World Socialist Web Site www.wsws.org


ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் ஹீலியின் ஆரம்ப வருடங்கள்

ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் ஹீலியின் ஆரம்ப வருடங்கள்

Back to screen version

சர்வதேச மார்க்சிச இயக்கத்தில் 1928ம் ஆண்டு, முக்கியத்துவம் நிறைந்தது ஆகும். அதற்கு முந்தைய ஆண்டில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் அக்டோபர் புரட்சியின் 10ம் ஆண்டு நினைவு தினத்தில், லியோன் ட்ரொட்ஸ்கியும், பல்லாயிரக் கணக்கான, இடது எதிர்ப்பு உறுப்பினர்களும் மற்றைய தலைவர்களும் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்தும் கம்யூனிச அகிலத்திலிருந்தும் வெளியேற்றப்பட்டிருந்தனர். பிற்போக்கு தேசியவாத வேலைத்திட்டமான "தனி ஒரு நாட்டில் சோசலிசம்" என்ற பெயரில் ஸ்ராலினிஸ்டுகளால், ட்ரொட்ஸ்கி மற்றும் இடது எதிர்ப்பாளர்களுக்கு எதிரான போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. சர்வதேச மார்க்சிச இயக்கத்தின் வளர்ச்சியில், இவ்வேலைத்திட்டத்தினால் ஏற்படுத்தப்பட்ட பேரழிவு விளைவு, தொழிலாள வர்க்கத்தால் அனுபவிக்கப்பட்ட கஷ்டங்கள், பல தொடர்ச்சியான தோல்விகள் மூலம் வெளிப்படுத்தப்பட்டன; குறிப்பாக, பிரிட்டனில், 1926ம் ஆண்டு பொது வேலை நிறுத்தம், பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் துணையுடன் சீர்திருத்தவாத தொழிற்கட்சியினாலும், தொழிற்சங்க அதிகாரத்துவத்தாலும் காட்டிக்கொடுக்கப்பட்டதும், சீனாவில் சியாங்கே ஷேக்கின் முதலாளித்துவ கோமிண்டாங்கிற்கு அடிபணிந்த நிலை நேரடியாக பல்லாயிரக் கணக்கான புரட்சிகரத் தொழிலாளர்களை 1927 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் படுகொலைக்கு இட்டுச்சென்றதிலும் இதன் விளைவுகளைக் காணமுடியும்.

மத்திய ஆசிய சோவியத்திற்கு புலம்பெயர்ந்திருந்த ட்ரொட்ஸ்கி, மாஸ்கோவில் கூடிய அகிலத்தின் ஆறாம் காங்கிரசிற்கு, அதன் வரைவு வேலைத் திட்டம் பற்றிய ஒரு விரிவான விமர்சனக் கட்டுரையை அனுப்பியிருந்தார். இதன் முதல் பகுதியின் தலைப்பு, இடது எதிர்ப்பிற்கும் ஸ்ராலினிசத் தலைமைக்கும் இடையிலான வேறுபாடுகளைப் பற்றிய வரலாற்று ரீதியான அடிப்படைப் பண்பை முன்வைத்தது: "சர்வதேசப் புரட்சி வேலைத்திட்டமா அல்லது தனி ஒரு நாட்டில் சோசலிசம் என்ற வேலைத்திட்டமா?" இதைத்தொடர்ந்து, ட்ரொட்ஸ்கி புரட்சிகப் பாட்டாளி வர்க்கத்திற்கான சர்வதேச தன்மையின் இன்றியமையாத முக்கியத்துவத்தைப் பற்றி தெளிவாக விளக்கியிருந்தார்:

"ஏகாதிபத்தியத்தின் சகாப்தமான, நம்முடைய சகாப்தத்தில், அதாவது, நிதி மூலதனத்தின் மேலாதிக்கத்திற்கு உட்பட்ட உலக பொருளாதாரம், உலக அரசியல் என்ற நிலையில் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி கூட முற்றிலுமாக அல்லது பிரதானமாக அதன் சொந்த நாட்டிலுள்ள நிலைமைகள், வளர்ச்சிப் போக்குகள் இவற்றின் அடிப்படையில் இருந்து மட்டும் தன்னுடைய வேலைத்திட்டத்தை அமைத்துக் கொள்ளவது இயலாதாகும். இது சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தின் எல்லைகளுக்குள் அரச அதிகாரத்தைச் செலுத்தும் கட்சிக்கும் முற்றிலும் பொருந்தும். 1914 ஆகஸ்ட் 14 அன்று தேசிய வேலைத்திட்டங்கள் அனைத்திற்குமே சாவுமணி அடிக்கப்பட்டுவிட்டது.(1) பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரமான கட்சி, சர்வதேச வேலைத்திட்டத்தின் அடிப்படையில்தான், இந்த சகாப்தத்தின் தன்மையையான முதலாளித்துவத்தின் மிக உயர்ந்த வளர்ச்சியினதும் பொறிவினதும் தொடர்புடன்தான் அமைத்துக் கொள்ள வேண்டும். சர்வதேச கம்யூனிச வேலைத்திட்டம் என்பது, தேசிய வேலைத்திட்டங்களின் கூட்டுத் தொகையோ அல்லது அவற்றின் பொதுக்கூறுபாடுகளின் கலவையோ அல்ல. சர்வதேச வேலைத்திட்டம், உலகப் பொருளாதாரம் மற்றும் உலக அரசியல் முறை அதன் அனைத்து தொடர்புகளுடனும் முரண்பாடுகளுடனும், அதாவது அதன் பகுதிகளின் பரஸ்பர விரோதத்தன்மை நிறைந்த தவிர்க்க முடியாத பிணைப்புக்கள் ஒட்டுமொத்தமாக அவற்றின் நிலைமைகள் மற்றும் போக்குகளின் ஆய்விலிருந்து கட்டாயம் நேரடியாகத் தொடங்கவேண்டும், இந்தச் சகாப்தத்தில், முன்பிருந்ததைவிட மிகப் பெரிய அளவில், பாட்டாளி வர்க்கத்தின் தேசிய நோக்குநிலை, உலக நோக்குநிலையிலிருந்து உருவாகுமே தவிர, எதிர்மாறானதாக இருக்காது. இங்குதான், சர்வதேச கம்யூனிசத்திற்கும் தேசிய சோசலிசங்களின் அனைத்து வகையறாக்களுக்கும் இடையிலான அடிப்படையான மற்றும் முதன்மையான வேறுபாடு அடங்கியுள்ளது." (Third International After Lenin [New York : Pathfinder, 1972] pp.3-4).

இப்பகுதியில், ட்ரொட்ஸ்கி, ஸ்ராலினிசத்திற்கு எதிரான போராட்டத்திற்கும், நான்காம் அகிலத்தை உருவாக்குவது, நான்காம் அகிலத்தினுடைய எதிர்கால பணியிற்குமான தத்துவார்த்த அடித்தளத்ததையும் நிறுவுகிறார். ஜேர்மன் தொழிலாள வர்க்கம் கம்யூனிச அகிலத்தால் காட்டிக்கொடுக்கப்பட்டதை அடுத்தும், 1933ல் அதையொட்டி ஹிட்லரின் நாஜிக்கள் வெற்றிபெற்றதை அடுத்தும் வரலாற்றுத் தேவையானது.

ஒரு புதிய அகிலம் தோற்றுவிக்கப்படவேண்டும் என்று அழைப்பு விட்டதற்கும், 1938 செப்டம்பரில் நான்காம் அகிலத்தின் ஸ்தாபித மாநாட்டிற்கும் இடைப்பட்ட முக்கியமான 5 ஆண்டு காலத்தில், ட்ரொட்ஸ்கி, தேசியரீதியான அமைப்புக்கள் வளர்க்கப்படுவதற்கு இரண்டாம் பட்சம்தான் சர்வதேச கட்சி என கருதப்பட்டதையும், அதன் பாரிய முக்கியத்துவத்தை இழிவுபடுத்தும் அனைத்துப் போக்குக்களையும் எதிர்த்து தொடர்ந்து போராடிய வண்ணம் இருந்தார்.

தன்னுடைய அரசியல் விழிப்புணர்வின் ஆரம்ப கட்டத்தில், ஹீலி அகிலத்தின் (கோமின்ரேர்ன்) கொள்கைகள் பற்றிய ட்ரொட்ஸ்கியின் விமர்சனங்களைப் பற்றி முழுமையாக அறிந்திருந்தாரா என்பது ஒருபுறமிருக்க, அதைப்பற்றித் தெரிந்தாவது இருந்தாரா என்பது எதிர்பார்ப்பதற்கில்லை. மிக வறிய பின்னணி நிலையில் இருந்து, ஓர் இளம் கப்பல்பணியாளர் (Seaman) பின்னணியிலிருந்து வந்திருந்த இவருடைய அரசியல் மற்றும் முறையான கல்வியே பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியில் நுழைந்ததன் பின்னர்தான் தொடங்கியது. மேலும், 1928ல் மூன்றாம் அகிலத்தின் ஆறாம் காங்கிரசிலிருந்து, ட்ரொட்ஸ்கியின் விமர்சனத்தின் பிரதியை அமெரிக்காவிற்கு ஜேம்ஸ் பி. கனன், இரகசியமாகக் கடத்திக் கொண்டுவந்த பின்னர்தான், இடது எதிர்ப்பின் பணி, சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கே தெரிய ஆரம்பித்தது.

வருந்தத்தக்க வகையில், நாமறிந்தவரை ஹீலி எத்தகைய விதத்திலும் தன் வாழ்க்கை சுயசரிதை குறிப்பையும் எழுதியிருக்கவில்லை; கம்யூனிஸ்ட் கட்சிக்குள் அவர் ஆற்றிய பணியைப் பற்றியும், அதேபோல் எந்தச் சூழ்நிலையில் அவர் ஸ்ராலினிஸ்டுகளால் வெளியேற்றப்பட்டு, ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் சேர்ந்தார் என்பது பற்றியும் நம்மிடையே எழுத்துமூலமான ஆவணங்கள் இல்லை. சில சந்தர்ப்பத்தில், ஜேர்மனிக்கு கம்யூனிச அகிலத்துக்காக தகவல்கள் எடுத்துச் சென்றதைப் பேச்சோடு பேச்சாகக் கூறுவார்; அவர் கப்பல் பணியாளராக இருந்ததைக் கருத்திற்கொண்டால், இத்தகைய வேலை அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று எடுத்துக்கொள்ள இடமுண்டு. பிரிட்டனின் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டதைப் பொறுத்தவரை, ஸ்பெயின் நாட்டில், ஸ்ராலினிசக் கொள்கை பற்றி ஸ்ராலினிசத் தலைவர் ஹாரி போலிட்டிடம் கேள்விகள் எழுப்பியதும், ட்ரொட்ஸ்கி மீது ஜோடிக்கப்பட்டதை அம்பலப்படுத்தும் மாக்ஸ் ஷட்மனின் மிகச்சிறந்த துண்டுப்பிரசுரங்களினால் எழுந்த மாஸ்கோ வழக்குகள் பற்றியும், ஸ்பானியப் புரட்சியை ஸ்ராலினிச மக்கள் முன்னணி காட்டிக்கொடுத்தது பற்றியும் தான் கேள்விகள் எழுப்பியதை காரணங்களாகக் கூறினார்.

ஹீலி ஒரு ட்ரொட்ஸ்கிஸ்டாக ஆகிறார்

ஸ்ராலினிசக் கட்சியிலிருந்து எந்தச் சூழ்நிலைகளில் அவர் வெளியேற்றப்பட்டிருந்தாலும்கூட, 1937 இறுதிக்குள், பிரிட்டனில் தன்னை ஒரு சுறுசுறுப்பான, ஊக்கம் மிகுந்த ட்ரொட்ஸ்கிசத்திற்காகப் போராடுபவராக அவர் நிலைநிறுத்திக்கொண்டு விட்டார். ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்குள், மிக முந்தைய காலத்திலிருந்தே அவர் கிட்டத்தட்ட வற்றாத ஆக்கமும் ஊக்கமும் பெற்றிருந்து, மிக நேர்த்தியான முறையில் அமைப்பு திறன்களைக் கொண்டிருந்தார் என்பதையும் அவருடைய கடுமையான, கசப்பான அரசியல் விரோதிகளும், தனிப்பட்ட விரோதிகளும்கூட மறுத்ததில்லை. ஹீலியே, அடிக்கடி கம்யூனிஸ்ட் கட்சிக்குள் கணிசமான அளவு பாட்டாளி வர்க்க காரியாளர்களுக்கு மக்களிடையே பணிசெய்ய பயிற்சியளிக்கப்பட்டதன் மூலம், தான் பெற்றிருந்த தன்னுடைய பழைய அனுபவங்கள்தான் தன்னுடைய அமைப்புத் திறனுக்குக் காரணம் எனக் கூறுவார். தனிப்பட்ட உரையாடல்களில், அவர் அடிக்கடி, ட்ரொட்ஸ்கிச இயக்கத்துள் இயங்கியபொழுது பெற்ற சொந்த வசதியற்ற உணர்வு பற்றி கூறுவார்; அக்காலத்தில் இவ்வியக்கத்தில், முக்கியமாக மத்தியதர வர்கத்திலிருந்து, அதிக நடைமுறைத் தெளிவில்லாமலும், தொழிலாள வர்க்கத்துடன் தொடர்பற்றவர்களின் குறைந்த செயல்களை கூடத் தங்கள் திறமையற்ற வழியினால் கெடுத்துக் கொண்டிருந்த ஒரு சிறுபிரிவு புத்திஜீவிகள் நிறைந்திருந்தனர். இங்குதான், ஹீலியின் "பிரச்சார வாதத்தின்" பால் கொண்டிருந்த வெறுப்பின் மூலம் அடங்கியிருந்தது; புரட்சிக் கருத்துக்கள் மீது முற்றிலும் செயலற்ற (அமைதிவாத) ஆதரவைக் கொடுத்துக்கொண்டு, புரட்சிகரமான சொற்றொடர்களை அமைத்துக் கொண்டு, தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களில் ஈடுபாடு கொள்ளாமல் தொடர்பற்று வெறுமே இருத்தலை அது வாழ்க்கை முறையாகக் கொண்டிருந்ததாக அவர் அடையாளம் கண்டிருந்தார். இத்தகைய "பிரச்சார வாதத்திடம்" அவர் கொண்டிருந்த விரோதப்போக்கு, ஸ்ராலினிச, சமூக ஜனநாயக ஆதிக்கத்தை சவால்விடும் மற்றும் தொழிலாள வர்க்க இயக்கத்திடையே ட்ரொட்ஸ்கிசக் கோட்பாடுகள் மலர்ச்சியுறப் பாடுபடும் ஆழ்ந்த உந்துதலுடன் கட்டுண்டிருந்தது, தங்கள் சக்திக்கு அப்பால் உள்ளது என்று அது நம்பியிருந்த இலக்குகளை அடைவதற்கு, ஹீலியை காரியாளருக்கு உந்துதல் கொடுக்க அது ஊக்குவித்தது. ஆனால், இங்குதான் இவருடைய பிந்தைய அரசியல் வாழ்வின் உரசலும் இருந்தது; பிரச்சாரவாதம் பற்றிய அவருடைய போராட்டம், நடுத்தரவர்க்கம் புத்திஜீவிகளின் செயலற்ற தன்மையில் மட்டும் காட்டப்படாமல், எல்லாக் காலத்தும் உண்மையான புரட்சிப் பணிக்கு அடிப்படையாக இருக்கவேண்டிய வேலைத்திட்டங்களின் கோட்பாடுகள் மீதும் இருந்தது.

1937ல் ஹீலி நுழைந்த ட்ரொட்ஸ்கிச இயக்கம், மிகப்பெரிய அரசியல் கஷ்டங்களினால் எதிர்கொள்ளப்பட்டது. அப்பொழுதுதான், சோவியத் ஒன்றியத்திற்குள் ஸ்ராலினிச பயங்கரம் மற்றும் சர்வதேச அளவில் அதன் ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்கெதிரான பிரச்சாரத்தின் உச்சகட்ட நிலையும் இருந்தன. பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சி, மிகுந்த உற்சாகத்துடன் மாஸ்கோ விசாரணைகளையும், அதைத் தொடர்ந்து லெனினுடைய மிக நெருங்கிய தோழர்கள் மீதான இரக்கமற்ற படுகொலைகளையும் ஆதரித்திருந்தது. ஒவ்வொரு நாளும், ஸ்ராலினிச Daily Worker பத்திரிகை "ட்ரொட்ஸ்கிசப் பாசிஸ்டுகளை" வெறித்தனமாக கண்டனத்திற்கு உட்படுத்தியதுடன், நான்காம் அகிலத்தினுடைய ஆதரவாளர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுமாறும் தொழிலாளர்களைத் தூண்டிவிட்டது. பல பத்தாண்டுகளுக்குப் பின்னரும்கூட இவர் வெளியேற்றப்படுவதற்குமுன் பல ஆண்டுகள் நெருக்கமாக இணைந்து உழைத்திருந்த தோழர்கள் இவர் ட்ரொட்ஸ்கிச பத்திரிகைகளை விற்பதைப் பார்க்கும்பொழுது முறையாக, "இதோ வருகிறார் மோஸ்லி, இதோ வருகிறார் மோஸ்லி" என்று கோஷமிடுவர் என மிகுந்த மனக்கசப்புடன் நினைவு கூர்வார்.(2) கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக் கூட்டங்களில், ஹீலி எப்பொழுதும் குறுக்கிட்டு, ஸ்ராலினிஸ்டுகளின் குற்றங்களையும், காட்டிக்கொடுப்புக்களையும் கண்டனத்திற்கு உட்படுத்துவார்; இத்தகைய முயற்சிகளுக்காக அவர் அடியாட்களால் அகற்றப்பட்டு நுழைவாயில் படிகளில் தூக்கியெறியப்பட்டு வெகுமதிகளைப் பெறுவார். இதைப் பற்றிச் சிறிதும் பொருட்படுத்தாமல், சோவியத் ஒன்றியத்தின் வெளிநாட்டுக் கொள்கைகளின் தேவைகளுக்காக, கம்யூனிஸ்ட் கட்சி முறையாக கட்சி வழியை மாற்றிக்கொண்டு செயல்கள் புரிந்தது என்பதைப் பட்டியலிட்டு ஏராளமான உதாரணங்களைக் கொடுத்து, ஸ்ராலினிச காரியாளர்கள் அவமானப்படுவதைப் பார்த்து களிப்படைவார். ஒரு ஞிணீவீறீஹ் கீஷீக்ஷீளீமீக்ஷீ விற்பனையாளரிடம் ஹீலி கைக்கடிகாரத்தைப் பார்த்தபடி, "இப்பொழுது மணி பிற்பகல் 4:03, டிசம்பர் 9, 1939. ஹிட்லருடன் உடன்பாடு பற்றி உன் கட்சியின் நிலை என்ன? எதுவும் மாறுவதற்குமுன், சீக்கிரம் எனக்குப் பதில் சொல்." என கேட்பார்.

சர்வதேசத் தொழிலாளர் கழகம்

இத்தகைய வெளிச் சவால்களைத் தவிர, ட்ரொட்ஸ்கிச இயக்கம் உள் குழுவாத உறவுகளின் சூழ்நிலையில், உட்பிரிவுகளின் பூசல்களையும், அவற்றை ஒட்டிய தவிர்க்கமுடியாத மிகக் கசப்பான வடிவங்களினாலும் பெருந்துன்பத்திற்கு ஆளாகியிருந்தது. 1937ம் ஆண்டு இறுதியில், நான்கிற்கும் குறையாத  Marxist League, Marxist Group, Militant Labour League, Lee Group -- என ட்ரொட்ஸ்கிசப் போக்குகள் இருந்தன; இதில் Lee Group, Workers International League என்ற பெயரை அமைத்துக் கொண்டது. இத்துடன்தான் ஹீலி, ஜோக் ஹாஸ்டன் (Jock Haston), டெட் கிராண்ட் (Ted Grant), பெட்டி ஹாமில்டன் (Betty Hamilton) ஆகியோரோடு தானும் சேர்ந்து இணைந்தார்.

நான்காம் அகிலத்தின் ஸ்தாபக மாநாடு தொடங்கப்பட இருக்கும்போது, ட்ரொட்ஸ்கியும், அனைத்துலக செயலகமும் பல பிரிட்டிஷ் குழுக்களையும் ஒன்றுபடுத்த உறுதியான முயற்சிகளை மேற்கொண்டனர். பிரிட்டனுக்குள், முக்கியமான பிரச்சினைகள் பற்றி, தந்திரோபாயங்களில் கருத்துவேறுபாடுகள் இருக்கும் என்பதை உணர்ந்தும், ஓர் ஒற்றை பிரிட்டிஷ் பகுதியை நிறுவுவதற்கு அடிப்படை தரக்கூடிய, நான்காம் அகிலத்தினுடைய நிறுவன ஆவணத்தில் ட்ரொட்ஸ்கி விவரித்துள்ள உலக வேலைத்திட்டத்தை ஏற்கவேண்டுமென்று அனைத்துலக செயலகம் வலியுறுத்தியது. உலக வேலைத்திட்டத்தின் அடிப்படையில், ஒன்றுபட்ட பிரிட்டிஷ் இயக்கம், ஜனநாயக மத்தியத்துவ வகையில், தேசிய தந்திரோபாய பிரச்சினைகள் பற்றிய வேறுபாடுகளை தீர்த்துக்கொள்ளலாமென்றும் கூறப்பட்டது.

ஸ்தாபக மாநாட்டிற்கு முன்பாகவே, ட்ரொட்ஸ்கிசப் போக்குகளை ஒன்றுபடுத்துவதற்கான முயற்சிகளைச் செயல்படுத்த அமெரிக்காவிலிருந்து ஜேம்ஸ் பி. கனன் இங்கிலாந்திற்குச் சென்றார். ஆனால், WIL/Lee குழு, ஒன்றுபட்ட அமைப்பிற்கான தேசிய வேலைத்திட்டம் மீது முதலில் உடன்பாடு காணாவிட்டால், ஒன்றிணைதல் இயலாத காரியம் என்று கூறிவிட்டதால், கனனுடைய முயற்சிகள் வெற்றிகரமாக முடியவில்லை. கனனுடைய முயற்சிகளுக்கு ஹீலியே, வெளிப்படையான விரோதப்போக்கைக் காட்டினார்; முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து, அவர் களிப்புடன் "கனன் நான்கு குழுக்களை ஏழு குழுக்களாக ஒன்றுபடுத்தினார்" என்றார்.

தேசிய வேலைத்திட்டத்தில் உடன்பாடு என்பதை, ஒன்றிணைதலுக்கு இன்றியமையாத தேவை என்று வலியுறுத்தியதோடு மட்டுமல்லாமல், சர்வதேச தொழிலாளர் கழகம் (Workers International League) தான்தான் செயலளவிலும், சமூக அமைப்பின்படியும் ட்ரொட்ஸ்கிச நெறியுடையது என்று சொல்லக்கூடிய மிகத்திறமை வாய்ந்த பாட்டாளி வர்க்கப் போக்குகளை உடையது என்றும் வலியுறுத்தியதன் மூலம், அனைத்துலக செயலகத்தின் முயற்சியை நிராகரித்ததை நியாயப்படுத்தியது. இருந்த போதிலும்கூட, அனைத்துலக செயலகம் Workers International League உடன் சமரசம் செய்து கொள்ள மறுத்துவிட்டது. நான்காம் அகிலத்துக்கான தன்னுடைய போராட்டத்தை, ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கெதிராக எவ்வாறு விஞ்ஞானபூர்வமான முறையிலான சர்வதேசியத்தை அடிப்படையாகக் கொண்டு அமைத்திருந்தாரோ அதேபோல்தான் அமைத்திருந்தார். இதற்கு முந்தைய சில ஆண்டுகளில், பிரிட்டனில் தனது குறுகிய நடைமுறைத்தேவைகளின் செயல்களுக்காக, மத்தியவாத அரசியலை தளம் கொண்டு, சர்வதேசக் கொள்கைகளுக்கு கீழ்ப்படிய தொடர்ந்து மறுத்திருந்த, சுதந்திர தொழிற் கட்சியின் பென்னர் பிராக்வேயுடன் ட்ரொட்ஸ்கி கடுமையாகப் போராடியிருந்தார். இப்பொழுது, ஸ்தாபக மாநாடு தொடங்கப்படுமுன் அத்தகைய பார்வையையே Workers International League இடம் நான்காம் அகிலம் எதிர்கொள்ள நேரிட்டது. பிரிட்டிஷ் தொழிலாள வர்க்கத்தின் மீது உலகத்திலேயே மிகப்பழையதும், மிகுந்த அனுபவமுடையதுமான முதலாளித்துவத்தின் அழுத்தம்தான், இந்த தேசியப்பார்வைக்கு ஆதாரம் என்பதை ட்ரொட்ஸ்கி புரிந்து கொண்டார். இத்துடன் சமரசம் செய்து கொண்டால், விரைவில் நான்காம் அகிலம் சிதைந்து போவதற்கான விதைகளை விதைப்பது போலாகும் என்று அவர் கருதினார். Workers International League ஐப்பற்றி ஒரு கடுமையான கண்டனத்தை எழுதினார்:

"இச்சூழ்நிலைகளின் கீழ், லீ குழுவுடன் தொடர்புடைய தோழர்களுக்கு, அவர்களைச் சேற்றில் தள்ளக்கூடிய, கோட்பாடற்ற குழு அரசியல் பாதையில் அவர்கள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள் என்பதைப் பற்றிய எச்சரிக்கையை விடுவது தேவையாகிறது. மகத்தான கோட்பாடுகளின் அடிப்படையில்தான், முக்கியத்துவம் வாய்ந்த புரட்சிகரமான அரசியல் குழுக்களை வளர்க்கவும், தக்கவைத்துக் கொள்ளவும் முடியும். நான்காம் அகிலம் மட்டும்தான் இத்தகைய கொள்கைகளை பிரதிநிதித்துவம் செய்து, தன்னுள் பொதியவைத்துள்ளது. உலகெங்கிலுமுள்ள அதேபோன்ற சிந்தனையாளர்களிடம் ஒரே அமைப்பில் உறுதியான தொடர்பைக் கொண்டிருந்து, அவர்களுடன் இடைவிடாத அரசியல் மற்றும் தத்துவார்த்த ஒத்துழைப்பையும் கொண்டிருந்தால்தான், ஒரு தேசியக் குழுவினால் தொடர்ந்து புரட்சிகரமான பாதையை அமைத்துக் கொள்ளமுடியும். நான்காம் அகிலம் ஒன்றுதான் அத்தகைய அமைப்பு ஆகும். சுத்தமான அனைத்து தேசியக் குழுக்களும், சர்வதேச அமைப்பு, அதிகாரம், கட்டுப்பாடு, இவற்றை நிராகரிக்கும் அனைத்தும் சாராம்சத்தில் பிற்போக்கானவையே." (Documents of the Fourth International [New York: Pathfinder, 1973], p.270)

இந்த எச்சரிக்கை Workers International League ஆல் நிராகரிக்கப்பட்ட போதிலும், ஹீலி, அரசியல் வாழ்வில், ஒரு ட்ரொட்ஸ்கிஸ்டாக வளர்ச்சிகண்டதில் இது ஒரு சிறந்த அனுபவத்தைப் பிரதிபலித்தது. நான்காம் அகிலத்திற்குள் அவர் ஒரு முக்கிய தலைவர் என எழுச்சி பெறும் முன்பு, சந்தர்ப்பவாதத்தின் மிகுந்த மறைமுகமான, ஆபத்தான தன்மையான தேசிய வேலையின் நடைமுறைத் தேவைகளுக்காக சர்வதேசக் கொள்கைகளை கீழ்ப்படுத்துதல் என்னும் முக்கிய பிழையை முதலில் உணர்ந்து கொள்ளவேண்டியிருந்தது. உண்மையில், ஹீலியின் பிந்தைய சீரழிவும், ட்ரொட்ஸ்கிஸ்டாக இருந்தபோது ஆரம்ப வருடங்களில் இவர் வருத்திக் கற்றுக்கொண்ட படிப்பினைகளை நிராகரித்ததோடு தொடர்புடையது.

அனைத்துலக செயலகம் முன்மொழிந்த 1938 ஒன்றிணைப்பிற்கு எதிராக Workers International League முன்வைத்த வாதங்களில் ஒன்று, இந்த ஒன்றிணைப்பு தான் திரட்டிய இளைய, அனுபவமற்ற பாட்டாளி வர்க்கத்தின் காரியாளர்களை, புரட்சிகர சோசலிச கழகத்தில் (Revolutionary Socialist League) மேலாதிக்கம் செய்வதாக கூறிக்கொள்ளும் குட்டி முதலாளித்துவ பிரிவுகளின் நம்பிக்கையிழக்க வைக்கும் கன்னைவாதத்தின் தாக்கத்திற்கு உட்படுத்திவிடும் என்பதாகும். இந்த வாதம் Workers International League உடைய உள்வாழ்க்கை உத்தியோகபூர்வ பிரிவைவிடச் சற்றும் குறையாத பிரிவாக இருந்ததால் மதிப்புக்குறைவிற்கு உட்படுகிறது. 1943ம் ஆண்டின் ஆரம்பத்திலேயே, கிரான்ட், ஹாஸ்டன் ஆகியோரின் தலைமையோடு தெளிவான அரசியல் உள்ளடக்கம் இல்லாத வேறுபாடுகளால் அவர்களுடன் முரண்பாடான நிலையில்தான் ஹீலி இருந்தார். 1943 பெப்ரவரி 7ம் தேதி, பலமுறை Workers International League இலிருந்து முறித்துக்கொள்வேன் என அச்சுறுத்திய பின்னர், அதன் மத்திய குழுவிடம் அரசியல் வேறுபாடுகளுக்காக இல்லாமல் ஹாஸ்டன், லீ, கிராண்ட் ஆகியோருடன் தனிப்பட்ட முறையில் ஒத்துழைத்து பணியாற்றமுடியாது என்பதால் தான் அமைப்பிலிருந்து விலகிக் கொள்வதாக ஹீலி தெரிவித்தார். Workers International League இதற்கு விடையிறுக்கும் வகையில், ஹீலியைக் கட்சியைவிட்டு வெளியேற்றியது. விரைவில் பின்னர் இவர் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டாலும் கூட, அரசியல் குழுவிலும், மத்திய குழுவிலும் மற்றும் அமைப்பின் செய்தித்தாளின் ஆசிரியர் குழுவிலும் ஹீலி தன்னுடைய இடத்தை இழந்தார்.

சோசலிச தொழிலாளர் கட்சி

அப்போதிருந்த போர் சூழ்நிலைகளில் நான்காம் அகிலத்தினுடைய விவகாரங்களில் முன்னணிப்பங்கைக் கொண்டிருந்த அமெரிக்காவிலிருந்த சோசலிசத் தொழிலாளர் கட்சியின் (SWP) தலைமையிடத்தின் தலையீடு இல்லாவிட்டால் ஹீலி இந்த அரசியல் நெருக்கடியிலிருந்து, தப்பித்தே இருக்கமுடியாது. தேசியவாத நோக்குநிலையின் விளைவுதான் இந்த Workers International League உடைய உட்பிரிவுகளின் கசப்பான பிளவுகளுக்கு காரணம் என்பதையும், நான்காம் அகிலத்தினுடைய பிரிவாக மாறி, தன்னுடைய தனித்தன்மையை பிரிட்டிஷ் குழு விட்டு ஒழித்தால் ஒழிய அதன் உள்முரண்பாடுகள் அரசியல்ரீதியாக தெளிவுபடுத்தப்பட முடியாது என்ற உறுதிப்பாட்டிற்கு அது வந்திருந்தது. 1943ம் ஆண்டு மார்ச் 18 அன்று, சோசலிச தொழிலாளர் கட்சியின் உறுப்பினரான லூ கூப்பர், Workers International League க்கு ஒரு கடிதம் எழுதி, பிரிட்டனில் அனைத்து ட்ரொட்ஸ்கிசப் போக்குகளும் ஒன்றுபடுவதற்கான எதிர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தினார். பிரிட்டிஷ் தொழிலாளர்கள் இயக்கத்தில் எவ்வளவு வியக்கத்தக்க முறையில் Workers International League உடைய பணிகளும், சிறப்புக்களும் இருந்த போதிலும், அவர்களுடைய அமைப்பு ஜனநாயக மத்தியத்துவத்தின் அமைப்புரீதியான கோட்பாடுகளின் அடிப்படையில், நான்காம் அகிலத்திற்கு உட்பட்டுச் செயல்பட்டால் அன்றி அதனுடைய உறுப்பினர்கள் மார்க்சிஸ்டுகளாகப் பயிற்சிபெற முடியாது என்று அதில் வலியுறுத்திக் கூறப்பட்டது. சர்வதேச இயக்கத்தின் ஆளுமைக்கு அது காட்டும் குரோதத்தினால் உருவாகக்கூடிய நீண்டகால விளைவுகளைப் பற்றியும் கூப்பர் Workers International League க்கு எச்சரிக்கை விடுத்தார்.

"இந்தப் பிரச்சினையில் Workers International League காட்டும் பொதுவானபோக்கு, போல்ஷிவிக் அமைப்பு தொடர்பான நிரூபிக்கப்பட்டுள்ள வழிமுறைகளை அதன் புதிய உறுப்பினர்களுக்கு பிழையாக கற்றுக்கொடுப்பதாகத்தான் உள்ளது. தற்போதைய Workers International League பார்வையின் விரிவடைதலின் மிக முக்கியமான விளைவுகளில் இதுவும் ஒன்றாக இருக்கக் கூடும். உறுப்பினர்கள், வருங்காலக் கருத்துவேறுபாடுகளையும், பிளவுகளையும் Workers International League க்கு உள்ளேயே எவ்வாறு தீர்த்துக் கொள்வது என்பதை அறியாமற் போய்விடக்கூடும். Workers International League லிமீணீரீuமீ தன்னுடைய புதிய உறுப்பினர்களுக்கு கற்பித்துள்ளவிதம், தோழர்களைக் கொண்ட குழுக்கள் அமைப்பிலிருந்து விலகி, "நான்தான் அரசன். என்னை அவ்வாறு ஏற்றுக் கொள்வீராக" என்று வருங்காலத்தில் உரத்த குரலில் கூவிக்கொண்டு செல்லக்கூடும் என்றால், அது மிகையாகாது."

"அல்லது, Workers International League சமுதாயத்தின் வருங்கால நெருக்கடிகள், தன் உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் ஒரேமாதிரியாக தாக்கும் என்ற கருத்தைக் கொண்டுள்ளது போலும். அல்லது எந்த விதமான எதிர்ப்பு பிரிவுகளும் ஒருபொழுதும் தோன்றாது எனச் சிலர் நம்புகின்றனர் போலும். இந்தக் காலகட்டத்தில், அப்படிப்பட்ட உறுப்பினர்கள் அவ்வாறே நம்பி, அத்கைய அற்புதம் நிகழட்டும் என்று பிரார்த்தனைகூடச் செய்து கொள்ளட்டும் என்றுதான் நான் இப்பொழுது சொல்லமுடியும். வேறுபாடு தோன்றுவதன் முதல் அடையாளம் வந்தவுடன், இப்பிரச்சினையின் பிழையான போதனைகள் அனைத்துமே, இவ்வமைப்பின் பொறுப்பான உறுப்பினர்களின் முகத்தின்மீது பாய்ந்து திரும்பி வந்துதான் தாக்கும். உங்கள் உறுப்பினர்களை, சோதிக்கப்பட்டு, ஆராயப்பட்டு, நிரூபிக்கப்பட்டுவிட்ட போல்ஷிவிக் அமைப்பு முறைகளில் படிப்பினைகளைக் கற்றுக்கொடுக்கவில்லை என்றால், உண்மையான நெருக்கடிக்காலங்களில் நீங்கள் போல்ஷிவிக்-லெனினிஸ்டுக்களை கொண்டிருக்கபோவது கிடையாது."

பல வருடங்களுக்குப் பின்னர், 1985 கோடை மற்றும் இலையுதிர்காலங்களில், இந்த எச்சரிக்கை அப்பொழுது முழுமையாக சர்வதேசக் கொள்கைகளிலிருந்து பிறழ்ந்து தொழிலாளர் புரட்சிக் கட்சியை தேசியவாதத்தால் மேலாதிக்கம் செய்யப்படும் ஓர் அமைப்பாகத் தோற்றுவித்து, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுக்குள் இருக்கும் தோழமையான பிரிவினரை இகழ்ச்சியுடன் கருதிவந்திருந்த ஹீலியை திரும்பத்தாக்கியது. தொழிலாளர் புரட்சிக் கட்சி சிதைவை எதிர்நோக்கியிருந்தாலும், ஹீலியும் கட்சித் தலைமைக்குள் இருந்த அவருடைய கன்னைவாத எதிராளிகளும் பிரிட்டிஷ் அமைப்பில் உள்நின்று வெடிக்கும் தன்மை பெற்றிருந்த அரசியல் பிரச்சினைகளுக்குத் தெளிவு கண்டு, அதை அழிவிலிருந்து காப்பாற்றியிருக்கக் கூடிய ஒரே சக்தியான அனைத்துலகக் குழுவின் ஆளுமையை நிராகரித்தனர்.

பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் ஒன்றிணைதல்

ஆனால், 1943ம் ஆண்டு, சோசலிசத் தொழிலாளர் கட்சியின் தலையீடு, ஹீலியின்பால் ஆழ்ந்த விளைவைக் கொண்டு, அவருடைய அரசியல் வளர்ச்சியில் ஒரு திருப்புமுனையைக் குறித்தது. சோசலிச தொழிலாளர் கட்சி மற்றும் நீண்டகாலம் பலனுள்ள தொடர்புகளைக் கொண்டிருந்த ஜேம்ஸ் பி. கனன் உதவியுடன் ஹீலி, ஹாஸ்டன்-கிராண்ட் தலைமையின் தேசியவாத நிலைப்பாட்டிற்கு எதிரான சர்வதேசியத்திற்கான போராட்டத்தைத் ஆரம்பித்தார். ஆகஸ்ட் 10 1943ல் ஹீலி "நம்முடைய மிக முக்கியமான பணி" என்ற தலைப்பில் ஓர் ஆவணத்தை அளித்து, நான்காம் அகிலத்தால் முன்மொழியப்பட்ட பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் ஒன்றுபடவேண்டும் என்பதை எதிர்த்திருந்த தலைமைக்கு எதிராகக் கருத்துக்களைக் கூறினார். ஹீலி பின்வருமாறு எழுதினார்:

"நான்காம் அகிலத்தின் பதாகை மற்றும் அதன் அடிப்படை இவற்றின்கீழ் சர்வதேசப் புரட்சியாளர்களை மறு குழுவாக இணைத்துக் கொண்டுவந்தது, மார்க்சிய இயக்கத்திற்கு தோழர் ட்ரொட்ஸ்கி வழங்கிய மிக முக்கியமான பங்களிப்புகளுள் ஒன்றாகும். இதை நாம் ஒருபொழுதும் மறக்கலாகாது. நாம் எவ்வளவு சிறியவராகவும், வலிமையற்றவராகவும் இருந்தாலும் உலகம் முழுவதும் பெரிய அளவில் பலபிரிவுகள் அமைந்து வலிமையாக வளர்ந்து கொண்டு வருகின்றோம். ஏற்கனவே, 'சோசலிசப் புரட்சியின் உலகக்கட்சி' இரத்தமும் சதையும் பெற்று, ஆயிரக்கணக்கில் பெருகிவரும் ஒடுக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் பயன்தரும் அமைப்பாக உள்ளது. நம்முடைய தலையாய பணி, இந்த மாபெரும் இயக்கத்தைக் கட்டி அமைத்து, வலுப்படுத்துவதாகும்.....

"மரபுவழியிலான ட்ரொட்ஸ்கிச அமைப்பை வலுப்படுத்தி, அது ஏற்கனவே தொடங்கியுள்ள போராட்டத்திற்கு வலிமை தரவேண்டியது மிகவும் முக்கியம் என்பதால், நான்காம் அகிலத்தின் அதிகாரபூர்வமான பிரிவாக இருக்க வேண்டியதின் சிறப்பைப்பற்றி நம்முடைய உறுப்பினர்களுக்கு விளக்குவதே, இந்த ஆவணத்தின் முக்கிய நோக்கமாகும். 1933லிருந்து ட்ரொட்ஸ்கிசத்தின் சர்வதேச வரலாற்றை ஏற்றோமானால் (நான்காம் அகிலத்தில் புது உருவெடுத்துள்ள போல்ஷிவிக்கின் வரலாறுதான் இது), பின், நாம் அகிலத்தினுடைய பிரச்சினையை குழுவின் மிக முக்கியமான பிரச்சினையாக எடுத்துக் கொள்ளவேண்டும். செய்தி ஊடகம், தொழிற்துறை வேலை, அமைப்புரீதியான நடவடிக்கைகள் ஆகிய குழு வளர்ச்சியின் ஏனைய பிரச்சினைகள் அனைத்துமே இந்த அகிலத்துடன் நாம் எடுக்கக் கூடிய நிலைப்பாட்டைப் பொறுத்துத்தான் தொடர்புடையதாக இருக்கும். போல்ஷிவிக்குகளுடைய அரசியல் கோட்பாடுகளை நாம் ஏற்கிறோம் என்றால், நாம் அமைப்பு ரீதியான வழிமுறையையும் ஏற்கவேண்டும். நான்காம் அகிலத்தினுடைய திட்டத்தை ஏற்கிறோம் என்று கூறிவிட்டு, புரட்சிகர சோசலிசக் கழகத்தை (RSL) விட அதை நாம் சிறந்த முறையில் விளக்க முடியும் என்று கூறுவதால் மட்டுமே, அதனுடைய அமைப்பு முறைகளை ஏற்காமல் பேசிப் பயனில்லை; இதன் பொருள் நாம் அகிலத்துடன் இணைந்து, அதன் ஜனநாயக மத்தியத்துவ அடிப்படையையும் ஏற்க வேண்டும்; நாம் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் என்று கூறிக்கொண்டு ட்ரொட்ஸ்கிசக் கோட்பாடுகளை நன்கறிந்து, அமைப்பு முறையிலுள்ள ட்ரொட்ஸ்கிஸ்டுகளை விடக் கூடுதலாகத் தெரிந்து கொண்டுள்ளோம் என்று சொல்வது போலன்றி, ட்ரொட்ஸ்கிச கட்சியில், அதன் ஜனநாயக மத்தியத்துவக் கட்டுப்பாட்டை ஏற்று, அதில் சேரவேண்டும். அப்பொழுதுதான் போல்ஷிவிக் நிறுவன அமைப்பு முறைகள் என்பதின் பொருள் சரியாகும்." (வலியுறுத்தல் ஆசிரியருடையது).

ஹாஸ்டனின் தீவிர எதிர்ப்பு இருந்தபோதிலும் இறுதியில் ஒன்றிணைப்பு சாதிக்கப்பட்டு, புரட்சி கம்யூனிஸ்ட் கட்சி (Revolutionary Communist Party) 1944 மார்ச் மாதம் தோற்றுவிக்கப்பட்டது. ஹாஸ்டன், கிராண்ட் ஆகியோரின் தலைமையிலான தேசியப் போக்கு மேலாதிக்கம் செய்த புதிய அமைப்பில் ஹீலி சிறுபான்மையில்தான் இருந்தார். நீட்டிக்கப்பட்ட காலத்திற்கு, அவரை அரசியல் குழுவில் பிரதிநிதியாகச் சேர்த்துக்கொள்ளவில்லை; எப்படி ஹாஸ்டன் தலைமை, தன்னை அமைப்பு ரீதியில் மட்டமான துன்புறுத்துதல்களுக்கு உட்படுத்தும் என ஹீலி அடிக்கடி நினைவுகூர்வது உண்டு. ஆனால், பழைய Workers International League இல் இருந்த நிலைமையைப் போலன்றி, புரட்சி கம்யூனிஸ்ட் கட்சியில் எழுந்த பிரச்சினைகள், நான்காம் அகிலத்தின் பரந்த வடிவமைப்பிற்குள்ளே, இரண்டாம் உலகப் போர் முடிந்தபின் விளைந்த சர்வதேச முன்னோக்குகளின் அடிப்படைப் பிரச்சினைகளின் தன்மையில் தீர்க்கப்படவேண்டும் என்று ஆயிற்று. ஒற்றுமைக்கு விராதப்போக்கு கொண்டிருந்தபோதிலும் புரட்சி கம்யூனிஸ்ட் கட்சி இன் தலைவராக இருந்த ஹாஸ்டன், மோரோ, கோல்ட்மன் தலைமையில் சோசலிச தொழிலாளர் கட்சிக்குள் இருந்த வலதுசாரி குட்டிமுதலாளித்துவப் போக்குடன் விரைவில் இணைய இருந்தார்; இப்பிரிவு, போருக்குமுன் கொண்டிருந்த ட்ரொட்ஸ்கியால் முன்னெடுக்கப்பட்ட முன்னோக்குகள் தவறென நிரூபிக்கப்பட்டுவிட்டதாக வலியுறுத்தியதுடன் ஐரோப்பியப் புரட்சி ஏற்படத் தவறிவிட்டது என்றும் நீட்டிக்கப்பட்ட மீள் ஸ்திரப்படுத்தப்பட்டுவிட்ட முதலாளித்துவத்தைக் கருத்திற்கொண்டு நான்காம் அகிலம் செயலாற்றவேண்டும் என்றும், பழைய புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தைக் கைவிட்டு அடிப்படை ஜனநாயகக் கோரிக்கைகளை ஏற்கவேண்டும் என்றும் வலியுறுத்தியது. மோரோ-கோல்ட்மன் கன்னை எழுப்பிய தேவைகளின் சாரம் என்னவென்றால், ஒரு சீர்திருத்தவாத சமூக ஜனநாயகப் போக்குகளுக்குள் நான்காம் அகிலம் கரைக்கப்படவேண்டும் என்பதாகும். ஒப்பீட்டளவிலான ஒரு குறுகிய காலப்பகுதியில், இதனுடைய முக்கிய தலைவர்கள் மார்க்சிச முகாமைக் கைவிட்டு ஏகாதிபத்திய முகாமிற்கு விரைவிலேயே நுழைந்ததின் மூலம் அடிப்படையிலேயே பிற்போக்குத்தன்மை கொண்ட இந்தப் போக்கு தெளிவாக அம்பலப்படுத்தப்பட்டது.

கனன், சோசலிச தொழிலாளர் கட்சி, அனைத்துலகச் செயலகம் அனைத்துடனும் ஹீலி நெருக்கமாக இணைந்து ஹாஸ்டனுக்கு எதிரான நீண்டகாலப் போராட்டம் முழுவதும் பணியாற்றினார். லூ கூப்பர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த கருத்துக்களுக்குத் தான் ஆதரவு கொடுப்பதாக பிரகடனப்படுத்தியதிலிருந்து, ஹீலியை எப்பொழுதும் கனனுடைய அரசியல் முகவர் என ஹாஸ்டன் வாதிகள் இடித்துரைத்து வந்தனர். ஹாஸ்டனுக்கு எதிரான ஹீலியின் நிலைப்பாடு, கனனுடைய புத்திக் கூர்மையால் ஆரம்பிக்கப்பட்ட பிரிட்டிஷ் தலைமைக்கு எதிரான அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சியினுடைய சதித்திட்டத்தின் முனை என்று அடிக்கடி கண்டனத்திற்கு உள்ளாயிற்று. 40 ஆண்டுகளுக்குப் பின்னரும்கூட ஹாஸ்டனின் ஆதரவாளர்கள், ஹீலியை அவருடைய தேசியக்குழுத் தொடர்புகளுக்கு "காட்டிக் கொடுப்புக்கு" மன்னிக்கவில்லை. பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்கு ஏற்பட்ட அனைத்து துயரங்களுக்கும் நான்காம் அகிலம்தான் காரணம் என்று கூறும் சமீபத்தில் வெளிவந்திருக்கும் War and the International: A History of the Trotskyist Movement in Britain  1937-1949, என்ற புத்தகம் கோபத்துடன், "ஹீலி சிறுபான்மையினரின் நடவடிக்கை ஹாஸ்டன் தலைமைக்கு, அவர்கள் சோசலிச தொழிலாளர் கழகத்தினாலும், பின்னர் ஐரோப்பியத் தலைமையினாலும் தூண்டி விடப்படுகின்றனர் என்ற எண்ணத்தைக் கொடுக்கும் வகையில்தான் நடந்து வருகின்றனர் என்ற எண்ணத்தை கொடுத்தது" என்று உறுதிபடக் குறிப்பிடுகிறது. (Bornstein and Richardson [London, 1986], ஜீ. 197). இதன் ஆசிரியர்கள், கனனுடன் ஹீலியின் தொடர்பைப் பற்றிப் பழைய ஹாஸ்டன் வாதிகளின் வழக்கமான கண்டனம் போன்றதையே மேற்கோளிட்டுக் காட்டுகின்றனர். பெர்ட் அட்கின்சன்: "எப்பொழுதுமே இந்தக் கருத்தும் உணர்வும் எனக்கு தோன்றியதுண்டு, இவர் (ஹீலி) கூறும் கருத்துக்கள் அனைத்துமே, அமெரிக்கப் பகுதியும் அமெரிக்காவின் கனன் கோஷ்டியும் இவருக்கு ஊட்டிவிடுபவை, ஹீலிக்கு நம்முடன் உறுதியான தத்துவார்த்த வேறுபாடுகள் இருந்ததில்லை --இருந்ததே இல்லை எனக் கூறமுடியும்." (Ibid.).

மோரோ-கோல்ட்மன் கன்னைக்கு எதிராக நடத்திய போராட்டத்தில் ஹீலியை, ஹாஸ்டன் குழு நடத்தியமுறை பற்றிக் குறிப்பிட்டுக் கனன் பின்வருமாறு தெரிவிக்கிறார்: 1945 அக்டோபரில் சோசலிச தொழிலாளர் கழகத்தின் தேசியக் குழுவின் கூட்டத்தொடரில் மோரோவிடத்திலும் கோல்ட்மனிடத்திலும் கனன் கேட்டார், "இங்கிலாந்தில் உங்களுடைய நண்பர்கள் எப்படிப்பட்ட கட்சியின் ஆட்சிமுறையைக் கொண்டுள்ளார்கள் தெரியுமா? ஹீலி தலைமையிலான சிறுபான்மைக் குழு அங்கு இருக்கிறது, அவருடைய குற்றங்கள், சர்வதேச செயற்குழுவின் ஒற்றுமைவழியில் இருக்கவேண்டும் என்பதை அவர் ஆதரித்தார், Workers International League உடைய குறுகிய தேசியவாதத்திலிருந்து முறித்துக் கொண்டார், உண்மையான சர்வதேசியவாதியானார், அவர்களுடைய தேசியக் கறையை நிராகரித்தார். மற்றும் பொதுவாக சோசலிச தொழிலாளர் கட்சியின் அரசியல் நிலைப்பாட்டிற்கு பரிவுணர்வு காட்டி வருகிறார் என்ற உண்மையைக் கொண்டிருக்கிறது."

"இவர்கள் ஹீலியைப்பற்றி என்ன கூறுகிறார்கள் என்று தெரியுமா? சோசலிச தொழிலாளர் கழகத்தின் கைக்கூலி என்று; அதாவது, விரோதி நாட்டின் உளவாளி என்று". (James P. Cannon Writings and Speeches, 1945-47 [New York, Pathfinder Press, 1977],p.182).

1940கள் முழுவதும், ஹீலியினுடைய ஹாஸ்டன் குழுவை எதிர்த்த போராட்டம் தொடர்ந்து, உச்சக்கட்டமாக 1949ல் இவர் பிரிட்டிஷ் இயக்கத்தில் பெரும்பான்மையை வெற்றிகண்டதில் முடிவுற்றது. அந்தக் காலத்தினுள், ஹாஸ்டன் குழுவின் வலதுசாரிப்போக்குத் தன்மை முற்றிலுமாக அம்பலப்படுத்தப்பட்டுவிட்டதோடு ஹாஸ்டன் புரட்சிகர மார்க்சிசத்தைத் துறக்கும் விளிம்பில் நின்றிருந்தார், உண்மையில் பெப்ரவரி 1950ல் துறந்திருந்தார். இதன்பின்பு, நான்காம் அகிலத்தில், அமைப்பிற்குள்ளேயே நின்று அதன் நடவடிக்கைகளைத் தகர்க்க முயன்றுவந்த பப்லோவிற்கு எதிரான தீவிரப் போராட்டங்களின் இடையே கனன், பிரிட்டனில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வளர்ச்சிக்காக, ஹாஸ்டன் குழுவோடும் போராட வேண்டியதின் முக்கியத்துவத்தை ஹீலிக்கு வலியுறுத்தி ஒர் கடிதம் எழுதினார்: "உண்மையான பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றை எழுதவேண்டும் என்று எவரேனும் ஈடுபட்டால், உங்கள் குழு ஹாஸ்டன் ஆதிக்கத்திலிருந்து இறுதியாக வெளியேறித் தனித்து தன் பணியை ஆரம்பித்த நாளும், தேதியும்தான் தொடக்கப் புள்ளி எனக் குறிப்பிடுவர். அதற்கு முன்னால் நடந்தவை அனைத்துமே வீணடிக்கப்பட்ட வாய்ப்புக்களும் பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிச வரலாற்றுக்கு முந்தைய பகுதியுமாகும்" (Trotskyism Versus Revisionism, vol.I [London: New Park Publications, 1974], p.262).

ஹீலியின் வாழ்க்கையில், அவர் ஹாஸ்டன் குழுவிற்கு எதிராகப் போராடியது அவருடைய சொந்த அரசியல் வளர்ச்சியிலேயே ஒரு திருப்பு முனையாக இருந்திருந்தபோதிலும், கனன் கூறுவதுபோல், பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் முழுமையிலும் அவ்வாறே இருந்த போதிலும்கூட, பிரிட்டிஷ் இயக்கத்தில் 1950, 1960 மற்றும் 1970 களில் சேர்ந்திருந்த சக்திகளுக்கு Workers International League இனுள் நடந்த மிகமுக்கியமான போராட்டங்களின் படிப்பினைகளைப் பற்றியும், 1944க்குப் பின்னர் ஹாஸ்டன், கிரான்ட் இவர்களுடைய சர்வதேசியதிற்கெதிரான கருத்துக்களை எதிர்த்த புரட்சி கம்யூனிஸ்ட் கட்சி உடைய போராட்டங்களின் படிப்பினைகளைப் பற்றியோ முறையாகக் கற்றுக்கொடுக்க முயற்சிக்காமல் போனது முக்கியத்துவம் வாய்ந்த புதிரேயாகும். இந்த வகையினால், சோசலிசத் தொழிலாளர் கழகத்திலும் அதனுடைய வழித்தோன்றலான தொழிலாளர் புரட்சிக் கட்சியிலும் தேசிய-சந்தர்ப்பவாதப் போக்குகள் வளருவதற்கு அவர் உதவியாக நின்றார். அமெரிக்காவில் ட்ரொட்ஸ்கிசத்திற்கான போராட்டம் (The Struggle for Trotskyism in the United States) என்று சோசலிச தொழிலாளர் கட்சி (Socialist Workers Party) யின் தோற்றம் மற்றும் வளர்ச்சிபற்றி 1942ல் கொடுத்த விரிவிரைகளின் அடிப்படையில் கனன் வெளியிட்ட புத்தகத்தோடு ஒப்பிடக் கூடிய வகையில், பிரிட்டனில் புத்தகம் இல்லை. இந்தப் பொருளைப்பற்றி ஹீலி பொதுக்கூட்டங்களிலோ அல்லது கட்சிக் கூட்டங்களிலோ பேசியதில்லை. இதைப்பற்றி, 1966 துண்டுப் பிரசுரமான நான்காம் அகிலத்தின் பிரச்சனைகள் (Problems of the Fourth International) இல் ஹாஸ்டனுக்கு எதிரான போராட்டங்களில் தொடர்பு உடைய முக்கியமான பிரச்சினைகளைப் பற்றி காரியாளர்கள் அறிந்து கொள்ளக் கூடியவை மிக மிகக் குறைவாகவேதான் எழுதவும் பட்டிருந்தது.

ஹாஸ்டனின் தேசியவாதத்திற்கு எதிரான போராட்டம் பற்றிய ஹீலியின் எழுத்துக்களில், சோசலிச தொழிலாளர் கட்சி மற்றும் கனன் Workers International League இற்குள் நிலவிய சர்வதேசப் போக்கின் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்கு பற்றி அதிகம் குறிப்பிடப்படவில்லை. கனனுடைய பங்கு பற்றி ஏற்றுக்கொண்ட கருத்து ஒரே ஒரு சொற்றொடரில் முடிந்துவிட்டது: "சோசலிச தொழிலாளர் கட்சி உறுப்பினர்கள், நமக்கு இந்த நெருக்கடிக் காலமான 1943-1949 வரை ஹாஸ்டன் குழுவினருக்கு எதிரான போராட்டத்தில் மிகவும் துணையாக நின்றனர்." (Problems of the Fourth International [New York: Labour Publications, 1972], p.29). ஹாஸ்டனின் எதிர்ப்பை மீறி நான்காம் அகிலத்தில் நுழைந்தமை Workers International League இற்குள் இருந்த உள்நாட்டு உட்பூசலைப் பற்றியதன் விளைவு போலும் என படிப்பவர்கள் நினைக்கக் கூடிய முறையில்தான் ஹீலியின் குறிப்பு அமைந்திருத்தது என்பதற்கு உதாரணமாக 1966ல் அவர் எழுதியிருந்த "இப்பொழுதுள்ள சோசலிச தொழிலாளர் கழகத்தின் தலைவர்கள் சிலர், தங்கள் தவறுகளை மறு ஆய்வு செய்து, இயக்கத்திற்குள் அதன் தோற்றத்தைப்பற்றி விளக்கினர்" என்ற குறிப்பைக் கூறமுடியும். லூ கூப்பர் கடிதம் பற்றியோ, ஹாஸ்டனுக்கு எதிரான போராட்டத்தை புரட்சிகர முன்னோக்குகள் பற்றிய நான்காம் அகிலத்திற்குள் நிகழ்ந்த பரந்த போராட்டங்களுடன் இணைத்தோ குறிப்புக்கள் இந்த எழுத்துக்களில் இல்லை. துண்டுப் பிரசுரத்தின் பின்பகுதியில், பின்னர் ஸ்பார்ட்டாசிஸ்ட் போக்கை அமெரிக்காவில் தோற்றுவித்த ஜேம்ஸ் ரொபேர்ட்சனுக்குத் தான் 1962ல் எழுதிய கடிதம் ஒன்றிலிருந்து, Workers International League இற்குள் நடந்த சில போராட்டங்கள் பற்றிய குறிப்புக்கள் சிலவற்றை மேற்கோளிட்டுக் காட்டியுள்ளார். ஆனால் இந்தப் பத்தியிலும்கூட, பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் ஐக்கியத்திற்கு "நியூயோர்க் தோழர்களிடமிருந்து வந்த ஆலோசனைகள்" என்று சில கருத்துக்கள் குறிப்பிட்டிருந்தாலும், இந்த ஒற்றுமைக்கான செப்டம்பர் 1943ல் Workers International League மாநாட்டில், போராடி ஹீலி நுழைந்தபின் வந்தது என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. நாமோ, முன்னரே 1943 மார்ச்சில் கூப்பர் எழுதிய கடிதம்தான் ஒற்றுமைக்கான புதுப்பிக்கப்பட்ட முயற்சிகளைத் தொடங்கியது என்று பார்த்திருக்கிறோம்.

பின்னர் சோசலிச தொழிலாளர் கட்சி, ட்ரொட்ஸ்கிசத்திற்கு 1950களிலும் 1960களிலும் செய்த காட்டிக்கொடுப்பு பற்றிய ஹீலியின் பிரதிபலிப்பு தொடர்பாக, இந்த சர்வதேசப் போராட்டத்தின் முக்கிய கட்டத்தினை அவர் திரிப்பதை தள்ளிவிடுவதற்கில்லை. சொல்லப்போனால், சோசலிச தொழிலாளர் கட்சியின் சீரழிவிற்கு எதிரான எந்தப் போராட்டமும், ஹீலியை அதன் தலைவர்கள் மார்க்சிசத்தின் விரோதிகளுக்கு எதிராக பாதுகாக்கும் முயற்சியில் ஒரு சமயம் இணைந்து ஈடுபட்ட அந்நிலைப்பாடுகளை ஞாபகப்படுத்த வற்புறுத்தியிருக்க வேண்டும். மாறாக, ஹாஸ்டனுக்கு எதிரான போராட்டத்தின் படிப்பனைகளை மீளாய்வு செய்ய தொடர்ச்சியாகத் தவறியது மற்றும் பிரிட்டிஷ் பகுதியின் வளர்ச்சியில் சர்வதேசியவாதிகள் ஆற்றிய முக்கிய பங்கு பற்றி மறுத்தது, இவரே தன்னைப்பற்றியும் குறிப்பிட்டுக் கொள்ளாதது, அரசியலளவில் இவர் முன்பு போராடியிருந்த அதே தேசியப் பார்வை ஏற்கப்படும் தன்மையைத்தான் குறிக்கிறது என விளக்கியாக வேண்டியுள்ளது.

அமைப்பின் முழு வரலாறு பற்றியும் கற்பிக்காமல் ஒரு காரியாளரை பயிற்றுவிப்பது இயலாதது; ஹீலி இந்த முக்கிய கடமையைச் செய்வதில் தோல்வியுற்றமை பின்னர் பேரழிவு தரும் அரசியல் விளைவுகளை ஏற்படுத்தியது. இறுதியாக, ஹாஸ்டன் பிரிவுடைய சக்திவாய்ந்த தேசிய போக்குத்தான், சில பழைய காரியாளர்களைத்தவிர, 1940களின் போராட்டங்கள் பற்றி எதுவும் தெரிந்திராத தொழிலாளர் புரட்சிக் கட்சி (WRP) காரியாளர்களிடையே கடுமையான ஆதிக்கம் செலுத்திய தன்மையைக் கொண்டிருந்தது. இறுதியில் தொழிலாளர் புரட்சிக் கட்சி வளைந்து சூழ்ந்துவிட்ட தேசியவாதத்தின் அரசியல் உருவகப் படிவந்தான், ஷீலா டோரென்ஸ் தலைமையில் இருந்த தொழிலாளர் புரட்சிக் கட்சி ஹீலியைப்பற்றிய இரங்கற்குறிப்பை எழுதியபோது Workers International League இற்கு மிகுந்த புகழாரம் சூட்டியதுடன், நான்காம் அகிலத்தின் பகுதியாக அது இருக்கவில்லை என்பது பற்றி எந்தக் குறிப்பும் இல்லாமல், ஹாஸ்டன் மற்றும் அவருடைய தேசிய குழுவிற்கு எதிரான போராட்டதைப் பற்றியும் எதையும் எழுதாமல் போனதிற்குக் காரணமாகும்.


1. இரண்டாம் அகிலத்தில் மிகப்பெரியதும், மிகுந்த செல்வாக்குப் படைத்ததுமான ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சி, ஏகாதிபத்திய அரசாங்கம் பின்னர் முதல் உலகப்போர் என்று அழைக்கப்பட்ட போரில் ஈடுபட போர்ச் செலவினங்களுக்கு ஆதரவாக வாக்களித்தது. பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தின் காட்டிக் கொடுப்பும் முதலாளித்துவ வர்க்க "தேசியப் பாதுகாப்பு" வேலைத் திட்டமும் வருங்காலத்தில் சோசலிசம் அடையப்படுவதற்கு, ஜேர்மனியப் பொருளாதாரம், பண்பாடு இவற்றின் தேசியச் சாதனைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்ற கருத்தின் பேரில் நியாயப்படுத்தப்பட்டது. ஐரோப்பாவில், பெரும்பாலான சமூக ஜனநாயக கட்சிகளும் இதேபோன்ற தேசியவெறி நிலைப்பாட்டைக் கொண்டன. ஆகஸ்ட் 4, 1914ல் ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சி முக்கிய பங்கினைக் கொண்டதால், வரலாற்றில் இந்தத் தேதி இரண்டாம் அகிலத்தின் பொறிவு என்று கொள்ளப்படுகிறது.

2.சேர் ஒஸ்வால்ட் மோஸ்லி, பிரிட்டிஷ் பாசிச யூனியனின் தலைவராக இருந்தவர்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved