wsws : Tamil
 
1882ம் ஆண்டு ரஷ்யப் பதிப்பின் முகவுரை

 
 
 

1882ம் ஆண்டு ரஷ்யப் பதிப்பின் முகவுரை

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் முதலாவது ரஷ்யப் பதிப்பை பக்கூன் மொழி பெயர்த்தார். அறுபதாம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் [6] கோலகல் [7] ஏட்டின் அச்சகத்தால் வெளியிடப்பட்டது. மேலைய நாட்டினர் அப்போது அதை (அந்த ரஷ்யப் பதிப்பை) அரியதோர் இலக்கிய நிகழ்வாய் மட்டுமே பார்க்க முடிந்தது. அம்மாதிரியான ஒரு கருத்து இன்று சாத்தியமாய் இராது.

பாட்டாளி வர்க்க இயக்கம் அந்தக் காலத்தில் (1847 டிசம்பர்) எவ்வளவு குறுகலான வட்டத்துள் அடங்குவதாய் இருந்தது என்பதை அறிக்கையின் கடைசிப் பிரிவு பல்வேறு நாடுகளிலும் பற்பல எதிர்க் கட்சிகள் சம்மந்தமாய் கம்யூனிஸ்டுகளின் நிலையைக் கூறும் இந்தப் பிரிவு, மிகத் தெளிவாய்த் தெரியப்படுத்துகிறது. ரஷ்யாவும் அமெரிக்க ஐக்கிய நாடும் இப்பிரிவில் காணப்படவே இல்லை. ரஷ்யாவானது அனைத்து ஜரோப்பியப் பிற்போக்கின் கடைசிப் பெரும் கோட்டையாகவும், அமெரிக்க ஐக்கிய நாடு ஐரோப்பாவின் உபரிப் பாட்டாளி அணிகளைக் குடியேற்றத்தின் முலம் உட் கவர்ந்து கொள்ளும் நாடாகவும் இருந்து வந்த காலம் அது. இரு நாடுகளும் ஐரோப்பாவுக்கு மூலப் பொருள்களை வழங்கின. அதேபோது ஐரோப்பியத் தொழில்துறை உற்பத்திப் பொருள்களுக்குச் சந்தைகளாகவும் இருந்தன. ஆகவே அந்தக் காலத்தில் இரு நாடுகளும் ஐரோப்பாவிலுள்ள அமைப்புக்கு ஏதேனும் ஒரு வகையில் ஆதாரத் தூண்களாய் இருந்தன.

நிலமை இன்று எப்படி மாறிவிட்டது! ஐரோப்பாவிலிருந்து நடைபெற்ற இந்தக் குடியேற்றம்தான் வட அமெரிக்காவை பிரம்மாண்ட அளவிலான விவசாயப் பொருளுற்பத்திக்கு தயார் செய்தது. இப்போது இந்த அமெரிக்க விவசாயப் பொருளுற்பத்தியில் போட்டி ஐரோப்பாவின் சிறிதும் பெரிதுமான நிலவுடைமைகளது அடித்தளங்களையே ஆட்டிக் குலுக்குகிறது. அதோடு இந்தக் குடியேற்றம், இதுகாறும் மேற்கு ஐரோப்பாவும் இன்னும் முக்கியமாய் இங்கிலாந்தும் தொழில்துறையில் வகித்து வரும் ஏகபோக நிலை சீக்கரமே தகர்க்கப்படுமெனக் கூறும்படி, அத்தனை விறு விறுப்போடும் அவ்வளவு பெரிய அளவிலும் அமெரிக்க ஐக்கிய நாடு தனது அளவிலாத் தொழில்துறைச் செல்வாதாரங்களைப் பயன்படுத்திக் கொள்வதைச் சாத்தியமாக்கிற்று. இவ்விரு நிலமைகளும் புரட்சிகர முறையிலான எதிர்வினையை அமெரிக்காவினுள் நடைபெறச் செய்கின்றன. அனைத்து அரசியல் அமைப்புக்கும் அடிநிலையான சிறுதிற, --நடுத்தர உழவர் நிலவுடமைகள் பெரும் பண்ணைகளுடைய போட்டியைச் சமாளிக்க முடியாமல் படிப்படியாய் நசிந்து வருகின்றன. அதேபோது பெருந்திரளான பாட்டாளி வர்க்கமும், வியக்கத்தக்க மிகப் பெரிய அளவிலான மூலதன ஒன்றுகுவிப்பும் தொழில் துறைப் பிரதேசங்களில் வளர்ச்சியுறுகின்றன.

அடுத்து இப்போது ரஷ்யா 1848 - 49 ஆம் ஆண்டுகளது புரட்சியின் போது ஐரோப்பிய முடிமன்னர்கள் மட்டுமல்ல, ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்தாரும் அப்போதுதான் விழித்தெழ முற்பட்டிருந்த பாட்டாளி வர்க்கத்திடமிருந்து தப்பிக்க ரஷ்யத் தலையீடு ஒன்றே வழி என்று இருந்தனர். ஜார் மன்னர் ஐரோப்பியப் பிற்போக்கின் அதிபதியாய்ப் பிரகடனம் செய்யப்பட்டார். இன்று ஜார் மன்னர் புரட்சியின் போர்க் கைதியாய்க் காட்சினாவில் இருக்கிறார். (8) ரஷ்யாவானது ஐரோப்பாவில் புரட்சி நடவடிக்கையுடன் முன்னணியாய்த் திகழ்ந்தது.

நவீன கால முதலாளித்துவச் சொத்துடைமையின் தகர்வு தவிர்க்க முடியாதபடி நெருங்கி வருவதைப் பிரகடனம் செய்வதே கம்யூனிஸ்டு அறிக்கையின் குறிக்கோள் ஆகும். ஆனால் ரஷ்யாவில் நாம் காண்பது என்ன? அதிவேகமாய் வளர்ந்துவரும் முதலாளித்துவ முறையோடு கூடவே, வளர்ச்சியின் துவக்க நிலையிலுள்ள முதலாளித்துவ நிலவுடைமையுடன் கூடவே, ரஷ்ய நாட்டின் நிலங்களில் பாதிக்கு மேற்பட்டவை விவசாயிகளது பொதுவுடைமையாய் இருக்கக் காண்கிறோம். இப்போது எழும் கேள்வி இதுதான். ரஷ்ய 'ஒப்ஷீனா' [A] வெகுவாய்ச் சீர்குலைக்கப்பட்டிருப்பினும், இன்னமும் நிலத்திலான புராதனப் பொதுவுடைமையின் ஒரு வடிவமாகவே இருக்கும். இது, நேரடியாய்க் கம்யூனிசப் பொதுவுடைமை என்னும் உயர்ந்த வடிவமாய் வளர முடியுமா? அல்லது இதற்கு நேர்மாறாய், மேற்கு நாடுகளது வரலாற்றின் பரிணாம வளர்ச்சியாய் அமைந்த அந்தச் சிதைந்தழியும் நிகழ்முறையை முதலில் அது கடக்க வேண்டியிருக்குமா?

இதற்கு இன்று சாத்தியமான ஒரே பதில் இதுதான். ரஷ்யப் புரட்சியானது மேற்கு நாடுகளில் ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான முன்னறிவிப்பாகி இவ்விதம் இரண்டும் ஒன்றுக்கொன்று துணை நின்று நிறைவு பெறுமாயின், தற்போது ரஷ்யாவில் நிலத்திலுள்ள பொதுவுடமை கம்யூனிச வளர்ச்சிக்குரிய தொடக்க நிலையாய்ப் பயன்படக்கூடும்.

கார்ல் மார்க்ஸ், பிரெடெரிக் எங்கெல்ஸ்
லண்டன்
,1882 ஜனவரி 21


குறிப்புகள்

6) இங்கு குறிப்பிடப்படும் பதிப்பு 1869ம் ஆண்டில் வெளியாயிற்று. 1888ம் ஆண்டின் ஆங்கிலப் பதிப்பிற்கு எங்கெல்சின் முகவுரையாலும் அறிக்கையின் இந்த ருஷ்ய மொழி பெயர்ப்பு வெளியான தேதி பிழைபடக் கொடுக்கப்பட்டிருக்கிறது {இந்தப் பதிப்பின் 18 ஆம் பக்கத்தைப் பார்க்கவும்.} [Top]

7) கோலகல் {''மணி ''} அலெக்ஸாந்தர் கெர்த்சன், நிக்கலாய் ஒகர்யோவ் இருவராலும் 1857 முதல் 1867 வரை வெளியிடப்பட்ட ருஷ்யப் புரட்சிகர ஜனநாயகவாதச் செய்தித்தாள். 1865 வரை லண்டனிலும், பின்பு ஜெனிவாவிலும் பிரசுரிக்கப்பட்டது. [Top]

8) 1881, மார்ச் முதல் தேதியன்று இரண்டாம் அலெக்ஸாந்தர் ''நரோத்னயா வோல்யா'' {''மக்கள் விடுதலை''} குழுவினரால் கொலை செய்யப்பட்ட பின்பு ருஷ்யாவில் ஏற்பட்ட நிலமை இங்கு குறிப்பிடப்படுகிறது. பட்டத்துக்கு வந்த மூன்றாம் அலெக்ஸாந்தர், புரட்சி நடவடிக்கைகளும் ''நரோத்னயா வோல்யா'' வின் {பயங்கரவாத நரோத்னிக்குகளின் இரகசிய அரசியல் நிறுவனம் இது} புதிய பயங்கரச் செயல்களும் நேரலாம் என்ற அச்சத்தால் அப்போது காட்சினாவிலேயே தங்கிவிட்டார். [Top]

A) ஒப்ஷீனா: கிராம சமுதாயம். [Top]

   
World Socialist Web Site
All rights reserved