wsws : Tamil
 
முதலாளிகளும் பாட்டாளிகளும்

 
 
 

முதலாளிகளும் பாட்டாளிகளும் [J]

இதுநாள் வரையிலுமான சமுதாயங்களில் வரலாறு அனைத்தும்[K] வர்க்கப் போரட்டங்களது வரலாறே ஆகும்.

சுதந்திரமுடையானும் அடிமையும், பட்ரீஷிய உயர்குலச் சீமானும் பிலெபியப் பாமரக் குடியோனும், நிலப்பிரபுவும் பண்ணையடிமையும், பிரபுவும் பண்ணையடிமையும், கைவினைச் சங்க ஆண்டானும்[L] கைவினைப் பணியாளனும், சுருங்கக் கூறுமிடத்து ஒடுக்குவோரும் ஒடுக்கப்படுவோரும் ஒருவருக்கொருவர் தீராப் பகை கொண்டோராய், ஒரு நேரம் மறைவாகவும் ஒரு நேரம் பகிரங்கமாகவும், இடையறாப் போராட்டம் நடத்தி வந்தனர். இந்தப் போராட்டம் சமுதாயம் முழுவதன் புரட்சிகரப் புத்தமைப்பிலோ, அல்லது போராடும் வர்க்கங்களது பொது அழிவிலோதான் எப்போதும் முடிவுறலாயிற்று.

வரலாற்றின் முந்திய சகாப்தங்களில் அனேகமாய் எங்குமே பல்வேறு வகுப்புகளாலாகிய சிக்கலான சமூகப் பாகுபாடு, சமூக அந்தஸ்தின் பன்மடிப் படிநிலை அமைவு இருக்கக் கான்கிறோம். பண்டைய ரோமாபுரியில்; சீமான்கள், வீரமறவர், பாமரக் குடியோர், அடிமைகள்; மத்தியகாலத்தில்; பிரபுத்துவக் கோமான்கள், மான்யக்காரர்கள், கைவினைச் சங்க ஆண்டான்கள், கைவினைப் பணியாளர்கள், பண்ணையடிமைகள். இந்த வகுப்புக்களில் அனேகமாய் ஒவ்வொன்றிலும் படிநிலை உட்பிரிவுகளும் இருக்கக் காண்கிறோம்.

பிரபுத்துவ சமுதாயத்தின் இடிபாடுகளிருந்து முளைத்தெழுந்துள்ள தற்கால முதலாளித்துவ சமுதாயம் வர்க்கப் பகைமைகளுக்கு முடிவுகட்டி விடவில்லை; பழையவற்றின் இடத்தில் புதிய வர்க்கங்களையும், புதிய ஒடுக்குமுறை நிலைமைகளையும், புதிய போரட்ட வடிவங்களையும் நிலைநாட்டியிருக்கிறதே அன்றி வேறில்லை.

ஆயினும் நமது சகாப்தமாகிய இந்த முதலாளித்துவ வர்க்க சகாப்தத்தின் ஒரு தனி இயல்பு என்னவெனில், வர்க்கப் பகைமைகளை இது சுருக்கி எளிமையாக்கியுள்ளது: சமுதாயம் மேலும் மேலும் இரு பெரும் பகை முகாம்களாய், எதிரும் புதிருமான இரு பெரும் வர்க்கங்களாய் -முதலாளித்துவ வர்க்கமும் பாட்டாளி வர்க்கமுமாய்- பிளவுண்டு வருகின்றது.

மத்திய காலத்துப் பண்ணையடிமைகளிடமிருந்து ஆதி நகரங்களின் சுதந்திர நகரத்தார் உதித்தெழுந்தார்கள். இந்த நகரத்தாரிடமிருந்து முதலாளித்துவ வர்க்கத்தின் ஆரம்பக் கூறுகள் வளரலாயின.

அமெரிக்கா கண்டுபிடிக்கப்பட்டதாலும், ஆபிரிக்க நன்னம்பிக்கை முனையைச் சுற்றிச் செல்லும் கடல்வழி கண்டறியப்பட்டதாலும், தலைதூக்கி வந்த முதலாளித்துவ வர்க்கத்துக்கு புதிய வாய்ப்புகள் கிடைத்தன. கிழக்கு இந்திய, சீனச் சந்தைகள், அமெரிக்காவில் குடியேற்றம், காலனிகளுடனான வாணிபம், பரிவர்த்தனைச் சாதனங்களிலும் பொதுவாய் பரிவர்த்தனைப் பண்டங்களிலும் எற்பட்ட பெருக்கம் ஆகிய இவை எல்லாம் வாணிபத்துக்கும் கப்பல் போக்குவரத்துக்கும் தொழில்துறைக்கும் இதன் முன் என்றும் கண்டிராத அளவுக்கு ஊக்கமூட்டின; ஆட்டம் கண்டுவிட்ட பிரபுத்துவ சமுதாயத்தில் புரட்சிகரக் கூறு வேகமாய் வளர்வதற்கு இவ்விதம் இவை தூண்டுதல் அளித்தன.

பிரபுத்துவ முறையில் அமைந்த தொழில் அமைப்பில் தொழிற் பண்டங்களது உற்பத்தியானது தனியுரிமை பெற்ற கைவினைச் சங்கங்களின் ஏகபோகமாய் இருந்தது. இப்போது இந்தப் பிரபுத்துவத் தொழில் அமைப்பு புதிய சந்தைகளின் வளர்ந்து பெருகும் தேவைகளுக்கு ஒவ்வாததாகியது. இதன் இடத்தில் பட்டறைத் தொழில்முறை வளரலாயிற்று. கைவினைச் சங்க ஆண்டான்களை பட்டறைத் தொழில் மத்தியதர வர்க்கத்தார் அப்புறப்படுத்தினர். பல்வேறு கூட்டிணைவுகளாய் அமைந்த கைவினைச் சங்கங்களுக்கு இடையிலான உழைப்புப் பிரிவினை தனித்தனி தொழிலகத்திலுமான உழைப்புப் பிரிவினையின் முன்னால் நிற்க முடியாமல் மறைந்தொழிந்தது.

இதற்கிடையில் சந்தைகள் தொடர்ந்து மேன்மேலும் வளர்ந்து விரிவடைந்தன. தேவை மேன்மேலும் உயர்ந்து சென்றது. பட்டறைத் தொழில் முறையுங்கூட இப்போது போதாததாகியது. இந்நிலையில்தான் நீராவியும் இயந்திரங்களும் தொழிற் பண்டங்களின் உற்பத்தியில் புரட்சியை உண்டாக்கின. பட்டறைத் தொழில்முறை போய் அதனிடத்தில் பிரமாண்டமான நவீனத் தொழில் துறை எழுந்தது; பட்டறைத் தொழில் மத்தியதர வர்க்கத்தாரின் இடத்தில் கோடீஸ்வரத் தொழிலதிபர்கள், பெரும் பெரும் தொழல்துறைப் பொருளுற்பத்திச் சேனைகளது அதிபதிகள், தற்காலத்து முதலாளிகள் உருவாகினர்.

நவீன தொழித்துறை அனைத்து உலகச் சந்தையை நிறுவியிருக்கிறது. அமெரிக்கா கண்டுபிடிக்கப்பட்டதானது இதற்கு பாதையைச் செப்பனிட்டது. வாணிபத்தையும் கடல்வழிப் போக்குவரத்தையும் நிலவழி போக்குவரத்தையும் அனைத்து உலகச் சந்தை பிரமாதமாய் வளரச் செய்திருக்கிறது. இந்த வளர்ச்சி அதன் பங்கிற்கு மீண்டும் தொழில்துறையின் விரிவகற்சியை ஊக்குவித்தது. எந்த அளவுக்குத் தொழில்துறையும் வாணிபமும் கப்பல் போக்குவரத்தும் இரயில் பாதையும் விரிவடைந்து சென்றனவோ, அதே அளவுக்கு முதலாளித்துவ வர்க்கமும் வளர்ச்சியுற்று ஓங்கிற்று, தனது மூலதனத்தைப் பெருகச் செய்து கொண்டது, மத்திய காலம் விட்டுச் சென்றிருந்த ஒவ்வொரு வர்க்கத்தையும் பின்னிலைக்குத் தள்ளிற்று.

இவ்வாறு, நவீன முதலாளித்துவ வர்க்கம் நீண்டதொரு வளர்ச்சிப் போக்கின் விளைவாய், உற்பத்தி முறையிலும் பரிவர்த்தனை முறையிலும் வரிசையாய் ஏற்பட்ட புரட்சிகளின் விளைவாய் உருவானதே என்பதைக் காண்கிறோம்.

முதலாளித்துவ வர்க்கம் அதனுடைய வளர்ச்சியின் ஒவ்வொரு படிக்கும் ஏற்றவாறு அரசியல் வெற்றிகளும் அடைந்தது. பிரபுத்துவக் கோமான்களது ஆதிக்கத்தில் ஒடுக்கப்பட்ட ஒரு வகுப்பாகவும், மத்திய காலக் கம்யூனில்[M] ஆயுதம்மேந்திய தன்னாட்சிக் கழகமாகவும் இருந்தது; இங்கே (இத்தாலியியலும் ஜேர்மனியிலும் காணப்பட்டது போல) சுயேச்சை நகரக் குடியரசாகவும், அங்கே (பிரான்சில் காணப்பட்டது போல) வரிக்குரிய ''மூன்றாவது ஆதீன'' மாகவும் விளங்கிற்று. பிற்பாடு பட்டறைத் தொழில் மேலோங்கிய காலத்தில் பிரபுத்துக் கோமான்களுக்கு எதிராய் அரைப் பிரபுத்துவ முடியரசுக்கோ, வரம்பிலா முடியரசுக்கோ துணை நின்றது, மொத்தத்தில் முடிப் பேரரசுகளுக்கு ஆதாரத் தூணாயிற்று; முடிவில் நவீன தொழில்துறையும் அனைத்து உலகச் சந்தையும் நிறுவப்பட்டதும் தனக்கு நவீனகால பிரதிநிதித்துவ அரசினில் ஏகபோக அரசியல் ஆதிக்கம் வென்று கொண்டது. நவீனகால அரசின் ஆட்சியதிகாரமானது முதலாளித்துவ வர்க்கம் அனைத்துக்குமான பொது விவகாரங்ளை நிர்வகிக்கும் குழுவே அன்றி வேறல்ல.

வரலாற்று அரங்கில் முதலாளித்துவ வர்க்கம் மிகவும் புரட்சிகரமான பங்கு ஆற்றியிருக்கிறது.

எங்கெல்லாம் முதலளித்துவ வர்க்கம் ஆதிக்க நிலை பெற்றதோ, அங்கெல்லாம் அது எல்லா பிரபுத்துவ உறவுகளுக்கும், தந்தைவழிச் சமுதாய உறவுகளுக்கும், கிராமாந்திரப் பாரம்பரிய உறவுகளுக்கும் முடிவு கட்டியது. மனிதனை ''இயற்க்கையாகவே மேலானேருக்கு'' கீழ்படுத்தி கட்டிப் போட்ட பல்வேறு வகையான பிரபுத்துவ பந்தங்களையும் ஈவிரக்கமின்றி அறுத்தெறிந்துவிட்டு, மனிதனுக்கும் மனிதனுக்கும் அப்பட்டமான தன்னலத்தைத் தவிர, பரிவு உணர்ச்சியில்லா ''பணப் பட்டுவாட'' வைத் தவிர வேறு ஒட்டுமில்லை உறவுமில்லை என்றாக்கிற்று. சமயத் துறை பக்திப் பரவசம், பேராண்மையின் வீராவேசம், சிறு மதியோரது உணர்ச்சிப் பசப்பு ஆகிய புனித பேரானந்தங்களை எல்லாம் தன்னலக் கணிப்பெனும் உறைபனிக் குளிர் நீரில் மூழ்க்கடித்துள்ளது. மனிதனது மாண்பினை பரிவர்த்தனை மதிப்பாய் மாற்றியிருக்கின்றது. சாசனங்களில் பிரகடனம் செய்யப்பட்ட விலக்கவோ துறக்கவோ முடியாத எண்ணிடங்கா சுதந்திரங்களுக்குப் பதிலாய், வெட்கங்கெட்ட வாணிபச் சுதந்திரமெனும் ஒரேயொரு சுதந்திரத்தை ஆசனத்தில் அமர்த்தி வைத்திருக்கிறது. சுருங்கச் சொல்வதெனில் சமயத் துறை பிரமைகளாலும் அரசியல் பிரமைகளாலும் திரையிட்டு மறைக்கப்பட்ட சுரண்டலுக்குப் பதிலாய், முதலாளித்துவ வர்க்கம் வெட்க உணர்ச்சியற்ற அம்மணமான, நேரடியான, மிருகத்தனமான சுரண்டலை நிலைநாட்டியிருக்கிறது.

இதுகாறும் போற்றிப் பாராட்டப்படும், பணிவுக்கும் பக்திக்குமுரியதாய் கருதப்பட்ட ஒவ்வொரு பணித்துறையும் முதலாளித்துவ வர்க்கம் மகிமை இழக்கச் செய்துள்ளது. மருத்துவரையும் வழக்கறிஞரையும் சமய குருவையும் கவிஞரையும் விஞ்ஞானியையும் அது தனது கூலியுழைப்பாளர்கள் ஆக்கிவிட்டது.

குடும்பத்திடமிருந்து முதலாளித்துவ வர்க்கம் அதன் உணர்ச்சி நய முகத்திரையைக் கிழித்தெறிந்து, குடும்ப உறவை வெறும் காசு பண உறவாய் சிறுமையுறச் செய்து விட்டது.

பிற்போக்கர்கள் போற்றிப் பாராட்டுகிறார்களே மத்திய காலத்து பேராண்மையின் முரட்டுக் கூத்து, அது எவ்வளவு மூடத்தனமான செயலின்மையை தனது உற்ற துணையாய் கொண்டிருந்தது என்பதை முதலாளித்துவ வர்க்கம் நிதர்சனமாக்கியிருக்கிறது. மனிதச் செயற்பாடு என்னவெல்லாம் செய்யவல்லது என்பதை முதன்முதலாய் தெரியப்படுத்தியது முதலாளித்துவ வர்க்கம்தான். எகிப்திய பிரமீட்டுகளையும் ரோமானியக் கட்டுக்கால்வாய்களையும் கோத்திக் தேவாலயங்களையும் மிஞ்சிய மாபெரும் அதிசயங்களை அது சாதித்திருக்கிறது; முற்காலத்துக் குடிப்பெயர்ச்சி பயணங்களும் சிலுவைப்போர் பயணங்களும்[30] அற்ப காரியங்களாய் தோன்றும்படியான தீரப் பயணங்களை நடத்தியிருக்கின்றது.

முதலாளித்துவ வர்க்கத்தால் ஓயாது ஒழியாது உற்பத்திக் கருவிகளிலும், இதன் மூலம் உற்பத்தி உறவுகளிலும், இவற்றுடன் கூடவே சமூக உறவுகள் அனைத்திலுமே புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தாமல் வாழ முடியாது. ஆனால் இதற்கு முந்திய தொழில் வர்க்கங்களுக்கு எல்லாம் பழைய உற்பத்தி முறைகளை மாற்றமில்லா வடிவில் அப்படியே பாதுகாத்துக் கொள்வதுதான் வாழ்வதற்குரிய முதலாவது நிபந்தனையாய் இருந்தது. ஓயாது ஒழியாது உற்பத்தியில் ஏற்படும் புரட்சிகர மாற்றங்களும் சமூக உறவுகள் யாவும் இடையறாது அமைதி குலைதலும் முடிவே இல்லாத நிச்சயமற்ற நிலைமையும் கொந்தளிப்பும் முதலாளித்துவ சகாப்தத்தை அதற்கு முந்திய எல்லா சகாப்தங்களிலிருந்தும் வேறுபடுத்திக் காட்டுகின்றன. நிலைதயான, இறுகிக் கெட்டிப் பிடித்துப் போன எல்லா உறவுகளும், அவற்றுடன் இணைந்த பழங்கால தப்பெண்ணங்களும் கருத்துக்களும் துடைத்தெறியப்படுகின்றன, புதிதாய் உருவாகியவை எல்லாம் இறுகிக் கெட்டியாவதற்கு முன்பே பழமைப்பட்டுவிடுகின்றன. கெட்டியானவை யாவும் கரைந்து காற்றிலே கலக்கின்றன, புனிதமானவை யாவும் புனிதம் இழக்கின்றன, முடிவில் மனிதன் தெளிந்த புத்தியுடன் தனது வாழ்க்கையின் மெய்யான நிலைமைகளையும் தனது சக மனிதர்களுடன் தனக்குள்ள உறவுகளையும் நேர் நின்று உற்று நோக்க வேண்டியதாகிறது.

முதலாளித்துவ வர்க்கத்தின் உற்பத்திப்பொருள்களுக்கு தொடர்ந்து மேலும் மேலும் விரிவடைந்து செல்லும் சந்தை அவசியமாகும். இந்த அவசியம் முதலாளித்துவ வர்க்கத்தை புவிப்பரப்பு முழுதும் செல்லும்படி விரட்டுகின்றது. அது எல்லா இடங்களுக்கும் சென்று ஒட்டிக் கொள்ள வேண்டியதாகின்றது, எல்லா இடங்களிலும் குடியேற வேண்டியதாகின்றது, எல்லா இடங்களிலும் தொடர்புகளை நிறுவிக்கொள்ள வேண்டியதாகின்றது.

அனைத்து உலகச் சந்தையை பயன்படுத்திச் செயல்படுவதன் மூலம் முதலாளித்துவ வர்க்கம் ஒவ்வொரு நாட்டிலும் உற்பத்தியையும் நுகர்வையும் அனைத்துலகத் தன்மை பெறச் செய்திருக்கின்றது. பிற்போக்கர்கள் கடுங் கோபம் கொள்ளும்படி அது தொழில்களது காலுக்கு அடியிலிருந்து அவற்றின் தேசிய அடிநிலத்தை அகற்றியுள்ளது. நெடுங்காலமாய் நாட்டிலே இருந்துள்ள தொழில்கள் யாவும் அழிக்கப்பட்டு விட்டன, அல்லது நாள்தோறும் அழிக்கப்பட்டு வருகின்றன. புதிய தொழில்களால் அவை அப்புறப்படுத்தப்படுகின்றன. இந்தப் புதிய தொழில்களை தோன்றச் செய்வது நாகரிக நாடுகள் யாவற்றுக்கும் ஜீவமரண பிரச்சினையாகிவிடுகின்றது. முன்பிருந்தவற்றைப்போல் இந்த புதிய தொழில்கள் உள்நாட்டு மூலப் பொருள்களை மட்டும் உபயோகிப்பவை அல்ல, தொலைதூரப் பிரதேசங்களிலிருந்து தருவிக்கப்படும் மூலப் பொருள்களை உபயோகிப்பவை. இவற்றின் உற்பத்திப் பொருள்கள் தாய்நாட்டில் மட்டுமின்றி, உலகெங்கும் எடுத்துச் செல்லப்பட்டு எல்லாப் பகுதிகளிலும் நுகரப்படுகின்றவை. தாய்நாட்டு உற்பத்திப் பொருட்களால் பூர்த்திசெய்யப்பட்ட பழைய தேவைகளுக்குப் பதில், தொலைதூர நாடுகள், மண்டலங்களது உற்பத்திப் பொருட்களால் பூர்த்தி செய்யப்படும் புதிய தேவைகள் எழுகின்றன. வட்டாரங்கள், நாடுகள் இவற்றின் பழைய ஒதுக்க நிலைக்கும் தன்னிறைவுக்கும் பதில், எல்லாத் திசைகளிலுமான நெருங்கிய தொடர்பும் உலக அளவில் நாடுகளுக்கிடையிலான சார்புடமையும் ஏற்படுகின்றன. பொருள் உற்பத்தியில் எப்படியோ அப்படியேதான் அறிவுத்துறை உற்பத்தியிலும் தனித்தனி நாடுகளுடைய அறிவுத்துறை படைப்புக்கள் எல்லா நாடுகளுக்குமான பொதுச் சொத்தாகின்றன. தேசிய ஒருதலைப்பட்ச பார்வையும் குறுகிய மனப்பாங்கும் மேலும் மேலும் இயலாதனவாகின்றன. நாட்டளவிலும் மண்டல அளவிலுமான எத்தனையோ பல இலக்கியங்களிலிருந்து ஒர் அனைத்துலக இலக்கியம் உருவாகின்றது.

உற்பத்திக் கருவிகள் அனைத்தின் அதிவேக அபிவிருத்தியின் மூலம், போக்குவரத்துச் சாதனங்களின் பிரமாதமான மேம்பாட்டின் மூலமும் முதலாளித்துவ வர்க்கம் எல்லாத் தேசங்களையும், மிகவும் அனாகரிக கட்டத்தில் இருக்கும் தேசங்களையும்கூட, நாகரிக வட்டத்துக்குள் இழுக்கிறது. தன்னுடைய பண்டங்களின் மலிவான விலைகளை அது சக்தி வாய்ந்த பீரங்கிகளாய் கொண்டு, சீன மதிலை ஒத்த எல்லாத்தடைமதில்களையும் தகர்த்திடுகின்றது; அனாகரிக கட்டத்தில் இருப்போருக்கு அந்நியர்பால் உள்ள முரட்டுப் பிடிவாத வெறுப்பை பணிய வைக்கின்றது. ஏற்காவிடில் அழியவே நேருமென்ற நிர்ப்பந்தத்தின் மூலம் அது எல்லாத் தேசங்களையும் முதலாளித்துவ பொருளுற்பத்தி முறையை ஏற்கச் செய்கின்றது; நாகரிகம் என்பதாய் தான் கூறிக்கொள்வதை தழுவும்படி, அதாவது முதலாளித்துவமயமாகும்படி எல்லாத் தேசங்களையும் பலவந்தம் செய்கிறது. சுருங்கக் கூறுமிடத்து, அப்படியே தன்னை உரித்து வைத்தாற் போன்றதோர் உலகை படைத்திடுகிறது அது.

முதலாளித்துவ வர்க்கம் நாட்டுப்புறத்தை நகரங்களது ஆட்சிக்குக் கீழ்ப்படச் செய்துள்ளது, மாபெரும் நகரங்களை அது உதித்தெழ வைத்திருக்கின்றது; கிராம மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் நகர மக்கள் தொகையை வெகுவாய் அதிகரிக்கச் செய்திருக்கிறது; இவ்விதம் மக்களில் ஒரு கணிசப்பகுதியோரை கிராம வாழ்க்கையின் மடமையிலிருந்து மீட்டிருக்கிறது. எப்படி அது நாட்டுப்புறத்தை நகரங்களைச் சார்ந்திருக்கச் செய்துள்ளதோ, அதேபோல அநாகரிக நிலையிலும் குறைநாகரிக நிலையிலுமுள்ள நாடுகளை நாகரிக நாடுகளையும், விவசாயிகளது நாடுகளை முதலாளிகளது நாடுகளையும், கிழக்கு நாடுகளை மேற்கு நாடுகளையும் சார்ந்திருக்கச் செய்துள்ளது.

மக்கள் தொகை, உற்பத்திச் சாதனங்கள், சொத்து இவற்றின் சிதறுண்ட நிலைக்கு முதலாளித்துவ வர்க்கம் மேலும் மேலும் முடிவு கட்டி வருகின்றது. மக்கள் தொகையை அது அடர்ந்து திரட்சி பெறச் செய்திருக்கின்றது, உற்பத்திச் சாதனங்களை மையப்படுத்தியிருக்கின்றது, சொத்துக்களை ஒரு சிலர் கையில் குவிய வைத்திருக்கின்றது. இதன் தவிர்க்கவொண்ணாத விளைவு என்னவெனில், அரசியல் அதிகாரமும் மையப்படுத்தப்பட்டது. தனித்தனி நலன்களும் சட்டங்களும் அரசாங்கங்களும் வரிவிதிப்பு முறைகளும் கொண்டனவாய் சுயேச்சையாகவோ, அல்லது தளர்ந்த இணைப்புடனோ இருந்த மாநிலங்கள் ஒரே அரசாங்கத்தையும் ஒரே சட்டத் தொகுப்பையும் தேச அளவிலான ஒரே வர்க்க நலனையும் ஒரே தேச எல்லையையும் ஒரே சுங்கவரி முறையையும் கொண்ட ஒரே தேசமாய் ஒருசேர இணைக்கப்பட்டன.

முதலாளித்துவ வர்க்கம் ஒரு நூறாண்டுகூட நிறைவுறாத அதன் ஆட்சிக் காலத்தில், இதற்கு முந்திய எல்லா தலைமுறைகளுமாய் சேர்ந்து உருவாக்கியதைக் காட்டிலும் மலைப்பு தட்டும்படியான பிரமாண்ட உற்பத்திச் சக்திகளைப் படைத்தமைத்திருக்கின்றது. இயற்கை சக்திகளை மனிதனுக்கு அடிபணியச் செய்தல், இயந்திர சாதனங்கள், தொழில் துறையிலும் விவசாயத்திலும் இரசாயனத்தைப் பயன்படுத்தல், நீராவிக் கப்பல் போக்குவரத்து, இரயில்பாதைகள், மின்விசைத்தந்தி, முழுமுழு கண்டங்களைத் திருத்தி சாகுபடிக்குச் செப்பனிடனிடுதல், ஆறுகளை கப்பல் போக்குவரத்துக்கு ஏற்றனவாய் ஒழுங்கு செய்தல், மனிதன் அடியெடுத்து வைத்திராத இடங்களில் மாயவித்தை புரிந்தாற்போல் பெரும் பெரும் தொகுதிகளிலான மக்களை குடியேற்றுவித்தல் -இம்மாதிரியான பொருளுற்பத்தி சக்திகள் சமூக உழைப்பின் மடியில் சயனம் புரியுமென இதற்கு முந்திய எந்த நூற்றாண்டாவது கனவிலும் நினைத்திருக்குமா?

ஆக நாம் காண்பது என்னவெனில்: முதலாளித்துவ வர்க்கம் உருப்பெற்று எழுவதற்கு அடிப்படையாய் இருந்த பொருளுற்பத்தி, பரிவர்த்தனைச் சாதனங்கள் பிரபுத்துவ சமுதாயத்தில் ஜனித்தவை. இந்த பொருளுற்பத்தி, பரிவர்த்தனைச் சாதனங்களது வளர்ச்சியின் குறிப்பிட்ட ஒரு கட்டத்தில், பிரபுத்துவ சமுதாயத்தின் பொருளுற்பத்தி, பரிவர்த்தனை உறவுகள், விவசாயத்துக்கும் பட்டறைத் தொழிலுக்குமான பிரபுத்துவ ஒழுங்கமைப்பு --சுருக்கமாய்ச் சொல்வதெனில் பிரபுத்துவ சொத்துடமை உறவுகள்-- வளர்ச்சியுற்றுவிட்ட உற்பத்தி சக்திகளுக்கு ஒவ்வாதனவாயின்; அவை பொருளுற்பத்திக்கு பூட்டப்பட்ட கால்விலங்குகளாய் மாறின. அந்த விலங்குகளை உடைத்தெறிய வேண்டியிருந்தது; அவை உடைத்தெறியப்பட்டன.

அவற்றின் இடத்தில் தடையில்லா போட்டியும், அதனுடன் கூடவே அதற்கு தகவமைந்த சமூக, அரசியல் அமைப்பும் முதலாளித்துவ வர்க்கத்தினுடைய பொருளாதார, அரசியல் ஆதிக்கமும் வந்தமர்ந்து கொண்டன.

இதைப் போன்றதோர் இயக்கம் இப்போது நம் கண்ணெதிரே நடைபெற்று வருகின்றது. முதலாளித்துவ பொருழுற்பத்தி, பரிவர்த்தனை உறவுகளையும் முதலாளித்துவ சொத்துடமை உறவுகளையும் கொண்டதாகிய நவீன முதலாளித்துவ சமுதாயம், மாயவித்தை புரிந்து தோற்றுவித்தாற் போல் இவ்வளவு பிரமாண்ட பொருளுற்பத்திச் சாதனங்களையும் பரிவர்த்தனை சாதனங்களையும் தோற்றுவித்திருக்கும் இச்சமுதாயம், பாதாள உலகிலிருந்து தனது மந்திரத்தின் வலிமையால் தருவித்த சக்திகளை அடக்கியாள முடியாமற்போன மந்திரவாதியின் நிலையில் இருக்கக் காண்கின்றோம். கடந்த சில பத்தாண்டுகளது தொழில், வாணிப வரலாறே, நவீன பொருள் உற்பத்தி சக்திகள் நவீன பொருள் உற்பத்தி உறவுகளை எதிர்த்து, முதலாளித்துவ வர்க்கமும் அதனுடைய ஆதிக்கமும் நிலவுவதற்கு அவசியமான நிலமைகளாகிய சொத்துடமை உறவுகளை எதிர்த்து புரிந்திடும் கலகத்தின் வரலாறுதான். இதைத் தெளிவுபடுத்த, கால அலைவட்ட முறையில் திரும்பத் திரும்ப எழும் வாணிப நெருக்கடிகளைக் குறிப்பிட்டால் போதும் --திரும்பத் திரும்ப எழுந்து, ஒவ்வொரு தரமும் முன்னிலும் அபாயகரமான முறையில் இந்தநெருக்கடிகள் முதலாளித்துவ சமுதாயம் அனைத்தின் நிலவுதலை ஆட்சேபக் கேள்விக்குரியதாக்கின்றன.

இந்த வாணிப நெருக்கடிகளின் போது ஒவ்வொரு தரமும் இருப்பிலுள்ள உற்பத்தி பொருள்களில் மட்டுமன்றி, ஏற்கனவே உருவாக்கப்பட்ட உற்பத்தி சக்திகளிலும் ஒரு பெரும் பகுதி அழிக்கப்படுகின்றது. இந்த நெருக்கடிகளின் போது, இதற்கு முந்திய எல்லாச் சகாப்தங்களிலும் அடி முட்டாள் தனமாக தோன்றியிருக்கும்படியான ஒரு கொள்ளை நோய் --அமித உற்பத்தி என்னும் கொள்ளை நோய்-- மூண்டு விடுகின்றது. திடுமென சமுதாயம் பின்னோக்கி இழுக்கப்பட்டு சிறிய காலத்துக்குக் காட்டுமிராண்டி நிலையில் விடப்பட காண்கிறோம். பெரும் பஞ்சம், சர்வநாச முழுநிறைப் போர் ஏற்பட்டு வாழ்க்கை தேவைப்பொருள்கள் எவையும் கிடைக்காதபடி செய்துவிட்டாற் போலாகிறது; தொழிலும் வாணிபமும் அழித்தொழிக்கப்பட்டுவிட்டதாய்த் தோன்றுகிறது-- ஏன் இப்படி? ஏனென்றால் நாகரிகம் மிதமிஞ்சிவிட்டது, வாழ்க்கைத் தேவைப் பொருட்கள் அளவு மீறிவிட்டன, தொழிலும் வாணிபமும் எல்லை கடந்துவிட்டன. சமுதாயத்தின் வசமுள்ள உற்பத்தி சக்திகள் முதலாளித்துவச் சொத்துடமை உறவுகளின் வளர்ச்சிக்கு இனி உதவுவதாய் இல்லை. மாறாக, அவை இந்த உறவுகளுக்கு பொருந்தாதபடி அளவுமீறி வலிமை மிக்கவையாகிவிட்டன, இந்த உறவுகள் அவற்றின் வளர்ச்சிக்கு தடையாகிவிட்டன. பொருளுற்பத்தி சக்திகள் இந்தத் தடைகளைக் கடக்க முற்பட்டதும் அவை முதலாளித்துவ சமுதாயம் முழுமையிலும் குழப்பம் உண்டாக்குகின்றன, முதலாளித்துவ சொத்துடமை நிலவுதற்கே அபாயத்தை ஏற்படுத்துகின்றன. அவை உற்பத்தி செய்யும் செல்வத்துக்குத் தம்முள் இடம் போதாதபடி முதலாளித்துவ சமூக உறவுகள் குறுகலாயிருக்கின்றன. இந்த நெருக்கடிகளை முதலாளித்துவ வர்க்கம் எப்படிச் சமாளிக்கிறது? ஒரு புறத்தில், வலுக்கட்டாயமாய் உற்பத்தி சக்திகளில் ஒரு பெரும் பகுதியை அழிப்பதன் மூலமும், மறு புறத்தில் புதிய சந்தைகளை வென்று கைப்பற்றுவதன் மூலமும் பழைய சந்தைகளை இன்னும் அழுத்தி பிழிவதன் மூலமும் --அதாவது மேலும் விரிவான, மேலும் நாசகரமான நெருக்கடிகளுக்கு வழி கோலுவதன் மூலமும் நெருக்கடிகளைத் தடுப்பதற்கான வழிதுறைகளைக் குறைப்பதன் மூலமும்.

எந்த ஆயுதங்களைக் கொண்டு முதலாளித்துவ வர்க்கம் பிரபுத்துவத்தை வீழ்த்திற்றோ, அதே ஆயுதங்கள் இப்பொழுது முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிராய் திருப்பப்படுகின்றன.

முதலாளித்துவ வர்க்கம் தன்னை அழித்தொழிக்கப் போகும் ஆயுதங்களை வார்த்தெடுத்திருப்பதோடு அன்னியில், அந்த ஆயுதங்களைப் பிரயோகிப்பதற்குரிய ஆட்களையும் -- பாட்டாளிகளாகிய நவீன தொழிலாள வர்க்கத்தையும்-- தோன்றியெழச் செய்திருக்கின்றது.

எந்த அளவுக்கு முதலாளித்துவ வர்க்கம், அதாவது மூலதனம் வளர்கின்றதோ, பாட்டாளி வர்க்கமாகிய நவீன தொழிலாள வர்க்கமும் அதே அளவுக்கு வளர்கின்றது. இந்தத் தொழிலாளர்கள் தமக்கு வேலை தேடிக் கொள்ள முடிகின்ற வரைதான் வாழமுடியும், தமது உழைப்பு மூலதனத்தை பெருகச் செய்யும் வரைதான் வேலை தேடிக் கொள்ள முடியும். சிறுகச் சிறுகச் தம்மைத் தாமே விலைக்கு விற்க வேண்டிய நிலையிலுள்ள இந்தத் தொழிலாளர்கள், ஏனைய எல்லா விற்பனைப் பொருள்களையும் போல் தாமும் ஒரு பரிவர்த்தனைப் பண்டமாகவே இருக்கின்றார்கள்; ஆகவே போட்டா போட்டியின் எல்லா அசம்பாவிதங்களும், சந்தையின் எல்லா ஏற்ற இறக்க அலைவுகளுக்கும் இலக்காகிறார்கள்.

விரிந்த அளவில் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதன் விளைவாகவும், உழைப்புப் பிரிவினையின் விளைவாகவும் பாட்டாளிகளுடைய வேலையானது தனித்தன்மையை முற்றும் இழந்துவிட்டது; ஆதலால் தொழிலாளிக்கு அவரது வேலை அறவே சுவையற்றதாகிவிட்டது. இயந்திரத்தின் துணையுறுப்பு ஆகிவிடுகிறார் அவர்; மிகவும் எளிமையானதும், அலுப்புத் தட்டும்படியாய் ஒரே விதமானதும், ஆகவே சுலபமாய் பெறத்தக்கதுமாகிய கைத்திறன்தான் அவருக்கு வேண்டியிருக்கிறது. எனவே தொழிலாளியினது உற்பத்திச் செலவு அனேகமாய் முற்றிலும் அவரது பராமரிப்புக்கும் அவரது இன விருத்திக்கும் தேவையான பிழைப்புச் சாதனங்களுக்கு மேற்படாதபடி குறுகிவிடுகின்றது. ஆனால் பரிவர்த்தனைப் பண்டத்தின் விலை --ஆகவே உழைப்பின் விலை[31] __அதன் உற்பத்திச் செலவுக்கு சமமாகும். இதனால் வேலை எவ்வளவுக்கு எவ்வளவு வெறுக்கத் தக்கதாய் அமைகின்றதோ, அவ்வளவுக்கு அவ்வளவு கூலியும் குறைகின்றது. அது மட்டுமல்ல, இயந்திரங்கள் பயன்படுத்திக் கொள்ளப்படுவதும் உழைப்புப் பிரிவினையும் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகரிக்கின்றனவோ, அவ்வளவுக்கு அவ்வளவு வேலைப் பளுவும் அதிகமாகின்றது --வேலை நேரத்தை அதிகமாக்குவதன் மூலமோ, குறிப்பிட்ட நேரத்தில் வாங்கப்படும் வேலையைக் கூடுதலாக்குவதன் மூலமோ, இயந்திரங்களின் வேகத்தை அதிகரிப்பதன் மூலமோ, இன்ன பிற வழிகளிலோ இது நடந்தேறுகின்றது.

நவீன தொழிற்துறையானது தந்தைவழிக் குடும்ப ஆண்டானுடைய சிறிய தொழிற்கூடத்தை தொழில் முதலாளியினது பெரிய தொழிற்சாலையாய் மாற்றியுள்ளது. தொழிற்சாலையினுள் நெருக்கமாய் கூட்டப்பட்டிருக்கும் திரளான தொழிலாளர்கள் படையாட்களைப் போல் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறார்கள். தொழிற்துறை சேனையின் படையாட்களாகிய இவர்கள், ஆபீசர்கள் என்றும் சார்ஜெண்டுகள் என்றும் முற்றும் படிநிலைக் கிரமத்தில் அமைந்த படைத்தலைமையின் கீழ் இருத்தப்படுகிறார்கள். இவர்கள் அடிமைகளாய் இருப்பது முதலாளித்துவ வர்க்கத்துக்கும் முதலாளித்துவ அரசுக்கும் மட்டுமல்ல; நாள் தோறும் மணி தோறும் இயந்திரத்தாலும், மேலாளர்களாலும், யாவருக்கும் முதலாய் தனித்தனி முதலாளித்துவ ஆலையதிபராலும் இவர்கள் அடிமைகளாக்கப்படுகிறார்கள். இந்தக் கொடுங்கோன்மை எவ்வளவுக்கு எவ்வளவு பகிரங்கமாய் இலாபத்தைத் தனது இறுதி முடிவாகவும் குறிக்கோளாகவும் பிரகடனம் செய்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு அதிகமாய் இது இழிவானதாய், வெறுக்கத்தக்கதாய், கசப்பூட்டுவதாய், இருக்கிறது.

உடலுழைப்புக்கு வேண்டிய திறமையும் உடல் வலிவும் குறையக் குறைய, அதாவது நவீன தொழிற் துறையின் வளர்ச்சி மட்டம் உயர உயர, ஆடவரின் உழைப்பு மேலும் மேலும் அகற்றப்பட்டு அதனிடத்தில் பெண்களின் உழைப்பு அமர்த்தப்படுகிறது. வயது வேறுபாடும் ஆண், பெண் வித்தியாசமும் இனி தொழிலாள வர்க்கத்துக்குத் தனியான எந்த சமூக முக்கியத்துவமும் இல்லாமற் போய்விட்டன. எல்லோருமே உழைப்புக் கருவிகள்தான், உபயோகித்துக் கொள்வதற்கு ஆகும் செலவுதான் வயதுக்கும் பாலுக்கும் ஏற்ப அதிகமாகவோ குறைவாகவோ இருக்கின்றது.

ஆலை முதலாளியால் இதுவரை சுரண்டப்பட்ட தொழிலாளி, இந்தச் சுரண்டல் முடிவுற்று தனது கூலியைப் பண வடிவில் பெற்றுக் கொண்டவுடனே, முதலாளித்துவ வர்க்கத்தின் பிற பகுதியோரான வீட்டுச் சொந்தக்காரராலும் கடைக்காரராலும் அடகு வட்டிக்கடைக்காரராலும் இன்ன பிறராலும் தாக்கப்படுகிறார்.

மத்தியதர வர்க்கத்தின் கீழ்த் தட்டுகளைச் சேர்ந்த சிறு உற்பத்தியாளர்கள், கடைக்காரர்கள், சிறு வாடகை, வட்டி வருவாயினர், கைவினைஞர்கள், விவசாயிகள் ஆகிய எல்லோரும் சிறிது சிறிதாய் தாழ்வுற்று பாட்டாளி வர்க்கத்தை வந்தடைகின்றார்கள். காரணம் என்னவெனில், முதலாவதாக அவர்களிடமுள்ள சொற்ப அளவு மூலதனம் நவீனத் தொழிலின் வீச்சுக்குப் போதாமல் பெரிய முதலாளிகளுடைய போட்டிக்கு பலியாகிவிடுகிறது, இரண்டாவதாக அவர்களுடைய தனித் தேர்ச்சியானது பொருளுற்பத்தியின் புதிய முறைகளால் மதிப்பற்றதாக்கப்படுகின்றது. இவ்விதம் தேச மக்கள் தொகுதியைச் சேர்ந்த எல்லா வர்க்கங்களிடமிருந்தும் பாட்டாளி வர்க்கத்துக்கு ஆட்கள் திரட்டப்படுகின்றார்கள்.

பாட்டாளி வர்க்கத்தின் வளர்ச்சி பல்வேறு கட்டங்களைக் கொண்டதாகும். பிறந்ததுமே அது முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்து தனது போராட்டத்தை தொடக்கி விடுகின்றது. ஆரம்பத்தில் இந்தப் போராட்டத்தை தனிப்பட்ட தொழிலாளர்களும், அடுத்து ஓர் ஆலையைச் சேர்ந்த தொழிலாளர்களும், பிறகு ஒரு வட்டாரத்தில் ஒரு தொழிற்கிளையைச் சேர்ந்த தொழிலாளர்களும் தம்மை நேரடியாய்ச் சுரண்டும் தனிப்பட்ட முதலாளிகளை எதிர்த்து நடத்துகிறார்கள். முதலாளித்துவப் பொருளுற்பத்தி உறவுகளை எதிர்த்து அவர்கள் தமது தாக்குதல்களைத் தொடுக்கவில்லை; உற்பத்திக் கருவிகளையே தாக்குகிறார்கள். தமது உழைப்புக்குப் போட்டியாய் வந்த இறக்குமதிப் பொருட்களை அவர்கள் அழிக்கிறார்கள்; இயந்திரங்களைச் சுக்கு நூறாய்த் தகர்க்கிறார்கள்; அலைகளுக்கு தீவைத்து எரிக்கிறார்கள்; மறைந்து விட்ட மத்திய காலத்து தொழிலாளி நிலையை வன்முறையின் மூலம் மீட்டமைக்க முயல்கின்றார்கள்.

இந்தக் கட்டத்தில் தொழிலாளர்கள் இன்னமும் தம்மிடையே தொடர்பின்றி நாடெங்கிலும் சிதறியமைந்த திரளினராய் இருக்கிறார்கள்; தம்மிடையிலான போட்டியால் பிளவுபட்டிருக்கின்றார்கள். எங்காவது ஒன்றுபட்டு முன்னிலும் ஒருங்கிணைந்த தொகுப்புக்கள் ஆகிறார்கள் என்றால், இன்னமும் அது அவர்களது செயல் திறன் மிக்க சொந்த ஒற்றுமையின் விளைவு அல்ல; முதலாளித்துவ வர்க்கத்தின் ஒற்றுமையால் ஏற்பட்டதாகவே இருக்கின்றது. முதலாளித்துவ வர்க்கம் தனது சொந்த நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு பாட்டாளி வர்க்கம் அனைத்தையும் இயங்கவைக்க வேண்டியிருக்கிறது; சிறிது காலத்துக்கு அதனால் இப்படி இயங்க வைக்கவும் முடிகின்றது. ஆகவே இந்தக் கட்டத்தில் பாட்டாளிகள் தமது பகைவர்களை எதிர்த்துப் போராடவில்லை; பகைவர்களின் பகைவர்களாகிய எதேச்சாதிகார முடியாட்சியின் மீதமிச்சக் கூறுகளையும் நிலச்சுவாந்தார்களையும் தொழில் துறையைச் சேராத முதலாளிகளையும் குட்டிமுதலாளித்துவப் பிரிவோரையும்தான் எதிர்த்துப் போராடுகிறார்கள். இவ்விதம் வரலாறு வழிபட்ட இந்த இயக்கம் முற்றிலும் முதலாளித்துவ வர்க்கத்தின் கைக்குள் இருக்கிறது; இவ்வழியில் பெறப்படும் ஒவ்வொரு வெற்றியும் முதலாளித்துவ வர்க்கத்தின் லெற்றியாகின்றது.

ஆனால் தொழிற்துறையின் வளர்ச்சியைத் தொடர்ந்து தொழிலாள வர்க்கம் எண்ணிக்கையில் அதிகமாவதோடுகூட, மேலும் மேலும் பெரும் திரள்களாய் ஒன்றுகுவிகிறது; அதன் பலம் கூடுதலாகிச் செல்கிறது; அது இந்தப் பலத்தை மேன் மேலும் உணர்கின்றது. இயந்திரச் சாதனங்கள் உழைப்பின் இடையிலான பாகுபாடுகளை ஒழித்து அனேகமாய் எங்கும் கூலி விகிதங்களைக் கீழ்நிலையிலான ஒரே மட்டத்துக்கு குறையச் செய்வதற்கு ஏற்ப, பாட்டாளி வர்க்க அணிகளினுள் வெவ்வேறு நலன்களும் வாழ்க்கை நிலைமைகளும் மேலும் மேலும் சமனமாக்கப்படுகின்றன. முதலாளித்துவ வர்க்கத்தாரிடையே வளரும் போட்டியும் இதன் விளைவாய் மூளும் வாணிப நெருக்கடிகளும் தொழிலாளர்களுடைய கூலிகளை மேன்மேலும் அலைவுறச் செய்கின்றன. இயந்திரச் சாதனங்கள் ஓயாது ஒழியாது மேம்பாடடைந்து தொடர்ந்து மேலும் மேலும் வேகமாய் வளர்ந்து பெருகுவதானது, அவர்களுடைய பிழைப்பை மேன்மேலும் நிலையற்றுச் சரியச் செய்கின்றது. தனிப்பட்ட தொழிலாளர்களுக்கும் தனிப்பட்ட முதலாளிகளுக்கும் இடையில் எழும் மோதல்கள் மேலும் மேலும் இரு வர்க்கங்களுக்கு இடையிலான மோதல்களின்தன்மையைப் பெறுகின்றன. இதனால் தொழிலாளர்கள் முதலாளிகளுக்கு எதிராய் இணைவுகள் (தொழிற் சங்கங்கள்) அமைத்துக்கொள்ள முற்படுகின்றார்கள்; கூலிகள் குறையாதவாறு பாதுகாத்துக் கொள்ள அவர்கள் ஒன்றிணைகின்றார்கள், அவ்வப்போது மூண்டுவிடும் இந்த மோதல்களுக்கு முன்னேற்பாடாய் நிரந்தரமான சங்கங்களை நிறுவிக் கொள்கிறார்கள். சிற்சில இடங்களில் இந்தப் போராட்டம் கலங்களாய் வெடிக்கின்றன.

சிற்சில சந்தர்ப்பங்களில் தொழிலாளர்கள் வெற்றியடைகிறார்கள், ஆனால் இவ்வெற்றிகள் சிறிது காலத்துக்கு மேல் நீடிப்பதில்லை. அவர்களுடைய போராட்டங்களது மெய்யான பலன் உடனடி விளைவில் அல்ல, தொழிலாளர்களது இடையறாது விரிவடையும் ஒற்றுமையில் காணக்கிடக்கிறது. நவீன தொழிற்துறையால் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் வளர்ச்சியுற்ற போக்குவரத்துச் சாதனங்கள், வெவ்வேறு வட்டாரங்களையும் சேர்ந்த தொழிலாளர்களை ஒருவரோடொருவர் தொடர்பு பெறச் செய்து இந்த ஒற்றுமைக்குத் துணைபுரிகின்றன. யாவும் ஒரே தன்மையனவாய் இருக்கும் எண்ணற்ற வட்டாரப் போராட்டங்களை வர்க்கங்களுக்கு இடையே தேச அளவில் நடைபெறும் ஒருமித்த போராட்டமாய் மையப்படுத்த இந்தத் தொடர்புதான் தேவையாய் இருந்தது. வர்க்கப் போராட்டம் ஒவ்வொன்றும் ஓர் அரசியல் போராட்டமாகும். மத்திய கால நகரத்தார் அக்காலத்திய படுமோசமான சாலைகளின் துணை கொண்டு பெறுவதற்குப் பன்னூறு ஆண்டுகள் தேவைப்பட்ட அந்த ஒற்றுமையை நவீன பாட்டாளிகள் ரயில் பாதைகளின் துணைகொண்டு ஒரு சில ஆண்டுகளிலேயே பெறுகின்றார்கள்.

பாட்டாளிகள் இவ்விதம் ஒரு வர்க்கமாகவும், ஆகவே ஓர் அரசியல் கட்சியாகவும் ஒழுங்கமைப்பு பெறும் நிகழ்வானது தொழிலாளர்களிடத்தே ஏற்படும் போட்டியால் ஓயாமல் மீண்டும் குலைக்கப்படுகின்றது. ஆயினும் இந்த ஒழுங்கமைப்பு முன்னிலும் வலிவும் உறுதியும் சக்தியும் மிக்கதாய் திரும்பத் திரும்ப உயர்ந்து எழுகின்றது. இது முதலாளித்துவ வர்க்கத்தாரிடத்தே இருக்கும் பிளவுகளைப் பயன்படுத்தி வலுக்கட்டாயம் செய்து, தொழிலாளர்களுக்குரிய தனி நலன்களுக்குச் சட்ட அங்கீகாரம் பெறுகின்றது. இங்கிலாந்தில் பத்து மணி நேர வேலைநாள் மசோதா இவ்வாறுதான் சட்டமாய் நிறைவேற்றப்பட்டது.

பொதுவாய் பேசுமிடத்து, தொழிலாள வர்க்க வளர்ச்சிப் போக்குக்கு பழைய சமுதாயத்தின் வர்க்கங்களிடையே எழும் மோதல்கள் பல வழிகளிலும் உதவியாய் இருக்கின்றன. முதலாளித்துவ வர்க்கம் இடையறாத போராட்டத்தில் ஈடுபட வேண்டியிருக்கிறது; ஆரம்பத்தில் பிரபுக் குலத்தோருடனும், பிற்பாடு முதலாளித்துவ வர்க்கத்தைச் சேர்ந்த சில பகுதிகளின் நலன்கள் தொழில் முன்னேற்றத்துக்கு விரோதமாகிவிடும்போது இந்தப் பகுதிகளுடனும், எக்காலத்துமே அன்னிய நாடுகளின் முதலாளித்துவ வர்க்கத்துடனும் அது போராட வேண்டியிருக்கிறது. இந்தப் போராட்டங்களின்போது முதலாளித்துவ வர்க்கம் பாட்டாளி வர்க்கத்தை அணுகி வேண்டுகோள் விடுக்கும்படியும், அவ் வர்க்கத்தின் உதவியை நாடும்படியும், இவ்விதம் அதை அரசியல் அரங்கில் பிரவேசிக்குமாறு இழுக்கும்படியும் நேருகின்றது. ஆகவே முதலாளித்துவ வர்க்கமே பாட்டாளி வர்க்கத்துக்கு வேண்டிய அரசியல் கல்வி, பொதுக் கல்வி ஆகியவற்றின் கூறுகளை அதற்கு அளித்திடுகிறது; அதாவது, தன்னேயே எதிர்த்துப் போராடுவதற்கான ஆயுதங்களை அது பாட்டாளி வர்க்கத்துக்கு வழங்குகின்றது.

தவிரவும், மேலே நாம் கண்ணுற்றது போல், தொழில் முன்னேற்றத்தின் விளைவாய் ஆளும் வர்க்கங்களின் முழுமுழுப் பிரிவுகள் பாட்டாளி வர்க்கத்துக்குள் தள்ளப்படுகின்றன. அல்லது குறைந்தது அவை தமது வாழ்வு நிலைமைகளை இழக்கும் படியான ஆபத்துக்கு உள்ளாக்கப்படுகின்றன. இப்பிரிவுகளும் பாட்டாளி வர்க்கம் அறிவொளி பெறுவதற்கும் முன்னேறுவதற்கும் பல புதிய கூறுகளை வழங்குகின்றன.

இறுதியில், வர்க்கப் போராட்டம் முடிவு கட்டும் நிலையை நெருங்கும் நேரத்தில் ஆளும் வர்க்கத்தினுள்ளும் பழைய சமுதாயம் அனைத்தினுள்ளும் நடந்தேறும் சிதைவுப் போக்கானது அவ்வளவு உக்கிரமுற்றுப் பட்டவர்த்தனமாகிவிடுவதால், ஆளும் வர்க்கத்திலிருந்து ஒரு சிறு பிரிவு துண்டித்துக் கொண்டு அதனிடமிருந்து விலகி எதிர்காலத்தைத் தன் பிடியில் கொண்டிருக்கும் வர்க்கமாகிய புரட்சி வர்க்கத்துடன் சேருகின்றது. இதற்கு முந்திய காலத்தில் எப்படிப் பிரபுக்களில் ஒரு பிரிவினர் முதலாளித்துவ வர்க்கத்தின் தரப்புக்குச் சென்றார்களோ, அதேபோல இப்போது முதலாளித்துவ வர்க்கத்தாரில் ஒரு பிரிவினர் பாட்டாளி வர்க்கத் தரப்புக்குச் செல்கின்றனர்; குறிப்பாய் முதலாளித்துவச் சித்தாந்தவாதிகளில் வரலாற்று இயக்கத்தை ஒட்டுமொத்தமாய் தத்துவார்த்த வழியில் புரிந்து கொள்ளும் நிலைக்கு உயர்ந்துவிட்ட ஒரு பிரிவினர் பாட்டாளி வர்க்கத் தரப்புக்குச் செல்கின்றனர்.

இன்று முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்து நிற்கும் எல்லா வர்க்கங்களிலும் பாட்டாளி வர்க்கம் மட்டும்தான் மெய்யாகவே புரட்சிகரமான வர்க்கமாகும். ஏனைய வர்க்கங்கள் நவீன தொழிலினது வளர்ச்சியின் முன்னால் நலிவுற்றுச் சிதைந்து முடிவில் மறைந்து போகின்றன, பாட்டாளி வர்க்கம் மட்டும்தான் நவீன தொழிலுக்கே உரித்தான அதன் நேரடி விளைவாய் அமைகின்றது.

மத்தியதர வர்க்கத்தின் கீழ்ப் பகுதிகளாகிய சிறு பட்டறையாளர், கடைக்காரர், கைவினைஞர், விவசாயி இவர்கள் எல்லாரும் தொடர்ந்து தாம் மத்தியதர வகுப்பினராய் நீடித்திருப்பதற்காக முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்து போராடுகிறார்கள். ஆகவே இவர்கள் பழமைப் பற்றாளர்களே அன்றி புரட்சித்தன்மை வாய்ந்தோரல்லர். அது மட்டுமல்ல, இவர்கள் பிற்போக்கனவர்களும்கூட; ஏனெனில் வரலாற்றின் சக்கரத்தை இவர்கள் பின்னோக்கி உருளச்செய்ய முயலுகின்றார்கள். சந்தர்ப்பவசமாய் புரட்சிகரமாய் இருப்பார்களாயின், இவர்கள் பாட்டாளி வர்க்கத்துக்குப் போய்விடும் தறுவாயில் இருக்கிறார்கள் என்பதே அதற்கு காரணம்; இவ்வாறு இவர்கள் பாதுகாப்பது தமது எதிர்கால நலன்களையே அன்றி நிகழ்கால நலன்களை அல்ல; பாட்டாளி வர்க்கத்தின் நோக்குநிலையை ஏற்கும் பொருட்டு, தமது சொந்த நோக்குநிலையைக் கைவிடுகின்றார்கள்.

பழைய சமுதாயத்தின் அடிமட்டத்து அடுக்குகளிருந்து எறியப்பட்டுச் செயலற்று அழுகிக் கொண்டிருக்கும் சமூகக் கசடாகிய ''அபாயகரமான வர்க்கம்'' பாட்டாளி வர்க்கப் புரட்சியால் எங்கேனும் ஒருசில இடங்களில் இயக்கத்துக்குள் இழுக்கப்படலாம், ஆனால் அதன் வாழ்க்கை நிலைமைகள் பிற்போக்குச் சதியின் கைக்கருவியாய் லஞ்சம் பெற்று ஊழியம் புரியவே மிகப்பெரும் அளவுக்கு அதைத் தயார் செய்கின்றன.

பாட்டாளி வர்க்கத்தின் வாழ்க்கை நிலமைகளில் பழைய சமுதாயத்தின் வாழ்க்கை நிலமைகள் ஏற்கனவே அனேகமாய் புதையுண்டு விடுகின்றன. பாட்டாளிக்குச் சொத்து ஏதும் இல்லை, மனைவி மக்களிடத்து அவனுக்குள்ள உறவுக்கும் முதலாளித்துவ குடும்ப உறவுக்கும் பொதுவானது இப்போது எதுவும் இல்லை. பிரான்சில் எப்படியோ அதேபோல் இங்கிலாந்திலும், ஜேர்மனியில் எப்படியோ அதேபோல் அமெரிக்காவிலும், நவீன தொழிற்துறை உழைப்பானது, மூலதனத்துக்கு கீழ்ப்பட்டிருக்கும் நவீன அடிமை நிலையானது, பாட்டாளியிடமிருந்து தேசியத் தனித்தன்மையில் எந்தச் சாயலையும் விட்டு வைக்காமல் துடைத்தெடுத்துவிட்டது. இந்தப் பாட்டாளிக்கு, சட்டம், ஒழுக்கநெறி, சமயம் ஆகிவை அனைத்தும் அத்தனை விதமான முதலாளித்துவ நலன்கள் பதுங்கிக்கொண்டிருக்கும் முதலாளித்துவ தப்பெண்ணங்களே அன்றி வேறல்ல.

மேலாதிக்கம் பெற்ற முந்திய வர்க்கங்கள் யாவும் வாழ்க்கையில் ஏற்கனவே தாம் அடைந்திருந்த உயர் நிலைக்கு அரண் அமைத்துக் கொள்ளும் பொருட்டு தமது சுவீகரிப்பு முறைக்கு சமுதாயம் முழுவதையும் கீழ்ப்படுத்த முற்பட்டன. ஆனால் பாட்டாளிகள் தமது முந்திய சுவீகரிப்பு முறையையும், ஆகவே ஏனையோரது முந்திய சுவீகரிப்பு முறைகள் யாவற்றையும் ஒழித்திடாமல் சமுதாயத்தின் உற்பத்தி சக்திகளுக்கு எஜமானர்களாக முடியாது. அவர்கள் பாதுகாத்துக்கொள்ளவும் அரண் அமைத்துக் கொள்ளவும் சொந்தத்தில் ஏதும் இல்லாதவர்கள், தனியார் சொத்துடமைக்கு இதன் முன்பிருந்த பாதுகாப்புக்களையும் காப்புறுதிகளையும் தகர்த்து ஒழிப்பதே அவர்களது இலட்சியப் பணி.

முந்திய வரலாற்று இயக்கங்கள் எல்லாம் சிறுபான்மையோரது இயக்கங்களே, அல்லது சிறுபான்மையோரது நலனுக்கான இயக்கங்களே ஆகும். ஆனால் பாட்டாளி வர்க்க இயக்கம் மிகப் பெருவாரியானோரது நலனக்காக மிகப் பெருவாரியானோர் தன்னுணர்வோடு நடாத்தும் சுயேட்சையான இயக்கமாகும். தற்கால சமுதாயத்தின் அடிமட்டத்து அடுக்காகிய பாட்டாளி வர்க்கமானது அங்கீகாரம் பெற்ற சமுதாயத்தில் மேலமைந்த அத்தனை அடுக்குகளையும் காற்றிலே பறந்தெழச் செய்யாமல் அசையவோ நிமிர்ந்து நிற்கவோ முடியாது.

முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்துப் பாட்டாளி வர்க்கம் நடாத்தும் போராட்டம், உள்ளடக்கத்தில் இல்லையேனும் எப்படியும் வடிவத்தில், ஆரம்பத்தில் தேசியப் போராட்டமாகவே இருக்கிறது. ஒவ்வொரு நாட்டின் பாட்டாளி வர்க்கமும் தனது நாட்டின் முதலாளித்துவ வர்க்கத்துடன்தான் முதலில் கணக்கு தீர்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

பாட்டாளி வர்க்கத்தினது வளர்ச்சியின் மிகப் பொதுவான கட்டங்களை விவரித்த நாம், தற்கால சமுதாயத்தில் ஏறக்குறைய திரைமறைவில் நடைபெறும் உள்நாட்டுப் போரை, அது பகிரங்கப் புரட்சியாய் வெடித்து, முதலாளித்துவ வர்க்கம் பலாத்காரமாய் வீழ்த்தப்படுவதன் மூலம் பாட்டாளி வர்க்க ஆட்சியதிகாரத்துக்கு அடித்தளம் இடப்படும் நிலைவரையில் உருவரை தீட்டிக் காட்டினோம்.

இதுகாறும் சமூக அமைப்பு ஒவ்வொன்றும், ஏற்கனவே நாம் கண்ணுற்றது போல், ஒடுக்கும் வர்க்கத்துக்கும் ஒடுக்கப்படும் வர்க்கத்துக்கும் இடையிலான பகைமையையே அடிப்படையாய் கொண்டிருந்தது. ஆனால் ஒரு வர்க்கத்தை ஒடுக்கிவைக்க வேண்டுமாயின், அந்த வர்க்கம் தொடர்ந்து தனது அடிமை நிலையிலாவது நீடிப்பதற்கு அவசியமான குறிப்பிட்ட நிலைமைகளை அதற்கு உத்தரவாதம் செய்துதந்தாக வேண்டும். பண்ணையடிமைமுறை நிலவிய காலத்தில் பண்ணையடிமை தன்னை நகர சமுதாய உறுப்பினனாய் உயர்த்திக் கொள்ள முடிந்தது, அதேபோல் பிரபுத்துவ எதேச்சாதிகாரத்தின் ஒடுக்குமுறையில் குட்டிமுதலாளித்துவப் பிரிவினர் முதலாளியாய் வளர முடிந்தது. ஆனால் நவீன காலத்திய தொழிலாளி இதற்கு மாறாய், தொழில் முன்னேற்றத்துடன் கூடவே உயர்ந்து செல்வதற்குப் பதில், தனது வர்க்கம் நிலவுதற்கு அவசியமான நிலைமைகளுக்கும் கீழே மேலும் மேலும் தாழ்ந்து செல்கின்றான். அவன் ஒட்டாண்டியாகி ஏதும் இல்லாதான் ஆகின்றான்; மக்கள் தொகையையும் செல்வத்தையும் காட்டிலும் இல்லாமை அதிவேகமாய் அதிகரிக்கின்றது. ஆகவே இப்போது தெட்டத் தெளிவாய்த் தெரிகின்றது --முதலாளித்துவ வர்க்கம் இனி சமுதாயத்தின் ஆளும் வர்க்கமாய் இருக்கத் தகுதியற்றது, தான் நீடித்து நிலவுதற்கு வேண்டிய நிலைமைகளை யாவற்றுக்கும் மேலான சட்டவிதியாய் இனியும் சமுதாயத்தின் மீது பலவந்தமாய் இருத்தத் தகுதியற்றது என்பது தெட்டத் தெளிவாய்த் தெரிகிறது. அது ஆளத் தகுதியற்றதாகிறது-- ஏனெனில் அதன் அடிமை அவனது அடிமை நிலையில் தொடர்ந்து வாழ்வதற்கு அதனால் வகை செய்ய முடியவில்லை; அவன் அதற்கு உண்டி அளிப்பதற்கு பதில் அது அவனுக்கு உண்டி அளிக்கவேண்டிய ஒரு நிலைக்கு அதன் அடிமை தாழ்ந்து செல்வதை அதனால் தடுக்க முடியவில்லை. சமுதாயம் இனி இந்த முலாளித்துவ வர்க்கத்துக்குப் பணிந்து வாழ முடியாது, அதாவது முதலாளித்துவ வர்க்கம் இனியும் தொடர்ந்து நீடிப்பது சமுதாயத்துக்கு ஒவ்வாததாகிவிட்டது.

மூலதனம் உருவாதலும் பெருகிச் செல்லுதலும்தான் முதலாளித்துவ வர்க்கம் நிலவுவதற்கும் ஆதிக்கம் புரிவதற்குமான அத்தியாவசிய நிபந்தனை. கூலியுழைப்புதான் இந்த மூலதனத்துக்கு அத்தியாவசிய நிபந்தனையாய் அமைகின்றது. கூலியுழைப்பானது தொழிலாளர்களுக்கு இடையிலான போட்டியையே ஆதாரமாய்க் கொண்டிருக்கிறது. முதலாளித்துவ வர்க்கம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஊக்குவிக்க வேண்டியிருக்கும் தொழில் முன்னேற்றமானது, தொழிலாளர்களிடையே போட்டியின் விளைவான தனிமைப்பாட்டை நீக்கி, ஒற்றுமையின் விளைவான புரட்சிகர இணைவை உண்டாக்குகின்றது. இவ்விதம் நவீன பெருவீதத் தொழிலின் வளர்ச்சியானது, எந்த அடிப்படையில் முதலாளித்துவ வர்க்கம் பொருள்களை உற்பத்தி செய்தும் சுவீகரித்தும் வருகிறதோ அந்த அடிப்படைக்கே உலை வைக்கின்றது. ஆகவே முதலாளித்துவ வர்க்கம் தனக்குச் சவக்குழி தோண்டுவோரையே அனைத்துக்கும் மேலாய் உற்பத்தி செய்கின்றது. இவ்வர்க்கத்தின் வீழ்ச்சியும், அதேபோல் பாட்டாளி வர்க்கத்தின் வெற்றியும் தவிர்க்கவொண்ணாதவை.


J) இக்காலத்து முதலாளிகளாகிய முதலாளித்துவ வர்க்கத்தார் {பூர்ஷூவா வர்க்கத்தார்} சமூகப் பொருளுற்பத்திச் சாதனங்களின் உடமையாளர்கள், கூலி உழைப்பை வேலைக்கு அமர்த்திக் கொள்கிறார்கள். இக்காலத்து கூலித் தொழிலாளர்களது வர்க்கமே பாட்டாளி வர்க்கம் எனப்படுவது; இத்தொழிலாளர்கள் சொந்தத்தில் தம்மிடம் உற்பத்திச் சாதனங்கள் இல்லாத காரணத்தால் தமது உழைப்பு சக்தியை {labour power} விற்று வாழ்க்கை நடத்தும் படி தாழ்த்தப்பட்டிருக்கிறவர்கள். {1888ம் ஆண்டு ஆங்கிலப் பதிப்புக்கு எங்கெல்ஸ் குறிப்பு.} [Top]

K) அதாவது, ஏட்டிலேறிய வரலாறு அனைத்தும். வரலாற்றிற்கு முற்பட்ட சமுதாயம் குறித்து, எழுத்தில் பதிவாகியுள்ள வரலாற்றிற்கு முன்பு நிலவிய சமூக ஒழுங்கமைப்பு குறித்து, 1847 இல் அனேகமாய் ஏதும் அறியப்பட்டிருக்கவில்லை. அதற்கு பிற்பாடு, ஹாக்ஸ்த்ஹாவுசன்[27] ரஷ்யாவில் நிலம்் பொதுடமையாய் இருந்ததென்று கண்டுபிடித்தார்; டியூட்டானிய இனங்கள் யாவுமே நிலத்திலான பொதுவுடமையாகிய இந்த சமூக அடித்தளத்திலிருந்துதான் வரலாற்றை ஆரம்பித்தன என்று மௌரர்[28] நிரூபித்துக்காட்டினார்; இந்தியாவிலிருந்து ஐயர்லாந்து வரை எங்குமே நிலத்தைப் பொதுவுடைமையாய்க் கொண்ட கிராம சமுதாயங்கள்தான் சமுதாயத்தின் புராதன ஆதி வடிவமாய் இருக்கிறது அல்லது இருந்திருக்கிறது என்பது நாளாவட்டத்தில் தெரியலாயிற்று. இவற்றுக்கு எல்லாம் மணிமுடி வைத்தாற்போல், கணம் என்பதன் மெய்யான தன்மையையும் அதற்கும் பூர்வகுடிக்குமுள்ள உறவையும் மார்கன்[29] கண்டு பிடித்ததானது, இந்தப் புராதனக் கம்யூனிச சமுதாயத்தின் உள்ளமைப்பை அதன் தூய வகையிலான வடிவில் தெளிவாய்ப் புலப்படுத்திற்று. இந்தப் புராதன சமுதாயங்களின் சிதைவைத் தொடர்ந்து சமுதாயமானது பாகுபாடற்றுத் தனித்தனியான, முடிவில் ஒன்றுக்கொன்று பகைமையான வர்க்கங்களாய்ப் பிரிய முற்படுகிறது. இந்தச் சிதைவு நடந்தேறிய நிகழ்ச்சிப்போக்கினை Der Ursprung der Familie, Des Privateigenthums und des Staats {''குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்''} என்ற நூலில் (இரண்டாம் பதிப்பு, ஷ்டுட்கார்ட், 1886) நான் விரித்துக் காட்ட முயன்றிருக்கிறேன். {1888ம் ஆண்டு ஆங்கிலப் பதிப்புக்கு எங்கெல்ஸ் குறிப்பு.} [Top]

L) கைவினைச் சங்க ஆண்டான் {guild -master} அதாவது கைவினைச் சங்கத்தின் முழு உறுப்பினன். இச்சங்கத்துக்கு உட்பட்டுள்ள ஆண்டான்; இதன் தலைவனல்ல.{1888ம் ஆண்டு ஆங்கிலப் பதிப்புக்கு எங்கெல்ஸ் குறிப்பு.}[Top]

M) ''கம்யூன்'' என்பது பிரெஞ்சு நாட்டில் உதித்தெழுந்து வந்த நகரங்கள். அவற்றின் பிரபுத்துவக் கோமான்களிடமிருந்தும் ஆண்டான்களிடமிருந்தும் வட்டாரத் தன்னாட்சியும் அரசியல் உரிமைகளும் வென்று ''மூன்றாவது ஆதீனம்[''Third Estate''] ஆகும் முன்னரே தமக்கு இட்டுக்கொண்ட பெயராகும். பொதுவாய் இங்கு முதலாளித்துவ வர்க்கத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு இங்கிலாந்தும், அதன் அரசியல் வளர்ச்சிக்கு பிரான்சும் மாதிரி நாடுகளாய்க் கொள்ளப்படுகின்றன. [1888ம் ஆண்டு ஆங்கிலப் பதிப்புக்கு எங்கெல்ஸ் குறிப்பு.] [Top]

27) ஹாக்ஸ்த்ஹாவுசன் {Haxthausen}, ஆகுஸ்த் {1792-1866} பிரஷ்யாவைச் சேர்ந்த பிரபு, எழுத்தாளர். ரஷ்யாவின் நில உறவுகளில் கிராமச் சமுதாய அமைப்பின் மீதமிச்சங்களை விவரித்து ஒரு நூல் இயற்றியவர். [Top]

28) மௌரர் {Maurer}, கியோர்க் லுத்விக் {1790-1872} ஜேர்மன் வரலாற்று அறிஞர். தொன்மைக்கால, இடைக்கால ஜேர்மனியின் சமூக அமைப்பை ஆராய்ந்தவர். [Top]

29) மார்கன் {Morgan}, லூயிஸ் ஹென்றி {1818-1881} அமெரிக்க இனப்பருப்பு விளக்க இயல் அறிஞர். தொல் பொருள் ஆராய்ச்சியாளர். தொடக்க காலச் சமூகம் பற்றிய வரலாற்று ஆசிரியர். இயல்பான பொருள்முதல்வாதி. [Top]

30) சிலுவைப் போர்ப் பயணங்கள் 11-13 ம் நூற்றாண்டுகளில் மேற்கு ஐரோப்பிய நிலப்பிரபுக்களும் உயர்குடி வீரர்களும் கிழக்கு நாடுகள் மீது நடத்திய இராணுவக் காலனி பிடிப்புப் படையெடுப்புக்கள். ஜெரூஸலத்திலும் மற்ற ''புனித ஸ்தலங்களிலும்'' உள்ள கிறிஸ்தவ புனிதச் சின்னங்களை முஸ்லிம்களின் ஆதிக்கத்திலிருந்து மீட்டல் என்னும் மதப் பதாகையின் கீழ் இந்தப் படையெடுப்புகள் நடத்தப்பட்டன. [Top]

31) பிற்காலப் படைப்புக்களில் மார்க்சும் எங்கெல்சும் ''உழைப்பின் மதிப்பு'', ''உழைப்பின் விலை'' என்ற பதங்களின் இடத்தில் மார்க்சால் புகுத்தப்பட்ட ''உழைப்பு சக்தியின் மதிப்பு'', ''உழைப்பு சக்தியின் விலை'' என்ற அதிகத் துல்லியமான பதங்களைப் பயன்படுத்தினார்கள். [Top]

   
World Socialist Web Site
All rights reserved