DOCUMENTS OF THE SECOND PLENUM OF THE ICFI

Resolution of the ICFI on the Tasks and Perspectives of the Revolutionary Communist League (Sri Lanka)

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இரண்டாம் நிறை பேரவையின் ஆவணங்கள்

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் பணிகளும், முன்னோக்குகளும் பற்றிய
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தீர்மானம்

October 10,1986

1. தொழிலாளர் புரட்சிக் கட்சி (WRP) விட்டோடிகள் தோல்வி அடைந்ததை அடுத்து நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பமாகியுள்ளது. ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, ஹீலி-பண்டா-சுலோட்டர்) குழுவின் சோவினிச மற்றும் திருத்தல்வாத எதேச்சாதிகாரத்தின் கீழ், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் இருந்த ட்ரொட்ஸ்கிசவாதிகள் ஒரு ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினராக விளங்கி, தங்கள் கட்சிக்குள்ளேயே அரைகுறைச் சட்டவிரோத நிலைமையை ஒத்த விதத்தில், ஒரு புரட்சிகர நிலைப்பாட்டைக் காத்து நின்றனர். நிரந்தரப் புரட்சி தத்துவம் ஒரு சமயக் கொள்கைக்கு மாறான கருத்து போல் நடத்தப்பட்டதோடு; தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனத்திற்காக போராடிய அனைவரும் அமைப்புரீதியான எதிர்நடவடிக்கைக்கு உள்ளாவோமோ என்ற இடைவிடா அச்சுறுத்தலின்கீழ் வாழ்ந்து வந்தனர். ஹீலியின் வலதுகை போல் செயல்பட்டுவந்த M. பண்டா தன்னுடைய மாவோவாத சிந்தனையையும் மற்றும் முதலாளித்துவ தேசிய வேலைத்திட்டத்தையும் மூடிமறைக்கும் விதத்தில் ட்ரொட்ஸ்கிசத்திற்கு உதட்டளவு மரியாதையைத்தான் கொடுத்தார். அரசியல் சான்றுகள் ஆராயப்பட்ட பின்னர், இப்பொழுது நிரூபிக்கப்பட்டுள்ளது போல், பண்டா பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தின் சோசலிச போராளியாக இருந்ததில்லை; மாறாக அரைகாலனித்துவ முதலாளித்துவம், அதன் அரச எல்லைகள் ஆகியவற்றிற்கு வக்காலத்து வாங்குபவராகவே இருந்தார். தேசிய போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் மேலாதிக்கத்தை நிராகரித்த பண்டா, தேசிய பிரச்சினைக்கு ஒரு முதலாளித்துவ தீர்வை வாதமாக முன்வைத்தார். பகட்டு உரைநடையை தக்கவிதத்தில் பயன்படுத்தி வங்கதேசத்தின் மீதான இந்திய படையெடுப்பிற்கு ஆதரவு கொடுத்ததோடு மட்டும் இல்லாமல், அதை நியாயப்படுத்தவும் செய்தார். அதே போல் இந்தோனேசிய ஐக்கியத்தின் பேரால் கிழக்கு தீமோரில் சுகார்ட்டோவின் கொலையாளிகள் செய்த படுகொலைகளையும் நியாயப்படுத்தினார்.

2. மத்திய கிழக்கில் உள்ள முதலாளித்துவ ஆட்சிகளை பொறுத்தவரையில், பண்டாவின் முதலாளித்துவ தேசியவாத கருத்துக்கள் ஹீலியின் நாற்றமெடுக்கும் சந்தர்ப்பவாதத்திற்கு தக்க மறைப்பாக பயன்பட்டன. ஈராக்கிய கம்யூனிஸ்ட்டுக்கள் தூக்கிலிடப்படுவதற்கு ஹீலி ஒப்புதல் அளித்திருக்கையில், கிழக்கு தீமோரில் விவசாயிகள் அடியோடு அழிக்கப்படுவதை பண்டா வரவேற்றார். 1961-64ல் சோசலிச தொழிலாளர் கட்சிக்கும் (WRP) பப்லோவாதிகளுக்கும் இடையே எற்பட்ட கொள்கையற்ற மறு ஐக்கியம், மற்றும் ஜூன் 1964ல் திருமதி பண்டாரநாயக்கவின் கூட்டரசாங்கத்திற்குள் லங்கா சம சமாஜக் கட்சி (LSSP) நுழைந்தது ஆகியவற்றிற்கு எதிராக நடத்திய போராட்டங்களில் தாங்கள் பாதுகாத்த கோட்பாடுகளை இவர்கள் இருவரும் முற்றிலும் மறுத்திருந்தனர். இதன்காரணமாகவே ஹீலியும் பண்டாவும் புரட்சி கம்யூனிஸ்ட் கழகத்தை (RCL) வெறுத்ததுடன், சுலோட்டரின் உதவியுடன் அதை அமைப்புரீதியாக அழிப்பதற்கும் நனவாக வேலைசெய்தனர். தாங்கள் காட்டிக் கொடுத்திருந்த பழைய வரலாறு பற்றி பு..கழகம் தொடர்ச்சியாக நினைவூட்டிக் கொண்டிருந்தது மட்டுமின்றி, உலகம் முழுவதும் முதலாளித்துவ தேசியவாதிகளுடன் கோட்பாடற்ற முறையில் அவர்கள் உருவாக்க முயன்ற கூட்டுக்களின் வலைப்பின்னல்களுக்கும் புரட்சி கம்யூனிஸ்ட் கழகம் பெரும் தடையாக இருந்தது.

3. WRP  எப்படி புரட்சி கம்யூனிஸ்ட் கழகத்தை தவறாக நடத்தியது என்னும் ஆழ்ந்த அதிர்ச்சியைத் தரும் சான்றைப் படிப்பதற்கு அனைத்துலகக் குழுவிற்கு இப்பொழுது வாய்ப்பு கிடைத்துள்ளது: புரட்சி கம்யூனிஸ்ட் கழகத்தின் தலைமைக்கு எதிரான அவதூறுகள், சிங்கள இன வெறியர்களுடன் சேர்ந்து சதித்திட்டங்கள், ஜெயவர்த்தனாவின் அடியாட்கள் மூலம் புரட்சி கம்யூனிஸ்ட் கழகத்தின் காரியாளர்களை தீர்த்துக் கட்டுவதற்கு மறைமுகமான ஆதரவும் கூட இதில் அடங்கியிருந்தன. WRP அதன் அரசியல் அதிகாரத்தை இழிந்த முறையில் தவறாகப் பயன்படுத்தியதற்கு எதிராக புரட்சி கம்யூனிஸ்ட் கழகம் அதை எதிர்த்து நிற்க முடிந்திருந்ததுபோல், ட்ரொட்ஸ்கிசத்தின் சர்வதேச மரபுகளில் ஆழ்ந்து நின்ற தன்மை, மற்றும் உலகப் புரட்சி என்னும் இலக்கின் மீது கொண்டிருந்த ஆழ்ந்த பற்று ஆகியவற்றினால்தான் முடிந்திருந்தது.

4. கடைசியில் இந்தியத் துணைக் கண்டத்தில் ஒடுக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பாட்டாளி வர்க்கத்தின் மிகமுக்கிய பணிகள் தொடர்பாக ட்ரொட்ஸ்கிசத்தின் மூலோபாயம் மற்றும் தந்திரோபாயங்களை விவாதிப்பதற்கு இபொழுது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் முடிந்திருக்கிறது. முதலில் நாம் எமது பணிக்கு வழிகாட்டுவதாக இருக்கும் குறிப்பிட்ட அடிப்படைக் கோட்பாடுகளை மீண்டும் ஸ்தாபிக்க வேண்டும்: நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகள் புரட்சிகர பாட்டாளி வர்க்கத்தின் கட்சிகள் ஆகும். பின்தங்கிய நாடுகளில், விவசாயிகளின் முக்கிய பாத்திரத்தை நன்கு அறிந்திருந்தாலும், எமது பிரிவுகள் ஒருபோதும் விவசாயிகள் இயக்கத்துடன் ஒருபோதும் ஒன்றிணைந்துவிடக் கூடாது; அல்லது தங்கள் தனித்துவமான பாட்டாளி வர்க்க அடையாளம் எந்த விதத்திலும் இழக்கப்படுவதை பொறுத்துக் கொள்ளவும் கூடாது. நன்கு நிறுவப்பட்டுள்ள உண்மையான தேசிய ஜனநாயகப் புரட்சி என்பது, தொழிலாள வர்க்க சர்வாதிகாரத்தின் மூலம்தான் மட்டுமே பூரணப்படுத்தப்படும் என்ற நிலைப்பாட்டில் இருந்தே தொடர வேண்டும். ஒரு தற்காலிக, மறைந்து விடும் வெற்றிகளில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அக்கறை கொள்ளவில்லை. அதன் காரியாளர்கள் சோசலிசப் புரட்சியை வழிநடத்துவதில் முனைப்பைக் கொண்டுள்ளனரே அன்றி, பலவகைப்பட்ட முதலாளித்துவ தேசியவாதிகளின் குற்றேவலர்களாக செயல்படத் தயாராக இல்லை. மேலும் 1927ம் ஆண்டு நிகழ்ந்த தோல்வியின் ஆழ்ந்த படிப்பினைகளை அறியத் தவறி, சீனத்தொழிலாள வர்க்கத்தில் வேரூன்றியுள்ள ஒரு மார்க்சிச கட்சியை கட்டமைக்கும் போராட்டத்தையும் கைவிட்டுவிட்ட மாவோயிசத்தை பெருமைப்படுத்துவதில் பங்கு பெறுவதை நாம் வெறுக்கிறோம். கடந்த 37 ஆண்டுகள் உலகத் தொழிலாள வர்க்கம் இந்தோனேசியாவில் இருந்து கம்போடியா வரை, ஏன் கடைசியாக, ஆனால் முக்கியத்துவத்தில் சற்றும் குறையாத வகையில், சீனாவில் இருந்தும் மாவோயிசம் பற்றிய இருப்பு நிலைக் குறிப்பை வரைவதற்கு நிறைய வாய்ப்புக்களை கொண்டிருந்தது.

5. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் மட்டுமே ஆசிய வெகுஜனத்தை வெற்றிக்கு வழிநடத்தும் மூலோபாயத்தை அபிவிருத்தி செய்ய முடியும்; இந்த விளக்கத்தின் அடிப்படையிலேயே அதன் இலங்கை பகுதியின் பணியைப் பற்றி பெரும் கவனத்துடன் விவாதித்தது. புறநிலைமைகளின் அபிவிருத்திகளுக்கு ஏற்ப நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு தேசிய பிரச்சினையை பகுப்பாய்வுசெய்து கீழ்க்கண்ட முடிவுகளுக்கு வந்துள்ளது:

A. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதி தேசிய இனங்களின் சுயநிர்ணயத்திற்கான தேசங்களின் உரிமை மீதான லெனினின் நிலைப்பாட்டையும் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது. தமிழ் மக்கள் ஒரு தனி அரசைக் கோருவதற்கு பு..கழகம் தளர்வின்றி ஆதரவைக் கொடுக்கிறது. சோல்பரி அரசியல் அமைப்பின், கோழைத்தனமான நலன்களைப் பெற்றுள்ள இலங்கை முதலாளித்துவ வர்க்கத்தின், இரு தேசங்களையும் ஐக்கியப்படுத்தும் ஒரு ஜனநாயக வேலைத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு தன்னளவில் இயலாத்தன்மையை வரலாற்று அனுபவம் மறுப்பதற்கு இடமில்லாமல் நிரூபித்துள்ளது. 1947ம் ஆண்டில் இருந்து தமிழ் மக்களுடைய ஜனநாயக உரிமைகளை அவர்கள் நிராகரித்தமை, தமிழ் மக்களை அழிக்கும் படுகொலை யுத்தமாக இன்று வளர்ச்சி கண்டுள்ளது. இந்த நிலைமைகளின் கீழ் தமிழ் மக்களுடைய நலன்கள் பேரிலான பிரிவினையானது, சிங்களப் பாட்டாளி வர்க்கம், முதலாளித்துவத்திற்கும் அதன் அரசிற்கும் எதிராக நடத்தும் போராட்டத்தின் வளர்ச்சிக்கும் உதவும், மற்றும் சிங்கள மற்றும் தமிழ் தொழிலாளர் வர்க்கம், வறிய விவசாயிகள் ஆகியோரை ஐக்கியப்படுத்துவதற்கான சிறப்பான நிலைமைகளைத் தோற்றுவிக்கும்.

B தமது அரசினை நிறுவும் தமிழ் மக்களின் உரிமையை முன்னெடுக்கையில் புரட்சி கம்யூனிஸ்ட் கழகம் என்றும் பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதத்தில் இருந்தே ஆரம்பிக்கிறது; தமிழ் முதலாளித்துவம் கோரும் பிரத்தியேக சலுகைகளுக்கு எந்தவித ஆதரவையும் வழங்காது. தேசியப் போராட்டத்திற்குள்ளேயே புரட்சி கம்யூனிஸ்ட் கழகம் எப்பொழுதும் பாட்டாளி வர்க்க நலன்களை நிலைநிறுத்த முற்படுவதோடு தமிழ் முதலாளித்துவ வர்க்கம், குட்டி முதலாளித்துவ வர்க்கம் இவற்றில் இருந்து அதன் சுயாதீனத்தை நிலைநிறுத்தவும் போராடுகின்றது. தமது அரசினை அமைக்க தமிழ் மக்களுக்கு உள்ள உரிமையை நிபந்தனை இன்றி பாதுகாக்கின்ற அதேவேளை புரட்சி கம்யூனிஸ்ட் கழகத்தின் வேலைத்திட்டமானது, ஜனநாயகப் புரட்சியின் வெற்றியை, தமிழ் தொழிலாள வர்க்கத்தின் தலைமையின் கீழ், வறிய விவசாயிகளுடன் கூட்டில் மற்றும் தெற்கில் இருக்கும் வெகுஜனங்களுடன் நெருக்கமான ஒத்துழைப்பில் எதிர்நோக்குகிறது. புரட்சி கம்யூனிஸ்ட் கழகம் சுயநிர்ணயத்திற்கான தேசிய போராட்டத்தின் தலைமையை முதலாளித்துவ வர்க்கத்திற்கு பணிந்து விட்டுக்கொடுக்கவில்லை, மாறாக தமிழீழத்தின் சுதந்திரமானது சிங்கள ஒடுக்குமுறைக்கு எதிரான தேசியப் போராட்டத்தை ஏகாதிபத்தியம் மற்றும் சிங்கள மற்றும் தமிழ் முதலாளித்துவ வர்க்கத்தின் மத்தியில் உள்ள அதன் முகவர்களுக்கு எதிரான சமூகப் போராட்டத்துடன் ஒன்றிணைப்பதன் மூலம் மட்டுமே அடையப்பட முடியும் என்று வலியுறுத்துகிறது. தேசிய விடுதலை சக்திகளின் ஆயுதமேந்திய போராட்டத்தின் முற்போக்குத் தன்மையை உணரும் அதேவேளை, தொழிலாளர்கள்-விவசாயிகளின் சோவியத்துக்கள் அமைக்கப்படுவதற்கும் ஏகாதிபத்தியம் மற்றும் முதலாளித்துவ வர்க்கத்தின் சொத்துக்கள் அபகரிக்கப்படுவதற்கும் போராடுவதன் மூலம் புரட்சி கம்யூனிஸ்ட் கழகம் அந்தப் போராட்டத்தை தொடர்ந்து நடப்பதற்கு, விரிவாக்குவதற்கு மற்றும் ஆழப்படுத்துவதற்கு முயற்சிக்கிறது.

C. அனைத்து நிலைமைகளிலும் தமிழ் மற்றும் சிங்களத் தொழிலாள வர்க்கத்தின் முன்னணிப் படையாக புரட்சி கம்யூனிஸ்ட் கழகம் தனது சுயாதீனத்தை நிபந்தனையற்ற வகையில் பாதுகாக்க போராடுவதன் மூலம் மட்டுமே இம் முன்னோக்கை முன்னெடுத்துச் செல்ல முடியும். சிங்கள அடக்குமுறைக்கு எதிராக முதலாளித்துவ தேசிய இயக்கத்துடன் தந்திரோபாய ரீதியிலான கூட்டின் அவசியத்தை அறிந்திருந்தாலும், ஒவ்வொரு உடன்பாடும் கடுமையாக வரையறுக்கப்பட்டு லெனினிச கோட்பாடான "தனியே நடைபோடு, சேர்ந்து தாக்கு!" என்பதை அடிப்படையாகக் கொள்ளவேண்டும்.

D. தேசிய போராட்டத்தின் முற்போக்குத் தன்மை என்னவாக இருந்த போதிலும், சிங்கள, தமிழ் தொழிலாளர்கள் இருவருக்கும் ஒரே ஒரு புரட்சிகர கட்சிதான் இருக்க முடியும்; அக்கட்சிதான் புரட்சி கம்யூனிஸ்ட் கழகம் ஆகும். உள்நாட்டு யுத்த நிலைமைகளில் அமைப்புரீதியான வளைந்து கொடுக்கும் தன்மை தேவை என்பதை அங்கீகரித்திருந்தாலும், புரட்சி கம்யூனிஸ்ட் கழகம், தீவில் இருக்கும் பாட்டாளி வர்க்கத்தின் அனைத்துப் பகுதிகளையும் - சிங்கள, தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் தமிழ் தேசத்தின் தொழிலாளர்கள் - ஆகியோரை ஒரே பதாகையின் கீழ் ஐக்கியப்படுத்த போராடுகிறது. தீவில் இன்றுள்ள விஷேட நிலைமையில், வடக்கில் பாதுகாப்புவாதமும், தெற்கில் தோற்கடிப்புவாதமும் ஒரு ஐக்கியப்பட்ட புரட்சிகர வேலைத்திட்டத்தின் உள்ளடங்கிய கூறுகளாகும்.

E. தேசிய இயக்கத்தின் இயல்பான முதலாளித்துவத் தன்மையை அறிந்துகொள்ளும் அதேவேளை, புரட்சி கம்யூனிஸ்ட் கழகம் அதனுள் சீர்திருத்தவாத, மற்றும் புரட்சிகரப் பிரிவுகளுக்கு இடையே உள்ள அவசியமான வேறுபாட்டை செய்கிறது (எம். பண்டாவால் கூறப்படுவதுபோல் மனக்கசப்பு ஊட்டுவது அல்ல).

(1) தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியை (TULF) தமிழ் முதலாளித்துவ வர்க்கத்தின் முக்கிய பிரதிநிதி என்று புரட்சி கம்யூனிஸ்ட் கழகம் கருதுகிறது; மேலும் அதன் தன்மையிலேயே ஆயுதம் ஏந்தும் போராட்டத்திற்கு விரோதப் போக்கைக்காட்டும் அந்த அமைப்பு, தேசிய சுதந்திரத்திற்காக கோட்பாடுடன் கூடிய தொடர்ச்சியான போராட்டத்தை நடத்த திறனற்றது என்றும் கருதுகிறது. அதன் முழு வரலாறும், இந்திய, இலங்கை முதலாளித்துவங்களுடன் வெட்கம் கெட்டதனமாக முகஸ்துதி செய்வந்துள்ளது மட்டுமல்லாது கோழைத்தனமான சமரசங்கள் மற்றும் நேரடிக் காட்டிக் கொடுப்புக்களால் நிறைந்துள்ளது. சிங்கள அடக்குமுறையாளர்களிடம் இருந்து சுதந்திரம் பெற வேண்டும் என்ற வேட்கையைவிட அது தமிழ் வெகுஜனத்தைக் கண்டே மிகவும் அஞ்சுகிறது. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் நயவஞ்சகத்தன்மை மற்றும் தேசிய போராட்டத்தை சொந்த முதலாளித்துவத்தினரின் நலன்களுக்கு அடிபணிய வைக்க வேண்டும் என்ற அதன் முயற்சிகளை தமிழ் வெகுஜனங்களின் முன்னே அம்பலப்படுத்தும் பொறுப்பை புரட்சி கம்யூனிஸ்ட் கழகம் கொண்டிருக்கிறது.

(2) தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) போன்ற பலவித தமிழ் விடுதலை இயக்கங்களை புரட்சிகர தேசியவாதிகள் என புரட்சி கம்யூனிஸ்ட் கழகம் அடையாளம் காண்கிறது. ஆனால் தமிழ் தாயகத்தை இராணுவரீதியில் விடுதலை செய்வதற்கான அவர்களின் துணிவுமிக்க போராட்டம் இருப்பினும், அவர்களுடைய குட்டி முதலாளித்துவ கண்ணோட்டமும், வேலைத்திட்டமில்லாத நிலையும், வெற்றியைப் பெறுவதற்கு அவசியமான தொழிலாளர்கள், விவசாயிகளை பரந்த அளவில் அணிதிரட்டுவதில் இருந்து அவர்களை தடுக்கிறது. மேலும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் அரிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் செல்வாக்கை எதிர்த்து போரிடவும், இந்திய முதலாளித்துவத்தின் துரோகத்தனமான சதித்திட்டங்களில் இருந்து விடுதலை இயக்கத்தின் சுயாதீனத்தை மீட்கவும் அவர்களால் முடியாது. இந்த குழுக்களின் குட்டி முதலாளித்துவத் தன்மையில் இருந்து ஊற்றெடுக்கும் அவர்களின் வேலைத்திட்டரீதியான குழப்பங்கள் அவற்றை அரசியல் புதைசேற்றுக்கு அழைத்துச் செல்லுகின்றன; அது இந்திய முதலாளித்துவ, மாஸ்கோ, சீன, ஸ்ராலினிச சதிகளின் பாதிப்புக்குள் தள்ளுகின்றன. இச்சூழ்நிலைகள் அனைத்திலும் தன்னுடைய அரசியல் சுயாதீனத்தை பேணிக்கொள்ளும் புரட்சி கம்யூனிஸ்ட் கழகம், புரட்சிகரத் தேசியவாதிகளில் இருந்து சுயாதீன முறையில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுகின்றது, அவ்வாறே அவர்களுடைய கொள்கைகளை விமர்சிக்கும் உரிமையையும் கொண்டுள்ளது.

F. தேசிய சுயநிர்ணயத்திற்காக வடக்கில் நடைபெற்றுவரும் போராட்டத்தையும், தெற்கில் சிங்கள தொழிலாளர், ஒடுக்கப்படும் விவசாயிகளின் போராட்டத்தையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய, ஒட்டுமொத்தமாக புரட்சி கம்யூனிஸ்ட் கழகம் பார்க்கிறது. இவ் இரு போராட்டங்களுக்கும் இடையே சீனப் பெருஞ்சுவர் ஒன்றும் கிடையாது; அவ்வாறே முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட வளர்ச்சியின் விளைவு என்பதையும் காண்பதற்கு இல்லை. இலங்கை முதலாளித்துவத்தின் மோசமடைந்துவரும் நெருக்கடி வடக்கே விடுதலைப் போரினால் உக்கிரமடைந்து, சிங்கள வெகுஜனம் மற்றும் தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் ஆகியோரிடையே ஒரு எழுச்சியை தோற்றுவிக்கக்கூடும்; அத்தகைய எழுச்சி, கிட்டத்தட்ட ஓரிரவிலேயே அதிகாரம் பற்றிய பிரச்சினையே நிகழ்ச்சிநிரலில் வைக்கும் புரட்சிக்கான முன்நிபந்தனைகளை உருவாக்க முடியும். அந்த நிலைமையில் இலங்கையின் பாட்டாளி வர்க்கமும் விவசாயிகளும் தீவு முழுவதிலும் பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் ஒன்றிணைந்த குணாம்சத்தை முன்னணிக்கு கொண்டு வருவதனூடாக தமிழ் விடுலைக்கான தாக்குதலைக் கொடுக்கும். நிகழ்வுகளின் விளைவு எப்படி இருந்தாலும், தேசிய இயக்கத்தை சோசலிச உள்ளடக்கத்திற்குள் ஒன்றிணைக்க புரட்சி கம்யூனிஸ்ட் கழகம் நடத்தும் போராட்டம் சிங்கள வெகுஜனங்களுக்கு ஒரு ஊக்கத்தை கொடுப்பதுடன், வடக்கிலும், தெற்கிலும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களிடையே புரட்சிகர பிணைப்புக்களை உருவாக்கும்.

6. தெற்கில் அதன் பணிகள் தொடர்பானதில் புரட்சி கம்யூனிஸ்ட் கழகம் எதிர்கொள்ளும் பிரதான அரசியல் பணி ஸ்ராலினிஸ்ட்டுக்கள், லங்கா சமஜமாஜ கட்சி, மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (CWC) தலைவர்களின் பிடியில் இருந்து தொழிலாள வர்க்கத்தை உடைத்துக்கொள்ள வைப்பதற்கான போராட்டமாக தொடர்ந்து இருக்கிறது என்பதில் அனைத்துலகக் குழு உடன்படுகிறது, தமிழ் தேசத்திற்கு எதிராக நடைபெற்றுவரும் இனஅழிப்பு யுத்தத்திற்கான இத்தலைமைகளின் ஆதரவு, அது இராணுவ ஒடுக்குமுறைக்கு அவர்களின் நேரடி ஆதரவாகவோ அல்லது  "வட்ட மேசை" மாநாடுகளில் கோழைத்தனமாக பங்குபற்றுவதோ அல்லது அதையொத்த வேறுவடிவிலான துரோகமாகவோ எந்தவடிவாக இருந்தாலும் அதற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவது இந்த பிரச்சாரத்தின் மையமாக கட்டாயம் இருக்க வேண்டும். யுத்தத்திற்கு எதிரான இந்தப் பிரச்சாரத்துடன் கைகோர்த்த வண்ணம், யுத்த முயற்சிகளுக்காகவும், சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏகாதிகத்திய பிரபுக்களின் நலன்களின் பேரிலும் அரசாங்கமும் அதன் அடிவருடிகளும் திணிக்க முயற்சிக்கும் பொருளாதார தியாகங்களை அறவே நிராகரிக்கும்படி புரட்சி கம்யூனிஸ்ட் கழகம் தொழிலாள வர்க்கத்தை உறுதியாகக் கேட்டுக் கொள்கிறது.

7. ஏகாதிபத்தியத்தின் ஊழல்மிக்க முதலாளித்துவ வர்க்க சேவகர்களுக்கும், அவர்கள் தங்கியுள்ள முற்றிலும் பிற்போக்குத் தன்மை வாய்ந்த முதலாளித்துவ அரசுக்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தை பரந்த அளவில் அணிதிரட்டுவதின் வேலைத்திட்ட அடிப்படையாக புரட்சி கம்யூனிஸ்ட் கழகம் சோசலிச கொள்கைகளை முன்னெடுக்கிறது. ஏகாதிபத்தியத்திற்கு எதிரான எந்தவொரு போராட்டமும், அதன் தேசிய முதலாளித்துவ முகவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கும் மற்றும் உற்பத்திச் சாதனங்களின் மீதாக தொழிலாளர்களின் சொத்துரிமையையும் நிறுவுவதற்கும் போராடாமல் சாத்தியமில்லை.

8. அரைக் காலனித்துவ நாடான இலங்கை எதிர்கொண்டுள்ள தீர்க்கப்படாத ஜனநாயகப் பணிகள் பற்றி ஆழ்ந்த முறையில் அறிந்துள்ள புரட்சி கம்யூனிஸ்ட் கழகம்; பாட்டாளி வர்க்கத்திற்கும் கிராமப்புற வறிய ஏழைகளுக்கும் இடையே கூட்டை உருவாக்க முயல்கிறது. பல தசாப்தங்களாக விவசாயிகளின் மிக அடிப்படைத் தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய முடியாமல் உள்ள முதலாளித்துவ கட்சிகள், நிஜ ஜனநாயக வேலைத்திட்டத்திற்கு பதிலாக சிங்கள இனவெறியை ஒரு உணர்வைக் கிளறும் பதிலீடாக பயன்படுத்துகின்றன. ஒரு புரட்சிகர வேலைத்திட்டத்தை முன்னெடுக்க மறுத்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி (SLFP- Sri Lanka Freedom Party) உடன் கூட்டணியில் சேர்ந்ததின் மூலம், லங்கா சம சமாஜ கட்சி விவசாயிகளை முதலாளித்துவ வர்க்கத்திடம் கைவிட்டுவிட்டது. லங்கா சம சமாஜ கட்சியின் துரோகத்திற்கு முற்றிலும் எதிரான வகையில் கிராமப்புறக் கடன்கள் அகற்றப்பட வேண்டும் என்றும், வங்கிகள் தேசியமயமாக்கப்படுவதன் மூலம் அவற்றின் இறுக்கமான பிடிகள் அழிக்கப்பட வேண்டும் என்றும், இடைத்தரகர்கள், இன்னும் பிற இரத்தத்தை உறிஞ்சுபவர்கள் சட்டவிரோதமாக்கப்பட வேண்டுமென்றும், நிலங்கள் தேசிய உடைமையாக்கப்பட வேண்டுமென்றும், விவசாயிகளின் உழைப்பிற்கு தக்க ஊதியம் அளிப்பதற்கும் கௌரவமான வாழ்க்கை தரத்திற்கும் உற்பத்திப்பொருளுக்கு நிலையான விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும், அதே நேரத்தில் விவசாய உற்பத்தியை முன்னேற்றுதற்கு, குறைந்த வட்டியில் கடன்கள் மற்றும் பிற வசதிகளை அளிக்க வேண்டும் என்றும்  புரட்சி கம்யூனிஸ்ட் கழகம் பிரச்சாரம் செய்து வருகிறது.

9. காட்டுமிராண்டித்தனமாக சுரண்டப்படுதலை தவிர, இரக்கமற்றமுறையிலான பாகுபாடுகளையும் (குடியுரிமை மறுக்கப்படல் போன்றவை) எதிர்கொள்ளும் தோட்ட தொழிலாளர்கள் மீதான அடக்குமுறை இலங்கை முதலாளித்துவ அரசு உருவாக்கத்திலேயே அதன் வேர்களை கொண்டுள்ளமை 1948ல் சோல்பரி அரசியல் அமைப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட போலிச் சுதந்திரத்திற்கு எதிராக லங்கா சம சமாஜ கட்சியினால் நீண்டகாலத்திற்கு முன்னரே மறக்கப்பட்டு விட்ட ட்ரொட்ஸ்கிஸ்டுகள் காட்டிய வரலாற்று புகழ் மிக்க எதிர்ப்பினை நிரூபணம் செய்துள்ளது. அதன் மிக சமீபத்திய முறைகேடுகள் எந்தவொரு ஜனநாயகப் பணியையும் நிறைவேற்றமுடியாத இலங்கை முதலாளித்துவ வர்க்கத்தின் இயலாமையை நிரூபித்துள்ளது. அனைத்து பாகுபாடுகளும் அகற்றப்படுவதோடு, தோட்ட தொழிலாளர்கள் அனைவருக்கும் குடியுரிமைகள் வழங்கப்பட வேண்டும், பௌத்தம், சிங்கள மொழி ஆகியவற்றிற்கு கொடுக்கப்பட்டுள்ள சிறப்புச் சலுகைகளும் அகற்றப்பட வேண்டும் என்று புரட்சி கம்யூனிஸ்ட் கழகம் கோருகிறது. அரசியலமைப்பை அகற்றுவதற்கு ஒரு உண்மையான அரசியல் நிர்ணய சபை அவசியமாகியுள்ளது, அதில் தோட்டத் தொழிலாளர்களும் பங்கு பெறுதல், வாக்களித்தல் என்பவற்றில் முழு உரிமை வழங்கப்படுவர்.

10. முதலாளித்துவ வர்க்க கட்சிகள் அனைத்துக்கும் எதிராக தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்திற்கான கோரிக்கையை முன்வைத்து நடத்தப்படும் ஒரு போராட்டத்தின் அடிப்படையிலேயே இவ் வேலைத்திட்டத்தை  அடைய முடியும். இந்த முன்னோக்கானது மக்கள் முன்னணிவாதத்தின் எந்த வடிவத்தையும் அதாவது, முதலாளித்துவ வர்க்கத்தின் எந்தவொரு பிரிவுடனுமான அரசியல் கூட்டினை  மூர்க்கமாக எதிர்க்கிறது. இந்த இலக்கில் புரட்சி கம்யூனிஸ்ட் கழகமானது லங்கா சமஜமாஜ கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் (CP) அரசாங்கத்துடனும், முதலாளித்துவக் கட்சிகளுடனும் கொண்டுள்ள அனைத்து உறவுகளையும் துண்டித்துக்கொண்டு, ஆட்சியதிகாரத்தை தங்களின் சொந்த கரங்களில் எடுத்து, மேலே குறிப்பிட்ட ஜனநாயக மற்றும் சோசலிச வேலைத்திட்டத்தை அமுல் செய்யும்படியும் கோருகின்றது. அதே அடிப்படையில் தோட்டத் தொழிலாளர்களின் வலதுசாரித் தலைவர் தொண்டைமான் ஐக்கிய தேசிய கட்சி (UNP) அரசாங்கத்திலிருந்து இராஜினாமா செய்யவேண்டும் என்றும் புரட்சி கம்யூனிஸ்ட் கழகம் கோருகிறது. இவ்விதத்தில் இத்துரோகிகளின் முகமூடிகளை கிழித்தெறியவும், வெகுஜனங்களை புரட்சிகர கட்சியின் பக்கம் வென்றெடுக்கவும் முடியும். புரட்சி கம்யூனிஸ்ட் கழகத்தின் கொள்கையானது ட்ரொட்ஸ்கியின் போதனைகளை உறுதியான முறையில் தளமாகக் கொண்டுள்ளது.

"தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளை தளமாக கொண்டதும், அவர்களின் சார்பில் பேசுகின்றதுமான அனைத்துக் கட்சிகள், அமைப்புக்களையும் முதலாளித்துவ வர்க்கத்தில் இருந்து அரசியல்ரீதியில் முறித்துக்கொள்ளுமாறும், தொழிலாளர் விவசாயிகள் அரசாங்கத்திற்கான போராட்டப்பாதையில் காலடிவைக்குமாறும் நாம் வேண்டுகின்றோம். இப்பாதையில் முதலாளித்துவ பிற்போக்கிற்கு எதிராக நாம் அவர்களுக்கு முழு ஆதரவையும் தருவதாக உறுதிமொழி கொடுக்கிறோம். அதே நேரத்தில், நாம் அந்த இடைமருவுக் கோரிக்கைகளை சூழ பிரச்சாரத்தை அபிவிருத்தி செய்வோம். எமது கருத்தின்படி அவை தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்தின் வேலைத்திட்டமாகின்றன. (L.Trotsky, Transitional Program, Labour Publications, p.25)

11. தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்திற்கான புரட்சி கம்யூனிஸ்ட் கழகத்தின் அழைப்பு, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கு எதிரிடையாக முன்வைக்கப்படவில்லை; ஆனால் தொழிலாளர்களும் விவசாயிகளும் தமது சொந்த சோவியத் அதிகாரத்தை நிறுவுவதற்கு அவர்களை அணிதிரட்டுவதற்கு இடைமருவுக் கோரிக்கையாகவே இது முன்வைக்கப்படுகிறது. வரலாற்றுரீதியாக விரிந்து வரும் வர்க்கப் போராட்டத்தில், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கு தடையாக ஒரு சிறப்பு ஜனநாயகக் கட்டம் ஒன்று நுழைக்கப்படுவதற்கான அனைத்து முயற்சிகளையும் முகத்திரை கிழிக்க புரட்சி கம்யூனிஸ்ட் கழகம் போராடும். மேற்கூறிய வேலைத்திட்டத்திற்கான போராட்டத்துடன் இணைந்த வகையில் புரட்சி கம்யூனிஸ்ட் கழகம் மக்களிடையே பரப்ப விரும்புவதுடன், சூழ்நிலைகள் பக்குவமடையும்போது, முதலாளித்துவ அரசு உடைவிலிருந்து எழுகின்ற புதிய அரசு அதிகாரத்திற்கு தொழிலாளர்கள், விவசாயிகள், சோவியத்துக்களை அடிப்படையாக தோற்றுவிப்பதற்கு அழைப்பு விடுக்கிறது.

12. சிங்கள, தமிழ் வெகுஜனங்களின் புரட்சிகரப் போராட்டங்கள் தவிர்க்க முடியாமல் சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தின் தலைவிதியுடன் - முதலாவது எடுத்துக்காட்டில், பல மில்லியன் கணக்கான இந்திய பாட்டாளி வர்க்கத்துடன் பிரிக்கப்பட முடியாத வகையில் பிணைந்துள்ளது. இந்திய தொழிலாள வர்க்கத்துடன் மிக நெருக்கமான தோழமை உறவுகளை உறுதிப்படுத்தும் முயற்சியில், இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் இந்திய துணைக் கண்டம் ஒட்டுமொத்தத்தின் பாட்டாளி வர்க்கத்திற்கான ஒரு ஐக்கியப்பட்ட அமைப்பை உருவாக்குவதற்கு லங்கா சம சமாஜ கட்சியால் மேற்கொள்ளப்பட்ட தைரியம்மிக்க முன்னோடிப் பணியின் வரலாற்றையும் புரட்சி கம்யூனிஸ்ட் கழகம் பரிசீலிக்க வேண்டும். சாத்தியமானால், அந்தப் பிணைப்புக்களை மீளமைப்பதை நோக்கிய முதற்படிகள், இந்தியா, இலங்கையில் இருக்கும் தொழிலாள வர்க்கத்தின் புறநிலை நலன்களுக்கு உகந்த முறையில் தேவைப்படும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

13. WRP விட்டோடிகள் மரபுவழியாய் விட்டுச்சென்றதை கடந்துவருவதற்கு அனைத்துலக குழு நடாத்திய போராட்டத்திலும் ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டத்தினால் உலக இயக்கத்தை மீள ஆயுதபாணியாக்குவதிலும் ஒரு தீர்க்கமான பாத்திரத்தை வகித்த புரட்சி கம்யூனிஸ்ட் கழகம் இப்பொழுது தன்னுடைய உள்அமைப்பை உறுதியாக வலுப்படுத்துவதற்கு ஒத்த முன்னேற்றங்களை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். புரட்சி கம்யூனிஸ்ட் கழகத்தை தத்துவார்த்த ரீதியாக மீள ஆயுதபாணியாக்கியமை, அதன் பத்திரிகை விற்பனையை அதிகரிக்கவும், புதிய உறுப்பினர்களை சேர்த்துக் கொள்ளவும், புதிய கிளைகளை கட்டமைக்கவுமான சிறந்த சூழ்நிலைகளை ஏற்படுத்தியுள்ளது. புரட்சி கம்யூனிஸ்ட் கழகத்தின் அங்கத்தவர்களின் எல்லையற்ற விசுவாசம், உலகப் புரட்சி என்ற உயரிய இலட்சியத்திற்கு அவர்கள் தங்களை அர்ப்பணித்துக் கொண்டமை, முதலாளித்துவ அரச அடக்குமுறையை எதிர்கொள்ளுவதில் அவர்கள் காட்டும் அச்சமின்மை, ஆகியவற்றை நன்கு அறிந்துள்ள நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, அதன் இலங்கைப் பகுதி இப்பொழுது மகத்தான முன்னேற்றங்களை காணும் வாய்ப்பை பெற்றுள்ளது என நம்புகிறது. இந்திய துணைக் கண்டம் முழுவதிலுமே ட்ரொட்ஸ்கிசத்திற்கு உண்மையான ஒரு பிரகாசமான எதிர்காலம் காத்துள்ளது.

கீர்த்தி பாலசூரிய மறைவின் இருபதாம் ஆண்டு நிறைவு
கீர்த்தி பாலசூரிய மறைந்து இருபது ஆண்டுகள்
1970-71 ன் போது புரட்சிகர போராளியாக கீர்த்தி பாலசூரிய

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம்/சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோக்குகள்
ஸ்ரீலங்காவின் நிலைமை பற்றியும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் அரசியல் கடமை பற்றியும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அறிக்கை
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இரண்டாம் நிறை பேரவையின் ஆவணங்கள்
இலங்கை ''சமாதான பேச்சுவார்த்தையின்'' அரசியல் பொருளாதாரம்
சோசலிச சமத்துவ கட்சியும் ஸ்ரீலங்கா-ஈழம் ஐக்கிய சோசலிச அரசுகளுக்கான போராட்டமும்
சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம்

தொழிலாளர் புரட்சிக் கட்சியின் உடைவு
நான்காம் அகில சஞ்சிகையின் ஆசிரிய தலையங்கம் - மார்ச் 1987
1971 இந்தியா-பாக்கிஸ்தான் போர் குறித்த ஆவணங்கள்
லண்டனில் இருந்த ஒரு இலங்கை தோழருக்கு கீர்த்தி பாலசூரியா எழுதிய கடிதம்

லங்கா சம சமாஜ கட்சியின் காட்டிக்கொடுப்பு
இலங்கை : மாபெரும் காட்டிக்கொடுப்பு
நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் அறிக்கை, ஜூலை 5, 1964
பியர் பிராங்கின் தாக்குதலுக்கு பதிலளிக்கும் சோசலிச தொழிலாளர் கழகத்தின் அரசியல் குழு அறிக்கை
இலங்கையில் வரலாற்றுக் காட்டிக் கொடுப்பு
இலங்கையில் ட்ரொட்ஸ்கிசமும் திரிபுவாதமும்
சமசமாஜ வரலாற்று ஏட்டிலிருந்து

தேசிய பிரச்சினைகள்
நிரந்தரப் புரட்சியும் இன்று தேசியப் பிரச்சனையும்

இலங்கையின் உள்நாட்டு யுத்தம்
1983 யூலை தமிழர்கள் எப்படி காட்டிக் கொடுக்கப்பட்டார்கள்
இலங்கை: இனவாத யுத்தத்திற்கு 25 வருடங்கள்