1970-71 ன் போது புரட்சிகர போராளியாக கீர்த்தி பாலசூரிய

By Vilani Peiris
21 December 2007

கீர்த்தி பாலசூரிய, சோசலிச சம்துவக் கட்சியின் (சோ.ச.க.) முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (பு.க.க.) 1968ல் ஸ்தாபிக்கப்பட்டதில் இருந்து 1987 டிசம்பர் 17ம் திகதி தனது 39 வயதில் அவர் அகால மரணமடையும் வரை, அதன் பொதுச் செயலாளராக இருந்தார். அவரது மரணத்தால் யுத்தத்திற்கு பிந்திய காலகட்டத்தில் வாழ்ந்த மிகவும் புத்திசாதுர்யமான ஒரு பிரதிநிதியை ட்ரொட்ஸ்கிச இயக்கம் இழந்துவிட்டது.

இந்தக் கட்டுரையில், 1970 முதல் 1971 வரை கீர்த்தியின் வாழக்கையை விலானி பீரிஸ் நினைவூட்டுகின்றார். இந்தக் காலகட்டம் பு.க.க. ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் தீர்க்கமானதாக இருந்தது. கீர்த்தி அப்போதுதான் 20 வயதை கடந்திருந்த நிலையில், இத்தகைய பரீட்சார்த்த அனுபவஙகளின் ஊடாக கட்சிக்கு தலைமை வகித்ததோடு இலங்கையிலும், தெற்காசியாவிலும் மற்றும் அனைத்துலகிலும் உள்ள உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (நா.அ.அ.கு.) முன்நோக்குக்கு முக்கியமான பங்களிப்பை செய்திருந்தார். சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினரான பீரிஸ், 1971ல் இருந்து கீர்த்தி இறக்கும் வரை அவரது துணைவியாராக இருந்தார்.

சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர்கள் (ஐ.எஸ்.எஸ்.இ.) அமைப்பும் தோழர் கீர்த்தி பாலசூரியவின் 20வது நினைவு தினத்தின் பேரில் டிசம்பர் 23ம் திகதி பி.ப. 3 மணிக்கு கொழும்பில் மஹாவலி கேந்திர நிலையத்தில் பொதுக் கூட்டமொன்றை நடத்தின.

நான் 1969ல் கட்சியின் கல்வி நடவடிக்கைகள் சம்பந்தமாக திட்டமிட நடந்த பு.க.க. கூட்டமொன்றிலேயே கீர்த்தியை முதலில் சந்தித்தேன். அது எனது சொந்த நகரான மொரட்டுவைக்கு வெளியில் நான் பங்குபற்றிய முதலாவது பு.க.க. கூட்டம் அதுவே.

கூட்டம் முடிவடையும் வரை அனைவரும் இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பதாக கூட்டத்திற்கு தலைமை வகித்தவர் ஆரம்பத்திலேயே விளக்கினார். எனது சகோதரியும் நானும் எழும்பி முன்கூட்டியே செல்ல வேண்டும் எனக் கேட்டோம். அவர் உடன்பட்ட போதிலும், கட்டம் போட்ட சேர்ட் அணிந்திருந்த இளைமையான ஒருவர் பின்னால் இருந்து எழுந்து அதை எதிர்த்தார்.

ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் தலைமைத்துவத்தில் பெண்கள் வேலைசெய்ய வேண்டும் என அழுத்தமான குரலில் வலியுறுத்திய அவர், மார்க்சிச இயக்கத்திற்கு ரோஸா லக்ஸம்பேர்க் செய்த மகத்தான பங்களிப்பையும் சுருக்கமாக விளக்கினார். அவர்தான் கீர்த்தி பாலசூரிய. அன்றைய தினம் நாங்கள் முன்கூட்டியே சென்றிருந்த போதிலும், கீர்த்தியின் குறிப்புக்களால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன்.

1969ல் பு.க.க. வகுப்புகளில் நான் பங்குபற்றினேன். அதில் இரு குழுக்கள் இருந்தன. அதில் ஒன்றுக்கு கீர்த்தி தலைமை வகித்தார். அவர் முதலாம் உலக யுத்தத்தின் போது லெனினின் "புரட்சிகர தோற்கடிப்புவாத" நிலைப்பாடு மற்றும் அதன் அரசியல் முக்கியத்துவத்தைப் பற்றி விரிவுரையாற்றினார். லெனின், இரண்டாம் அகிலத்தின் கட்சிகள் செய்த காட்டிக்கொடுப்புகளுக்கு எதிராக, ஏகாதிபத்திய யுத்தத்தை உள்நாட்டு யுத்தமாக திருப்புவதன் மூலம் தமது சொந்த முதலாளித்துவ அரசாங்கத்திற்கு எதிராகப் போராடுவது ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளர்களின் கடமை என வலியுறுத்தினார்.

பல தோழர்கள் கீர்த்தியின் மார்க்சிச வகுப்புகளால் ஈர்க்கப்பட்டனர். நான் பு.க.க. மொரட்டுவை கிளையில் இணைவதற்கு முன்னதாக, 1953 மற்றும் 1963ல் பப்லோவாத திருத்தல்வாதத்திற்கு எதிரான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (நா.அ.அ.கு.) போராட்டம் பற்றி என்னுடன் கலந்துரையாடினார். பப்லோவாதிகள் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர பாத்திரத்தை நிராகரிப்பதோடு அதன் அரசியல் சுயாதீனத்திற்கான போராட்டத்தையும் கைவிட்டு ஸ்ராலினிசத்திற்கு சரணடைந்துவிட்டனர். இலங்கை போன்ற பொருளாதார ரீதியில் பின்தங்கிய நாடுகளில், பப்லோவாதிகள் பாட்டாளிகளின் வரலாற்றுப் பணியை பலவித முதலாளித்துவ மற்றும் குட்டி முதலாளித்துவ தேசியவாத தலைவர்களுக்கு விடடுக்கொடுத்துவிட்டனர், என அவர் விளக்கினார்.

பப்லோவாதத்துக்கு எதிரான அரசியல் போராட்டத்தின் படிப்பினைகளை புரிந்துகொள்ளாமல் லங்கா சமசமாஜக் கட்சியின் (ல.ச.ச.க) காட்டிக்கொடுப்பை புரிந்துகொள்வது சாத்தியமற்றது என கீர்த்தி வலியுறுத்தினார். 1964ல் லங்கா சமசமாஜக் கட்சி, திருமதி ஸ்ரீமா பண்டாரநாயக்கவின் முதலாளித்துவ அரசாங்கத்துடனும் அவரது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனும் (ஸ்ரீ.ல.சு.க.) இணைந்துகொண்டமையானது பப்லோவாதிகளால் ஒப்புதலளிக்கப்பட்ட நீண்டகால சீரழிவின் உற்பத்தியேயாகும்.

கீர்த்தி 1970ல் புகையிரத சேவை தொழிலாளர்கள் உட்பட ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் வரலாற்றை கொண்டிருந்த முதிய தொழிலாளர்களுடன் பல கடந்துரையாடல்களை நடத்தினார். 1940களில் இந்தியத் துணைக்கண்டத்தில் நான்காம் அகிலத்தின் பகுதியாக இருந்த இந்திய போல்ஷிவிக் லெனினிச கட்சி (Bolshevik Leninist Party of India -BLPI) பி.எல்.பீ.ஐ. 1950ல் லங்கா சமசமாஜக் கட்சியினுள் கரைத்துவிடப்பட்ட பின்னர் இந்தத் தொழிலாளர்கள் அதிலும் அங்கத்தவர்களாக இருந்தனர். 1964 காட்டிக்கொடுப்பை அடுத்து, அவர்கள் சமசமாஜக் கட்சியில் இருந்து வெளியேறியதோடு பாலா தம்பு மற்றும் எட்மன் சமரக் கொடியின் புரட்சிகர லங்கா சமசமாஜக் கட்சியில் இணைந்து கொண்டனர்.

1970களில், இந்தத் தொழிலாளர்கள் ல.ச.ச.க. யின் காட்டிக்கொடுப்பால் மட்டுமன்றி புரட்சிகர ல.ச.ச.க. ட்ரொட்ஸ்கிசத்துக்கான போராட்டத்தை கைவிட்டதாலும் முற்றிலும் நம்பிக்கையிழந்தனர். பண்டாரநாயக்க அரசாங்கத்தில் இணையும் ல.ச.ச.க. யின் முடிவை தம்புவும் சமரக்கொடியும் எதிர்த்த போதிலும் அவர்கள் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவையும் அதன் ஆய்வுகளையும் நிராகரித்ததோடு தமது சொந்த தேசியவாத வேலைத்திட்டத்தை முன்னெடுத்தனர். ல.ச.ச.க. மற்றும் புரட்சிகர ல.ச.ச.க. யும் இயக்கத்துக்காக அர்ப்பணித்திருந்த நூற்றுக்கணக்கான ட்ரொட்ஸ்கிஸ்டுகளை வழிதவறச்செய்த அந்தப் பாதை தொடர்பாக ஒரு நேரடி நுழைபுலத்தை இத்தகைய கலந்துரையாடல்கள் கீர்த்திக்கு வழங்கின.

கீர்த்தி அனைத்துலகக் கட்சியொன்றின் தேவையை தனது அடிப்படையாகக் கொண்டிருந்ததோடு இலங்கையில் நா.அ.அ.கு. தலையீடு செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். நா.அ.அ.கு. வின் பிரித்தானிய பகுதியான சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் வெளியீடான நியூஸ் லெட்டரில் ல.ச.ச.க. காட்டிக்கொடுப்புக்கு எதிரான போராட்டம் பற்றி வெளியான கட்டுரைகளை தொடர்ந்தும் சுட்டிக்காட்டி வந்தார்.

சோசலிச தொழிலாளர் கழகத்தின் தேசிய செயலாளர் ஜெரி ஹீலி, 1964 ஜூனில் கூட்டரசாங்கத்தில் இணைவதற்கு முடிவெடுக்கப்பட்ட ல.ச.ச.க. மாநாட்டின் போது இலங்கைக்கு வருகை தந்திருந்தார். புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் ஸ்தாபக உறுப்பினர்களான வில்பிரட் "ஸ்பைக்" பெரேரா, சிசிர ஜயசூரிய ஆகிய இருவரும் அவரை சந்தித்தனர். கீர்த்தியை விட சில ஆண்டுகள் மூத்தவரான ஜயசூரிய, இலக்கிய பேரவை ஒன்றை ஏற்பாடு செய்துகொண்டிருந்த போது அவரது பாடசாலையான ஆனந்த கல்லூரியில் ஹீலியை சந்தித்தார்.

லியோன் ட்ரொட்ஸ்கியின் தத்துவமான நிரந்தரப் புரட்சியில் உறுதியாக நின்றிருந்த கீர்த்தி, ல.ச.ச.க. மற்றும் சந்தர்ப்பவாத புரட்சிகர ல.ச.ச.க. யின் தலைவர்களான தம்பு மற்றும் சமரக்கொடியையும் அம்பலப்படுத்துவதற்கு தனது முழுத் திறமையையும் பயன்படுத்தினார்.

1970களில் தம்பு மக்கள் விடுதலை முன்னணியுடன் (ஜே.வி.பி.) சந்தர்ப்பவாத கூட்டு ஒன்றைத் தொடங்கினார். ஜே.வி.பி. ஆனது மாவோ சேதுங், கோ சி மின் மற்றும் ஃபிடல் காஸ்ட்ரோவையும் "மார்க்சிச தலைவர்கள்" என பாராட்டித் திரிந்த, அந்த நாட்களில் "சேகுவரா இயக்கமாக" அறியப்பட்டிருந்தது. ஜே.வி.பி. இந்த ஸ்ராலினிச மற்றும் கெரில்லா இயக்கங்களின் தேசியவாத நோக்கை தமது சொந்த சிங்கள பேரினவாதத்துடன் சேர்த்துக்கொண்டது.

ல.ச.ச.க. யின் காட்டிக்கொடுப்பானது தொழிலாள வர்க்கத்தை அன்றி கிராமப்புறத்தில் உள்ள ஒடுக்கப்பட்ட இளைஞர்களை தளமாக கொண்ட ஜே.வி.பி. போன்ற கருவிகளுக்கு கதவுகளைத் திறந்துவிட்டது. இது போலவே தமிழீழ விடுதலைப் புலிகளும் தனியான அரசு கோரிக்கையை முன்வைத்துக்கொண்டு தமிழர்கள் மத்தியில் வடக்கிலும் கிழக்கிலும் தோன்றியது. புலிகளும் ஜே.வி.பி. யும் ல.ச.ச.க. பண்டாரநாயக்க அரசாங்கத்துக்குள் நுழைந்ததை ட்ரொட்ஸ்கிசத்தின் தோல்விக்கான சாட்சியாக சுட்டிக்காட்டின.

பு.க.க. வின் சிங்கள மொழி பத்திரிகையான கம்கறு புவத்தில் (தொழிலாளர் செய்தி) தொடர்ச்சியான கட்டுரைகளை கீர்த்தி எழுதியிருந்தார். "ஜே.வி.பி. யின் அரசியலும் அதன் வர்க்க இயல்பும்" எனத் தலைப்பிடப்பட்டிருந்த அந்தக் கட்டுரைத் தொடர், இந்த குழு தொடர்பாக மிகவும் சிறந்த திறனாய்வை கொண்டிருந்தன. பின்தங்கிய நாடுகளில் விவசாயிகளே "புரட்சிகரமான சக்தி" என ஜே.வி.பி. வலியுறுத்தியதற்கு எதிராக, கீர்த்தி, பல வருடங்கள் பின்னால் சென்று 1927ல் சீனப்புரட்சியின் தோல்வி பற்றிய மார்க்சிச இயக்த்தின் படிப்பினைகளை மீளாய்வு செய்தார். சோசலிச முன்நோக்கில் ஆட்சிக்கான போராட்டத்தில் கிராமப்புற மக்களையும் அணிதிரட்டிக்கொண்டு அவர்களின் ஜனநாயக அபிலாஷைகளையும் சமூகத் தேவைகளையும் இட்டு நிரப்பக்கூடிய ஒரே வர்க்கம் தொழிலாள வர்க்கம் மட்டுமே என்பதை கீர்த்தி ஸ்தாபித்தார்.

ஜே.வி.பி. தொடர்பான திறனாய்வை குறைத்து மதிப்பிட்டு நீண்ட கட்டுரைகள் கம்கறு புவத்தின் மதிப்பை குறைத்துவிடும் என வாதிட்ட பல முன்னணி உறுப்பினர்களை உட் கட்சிக் கரந்துரையாடல்களில் கீர்த்தி எதிர்த்தது எனக்கு நினைவிருக்கின்றது. எமது செய்தித்தாள் பிற்போக்கான தட்டினரை அன்றி முன்னேறிய தொழிலாளர்கள் மற்றும் புத்திஜீவி இளைஞர்களை சென்றடையவதிலேயே அக்கறை செலுத்த வேண்டும் என கீர்த்தி வலியுறுத்தினார்.

மூன்று தசாப்தங்களுக்கு முன்னதாக கீர்த்தி செய்த திறனாய்வு சரியானது என்பது ஒப்புவிக்கப்பட்டுள்ளது. தனது "மார்க்சிச" மற்றும் தீவிரவாத வாய்வீச்சுகள் அனைத்தையும் கைவிட்ட ஜே.வி.பி., இப்போது அரசியல் ஸ்தாபனத்தின் ஒரு பாகமாக இருப்பதோடு சிங்கள பேரினவாதத்தின் மிகவும் பிற்போக்கு வடிவத்தை தழுவிக்கொண்டுள்ளதோடு இனவாத யுத்தத்தை உக்கிரப்படுத்துமாறும் கோரிக்கொண்டிருக்கின்றது.

இறுதியாக கீர்த்தியின் கட்டுரைகள் புத்தகமாக வெளிவந்ததுடன் அது இளைஞர்கள் மத்தியில் பிரசித்தி பெற்றிருந்தது. அதன் பிரதிபலனாக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை அச்சுறுத்தும் முயற்சியாக ஜே.வி.பி. சரீர வன்முறைகளை நாடியது. வித்தியோதயா பல்கலைக்கழகத்தில் (இப்போது ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்) நடந்த பு.க.க. கூட்டத்தை பௌத்த பிக்குகள் உட்பட ஜே.வி.பி. ஆதரவாளர்கள் குழப்பினர். ஆயினும் கண்டியில் பேராதனை பல்கலைக்கழகத்தில், மாணவர்கள் மத்தியில் பு.க.க. வென்றுகொண்டிருந்த ஆதரவால் ஜே.வி.பி. யின் ஆத்திரமூட்டல்கள் தோல்விகண்டன.

ஜே.வி.பி. ஆத்திரமூட்டல்களை முன்னெடுத்த போதும், பு.க.க., முதலாவதாக ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் கீழும் பின்னர் 1970ல் ஆட்சிக்கு வந்த இரண்டாவது பண்டாரநாயக்க கூட்டரசாங்கத்தின் போதும் அரச ஒடுக்குமுறைகளில் இருந்து ஜே.வி.பி. யை பாதுகாக்கும் கொள்கைப் பிடிப்பான நிலைப்பாட்டை எடுத்தது. "இன்று சேகுவரா இயக்கத்தை ஒடுக்கும் சக்திகள், நாளை தொழிலாள வர்க்கத்தையும் மற்றும் ஒடுக்கப்படும் மக்களின் அமைப்புக்களையும் நசுக்கும்" என பு.க.க. கம்கறு புவத்தில் எச்சரித்திருந்தது.

ஜே.வி.பி. யின் எழுச்சி

1971 ஏப்பிரலில் ஜே.வி.பி. ஆயுதக் கிளர்ச்சியை நடத்திய போது உண்மையில் நடந்ததும் அதுவே. ல.ச.ச.க. அமைச்சர்களையும் உள்ளடக்கிய கூட்டணி அரசாங்கம் பயங்கர ஆட்சியை முன்னெடுத்ததன் மூலம் பிரதிபலித்தது. இதன் விளைவாக ஒரு மதிப்பீட்டின்படி 15,000 இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இந்த அடக்குமுறை ஜே.வி.பி. க்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. மாறாக அது அனைத்து அரசியல் எதிர்ப்புக்கும் எதிராக முன்னெடுக்கப்பட்டிருந்ததோடு பு.க.க. இரகசியமாக இயங்கத் தள்ளப்பட்டது.

பொலிஸ் மொரட்டுவையில் கீர்த்தியின் அறையிலும் நூலகத்திலும் தேடுதல் நடத்திய போதிலும் அப்போது அவர் அங்கிருக்கவில்லை. ஏப்பிரல் 13ம் திகதி குற்றப் புலனாய்வுத் துறையினர் ஆயுதம் தரித்த பொலிசாருடன் சேர்ந்து தெமட்டகொடையில் உள்ள கீர்த்தியின் அம்மாவின் வீட்டில் தேடுதல் நடத்தியதோடு அவரது குடும்ப அங்கத்தவர்களுக்கும் அச்சுறுத்தல் விடுத்தது. பு.க.க. வின் செய்திப் பத்திரிகையையும் இளைஞர் இயக்கத்தையும் தடை செய்ய அரசாங்கம் தனது அவசரகால அதிகாரங்களை பயன்படுத்திக்கொண்டது. கட்சி அலுவலகத்திலும் தேடுதல் நடத்தப்பட்டது. கண்டி சிறைச்சாலையில் இரு பு.க.க. உறுப்பினர்கள் பொலிசாரால் கொல்லப்பட்டனர்.

கீர்த்தி கொழும்பைச் சூழ பல இடங்களில் ஒழிந்திருந்து கட்சி தோழர்களதும் ஆதரவாளர்களதும் உதவியுடன் கைது செய்யப்படுவதை தவிர்த்துக்கொண்டார். இந்த அரச அடக்குமுறைக்கு மத்தியில் அவர் உற்சாகமாக செயற்பட்டது அனைவருக்கும் ஈர்ப்பை ஏற்படுத்தியது. இலங்கையிலான சமுதாய அமளி முதலாளித்துவத்தின் பரந்த சர்வதேச நெருக்கடியின் ஒரு பாகமே என்ற புரிந்துணர்வின் அடிப்படையிலேயே அவர் ஒரு புரட்சிகர முன்னோக்கில் திடநம்பிக்கை கொண்டிருந்தார்.

1971ல், அமெரிக்க ஜனாதிபதி ரிச்சார்ட் நிக்சன் அமெரிக்க டொலருக்கான தங்கத்தின் பக்க ஆதரவை முடிவுக்குக் கொண்டுவந்தார். இந்த பக்க ஆதரவு, 1944ல் பிரெட்டென் வூட்ஸ்ஸில் ஸ்தாபிக்கப்பட்ட யுத்தத்திற்கு பிந்திய ஒழுங்கின் முக்கியத் தூணாக இருந்தது. 1968 மே மற்றும் ஜூன் மாதங்களில் நடந்த பிரமாண்டமான வேலை நிறுத்தங்களால் பிரான்சில் முத்லாளித்துவத்தின் இதயமே ஆடிப்போயிருந்தது.

கீர்த்தி எந்தவொரு ஐயவாதத்தை நோக்கிய நிலைப்பாடுகளை அல்லது அரசியல் விட்டுக்கொடுப்புகளை நோக்கிய நிலைப்பாடுகளுக்கு எதிராக சளையாது போராடினார். சிசிர ஜயசூரிய உட்பட இரு முன்னணி தோழர்கள், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமானது ஜே.வி.பி. அமைப்பு அல்ல என விளக்கி கடிதமொன்றை கையளிப்பதற்காக ல.ச.ச.க. தலைவரை சந்தித்தனர் என்பதைத் தெரிந்துகொண்டவுடன் மிகுந்த கோபமடைந்தார். காலியில் எனது மறைவிடத்தில் இருந்து கீர்த்தியை சந்திப்பதற்காக வந்த எனக்கு ஸ்பைக்கின் வீட்டில் கூட்டமொன்றில் கலந்துகொள்ள வேண்டியிருந்தது.

இந்த நடவடிக்கை தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்துக்கான போரட்டத்துடன் முற்றிலும் மரண்படுவதாக கீர்த்தி வலியுறுத்தினார். லங்கா சமசமாஜக் கட்சியையும் மற்றும் அது உண்மையில் முதலாளித்துவ அரசை பாதுகாத்துக்கொண்டு தொழிலாளர் கட்சியாக பாசாங்கு செய்வதையும் பு.க.க. அம்பலப்படுத்த வேண்டும். ல.ச.ச.க. ஆளும் கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என நாம் கோர வேண்டும். அரச வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ள ஒரு அரசாங்கத்தின் பாகமாக இருக்கும் ல.ச.ச.க. யிடம் பாதுகாப்புக்காக வேண்டுகோள் விடுப்பது முற்றிலும் பிழையானது என கீர்த்தி விளக்கினார். தொழிலாளர்கள் ல.ச.ச.க. வின் பக்கம் திரும்புவார்கள் என அவர் வலியிறுத்தியதோடு ல.ச.ச.க. கூட்டரசாங்கத்தில் நுழைந்து கொணடமையானது அதன் கடைசி காலகட்டமாகும் என அவர் முன்னறிவித்தார்.

சிசிர ஜயசூரியவும் ஏனைய பல உறுப்பினர்களும் எண்ணற்ற அழுத்தங்களுக்கு உள்ளாகி கட்சியை கைவிட்ட அதே வேளை, 1970களின் முற்பகுதியின் அனுபவங்கள் முன்னுள்ள போராட்டங்களுக்கு புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்துக்கு உரமேற்றியது. கட்சியின் முன்நோக்குக்காக கீர்த்தி ஸ்பைக்குடன் நெருக்கமாக வேலை செய்தார். நந்த விக்கிரமசிங்க, கமலசிறி ரட்னாயக்க மற்றும் ஆனந்த வக்கும்புறவும் கீர்த்தியுடன் நெருக்கமாக ஒத்துழைத்தனர். சோ.ச.க. யின் தற்போதைய பொதுச் செயலாளரான விஜே டயஸ், லண்டனில் இருந்தவாறு கீர்த்தியுடன் அடிக்கடி கடிதப் பறிமாற்றங்களை செய்துகொண்டார்.

பு.க.க. தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் விநியோகிப்பதற்காக ஒரு சட்டவிரோத சஞ்சிகையை வெளியிடத் தொடங்கியது. கீர்த்தியும் நானும் மின்சாரமோ குழாய் நீரோ இல்லாத ஒரு பிற்படுத்தப்பட்ட பிரதேசத்தில் வாழ்ந்து வந்த போதிலும் நாம் பாதுகாக்கப்பட்டோம். வக்கும்புறவும் மேலும் இரு தோழர்களும் எங்களுடன் வாழ்ந்தனர்.

பு.க.க. வின் கொள்கைப்பிடிப்பான நிலைப்பாடு தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் புத்திஜீவிகளின் வளர்ச்சிகண்டுவந்த பிரதிபலிப்பை ஈர்த்துக்கொண்டது. அரசாங்க அச்சகத்திலும் கொழும்பு துறைமுகத்திலும் தொழிற்சங்கங்களின் தலைமைத்துவத்தை பு.க.க. உறுப்பினர்கள் வெற்றிகொண்டனர். மத்திய வங்கியிலும் மற்றும் புகையிரத் துறையிலும் பலமான ஆதரவு இருந்தது. கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பலரால் கீர்த்தி கலந்துரையாடல்களுக்காக அழைக்கப்பட்டார்.

அவசரகால சட்ட ஆட்சி முடிவடைந்ததை அடுத்து, கட்சி கடந்து வந்த அனுபங்கள் ஊடாக கட்சியின் அரசியல் புரிந்துணர்வை ஆழப்படுத்திக்கொள்ள கீர்த்தி முயற்சித்தார். முன்நோக்கு வரைவு ஒன்றுக்காக வேலை செய்யுமாறு பிரித்தானிய சோசலிச தொழிலாளர் கழகத்தினால் ஆலோசனை தெரிவிக்கப்படுவதற்கு முன்னதாக அவர் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் வரலாறு தொடர்பாக வேலை செய்யத் தொடங்கி இரு பாகங்களை எழுதி முடிந்திருந்தார். 1972ன் கடைப் பகுதியில் பு.க.க. வின் மூன்றாவது மாநாட்டில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட முன்நோக்கு ஆவனமானது, ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் கோட்பாட்டு போராட்டத்தை மீளாய்வு செய்ததோடு கட்சிக்குள் தேசியவாதம் நோக்கிய எந்தவொரு நிலைப்பாட்டுக்கும் எதிராக போராட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியது.

கீர்த்தியின் அரசியல் வாழ்க்கையானது 20ம் நூற்றாண்டின் மூலோபாய அனுபவங்களுடன் கட்டுண்டிருந்தது. அனைத்துலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை கட்டியெழுப்புவதன் ஊடாக சோசலிசத்துக்கான போராட்டத்துக்கு தமது திறமைகளை அர்ப்பணிக்குமாறு குறிப்பாக இளைஞர்களுக்கு அவர் ஒரு ஈர்ப்பை வழங்கினார்.

நான் 1969ல் கீர்த்தியை சந்தித்த போது, அவர் ஏற்கனவே ஒரு பண்பாடான மனிதராக இருந்தார். அவரிடம் மார்க்சிய எழுத்துக்கள் மற்றும் அரசியல் எதிர்ப்பாளர்களின் எழுத்துக்களும் அடங்கிய ஒரு நல்ல நூலகம் இருந்தது. அவர் ஸ்பைக்கின் நூலகத்தையும் பல்கலைக்கழக நூகலகத்தையும் பயன்படுத்தியதோடு நூலகம் ஒன்றை உருவாக்கிக் கொண்டு விஞ்ஞானபூர்வமாக மார்க்சிசத்தை கற்குமாறு அனைத்து தோழர்களையும் ஊக்குவித்தார்.

கீர்த்தி கலாச்சாரத்தையும் கலையையும் மிகவும் விரும்பினார். அவரது நூலகத்தில் சிறந்த இலக்கியப் படைப்புக்கள் பல இருந்தன. அவர் ரஷ்ய நாவல்களை, குறிப்பாக டொல்ஸ்டோய், டொஸ்டோவ்ஸ்கி மற்றும் புஷ்கின் போன்றவர்களின் நாவல்களை விரும்பினார். அவர் டி.எச். லோரன்ஸின் எழுத்துக்களையும் பிக்காசோவின் ஓவியங்களையும் பெரிதும் விரும்பினார். அவருக்கு சிங்கள இலக்கியம் மற்றும் புராதான இந்திய கவிதைகள் பற்றிய சிறந்த ஞானம் இருந்தது. அவர் குறிப்பாக இந்தியாவின் முதல்தரமான இசையை நேசித்தார்.

ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் இணைவதற்கு முன்னதாக, கீர்த்தி ஒரு திறமையான இளம் கலைஞனாக விளங்கினார். இலங்கையின் பிரசித்திபெற்ற புராதான கலைப் படைப்பான "இசுருமுனியே பெம்யுவல" (இசுருமுனியில் காதல் ஜோடி) பற்றி அவர் எழுதிய கவிதை, 1962ல் ஞாயிறு பத்திரிகையான சிலுமினவில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. அப்போது அவருக்கு 14 வயது மட்டுமே.

அவர் பத்திரிகைகளுக்கு கவிதைகள் எழுதிக்கொண்டிருந்ததோடு 1963ல் கவிதை நூல் ஒன்றையும் வெளியிட்டார். அவர் கலாச்சார விடயங்களை எழுதிவந்த கவுலுவ வெளியீட்டின் ஆசிரியர்களில் ஒருவராகவும் இருந்தார். குறிப்பாக "சிறைக்கைதி" என்ற பெயரில் அவர் எழுதிய சிறுகதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அது 1966ல் எழுதப்பட்டு தனும (அறிவு) சஞ்சிகையில் வெளியிடப்பட்டிருந்தது. முதலாளித்துவத்தின் கீழ் பெண்கள் சமுதாயத்தின் கைதிகள் என்பதே அந்தக் கதையின் உள்ளடக்கமாகும். ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் அவருக்கிருந்த பொறுப்புகளின் மத்தியில் அவரது கலை முயற்சிகள் முடிவுக்கு வந்திருந்த போதிலும் கலாச்சாரம் மற்றும் கலையில் அவருக்கிருந்த விருப்பத்திற்கு முடிவே இருக்கவில்லை.

அவர் உயிரிழந்து 20 ஆண்டுகள் கடந்துவிட்டன என்பதை நம்புவதே சிரமம். அவர் உயிரிழந்த பின்னர், அவர் தனது முழு இளமைக் காலத்தையும் அர்ப்பணித்திருந்த இயக்கமான பு.க.க., இப்போது சோ.ச.க. பல அபிவிருத்திகளைக் கண்டுள்ளது. இது எல்லாவற்றுக்கும் மேலாக, உலக சோசலிச வலைத் தளத்தை வெளியிடும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அனைத்துப் பகுதிகளும் மேற்கொண்ட அசாதாரணமான கூட்டுழைப்பை வெளிப்படுத்துகிறது. உலகம் பூராவும் உள்ள இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு அரசியல் கல்வியூட்டுவதற்காக எமது வலைத் தளத்தின் அன்றாட பங்களிப்பில், கீர்த்தியின் கோட்பாட்டு வேலைகளும் அரசியல் போராட்டங்களும் நீடூடி வாழ்கின்றன.

 

கீர்த்தி பாலசூரிய மறைவின் இருபதாம் ஆண்டு நிறைவு
கீர்த்தி பாலசூரிய மறைந்து இருபது ஆண்டுகள்
1970-71 ன் போது புரட்சிகர போராளியாக கீர்த்தி பாலசூரிய

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம்/சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோக்குகள்
ஸ்ரீலங்காவின் நிலைமை பற்றியும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் அரசியல் கடமை பற்றியும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அறிக்கை
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இரண்டாம் நிறை பேரவையின் ஆவணங்கள்
இலங்கை ''சமாதான பேச்சுவார்த்தையின்'' அரசியல் பொருளாதாரம்
சோசலிச சமத்துவ கட்சியும் ஸ்ரீலங்கா-ஈழம் ஐக்கிய சோசலிச அரசுகளுக்கான போராட்டமும்
சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம்

தொழிலாளர் புரட்சிக் கட்சியின் உடைவு
நான்காம் அகில சஞ்சிகையின் ஆசிரிய தலையங்கம் - மார்ச் 1987
1971 இந்தியா-பாக்கிஸ்தான் போர் குறித்த ஆவணங்கள்
லண்டனில் இருந்த ஒரு இலங்கை தோழருக்கு கீர்த்தி பாலசூரியா எழுதிய கடிதம்

லங்கா சம சமாஜ கட்சியின் காட்டிக்கொடுப்பு
இலங்கை : மாபெரும் காட்டிக்கொடுப்பு
நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் அறிக்கை, ஜூலை 5, 1964
பியர் பிராங்கின் தாக்குதலுக்கு பதிலளிக்கும் சோசலிச தொழிலாளர் கழகத்தின் அரசியல் குழு அறிக்கை
இலங்கையில் வரலாற்றுக் காட்டிக் கொடுப்பு
இலங்கையில் ட்ரொட்ஸ்கிசமும் திரிபுவாதமும்
சமசமாஜ வரலாற்று ஏட்டிலிருந்து

தேசிய பிரச்சினைகள்
நிரந்தரப் புரட்சியும் இன்று தேசியப் பிரச்சனையும்

இலங்கையின் உள்நாட்டு யுத்தம்
1983 யூலை தமிழர்கள் எப்படி காட்டிக் கொடுக்கப்பட்டார்கள்
இலங்கை: இனவாத யுத்தத்திற்கு 25 வருடங்கள்