wsws : Tamil
 
1892ம் ஆண்டு போலிஷ் பதிப்பின் முகவுரை

 
 
 

1892ம் ஆண்டு போலிஷ் பதிப்பின் முகவுரை

கம்யூனிஸ்ட் அறிக்கையின் ஒரு புதிய போலிஷ் பதிப்பு அவசியமாகியிருப்பதானது பற்பல சிந்தனைகளை எழச் செய்கின்றது.

முதலாவதாக, அண்மையில் அறிக்கை ஐரோப்பாக் கண்டத்தில் பெருவீதத் தொழில் துறையின் வளர்ச்சியைக்காட்டும் ஒரு குறியீடு போலாகியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். குறிப்பிட்ட ஒரு நாட்டில் பெருவீதத் தொழில்துறை விரிவடைவதற்கு ஒத்த வீதத்தில் அந்நாட்டின் தொழிலாளர்களிடத்தே, சொத்துடைத்த வர்க்கங்கள் சம்மந்தமாய்த் தொழிலாளி வர்க்கம் என்ற முறையில் தமது நிலை என்ன என்பது குறித்து அறிவொளி பெற வேண்டிய தேவை அதிகமாகிறது. அவர்களிடையே சோஷலிஸ்ட் இயக்கம் பரவுகின்றது. அறிக்கையின் தேவையும் அதிகரிக்கின்றது. இவ்விதம் அந்த நாட்டிலும் தொழிலாளர் இயக்கத்நின் நிலையை மட்டுமின்றி, பெருவீதத் தொழில் துறையினது வளர்ச்சி நிலையும்கூட, அந்நாட்டு மொழியில் வினியோகமாகிற அறிக்கையின் பிரதிகளது எண்ணிக்கையைக் கொண்டு பெருமளவுக்குச் சரியானபடி அளவிட முடிகின்றது.

புதிய போலிஷ் பதிப்பு இவ்வாறு போலிஷ் தொழிற்துறையானது குறிப்பிடத்தக்கவாறு முன்னேற்றம் கண்டிருப்பதைச் சுட்டிக்காட்டுவதாய் உள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு முந்திய பதிப்பு வெளிவந்தபின் இந்த முன்னேற்றம் மெய்யாகவே ஏற்பட்டிருக்கின்றது என்பதில் சந்தேகத்திற்கு இடமே இல்லை. ரஷ்யப் போலந்து, காங்கிரஸ் போலந்து[23], ரஷ்ய முடிப்பேரரசின் பெரிய தொழிற் பிராந்தியமாகியிருக்கிறது. ரஷ்யாவின் பெருவீதத் தொழிற்துறை அங்குமிங்குமாய் சிதறுண்டு காணப்படுகிறது. ஒரு பகுதி பின்லாந்து வளைகுடாவைச் சுற்றிலும், இன்னென்று மையப் பிரிவிலும் (மொஸ்கோவிலும் விளதீமிரிலும்), மூன்றாவது ஒன்று கருங்கடல், அஸோவ் கடல் கரையோரங்களிலும், மற்றும் சில பகுதிகள் வேறு இடங்களிலுமாய் அமைந்திருக்கிறது. ஆனால் போலந்தின் தொழில்துறை இவ்வாறன்றி ஒப்பளவில் சிறிய பரப்பில் நெரிசலாய் அமைந்து, இந்த ஒன்று குவிந்த நிலையின் அனுகூலங்களையும் பிரதிகூலங்களையும் ஒருங்கே அனுபவிக்கிறது. போட்டியிடும் ரஷ்யத் தொழிலதிபர்கள் போலிஷ்காரர்களை ரஷ்யர்களாக்குவதில் தமக்குள்ள ஆர்வத்தையும் மீறி போலந்திற்கு எதிராய் காப்புச் சுங்கவரிகள் வேண்டுமெனக் கோரியதன் மூலம் இந்த அனுகூலங்கள் இருப்பதை ஒப்புக் கொண்டார்கள். பிரதிகூலங்கள் - போலிஷ் தொழிலதிபர்களும் மற்றும் ரஷ்ய அரசாங்கத்துக்கும்- இருப்பதானது, போலிஷ் தொழிலாளர்களிடையே சோஷலிசக் கருத்துக்கள் வேகமாய்ப் பரவுவதிலும் அறிக்கைக்கு இருக்கும் கிராக்கி பெருகிச் செல்வதிலும் காணக்கிடக்கிறது.

ரஷ்யத் தொழில்துறை வளர்ச்சியை விஞ்சிச் செல்லும் படியான வேகத்தில் போலிஷ் தொழில் துறை வளர்ச்சியானது, போலிஷ் மக்களுடைய வற்றாத ஜீவசக்திக்கு ஒரு புதிய நிரூபணமாவதோடு, போலந்தின் தேசிய மீட்சி விரைவில் நடந்தேறப் போகிறது என்பதற்கு ஒரு புதிய உத்தரவாதமும் ஆகிறது. வலுமிக்க சுதந்திரப் போலந்து மீட்சியுற்று எழவேண்டியது போலிஷ்காரர்களுக்கு மட்டுமல்ல, நம் எல்லோருக்குமே அக்கறைக்குரியதாகும். ஐரோப்பிய தேசம் ஒவ்வொன்றும் அதன் சொந்த வீட்டில் முழு அளவுக்குத் தன்னாட்சி செலுத்துவதாய் இருந்தால்தான் ஐரோப்பிய தேசங்களிடையே உளப் பூர்வமான சர்வதேச ஒத்துழைப்பு சாத்தியமாகும். 1848ம் ஆண்டுப் புரட்சி, பாட்டாளி வர்க்கக் கொடியின் கீழ் நடைபெற்றாலும் பாட்டாளி வர்க்கப் போர் வீரர்களை முதலாளித்துவ வர்க்கத்தாரின் வேலையை மட்டுமே செய்ய இடமளித்த இந்தப் புரட்சி, அதன் இறுதி விருப்ப ஆவணத்தை நிறைவேற்றியவர்களான லுயீ போனப்பார்ட், பிஸ்மார்க் [24] இவர்கள் மூலம் இத்தாலிக்கும் ஜேர்மனிக்கும் ஹங்கேரிக்கும் சுதந்திரம் கிடைக்கச் செய்தது. ஆனால் புரட்சிக்கு இம்மூன்று நாடுகளும் சேர்ந்து செய்ததைக் காட்டிலும் அதிகமாய் 1792 முதலாய்ச் சேவை புரிந்துள்ள போலந்து அதன் சொந்த சக்தியைச் சார்ந்திருக்கும்படி தனியே விடப்பட்டது. 1863ல் அது தன்னிலும் பத்து மடங்கு கூடுதலான ரஷ்யப் படைகளுக்குப் பணிய வேண்டியதாயிற்று [25]. போலிஷ் பிரபுக் குலத்தோரால் நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் முடியவில்லை, மீட்கவும் முடியவில்லை. குறைந்த பட்சமாய்ச் சொல்வதெனில் இன்று முதலாளித்துவ வர்க்கத்திற்கு இந்தச் சுதந்திரம் குறித்து கவலையில்லை. எனினும் ஐரோப்பியத் தேசங்கள் இசைவுடன் ஒத்துழைப்பதற்குப் போலந்தின் சுதந்திரம் இன்றியமையாதது. போலந்தின் இளம் பாட்டாளி வர்க்கத்தால்தான் இந்த சுதந்திரத்தைப் பெற முடியும். அதன் கரங்களில்தான் இந்த சுதந்திரம் பாதுகாப்புடன் இருக்க முடியும். போலந்துத் தொழிலாளர்களுக்குப் போலந்தின் சுதந்திரம் எவ்வளவு அவசியமோ அதே அளவுக்கு அது ஐரோப்பாவின் ஏனைய எல்லாப் பகுதிகளிலுமுள்ள தொழிலாளர்களுக்கும் அவசியமாகும்.

பி.எங்கெல்ஸ்
லண்டன்
, 1892, பெப்ரவரி 10


குறிப்புகள்

23) காங்கிரஸ் போலந்து 1814-1815 ம் ஆண்டுகளில் நடந்த வியன்னா காங்கிரசின் நிர்னயப்படி போலிஷ் ஜாராட்சிப் பிரதேசம் என்ற அதிகாரபூர்வமான பெயரால் ருஷ்யாவுடன் இணைக்கப்பட்ட போலந்தின் பகுதி இந்தப் பெயரால் அழைக்கப்பட்டது. [Top]

24) லுயீ போனாப்பார்ட் {Louis Bonaparte} {மூன்றாம் நெப்போலியன் {Napoleon III} {1808- 1870} முதல் நெப்போலியனின் மருமகன். இரண்டாவது குடியரசின் தலைவர் {1848-1851}. பிரெஞ்சுப் பேரரசர்{1851-1870}.

பிஸ்மார்க் {Bismark}, ஓட்டோ, எடுவார்ட் லியோப்பால்டு {1815-1898} பிரஷ்யாவின், ஜேர்மனியின் ராஜதந்திரி. இவருடைய உள்நாட்டு, வெளிதாட்டுக் கொள்கைகள் பிரஷ்ய நிலவேந்தர்களின் நலன்களுக்கு பெரு முதலாளிகளின் நலன்களுக்கு சேவை புரிந்தன. கொள்ளைக்கார யுத்தங்களின் மூலம் இராஜதந்திரச் சதிவேலைகள் மூலமும் இவர் ஜேர்மனியைப் பிரஷ்யாவின் மேலாண்மையின்கீழ் 1871 இல் ஒன்றுபடச் செய்தார். 1871 லிருந்து 1890 வரை ஜேர்மன் முடிப் பேரசின் சான்சலராய் இருந்தார்.

''1848 ஆம் ஆண்டுப் புரட்சியும், அதேபோல் அதற்கு முந்திய புரட்சிகளில் பலவும் வினோத சகாக்களையும் வழித் தோன்றல்களையும் பெற்றிருந்தன. இந்தப் புரட்சியை நசுக்கிய அதே ஆட்கள், கார்ல் மார்க்ஸ் அடிக்கடி கூறி வந்தது போல், இப்புரட்சியின் இறுதி விருப்ப ஆவண நிறைவேற்றாளர்கள் ஆகியுள்ளனர். லுயீ போனப்பார்ட் சுயேட்சையான, ஒன்றுபட்ட இத்தாலியை உருவாக்க வேண்டியதாயிற்று. பிஸ்மார்க் ஜெர்மனியை புரட்சிகரமாய் மாற்றியமைக்கவும், ஹங்கேரியின் சுதந்திரத்தை மீட்டமைக்கவும் வேண்டியதாயிற்று. {எங்கெல்ஸ், இங்கிலாந்தின் தொழிலாளி வர்க்கத்தின் நிலமை என்னும் நூலின் முகவுரை.} [Top]

25) ரஷ்ய முடிப் பேரரசால் பிடித்துக் கொள்ளப்பட்ட போலந்துப் பிரதேசங்களில் 1863 இல் ஆரம்பமான தேச விடுதலை எழுச்சி இங்கு குறிக்கப்படுகிறது. ஜாரிஸ்டுப் படைகளால் இந்த எழுச்சி கொடிய முறையில் அடக்கப்பட்டது. இந்த எழுச்சியின் தலைவர்கள் மேற்கு ஐரோப்பிய அரசாங்கங்களின் தலையீட்டைத் தமது நம்பிக்கையான ஆதாரமாய்க் கொண்டிருந்தார்கள். ஆனால் மேற்கு ஐரோப்பிய அரசாங்கங்கள் வெறும் இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு அப்பால் ஒன்றும் செய்யாமல், உண்மையில் போலந்து எழுச்சியைக் காட்டி கொடுத்துவிட்டனர். [Top]

   
World Socialist Web Site
All rights reserved