On the 20th anniversary of his death SEP general secretary pays tribute
to Keerthi Balasuriya
20வது
நினைவு தினத்தில்
கீர்த்தி பாலசூரியவுக்கு சோ.ச.க.
பொதுச்
செயலாளர் ஆற்றிய புகழுரை
By Wije Dias
15 March 2008
நான்காம் அகிலத்தின்
அனைத்துலகக் குழுவும் (நா.அ.அ.கு.)
உலக சோசலிச வலைத்
தளமும் கீர்த்தி பாலசூரிய மறைந்து
20வது ஆண்டு நிறைவை
நினைவுகூர்வதற்காக மார்ச் 16ம்
திகதி பாரிசில் கூட்டமொன்றை நடத்தவுள்ளன.
கீர்த்தி பாலசூரிய,
இலங்கையில் சோசலிச
சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின்
(பு.க.க.)
பொதுச் செயலாளரும் நா.அ.அ.கு.
வின் தலைவர்களில்
ஒருவருமாவார்.
கடந்த டிசம்பரில்
கொழும்பில் நடந்த நினைவுக் கூட்டத்தில் சோசலிச சமத்துவக் கட்சியின்
(இலங்கை)
பொதுச் செயலாளர் விஜே
டயஸ் ஆற்றிய உரையை இங்கு பிரசுரிக்கின்றோம்.
கீர்த்தி பாலசூரிய,
1968ல் பு.க.க.
ஸ்தாபிக்கப்பட்டதில்
இருந்து 1987
டிசம்பர்
18ல் திடீர்
மாரடைப்பால் உயிரிழக்கும் வரை பு.க.க.
யின் பொதுச் செயலாளராக
இருந்தார்.
கொழும்பில் நடந்த சோ.ச.க.
கூட்டத்தின் அறிக்கை
கூட்டத்திற்கு வருகை தந்தவர்களின் செவ்வி மற்றும் கூட்டத்தில்
வாசிக்கப்பட்ட நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஏனைய பகுதிகளில்
இருந்து வந்த வாழ்த்துக்கள் ஆகியவற்றை இங்கே கிளிக் செய்து பார்வையிடலாம்.
ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின்
முன்னணி தலைவர்கள் தமது செய்திகளில் கூறியுள்ளது போல்,
தோழர் கீர்த்தி
பாலசூரியவின் மறைவு,
வெறுமனே புரட்சிக் கம்யூனிஸ்ட்
கழகத்துக்கும்,
இலங்கையிலும் இந்தியத்
துணைக்கண்டத்திலும் உள்ள தொழிலாளர்களுக்கும் மட்டுமன்றி முழு உலகத்
தொழிலாளர் வர்க்கத்திற்கும் ஒரு பேரிழப்பாகும்.
அனைத்து செய்திகளிலும்
குறிப்பிடப்பட்டுள்ள இன்னுமொரு விடயத்தை நான் உங்களது கவனத்திற்கு கொண்டு
வருகிறேன். 1985-86ல்
அமெரிக்க தொழிலாளர் கழகத்தின் செயலாளரான தோழர் டேவிட் நோர்த்தின்
தலைமையில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் ஏற்பட்ட பிளவின்
பின்னரே,
நா.அ.அ.கு.
வின் முன்னணி
உறுப்பினர்களுக்கு தோழர் கீர்த்தியைப் பற்றியும் ட்ரொட்ஸ்கிசத்திற்கு
அவர் செய்த ஆழமான பங்களிப்புகள் பற்றியும் கற்றுக்கொள்ள வாய்ப்புக்
கிட்டியது.
ஒப்பீட்டளவில் இளம் வயதான,
39வது வயதில்
கீர்த்தியை இழந்தமையையிட்டு ஆழமான கவலை கொண்டுள்ள அதே வேளை,
இரண்டு
தசாப்தங்களுக்கும் மேலாக அவரது மிக நெருக்கமான அரசியல் வழிநடத்தலின் கீழ்
இயங்கும் அதிஷ்டம் எங்களுக்கு இருந்தது.
அந்தக் காலகட்டத்தில்,
தொழிலாளர்
வர்க்கத்தின் தலைமை நெருக்கடியை தீர்க்கவும் மற்றும் அதன் மூலம் மனித
குலத்தின் விடுதலைக்காவும் போராடுவதன் பேரில் நாம் கீர்த்தியுடன்
போராடியதோடு,
அவரிடமும் அவருடனும்
கற்றுக்கொண்டு எம்மைத் தயார்படுத்தினோம்.
1985க்கு
முன்னர்,
பிரித்தானிய பகுதியான சோசலிச
தொழிலாளர் கழகத்தின் (சோ.தொ.க.)
அரசியல்
தலைமைத்துவத்தின் கீழேயே அனைத்துலகக் குழு இயங்கியது.
சோ.தொ.க.
பின்னர் தொழிலாளர்
புரட்சிக் கட்சியாக (தொ.பு.க.)
உருவானது.
பப்லோ-மண்டேலின்
போக்கின் திருத்தல்வாதத்திற்கு எதிராக நான்காம் அகிலத்தின் ட்ரொட்ஸ்கிச
வேலைத் திட்டத்தை பாதுகாக்கும் அதன் போராட்டத்தின் காரணமாக,
இந்தக் கட்சி அனைத்துலக
குழுவின் காரியாளர்களின் பெரும் மதிப்பைப் பெற்றிருந்தது.
ஆயினும்,
1970களில் தொழிலாளர்
புரட்சிக் கட்சியின் தேசியவாத சீரழிவு நிலைமைகளின் கீழ்,
அதன் தலைமைத்துவத்தில்
இருந்த ஜெரி ஹீலி,
மைக்கல் பண்டா மற்றும் கிளிஃப்
சுலோட்டரும் நா.அ.அ.கு.
பகுதிகளுக்கு இடையிலான
எந்தவொரு நெருக்கமான அரசியல் கூட்டுழைப்பையும் தடுத்தனர்.
அவர்கள் நிரந்தரப்
புரட்சிக் கோட்பாட்டில் இருந்து பின்வாங்கியதற்கும் மத்திய கிழக்கில்
தேசிய முதலாளித்துவ அரசாங்கங்களுக்கும் தொழிற்கட்சி
அதிகாரத்துவங்களுக்கும் அவர்கள் அடிபணிந்ததற்கும் எதிராக எவரும் சவால்
செய்வதையிட்டு அவர்கள் அஞ்சினர்.
தாம் எதிர்கொண்ட
அரசியல் பிரச்சினைகள் தொடர்பான குறிப்புகளை ஒப்பிட்டுப் பார்ப்பதையும்
மற்றும் வேலைத்திட்ட விடயங்கள் சம்பந்தமான எந்தவொரு கலந்துரையாடலில்
இருந்தும் அனைத்துலுகக் குழு பகுதிகளின் முன்னணி உறுப்பினர்களை தள்ளி வைக்க
தொ.பு.க.
சூழ்ச்சி செய்தது.
1985
பிளவை அடுத்து அனைத்துலகக்
குழுவை ஒரு உண்மையான அனைத்துலகக் கட்சியாக மறு ஒழுங்கு செய்த பின்னர் வந்த
இரண்டு ஆண்டுகளும் கீர்த்தியின் மகிழ்ச்சியான நாட்களாகும்.
அவர் அனைத்துலக சோசலிச
இயக்கத்துக்குள் பெறுமதியான அரசியல் பங்களிப்புகளை செய்வதற்காக தனது முழு
சக்தியையும் செலவிட்டதன் காரணமாக,
அந்த காலகட்டம் அவரது
அரசியல் வாழ்வில் மிகவும் பலனளிக்கவல்ல காலகட்டமாகவும் இருந்தது.
அனைத்துலகக் குழுவின்
கோட்பாட்டு சஞ்சிகையான நான்காம் அகிலத்தின்
(Fourth International) 12
முதல்
15வது இதழ்கள் வரை
பக்கங்களை விரித்துப் பார்த்தால்,
கீர்த்தியால்
எழுதப்பட்ட பல கட்டுரைகளை நாம் காண முடியும்.
அவரது சர்வதேச சக-சிந்தனையாளர்களுடன்
ஒத்துழைத்து அனைத்துலகக் குழுவின் அறிக்கைகளை அபிவிருத்தி செய்வதற்காக அவர்
செய்த பங்களிப்புகளே அவை.
தோழர் டேவிட் நோர்த்,
நாம் காக்கும் மரபியம்
(The Heritage We Defend)
என்ற தனது நூலில் இவ்வாறு
புகழுரை வழங்குகிறார்: "சந்தர்ப்பவாதத்தின்
அஞ்சா எதிரியான தோழர் பாலசூரிய தொழிலாளர் புரட்சிக் கட்சியின்
தாக்குதல்களுக்கு எதிராக அனைத்துலகக் குழுவை பாதுகாப்பதற்கான
போராட்டத்தில் தீர்க்கமான பாத்திரத்தை வகித்தார்.
அவர் இந்தப்
போராட்டத்துக்கு நான்காம் அகிலத்தின் வரலாறு பற்றிய பரந்த மற்றும்
ஊடுருவிச் செல்லும் அறிவையும் பப்லோவின் திருத்தல்வாதத்துக்கு எதிராக
தசாப்த காலமாக நீடித்த போராட்டத்தின் உட்பொருள்கள் பற்றி கூரிய
தெளிவையும் கொண்டிருந்தார்."
ல.ச.ச.க.
காட்டிக்கொடுப்பு
தனது வாழ்வின் கடைசி
இரண்டு ஆண்டுகள் பூராவும் கீர்த்தியின் பங்களிப்பின் முக்கியத்துவத்தைப்
பற்றி நாம் பேசும்போது,
பு.க.க.
ஸ்தாபிக்கப்பட்டதில்
இருந்தே அதன் பொதுச் செயலாளர் என்ற வகையில்,
1985க்கு முன்னதாக அவர்
செய்த அரசியல் பங்களிப்புகளை எந்தவகையிலும் நாம் குறைத்து மதிப்பிடக்
கூடாது.
தோழர் கீர்த்தி தனது
மிகவும் இளமையான 17வது
வயதில் அரசியல் நடவடிக்கையை ஆரம்பித்தார்.
அப்போதும் அவர் உயர்தர
பரீட்சைக்காக படித்துக்கொண்டிருந்தார்.
அந்தக் காலத்தில்
இலங்கையிலும் அதே போல் இந்தியத் துணைக்கண்டம் பூராவும் மிகவும்
கொந்தளிப்பான அரசியல் சூழ்நிலை நிலவியது.
தம்மை
ட்ரொட்ஸ்கிஸ்டுகள் என அழைத்துக்கொண்ட போதிலும்
1964ல் ஸ்ரீமாவோ
பண்டாரநாயக்கவின் முதலாளித்துவ அரசாங்கத்தில் இணைந்து கொண்ட லங்கா
சமசமாஜக் கட்சியின் (ல.ச.ச.க.)
மாபெரும்
காட்டிக்கொடுப்பு மீதான பகைமை மற்றும் ஆத்திரத்தின் வெளிப்பாடாக
மாணவர்களும் இளைஞர்களும் அரசியலில் தீவிரமடைந்திருந்தனர்.
பண்டாரநாயக்கவின் கீழ்,
வேலையின்மை
அதிகரித்திருந்ததோடு கல்விக்கான செலவு வெட்டிக் குறைக்கப்பட்டிருந்தது.
அவரது கூட்டரசாங்கம்
வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சியை
1965ல் மீண்டும்
ஆட்சிக்கு கொண்டுவர கதவுகளைத் திறந்துவிட்டிருந்தது.
அந்த ஆண்டு டிசம்பர்
மாதம் நாடு பூராவும் உள்ள ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் மாணவர்
போராட்டங்கள் வெடித்திருந்ததோடு கண்டி பேராதனைப் பல்கலைக்கழகத்தில்
மாணர்களை கொடூரமாக அடக்குவதற்காக அரசாங்கம் பொலிசாரை
கட்டவிழ்த்துவிட்டிருந்தது.
அதே காலகட்டத்தில்,
பல குட்டி முதலாளித்துவ
அரசியல் குழுக்களும் வேலையற்ற இளைஞர்கள் மத்தியில் ஸ்தாபிக்கப்பட்டிருந்தன.
அவை பெரதிக சுலங்
(கிழக்கின் காற்று),
கினி புபுர
(தீப்பொறி)
போன்ற பல்வேறுபட்ட
பெயர்களில் இருந்தன.
பின்னர் மக்கள் விடுதலை
முன்னணி (ஜே.வி.பி.)
என்ற பெயரில்
தலைநீட்டிய அமைப்பும் அவற்றில் ஒன்றாகும்.
கீர்த்தி பாலசூரிய,
(புரட்சிகர)
ல.ச.ச.க.
யிலும் அதைச் சூழும்
இருந்த பட்டதாரிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட சக்தி
குழுவில் 1966ல்
சேர்ந்து பணியாற்ற ஆரம்பித்தார்.
ல.ச.ச.க.
பண்டாரநாயக்க
அரசாங்கத்தில் நுழைந்து கொண்டதிற்கு எதிராக அதில் இருந்து பிரிந்த சென்ற
அமைப்பே புரட்சிகர ல.ச.ச.க.
ஆகும்.
எவ்வாறெனினும்,
எட்மன் சமரக்கொடி
மற்றும் பாலதம்புவின் தலைமையின் கீழ் இருந்த அதன் அரசியல் பாதை,
தொழிற்சங்கவாதம்
மற்றும் பாராளுமன்றவாதத்தின் கலவையாக இருந்தது.
அது முதலாளித்துவ
கூட்டணியில் சேரும் ல.ச.ச.க.
தலைமையிலான கொள்கையில்
இருந்து அடிப்படையில் வேறுபட்டதல்ல.
வெளிப்படையான
அதிருப்தியால் பல இளைஞர்கள் புரட்சிகர ல.ச.ச.க.
யில் இருந்து
வெளியேறினர்.
சக்தி குழுவில் இணைந்திருந்த
நாங்களும் மற்றும் கீர்த்தியும்
1964
காட்டிக்கொடுப்புக்கும் புரட்சிகர ல.ச.ச.க.
யின் மந்தநிலைக்கும்
வழிசமைத்த பாதையை கண்டுபிடிப்பதில் அக்கறை செலுத்தினோம்.
சக்தி குழுவின் அரசியல்
பண்புரீதியில் மத்தியவாதமாக இருந்ததோடு கூட்டணிவாதத்தை நோக்கி திரும்பிச்
செல்லும் ஆபத்தையும் கொண்டிருந்தது.
ஊடுருவும் வேலையை
முன்னெடுத்தல் என்ற சாக்குப் போக்கில்,
ல.ச.ச.க.
பக்கம் மீண்டும்
திரும்புவதற்காக வி.
காராளசிங்கம் மற்றும் ஏனைய
சிலராலும் இது சுரண்டிக்கொள்ளப்பட்டது.
கீர்த்தி உட்பட்ட
எங்களுடைய குழு,
இந்த போலி நகர்வை
எதிர்த்ததோடு காராளசிங்கத்திடம் இருந்து பிரிந்து சென்றது.
ல.ச.ச.க.
க்கு திரும்பிச்
சென்றவர்கள் தமது ஊடுருவல் வேலையை நிறுத்திவிடாமல் அதன் அதிகாரத்துவத்தில்
வசதியாக அமர்ந்துகொண்டதுடன்,
1970-75ன் இரண்டாது
கூட்டணி அரசாங்க காலத்தின் போது மிகவும் வெறுக்கத்தக்க பாத்திரத்தை இட்டு
நிரப்பினர்.
சக்தி குழுவில் நிலவிய
இந்த நெருக்கடியின் மத்தியிலேயே நான்காம் அகிலத்தின் பிரித்தானிய பகுதியான
சோசலிச தொழிலாளர் கழகமானது 1966ல்
இன்னுமொரு தலையீட்டை மேற்கொள்ள முடிவெடுத்தது.
1964ல் ல.ச.ச.க.
பண்டாரநாயக்க
அரசாங்கத்துடன் இணைவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு ஒத்திகை
பிரதிநிதிகள் மாநாட்டை நடத்திய போது,
ஜெரி ஹீலி இலங்கைக்கு
வருகை தந்தார்.
ல.ச.ச.க.
காட்டிக்கொடுப்பை
எதிர்ப்பதற்காக ஹீலி செய்த தலையீடானது உற்சாகமானதாகவும் கொள்கை
ரீதியானதாகவும் இருந்ததோடு குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் சாதகமான
பிரதிபலிப்பையும் அவர் வென்றார்.
அந்த இளைஞர்கள் பின்னர்
சக்தி குழுவில் இணைந்துகொண்டனர்.
1966ல்
டோனி பண்டா அனைத்துலகக் குழுவின் பிரதிநிதியாக இலங்கைக்கு வந்தார்.
அவர் அனைத்துலகக்
குழுவின் ஆதரவாளர்கள் என தம்மை அழைத்துக்கொண்ட புரட்சிகர ல.ச.ச.க.
தலைமைத்துவத்தின் பல
உறுப்பினர்களை சந்தித்தார்.
ஆயினும்,
அந்த பழைய பரம்பரையில்
ஒரே ஒருவர் மட்டுமே அனைத்துலகக் குழுவின் பகுதியொன்றை கட்டியெழுப்புவதற்கு
அர்ப்பணிப்பதற்கான தனது தயார் நிலையை வெளிப்படுத்தினார்.
அது ஸ்பைக்
என்றழைக்கப்பட்ட வில்பிரட் பெரேரா.
சக்தி குழுவைப் பற்றி
பெரேரா மூலம் பண்டா தெரிந்துகொண்ட போது,
அவர் ல.ச.ச.க.
யினுள் மீண்டும்
நுழைவதை எதிர்த்த உறுப்பினர்களை தொடர்புகொள்ள உடனடியாக முடிவெடுத்தார்.
கொழும்பில் இருந்து
70 மைல் தூரத்தில் உள்ள
பத்தேகமவில் என்னைப் பார்ப்பதற்காக பண்டா வந்ததை நான் இப்பொழுதும்
நினைத்துப் பார்க்கிறேன்.
அவர் தன்னுடன் சிறிய பேபி
ஒஸ்டின் காரில் ஆறுபேரை அழைத்து வந்திருந்தார்.
அவர்களில் கீர்த்தி
உட்பட தோழர்களான நந்த விக்கிரமசிங்க மற்றும் ஆனந்த வக்கும்புரவும்
இருந்தனர்.
அவர்கள் இன்றும் இங்கு
இருக்கின்றனர்.
பண்டா ஸ்பைக்குடன்
தொடர்புகொண்டு எங்கள் அனைவரையும் கொண்டு வந்திருந்தார்.
நான்காம் அகிலத்தின்
ஒரு பகுதியாக இருந்த இலங்கையில் முன்னோடி ட்ரொட்ஸ்கிச இயக்கமாக
1940களில் விளங்கிய
போல்ஷிவிக்-லெனினிஸ்ட்
கட்சியின் இன்றியமையாத அரசியல் அனுபவங்கள் ஸ்பைக்குக்கு இருந்தன.
அவர் எங்கள்
அனைவருக்கும் ஒரு அகத்தூண்டுதலாக விளங்கினார்.
நாங்கள் எங்களை விரோதய
என்ற பெயரில் குழுவாக அமைத்துக்கொண்டதோடு,
பண்டா கொண்டு வந்த,
குறிப்பாக
1962-63ல் பப்லோவாத
அனைத்துலக செயலகத்துடன் அமெரிக்காவின் சோசலிச தொழிலாளர் கட்சி
(சோ.தொ.க.)
மீண்டும்
ஐக்கியப்பட்டதற்கு எதிரான போராட்டம் தொடர்பான அரசியல் ஆவணங்களை நாம்
கற்கத் தொடங்கினோம்.
அந்த ஆவணங்கள்,
பப்லோவாத இயக்கத்தால்
எவ்வாறு 1964ல்
ல.ச.ச.க.
யின்
காட்டிக்கொடுப்பிற்கான அடித்தள வேலைகள் தயார் செய்யப்பட்டன மற்றும்
பப்லோவாதத்தில் இருந்து பிரிய மறுத்த புரட்சிகர ல.ச.ச.க.
தொழிலாளர்
வர்க்கத்திற்கு ஒரு புரட்சிகர முன்நோக்கை அபிவிருத்தி செய்யத் தவறியது ஏன்
என்ற குழப்பமான கேள்விகளை தெளிவுபடுத்திக்கொள்வதற்கு எங்களுக்கு உதவின.
பப்லோவாத
திருத்தல்வாதிகளுடனான அதன் நேரடி அனுபவத்தைக் கொண்டு விரோதய குழுவை
பண்டாவும் வழிநடத்தினார்.
அந்த சமயத்தில்,
பப்லோவாத அமைப்பின்
தலைவரான ஏர்னஸ்ட் மன்டேல் இலங்கைக்கு வந்ததோடு,
பேராதனைப்
பல்கலைக்கழகத்திலும் கொழும்பிலும் அவர் பேசிய பொதுக் கூட்டங்களில்
விரோதய குழு அவரை அரசியல் ரீதியில் சவால் செய்தது.
புரட்சிக் கம்யூனிஸ்ட்
கழகத்தின் ஸ்தாபிதம்
புரட்சிக் கம்யூனிஸ்ட்
கழகம் 1968ல்
ஸ்தாபிக்கப்படுவதற்கு முந்தைய காலப்பகுதியில்,
1953ல் சோசலிச
தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜேம்ஸ்.
பி.
கனன் எழுதி
விநியோகித்த பகிரங்கக் கடிதத்தின் பின்னர் அனைத்துலகக் குழு
ஸ்தாபிக்கப்பட்டதில் இருந்தே அதன் வரலாற்றுச் சாதனைகள் பற்றி மும்முரமாகக்
கற்றுக்கொள்வதில் விரோதய குழு ஈடுபட்டிருந்தது.
பகிரங்கக் கடிதமானது
நான்காம் அகிலத்துக்கும் பப்லோவின் திருத்தல்வாதத்துக்கும் இடையிலான
இன்றியமையாத கோட்பாட்டு மற்றும் அரசியல் வேறுபாடுகள் அனைத்தையும்
தெளிவுபடுத்தியது.
அந்த பெறுமதியான ஆவணத்தின்
அடிப்படையில் அனைத்துலகக் குழுவுடன் இணைவதற்கு ல.ச.ச.க.
மறுத்தமை,
ல.ச.ச.க.
யின் தேசியவாத
தகவமைவையும் அது 1950களின்
முற்பகுதியில் இருந்தே நான்காம் அகிலத்தின் வேலைத்திட்டத்தில் இருந்து தூர
விலகத் தொடங்கியிருந்ததையும் தெளிவுபடுத்தியது.
ல.ச.ச.க.
யைப் போல்,
சோசலிச தொழிலாளர்
கட்சியும் காஸ்ட்ரோவின் கியூபாவை தொழிலாளர் அரசு என
பண்புமயப்படுத்தியதில் வெளிப்படுத்தப்பட்டது என்னவெனில்,
அது வரலாற்று ரீதியில்
பின்தங்கிய நாடுகளில் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்கள் தொடர்பாக
தீவிரவாத குட்டி-முதலாளித்துவ
ஆதிக்கத்திற்கு அடிபணிவதையேயாகும்.
இந்த வரலாற்றைக்
கற்றுக்கொண்டமை தோழர் ஸ்பைக் மற்றும் இந்தக் குழுவில் இருந்த இளைஞர்களால்
புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (பு.க.க.)
ஸ்தாபிக்கப்படுவதற்கு
இன்றியமையாத அரசியல் அத்திவாரமாகியது.
ஆகவே தான்,
மார்க்சிச இயக்கத்தின்
வேலைத்திட்டத்தை பாதுகாப்பதற்கான போராட்டத்தின் படிப்பினைகளை
கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் என இன்று நாம் இளைஞர்களுக்கு எப்போதும்
வலியுறுத்துகிறோம்.
இதன் மூலம் மட்டுமே,
தற்போதைய ஏகாதிபத்திய
உலக அமைப்பை தூக்கி வீசி,
சோசலிச உலகம் ஒன்றை
ஸ்தாபிப்பதற்கான போராட்டத்தில் தொழிலாளர் வர்க்க புரட்சியாளர்களாக தமது
இடத்தை வகிக்க இளைஞர்கள் அரசியல் ரீதியில் ஆயுதபாணிகளாக முடியும்.
புரட்சிக் கம்யூனிஸ்ட்
கழகத்தின் ஸ்தாபக மாநாட்டிலேயே அதன் பொதுச் செயலாளராக தோழர் கீர்த்தி
பாலசூரிய ஒருதலைப்பட்சமாக தேர்வு செய்யப்பட்டார்.
அவருக்கு அப்போது
20 வயது கூட
ஆகியிருக்கவில்லை.
ஆயினும் புரட்சிக் கம்யூனிஸ்ட்
கழகத்தை ஸ்தாபிப்பதற்கான போராட்டத்தின் போது,
அரசியல் ரீதியிலும்
கோட்பாட்டு ரீதியிலும் பொருத்தமானவராகவும்,
இலங்கையில் மட்டுமன்றி
இந்தியத் துணைக் கண்டத்திலும்,
பொறுப்புடன்,
அனைத்துலகக் குழுவின்
ஒரு பகுதியின் தலைவர் என்ற முறையில் எதிர்கொண்ட பிரமாண்டமான பணிகளை இட்டு
நிரப்புவதற்கு தயாரானவராகவும் அவர் காணப்பட்டார்.
கீர்த்தி தெரிவு
செய்யப்பட்டமை தற்செயலானது அல்ல.
ஆரம்பத்தில் இருந்தே,
அவர் எங்கள் அனைவரையும்
விஞ்சிய அரசியல் மற்றும் கோட்பாட்டு விவகாரங்களில் தீவிரமாக முன்னீடுபாடு
கொண்டிருந்தார்.
நாங்கள் அவரோடு அமர்ந்திருந்த
போது,
கூடவே நடந்து சென்ற போது
அல்லது தேனீர் அருந்துவதற்காக கடைக்கு சென்றிருக்கும் போது,
அவர் எப்போதும் ஒரு
அரசியல் கலந்துரையாடலை தொடக்கிவைப்பார்.
கலையை மார்க்சிய
திறனாய்வின் ஊடாக அணுகும் ஒரு திகைப்பூட்டும் ஆர்வம் உட்பட,
அவருக்கிருந்த ஆர்வம்
மிகப் பரந்தது.
பு.க.க.வின்
பொதுச் செயலாளராக இருந்த இரண்டு தசாப்தங்களில்,
ஸ்தாபக மாநாட்டில் அவரை
தேர்வு செய்ய எடுத்த முடிவு மிகச் சரியானது என்பதை அவர் மீண்டும் மீண்டும்
ஒப்புவித்தார்.
கீர்த்தி எழுதிய ஜே.வி.பி.
யின் அரசியலும் அதன்
வர்க்கத் தன்மையும் என்ற நூலில் தனது பிரதான கோட்பாட்டு பங்களிப்பை
செய்துள்ளார்.
அது வெறுமனே ஜே.வி.பி.க்கு
எதிராக எழுதப்பட்ட புத்தகம் அல்ல.
ஆழமான அறிவுநுட்பத்தில்,
அந்த நூலின் ஊடாக பு.க.க.
காரியாளர்கள்
படிப்பினைகளைப் பெற்றுக்கொள்வார்கள் என்றும் அது தீவிரவாத குட்டி-முதலாளித்துவ
இயக்கங்களில் இருந்து புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை வேறுபடுத்திக்
காட்டும் என்றும் கீர்த்தி கருதினார்.
பப்லோவாத புரட்சிகர ல.ச.ச.க.
அந்த சமயத்தில் ஜே.வி.பி.
யுடன் கூட்டாக பொதுக்
கூட்டங்களை நடத்தி,
அந்த குட்டி-முதலாளித்துவ
கட்சிக்கு சோசலிச முலாம்களைப் பூசிக்கொள்வதற்கு உதவிக்கொண்டிருந்தது
என்ற உண்மையின் மூலம் அந்த நூலின் முக்கியத்துவம்
கோடிட்டுக்காட்டப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் போராட்டம்
ஒரு தீவின் தேசிய அரசு
எல்லைக்கு அப்பால் அதன் சர்வதேச பணிகளை பு.க.க.
மேலும் தெளிவாக
புரிந்துகொள்வதற்கும்,
சோசலிசத்திற்கான
போராட்டத்தில் இந்தியத் துணைக்கண்டத்தின் ஊடாக உழைக்கும் மக்களை
ஐக்கியப்படுத்தும் முன்நோக்கை அபிவிருத்தி செய்வதற்குமான அடித்தளத்தை ஜே.வி.பி.
யின் அரசியல் பற்றிய
கீர்த்தியின் திறனாய்வு உருவாக்கியது.
இது
1971ல் வெடித்த
பங்களாதேஷ் விடுதலை இயக்கத்தில் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டது.
பங்களாதேஷ் போராட்டமானது
இந்து மற்றும் முஸ்லிம் முதலாளித்துவவாதிகளின் உடந்தையுடன் பிரித்தானிய
ஏகாதிபத்தியவாதிகளால் 1947ல்
துணைக்கண்டத்தின் மீது திணிக்கப்பட்ட செயற்கையான அரச அமைப்பை பாரபட்சமின்றி
சவால் செய்கின்றது என்பதை பு.க.க.
சரியாக
புரிந்துகொண்டிருந்தது.
இந்தியாவைப் பிரிப்பது,
இரண்டாம் உலக
யுத்தத்தின் போதும் மற்றும் உடனடியாக அதன் பின்னரும் மேம்படுத்தப்பட்ட
காலனித்துவத்தில் இருந்து வெகுஜனங்களை விடுவிப்பதற்கான உண்மையான
போராட்டத்தை சிதைப்பதையும்,
பிளவுபடுத்துவதையும்
அழிப்பதையும் இலக்காகக் கொண்டதாகும்.
எமது முன்நோக்காக
இருந்தது,
நிரந்தரப் புரட்சிக்
கோட்பாட்டின் அடிப்படையில் பாகிஸ்தான் மற்றும் இந்திய ஆட்சியாளர்களை
எதிர்ப்பதும்,
இட்டுநிரப்பப்படாத ஜனநாயகப்
பணிகளை தீர்த்து வைக்க,
சோசலிச வேலைத்திட்டமொன்றை
அமுல்படுத்தக் கூடிய மீண்டும் ஐக்கியப்படுத்தப்பட்ட துணைக் கண்டத்தில் ஒரு
தொழிலாளர்-விவசாயிகள்
அரசாங்கத்துக்காகப் போராடுவதேயாகும்.
1947
பிரிவின் செயற்கைப் பண்பு
வெளிப்படையானது.
அப்போது கிழக்குப் பாகிஸ்தான்
என்றழைக்கப்பட்ட பங்களாதேஷ்,
துணைக்கண்டத்தின்
மேற்கில் அமைந்திருந்த பாகிஸ்தான் அதிகாரத்தில் இருந்து ஆயிரக்கணக்கான
மைல்களால் பிரிக்கப்பட்டிருந்தது.
இஸ்லாமாபாத்தை தளமாகக்
கொண்ட யஹியா கானின் இராணுவ ஆட்சியில் இருந்து பிரிந்து செல்வதற்கு
1971ல் பங்களாதேஷ்
மக்கள் எழுச்சி பெற்றனர்.
அது இந்திய அரசாங்கத்துக்கும்
ஒரு அவஸ்தையான அரசியல் நெருக்கடியை கொடுத்தது.
பிரிவுக்கு முன்னதாக
கிழக்கு வங்காளத்தில் நடந்துவந்த பாகிஸ்தான் இராணுவ படையெடுப்பு,
இலட்சக்கணக்கான அகதிகளை
கூட்டங் கூட்டமாக இந்தியாவின் மேற்கு வங்காளத்தினுள் அனுப்பியது.
மிகவும் அடிப்படையில்,
இந்தப் போராட்டம்
வங்காளிகளை ஐக்கிப்படுத்தி, 1947
இனவாதப் பிளவை
கீழறுத்து விடுவதால்,
இந்திய அரசுக்கு அச்சுறுத்தல்
ஏற்படுத்தக்கூடும் என இந்திய ஆளும் வர்க்கம் பீதியடைந்தது.
சீனாவில் மாவோவாத
அதிகாரத்துவம் பாகிஸ்தானின் இராணுவ அரசாங்கத்திற்கு ஆதரவளித்த போதிலும்,
இந்தியாவில் இந்திரா
காந்தி அரசாங்கத்தை எதிர்த்த மாவோவாத கொரில்லாக்கள் எல்லையைக் கடந்து
பங்களாதேஷ் போராளிகளுடன் இணைந்து கொண்டனர் என்ற உண்மையில் இருந்து இந்த
ஆபத்து கோடிட்டுக்காட்டப்பட்டது.
கீர்த்தி,
பு.க.க.
அரசியல் குழுவில்
கலந்துரையாடிய பின்னர்,
பங்களாதேஷ் நெருக்கடி
தொடர்பாகவும் 1971
டிசம்பரில் பங்களாதேஷினுள்
இந்திய இராணுவம் தலையிட்டது தொடர்பாகவும் அறிக்கை ஒன்றை வரைந்தார்.
முதலில் அந்த அறிக்கை,
நிகழ்வுகளை அதன்
சர்வதேச சூழ்நிலையில் நிறுத்தியது:
"துணைக்கண்டத்தில்
ஏகாதிபத்தியத்தால் ஸ்தாபிக்கப்பட்ட அரசியல் வரைவுத்திட்டம் தகர்ந்து
போயுள்ளமை,
கடந்த காலம் பூராவும் உலக
முதலாளித்துவத்தால் அனுபவிக்கப்பட்ட நீண்ட செல்வச் செழிப்புக் காலகட்டம்
முடிவுக்கு வந்துள்ளதோடு நேரடியாகவும் உள்ளார்ந்த வகையிலும்
தொடர்புபட்டுள்ளதோடு,
முன்னெப்போதும் இல்லாத அளவில்
பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி வளர்ச்சியடைவதானது பூகோள மட்டத்தில்
புரட்சிகர போராட்ட காலகட்டத்தை திறந்து விடுகின்றது.
பங்களாதேஷ் விடுதலைப்
போராட்டமும் இந்திய-பாகிஸ்தான்
யுத்தமும் இந்த வர்க்கப் போராட்டத்தின் புதிய மட்டத்தின் உற்பத்தியேயாகும்."
பு.க.க.
பின்னர் உறுதியாகத்
தெரிவித்ததாவது: "இந்திய
அரசாங்கத்தின் தலையீடு முற்றிலும் எதிர்ப் புரட்சிகரமான ஒன்றாகும்.
பங்களாதேஷ்
போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக மோசடியாகக் கூறிக்கொண்டு,
இந்தியா ஐக்கியப்பட்ட
புரட்சிகர வங்காளமொன்று வளர்ச்சியடைவதை நசுக்குவதற்காகவும் கிழக்கு
எல்லைக்கு உட்படுத்தப்பட்ட வளர்ச்சியுறும் ஆற்றல் அழிக்கப்பட்ட
பங்களாதேஷில் பொம்மை அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காக தலையிட்டுள்ளது."
"தேசியப்
பிரச்சினைகளைத் தீர்க்கும் அதே வேளை,
வெகுஜனங்களுக்கு
முன்னேற வழிகாட்டும் ஒரு சோசலிச குடியரசை அமைப்பதற்காகப் போராடுவது
நான்காம் அகிலத்தின் வேலைத்திட்டம் மட்டுமே,"
என அந்த அறிக்கை
வலியுறுத்தியது.
இறுதியாக அந்த அறிக்கை
பின்வருமாறு அழைப்புவிடுத்தது: "அடிப்படை
வேலைத்திட்டமான நான்காம் அகிலத்தின் இடைமருவு வேலைத்திட்டத்தின்
அடிப்படையில் ஐக்கியப்படுமாறு,
அனைத்து பாட்டாளி
வர்க்க போராளிகள்,
மாணவர்கள்,
இளைஞர்கள் மற்றும்
விவசாயப் போராளிகளுக்கும் இலங்கை ட்ரொட்ஸ்கிஸ்டுகள் அழைப்பு
விடுக்கின்றனர். 1953ல்
ஸ்தாபிக்கப்பட்ட,
இலங்கையிலும் ஏற்கனவே
அமைக்கப்பட்டுள்ள அனைத்துலகக் குழுவால் முன்னெடுக்கப்படும்
திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டத்தின் ஊடாக,
நான்காம் அகிலத்தில்
ட்ரொட்ஸ்கிசம் மறுபிறப்பெடுத்திருப்பது வெளிப்பாடாகியுள்ளது.
இது இப்போது இந்தியா
மற்றும் பாகிஸ்தான் பெருநிலப்பரப்புக்கு அவசரமாகவும் அவசியமாகவும்
விரிவுபடுத்தவேண்டிய அவசியமாகியுள்ளது.''
எவ்வாறெனினும்,
பு.க.க.
அறிக்கை
பிரசுரிக்கப்படுவதற்கு முன்னதாக,
வேர்க்கர்ஸ் பிரஸ்
பத்திரிகையின் ஒரு பிரதி எங்களுக்குக் கிடைத்தது.
அது ஹீலி,
பண்டா மற்றும்
சுலோட்டரின் தலைமையிலான பிரிட்டிஷ் சோசலிச தொழிலாளர் கழகத்தின் நாளாந்த
வெளியீடாகும்.
அதில் அறிக்கை ஒன்று
உள்ளடங்கியிருந்தது.
பங்களாதேஷில் இந்திரா
காந்தியின் இராணுவத் தலையீட்டை ஆதரித்த அந்த அறிக்கை,
அனைத்துலகக் குழுவின்
பெயரில் பிரசுரிக்கப்பட்டிருந்த போதிலும்,
அதன் பகுதிகள்
எதனுடனும் தொடர்புகொண்டிருக்கவில்லை.
இது பு.க.க.
அபிவிருத்தி செய்த
புரட்சிகர கொள்கைக்கு 180
பாகை எதிரானதாகும்.
கீர்த்தி,
அனைத்துலகக் குழுவின்
செயலாளர் கிளிப்ஃ சுலோட்டருக்கு உடனடியாக அனுப்பிய கடிதத்தில் வார்த்தைகளை
விழுங்கவில்லை. "இது
விமர்சன ரீதியாகவோ அல்லது வேறு வகையிலோ இந்திரா காந்தியின்
அரசாங்கத்திற்கும் மற்றும் அதன் கொள்கைகளுக்கும் ஆதரவு கொடுக்கும் பெரும்
விளைவுகளைக் கொண்ட ஒரு அரசியல் தவறாக இருக்கும்.
ஒடுக்குபவர்களிடம்
இருந்து தம்மை விடுவித்துக்கொள்ளும் வங்காளிகளின் போராட்டத்தில்
அவர்களுக்கு நாம் வழங்கும் ஆதரவு,
பாகிஸ்தானுக்கு
எதிரானதாக மட்டும் இருக்கக் கூடாது.
அது இந்திய ஆளும்
வர்க்கத்துக்கும் எதிரானதாக இருக்கவேண்டும்,"
என அந்தக் கடிதம்
குறிப்பிட்டிருந்தது. "இந்தியா-பாகிஸ்தான்
யுத்தத்தை எதிர்க்காமல் வங்காள மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு
ஆதரவளிப்பதும் சோசலிச அடிப்படையில் சுயாதீனமாக அணிதிரட்டுவதும்
சாத்தியமானதல்ல,"
என அந்தக் கடிதம் ஐயமின்றி
தெரிவித்தது.
அனைத்துலகக் குழுவின்
ஒழுக்கத்தை ஏற்றுக்கொண்ட கீர்த்தி எச்சரித்ததாவது:
"அனைத்துலகக் குழுவின்
அறிக்கையை நாம் பாதுகாப்பது தொழிலாளர் வர்க்கத்தின் மத்தியில் மிகப்பெரிய
குழப்பத்தை உருவாக்கும் என நாம் நம்புகிறோம்.
அனைத்துலகக் குழுவின்
அறிக்கையை பாதுகாப்பது சிரமமானது என்பதை சொல்லவேண்டிய அவசியமில்லை.
எவ்வாறெனினும்,
அனைத்துலகக்
குழுவுக்கிடையிலான தெளிவு அனைத்தையும் விட முக்கியமானதாகும்.
அனைத்துலகக் குழுவைக்
கட்டியெழுப்ப போராடாமல் தேசியப் பகுதி ஒன்றைக் கட்டியெழுப்புவது
எங்களுக்கு சாத்தியமற்றதாகும்."
இந்த நிலைப்பாட்டை எடுத்த
பு.க.க.,
அடிப்படையான
அனைத்துலகவாத நோக்கில் முழுமையாக காலூன்றிக்கொண்டிருந்தது.
சோசலிசப் புரட்சிக்கான
உலகக் கட்சியொன்றைக் கட்டியெழுப்புவதற்கான போராட்டமானது ஒவ்வொரு
சோசலிஸ்ட்டுக்கும் முதன்மையான பணியாகும்.
அனைத்துலக சக-சிந்தனையாளர்களின்
கலந்துரையாடல்கள் மற்றும் ஒத்துழைப்பின் ஊடாக மட்டுமே உலக சோசலிச
புரட்சிக்கான முன்நோக்கையும் மூலோபாயத்தையும் அபிவிருத்தி செய்ய முடியும்.
எங்களது இயக்கத்தின்
அடிப்படைக் கொள்கைகள் இவையே.
இவற்றை இன்று இங்குள்ள
அனைவரும் கிரகித்துக்கொள்ள வேண்டும்.
தொழிலாளர் புரட்சிக்
கட்சி நிரந்தரப் புரட்சியை கைவிட்டது
ஹீலி-பண்டா-சுலோட்டர்
தலைமையிலான சோசலிச தொழிலாளர் கழகம்-தொழிலாளர்
புரட்சிக் கட்சி,
பங்களாதேஷ் விடுதலைப்
போராட்டம் தொடர்பாக பு.க.க.
நிரந்தரப் புரட்சியை
பாதுகாத்தமையை பொறுத்துக்கொள்ளவே இல்லை.
சில மாதங்களுக்குள்,
தேசியப் பிரச்சினை
தொடர்பான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் நிலைப்பாட்டை மாற்றுவதற்கு
சோசலிச தொழிலாளர் கழகம் தலையிட்டது.
பு.க.க.
ஸ்தாபிக்கப்பட்டது
முதல் சுயநிர்ணய உரிமை பற்றிய மிகச் சிறந்த மார்க்சிய நிலைப்பாட்டின்
அடிப்படையில் அது இலங்கையின் தமிழ் சிறுபான்மையினரின் ஜனநாயக உரிமைகளை
பாதுகாத்து வந்துள்ளது.
1948ல்
இலங்கை அரசு ஸ்தாபிக்கப்பட்டதில் இருந்தே அது தமிழ் மக்களின் உரிமைகளை
திட்டமிட்டு நசுக்கிவந்துள்ளது.
தமிழ் பேசும் தோட்டத்
தொழிலாளர்களின் பிரஜா உரிமையை அபகரித்ததில் இந்த ஒடுக்குமுறை
தொடக்கிவைக்கப்பட்டதை அடுத்து சிங்களம் மட்டும் அரச மொழியாக
அங்கீகரிக்கப்பட்டது.
தமிழ் மக்கள் தனியரசு அமைப்பதை
பு.க.க.
பாதுகாத்தமை,
1940ல் இருந்து இந்திய
போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சியின்
(பி.எல்.பீ.ஐ.)
கொள்கையாக இருந்து
வந்ததோடு,
பி.எல்.பீ.ஐ.
1950ல் ல.ச.ச.க.
உடன் இணைக்கப்பட்ட
பின்னர் ல.ச.ச.க.
யும் அதை
உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டது.
1964ல்
பண்டாரநாயக்கவின் அரசாங்கத்தினுள் நுழைந்துகொண்டதன் பின்னரே ல.ச.ச.க.
அந்த நிலைப்பாட்டைக்
கைவிட்டது.
1971ல்
ஜே.வி.பி.
தலைமையிலான
கிளர்ச்சியின் போது,
ஜே.வி.பி.
உறுப்பினர்கள்
கொடுமையாக நசுக்கப்படுவதை பு.க.க.
கொள்கைரீதியில்
எதிர்த்ததால் அது அரசின் வேட்டைக்கு உள்ளாகியது.
அதன் சிங்கள
பத்திரிகையான கம்கரு புவத் மற்றும் தமிழ் பத்திரிகையான தொழிலாளர்
செய்தியும் தடைசெய்யப்பட்டன.
இந்தத் தடை
விலக்கப்படாத போதிலும்,
நிலைமை கட்டுப்பாட்டுக்குள்
வந்த உடனேயே பு.க.க.
அதன் சிங்கள மற்றும்
தமிழ் பத்திரிகைகளை வேறு பெயர்களில் பிரசுரிக்கத் தொடங்கியது.
அவை கம்கறு மாவத்த
மற்றும் தொழிலாளர் பாதை என்ற பெயர்களில் வெளியாகின.
1972
ஜூன்
24ம் திகதி வெளியான
அறிக்கையில்: "மார்க்சிஸ்டுகளாகிய
நாங்கள் தமிழ் இனத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கின்றோம்.
அதே சமயம்,
சோசலிச கொள்கைகளை
அடிப்படையாகக் கொண்ட தொழிலாளர்-விவசாயிகள்
அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதோடு அந்த உரிமையை அங்கீகரிப்பதற்காக சிங்கள
மற்றும் தமிழ் தொழிலாளர்களை அணிதிரட்டுவதன் மூலம் மட்டுமே அந்த உரிமையை
வெல்ல முடியும் என நாம் வலியுறுத்துகிறோம்,"
என பு.க.க.
பிரகடனம் செய்திருந்தது.
தொழிலாளர் மற்றும்
விவசாயிகள் அரசாங்கத்தின் கீழ்,
அதாவது ஒடுக்கப்பட்ட
வெகுஜனங்களின் ஆதரவிலான பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் கீழ்
சோசலிசத்திற்காக போராடுவதன் ஒரு பாகமாக மட்டுமே,
ஜனநாயகப் புரட்சியின்
காலங்கடந்த பணிகளை இட்டு நிரப்புவதும் மற்றும் ஒடுக்கப்பட்ட தேசிய
இனங்களுக்கு மறுக்கப்பட்ட ஜனநாயக உரிமைகளை அடைவதும் யதார்த்தமாக முடியும்
என்ற தெளிவான புரிந்துணர்வை பு.க.க.
வேலைத் திட்டம்
அடிப்படையாகக் கொண்டிருந்தது.
ட்ரொட்ஸ்கி அவரது
நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டில் விளக்கியுள்ளது போல்,
புரட்சிக் கம்யூனிஸ்ட்
கழகத்தின் வாதமானது,
நீண்ட கால முதலாளித்துவ
ஜனநாயகத்தின் மூலமே சோசலிசத்துக்கான பாதை தயார் செய்யப்பட வேண்டும் என்ற
மட்டுமீறிய விதிமுறைகளைப் பின்பற்றுபவர்களின் நோக்கிற்கு எதிரானதாக
இருந்தது.
மாறாக,
வரலாற்று ரீதியில்
பின்தங்கிய நாடுகளில் ஜனநாயகத்துக்கான பாதையானது தொழிலாளர் வர்க்க
சர்வாதிகாரத்தின் ஊடாக மட்டுமே அமைய முடியும் என பு.க.க.
வலியுறுத்தியது.
பிரித்தானிய சோசலிச
தொழிலாளர் கழகம்,
இந்த அடிப்படையான புரட்சிகர
கொள்கையை கைவிடுமாறு பு.க.க.
க்கு அழுத்தம் கொடுக்க
தலையிட்டது.
இந்த மாற்றத்தைக் கோருவதன்
பேரில் அனைத்துலகக் குழுவின் செயலாளர் என்ற அதிகாரத்தைப்
பயன்படுத்துவதற்காக 1972ல்
கிளிஃப் சுலோட்டர் இலங்கைக்கு அனுப்பப்பட்டார்.
1960 நடுப்பகுதியில்
இருந்து 1985
வரை கிட்டத்தட்ட இரு
தசாப்தங்கள் அனைத்துலகக் குழுவின் செயலாளராக இருந்த போதிலும் சுலோட்டரின்
முதலும் கடைசியுமான இலங்கை விஜயம் அதுவே.
ஹீலி-பண்டா-சுலோட்டரின்
தலைமைத்துவத்தின் கீழ் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை அரசியல் ரீதியில்
தடம்புரளச்செய்ய மேற்கொண்ட நடவடிக்கைகள் மிகப்பெரும் அரசியல் நெருக்கடியை
உருவாக்கிவிட்டிருந்தது. 1972
அளவில்,
புதிய பண்டாரநாயக்க
கூட்டரசாங்கத்திற்கு எதிராக,
தமிழர்களின் ஜனநாயக
உரிமைகளை காக்கும் போராட்டத்தில் பு.க.க.
முன்நிலையில் இருந்தது.
சிங்களம் மட்டும் அரச
மொழி கொள்கையுடன் பெளத்தத்தை அரச மதமாக அரியணையில் அமர்த்திய
1972 அரசியலமைப்புக்கு
எதிராக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் தீவிரமாக பிரச்சாரத்தை
முன்னெடுத்த ஒரு தொழிலாளர் வர்க்க கட்சியாக பு.க.க.
விளங்கியது.
சந்தர்ப்பவாத நவசமசமாஜக்
கட்சியின் (ந.ச.ச.க.)
தலைவரான விக்கிரமபாகு
கருணாரட்ன,
அப்போது ஐக்கிய தேசியக்
கட்சியின் (யூ.என்.பி.)
ஜனாதிபதி ஜே.
ஆர்.
ஜயவர்தனவின்
1978 அரசியலமைப்பிற்கு
எதிராக தானும் கறுப்புக் கொடி காட்டியதாக தொடர்ந்தும்
பிதற்றிக்கொள்கின்றார்.
ஆனால் ல.ச.ச.க.
உறுப்பினராக இருந்த
அவர், 1983ல்
இனவாத யுத்தம் வெடிப்பதற்கு களம் அமைப்பதில் தீர்க்கமான பாத்திரத்தை வகித்த
1972 அரசியலமைப்பை
முழுமையாக ஆதரித்தார்.
இதற்கு மாறாக பு.க.க.
தமிழர்களின் உரிமைகளைப்
பாதுகாத்தமை அது தொழிலாளர் வர்க்கத்தினுள் ஊடுருவுவதை இலகுவாக்கியது.
எடுத்துக்காட்டாக,
பு.க.க.
உறுப்பினர்களின்
செயலூக்கத்தில்,
அரசாங்க அச்சகத்தின் அச்சக
ஊழியர்கள் சங்கம் 1972
அரசியலமைப்புக்கு எதிராக
தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியதோடு கூட்டணி அரசாங்கத்திற்கு எதிராகவும் ஒரு
சோசலிச பதிலீட்டுக்காகவும் சிங்கள மற்றும் தமிழ் தொழிலாளர்களின்
ஒன்றுபட்ட போராட்டத்துக்கு அழைப்புவிடுத்தது.
இந்த அபிவிருத்திகள்
சோசலிச தொழிலாளர் கழகத்தின் தலையீட்டால் மிக மோசமாக இடையூறுக்குள்ளாகின.
இதில் பெரும்பகுதி
பொறுப்புச் சொல்லவேண்டியவர் பண்டாவாகும்.
ஸ்டாலினிசத்துடன்
கூட்டுச் சேர்ந்து ஏகாதிபத்தியத்தால் தெற்காசிய பிராந்தியம் பூராகவும்
திணிக்கப்பட்ட யுத்தத்திற்குப் பிந்திய அரச கட்டமைப்பின் விசுவாசமான
பாதுகாவலனாக பண்டா விளங்கினார்.
இந்த கசப்பான
அனுபவங்களில் வலிமைபெற்ற கீர்த்தி,
1985ல் ஆவனங்களை
வாசிக்கும் வாய்ப்பைப் பெற்ற உடனேயே தொழிலாளர் புரட்சிக் கட்சி
(தொ.பு.க.)
பற்றிய தோழர் டேவிட்
நோர்த்தின் விமர்சனத்துக்கு உடனடியாக ஆதரவளித்தார்.
தொ.பு.க.
1970களின்
நடுப்பகுதியில் இருந்தே எவ்வாறு பப்லோவாதத்துக்கு எதிரான அனைத்துலகக்
குழுவின் நீண்ட போராட்டத்தின் படிப்பினைகளைக் கைவிட்டு,
மத்திய கிழக்கிலும்
ஆபிரிக்காவிலும் முதலாளித்துவ இயக்கங்களுக்கும் அரசாங்கங்களுக்கும்,
அதே போல்
பிரித்தானியாவிலேயே தொழிற்சங்க மற்றும் தொழிற்கட்சி
அதிகாரத்துவத்திற்கும் அடிபணிந்தது என்பதை தோழர் நோர்த்
அம்பலப்படுத்தியிருந்தார்.
அந்த ஆவனங்கள் தொ.பு.க.
தலைமைத்துவத்தால்
மோசமாக அடக்கிவைக்கப்பட்டதுடன்,
அவை பங்களாதேஷ்
தொடர்பான சோசலிச தொழிலாளர் கழகத்தின் அறிக்கை மீதான பு.க.க.
விமர்சனத்தைப் போல்
அதே தலைவிதியை எதிர்கொண்டன.
தொ.பு.க.
ஓடுகாலிகளிடமிருந்து
1985-86ல் பிளவடைந்தமை,
அனைத்துலகக் குழுவின்
அரசியல் வேலைகளில் ஒரு புதிய அத்தியாத்தை திறந்துவிட்டது.
அது,
உலகம் பூராவும்
அனைத்துவிதமான தேசிய பொருளாதார ஒழுங்குகளை கீழறுத்த,
உற்பத்தியின்
பூகோளமயமாக்கத்தின் விளைவாக சர்வதேச ரீதியில் கிளறிவிடப்பட்ட வர்க்கப்
போராட்டத்தின் புதிய கட்டத்திற்கு அரசியல் ரீதியில் தயாராவதன் பேரில்
ட்ரொட்ஸ்கிச இயக்கத்தால் எடுக்கப்பட்ட தீர்க்கமான திருப்பமாகும்.
தெற்காசியா தொடர்பாக,
அனைத்துலகக் குழுவின்
அறிக்கை ஒன்றை வரைவதில் கீர்த்தி மிக நெருக்கமாக தன்னை
ஈடுபடுத்திக்கொண்டிருந்தார்.
அது அவர் அகால
மரணமடைவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர்தான்,
1987 நவம்பர்
19 அன்று,
"இலங்கையின் நிலைமையும்
புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் பணிகளும்"
என்ற தலைப்பில்
வெளியாகியிருந்தது.
தமது சட்டப்பூர்வமான ஜனநாயக
உரிமைகளுக்கான தமிழர்களின் போராட்டத்தை நசுக்குவதற்கு இந்திய இராணுவத்தைப்
பயன்படுத்தும் சூழ்ச்சித் திட்டமே ஏகாதிபத்தியத்தால் திட்டமிடப்பட்டு,
இந்தியப் பிரதமர்
ராஜீவ் காந்திக்கும் இலங்கை ஜனாதிபதி ஜயவர்தனவுக்கும் இடையில்
கைச்சாத்திடப்பட்ட இந்திய-இலங்கை
உடன்படிக்கை என்பதை கீர்த்தி அம்பலப்படுத்தியிருந்தார்.
அனைத்துலகக் குழுவின்
அறிக்கையானது "ஈழம்
மற்றும் ஸ்ரீலங்கா ஐக்கிய சோசலிச குடியரசுக்கான போராட்டத்தில் சிங்கள
மற்றும் தமிழ் தொழிலாளர்களின்"
ஐக்கியத்திற்கு அழைப்பு
விடுத்தது.
இந்த அறிக்கைக்குள்
வார்க்கப்பட்டிருந்தவை எல்லாம்,
தேசியவாத குட்டி-முதலாளித்துவ
ஜே.வி.பி.க்கு
எதிரான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் போராட்டத்திலும் மற்றும்
பங்களாதேஷ் விடுதலைப் போராட்டம் பற்றிய அவரது திறனாய்விலும் செய்த
கீர்த்தியின் கோட்பாட்டு வேலைகளே.
இத்தகைய இயக்கங்களின்
மாறும் இயல்புகள் பற்றி கீர்த்தி கூர்மையான நுன்னுணர்வுடன் இருந்தார்.
அந்த அறிக்கை சுயநிர்ணய
உரிமை என்ற மிகச் சிறந்த மார்க்சிய சூத்திரத்தை அபிவிருத்தி செய்திருந்த
போதிலும்,
சமகால உலகப் பொருளாதார
மற்றும் அரசியல் சூழ்நிலையினுள் அத்தகைய கோரிக்கைகளின் பொருத்தத்தைப்
பற்றிய ட்ரொட்ஸ்கிச இயக்கத்தினுள் ஒரு கலந்துரையாடலுக்கான களத்தையும் அது
அமைத்தது.
உற்பத்தியின்
பூகோளமயமாக்கமானது இப்போது தேசியத்தை அடிப்படையாகக் கொண்ட அனைத்து
வேலைத்திட்டங்களையும் பயனற்றதாக்கியுள்ளதோடு அத்தகைய தேசிய விடுதலைப்
போராட்டங்களின் பண்பையும் நாடகபாணியில் வேறுவிதமாக்கியுள்ளது.
ஏகாதிபத்தியத்தை
எதிர்ப்பதற்குப் பதிலாக,
தமிழீழ விடுதலைப் புலிகள்
போன்ற அமைப்புக்கள் இன்று தொழிலாளர் வர்க்கத்தை சுரண்டுவதற்காக
தமக்கென்று ஒரு சொந்த அரச கட்டமைப்பை ஸ்தாபித்துக்கொள்ள
ஏகாதிபத்தியத்தின் ஆதரவை எதிர்பார்க்கின்றன.
ஒடுக்கப்பட்ட
சிறுபான்மையினரின் ஜனநாயக உரிமைகளைக் காப்பது,
சோசலிச
வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தேசிய அரசு எல்லைகளைக் கடந்து உழைக்கும்
மக்களின் அனைத்துலக ஐக்கியத்துக்கான போராட்டத்துடன் முழுமையாக
பிணைக்கப்பட்டுள்ளது.
ஒடுக்கப்படும்
தமிழர்களின் ஜனநாயக உரிமைகளைக் காக்கவும் முதலாளித்துவ ஆட்சிக்கு எதிராக
உழைக்கும் மக்களின் ஐக்கியத்திற்காவும் கீர்த்தியின் தலைமையில் பு.க.க.
முன்னெடுத்த
போராட்டத்தை சோ.ச.க.
தொடர்ந்தும்
முன்னெடுக்கின்றது.
நாம் புதுப்பிக்கப்பட்ட
யுத்தத்திற்கும் மற்றும் உத்தியோகபூர்வ எதிர்கட்சிகளாலும் பலவித குட்டி-முதலாளித்துவ
இடது குழுக்களாலும் முன்தள்ளப்படுகின்ற மோசடி
"சமாதான
முன்னெடுப்புகளுக்கும்"
எதிராக தொழிலாளர்
வர்க்கத்துக்கும் இளைஞர்களுக்கும் சோசலிச பதிலீடு ஒன்றை வழங்குகிறோம்.
2005 நவம்பரில் குறுகிய
வெற்றியைப் பெற்றதை அடுத்து யுத்தத்தை உக்கிரமாக்கிய ஜனாதிபதி இராஜபக்ஷ,
அமெரிக்க
ஏகாதிபத்தியத்தின் கொள்ளையடிக்கும் நலன்களுக்காக முன்னெடுக்கப்பட்டுக்
கொண்டிருக்கும் வாஷிங்டனின் போலி
"பயங்கரவாதத்திற்கு
எதிரான யுத்தத்தை"
தூக்கிப்
பிடித்துக்கொண்டுள்ளார்.
உழைக்கும் மக்கள்,
இளைஞர்கள் மற்றும்
மாணவர்களும் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை யுத்தத்தில் வெற்றிகண்ட பின்னரே
அனுக முடியும் என இராஜபக்ஷவும் அவரது ஜே.வி.பி.
பங்காளிகளும்
கூறிக்கொள்கின்றனர்.
அவர்கள் எதிர்ப்புப்
போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள்,
விவசாயிகள் அல்லது
வேலையற்ற இளைஞர்கள் எவரையும் "பயங்கரவாதிகளின்
ஏஜன்டுகள்"
என முத்திரை குத்துவதோடு
பாதுகாப்புப் படைகளை அவர்களுக்கு எதிராக கட்டவிழ்த்தும் விடுகின்றனர்.
"யுத்தம் முதலாவது.
சம்பளம்,
தொழில்,
மானியங்கள் மற்றும்
சமூக நலன்புரி சேவைகள் இரண்டாம்பட்சமானது"
என்பதே அவர்களது
சுலோகமாகும்.
இது ரஷ்யாவில்
1917 பெப்பிரவரி
புரட்சியின் பின்னர் இருந்த நிலைமையை எங்களுக்கு நினைவூட்டுகிறது.
ஷார் விரோத மற்றும்
யுத்த விரோத ஆர்ப்பாட்ட அலைகளில் சவாரிசெய்த மென்ஷிவிக்
சீர்திருத்தவாதிகள் மற்றும் குட்டி முதலாளித்துவ சோசலிஸ்ட்
புரட்சியாளர்களின் ஆதரவுடனேயே பெப்பிரவரி புரட்சியில் முதலாளித்துவ
அரசாங்கமொன்று அதிகாரத்திற்கு வந்தது.
சமூகப் பிரச்சினைகளை
யுத்தத்தை வென்ற பின்னரே அணுக முடியும் என்று அந்த தற்காலிக முதலாளித்துவ
அரசாங்கம் இராஜபக்ஷவைப் போலவே போதனை செய்தது.
போல்ஷிவிக்குகளை
ஜேர்மன் எதிரிகளின் ஏஜன்டுகள் என அது கண்டனம் செய்தது.
ஆயினும்,
யுத்தத்திற்கு முடிவு
கட்டாத அல்லது சமூக நெருக்கடிகளைத் தீர்க்காத அந்த தற்காலிக அரசாங்கம்,
லெனின் மற்றும்
ட்ரொட்ஸ்கியின் தலைமையிலான போல்ஷிவிக் கட்சியினால்
தூக்கியெறியப்படுவதற்கு எட்டு மாதங்கள் மட்டுமே கடந்தன.
யுத்தத்தின் சுமைகள்
வெகுஜனங்களின் முதுகில் ஏற்றப்படுகின்ற நிலையில்,
எதிர்காலத்தில்
வர்க்கப் போராட்டங்கள் நிச்சயமாக வளர்ச்சியடையும்.
தொழிலாளர்
வர்க்கத்தின் இன்றியமையாத வரலாற்றுப் படிப்பினைகளில் நாம் எங்களை அரசியல்
ரீதியில் ஆயுதபாணிகளாக்கிக்கொள்ளும் அதேவேளை,
தொழிலாளர்கள்,
மாணவர்கள் மற்றும்
இளைஞர்களிள் பரந்த தட்டினருக்கு கல்வியூட்ட வேண்டும்.
கீர்த்தி
அர்ப்பணித்திருந்த பணி அதுவே.
சர்வதேச
சோசலிஸ்ட்டுக்கள் என்ற வகையில் அவரது வாழ்க்கைக்கு இன்று நாம் செய்ய
வேண்டிய மிகப் பொருத்தமான பங்களிப்பு அந்தப் போராட்டத்தை முன்னெடுப்பதே
ஆகும். |