிஸ்ட் கட்சி, இன்னமும் முதலாளித்துவ கூட்டரசாங்கத்தினுள் பதுங்கிக்கொண்டிருந்த ஒரு நிலையில் தலைநீட்டிய அரசியல் நொருக்கடியின் சகல இலாபங்களையும் சுரண்டிக் கொள்ள யூ.என்.பி.க்கு அவகாசம் வழங்கிய சமசமாஜ கட்சி தலைவர்கள், தொழிலாளர் வர்க்க வேலை நிறுத்தத்தில் இருந்து முழுமனே கைகழுவிக் கொண்டனர். போராட்டத்தின் தலைமையினை வாய் வீச்சுக்களுக்குப் பேர்போன தொழிற்சங்க தீவிரவாதிகள் கும்பல் சுருட்டிக் கொண்டது. இவர்களுக்கு இயைந்து போவதற்கு நெருக்கிவந்த பல்வேறு அழுத்தங்களுக்கும் எதிராக, தொழிலாளர் போராட்டங்களுக்கு சுயாதீனமான அரசியல் வேலைத்திட்டத்தை முன்வைத்து, அத்தருணத்தில் நாடு பூராவும் வளர்ச்சி கண்டு வந்த வலதுசாரி அச்சுறுத்தலை நசுக்கும் பொருட்டு, தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களை அணிதிரட்ட புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் போராடியது. அது முன்வைத்த வேலைத் திட்டமானது தொழிலாளர் வர்க்கத்தின் சுயாதீன அரசியல் வேலைத்திட்டத்தை சூழ கிராமப்புற ஏழைகள், இளைஞர்கள் மற்றும் ஒடுக்கப்படும் மக்கட் பகுதியினரை அணிதிரட்டுவதன் மூலம், தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் தொடர்பான பிரச்சனைக்கு தீர்வுகாணக் கூடிய தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொணர்வதாக விளங்கியது.

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் அதன் வரலாற்றில் சாதித்தது என்ன? என்ற கேள்வியை பல்வேறுபட்ட அரசியல் போக்குகளின் மூடர்கள் எழுப்புவதன் பின்னணியில் இன்றைய முதலாளித்துவ ஆட்சி முறையை துக்கி வீசும் வேலைத்திட்டம் தொடர்பாக அவர்களுக்கு இருந்து வரும் முடிவுறாத ஐயமும் பகைமையும் பதுங்கிக் கொண்டுள்ளன. வேறு வார்த்தைகளில் சொன்னால் இந்த முதலாளித்துவ அமைப்பைக் காத்துக் கொண்டு, அதன் கீழ் குறுக்கு வழிகள் மூலம் விரைந்து தீர்வு காணும் குட்டி முதலாளித்துவ அவஸ்தைகளில் இருந்து தலைநீட்டும் அவசரம் இருந்து கொண்டுள்ளது. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் முன்வைத்ததும், தமது போராட்டத்தின் அத்திவாரமாக கொண்டதும் இக்காலத்தில் மக்கள் மத்தியில் சிதறுண்டு போய்க் கிடந்த உணர்வுகளுக்கு பொருத்தமான வேலைத்திட்டம் அல்ல. மாறாக, அது முதலாளித்துவ வர்க்க சமுதாயத்தினுள் தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களின் விடுதலையை ஊர்ஜிதம் செய்யவல்ல விஞ்ஞானரீதியான வேலைத்திட்டமாகும்.

இந்த வேலைத்திட்டத்தினை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளவில்லைதானே என்பது மேற்சென்ன கேள்வியுடன் சேர்ந்த விதத்தில் எழுப்பும் இரண்டாவது கேள்வியாகும். சரியான முறையில் என்றால் இந்தக் கேள்வியை எழுப்ப வேண்டியது, பொதுமக்களை அழிவில் இருந்நு விடுதலை செய்யக் கூடிய ஒரு வேலைத்திட்டத்தினை முன்வைத்து, அதன் அடிப்படையில் போராட்டத்தில் ஈடுபட்ட அமைப்பிடம் அல்ல. அந்த வேலைத்திட்டத்துக்கு எதிராக பல போலி வாதப்பிரதிவாதங்களை பின்னிக்கொண்டு பொதுமக்களை அதிலிருந்து அந்நியப்படுத்தி வைக்க முதலாளி வர்க்கத்தின் சார்பில் வக்காலத்து வாங்குபவர்களாக தொழிற்பட்ட அமைப்புக்களிடமே இந்தக் கேள்வியை எழுப்பவேண்டும். முதலாளி வர்க்கத்திடம் உதவி பெற்று, அந்த அமைப்புக்கள் முன்னெடுத்த முதலாளித்துவ சார்பு பிரதிவாதங்கள் இல்லாது இருந்திருக்குமானால், தமது விடுதலைக்கு அவசியமான புரட்சிகர வேலைத்திட்டத்தினை அரவனைத்துக்கொள்ள முடியாது செய்யும் மையத்தடை தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களுக்கு இருந்தும் இருக்காது, இருக்கவும் மாட்டாது. தம்மால் வழிதடுமாறச் செய்யப்பட்ட வெகுஜன இயக்கம் அதற்குச் செலுத்தும் இரத்தப்பலியைக் கண்டு கூத்தாடும் குட்டி முதலாளித்துவ தீவிரவாதிகள், தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சிகர யதார்த்தம் ஒழிந்து போய்விட்டது எனவும் கோஷிக்கின்றார்கள்.

சமசமாஜ-ஸ்டாலினிச தலைவர்களின் துரோகங்களினாலும் குட்டி முதலாளித்துவ தீவிரவாதிகளின் வழிதடுமாறல்களாலும் உருவாக்கப்பட்டுக்கொண்டிருந்த அரசியலில் தொழிலாளர் வர்க்கம் நிராயுத பாணியாக்கப்பட்டு, குழப்பத்துக்குள் தள்ளப்பட்டு இருந்தது. இதனால் தொழிலாளர் வர்க்கத்தில் இருந்து உருவாகும் சுயாதீனமான அரசியல் சவாலுக்கு முகம் கொடுக்காமலே யூ.என்.பி. 1977ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற முடிந்தது. தொழிலாளர் வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் தலையீடு சக்தி வாய்ந்த முறையில் வெளிப்பாடாகவில்லை. இதன் காரணமாக யூ.என்.பி. முன்னொருபோதும் கண்டிராத பாராளுமன்ற ஆசனங்களை - பாராளுமன்ற ஆசனங்களில் ஆறில் ஐந்து பங்கினை- வெற்றி கொள்ள முடிந்தது.

இந்தப் பிரமாண்டமான வாக்குகளை சேகரிக்கும் பொருட்டு யூ.என்.பி. தலைவரான கிழட்டு நரி -ஜே.ஆர்.ஜயவர்தன- பல முன்னணிகளில் சதிகளில் இறங்கினார். கைது செய்யப்பட்டிருந்த விஜேவீர உட்பட்ட ஜே.வி.பி. தலைவர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளும் முகமாக, ரொனி டீ மெல்லைக் கொண்டு எடுத்த முயற்சி அன்று நன்கு பிரசித்தமான இரகசியமாகும். சிங்ஙள இனவாத ஜே.வி.பி.க்கு ஒரு கையை நீட்டும் அதேவேளையில் மறுகையை தமிழர் விடுதலைக் கூட்டனிக்கு நீட்டும் முயற்சியும் கூட இடம்பெற்றது.

தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் யூ.என்.பி. க்கும் இடையேயான இரகசியப் பேச்சுவார்த்தைகள், கொழும்பு றோயல் கல்லூரி எதிரில் உள்ள எஸ். தொண்டமானின் வீட்டில் இடம்பெற்றன. தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் எஸ். கதிர்வேற்பிள்ளை, அ. அமிர்தலிங்கம், எம். சிவசிதம்பரமும் யூ.என்.பி. சார்பில் ஜே.ஆர். ஜயவர்த்தன, எம்.டி. பண்டா, எஸ்மண்ட் விக்கிரமசிங்கவும் (ரணில் விக்கிரமசிங்கவின் தந்தை) இப்பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டனர்.

இக்கலந்துரையாடல்களில் யூ.என்.பி தலைவர்களுடன் கதிர்வேற்பிள்ளை ஆற்றிய உரையை பிற்கால நிகழ்வுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது மிகவும் கேலிக்கூத்தானதாக இருந்தது. ''நாம் இங்கு வந்தது கோரிக்கைகளை முன்வைப்பதற்கு அல்ல. இது கோரிக்கைகளை முன்வைப்பதற்கான காலமும் அல்ல. ஜனநாயகம் அனாதரவாகியுள்ளது. ஜனநாயகத்தைக் காக்கும் உங்களின் முயற்சிக்கு ஆதரவு வழங்க நாம் தயார்'' என அவர் குறிப்பிட்டார்.

யூ.என்.பி. - தமிழர் விடுதலைக் கூட்டணி உடன்பாட்டின் அடிப்படை

அனாதரவாகிப் போன ஜனநாயகத்தின் மையப் பிரச்சினையாக தமிழ் தேசிய இனத்தின் ஜனநாயக உரிமை விளங்கியது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் முதலாளித்துவத் தலைவர்கள் அதைப் பாதுகாப்பதை பகிரங்கக் கட்டளை மூலம் யூ.என்.பி.யிடம் ஒப்படைத்தனர். இது ஒன்றும் புரியாமல் செய்யப்பட்டது அல்ல. 1958ல் பண்டாரநாயக்க-செல்வநாயகம் ஒப்பந்தத்திற்கு எதிரான யூ.என்.பி.யின் கண்டி பாதயாத்திரையின் பிரதம அமைப்பாளர் ஜே.ஆர். ஜயவர்தனவே. இது 1977 ஏப்பிரல் 5ம் திகதி செல்வநாயகம் காலஞ்சென்றாலும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஏனைய தலைவர்களின் நினைவில் இருந்து மறைந்து விடக்கூடிய ஒன்றல்ல. எனினும் தமிழ்-சிங்கள இரு தரப்பையும் சேர்ந்த முதலாளித்துவத் தலைவர்கள் 1976ன் இறுதியில் ஆரம்பமான வர்க்க நிலைமையையிட்டு குரோதம் கொண்டனர். தமது கோரிக்கைகளையும் கூடக் கைகழுவி விட்டு விட்டு தமிழர் விடுதலைக் கூட்டணி யூ.என்.பி.யுடன் இனக்கத்துக்கு வந்ததற்கான அடிப்படை அதுவே.

யூ.என்.பி.க்கும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் இடையே தமிழ் மக்களுக்குத் தெரியாமல் உருவான சதிகார உடன்பாட்டின் இலக்கு, தொழிலாள வர்க்க இயக்கத்தின் ஒருமைப்பாட்டைச் சிதறடித்து, அதை தவிடுபொடியாக்குவதாக விளங்கியது.

சுதந்திரம் எனப்பட்டதன் பின்னர், இலங்கையில் 1953ல் நடந்த ஹர்த்தாலை அடுத்து, முதலாளித்துவ ஆட்சியை பாரதுரமான நெருக்கடிக்குள் தள்ளிய வர்க்கப் போராட்டமாக 1976 போராட்டம் விளங்கியது. அது தொழிலாளர் வர்க்கத்தை முழுமையாக உள்ளீர்த்துக்கொள்ளாது போனாலும், அது ஒரு தொகை பிரேரணைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கும் கோரிக்கைகளை முன்வைப்பதற்க்கும் அப்பால், தொழிலாளர்கள் நடைமுறையில் போராட்டத்தில் குதித்த ஒரு நிலையாகும். மறுபுறத்தில் அது பழைய சமசமாஜ-கம்யூனிஸ்ட் தலைவர்களின் பிடிக்கு ஒரு சவாலாகத் தலையெடுத்த ஒன்றாகவும் விளங்கியது. அது அதன் பலமாக விளங்கிய போதிலும் மாற்று புரட்சிகர முன்னோக்கும் தலைமையும் அதனிடம் இல்லாமை அத்துடன் இணைந்த பலவீனமாக விளங்கியது. புரட்சிகரத் தலைமையினாலும் நனவினாலும் வழிநடத்தப்படாத தொழிலாளர் வர்க்க இயக்கம், அதன் வரலாற்று முற்போக்கு யதார்த்தம் இருந்தாலும் எதிரி வர்க்கத்தின் சூழ்ச்சிகளுக்கும் பொறிகளுக்கும் அகப்படுவதை தவிர்க்க முடியாது.

தமது சூழ்ச்சி, பொறிகளுக்குள் மாட்டிக் கொள்ளும் தொழிலாளர் வர்க்கம் தொடர்பாக அனுதாபம் காட்டும் வகையில் சலுகை காட்டும் வழக்கம் முதலாளி வர்க்கத்துக்கு கிடையாது. ஆட்சியைக் கைப்பற்றிய யூ.என்.பி. இதன்படி முதலாளி வர்க்க ஆட்சியை சவாலுக்கு உள்ளாக்கும் வகையில் கிளர்ந்து வந்த தொழிலாளர் வர்க்கத்தைப் பிளவுபடுத்தவும், அதற்கு தாக்குதல் தொடுக்கவும் வாய்ப்பான நிலைமைகளை சிருஷ்டிப்பதில் இறங்கியது.

தமிழ் முதலாளி வர்க்கமும் அதன் முக்கிய அரசியல் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியும், தொழிலாளர் கிளர்ச்சி தொடர்பாகக் காட்டிய மனோபாவம் இதில் இருந்து வேறுபட்டதல்ல. வேறுபடக் கூடியதும் அல்ல. அவ்வாறே தொழிலாளர் வர்க்கத்தை பிளவு படுத்தவும் நசுக்கித் தள்ளவும் யூ.என்.பி. திட்டமிட்ட வேலைத் திட்டத்துக்கு அது இயைந்து போவது எதிர்பார்க்கக் கூடிய ஒன்றாக விளங்கியது.

யூ.என்.பி யைப் போலவே தமிழர் விடுதலைக் கூட்டணியும் முகம் கொடுத்த மற்றொரு பொதுப் பிரச்சினையும் இருந்து வந்தது. தீவிரமடைந்து வந்த இளைஞர் இயக்கத்தினை தமது பிடிக்குள் கொணர்வது எப்படி? என்பதே அப்பிரச்சனை.

அனைத்துலக ஐக்கியத்துக்கான தொழிலாளர் வர்க்க வேலைத்திட்டத்துக்கு எதிராக, சிங்கள சோவினிசத்தை தலைமேல் கொண்டிருந்த ஜே.வி.பி. தலைவர்கள், சதிகார ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டிருந்தனர். அதன்படி அவர்கள் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டு அரசியலில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்களேயானால், அவர்களால் திரட்டக்கூடிய குட்டி முதலாளித்துவ மக்கள் பகுதியினரை இனவாத குளறுபடிகளால் குழப்பியடித்து தம்பின்னால் ஈர்க்கும் வழி பற்றி சிந்திக்கும் வண்ணம் யூ.என்.பி. தள்ளப்பட்டது. அவ்வாறே சிங்கள இனவாத பாகுபாடுகளினதும் அடக்குமுறைகளினதும் தாக்கத்திற்கு உள்ளாகி பிரிவினைவாதத்தை நோக்கி ஈர்க்கப்பட்டிருந்த தமிழ் இளைஞர்களை தமது பிடிக்குள் கொணர்வது எப்படி என்பது முதலாளித்துவ தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு ஒரு பாரிய பிரச்சினையாக உருவெடுத்தது.

இலங்கையில் சிங்களம் மற்றும் தமிழ் பேசும் மக்கள் பகுதியினர் மீது அரசியல் அதிகாரத்தைக் கொண்டிருந்த முதலாளி வர்க்கத்தின் இரு சாராரும், தொழிலாளர் விரோத முதலாளித்துவ காட்டுமிராண்டி இலக்குகளை இட்டுநிரப்புவதற்கான மார்க்கமாக இனவாதத்தை கிளறிவிட முடிவுசெய்தனர். தமது ஆட்சியைக் காக்க அர்ப்பணித்துக்கொண்ட பிற்போக்கு முதலாளி வர்க்கம், தோலின் நிற வேறுபாடு மட்டும் அல்ல, ஒரே தோல் நிறத்தைக் கொண்டிருந்தாலும் அவர்களிடையே மொழி வேறுபாடுகளையும், ஒரே மொழி பேசுவோருக்கு இடையேயான வரலாற்று ரீதியில் நாற்றம் கண்ட சாதி, மத வேறுபாடுகளையும் கூடப் பாவித்து, தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களை ஆளுக்காள் மோதவைக்கும் மற்றும் கொன்று தள்ளும் கடைகெட்ட சமூக நிலைமைகளை நிர்மானிப்பதற்கும், இந்தச் சகாப்தத்தில் திரும்பியுள்ளது. ஒடுக்கும் தேசிய இனத்தினதும் ஒடுக்கப்படும் தேசிய இனத்தினதும் முதலாளித்துவ வர்க்கப் பகுதியினர் இடையேயும் இது சம்பந்தமாக எதுவித கருத்துவேறுபாடும் கிடையாது. முதலாளித்துவ அமைப்பின் செழிப்புக் காலத்தில் வழங்கப்பட்டு வந்த உதவி மானியங்கள் மூலம், தம்பின்னால் ஈர்த்துக் கொண்ட கிராமப்புற, நகர்ப்புற குட்டி முதலாளித்துவ வர்க்கங்களின் நுகர்வுக்கு முதலாளி வர்க்கத்தால் இன்று வழங்கக் கூடியது, அழிவுநிறைந்த இனவாதம் மட்டுமேயாகும்.

சிங்கள-தமிழ் வேறுபாடு இல்லாமல், முதலாளி வர்க்கம் ஒன்றிணைந்து இரண்டு தேசிய இனங்களையும் சேர்ந்த தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களை சுரண்டி, ஒடுக்கி வந்த ஒரு காலப்பகுதியும் இருந்து வந்தது. முதலாளித்துவ அமைப்பின் நெருக்கடி உக்கிரம் கண்டதனாலும் தொழிலாளர் வர்க்கத்திடம் இருந்து தோன்றிய சவாலினதும் எதிரில், தமிழ் சிறுபான்மை மக்களுக்கு எதிரான பாகுபாடு உக்கிரம் கண்ட ஒரு நிலமையினுள், சிங்கள-தமிழ் முதலாளி வர்க்கத்தின் இரு சாராரினதும் அரசியல் ஐக்கியமும் சிதறுண்டு போயிற்று. அதன் பெறுபேறாக தமிழ் முதலாளி வர்க்கம் முற்போக்குத் தன்மையை கைவரப் பெற்றதோ அல்லது பெறப்போவதோ கிடையது. சிறுபான்மை மக்கள் குழுக்களுக்கு எதிரான இன, மத மற்றும் வேறு அழுத்தங்களைக் கட்டவிழ்த்துவிட உடன்பட்டு, இனவாத பாகுபாடுகளை ஒழித்துக்கட்ட தொழிலாளர் வர்க்கத்துக்கு உள்ள பலத்தை நிராகரிக்கும் அதே வேளையில் போலி வீரியத்தை காட்டும் பொருட்டு ஒடுக்கப்படும் மக்களின் முதலாளித்துவ பகுதியினருக்காக வக்காலத்து வாங்குவதையே குட்டி முதலாளித்துவ தீவிரவாதிகள் செய்கிறார்கள். இந்த முதலாளித்துவ சார்பு விதிமுறையை நிராகரிக்கும் மார்க்சிச புரட்சியாளர்கள், அனைத்துலகவாத தொழிலாளர் வர்க்கத் தீர்வுக்காக போராடுகின்றார்கள். என்றும் நிஜ மார்க்சிஸ்டுக்களின் விதிமுறை இதுவாகவே இருந்து வந்தது.

ஸ்டாலினிச கம்யூனிஸ்ட் கட்சி முன்கூட்டியே தேசியவாத சேற்றினுள் புதைந்து கொண்டிருந்தது. இத்தருணத்தில் தோள்வரை புதையுண்டு போன சமசமாஜக் கட்சி, மார்க்சிச வேலைத்திட்டத்தில் இருந்து அன்னியப்பட்டுப் போயிருந்தது மட்டுமன்றி, முதலாளி வர்க்கத்துக்கு அவசியமான விதத்தில் இனவாதப் பிளவுகளைத் தோளில் சுமந்து கொண்டும் இருந்தது. இந்த அரசியல் வீழ்ச்சியினால் முதலாளி வர்க்கத்தின் இனவாதத்தினை எதிர்த்துப் போராடும் பலமோ அல்லது அவசியமோ சமசமாஜக் கட்சிக்கு இச்சமயத்தில் இல்லாது போயிற்று. 1964ல் முதலாளித்துவ கூட்டரசாங்கத்தினுள் நுழைந்து கொள்ளும் சலுகைக்கான கப்பமாக, தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தை சமசமாஜ கட்சி ஆதரித்தது. இதில் இருந்து பத்து ஆண்டுகளின் பின்னர், 1974 அளவில் சமசமாஜக் கட்சி மலைநாட்டு சிங்கள மக்களை தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக தூண்டி விடுவதில் இறங்கியது. தமிழ் மக்களின் மீதான ஒடுக்குமுறையை உக்கிரமாக்கி அரசியலமைப்புச் சட்டத்தினை வரைந்த அரசியலமைப்பு விவகார அமைச்சர் பதவிக்கு மேலதிகமாக, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் பதவியையும் வகித்த லங்கா சமசமாஜக் கட்சித் தலைவர் கொல்வின் ஆர். டி. சில்வாவின் வார்த்தைகளில் இந்த நச்சுத்தனத்தின் பரிணாமம் வெளிப்பாடாகி இருந்தது.

இயக்கவியலில் சிலதை எடுத்துக்கொண்டு பலவிதமான அர்த்த திரிப்புக்களின் மூலம் பிற்போக்கு இலக்கு நோக்கி வழிநடத்தும் இயலுமை கொண்ட கொல்வின் ஆர்.டி.சில்வா, தோட்டத் தொழிலாளர் பிரச்சினை பற்றி 1974ல் பின்வருமாறு எழுதியுள்ளார்; ''சகல திசைகளிலும் பரந்துபட்டு வாழும் கிராமப்புற மக்களால் தோட்டப் பகுதிகளில் காணிகளைக் கைப்பற்றுவது இடம்பெறாமல் இருக்க முடியாத சந்தர்ப்பத்தை நினைத்துப் பாருங்கள். அத்தகைய பரந்த காணிகளை கைப்பற்றும் இயக்கம், நிச்சயமாக ஒரு ஆழமான புரட்சிகர நடவடிக்கையாகும். எனினும் அத்தகைய காணிகளைக் கைப்பற்றுவதன் நோக்கம், காணிகளை பங்கிட்டு வழங்குவதும் பின்னர் தோட்டத் துறையை உடைத்து எறிவதாக இருப்பதால், அந்த நடவடிக்கையின் இலக்கு குட்டி முதலாளித்துவ இலக்காகுவது மட்டுமன்றி, அது வர்க்க குழு என்ற முறையில் தோட்டத் துறையில் தொழிலாளர்களின் அடிப்படை அவசியங்களையும் பிரச்சனைக்கு உள்ளாக்குகின்றது.

''எம்மால் கவனத்தில் கொள்ளப்பட்ட இப்பிரச்சனை, இருந்துவரும் வர்க்க உறவுகளின் சிக்கலில் இருந்து தோன்றும் இலங்கைப் புரட்சியின் சிக்கலைச் சுட்டிக்காட்டுகிறது. இந்தச் சிக்கல் தொடர்பாக விதிமுறையைக் கையாள்கையில் இடர்பாடுகள் தோன்றுகின்றது. எனினும் விதிமுறை தெளிவானது. அதாவது, புரட்சியின் வெற்றிகரமான அபிவிருத்தியை பற்றிய பரந்த அவசியத்துக்காக, தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு பகுதியினரின் உடனடி அவசியத்தை அவ்வாறே இட்டுநிரப்ப அர்ப்பணிக்க வேண்டும்.'' (கட்சியும் புரட்சியும் -கொல்வின் ஆர்.டி.சில்வா கட்சிக் காரியாளர்களுக்கு நிகழ்த்திய விரிவுரை- 1974, சமசமாஜ கட்சி வெளியீடு)

யூ.என்.பி.யில் இருந்து சி.ல.சு.க. ஊடாக ஜே.வீ.பி. வரையிலான சகல தொழிலாளர் எதிர்ப்புக் கட்சிகளும் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக வெளிப்படுத்தும் ஆழமான குரோதத்தினை சமசமாஜக் கட்சித் தலைவர் சுடச் சுட வாந்தியெடுக்கும் விதத்தை அந்த வாந்தியின் ''சிக்கலினால்'' தன்னும் மூடிக்கொள்ள முடியாது.

இத்தகைய ஒரு கட்சி 1977ல் வகித்த பாத்திரம், முதலாளி வர்க்கம் சுதந்திரமாக தமது இனவாத வேலைத் திட்டத்தினை நடைமுறைக்கிட இடமளித்ததும் அதனுடன் கூட்டுச் சேர்ந்ததுமேயாகும்.

1977 ஜூலை தேர்தலில் சி.ல.சு.க. பெற்ற பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 8 ஆக விளங்கிய அதே வேளையில் தமிழர் விடுதலைக் கூட்டணி 17 ஆசனங்களைப் பெற்றது. இதனால் பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவர் பதவி அமிர்தலிங்கத்துக்குக் கிடைத்தது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் தனிநாட்டுக்கு போராட சபதம் செய்திருந்தது. இது சம்பந்தமான கொள்ளை விளக்க அறிக்கையின் பந்தி பின்வருமாறு கூறுகின்றது; ''வாக்குகளால் தெரிவுசெய்யப்படும் தமிழ் பேசும் பிரதிநிதிகள், சமாதான வழியிலோ தீர்க்கமான வேலைத்திட்டத்தின் அடிப்படையிலோ ஒரு போராட்டத்தின் மூலம் தமிழ் ஈழத்தின் சுயாதீனத்தினை ஊர்ஜிதம் செய்யும் ஈழம் அரசுக்கான அரசியலமைப்பினை வரையும் பொருட்டு, தமிழ் ஈழத்தின் தேசிய சபையாகவும் ஒருங்கு திரள்கின்றார்கள்.'' பிரிவினைவாதத்தினை நோக்கி ஈர்க்கப்பட்டிருந்த தமிழ் குட்டி முதலாளித்துவ தீவிரவாத இயக்கத்தின் தாக்கமும் அதைத் தமது கைக்குள் கொணரும் பொருட்டு தமிழ் முதலாளித்துவ வர்க்கத்தின் திருப்பமும் அந்த அறிக்கையின் மூலம் வெளிப்பாடாகியது.

தேர்தல் இயக்கத்தினுள் தமது நலனை முன்னிட்டு தாமும் அடிபணிந்து தூண்டிவிட்ட பிரிவினைவாத உணர்வுகள், இப்போது தமிழர் விடுதலைக் கூட்டணியினர் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்பதற்கு மட்டுமன்றி, அங்கு ஆசனங்களில் அமர்வதற்கு எதிராகவும் கிளர்ந்து எழுந்தன. இளைஞர் முன்னணி வெளியிட்ட பிரசுரம், ''தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கியுள்ள வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்காமல், அரசியலமைப்பினை வரைந்து கொள்ளும் பொருட்டு தமிழ் ஈழ தேசிய சபையாக தமிழர் விடுதலைக் கூட்டணிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அணிதிரளவேண்டும்'' என்று கூறியது.

குட்டி முதலாளித்துவ இளைஞர்களின் உத்வேகம் என்னவாக இருந்த போதிலும், அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி தனிநாட்டுக்கான நடவடிக்கையில் இறங்க இது தருணம் அல்ல எனத் தீர்மானம் செய்தது. அது கையைச் சுட்டுக் கொள்வதாகும். அந்தத் தீர்மானத்தின் பின்னணியில் ஆதிக்கம் செலுத்திய முக்கிய காரணி, பழைய தலைமைத்துவத்தால் காட்டிக்கொடுக்கப்பட்டு கைவிடப்பட்டிருந்த, இந்நாட்டின் சிங்கள-தமிழ் பேசும் தொழிலாளர் வர்க்கத்தினுள் இன்னமும் முழுமையாக சிதைந்து போயிருக்காத ஐக்கியமும் பலமுமே ஆகும். அந்தப் பலம் உடைந்து போகும் வரை தனிநாடாக அணிதிரள முடியாது என்பதை தமிழ் முதலாளிகள் புரிந்து கொண்டிருந்தது மட்டுமன்றி, அப்பணியை நிறைவேற்ற மத்திய அரசாங்கத்தில் ஆட்சிக்கு வந்த யூ.என்.பி. யின் உதவி இல்லாமலும் செய்ய முடியாது என்பதும் அந்த விளக்கத்தில் அடங்கி இருந்தது.

தொழிலாளர் வர்க்கத்தினை இரத்தத்தில் மூழ்கடிப்பதற்கான முன்நிபந்தனையாக சிங்கள குட்டி முதலாளித்துவக் காடையர்கள் குண்டர்கள் பகுதியினரை இனவாதக் கலகங்களுக்குத் தூண்டும் பொருட்டு எதிர்பார்க்கப்பட்ட விதத்தில் ஜயவர்தன ஆட்சி உடன் நடவடிக்கை எடுத்தது. இதற்காக சிங்கள இனவாத, சாதிவாத இயக்கத்தின் முன்னணியில் நின்று பிரசித்தி பெற்ற சிறில் மத்தியூ, காவி உடை தரித்த கும்பலின் தோள்களில் ஏறி முன்னணிக்கு வந்தார்.

1977ன் பின்னர் தமிழர் விரோத மக்கள் படுகொலைகள்

1977ல் யூ.என்.பி. அரசாங்கம் அமைக்கப்பட்டும் அமிர்தலிங்கம் எதிர்க் கட்சித் தலைவர் பதவியை ஏற்றும் மூன்று வாரங்கள் செல்வதற்குள், தமிழர் விரோத ஆத்திரமூட்டல்களுக்கு ஜயவர்தன ஆட்சி வழியமைத்துக் கொடுத்தது. 1977 ஆகஸ்ட் 12ம் திகதி யாழ்ப்பாணத்தில் றோட்டரிக் கழகத்தினால் புனித பட்றிக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடாத்தப்பட்டு வந்த கார்னிவேலுக்கு சிவில் உடையில் வந்த பொலிஸ் அதிகாரிகள் கூட்டமொன்று, நுழைவுச் சீட்டு இல்லாமலேயே மைதானத்துக்குள் நுழைந்து கொள்ள முயற்சித்தமை ஆத்திரமூட்டலின் ஆரம்பமாகியது. இதைப்பற்றி உயர் பொலிஸ் அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் இதற்கு மறுதினம் கார்னிவேலுக்குள் நுழைந்த மற்றுறோர் பொலிஸ் அதிகாரிகள் கும்பல், அங்கு வருகை தந்திருந்தோர் மீது முதல் நாளைக் காட்டிலும் மோசமான முறையில் தாக்குதல் நடாத்தியது. இருப்பினும் கார்னிவேல் மைதானத்தில் கூடியிருந்த தமிழ் மக்கள் இந்த பொலிஸ் காடையர்கள் கும்பலை மைதானத்தில் இருந்து கலைப்பதில் வெற்றி கண்டனர்.

ஆகஸ்ட் 14ம் திகதி பொலிஸ் பழிவாங்கல்கள் யாழ்ப்பாண வீதிகளில் தலைநீட்டின. துவிச்சக்கர வண்டிகளில் சென்ற தமிழ் மக்களை தாக்கிய பொலிசார் வண்டிகளைத் தோளில் சுமந்து செல்லுமாறு அவர்களுக்கு கட்டளையிட்டனர். இந்தச் சித்திரவதைகளை சகித்துக் கொள்ள முடியாத ஒருவர் ஒரு பொலிஸ்காரரைச் சுட்டார்.

மறுநாள் அதிகாலை வீதிகளில் இறங்கிய பொலிசார் வீதிகளில் செல்வோர் மீது அளவு கணக்கற்று தாக்குதல் நடாத்தினர். இந்த நாசங்களைப் பற்றி கொழும்பு பொலிஸ் தலைமையகத்துக்கு செய்த முறைப்பாடுகளாலும் கூட எதுவிதமான நிவாரணமும் கிடைக்கவில்லை. இது யூ.என்.பி. அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் உயர் பொலிஸ் அதிகாரிகளின் ஆசியுடன் தமிழ் மக்களுக்கு எதிராகத் திட்டமிட்டு செய்யப்பட்ட காட்டுமிராண்டித் தாக்குதல் என்பது நிரூபிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 16ம் திகதி அதிகாலையில் சிவில் உடையில் வந்த பொலிஸ் அதிகாரிகள் யாழ்ப்பாண நகரக் கடைகளுக்குத் தீமூட்டினர். இந்தத் தீவைப்பு 24 மணித்தியாலங்கள் பூராவும் தொடர்ந்து நடைபெற்றது. இச்சம்பவங்களால் நான்கு யாழ்ப்பாண நகரவாசிகள் கொல்லப்பட்டதோடு 30க்கும் அதிகமானோர் கடும் காயமடைந்தனர். யாழ்ப்பாண பொதுச் சந்தையின் ஒருபாகமும் தீக்கிரையானது. இச்சம்பவங்களைப் பற்றிக் கேள்விப்பட்டதன் பின்னர் சந்தைப்பக்கம் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கமும் தாக்கப்பட்டார். இச்சம்பவம் பற்றி பாராளுமன்றில் பேசிய அமிர்தலிங்கம் கூடியிருந்த பொலிஸ் அதிகாரிகள் தாம் யார் என்பதை அடையாளங்காட்டியதன் பின்னரும் தம்மை தாக்கியதாக தெரிவித்தார்.

கார்ணிவேலுக்கு வந்த நிராயுதபாணிகளான தமிழ் மக்கள் மீது ஆத்திரமுட்டும் வகையில் தாக்குதல் நடத்துவதன் மூலம் ஆரம்பமான பொலிஸ் காடைத்தனங்கள், கொலைகள், இரத்தக்களரிகள் ஐந்து நாட்கள் தொடர்ந்து நடைபெற்றன. தொடர்ந்து நடைபெற்ற இவற்றை எது விதத்திலும் திடீர் ஆத்திரத்தில் உருவானவையாகக் கொள்ள முடியாது. இவை திட்டமிட்டுச் செய்யப்பட்ட ஒடுக்குமுறை இயக்கத்தின் ஒரு பாகமாகும்.

அதுமட்டுமல்ல, யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி ஏனைய பிரதேசங்களிலும் தமிழ் மக்களுக்கு எதிரான தாக்குதல் நடாத்தும் திட்டமும் தீட்டப்பட்டு இருந்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் கும்பல் எனக் கூறிக்கொண்டு ஒரு இனவாதக் கும்பல் பஸ்ஸில் ஏறி அனுராதபுரத்தில் இறங்கி தமக்கு யழ்ப்பாணத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது என்ற பொய் பிரச்சாரத்தை நடாத்தியது. இதன் மூலம் தெற்கில் இனவாத இரத்தக் களரிக்கு களம் அமைக்கப்பட்டது. இச்சமயத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான மக்கள் படுகொலைத் தாக்குதல்கள் குருணாகலை, மாத்தளை, பொலநறுவை, கண்டி, பாணந்துறை போன்ற இடங்களில் விரைவாகப் பரவி இருந்தது. இது முன்கூட்டியே இரத்த வெறியுடனும் கொள்ளையடிக்கும் திட்டத்துடனும் ஆயத்தமாகி வந்த யூ.என்.பி. குண்டர்களை நடவடிக்கையில் இறக்கியதன் பெறுபேறாக ஏற்பட்டதாகும். கொழும்பிலும் தோட்டத்துறை உட்பட ஏனைய பகுதிகளிலும் தமிழர் விரோதக் காடையர்களின் கலகங்கள் வெடிக்க இச்சம்பவங்களில் இருந்து 24 மணித்தியாலங்கள் தன்னும் பிடிக்கவில்லை.

பல நாட்களின் பின்னர்-ஆகஸ்ட் 20ம் திகதி நாடு பூராவும் ஊரடங்குச் சட்டம் பிரகடனம் செய்யப்பட்டது. சமாதானத்தைக் காக்கும் பேரில் இராணுவம் நாடு பூராவும் கட்டவிழ்த்து விடப்பட்டது. எனினும் பொலிசும் இராணுவமும் இனவாத இரத்தக் களரியுடன் கைகோர்த்தபடியே தொழிற்பட்டன. அவசரகால சட்டம், ஊரடங்குச் சட்டம் மற்றும் பொலிஸ்-இராணுவப் பாதுகாப்புடன் தமிழ் மக்களை கொன்று தள்ளவும் அவர்களின் சொத்துக்களை கொள்ளை அடிக்கவும் இனவாதிகளுக்கு மிகவும் வாய்ப்பான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

யூ.என்.பி.அரசாங்கத்துக்குச் சொந்தமான பத்திரிகைகள் அறிக்கை செய்ததன்படி, இந்த ஒரு சில தினங்களுக்குள் கொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் தொகை 112 ஆகும். நாட்டின் பல மாகாணங்களில் 50000க்கும் அதிகமான தமிழ் மக்கள் வீடுகளை இழந்து அகதிகளாக்கப்பட்டனர். ரூபா.200 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் நாசமாக்கப்பட்டும் கொள்ளை அடிக்கப்பட்டும் இருந்தன. இவை அனைத்தையும் காதுகளால் கேட்டது மட்டுமல்லாது கண்களால் நேரில் கண்டுமுள்ள நளின் த சில்வாவும், குணதாச அமரசேகரவும் அவர்களின் சீடர்களும் இன்னமும் ''தமிழ் மக்களுக்கு சிறப்பாக இழைக்கப்பட்ட அநீதி என்ன'' என்ற கேள்வியை இடைவிடாது எழுப்பிக் கொண்டுள்ளனர்.

யூ.என்.பி. அரசாங்கம் 1977ல் ஆட்சிக்கு வந்ததுதான் தாமதம் யாழ்ப்பாணத்தில் தொடங்கி நாடு பூராவும் கட்டவிழ்த்துவிட்ட இனவாத படுகொலைகள் மற்றும் சமூக அழிவுகளின் எதிரில் சமசமாஜ-ஸ்டாலினிச தலைவர்கள் அரசாங்கத்திற்கு சுண்ணம்பு பூசுவதிலும் இனவாத குண்டர்களை தூண்டுவதிலும் ஈடுபட்டனர்.

இந்த துரோக அரசியல் கட்சிகள் இரண்டும் அப்போது அமைத்துக்கொண்டிருந்த இடதுசாரி ஐக்கிய முன்னணி மூலம், 1977 ஆகஸ்ட் 24ம் திகதி 'ஜய தின' பத்திரிகையில் வெளியிட்ட கட்டுரையில் பின்வருமாறு கூறிக்கொண்டது: "இந்த நிலைமையின் எதிரில் அரசாங்கம் செயற்பட்ட விதம் எந்தவிதத்திலும் திருப்தியற்றது என்பதே இடதுசாரி ஐக்கிய முன்னணியின் கருத்து என்றாலும், அதை ஒரு சந்தர்ப்பவாத பிரச்சினையாக இழுக்க இடதுசாரி ஐக்கிய முன்னணி விரும்பவில்லை...

"சமாதானக் குழுக்களை அமைத்து அவற்றை செயற்பட வைக்க அரசாங்கத்தின் ஒத்துழைப்பு அவசியம். ஆதலால், இத்தகைய சமாதான குழுக்களை அமைக்கவும் அவற்றை செயற்பட வைக்கவும் தமது ஒத்துழைப்பை வழங்குமாறு பொலிசாருக்கும் ஆயுதப்படைகளுக்கும் அரசாங்கத்தின் ஏனைய அதிகாரிகளுக்கும் உடன் கட்டளை வழங்குமாறு நாம் அரசாங்கத்திடம் கோருகிறோம்."

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் இந்த அறிக்கையை "யூ.என்.பி. அரசாங்கத்துக்கு பந்தம் பிடிக்கும் மற்றும் ஆயுதப் படைகளுக்கு வக்காலத்து வாங்கும் அறிக்கை" என சரியான விதத்தில் சுட்டிக்காட்டியது.

இந்தக் கட்டுரைத் தொடரின் ஆசிரியரால் எழுதப்பட்டு அவரின் பெயரில் 1977 ஆகஸ்ட் 26ம் திகதி "கம்கறு மாவத்த" பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டுரை சமசமாஜ-கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையைப் பற்றி மேலும் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது. அது பின்வருமாறு குறிப்பிட்டது: "இந்த தீர்க்கமான கட்டத்தில் தமிழ் பேசும் மக்களின் பாதுகாப்பையிட்டு குரல் எழுப்பாத எவரும் சோசலிஸ்ட் என்ற பெயருக்கு பொருத்தமானவர் அல்ல. சமசமாஜ-கம்யூனிஸ்ட் தலைவர்கள் இந்த கொள்கை சார்ந்த பொறுப்பில் இருந்து ஓட்டம் பிடித்துள்ளனர்...

"இடதுசாரி ஐக்கிய முன்னணி தலைவர்கள் கூறுவது என்ன? இந்த நெறிகெட்ட ஆட்சியாளர்களின் 'மகிழ்ச்சியற்ற' செயற்பாடு வெளித்தோன்றுவது ஒரு "சந்தர்ப்பவாத பிரச்சினை" என்கிறார்கள். வடக்கில் தமிழ் மக்களினதும் சரி தெற்கில் சிங்கள மக்களினதும் சரி எந்தவொரு அடிப்படை பிரச்சினையையும் தீர்த்து வைக்காத முதலாளித்துவ ஆட்சியாளர்கள், படுகொலைகளையும் ஒடுக்குமுறைகளையும் ஒரே தீர்வாகக் கொண்டுள்ளதை மக்கள் படுகொலைகளின் மத்தியில் தன்னும் வாய் திறந்து பேசாத தலைமைத்துவம், முதலாளித்துவ அமைப்புக்கு எதிரான தலைமைத்துவமாவது எப்படி? அத்தகைய தலைமை முதலாளித்துவ வர்க்கத்தின் சகல எதிர்ப் புரட்சி திட்டங்களின் போதும் அதற்கு அடிபணிந்து செயற்படும் சந்தர்ப்பவாத தலைமைத்துவம் ஆகும்."

ஆகஸ்ட் 12ம் திகதி புனித பற்றிக் கல்லூரியில் நடைபெற்ற கார்னிவேலில் தமிழ் மக்களுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டு விஸ்தரிக்கப்பட்ட ஆத்திரமூட்டுகின்றதும் அழிவுநிறைந்ததுமான நடவடிக்கைகளின் பின்னணியில் செயற்பட்ட பிற்போக்கு சக்திகளை பெயர் குறிப்பிட்ட அக்கட்டுரை, சமசமாஜ-கம்யூனிஸ்ட் தலைவர்களின் துரோகத்தை மேலும் விவரிக்கையில் கூறியதாவது:

"நாடு பூராகவும் தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக ஆத்திரமூட்டும் தூண்டுதல்களினதும் சொத்து சூரையாடல்களதும் கொலைகளதும் முன்னணியில் நின்றவர்கள் தேர்தல் காலத்தில் தலையில் பச்சை தொப்பி போட்டுக்கொண்ட யூ.என்.பி. காடையர்களும் பொலிஸ்காரர்களுமே. பிரதமர் உட்பட யூ.என்.பி. தலைவர்கள் வாய்களைத் திறந்த போதெல்லாம் இவர்களைத் தூண்டினர். இனவாத ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக் காரர்களும் இதில் சேர்ந்துகொண்டனர். ஆத்திரமூட்டும் வதந்திகளைப் பரப்பும் அப்பட்டமான சாதனங்களாக ஆயுதப் படைகள் விளங்கின. இதை முழு நாடும் அறியும்.

"இடதுசாரி ஐக்கிய முன்னணி தலைவர்கள், இந்த சம்பவங்கள் ஒன்றை பற்றியோ அல்லது அதன் சிருஷ்டிகர்த்தாக்கள் பற்றியோ ஒரு வார்த்தை தன்னும் கூறாமல் நாடு சகஜ நிலைமைக்குத் திரும்புவது பற்றி பேசுவது படு கேவலமான மோசடியாகும்.

இந்த சகல நிலைமைகளும் அம்பலமாகியுள்ள ஒரு நிலையில், ஒன்றில் கோழைத்தனமான மடையர்களுக்கு அல்லது திட்டமிட்டு தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்கள் இயக்கத்தை தடம்புறள வைக்கும் முதலாளித்துவ கொந்துராத்தினை எடுத்தவர்க்கே தமிழ் மக்களின் பாதுகாப்பினை புறக்கணித்து யூ.என்.பி. அரசாங்கத்திற்கும் ஆயுதப் படைகளுக்கும் பந்தம் பிடிப்பது சாத்தியமாகும். சமசமாஜ-கம்யூனிஸ்ட் தலைமையின் பெரும்பான்மை குழுவினர் இரண்டாம் தரத்தைச் சேர்ந்தவர்கள். இதை அவர்கள் தமது வரலாற்றின் மூலம் நிரூபித்துக்கொண்டுள்ளனர். முதலாம் தரத்தைச் சேர்ந்த சிலரும் கடந்த கூட்டரசாங்க காலத்தில் எச்சில் சோற்றில் வயிற்றை நிரப்பிக்கொண்டு இந்த கட்சியின் தலைமையின் மூலைமுடுக்குகளைப் பிடித்துக் கொண்டுள்ளனர். இப்போது தமது வர்க்கத்தினதும் விவசாயிகளதும் வேலையற்ற இளைஞர்களினதும் வீட்டுப் பெண்களினதும் தமிழ் பேசும் மக்கள் பகுதியினரதும் அடிப்படை உரிமைகளைக் காக்கும் பொருட்டு முன்னணியில் நிற்கையில் தொழிலாளர் வர்க்கத்திற்கு உள்ள முக்கிய தடை இந்தத் தலைவர்கள் கும்பலே." (விஜே டயஸ், கொள்ளை கொலை பரவுகையில் சமசமாஜ-கம்யூனிஸ்ட் தலைவர்களின் சந்தர்ப்பவாத அறிக்கை. கம்கறு மாவத்த 1977 ஆகஸ்ட் 26)

இந்த ஆய்வுகளுக்கு இனங்க, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தால் தொழிலாளர் வர்க்கத்தின் முக்கிய பணி பற்றி சுருக்கமாக சுட்டிக் காட்டப்பட்டிருந்த "கம்கறு மாவத்த" ஆசிரியர் தலையங்கம் பின்வருமாறு குறிப்பிட்டது: "யூ.என்.பி. அரசாங்கத்தின் கீழ் ஆரம்பமான இனவாத ஆத்திரமூட்டல்களின் முக்கிய படிப்பினை, சீர்திருத்தவாத தலைமைகளை கலைத்துவிட்டு தமது கைக்குள் அரச அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொள்ளும் முன்நோக்கின் கீழ் வழிநடாத்தும் தலைமையைக் கட்டியெழுப்பும் பணியை தொழிலாளர் வர்க்கம் பின்தள்ளிப் போட முடியாது என்பதாகும். தொழிலாளர் வர்க்கத்தினை அரசியல் ரீதியில் நிராயுதபாணியாக்குவது என்பது எதிர்ப் புரட்சி சக்திகளை ஆயுதபாணியாக்குவதாகும்.

"யூ.என்.பி. அரசாங்கத்தை வெளியேற்றி தொழிலாளர் விவசாயிகள் அரசாங்கத்தை ஆட்சிக்கு கொணரும் முன்நோக்கின் அடிப்படையில் தொழிலாளர் வர்க்கத்தை சூழ தமிழ் பேசும் மக்கள் உட்பட சகல ஒடுக்கப்படும் மக்களையும் அணிதிரட்ட தொழிலாளர் வர்க்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

"வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை நிபந்தனையற்று ஊர்ஜிதம் செய்வதும் அனைத்து இனவாத சட்டங்களையும் ஒழித்துக் கட்டுவதும் சகல முதலாளித்துவ இராணுவங்களையும் குண்டர் படைகளையும் கலைக்கும் பொருட்டு தொழிலாளர் வர்க்கத்தின் பாதுகாப்புக் கமிட்டிகளைக் கட்டியெழுப்புவதும் இனவாத குண்டர் படைகளை வீதிகளில் இருந்து கலைக்க நடவடிக்கை எடுப்பதுவும் இந்த முன்நோக்கின் தவிர்க்க முடியாத அம்சங்களாகும்."

சமசமாஜ கம்யூனிஸ்ட் தலைவர்கள் மட்டுமன்றி சகல வகையான மத்தியவாதிகளும் குட்டி முதலாளித்துவ தீவிரவாதிகளும் இந்த முன்நோக்கும் வேலைத் திட்டமும் தொழிலாளர் ஒடுக்கப்படும் மக்களிடையே வேரூன்றச் செய்யும் போராட்டத்திற்கு எதிராக செயற்பட்டனர். அதில் விக்கிரமபாகு கருணாரட்னவின் தலைமையில் பிற்காலத்தில் நவசமசமாஜக் கட்சியை அமைக்க ஒன்றிணைந்த வாசுதேவ நாணயக்கார முக்கிய பேர்வழியாவார்.

இந்தச் சகலரதும் உதவியோடு தமது கையை மேலும் பலப்படுத்திக் கொண்ட யூ.என்.பி. அரசாங்கம், ஆகஸ்ட் இனவாத பயங்கர இயக்கத்தின் மத்தியில் நாடு பூராகவும் அடக்குமுறையை இறுக்கமாக்கும் பொருட்டு புதிய அரசியலமைப்பு சட்டத்தை வரைந்துகொள்ள விரைவாக நடவடிக்கை எடுத்தது. 1977 செப்டெம்பரில் அதற்கான தெரிவுக் குழு அமைக்கப்பட்டது. 1948 சுதந்திரம் என சொல்லிக்கொள்ளப்பட்ட பெப்பிரவரி 4ம் திகதியின் முப்பது ஆண்டுகளின் பின்னர், 1978ல் ஜே.ஆர். ஜயவர்தன ஜனாதிபதி பதவியில் வேரூண்றிக்கொள்ள இதனைப் பயன்படுத்தினார். புதிய அரசியலமைப்புச் சட்டத்தினை நிறைவேற்றிக்கொள்வதற்கு முன்னரே, 1972 அரசியலமைப்புக்கு கொணர்ந்த ஒரு திருத்தத்தின் மூலம் இதற்கு வழிவகுக்கப்பட்டது. 1972 அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் ஜனநாயகம் சதாகாலமும் ஸ்தாபிதம் செய்யப்பட்டுவிட்டதாக கொல்வின். ஆர்.டி. சில்வா கூறிக்கொண்ட பொய் இதன் மூலம் ஆகாயத்தில் வெடித்துச் சிதறியது. 1975/76ல் தோன்றிய தொழிலாளர் வர்க்கப் போராட்டத்தினைப் போலவே யூ.என்.பி.யின் திறந்த பொருளாதாரக் கொள்கையின் தீய விளைவுகளுக்கு எதிராக தவிர்க்க முடியாத விதத்தில் தோன்ற இருந்த ஒரு தொகை வர்க்கப் போராட்டங்களையிட்டு கிலியடைந்து போயிருந்த ஆளும் வர்க்கம், யூ.என்.பி-ஸ்ரீ.ல.சு.க. பிளவுபடாத விதத்தில் சர்வாதிகாரத்தை கையில் எடுத்துக்கொள்வதற்காக எந்தளவுக்கு வெறிகொண்டிருந்தனர் என்பது நிறைவேற்று ஜனாதிபதி பதவியை ஸ்தாபிதம் செய்வதில் காட்டிய கடுகதி வேகத்தின் மூலம் பிரசித்தமாகியது.

தமிழர் விடுதலைக் கூட்டணியினர் அரசியலமைப்பு தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் நடவடிக்கைகளை பகிஷ்கரிக்கத் தீர்மானம் செய்தனர். எனினும் முதலாளித்துவ அமைப்புடனும் அதன் ஆட்சியுடனுமான பிரிக்க முடியாத உறவை அம்பலமாக்கும் வகையில், அரசிலமைப்பு நிர்ணயம் தொடர்பாக யூ.என்.பி. அரசாங்கம் கூட்டிய ஒரு தொகை மகாநாடுகளிலும் கருத்துரையாடல்களிலும் அவர்கள் பங்கு கொண்டனர். இது 1943ல் சோல்பரி அரசியலமைப்பு நிர்ணயத்தில் கலந்து கொள்வதை பகிரங்கமாக "பகிஷ்கரித்த" ஏகாதிபத்திய சார்பு தேசிய காங்கிரஸ், அதனுடன் தொடர்புடைய ஒரு தொகை கலந்துரையாடல்களை சோல்பரி பிரபுவுடன் அந்தரங்கமாக நடத்திய கோழைத்தனமான மோசடியை ஞாபகத்துக்கு கொணரும். அதிகார முதலாளித்துவ பகுதியினரின் ஆணையை எதிர்க்கும் மோசடியான வாய்வீச்சுக்களுக்கு இடையேயும் ஒடுக்கப்படும் தேசிய இணங்களின் கைக்கூலி முதலாளித்துவ பகுதியினரின் வஞ்சகப் பண்பு பலவீனங்கள் அவர்களின் நிறத்திற்கு இணங்கவோ அவர்கள் பேசும் மொழிக்கு இணங்கவோ மாறுவது கிடையாது. அவ்வாறே ஆளும் முதலாளித்துவ பகுதியினருடன் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் கைக்கூலி முதலாளிகள் நடாத்தும் பேரங்களின் பேரில் கையாள்வது வார்த்தைகளா? ஆயுதமா? என்பதற்கு இணங்க அவர்களின் வர்க்க விதிமுறைகள் மாற்றம் கண்டுவிடாது.

தமிழர் விடுதலைக் கூட்டணி அரசியலமைப்புச் சபையின் நடவடிக்கைகளில் பகிரங்கமாகக் கலந்துகொள்ளாதது ஏன்? இதை 1977 அக்டோபர் 5ம் திகதி அமிர்தலிங்கம் பாராளுமன்றத்தில் வெளியிட்ட அறிக்கையின் மூலம் வெளிப்படுத்தினார். அது தமிழ் தேசியவாதத்தினதும் அதன் முதலாளித்துவ பிற்போக்கு தன்மைகளையும் அம்பலப்படுத்தியது. "ஜயவர்தன தம்மை ஆட்சி செய்வது பிரதமராகவா அல்லது ஜனாதிபதியாகவா என்பதையிட்டு தமிழ் மக்களுக்கு அக்கறை கிடையாது என அவர் கூறினார். "தமிழ் மக்களுக்கு இந்த அரசாங்கத்தின் வடிவங்களில் அர்த்தமில்லை. எமது வீடு தீப்பிடித்துக்கொண்டுள்ள நிலையில், நாம் கதவுச் சீலை நீளமா பச்சையா என்பதையிட்டு அக்கறைப்பட்டுக்கொள்ள முடியுமா? என அவர் அர்த்தமற்ற வகையில் கேள்வி எழுப்புகின்றார்.

பாராளுமன்ற ஆட்சி முறையை நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறையாக மாற்றுவது முதலாளித்துவ ஆட்சியிலேயே எற்படுத்தப்பட்ட ஒரு உருவ மாற்றம் மட்டுமே. இந்த அர்த்தத்தில் எடுத்துக்கொண்டால் பாராளுமன்ற முறை பாசிச ஆட்சி முறையாக மாற்றம் காண்பது சம்பந்தமாகவும் இது பொதுவில் நியாயமான ஒரு காரணமாக இருக்கும். ஆனால், தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களின் ஜனநாயக உரிமைகள் தொடர்பாக நோக்குமிடத்து இந்த மாற்றம் பிரமாண்டமான அர்த்தம் பெறுகிறது. "பாராளுமன்ற முறையும் முதலாளித்துவமே. அது மக்களை ஒடுக்குகின்றது. நிறைவேற்று ஜனாதிபதி முறை அல்லது பாசிச ஆட்சி முறையும் முதலாளித்துவமாகும். அவை மக்களை ஒடுக்குகின்றன. ஆதலால் இந்த ஆட்சிமுறையின் மாற்றங்களையிட்டு பொது மக்கள் அக்கறைபட்டுக்கொள்ள வேண்டியதில்லை." இது தொழிலாளர் ஒடுக்கப்படும் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பற்றி அணுவளவும் அக்கறை இல்லாத முதலாளித்துவ சார்பு பிலிஸ்தீனியர்களின் நோக்கமாகும்.

நிறைவேற்று ஜனாதிபதி அரசியலமைப்பு சட்டம் சிங்கள தமிழ் மொழி பேசும் பொது மக்கள் இருசாராரையும் நசுக்கி ஒடுக்குவதை இலக்காகக் கொண்டுள்ள நிலையில், அதைப் பற்றி அமிர்தலிங்கம் தமிழ் மக்களின் "அக்கறையை" பொதுமக்களில் இருந்து வேறுபடுத்தி தனிப்படுத்தி காட்டுகையில் ஒரே சமயத்தில் இரண்டு விடயங்களை வெளிக்காட்டினார். அதாவது, இனவாதத்தை தூண்டி தொழிலாளர் ஒடுக்கப்படும் மக்களை மோத வைத்து சர்வாதிகார ஆட்சியை திணிக்கத் தள்ளப்பட்ட யூ.என்.பி. வழிமுறையைப் போலவே, வளர்ச்சி கண்டுவந்த தமிழ் தேசிய பிரிவினைவாதத்திற்கும் தமிழர் விடுதலைக் கூட்டணி காட்டிய ஆதரவாகும். இந்த இரண்டு வழிமுறைகளையும் ஒன்றாக உள்ளீர்த்துக் கொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணி, அந்த இரு வழிமுறைகளதும் கூட்டினதும் பிற்போக்குத் தன்மையை காட்டிக்கொண்டது.

தமிழ் மக்களுக்கு எதிராக இனவாத பாகுபாடு காட்டவும் அவர்களுக்கு எதிராக யுத்த நடவடிக்கைகளில் இறங்கவும் 1972 அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்தே நடவடிக்கையை ஆரம்பித்துவைத்த முதலாளித்துவ ஆளும் வர்க்கத்திற்கு இந்த நிலைமை தெளிவில்லாமல் இருக்கவில்லை. சீர்திருத்தவாதிகளும் வர்க்க சமரசவாதிகளும் இதையிட்டு அக்கறையின்றியும் இணங்கியும் போயிருந்தனர்.

புதிய நிறைவேற்று ஜனாதிபதி அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான சிங்கள-தமிழ் மக்களின் கூட்டுப் போராட்டத்தைத் தடுக்கும் பொருட்டு, முதலாளித்துவ சார்பு சமசமாஜ-ஸ்டாலினிஸ்டுகளும் நானவித குட்டி முதலாளித்துவ தீவிரவாதிகளும் கொண்டிருந்த முயற்சிகளுக்கு உதவும் வகையில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் நடவடிக்கைகளை யூ.என்.பி.யினர் பெரிதும் மதித்தனர். இது தொடர்பாக தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு கிடைத்த சலுகைகள் அமிர்தலிங்கத்திற்கு வழங்கப்பட்டதன் மூலம் திட்டவட்டமாகவும் தெளிவாகவும் எடுத்துக் காட்டியது. இதுவரை காலமும் பாராளுமன்றத்தில் எந்தவொரு எதிர்க்கட்சித் தலைவருக்கும் கிடைக்காத ஒரு தொகை சலுகைகள் அவருக்கு வழங்கப்பட்டன. ஜே.ஆர். ஜயவர்தனவிடமிருந்து உத்தியோகபூர்வ வாசஸ்தலம், உத்தியோகபூர்வ வாகனம் அத்தோடு பூரண பாதுகாப்பு படைகளும் அவருக்கு கிடைத்தன.

ஜயவர்தனவின் சலுகைகளுக்குப் பதிலாக பதில் சலுகைகளை வழங்கும் பொறுப்பில் இருந்தும் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் தப்பித்துக்கொள்ள முடியவில்லை. யூ.என்.பி. அரசாங்கத்தின் அமைச்சர்கள் கலந்துகொண்ட அரசாங்க வைபவங்களை பகிஷ்கரிக்கும்படி தமிழ் குட்டி முதலாளித்துவ தீவிரவாத இயக்கங்கள் பிரச்சாரம் செய்து வந்தன. அங்ஙனம் செய்ய தமிழர் விடுதலைக் கூட்டணியினர் வாக்குறுதி வழங்கியிருந்தனர். அப்படியிருந்தும் அமிர்தலிங்கம் தலைமைத்துவம் கொடுத்திருந்த அவ்வாக்குறுதிக்கு காலால் உதைத்து விட்டு 1977 டிசம்பரில் வர்த்தக அமைச்சர் லலித் அத்துலத் முதலி பங்குகொண்டதும் யாழ்ப்பாணக் கச்சேரியில் இடம்பெற்றதுமான ஒரு வைபவத்தில் கலந்துகொண்டார். தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் அன்று ஆற்றிய உரையில்: "தமிழ் மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை நீதியாகவும் நியாயமாகவும் தீர்த்து வைப்பதாக பிரதமர் ஜே.ஆர். ஜயவர்தன எமக்கு வாக்குறுதியளித்துள்ளார். அதற்கு அவருக்கு நியாயமான அவகாசம் வழங்க வேண்டும்" என குறிப்பிட்டார். ஜயவர்தனவைப் போலவே சுதந்திரம் என்பதற்கு பின்னே 30 ஆண்டுகளில் முழு முதலாளித்துவ ஆட்சிக் காலத்தில் நீதியையும் நியாயத்தையும் அளவீடு செய்வதற்கு ஒருவருக்கு அனுபவம் இருந்தாலும் ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் முதலாளி வர்க்கத்தினால் அதனடிப்படையில் நின்றுகொள்வது பெரும் கஸ்டமாக இருந்தது. அது ஏகாதிபத்தியச் சார்பு சகல முதலாளித்துவப் பகுதியினரதும் தன்மையை விளக்கியது. தமிழர் விடுதலைக் கூட்டணி ஜே.ஆர். ஜயவர்தனவுக்கு வழங்கிய "நியாயமான கால அவகாசம்" சிங்கள தமிழ் தேசிய இனங்கள் இரண்டினதும் தொழிலாளர் ஒடுக்கப்படும் மக்களின் மீது காட்டுமிராண்டி ஒடுக்குமுறையை திணிக்க வழங்கிய அவகாசமாக நீரூபிக்கப்படுவதற்கு அதிக காலம் செல்லவில்லை.

தமிழர் விடுலைக் கூட்டணியினர் ஜயவர்தன ஆட்சிக்கு முண்டுகொடுக்கத் தள்ளப்பட்டது. இது அவர்களுக்கு கிடைத்த சலுகைகளின் பேரில் செலுத்தும் ஒரு கப்பத்தை விட அதற்கான காரணி அச்சமயத்தில் யாழ்ப்பாணப் பிராந்தியத்திலும் முதலாளி வர்க்கத்திற்கு எதிராக போராட்டங்கள் தோன்றத் தொடங்கியமையேயாகும். இந்தப் போராட்டங்களில் இன்னமும் உடைந்து போகாது இருந்து வந்த சிங்கள-தமிழ் தொழிலாளர் வர்க்க ஐக்கியம் வெளிப்பாடாகியது. இது ஆளும் வர்க்க பிரதிநிதிகள் என்ற முறையில், ஜயவர்தனவைப் போலவே அமிர்தலிங்கத்தினது நடுக்கத்தையும் வளர்ச்சிகாண வைத்தது.

இத்தகைய ஒரு போராட்டமாக யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாக சிங்கள-தமிழ் மாணவர்கள் ஒன்றிணைந்து தொடுத்த விரிவுரை பகிஷ்கரிப்பு விளங்கியது. யாழ்ப்பாண வளாக மாணவர்கள் முகம் கொடுத்த பிரமாண்டமான பிரச்சினைகளுக்கு தீர்வு முன்வைக்க 1977 செப்டெம்பர் 14ம் திகதி கல்வி அமைச்சர் அதன் செனட் சபைக்கு வருவதாக வழங்கயிருந்த வாக்குறுதியை மீறியதையிட்டு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிடுவதன் மூலம் போராட்டம் ஆரம்பமாகியது. அந்த எதிர்ப்புப் பிரச்சாரத்தின் பேரில் இடம்பெற்ற கூட்டங்களில் கொழும்பு வித்தியோதய பல்கலைக்கழங்களின் மாணவர் சங்க தலைவர்களும் உரை நிகழ்த்தினர்.

அந்த விதத்தில் பார்த்தால் மாணவர் எதிர்ப்புப் பிரச்சாரங்கள் ஏற்படுத்தக்கூடிய சமூக அரசியல் தாக்கங்கள் பிரமாண்டமானதாக இல்லாத போதிலும் பெருமளவு மாணவர் போராட்டங்கள் வளர்ச்சி கண்டுவந்த தொழிலாளர் வர்க்கப் போராட்டங்களுக்கான ஒரு முன் அறிகுறியாக விளங்கியது. வளர்ச்சி கண்டுவந்த வர்க்கப் போராட்டங்கள் தொடர்பாக தலைதூக்கி வந்த பீதி, யூ.என்.பி. யின் சர்வாதிகார திட்டங்களைச் சூழ சிங்கள தமிழ் முதலாளிகள் மீண்டும் அணிதிரளுவதற்கான காரணியாகியது.

முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் இந்த சார்பினை விரிவாக விளக்கி தொழிலாளர் ஒடுக்கப்படும் மக்களின் ஜனநாயக வாழ்க்கை உரிமைகளை காக்கும் பொருட்டான வேலைத்திட்டத்தை முன்வைத்தது புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் மட்டுமேயாகும்.

நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஸ்தாபிதம் செய்யும் அரசியல் அமைப்பு சட்ட வரைவு வேலைகள் ஆரம்பித்ததுதான் தாமதம் ஒரு அறிக்கையை வெளியிட்ட புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் அதில் பின்வருமாறு குறிப்பிட்டது:

"ஜே.ஆர். ஜயவர்தன அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் பொனபாட்டிச சர்வாதிகாரியாகத் தோன்றி தொழிலாளர் ஒடுக்கப்படும் மக்களுக்கு எதிராக உள்நாட்டு யுத்தத்தினை தொடுக்கும் நிச அதிகாரத்தை தனது கைக்குள் போட்டுக்கொள்ள முயல்கிறார். அத்தகைய சர்வாதிகார அதிகாரங்களை தீட்டிக்கொள்ளாமல் ஏகாதிபத்திய நிபந்தனைகளின் கீழ் வரும் பொருளாதார பேரழிவுகளை பொதுமக்களின் தலையில் கட்டியடிக்க முடியாது என்பதை யூ.என்.பி. காரர்கள் அறிவர்.

"இங்கு தொழிலாளர் வர்க்கமும் விவசாயிகள், இளைஞர்கள், வீட்டுப்பெண்கள் உட்பட சகல ஒடுக்கப்படும் மக்களும் தமது முழு வளத்தையும் கொண்டு இந்த முயற்சியை தோற்கடிக்க இப்போது போராட வேண்டும்.

"முதலாளித்துவ ஜனநாயகம் பற்றி கொண்டிருக்கும் அனுவளவிலான நம்பிக்கை கூட இக்கட்டத்தில் பேராபத்தான விளைவுகளைக் கொணரும். முதலாளித்துவ அமைப்பின் கீழ் அரசியல் அமைப்பு திருத்தத்தின் கீழ் பெரிதும் சிறந்த ஜனநாயகத்தினை புத்தி சுயாதீனமற்றவர்கள் மட்டுமே எதிர்பார்க்க முடியும்.

"தொழிலாளர் வர்க்கத்தினதும் விவசாயிகளதும் இளைஞர்கள் வீட்டுப் பெண்கள் உட்பட ஒடுக்கப்பட்ட மக்கள் இயக்கத்தினதும் பிரதிநிதிகளைக் கொண்ட அரசியல் அமைப்பு நிர்ணய சபையை கூட்டும் போராட்டத்தின் முன்னணியில் இப்போது தொழிற்சங்கம் நிற்க வேண்டும். ஒடுக்குமுறை சட்டங்களை ஒழிக்கின்றதும் தமிழ் மொழி பேசும் மக்கள் பகுதியினரின் மொழி உரிமை உட்பட அடிப்படை உரிமைகளை ஸ்தாபிதம் செய்கின்றதும் அரசியல் கைதிகளை விடுதலை செய்கின்றதும், அந்தவிதத்தில் அடிப்படை உரிமைகளை ஸ்தாபிதம் செய்யும் அரசியல் அமைப்பினை தயார் செய்ய அத்தகைய ஒரு அரசியல் அமைப்பு நிர்ணய சபையினால் மட்டுமே முடியும்.

"சர்வாதிகாரத்திற்கு தயாராகும் யூ.என்.பி. அரசாங்கத்தை உடனடியாக வெளியேற்றவும் தொழிலாளர் விவசாயிகள் அரசாங்கத்தை ஆட்சிக்கு கொணரவும் போராடுவதன் மூலம் மட்டுமே இந்த இலக்கினை அடைய முடியும்.

"இது வார்த்தை ஜாலங்களுக்கு ஏமாந்து காலத்தை வீனடிப்பதற்கான காலகட்டம் அல்ல. புரட்சி தலைமையின் கீழ் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்படும் மக்கள் பகுதியினரையும் அணிதிரட்டி, முதலாளித்துவ சர்வாதிகாரத் திட்டங்களை தோற்கடிக்க உடனடி நடவடிக்கைகள் எடுப்பது இன்றுள்ள அவசரத் தேவையாகும்" (கம்கறுமாவத்தை ஆசிரியர் தலையங்கம் 1977 செப்டெம்பர் 06).

யூ.என்.பி. அரசாங்க ஜனாதிபதியின் அரசியலமைப்பு நடவடிக்கைகள் ஆரம்பமானதும், "முதலாளித்துவ அமைப்பின் கீழ் அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் மிகவும் சிறந்த ஜனநாயகத்தினை புத்திசுவாதீனமற்றவர்களே எதிர்பார்க்க முடியும்," என புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் சுட்டிக்காட்டி எச்சரிக்கை செய்து ஒரு சில மாதங்கள் கழிவதற்குள் அது நிரூபிக்கப்பட்டது.

புதிய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் 1978 செப்டம்பர் 7ம் திகதி பாராளுமன்றம் திறந்து வைக்கப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணி அதைப் பகிஷ்கரிக்க தீர்மானம் செய்தது. அரசியலமைப்பு மாற்றத்தின் நச்சுத்தன்மையை புரிந்து கொண்ட தமிழ் மக்கள் மத்தியில் அதற்கு எதிராகக் கிளர்ந்த பரந்த எதிர்ப்பின் தாக்கத்தின் கீழ் தமிழர் விடுதலைக் கூட்டணி எடுத்த இம்முடிவு இரண்டு வாரங்களே உயிர் நீடித்தது. செப்டம்பர் 21ம் திகதி அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சத்தியப்பிரமாணம் செய்து, பாராளுமன்ற ஆசனங்களில் அமர்ந்து கொண்டனர்.

இனவாதத்தைத் தூண்டி தொழிலாளர் வர்க்கத்தை பிளவுபடுத்தவும் தமிழ் ஒடுக்கப்படும் மக்களை இரத்தக் களரியினுள் மூழ்கடிக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் ஜே.ஆர். ஜயவர்தன இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் தொண்டமானையும் அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்ளத் தீர்மானம் செய்தார். சமசமாஜ-கம்யூனிஸ்ட் தலைவர்களின் மக்கள் முன்னணிவாத அரசியலின் துணையுடன் தோட்டத் தொழிலாளர்களின் தோளில் ஏறிக்கொண்ட தொண்டமான், தமிழர் ஐக்கிய முன்னணியின் ஆரம்பகாலத் தலைவராகவும் விளங்கியவர். ஆனால், சிங்கள இனவாத முதலாளி வர்க்கத்தினால் தமிழர் விரோத தாக்குதல்கள் உக்கிரமாக்கப்பட்ட நிலைமையில், தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து அகன்று கொண்ட தொண்டமான் அரசாங்கத்தின் பின்னால் அலைந்து அடிவருடும் விதிமுறையைக் கடைப்பிடித்தார். சிறப்பாக 1977ல் ஆட்சிக்கு வந்த யூ.என்.பி. அரசாங்கம் தொழிலாளர் வர்க்கத்துக்கு எதிரான வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் வேலைத்திட்டத்தின் ஒரு பாகமாக தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக பொலிசாரையும் குண்டர்களையும் தூண்டி விட்டது. இந்நிலையில் தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் சுயகோலத்தை காட்டும் வகையில் தொண்டமான் அரசாங்கத்தில் சேர்ந்துகொள்ள முடிவு செய்தார். 1978 செப்டம்பர் 6ம் திகதி அவர் ஒரு அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்து, புதிய பாராளுமன்றத்தில் ஆசனம் பிடித்தார்.

உரிய விதத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அடிபணிவின் மூலம் யூ.என்.பி. அரசாங்கத்திடம் இருந்து கிடைத்தது நிவாரணங்கள் அல்ல. அதற்கு எதிரான விதத்தில் சிறகுகள் வெட்டும் நடவடிக்கையாகும். மாவட்ட அமைச்சர்களை நியமனம் செய்யும் முறையின் கீழ் ஜனாதிபதி ஜயவர்தன முன்னர் ஐந்து அமைச்சர் பதவிகளை வழங்க வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் அக்டோபர் 5ம் திகதி இடம்பெற்ற நியமனங்களில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு மூன்று பதவிகள் மட்டுமே கிடைத்தன. தமிழர் விடுதலைக் கூட்டணி அதையும் நிராகரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

தமிழ் மக்களுக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் எதிரான ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை மேலும் உக்கிரமாக்கும் விதத்தில் ஜனாதிபதி ஜயவர்தன யாழ்ப்பாண மாவட்ட அமைச்சராக யூ.பீ. விஜேகோனை நியமனம் செய்தார். இந்த மாவட்ட அமைச்சரின் செயலாளராக தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு எதிராக இடைத் தேர்தலில் போட்டியிட்ட வைத்தியலிங்கம் துரைசாமியை நியமனம் செய்தார்.

தம்மீது திணிக்கப்படும் அடக்குமுறைகளின் சூடு புரியப் புரிய தமிழ் மக்களிடையே பதட்டம் வளர்ச்சி கண்டுவந்தது. இதனை வடக்கின் நகர்ப்புறக் குட்டி முதலாளித்துவத் தட்டினர் பெரிதும் வெளிக்காட்டிக் கொண்டனர். அவர்களிடையே இளைஞர்களும் மாணவர்களும் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தனர். தமிழர் விடுதலைக் கூட்டணி ஊடாக தமது ஜனநாயக உரிமைகளை மட்டுமன்றி, தமது உயிர்களையும் கூட உத்தரவாதம் செய்துகொள்ள முடியாது என்ற கருத்து அவர்களிடையே பரந்துபட்டு வந்தது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் இளைஞர் அமைப்பான தமிழ் இளைஞர் பேரவை அக்கட்சியில் இருந்து விலகிக் கொள்ள முடிவு செய்தது. அதில் பதவிகள் வகித்த சகலரும் இராஜினாமாச் செய்ய எடுத்த தீர்மானத்துக்கு இணங்க 40 பேர் ஒரேயடியாக இராஜினாமாச் செய்தனர்.

ஆனால், தீர்க்கமான பிரச்சினை என்ன? இந்த இளைஞர் பகுதியினரும் நகர்ப்புறக் குட்டி முதலாளித்துவ பகுதியினரும் என்ன முன்நோக்கினை அடிப்படையாகக் கொண்டிருந்தனர்? இந்தக் கேள்விக்கான பதிலை மார்க்சிஸ இயக்கம் மட்டுமே வழங்கியது.

19ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஐரோப்பாவில் தோன்றிய ஜனநாயக இயக்கத்தினுள் நகர்ப்புற குட்டி முதலாளித்துவ பகுதியினரதும் விவசாயிகளதும் நடவடிக்கைகளை ட்ரொட்ஸ்கி மிகவும் புகழ்பூத்த முறையில் விளக்கினார்: அவர் அங்ஙனம் செய்தது அம்மக்கட் பகுதியினர் மீது வஞ்சம் தீர்ப்பதற்கு அல்ல, வளர்ச்சி கண்டுவந்த வரலாற்று நிலைமைகளின் கீழ் அவர்கள் சமூக ரீதியில் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கும் நிலைமையை புரிந்துகொண்டு அவர்களுக்கு வழிகாட்டி, புரட்சிகரச் சக்தியான தொழிலாளர் வர்க்கத்தின் துணைப்படைப்பிரிவுகளாக அணிதிரட்டும் அவசியத்தினை வலியுறுத்துவதற்கேயாகும். நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டின் அடிப்படையில் விவசாயிகளையும் ஒடுக்கப்படும் இனங்களையும் அணிதிரட்டி 1917ல் ரஷ்ய தொழிலாளர் வர்க்கம் அரச அதிகாரத்தினைத் தனது கைக்குள் எடுத்துக் கொள்ள முடிந்ததும், முதலாளித்துவ வர்க்கத்தினால் தீர்க்க முடியாது போன முதலாளித்துவ ஜனநாயக பாத்திரத்தினை சோசலிசப் புரட்சியின் ஒரு பாகமாக தீர்க்க முடிந்ததும் அந்த அடிப்படையில் வழிகாட்டியதன் மூலமே ஆகும்.

நீண்ட காலத்துக்கு முன்பே 1906ல் ட்ரொட்ஸ்கி சிறப்பாக ஜேர்மன் படிப்பினைகளைப் புரிந்து கொண்டு சுட்டிக்காட்டிய உரையின் ஒரு பாகம் வருமாறு:

"1848ல் முதலாளி வர்க்கத்துக்கு தொடர்பற்ற விதத்திலும் அதைக் கணக்கில் கொள்ளாது நிகழ்வுகளை பற்றி பொறுப்புச் சொல்லும் ஒரு வர்க்கம் அவசியமாகியது. தமது நெருக்குவாரத்தினால் முதலாளி வர்க்கத்தினை முன்னே தள்ளுவதற்கு மட்டும் அல்லாது தீர்க்கமான தருணத்தில் முதலாளி வர்க்கத்தின் அரசியல் பிணக்குவியல் பாதையில் இருந்து அதை வெளியே போடவும் தயாரான ஒரு வர்க்கம் அவசியப்பட்டது. நகர்ப்புற குட்டி முதலாளித்துவ வர்க்கமோ அல்லது விவசாயிகளோ அதைச் செய்வதில் வெற்றி பெறவில்லை.

"நகர்ப்புறக் குட்டி முதலாளித்துவம் நேற்றைய தினத்தை மட்டும் அல்லது நாளைய தினத்தையும் வெறுத்தது. இன்னமும் மத்திய கால உறவுகளில் மூழ்கிப் போயுள்ள அதே வேளையில் "சுதந்திர" கைத்தொழிலுக்கு எதிராக நின்று கொள்ள முடியாது போயுள்ள நிலையிலும் நகரங்களில் தனது அடையாளத்தை இட்டுக்கொள்வதில் வெற்றி கண்டாலும், மத்திய மற்றும் பெரும் முதலாளிகளின் முன்நிலையில் பின்னடைந்தது. பாரபட்சங்களில் தலைமூழ்கி, நிகழ்வுகளின் ஓசையில் செவிடாகிப் போன, சுரண்டப்படும் இன்னும் சுரண்டும் பேராசையினாலும் மற்றும் அந்தப் பேராசையினால் உதவியற்றுப் போன குட்டி முதலாளித்துவம், அன்று தோன்றிய பாரிய நிகழ்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் திக்கற்றுப் போயிருந்தது.

"விவசாயிகள் சுயாதீனமான அரசியல் ஆரம்பிப்பை அதைக் காட்டிலும் மோசமான முறையில் இழந்து இருந்தது. நூற்றாண்டுகளாக சிறைபட்டுக் கிடந்து வறுமையில் தலைமூழ்கிப் போயும் கோபத்தில் வெந்தும் பழையதும் அவ்வாறே புதியதுமான சுரண்டலின் அனைத்து அடிகளையும் தம்பக்கம் ஈர்த்துக் கொண்ட விவசாயிகள், ஏதேனும் ஒரு கட்டத்தில் புரட்சிகர பலத்தின் பிரமாண்டமான மூலமாக விளங்கினர். ஆனால் அணிதிரளாத, சிதறுண்டு போன, அரசியல் மற்றும் கலாச்சாரத்தின் உயிர்மையமான நகரத்தில் இருந்து தனிமைப்பட்டுவிட்ட, தத்தமது கிராமத்தின் தத்துவ அரங்குடன் அடைப்பட்டுப் போன மற்றும் நகரத்தில் இருந்த சிந்தனை அனைத்தையும் பற்றி அக்கறையற்ற விவசாயிகளுக்கு, தலைமைச் சக்தியாக வருவதற்கு எந்த ஒரு முக்கியத்துவமும் இருந்தது கிடையாது. நிலவுடமை சிறைகளின் சுமை தமது தோள்களில் இருந்து அகற்றப்பட்டதுதான் தாமதம் சாந்தமாகிவிடும் விவசாயிகள் தமது உரிமைகளின் பேரில் போராடிய நகரங்களுக்கு வறன்டு போன மகிழ்ச்சியுடன் நஷ்டஈடு வழங்கியது. சுதந்திரம் பெற்ற விவசாயிகள் ஆட்சியாளர்களின் வெறிபிடித்த பாதுகாப்பாளர்களாக மாறினர்." (லியோன் ட்ரொட்ஸ்கி நிரந்தரப் புரட்சி பெறுபேறுகளும் முன்நோக்கும் 188-189)

அன்று போலவே இன்றும் ஜனநாயக உரிமைகளைப் பற்றி வாய்ப்பிளக்கக் கூச்சலிடும் புத்திஜீவிகள் எனப்படுவோரின் இயலளவு பற்றியும் ட்ரொட்ஸ்கி சில வாக்கியங்கள் சேர்க்க மறக்கவில்லை. அவர்களைப் பற்றிக் கூறியது இதுதான்:

"புத்திஜீவி ஜனநாயகவாதிகளுக்கு வர்க்கப் பலம் இருக்கவில்லை. ஒரு தருணத்தில் இந்தக் குழு தமது மூத்த சகோதரியான லிபரல் முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் வாலாக அதை பின்பற்றியது. மற்றொரு தீர்க்கமான சமயத்தில் லிபரல் முதலாளித்துவத்தைக் கைவிட்டு இவர்கள் தமது பலவீனங்களை வெளிக்காட்டிக் கொள்ள வழி வகுத்துக் கொண்டனர். தீர்க்கப்படாத பரஸ்பர முரண்பாடுகள் பற்றித் தாமே குழம்பிப் போய்க் கிடந்த இவர்கள் எல்லா இடங்களிலும் அந்தக் குழப்பங்களை பரப்பினர்."

ட்ரொட்ஸ்கி இங்ஙனம் விபரித்தது முதலாளித்துவ அமைப்பு இன்னமும் வளர்ச்சி கண்டு கொண்டிருந்த நிலைமையின் கீழ் புரட்சிகர சமூக சக்தியாக தொழிலாளர் வர்க்கம் எண்ணிக்கை ரீதியிலும் அமைப்பு ரீதியிலும் இன்னமும் பலம் கண்டிராத ஒரு காலப்பகுதியில் இருந்த நிலைமையையாகும். இருபதாம் நூற்றாண்டினைப் பற்றி பேசும் போது நாம் எண்ணிக்கை ரீதியிலும் அமைப்பு ரீதியிலும் சக்தி வாய்ந்த தொழிலாளர் வர்க்கம் துரோகத் தலைவர்களால் காட்டிக்கொடுக்கப்பட்ட காலப்பகுதிக்குத் திரும்புகின்றோம். இங்கு எமது கவனம் திரும்பும் 1970பதுகளின் இறுதிப் பாகம் அந்தத் துரோகத்தின் உதவியோடு உலகளாவிய ரீதியில் பிற்போக்கு முதலாளி வர்க்கம் தமது கரங்களை பலப்படுத்திக் கொள்ளும் காலப்பகுதிக்காகும்.

தமிழ் குட்டி முதலாளித்துவ அமைப்புக்கள்

தமிழ் ஒடுக்கப்படும் மக்களுக்கு சிறப்பாக அதன் இளைஞர் பகுதியினருக்கு தமது ஜனநாயக உரிமைகளை உத்தரவாதம் செய்வதற்கு எடுக்க வேண்டி இருந்த தொழிலாளர் வர்க்க புரட்சிகர பாதைகள் சமசமாஜ-ஸ்டாலினிச தலைமைகளால் இழுத்து மூடப்பட்டு இருந்தது. அது சிங்கள, தமிழ் தேசிய இனங்கள் இரண்டையும் சேர்ந்த இளைஞர் தலைமுறையினருக்கு இந்தக் கடைகெட்ட தலைமைகள் பெற்றுக் கொடுத்த பேரழிவாகும்.

தமது உரிமைகளை உத்தரவாதம் செய்வதற்கு இயலுமை கொண்ட சமூக சக்தியான தொழிலாளர் வர்க்கம், வர்க்க சமரச சங்கிலியால் பிணைத்துப் போடப்பட்டு இருக்கையில், வழியை தேடிக் கண்டுபிடிக்க முடியாது போன தமிழ் இளைஞர் குழுக்கள் தனிநபர் பயங்கரவாத வழிக்குத் திரும்பினர்.

இந்த வழியில் திரும்பிய பல தமிழ் இளைஞர் அமைப்புக்கள் ஒரு முன்நோக்குப் பாதையை தயார் செய்துகொள்ள குட்டி முதலாளித்துவ இளைஞர்கள் கொண்டிருந்த இயற்கையான இயலாமையை வெளிக்காட்டிக் கொண்டன. பல்வேறு குட்டி முதலாளித்துவ இளைஞர் குழுக்களிடையேயும் விடுதலைப் புலிகள் அமைப்பு தனது உறுதியான கட்டுப்பாடு, அஞ்சாத தியாகம் ஊடாக தனி மனித பயங்கரவாத நடவடிக்கைளில் முன்னணிக்கு வந்திருந்தது இக்கட்டத்திலேயேதான். ஆனால் யூ.என்.பி. அரசாங்கம் ஏகாதிபத்திய சக்திகளின் பக்கபலத்துடன் தயாரித்து வந்த திட்டங்களை தோற்கடிக்க மட்டுமன்றி, அவற்றை ஸ்தம்பிக்கச் செய்வதில் தன்னும் அந்தத் தனி மனித பயங்கரவாத நடவடிக்கைகள் வெற்றி பெறவில்லை.

தமது ஏகாதிபத்திய சார்பு "திறந்த பொருளாதார" வேலைத்திட்டத்தை நடைமுறைக்கிடுவதற்கான நிலைமைகளைத் தாயாரிக்கும் பொருட்டு தொழிலாளர் வர்க்கத்தை பிளவுபடுத்தவும் ஒடுக்கப்படும் மக்களை ஆளுக்காள் மோதிக் கொள்ள வைக்கவும் யூ.என்.பி. அரசாங்கம் தொடுத்த தமிழர் விரோத இனவாதத்தை பாய்ந்து வளர்ச்சி பெறச் செய்வது தமிழ்க் குட்டி முதலாளித்துவக் குழுக்களின் தனிநபர் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு சமாந்தரமாக வேகமாக முன்னேற்றம் கண்டது.

1978 ஏப்பிரல் 7ம் திகதி விடுதலைப் புலிகள் அமைப்பினர் பொலிஸ் அதிகாரி பஸ்தியாம்பிள்ளை உட்பட்ட நால்வரைக் கொலை செய்ததைத் தொடர்ந்து யூ.என்.பி. அரசாங்கத்தில் சேர்ந்த தமிழர் விடுதலைக் கூட்டணி பொத்துவில் எம்.பி. கனகரத்தினத்தை கொழும்பு கொள்ளுப்பிட்டியில் படுகொலை செய்ய அது முயற்சித்தது. யூ.என்.பி. அன்று மரணத்தில் இருந்து தப்பிய போதிலும் யூ.என்.பி அரசாங்கம் அந்த முயற்சியை பாவித்து, தமிழ் மக்களுக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் எதிரான ஒடுக்குமுறையை உக்கிரமாக்குவது தவிர்க்கப்பட்டு விடவில்லை.

இதற்கு அவசியமான நச்சுப் பிரச்சாரத்தினை ஆரம்பிக்கும் பொருட்டு யூ.என்.பி. அரசாங்கம் முக்கிய பேர்வழியாக சமரவீர வீரவன்னியைக் கையாண்டது. கனகரத்தினத்தை கொலை செய்யும் முயற்சி, அமிர்தலிங்கம் அவரை இனத்துரோகி எனக் குறிப்பிட்டதைத் தொடர்ந்தே இடம்பெற்றதாக அவர் பாராளுமன்றத்தில் மே 21ம் திகதி குறிப்பிட்டார். ஏகாதிபத்திய கைக்கூலியாக இலங்கையில் ஆட்சி நடத்தி வந்த யூ.என்.பி. பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் "தேசத் துரோகம்" பற்றி வாய்திறந்தது வன்மத்துக்கு அறிகுறியாகும். வீரவன்னியின் முயற்சி, தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு தொடர் வன்முறைகளை தூண்டிவிடுவதேயாகும்.

இந்த வீரவன்னிதான் இன்று பொதுஜன முன்னணி அரசாங்கத்தின் பிரதித் திட்டமிடல் அமைச்சர். அவரை இடுப்பில் வைத்துக் கொண்டு ஆடும் பொதுஜன முன்னணி அரசாங்கம் தமிழ் தேசிய இனத்தின் உரிமைகளைக் காக்கப் போவதாகக் கூச்சலிட்டுக் கொண்டு, அதிகாரப் பரவலாக்கம் பற்றிக் கூப்பாடு போடுகின்றது. அது புதுமையானதாகும். அதைக்காட்டிலும் கடைகெட்ட அலம்பலில் ஈடுபட்டிருப்பது ஜே.வி.பி. யாகும். இனவாதத் தமிழர் எதிர்ப்பு யுத்தத்தினை புதிய மட்டத்திற்கு உயர்த்திய யூ.என்.பி.யின் சகாக்களுடன் ஒன்றாக உறங்கும் பொதுஜன முன்னணி அரசாங்கம் "ஈழம்" வழங்க ஆயத்தமாகி வருவதாக அவர்கள் கூறிக்கொள்கிறார்கள். அதன் முதல் நடவடிக்கையே அரசியல் தீர்வுப் "பொதி" என்கிறார்கள். இனவாத யுத்தத்தினதும் பொதுமக்கள் ஒடுக்குமுறையினதும் சுக்கானை பாசிச முறையில் தனது கைக்குள் கொணரத் துடிக்கும் ஜே.வி.பி., மக்களை குழப்பியடிக்கும் பொருட்டு முன்வைக்கும் குத்துக்கரணப் பேச்சுக்கள் அத்தகையதாக உள்ளது. அவற்றினால் ஏமாந்து போவது, அமைப்பு ரீதியில் சிறியதாக இல்லாது போயினும் அரசியல் அறிவு குறைந்தவர்களும் புத்தி சுவாதீனமற்றவர்களும் மட்டுமேயாகும்.

தனி மனித பயங்கரவாத விதிமுறையை அரவணைத்துக் கொண்ட தமிழ்க் குட்டி முதலாளித்துவ அமைப்புக்களின் தடுமாற்றங்களையும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியல் வங்குரோத்தினையும் பயன்படுத்திக் கொண்ட யூ.என்.பி., தமிழ் மக்களுக்கு எதிரான வெறிக்குத் தூபம் போட வீரவன்னியின் பின்னால் மாபெரும் இனவாதியும் காட்டுமிராண்டி சாதிவாதியுமான சிறில் மத்தியூவை முன்னணிக்குத் தள்ளியது.

சிறில் மத்தியூ, 1972ல் முதலாளித்துவ சி.ல.சு.க.-சமசமாஜ-கம்யூனிஸ்ட் கூட்டரசாங்கத்தினால் தயார் செய்யப்பட்டு, 1983ல் யூ.என்.பி. அரசாங்கத்தினால் தொடுக்கப்பட்ட தமிழர் விரோத இனவாத யுத்தத்திற்கான வேட்டைத் தீர்த்தார்.

சிறில் மத்தியூவின் இனவாதப் பிரச்சாரம் பற்றி தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கம் ஜனாதிபதி ஜயவர்தனவுக்கு முறைப்பாடு செய்யும் சந்தர்ப்பத்தையும் அதற்கு ஜயவர்தனவின் பிரதிபலிப்புக்களையும் பற்றி பத்திரிகையாளர் டி. சபாரத்தினம் வெளியிட்ட The Murder of a Moderate (ஒரு மிதவாதியின் கொலை) என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது வருமாறு:

"அரசாங்க அமைச்சர் ஒருவர் எம்மைத் தாக்கும் போது நாம் அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பது எப்படி" என அமிர்தலிங்கம் ஆட்சேபனைத் தொனியில் ஜயவர்தனவிடம் குறிப்பிட்டார்.

"ஜயவர்தன சிரித்தபடி இதற்கு பதில் அளித்தார். அவரைப் பற்றி குழப்பம் அடைய வேண்டாம். உங்களது கட்சியுடன் நாம் கொண்டுள்ள நெருக்கமான தொடர்புகள் பற்றி சிங்களத் தீவிரவாதிகள் இடையே சில வெறுப்புக்கள் உள்ளன. மத்தியூவின் பணி அவர்களை மகிழ்விப்பதே."

இந்தச் சம்பவத்தை டி. சபாரத்தினத்திடம் குறிப்பிட்ட அமிர்தலிங்கம், "இந்த நரிகள் தொழிற்படும் விதத்தைப் பாருங்கள்" எனவும் குறிப்பிட்டதாகவும் இந்நூலாசிரியர் கூறுகின்றார்.

திட்டமிட்டு இனவாதத்தைக் கட்டவிழ்த்துவிட சபதம் செய்திருந்த ஜே.ஆர். ஜயவர்தன இச்சந்தர்ப்பத்தில் செயற்பட்டுவந்தது நரியைப் போல் அல்ல, இரத்த வெறி கொண்ட மிருகம் போலாகும். இதற்கு முரண்பட்ட விதத்தில் ஒடுக்கப்படும் மக்களின் தோளின் மீது ஏறிக்கொண்டிருந்த முதலாளித்துவ தமிழர் விடுதலைக் கூட்டணி, கோழைத்தனமான நரியின் பாத்திரத்தை வகித்துக் கொண்டிருந்தது.

கல்விப் பொதுத் தராதரப் பத்திர (உயர்தர) பரீட்சை விடைத் தாள்களைத் திருத்திய தமிழ் பரீட்சையாளர்கள் தமிழ் மாணவர்களுக்கு கூடிய புள்ளிகளை வழங்கியுள்ளார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து சிறில் மத்தியூ கிளர்ச்சியைத் தொடங்கினார். விசேட பத்திரிகையாளர் மகாநாட்டைக் கூட்டிய சிறில் மத்தியூ, உயிரியல் கேள்வித் தாள்கள் இரண்டெனக் காட்டி, நுளம்பின் வாழ்க்கைச் சுற்றோட்டம் பற்றிய கேள்விக்கு இரண்டு புள்ளிகள் மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளதாக மிரட்டினார். நுளம்பின் வாழ்க்கைய விட மேலதிகப் பெறுமதி எதுவுமே கிடையாத இப்பிரச்சினை எழுப்பப்பட்டதற்குக் காரணம், மலேரியாக் காய்ச்சல் போன்று இனவாதத்தினையும் பரப்புவதேயாகும்.

ஆனால் வங்குரோத்தடைந்த முதலாளித்துவ தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் சிவசிதம்பரத்தினால், 1978 டிசம்பர் 11ம் திகதி பாராளுமன்றத்தில் இந்த வெட்கக் கேடான அறிக்கைக்கு வழங்க முடிந்த பதில் "எமக்கு எதையும் சகித்துக்கொள்ள முடியும். ஆனால் குள்ளத்தனமான குற்றச்சாட்டுக்களை சகிக்க முடியாது" என்பது மட்டுமே. சிங்கள இனவாதத்தை தூண்டி தமிழ் மக்களுக்கு எதிரான மக்கள் படுகொலைகளுக்கு தயாராகி வந்த யூ.என்.பி. அரசாங்கத்தை எதிர்கொள்கையில், தமக்கு இருந்து வந்த முதலாளித்துவ பலவீனத்தை தமிழர் விடுதலைக் கூட்டணி நல்லொழுக்க ஆடையால் இழுத்துப் போர்த்திக்கொள்ள முயன்றது.

இத்தகைய வங்குரோத்து வேண்டுகோள்களுக்கு பதிலளிக்கும் பொருட்டு, முதலாளி வர்க்கம் பிரித்தானிய ஏகாதிபத்திய காலத்தில் இருந்தே தயார் நிலையில் வைத்திருந்து, பால் வார்த்து மீண்டும் மீண்டும் சாயம் தீட்டி வைத்திருந்த பிக்குமார் பரம்பரையையேயாகும்.

தாம் குறைந்தபட்சம் மூன்று மகா சங்கத்தினராக பிளவுபட்டுக் கிடப்பது ஏன் என்பதை பற்றி எந்த ஒரு நிஜமான விளக்கத்தையும் வழங்க இலாயக்கற்று உள்ள மூன்று மகா சங்கத்தினரும், முன்னணியில் பாய்ந்து நாட்டைப் பிளப்பதை எதிர்ப்பதாக கூச்சல் போடத் தொடங்கினார்கள். சாதிவாதத்துக்கு இணங்க பிளவுண்டு போய் தத்தமது உண்டியல்களை வெவ்வேறாக நடத்திவரும் மகா சங்கத்தினரின் கூட்டைக் காட்டிக் கொண்ட ஐக்கிய பெளத்த சபை எனப்படுவதும், தமிழர் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு காவி உடையை வரிந்து கட்டிக்கொண்டு பாய்ந்து விழுந்தது. அந்தக் கூட்டத்தில் அஸ்கிரிய பெளத்த பீடத்தின் தலைமைப் பிக்குவான பலிபானே சந்தானந்தவும் மல்வத்த பெளத்த பீடத்தின் தலைவர் றம்புக்வெல்ல சிறீ சோபித்தவும் கலந்து கொண்டனர். மிருகங்கள் சம்பந்தமாக கொல்லாமையை போதிக்கும் தர்மம், பிற்போக்கு ஆளும் வர்க்கத்தின் அவசியங்களுக்கு இணங்க மனிதர்கள் சம்பந்தமாக இம்சையின் தோற்றுவாயாக இருக்கும் விதத்தை இந்த அபிவிருத்திகள் வெளிப்படுத்தின.

இந்த விஷப் பாம்பை பாவித்துக் கொண்டு இனவாத வாகனத்தின் சுக்கானைப் பிடித்துக் கொண்டிருந்த ஜே.ஆர். ஜயவர்தன, 1979ன் முடிவுக்கு முன்னர் வடக்கு பயங்கரவாதத்துக்கு முடிவுகட்டுவதாக வாயடித்தக் கொண்டு பிரிகேடியர் வீரதுங்கவை வடக்கின் தளபதியாக நியமித்தார். பிரகேடியர் வீரதுங்கவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதியின் கட்டளையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டது:

"தீவிலும் சிறப்பாக யாழ்ப்பாண மாவட்டத்திலும் சகல வடிவங்களையும் கொண்ட பயங்கரவாத தொற்றுநோயை ஒழித்துக் கட்டுவது உங்களது கடமையாகும். நான் உங்கள் சேவைக்காக அரசின் அனைத்து வளங்களையும் வழங்குகின்றேன். சட்டங்களை மதிக்கும் அனைத்துப் பிரஜைகளையும் உங்களுக்கு அவர்களின் ஒத்துழைப்பை வழங்கும்படி நான் வேண்டுகிறேன். இந்தப் பாத்திரத்தை இட்டு நிரப்பும் நீங்கள் அதை 1979 டிசம்பர் 31க்கு முன்பு நிறைவு செய்ய வேண்டும்." வார்த்தைகள் கண்டிப்பானவை. கட்டளைத் தோரணை இறுக்கமானது. இலக்கோ நிச்சயமானது. ஆனால், அவை எல்லாம் புஷ் வாணமாகின.

தமிழ் மக்களை இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கும் பொருட்டு பிரிகேடியர் வீரதுங்கவின் இராணுவ நிர்வாகத்தின் கீழ் யாழ்பாண மாவட்டத்தைக் கொணர்த்த ஜயவர்த்தன அரசாங்கம், நாட்டு மக்கள் சகலரையும் வேட்டையாடும் பொருட்டு 1979 ஜூலை 19ம் திகதி "பயங்கரவாத தடைச் சட்டத்தை" பாராளுமன்றத்திற்கு கொணர்ந்தது. அன்றைய தினமே சிறிலங்கா சுதந்திரக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி முதலான முதலாளித்துவக் கட்சிகளுக்குக் கடிதம் வரைந்த ஜனாதிபதி ஜயவர்தன, "தமிழ் மக்களின் குறைகளை ஆராய ஒரு ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்க" ஆதரவு கோரினார்.

ஜயவர்த்தனவின் மோசடி யோசனையை சி.ல.சு.க. மெளனத்தை கடைப்பிடிப்பதன் மூலம் அங்கீகரித்த அதே வேளையில் தமிழர் விடுதலைக் கூட்டணி ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள விருப்பம் தொரிவித்தது.

இதே வேளையில் யூ.என்.பி. அரசாங்கத்தின் மிலேச்ச நோக்கங்களை மூடிமறைக்கும் பொருட்டு பிரதமர் பிரேமதாசவுடன் சேர்ந்து கூட்டறிக்கை விடவும் தமிழர் விடுதலைக் கூட்டணி முன்வந்தது. பிரேமதாசவினதும் அமிர்தலிங்கத்தினதும் கையொப்பங்களைக் கொண்ட இந்த கூட்டறிக்கை, பின்வரும் வாக்கியத்துடன் நிறைவுபெறுகிறது: ''நாகரீகமான மக்கள் என்ற முறையில் நாம் எமது பொதுப் பிரச்சினைகளை சமாதானமான முறையில் தீர்த்துக் கொள்ளவும் எமது மாபெரும் மதங்களின் பாரம்பரியங்களுக்கு இணங்கவும் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முடியும் எனவும் வெளியுலகுக்கு காட்டவும் சக்தி உள்ளது.''

இதில் இருந்து ஒரு சில நாட்களுக்குள் 1979 ஜூலை 29 ம் திகதி நச்சுத்தனமான 31 சரத்துக்களை கொண்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தை யூ.என்.பி. அரசாங்கம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக்கொண்டது. தமிழர் விடுதலைக் கூட்டணி செய்தது என்ன? கோழைத்தனமான முறையில் பாராளுமன்றத்தை தவிர்த்துக்கொண்டதே தவிர அதற்கு எதிர்ப்புக் காட்ட முன்வரவில்லை.

தமிழ் மக்களின் பரந்த தரப்பினரின் கடும் எதிர்ப்பு இருந்து வந்த ஒரு நிலையிலும், தமிழர் விடுதலைக் கூட்டணி, யூ.என்.பி. அரசாங்கத்தின் ஒடுக்குமுறை வேலைத்திட்டங்களுடன் ஒத்துழைத்தமை தற்செயலானது அல்ல. தமிழ் முதலாளிகளின் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் பொது மக்கள் மீது திணிக்கப்பட்ட கொலைத் தாக்குதலைப் பற்றி கவனத்தில் கொள்ளவில்லை. சிங்கள-தமிழ் தொழிலாளர் வர்க்கத்திடம் இருந்து முதலாளி வர்க்க ஆட்சிக்கு அச்சமயத்தில் தொடுக்கப்பட்ட அச்சுறுத்தலையே அது கவனத்தில் கொண்டது. பயன்பாட்டில் உள்ள மொழிகளில் வேறுபாட்டைப் பொருட்படுத்தாமல் முதலாளித்துவ ஆட்சியைக் கட்டிக் காக்க அரசாங்கத்தின் உதவிக்கு தாம் அழைக்கப்பட்டுள்ளதையும், அதை இட்டு நிரப்புவது தமது வர்க்கக் கடமை எனவும் அவர்கள் புரிந்து கொண்டிருந்தனர். இத்தருணத்தில் யூ.என்.பி. அரசாங்கம் அரச பயங்கரவாதத்தை பாவித்து கொடூரமான முறையில் நசுக்கி வந்த தமிழ் மக்களின் ஒரு சில ஜனநாயக உரிமைகளையும் வென்றெடுத்ததும் பேணிக் காத்ததும் தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டத்தின் சக்தி மூலமே, என்பதை கவனத்தில்கொள்ள இடமளிக்க மறுத்தது அந்தக் கட்சியின் முதலாளித்துவ பண்பேயாகும். தமிழர் விடுதலைக் கூட்டணியின் இன்றைய எஞ்சியுள்ள தலைவர்கள் பொதுஜன முன்னணி அரசாங்கத்துடன் சேர்ந்து நடாத்திவரும் மோசடி கொடுக்கல் வாங்கல்களின் பிற்போக்கு விளைவுகள் என்பதை புரிந்து கொள்ளாத குட்டி முதலாளித்துவ தீவிரவாதிகள், இந்த வரலாற்று படிப்பினைகளை அறிந்தவர்களோ அல்லது அதில் கற்றுக்கொண்டவர்களோ அல்ல என்பது தெளிவு. அது முதலாளித்துவக் கட்சிகளைப் போலவே தொழிலாளர் வர்க்கத்தைப் பற்றியும் பெரும் துயரத்துள் தள்ளப்பட்டுள்ள ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றியும் அவர்களுக்கும் எந்தவொரு நேர்மையான அக்கறையும் இல்லாமையினால் தோன்றிய நிலைமையாகும்.

யூ.என்.பி. அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து நடைமுறைப்படுத்திய ''திறந்த பொருளாதார'' கொள்கைகளின் கீழ் வாழ்க்கை நிலமைகளை தவிடு பொடியாக்குவதில் இறங்கியது. இதற்கு முகங்கொடுத்த பெருந்தோட்டக் கைத்தொழில் தொழிலாளர்களும் ஏனைய தொழிலாளர்களும் 1979 நடுப்பகுதியில் இருந்து போராடும் அவசியத்தைக் கொண்டிருந்தனர். முதலாளித்துவ சி.ல.சு.க. மட்டுமன்றி சமசமாஜ-ஸ்டாலினிச கம்யூனிஸ்ட்-நவசமசமாஜக் கட்சிகளும் மற்றும் இ.தொ.கா. போன்ற பலவித தொழிற்சங்க அதிகாரத்துவங்களும் தொழிலாளர் வர்க்கத்தின் அவசியங்களுக்கு புறமுதுகு காட்டி அணிதிரண்டு இருந்தது, தகர்க்க முடியாத சக்தி என அவர்கள் கருதிக்கொண்டிருந்த யூ.என்.பி. அரசாங்கத்துடனாகும். 1976ல் கூட்டரசாங்க அரசியலுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்த தொழிலாளர்களிடம் இருந்து முதலாளி வர்க்க ஆட்சிக்கு எதிராகத் தோன்றக்கூடிய அச்சுறுத்தலைப் பற்றி அவர்கள் கணக்கு போட்டனர். அதனால் இனவாதப் பிளவுகளைப் போலவே ஒடுக்கு முறை ஆயுதத்தையும் தூக்கிக்கொண்டு வேலையில் இறங்கிய யூ.என்.பி. அரசாங்கம், தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையில் இருந்து வந்த துரோகத் தலைவர்களிலேயே தங்கி இருந்தது.

1980 ஜூலை வேலை நிறுத்தம்

ஆயினும் வர்க்கப் போராட்டத்தின் புறநிலை விதிகள், அதிகாரத்துவத்தின் ஆளுமையைக் காட்டிலும் பலம் வாய்ந்தது என லியொன் ட்ரொட்ஸ்கி சுட்டிக் காட்டியதை மீண்டும் வலியுறுத்தும் விதத்தில், அதிகாரத்துவங்களின் கால் விலங்குகளை உடைத்துக்கொண்டு தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்தப் போராட்டம் 1980 ஜூலையில் அரைகுறை பொது வேலைநிறுத்தமாக வெடித்து.

பயங்கரவாத தடைச் சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் மிலேச்சத்தனமாக தமது ஒடுக்கு முறை ஆயுதங்களை தரித்துக்கொண்டு வந்த அரசாங்கம், தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் மக்களின் மத்தியில் தலைதூக்கும் வகையில் அவசரகாலச் சட்டத்தை 1979 டிசம்பரில் காலாவதியாகிப் போக இடமளித்தது. எனினும் அந்த தமிழ் முதலாளித்துவக் கட்சியின் எதிர்ப்பு இல்லாமலேயே தொழிலாளர் போராட்டத்துக்கு எதிராக அவசரகாலச் சட்டத்தை மீண்டும் பிறப்பிக்கவும் அமுல் செய்யவும் யூ.என்.பி. அரசாங்கத்துக்கு 1980 ஜூலையில் வாய்ப்பு கிடைத்தது.

ஒரு சாராரின் பொது வேலை நிறுத்தத்தின் மத்தியில், தொழிலாளர் அமைப்புக்களான தொழிற்சங்க அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. தொழிலாளர் போராளிகள் கைது செய்யப்பட்டனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஒரு லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் அவசரகால சட்டத்தின் கீழ் அத்தியாவசிய சேவை பிரகடனம் செய்யப்பட்டு, தொழில்களில் இருந்து வேலை நீக்கம் செய்யப்பட்டனர்.

இன்நாட்டின் வர்க்கப் போராட்ட வரலாறு பூராவும், 1980ல் போன்று இவ்வளவு மோசமான தோல்வியை தொழிலாளர்கள் இதுவரை காலமும் சந்தித்தது கிடையாது. 1977ல் யூ.என்.பி. ஆட்சிக்கு வந்ததைப் போலவே இந்தப் போராட்டத்தின் தோல்வி சம்பந்தமாகவும் முக்கிய பொறுப்பு, கூட்டரசாங்க அரசியலின் துரோகத்துக்கே செல்கிறது. தொழிலாளர் வர்க்கம் போராட்டத்துக்கு அவசியமான முன்னோக்கினாலும் தலைமையினாலும் ஆயுதபாணியாக்கப்படாமல் இருந்ததோடு மட்டும் அல்லாது அது சமசமாஜ-ஸ்டாலினிச கம்யூனிஸ்ட்-நவசமசமாஜ கட்சிகளாலும் இ.தொ.கா போன்ற தொழிற்சங்க அதிகாரத்துவங்களினாலும் விதைக்கப்பட்ட அரசியல் குழப்ப நிலைகளினுள்ளும் மூழ்கி இருந்தது.

1970-77 கூட்டரசாங்க காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு, யூ.என்.பி. ஆட்சிக்காலத்தில் உக்கிரமாக்கப்பட்ட தமிழ் மக்கள் எதிர்ப்பு இனவாதம் அந்த அரசியல் குழப்பத்தின் முக்கிய ஊற்றுவாய் ஆகியது. தமிழ் மக்களின் ஜனநாக உரிமைகளை கட்டிக்காக்கும் பொருட்டு கிளர்ந்து எழுந்து இராத வரையில் தொழிலாளர்களின் போராட்ட பலமும் பலவீனம் அடைந்தது. பாட்டாளி வர்க்கம், பின்தங்கிய நாடுகளில் தீர்க்கப்படாத ஜனநாயக பணிகளை தீர்க்கும் கடமையை தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டு வெகுஜனங்களின் தலைவனாக எழுச்சிபெறுவதைத் தவிர, தொழிலாளர்களுக்கு தமது கோரிக்கைகளை வெற்றிகொள்வதற்கான வாய்ப்பு இந்த யுகத்தில் கிடையாது. தொழிலாளர் வர்க்கத்தினால் வழங்கப்பட வேண்டிய தலைமையில் இருந்து தனிமைப்படுத்தப்படும் குட்டிமுதலாளித்துவ ஒடுக்கப்படும் மக்கள் குழுக்களின் ஆதரவு, தொழிலாளர் வர்க்கத்துக்கு அதனது போராட்டத்தின் போது இல்லாமல் போவது மட்டும் அல்லாது, இந்த மக்கள் குழுக்கள் பல்வேறு முதலாளித்துவ, குட்டி முதலாளித்துவ தலைமைகளின் கீழ் தொழிலாளர் வர்க்கப் போராட்டத்துக்கு எதிராக ஈடுபடுத்தப்படவும் அதன் மூலம் வழிபிறக்கிறது. 1980 ஜூலை வேலை நிறுத்தத்தில் அப்பட்டமான கருங்காலி வேலையில் யூ.என்.பி.க்கு ஜே.வி.பி.ஆற்றிய பாத்திரம் இதை நன்கு தெளிவு படுத்தியது.

தொழிலாளர் வர்க்கத்துக்கு அவசியமான இந்தப் புரட்சிகர முன்னோக்கு, நிரந்தரப்புரட்சிக் கோட்பாட்டினை அடிப்படையாகக் கொண்டதும் நான்காம் அகிலத்தால் அதன் பகுதிகள் ஊடாக முன்வைக்கப்படுவதாகும். இந்தப் பணிக்கு அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் மட்டுமே தோள் கொடுத்தது. அதனால் தயார் செய்யப்பட்ட வேலைத்திட்டம் விவசாயிகளதும் இளைஞர்களதும் பிரச்சனைகளுக்கும் அவ்வாறே தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கும் தொழிலாளர் வர்க்கத் தீர்வை முன்வைத்தது.

கடைகெட்ட தலைவர்களினால் பலவீனமாக்கப்பட்டு, குழப்பியடிக்கப்பட்டுக் கிடந்த போதிலும் பொதுமக்களுக்கு ஒரு மாற்று புரட்சிகர வேலைத்திட்டத்தின் பேரில் இருந்து வந்த பாரிய அவசியத்தினை புரிந்து கொண்டு போராடிய புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம், 1980 களுக்கு முற்பட்ட காலத்தில் தொழிலாளர் வர்க்கத்திடையேயும் அவ்வாறே ஒடுக்கப்படும் கிராமப்புற மக்களிடையேயும் ஈர்க்கப்பட்டு வந்தது. சிங்களம் பேசும் கிராமப்புற மக்களை வெற்றிகொள்ள வேண்டுமானால் அவர்கள் கொண்டுள்ள அவலங்களுக்கு இயைந்து போவதன் மூலமும், அதன் தர்க்கரீதியான பெறுபேறாக அவர்களிடையே ஆளுமை கொண்டுள்ள முதலாளித்துவக் கட்சிகளுடன் கூட்டுச் சேருவதானதும் அவசியத்தினை வலியுறுத்திய சகல துரோகிகளுக்கும் எதிராக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் தனது அனைத்துலகவாத சோசலிச விதிமுறைக்காகப் போராடியது. முதலாளித்துவ ஆட்சி முறையுடன் எதுவிதமான சமரசமும் அற்ற நிலைப்பாட்டில் நின்று தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளைக் காக்க அது நடத்திய போராட்டத்தின்பால் நனவான தொழிலாளர்களைப் போலவே கிராமப்புற ஏழைகளையும் வென்றெடுப்பதற்கான போராட்டத்திற்கு இருந்து வந்த ஒரே தடை முதலாளித்துவக் கட்சிகளுடன் சமரசத்துக்குச் செல்லும் அரசியல் கட்சிகள் மட்டுமேயாகும். ஆனால், இந்த வர்க்க சமரச கட்சிகளின் பிற்போக்கு அரசியல் பிடி பொது மக்களிடையே முற்றும் துடைத்துக்கட்டப்பட்டு இருந்தது. இந்த நிலமைகளின் கீழ் துரோகத் தலைவர்கள் முதலாளித்துவ அரச இயந்திரத்துடன் இணைந்து புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகப் போராட்டத்தைத் தாக்க செயற்பட்டனர். நவ சமசமாஜக் கட்சி அனுராதபுர மாவட்டத்தின் தம்புத்தேகமைப் பொலிசாருடன் சேர்ந்து ஆற்றியது சரியாக அத்தகைய ஒரு பாத்திரமேயாகும்.

முன்னைய பந்தியில் நாம் விளக்கிய அனைத்து அரசியல் விடயங்களும் தப்புத்தேகமை பு.க.க. அமைப்பாளராக விளங்கிய தோழர் ஆர்.பி. பியதாசவை, யூ.என்.பி. பொலிசாரின் ஆதரவுடன் கைக்கூலி கொலையாட்களால் 1979 ஜூலை 17ம் திகதி கொலை செய்யப்பட்டதன் மூலம் உச்சக்கட்டத்தை அடைந்தது.

தோழர் ஆர்.பி. பியதாச விவசாய குடிகளின் இளைஞராக வாழ்ந்தவர். சிங்களப் பேரினவாதமானது விவசாயிகளை பழைய நிலமானித்துவ அமைப்பினுள் சிறை வைத்து முதலாளித்துவ ஆட்சியின் சேவகர்களாகவும் ஆக்கும் மரணப் பொறி, என புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் செய்த விளக்கத்தின் அடிப்படையில் அவர் போராடினார். சமசமாஜ தலைவர்களான என்.எம். பெரேராவும் கொல்வின் ஆர்.டி.சில்வாவும் தமது பங்காளியாகக் கருதிய ஜயவர்த்தனவுடன் ஹெலிகொப்டர்களில் ஏறி எப்பாவல மக்களுக்கு மகாவலி மகிமையை புரியவைக்க முயன்றுவந்த அதே வேளையில், ஆர்.பி. பியதாச உலக வங்கி முன்னின்று நடத்திய மகாவலி இயக்கத்தின் நீண்டகால அழிவுகளை மக்களுக்குப் புரியவைக்கப் போராடினார். விவசாயிகளின் விடுதலைக்கு அனைத்துலகவாதத்தின் அடிப்படையிலான சோசலிசத் தீர்வு தொழிலாளர் வர்க்கத் தலைமையின் கீழ் பெற்றுக் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இந்த அரசியல் சவாலின் ஆபத்தை புரிந்து கொண்ட யூ.என்.பி. அரசாங்கம், நவசமசமாஜக் கட்சியின் அப்பட்டமான ஆதரவுடன் பொலிசாரைக் கொண்டு ஆர்.பி. பியதாசவை படுகொலை செய்தது. தோழர் ஆர்.பி. பியதாச பிரதிநிதித்துவம் செய்த ட்ரொட்ஸ்கிச அரசியல் விதிமுறையை நிராகரித்தவர்களும் அதை எதிர்த்தவர்களும் தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டத்தை காட்டிக் கொடுப்பது இதன் மூலம் உறுதியாகியது. 1980 ஜூலை வேலை நிறுத்தத்தில் மிகவும் துன்பகரமான முறையில் நிருபிக்கப்பட்டது இந்த தீர்க்கமான உண்மையேயாகும்.

தமிழ் முதலாளித்துவ கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதவியும் அப்போது தோன்றி இருந்த தமிழ்க் குட்டி முதலாளித்துவ அமைப்புக்களின் புறக்கணிப்பும் ஜே.வி.பி.யின் கருங்காலித்தனத்துடன் துரோகத் தலைவர்கள் சுற்றிவளைத்துக் கொடுத்த உதவியுடனும் 1980 ஜூலையில் தொழிலாளர் போராட்டத்தை மிலேச்சத்தனமான முறையில் நசுக்கிய யூ.என்.பி. அரசாங்கம், தமது ஏகாதிபத்திய வேலைத்திட்டத்துக்கு இனிச் சுதந்திரமாக நாடுபுராவும் பரவ இடமளிக்க முடியும் எனத் தீர்மானம் செய்தது.

முற்றிலும் இளைஞர்களைக் கொண்ட தமிழ் குட்டி முதலாளித்துவ அமைப்புக்கள், தொழிலாளர் வர்க்கத்தின் தலைவிதியை கணக்கில் எடுக்காது விட்டாலும், தொழிலாளர்களுக்கு தோல்வியைப் பொற்றுக்கொடுக்க யூ.என்.பி.க்கு வசதியளித்ததன் பொறுபோறாக சிருஷ்டிக்கப்பட்ட விளைவுகளில் இருந்து விடுபட அவற்றுக்கு இடம் கிடைக்கவில்லை. நச்சுத்தனமான விளைவுகளுக்கு முகம் கொடுத்தது அந்த அமைப்புக்கள் மட்டுமன்றி முழுத் தமிழ் மக்களுமேயாகும்.

முக்கிய தமிழ் முதலாளித்துவக் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணி 1980 ஜூலை வேலை நிறுத்தத்தை உடைத்ததையிட்டு யூ.என்.பி. அரசாங்கத்துக்கு தமது நன்றியை தெரிவித்தது 1980 ஆகஸ்ட் 8ம் திகதி பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்த "மாவட்ட அபிவிருத்தி சபை மசோதாவுக்கு" பூரண ஆதரவு வழங்கியதன் மூலமாகும். திறந்த பொருளாதார கொள்கைக்கு பொருத்தமான விதத்தில் மாகாண ரீதியில் நலன்புரிச் சேவைகளை ஒழித்துக்கட்டும் இலக்குடன் யூ.என்.பி. அரசாங்கம் சமர்ப்பித்த ''மாவட்ட அபிவிருத்தி சபை'' எனப்படும் வேலைத்திட்டத்தை, ''நிர்வாகத்தை பரவலாக்கி அபிவிருத்தி திட்டத்தில் மக்களை இணைத்துக் கொள்ளும் ஒரு நடவடிக்கை'' என தமிழர் விடுதலைக் கூட்டணி அழைத்தது. இந்தக் கேவலமான மசோதாவை ''வரலாற்றுச் சட்ட அகராதி" என அழைத்த அமிர்தலிங்கம், அதை அமுல் செய்ய தமிழர் விடுதலைக் கூட்டணி உதவினால், தமிழ் மாகாணங்களின் பொருளாதார அபிவிருத்திக்கு ஆதரவு கிடைக்கும் என விபரித்தார்.

அமிர்தலிங்கத்தின் வார்த்தைகளை அவரே விழுங்கி ஏப்பமிடச் செய்த இந்த நச்சு வேலைத்திட்டத்தின் கசப்பினை அனுபவிப்பதற்கு தமிழ் மக்களுக்கு ஒரு வருடம் தன்னும் செல்லவில்லை.

மாவட்ட அபிவிருத்திச் சபைக்கான முதலாவது தேர்தல் 1981 ஜூன் 4ம் திகதி இடம்பெற இருந்தது. மாவட்ட அபிவிருத்திச் சபையை ஆதரிப்பதற்கும் அதன் தேர்தலில் போட்டியிடுவதற்கும் எதிராக, தமிழ் குட்டி முதலாளித்துவ இளைஞர் இயக்கத்தின் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு எதிரான பிரச்சாரம் உச்சக் கட்டத்தை அடைந்து இருந்தது. 1981 மார்ச் 16ம் திகதி மூன்று தமிழ் இளைஞர் போராளிகள் மானிப்பாய் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். தர்மலிங்கத்தின் ஜீப் வண்டியை தாக்கினர். இச்சம்பவம் தர்மலிங்கம் மற்றும் இராஜலிங்கம் ஆகியோருடன் அமிர்தலிங்கம் வல்வெட்டித்துறையில் இராப்போசன விருந்தில் கலந்து கொண்டிருந்த வேளையில் இடம்பெற்றது. மற்றுமோர் சம்பவத்தில் யாழ்ப்பாணம் அரசடி வீதியில் நிறுத்தப்பட்டிருந்த இராஜலிங்கத்தின் வாகனம் தாக்கிச் சேதப்படுத்தப்பட்டது. மன்னாரில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு திரும்பிக் கொண்டிருந்ந பருத்தித்துறை பாராளுமன்ற உறுப்பினர் கே. துரைரத்தினம் மற்றுமோர் இடத்தில் தாக்குதலுக்கு உள்ளானார். மாவட்ட சபைத்தேர்தலுக்கு ஒரு கிழைமைக்கு முன்னர் மே 26ம் திகதி யூ.என்.பி. மாவட்ட சபை வேட்பாளர் பட்டியலில் முதன்மை வேட்பாளராக விளங்கிய முன்நாள் வட்டுகோட்டை பாராளுமன்ற உறுப்பினர் ஆ. தியாகராசா சுட்டுக் கொல்லப்பட்டார்.

தேர்தல் தினம் நெருங்கியதும் குட்டி முதலாளித்துவ இளைஞர் இயக்கப் போராளிகளின் அவஸ்தை நிலை அதிகரித்த அளவுக்கு அவர்களின் தனிமனித பயங்கரவாத நடவடிக்கையும் அதிகரித்தது. தொழிலாளர் வர்க்கத்தை புரட்சிகரமான முறையில் அணிதிரட்டுவதற்கு விரோதமாகவும் முரணாகவும் மேற்கொள்ளப்பட்ட இத்தகைய நடவடிக்கைகள், சாய்மனைக் கதிரைகளில் இருந்து கொண்டு ஆயுதப் போராட்டங்களைப் பற்றி வாயடிக்கும் தீவிரவாதிகளின் செயல்களுக்கு ஏற்ப, எப்போதும் இட்டு நிரப்புவது ஆளும் வர்க்கத்தினதும் அதன் அரச இயந்திரத்தினதும் விசக் கொடுக்குகளை கூர்மையாக்குவதேயாகும். யாழ்ப்பாணச் சம்பவங்கள் இட்டுநிரப்புவது இதில் இருந்து மாறுபட்ட பாத்திரம் அல்ல.

தமிழர் விடுதலைக் கூட்டணியினால் ஒழுங்கு செய்யப்பட்டு யாழ்ப்பாண மாநகர முதல்வர் தலைமையில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டம், குட்டி முதலாளித்துவ போராளிகளின் தாக்குதலுக்கு இலக்காகியது. கூட்டத்தில் நின்றிருந்ந மூன்று பொலிஸ் அதிகாரிகள் அவர்களால் சுடப்பட்டனர். இதில் இருவர் இறந்ததோடு ஒருவர் படுகாயமடைந்தார்.

படுகொலைகளும் இரத்தக் களரியும்

சில நிமிடங்களுக்குள் கூட்டம் நடைபெற்ற இடத்துக்குள் பாய்ந்து விழுந்த பொலிஸ் படையினர், முன்கூட்டியே தயார் செய்யப்பட்டிருந்த படுகொலை மற்றும் இரத்தக்களரி வேலைத்திட்டத்தினைக் கட்டவிழ்த்து விட்டனர்.

கூட்ட மைதானத்திற்கு அயலில் இருந்த கோவிலுக்கு தீமுட்டிய பொலிசார், அருகில் இருந்த வீடுகளுக்கும் வாகனங்களுக்கும் தீமுட்டியதோடு கடத்திய ஒரு பஸ்சில் யாழ்ப்பாணம் பெரிய கடைவீதியை ஆக்கிரமித்தனர். ஆஸ்பத்திரி வீதியில் கடைகளுக்கு தீவைத்த இவர்கள், அருகில் இருந்த யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் வீட்டுக்கும் தீ மூட்டியதோடு யோகேஸ்வரனதும் நன்பரதும் வாகனத்துக்கும் தீ வைத்தனர். யோகேஸ்வரனும் மனைவியும் வீட்டின் பின்புறமாக இருந்த மதிலால் பாய்ந்து உயிர்தப்பியதாக சொல்லப்படுகிறது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமை அலுவலகத்துக்கு தீ மூட்டியதில் உச்சக்கட்டமடைந்த இரத்த வெறியர்களின் காடைத்தனங்கள் அதைத்தொடர்ந்தும் அரங்கேறின.

அது யாழ்ப்பாணம் பொதுநூல் நிலயத்துக்குத் தீ மூட்டியமையாகும். அது 95,000க்கும் அதிகமான நூல்களும் மிகவும் அரிதான கையேட்டு பிரதிகளும் சேகரித்து வைக்கப்பட்ட ஒரு அறிவுக் களஞ்சியமாக விளங்கியது. அது தாம் சேர்த்து வைத்துள்ள அறிவுக் களஞ்சியத்தின் அளவை வெளியில் காட்டும் ஆடம்பரக் கட்டிடமாகும். ஆளும் வர்க்கம் ஒடுக்கப்படும் பொதுமக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விட்ட பிற்போக்கு யுத்தத்தில் அறிவுச் செல்வத்துக்கு எங்கே மதிப்பு? அறிவு மனித முன்னேற்றத்தின் ஆயுதமாகும். பிற்போக்கு அதன் பரம எதிரியாகும். யாழ்ப்பாண நூல்நிலயத்தை தீக்கிரையாக்கியதன் மூலம் ஆகாயத்தில் உயர்ந்து பரந்த புகைமூட்டங்கள் நாடு பூராவும் நச்சுப் புகைமூட்டங்களைக் குறித்துக் காட்டின.

ஜனாதிபதி ஜயவர்த்தன, இந்த துரதிஸ்டவசமான இருளின் ஆரம்ப தூதுவர்களாக கடைகெட்ட பாத்திரங்களான சிறில் மத்யூ, காமினி திசநாயக்க ஆகிய இரு அமைச்சர்களையும் பாவித்தார். யாழ்ப்பாண கடுகதி புகையிரதம் தரித்துச் செல்லும் சகல புகையிரத நிலையங்களிலும் முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்ட குண்டர்களை தமது சகாக்களாக ஏற்றிக் கொண்ட இந்தக் காடையர் கும்பலின் முதல்வர்கள் இருவரும், மாவட்ட சபைத் தேர்தலுக்கு முன்னோடியாக இரத்தக்களரியையும் படுகொலைகளையும் அரங்கேற்றுவதன் பேரில் யாழ்ப்பாணத்தில் இறங்கிக் கொண்டனர். மே 31ம் திகதி ஆரம்பமான கொடிய காடைத்தனங்கள் ஜுன்1 முதல் 3 வரை இடைவிடாமல் தொடர்ந்து நடத்தப்பட்டன.

யாழ்ப்பாண மாவட்ட சபைத் தேர்தலில் யூ.என்.பி. படுதோல்வி அடையும் என்பதை முன்கூட்டியே அறிந்து கொண்டிருந்த இக்காடையர்கள், இப்பிராந்திய நிர்வாகத்தை பலாத்காரமான முறையில் தமது கைக்குள் போட்டுக் கொண்டனர். அவர்களின் குண்டர் இயக்கத்துக்கு சட்டரீதியான போர்வையை வழங்கும் பொருட்டு, தேர்தலுக்கு முன்னர் ஜூன் 3ம் திகதி இரவு ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அன்று நள்ளிரவு கழித்து 2 மணி 45 நிமிடமும் சென்றிராது. பொலிஸ் சீருடை அணிந்த சுமார் நூறு பேர் அமிர்தலிங்கத்தின் வீட்டைச் சுற்றி வளைத்து, அவரைக் கைது செய்தனர். இதற்கு முன்னைய ஆண்டு 31ம் திகதி யாழ்ப்பாணத்தில் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டும் கொந்தராத்தினை பொறுப்பேற்று நியமனம் பெற்ற பிரிகேடியர் வீரதுங்க, தமது தோல்வியின் அதிருப்தியினால் வெறிபிடித்து இருந்தார். கடைகெட்ட இரண்டு அமைச்சர்களும் அமிர்தலிங்கத்தைக் கைது செய்யும்படி வெளியிட்ட உத்தரவை முழுமனதுடன் ஒப்புக்கொண்டனர். ஆனால், தமிழர் விடுதலைக் கூட்டணியின் முதலாளித்துவ தன்மை மற்றும் தொழிலாளர் ஒடுக்கப்படும் மக்களை நசுக்கித் தள்ளுவதற்கு அதன் உதவி மீதும் நம்பிக்கை வைத்திருந்த ஜயவர்த்தன, நல்ல முகத்துடன் ஜூலை 4ம் திகதி சூரியன் உதிக்க முன்னர் அமிர்தலிங்கத்தை விடுதலை செய்யுமாறு கொழும்பிலிருந்து கேட்டுக்கொண்டார்.

இந்த ஒடுக்குமுறையின் மத்தியில் யூ.என்.பி. குண்டர்களின் கள்ள வாக்களிப்பைப் பயன்படுத்திய போதிலும், ஜூலை 4ம் திகதி மாவட்ட அபிவிருத்திச் சபை தேர்தலில் யூ.என.பி. முழு யாழ்ப்பாணத்திலும் பெற்றது வெறும் 23,302 வாக்குகள் மட்டுமே. தமிழர் விடுதலைக் கூட்டணி இதைக் காட்டிலும் பத்து மடங்கு அதிகமாக 263,369 வாக்குகளைப் பெற்றது. தமிழர் விடுதலைக் கூட்டணி யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திச் சபைகளின் பத்து ஆசனங்களைக் கைப்பற்றியது.

இதற்கு யூ.என்.பி. அரசாங்கத்திடம் இருந்து வந்த பதில், பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைவராக விளங்கிய அமிர்லிங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்வைப்பதாகும். உலக பாராளுமன்ற வரலாற்றில் எதிர்க் கட்சி தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவேயாகும்.

இதன் பின்னர் 1981 ஆகஸ்ட் மாதத்தில் ஆணைக்கோட்டை பொலிஸ் நிலையம் மீது நடத்திய தாக்குதலில் இறந்த ஒரு பொலிஸ்காரரின் சடலத்தை அனைத்துக் கொண்டு, தோட்டத்துறை தொழிலாளர்களுக்கு எதிராக கொலைகார இயக்கம் தொடுக்கப்பட்டது. இறக்குவானை, இரத்தினபுரி, பலாங்கொடை, கஹவத்த முதலிய இடங்களில் உள்ள தோட்டங்களுக்குள் குதித்த இனவாத குண்டர்கள் பொலிசாரின் உதவியுடன் தொழிலாளர் வீடுகளுக்கு தீமுட்டினர். சொத்துக்களைக் கொள்ளை அடித்தனர். தொழிலாளர் குடும்பங்களைக் கொலை செய்தனர். இவை எல்லாம் சுதந்திரமாக இடம்பெற்றன. இந்தக் காட்டுமிராண்டி நடவடிக்கைகளுக்கு எதிரான பொதுஜன அபிப்பிராயமும் எதிர்ப்பும் வளர்ச்சி காண்பதை தவிர்க்கும் பொருட்டு, யூ.என்.பி. அரசாங்கத்துடன் இணைந்து கொண்டிருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கு கருத்து வெளியிட நேரிட்டது.

குண்டர் கிளர்ச்சிகளின் காரணமாக, இறக்குவான பிரதேசத்தில் 5,000 பேரும் பலாங்கொடையில் 3,000 பேரும் இரத்தினபுரியில 3,000 பேரும் கஹாவத்தையில் 2,000 பேருமாக தோட்டத் தொழிலாளர் குடும்பங்களை அகதி முகாம்களுக்கு கொண்டுசெல்ல நேரிட்டதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்தது.

அரசாங்கத்துக்கு வெளியில் இருந்து வந்த சமசமாஜ கட்சியும் ஸ்டாலினிச கம்யூனிஸ்ட் கட்சியும் ஜே.வி.பி.யும், யூ.என்.பி. யின் தமிழர் விரோத தாக்குதலுக்கு தலைப்புக் கொடுத்து அரசாங்கம் விதித்த அவசரகாலச் சட்டத்தையும் பத்திரிகைத் தணிக்கையையும் அங்கிகரித்தன. பாராளுமன்றத்தில் இருந்து கொண்டிருந்த இடதுசாரி பாராளுமன்ற உறுப்பினர் எனப்பட்ட ஸ்டாலினிச சரத் முத்தெட்டுவேகம இந்த துரோக விதிமுறையின் முக்கிய புள்ளியாக விளங்கினார்.

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் போராட்டம்

யூ.என்.பி. அரசாங்கத்தினதும் குண்டர்களதும் தாக்குதல்களுக்கும் மற்றும் கடைகெட்ட தலைவர்களின் துரோகங்களுக்கும் எதிராக அறிக்கை வெளியிட்டதோடு தொழிலாளர்களதும் ஒடுக்கப்படும் மக்களதும் பாதுகாப்பின் பேரில் பொது மக்கள் இயக்கத்தை அணிதிரட்ட போராடிய ஒரே அமைப்பு புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் மட்டுமேயாகும். தணிக்கை அதிகாரியினால் அறிக்கைகள் வெட்டித் தள்ளப்படும் நிலையில் 1981 ஆகஸ்டு 25ம் திகதிய ''கம்கறு மாவத்தை'' பத்திரிகையில் "அவசரகாலச் சட்டம் தொழிலாளர் வர்க்கத்தை வேட்டையாடவே'' என்ற தலைப்பில் அறிக்கைகள் வெளியிட்ட புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (பு.க.க.) பின்வருமாறு குறிப்பிட்டது;

''இது சாதாரண காலத்து அவசரகாலச் சட்டம் அல்ல. இன்றைய நிலைமையை உருவாக்க யூ.என்.பி. திட்டமிட்டு தொழிற்பட்ட விதத்தை நாம் தொடர்ந்து தொழிலாளர் வர்க்கத்தின் எதிரில் சுட்டிக்காட்டி வந்துள்ளோம். தொழிலாளர் வர்க்கத்தின் செயற்பாட்டுக்கு கால்கட்டுப் போடவும் வாய்பூட்டு மாட்டவும் மற்றும் கல்வி வெள்ளை அறிக்கை மூலமும் சுகாதார வெள்ளை அறிக்கை மூலமும் தொடுக்கப்படும் நச்சுத்தனமான தாக்குதலை பொது மக்கள் மீது திணிக்கவும் தமிழ் மக்களை நசுக்கித் தள்ளவும் திட்டவட்டமான முறையில் ஆயுதப்படைகளை வீதிகளில் இறக்கவும் பொலிசாருக்கு அதிகாரம் வழங்குவதும் இந்த அவசரகல சட்டத்தின் அர்த்தமாகும்.

"யூ.என்.பி. அரசாங்கத்துக்கு எதிராகத் தொழிலாளர் வர்க்கத்தையும் ஒடுக்கப்படும் மக்களையும் தமிழ் தேசிய இனத்தினரையும் ஒன்று திரட்டி அரசாங்கத்தின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை அம்பலப்படுத்துவதன் மூலம் தமது பாதுகாப்பினை தமது கரங்களுக்குள் கொணர்வதற்கு பொது மக்களை தயார் செய்ய வேண்டிய காலத்தில், சமசமாஜ-ஸ்டாலினிசத் தலைவர்கள் நேரடியாக யூ.என்.பி. அரசாங்கம் பக்கம் சென்றுள்ளார்கள்.

''கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதியான சரத் முத்தேட்டுவேகமவை பாராளுமன்றத்துக்கு அனுப்பியது யூ.என்.பி. அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதற்கு அன்றி அதற்கு எதிராக பொது மக்களைத் தயார் செய்வதற்கே. அரசாங்கத்துக்கு எதிராகப் போராடுவதாக வாக்குறுதியளித்து பாராளுமன்றத்தினுள் நூழைந்துகொண்டதன் பின்னர், ஸ்டாலினிச கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களின் முழு பக்கபலத்துடன் அவர் இப்போது செய்யும் நடவடிக்கைகளைப் பாருங்கள். அவசரகால சட்ட ஆட்சிக்கு முழு ஆதரவு வழங்கி அவர் கூறியவற்றை ''அத்த'' பத்திரிகை பின்வருமாறு அறிக்கை செய்திருந்தது: 'அரசாங்கம் அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாக தமது கட்சி எதிர்ப்புக் காட்டாது போனாலும், அரசாங்கம் அதை நடைமுறைப்படுத்தத் தாமதித்தது. ஆதலால் அதற்கான காரணத்தை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என கலவானை பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்'.

"பத்திரிகை தணிக்கை, தொழிலாளர் கூட்டத்தடை, இராணுவம் வீடுகளுக்குள் புகுந்து சோதனை நடத்துதல் ஆகியன இதற்கு முன்னர் நடைமுறைபடுத்தப் பட்டிருக்க வேண்டும் என ஸ்டாலினிஸ்டுக்கள் கூறுகின்றார்கள்.

''கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கத்தவர்களுக்கு நாம் பின்வருமாறு கூறுவோம்; இந்தத் துரோக விதிமுறை உங்களது அடிப்படை உரிமைகளை அரசாங்கத்துக்கு பலி கொடுப்பதும் இராணுவ சர்வாதிகாரத்துக்கு வழிவகுப்பதுமாகும்.

''யூ.என்.பி. ஆட்சியின் கீழ் அவர்களால் உருவாக்கப்பட்ட கடைகெட்ட நடவடிக்கைகளின் பெறுபேறாக சுமார் 20,000 தோட்டத் தொழிலாளர்கள் அகதிகளாகி உள்ள நிலைமையில், தமிழ் தேசிய இனத்தவர்களின் பல உயிர்கள் பலியெடுக்கப்பட்டுள்ள ஒரு நிலைமையில், தமிழ் தேசிய இனத்தவர்களின் சொத்துக்கள் தவிடுபொடியாக்கப்பட்டுள்ள ஒரு நிலைமையில், ஸ்டலினிஸ்டுகளால் பலவீனமான விதத்தில் கூறக்கூடியதொல்லாம்; ''நாட்டின் பிரிவினையை நாம் எதிர்க்கின்றோம்'' என்பது மட்டுமே.

"முத்தேட்டுவேகமவும் மற்றும் ஏனைய ஸ்டாலினிச, சமசமாஜ தலைவர்களும் ஈழம் பிரச்சாரத்துக்கு எதிரான சிலுவை யுத்தத்தில் இறங்கி இருந்தாலும், இலங்கையின் தொழிலாளர் வர்க்கம் அதில் கலந்து கொள்வதை முழுமனே நிராகரிக்கின்றனர். தாதிமார் போராட்டம், வங்கி ஊழியர் போராட்டம், மாணவர் போராட்டம் போன்றவை சுட்டிக்காட்டியுள்ளது என்னவெனில், யூ.என்.பி. காரர்கள் சிங்கள முதலாளிகளுடன் ஒரே தேசிய இனமாக ஒரே படுக்கையில் படுத்து எழும்ப வேண்டிய அவசியம் தொழிலாளர் வர்க்கத்துக்குக் கிடையாது என்பதேயாகும்.

''நாம் தொழிலாளர் வர்க்கத்துக்கு பின்வருமாறு கூறுவோம்: ஸ்டாலினிஸ்ட்டுகளதும் சமசமாஜிஸ்ட்டுக்களதும் மற்றும் ஜே.வி.பி. காரர்களதும் இனவாதமானது ஆளும் வர்க்கத்துடனும் யூ.என்.பி. அரசாங்கத்துடனும் இத்தலைவர்களுக்கு இருந்து கொண்டுள்ள இறுக்கமான உறவுகளின் வெளிப்பாடாகும்.

''இத்தலைவர்கள் தமிழ் தேசிய இனம் தொடர்பாகக் காட்டும் கடைகெட்ட குரோதத்தை, தொழிலாளர் வர்க்கம் சம்பந்தமாகவும் காட்டுகின்றார்கள். எனவேதான், அவசரகாலச் சட்டத்துக்கு ஆதரவு வழங்கி, உங்கள் கூட்டங்களை தடைசெய்யவும் உங்களுக்கு அவசியமான செய்திகளைத் தடைசெய்யவும் இத்தலைவர்கள் இப்போது செயற்படுகின்றனர்.

''முதலாளி வர்க்கத்தில் இருந்து பிரிந்து தொழிலாளர் வர்க்கத்தினதும் தமிழ் மக்களதும் அடிப்படை உரிமைகளை காக்கும் பொருட்டு போராடுமாறு இந்தத் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக நாம் தொழிலாளர் வர்க்கத்துடன் ஒன்றிணைகின்றோம். ஆனால், இன்று தீர்க்கமான விடயம் இந்தத் தலைவர்களை வெளியேற்றி, சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஆட்சிக்கான போராட்டத்தை வழிநடத்த புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை கட்டியெழுப்ப இணைவதேயாகும்.''

நான்காம் அகிலத்தின் இடைமருவு வேலைத்திட்டத்திற்க்கு இணங்க, வேலைத்திட்டத்தை தயார் செய்து கொண்டு, பொதுமக்களின் உரிமைகளைக் காக்கும் பொருட்டு தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களை அணிதிரட்ட சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் தீர்க்கமானதும் கஷ்டமானதும் ஆபத்தானதுமான போராட்டத்தை முன்னெடுத்த வரலாறு கொண்டது. இந்த வரலாற்று அனுபவங்களுக்கும் படிப்பினைகளுக்கும் புறமுதுகு காட்டி இன்றைய இனவாத யுத்தத்தின் நிலைமைகளின் கீழ் தொழிலாளர் வர்க்கத்தினதும் ஒடுக்கப்படும் மக்களினதும் விடுதலைக்கான பாதையை தேடிக் கொள்ள முடியாது. சோசலிச சமத்துவக் கட்சியின் பலமும் அதன் பொருத்தமும் இந்த விடையங்களிலேயே தங்கியுள்ளன.

1881 ஆகஸ்ட் கடைப் பகுதியில் தோட்டப்பகுதி பூராவும் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட குண்டர் தாக்குதல்களைத் தொடர்ந்து ஜனாதிபதி ஜயவர்த்தன வழக்கம் போல் தமிழர் விடுதலைக் கூட்டணியினருடன் மோசடியும் மலட்டுத்தனமும் கொண்ட ''பேச்சுவார்தைகளை'' மீண்டும் ஆரம்பித்தார். எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் மருமகனான ஜெயரத்தினம் வில்சன் கனடாவில் இருந்து வரவழைக்கப்பட்டு தரகர் வேலையில் அமர்த்தப்பட்டார்.

யூ.என்.பி. தமிழர் விடுதலைக் கூட்டணியினருடன் நடத்திய ஓரு தொகை ''பேச்சுவார்த்தைகளின்'' பின்னர் ஆகஸ்ட் 31ம் திகதி அறிக்கை வெளியாகியது. அது இடம்பெற்றுவந்த உயிர், சொத்து சேதங்களையிட்டு முதலைக் கண்ணீர் வடித்து இருந்தது. மூன்று விடயங்களில் உடன்பாட்டுக்கு வந்ததாக அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அவையாவன;

1. யூ.என்.பி. யினதும் தமிழர் விடுதலைக் கூட்டணியினரதும் உயர்மட்ட தலைவர்களின் கமிட்டி ஒன்றை ஜனாதிபதி தலைமையில் கூட்டவும், சமாதான தீர்வை இலக்காகக் கொண்டு கருத்து வேறுபாடுகளுக்கு உள்ளாகியுள்ள சகல பிரச்சனைகளையிட்டும் அங்கு கலந்துரையாடுவது.

2. நாடு பூராவும் சகல வன்முறை நடவடிக்கைகளையும் நிறுத்தும் பொருட்டு, சகல கட்சிகளதும் ஒத்துழைப்பையும் உடன்பாட்டையும் பெற்றுக் கொள்வது.

3. ஏனைய நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக மாவட்ட அபிவிருத்தி சபைகளை உரிய விதத்திலும் திருப்தியான முறையிலும் செயல்படுத்த முயற்சிப்பது.

இந்த வார்த்தைகள் அழகானவை. அவை குறிப்பிடும் நோக்கங்கள் விவாதத்துக்கு இடமற்றவை. ஆனால், இந்தச் சகாப்தத்தில் முதலாளித்துவக் கட்சிகளும் அவற்றின் ஆட்சியாளர்களும் வரலாற்று ரீதியில் ஜனநாயக உரிமைகளின் எதிரிகளாக இருந்து வந்துள்ளன.

நான்காம் சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பின்னர், செப்டம்பர் 13ம் திகதி வெகுஜன தொடர்பு சாதனங்களின் பிரதிநிதிகளின் மத்தியில் பேசிய அமிர்தலிங்கம், சமரசத்தின் பேரில் ''தமிழர் விடுதலைக் கூட்டணி அரைவாசித் தூரம் செல்லத் தயாராக உள்ளது'' எனக் குறிப்பிட்டார். உண்மையில் தமிழ் முதலாளிகளின் கட்சி என்ற முறையில், தமிழர் விடுதலைக் கூட்டணி அங்கு பிரதிநிதித்துவம் செய்வதாக கூறிக்கொண்ட பொது மக்களின் கீழ் தட்டினரின் அரைப் பங்கினரை, முதலாளித்துவ ஆட்சியின் கீழ் அழிவுக்குள் கை கழுவிவிட தயார் நிலையில் இருந்ததைக் காட்டிக் கொண்டது.

யூ.என்.பி. தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் பெறுபேறாக உருவானதாக அமிர்தலிங்கம் அன்று கூறிக் கொண்ட தீர்மானங்களே அந்த முடிவை அம்பலமாக்குகின்றன. (அ). யாழ்ப்பாணச் சம்பவங்களுக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல் (இந்தத் தீர்மானத்தின் குழப்பத்தின் மூலம் அது இடம்பெறப் போகும் ஒரு விடயம் அல்ல. அதை விட மிகவும் தீர்க்கமானது என்னவெனில், யாழ்ப்பாணத்தின் பெறுமதி வாய்ந்த பொதுஜன நூல் நிலையத்துக்கு தீமூட்டியது உட்பட, இரத்தக் களரிகளுக்கும் படு கொலைகளுக்கும் தலைமை வகித்த சிறில் மத்தியூ, காமினி திசாநாயக்க உட்பட்ட குண்டர்கள் சகலரும் தூண்டிலில் இருந்து விடுதலை செய்யப்பட்டதேயாகும்). (ஆ). பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்குவது (தீக்கிரையான நூலகத்தின் மதிப்பிட முடியாத பெறுமதியை மட்டும் கணக்கில் கொள்ளும் போது இது ஒரு பெரும் கண்துடைப்பு என்பதை புதிதாகக் கூற வேண்டியதில்லை). (இ). வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் பொலிசாரின் எண்ணிக்கையை அதிகரிப்பது (கிளர்ந்து வந்த தமிழ் மக்களை நசுக்கும் பொலிஸ் வேலையை தமிழர் விடுதலைக் கூட்டணி பொறுப்பேற்பதே இதன் அர்த்தம். நவசமசமாஜக் கட்சி, சிங்கள இனவாத அரச படைகளது மேலதிக தமிழ் படை அணியை ''சங்கிலியன் படை'' என்ற பெயரில் அழைத்தது. இரத்தக்களரி அடக்குமுறைக்காக இடம்பெற்ற படுபிற்போக்கு நடவடிக்கைகளுடன் ஒப்பிடும் போது மட்டுமே இது ''முற்போக்கானதாக'' இருக்க முடியும்). (ஈ). வன்முறைகள் மீண்டும் தலையெடுப்பதை தவிர்க்கும் பொருட்டு ஊர்காவல் படைகளை அமைப்பது என்பனவாகும். (இது முதலாளித்துவ அரசின் வன்முறை கரத்தை பலப்படுத்தும் பொருட்டு குண்டர் பலத்தை சட்டப்பூர்வமாக்கும் தீர்மானமாகும்)

இந்தத் தீர்மானங்கள் அனைத்தும், பொது மக்களின் கிளர்ச்சிகளையிட்டு கிலிபிடித்த ஆளும் வர்க்கத்தின் இரு சாராருக்கும் இடையிலான உடன்பாட்டை வெளிப்படுத்துகின்றன. இந்தத் தீர்மானங்களில் முதலாளி வர்க்கம் ஜனநாயக உரிமைகள் சம்பந்தமாக காட்டும் பிற்போக்குத்தனத்துக்கும் மேலாக பாராளுமன்ற ஆட்சி முறையின் கீழ் பொது மக்களின் ஆதரவை திரட்டிக் கொள்வது தொடர்பில் அதனது முழு வேலைத்திட்ட வங்குரோத்தும் அடங்கி இருந்தது.

ஜனநாயக உரிமைகளை வெற்றிகொள்வது மற்றும் அதைப் பாதுகாப்பது சம்பந்தமாக தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சிகர இயலுமையை நிராகரிக்கும் குட்டி முதலாளித்துவ தீவிரவாதிகளின் அமைதிவாத நடவடிக்கைகளைப் போலவே பயங்கரவாத நடவடிக்கைகளதும் உதவியை மாற்றி மாற்றி பயன்படுத்திக் கொள்வதன் மூலமே, முதலாளி வர்க்கத்தின் பிற்போக்கையும் வங்குரோத்தையும் தற்காலிகமாகவேனும் மூடி மறைத்துக்கொள்வது சாத்தியமாகும்.

ஒரு புறத்தில் வடக்கில் தமிழ் குட்டி முதலாளித்துவ குழுக்கள் தனியார் பயங்கரவாத நடவடிக்கைகளை உக்கிரமாக்கின. மறுபுறத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்த அவர்களின் சகாக்கள் வினோதமான சுதந்திரப் பிரகடனங்களை வெளியிட்டு வந்தனர். 1982 ஜனவரி 14ம் திகதி தைப்பொங்கல் தினத்தில் லண்டனில் அமைக்கப்பட்டிருந்த தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் பிரமுகரான கிருஷ்ணா வைகுந்தவாசனால் பிரகடனம் செய்யப்பட்ட "சுதந்திர தமிழ் ஈழம்", என்ற பிரகடனம் பிறந்த மனையிலேயே மரணத்தைத் தழுவிக் கொண்ட ஒரு பிரகடனமாகும். இவர் ஏகாதிபத்தியக் கள்வர் குகையான ஐக்கிய நாடுகள் சபையின் ஆசீர்வாதத்துடன் சுதந்திர தமிழீழத்துக்கு வேண்டிக் கொண்டிருந்தார். இந்த செயலில் இருந்து வேறுபட்டதாகத் தோன்றினாலும், தொழிலாளர் வர்க்க அனைத்துலகவாதத்தினை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ எதிர்ப்பு சோசலிச வேலைத் திட்டத்தினை பின்பற்றுவதை நிராகரித்து, துப்பாக்கிகளில் நம்பிக்கை வைத்த குட்டி முதலாளித்துவ இயக்கமான பாலஸ்தீன விடுதலை இயக்கம் போலவே, விடுதலைப் புலிகள் அமைப்பும் ஏகாதிபத்திய, ஏகாதிபத்தியச் சார்பு ஆளும் வர்க்கங்களின் எதிரில் அடிபணிவதைத் தவிர வேறு தலைவிதியே அதற்கு இருக்கவில்லை. அது அவர்களினால் வெளியிடப்பட்ட ''எமது மக்களின் விடுதலை'' என்ற பெயரில், பிற்போக்கு ஒடுக்குமுறை கரத்தின் துப்பாக்கி தோட்டாக்களாக தம்மையே மாற்றிக் கொண்டு, தாம் பிரதிநிதித்துவம் செய்த மக்களை சட்டிக்குள் இருந்து அடுப்புக்குள் இழுத்துத் தள்ளும் திட்டமாகியிருப்பது முன்னரை விட இன்று தெளிவாகியுள்ளது.

இந்த இரு சாரரின் நடவடிக்கைகளும் யூ.என்.பி. அரசாங்கத்தின் ஒடுக்குமுறைகளுக்கும் அவ்வாறே தமிழர் விடுதலைக் கூட்டணியின் அடிபணிவுகளுக்கும் எதிராகப் போராடுவதாகக் காட்டிக்கொண்டாலும் தொழிலாளர் வர்க்க அனைத்துலகவாதத்தை புறக்கணித்து, தேசியவாதத்தின் அடிப்படையில் முன்னெடுத்த அந்த எதிர்ப்புக்களின் மலட்டுத்தன்மையும் அதில் இருந்து தலைநீட்டும் பிற்போக்கின் பக்கம் இழுபட்டுப் போவதும் தவிர்க்க முடியாததாகும். வடக்கு-கிழக்கு பிரதேசங்களில் இராணுவத்தை குவிக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வந்த யூ.என்.பி. அரசாங்கம், குட்டி முதலாளித்துவ தமிழ்க் குழுக்களின் நடவடிக்கைகளை சாட்டாகக் கொண்டு பொது மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையை உக்கிரமாக்கியது.

1982ல் ஜனாதிபதி தேர்தல் நெருங்கியதும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் சிங்கள இனவாத பிரச்சாரத்திற்கு முகம் கொடுக்கும் பொருட்டு, தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் முகஸ்துதிக்கு நடத்தி வந்த பேச்சு வார்த்தைகளையும் யூ.என்.பி. நிறுத்திக் கொண்டது. பேச்சுவார்த்தையை நிறுத்துவதற்கு எடுத்த தீர்மானத்துக்கும் அந்தப் பேச்சு வார்த்தைகளுக்கு ஆரம்பம் தொட்டே எதிர்ப்புக் காட்டி வந்த குட்டி முதலாளித்துவ தமிழ் குழுக்களின் எதிர்ப்புகளுக்கும் இடையே மாட்டிக் கொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு தர்ம சங்கடமான நிலை ஏற்பட்டது.

தமிழர் விடுதலைக் கூட்டணி, தனது அரசியல் இருப்பை பிடித்து வைக்கும் பொருட்டு ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிக்கக் கோரும் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டது. தமது நிலைப்பாட்டை நியாயப்படுத்தும் பொருட்டு, அது உள்ளார்ந்த ரீதியில் முரண்பாடான குதர்க்க வாதங்களில் இறங்கியது. அதாவது 1978 அரசியலமைப்பை ஏற்காததினால் பகிஷ்கரிப்பு தீர்மானம் சரியானது என்பது அவர்களின் வாதமாக இருந்தது. ஆனால், தமிழர் விடுதலைக் கூட்டணி அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக நடத்தி வந்த பாராளுமன்ற பகிஸ்கரிப்பை கைவிட்டு, அதனுள் பதுங்கிக் கொள்ளத் தொடங்கி நீண்ட காலமாகியிருந்தது மட்டுமன்றி, 1978 அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்தி சபைகளுக்கான தேர்தலிலும் போட்டியிட்டது. சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்காரர்கள் இனவாத நிலைப்பாட்டைக் கொண்டிருக்கையில் வடக்கு-கிழக்கு மாகாண தமிழ் மக்களில் பெரும்பான்மையினர், ஜயவர்தன ஆட்சியில் இருந்து விடுபடும் எதிர்பார்ப்புக்களுடன் கொப்பகடுவைக்கு வாக்களித்திருந்தனர். எனினும் ஜயவர்தன இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.

சமசமாஜக் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரம்

இங்கு குறிப்பிடப்பட வேண்டிய மற்றொரு முக்கியமான அரசியல் விடயம் இருந்து கொண்டுள்ளது. அது சமசமாஜ கட்சியின் வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட கலாநிதி கொல்வின் ஆர்.டி. சில்வா முகம் கொடுத்த மிகவும் தர்மசங்கடமான நிலைமையாகும்.

யூ.என்.பி, சி.ல.சு.க, தமிழ் காங்கிரஸ் ஆகிய முதலாளித்துவக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு எதிராக, தொழிலாளர் வர்க்க கட்சி வேட்பாளர் என்ற முறையில் சமசமாஜக் கட்சித் தலைவர் போட்டிக்கு நின்றமை, தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை ஊர்ஜிதம் செய்யக் கிடைத்த ஒரு வாய்ப்பாகக் கருதி, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் சமசமாஜ வேட்பாளருக்கு ஆதரவளித்தது. ஆனால், அது நிபந்தனைக்கு உட்பட்டதாகும். முதலாளித்துவக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு எதிரான நிலைப்பாட்டின் அடிப்படையில் பொது மக்களிடையே செல்வது என்பதன் அர்த்தம், முதலாளி வர்க்கத்துக்கு எதிராக உறுதியாக போராடக்கூடிய வர்க்கமான தொழிலாளர் வர்க்கத்தின் வரலாற்றுப் பணிக்குப் பொருத்தமான மாற்று வேலைத்திட்டத்தின் அடிப்படையில் பொது மக்களை அணிதிரட்டப் போராடுவதாகும். புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் விடுத்த அந்த யோசனையை நிராகரித்த சமசமாஜ தலைவர், தமது மக்கள் முன்னணிவாத பிற்போக்கிற்குப் பொருத்தமான விதத்தில் இன, மத, சாதி மற்றும் முதலாளித்துவச் சார்பு மேடையிலேயே நின்று கொண்டிருந்தார்.

சமசமாஜக் கட்சி தாம் நின்று கொண்டிருந்த முதலாளித்துவச் சார்பு மக்கள் முன்னணி வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஜனாதிபதித் தேர்தலுக்கு நியமனப் பத்திரம் தாக்கல் செய்ததன் பின்னரும் கூட, எச்சில் இலைகளைக் கிளறி சி.ல.சு.க.விடம் இருந்து தமக்கு ஏதும் நிவாரணம் கிடைக்குமா என மோப்பம் பிடித்து அலைந்தது. இது எந்தளவுக்கு அசிங்கமானதாக விளங்கியது என்றால், 1970களின் ஆரம்ப காலத்தில் பேராதனை பல்கலைக்கழக உதவி விரிவுரையாளராகப் பணியாற்றும் காலத்தில் கூட்டரசாங்கத்தின் உதவியோடு ஐக்கிய நாடுகள் அமைப்பினுள் நுழைந்து கொள்ள வாய்ப்பைப் பெற்றுக்கொண்டு, பெரும் இராஜதந்திரி வேடம் பூண்ட பேர்டி கங்காதார என்பவர் அரை உயிருடன் கொணர்ந்த உசிதமற்ற பிரேரணையைக் கூட சமசமாஜக் கட்சியின் அரசியல் குழு கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொண்டது. இத்தகைய பிரேரணைகளில் சி.ல.சு.க. வேட்பாளர் ஹெக்டர் கொப்பேகடுவ சமசமாஜ தலைவரை ஜனாதிபதியாக்கும் பொருட்டு தேர்தலில் இருந்து விலகிக் கொள்ள தீர்மானம் செய்துள்ளார் என்பதும் ஒன்றாகும்.

இது நான் சிருஸ்டித்துக் கூறும் கதை அல்ல. சமசமாஜக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினரும் கோட்பாட்டாளருமான ஒஸ்மண்ட ஜயரத்ன, குடிவெறியில் இடத்துக்கு இடம் பல தருணங்களில், உண்மையை ஊர்ஜிதம் செய்யும் வகையில் தமது சகாவுக்கு கூறியுள்ள கதையாகும். அவரின் படி கங்காதராவின் குற்றுயிர் பற்றி சமசமாஜ தலைவர்கள் புரிந்து கொண்டிருந்தது மணித்தியாலக்கணக்கான கலந்துரையாடலின் பின்னரேயாகும். இந்த நிலைமையின் கீழ் கொல்வின் ஆர்.டி. சில்வாவிற்கு சுமார் 50,000 வாக்குகள் மட்டுமே கிடைப்பது தற்செயலானதா?

குண்டர் பலத்தைப் பாவித்தும் கள்ளவாக்களிப்பின் ஊடாகவும் (எதிர் ஜனாதிபதி வேட்பாளரான கொப்பேகடுவவின் வாக்குகளும் சுருட்டிக் கொள்ளப்பட்டன.) ஜனாதிபதி பதவியில் ஜயவர்தன மீண்டும் வேரூன்றிக் கொண்டதன் பின்னர் 1983 கறுப்பு ஜூலை வரையிலான பகுதி, தமிழர் எதிர்ப்பு வெறி பெரும் பதட்ட நிலைமையுடன் பெருகிச் சென்ற காலப்பகுதியாகும்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் முதலாளித்துவத் கன்னையில் இருந்து தோன்றிய அரசியல் வங்குரோத்தினுள் அது தலைமூழ்கிப் போய்க்கிடந்தது. தமிழ் மக்கள் தமது ஜனநாயக உரிமைகளைப் பற்றிக் காட்டிய அக்கறையின் அளவுக்கு அவர்களின் எதிரில் கடந்த காலத்தில் சிருஷ்டித்துக் காட்டப்படக் கூடியதாக இருந்த முதலாளித்துவ ஜனநாயக மோசடிகளின் அளவும் சிதறிப் போயிற்று.

தமக்கு என்னதான் அச்சுறுத்தல் இருந்துகொண்டிருந்த போதிலும் தமிழ் குட்டி முதலாளித்துவ அமைப்புகளின் துணையில்லாமல் வாழ முடியாத அளவுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி தள்ளப்பட்டது. அந்தத் "தீர்வு" தமிழ் மக்களின் உரிமைகளைக் காக்கும் அவசியத்தையோ அல்லது வல்லமையையோ அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. இது தமது மரணத்தை இன்னும் சொற்ப காலத்துக்கேனும் தள்ளிப்போடும் எதிர்பார்ப்புகளுடன் செய்யப்பட்ட ஒரு ஒத்திகையாகும்.

இந்தச் சமரசத்தின் பேரில் பயன்படுத்தப்பட்டவர் குட்டிமணியாவார். ரெலோ அமைப்பின் ஆரம்பத் தலைவரான யோகச்சந்திரன் செல்வராஜ் அல்லது குட்டிமணி, 1979ல் வல்வெட்டித்துறையில் பொலீஸ்காரர் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டவர். 1982 ஆகஸ்ட் 13ம் திகதி நீதிமன்றத்தில் குற்றவாளியாகக் காணப்பட்டு சிறையில் தள்ளப்பட்டவர். அந்தத் தீர்ப்புக்கு எதிரான அவரின் மேன்முறையீடு உயர் நீதிமன்றத்தில் இன்னமும் விசாரிக்கப்பட்டு வந்தது.

வட்டுக்கோட்டை பாராளுமன்ற உறுப்பினரின் மரணத்தில் வெற்றிடமாக இருந்த தொகுதிக்கு 1978 யூ.என்.பி அரசியலமைப்பின்படி தமிழர் விடுதலைக் கூட்டணி ஒருவரை நியமனம் செய்ய முடிந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணி குட்டிமணியின் பெயரை அதற்குப் பிரேரித்து தேர்தல் ஆணையாளர் அங்கீகரிக்க நேரிட்டது. இதைத் தொடர்ந்து குட்டிமணி பாராளுமன்ற உறுப்பினராகச் சத்தியபிரமாணம் செய்துகொள்ள, அவரை பாராளுமன்றத்துக்குக் கூட்டிச் செல்லுமாறு சிறை அதிகாரிக்கு உத்தரவிடுமாறு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி கேட்டுக் கொண்டார். ஆனால், சிறை ஆணையாளரின் பேரில் ஆஜராகியிருந்த சொலிசிட்டர் ஜெனரல் அந்தக் கோரிக்கையை பற்றித் தீர்ப்பு வழங்க மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அதிகாரம் கிடையாது என வாதாடினார். நீதிமன்றம் சொலிசிட்டர் ஜெனரலின் வாதத்தை ஏற்றுக் கொண்டது.

இது முதலாளித்துவ ஜனநாயகத்தின் கீழ் சட்டமும் நீதிமன்றமும் செயற்படும் விதத்தைக் காட்டும் மற்றொரு நாடகபாணியிலான உதாரணமாகும். இந்த முதலாளித்துவ ஜனநாயகத்தினுள் சிறைப்பட்டுக்கொண்டு, தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களின் உரிமைகளை பாதுகாக்க முடியும் எனக் கதையளப்போர், அந்த நாடகத்தில் நடிப்பது ஆடைகளையும் கலைத்துவிட்டேயாகும்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரித்தானியப் பாராளுமன்றத்துக்கு தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட வில்யம் வில்பர் ஃபோஸ்கேயின் நியமனத்தை பல தடைவைகள் நிராகரித்த பாராளுமன்றம், பின்னர் அக்கருத்தை மாற்றிக் கொண்டு அவரின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை அங்கிகரித்தது. அன்று முதலாளித்துவ ஆளும் வர்க்கம் வில்பர் ஃபோஸ்கே தொடர்பாக அந்தளவிற்கு குரோதம் கொண்டிருந்ததற்கு காரணம், அவர் அடிமை வர்த்தகத்தை தடை செய்யும்படி பிரச்சாரம் செய்த ஒரு சமூக சீர்திருத்தவாதியாக விளங்கியதேயாகும். அவரது சீர்திருத்த ஜனநாயக கோரிக்கைகள், முதலாளித்துவ அமைப்பின் கீழ் அடிமை முறையின் மூலம் இடம்பெறும் உழைப்புச் சுரண்டலுக்கு ஒரு சவாலாக இல்லாது இருக்கும் வரை, காலங்கடந்து சென்றாலும் சரி அவருடன் சமரசத்துக்கு செல்வதற்கு ஆளும் வர்க்கம் தனது தயார் நிலையை அன்று காட்டிக் கொண்டது. ஆனால், இன்று வெறும் கந்தலாகிப் போய்விட்ட முதலாளித்துவ ஜனநாயகத்தின் வரையறைகளுக்குள், குறைந்தபட்ச ஜனநாயக உரிமைகளை வழங்கக்கூட முதலாளித்துவ ஆளும் வர்க்கம் காட்டும் கடும் எதிர்ப்பு குட்டிமணி சம்பவத்தின் மூலம் வெளிப்பட்டது. நிலமானித்துவ அமைப்புக்கு எதிராக தாமே ஸ்தாபிதம் செய்த ஜனநாயகம் தொடர்பாக முதலாளி வர்க்கம் அன்று காட்டியதும் இன்று காட்டிக் கொண்டுள்ளதுமான மனோபாவத்தின் வேறுபாட்டை இனங்கண்டு கொள்ள முடியாதவர்கள், முதலாளி வர்க்கத்துடன் இணைந்துகொண்டு ஜனநாயக உரிமைகளை காட்டிக் கொடுப்பவர்களாவர். இதற்கு எதிரான விதிமுறையை லியோன் ட்ரொட்ஸ்கியினால் அபிவிருத்திசெய்யப்பட்ட நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டுக்கு இணங்கவே தயார் செய்ய முடியும். அதாவது முதலாளித்துவ அமைப்புக்கு எதிராக தொழிலாளர் வர்க்கத்தின் அரச அதிகாரத்தை ஸ்தாபிதம் செய்வதன் மூலம் ஜனநாயக உரிமைகளை வெற்றி கொண்டு பாதுகாக்கும் விதிமுறையாகும். அன்று புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தினதும் இன்று சோசலிச சமத்துவ கட்சியினதும் விதிமுறை இதுவே.

தமிழ் குட்டி முதலாளித்துவப் போராளிகளுடன் உடன்பாட்டுக்கு செல்லும் அடையாளமாக ஒத்திகை பார்க்கச்சென்ற குட்டிமணியை பாராளுமன்ற உறுப்பினராக்குவது பிழைத்துப் போனதும் தமிழர் விடுதலைக் கூட்டணி தமது கட்சியின் நீலன் திருச்செல்வத்தை அப்பதவிக்கு நியமனம் செய்தது.

1983 உள்ளூராட்சி சபைத் தேர்தல்

தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் குட்டி முதலாளித்துவ போராளிகள் குழுக்களுக்கும் இடையேயான முரண்பாடுகள் 1983 மே மாதத்தில் இடம்பெற்ற மாநகர சபை தேர்தல்களில் போட்டியிட அக்கட்சி தீர்மானம் செய்ததோடு உக்கிரம் கண்டது. மே மாத ஆரம்பத்திலேயே பொது மக்களிடையே துண்டுப் பிரசுரம் ஒன்றை விநியோகித்த தமிழீழ விடுதலைப் புலிகள், தேர்தலைப் பகிஷ்கரிக்குமாறு கேட்டுக்கொண்டனர். ''ஈழ விடுதலையை" வாக்குகளாகக் கறப்பதற்கான சுலோகங்களாக பயன்படுத்துவோரை அது கடைகெட்டவர்கள் எனக் குறிப்பிட்டது. அது தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு எதிரான ஒரு குற்றச்சாட்டு என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த அச்சுறுத்தலைப் பற்றி ஆராய்வதற்கென நல்லூரில் கட்சி அலுவலகத்தில் கூடிய தமிழர் விடுதலைக் கூட்டணி செயற்குழு என்ன நிலைமைக்கு முகம் கொடுத்தாலும் தேர்தலில் போட்டியிடுவது எனத் தீர்மானம் செய்தது. சிங்கள இனவாத யூ.என்.பி. ஆட்சியாளர்களுடன் சமரசம் செய்து கொண்டு தாம் நடத்தி வந்த பாராளுமன்ற விளையாட்டுக்களினால் தமக்கு குழிபறிக்கப்பட்டுள்ளதையிட்டு தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு சரியான மதிப்பீடு இருக்கவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட்ட தமிழ் குட்டி முதாலாளித்துவக் குழுக்களுக்கு தமிழ் பொதுமக்களின் நடைமுறை ஆதரவு இல்லாது இருந்து வந்த நிலையில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்ற நப்பாசையான எதிர்பார்ப்பின் அடிப்படையில் நின்றுகொள்வதைத் தவிர ஒரு முதலாளித்துவக் கட்சி என்ற முறையில் அது வேறு எதையும் செய்வதில் வெற்றி பெறவில்லை. அது யூ.என்.பி. வெட்டிவைத்திருந்த படுகுழியில் வீழ்ந்து போவது நிச்சயமாகியது.

தேர்தல் தினம் நெருங்கியதும் விடுதலைப் புலிகள் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் அவ்வாறே யூ.என்.பி. தேர்தல் இயக்கத்துக்கும் எதிரான தாக்குதல்களை தீவிரமாக்கினர். யாழ்ப்பாணம் ஓட்டுமடத்தில் இடம்பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணி கூட்டத்தில் அத்தகைய ஒரு சம்பவம் நடைபெற்றது. கூட்டத்தில் உரை நிகழ்த்த வந்த அமிர்தலிங்கம் வாகனத்தில் இருந்து இறங்கி மேடையில் ஏறியதும், அவரின் வாகனத்தை கூட்டம் இடம் பெறும் இடத்தில் இருந்து தள்ளிச் சென்ற விடுதலைப் புலிகள், அதில் ஏறி ஒட்டம் எடுத்தனர். கூட்டத்தில் இருந்தவர்களும் தலைதெறிக்க ஓடினர்.

விடுதலைப் புலிகள் தேர்தலில் போட்டியிட்ட யூ.என்.பி. வேட்பாளர்களையும் கலைத்துக் கலைத்து அடித்தனர். ஒரேநாளில், இரவு பருத்தித்துறையில் யூ.என்.பி. வேட்பாளர் இரத்தினசிங்கமும் சாவகச்சேரி வேட்பாளர் முத்தையாவும் அவரது அந்தரங்கப் பாதுகாப்பாளரும் இரு இடங்களில் கொலை செய்யப்பட்டனர். இதனால் கிலியடைந்த யூ.என்.பி. மற்றும் தமிழ் காங்கிரஸ் வேட்பாளர்கள் சகலரும் உடனடியாக போட்டியில் இருந்து வாபஸ் பெற்றுக் கொண்டனர். அவர்களின் பெயர்கள் சீட்டில் இருந்து அகற்றப்படாமல் போனதற்கு காரணம், அவ்வாறு செய்ய தேர்தல் சட்டம் இடம் கொடாது போனதேயாகும். தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர்களுக்கும் அத்தகைய கொலை பயமுறுத்தல்கள் தொடர்ந்து விடுக்கப்பட்டு வந்ததன் பெறுபேறாக யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு போட்டியிட்ட அக்கட்சியின் 35 வேட்பாளர்கள் பகிரங்கமாக வாபஸ் பெற்றுக் கொண்டனர்.

தேர்தலுக்கு இன்னும் சில தினங்கள் மட்டும் இருக்கையில் வடக்கில் இராணுவமும் பொலிசும் வீதிகளில் குவிக்கப்பட்டிருந்த போதிலும், தேர்தல் தினத்தன்று பல இடங்களில் குண்டு வெடிப்புகள் இடம்பெற்றன. அன்று யாழ்ப்பாணத்தில் தேர்தல் சாவடியாக விளங்கிய சிவப்பிரகாச மகாவித்தியாலயத்துக்குள் புகுந்த விடுதலைப் புலிகள், அங்கு காவலில் ஈடுபட்டிருந்த கோர்ப்ரல் ஜயவர்தன மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் இரண்டு பொலிசார் காயமடைந்தனர். அவர்கள் ஜயவர்தனவின் டி56 துப்பாக்கியை தூக்கிச் சென்றனர். 'ராஜரட்ட ரைபிள்' படைப் பிரிவைச் சேர்ந்த இராணுவத்தினர் வழக்கமாகச் செய்வது போல், பின்னர் வந்திறங்கி அக்கம் பக்கம் இருந்த கடைகளுக்கும் வீடுகளுக்கும் தீமூட்டினர்.

இந்தத் தேர்தலில் வாக்களிப்பில் ஈடுபடாத மக்களின் எண்ணிக்கை யாழ்ப்பாணத்தில் நூற்றுக்கு 86 சதவீதமாகவும், சாவகச்சேரியில் நூற்றுக்கு 85 சதவீதமாகவும், பருத்தித்துறையில் நூற்றுக்கு 99 சதவீதமாகவும் வல்வெட்டித்துறையில் நூற்றுக்கு 98 சதவீதமாகவும் இருந்தது.

இந்தத் தேய்ந்து போன தேர்தலின் பின்னர் சகல மாநகர சபைகளதும் நகரசபைகளதும் ஆரம்பக் கூட்டங்களை 1983 ஜூன் 16ம் திகதி நடத்தும்படி அரசாங்கம் கட்டளையிட்டது. ஆனால், 11 மாநகரசபைகளிலும் 36 நகரசபைகளிலும் பேருக்குத் தன்னும் கூடியது ஒன்றே ஒன்றுதான். அது பருத்தித்துறை நகர சபையாகும்.

1983 கறுப்பு ஜூலை

வடக்கு கிழக்கு தமிழ் மக்களை இராணுவத் துப்பாக்கி முனையில் பயமுறுத்தி பணியவைக்க முடியாது போனதால் கதிகலங்கிப் போன யூ.என்.பி. தலைவர்கள், தென்மாகாணங்களில் வாழ்ந்து வந்த தமிழ் மக்களிடம் பழிவாங்கும் காட்டுமிராண்டி தயாரிப்புக்களில் இறங்கினர். ஜாதிக சேவக சங்கத்தில் சேர்ந்து கொண்டிருந்த காடையர்கள் உட்பட்ட குண்டர் கும்பல்கள், சிறில் மத்யூவின் தலைமையில் இனவாதத் தூபம் போட்டுக்கொண்டு தென்மாகாணங்களில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான கடைகள் வீடுகளின் முகவரிகளை திரட்டிக்கொண்டு படு பயங்கரமான படுகொலைகளுக்கும் வன்முறைகளுக்கும் ஆயத்தமாகி வந்தார்கள்.

மனித இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கப் பழக்கப்பட்ட இந்த இராட்சதப் படையணிகளுக்கு சட்ட ரீதியான முகமூடியையும் இராணுவ-பொலிஸ் ஒத்துழைப்பையும் வழங்கும் பொருட்டு அவசரகாலச் சட்டம் பயன்படுத்தப்பட்டது. அது மட்டுமன்றி கொலை செய்யப்பட்டவர்களை மரண விசாரணையோ அல்லது நீதி விசாரணையோ இல்லாமல் சுட்டெரிக்கப் பொலிசாருக்கும் இராணுவத்தினருக்கும் அதிகாரத்தை வழங்கும் சட்டங்கள் அமுல் செய்யப்பட்டன.

இந்த இரத்தவெறி இனவாத தயாரிப்புகளுக்காக வீதியில் இறங்குவதற்கான உடனடி தருணத்தை, இராணுவப் படை அணிகளுக்கு எதிராக யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் விடுதலைப் புலிகள் தொடுத்த தாக்குதல் வழங்கியது. இதில் 13 படையினரும் ஒரு இரானுவ அதிகாரியும் ஜூலை 23ம் திகதி கொல்லப்பட்டனர்.

தமிழ் மக்களுக்கு எதிரான படுகொலை இரத்தக் களரி இயக்கம் தலைநகரில் ஆரம்பிப்பதற்கென முன்கூட்டியே தயார்செய்யப்பட்டது. இதற்கான குண்டர், ஆயுதந் தாங்கிய இராணுவ இயக்கத்துக்கு அங்கிகாரம் பெறும் பொருட்டு இறந்த இராணுவப் படையாட்களின் சகல சடலங்களும் கொழும்பு கனத்தையில் இடம்பெறும் தகனக் கிரியைகளுக்கு கொணரப்படுவதாக அரசாங்கம் அறிவித்தது. அது இனவாதப் படுகொலையாளர்கள் அணிதிரள விடுக்கப்பட்ட ஒரு உத்தியோகபூர்வ அழைப்பாக விளங்கியது.

1970-77 கூட்டரசாங்க காலத்தில் சட்ட ரீதியானதாக்கப்பட்ட சிங்கள இனவாதத்தின் கையாட்களான சமசமாஜ-ஸ்டாலினிச கட்சிகளும், இக்கட்சிகளின் எடுபிடிகளான நவ சமசமாஜக் கட்சியினரும் யூ.என்.பி.யின் ''சட்டத்தையும் ஒழுங்கையும்'' பேணும் இயக்கத்துக்கு தோள் கொடுத்த ஜே.வி.பி,யும் இனவாதத்தை வெளிவெளியாக அரவணைத்துக் கொண்டனர். பொதுமக்களை குழப்பியடிக்கவும் இனவாத யூ.என்.பி. குண்டர் இயக்கத்தின் செல்வாக்குக்கு அதன் ஒரு பகுதியை பலியிட்டும் நடாத்திய அரசியல் இயக்கத்தில் சிங்கள இனவாத குண்டர்களும் இருந்தனர்.

இந்த இனவாத பேரழிவு அரசியல் விதிமுறையை தோற்கடித்து சிங்கள - தமிழ் தொழிலாளர், ஒடுக்கப்படும் மக்களை முதலாளித்துவ ஆட்சிக்கு எதிராக அனைத்துலகவாத அடிப்படையில் ஐக்கியப்படுத்தி வழிநாடாத்த அன்று போராடியது புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் மட்டுமே ஆகும். அதனால் அதன் அச்சகம், அலுவலகத்தின் முகவரிகளும் அவ்வாறே அதன் முன்னணி அங்கத்தவர்களின் முகவரிகளும் இரத்தக்களரிக்காரர்களின் தாக்குதல்களுக்கு உள்ளாக இருந்த தனியார் இடங்களின் பட்டியலில் அடங்கி இருந்தது. இது பின்னர் வெளியான சாட்சியங்களின் மூலம் அம்பலமாகியது.

ஜூலை 24ம் திகதி கொழும்பு கனத்தையில் கூடிய இரத்த வெறிக்குண்டர்களை நன்கு தூண்டி விடும் விதத்தில் யூ.என்.பி. அரசாங்கம் ஆத்திரமூட்டல்களில் இறங்கியது. இறுதிக்கட்டத்தில் இறந்த இராணுவப் படைகளின் சடலங்கள் கனத்தையில் தகனம் செய்யப்படாமல் அவரவர்களின் ஊர்களில் தகனம் செய்யப்படும் என ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டது. கூடியிருந்த குண்டர்கள், கும்பல் கும்பலாக பிரிந்து இராணுவ பொலிஸ் பாதுகாப்பின் கீழ் பொரளை முச்சந்தியில் அன்று மாலை இரத்தக் களரிகளிலும் காட்டுமிராண்டி படுகொலைகளிலும் ஈடுபட்டனர். தமிழர் எதிர்ப்பு இனவாத யுத்தத்தின் திருப்பு முனையாக 1983 ஜூலை முதலாளித்துவ அரச ஆதரவுடன் அந்த விதத்தில் ஆரம்பமாகியது.

1983 ஜூலை 23ம் திகதி ஆரம்பமான தமிழர் படுகொலை இரத்தக்களரி இயக்கம் பல நாட்கள் தொடர்ந்து பரந்து வந்தது. தனது சொந்த அனுபவங்களின் படி, இந்த காட்டுமிராண்டி இயக்கத்தின் பல கோணங்கள், அரசாங்க முன்னணிப் பத்திரிகை நிறுவனமான லேக்ஹவுசின் முன்னணிப் பத்திரிகையாளரும் தெகிவளை வாசியுமான ரீ. சபாரத்தினம் ஆங்கிலத்தில் எழுதிய ஒரு மிதவாதியின் படுகொலை (The Murder of a moderate) என்ற நூலில் பின்வருமாறு விபரிக்கப்பட்டுள்ளன.

"ஜூலை 24 விடியற்காலை 5 மணிக்கு எனக்கு நாராஹேன்பிட்டியில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பு, காடையர்கள் அந்தப் பிரதேசத்தில் நடமாடுவதாகவும் வீதிகளில் கொள்ளையடித்துக் கொண்டு திரிவதாகவும் தெரிவித்தது. நான் எனது சிறுவயது ஆண் பிள்ளைகள் இருவருடனும் பம்பலப்பிட்டி காசல் ஒழுங்கையில் உள்ள எனது உறவினரின் வீட்டுக்கு விரைந்தேன். அந்த வீடு இத்தகைய சந்தர்ப்பங்களில் அகதிகள் முகமாக மாற்றப்படும் இந்துக் கோவிலுக்கு அருகில் அமைந்திருந்தது. இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் ஒரு அணிதிரண்ட கும்பல் இரும்புக் கம்பிகளுடனும் ஆயுதங்களுடனும் ஆயுதபாணிகளாகி தமிழ்க் கடைகளையும் வீடுகளையும் உடைத்துத் தள்ளி, நகரை வலம் வந்தது. இவர்களின் பின்னால் பெற்றோல் டின்களையும் தாங்கிய கும்பல்கள் கடைகளையும் வீடுகளையும் தீமூட்டி வந்தனர்.

"அன்று காலை முழுவதும் கலகக்காரர்கள் பஸ்கள், லொறிகள், புகையிரதங்கள் மற்றும் அரசாங்க வாகனங்களில் கொழும்புக்கு பெருக்கெடுத்து வந்தனர். அவர்கள் தமிழர்களின் வீடுகளைக் கண்டு பிடிப்பதற்காக தேர்தல் இடாப்புகளை எடுத்து வந்திருந்தனர். அத்தகைய ஒரு குழு தெகிவளைக்கு சென்றது. அவர்கள் அயலவர்களை எனது வீட்டைக் காட்டும்படி கேட்டனர். அந்தப் பகுதியில் தமிழ் வீடுகள் கிடையாது என அவர்கள் கூறியதும் அவர்கள் தமிழரைக் பாதுகாக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டி இடாப்பைக் காட்டினர். எனது பெயரின் கீழ் சிவப்பினால் கோடிடப்பட்டு இருந்தது. கலகக்காரர்கள் எனது வீட்டுக்கு சென்றனர். முன் கதவை உடைத்து திறந்தனர். எனது அலுவலக அறையில் இருந்த புத்தகங்களை வெளியில் இழுத்துப் போட்டு அவற்றுக்கு தீ மூட்டினர். அந்த அறையில் இலங்கை இந்திய வரலாறு பற்றிய அருமையான நூல்கள் இருந்தன. அந்த புத்தக அடுக்குகள் மூன்று நாட்கள் தொடர்ந்து எரிந்ததாக எனக்குத் தெரிய வந்தது.

"மதியநேரம் நான் காசல் ஒழுங்கையில் இருந்து எனது அயலவர்களுடன் தொலைபேசியில் பேசினேன். வீடு தீப்பற்றி எரிவதாக அவர்கள் கூறினர்கள். அதே நேரத்தில் ஆர். சிவகுருநாதன், பீ. பாலசிங்கம், கே. நடராசா, கே. சிவப்பிரகாசம், திருமதி. பொன்மணி குலசிங்கத்தினதும் மற்றும் பத்திரிகைத் துறையில் செல்வாக்கான பதவிகளை வகித்த இன்னும் பலரது வீடுகளுக்கும் தீ முட்டப்பட்டன. அந்த நேரத்தில் ஆளும் யூ.என்.பி. யின் தொழிற்சங்க கன்னையான சிறில் மத்தியூ தலைமையிலான ஜாதிக சேவக சங்கமே இந்தக் கும்பல்களுக்குப் பெயர்களையும் விலாசங்களையும் வழங்கியதாகத் தமிழர்கள் நம்பினர்.

"அதே வேளையில் ஒரு காடையர் கும்பல் கடற்கரைப் பக்கமாக காசல் ஒழுங்கையினுள் நுழைந்து ஒழுங்கையின் கடைசி வீட்டைத் தாக்கியது. நான் நான்கு அமச்சர்களுக்கு தொலைபேசி அழைப்புக்கள் எடுத்தேன். ஆனால், அவர்கள் ஜனாதிபதியுடன் இருப்பதாக எனக்கு கூறப்பட்டது. உன்மையில் அவர்கள் அவரை நாட்டுக்கு உரை நிகழ்த்தும்படி நெருக்கி வந்தனர். தெளிவாகக் குழம்பிப் போயிருந்த அவர் ஆழ்ந்த யோசனையில் மூழ்கிப் போயிருந்தார். 'விடயம் கட்டுப்பாட்டைத் தாண்டிவிட்டது' என அவர் தனது அமைச்சர்களிடம் தெரிவித்தார். தொண்டமானும் மற்றும் தமிழ் பிரமுகர்களும் ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்கும்படி அவரை நெருக்கினார்கள்."

இந்த விதத்தில் நாடகபாணியில் இங்கே விபரிக்கப்பட்டிருப்பது சிங்கள இனவாத குண்டர் கும்பல்களின் கடைகெட்ட தன்மையையாகும். எப்போதுமே பிற்போக்கிற்கு செவிமடுக்கும் வரலாறு கொண்ட தொண்டமான் உட்பட்ட பிற்போக்கு தமிழ் பிரமுகர்கள் எனப்படுவோரின் மலட்டுத் தன்மையும் இது எடுத்துக்காட்டுகின்றது. ஜனாதிபதி ஜயவர்த்தன ''தனது ஆட்சியில்'' செய்யப் போன நடவடிக்கையின் பரிமானம் எந்தளவானது என்பது மட்டுமே கூறப்படவில்லை.

1977 தேர்தலில் வென்றவுடன் பொலிசாரை மூன்று நாட்கள் லீவில் அனுப்பி தமது அரசியல் எதிரிகளுக்கு எதிராக ஜயவர்த்தனாவின் கீழ் யூ.என்.பி கட்டவிழ்த்து விட்ட பயங்கர இயக்கம் இதைக் காட்டிலும் பன்மடங்கு உக்கிரமாக்கப்பட்டு கொழும்பிலும் ஏனைய மாகாணங்களிலும் வசித்த தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டமை ஜனாதிபதி ஜயவர்தனவின் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட பயங்கரத்தின் அளவாகும் என்பதில் எதுவிதமான சந்தேகமும் கிடையாது. இது ஜூலை 23ம், 24ம் திகதிகளில் அவர் செயற்பட்ட விதத்திலும் அவ்வாறே அதன் பின்னர் அவரின் நடைமுறையின் மூலமூம் நன்கு நிரூபணமாகியது.

ஜூலை 23ம் திகதியில் இருந்து கொலைகார காடையர் கும்பல்களும் அவர்களுடன் இணைந்து இரத்தக் களரிகளில் ஈடுபட்ட பொலிசாரும் இராணுவமும் ஒன்றரை நாட்கள் சுதந்திரமாக வீதிகளில் உலாவ இடமளித்ததன் பின்னர் ஜுலை 25 மாலை 2 மணிக்கே ஜனாதிபதி ஜயவர்த்தன கொழும்பில் ஊரடங்குச் சட்டத்தை பிறப்பித்தார். ஏனைய மாவட்டங்களுக்கும் செல்லுபடியான விதத்தில் அன்று ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது மாலை 6 மணிக்கேயாகும்.

எவ்வாறெனினும் அவசரகாலச் சட்டமும் ஊரடங்குச் சட்டமும் பிற்போக்கு முதலாளித்து அரசின் ஒடுக்குமுறை ஆயுதங்களின் ஒரு அங்கமாகும். அவை மூலம் தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களுக்குக் கிட்டும் நிவாரணமோ அல்லது பாதுகாப்போ கிடையாது. முதலாளித்துவ ஒடுக்குமுறைப் பிடியை இறுக்கமாக்கி பொதுமக்களின் ஜனநாயக உரிமைகளை துடைத்துக் கட்ட தம்மை அர்ப்பணித்துக் கொண்டுள்ள, அவசரகால சட்ட ஆட்சிக்கு வாக்களித்துள்ள, சமசமாஜ, இ.தொ.கா, நவசமசமாஜ மற்றும் ஸ்டாலினிச கட்சிகள் போன்ற துரோக அமைப்புக்களால் மட்டுமே இத்தகையவை கிட்டுமென கூற முடியும். பொதுமக்கள் அந்தப் பொறியில் மாட்டிக் கொள்ளக் கூடாது. அதற்குப் பதிலாக பொதுமக்கள் தமது பாதுகாப்பை ஊர்ஜிதம் செய்துகொள்ள, முதலாளித்துவ அரசாங்கத்தில் இருந்தும் அரசில் இருந்தும் முதலாளித்துவ, முதலாளித்துவச் சார்பு கட்சிகளில் இருந்தும் முற்றிலும் சுயாதீனமான முறையில், தொழிலாளர் வர்க்கத் தலைமையின் கீழ் ஒடுக்கப்படும் மக்கட் குழுக்களை அணிதிரட்டிக் கொண்டு பாதுகாப்புக் கமிட்டிகளை நிறுவிக் கொள்ள வேண்டும்.

அன்று புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தினதும் இன்றைய சோசலிச சமத்துவக் கட்சியினதும் மேற்சொன்ன வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்கள் இளைஞர்களை அணிதிரட்டும் அவசியம் 1983 கறுப்பு ஜூலையின் அனுபவத்தின் மூலம் மேலும் ருசுப்படுத்தப்படுகிறது.

முதலில் கொழும்பிலும் பின்னர் மேல் மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும் விதிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம், குண்டர்கள் ஏனைய மாகாணங்களுக்குள் ஊடுருவி தமது இரத்த களரியையும் படுகொலைகளையும் முன்னெடுக்க வழங்கப்பட்ட ஒரு அரச ஆணையாகியது. ஜூலை 26ம் திகதி இனவாதிகள் கண்டி, நுவரேலியா, திருகோணமலை, குருணாகலை, இரத்தினபுரி, பலாங்கொடை முதலான பிரதேசங்களில் தமிழ் மக்களுக்கு எதிராக தமது காடைத்தனங்களை நன்கு காட்சிப்படுத்தினர். திருகோணமலை சந்தை தரைமட்டமாக்கப்பட்டது. இந்த நடவடிக்கையில் கடற்படையினர் முன்நிலை வகித்திருந்தனர். இனவாத காடைத்தன குண்டர் இயக்கத்துக்கும் முதலாளித்துவ சட்டத்துக்கும் அரச படைகளுக்கும் இடையே நிலவிய பிரிக்கமுடியாத பிணைப்பை இது வெளிக்காட்டியது.

அரசின் தொடர்பு

ஜூலை 26ம் திகதி வெலிக்கடைச் சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் இனவாத குண்டர்களுக்கும் அரச நிறுவனத்துக்கும் இடையேயான உறவினை பலம்வாய்ந்த முறையில் அம்பலமாக்கியது. வெலிக்கடைச் சிறையில் சிறை வைக்கப்பட்டிருந்த சிங்கள சிறைக் கைதிகள் தூண்டிவிடப்பட்டனர். தமிழ் சிறைக் கைதிகள் தடுத்துவைக்கப்பட்டிருந்த சிறைக் கூடங்களுக்குள் நுழைந்த அவர்கள், அங்கு 35 தமிழ் அரசியல் கைதிகளை படுகொலை செய்தனர். தமிழர் விடுதலைக் கூட்டணியினால் முதலாளித்துவ பாராளுமன்ற ஜனநாயகத்தின் பேரால் எதிர்ப்புக் காட்டுவதாகக் கூறி பாராளுமன்ற உறுப்பினராகப் பேர் பிரேரிக்கப்பட்டு ஈடேறாது போன குட்டிமணியும் இதில் அடங்குவார். இது முதலாளித்துவ அரசின் ஒடுக்குமுறை அமைப்பான சிறைச்சலை அதிகாரிகளின் உடன்பாடும் பங்களிப்பும் இல்லாமல் இடம்பெறக்கூடிய ஒரு சுயமான நிகழ்வு அல்ல. இந்தச் சம்பவம் இடம்பெற்றதற்கு மறுநாள் ஜூலை 27ம் திகதியும் அதே விதத்தில் அதே இடத்தில் வைத்து மேலும் 17 தமிழ்க் கைதிகள் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த விடயம் விவாதத்துக்கு இடமற்ற முறையில் நிரூபணமாகியது.

முதலாளித்துவ அமைப்பினால் எவ்வித எதிர்காலமும் அற்றமுறையில் அனாதைகள் ஆக்கப்பட்டு இம்சைக்குள் தள்ளப்பட்ட அநாகரீக சமூகத்தின் ஒரு பகுதியினர் முதலாளித்துவ வர்க்கத்தின் கடைகெட்ட தேவைகளின் பேரில் எவ்வளவு இலகுவான விதத்தில் தூண்டிவிடப்படுகின்றார்கள் என்பதனை கறுப்பு ஜூலையின் சகல சம்பவங்களும் பிரசித்தமாக்கின. விஞ்ஞானபூர்வமான சோசலிச இயக்கத்தின் ஸ்தாபக பத்திரமான கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் (1848) மார்க்சும் எங்கெல்சும் இந்த விடையத்தை புகழ் வாய்ந்த முறையில் தீர்க்கதரிசனமாக கண்டார்கள்.

அதில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது: ''பழைய சமுதாயத்தின் அடிமட்டத்து அடுக்குகளிலிருந்து எறியப்பட்டுச் செயலற்று அழுகிக் கொண்டிருக்கும் சமூகக் கசடாகிய ''அபாயகரமான வர்க்கம்'' பாட்டாளி வர்க்கப் புரட்சியால் எங்கேனும் ஒரு சில இடங்களில் இயக்கத்தினுள் இழுக்கப்படலாம், ஆனால் அதன் வாழ்க்கை நிலைமைகள் பிற்போக்குச் சதியின் கைக்கருவியாய் இலஞ்சம் பெற்று ஊழியம் புரியவே மிகப் பெரும் அளவுக்கு அதைத் தயார் செய்கின்றனர்.'' (கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை - பக்கம்-60)

பாசிஸ்ட்டுகளும் அவ்வாறே பாசிஸ்டுகளுக்கு கம்பளம் விரிக்கும் தீவிரவாத பைத்தியங்களும் எப்போதும் வக்காலத்து வாங்குவது இந்த லும்பன் சமூகத் தட்டினை (தெருவில் உழைப்பவர்கள்) அணிதிரட்டிக் கொள்வதற்கேயாகும். அது அவர்களின் தொழிலாளர் விரோத நிலைப்பாட்டின் காரணமாகத் தவிர்க்கமுடியாத விதத்தில் தலைநீட்டும் பிற்போக்கு அவசியமாகும். ஜே.வி.பி. யினதும் ஜனதா மித்திரோ அமைப்பினதும் நவசமசமாஜ கட்சியினதும் இன்னும் பல தீவிரவாத கும்பல்களதும் வாய்வீச்சுக்களினுள்ளும் திட்டங்களினுள்ளும் இந்த லும்பன் குழு சார்ந்த அவசியங்களை நன்கு கண்டு கொள்ள முடியும். இனவாதம் சாதிவாதம் வகுப்புவாதம் உட்பட மக்கள் நலவாதத்தின் பக்கமும் இந்தப் பிற்போக்கு அமைப்புக்கள் ஈர்க்கப்படுவது, லும்பன் சமூகத் தட்டு சம்பந்தமான அவர்களின் மோப்பம் பிடித்தலின் திட்டவட்டமான ஒரு வெளிப்பாடாகும்.

கடந்த காலத்தில் இருந்து நாகரீகத்தின் பயனத்தில் சமூக முன்னேற்றமானது, இன்றைய சமூக முறையினுள் இருந்துவரும் உற்பத்திச் சக்திகளை அழித்தொழிப்பதாக அல்லாது மிகவும் உயர்ந்த நிலைக்கு அபிவிருத்தி செய்யும் வல்லமை கொண்ட வர்க்க சக்தியை அரசியல் அரங்குக்கு கொண்டுவர போராடுவதன் மூலமே இடம்பெற்றுள்ளது. நிலமானித்துவ முறைக்கு எதிராக அந்தப் பணியை இட்டுநிரப்பக் கூடியதாக விளங்கிய சமூக சக்தி முதலாளித்துவ வர்க்கமேயானால் முதலாளித்துவ அமைப்பின் கீழ் நாகரீகத்தின் பேரழிவைத் தவிர்க்கும் சமூக முன்னேற்றத்தின் முக்கிய பிரதிநிதி தொழிலாளர் வர்க்கமேயாகும். மார்க்சும் எங்கெல்ஸ்சும் தீர்க்கதரிசனமாகக் கண்ட விஞ்ஞான சமூக உண்மை இருபதாம் நூற்றாண்டின் முழு அனுபவங்களின் மூலமும் ருசுப்படுத்தப்பட்டுள்ளது.

சமசமாஜ, ஸ்டாலினிச, நவசமசமாஜ, இ.தொ.கா. மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் தேசியவாத முதலாளித்துவச் சார்பு அரசியல் வேலைத்திட்டத்தின் மூலம் தொழிலாளர் வர்க்கம் துயரத்தில் தள்ளப்பட்டுள்ளது. இதனால் ஒரு புறத்தில் தமிழ் தேசியவாத குட்டி முதலாளித்துவ குழுக்கள் தலைதூக்கின. மறுபுறத்தில் இனவாத ஜே.வி.பி. போன்ற அமைப்புக்கள் தெற்கில் வளர்ச்சி கண்டன. இது ஆளும் வர்க்கத்துக்கு அவசியமாக இருந்த இனவாத யுத்தத் தீப்பிளம்புக்கு எண்ணெய் வார்ப்பதாக விளங்கியது.

கறுப்பு ஜூலையில் கொலைகளுக்கும் இரத்தக் களரிக்கும் இலக்கானவர்களின் எண்ணிக்கை பற்றிய உத்தியோகபூர்வ விபரங்கள் 350 தமிழர்கள் கொல்லப்பட்டதாகவும் 18,000 தமிழர்களின் வீடுகளும் கடைகளும் கொள்ளையிட்டுத் தீவைக்கப்பட்டதாகவும் கூறுகின்றன. முதலாளித்துவ அரசு வெளியிட்டுள்ள இந்த உத்தியோகபூர்வமான அறிக்கைகள் சரியானவை அல்ல என்பதை எப்போதும் போல் இங்கும் குறிப்பிட்டாக வேண்டும்.

சிங்கள வெகுஜனங்களின் இயக்கம் அல்ல

ஆனால், அந்த உத்தியோகபூர்வமான புள்ளிவிபரங்கள், சிங்கள மக்கள் பெரும்பான்மையினராக வாழும் பகுதிகளில் இருந்து அகதிகளாக வந்த தமிழ் மக்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் அதிகமானது எனக் குறிப்பிடுகின்றன. அதில் இருந்து ஒரு முடிவுக்கு வருவது அவசியம். கறுப்பு ஜூலை சிங்கள பொரும்பான்மையினரின் ஆதரவைப் பெற்ற ஒரு தமிழர் எதிர்ப்பு இனவாத இயக்கமாக இருந்திருக்குமானால், ஒரு லட்சம் தமிழ் மக்கள் அகதிகளாவதற்கு மாறாக கொலைசெய்யப்பட்டிருப்பார்கள். இல்லை. அது பொரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவுடன் தொடுக்கப்பட்ட படுகொலை, இரத்தக்களரி இயக்கமாக விளங்கவில்லை. அதற்குப் பதிலாக அது யூ.என்.பி. அரசாங்கம் முன்கூட்டியே அணிதிரட்டிக் கொண்ட லும்பன் உலகின் கொலையாளிகளை இனவாதத்தினால் தூண்டிவிட்டு, இராணுவ-பொலிஸ், சிறைச்சாலை உட்பட அரச ஒடுக்குமுறை நிறுவனங்களின் ஆதரவுடன் தொடுக்கப்பட்ட காட்டுமிராண்டி இயக்கமாகவே விளங்கியது.

இடம்பெயர்ந்து அகதிகள் முகாம்களுக்கு பாதுகாப்புக்காக வந்த தமிழ் மக்களிடமிருந்து பலருக்கு தமது அயல் சிங்கள நண்பர்கள் உயிர்தப்ப உதவிய விதம் பற்றிக் கூறவேண்டி இருந்த உண்மைக் கதைகள் பல. என்றும் துயருறும் அந்த பொதுமக்கள் என்ன மொழி பேசினாலும் எந்த மதத்தையும் கலாச்சாரத்தையும் கடைப்பிடித்தாலும் துயரத்தின் போதும் சங்கடத்தின் போதும் பொதுவில் நடந்து கொள்ளும் விதிமுறை அதுதான். இனவாத, இனக்குழுவாத மோதுதல்கள் ஆளும் வர்க்கத்தின் அவசியங்களுக்கு இணங்க, அவர்களின் நலன்களுக்கு அவர்களால் வழி நடாத்தப்படும் காடையர்கள், அரச இயந்திரத்தைக் கொண்டு கட்டவிழ்த்து விடும் காட்டுமிராண்டித்தனத்தின் வெளிப்பாடாகும். பொதுமக்கள் தமது வாழ்க்கைப் பழக்க வழக்கங்களின்படி பொதுவில் ஈடுபடுவது காட்டுமிராண்டித்தனத்துக்கு எதிரான கட்டுப்பாடான சமுக வாழ்க்கைக்கான மனித முயற்சிகளில் ஆகும்.

இந்த மனிதத் தன்மை வாய்ந்த முயற்சிகளுக்கு வர்க்க சமுதாயம் என்றும் எதிரிடையாக இருந்து வந்துள்ளது. முதலாளித்துவ அமைப்பின் கீழ் வர்க்க துருவப்படுத்தலுக்கு உள்ளான வர்க்க சமுதாயம், முதலாளித்துவ அமைப்பின் வீழ்ச்சி நிலமையின் கீழ் அதன் நச்சுத்தனமான இலட்சனமான ஏகாதிபத்திய உலக யுத்தத்தையும் நாட்டுக்கு நாடு காலனித்துவத்தை இலக்காகக்கொண்ட இனவாத இனக்குழுவாத மோதல்களையும் நனவான முறையில் சிருஷ்டிக்கின்றது. இலங்கையினுள் இனவாத யுத்தமாக இந்த ஏகாதிபத்திய அவசியத்தின் பெரிதும் நச்சுத்தனமான தன்மையே வெளிப்பட்டுள்ளது.

யூ.என்.பி. அரசாங்கம் விதித்த அவசரகாலச் சட்டமும் ஊரடங்குச் சட்டமும் இனவாத குண்டர்களையும் ஆயுதப்படைகளின் கொலையாளிகளையும் இரத்தக்களரிக் காரர்களையும் பாதிக்கவில்லை. அதற்குப் பதிலாக அது அவர்களின் குண்டர் நடவடிக்கைகளுக்குப் புதிய உத்வேகத்தை வழங்கியது.

அத்தகைய ஒரு பக்கபலம் இல்லாமல் இந்தக் காடையர் இயக்கம் இயங்கி இருக்குமானால் அதனது நிலையான கோழைத்தனம் அம்பலப்படுவது தவிர்க்க முடியாததாக இருந்திருக்கும். இது ஹிட்லரின் இயக்கம் தொடக்கம் ஜே.வி.பி. யின் பாசிச இயக்கம் வரையிலான வகையறாக்களைச் சேர்ந்த இத்தகைய இயக்கங்களால் பல தடவை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அவற்றின் கொலைகார நிழல் எங்கும் இறுக்கப்பட்டு அவற்றின் கால்கள் கட்டிப்போடப்பட்டது அரச இயந்திரத்தின் பொலிஸ்-இராணுவம் உட்பட முதலாளித்துவ அமைப்புக்களின் மூலமே. முதலாளித்துவ அரசைத் தூக்கிவீசும் மூலோபாயம் இல்லாமல் முதலாளித்துவ ஜனநாயகத்தை சுமந்து பாசிச எதிர்ப்பு மற்றும் இனவாத எதிர்ப்பு இயக்கம் எனக்கூறிக் கொள்ளும் இயக்கங்கள் எங்கும் தமது வங்குரோத்தினையும் மலட்டுத்தனத்தினையும் வெளிக்காட்டிக் கொண்டுள்ளன. மார்க்சிஸ்டுகள் இனவாதக் குண்டர்களுக்கும் பாசிஸ்டுக்களுக்கும் எதிரான போராட்டத்தை முதலாளித்துவ அரசுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் அரசை ஸ்தாபிக்கும் முலோபாயத்துடன் இணைத்துக் கொள்ளப் போராடுகிறார்கள்.

ஜூலை 29ம் திகதி இடம்பெற்ற சம்பவங்களின் மூலம் குண்டர்களின் மேற்சொன்ன தன்மை சுட்டிக் காட்டப்பட்டது. அது ''புலிகள் கொழும்புக்கு வந்து விட்டனர்,'' என்றக் கூச்சலுடன் இடம்பெற்றது.

பிரச்சாரத்தின் தொடக்கமாக புறக்கோட்டை சம்பவம் விளங்கியது. அதை ஆரம்பித்தவர்கள் பொலிஸ்காரர்களாக இருந்தனர். தமது உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக ஒரு அறைக்குள் சுருண்டு கதவை மூடிக்கொண்டிருந்த தமிழ் மக்கள் குழுவொன்றை வெளியில் கொண்டுவந்து கொலைகாரர்களின் கைகளில் ஒப்படைப்பதற்காக பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். வெடிச் சத்தம் கேட்ட உடனேயே அந்தப் பகுதியில் சுற்றித்திரிந்த குண்டர்கள் தமது மனதில் பொங்கிக்கொண்டிருந்த பீதிக்கு பதிலளிக்கும் பொறுப்பை தமது கால்களிடம் ஒப்படைத்தனர். தலை திரும்பிய பக்கம் எல்லாம் ஓடிய அவர்கள், ஓடிக்கொண்டிருக்கும் போதே "கொழும்புக்கு புலி வந்துவிட்டது, உயிரைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்" எனக் கூச்சலிட்டனர். ஒரு சில கணங்களில் இந்தக்கதை கொழும்பு முழுவதிலும் அயல் பகுதிகளிலும் காட்டுத் தீ போல் பரவியது. குண்டர்களின் பீதி குண்டர்களுக்கு ஊடாகவே வாய்க்கு வாய் பரவியது. சகல சந்திகளிலும் உற்சாகவேடம் பூண்டு உலாவி வந்த இனவாதிகள் அகப்பட்ட இடங்களில் ஒழித்துக் கொண்டனர். இராணுவ-பொலிஸ் காவல் நிலையங்கள் வெறிச்சோடிய சம்பவமும் அத்துடன் இடம்பெற்றதாக பல இடங்களில் அறியக் கிடைத்தன.

பு.க.க.வின் அஞ்சாத தலையீடு

சமூகத்தின் தெருக்கும்பல் தட்டினில் இருந்து திரட்டி, அரச இயந்திரத்தின் சக்தியை ஊட்டி வீதியில் இறக்கப்படும் இந்தக் குண்டர் இயக்கத்துக்கு எதிராக, புரட்சிகர சமுக சக்தியான தொழிலாளர் ஒடுக்கப்படும் மக்களையும் இளைஞர்களையும் அணிதிரட்டுவதற்கான போராட்டத்தை இந்த இரத்தக்களரி தீவைப்புகளுக்கும் அரச அடக்குமுறைகளுக்கும் மத்தியிலும் கைவிடாதிருக்க சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் பார்த்து கொண்டது.

சிங்கள இனவாதிகள் சிருஸ்டித்துள்ள பேரழிவுகளின் பரிணமத்தையிட்டு பொது மக்களை விழிப்படையச் செய்வதைக் கூட தவிர்க்கும் பொருட்டு அவசரகால சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட பத்திரிகைத் தணிக்கைகள் மூலம் கொலைகள், இரத்தக்களரிகள் பற்றிய செய்திகளை வெளியிடுவது அடியோடு தடைசெய்யப்பட்டு இருந்தது. தொழிலாளர் பாதை மற்றும்கம்கறு மாவத்த பத்திரிகைகளை வெளியிட பு.க.க. தணிக்கை அதிகாரியிடம் சமர்ப்பித்த கட்டுரைகள் தலைமுதல் அடிவரை வெட்டித் தள்ளப்பட்டன. இந்த நிலையில் புட்சிகர இயக்கத்தின் வாயைக் கட்டிப் போடுவதற்கு எதிரான ஆபத்துக்கிடையேயும் போராடுவது தவிர்க்க முடியாததாகியது. தணிக்கை அதிகாரிகளின் தணிக்கைக்கு சமர்ப்பிக்காமல் இரகசியமாக ஒரு பிரசுரத்தை அச்சிட்டு வெளியிட பு.க.க. முடிவு செய்தது.

அது கட்சியின் அச்சகத்தினது மட்டுமல்ல முழுக் கட்சிக் காரியாளர்களதும் பாதுகாப்பை பணயம் வைத்து எடுத்த அஞ்சாத தீர்மானமாகும். புரட்சிகர இயக்கம் ஆபத்தை சகிக்காது இருக்க முடியாது. புரட்சிக் கட்சி காரியாளர் பயிற்சி மையம் பிற்போக்கு பிரச்சாரங்களினால் வழிதடுமாறாததும் முதலாளித்துவ அரச ஒடுக்குமுறையின் எதிரில் கிடுநடுக்கம் பிடிக்காத தலைமையினால் தொழிலாளர் ஒடுக்கப்படும் மக்களுக்கு பங்களிப்பச் செய்வதே. அது புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தைத் தவிர்ந்த வேறு எந்த ஒரு அரசியல் அமைப்பும் அன்று செய்யாத ஒன்றாகும். அது ஏனைய சகல அரசியல் கட்சிகளும் முதலாளித்துவ அரசின் சட்டத்தை காக்கும் காரியத்தை அங்கீகரித்துக் கொண்டு இருந்ததோடு தொடர்ந்தும் இருந்து வருவதாலாகும்.

தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்கள் அடிப்படையாகக் கொள்ள வேண்டிய வேலைத்திட்டத்தை விளக்கி 17 பக்கங்களுடன் வெளியான இந்தச் சிறிய நூல் ஜூலை 23ம் திகதியில் இருந்து ஆரம்பமான இனவாத இயக்கத்தின் தன்மையையும் அதன் அடிப்படைகளையும் பின்வருமாறு விளக்கியது.

''ஜூலை 23ம் தொடங்கிய இனவாத மக்கள் படுகொலை கலகத்தினால் ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். கொழும்பு மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சத்து நாற்பதினாயிரம் தமிழ் தேசிய இனத்தினர் அகதி முகாம்களில் தள்ளப்பட்டுள்ளனர். இத்த மாவட்டத்தில் ஒரு தமிழ் கடையோ வேலைத்தலமோ அல்லது வெற்றிலை சுருள் வண்டியோ மிஞ்சவில்லை. ஒரு சில இடங்களைத் தவிர தமிழ் தேசிய இனத்தினர் அவர்கள் வாழ்ந்த சகல இடங்களில் இருந்தும் துரத்தி அடிக்கப்பட்டு நூல் பந்து வரை கொள்ளையடிக்கப்பட்டு அவற்றுக்கு தீமூட்டப்பட்டுள்ளது.

"சாதாரண மனிதன் மட்டுமல்ல அரசாங்க உயர் அதிகாரிகளும் பொலிஸ் திணைக்களத்தினதும் இராணுவத்தினதும் அதிகாரிகளும் நீதிபதிகளும் -அவர்கள் தமிழராக இருந்ததால்- இந்தத் தலைவிதிக்கு முகம் கொடுத்தனர். அதாவது வடக்குக் கிழக்கு மாகாணங்கள் தவிர ஏனைய சகல மாகாணங்களிலும் சகல தமிழ் தேசிய இனத்தவர்களும் உக்கிரமான தாக்குதல்களினால் அவ்விடங்களில் இருந்து அடியோடு தூக்கி வீசப்பட்டனர்.

"கலகம் தேயிலை இறப்பர் தோட்டங்கள் வரை பரந்து சென்றது. தோட்டத்துறை அடியோடு தீமூட்டப்படாது போனதற்குக் காரணம், தொழிலாளர் வர்க்கத்தின் எதிர்ப்புக்களும் இந்திய மக்கள் இயக்கமும் உக்கிரம் கண்டதேயாகும். கலகக்காரர்கள் அரசாங்க அமைச்சரான தோட்டத் தொழிலாளர் தலைவர் தொண்டமானின் இ.தொ.கா. கொழும்புத் தலைமையகத்தைத் தாக்கி அதன் ஒரு பகுதிக்கும் தீ வைத்தனர்.

 "இவை எல்லாவற்றிற்கும் மேலாக கலகக்காரர்கள் இந்தியர்களுக்கும் இலங்கை தமிழர்களுக்கும் சொந்தமான பெரிய, சிறிய கைத்தொழிற்சாலைகள் அனைத்தையும் அடியோடு தக்கியதோடு உற்பத்தி உபகரணங்களையும் சேதமாக்கி அவற்றுக்கு தீமூட்டி நாசமாக்கினர். இந்த தொழிற்சாலைகளில் வேலை செய்தவர்களில் நூற்றுக்கு 90 வீதமானோர் சிங்களம் பேசும் தொழிலாளர்களாவர். மஹாராஜா கைத்தொழிற்சாலைகள், சின்டெக்ஸ், சென்ட் அன்தனிஸ் ஹாட்வெயர்ஸ், ஹைட்ராமணி, கே. ஜீ. இன்டஸ்ட்ரீஸ், ஜெட்ரோ இன்டஸ்ரீஸ், டாட்டா காமன்ட்ஸ் போன்ற ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் வேலைசெய்த பக்டரிகள் அடியோடு தவிடுபொடியாக்கப்பட்டன.

"இதைக்காட்டிலும் மிகவும் பயங்கரமான சம்பவம் வெலிக்கடை அரச சிறையில் இருந்த தமிழ் விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு அமைப்புக்களைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் 54 பேர் அரசாங்க இராணுவத்தின் தலையீட்டில் சிறைக்குள் படுகொலை செய்யப்பட்டதாகும்.

"தமிழ் தேசிய இனத்துக்கு எதிராக இடம்பெற்ற இந்தக் கடைகெட்ட அநியாயங்கள் 35 வருடங்கள் இடம்பெற்று வந்த தேசிய ஒடுக்குமுறையினதும் அடக்குமுறையினதும் உச்சக்கட்டமாகும். இவற்றை தற்செயலான சம்பவங்களாக வர்ணிக்க ஒரு துரோகியினால் மட்டுமே முடியும்.

"இந்த மக்கள் படுகொலை நடவடிக்கைகள் உலகப் பொருளாதார வீழ்ச்சியின் தாக்கத்துக்கு உள்ளான வங்குரோத்து தேசிய முதலாளித்துவ ஆட்சியாளர்கள் தமது மரணத்தை ஒத்திப்போடும் பொருட்டு மேற்கொண்ட கையாலாகாத்தனமான பிரயத்தனத்தில் இருந்து பெருக்கெடுக்கின்றது என மாக்ஸ்சிஸ்ட்டுக்கள் முன்கூட்டியே நிருபித்துக்காட்டியுள்ளனர்.

"இந்த அநியாய நடவடிக்கைகளிலும் மக்கள் படுகொலைகளிலும் முதலாளி வர்க்கத்தின் சகல பகுதியினரும், சகல கட்சிகளும் இராணுவமும் சிறைச்சாலை உட்பட முதலாளித்துவ அரசின் அனைத்து நிறுவனங்களும் புத்த கோவில்களும், கிறிஸ்தவ தேவாலயங்களும் முழு முதலாளித்துவ பத்திரிகை குழுக்களும், குட்டி முதலாளித்துவத்தின் தலை குழம்பிய உயர்தட்டினரும் அவரவர்களின் விதிமுறைகளுக்கு இணங்க தொடர்புபட்டுள்ளனர் என இந்தக் கலகத்தின் உள்ளடக்கத்தை கவனமாக ஆராயும்போது நிருபணமாகும்.

"இது தேசிய ஒடுக்குமுறை பற்றிய உலகலாவிய ஒரு தோற்றப்பாடேயன்றி ஸ்டாலினிஸ்டுகளும் திரிபுவாதிகளும் பூசிமெழுக முயற்சிக்கும் விதத்தில், பிற்போக்கு முதலாளித்துவ சமூதாயத்தினுள் அழிபாடுகளாக இருந்து கொண்டுள்ள, பின்தங்கிய சமூகத்தட்டினரிடமிருந்து காலத்துக்குக் காலம் வெடித்துக் கிளம்பும் இனவாதக் குமுறல் அல்ல. 1983 ஜூலை கலவரம், இறுதியாக முதலாளித்துவ ஜனநாயக புரட்சியின் பாத்திரங்கள் தீர்க்கப்படாத ஒரு நாட்டில், ஏகாதிபத்திய சார்பு முதலாளி வர்க்கம் உலக நெருக்கடியின் கொதிப்புக்குள் அகப்படுவதற்கும் தேசிய ஒடுக்குமுறைக்கும் இடையே இருந்து கொண்டுள்ள பிரிக்கமுடியாத உறவை நிருபித்துக் காட்டியுள்ளது. இதில் இருந்து தலைதப்ப எவராலும் முடியாது.''

1983 ஜூலை இறுதியில் தமிழர் எதிர்ப்பு இனவாத இரத்தக் களரியையும் படுகொலைகளையும் பிற்போக்காளர்கள் நாடு பூராவும் கட்டவிழ்த்து விட்டது ஏன்? இதை அன்றைய யூ.என்.பி. ஆட்சிக்கு எதிராக தொழிலாளர் வர்க்கத்தினால் தொடுக்கப்பட்ட சவாலை தெரிந்து கொள்ளாமல் புரிந்து கொள்ளமுடியாது. தமிழ் மக்கள் மீதான தாக்குதல் ''தன்னியல்பான'' தமிழர் எதிர்ப்பின் ஒரு வெளிப்பாடாகும் என்ற கூச்சலையும் அவ்வாறே அது ''சுயமான மக்கள் கலகங்களின் ஒரு வெளிப்பாடாகும்'' என்ற நவ சமசமாஜக் கட்சித் தலைவர்களின் தீவிரவாதக் கூப்பாடுகளையும் தவிடு பொடியாக்கிவிட்டது.

1983 கறுப்பு ஜூலை ஆரம்பமான ஜூலை 23ம் திகதிக்கு சரியாக ஆறு நாட்களுக்கு முன்னர் ஜூலை 17ம் திகதி கொழும்பு அரசாங்க லிகிதர் சேவை மண்டபத்தில் 28 தொழிற் சங்கங்களின் செயற்பாட்டாளர்களின் கூட்டம் நடைபெற்றது. இது 1980 ஜூலையில் நடந்த வேலை நிறுத்தப் போராட்டத்தின் எதிரில் சமசமாஜ கம்யூனிஸ்ட் தலைவர்களின் தட்டிக் கழிப்புக்களையும் ஜே.வி.பி. யின் கருங்காலித்தனங்களையும் பாவித்து தொழிலாளர் வர்க்கத்துக்கு எதிராக யூ.என்.பி. அரசாங்கம் தொடுத்த மிலேச்சத் தாக்குதலுக்குப் பின்னர் தொழிலாளர்கள் போராட்டத்துக்காக மீண்டும் அணிதிரண்டதை வெளிக்காட்டிக் கொண்டது.

தொழிலாளர் வர்க்கப் போராட்டங்களை 1980ஐக் காட்டிலும் இன்றைய தருணத்தில் சகிக்க முடியாது போனதற்கு காரணம் யூ.என்.பி. அரசாங்கத்தின் மீது சர்வதேச நாணய நிதியமும் உலக வங்கியும் திணித்த நெருக்குவாரம் உக்கிரம் கண்டுபோய் இருந்ததேயாகும். தொழிலாளர்களின் சம்பளத்தின் நிலையான பெறுமானத்தை வெட்டித் தள்ளும் பொருட்டும் ரூபாவை மதிப்பிறக்கம் செய்யும் படியும் கல்வி, சுகாதார மற்றும் நலன்புரி சேவைகளை வெட்டும்படியும் ஏகாதிபத்திய வங்கியாளர்கள் அரசாங்கத்தை நெருக்கி வந்தனர். ஜூலை மாதத் தொடக்கத்தில் இலங்கைக்கு வந்த போல் பப்பியர் தலைமையிலான பார்வையாளர் குழு, சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகள் எந்தளவுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்பதை ஆய்வு செய்து, நாட்டில் இருந்து வெளியேறியதுதான் தாமதம் உலக வங்கியின் பிரதிநிதிகள் இலங்கை வந்து சேர்ந்தனர். அவர்கள் வங்கியாளர்களுக்கு இருந்து கொண்டிருந்த அவசரத்தை காட்டிக் கொண்டனர். பொதுமக்களை கசக்கிப் பிழியும் வேலைத்திட்டத்தை விரைவில் நடைமுறைக்கிடாது போனால் அந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெறவிருந்த இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் கூட்டத்தில் தொடர்ந்தும் கடன் வழங்குவது இல்லை என்ற முடிவினை எடுக்க இருப்பதாக வங்கியாளர்கள் அச்சுறுத்தலாக எச்சரித்தனர். வங்கிகளின் பிரதிநிதிகள் இலங்கையில் இருந்து கொண்டிருக்கையிலேயே அரசாங்கம் ரூபாவை 5.5 வீதத்தினால் மதிப்பிறக்கம் செய்தது. இருந்தாலும் வங்கியாளர்கள் அதையிட்டு திருப்தியடையவில்லை.

இத்தகைய ஒரு நிலையிலேயே தொழிலாளர் வர்க்கத்தினுள் பதட்டம் வளர்ச்சி கண்டுவந்தது. தொழிற்சங்கங்கள் உட்பட தொழிலாளர் அமைப்புக்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல. 11 கோரிக்கைகள் இயக்கம் என்ற பேரிலான அமைப்பைச் சூழ 28 தொழிற்சங்கங்கள் அணிதிரண்டது இதன்படியேயாகும்.

பாரம்பரியமான தொழிற்சங்க கோரிக்கைகள் என்ற முறையில் 1980 வேலை நிறுத்தக்காரர்களை மீண்டும் சேவையில் சேர்த்தல், தொழிலாளர் சம்பளத்தை ரூபா 500 ஆல் கூட்டுதல் போன்ற கோரிக்கைகளை முன்னணியில் கொண்டிருந்த போதிலும் 28 தொழிற்சங்கங்கள் நிறைவேற்றிக் கொண்ட கோரிக்கைகள் அரசியல் தன்மை கொண்டவையாக விளங்கின. இதற்கிடையே கூட்டுத்தாபனங்களை தனியார் துறையிடம் கையளிப்பதை நிறுத்துதல், இலவசக் கல்வி வெட்டை நிறுத்துதல், தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமையை வழங்குதல், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குதல், தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல், விவசாய நிலங்களை ஏகாதிபத்திய வாதிகளிடம் ஒப்படைப்பதை நிறுத்துதல், அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் ஆகியனவும் இவற்றுள் அடங்கும்.

இவை தொழிற்சங்க போராட்ட எல்லைகளைத் தாண்டிச் செல்லும் அரசியல் போராட்டத்தை வேண்டிநிற்கும் கோரிக்கைகளாகும். தொழிற்சங்கத் தலைவர்கள் தொழிற்சங்கவாதத்தினுள் தொழிலாளர்களை கட்டிப்போட நடவடிக்கை எடுத்த போதிலும் யூ.என்.பி. அரசாங்கம் அதனால் திருப்திகண்டு நிலைமையை புறக்கணித்துவிட முடியாது போய் விட்டது.

பு.க.க.வுக்கு இருந்த ஆதரவு

இன்றைய சோசலிச சமத்துவ கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் முன்னோக்கும் வேலைத்திட்டமும் ஜூலை 17ம் திகதி நடந்த 28 தொழிற்சங்கங்களின் பேராளர் மகாநாட்டில் மட்டுமன்றி பரந்த தொழிலாளர் வர்க்கத்தினுள்ளும் ஆதரவைப் பெற்றுக்கொண்டிருந்ததே இதற்கான காரணமாகும்.

இந்தப் பேராளர் மகாநாட்டில் பேசிய புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் அங்கத்தவரான பரீடா இம்ரான் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் சார்பில் கரகோசத்தின் மத்தியில் பேசுகையில் ''சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர் வர்க்கத்தை ஆட்சி அதிகாரத்தை நோக்கி இட்டுச் செல்வதை மேலும் காலம் கடத்த முடியாது'' எனக் குறிப்பிட்டார்.

''11 கோரிக்கைகளை வெற்றி கொள்வது யூ.என்.பி அரசாங்கத்தை தோற்கடிப்பதுடன் இணைந்து கொண்டுள்ளது'' எனக் கூறிய அவர் ''வடக்கு பிரதேச மக்களுக்கு எதிராக அரசாங்கம் இனவாத யுத்தத்தை தூண்டி விட்டிருப்பது தொழிலாளர் வர்க்கத்தைத் தடம்புரளச் செய்யவதற்கேயாகும்'' எனவும் குறிப்பிட்டார்.

"உற்பத்திச் சக்திகளையும் சேவைகளையும் ஒழித்துக்கட்ட ஏகாதிபத்திய வங்கியாளர்களின் சார்பில் அர்ப்பணித்துக்கொண்டுள்ள அரசாங்கம், இனவாதக் குழப்பங்களை சிருஷ்டிப்பது அந்த நடவடிக்கையை எடுக்கவேயாகும். தொழிலாளர் வர்க்கம் தொழில், சேவைகளை கட்டிக் காக்க வேண்டுமானால் இனவாத யுத்தத்திற்கு எதிராக கிளர்ந்து எழ வேண்டும். தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினையை தொழிலாளர் வர்க்கத்தினால் மட்டுமே தீர்த்து வைக்க முடியும் எனக்கூறிய அவர், யூ.என்.பி. அரசாங்கம் நடாத்தும் சேவை, தொழில் அழிப்புகளுக்கு எதிராக தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் இடதுசாரி கட்சிகளின் பிரதிநிதிகளை ஒன்றுதிரட்டி வெகுஜனக் குழுக்களை அமைக்க வேண்டும் எனவும், அரச குண்டர் பயங்கரவாதத்திற்கு எதிராக பாதுகாப்புக் கமிட்டிகளை அமைக்க வேண்டும் எனவும் கூறினார்.'' (கம்கறு மாவத்தை, தொழிலாளர் பாதை 1983ஜூலை 19)

இது அன்று புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் தொழிலாளர் வர்க்கத்தினுள் நடாத்திய சக்தி வாய்ந்த அரசியல் தலையீட்டுக்கான ஒரு உதாரணம் மட்டுமே. இதற்கு முரண்பட்ட முறையில், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்டாலினிஸ்டுகளும் நவசமசமாஜக் கட்சியினதும் ஜே.வி.பி.யினதும் குட்டி முதலாளித்துவ தீவிரவாதிகளும் மற்றும் 28 தொழிற்சங்கங்களின் முன்னணியும் தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் அபிவிருத்திக்கான பொதுப் போராட்டத்தில் இருந்து ஓட்டமெடுத்து, யூ.என்.பி. இனவாத ஒடுக்குமுறை ஆட்சிக்கு முண்டு கொடுத்தன. இந்த பக்கத் தூண்களோடு யூ.என்.பி. அரசாங்கம் முடிந்தவரை சகல இடங்களிலும் அவற்றை பயன்படுத்திக்கொண்டு அதன் மூலம் தொழிலாளர் வர்க்கத்தை குழப்பியடிக்கவும் பிளவுபடுத்தவும் மற்றும் தமிழர் எதிர்ப்பு இனவாத இரத்தக்களரியையும் படுகொலைகளையும் கட்டவிழ்த்துவிடவும் செயற்படவும் முடிவெடுத்ததானது, எதிர்காலத்தில் வர்க்கப் போராட்டம் முதலாளித்துவ ஆட்சியால் தாங்க முடியாத மட்டத்துக்கு வளர்ச்சிகாணும் என அது நனவாக கணித்துக் கொண்டிருந்ததாலேயே ஆகும்.

இனவாத ரீதியில் இரத்தத்தை உறிஞ்சிக் குடிப்பதற்கு முன்னதாக பல் துலக்கி வாய் கழுவும் விதத்தில் யூ.என்.பி. அரசாங்கம் பல தயாரிப்புக்களில் ஈடுபட்டது. தமிழ் மக்கள் பற்றிய செய்திகளை வெளியிட்டு வந்த சற்றடே ரிவீயூசஞ்சிகையும் சுதந்திரன் பத்திரிகையும் தடை செய்யப்பட்டன. சுதந்திரன் பத்திரிகை ஆசிரியர் கோவை மகேசனும் வடக்கில் செயற்பட்ட காந்திய இயக்கத்தின் தலைவரும் கைது செய்யப்பட்டனர்.

ஜூலை 17ம் திகதி நடைபெற்ற தொழிலாளர் பேராளர் மகாநாட்டில் இந்த நடவடிக்கைகள் கண்டனம் செய்யப்பட்டன. அத்தோடு தடையை அகற்றும்படியும் கைதானவர்களை விடுதலை செய்யும்படியும் கோரும் அவசர பிரேரணைகள் மகாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கொடிய அடக்குமுறையின் உக்கிரமான தாக்குதல் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்துக்கு தொடுக்கப்பட்டது தற்செயலானது அல்ல. பு.க.க. பத்திரிகைகளான தொழிலாளர் பாதை மற்றும் கம்கறு மாவத்தை மீதும் அரசாங்கத்தின் விஷ நகக் கீறல்கள் விழுந்தன. தொழிலாளர் வர்க்கத்தினதும் அரசியல் ரீதியில் நனவான பகுதியினரிடையேயும் அது அந்தளவுக்கு கோபமூட்டியதன் காரணமாக, தொழிலாளர் பேராளர் மாகாநாட்டில் பேசிய இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவராக விளங்கிய எச்.என். பெர்னாந்து, அரசாங்கத்தின் அந்த வேட்டைகளுக்கு எதிராக குரல் கொடுக்கத் தள்ளப்பட்டார்.

அன்று கம்கறு மாவத்தை பத்திரிகை வெளியீட்டாளராகவும் அச்சகனாகவும் விளங்கிய ஆனந்த வக்கும்புர, வெள்ளவத்தைப் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். வவுனியாவில் இடம்பெற்று வந்த தமிழர் எதிர்ப்பு தகவல்களைத் திரட்ட வவுனியா சென்றதன் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். அச்சமயத்தில் பு.க.க. அச்சகமும் அலுவலகமும் வெள்ளவத்தையில் இயங்கி வந்தன. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் முன்னெடுத்த அரசியல் பிரச்சாரம் காரணமாக வக்கும்புரவை பொலிசார் பிணையில் விடுதலை செய்த பின்னர் அவரை வவுனியா பொலிஸ் நிலைய அதிபரிடம் சரணடையுமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டது. வளர்ச்சி கண்டுவந்த இனவாத வன்முறையின் பின்னணியின் கீழ், அந்தக் கட்டளையானது தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பு.க.க.வை இரத்தக் களரியில் நசுக்கித் தள்ள அரசாங்கம் தீர்மானம் செய்திருந்ததை எடுத்துக் காட்டியது. ஆதலால் வக்கும்புரவை சரணடையுமாறு வவுனியா பொலிஸ் நிலைய அதிபர் பிறப்பித்த கட்டளைகளை மீறுவதென பு.க.க. தீர்மானித்தது.

வர்க்கப் போராட்டத்தின் உக்கிரம்

இந்த சகல சம்பவங்களும் வர்க்கப் போராட்டத்தின் சூடுபிடித்திருந்ந விதத்தை எடுத்துக் காட்டின. பெரும்பான்மை தொழிலாளர் வர்க்கத்துக்கும் ஒடுக்கப்படும் மக்களுக்கும் இடையே புரட்சிகர முன்னோக்கும் தலைமையும் ஸ்தாபிதம் செய்யப்படாமல் இருந்தமை ஆளும் வர்க்கத்துக்கு இருந்த ஒரே வாய்ப்பாகும். கிளர்ந்து வரும் பொதுஜன கிளர்ச்சியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முதலாளித்துவ அரசின் ஒடுக்குமுறை உபகரணங்களான பொலிஸ், இராணுவம், நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலைகளால் முடியாது போனதை அரசாங்கமும் ஆளும் வர்க்கமும் புரிந்து கொண்டன. எனவே தான் யூ.என்.பி. தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களிடையே சமசமாஜ, கம்யூனிஸ்ட், நவசமசமாஜ, ஜே.வி.பி., இ.தொ.கா. கட்சிகளும் மற்றும் தொழிற்சங்கங்களும் அவ்வாறே தமிழ் குட்டி முதலாளித்துவ குழுக்களும் திட்டமிட்டு உருவாக்கி இருந்த அரசியல் ஆயத்தமற்ற நிலைமையைப் பாவித்து இனவாத கலவரத்தினால் நாட்டில் தீச்சுவாலையை மூட்டத் தீர்மானித்தது.

கட்டவிழ்த்துவிட்ட தமிழர் எதிர்ப்பு கலவரத்தின் பின்னணியில் இருந்த குறிக்கோள், எழுச்சி கண்டுவரும் தொழிலாளர் வர்க்கப் போராட்ட அலையை தவிடுபொடியாக்குவதாக இருக்குமானால், இனவாத வேறுபாடுகள் இல்லாமல் தொழிலாளர் வர்க்கத்தை ஐக்கியப்படுத்தவும் அதைச் சூழ ஒடுக்கப்படும் மக்களை புரட்சிகரமான முறையில் அணிதிரட்டவும் போராடிய புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை தடைசெய்வதுடன் நிற்காது அதை தவிடு பொடியாக்குவதும் அந்தப் பிற்போக்கு நிகழ்ச்சி நிரலில் ஒரு பாகமாகியது புதுமையானது அல்ல.

ஜூலை 24ம் திகதி வெள்ளவத்தை பகுதிக்கு தீவைத்தும் கொள்ளையிட்டும் தமிழ் உயிர்களை சுட்டுப்பொசுக்கியும் வந்த யூ.என்.பி. குண்டர்களில் ஒரு பகுதியினர் அப்பகுதியில் அமைந்திருந்த புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக அலுவலகத்தையும் அச்சகத்தையும் தேடி அலைந்தது தற்செயலானது அல்ல. ஆனால், கொழும்பு 6 கனல் ஒழுங்கை 21ம் இலக்கத்தில் இருந்த கட்சி அலுவலகத்தையும் அச்சகத்தையும் குண்டர்கள் அணுகுவது தவிர்க்கப்பட்டது அப்பிரதேச மக்களால் என்பது அப்படி ஒன்றும் தற்செயலானது அல்ல. அம்மக்கள் குண்டர்களை வேறு வழியில் திசை திருப்பி விட்டு நடக்கவிருந்த தாக்குதலைத் தவிர்த்தனர். அது உயர்ந்த ஒரு புரட்சிகர வீரத்தின் வெளிப்பாடாக இல்லாது போனாலும் புரட்சிகர இயக்கத்தை காக்க எடுத்த முயற்சியின் ஒரு வெளிப்பாடாகும். அத்தகைய ஒரு முயற்சி இல்லாது போயிருக்குமானால் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத் தலைமையின் கணிசமான பகுதியினரும் அதன் அச்சகமும் 1983 கறுப்பு ஜூலையின் இனவாத தீப்பிளம்பில் நிச்சயம் சாம்பலாகிப் போயிருக்கும். அப்படி நடந்திருக்குமானால், யூ.என்.பி. ஆட்சிக்கு இயைந்து போயிருந்த நவசமசமாஜ கட்சி போன்ற குட்டி முதலாளித்துவத்தின் உற்சாகமான பேச்சாளர்கள், "அத்தகைய நாசங்கள் தன்னியல்பான பொதுஜன கிளர்ச்சியின் பெறுபேறு" எனக்கூறிக் கொண்டு வக்காலத்து வாங்கியதும் அந்த விதத்திலேயே உண்மையானதாகி இருக்கும்.

இத்தருணத்தில் ட்ரொட்ஸ்கிச நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட நான்காம் அகிலத்தின் வேலைத்திட்டத்தை தேசிய முதலாளித்துவ ஆளும் வர்க்கங்களின் அவசியங்களுக்கு கீழ்ப்படுத்திக்கொண்டிருந்த பிரித்தானிய தொழிலாளர் புரட்சிக் கட்சியின் தலைமைத்துவத்தின் பிரதிபலிப்பை கவனத்தில் கொள்ளும்போது, மேற்சொன்ன முடிவு எதுவிதத்திலும் ஆச்சரியத்துக்கு உரியதொன்றல்ல. தொழிலாளர் புரட்சிக் கட்சி (தொ.பு.க) சார்பில் 1983 ஜூலை இனவாதக் கலகங்கள் பற்றிநியூஸ்லைன் பத்திரிகையில் கட்டுரை எழுதிய மைக் பண்டா, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் தலைவர்கள் அச்சமயத்தில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என எந்த விதமான ஒரு மனக்கிலேசமும் இல்லாமல் கூறியிருந்தார். அச்சமயத்தில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தினால் பாதுகாக்கப்பட்ட சுயாதீன தொழிலாளர் வர்க்க அரசியல் விதிமுறையையிட்டு முதலாளித்துவ ஆளும் வர்க்கங்களின் பின்னால் வயிறளந்து கொண்டிருந்த தொ.பு.க. காட்டிய எதிர்ப்பின் படி பார்க்குமிடத்து, அது ஒரு எச்சரிக்கையைக் காட்டிலும் ஒரு பிரார்த்தனை வடிவத்தை எடுத்தது. ஆனால், அரச மற்றும் குண்டர் தாக்குதல்களில் இருந்து தமிழ்த் தோழர்கள் உட்பட்ட கட்சிக் காரியாளர்களையும் பாதுகாத்துக் கொண்டு, முதலாளித்துவ ஆட்சியை தூக்கி வீசும் பொருட்டு தாம் முன்னெடுத்த போராட்டத்தினைத் தொடரும் அளவுக்கு மனித சட வளங்களை அன்று புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் கொண்டிருந்தது.

ஆனால், தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளையும் உயிர்களையும் பாதுகாக்க புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் முன்வைத்த புரட்சிகர வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர் வர்க்கத்தினதும் ஒடுக்கப்படும் மக்களினதும் பெரும்பான்மையினர் நின்றிராத ஒரு நிலையில், தெற்கிலும் மலையக மாகாணங்களிலும் தமிழ்பேசும் மக்கள் முகம் கொடுத்த அழிவு பிரமாண்டமானதாகியது. இது தமிழ் மக்களின் உரிமைகளையும் உயிர்களையும் பாதுகாக்க முதலாளித்துவ பாராளுமன்றப் பேச்சுக் கடைகளின் வாய்வீச்சு விவாதங்களில் நம்பிக்கை வைத்து செயற்பட்டவர்களதும் மறுபுறத்தில் வடக்கில் தனிமனித பயங்கரவாத தாக்குதல்களில் நம்பிக்கை வைத்து செயற்பட்டவர்களதும் மற்றும் தமிழ் முதலாளித்துவ, குட்டிமுதலாளித்துவ இயக்கங்களதும் அரசியல் வங்குரோத்தை அம்பலமாக்கியது. யூ.என்.பி.யின் இனவாத குண்டர் தாக்குதல்களின் எதிரில் ஒரு துளி எதிர்ப்புக் காட்டக்கூட இந்த எந்த அமைப்பினாலும் முடியாது போயிற்று.

முக்கிய நகரங்களில் மட்டும் இலட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் அகதிகளாகினர். தகவல் அமைச்சின் செயலாளர் டக்ளஸ் லியனகேயின் உத்தியோகபூர்வமான அறிக்கையின் படி 40,000 மக்கள் யாழ்ப்பாணம் சென்றனர். ஏனையோர் அகதிகள் முகாம்களில் உயிரைப் பிடித்துக் கொண்டு இருக்க நேரிட்டது. டசின் கணக்கான தமிழ் மக்கள் மிலேச்ச தாக்குதல்களுக்கும் டயர் சிதைகளுக்கும் பலியாகினர். நாடு பூராவும் டயர் சிதைகளை நிர்மாணித்த முதல் அரசாங்கம் இதுவாகும்.

ஆனால், அது வர்க்க வேறுபாடு இல்லாமல் சகல தமிழ் மக்களுக்குமெனச் சிருஷ்டிக்கப்பட்ட ஒரு தலைவிதி அல்ல. தமிழ் செல்வந்தர்களுக்கு சிங்கள ஆளும் வர்க்கத்துடனும் யூ.என்.பி. அரசாங்கத்துடனும் நிலவிய உறவுகள் அவர்களின் உயிர்களை பிடித்துக்கொள்ளச் செய்தது. எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் மகன் சந்திரகாசனை காப்பாற்றும் பொருட்டு யூ.என்.பி. அமைச்சர் காமினி திசாநாயக்க தனிப்பட்ட முறையில் அவரது இல்லத்துக்கு சென்று நடவடிக்கை எடுத்தது அதற்கு ஒரு உதாரணமாகும்.

தமிழர் விரோத மிலேச்ச பயங்கரவாத தாக்குதல்களின் முன்னணிப் பேர்வழியாக விளங்கிய சிறில் மத்தியூ கூட அந்த விதத்தில் தனிப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்கிய தமிழ் முதலாளிகள் இருந்திருப்பின் அது அப்படி ஒன்றும் புதுமைக்கு உரியது அல்ல. அதற்குக் காரணம் சிங்கள, தமிழ் முதலாளிகள் ஒன்றிணைந்து, இந்த இரு தேசிய இனங்களையும் சேர்ந்த தொழிலாளர் ஒடுக்கப்படும் மக்களையும் முட்டிமோத வைத்து, தமது பிற்போக்கு ஆட்சியின் வீரத்தை கொலைகார நடவடிக்கைகள் மூலம் ஊர்ஜிதம் செய்ய செயற்பட்ட முதலாவது ஒரே சந்தர்ப்பம் இது அல்லாததேயாகும். தேசிய சுயநிர்ணய உரிமையின் பேரால் தமிழ் முதலாளித்துவ குட்டி அரசை நிர்மானிக்க பிரச்சாரம் செய்யும் சிங்கள குட்டி முதலாளித்துவ அமைப்புக்கள் தமது முதலாளித்துவ சார்பு தன்மை காரணமாக மறந்து போகும் விடயமும் அதுவாகும். ஆனால், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பகுதி என்ற முறையில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் புறநிலை உலகின் யதார்த்தத்தை மிகவும் நெருக்கமாக அடையாளம் கண்டும் ஆய்வு செய்தும், தொழிலாளர் வர்க்க அனைத்துலகவாத வேலைத்திட்டத்தை இதற்கு ஏற்ப சமரசமற்ற புரட்சிகர உயிர்த்துடிப்பினால் உயிரூட்ட இடைவிடாது செயற்பட்டது. சோசலிச சமத்துவக் கட்சி முன்னெடுப்பதும் இந்தப் பாரம்பரியங்களையே ஆகும் .

தமிழ் முதலாளித்துவ மற்றும் குட்டி முதலாளித்துவ அமைப்புக்கள்

தமிழ் தொழிலாளர் ஒடுக்கப்படும் மக்களைச் சுரண்டும் பொருட்டு தமக்கென ஒரு குட்டி அரசினை நிறுவ செயற்பட்டு வந்த தமிழ் முதலாளித்துவ குட்டி முதலாளித்துவ பகுதியினர், கறுப்பு ஜூலையின் தமிழர் படுகொலைகளுக்கும் இரத்தக் களரிகளுக்கும் காட்டிய எதிர்ப்பு என்ன? தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஒரு தலைவரான நீலன் திருச்செல்வம் இந்திய ரூடே சஞ்சிகைக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது; "அது தமிழ் மக்கள் பகுதியினரின் பொருளாதார, புத்திஜீவி அடிப்படையை நாசமாக்க திட்டமிட்டு செய்யப்பட்ட ஒன்றாகும்... அது தமிழ் தொழில்சார் நிபுணர்களுக்கு தொடுத்த தாக்குதலாகும்." இந்தப் பேட்டி, கொலை செய்யப்பட்ட அகதிகளான தமிழ் தொழிலாளர்கள், ஏழைகளைப் பற்றி அக்கறை காட்டி வருத்தம் தன்னும் தெரிவிப்பதாக அமையவில்லை.

தமிழ் தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்கள் உயிர்ப் பாதுகாப்புக்காக சுயாதீன நடிவடிக்கைகள் எடுக்கத் தள்ளப்படுவர் என அஞ்சிய தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் அ. அமிர்தலிங்கம் அதைப்பற்றிக் கூறியதாவது; ''தமிழர் மனதில் பாதுகாப்பின்மை பற்றிய எண்ணம் புகுந்து கொண்டுள்ளது'' என்றார். முதலாளித்துவ பாராளுமன்ற நடவடிக்கைகள் மூலம் பொது மக்களை வழிதடுமாறச் செய்யும் பாதை இதனால் அடைபட்டுப் போகலாம் என்பதையிட்டு அவருக்கு நிலவிய அச்சத்தை அது காட்டியது.

ஆயுதப் போராட்டத்தின் மூலம் தனிநாடு அமைக்கும் இலக்குடன் தொழிற்பட்ட தமிழ்க் குட்டி முதலாளித்துவ அமைப்புக்கள் அக்கறை காட்டியது நாடு பூராவும் பரந்து வாழ்ந்த தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதைப் பற்றி அல்ல. மக்கள் படுகொலையின் பிரச்சார இலாபத்தை தட்டிக்கொள்வதன் மூலம் தத்தமது அமைப்புக்களின் நிதி மூட்டிகளை நிறைத்துக் கொள்வதிலேயே அக்கறை காட்டினர். தமது ஆளுமையின் கீழ் தனிநாடு அமைக்கப்படுமானால் தமிழ் தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்கள் தொடர்பாகக் காட்டும் ''அக்கறை'' யின் கோலத்தை அதன் மூலம் வெளிக்காட்டிக்கொண்டனர்.

இதன் ஆதாயத்தை தட்டிக் கொள்ள தமிழர் எதிர்ப்பு இனவாதக் காட்டுமிராண்டி தனத்தை கட்டவிழ்த்துவிட்ட யூ.என்.பி.யும் ஜனாதிபதி ஜயவர்த்தனாவும் தாமதிக்கவில்லை.

ஜூலை மக்கள் படுகொலைகளின் நான்கு நாட்களுக்கு பின்னர் ஜனாதிபதி ஜயவர்தன நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். இந்தப் பேச்சு முற்றிலும் சிங்கள இனவாதிகளிடம் மன்னிப்புக் கோருவதாக விளங்கியது. அது இரண்டு நாட்களுக்கு மேலாக அவர்களது காட்டுமிராண்டி நடவடிக்கைகளை மனம் போன போக்கில் தொடர்வதற்கு தம்மாலும் தமது அரசாங்கத்தாலும் இடமளிக்க முடியாது போனது சம்மந்தமானதாக விளங்கியது. ஜயவர்தன நாட்டு மக்களுக்கு உரைநிகழ்தியது எல்லே குணவங்ச (பிக்கு) என்ற பெயர்போன இனவாதியின் தூண்டுதலின் பேரிலாகும் என்பது பிரசித்திபெற்றது. ஆதலால் அந்த உரையை குணவங்சவே எழுதிக் கொடுத்திருக்கலாம் எனச் சந்தேகிக்கவும் காரணம் இல்லாமல் இல்லை.

ஐந்து நிமிடம் பத்து செக்கண்டுகளுக்கும் குறைவான காலத்துக்கு மட்டுபடுத்தப்பட்ட இந்த ஜனாதிபதியின் பேச்சில், தமிழ் தேசிய இனம் பற்றி எதுவுமே குறிப்பிடப்படவில்லை. அதன்படி அத்தகைய தேசிய ஜனநாயக உரிமைகளைக் காப்பதையிட்டு தமக்கு அணுவளவும் அக்கறை கிடையாது என்பதை அவர் ஊர்ஜிதம் செய்து கொண்டார்.

ஜனாதிபதி ஜயவர்த்தனாவின் பேச்சு இனவாத படுகொலைகளையும் இரத்தக்களரிகளையும் நியாயப்படுத்துவதை அடிநாதமாகக் கொண்டிருந்தது. அவர் கூறியதாவது: ''2000 ம் ஆண்டுகளாக வாழும் சிங்கள மக்கள் நாட்டை பிரிப்பதை எதிர்க்கிறார்கள். சிங்கள மக்களின் அபிப்பிராயத்துக்கு தலைவணங்கி ஆகஸ்ட் 4ம் திகதி நாட்டைப் பிரிக்கும் பேச்சுக்களை சட்டத்தின் மூலம் தடை செய்யும் மசோதாவை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்ற நாம் முடிவு செய்தோம்.''

தமிழர் எதிர்ப்பு கறுப்பு ஜூலை 'சிங்கள பொதுமக்களின் அபிப்பிராயத்தின் வெளிப்பாடு' என கூறுவதன் மூலம் மக்கள் படுகொலை அலுக்கோசுகளின் கொலைகளை மூடி மறைப்பதோடு சிங்களத் தொழிலாளர் ஒடுக்கப்படும் மக்களை அந்தக் காட்டுமிராண்டித்தனத்துடன் இனங்கானச் செய்வதாகும்.

இந்த அலுகோசுக் கீதத்துடன் பெரிதும் ஒத்தூத முன் வந்தார் நவசமசமாஜ கட்சித் தலைவர் விக்கிரமபாகு கருணரத்தின. அவர் இந்தக் கறுப்பு ஜூலையின் தமிழ் மக்கள் படுகொலைகள் யூ.என்.பி. அரசாங்கத்துக்கு எதிராக வளர்ச்சி கண்ட ''பொதுமக்கள் எதிர்ப்பின் வெளிப்பாடு'' எனக் கூறினார். யூ.என்.பி. அரசாங்கத்தின் எதிர்ப்பாளனாகக் காட்டிக்கொண்ட இந்த முதலாளித்துவ கையாள், யூ.என்.பி. யினால் நடத்தப்பட்ட இனவாதப் படுகொலைகளை பொதுஜன அபிப்பிராயத்தின் வெளிப்பாடு எனக் கூறிய கதைக்கு சாமரை வீசியது அத்த விதத்திலாகும். அது குட்டி முதலாளித்துவத் தீவிரவாதம் முதலாளித்துவத்துக்கு சேவை செய்யும் பாணிக்கு ஒரு நல்ல உதாரணமாகும்.

1983 ஜூலையில் வாயால் கூறிக் கொள்ளாத போதிலும், ஜே.வி.பி. தலைவர்கள் நீண்ட காலமாக கட்டவிழ்த்து வந்த இனவாத நஞ்சை உட்கொண்டவர்கள், கறுப்பு ஜூலையில் சிறில் மத்தியூவின் குண்டர்களுடனும் இராணுவத்தில் உள்ள குண்டர்களுடனும் சேர்ந்து தமிழ் மக்கள் படுகொலைகளில் நடைமுறையில் பங்கு கொண்டதன் மூலம் நடைமுறையில் காட்டிக்கொண்டதும் அந்த விடயத்தையேயாகும்.

யூ.என்.பி.யின் தமிழர் எதிர்ப்பு இனவாதத்துக்கு சாமரை வீசும் இந்த விதிமுறையே நவசமசமாஜக் கட்சியின் மீதும் ஜே.வி.பி.யின் மீதும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் மீதும் கறுப்பு ஜூலையின் கறுப்பு கறையை பூசி விடுவதற்கு யூ.என்.பி. அரசாங்கத்துக்கு வழியமைத்துக் கொடுத்தது. ஜனாதிபதி ஜயவர்த்தன அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்தி இந்த மூன்று அரசியல் கட்சிகளையும் தடைசெய்யவும் அவற்றின் அச்சகங்களுக்கு சீல் வைக்கவும் கட்சிகளின் தலைவர்களை கைது செய்யவும் தொழிற்பட்டார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கே.பி. சில்வா அக்கட்சியின் தொழிற்சங்கத் தலைவர் எல்.டபிள்யூ. பண்டித உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் கைது செய்யப்படுவதை தவிர்த்துக் கொண்டிருந்த நவசமசமாஜக் கட்சியின் வாசுதேவ நாணயக்கார, ஜே.வி.பீ.யின் றோஹண விஜேவீர போன்ற தலைவர்களை கைது செய்யத் தகவல் தருபவர்களுக்கு ரூபா 50,000 சன்மானம் வழங்குவதாக அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்தது.

யூ.என்.பி. அரசாங்கமே முன்நின்று கட்டவிழ்த்துவிட்ட இனவாத இரத்தக்களரியை சாட்டாகக் கொண்டு இடம்பெற்ற இந்த ஜனநாயக எதிர்ப்பு ஒடுக்குமுறைக்கு எதிராக தொழிலாளர் வர்க்கத்தையும் ஒடுக்கப்படும் மக்களையும் அணிதிரட்ட கொள்கைப்பிடிப்பான முறையில் முன்னணியில் நின்றது சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமே.

கட்சித் தடைகள் நடைமுறைக்கு வந்ததும் உடனடியாக அறிக்கை வெளியிட்ட புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் அதனால் தோன்றியுள்ள ஆபத்தை விளக்கி தொழிலாளர் ஒடுக்கப்படும் மக்களுக்கு கூறியது இதுதான்: ''மூன்று இடதுசாரி கட்சிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையையும் கைதுகளையும் சாதாரண விடயமாகக் கொள்ள எந்த விதமான இடமும் தொழிலாளர் வர்க்கத்துக்கும் ஒடுக்கப்படும் மக்களுக்கும் கிடையாது. இது அடக்குமுறை இயந்திரத்துக்கு அனைத்தையும் நசுக்கித் தள்ளிக்கொண்டு உருண்டோட இடமளிப்பதாகும்.

''இடதுசாரிக் கட்சிகளின் தடை முதலாளித்துவ ஜனநாயகத்தின் மரணத்தைக் குறித்து நிற்கிறது. இன்றைய உலக ஏகாதிபத்திய நெருக்கடியின் மத்தியில் இப்போது அது முதலாளித்துவ நாடுகள் தோறும் நடைமுறைக்கிட தொடங்கப்பட்டுள்ள அனைத்துலகத் தோற்றப்பாடாகும்.

''அவசரகாலச் சட்டம் முடிவடையும் போது கட்சித் தடையும் பத்திரிகைத் தடையும் நீங்கும் எனவும் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் நம்பிக்கை வைப்பது ஆபத்தானதாகும். ஆட்சியாளர்கள் செயற்படுவது சிறையில் இருந்து ஆட்களை வெளியேற்ற அல்ல. அவற்றை மூச்சுவிட முடியாத விதத்தில் நிரப்பித் தள்ளுவதற்காகும்.

''இந்த நிலைமையில் சமசமாஜ தலைவர்கள் கட்சித் தடைகளையிட்டு ஊமைகளாக இருந்து வருவது பிற்போக்குக்கு உதவுவதும் அதற்கு ஏஜண்டுகளாக செயற்படுவதும் ஆகும் எனக் கூறுவது பிழையானதாகுமா?

''அவசரகால சட்டத்தை நீக்கவும் கட்சித் தடைகளை நீக்கி அரசியல் கைதிகளை விடுதலை செய்யவும் தொழிலாளர் வர்க்கமும் ஒடுக்கப்படும் மக்களும் தமக்குரிய ஜனநாயக உரிமைகளை பயன்படுத்தி இன்றே பிரச்சாரம் செய்ய வேண்டும்.'' (கம்கறு மாவத்தை 1983 செப்டம்பர் 09)

இனவாத யுத்தம் நடைமுறையில் ஆரம்பிக்கப்பட்டது

SLFP, சமசமாஜ, கம்யூனிச கட்சிகளின் கூட்டரசாங்கத்தினால் 1972ல் தமிழர் எதிர்ப்பு இனவாதத்தைத் தூண்டி ஆரம்பிக்கப்பட்ட யுத்தத் திட்டம், அதில் இருந்து 11 ஆண்டுகளின் பின்னர் 1983 கறுப்பு ஜூலை மக்கள் படுகொலைகளுடன் ஒரு பூரண யுத்தமாக நடைமுறையில் பரிணாமம் கண்டது.

இந்த இனவாத யுத்தத்திற்காக யூ.என்.பி.அரசாங்கம் ஐந்து முன்னணிகளைத் தொடக்கி வைத்தது.

01. யூ.என்.பி. 1978 அரசியலமைப்புச் சட்டத்துக்கு ஆறாவது திருத்தத்தை கொணர்ந்து நிறைவேற்றியதன் மூலம் தமிழர் பிரதிநிதிகளை பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்றுவது.

02. தேசிய பாதுகாப்பு அமைச்சினை நிறுவி இராணுவத்தினைப் பலப்படுத்துவது.

03. அன்று 35 ஆண்டுகளை கடந்துவிட்டிருந்த சுதந்திர ஆட்சிமுறை எனப்படுவதன் கீழ், முதலாளித்துவ ஆட்சியாளர்களால் வாழ்க்கைக்கு வழியற்றவர்களாக்கப்பட்ட வறிய சிங்களக் குடும்பங்களை ஆயிரக்கணக்கில் மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னார் முதலிய மாவட்டங்களில் குடியேற்றுவது.

04. இனவாத யுத்தத்திற்காக சமசமாஜ, கம்யூனிச, நவசமசமாஜ, இ.தொ.கா. முதலான தொழிலாளர் வர்க்க துரோகக் கட்சிகளின் ஆதரவைப் பெறும்பொருட்டு வட்ட மேசை மாநாட்டை ஆரம்பிப்பது.

05. அமெரிக்கா முதலான ஏகாதிபத்திய நாடுகளதும் இந்திய காங்கிரஸ் முதலாளித்துவ அரசாங்கத்தினதும் ஆதரவை அணிதிரட்டிக்கொள்வது.

இந்த ஒவ்வொரு அம்சத்தைப் பற்றியும் விளக்குவது அவசியம். அது வருமாறு:

1. எல்லே குணவன்ச காவியுடைக்காரரின் ஆலோசனைப்படி, "நாட்டு மக்களுக்கு" உரை நிகழ்த்திய ஜனாதிபதி ஜயவர்த்தன கூறியதுபோல், இனவாத கறுப்பு ஜூலையின் தீச்சுவாலைகள் அணைந்து போவதற்கு முன்னதாக 1983 ஓகஸ்ட் 4ம் திகதி 6வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்தச் திருத்தச் சட்டத்தை பிரதமர் ஆர். பிரேமதாச சமர்ப்பித்தார். இந்த திருத்தச் சட்டம், தனிநாட்டுக்காக முன்நிற்பது அல்லது பிரச்சாரம் செய்வதிலிருந்து சகல தனி நபர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்களையும் தடை செய்வதாகக் கூறியது. அங்ஙனம் ஈடுபடுபவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும், ஏழு ஆண்டுகளுக்கு குறையாத காலம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனவும், அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் தடைசெய்யப்படும் எனவும் அது கூறியது.

மக்களால் தெரிவு செய்யப்படும் சகல பிரதிநிதிகள், அலுவலர்கள் மற்றும் தொழில்சார் நிபுணர்களும் ஒற்றையாட்சி முறையை பாதுகாப்பதாக சத்தியப் பிரமாணம் செய்ய வேண்டும் என்பதும் அந்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் அடங்கியிருந்தது.

ஜனநாயக அரசியல் உரிமைகளுக்கு குழிபறிக்கும் இந்த அரசியலமைப்புச் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளும் அரசாங்கத்தின் அவசரத்தை காட்டும் வகையில், இந்த மசோதா ஒரு அவசர மசோதாவாக பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. அத்தோடு இந்த மசோதா சமர்ப்பிக்கப்பட்ட தினத்தில் சகல இடைக்கால விதிகளும் இரத்துச் செய்யப்பட்டு பாராளுமன்றம் இதை 13 மணித்தியாலங்களுள் சட்டமாக்கிக் கொண்டது. பாழடைந்த வீட்டுக்குள் பாத்திரங்களை உடைப்பது போல், பாராளுமன்றம் தனித்து சிங்கள இனவாத அமைச்சர்களதும் பாராளுமன்ற உறுப்பினர்களதும் கூச்சல்களால் நிறைந்து போயிருந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற விவாதத்தைப் பகிஷ்கரித்தனர். அன்றிலிருந்து அடுத்து வந்து ஆறு வருடங்களுக்கு அவர்கள் பாராளுமன்றத்துக்கு வரவில்லை.

சிங்கள, தமிழ் முதலாளித்துவக் கட்சிகள் பாராளுமன்ற விளையாட்டினுள் பங்கிட்டுக் கொண்டிருந்த, சிங்கள மற்றும் தமிழ் தொழிலாளர் ஒடுக்கப்படும் மக்களை பிளவுபடுத்தி முதலாளித்துவ ஆட்சியைப் காக்கும் திட்டத்தை ஒரு முடிவுக்கு கொணர்ந்து, இனவாத யுத்தத்திற்கு வழிவகுக்கும் திட்டம் யூ.என்.பி. அரசாங்கத்தினால் அன்று நடைமுறைக்கிடப்பட்டது.

தமிழ் குட்டி முதலாளித்துவ தீவிரவாத ஆயுத இயக்கங்களின் அழுத்தத்தின் கீழ் தனி நாட்டுக் கோரிக்கைக்கு இயைந்து போன முதலாளித்துவ தமிழர் விடுதலைக் கூட்டணி, ஆறாவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் கீழ் ஒற்றையாட்சியைக் காக்கும் நடவடிக்கைக்கு இணங்கி சத்தியப்பிரமாணம் செய்து கொள்வதை நிராகரித்தது. ஆனால், அவர்கள் பாராளுமன்றத்தைப் பகிஷ்கரித்து, ஜனாதிபதி ஜயவர்த்தனவுக்கும் யூ.என்.பி. அரசாங்கத்துக்கும் எந்தவிதத்திலும் குறையாத ஏகாதிபத்தியச் சார்பு இந்திராகாந்தியின் இந்திய மத்திய அரசாங்கத்திடமும் எம்.ஜி. இராமச்சந்திரனின் தமிழ்நாட்டு மாநில அரசாங்கத்திடமும் ஆதரவைப் பெற்றுக்கொள்வதில் ஈடுபாடு கொண்டனர்.

இதற்கிடையே "ஆறாவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை நீக்கப் பிரச்சாரம் செய்!" என்ற தலைப்பின் கீழ், தொழிலாளர் ஒடுக்கப்படும் மக்களுக்கு அறிக்கை வெளியிட்ட புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம், அத்தகைய பிரச்சாரத்துக்கு குறுக்கே நிற்கும் துரோக அரசியல் கட்சிகளையும் அமைப்புக்களையும் அம்பலப்படுத்துவதில் ஈடுபட்டது. அந்த அறிக்கை பின்வருமாறு கூறியது:

"இந்த (ஆறாவது) அரசியலமைப்புத் திருத்தம், தமிழ் தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக தொழிலாளர் வர்க்கம் எடுக்க வேண்டிய நிலைப்பாட்டைத் தடுத்துள்ளது மட்டுமன்றி அது தொடர்பாக தொழிலாளர் வர்க்கமும் ஒடுக்கப்படும் மக்களும் பகிரங்கமான முறையிலும் ஜனநாயக ரீதியிலும் கலந்துரையாடி முடிவெடுப்பதற்கு உள்ள உரிமையையும் நீக்கியுள்ளது.

"இந்த அரசியல் அமைப்பு திருத்த விவாதத்தில் ஒற்றையாட்சி முறைக்கு தாம் என்றும் விசுவாசமாக இருப்பதாக தெரிவித்த ஸ்டாலினிச இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத்முத்தேட்டுவேகம, அந்த திருத்தத்திற்கு எதிராக வாக்களிக்கவில்லை. இது தொழிலாளர் வர்க்கத்தினதும் தமிழ் மக்களதும் உரிமைகளை ஒரேயடியாக காட்டிக்கொடுப்பதாக விளங்கியது.

"ஆறாவது திருத்தச் சட்டத்துக்கு எதிரான பிரச்சாரத்துக்கு எதிராக நின்று கொண்டுள்ள சமசமாஜ மற்றும் ஸ்டாலினிச கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களும், அவர்களுடன் கைகோர்த்துக் கொண்டுள்ள மத்தியவாதிகளும், முதலாளி வர்க்கம் திணிக்கும் இனவாத பொறிக் கிடங்கில் தொழிலாளர் வர்க்கத்தை தள்ளுவதற்குத் துடிக்கின்றனர்.

"....தொழிலாளர் வர்க்கம் மார்க்சிச நிலைப்பாட்டின் அடிப்படையில் இந்த துரோகத்தை எதிர்த்து நிற்க வேண்டும். முதலாளித்துவ அரசின் விலங்குகளை உடைத்து ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் உரிமைகளை அணுவளவும் குறையாமல் பாதுகாக்க முன் நிற்பதன் மூலம் மட்டுமே தொழிலாளர் வர்க்கம் தனது அடிப்படை ஜனநாயக உரிமைகளைக் காக்க முடியும்.

"இங்கு 6வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நீக்கு!" என தொழிற்சங்கங்கள் மற்றும் வர்க்க அமைப்புக்களுள் ஆரம்பிக்கும் பிரச்சாரம் தீர்க்கமானது என நாம் சுட்டிக் காட்டுகின்றோம். இது இனவாதத்திற்கு எதிரான பலம் வாய்ந்த அடியாக இருப்பதோடு, ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கிடையில் கூட்டை ஏற்படுத்தவும் முதலாளித்துவ ஆட்சியை ஒழித்துக் கட்டவும் அணிதிரட்ட உள்ள ஒரே வழியாகும். இது சோசலிச இந்தியத் துணைக் கண்டத்துக்காக அடியெடுத்து வைப்பதாகும்." (கம்கறு மாவத்த 1983 செப்டம்பர்20)

தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும்படி இந்திய முதலாளித்துவ ஆட்சியாளர்களின் துணையை நாடி நின்ற தமிழ் முதலாளித்துவ, குட்டி முதலாளித்துவ குழுக்களுக்கும் மற்றும் தீவிரவாதிகளுக்கும் எதிராக ட்ரொட்ஸ்கிஸ்ட்டுக்கள் இந்திய துணைக்கண்ட தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்கள் பக்கம் திரும்பினர். அது தொழிலாளர் வர்க்க அனைத்துலகவாத வேலைத்திட்டமாகும். தொழிலாளர் வர்க்கம் அரசியல் அதிகாரத்தை தமது கைக்குள் கொணர்ந்து சோசலிச சமத்துவத்தை ஸ்தாபிதம் செய்வதன் மூலமே ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க முடியும்.

கிரிமிநாசினி மேலதிக படைப்பிரிவு

2. இனவாத யுத்தத்தையும் தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்கள் மீது எதிர்த் தாக்குதலையும் தொடுப்பதற்காக தேசிய பாதுகாப்பு அமைச்சை நிறுவி இராணுவ நடவடிக்கையில் இறங்குவதற்கு முன்னதாக, யூ.என்.பி. அரசாங்கம் மேலதிகப் படைப் பிரிவுகளை அமைக்கும் வேலைத்திட்டத்தில் இறங்கியது. இந்தப் படைப்பிரிவு அமைக்கும் நடவடிக்கை, "தேசிய சேவையை" ஆரம்பித்தல் என அழைக்கப்பட்டது. இந்தப் பணி அன்றைய இளைஞர் சேவை அமைச்சரும் இன்றைய யூ.என்.பி தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இளைஞர் சேவை அமைச்சரிடம் 18 வயது தொடக்கம் 55 வயதுக்கும் இடையிலான சகல "இளைஞர்களையும்" அணி திரட்டும் பணி ஒப்படைக்கப்பட்டது. அது கட்டாய தேசிய சேவை விதிகளின் கீழ் செய்யப்பட்டது. அமைக்கப்படும் சேவைப் படைப் பிரிவுகள் ஊர்காவல் படையின் துணைப்படையாக அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்தத் தேசிய சேவைகளின் நோக்கங்களை அன்று "தவச" என்ற முதலாளித்துவ பத்திரிகை நிறுவனத்தின் "சன்" பத்திரிகை தூக்கிப் பிடித்துப் பேசியது. அதன் ஆசிரியர் தலையங்கம் பின்வருமாறு கூறியது: "பிரேரணை மிகவும் பாராட்டுக்குரியது மட்டுமன்றி அர்த்தமுள்ள ஒரு கிருமிநாசினி. இதை நடைமுறைப் படுத்துவதை தாமதப்படுத்தக் கூடாது. ஒழுக்கமான பழக்கவழக்கம் மற்றும் அரை இராணுவ யுத்த உபாயப் பயிற்சிகளுக்குப் பின்னர், மேலதிக படையணியானது கிளர்ச்சி, எழுச்சிகள் மற்றும் உள்நாட்டு யுத்தங்களில் கூட உரிய எதிர்ப்பை உண்மையில் வழங்கும்".(சன் -1983 செப்டம்பர் 02)

இந்தப் புதிய திட்டத்தை கிளர்ச்சிகள், எழுச்சிகள் மற்றும் உள்நாட்டு யுத்த நிலமைகளில் பயன்படுத்தக் கூடிய ஒரு "கிருமிநாசினியாக" முதலாளி வர்க்கம் புரிந்து கொண்டிருந்தது. அந்த வர்க்கத்திற்கு தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்கள் கிருமியாக விளங்கினர். உண்மையில் மக்கள் கிருமியாகுவது, தமது உரிமைகளைக் காக்கும் பொருட்டு கிளர்ச்சிகள், எழுச்சிகள் மற்றும் உள்நாட்டு யுத்தங்களுக்கு எழுச்சிபெறும் போதேயாகும். எதிர்புரட்சிகர சக்திகளை கட்டவிழ்த்து விட்டு அதை நசுக்க வேண்டும். யூ.என்.பி. பிரேரித்த ஆளும் வர்க்க திட்டத்தின் பின்னணியில் இருந்த மிலேச்சத்திட்டம் அதுவேயாகும்.

வளர்ச்சி கண்டுவரும் இந்த ஆபத்துக்களைப் பற்றி தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களை எச்சரித்து அவசியமான அரசியல் தயாரிப்புகளுக்காகப் போராடியது இன்றைய சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் மட்டுமேயாகும். சமசமாஜ-ஸ்டாலினிச கட்சிகளின் துரோகிகள், யூ.என்.பி. அரசாங்கத்தின் பிற்போக்குத் திட்டத்திற்கு முழுமனே அங்கீகாரம் வழங்கும் வகையில், சட்டத்தையும் ஒழுங்கையும் காக்கப் பொலிஸ் இராணுவப் படையணிகள் ஒழுங்கு முறையாகக் கையாளப்படுவதில்லை எனக் கூறிக்கொண்டனர். இதன் மூலம் எதிர்ப்புரட்சியைத் தூண்டும் திட்டத்துக்கு துணை போயினர். அது முதலாளித்துவ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊதுகுழல் ஆகியது. யூ.என்.பி.க்கு எதிர்ப்புக் காட்டுவதாக வெளியில் காட்டிக் கொண்டபோதிலும், முதலாளித்துவ அரச இயந்திரத்தை வெகுஜனங்களுக்கு எதிராக பலப்படுத்தும் பிரச்சாரத்தில் இவர்கள் ஒன்றிணைந்து கொண்டனர்.

இந்தப் பிற்போக்கு பிரச்சாரத்தின் புண்ணியத்தினால் இராணுவ பலத்தை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் யூ.என்.பி. அரசாங்கம் இறங்கியது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தினை மேலும் பலப்படுத்துவது அதன் மற்றொரு நடவடிக்கையாக விளங்கியது. முன்னர் பொதுசன பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்தி அவசரகாலச் சட்டத்தைப் பிறப்பித்ததன் பின்னர் மட்டுமே இராணுவத்துக்கு கையளிக்கப்பட்டுவந்த அடக்குமுறை அதிகாரங்கள், இதன் மூலம் நாட்டின் அன்றாட சட்டமாக்கப்பட்டது.

புதிய சட்டதிட்டங்களின் கீழ் ஆயுதப்படைகள் நீதிமன்ற உத்தரவு இல்லாமல் எந்த ஒரு இடத்தினுள்ளும் நுழையவும் சோதனையிடவும் எந்த ஒரு நபரையும் கைது செய்யவும், போக்குவரத்து வாகனங்கள் கடற்பயணப் படகுகள் மற்றும் விமானங்களை நிறுத்திச் சோதனையிடவும் அதிகாரம் வழங்கப்பட்டது. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் இராணுவம் சாதாரண சட்டங்களில் இருந்து விடுபட்டு கொலைகார தயாரிப்புகளில் ஈடுபடவும் இதன் மூலம் அதிகாரம் கிடைத்தது. இந்தச் சட்டதிட்டங்களை சட்டப் புத்தகங்களில் வைத்துக்கொண்டு பொதுஜன முன்னணி அரசாங்கம் பட்டலந்த ஆணைக்குழு உட்பட்ட டயர் தீச்சுவாலைகளில் வெந்து இறந்தவர்களையிட்டு முதலைக் கண்ணீர் வடித்தபடி நடாத்திவரும் விசாரணைகளின் இரத்தம் தோய்ந்த பகிடிகளில் இருந்து தொழிலாளர்களும் ஒடுக்கப்படும் மக்களும் முதலாளித்துவ அமைப்பின் காட்டுமிராண்டித்தனத்தைக் தூக்கி வீசுவதற்கு அவசியமான அரசியல் தயாரிப்பின் அவசியத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

சமசமாஜ, கம்யூனிச தலைவர்களதும் அவ்வாறே குட்டி முதலாளித்துவ தீவிரவாதிகளது பிரச்சாரங்களதும் ஆதரவுடன், யூ.என்.பி. அரசாங்கம் தேசிய பாதுகாப்பு அமைச்சை நிறுவ நடவடிக்கை எடுத்தது. இதன் அமைச்சராக லலித் அத்துலத்முதலி நியமிக்கப்பட்டார்.

அவரின் விரைவான நடவடிக்கைகள், தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத யுத்த, எதிர்ப் புரட்சி உள்நாட்டு யுத்தத்திற்காக முப்படைகளையும் பலப்படுத்தி வழிநடத்த உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதாக விளங்கியது.

இராணுவத்தை பலப்படுத்துதல்

இராணுவம் அமைச்சர் அத்துலத்முதலியின் பொறுப்பில் விடப்படும் போது, காலாட் படையின் பலம் நிரந்தரப் படையாட்கள் 11,000 ஆகவும் தொண்டர் படை 2,000க்கும் 4,000க்கும் இடைப்பட்டதாகவும் விளங்கியது. ஆட்களை திரட்ட அமைச்சர் நடவடிக்கை எடுத்தார். இதன்படி 1987ல் நிரந்தரப் படைகளின் எண்ணிக்கை 50,000 வரை, அதாவது நான்கு மடங்குக்கும் மேலாக அதிகரித்தது. முதலாளித்துவ ஆட்சியாளர்களால் திசை தெரியாமல் செய்யப்பட்ட கிராமப்புற ஏழைக் குடும்பங்களின் இளைஞர்கள் வேறு மார்க்கம் இல்லாது போன நிலையில், "இருந்தாலும் சரி இறந்தாலும் சரி" என நினைத்துக் கொண்டு இந்த அலுகோசு வேலைக்குத் திரட்டப்பட்டனர். இளைஞர்கள் மீது திணிக்கப்பட்ட இந்தத் தரித்திரம் பிடித்த நிலைக்கு எதிராக "இனவாத யுத்தத்திற்கு ஒரு ஆளோ, ஒரு சதமோ வழங்க வேண்டாம்" எனக் குரல் கொடுத்தது ட்ரொட்ஸ்கிசப் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் மட்டுமே ஆகும். கடந்து சென்ற ஒவ்வொரு வாரத்திலும் இனவாத யுத்தத்தின் தோட்டாக்களாகப் பயன்படுத்தப்பட்டு துண்டு துண்டாக சிதறுண்ட இளைஞர்களின் சடலங்கள் சவப்பெட்டிகளில் சீல் வைத்து கிராமங்களுக்கு வந்திறங்கியபோது ட்ரொஸ்ட்கிஸ்ட்டுகளின் நிலைப்பாட்டின் பொருத்தம் நிரூபிக்கப்பட்டது.

"வடக்கு கிழக்கில் இருந்து இராணுவத்தை வாபஸ் பெறு!" என்ற சுலோகம், தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்கும் இராணுவ நடவடிக்கைகளுக்கும் அவ்வாறே சிங்கள இளைஞர்களை இனவாத யுத்தத்தின் பலிக்கடாக்கள் ஆக்குவதற்கும் எதிராக, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் பொதுமக்களிடையே முன்வைத்த சுலோகமாகும். அது யூ.என்.பி. ஆட்சியை தூக்கிவீச அணிதிரள்வதற்கான குரலாகியது. தொழிலாளர் வர்க்கம் அந்த சுலோகத்தை தனதாக்கிக்கொண்டு ஒடுக்கப்படும் மக்களிடையே பிரச்சாரத்தில் இறங்கியிருக்குமானால், அதனால் உருவாகக் கூடிய பலத்தின் மூலம் தனது வர்க்க அவசியங்களை இட்டு நிரப்ப மட்டுமன்றி ஒடுக்கப்படும் மக்களின் உதவியோடு தமது அரச அதிகாரத்தை ஸ்தாபிதம் செய்யவும் முடிந்திருக்கும். இதை தடுத்து யார்? இந்தத் துரோகிகள் சகலரும் இனவாத யுத்தத்தின் காட்டுமிராண்டி பெறுபேறுகளுக்கும், அவ்வாறே யூ.என்.பி. அரசாங்கத்திற்கு பதிலீடாக பொதுஜன முன்னணியை காட்டி ஆட்சிக்கு கொணர்ந்து மக்களைக் கதியற்றுச் செய்து பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்தியதற்கும் பொறுப்புச் சொல்லியாக வேண்டும்.

3. வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளுக்கான முட்டுக்கட்டைகளை திறந்துவிடுவதற்காக இனவாத ஆத்திரமூட்டல்களை சிருஷ்டிக்கும் பொருட்டு, அந்த இரண்டு மாகாணங்களிலும் புதிதாக சிங்கள மக்களைக் குடியமர்த்த கறுப்பு ஜூலை முடிவுற்றதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களை ஒன்றிலிருந்து மற்றதைப் பிரித்து வைக்கும் வகையில், மாகாவலித் திட்டத்துக்குரிய மாதுறு ஓயாப் பகுதியில் சிங்களக் கிராமத்தைத் திணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் முன்னணியில் நின்றவர் பேர்போன இனவாதியான திம்புலாகல சீலாலங்கார காவியுடைக்காரராகும். அரச அதிகாரிகளையும் கூட பயமுறுத்தும் காடைத்தனங்களுக்குப் பேர்போனவரான அவர், கிழக்கு மாகாண "ஏஜன்ட் துறவிக்கும்" மேலாக நின்று கொண்டிருந்தார்.

சீலாலங்காரவின் பாலத்காரக் குடியேற்றம் பற்றி யூ.என்.பி. அரசாங்கத்தின் உள்நாட்டு அமைச்சர் கே.டபிள்யூ. தேவநாயகமும் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் அந்தோனிமுத்துவும் முறைப்பாடுகள் செய்த போதிலும், மகாவலி அதிகார சபை அதையிட்டு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது சம்பந்தமாக மாகாவலி அதிகார சபையின் அன்றைய தலைவராக விளங்கிய பண்டிதரத்னவுக்கும் ஜனாதிபதி ஜயவர்த்னவுக்கும் இடையே இடம்பெற்ற பேச்சு வார்த்தைகள் பிரசித்தி பெற்றவை.

மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான காணிகளில் பலாத்காரமாக குடியேறியவர்களை அப்புறப்படுத்தும்படி ஜனாதிபதி பண்டிதரத்தனவுக்கு உத்தரவிட்டார். ஆனால் கிடைத்த பதில், "குடியேற்றங்கள் திம்புலாகல பிக்குவின் தலமையில் செய்யப்பட்டதால் அவர்களை வெளியேற்ற முடியாது," என்பதாகும். இந்தப் பதிலால் ஆத்திரமடைந்த ஜயவர்த்தன, "மகாவலி அதிகார சபை தொழிற்படுவது திம்புலாகல தேரோவுக்கு அவசியமான விதத்திலாகின் நான் அவரை அதன் தலைவராக்குகின்றேன். நீங்கள் வீட்டுக்குப் போகலாம்," எனக் குறிப்பிட்டார்.

அடுத்து ஜயவர்தன அந்தப் பணியை மாவட்ட அமைச்சர் போல் பெரேராவிடம் ஒப்படைத்தார். மகாவலி பிராந்தியத்துக்கு சென்ற அவர் 20,000க்கும் அதிகமானோர் மகாவலி பிராந்தியத்தில் குடிசைகள் அமைத்துக்கொண்டு பலாத்காரமாகக் குடியேறிக்கொண்டுள்ளதாக அறிக்கை செய்தார். அச்சமயத்தில் மகாவலி அதிகார சபையோ குடியேறியுள்ளவர்களின் எண்ணிக்கை 2,000க்கும் குறைவானது என்று அறிக்கை செய்திருந்தது. இந்தப் பிரச்சினையை சிறுப்பித்துக் காட்டும் பொருட்டு, இந்தப் பிழையான அறிக்கையின் பின்னணியில் மகாவலி அமைச்சர் காமினி திசநாயக்க செயற்பட்டார் என்பதில் சந்தேகம் இல்லை. இந்தக் குடியேற்றவாசிகள் மகாவலி அதிகார சபைக்கும் மகாவலி ஒப்பந்தங்களில் ஈடுபட்டு இருந்த முதலாளிகளுக்கும் சொந்தமான லொறிகளில் ஏற்றிக் கொணர்ந்து இறக்கப்பட்டனர்.

இன்னும் இரண்டு தமிழர் வாழ் பிரதேசங்களிலும் இந்தப் பலாத்காரச் சிங்களக் குடியேற்றங்களுக்கு உட்கார்ந்துகொள்ள இடமளிக்கப்பட்டது. திருகோணமலையையும் முல்லைத்தீவையும் பிரிக்கும் யான் ஓயாப் பகுதியும் மன்னார் மாவட்ட மல்வத்து ஓயாப் பகுதியும் இதற்கென ஒதுக்கப்பட்டது.

இந்த விதத்தில் குடியேறத் தள்ளப்பட்ட எந்த ஒரு குடும்பமும் "சிங்கள மரபுகளைக்" காக்கும் உணர்வுகளால் தூண்டப்பட்டவை அல்ல. முதலாளித்துவ அமைப்பினால் இருக்க இடமற்றவர்களாக்கப்பட்ட ஒரு நிலையிலேயே அவர்கள் இந் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இந்த மக்கள் புதிதாகக் குடியேறியதைத் தொடர்ந்து தினமும் தமிழர்-விரோத இனவாத விஷம் ஊட்டப்பட்டது. பொலிசாரும் இராணுவத்தினரும் திட்டமிட்டு நடத்தி, பின் தமிழ் மக்களின் தலையில் பழியைக் கட்டியடித்த ஆத்திரமூட்டல்கள் மூலம் இம்மக்களை இனவாத யுத்தத்தின் கைத் தேங்காயாக்கும் வேலைத்திட்டம் நனவான முறையில் முன்னெடுக்கப்பட்டது.

இனவாத யுத்தத்திற்கு வேண்டிய பொதுசன அபிப்பிராயத்தை தூண்டிவிடுவதற்கு அவசியமான பொய் பிரச்சாரங்களை நடத்துவதில் முதலாளித்துவ அரச இயந்திரமே முன்னணியில் நின்றது. அதனுடன் ஒத்தூதும் வேலைகளில் முதலாளித்துவ பத்திரிகைகள் ஈடுபட்டன.

திரித்துக்கொண்டிருந்த அரச இயந்திரத்தின் பொய் திரிகைக்கு வள்ளுவன் இராஜலிங்கம் என்ற பல்கலைக்கழக மாணவனைக் கைது செய்ததன் மூலம் எண்ணெய் பூசப்பட்டது. அவர் சென்னையில் இருந்து திரும்பும் போது தலை மன்னாரில் வைத்து கைது செய்யப்பட்டார்.

வள்ளுவன், தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அ. அமிர்தலிங்கத்தின் இரண்டாவது மகன் பகீரதனை திருமணம் செய்யவிருந்த தனது சகோதரியை மணமகன் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய சென்னை சென்றிருந்தார். கைது செய்யப்பட்ட வள்ளுவன் வசமிருந்த புதுமையான நான்கு கடிதங்கள் மன்னார் துறையில் காவலில் இருந்த படையாட்களால் "தேடி" பிடிக்கப்பட்டது.

முக்கியமானது என இரகசியப் பொலிசார் கருதிய அந்தக் கடிதங்களை ரூபவாஹினியில் தோன்றி வாசிக்கும் பொருட்டு பலாலியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வள்ளுவனை கொழும்புக்குக் கொணரும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கடிதத்தை எழுதியவர் அமிர்தலிங்கத்தின் மூத்த புதல்வரான காண்டீபன். தமிழர் விடுதலைக் கூட்டணி இளைஞர் பேரவைத் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு அந்தக் கடிதம் எழுதப்பட்டிருந்தது.

உரிய தருணம் வரும்போது இலங்கை இராணுவத்தை எதிர்த்து போராடும் பொருட்டு தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழீழ தேசிய இராணுவத்தை ஒழுங்கு செய்கின்றது, என்பதே அக் கடிதத்தில் அடங்கியிருந்த முக்கிய விடயமாகும். இந்த தேசிய இராணுவத்துக்கு திரட்டிப் பயிற்சியளிக்கும் படைகளின் எண்ணிக்கை 50 க்கும் 100க்கும் இடைப்பட்டதாகும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. பயிற்சி முகாமாக ஒதுக்கப்பட்ட இடம் இரண்டு பிரிவாக ஒதுக்கப்பட்ட 13 ஏக்கர் நிலம் எனவும் கூறப்பட்டது. அதற்கான நிதி லண்டனில் திரட்டப்படுவதாகவும், வேலுப்பிள்ளை பிரபாகரனைச் சந்தித்த அமிர்தலிங்கம் லிபியத் தொடர்பை அவரிடம் ஒப்படைத்ததாகவும் அந்தக் கடிதத்தில் மேலும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இத்தகைய "அரச விரோத சதிகார" தகவல்கள் அந்தளவு அப்பட்டமான விபரங்களோடு சகலரும் வாசித்து விளங்கிக்கொள்ளும் ஒரு கடிதத்தில் இடம்பெறுவது உண்மையில் ஆச்சரியத்துக்கு உரியதாகும். ஆனால், இவற்றை விழுங்கிக்கொள்ள வாயைப் பிளப்போர் இருக்கின்றனர் எனக் கருதி பொது அறிவையும் கூட இழிவுபடுத்தும் பொய்ப் பிரச்சாரங்களில் ஆளும் வர்க்கம் ஈடுபட்டமை, அந்தளவுக்கு அது கையறு நிலைக்குத் தள்ளப்பட்டதை வரலாறு காட்டுகின்றது.

இத்தகைய கசப்பான கசாயத்தின் செறிக்காத பகுதியை செறிக்க வைப்பதன் பேரில் அவசியமான குறைபாடுகளை நிரப்பும் நடவடிக்கை முதலாளித்துவ கந்தல் பத்திரிகைகளுக்கு வழங்கப்பட்டிருந்தது. அச்சமயத்தில் அமிர்தலிங்கம் ஈடுபட்டிருந்த அமெரிக்க, பிரித்தானிய சுற்றுலாவில் நிகழ்த்திய பேச்சுக்களை பயன்டுத்தி நாற்றத்தின் எல்லையையும் தாண்டிச் செல்லும் இனவாத புதைச் சேறு ஒன்று இந்த கந்தல் பத்திரிகைகளால் நிர்மாணிக்கப்பட்டது.

4. சேறு கலக்கிகளாக இந்தச் சேற்றில் சமசமாஜ, ஸ்டாலினிச, நவசமசமாஜ தலைவர்கள் இறங்கியிருந்தனர். இவர்களை ஆளுக்காள் பலிகொள்ள ஜனாதிபதி ஜயவர்த்தனா மட்டப்பலகையாக "சர்வகட்சி வட்ட மேசை மாநாட்டை" தயார் செய்தார்.

அரசியல் நெருக்கடி

1983 ஆகஸ்டு-செப்டம்பர் அளவில் யூ.என்.பி. அரசாங்கம் முகம் கொடுத்திருந்த அரசியல் நெருக்கடி வேகமாக உக்கிரம் கண்டது.

கறுப்பு ஜூலையில் இடம்பெற்ற தமிழர் எதிர்ப்பு தீவைப்புகளின் சூடு இந்தியா பூராவும் பொதுமக்களை வீதியில் இறக்கும் நிலைமையை உருவாக்கியது. அது தமிழ் நாடு மாநிலத்தில் பெரிதும் உக்கிரமான முறையில் வெளிப்படாகியது. சிறப்பாக பல்கலைக்கழக, பாடசாலை மாணவர் உட்பட இளைஞர் பகுதியினர் ஆயிரம், ஆயிரமாக வீதியில் இறங்கி கொழும்பு அரசாங்கத்திற்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்திரா காந்தியின் மத்திய அரசாங்கத்தினதும் எம்.ஜி இராமச்சந்திரனது மாநில அரசாங்கத்தினதும் நடைமுறை தொடர்பாக பெரிதும் வெறுப்படைந்திருந்த தொழிலாளர் ஒடுக்கப்படும் மக்கள், வீதியில் இறங்கி தமது ஆத்திரத்தை வெளிக்காட்டும் பொருட்டு இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிரான இரத்தக் களரிகளையும் படுகொலைகளையும் சந்தர்ப்பம் ஆக்கிக் கொண்டனர்.

தமிழ் நாட்டில் கருணாநிதியின் தி.மு.க. இந்த மக்கள் எதிர்ப்பின் உச்சியில் பாய்ந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது. அவர் தமிழ் நாடு மாநில எதிர் கட்சித் தலைவர் பதவியில் இருந்து இராஜிநாமாச் செய்து தொழிற்படத் தொடங்கினார்.

எம்.ஜி.ஆரின் கட்சியினுள் போராட்ட அலையின் தாக்கம் சட்டசபையினுள் அண்ணா தி.மு.க கட்சியின் பிரதம அமைப்பாளரான ஜனார்தனனின் பதவி இராஜிநாமாவாக வெளிப்பட்டது. இந்த நெருக்கடி நிலமையை தம்மால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாது என்ற பீதியின் காரணமாக எம்.ஜி.ஆரின் மாநில அரசாங்கம் தமிழ் மக்களுக்கு நல்லாதரவு தெரிவித்து இலங்கை அரசாங்கத்தை நெருக்கும்படி காங்கிரஸ் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்தது.

யூ.என்.பி. அரசாங்கத்தின் இனவாத காட்டுமிராண்டித்தனத்துக்கு எதிரான பொதுஜன அபிப்பிராயம், இந்திய எல்லையையும் தாண்டி வளர்ச்சி காணத் தொடங்கியது. சிறப்பாக 6வது அரசியலமைப்புச் சட்ட திருத்தத்தின் கீழ் சத்தியப் பிரமாணம் செய்ய மறுத்த தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களின் பாராளுமன்ற ஆசனங்கள் 1983 ஒக்டோபர் 20ம் திகதி இரத்துச் செய்யப்பட்டதோடு பாராளுமன்ற எதிர்க்கட்சி ஒன்று இல்லாது போகும் அளவுக்கு யூ.என்.பி. யின் சர்வாதிகார வெறி பொதுமக்களின் கண்களின் எதிரில் அம்பலமாகியது.

மறுபுறந்தில், ஏகாதிபத்திய வங்கியாளர்கள் சிபார்சு செய்த வேலைத்திட்டங்களை அணுவும் பிசகாமல் நடைமுறைக்கிடுவது தொடர்பாக யூ.என்.பி. அரசாங்கம் காட்டிய ஈடாட்டம் அதன் எசமானர்களின் கசப்புக்கு இலக்காகியது. உதாரணமாக, இலவசக் கல்வியை ஒழித்துக்கட்டும் பொருட்டு கொணர்ந்த கல்வி வெள்ளை அறிக்கையை ஒரேயடியாக நடைமுறைக்கிடுவதை பொதுமக்களின் எதிர்ப்பின் மத்தியில் சுருட்டிக் கொள்ள நேரிட்டமை குறிப்பிடத்தக்கது. 1980 ஜூலை வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட ஒரு இலட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்களின் தொழில் உரிமை நாசமாக்கப்பட்டு இருந்துடன் இன்னமும் "நட்டமான பொருளாதாரத் துறைகளின்" பராமரிப்புக்காக நிதி ஒருக்கீடு செய்வதை நிறுத்த முடியாது போய்விட்டது. இதற்குத் தொழிலாளர்களிடம் இருந்து கிளர்ந்து வந்த எதிர்ப்பே காரணம். இனவாதத்தைப் பயன்படுத்தி குழப்ப நிலையைச் சிருஷ்டித்து 1984 வரவு செலவு திட்டத்தில் அரசாங்கச் செலவுகளை நூற்றுக்கு 20 வீதத்தினால் வெட்டித்தள்ள அரசாங்கம் தீர்மானம் செய்தது. எனினும் அதை நடைமுறைக்கிடும் அளவுக்கு யூ.என்.பி. அரசாங்கத்துக்கு சக்தி உள்ளதா? என்பதையிட்டு வங்கியாளர்கள் சந்தேகம் தெரிவித்தனர். அதில் இருந்து தலையெடுக்கும் பொருட்டு சர்வாதிகாரத் திட்டங்களை விரைவுபடுத்த நேரிட்டது. ஆனால் வடக்கில் தோன்றியிருந்த கிளர்ச்சிகர நிலமைகளின் எதிரில் இராணுவத்தை திட்டவட்டமான அடிப்படையாகக் கொண்ட ஒரு சர்வாதிகாரத்துக்கு இருந்து வந்த வாய்ப்பு வரையறுக்கப்பட்டது. கறுப்பு ஜூலையின் அனர்த்தங்களின் பெறுபேறாக வடக்கில் கிளர்ச்சிகர இயக்கங்களின் கை பலப்படுத்தப்பட்டிருந்ததையும் ஏகாதிபத்தியவாதிகள் கணக்கில் கொண்டனர். இதனால் தொழிலாளர் வர்க்கத்தையும் ஒடுக்கப்படும் மக்களையும் அரசியல் ரீதியில் மேலும் குழப்பியடித்து மலடுகளாக்கும் பொருட்டு சமசமாஜ, கம்யூனிஸ்ட், நவசமசமாஜ கட்சிகளின் துரோகத்தை பயன்படுத்த நேரிட்டது.

இங்கு முதலாளித்துவ சார்பு கையாட்களை அணிதிரட்டுவதற்கான துரும்பாக சர்வகட்சி வட்டமேசை மாநாடு பயன்பட்டது.

யூ.என்.பி. அமைச்சர்களாலேயே ஒழுங்கு செய்து கட்டவிழ்த்து விடப்பட்ட கறுப்பு ஜூலையின் இனவாத இரத்தக் களரிக்கான ஒரு முன்னோடி நடவடிக்கையாக, இதற்கு சில தினங்களுக்கு முன்னர் நடத்தத் திட்டமிட்டிருந்த சர்வகட்சி வட்டமேசை மாநாடு எனப்படுவதில் அரசாங்கத்தின் உத்தியோக பூர்வமான புள்ளிகள் மட்டுமே கலந்து கொள்வதாக விளங்கியது.1983 ஜூலை 20ம் திகதி கூட்டப் பட்டிருந்த அந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு யூ.என்.பி.க்கு மேலாக சி.ல.சு.க, சமசமாஜக் கட்சி, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, கம்யூனிஸ்ட் கட்சி, இ.தொ.கா., நவசமசமாஜ கட்சி, தமிழ் காங்கிரஸ் முதலான ஆறு ஏழு கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் யூ.என்.பி. யும், அதன் முண்டுகோலான இ.தொ.கா.வும் மட்டுமே அதில் கலந்து கொண்டன. கறுப்பு ஜூலையின் அழுக்கு வடுக்கள் ஏனைய சகல கட்சிகளதும் அகோர முகங்களில் ஒட்டப்படுவது இதன் மூலம் தவிர்க்கப்பட்டது. கறுப்பு ஜூலைக்கான பொறுப்பைச் சுமத்தும் பொருட்டு பின்னர் மூன்று கட்சிகள் தடை செய்யப்பட்ட போதிலும் அது புதையுண்டு போன பொய் முயற்சியாகியது.

இப்போது அந்த சர்வ கட்சி மோசடியை மீண்டும் தோற்றுவிக்காமல் இருக்க முடியாது போய்விட்டது. யூ.என்.பி. அரசாங்கம் முகம் கொடுத்த அரசியல் நெருக்கடியே அதற்கான காரணமாகும். யூ.என்.பி. அரசாங்கத்தின் நெருக்கடியை முதலாளித்துவ ஆட்சியினது நெருக்கடியாக புரிந்து கொண்ட வர்க்க அடிமைகள் இப்போது அதற்கு தோழ் கொடுக்க ஆயத்தமாகி வந்தனர்.

அவர்களின் வர்க்கத் துரோக ஆயத்தங்களைப் பற்றி ஏதும் சந்தேகம் இருந்திருக்குமானால் அந்தக் குறைபாடுகளைப் பூசி மெழுகும் நடவடிக்கையில் முதலாளித்துவ கந்தல் பத்திரிகைகள் இறங்கின. முன் கூட்டியே யூ.என்.பி. ஆட்சிக்கு முண்டு கொடுக்க அந்தக் கட்சிகள் காட்டும் தாயாரிப்பைப் பத்திரிகைக்காரர்கள் பிரச்சாரம் செய்தனர்.

ஓகஸ்ட் 23 ம் திகதி ஞாயிறு ரிவிரச பத்திரிகை, எதிர்க் கட்சியின் பிரபல அரசியல் கட்சிகள் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க முடிவு செய்திருப்பதாக அறிவித்தமை அந்த பிரச்சாரங்களில் ஒன்றாகும். அதையிட்டு அது பின்வருமாறு குறிப்பிட்டது: "பயங்கரவாத இயக்கத்தினால் தமது கட்சிகளின் அமைப்பு நடவடிக்கைகளுக்கு இடைஞ்சல் ஏற்பட்டிருப்பதாகவும், அந்தப் பிரச்சினையை உடனடியாகத் தீர்க்காது போனால் எதிர்காலத்தில் அது தமக்கும் தலையிடியாகும் என அக் கட்சிகளின் தலைவர்கள் உள்வாரி கலந்துரையாடங்களில் குறிப்பிட்டுள்ளதாகவும், தமது கட்சிகளின் எதிரில் தெளிவு படுத்தப்பட்டுள்ள விடயங்களின்படி இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க தீர்வு தேட ஒன்றிணையுமாறு அரசாங்கம் அழைப்பு விடுக்குமானால் அதை ஏற்றுக் கொள்ள விரும்புவதாகவும் அந்தக் கலந்துரையாடல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் விடயம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன."

"விடயம் அறிந்த" வட்டாரங்கள் எதுவாக இருப்பினும் "கட்சிகளும்" மற்றும் அவற்றின் உள்வாரிக் கலந்துரையாடல்களும் எது எனக் குறிப்பிடாத இந்த அறிக்கைகள் முடிவுகளை வலுக்கட்டாயமாக திணிப்பதை இலக்காக் கொண்டு எழுதப்பட்டவை என்பதைப் புரிந்து கொள்வது கடினமானது அல்ல. ஆனால், இந்த இலக்குக்கு அடிபணிந்து போவது ஆளும் வர்க்கத்தின் முடிவுகளைத் திணிக்க வாயைப் பிளந்து கொண்டுள்ள முதலாளித்துவ சார்பு கட்சிகள் மட்டுமே என்பதைத் தெரிந்து கொள்வதும் சிரமம் அல்ல. சமசமாஜ-கம்யூனிஸ்ட் கட்சிகள் ஜனாதிபதி ஜயவர்தனா கூட்டியதுதான் தாமதம், வட்ட மேசை மாநாட்டில் வயிறழப்பதன் மூலம் அப்பரீட்சையில் உயர் சித்தியடைந்தன. முதலாளித்துவ ஆட்சியாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளில் அத்தருணத்தில் தடை செய்யப்பட்டிருந்த நவசமசமாஜக் கட்சிக்கும் ஜே.வி.பி. க்கும் வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்ளும்படி அழைப்புக் கிடைக்கவில்லை.

சமசமாஜ-கம்யூனிச துரோகிகளையும் சேர்த்துக்கொண்டு இடம்பெற்ற பேச்சு வார்த்தைகளின் முதல் சுற்று, பாராளுமன்றத்தில் இருந்து வெளியே தள்ளப்பட்டிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியை வட்டமேசைக்கு இழுப்பதாக விளங்கியது. இரண்டாவது சுற்று, வடக்கில் கிளர்ந்து எழுந்த மக்களுக்கும், வர்க்கப் போராட்ட பாதையில் காலடி வைக்கும் சகல தொழிலாளர் ஒடுக்கப்படும் மக்களுக்கும் எதிராக சகல முதலாளித்துவ கட்சிகளதும் ஆதரவுடன் வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவதை இலக்காகக் கொண்டிருந்தது.

5. இரண்டாவது இலக்கை நோக்கி செல்கையில் அவசியமான ஏகாதிபத்தியவாதிகளதும் இந்திய முதலாளித்துவ ஆட்சியாளர்களதும் ஆதரவை திரட்டிக் கொள்ளும் பொருட்டு ஜயவர்த்தன ஆட்சியைப் போலவே தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஆளுக்காள் போட்டியிட்டுக் கொண்டிருந்தன.

இந்திய வெகுஜனங்கள் காங்கிரஸ் கட்சியின் பிடிக்குள் அகப்பட்டுக் கிடந்த ஒரு நிலமையின் கீழ், இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பாக முதலைக் கண்ணீர் வடிப்பதன் மூலம் அதனைச் சீர்செய்ய இந்திராகாந்தி யோசித்தார். சிறப்பாக 1980 களில் பஞ்சாபில் சீக்கிய மக்களுக்கு எதிரான இராணுவ ஒடுக்குமுறைகளை உக்கிரமாக்கியதில் மற்றும் பல்வேறு சிறுபான்மை மக்கள் குழுக்களின் ஜனநாயக உரிமைகளை துவம்சம் செய்வதில் பேர்போன வரலாற்றை உரித்தாக்கிக் கொண்டிருந்த காங்கிரஸ் ஆட்சியாளர்கள், இலங்கைத் தமிழ் மக்கள் மீது "அனுதாபம்" காட்டுவதன் பின்னணியில் பிற்போக்கு அரசியல் அவசியங்கள் பதுங்கிக் கொண்டிருந்தன.

தமிழ் மக்கள் படுகொலைகள் மற்றும் இரத்தக் களரிகள் சமபந்தமாகவும் தமிழர் விடுதலைக் கூட்டணியை பாராளுமன்றத்தில் இருந்து வெளியே தள்ளியது தொடர்பாகவும் இந்திராகாந்தி இந்தியப் பாராளுமன்றத்திலும் பத்திரிகையாளர் மாநாட்டிலும் வெளியிட்ட அறிக்கைகளின் அரசியல் நெருக்கு வாரங்களில் இருந்து தலையெடுக்க ஜனாதிபதி ஜயவர்த்தன உடன் நடவடிக்கை எடுத்தார். அவர் ஆசியாவின் சகல பிற்போக்கு ஆட்சியாளர்களதும் ஏகாதிபத்திய சக்திகளது பக்கமும் திரும்பினார்.

ஏகாதிபத்தியவாதிகள் பக்கம்

தமது சிறப்பு பிரதிநிதியாக செயற்பட்டு வந்த வழக்கறிஞர் எச்.டபிள்யு. ஜயவர்த்தனவை இந்தோனேசியா, தென்கொரியா, யப்பான், ஹொங்கொங், சீனா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, அவுஸ்ரேலியா மற்றும் நியூசிலாந்தின் தலைநகரங்களுக்கு ஜயவர்த்தனா அனுப்பி வைத்தார். தமிழ் மக்கள் கொலை செய்யப்படுவதையிட்டு ஒரு வார்த்தை தன்னும் கூறாத இந்த நாடுகளின் ஆட்சியாளர்களைக் கொண்டு தனித் தமிழ் நாட்டுக் கோரிக்கைக்கு எதிரான அறிக்கைகள் பெற்றுக் கொள்வதில் அவர் வெற்றி கொண்டார். ஆனால், சீனாவைத் தவிர ஏனைய சகல நாடுகளும் இந்தியாவின் தலையீட்டைக் கண்டனம் செய்வதை நிராகரித்தன.

அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் இராணுவ உதவி உள்ளடங்கலான உதவிகளை வென்றெடுக்க ஜனாதிபதி ஜயவர்த்தனா வெளிநாட்டு அமைச்சர் ஹமீட்டை வெளிநாடுகளுக்கு அனுப்பிவைத்தார். இந்தியாவின் ஏகாதிபத்திய சார்பு இந்திராகாந்தி ஆட்சி முகம் கொடுத்த நெருக்கடியையும், இலங்கையின் பேரிலான அங்குள்ள பிரதிபலிப்புகளையும் பற்றி உணர்ச்சி கண்டிருந்த றீகன் அரசாங்கம், இலங்கைக்கு நேரடியாக இராணுவ உதவி வழங்க இணங்கவில்லை. அதற்குப் பதிலாக பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் மலேசிய அரசாங்கங்களின் ஊடாக உதவி வழங்க இணக்கம் தெரிவித்தது. இந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் பொருட்டு றீகன் அரசாங்கத்தின் உயர் அதிகாரியான வேர்ணன் வோல்டரை கொழும்புக்கு அனுப்பி வைக்கவும் தீர்மானம் செய்யப்பட்டது. குளிர் யுத்தம் இன்னமும் அனைந்திராத நிலையில் இந்தியாவைக் கணக்கெடுக்காமல் தாம் செயற்படவில்லை எனக் காட்டிக்கொள்ளும் விதத்தில், வோல்டரின் பயணத்தைப் பற்றி இந்திராகாந்தி அரசாங்கத்துக்கு முன் கூட்டியே அறிவிக்கவும் அமெரிக்கா மறந்துவிடவில்லை.

ஜனாதிபதி ஜயவர்த்தனவின் யூ.என்.பி. ஆட்சியின் சார்பில், இந்தியாவுக்கு எதிராக பந்தயம் பிடிக்க ஏகாதிபத்திய சக்திகளும் அவர்களது கைக்கூலி பிற்போக்கு ஆட்சியாளர்களும் ஈடாடுவதைக் கண்ட யூ.என்.பி. அரசாங்கம், இயலாக் கையாக இஸ்ரேல் பக்கம் திரும்பியது. ஜனாதிபதி ஜயவர்தனவின் "யங்கிடிக்கி" நிலைப்பாட்டையும், வெளிநாட்டு அமைச்சர் ஹமீட்டின் இஸ்லாம் மதத்தையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்திக் கொண்டு ஏகாதிபத்தியவாதிகளிடம் இருந்தும் மத்திய கிழக்கு எண்ணைப் பணத்தினாலும் பிளைக்கப் போட்ட திட்டத்தை பின்தள்ளி, ஜயவர்த்தன தனது மகன் ரவி ஜயவர்த்தனாவை இஸ்ரேலுக்கு அனுப்பி வைத்தார்.

அரச எதிர்ப்பு சதிக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி "லிபியன் தொடர்பு" வைத்திருந்ததாக முன்கூட்டியே பிரச்சாரம் செய்து வந்த பொய்யின் இலாபத்தையும் பெற்றுக் கொண்டு, இஸ்ரேலில் இருந்து இராணுவப் பயிற்சியாளர்களை தருவிக்க ஒப்பந்தம் செய்து கொள்வதில் ஜயவர்த்தனா வெற்றி பெற்றார். இஸ்ரேலுக்கான கப்பமாக அந்நாட்டுடன் மீண்டும் தூதரக உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள யூ.என்.பி. உடன்பட்டது. அந்த இஸ்ரேல் தொழிற்பாடுகளை அமெரிக்க தூதரகத்தின் ஒரு பாகமாக ஸ்தாபிதம் செய்ய தீர்மானம் செய்யப்பட்டதையும் கவனத்தில் கொண்டாக வேண்டும்.

முதலாளித்துவ தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கமும் அமெரிக்க, பிரித்தானிய ஆட்சியாளர்களைச் சந்தித்து முறையிட்ட போதிலும் நிவாரணம் கிடைக்கவில்லை. ஆதலால் அவர் தமது சகாக்களுடன் தமிழ் நாட்டில் வேரூன்றி, எம்.ஜி.இராமச்சந்திரன் மற்றும் கருணாநிதி கோஸ்டிகளதும் இந்திராகாந்தி அரசாங்கத்தினதும் ஆதரவின் மீது வாழ்க்கையை ஓட்ட முடிவு செய்தார். இனவாத சிங்கள முதலாளித்துவ அரசாங்கத்தினது ஒடுக்குமுறை நசுக்குதல் எதிரில் கிளர்ந்து கொண்டிருந்த வடக்கு-கிழக்கு தமிழ் மக்களிடையே, தமது ஆதரவு தளம் வேகமாக தகர்ந்து கொண்டு வந்த ஒரு நிலமையில், வசிப்பிடத்தைக் கூட இந்தியாவுக்கு மாற்றிக்கொள்ள தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் தீர்மானித்தனர். இதன் மூலம் அவர்கள் முதலாளித்துவ பாராளுமன்ற தமிழ் தேசியவாதத்தின் படு வங்குரோத்தை வெளிக்காட்டிக் கொண்டனர். அதே நேரம், முதலாளித்துவ தமிழ் தேசியவாதத்தின் ஆயுதப் போராட்டப் பாதையின் வங்குரோத்தும் பிற்போக்கும் வெளிப்பட இன்னமும் சிறிது காலம் கழியவேண்டி இருந்தது. தொழிலாளர் வர்க்க அனைத்துலகவாத ஐக்கியத்தை அடிப்டையாகக் கொள்ளாத அத்தகைய முதலாளித்துவ, குட்டி முதலாளித்துவ வேலைத்திட்டங்களின் மூலம், ஏகாதிபத்தியச் சார்பு சிங்கள இனவாத பிற்போக்காளர்களதும் அவர்களின் ஆட்சியினதும் கிழண்டிப்போன இரு கால்களுக்கும் பலம் சேர்ப்பதைத் தவிர வேறு எதுவும் இடம்பெறாது.

கீர்த்தி பாலசூரிய மறைவின் இருபதாம் ஆண்டு நிறைவு
கீர்த்தி பாலசூரிய மறைந்து இருபது ஆண்டுகள்
1970-71 ன் போது புரட்சிகர போராளியாக கீர்த்தி பாலசூரிய

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம்/சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோக்குகள்
ஸ்ரீலங்காவின் நிலைமை பற்றியும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் அரசியல் கடமை பற்றியும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அறிக்கை
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இரண்டாம் நிறை பேரவையின் ஆவணங்கள்
இலங்கை ''சமாதான பேச்சுவார்த்தையின்'' அரசியல் பொருளாதாரம்
சோசலிச சமத்துவ கட்சியும் ஸ்ரீலங்கா-ஈழம் ஐக்கிய சோசலிச அரசுகளுக்கான போராட்டமும்
சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம்

தொழிலாளர் புரட்சிக் கட்சியின் உடைவு
நான்காம் அகில சஞ்சிகையின் ஆசிரிய தலையங்கம் - மார்ச் 1987
1971 இந்தியா-பாக்கிஸ்தான் போர் குறித்த ஆவணங்கள்
லண்டனில் இருந்த ஒரு இலங்கை தோழருக்கு கீர்த்தி பாலசூரியா எழுதிய கடிதம்

லங்கா சம சமாஜ கட்சியின் காட்டிக்கொடுப்பு
இலங்கை : மாபெரும் காட்டிக்கொடுப்பு
நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் அறிக்கை, ஜூலை 5, 1964
பியர் பிராங்கின் தாக்குதலுக்கு பதிலளிக்கும் சோசலிச தொழிலாளர் கழகத்தின் அரசியல் குழு அறிக்கை
இலங்கையில் வரலாற்றுக் காட்டிக் கொடுப்பு
இலங்கையில் ட்ரொட்ஸ்கிசமும் திரிபுவாதமும்
சமசமாஜ வரலாற்று ஏட்டிலிருந்து

தேசிய பிரச்சினைகள்
நிரந்தரப் புரட்சியும் இன்று தேசியப் பிரச்சனையும்

இலங்கையின் உள்நாட்டு யுத்தம்
1983 யூலை தமிழர்கள் எப்படி காட்டிக் கொடுக்கப்பட்டார்கள்
இலங்கை: இனவாத யுத்தத்திற்கு 25 வருடங்கள்