World Socialist Web Site www.wsws.org


The Historical and International Foundations of the Socialist Equality Party (Sri Lanka)—Part  9

சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று சர்வதேசிய அடித்தளங்கள் (இலங்கை) -பகுதி 9

By the the Socialist Equality Party (Sri Lanka)
4 April 2012

Back to screen version

20. இரண்டாவது கூட்டணி அரசாங்கத்தின் வீழ்ச்சி

20-1. 1971 ஜே.வி.பி.யின் எழுச்சியுடன், அதிகரித்துவந்த பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை எதிர்கொண்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி - லங்கா சமசமாஜ கட்சி - கம்யூனிஸ்ட் கட்சி அரசாங்கம், அரச ஒடுக்குமுறையை விரிவுபடுத்துவதன் மூலமும் சிங்கள இனவாதத்துக்கு எரியூட்டுவதன் மூலமும் அதற்கு தனது பிரதிபலிப்பை காட்டியது. 1956ல் சிங்களம் மட்டும் கொள்கையை எதிர்த்த கொல்வின் ஆர். டி சில்வாவே, 1972ல் அரசியலமைப்பு விவகார அமைச்சராக இருந்து, புத்த மதத்தை அரச மதமாகவும் சிங்கள மொழியை மட்டும் உத்தியோகபூர்வ மொழியாகவும் உத்தியோகபூர்வமாக பிரகடனம் செய்த புதிய அரசியலமைப்பை வரைவதில் மையப் பாத்திரம் ஆற்றினார். அரசத்துறை தொழில்வாய்ப்பிலும் பல்கலைக்கழக அனுமதியிலும் தமிழ் மக்களுக்கு எதிராக பாரபட்ச நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் போன்ற தமிழ் கட்சிகளும் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போன்ற பிரதான பெருந்தோட்டத் தொழிலாளர் அமைப்பும் புதிய அரசியலமைப்பை கசப்புடன் எதிர்த்ததோடு தமிழர் ஐக்கிய முன்னணி (TUF) என்பதை அமைத்தனர். இதுவே 1975ல் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியாக (TULF) மாற்றப்பட்டது.

20-2. 1973-74 எண்ணெய் அதிர்ச்சிகளும் உலக பொருளாதார மந்தநிலையும் இலங்கை மீது கடும் தாக்கத்தை ஏற்படுத்தின. உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிப்பு, குறிப்பாக எண்ணெய் மற்றும் உணவு இறக்குமதியில் விலையேற்றம், ஒரு கூர்மையான அந்நியச் செலாவணி நெருக்கடியை ஏற்படுத்தியது. இதற்கு நிதி அமைச்சர் என்.எம். பெரேரா, உணவு இறக்குமதி மீது கடும் கட்டுப்பாடுகள், அரிசி போக்குவரத்தில் அரசின் ஏகபோக உரிமை மற்றும் சம்பளக் கட்டுப்பாடு போன்றவற்றை உள்ளடக்கிய தேசியப் பொருளாதார ஒழுங்குமுறையை விரிவாக்கினார். பெருந்தோட்டப் பகுதிகளில் வேலையின்மை, தொழில் நிரந்தரமின்மை மற்றும் விலைவாசி அதிகரிப்பும் கடுமையான வறுமைக்கும் நூற்றுக்கணக்கானவர்களின் பட்டினிச் சாவுக்கும் வழிவகுத்தது. இதற்கு சிறிமாவோ பண்டாரநாயக்க, 1974ல் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியுடன் செய்துகொண்ட உடன்படிக்கையின் ஊடாக பலாத்காரமாக தோட்டத் தொழிலாளர்களை மீண்டும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கையை துரிதப்படுத்துவதன் மூலம் எதிர்வினை ஆற்றினார். கூட்டணி அரசாங்கத்தின் மீது விரிவடைந்த பகைமை, ஒரு போர்க்குணமிக்க தொழிலாள வர்க்க போராட்ட அலையை உருவாக்கியது.

20-3. 1970ல் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் அரசியல் நிலைப்பாடு பற்றிய தெளிவுபடுத்தல், அபிவிருத்தியடைந்து வரும் வெகுஜன இயக்கத்தில் கட்சி தலையீடு செய்வதற்கு தீர்க்கமானதாக நிரூபணமானது. லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியும் ஸ்ரீ.ல.சு.க.யில் இருந்து முறித்துக்கொண்டு தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்துக்காகவும் சோசலிசக் கொள்கைகளுக்காகவும் போராட வேண்டும் என்று புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் முன்வைத்த கோரிக்கை, கூட்டணி அரசாங்கத்தை கடுமையாக எதிர்த்த தொழிலாளர்களின் கணிசமான தட்டினரின் உணர்வுகளை ஈர்த்தது. இரத்மலானை புகையிரத வேலைத் தளங்களிலும், மத்திய வங்கி மற்றும் அரசுக்குச் சொந்தமான துல்ஹிரிய ஆடைத் தொழிற்சாலையிலும் குறிப்பிடத்தக்களவு தொழிற்சங்க அணிகளை அமைக்க கட்சியால் முடிந்தது. மற்றும் அது யாழ்ப்பாண குடாநாட்டில் சீநோர் தொழிற்சாலையிலும் குழுவொன்றை அமைத்தமை, சிங்கள மற்றும் தமிழ் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கான அதன் போராட்டத்தை பிரதிபலித்தது.

20-4. அரசாங்கத்தின் நெருக்கடி மோசமடைந்த நிலையில், சிறிமாவோ பண்டாரநாயக்க ஜனநாயக-விரோத வழிமுறைகளை நாடினார். ஸ்ரீ.ல.சு.க. தலைமையிலான அரசாங்கம், 1972 அரசியலமைப்புச் சபையில் அதற்கிருந்த அறுதிப் பெரும்பான்மையைப் பயன்படுத்தி 1977 வரை இரண்டு ஆண்டுகளுக்கு தனது ஆட்சிக் காலத்தை எதேச்சதிகாரமான முறையில் நீடித்துக்கொண்டது. ஜே.வி.பி. எழுச்சியின் போது திணிக்கப்பட்ட அவசரகால நிலைமையை அது நடைமுறையில் வைத்திருந்ததோடு ஊடகங்கள் மற்றும் அரசியல் எதிரிகளின் வாயை அடைப்பதற்காக அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்திக்கொண்டது. பொருளாதார கொள்கைகள் சம்பந்தமான வேறுபாடுகள் வளர்ச்சி கண்ட நிலைமையில், சிறிமாவோ  பண்டாரநாயக்க 1975ல் லங்கா சமசமாஜ கட்சி அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ததோடு தீவை வெளிநாட்டு முதலீட்டுக்கு திறந்துவிடுவதை குறிக்கோளாகக் கொண்ட முதல் நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கினார்.

20-5. 1975 செப்டெம்பரில் அரசாங்கத்தில் இருந்து லங்கா சமசமாஜக் கட்சி வெளியேற்றப்பட்டதில் இருந்து, 1977 ஜூலையில் அது அழிவுகரமாக தோல்வியடைந்தது வரையான காலப்பகுதி, 1968ல் இருந்து சர்வதேச அளவில் இடம்பெற்ற புரட்சிகர எழுச்சிகளின் பாகமாக, இலங்கை முதலாளித்துவத்துக்கும் பெரும் அரசியல் நெருக்கடி கொண்ட காலகட்டமாக இருந்தது. சிறிமாவோ பண்டாரநாயக்கவின் சிக்கனக் கொள்கைகள் வேலைநிறுத்த அலைகளை பெருக்கெடுக்கச் செய்ததோடு, அவற்றில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் மேலும் மேலும் முனைப்பான பாத்திரம் ஆற்றியது. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் தலையீட்டையிட்டு கவலைகொண்ட அரசாங்கம், பாராளுமன்றத்தில் கட்சியை பகிரங்கமாகத் தாக்கியது. இந்த நிலைமைகள் 1976 பிற்பகுதியில் உச்சக்கட்டத்தை அடைந்தன. நவம்பரில், பேராதனைப் பல்கலைக் கழகத்தில் ஒரு மாணவன் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ததற்கு எதிராக நடந்த பரந்தளவிலான மாணவர்களின் ஆர்ப்பாட்டங்களில் பத்தாயிரக்கணக்கான தொழிலாளர்களும் இணைந்துகொண்டார்கள். 1976 டிசம்பரில் இருந்து, ரத்மலானை புகையிரத வேலைத் தளங்களில் பணிகள் நிறுத்தப்பட்டதுடன் தொடங்கிய ஒரு பொது வேலை நிறுத்த இயக்கம், புகையிரத பகுதி பூராவும் துரிதமாக பரவியது. அரசாங்கம் வேலை நிறுத்தத்தினை தடை செய்த போதிலும் அது ஏனைய பொதுத் துறை தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்துக்கே ஊக்குவிப்பு கொடுத்தது. வாரக்கணக்காக சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கத்தின் தலைவிதி ஊசலாடிக் கொண்டிருந்தது.

20-6. தொழிலாள வர்க்கத்தின் உறுதியான எதிர்த்தாக்குதலை எதிர்கொண்ட  முதலாளித்துவ ஆட்சியின் உயிர்பிழைப்பு லங்கா சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் புரட்சிகர லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர்களில்தான் தங்கியிருந்தது, அவர்கள் வெகுஜன இயக்கம் எந்தவகையிலும் ஆட்சியைக் கைப்பற்றுவதை நோக்கி அபிவிருத்தியடைய விடாமல் டுத்தனர், வேலை நிறுத்தக்காரர்களுக்கு எதிரான பொலிஸ் அரச நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்துக்கொண்டு அரசாங்கத்தில் நீடித்திருந்த கம்யூனிஸ்ட் கட்சி, வேலை நிறுத்தம் நசுக்கப்பட்ட பின்னர் 1977 பெப்பிரவரியிலேயே ஆளும் கூட்டணியை விட்டு வெளியேறியது. வேலை நிறுத்த இயக்கம் அரசியல்-அற்றது என பிரகடனம் செய்த லங்கா சமசமாஜக் கட்சி தலைவர்கள், வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்களுக்கு ஆதரவளிக்க மறுத்தனர், அல்லது சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கத்தை பதவியிறக்க எந்தவொரு அழைப்பும் விடுக்க மறுத்தனர். புரட்சிகர லங்கா சமசமாஜ கட்சி தலைவர் பாலா தம்புவின் கீழ் இருந்த சி.எம்.யூ. (Ceylon Mercantile Union) வேலை நிறுத்தத்தில் பங்குபற்ற மறுத்ததோடு சி.எம்.யூ. உறுப்பினர்களை அணிதிரட்ட புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் எடுத்த முயற்சிகளையும் எதிர்த்தது.

20-7. லங்கா சமசமாஜக் கட்சியும் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியும் தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்துக்கும் மற்றும் சோசலிசக் கொள்கைகளுக்கும் போராட வேண்டும் என்று புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் முன்வைத்த கோரிக்கையை தாக்குவதில் புரட்சிகர லங்கா சமசமாஜ கட்சியும் அதில் இருந்து பிரிந்து சென்ற பல்வேறு குழுக்களும் தீர்க்கமான பாத்திரம் ஆற்றின. ஆட்சியைக் கைப்பற்றக் கோருவதன் மூலம் சீர்திருத்தவாத கட்சிகளான லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி சம்பந்தமாக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் மாயையை உருவாக்கிவிடுவதாக துல்சிறி அந்திராதி விமர்சித்தார். எவ்வாறெனினும், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் முன்வைத்த கோரிக்கையானது, இந்தக் கட்சிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதை குறிக்கோளாகக் கொண்டதல்ல. மாறாக, லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியிடம் இன்னமும் மனமின்றி தலைமையை எதிர்பார்த்திருக்கும் தொழிலாள வர்க்கத்தில் சோசலிச-எண்ணம் கொண்ட தட்டினர் மீது அவர்கள் கொண்டுள்ள பிடியை அகற்றுவதை இலக்காகக் கொண்டதாகும். இடது-கோசம் எழுப்பும் அந்திராதியின் கண்டனம், உண்மையில், லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியை அம்பலப்படுத்தும் இன்றியமையாத அரசியல் பணியை தட்டிக்கழிப்பதோடு, அதன் மூலம் தொழிலாளர்களை இத்தகைய கட்சிகளின் பிடியிலேயே விட்டுவைப்பதை குறிக்கோளாகக் கொண்டதாகும். லங்கா சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் புரட்சிகர லங்கா சமசமாஜக் கட்சி இந்த வெகுஜன இயக்கத்தை காட்டிக் கொடுத்தமை, ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு வழிவகுத்தது. 1977 ஜூலை தேர்தலில், கூட்டணிக் கட்சிகள் தோல்வியில் நசுங்கின: 168 ஆசனங்களில் ஐக்கிய தேசியக் கட்சி 140 ஆசனங்களை வென்றது; ஸ்ரீ.ல.சு.க. 8 ஆசனங்களையே தக்க வைத்துக்கொண்டது; லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி சகல ஆசனங்களையும் இழந்தன.

20-8. இலங்கைத் தொழிலாள வர்க்கத்தில் பழைய தலைமைகளுக்கு எதிராக தனது அரசியல் போராட்டத்தை புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் ஆழப்படுத்திக்கொண்டிருந்த நிலையில், பிரிட்டனில் அத்தகைய போராட்டத்தில் இருந்து தொழிலாளர் புரட்சிக் கட்சி (WRP) தூர விலகி நின்றது. 1974ல் பிரிட்டிஷ் சுரங்கத் தொழிலாளர்களின் உறுதியான வேலை நிறுத்தத்தின் விளைவாக, பிரிட்டனில் ஹீத் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டமை, சிறுபான்மை தொழிற்கட்சி அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவந்தது. போர்க்குணம் மிக்க தொழிலாள வர்க்கத்தின் டோரிவாத-எதிர்ப்பின் அடிப்படையிலேயே முக்கியமாக ஒரு வருடத்துக்கு முன்னர் ஸ்தாபிக்கப்பட்டிருந்த தொழிலாளர் புரட்சிக் கட்சி ஒரு அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டதோடு நூற்றுக்கணக்கான உறுப்பினர்களின் இழப்பை எதிர்கொண்ட நிலையில், இப்போது சமூக ஜனநாயகத்தில் தொழிலாளர்களுக்கு எஞ்சியிருந்த போலி நம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடுவது அதற்கு அவசியமாக இருந்தது. இந்தப் போலி நம்பிக்கைகள், ஒரு மத்திய குழு உறுப்பினரும் முன்னணி தொழிற்சங்க வாதியுமான அலன் தோனட்டின் தலைமையிலான ஒரு கொள்கையற்ற, வலதுசாரிக் குழுவினால் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டன. தொழிற்கட்சி அரசாங்கம் முதலாளித்துவத்துடன் மோதலுக்கு வரும் என அது வாதிட்டது. தொழிற்கட்சி வாதத்தின் வர்க்கப் பண்பைப் பற்றி உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தி அதன் மூலம் தொழிலாள வர்க்கத்துக்குத் தெளிவுபடுத்தப் போராடுவதற்கு மாறாக, தொழிலாளர் புரட்சிக் கட்சி அரசியல் கலந்துரையாடல்கள் இன்றியே தோர்நெட் குழுவை வெளியேற்றியது. தொழிற் கட்சி இன்னமும் அநேகமான தொழிலாளர்களின் விசுவாசத்தை கொண்டிருந்த அதே வேளை, புரட்சிகர கட்சி ஒரு பதிலீட்டை கொடுக்கும் நிலையில் இல்லாதபோது, தொழிலாளர் புரட்சிக் கட்சி 1975 ஜூலையில் தொழிற் கட்சி அரசாங்கத்தை பதவியிறக்க அழைப்பு விடுத்தமை, அது தொழிலாளர்களை அரசியல் ரீதியில் பயிற்றுவிப்பதற்கு பொறுமையாக போராடுவதை கைவிட்டிருந்தது தெரியவந்தது. இந்த இடது-கோசம் கொண்ட அழைப்புகளின் பின்னால், தொழிற்கட்சித் தலைமைக்கு எதிரான அரசியல் போராட்டத்தை தொழிலாளர் புரட்சிக் கட்சி கைவிட்டிருந்ததோடு தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் ஒரு பிரிவினருக்கும் அடிபணிந்தது.

20-9. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்துக்குள்ளேயும் இத்தகைய ஒரு நிலைப்பாட்டை திணிப்பதற்கு தொழிலாளர் புரட்சிக் கட்சி முயற்சித்தது. 1975 செப்டெம்பரில் பாலசூரியவுக்கு கடிதம் எழுதிய மைக் பண்டா, பிரச்சாரவாத வால் மீண்டும் மார்க்சிய நாயை ஆட்டுவதையிட்டு நான் கவலைகொண்டுள்ளேன். உங்களது பிரசுரத்தில், திருத்தல்வாதிகளை அம்பலப்படுத்த (சரியான முறையில்) அதிக இடம் கொடுக்கப்பட்டது பிரதிபலித்துள்ளது ஆனால் அதிகாரத்திற்கான போராட்டத்தின் ஊடாக கருத்துப்பொருட்களை ஸ்தூலமாக அபிவிருத்தி செய்வதற்காக போதுமானளவு செய்யப்படவில்லை எனத் தெரிவித்தார். லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி மீதான கோரிக்கைகளை புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் கைவிட வேண்டும் என அழைப்பு விடுத்த பண்டா, இது கட்சி மத்தியவாதிகளுக்கு அடிபணிவதில் முடிவடையும் என எச்சரித்து, ஸ்ரீ.ல.சு.க. அரசாங்கத்தைக் கவிழ்க்க அழைப்பு விடுமாறு கோரினார். லங்கா சமசமாஜக் கட்சியும் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியும் தொழிலாளர் அரசாங்கத்திற்காகப் போராடவேண்டும் எனக்கோருவதன் மூலம் அவற்றை அம்பலப்படுத்துவதில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் உறுதியாக இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, நான்காம் அகிலத்தை பாதுகாத்து: ட்ரொட்ஸ்கிச-விரோத வஞ்சகனுக்கு ஒரு பதில் என்ற தலைப்பில் 1975ல் அந்திராதிக்கு எழுதிய  புத்தக அளவிலான பதில் உள்ளடங்கியதும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் பிரச்சாரவாதம் என மற்றவர்களால் கூறப்பட்டதுமான பல்வேறு பப்லோவாத குழுக்களுக்கு எதிரான பாலசூரியாவின் வாதங்கள், தொழிலாள வர்க்கத்தினுள் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் தலையீடு செய்வதற்கான இன்றியமையாத தயாரிப்பாக இருந்தன.

20-10. 1975-77 எழுச்சிகள் தீர்மானகரமான அரசியல் பரீட்சை என்பது நிரூபிக்கப்பட்டது. தனது அரசியல் பாதை பற்றிய 1970 ஆம் ஆண்டின் தெளிவுபடுத்தலில் உறுதியாக நின்ற புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம், வர்க்க நனவுகொண்ட தொழிலாளர்கள் மத்தியில் அதனது நிலையை சிறப்பாக விரிவுபடுத்திக்கொண்டது. சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசாங்கத்துக்கு எதிராக சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டப் போராடிய ஒரே கட்சி புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் மட்டுமே ஆகும். பாலா தம்பு, சமரக்கொடி மற்றும் அந்திராதி தலைமையிலான புரட்சிகர லங்கா சமசமாஜ கட்சியின் சகல குழுக்களும் அடுத்த சில ஆண்டுகளுக்குள் இலங்கை அரசியலில் இருந்து காணாமல் போயின. அவர்களின் இடத்தை, முன்னாள் லங்கா சமசமாஜக் கட்சி உறுப்பினர்களினால் 1978ல் ஸ்தாபிக்கப்பட்ட நவசமசமாஜக் கட்சி எடுத்துக்கொண்டது. நவசமசமாஜக் கட்சியை ஸ்தாபித்தவர்கள், 1964 காட்டிக்கொடுப்புக்கும், இரண்டாவது கூட்டணி அரசாங்கத்துக்கும் அதன் இனவாத கொள்கைகளுக்கும் ஆதரவளித்திருந்ததோடு வேலை நிறுத்த அலை தோன்றிய காலம் பூராவும் லங்கா சமசமாஜக் கட்சியிலேயே இருந்தனர். 1977 தேர்தல் தோல்வியின் பின்னரே அவர்கள் அதில் இருந்து வெளியேறினர். அதனது பெயரில் சுட்டிக்காட்டப்படுவது போலவே, நவசமசமாஜக் கட்சி வெறுமனே புதிய முகத்தைக்கொண்ட பழைய சந்தர்ப்பவாத சமசமாஜவாதமாகவே இருந்தது. அது லங்கா சமசமாஜக் கட்சியின் பப்லோவாத வர்க்க கூட்டிணைவையும் மற்றும் கூட்டணிவாதத்தையும் தொடர்ந்தும் பேணியதோடு, மிகவும் பொருத்தமான முறையில், 1981ல் பப்லோவாத ஐக்கிய செயலகத்தின் இலங்கை பகுதியாகவும் மாறியது.

20-11. இலங்கையில் பண்டாரநாயக்க அரசாங்கத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும், தெற்காசியாவில் ஏனைய இடங்களிலும் உறைக்கத்தக்க சமாந்தர நிகழ்வுகளைக் கண்டன. 1970களின் பொருளாதார நெருக்கடியின் மத்தியில், பாகிஸ்தானில் சுல்பிகார் அலி பூட்டோவின் அரசாங்கமும் இந்தியாவில் இந்திரா காந்தியின் அரசாங்கமும், போலி-சோசலிச வாய்ச்சவடால்கள் மற்றும் ஜனரஞ்சகவாத தேசியவாதத்தின் ஊடாக தொழிலாள வர்க்கத்தையும் ஒடுக்கப்பட்ட உழைப்பாளிகளையும் முதலாளித்துவத்துடன் கட்டிப்போட முயற்சித்தனர். இரு அரசாங்கங்களும் ஆரம்பத்தில் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தி, பின்னர் தொழிலாள வர்க்கத்துடன் மூர்க்கமான மோதல்களுக்கு வந்ததோடு, எதிர்ப்புக்களை நசுக்குவதற்காக எதேச்திகார வழிமுறைகளை நாடின. பாகிஸ்தானிலும் இந்தியாவிலும், பல்வேறு ஸ்ராலினிசக் கட்சிகள், இத்தகைய இடது அரசாங்கங்கள் என சொல்லப்பட்டவற்றை தொழிலாள வர்க்கம் சவால் செய்வதைத் தடுக்கவும், அதன் மூலம் முதலாளித்துவம் அதன் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க உதவுவதிலும் தீர்க்கமான பாத்திரம் ஆற்றின. 1977ல் ஐந்து மாதகால இடைவெளியில், பூட்டோ, இந்திரா காந்தி மற்றும் சிறிமாவோ பண்டாரநாயக்க போன்ற சகலரும் ஆட்சியில் இருந்து வீழ்ந்தனர். முதலாளித்துவசியல் பின்னர் கூர்மையாக வலதுபக்கம் நகர்ந்தது. இந்திரா காந்தியின் விடயத்திலும், அவர் 1980ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த போதே இந்த நகர்வை உள்ளடக்கியிருந்தார். பாகிஸ்தானில் ஜெனரல் ஸியா-உல்-ஹக்கின் தலைமையில் அமெரிக்க ஊக்குவிப்புடன் நடத்தப்பட்ட இராணுவ சதிக்கவிழ்ப்பால் பூட்டோ வெளியேற்றப்பட்டார். இந்த அரசாங்கங்கள் ஒரு பிற்போக்குவாத வரலாற்றினை விட்டுச் சென்றன. பேரினவாதத்தில் ஊறியதும், தேசியவாத மற்றும் மத-வகுப்புவாத அடையாளங்களுக்கு அழைப்புவிடுத்ததுமான அவர்களது இடது ஜனரஞ்சகவாதம், 1980களில் ஆசியா பூராவும் இன-வகுப்புவாத அரசியல் பண்புரீதியில் விரிவடைவதற்கு விதைகளை விதைத்தன.

21. ஐக்கிய தேசியக் கட்சி  அரசாங்கமும் அது போரில் இறங்குவதும்

21-1. இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் வருகை பரந்த உலகளாவிய பொருளாதார மற்றும் அரசியல் நிகழ்வுப்போக்குகளின் ஒரு பாகம் ஆகும். 1968-1975 காலகட்டத்தின் புரட்சிகரப் போராட்ட அலை தோல்வியடைந்ததை அடுத்து, ஆளும் வர்க்கங்கள் தொழிலாள வர்க்கத்திற்கு எதிர்த்தாக்குதலை தொடுத்தன. 1979ல் பிரிட்டனில் தாட்சர் அரசாங்கம் பதவிக்கு வந்ததும் 1980ல் அமெரிக்காவில் ரீகன் அரசாங்கம் பதவிக்கு வந்ததும் இதனை அரசியல்ரீதியாக குறித்தன. அடுத்து வந்த வருடத்தில் ரீகன், ஏ.எஃப்.எல்.-சி.ஐ.ஓ.வின் (AFL-CIO) சம்மதத்துடன், 11,000 விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு ஊழியர்களை பதவிநீக்கி பட்கோ வேலைநிறுத்தத்தை நசுக்கினார். உலகெங்கிலுமான அரசாங்கங்களுக்கு புதிய அடையாளமாக, பணச்சுற்றோட்ட, சந்தை-சார்புக் கொள்கைகள் கீனிசியப் பொருளாதார ஒழுங்கமைப்பை மாற்றீடு செய்தன. கிழக்கு மற்றும் தென் கிழக்கு ஆசியாவில் தொடங்கி, மலிவு உழைப்புக் களங்களை உருவாக்குவதை நோக்கிய ஒரு திருப்பம் உண்டானது. 1980களில் ஆசியப் புலிகளாக ஆகவிருந்த சிங்கப்பூர், ஹாங்கொங், தென் கொரியா, தைவான் ஆகிய அனைத்து நாடுகளுமே தங்களது குறைந்த ஊதிய உழைப்பினை அனுகூலமாக எடுத்துக் கொள்ளும் பொருட்டு அந்நிய முதலீட்டாளர்களுக்கு சலுகைகளை வாரிவழங்கின. சீனாவில் டெங் ஜியாவோ பிங் 1978ல் தனது பகிரங்கமான சந்தை-சார்பு வேலைத்திட்டத்தை அறிவித்தார்.

21-2. இலங்கையில் இந்தக் கொள்கைகளை தழுவுகையில், சிறிமாவோ பண்டாரநாயக்கா தற்காலிகமாக ஒரு சுதந்திர சந்தை நிகழ்ச்சிநிரலை நோக்கித் திரும்பியதால் தூண்டப்பட்ட 1975-1977 எழுச்சியில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சி  திட்டவட்டமான முடிவுகளை வரைந்திருந்தது. பிரதமர் ஜே.ஆர். ஜெயவர்த்தனா அந்நிய முதலீட்டை ஊக்குவிக்கவும், சமூகச் செலவினங்களை வெட்டவும், தனியார்மயமாக்கங்களை மேற்கொள்ளவும் தொடங்கிய நிலையில், அரசு எந்திரத்தை பலப்படுத்துவதன் மூலமும் தனது சொந்த சமூக அடித்தளத்தை பலப்படுத்திக்கொண்டு தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்த வகுப்புவாத பதட்டங்களை உச்சத்திற்குக் கொண்டுசெல்வதன் மூலமும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான தாக்குதலுக்கு தயாரானார். 1978ல் நாடாளுமன்றத்தில் தனது அறுதிப் பெரும்பான்மையை பயன்படுத்திக்கொண்டு அரசியலமைப்பைத் திருத்தி எழுதிய ஐக்கிய தேசியக் கட்சி , பெருமளவிலான ஜனநாயக விரோத அதிகாரங்களுடன் ஒரு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஸ்தாபித்ததோடு ஜெயவர்த்தனாவை ஜனாதிபதியாக அமர்த்தியது. அரசாங்கம் 1979 ஜூலையில், கைது செய்து விசாரணையின்றி சிறைவைத்திருக்கக் கூடியளவு அதிகாரத்தை பொலிசுக்கு வழங்கும் பயங்கரவாத தடைச் சட்டத்தை திணித்தது. 

21-3. தேர்தலின் போது தமிழ் மக்களின் துயரங்களை நிவர்த்தி செய்வதாக ஐக்கிய தேசியக் கட்சி  வாக்குறுதியளித்திருந்த போதிலும், ஜெயவர்த்தனா துரிதமாக தமிழர்-விரோத இனவாதத்தை நோக்கித் திரும்பினார். 1976ல் தமிழர் விடுதலைக் கூட்டணி (TULF) தீவின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய ஒரு தனியான ஒரு ஈழத் தமிழ் அரசுக்கு அழைப்பு விடுத்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நிறைவேற்றியது. தாம் முகங்கொடுத்த பாரபட்சங்களால் தமிழ் இளைஞர்கள் மத்தியில் நிலவிய சீற்றம், பல்வேறு சிறிய ஆயுதக் குழுக்கள் உருவாகுவதற்கு வழி வகுத்தது. ஜெயவர்த்தனா யாழ்ப்பாணத்திற்குள் இராணுவத்தை அனுப்ப உத்தரவிடவும் எல்லா இடங்களிலும் திட்டமிட்ட இனப்படுகொலைகளை ஊக்குவிக்கவும் 1977 ஆகஸ்டில் பொலிஸ் மீது நடத்தப்பட்ட ஒரு சிறு தாக்குதலைப் பயன்படுத்திக்கொண்டார். தமது தேர்தல் வெற்றிகள் ஒரு தனி ஈழத்திற்காக பேச்சுவார்த்தை நடத்துவதற்கான உரிமையை அளித்திருப்பதாக வலியுறுத்திய தமிழர் விடுதலைக் கூட்டணியை அரசாங்கம் கண்டனம் செய்தது. உங்களுக்கு ஒரு போர் வேண்டுமானால், போர் நடக்கும், என பிரதமர் பாராளுமன்றத்தில் ஆத்திரமூட்டும் விதத்தில் பிரகடனம் செய்தார். உள்நாட்டுப் போருக்குள் துரிதமாக இறங்குவதற்கான முன்மாதிரியை ஜெயவர்த்தனா அமைத்தார். ஒவ்வொரு கட்டத்திலும், பொலிஸ் மீது ஆங்காங்கே நடத்தப்பட்ட தாக்குதல்களை சுரண்டிக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி , தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரான பிரமாண்டமான அரசு ஒடுக்குமுறை மற்றும் படுகொலைகள் மூலம் பதிலிறுத்தது. 

21-4. வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து பாதுகாப்புப் படைகளைத் திரும்பப் பெறுவதற்கும் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (பு.க.க.) இடைவிடாது பிரச்சாரம் செய்து வந்துள்ளது. தீர்க்கப்படாத ஜனநாயகக் கடமைகளை தீர்ப்பதற்கும் துரிதமாக உள்நாட்டுப் போருக்கு இழுபட்டுச் செல்வதை தடுப்பதற்கும் இலாயக்கான ஒரே சமூக சக்தி தொழிலாள வர்க்கம் மட்டுமே என்பதை புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் வலியுறுத்தியது. ஐக்கிய தேசியக் கட்சியால் உருவாக்கப்பட்டு ஸ்ரீ.ல.சு.க., லங்கா சமசமாஜ கட்சி, மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியாலும் ஆதரிக்கப்பட்ட இனவாதப் பிற்போக்குச் சூழ்நிலையில், பு.க.க. அவசியமான கணிசமானளவு உத்வேகத்துடன் நின்றது. 1979ல் அரசாங்கத்தின் கொள்கைகளை எதிர்த்ததற்காக, ஐக்கிய தேசியக் கட்சி  ஏற்பாடு செய்த பொலிசுடன் செயற்பட்ட குண்டர்களால் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் முன்னணி உறுப்பினரான ஆர்.பி. பியாதாச கொடூரமாகக் கொல்லப்பட்டார்.

21-5. 1980 ஜூலையில், ஊதிய உயர்வு கோரி ஒரு பரந்த பொது வேலைநிறுத்த இயக்கம் வெடித்த சமயத்தில், ஐக்கிய தேசியக் கட்சியின் தனியார்மயமாக்கம் மற்றும் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கான எதிர்ப்பு உச்சகட்டத்தை எட்டியிருந்தது. ஜனாதிபதி ஜெயவர்த்தனா, உடனடியாக அந்த வேலைநிறுத்தத்தை சட்டவிரோதமானதாக அறிவித்ததோடு வேலைநிறுத்தத்தில் பங்கேற்றால் பதவிநீக்கம் செய்வதாகவும் அச்சுறுத்தினார். லங்கா சமசமாஜ கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்த வேலைநிறுத்தம் அரசியல்-சார்பற்றது ஒன்று என அறிவித்ததோடு ஐக்கிய தேசியக் கட்சி  அரசாங்கத்தின அவசரகாலநிலை அதிகாரங்களை சவால் செய்யவோ அதனைப் பதவியிறக்க அழைப்பு விடவோ மறுத்தன. புரட்சிகர லங்கா சமசமாஜக் கட்சித் தலைவரான பாலா தம்பு, தனது சி.எம்.யு. தொழிற்சங்கத்தை வேலைநிறுத்தத்தில் இறங்க அழைக்கவில்லை. நவ சமஜசமாஜக் கட்சி, இந்த வேலைநிறுத்தம் வெறும் சம்பளப் பிரச்சினை தான் என்று அறிவித்ததோடு அதனை அரசாங்கத்திற்கு எதிரான ஒரு அரசியல் இயக்கமாக மாற்றுவதற்காக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் தொடுத்த பிரச்சாரத்தை கசப்புடன் விமர்சித்தது. இந்தத் தலைமைகளின் துரோகத்தின் விளைவாக, ஐக்கிய தேசியக் கட்சி  அரசாங்கமானது ஏறக்குறைய எந்த எதிர்ப்புமே இல்லாமல் 100,000 பொதுத்துறை ஊழியர்களை வேலைநீக்கம் செய்ய முடிந்தது, இதன்மூலம் தொழிலாள வர்க்கத்தின் மீது அழிவுகரமான தோல்வி திணிக்கப்பட்டது.

21-6. இலங்கைத் தொழிலாள வர்க்கம் கடைசியாக மேற்கொண்ட பெரும் வேலைநிறுத்தமான அந்த 1980 பொது வேலைநிறுத்தத்தின் தோல்வியே முழு அளவிலான உள்நாட்டுப் போருக்குக் கதவைத் திறந்தது. எந்தவொரு அரசியல் சவால் அல்லது நெருக்கடிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் பதிலிறுப்பு தமிழர்-விரோத ஆத்திரமூட்டல்களை நாடுவதாக இருந்தது. அது 1983 ஜூலையில் நடந்த படுபயங்கரமான இனப்படுகொலையில் உச்சகட்டத்தை அடைந்தது. தமிழ் போராளிகள் 13 படையினரை கொன்றதை அடுத்து, அந்த சடலங்களை கொழும்புக்கு கொண்டு வந்ததன் மூலம் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் வேண்டுமென்றே இன துவேஷத்தை பற்றவைத்தது. அடுத்த நாளில், ஐக்கிய தேசியக் கட்சி குண்டர்கள் முன்னிலை வகித்த, தமிழர்-விரோத வன்முறைகள் தீவு முழுவதிலும் முன்கண்டிராத வகையில் வெடித்தது. தமிழர்களின் வீடுகளும் கடைகளும் தீவைத்துக் கொளுத்தப்பட்டதுடன் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அரசாங்கமும் பொலிசும் நான்கு நாட்களுக்கு இந்த வெறியாட்டம் தடையில்லாமல் தொடர அனுமதித்ததோடு எந்த செய்தியும் வெளியாவதை தடுக்க கடுமையான தணிக்கையையும் அமுல்படுத்தியது.

21-7 இந்தக் கொடூரமான இனப்படுகொலை, அடுத்த கால் நூற்றாண்டு காலமும் நாட்டைச் சீரழிக்கவிருக்கும் ஒரு முழு அளவிலான உள்நாட்டுப் போருக்கான தொடக்கத்தைக் குறித்தது. ஐக்கிய தேசியக் கட்சி  அரசாங்கமானது ஆகஸ்ட் 4 அன்று, ஒரு போர்ப் பிரகடனமாக காணத்தக்க வகையில், தனி ஈழத்தைப் பரிந்துரைப்பதை தடை செய்கின்ற மற்றும் அனைத்துப் பொது ஊழியர்களின் மீதும் விசுவாச உறுதிமொழியை திணிக்கின்ற ஆறாவது அரசியல்சட்டத் திருத்தத்தை திணித்தது. இந்த உறுதிமொழியை டுக்க மறுத்ததால் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களது பதவிகளை இழந்தனர். 1983 டிசம்பருக்குள்ளாக, யாழ்ப்பாண குடாநாடு ஒரு போர் வலயமாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஐக்கிய தேசியக் கட்சி  அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் ஆத்திரமுற்ற தமிழ் இளைஞர்கள், பல்வேறு தமிழ் ஆயுதக் குழுக்களில் சேருவதற்கு ஆயிரக்கணக்கில் அணிதிரண்டனர்.

21-8. இந்தப் படுகொலையின் போது, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் குறிப்பாக தாக்குதலின் இலக்கானது. கம்கறு மாவத்த ஆசிரியர் கே. ரட்நாயக்காவின் வீடு எரித்து தரைமட்டமாக்கப்பட்டதுடன் கட்சியின் அச்சகத்தை தரைமட்டமாக்குவதற்கான முயற்சியும் மயிரிழையில் தடுக்கப்பட்டது. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் அரசாங்கத் தணிக்கையை எதிர்த்தது. அது அரசாங்கத்தையும் எதிர்க்கட்சிகளையும் குற்றஞ்சாட்டியும், தமிழ் மக்களைப் பாதுகாக்க தொழிலாள வர்க்கம் முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்தும் ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டது. பு.க.க. போரை எதிர்த்ததோடு லங்கா சமசமாஜ கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய அரசாங்கத்தினதும் உடந்தையை அம்பலப்படுத்தியதுடன், வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இராணுவத்தைத் திரும்பப் பெறக் கோரியது. 1984 மே மாதத்தில், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக செய்தித்தாள்களுக்கு சட்டரீதியாகப் பொறுப்பு வகித்த ஆனந்த வக்கும்புர. ஆறாவது சட்டத்திருத்தத்தை மீறியதாகக் கூறி பொலீசாரால் கைது செய்யப்பட்டு இரண்டு வாரங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். பு.க.க.வின் சக்திவாய்ந்த பிரச்சாரத்தை எதிர்கொண்ட அரசாங்கம், வக்கும்புற மீது சட்ட நடவடிக்கை எடுப்பதில் இருந்து பின்வாங்கிக் கொண்டது.

22. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம், தொழிலாளர் புரட்சிக் கட்சி மற்றும் தேசியப் பிரச்சினை

22-1. ஆரம்பம் முதலே தேசியப் பிரச்சினை சம்பந்தமான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் (பு.க.க.) நிலைப்பாடானது ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டின் ஊடாக அபிவிருத்தி செய்யப்பட்ட தொழிலாள வர்க்க சர்வதேசியவாதத்தின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டிருந்தது. தொழிலாளர்களை ஒரு வர்க்க அடிப்படையில் ஐக்கியப்படுத்துவதன் பேரில், கட்சி இடைவிடாமல் தேசியவாதம், மதவாதம் மற்றும் இனவாதத்தின் அத்தனை வடிவங்களுக்கும் எதிராக போராடி வந்துள்ளது. தமிழ் மக்களுக்கு எதிரான உத்தியோகபூர்வ இனப்பாகுபாட்டின் மேலும் மேலும் பட்டவர்த்தனமான வடிவங்களை அது உத்வேகத்துடன் எதிர்த்ததோடு அவர்களின் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாத்தது. 1970களின் ஆரம்பத்திலே தீவின் வடக்குக்கு அனுப்பப்பட்ட துருப்புகளை திரும்பப் பெறுமாறு புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் அறைகூவல் விடுத்ததுடன் போர் நடைபெற்ற காலம் முழுவதும் இதை தொடர்ந்தும் வலியுறுத்தி வந்தது. தமிழ் முதலாளித்துவக் கட்சிகளை தவிர்த்து, 1972 அரசியலமைப்பை எதிர்த்தது புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் மட்டுமே. அரசாங்க அச்சக தொழிற் சங்கத்தில் இருந்த புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக குழு, அரசியலமைப்பை எதிர்த்து முன்வைத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது, லங்கா சமசமாஜக் கட்சி அலுவலர்கள் கட்சியின் ஆதரவாளர்களுக்கு எதிரான ஒரு வேட்டையாடலை செய்தனர்.  

22-2. தமிழ் இளைஞர்கள் தீவிரமயமாவது வளர்ச்சியடைந்து வந்த நிலைமையில், 1972 ஜூனில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் அறிவித்ததாவது: தமிழ் இனத்தின் சுய நிர்ணய உரிமையை மார்க்சிஸ்டுகளாகிய நாங்கள் அங்கீகரிக்கிறோம். அதே சமயம், இவ்வுரிமையை அங்கீகரிக்கின்ற மற்றும் சோசலிசக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்காக, சிங்கள மற்றும் தமிழ் தொழிலாளர்களை அணிதிரட்டுவதன் மூலம் மட்டும் அந்த உரிமையை வெற்றிகொள்ள முடியும் என நாம் வலியுறுத்துகிறோம்.[51] தேசியப் பிரச்சினை பற்றி லெனின் எழுதிய வழியில், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் ஒரு தனித் தமிழ் அரசை பரிந்துரைக்கவில்லை, மாறாக, அவ்வாறு செய்வதற்கு தமிழர்களுக்கு இருக்கும் உரிமையைப் பாதுகாத்து நின்றது. முதலாளித்துவ தமிழ் அரசியல்வாதிகளின் மோசடியை அம்பலப்படுத்துவதற்கும் ஒட்டுமொத்தமாக இலங்கை மற்றும் இந்தியத் துணைக் கண்டத்திற்கான ஒரு சோசலிச முன்னோக்கிற்கு தமிழ் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை வென்றெடுப்பதற்குமான ஒரு வழிமுறையாகவே இந்தக் கொள்கை இருந்தது. 

22-3. ஆயினும், 1972ல் நடந்த நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் கூட்டமொன்றில், பிரிட்டிஷ் சோசலிச தொழிலாளர் கழகத்தின் தலைமை புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் நிலைப்பாட்டை ஆவேசமாக எதிர்த்தது. சுய நிர்ணயத்திற்கான தமிழ் மக்களின் உரிமைக்கு ஆதரவளிப்பதென்பது தீவைத் துண்டாட நினைக்கும் ஏகாதிபத்தியவாதிகளின் திட்டங்களுக்கே உதவும் என பண்டா வாதிட்டார். 1971ல் கிழக்கு பாகிஸ்தானில் இந்திய இராணுவத் தலையீட்டிற்கு அவர் ஆதரவளித்ததைப் போலவே, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் மீதான பண்டாவின் எதிர்ப்பும் 1947-48ல் தெற்காசியாவில் ஏகாதிபத்தியத்தால் ஸ்தாபிக்கப்பட்ட சுதந்திரமான தேசிய அரசுகள் என்று அழைக்கப்படுவனவற்றின் நியாயத்தன்மையை ஏற்றுக் கொள்வதை அடிப்படையாகக் கொண்டிருந்தது. பாலசூரியா பின்னர் விளக்கியதாவது: தொழிலாளர் புரட்சிக் கட்சியின் நிலைப்பாடு, தேசிய முதலாளித்துவத்திடம் சரணடையவும் அதன் மூலம் ஏகாதிபத்தியத்திடம் சரணடையவும் விடாப்பிடியாக வழிவகுக்கின்றது. ஏனெனில், அதன் கோட்பாடு இந்த முதலாளித்துவ அரசுகள் பாதிப்பின்றி பாதுகாக்கப்பட வேண்டிய அவசியமிருப்பதாகக் கருதுவதையை முழு அடிப்படையைக் கொண்டுள்ளது. விதிவிலக்கின்றி இந்த அரசுக் கட்டமைப்புகள், ஒரே தேசிய இனத்தின் மேலாதிக்கத்தையே அடிப்படையாகக் கொண்டிருப்பதனால் – அதன் முதலாளித்துவம், ஏகாதிபத்தியத்துடன் கூட்டுச் சேர்ந்து மற்ற தேசிய இனங்களை கீழ்ப்படுத்தி வைப்பதற்கு கொடூரமான பலாத்காரத்தை பயன்படுத்துவதனால் - இந்த அரசுக் கட்டமைப்புகளைப் பாதுகாப்பது என்பது ஏகாதிபத்தியத்தையே பாதுகாப்பதாகவே ஆகிறது. [52]

22-4. அந்தக் கட்டத்தில், தமிழ் போராட்டம் அரும்பு வடிவத்தில் இருந்ததால், சோசலிச தொழிலாளர் கழகத்தின் தலைமையின் அனுபவத்திற்கும் அரசியல் அதிகாரத்திற்கும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் தயக்கத்துடன் பணிந்தது. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை தளராமல் பாதுகாப்பதையும் தமிழ் மற்றும் சிங்களத் தொழிலாளர்களின் ஐக்கியத்திற்காக போராடுவதையும் தொடர்ந்துகொண்டிருந்தாலும், 1970களின் அநேகக் காலம் பூராகவும் அது ஒரு முக்கியமான தந்திரோபாய ஆயுதம் இன்றி இயங்கிக்கொண்டிருந்தமை அதற்கு ஒரு பெரிய முட்டுக்கட்டையாக இருந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் காந்திய உபாயங்களுடன் குரோதமுற்றிருந்த தீவிரமான தமிழ் இளைஞர்களுக்கு மாவோயிஸ்டுகள் உபதேசித்த ஆயுதப் போராட்டம் ஈர்ப்புடையதாக இருந்ததால், கட்சி மாவோயிஸ்டுகளின் பெருகும் செல்வாக்குக்கு எதிராகப் போராட வேண்டியிருந்தது. ஜே.வி.பீ.யைப் போலவே, மாவோயிஸ்டுகளும் ட்ரொட்ஸ்கிசத்தைக் கண்டனம் செய்வதற்கு சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசாங்கத்திலிருந்த லங்கா சமசமாஜ கட்சி அமைச்சர்களின் துரோகத்தை சுட்டிக் காட்டினர். எவ்வாறெனினும், 1977ம் ஆண்டிற்கு முன்னர், இந்த குழுக்கள் மிகக்குறைந்த அரசியல் முக்கியத்துவத்தையே கொண்டிருந்ததுடன், சிங்கள மற்றும் தமிழ் தொழிலாளர்களிடம் இருந்து வர்க்க அடிப்படையில் ஆதரவைப் பெற்ற தொழிலாள வர்க்கத்தின் பரந்த இயக்கங்களினால் அவை முழுமையாக ஓரங்கட்டப்பட்டிருந்தன.

22-5. 1979ல் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் சர்வதேச முக்கியத்துவத்தைப் பெற்றிருந்த போது, பிரிட்டனில் தொழிலாளர் புரட்சிக் கட்சி (WRP) 180 பாகை திரும்பியது. இலங்கையில் தேசியப் பிரச்சினையின் முக்கியத்துவத்தை தொழிலாளர் புரட்சிக் கட்சி அலட்சியப்படுத்தி விட்டிருந்ததை ஒப்புக்கொண்டு, பண்டா புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்துக்கு ஒரு மன்னிப்புக் கடிதத்தை அனுப்பியிருந்த போதும், அதில் தமிழ் மக்களின் சுயநிர்ணயத்திற்கான உரிமையை பாதுகாக்க தாமதமாகத் திரும்பியதற்கான விளக்கத்தை அக்கடிதத்திலோ அல்லது அதற்குப் பின்னரோ அவர் வழங்கவில்லை. இலங்கை விடயத்திலான தொழிலாளர் புரட்சிக் கட்சியின் புதிய நிலைப்பாடும் பழைய நிலைப்பாட்டைப் போலவே நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டை அடிப்படையாக கொண்டிருக்கவில்லை. அது தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை எதிர்த்த நிலைப்பாட்டில் இருந்து அதை விமர்சனமற்றுத் தழுவிக்கொள்ளும் நிலைப்பாட்டிற்குத் தாவியது. தொழிலாளர் புரட்சிக் கட்சியின் இந்த தலைகீழ் மாற்றம், 1974ல் தொர்னெட் உடனான அரசியல்ரீதியில் விளக்கப்படாத பிளவுக்குப் பின்னர், அதன் வர்க்க அச்சில் ஏற்பட்டிருந்த மாற்றத்துடன் பிணைந்ததாக இருந்தது. 1976ல் முதலாளித்துவத்தின் புதிய சர்வதேச எதிர்த்தாக்குதலுடன் தொடர்புபட்ட புதிய அரசியல் பிரச்சினைகளை தொ.பு.க. சந்தித்த போது, அது ஆதரவுக்காக ஏனைய வர்க்க சக்திகளான, பிரிட்டனில் தொழிற்கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தை நோக்கியும் மற்றும் மத்திய கிழக்கில் அரபு முதலாளித்துவ ஆட்சிகளை நோக்கியும் திரும்பத் தொடங்கியது. 

22-6. அரபு முதலாளித்துவத்துடனான அதன் கொள்கையற்ற உறவுகளுக்கு சமாந்தரமாக, தொழிலாளர் புரட்சிக் கட்சி தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடனும் தொடர்புகளை ஸ்தாபித்துக்கொண்டது. தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (டெலோ), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பீ.ஆர்.எல்.எஃப்.) ஈழப் புரட்சிகர மாணவர் அமைப்பு (ஈரோஸ்) மற்றும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆகியவை அடங்கிய தமிழ் ஆயுதக் குழுக்களில் விடுதலைப் புலிகள் முன்னிலையில் இருந்தனர். இந்தக் குழுக்கள் அனைத்துமே ஏதேனும் ஒரு விதத்தில் ஸ்ராலினிசம் மற்றும் மாவோயிசத்தின் ஆதிக்கத்திற்குள்ளாகி இருந்தன, மற்றும், தமிழர் விடுதலைக் கூட்டணியைப் போல், ஒரு சோசலிசத் தமிழ் ஈழமே தங்கள் நோக்கம் என அறிவித்தன. தேசிய விடுதலை என்னும் ஒரு முதலாளித்துவ வேலைத்திட்டத்திற்கு மிகவும் கலப்படமான சோசலிச முலாம் பூசுவதில் விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியராகக் கூறப்பட்ட அன்டன் பாலசிங்கத்துக்கு பிரிட்டனில் தொழிலாளர் புரட்சிக் கட்சி உதவியது.

22-7. பாலசிங்கத்தின் தமிழ் தேசியப் பிரச்சினை குறித்து என்கிற கட்டுரையை தொ.பு.க. அதன் லேபர் ரிவ்யூ (Labour Review) இதழில் பிரசுரித்ததுடன் இலங்கையில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தையும் அவ்வாறே செய்ய வலியுறுத்தியது. 1913ல் தேசியப் பிரச்சினை குறித்து லெனின் எழுதியவை எல்லாம் பாலசிங்கத்தின் கைகளில் சிக்கி தலைகீழாய் புரட்டிப் போடப்பட்டன. மார்க்சிஸ்டுகளைப் பொறுத்தவரை, தேசியப் பிரச்சினையில் தொழிலாள வர்க்கத்தின் சுய நிர்ணயத்துக்கே முக்கிய கவனம் செலுத்தப்படுகிறது என லெனின் வலியுறுத்திய அதே வேளை, தமிழ் முதலாளித்துவத்தின் பிரிவினைவாத அபிலாசைகளுக்கு விமர்சனமற்ற ஆதரவாளர்களாக மார்க்சிஸ்டுகள் இருக்க வேண்டும் என்று லெனின் கூறியதாக பாலசிங்கம் வாதிட்டார். [தமிழ் மக்கள்] போராட்டம் முதலாளித்துவ வர்க்கத்தால் தலைமை தாங்கப்பட்டாலும், தொழிலாள வர்க்க புரட்சிகரவாதியின் கடமை, அந்தப் போராட்டத்தை ஆதரிப்பதும், அதனை தேசிய விடுதலை மற்றும் சோசலிசப் புரட்சியை நோக்கி முன்னேற்றுவதற்கான ஒரு மூலோபாயத்தை தழுவிக் கொள்வதுமே ஆகும், என அவர் அறிவித்தார். முதலாளித்துவத்திலிருந்து சுயாதீனமாக தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தி, அணிதிரட்டுவதற்கான எந்தவொரு போராட்டமும் இன்றி, சோசலிசப் புரட்சி குறித்து பாலசிங்கம் கூறுவது, முழுக்க முழுக்க ஒரு அலங்கரிப்பாகும். 1980ல்சோசலிசத் தமிழ் ஈழத்தை நோக்கி என்ற தலையங்கத்துடனான ஒரு விவாதத்தில், விடுதலைப் புலிகள் அமைப்பு தொழிலாள வர்க்கத்தை நோக்கித் திரும்புவதை முழுமையாக வெளிப்படையாக நிராகரித்தது. தொழிலாள வர்க்கத்தை ஒன்றுபடுத்துவது மற்றும் ஒட்டுமொத்த இலங்கைக்குமான புரட்சி போன்ற இற்றுப் போன சித்தாந்தத்தை தமிழ் மக்கள் போதுமான அளவு கேட்டாகி விட்டது. பெரும்பான்மையின் ஒடுக்குமுறைப் பிடியில் சிக்கியிருக்கும் ஒரு தேசிய சிறுபான்மை, முதலில் தனது விடுதலைக்காகப் போராடியாக வேண்டும், என அது பிரகடனம் செய்தது.  

22-8. சிங்கள மற்றும் தமிழ் தொழிலாளர்களை அவர்களது பொது வர்க்க நலன்களைச் சூழ ஐக்கியப்படுத்த புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் சளைக்காமல் தொடர்ந்து போராடியது. தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும் 1983 படுகொலைகளில் ஐக்கிய தேசியக் கட்சி  சம்பந்தப்பட்டிருப்பதை அம்பலப்படுத்தவும் விரிவான பிரச்சாரங்களை கட்சி நடத்தியது. ஆனால் விடுதலைப் புலிகளுக்கு தொ.பு.க. கொடுத்த விமர்சனமற்ற ஆதரவு, புலிகளதும் மற்றும் ஏனைய தமிழ் ஆயுதக் குழுக்களதும் அரசியல் சம்பந்தமாக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் எந்தவொரு ஆய்வும் செய்வதை தடுத்ததன் மூலம் அந்த அமைப்புகள் தமிழ் இளைஞர்களிடையேயான தமது செல்வாக்கை பலப்படுத்திக்கொள்ள உதவியது. 1985-87ல் தொழிலாளர் புரட்சிக் கட்சியுடனான பிளவுக்குப் பின்னரே, தேசியப் பிரச்சினை சம்பந்தமாக, குறிப்பாக இலங்கையில் தொழிலாள வர்க்கத்தின் அனுபவங்கள் தொடர்பாக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மீளாய்வு செய்ய முடிந்தது.

22-9. 1983 தமிழர் விரோதப் படுகொலைகள் இந்தியாவில், குறிப்பாகத் தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் ஒரு கடும் கொந்தளிப்பு அலையை உருவாக்கின. இந்திய பிரதமரான இந்திரா காந்தி சமாதான பேச்சுவார்த்தைகளை மத்தியஸ்தம் செய்ய முன்வந்தார். அதே சமயம், இந்திய அரசாங்கம் இரகசியமாகப் பல்வேறு தமிழ் ஆயுதக் குழுக்களுக்கு இராணுவப் பயிற்சி அளிக்க அதிகாரமளித்தது. இது அந்தக் குழுக்களின் நடவடிக்கைகளின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கவும் மற்றும் இலங்கை அரசாங்கத்துடனான தனது கொடுக்கல் வாங்கல்களில் பேரம்பேசுவதற்கான ஒரு அம்சமாக அவர்களைப் பயன்படுத்துவதாவும் இருந்தது. அனைத்து தமிழ்க் குழுக்களும், இந்திய முதலாளித்துவமே தமிழ் மக்களின் பாதுகாவலர்கள் என்ற மாயையை ஊக்குவித்ததோடு பங்களாதேஷில் போன்று நேரடியான இந்தியத் தலையீட்டிற்கும் ஊக்குவித்தன. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆகிய ஸ்ராலினிசக் கட்சிகள் இந்திய அரசாங்கத்தின் சூழ்ச்சிகளில் நேரடியாகப் பங்கேற்றதோடு, தமிழ் இளைஞர்களுக்கு இந்திய உளவுத் துறையின் மேற்பார்வையின் கீழ் அரசியல் பயிற்சியை வழங்கின. புலிகள் மட்டுமே இதில் விதிவிலக்காக இருந்தனர். புலிகள் இந்திய அரசாங்கத்தில் இருந்து கொஞ்சம் தூர விலகி இருப்பதாகக் காட்டிக்கொண்ட போதிலும், அது இந்தியாவில் பிராந்திய தமிழ் முதலாளித்துவ முகாமுக்குள்ளும் மற்றும் இலங்கை தமிழ் முதலாளித்துவத்துக்குள்ளும் மிக நேரடியாக நுழைவதற்கானதாக இருந்தது. விடுதலைப் புலிகள், தமிழக முதலமைச்சராக இருந்த எம்.ஜி. ராமச்சந்திரனுடனும் மற்றும் விடுதலைப் புலிகளுடனான தொடர்பை தனது சொந்த அரசியல் பிம்பத்தை வலுப்படுத்திக் கொள்ள பயன்படுத்திக் கொண்ட அவரது முதலாளித்துவ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடனும் (அ.இ.அ.தி.மு.க.) நெருக்கமான உறவுகளைப் பேணிவந்தனர். புலிகளுடனான தனது உறவுகளை இடைஞ்சல் செய்வதற்கு விரும்பாத தொழிலாளர் புரட்சிக் கட்சி தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் ட்ரொட்ஸ்கிசத்திற்கான போராட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் எடுத்த முயற்சிகளை எதிர்த்தது. 

22-10 1983-85 காலகட்டத்தில் பிரிட்டன் தொழிலாளர் புரட்சிக் கட்சி, அனைத்துலகக் குழுவின் மீதான அதன் பரந்த தாக்குதல்களின் ஒரு பாகமாக இலங்கைப் பகுதியை அரசியல் ரீதியில் அழிக்க நனவாக முயற்சித்தது. 1983 ஜூலையில் தமிழர் விரோத படுகொலையின் உச்சகட்டத்தில், பண்டாவால் எழுதப்பட்டு நியூஸ் லைன் பத்திரிகையில் பிரசுரமான ஒரு கருத்து தெரிவித்ததாவது: பொலிசும் இராணுவமும் அவசரகாலச் சட்டங்களின் கீழ் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த தன்னிச்சையான கட்டுப்பாடற்ற அதிகாரத்தை எங்களது தோழர்களைக் கொல்வதற்கும், எங்களது அச்சகத்தை அழிப்பதற்கும் பயன்படுத்தியிருக்க சாத்தியமிருக்கிறது அல்லது பயன்படுத்தியிருக்கலாம். கீர்த்தி பாலசூரியா இது குறித்து பின்னர் எழுதுகையில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் தலைவிதி சம்பந்தமாக தொழிலாளர் புரட்சிக் கட்சி கொண்டிருந்த அலட்சியத்தைக் கண்டனம் செய்தார். நீங்கள் எங்கள் பாதுகாப்புக்காக ஒரு பிரச்சாரத்தை முன்னெடுக்க எதையுமே செய்யாததோடு, அதன் மூலம் எங்களது கட்சியை சரீரரீதியாக அழித்தாலும் கூட நீங்கள் ஒரு விரலைக் கூட உயர்த்தப் போவதில்லை என்பதை ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு முன்கூட்டியே தெரிவித்து விட்டீர்கள். அந்தக் காலகட்டம் முழுவதிலும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் தன்னைத் தானே பாதுகாத்துக் கொண்டதோடு, உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தத்துவார்த்த மற்றும் அரசியல் அடித்தளங்களில் இருந்து பின்வாங்காத காரணத்தால், பல்வேறு தொழிலாள வர்க்க மற்றும் இளைஞர் தட்டினரிடம் இருந்து மதிப்பை வென்றெடுத்தது. முற்றுமுழுதாக இந்த உண்மையினாலேயே எங்களது கட்சி ஹீலி, பண்டா மற்றும் சுலோட்டர் மூலமான அரசியல் ஆத்திரமூட்டல்களின் நிரந்தர இலக்காக ஆகியிருக்கிறது,[53] என அவர் விளக்கினார்.

22-11. தமிழீழ விடுதலைப் புலிகளை விமர்சனமின்றி ஆதரித்த அதே வேளை, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தில் இருந்து பிரிந்து சென்று, அதனை சிங்கள இனவாத சொற்பதங்களில் தாக்கிக்கொண்டிருந்த ஒரு குழுவுடன் அரசியல் உறவுகளைப் பேணுவதைப் பற்றி தொ.பு.க.வுக்கு மனவுறுத்தல் இருக்கவில்லை. தொழிலாளர் புரட்சிக் கட்சி இந்த ஓடுகாலிகளுடன் சமரசத்திற்குச் செல்வதற்கு புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்துக்கு அழுத்தம் கொடுத்தது. அது தோல்வியடைந்த நிலையில், அவர்களின் விஷமத்தனமான வீண்பேச்சுக்களைப் பயன்படுத்தி புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை கீழறுக்கும் வேலை தொடர்ந்தது. அந்தக் குழுவின் செய்திகளின் அடிப்படையில், நா.அ.அ.கு.வில் இருந்து புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை வெளியேற்றுவதற்கு 1985ல் நடந்த அதன் பத்தாவது காங்கிரசில் ஹீலியும் பண்டாவும் தீர்மானம் கொண்டுவந்தனர். வெளியேற்றுவது எக்காலத்திலும் நிறைவேற்றப்படாத அதேவேளை, தொழிலாளர் புரட்சிக் கட்சி தலைவர்கள் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தையும் அனைத்துலகக் குழுவையும் அழிப்பதை நோக்கி தெளிவாகத் திரும்பியிருந்தனர்.

51. (நான்காம் அகிலம் சஞ்சிகை) Fourth International, Volume 14, No. 1, March 1987, p.54.

52. அதே சஞ்சிகை, பக்கம். 54-55

53. (நான்காம் அகிலம் சஞ்சிகை) Fourth International, Volume 14, No. 2, June 1987, p. 111.

[an error occurred while processing this directive]