World Socialist Web Site www.wsws.org |
WSWS
:Tamil
:
நூலகம் ரஷ்ய புரட்சியின் மூன்று கருத்துருக்கள் By Leon Trotsky 1905-ம் ஆண்டுப் புரட்சி 1917-க்கு ஒத்திகையாக வந்தது மட்டுமல்லாமல் ரஷ்ய அரசியல் வாழ்க்கையின் அடிப்படை குழுசேர்தல்களைத் தோற்றுவித்த மற்றும் ரஷ்ய மார்க்சிசத்திற்குள்ளேயான அனைத்துப் போக்குகளையும் சாயல்களையும் முன்னிலைப்படுத்திய ஆய்வுக் கூடமாகவும் வந்தது. விவாதங்களினதும் மற்றும் வேறுபாடுகளினதும் மையமாக ரஷ்யப் புரட்சியின் வரலாற்றுத் தன்மை பற்றியும் அதன் எதிர்கால வளர்ச்சிப்போக்குகளையும் பற்றிய பிரச்சனையும் இடம் பெற்றிருந்தது. கருத்துக்கள் மற்றும் வருவது உரைத்தல்கள் பற்றிய அந்த பூசலானது, அவரது சொந்த உரிமையின்பேரில் அதில் பங்கேற்காத ஸ்ராலினின் வாழ்க்கை வரலாற்றுடன் நேரடியாக சம்பந்தப்படவில்லை. இந்த விஷயம் சம்பந்தமாக ஸ்ராலின் எழுதிய சில பிரச்சார கட்டுரைகள் இம்மியளவேனும் தத்துவார்த்த அக்கறைக்குரியனவாக இல்லை. எண்ணிறைந்த போல்ஷிவிக்குகள் பேனாவும் கையுமாக அதே கருத்துக்களை மிக அதிக அளவுத் திறமையுடன் பிரபலப்படுத்தினார்கள். போல்ஷிவிசத்தின் புரட்சிகர கருத்துருக்கள் பற்றிய எந்த விமர்சன விளக்கமும் இயல்பாகவே லெனினின் ஒரு வாழ்க்கை வரலாற்றில் தொடர்புடையதாயிருந்தது. ஆனால் தத்துவங்கள் தங்களின் சொந்த எதிர்காலத்தைக் கொண்டிருக்கின்றன. புரட்சிகரக் கோட்பாடுகள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டு தெளிவாக அறிந்து கொள்ளப்பட்ட முதலாவது புரட்சியிலிருந்து அதன் பின் 1923-வரையிலான காலப்பகுதி வரையில் ஸ்ராலின் எவ்வித சுதந்திரமான நிலைப்பாட்டையும் கொண்டிருக்கவில்லை. அதன் பின் 1924-ல் இருந்து நிலைமை திடீரென்று மாறுகிறது. அங்கே அதிகாரத்துவ பிற்போக்கு சகாப்தமும், கடந்த காலம் பற்றிய தீவிரமான மீளாய்வுகளும் ஆரம்பமாகின்றன. புரட்சி பற்றிய படம் சுருள் நிலையிலிருந்து இழுக்கப்பட்டு பின்னோக்கி ஓடுகின்றது. பழைய கொள்கை விளக்கங்கள் ஒன்றில் மீள் மதிப்பீடுகளுக்கு உள்ளாக்கப்படுகின்றன அல்லது புதிய அர்த்தங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றன. இவ்வாறு மிகவும் எதிர்பாராத வகையில் முதற்பார்வையிலேயே, 'ட்ரொட்ஸ்கிசத்தின் அனைத்து குளறுபடிகளின் பிரதான ஊற்றுவாயாக கருதப்பட்ட "நிரந்தப் புரட்சி" பற்றிய கருத்துமீது கவனம் குவிமையப்படுத்தப்பட்டது. இதன்பின் வரவிருக்கும் பல ஆண்டுகளுக்கு அந்தக் கருத்துரு பற்றிய விமர்சனம் ஸ்ராலினின் மற்றும் அவரது ஒத்துழைப்பாளர்களின் - Sit venio Verbo- தத்துவார்த்த எழுத்துக்களின் பிரதான உள்ளடக்கத்தை வடிவமைத்தது. (ஸ்ராலினிசத்தை முழுமையாக) தத்துவார்த்த மட்டத்தில் எடுத்துப்பார்ப்போமாயின், "ஸ்ராலினிசத்தின்" ஒவ்வொரு துண்டும், நிரந்தரப்புரட்சித் தத்துவம் 1905-ல் முறைப்படுத்திக் கூறப்பட்டதனால், அது பற்றிய விமர்சனத்திலிருந்தே வழங்கப்பட்ட பின்னர், இந்த அளவுக்கு மென்ஷிவிக்குகளின், போல்ஷிவிக்குகளின் தத்துவங்களிலிருந்து வேறுபட்டதாக இத் தத்துவத்தின் விளக்கத்தை இந்த நூலினுள் பிற்சேர்க்கை வடிவம் என்றாலும் கூட தெளிவாகவே இடம்பெறும். ரஷ்யாவில் வளர்ச்சி எல்லாவற்றுக்கும் முதலாக பின்தங்கிய நிலைமை என்ற சிறப்பியல்பைக் கொண்டுள்ளது. வரலாற்றுப் பின்தங்கிய நிலைமை எவ்வாறாயினும் முன்னேறிய நாடுகளின் வளர்ச்சியில் ஒரு அல்லது இரு நூற்றாண்டுகால தாமதமான வெறும் மறுபதிப்பைக் குறிப்பிடவில்லை. அது ஒரு முற்றிலும் வேறுபட்ட ''இணைந்த'' சமூக அமைப்பை உண்டாக்குகின்றது. அதில் முதலாளித்துவ தொழில் நுட்பத்தின் இறுதி வெற்றிகளும் மற்றும் அமைப்புகளும், நிலப்பிரபுத்துவ, நிலப்பிரபுத்துவத்திற்கு முந்தைய காட்டுமிராண்டி உறவுகளினுள், அவையாகவே வேரூன்றி அவற்றை மாற்றமடையச் செய்தவாறு, அடிபணியச் செய்தவண்ணம் வர்க்கங்களுக்கு இடையில் ஒரு அசாதாரணமான உள் உறவுகளை உருவாக்குகின்றது. இதுவே கருத்துக்கள் பற்றிய துறைக்கும் பொருந்தும் ரஷ்யாவின் வரலாற்றுத் தாமதம் என்ற திட்டவட்டமான காரணத்தால் அது பூர்சுவா புரட்சிக்கு முன்பே, மார்க்சிசம் ஒரு கொள்கை விளக்கமாக, சமூக ஜனநாயகம் ஒரு கட்சியாக சக்தி வாய்ந்த வளர்ச்சியைப் பெற்ற ஒரேயொரு ஐரோப்பிய நாடாக மாறியது. ஜனநாயகத்துக்கான போராட்டத்திற்கும், சோசலிசத்திற்கும் இடையிலான இணைந்த உறவுகள் பற்றிய பிரச்சனை திட்டவட்டமாக ரஷ்யாவில் மிகப் பரந்த பூரணமான தத்துவார்த்த ஆய்வுக்குட்படுத்தப்பட்டது இயற்கையானதே.
கருத்துவாத ஜனநாயகவாதிகள், பிரதானமாக மக்கள் விருப்பினர் (Populists) எதிர்வரும் புரட்சியை பூர்சுவா புரட்சி என ஏற்க மூடநம்பிக்கை ரீதியில் மறுத்தனர். ஒரு நடுநிலையான அரசியல் சூத்திரத்தின் மூலம் அதன் சமூக உள்ளடக்கத்தை ஏனையோரிடமிருந்து மட்டுமல்லாமல் அவர்களிடம் இருந்தும்கூட மூடி மறைப்பதற்காக அவர்கள் 'ஜனநாயகம்' எனப் பெயரிட்டனர். நரோத்னிசத்திற்கு எதிரான போராட்டத்தில் ரஷ்ய மார்க்சிசத்தின் ஸ்தாபகரான பிளக்கனோவ் கடந்த நூற்றாண்டின் எண்பதாம் ஆண்டுகளின் (1880) ஆரம்பம் முதலே ரஷ்யா ஒரு சலுகைமிக்க வளர்ச்சிப் பாதையை எதிர்பார்ப்பதற்கு எந்த ஒரு காரணத்தையும் கொண்டிருக்கவில்லை. ஏனைய 'புனிதமற்ற' தேசங்களைப்போல் அதுவும் முதலாளித்துவத்தின் ''சுத்திகரிப்பினூடு'' செல்ல வேண்டும். திட்டவட்டமாக இந்தப் பாதையினூடாகத்தான் மேலும் சோசலிசத்திற்கான போராட்டத்தை தொடுக்க பாட்டாளி வர்க்கத்திற்கு அத்தியாவசியமான அரசியல் சுதந்திரத்தை ரஷ்யா பெற முடியும் என்று நிலை நாட்டினார். பிளக்கனோவ் பூர்சுவா புரட்சியை சோசலிசப் புரட்சியிலிருந்து ஒரு பணியாக வேறுபடுத்தியது மட்டுமல்லாமல் அதை அவர் காலவரையற்ற எதிர்காலத்திற்கு ஒத்திப்போட்டார். ஆனால் அவர் இப்படியான ஒவ்வொரு முழுமையான வேறுபட்ட சக்திகளின் இணைப்பைத் தெளிவாக வரையறுத்தார். பாட்டாளி வர்க்கம் அரசியல் சுயாதீனத்தை, தாராளவாத பூர்சுவாக்களுடனான கூட்டின் மூலமாக உத்திரவாதப்படுத்தும்; பல தசாப்தங்களின் பின் முதலாளித்துவத்தின் உயர்ந்த கட்ட வளர்ச்சியின் பின்னர் பூர்சுவாக்களுக்கு எதிரான நேரடிப் போராட்டத்தில் பாட்டாளி வர்க்கம் சோசலிசப் புரட்சியைச் செயற்படுத்தும். லெனினைப் பொறுத்தளவில் அவர் 1904-ன் இறுதியில் பின்வருமாறு எழுதினார்: ''ரஷ்ய அறிவுஜீவிக்கு எமது புரட்சியை பூர்சுவா புரட்சி என ஏற்பது அதை வெளிறச் செய்வதாக, தரம் குறைப்பதாக, கொச்சைப்படுத்துவதாக எப்பொழுதும் இருந்தது. பாட்டாளி வர்க்கத்துக்கு அரசியல் சுயாதீனத்திற்கான போராட்டமும் பூர்சுவா சமுதாயத்தில் ஜனநாயகக் குடியரசிற்கான போராட்டமும் சமூகப் புரட்சிக்கான போராட்டத்தில் தேவையான கட்டங்களுள் ஒன்றுமட்டமே ஆகும்.'' ''ரஷ்ய புரட்சி பூர்சுவா தன்மை கொண்டதாகும் என்பது மார்க்சிசவாதிகளின் முற்று முடிவான துணிவு'' என்று அவர் 1905-ல் எழுதினார். "இது எதைப் பொருள்படுத்துகின்றது? இதன் பொருள்தான் ரஷ்யாவிற்கு இன்றியமையாதவையாகி உள்ள ஜனநாயக மாற்றங்கள் தம்மில் மற்றும் தம்முடைய அளவில் முதலாளித்துவத்தை கீழறுப்பதை, பூர்சுவா வர்க்கத்தின் மேலாதிக்கத்தை கீழறுப்பதை குறிக்கவில்லை என்பது மட்டுமல்லாமல், மாறாக முதல் தடவையாக, ஒரு நிஜமான முறையில், விரிவானதும், விரைவானதுமான ஐரோப்பிய வழிப்பட்ட முதலாளித்துவ வளர்ச்சிக்குள்ள தடைகளை அகற்றி நிலத்தை தயாரிக்குமே தவிர ஆசிய வழிப்பட்ட முதலாளித்துவ வளர்ச்சிக்கல்ல. அவை முதல் தடவையாக பூர்சுவா வர்க்கம் அது ஒரு வர்க்கம் என்ற ரீதியில் ஆட்சி புரிவதை சாத்தியமாக்கும்." ''நாம் ரஷ்யப் புரட்சியின் பூர்சுவா ஜனநாயகக் கட்டமைப்பிற்கு மேல் பாய்ந்து செல்ல முடியாது.'' என அவர் வலியுறுத்தினார். ''ஆனால் நாம் இந்தக் கட்டமைப்பை பிரமாண்டமான அளவுக்கு விஸ்தரிக்கலாம்'' அதாவது நாம் பூர்சுவா சமுதாயத்தினுள் பாட்டாளி வர்க்கத்தின் எதிர்கால போராட்டத்திற்கான மேலும் அதிகமாக சாதகமான நிலைமைகளை உருவாக்கலாம். இப்படியான எல்லைக்குள் லெனின், பிளக்கனோவைப் பின்பற்றினார். புரட்சியின் பூர்சுவா தன்மை ரஷ்ய சமூக ஜனநாயகத்தின் இரண்டு பிரிவுகளுக்கும் சாலைகள் சந்திக்கும் சதுக்கமாக இருந்தது. இப்படியான நிலைமைகளின் கீழ், போல்ஷிவிக்குகளின் அதேபோல் மென்ஷிவிக்குகளின் பொதுச் சொத்தாக அமைந்திருந்த அந்த பிரபலமான சூத்திரங்களுக்கு அப்பால், கோபா (ஸ்ராலின்) தனது பிரச்சார வேலையில் போகாதிருந்தது இயற்கையானதேயாகும். ஜனவரி 1905-ல் அவர் எழுதியதாவது: ''சர்வஜனங்களின், சமத்துவமான, நேரடியான, இரகசியமான வாக்குரிமையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் சட்ட அமைப்புச் சபைக்காகத்தான் நாம் போராட வேண்டும்! இந்தச் சபை மட்டுமே சோசலிசத்திற்கான நமது போராட்டத்தில் நமக்கு மிக அவசரமாக தேவைப்படும் ஜனநாயகக் குடியரசை நமக்கு வழங்கும்.'' சோசலிச குறியிலக்கிற்கான ஒரு நீண்டகால வர்க்கப் போராட்டத்திற்கான களமாக பூர்சுவா குடியரசு - அதுதான் முன்னோக்கு. 1907-ல் அதாவது பீட்டர்ஸ்பேர்க் மற்றும் வெளிநாடுகளில் பத்திரிகைகளில் நடந்த எண்ணற்ற விவாதங்களின் பின்னரும் முதலாவது புரட்சியின் அனுபவங்களில் தத்துவார்த்த முன்கணிப்பீடுகள் ஒரு முன்கூட்டிய அறிகுறியாக சோதித்தலுக்கு உள்ளாக்கப்பட்ட பின்னரும் ஸ்ராலின் எழுதினார்: ''எமது புரட்சி ஒரு பூர்சுவா புரட்சி, அது நிலப்பிரபுத்துவத்தை அழிப்பதில் முடிவடைய வேண்டுமே அன்றி முதலாளித்துவ ஒழுங்கை அழிப்பதில் அல்ல. அது ஜனநாயகக் குடியரசினால் மட்டுமே முடி சூட்டப்பட முடியும். அது பற்றியதில் எமது கட்சிக்குள் அனைவருக்குமே உடன்பாடு இருப்பதாய் தெரிகிறது." ஸ்ராலின், புரட்சி எதனுடன் ஆரம்பிக்கின்றது என்பது பற்றி அல்ல, ஆனால் அது எதனுடன் முடிவடைகின்றது என்பது பற்றி பேசினார். அத்துடன் அவர் முன்கூட்டியே மிகவும் தெளிவாக புரட்சியை ''ஜனநாயகக் குடியரசுக்கு மட்டுமே'' என்று மட்டுப்படுத்தினார். நாம் அவருடைய எழுத்துக்களில் அந்நாள்களில் ஒரு ஜனநாயக கிளர்ச்சி எழுச்சியுடன் தொடர்புடைய ஒரு சோசலிசப் புரட்சியின் முன்நோக்கிற்கான ஒரு ஜாடையை கூடத் தேடுவது பலனற்றதாக இருக்கும். இதுவே அவரது நிலைப்பாடாக 1917-ல் பெப்ரவரி புரட்சியின் ஆரம்பத்தில் கூட இருந்ததுடன் லெனின் பெட்ரோகிராட்டுக்கு வரும்வரையிலும் இருந்தது. பிளக்கனோவ், அக்செல்ரோட் மற்றும் பொதுவாக மென்ஷிவிசத்தின் தலைவர்களுக்கு புரட்சியை பொதுவாக பூர்சுவா புரட்சியென குணாம்சப்படுத்துவது சோசலிசத்தின் சிவப்பு பூச்சாண்டி உடன் பூர்சுவாக்களின் முதிர்ச்சியடையாத வெறுப்புடன் கூடிய பழிப்புரையை, மற்றும் இவ்வாறு "அதனை அச்சுறுத்தி" பிற்போக்கு முகாமுக்குள் ஓட்டுவதை தவிர்க்கும் அரசியல் மதிப்பை கொண்டிருந்தது. மென்ஷிவிசத்தின் பிரதான தந்திரோபாய நிபுணரான அக்செல்ரோட் ''ரஷ்யாவில் சமூக உறவுகள் பூர்சுவா புரட்சிக்கு மட்டும்தான் கனிந்துள்ளன" என்று ஒன்றிணைப்பு மாநாட்டில் கூறினார். ''இந¢த பொதுவான அரசியல் சட்டஒழுங்கற்றநிலை தொடர்கையில், ஏனைய வர்க்கங்களுக்கு எதிரான பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் அதிகாரத்திற்கான நேரடிப் போராட்டம் பற்றிய பேச்சு கூட இருக்கக்கூடாது. பூர்சுவா வளர்ச்சியின் நிலைமைகளுக்கு பாட்டாளி வர்க்கம் போராடுகின்றது. புறநிலை வரலாற்று நிலைமைகள் பொது எதிரிக்கு எதிரான போராட்டத்தில் முதலாளித்துவ வர்க்கத்துடன் தவிர்க்கவியலாதபடி ஒத்துழைப்பதை எமது பாட்டாளி வர்க்கத்தின் தலைவிதியாக்குகிறது'' என்றார். இதனால் ரஷ்ய புரட்சியின் உள்ளடக்கம் முன்னதாகவே தாராண்மை முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களுக்கும், கருத்துக்களுக்கும் ஏற்றதான மாற்றங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு பிரிவுகளுக்கும் (கன்னைகளுக்கும்) இடையிலான அடிப்படை வேறுபாட்டிற்கு ஆரம்ப புள்ளியாக இதுதான் இருந்தது. ரஷ்ய பூர்சுவாக்களுக்கு அதன் சொந்தப் புரட்சியை முடிவுக்கு இட்டுச்செல்ல திறனுள்ளது என அங்கீகரிக்க போல்ஷிவிசம் முற்று முழுதாக மறுத்தது. பிளக்கனோவை விட அளவில்லாத பெரும் சக்தியுடனும், விடாது தொடர்ச்சியாகவும் லெனின் ரஷ்யாவில் ஜனநாயக புரட்சிக்கான பிரதான பிரச்சனையாக விவசாய பிரச்சனையை முன்னெடுத்தார்: ''ரஷ்ய புரட்சியின் உண்மையான பிரச்சனை விவசாயப் பிரச்சனை (நிலம்) தான் என அவர் மீண்டும் கூறினார். புரட்சியின் வெற்றி அல்லது தோல்வி சம்பந்தமான முடிவுகள் நிலத்திற்கான அவர்களின் போராட்டத்தில் பரந்த மக்களின் நிலைமைகளின் கணிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்'' என்றார். பிளக்கனோவுடன் இணைந்து விவசாயிகளை ஒரு குட்டி பூர்சுவா வர்க்கமாகவும் விவசாய நிலத்திற்கான திட்டத்தை பூர்சுவாக்களின் தாராளவாத வேலைத்திட்டமாகவும் லெனின் பார்த்தார். ''தேசியமயமாக்கல் ஒரு முதலாளித்துவ நடவடிக்கையாகும்'' என அவர் கட்சி ஒன்றிணைப்பு மாநாட்டில் வலியுறுத்தினார். ''வர்க்கப் போராட்டத்தை கூர்மைப்படுத்துவதன் மூலமும், நிலம் அணி திரட்டப்படுவதைப் பலப்படுத்துவதன் மூலமும் விவசாயத்தினுள் மூலதனம் உட்பாய்தலை பலப்படுத்துவதன் மூலமும், தானியத்தின் மீதான விலையைக் குறைப்பதன் மூலமும் அது முதலாளித்துவ வளர்ச்சிக்கு ஒரு உந்து சக்தியைக் கொடுக்கும்.'' விவசாய புரட்சி பூர்சுவா தன்மையைக் கொண்டிருந்த பொழுதிலும் நிலப்பிரபுக்கு சொந்தமான பண்ணை நிலங்கள் அபகரிக்கப்படுவதற்கு எவ்வாறாயினும் ரஷ்ய பூர்சுவா வர்க்கமானது தொடர்ந்தும் குரோதமாகவே இருந்து வருகிறது. திட்டவட்டமாக இக்காரணத்தினாலேயே அது பிரஷ்ய நாட்டு அரசியலமைப்பு மாதிரியான அரசியலமைப்பை அடிப்படையாகக் கொண்ட முடியாட்சியுடன் ஒரு சமரசத்தை நாடி நிற்கின்றது. பிளக்கனோவின் கருத்தான பாட்டாளி வர்க்கத்திற்கும் தாராளவாத பூர்சுவாக்களுக்கும் இடையிலான கூட்டிற்கு எதிராக லெனின் பாட்டாளி வர்க்கத்திற்கும் விவசாயிகளுக்கும் இடையிலான கூட்டு பற்றிய கருத்தை முன் வைத்தார். இந்த இரு வர்க்கங்களுக்கும் இடையிலான புரட்சிகர ஒத்துழைப்பின் பணி, ''ஜனநாயக சர்வாதிகாரத்தை'' அமைப்பதே. இதன் மூலம் மட்டுமே ரஷ்யாவை நிலப்பிரபுத்துவ குப்பை கூளங்களில் இருந்து துப்புரவு செய்து, ஒரு சுதந்திரமான விவசாயிகளின் வர்க்கத்தை உருவாக்கி, பிரஷ்ய வழிகளில் அல்லாமல் அமெரிக்க வழிகளில் முதலாளித்துவம் வளர்ச்சியுறும் பாதையைத் திறக்க முடியும் என்று அவர் அறிவித்தார். புரட்சியின் வெற்றி ''ஒரு சர்வாதிகாரத்தினால் மட்டுமே அடையப்பட முடியும், ஏனென்றால் பாட்டாளி வர்க்கத்தாலும், விவசாயிகளாலும் உடனடியாகவும் அவசரமாகவும் தேவைப்படும் மாற்றங்களைச் செய்து முடிப்பது, நிலப்பிரபுக்கள், பெரிய பூர்சுவா வர்க்கத்தினர் மற்றும் ஜாரிசத்திடம் இருந்தும் மூர்க்கத்தனமான எதிர்ப்பை உண்டுபண்ணும்'' என்று அவர் எழுதினார். சர்வாதிகாரம் இல்லாமல் இந்த எதிர்ப்பை உடைப்பது அசாத்தியமாகும், எதிர்ப்புரட்சிகர முயற்சிகளை தோற்கடிப்பதும் அசாத்தியமாகும். ஆனால் இது உண்மையிலேயே ஒரு சோசலிச சர்வாதிகாரமாக அல்லாது ஒரு ஜனநாயக சர்வாதிகாரமாக இருக்கும் என்பது சொல்லத் தேவையில்லை. இது (புரட்சிகர வளர்ச்சியின் ஒரு முழுத் தொடரான இடைமருவுக் கட்டங்கள் இல்லாமல்) முதலாளித்துவத்தின் அடி அத்திவாரங்களை ஒழுங்கமைத்துவிட முடியாது. இது அதன் அதிசிறந்த சாதனையை அடையும் பட்சத்தில், விவசாயிகளுக்கு சாதகமாக நில உடைமையில் ஒரு தீவிர மறுபங்கீட்டைச் சாதிக்கும், குடியரசு நிறுவும் வரையிலான ஒரு உறுதியானதும், முழுமையானதுமான ஜனநாயகப்படுத்தலை அது அறிமுகப்படுத்தும். கிராமங்களின் அன்றாட வாழ்க்கையிலிருந்து மட்டுமல்லாது, தொழிற்சாலைகளிலும் கூட அனைத்து ஆசிய மற்றும் பிரபுத்துவ அம்சங்களை வேருடன் களைதலையும்; தொழிலாளர்களின் நிலைமைகளில் ஒரு தீவிரமான முன்னேற்றத்தை தொடங்கி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, இறுதியாக ஆனால் குறைந்த பட்சத்தில் அன்றி, புரட்சிகர ஊழித்தீயை ஐரோப்பாவிற்கு எடுத்துச் செல்லும்." லெனினின் கருத்துரு பற்றிய விமர்சனம் புரட்சியின் மையப் பணியாக அரசியலமைப்பு சீர்திருத்தங்களில் இருந்து ஆரம்பிக்காமல், ஆனால் விவசாயப் புரட்சியிலிருந்து தொடங்கியதாலும், அதனை அடைவதற்கு வேண்டிய ஒரே ஒரு நிஜமான சமூக சக்திகளின் சேர்க்கையை சுட்டிக்காட்டிய வரையில் லெனினின் கருத்து ஒரு பிரமாண்டமான முன்னேற்றப்படியை பிரதிநிதித்துவம் செய்தது; ஆயினும் லெனின் கருத்துருவின் பலவீனமான அம்சம் என்னவென்றால் உள் முரண்பாடுள்ள கருத்தான ''பாட்டாளி வர்க்கத்தின், விவசாயிகளின் ஜனநாயக சர்வாதிகாரம்'' ஆகும். லெனினே இதனை ஒரு பூர்சுவா "சர்வாதிகாரம்" என்று வெளிப்படையாகவே அழைத்த பொழுது, அவர் அதன் அடிப்படை ரீதியான வரம்பைக் கோடிட்டுக் காட்டினார். இதன் மூலம் அவர் கூற முயன்றது என்னவென்றால், பாட்டாளி வர்க்கமானது அது விவசாயிகளுடனான தனது கூட்டைப் பேணுவதற்காக வரவிருக்கும் புரட்சியில் அது நேரடியாக சோசலிசப் பணிகளை முன் வைப்பதை கைவிடவேண்டும் என்பதாகும். ஆனால் இது பாட்டாளி வர்க்கம் தன் சொந்த சர்வாதிகாரத்தை துறப்பதை குறிக்கும். இக்காரணத்தினால் அதன் சாராம்சம் தொழிலாளர்களின் பங்கு கொள்ளலுடன் விவசாயிகளின் சர்வாதிகாரத்தை உட்படுத்துகின்றது. குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் இதையே லெனின் கூறினார். உதாரணமாக ஸ்டொக்ஹோல்ம் மாநாட்டில் ஆட்சியைக் கைப்பற்றும் ''கற்பனாவாதத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்த பிளக்கனோவை கண்டிக்கையில், லெனின் பின்வருமாறு கூறினார்; எந்த வேலைத்திட்டத்தைப் பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கிறோம்? விவசாய வேலைத் திட்டம், இந்த வேலைத்திட்டத்தின் கீழ் யார் ஆட்சியைக் கைப்பற்றுவது? புரட்சிகர விவசாயி. லெனின் பாட்டாளி வர்க்கத்தின் அரசாங்கத்தை விவசாயிகளின் அரசாங்கத்துடன் குழப்புகிறாரா?'' இல்லை என்று அவரைப் பற்றிக் கூறுகையில் அவரே கூறினார்; லெனின் பாட்டாளி வர்க்கத்தின் சோசலிச அரசாங்கத்தை விவசாயியின் பூர்சுவா ஜனநாயக அரசாங்கத்தில் இருந்து கூர்மையாக வேறுபடுத்துகிறார். புரட்சிகர விவசாயியால் ஆட்சி அதிகாரம் கைப்பற்றப்படாமல் ஒரு வெற்றிகரமான விவசாயப் புரட்சி எப்படி சாத்தியமாகும்? மீண்டும் அவர் வியக்கிறார். இந்த வாக்குவாத சூத்திரத்தில் அவருடைய நிலைப்பாட்டின் பலவீனத்தை சிறப்பான தெளிவுடன் லெனின் வெளிப்படுத்துகிறார். மாநகரங்கள் தொடர்புக்கான புள்ளிகளாக, ஒரு பிரம்மாண்டமான நாட்டின் மேற்பரப்பில் விவசாயிகள் சிதறுண்டுள்ளனர். ஒவ்வொரு பிராந்தியத்திலும் அவர்கள் வேறுபட்ட வகையில் உருக்கொண்டிருந்ததால், விவசாயிகள் தாமாகவே தனது சொந்த நலன்களைக்கூட முறைப்படுத்திக் கூற திறனற்றவராவார். மாகாணங்களுக்கிடையிலான பொருளாதார இணைப்பு சந்தையினாலும், இரயில்வேயினாலும், உருவக்கப்பட்டது. ஆனால் சந்தை, இரயில்வே ஆகிய இரண்டும் நகரத்தின் கைகளில் இருக்கின்றன. கிராமத்தின் கட்டுப்பாடுகளிலிருந்து வெளியே உடைத்துக் கொண்டு வந்து, அதன் சொந்த நலன்களைப் பொதுமைப்படுத்த விவசாயப்பகுதி தவிர்க்கவியலாத வகையில் நகரத்தின் மீதான அரசியல் சார்தலில் வீழ்கிறது. விவசாயிகள் அவர்களின் சமூக உறவுகளில் ஒரேமாதிரியான தன்மை ஒருபோதும் இல்லை: அதன் குலாக் சமூகத்தட்டு, இயற்கையாகவே நகர பூர்சுவா வர்க்கத்துடன் ஒரு கூட்டுக்குச் செல்லும் அதேவேளை, கிராமத்தின் தாழ்ந்த சமூகத்தட்டு நகர்ப்புற தொழிலாளர் பக்கம் இழுக்கப்படுகிறது. இப்படியான நிலைமைகளின் கீழ், குடியானவர்கள் ஒட்டுமொத்தமாக ஆட்சியைக் கைப்பற்ற முழுமையாகத் திறனற்றவராவர். புராதன சீனத்தில் புரட்சிகள் விவசாயியை ஆட்சியில் வைத்தது அல்லது மிகத்திட்டவட்டமாக விவசாய எழுச்சியின் இராணுவத் தலைவர்களை ஆட்சியில் வைத்தது என்பது போதுமான உண்மைதான். இது ஒவ்வொரு தடவையும் நிலத்தை ஒரு பங்கீடு செய்யவும் ஒரு புதிய "விவசாய" வம்சத்தை ஸ்தாபிக்கவும் அங்கே இருந்து வரலாறு தொடக்கத்தில் இருந்து ஆரம்பிக்கும்: ஒரு புதிய நிலத் திரட்டல், ஒரு புதிய பிரபுக்களாட்சி, ஒரு புதிய முறையிலான கொள்ளை வட்டித் தொழில் மற்றும் ஒரு புதிய எழுச்சியுடன் ஆகும். புரட்சி அதன் தூய்மையான விவசாய குணாம்சத்தை பேணும் வரையில் சமுதாயம் இப்படியான நம்பிக்கையற்ற சுழற்சிகளில் இருந்து வெளியே வரத் திறனற்றதாய் இருக்கும். இதுவே புராதன ரஷ்ய வரலாறு உள்ளடங்கலாக புராதன ஆசிய வழியிலான வரலாற்றின் அடிப்படையாகும். ஐரோப்பாவில் மத்திய காலத்தின் முடிவில் ஆரம்பத்தில் ஒவ்வொரு வெற்றிகரமான விவசாய எழுச்சியும் ஒரு விவசாய அரசாங்கத்தையும் ஆட்சியில் வைக்காமல், ஆனால் ஒரு இடதுசாரி நகரக்கட்சியையே ஆட்சியில் வைத்தது. அதை மிகத் திட்டவட்டமாகச் சொல்வதாயின் ஒரு விவசாய எழுச்சி, நகர்ப்புற மக்கட் தொகையின் புரட்சிகர பகுதியின் நிலைப்பாட்டை பலப்படுத்துவதில் வெற்றி காணும் அளவிற்கே திட்டவட்டமாக வெற்றிகரமானதாக வந்தது. 20ம் நூற்றாண்டின் பூர்சுவா ரஷ்யாவில் புரட்சிகர விவசாயி ஆட்சியை கைப்பற்றுவது பற்றிய பேச்சுக்கே இடமிருக்க முடியாது. தாராளவாதம் பற்றிய லெனினின் மதிப்பீடு தாராளவாத பூர்சுவாசி பற்றிய மனோபாவம் முன்னர் கூறியதுபோல், சமூக ஜனநாயகவாதிகளின் அணியில் உள்ள புரட்சிவாதிகள் மற்றும் சந்தர்ப்பவாதிகளுக்கிடையிலான வேறுபாட்டில் இவ்வாறு உரை கல்லாக ஆனது. ரஷ்ய புரட்சி எவ்வளவு தூரம் துணிவு மிக்கதாக இருக்க முடியும்? எதிர்கால புரட்சிகர இடைக்கால அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் பண்பு என்னவாக இருக்கும்? அது எதிர் கொள்ளும் பணிகள் என்ன? மற்றும் என்ன ஒழுங்கில் அவற்றை வரிசைப்படுத்தும்? இப்படியான கேள்விகள் அவற்றின் அனைத்து முக்கியத்துவத்துடன், பாட்டாளி வர்க்கக் கொள்கையின் மூலாதாரமான குணாம்சத்தின் அடிப்படையில் மட்டுமே சரியான முறையில் கேள்விகளை முன்வைக்க முடியும். அந்தக் கொள்கையின் குணாம்சம் எல்லாவற்றிற்கும் முதல் தாராளவாத பூர்சுவா வர்க்கத்துடன் அதன் உறவினால் நிர்ணயிக்கப்படும். பிளக்கனோவ் 19ம் நூற்றாண்டின் அரசியல் வரலாற்றின் அடிப்படை முடிவுகளுக்கு தெளிவாகவும் பிடிவாதமாகவும் தனது கண்களை மூடிக் கொண்டார். பாட்டாளி வர்க்கம் ஒரு சுயாதீனமான சமூக சக்தியாக முன்னணிக்கு வரும்போதெல்லாம் பூர்சுவா எதிர்ப்புரட்சி முகாமுக்கு இடம் பெயர்கிறது மக்கள் போராட்டம் மிகத் துணிச்சலுள்ளதாக இருக்கையில், தாரளவாதத்தின் பிற்போக்கு உருமாற்றம் முழுவேகம் உடையதாக இருக்கும். வர்க்கப்போராட்ட விதியின் செயல்பாடுகளை ஸ்தம்பிக்கச் செய்வதற்கான வழிமுறைகளை இதுவரை யாரும் கண்டுபிடிக்கவில்லை. முதற் புரட்சியின் வருடங்களின்போது பிளக்கனோவ் திரும்பத் திரும்பக் கூறினார், ''நாம் பாட்டாளி வர்க்கமல்லாத கட்சிகளின் ஆதரவை வாஞ்சையுடன் வளர்க்க வேண்டும். சாமர்த்தியமற்ற செயல்களின் மூலம் அவர்களை நம்மிடமிருந்து விரட்டியோட்டக் கூடாது;'' இவ்வகைப்பட்ட ஒன்றையே மீண்டும் மீண்டும் கூறும் போதனை மூலம் அந்த மார்க்சிசத்தின் ஞானி சமூகத்தின் உயிர்ப்புள்ள இயக்கத்தை தன்னால் எட்ட முடியாது என்பதை எடுத்துக் காட்டினார். ''சாமர்த்தியமின்மை'' ஒரு தனி உணர்ச்சிகரமான அறிவுஜீவியை விரட்ட முடியும். வர்க்கங்களும், கட்சிகளும் சமூக நலன்களால் ஈர்க்கப்படுகிறன அல்லது விலக்கப்படுகின்றன. லெனின், பிளக்கனோவுக்கு பதிலளிக்கையில் ''தாராண்மைவாதிகளும் நிலப்பிரபுக்களும் லட்சக்கணக்கான சாமர்த்தியமற்ற செயல்களுக்காக உங்களை மன்னிப்பார்கள். ஆனால் நிலத்தைப் பறித்தெடுக்க அழைப்பு விடுப்பதற்கு ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள் என்று நிச்சயத்துடன் கூறலாம்'' என்றார். நிலப்பிரபுக்கள் மட்டுமல்ல பூர்சுவா வர்க்கத்தின் மேல்தட்டுப் பகுதியினரும் நிலச் சொந்தக்காரர்களுடன் சொத்து நலன்களின் அடையாளத்தால் கட்டுண்டுள்ளனர் வங்கி முறைகளினூடாகவும் மிக நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளனர், குட்டி பூர்சுவா வர்க்கத்தின் மேல்தட்டினரும், அறிவுஜீவிகளும் பெரிய மற்றும் நடுத்தர சொத்து உடைமையாளர்களில் - சட ரீதியாகவும் ஒழுக்க நெறியாகவும், தங்கியிருக்கின்றனர். அவர்கள் அனைவரும் சுதந்திரமான வெகுஜன இயக்கம் பற்றி அஞ்சுகின்றனர். அதே சமயம் ஜாரிசத்தை தூக்கி வீசுவதற்கு பல கோடி ஒடுக்கப்படும் மக்களை எங்கும் இடை நிறுத்தாது ஒரு வீரஞ்செறிந்த சுய அர்ப்பணிப்பைச் செய்யும் கட்டுப்படுத்தாத புரட்சிகரத் தாக்குதலை எழுச்சியுறச் செய்வது அவசியமானது. நிலப்பிரபுக்களுடன் ஆரம்பித்து சுரண்டும் வர்க்கங்கள் சம்பந்தமான சமரசம் செய்ய முடியாத குரோத உணர்வுடன் மக்கள் அவர்களின் சொந்த நலன்களின் பதாகையின் கீழ் மட்டுமே ஒரு ஆயுதக்கிளர்ச்சிக்கு எழுவார்கள். ஆகையால் புரட்சிகரத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளிடம் இருந்து எதிர்க்கும் பூர்சுவாக்கள் ''திகிலடைந்து விலகல்'' புரட்சிக்குரிய இயற்கையாய் அமையப்பெற்ற விதியாகும். அதை இராஜதந்திர அல்லது "சாமர்த்திய முறை" யினாலோ தவிர்க்க முடியாது. ஒவ்வொரு அதிகப்படியான மாதமும் தாராளவாதம் பற்றிய லெனினின் மதிப்பீட்டை உறுதி செய்தது. மென்ஷிவிக்குகளின் சிறந்த எதிர்ப்புகளுக்கு மாறாக கடேட்டுகள் ''பூர்சுவா'' புரட்சியின் தலைமையில் அவர்களது இடத்தை எடுக்கத் தயாரின்றி இருந்தது மட்டுமல்லாமல், அதற்கு மாறாக, அவர்களுடைய வரலாற்றுக் குறிக்கோளை மென்மேலும் அதற்கு எதிரான போராட்டத்திலேயே கண்டு கொண்டனர். சிறிதேகாலம் இயங்கிய டுமாவில் தாராளவாதிகள் டிசம்பர் எழுச்சி நசுக்கப்பட்ட பின் முடியாட்சியின் முன்னால் அனைத்து சக்தியுடனும் தம்மையே நியாயப்படுத்த முயன்றதுடன், 1905 -- இலையுதிர் காலத்தில் 'கலாச்சாரத்தின்' மிகப் புனிதமான ஆதாரங்களை அபாயம் அச்சுறுத்தியபோது, அவர்களது பற்றாக்குறை செயலூக்கமுள்ள எதிர்புரட்சி நடத்தையை விளக்கிக் கூறினர். குளிர் கால அரண்மனையுடன் திரைமறைவு (sub rosa) பேச்சுவார்த்தைகளை நடாத்திய தாராளவாதிகளின் தலைவரான மில்யுகோவ், 1905-ன் இறுதியில் கடேட்டுகள் மக்களின் முன்னே தம்மை காட்டிக்கொள்ளக்கூட முடியாதிருந்தனர் என்பதை பத்திரிகையில் மிகவும் சரியாக நிரூபித்தார். அவர் எழுதினார்: ட்ரொட்ஸ்கிச புரட்சிகர பிரமைகளுக்கு எதிராக அந்த சமயத்தில் கூட்டங்களை ஏற்பாடு செய்வதன் மூலம் அது எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்ற காரணத்தினால் தற்போது அந்தக் கட்சியை (கடேட்டை) கண்டிக்கும் அவர்கள்..... அந்த நேரத்தில் கூட்டங்களில் ஜனநாயக ரீதியில் பொதுமக்கள் ஒன்று சேர்கையில் நிலவும் மனப்போக்குகளை சாதாரணமாகப் புரிந்து கொள்ள முடியவில்லை.'' ட்ரொட்ஸ்கிச பிரமைகள் என்பதன் மூலம் மிதவாத தலைவர் புரிந்து கொண்டது பாட்டாளி வர்க்கத்தின் சுயாதீனமான கொள்கையாகும். அது நகரங்களின் உள்ள படைவீரர்களின், விவசாயிகளின் மற்றும் அனைத்து ஒடுக்கப்படுவோரின் மிகத் தாழ்வான தட்டுக்களின் அனுதாபங்களை சோவியத்துக்களின்பால் கவர்ந்தது. அது இதனால் ''படித்த சமூகத்தினை'' தன்பால் இருந்து 'விலக்கியது.' மென்ஷிவிக்குகளின் பரிணாமம் இணையான கோடுகளின் வழியாக விரிவடைந்தது. அவர்கள், தாராளவாதிகளுக்கு முன் மென்மேலும் அடிக்கடி, 1905 அக்டோபருக்கு பின் அவர்கள் ட்ரொட்ஸ்கியுடன் ஒரு கூட்டில் சேர்ந்து இருந்ததை பிறிதோர் இடமிருப்பு வாத (Alibi) அடிப்படையில் நியாயப்படுத்த வேண்டியிருந்தது. மென்ஷிவிக்குகளின் திறமைமிக்க பிரசுரகர்த்தாவாகிய ''மால்டோவின்'' விளக்கங்கள் மக்களின் ''புரட்சிகர பிரமைகளுக்கு'' ஒரு சலுகைகள் வழங்குவது அவசியமானது என்று கூறுமளவிற்கு கீழிறங்கி வந்ததது: பீட்டர்ஸ்பேர்க்கைப் போல அதே கோட்பாடு அடிப்படையில் டிப்லிசில் அரசியல் குழுக்கள் உருவெடுத்தன. காகேசியன் மென்ஷிவிக்குகளின் தலைவரான ழோர்தானியா பின்வருமாறு எழுதினார்: ''பிற்போக்கை தகர்க்க அரசியல் அமைப்பைக் கைப்பற்றி அதைக் கொண்டு நடத்துவது-இது பாட்டாளிகளினதும் பூர்சுவாக்களினதும் சக்திகளின் பக்கத்தினின்று நனவுபூர்வமாய் ஒன்றுபடுதலிலும் ஒரு தனியான குறிக்கோளை அடையப் பாடுபடுவதிலுமே தங்கி இருக்கின்றது.... இந்த இயக்கத்தினுள் விவசாயிகள் ஈர்க்கப்பட்டு, அது ஒரு இயல்பான உற்சாகத் தன்மையை ஊட்டிக் கொள்ளும் என்பது உண்மையே. ஆனால் தீர்க்கமான பங்கு எவ்வாறாயினும் இந்த இரண்டு வர்க்கங்களினாலுமேயே வகிக்கப்படும்: அதே சமயம் விவசாய இயக்கம் அவர்களுக்கு இலாபகரமானதாக்கும். பூர்சுவா பற்றிய ஒரு சமரசமற்ற கொள்கை தொழிலாளர்களை கையாலாக நிலைமைக்கு இட்டுச் செல்லும் எனும் ழோர்தானியாவின் அச்சங்களை லெனின் நையாண்டி செய்தார். ழோர்தானியா ''ஒரு ஜனநாயகக் கிளர்ச்சியால் பாட்டாளி வர்க்கத்தின் சாத்தியமான தனிமைப்படல் பற்றிய பிரச்சனைய விவாதிக்கிறார்.... விவசாயி பற்றி மறக்கிறார்! பாட்டாளி வர்க்கத்தின் அனைத்து சாத்தியமான கூட்டுக்களிலும் அது நிலப்பிரபு-தாராளவாதி பற்றிய பிரமையூட்டப்பட்டு இருக்கின்றதென்பது பற்றி அவருக்குத் தெரியும். அவருக்கு விவசாயிகளைப் பற்றி தெரியாது. அதுவும் இது காகசசில் ஆகும்!'' இப்படியான இந்த லெனினின் மறுப்புத் தெரிவிப்புக்கள், சாராம்சத்தில் சரியாக இருக்கும் அதேசமயம் ஒரு கட்டத்தில் பிரச்சனையை எளிமைப்படுத்துகின்றது. ழோர்தானியா விவசாயி பற்றி ''மறக்க'' வில்லை, லெனினது ஜாடை காட்டுதலிலிருந்தே அறியக்கூடியதாக இருப்பது காகசஸில் மென்ஷிவிக்குகளின் பதாகையின் கீழ் விவசாயிகள் அந்த சமயம் புயலாக எழுந்து கொண்டிருக்கையில் அதைப் பற்றி மறப்பது சாத்தியமாக இருக்கமாட்டாது? ஆனால் ழோர்தானியா விவசாயிகளை பூர்சுவா வர்க்கம் பாட்டாளி வர்க்கத்துடனான கூட்டில் பயன்படுத்திக்கொள்ள வேண்டிய மற்றும் பயன்படுத்திக்கொள்ள முடிந்த, அடித்து இறுக்கும் ஒரு அரசியல் திமிசுக்கட்டையாக, ஒரு அரசியல் கூட்டாளியாக அந்த அளவுக்குப் பார்க்கவில்லை. அவர் விவசாயிக்கு தலைமை தாங்கும் அல்லது ஒரு சுயாதீனமான சாத்தியம் கூட புரட்சியில் மாறும் திறனுள்ளது என நம்பவில்லை, இதில் அவர் தவறாக இல்லை. ஆனால் அவர் பாட்டாளி வர்க்கம் விவசாய எழுச்சியை வெற்றிக்கு வழி நடத்தும் திறனுள்ளது என்பதையும் கூட நம்பவில்லை. இதில்தான் அவரது நாசமூட்டும் தவறு இருக்கிறது. பாட்டாளி வர்க்கத்தின் பூர்சுவாக்களுடனான கூட்டு பற்றிய மென்ஷிவிக்குகளின் கருத்து உண்மையில் தொழிலாளர்கள், விவசாயிகள் இருவரையுமே தாராளவாதிகளுக்கு அடிபணியச் செய்வதை குறிப்பிட்டது. மிக முன்னதாக வர்க்கங்களின் துண்டிப்பு, பூர்சுவா வர்க்கத்தை முன் கூட்டியே ஒரு புரட்சிகர காரணியாக இல்லாது ஸ்தம்பிக்கச் செய்தது எனும் உண்மையினால் இந்த வேலைத்திட்டத்தின் பிற்போக்கு கற்பனாவாதம் நிர்ணயிக்கப்பட்டது. இந்த அடிப்படைப் பிரச்சனையில் சரியானது முழுமையாக போல்ஷிவிசம் பக்கமே இருந்தது. தாராளவாத பூர்சுவா வர்க்கத்துடன் ஒரு கூட்டுக்குப் பின்னால் அதனை துரத்திச் செல்வது தப்ப முடியாதபடி சமூக ஜனநாயகத்தை தொழிலாளர்களின் விவசாயிகளின் புரட்சிகர இயக்கத்திற்கு எதிரானதாக முன்வைக்கும். 1905-ல் மென்ஷிவிக்குகள் தங்களது ''பூர்சுவா'' புரட்சிகர தத்துவத்தில் இருந்து அனைத்து அவசியமான முடிவுகளையும் எடுப்பதற்கு இன்னும் துணிவற்று இருந்தனர். 1917-ல் அவர்கள் தங்களது கருத்துக்களை அவற்றின் தர்க்க ரீதியான முடிவுகளுக்கு எடுத்துச் சென்று அவர்களது தலைகளையே உடைத்துக் கொண்டனர். தாராளவாதிகளுடனான அணுகுமுறை பற்றிய பிரச்சனையில் ஸ்ராலின் முதலாவது புரட்சியின் வருட காலங்களில் லெனின் பக்கம் நின்றார். இந்தக் காலகட்டத்தில் மென்ஷிவிக்குகளின் கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர் மட்டத்தின் எதிர்ப்பு பூர்சுவா வர்க்கம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் பிளக்கனோவைவிட லெனினுக்கு அருகாமையில் இருந்தது என்பது கூறப்பட வேண்டும். தாராண்மைவாதிகள் பற்றிய ஒரு வெறுப்புள்ள அணுகுமுறையே அறிவுஜீவி தீவிரவாதத்தின் இலக்கிய மரபாக இருந்தது. இந்தப் பிரச்சனையில் காக்கேசியன் சமூக உறவுகள் பற்றிய ஒரு ஆய்வாக இருக்கட்டும் அல்லது புதிய வாதங்கள் அல்லது பழைய வாதங்கள் பற்றிய புதிய சூத்திரத்தில் கூட எவ்வாறயினும் கோபாவிடமிருந்து ஒரு சுயாதீனமான பங்களிப்பை தேடுவாராயின் அது பயனற்றதாகவே இருக்கும். காக்கேசியன் மென்ஷேவிக்குகளின் தலைவரான ழோர்தானியா லெனினுடனான தொடர்பில் ஸ்ராலினைவிட பிளக்கனோவுடனான தொடர்பில் மிக அதிகமான சுதந்திரமாக இருந்தார். ஜனவரி 9-க்குப் பின் கோபா எழுதினார், ''திருவாளர்கள் மிதவாதிகள் தள்ளாடுகின்ற ஜாரின் சிம்மாசனத்தை வீணாகக் காப்பாற்ற முனைகின்றனர். வீணாக அவர்கள் ஜாருக்கு உதவிக்கரம் நீட்டுகின்றனர். எழுச்சியுற்ற பரந்த மக்கள்திரளினர் புரட்சிக்காக தயார் செய்கிறார்ளேயன்றி ஜாருடன் சமரசத்திற்கு அல்ல.. ஆம்! கனவான்களே உங்கள் முயற்சிகள் பயனற்றவை. சூரியன் உதயமாவது தவிர்க்க முடியாதது போல் ரஷ்யப்புரட்சியும் தவிர்க்க முடியாதது. உங்களால் சூரியன் உதயமாவதை தடுக்க முடியுமா? அதுதான் கேள்வி!'' என்று இப்படியே தொடர்ந்தார். இதைவிட உயர்வாக கோபா எழவில்லை, இரண்டரை வருடங்களின் பின் பெரும்பாலும் முழுமையாக லெனின் கூறியதை வார்த்தைக்கு வார்த்தை அப்படியே அவர் எழுதினார்: ரஷ்ய தாரளவாத பூர்சுவாசி புரட்சிக்கு எதிரானது ''அது அனைத்திலும் குறைவாக புரட்சியின் தலைவனாகவோ அல்லது உந்துசக்தியாகவோ இருக்க முடியாது. அது புரட்சியின் சபதம் எடுத்த எதிரியாகும். அதற்கெதிராக ஒரு விடாப்பிடியான போராட்டம் நடத்தப்பட வேண்டும்'' எவ்வாறாயினும் திட்டவட்டமாக இந்த அடிப்படைப் பிரச்சனையிலேயே ஸ்ராலின் அடுத்த பத்து வருடங்களில் உருவம், குணம் ஆகியவற்றில் முழுமையான மாறுதலினூடாக கீழ்ச்சென்று அடுத்த பத்தாண்டுகளில் பெப்ரவரி 1917 புரட்சியை ஏற்கனவே தாராளவாத பூர்சுவா வர்க்கத்துடனான ஒரு கூட்டின் ஆதரவாளராக நின்று வாழ்த்தினார், இதற்கேற்றவாறு மென்ஷிவிக்குகளுடன் ஐக்கியப்பட்டு ஒரே கட்சியாகுவதில் மாவீரனாக இருந்தார். மார்க்சிச கேலிக்கூத்து என லெனினால் அழைக்கப்பட்ட ஸ்ராலினின் சுயாதீனமான கொள்கை வெளிநாடுகளிலிருந்த லெனினது வருகையால் மட்டுமே கடுமையாய் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. விவசாயியும் சோசலிசமும் மக்கள் விருப்பினர் (Populists) தொழிலாளர்களையும் விவசாயிகளையும் சோசலிசத்தின் சம அக்கறை கொண்டுள்ள ''உழைப்பாளி'' மற்றும் "சுரண்டப்படுபவர்" களாகவே கண்டனர். மார்க்சிஸ்டுகள் விவசாயிகளை குட்டி பூர்சுவா வர்க்கமாகவே கருதினர், அவர்கள் சட ரீதியாக அல்லது ஆன்ம ரீதியாக (Spiritually) ஒரு விவசாயியாக இல்லாதிருக்கும் அளவிற்கு மட்டுமே ஒரு சோசலிஸ்டாக மாறும் திறனுடையவர் எனக்கருதினர், அவர்களுக்கே உரிய சிறப்பான சுயமனோபாவத்துடன் மக்கள் விருப்பினர் (Populists) இந்த சமூகவியல் பண்பிட்டுக்காட்டலை விவசாயிக்கு எதிரான ஒரு ஒழுக்க குறைபாடாக கண்டனர். இந்த வழியில் இரண்டு தலைமுறைகளுக்கு ரஷ்யாவில் புரட்சிகர போக்குகளுக்கு இடையிலான பிரதான போராட்டம் நடந்தது. ஸ்ராலினிசத்திற்கும் ட்ரொட்ஸ்கிசத்திற்கும் இடையிலான பின்வருகின்ற சச்சரவுகளைப் புரிந்து கொள்வதற்கு மார்க்சிசத்தின் முழு மரபுடன் இசைவு உள்ளதாக, லெனின் விவசாயியைப் பாட்டாளி வர்க்கத்தின் ஒரு சோசலிசக் கூட்டாளியாக ஒரு போதுமே கருதியதில்லை என்பதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்துவது அவசியமாகும், அதற்கு நேர்மாறாக ரஷ்யாவில் சோசலிசப் புரட்சியின் சாத்தியமின்மை திட்டவட்டமாக விவசாயிகளின் மிகப் பிரம்மாண்டமான மிதமிஞ்சிய எண்ணிக்கையிலிருந்து அவரால் கணிக்கப்பட்டது. இந்தக் கருத்து விவசாயப் பிரச்சனையை நேரடியாகவோ மறைமுகமாகவோ தொட்ட அவரது அனைத்துக் கட்டுரைகளிலும் ஓடுகின்றது. லெனின் 1905-ல் செப்டம்பரில் எழுதினார், ''நாம் விவசாய இயக்கத்தை ஆதரிக்கிறோம், அது ஒரு புரட்சிகர ஜனநாயக இயக்கமாக இருக்கும் அளவிற்கே. அதனுடன் நாம் ஒரு போராட்டத்துக்கு (இப்பொழுதே உடனடியாக) தயார் செய்கிறோம், அது ஒரு பிற்போக்கான பாட்டாளி வர்க்க விரோத இயக்கமாக முன்வரும் அளவிற்கேயாகும், இந்த இரட்டிப்பான பணியிலேயே மார்க்சிசத்தின் முழு சாராம்சமும் இருக்கிறது. ''லெனின் மேற்கத்திய பாட்டாளி வர்க்கத்தையும¢ ஒரு குறிப்பிட்ட அளவிற்கு ரஷ்ய கிராமத்திலுள்ள அரைப் பாட்டாளி வர்க்கத்தையும் சோசலிசக் கூட்டாளியாகப் பார்த்தார், ஆனால் விவசாயிகள் ஒட்டு மொத்தமாகவும் ஒருபோதும் அவ்வாறாகப் பார்க்கவில்லை. ''தொடக்கத்திலிருந்து இறுதி முடிவுவரை அபகரித்தல் வரையிலான அனைத்து நடவடிக்கைள் மூலமும் ஆதரவளிக்கின்றோம்,'' அவர் அவருக்கே உரித்தான சிறப்பான வலியுறுத்தலுடன் திரும்பக் கூறினார், நில உடைமையாளருக்கு எதிராக விவசாயியை பொதுவாகவும், பின்பு (பின்பு கூட அல்ல ஆனால் அதே நேரத்தில்) நாம் பாட்டாளி வர்க்கத்தை பொதுவாக விவசாயிக்கு எதிராக ஆதரிக்கின்றோம்." அவர் 1906- மார்ச்சில் எழுதினார், ''விவசாயிகள் பூர்சுவா ஜனநாயகப் புரட்சியில் வெற்றியடைவதுடன், அவர்கள் தமது புரட்சிகர உணர்வை விவசாயிகளாக முழுமையாக இழந்துவிடுவார்கள், பாட்டாளி வர்க்கம் பூர்சுவா ஜனநாயகப் புரட்சியில் வெற்றியடைவதுடன் அதன் உண்மையான சோசலிச புரட்சிகர உணர்வை ஒரு உண்மையான வழியில் வெளிப்படுத்தும்.'' அதே வருடம் மேமாதம் அவர் திரும்பக் கூறினார், ''விவசாயிகளின் இயக்கம் ஒரு வேறுபட்ட வர்க்கத்தின் இயக்கமாகும். இது முதலாளித்துவத்தின் அடித்தளங்களுக்கு எதிரான போராட்டமல்ல, ஆனால் பண்ணை அடிமைத்தனத்தின் அனைத்து மிச்ச சொச்சங்களையும் அழிப்பதற்கான போராட்டமாகும். இந்தக் கருத்தோட்டத்தை லெனினின் கட்டுரைக்கு கட்டுரை, வருடத்திற்கு வருடம், தொகுதிக்குத் தொகுதியாக தொடர்ந்து காணமுடியும். மொழியும் உதாரணங்களும் வேறுபட்டாலும் அடிப்படைச் சிந்தனை ஒரே மாதிரியாகவே இருக்கிறது. வேறுவிதமாக அது இருந்திருக்க முடியாது. லெனின் விவசாயிகளை ஒரு சோசலிச கூட்டாளியாய் பார்த்திருப்பாராயின் புரட்சியின் பூர்சுவா தன்மைபற்றி வலியுறுத்தவோ, அதைப் ''பாட்டாளி விவசாயிகள் சர்வாதிகாரத்துக்கு'' தூய்மையான ஜனநாயகப் பணிகளுக்காக வரையறுக்கவோ சிறிதளவேனும் இடமில்லாதிருந்திருக்கும். அப்படியான சம்பவங்களில் லெனின் இந்நூலின் ஆசிரியரை விவசாயிகளைக் "குறைத்து மதிப்பிடுவதாகக்" குற்றம் சாட்டியபோது அவருடைய சிந்தனையில் இருந்தது நான் விவசாயிகளின் சோசலிசப் போக்குகளை சிறிதளவேனும் அங்கீகரிக்கவில்லை என்பதல்ல, ஆனால் அதற்கு மாறாக லெனினின் கண்ணோட்டப்படி விவசாயிகளின் பூர்சுவா ஜனநாயக சுதந்திரத்தை, அதன் சொந்த ஆட்சியை உருவாக்க அதற்குள்ள திறனை மற்றும் அதன் மூலமாக பாட்டாளி வர்க்கத்தின் சோசலிச சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதை தடுப்பதான இவற்றை போதுமான அளவு நான் உணரத் தவறியதையே ஆகும். இப்பிரச்சனையை மீண்டும் மதிப்பீடு செய்தல் தேர்மிடோரியன் பிற்போக்கு வருடங்களில் மட்டுமே ஆரம்பிக்கப்பட்டது. அதன் ஆரம்பம் சுமாராக லெனின் நோய்வாய்ப்படல் மற்றும் மரணத்துடன் ஒரே சமயத்தில் நேரிட்டது. அன்று முதல் ரஷ்ய தொழிலாளர்கள் விவசாயிகளின் கூட்டு அதனுள்ளும் அதிலேயேயும் மீண்டும் முதலாளித்துவ மறுநிர்மாணம் நிலை நாட்டுப்படும் அபாயங்களுக்கு எதிரான ஒரு போதுமான உத்திரவாதம் எனவும் சோவியத் யூனியனின் எல்லைகளுக்குள் சோசலிசத்தை அடையமுடியும் எனும் மாறுபாடில்லாத உறுதியைக் கொண்டுள்ளதாகக் கூறப்பட்டது. சர்வதேச புரட்சித் தத்துவத்தைத் "தனி ஒரு நாட்டில் சோசலிசம்" எனும் தத்துவத்தினால் பிரதியீடு செய்வதன் மூலம் ஸ்ராலின் விவசாயி பற்றிய மார்க்சிச மதிப்பீட்டை "ட்ரொட்ஸ்கிசம்" என்று அழைக்கத் தொடங்கினார், மேலும் அதிகமாக தற்போதைய நிலைமைக்கு தொடர்புடையதாக மட்டுமின்றி கடந்த காலத்துடனும் முழுமையாகத் தொடர்புடையதாக பெயர் சூட்டினார். விவசாயி பற்றிய மிகச் சிறந்த மார்க்சிச கண்ணோட்டம் தவறானதென நிரூபிக்கப்பட்டதா இல்லையா என்பது பற்றிய கேள்வியை எழுப்புவது உண்மையிலேயே மதிப்புரையின் வரையறைக்கு நீண்ட தூரத்திற்கு அப்பால் எம்மை இட்டுச்செல்லும். மார்க்சிசம் விவசாயிகள் பற்றிய மதிப்பீட்டில் அது முழுமையான மாறா நிலையான தன்மையுடைய சோசலிசமற்ற வர்க்கமென ஒரு போதும் சூட்டப்படவில்லை. விவசாயிகள் எடைபோடும் ஆற்றல் கொண்டிருப்பது போல முன்கூட்டி எடைபோடும் ஆற்றலுடையராகவும் இருக்கின்றனர் என்று நீண்டகாலத்திற்கு முன்னரே மார்க்ஸ் கூறியிருக்கிறார். மாறும் நிலைமைகளில் விவசாயிகளின் தன்மையும் மாறுகிறது. பாட்டாளி வர்க்க சர்வாதிகார ஆட்சி விவசாயிகளின் மீது செல்வாக்கு செலுத்துவதுடன் அதனை மீண்டும் கல்வியூட்டுவதற்கான மிகப்பரந்த சாத்தியங்களைத் திறந்து விடும். இப்படியான சாத்தியங்களின் வரையறைகள் வரலாற்றில் இன்னும் காலி செய்யப்படவில்லை. எவ்வாறாயினும் அது ஏற்கனவே தெளிவாகியுள்ளது போல், சோவியத் யூனியனுள் அரச அதிகாரத்தின் வளர்ச்சியடையும் பாங்கானது நரோத்னிக்குகளிலிருந்து ரஷ்ய மார்க்சிஸ்டுகளை வேறுபடுத்தி விவசாயியை நோக்கிய கருத்தை தவறென நிரூபிக்காமல் ஆனால் அடிப்படையில் உறுதி செய்தது. எவ்வாறாயினும் புதிய ஆட்சியின் இருபது வருடங்களுக்குப் பின்பு இன்று இது சம்பந்தமான நிலைமை எதுவாக இருப்பினும் அது அக்டோபர் புரட்சிக்கு முந்தைய, அல்லது இன்னும் சொல்லப்போனால் 1924க்கு முந்தைய உண்மையே தொடர்ந்து இருக்கின்றது, மார்க்சிச முகாமில் ஒருவர் என்றாலும், எல்லாவற்றிற்கும் மேலாக லெனின் தானும் விவசாயிகளில் ஒரு சோசலிச வளர்ச்சிக்கான காரணியைப் பார்க்கவில்லை. மேற்கில் உள்ள பாட்டாளி வர்க்கப் புரட்சியின் உதவியில்லாதிருப்பின் ரஷ்யாவில் மீண்டும் முதலாளித்துவ மறுநிர்மாணம் தவிர்க்க முடியாதது என லெனின் திரும்பத் திரும்ப கூறினார். அவர் தவறாக எடை போடவில்லை: ஸ்ராலினிச அதிகாரத்துவம் என்பது முதலாளித்துவ மீட்சியின் முதற்கட்டத்தை தவிர வேறெதுவுமில்லை. ட்ரொட்ஸ்கியின் கருத்து மேலே நாம் ரஷ்ய சமூக ஜனநாயகத்தின் இரண்டு அடிப்படை பிரிவுகளின் (கன்னைகளின்) மாறுபட்ட அம்சங்களை ஆய்வு செய்தோம். ஆனால் அவற்றிற்கு பக்கமாக, ஆரம்பத்திலேயே முதலாவது புரட்சியின் விடியலாக ஒரு மூன்றாவது நிலைப்பாடு உருவாக்கப்பட்டது, அது அன்றைய நாட்களில் நடைமுறையில் எந்த அங்கீகாரத்தையும் பெறவில்லை. ஆனால் அதை நாம் விளக்கியாக வேண்டும் என்பது 1917-ன் சம்பவங்களினால் அது உறுதிப்படுத்தப்பட்டது என்பதன் காரணமாக மட்டுமல்லாமல், மாறாக குறிப்பாக அக்டோபர் புரட்சியின் ஏழு வருடங்களின் பின்பு, இக்கருத்துரு தலைகீழாக மாற்றப்பட்ட பின், ஸ்ராலின் மற்றும் முழு சோவியத் அதிகாரத்துவத்தின் அரசியல் பரிணாமத்தில் அப்பட்டமாக முன்னொருபோதும் கண்டிராத ஒரு பங்கை வகிக்க ஆரம்பித்ததன் காரணமாக ஆகும். 1905-ன் ஆரம்பத்தில் ட்ரொட்ஸ¢கியின் ஒரு சிறு வெளியீடு ஜெனிவாவில் விநியோகிக்கப்பட்டது. அச்சிறு வெளியீடு அரசியல் நிலையை அது 1904-ன் குளிர்காலத்தில் விரிந்தவாறாக ஆய்வு செய்தது. தாராளவாதிகளின் சுயேச்சையான விண்ணப்ப பிரச்சாரங்களும் விருந்துப் பேச்சு பிரச்சாரங்களும் அதன் அனைத்து சாத்தியங்களையும் காலி செய்துவிட்டன என்று நான் முடிவுக்கு வந்தேன்: தாராளவாதிகள் மீது நம்பிக்கைகளை வைத்திருந்த தீவிரவாத அறிவுஜீவிகள் முன் சொன்னவர்களுடன் சேர்ந்து ஒரு முட்டுச் சந்துக்கு வந்துள்ளனர்; அதாவது விவசாய இயக்கம் வெற்றிக்கான சாதகமான நிலைமைகளை உருவாக்குகின்றது, ஆனால் அதை உறுதி செய்ய திறனற்றிருப்பினும்; அதனால் பாட்டாளி வர்க்கத்தின் ஆயுத எழுச்சியின் மூலம் மட்டுமே அந்த முடிவை அடைய முடியும்; அதாவது இந்தப் பாதையின் அடுத்த கட்டம் பொது வேலை நிறுத்தமாக கட்டாயம் இருக்கும். ''ஜனவரி ஒன்பதுவரை'' என அந்தச் சிறு வெளியீடு தலைப்பிடப்பட்டிருந்தது; ஏனெனில் இது பீட்டர்ஸ்பேர்க்கில் இரத்த ஞாயிறுக்கு முன் எழுதப்பட்டிருந்தது. அந்நாளில் ஆரம்பித்த சக்தி வாய்ந்த வேலைநிறுத்தங்களின் அலை, அதற்குப் பிற்சேர்க்கையாக வந்த முதலாவது ஆயுத மோதல்களுடன் சேர்ந்து வந்தது இச்சிறு வெளியீட்டின் மூலோபாய முன்னாய்வை சந்தேகத்திற்கிடமில்லாமல் ஊர்ஜிதம் செய்தது. என்னுடைய இந்த வேலைக்கான முன்னுரை பார்வஸ் (Parvus) இனால் எழுதப்பட்டது. அவர் வெளிநாட்டுக்கு குடிபெயர்ந்த ஒரு ரஷ்யர் ஆவார். அவர் அப்போது ஒரு பிரபலமான ஜேர்மன் எழுத்தாளராக மாறுவதில் வெற்றிகண்டிருந்தார். ஏனையோரின் கருத்துக்களினால் பாதிப்படையக் கூடியவரும், அதே போல் தனது கருத்துக்களினால் ஏனையோரை வளமாக்கக்கூடிய திறமையுள்ள ஒரு அசாதரணமான படைப்பாற்றல் மிக்க தனிப்பட்ட குணாம்சம் உடையவர். சிந்தனையாளராகவும், எழுத்தாளராகவும் அவருடைய திறமையின் மதிப்பு வாய்ந்ததான பங்களிப்பை தொழிலாளர் இயக்கத்துக்கு தருவதற்கான வேலையில் போதுமான பற்றுதலும் உள் சமநிலையும் அவரிடம் இல்லாமலிருந்தது. எனது தனிப்பட்ட வளர்ச்சியில் அவர் ஐயத்திற்கிடமற்ற செல்வாக்கை செலுத்தினார். சிறப்பாக நமது சகாப்தத்தின் சமூக புரட்சிகர விளக்கம் சம்பந்தமாகவும் எமது முதல் சந்திப்பிற்கு ஒரு சில வருடங்களுக்கு முன்பு பார்வஸ் ஜேர்மனியில் ஒரு பொது வேலைநிறுத்தம் பற்றிய கருத்தை உணர்ச்சி ததும்பும் வகையில் பேணினார்; ஆனால் அந்த நாடு அப்பொழுது நீண்ட தொழில்துறை செழுமைக்கூடாக கடந்து சென்றுகொண்டிருந்தது. சமூக ஜனநாயகம் ஹோஹென்சொலேர்ன் (பிஷீலீமீஸீக்ஷ்ஷீறீறீமீக்ஷீஸீ) இன் ஆட்சிக்கு அதனை ஒத்துப்போகச் செய்தது. ஒரு வெளிநாட்டவரின் புரட்சிகரப் பிரச்சாரம் எதிர்மறை அர்த்தத்தில் தரக்கூடிய அலட்சியத்தைத் தவிர வேறெதையும் எதிர்கொள்ளவில்லை. பீட்டர்ஸ்பேர்க்கின் இரத்தம் தோய்ந்த சம்பவங்களுக்கு பின் இரண்டாவது நாளில் அப்போது கையெழுத்துப் பிரதியாயிருந்த எனது சிறு வெளியீட்டை வாசித்துவிட்டு, பங்காற்றவருமாறு அழைக்கப்பட்டிருந்த பின்தங்கிய ரஷ்யாவின் பாட்டாளி வர்க்கம் வகிக்க இருக்கும் பிரத்தியேகமான பங்கு பற்றிய கருத்தினால் பார்வஸ் ஆட்கொள்ளப்பட்டிருந்தார். மூனிச்சில் நாங்கள் செலவழித்த அந்த சில நாட்கள் கலந்துரையாடல்களால் நிரம்பப்பட்டிருந்தது. இந்த கலந்துரையாடல் கணிசமான அளவு இருவரையும் தெளிவுபடுத்தியதுடன் எங்களை தனிப்பட்ட ரீதியில் நெருக்கமாகக் கொண்டு வந்தது. அந்த சிறு வெளியீட்டுக்கு அந்த சமயத்தில் பார்வஸ் எழுதிய முன்னுரை ரஷ்யப் புரட்சியின் வரலாற்றினுள் நிரந்தரமாக உட்புகுந்திருந்தது. ஒரு சில பக்கங்களில் அவரால் வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்ட பின்தங்கிய ரஷ்யாவின் அந்த சமூகச் சிறப்பியல்புகளை, அவை ஏற்கனவே நன்கு அறியப்பட்டவை என்பது உண்மையே ஆயினும், அவருக்கு முன்னர் அதிலிருந்து எவருமே அனைத்து அவசியமான அனுமானிப்புக்களையும் பெற்றிருந்ததில்லை. பார்வஸ் எழுதினார்: ''ஒவ்வொருவரும் அறிந்தவாறு, மேற்கு ஐரோப்பா முழுவதும் அரசியல் தீவிரவாதம் பிரதானமாக குட்டி பூர்சுவா வர்க்கத்திலேயே தங்கி இருந்தது. இவர்கள் கைவினைஞர்களாக இருந்தனர் மற்றும் பொதுவாக பூர்சுவா வர்க்கத்தின் அந்தப் பகுதி அனைத்தும் தொழில்துறை வளர்ச்சியினால் இடையிட்டுத் தடுக்கப்பட்டது ஆனால் அதே சமயம் முதலாளித்துவ வர்க்கத்தினால் ஒதுக்கித்தள்ளப்பட்டது. முதலாளித்துவத்துக்கு முந்தைய கால கட்ட ரஷ்யாவில், மாநகரங்கள் ஐரோப்பிய மாதிரியைவிட அதிகமாக சீன மாதிரியிலேயே வளர்ச்சி அடைந்தன. இவைகள் சிறிதளவேனும் அரசியல் முக்கியத்துவமில்லாது, முற்றிலும் உத்தியோக மற்றும் அதிகாரத்துவ பண்பில், நிர்வாக மையங்களாக இருந்தன, அதேவேளை பொருளாதார அர்த்தத்தில், நிலப்பிரபுவுக்கும் விவசாயக் குழுக்களுக்குமாக சுற்றுப் புறங்களைக் கொண்ட வர்த்தக மையங்களாக இருந்தன. உலக வர்த்தகத்தின் மையங்கள் மற்றும் ஆலை நகரங்கள் போன்ற அதன் சொந்த மாதிரியில் பெரும் நகரங்களை உருவாக்கத் தொடங்கிய முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கினால் அது நிறுத்தப்பட்டபோது அவற்றின் வளர்ச்சி இன்னும் மிகவும் முக்கியமற்றதாக இருந்தது. குட்டி பூர்சுவா ஜனநாயகத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருந்த அதே விஷயம் ரஷ்யாவில் பாட்டாளி வர்க்கத்தின் வர்க்க நனவுக்கு நன்மையளிக்கக் கூடியதாக சேவை செய்தது- குறிப்பாக கைவினை வடிவிலான உற்பத்தியின் பலவீனமான வளர்ச்சியாகும். பாட்டாளி வர்க்கம் உடனடியாக ஆலைகளில் செறிவாகத் திரண்டது..... விவசாயிகளின் ஜனத்திரள் இயக்கத்தினுள் மிக அதிகமாக ஈர்க்கப்படும். ஆனால் அவர்களால் செய்யமுடிவது எல்லாம் நாட்டுப்புறத்தில் ஏற்கனவே கட்டற்றுக் கிடந்த அரசியல் அராஜகத்தை அதிகரிக்கச்செய்வதாக இருக்கும் மற்றும் இவ்வாறு அரசாங்கத்தை பலவீனப்படுத்துவதாக இருந்தது; அவர்களால் இறுக்கமாக ஒன்றிணைக்கப்பட்ட ஒரு புரட்சிகர இராணுவமாக ஆகமுடியாது. அதனால், புரட்சி வளர்ச்சியடைகையில் பெரும் அளவு அரசியல் வேலை பாட்டாளி வர்க்கத்தின் பங்கிற்கே விழும். அதேநேரத்தில் அதன் அரசியல் விழிப்புணர்வு உயரும் மற்றும் அதன் அரசியல் சக்தி விரைவாய் வளர்ச்சியடையும். ''சமூக ஜனநாயகம் இந்தக் குழப்பமான நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்: ஒன்றில் இடைக்கால அரசாங்கத்திற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் அல்லது தொழிலாளர் இயக்கத்தில் இருந்து விலகி நிற்க வேண்டும். சமூக ஜனநாயகம் எப்படித்தான் தன்னை நடத்திக் கொண்டாலும் தொழிலாளர் இந்த அரசாங்கத்தை அவர்களது சொந்தமானதாகக் கருதுவார்கள். ரஷ்யாவில் புரட்சிகர எழுச்சியை தொழிலாளர்கள் மட்டுமே நிறைவேற்ற முடியும். ரஷ்யாவில் புரட்சிகர தற்காலிக அரசாங்கம் ஒரு தொழிலாளர் ஜனநாயகத்தின் அரசாங்கமாக இருக்கும். ரஷ்ய பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர இயக்கத்திற்கு சமூக ஜனநாயகம் தலைமை தாங்குமாயின், அப்பொழுது இந்த அரசாங்கம் சமூக ஜனநாயகமாக இருக்கும்..... சமூக ஜனநாயக இடைக்கால அரசாங்கம் ரஷ்யாவில் ஒரு சோசலிச கிளர்ச்சிஎழுச்சியை நிறைவேற்ற முடியாததாக இருக்கும், ஆனால் அதே நிகழ்ச்சிப்போக்கு ஏதேச்சதிகாரத்தை அழிக்கும், மற்றும் ஜனநாயக குடியரசை ஸ்தாபிக்கும் அது அதற்கு அரசியல் நடவடிக்கைக்கான ஒரு வளமான தளத்தை வழங்கும்.'' 1905 இலையுதிர் காலத்தில், சூடான புரட்சிகர சம்வங்களின்போது நான் மீண்டும் ஒருமுறை பார்வஸை இந்தத் தடவை பீட்டர்ஸ்பேர்க்கில் சந்தித்தேன். இரண்டு பிரிவுகளிலும் இருந்து அமைப்பு ரீதியாக சுயாதீனத்தை பேணிக்கொண்டிருக்கும்போது, நாங்கள் இணைந்து ருஸ்கோயே ஸ்லோவோ (Russkoye Slovo -The Russian Word) எனப்படும் பரந்த தொழிலாளர் பத்திரிகையை வெளியிட்டோம். அத்துடன் மென்ஷிவிக்குகளுடன் ஒரு கூட்டில் நகலோ (Nachalo -The Beginning) எனும் பெரிய அரசியல் செய்திப் பத்திரிகையை வெளியிட்டோம். நிரந்தரப் புரட்சி தத்துவம் ''பார்வஸ் மற்றும் ட்ரொட்ஸ்கி'' பெயர்களுடன் வழக்கமாக பிணைக்கப்பட்டிருந்தது, இதன் ஒரு பகுதி மட்டுமே சரியானதாகும். பார்வஸின் புரட்சிகர உச்சக்கட்ட காலம், அவர் ''திரித்தல்வாதம்'' என அழைக்கப்பட்ட, அதாவது மார்க்சின் தத்துவத்தை சந்தர்ப்பவாத ரீதியாக திரித்துக் கூறலுக்கு எதிரான போராட்டத்தின் முன்னணியில் நடைபோட்ட காலமாகும், கடந்த நூற்றாண்டின் இறுதிப் பகுதிக்குரியதாகும். ஜேர்மன் சமூக ஜனநாயகத்தை மிக உறுதியான கொள்கைகளை கொண்ட பாதையில் தள்ளுவதற்கு எடுத்த அவரது அனைத்து முயற்சிகளின் தோல்வியால் அவரின் வெற்றியில் கொண்ட திடநம்பிக்கையை பலவீனப்படுத்தியது. மேற்கில் சோசலிசப் புரட்சி முன்னோக்கு பற்றிய கருத்துக்களைக் காட்டிக்கொள்ள பார்வஸ் மேலும் மேலும் தயக்கம் கொண்டார். அதே நேரத்தில் அவர் ''சமூக ஜனநாயக இடைக்கால அரசாங்கம் ரஷ்யாவில் ஒரு சோசலிச கிளர்ச்சி எழுச்சியை நிறைவேற்ற முடியாது என உணர்ந்தார்." ஆதலால் அவரது முன்னாய்வுகள், ஜனநாயகப் புரட்சி சோசலிசப் புரட்சியாக மாற்றமடைவதை அல்லாது, ஆனால் ரஷ்யாவில் ஒரு தொழிலாளர் ஜனநாயக அரசாங்கத்தை கிட்டத்தட்ட ஆஸ்திரேலியா மாதிரியில் ஸ்தாபிப்பதை மட்டுமே சுட்டிக்காட்டியது, அங்கே விவசாயிகள் முறையிலான அடிப்படையில், முதல் தடவையாக, ஒரு பூர்சுவா ஆட்சியின் மட்டுப்பாடுகளுக்கு அப்பால் செல்லாத ஒரு தொழிற்கட்சி அரசாங்கமாக உதித்தது. அந்த முடிவை நான் பகிர்ந்து கொள்ளவில்லை. ஆஸ்திரேலிய ஜனநாயகம் ஒரு புதிய கண்டத்தின் கன்னி நிலத்தின் மீது உறுப்புரீதியாக பக்குவமடைந்தது. அது உடனடியாகவே ஒரு பழமைவாத தன்மையை பெற்றுக்கொண்டதுடன் ஒரு இளமையான ஆனால் மிகவும் சலுகைமிக்க பாட்டாளி வர்க்கத்தை தனக்கு கீழ்ப்படியச் செய்தது. அதற்கு மாறாக, ரஷ்ய ஜனநாயகம், ஒரு பிரம்மாண்டமான புரட்சிகர கிளர்ச்சி எழுச்சியின் விளைவாக மட்டும்தான் தோன்ற முடியும்; அதன் பரிமாணம் தொழிலாளர் அரசாங்கத்தை பூர்சுவா ஜனநாயகம் என்ற கட்டமைப்பிற்குள் தொடர்ந்து பேணிக்கொள்வதற்கு ஒருபோதும் அனுமதிக்காது. நமது கருத்து வேறுபாடுகள் 1905-ல் புரட்சிக்குப் பின்னர் குறுகிய காலப்பகுதியிலேயே தொடங்கியது, அது யுத்தத்தின் ஆரம்பத்திலேயே நமக்கு இடையில் முழுமையான முறிவிற்கு இட்டுச்சென்றது. பார்வஸ் தன்னில் உள்ள ஐயுறவாதி புரட்சியாளனை முழுமையாக கொன்றிருந்தது, அது ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் பக்கமாக, பிற்பாடு ஜேர்மன் குடியரசின் முதலாவது ஜனாதிபதியான எபேர்ட்டின் ஆலோசகராகவும் ஊக்கமளிப்பவராகவும் அவர் மாறியதில் நிரூபிக்கப்பட இருந்தது. ''ஜனவரி ஒன்பது வரைக்கும்'' எனும் எனது சிறு வெளியீட்டை எழுதிய பின்னர், நான் திரும்பத் திரும்ப நிரந்தரப் புரட்சி தத்துவத்தை வளர்க்கவும் அதனை மெய்ப்பிப்பதற்கான அடிப்படையை அமைக்கவும் திரும்பினேன். இத் தத்துவம், பின்னர் இந்த சரிதைநாயகனின் சித்தாந்த பரிணாமத்தில் பெறப்பட்டதன் முக்கியத்துவத்தின் கண்ணோட்டத்தில், இங்கே 1905-1906ம் வருடங்களினது எனது படைப்புக்களிலிருந்து துல்லியமான மேற்கோள்கள் வடிவத்தில் சமர்ப்பிப்பது அவசியமானதாகும். ''சமகாலத்திய மாநகர் ஒன்றில் உள்ள மக்கட் தொகையின் கருவானது -குறைந்த பட்சம் பொருளாதார மற்றும் அரசியல் முக்கியத்துவம் உள்ள மாநகர்களில்- கூலிக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்களின் கூர்மையாக வேறுபடுத்தப்பட்ட வர்க்கம் ஆகும். திட்டவட்டமாக இந்த வர்க்கம் முக்கியமாக மாபெரும் பிரெஞ்சுப் புரட்சியின் போது தெரியாததாக இருந்தது, எமது புரட்சியில் தீர்க்கமான பங்கு வகிக்க முன்னரேயே தீர்மானிக்கப்பட்டதாக இருக்கிறது.... பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய ஒரு நாட்டில் பாட்டாளி வர்க்கம் ஒரு வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ நாட்டைவிட சீக்கிரமாக ஆட்சிக்கு வரமுடியும். ஒரு நாட்டின் தொழில் நுட்ப சக்திகளிலும் சாதனங்களிலும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் தானாகவே தங்கியிருக்கும் என்ற வகையிலான கருத்துரு, மிகவும் எளிதாகக்கப்பட்ட 'பொருளாதார' சடவாதத்திலிருந்து பெறப்பட்ட ஒரு தப்பெண்ணமாகும். அப்படியான ஒரு கண்ணோட்டம் மார்க்சிசத்துடன் பொதுவானதாக எதையும் கொண்டிருக்கவில்லை.... அமெரிக்க ஐக்கிய அரசுகளின் தொழிற்துறை உற்பத்தி சக்திகள் எம்மிலும் பார்க்க பத்து மடங்கு உயர்வானதாக இருந்த பொழுதிலும், ரஷ்யப் பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் பங்கு, அதன் சொந்த நாட்டின் அரசியலில் அதன் செல்வாக்கு, உலக அரசியலில் அதற்கு வந்து கொண்டிருக்கும் செல்வாக்கின் சாத்தியம், அமெரிக்க பாட்டாளி வர்க்கத்தின் பங்கு மற்றும் முக்கியத்துவம் இவற்றையும் விட ஒப்பிட முடியாத அளவு உயர்வானதாகும்...... "ரஷ்ய புரட்சி, பூர்சுவா தாராளவாதத்தின் அரசியல்வாதிகள் 'அவர்களது இராஜதந்திர மேதாவித்தன்மையை முழுமையாக வளர்ச்சியடையச் செய்வதற்கு சாத்தியத்தைக் கண்டுகொள்ளும் முன்பு பாட்டாளி வர்க்கத்தின் கைகளுக்குள் ஆட்சி (புரட்சியின் வெற்றியில், கட்டாயமாக) கைமாறிச் செல்லும் நிலைமைகளை உருவாக்குமென எனக்கு தோன்றுகின்கிறது. ரஷ்ய பூர்சுவா வர்க்கம் அனைத்துப் புரட்சிகர நிலைப்பாட்டையும் பாட்டாளி வர்க்கத்திடம் விட்டுவிடுகின்றது. அதேபோல் அது விவசாயிகளின் மீதான புரட்சிகர தலைமையேற்று நடத்தும் திறனையும் விட்டுவிட வேண்டும். ஆட்சிஅதிகாரத்தில் உள்ள பாட்டாளி வர்க்கம் விவசாயிகளுக்கு ஒரு விடுவிக்கும் வர்க்கமாக வரும். விவசாயிகளின் மீது பரிவு கொண்டு, கிராமப்புறங்களின் கலாச்சார மட்டத்தை உயர்த்துவதற்காகவும் விவசாயிகளின் அரசியல் நனவை வளர்ப்பதற்காகவும் பாட்டாளி வர்க்கம் அனைத்து சக்திகளையும் செயல்பாட்டில் இறக்கும்......... "ஆனால் ஒருவேளை பாட்டாளி வர்க்கத்தை விவசாய வர்க்கம் அதுவாகவே கும்பலாகக்கூடி அதன் இடத்தை நிரப்புமா? இது அசாத்தியமானது. அனைத்து வரலாற்று அனுபவமும் இந்த துணிவை மறுதலிக்கின்றன. அது விவசாயி ஒரு சுயாதீனமான அரசியல் பாத்திரம் வகிப்பதற்கு முழுமையாகத் திறனற்றவர் என்பதை காட்டுகின்றன. நாம் எப்படி 'பாட்டாளிகளின், விவசாயிகளின் சர்வாதிகாரம்' எனும் கருத்தை நோக்குகிறோம் என்பது முன்பு சொல்லப்பட்டதிலிருந்து தெளிவாகிறது. விஷயத்தின் சாராம்சம் அதனை நான் கோட்பாட்டளவில் அனுமதிக்க கூடியதாக கருதுகிறேனா இல்லையா என்பது அல்ல, இந்த வடிவிலான அரசியல் ஒத்துழைப்பை நான் 'விரும்புகிறேனா' அல்லது 'விரும்பவில்லையா' என்பது அல்ல. நான் அதை அடைய முடியாது எனக் கருதுகிறேன் - குறைந்த பட்சம் நேரடி மற்றும் உடனடி அர்த்தத்தில். ''பூர்சுவா புரட்சிக்கும் மேலாகக் தாண்டி சென்றது'' என இங்கே விளக்கப்பட்ட கருத்துரு, பின்னர் முடிவின்றி திரும்ப திரும்பக் கூறப்பட்டு வருகின்றதால், அந்த வலியுறுத்தல் எவ்வளவு தவறானது என்பதை முன்னே குறிப்பிட்டது ஏற்கனவே காட்டுகின்றது. அந்த சமயம் நான் எழுதினேன், ''ரஷ்யாவின் ஜனநாயகப் புனர்நிர்மாணத்திற்கான போராட்டமானது, முதலாளித்துவத்தினின்று முழுமையாக பெறப்பட்டதில், பூர்சுவா அடிப்படையில் வெளிப்படும் சக்திகளால் நடத்தப்படுவதுடன், முதலாளித்துவ சமுதாயத்தின் வளர்ச்சிப் பாதையில் உள்ள நிலப்பிரபுத்துவ அடிமைத்தடைகளுக்கு எதிராக உடனடியாக, எல்லாவற்றுக்கும் முதலிடத்தில் குறிவைக்கப்படுகிறது. ஆனால் கேள்வியின் சாராம்சம் இப்படியான தடைகள் எந்த சக்திகளால், எப்படியான வழிமுறைகள் மூலம் வெல்லப்பட முடியும் என்பதாக இருந்தது. புரட்சியின் அனைத்துக் கேள்விகளின் கட்டமைப்பு, புரட்சி அதன் புறநிலையான குறிக்கோள்களில் பூர்சுவா என வலியுறுத்துவதன் மூலம் மட்டுப்படுத்தப்படலாம், மற்றும் அதன் விளைவாக அதன் தவிர்க்கமுடியாத விளைவுகள் அனைத்திலும், அதேநேரத்தில் அந்த பூர்சுவா புரட்சியின் பிரதான செயலூக்கமான சக்தி பாட்டாளி வர்க்கம்தான், அது புரட்சியின் அனைத்துப் பாதிப்புக்களுடனும் தன்னையே ஆட்சி அதிகாரத்திற்கு தள்ளிக்கொள்ளும் என்ற உண்மைக்கு ஒருவர் கண்களை மூடிக்கொள்வது சாத்தியமானதே ஆகும்..... ஒரு சோசலிச பொருளாதாரத்துக்கு ரஷ்யாவின் சமூக நிலைமைகள் பக்குவமடையவில்லை என்ற சிந்தனையுடன் ஒருவர் தன்னையே திருப்திப்படுத்திக் கொள்ளலாம். அத்துடன் நீங்கள் பாட்டாளி வர்க்கம் ஒருமுறை ஆட்சிக்கு வருமாயின் அதன் சூழ்நிலைமையின் அனைத்து தர்க்கத்துடனும், அரசினால் செயல்படுத்தப்படும் ஒரு பொருளாதாரத்தை அறிமுகப்படுத்த தவிர்க்க முடியாதபடி நிர்பந்திக்கப்படும் எனும் உண்மையை எண்ணிப் பார்ப்பதைப் புறக்கணிக்கலாம்...... அரசாங்கத்தினுள் உதவியற்ற பிணைக் கைதிகளாக அல்லாமல், ஒரு தலைமைதாங்கும் சக்தியாக நுழையும் பாட்டாளி வர்க்கத்தின் பிரதிநிதிகள் அந்த நடவடிக்கையினாலேயே குறைந்த பட்ச மற்றும் அதிகபட்ச வேலைத் திட்டத்துக்கு இடையிலான எல்லைக் கோட்டை அழிப்பர், அதாவது நாளின் நடப்பாக கூட்டாண்மை (Collectivism) இடம்பெறும். இந்தத் திசையில் பாட்டாளி வர்ககம் எந்த கட்டத்தில் நிறுத்தப்படும் என்பது சக்திகளின் உறவுகளில் தங்கியிருக்கும் ஆனால் சிறிதும் பாட்டாளி வர்க்கத்தின் கட்சியின் ஆரம்ப உள்நோக்கங்களில் அல்ல...... "ஆனால் நம்மைநாமே ஏற்கனவே கேட்டிருக்கலாம்: இந்தப் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் தவிர்க்க முடியாதபடி பூர்சுவா புரட்சிக் கட்டமைப்புக்கு எதிராக தன்னைத்தானே கட்டாயம் சுக்குநூறாக்கிக்கொள்ள வேண்டுமா அல்லது அது தரப்பட்ட உலகில் நிலவும் வரலாற்று நிலைமையின் அடிப்படையில் இந்த வரையறுக்கப்பட்ட கட்டமைப்பை சுக்குநூறாக்குவதன் மூலம் வெற்றியின் முன்னோக்கில் முன்னேறாதா?.... ஒரு விஷயத்தை உறுதியாகக் கூறலாம்: ஐரோப்பிய பாட்டாளி வர்க்கத்தின் நேரடி அரசாங்க ஆதரவில்லாமல் ரஷ்ய தொழிலாள வர்க்கம் ஆட்சியில் நீடித்திருக்க முடியாது மற்றும் அதன் தற்காலிக ஆட்சியை ஒரு நீடித்த சோசலிச சர்வாதிகாரமாக மாற்ற முடியாது." இதிலிருந்து எவ்வாறாயினும் ஒரு நம்பிகையற்ற முன்னாய்வு கொஞ்சம் கூட ஊற்றெடுக்கவில்லை: ''ரஷ்ய தொழிலாள வர்க்கத்தினால் தலைமை தாங்கப்பட்ட விடுதலையானது, இந்த தலைவனை முன்னொருபோதும் இல்லாத வரலாற்று உச்சிக்கு உயர்த்தி பிரம்மாண்டமான சக்திகளையும் மூல வளங்களையும் மாற்றி அதை உலக ரீதியாக முதலாளித்துவத்தை அழிக்கும் ஆரம்ப கர்த்தாவாக ஆக்குகிறது, அதற்கு வரலாறு அனைத்து அவசியமான புறநிலையான முன்தேவைகளையும் உருவக்கியுள்ளது......" சர்வதேச சமூக ஜனநாயகம் அதன் புரட்சிகர பணியை பூர்த்தி செய்யும் திறனை நிரூபிக்கும் அளவு சம்பந்தமாக நான் 1906-ல் எழுதினேன்: ''ஐரோப்பிய சோசலிசக் கட்சிகள் எல்லாற்றிற்கும் மேலாக அவற்றுள் மிகவும் சக்தி வாய்ந்ததான ஜேர்மன் கட்சி ஒவ்வொன்றுமே அவற்றின் சொந்த பழமைவாதத்தை வகுத்துக் கொண்டுள்ளன. பெரும்பெரும் திரள்களாக மக்கள் சோசலிசத்துக்கு அணி திரளும்போது இந்த மக்களின் ஸ்தாபனம் மற்றும் ஒழுக்கம் ஆகியன வளர்ச்சியடையும் போது இந்த பழைமைவாதமும் அதேபோல் அதிகரித்தது. இதன் காரணமாக பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் அனுபவத்தை உட்பொதிந்திருக்கும் ஒரு அமைப்பாக சமூக ஜனநாயகம் ஒரு குறிப்பிட்ட கணத்தில் தொழிலாளர்களுக்கும் பூர்சுவா பிற்போக்கிற்கும் இடையிலான வெளிப்படையான மோதலின் பாதையில் ஒரு உடனடியான தடையாக வரலாம்....'' ''கிழக்கத்திய புரட்சி மேற்கத்திய பாட்டாளி வர்க்கத்தை புரட்சிகர சிந்தனாவாதம் மனதில் பதியும்படி செய்து, அதில் அதன் எதிரியுடன் 'ரஷ்யனில்' பேசுவதற்கான விருப்பத்தை உண்டாக்கும்..." என்ற உறுதியை வெளிப்படுத்துவதன் மூலம் எனது ஆய்வை முடிவுரைத்தேன். நாம் சுருக்கமாக பார்ப்போம், மக்கள் விருப்பவாதம் (Populism) ஸ்லாவோபைல்ஸ் (Slavophiles) எழுச்சியின் போது ரஷ்யாவின் வளர்ச்சி பற்றிய முற்றிலும் தனித்தன்மை வாய்ந்த பாதைகள் சம்பந்தமான பிரமைகளிலிருந்து தொடங்கி முதலாளித்துவத்தையும், முதலாளித்துவக் குடியரசையும் ஒரு புறம் தட்டிக்கழித்தது. பிளக்கனோவுடைய மார்க்சிசம் ரஷ்யாவின் மற்றும் மேற்கின் வரலாற்றுப் பாதைகளின் கோட்பாடு ரீதியான அடையாளத்தை நிரூபிப்பதில் கவனம் செலுத்தியது. இதிலிருந்து பெறப்பட்ட வேலைத்திட்டம் முழுமையாக உண்மையான, கொஞ்சம்கூட மர்மமில்லாத ரஷ்யாவின் சமூக அமைப்பின் தனித்தன்மைகளையும் அதன் புரட்சிகர வளர்ச்சிகளையும் புறக்கணித்தது. மென்ஷிவிக் நோக்கில் புரட்சி, அடுக்கடுக்கான படுகைகளாய் அமைந்த அதன் சம்பவங்களையும் மற்றும் தனிப்பட்ட வழிபிறழ்தல்களையும், நீக்கிப் பார்க்கும்போது பின்வருமாறு பொருள்படுத்தலாம்: ரஷ்ய முதலாளித்துவத்துவப் புரட்சியின் வெற்றி தாராண்மை முதலாளித்துவத்தின் தலைமையின் கீழேயே அடையக் கூடியதாகும் மற்றும் பிந்தையதை ஆட்சியதிகாரத்தில் கட்டாயம் வைக்கும். ஜனநாயக அரசாங்கம் அப்போது ரஷ்யப் பாட்டாளி வர்க்கத்தை சோசலிசத்திற்கான அதன் போராட்டப் பாதையில் இதுவரையில் இருந்ததைவிட ஒப்பிட முடியாத பெரும் வெற்றியுடன் அதன் மூத்த மேற்கத்திய சகோதரர்களை எட்டிப் பிடிக்க அனுமதிக்கும். லெனினது முன்னோக்கை பின்வருமாறு சுருக்கமாகத் தெரிவிக்கலாம்: பின்தங்கிய ரஷ்ய பூர்சுவா வர்க்கம் அதன் சொந்தப் புரட்சியை முடிவு வரை இட்டுச் செல்லத் திறனற்றது. ''பாட்டாளிகளின் விவசாயிகளின் ஜனநாயக சர்வாதிகாரத்தின் மூலமாக புரட்சியின் முழுமையான வெற்றி நாட்டின் மத்திய காலத்திற்குரிய நிலைமையை ஒழிப்பதுடன், ரஷ்ய முதலாளித்துவத்தின் வளர்ச்சியை அமெரிக்க வேகங்களில் முதலீடு செய்து, நகரிலும் நாட்டிலும் உள்ள பாட்டாளி வர்க்கத்தால் பலப்படுத்தி சோசலிசத்திற்கான போராட்டத்திற்குப் பரந்த சாத்தியங்களை திறந்துவிடும் மறுபுறத்தில் ரஷ்யப் புரட்சியின் வெற்றி மேற்கில் சோசலிசப் புரட்சிக்கு ஒரு சக்தி வாய்ந்த தூண்டுதலை வழங்கும். பின் கூறப்பட்டது, ரஷ்யாவை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவரப்படும் அபாயங்களில் இருந்து பாதுகாப்பளிப்பது மட்டுமல்லாமல் ரஷ்ய பாட்டாளி வர்க்கத்தை ஒரு ஒப்பீட்டளவில் ஒரு குறுகிய வரலாற்றுக் காலப்பகுதியில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முன்வரக் கூடியதாகவும் ஆக்கும். நிரந்தரப் புரட்சியின் முன்னோக்கை பின்வரும் வகையில் சுருக்கிக் கூறலாம்: ரஷ்யாவில் ஜனநாயகப் புரட்சியின் பூரண வெற்றி விவசாயிகளை ஆதாரமாகக்கொண்ட பாட்டாளி வர்க்க சர்வாதிகார வடிவத்தில் மட்டுமே எண்ணிப்பார்க்கக்கூடியது. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அது தப்பமுடியாதபடி நாளின் நடப்பாக ஜனநாயக் கடமைகளை மட்டுமல்லாமல் சோசலிசக் கடமைகளையும் முன்வைக்கும், அதேசமயம் அது சர்வதேச சோசலிசப் புரட்சிக்கும் ஒரு சக்திவாய்ந்த உந்துதலை வழங்கும். மேற்கில் பாட்டாளி வர்க்கத்தின் வெற்றி மட்டுமே ரஷ்யாவில் முதலாளித்துவம் மீண்டும் கொண்டுவரப்படுவதிலிருந்து பாதுகாத்து சோசலிச கட்டுமானத்தை அதன் பூரணப்படுதலுக்கு கொண்டு செல்வதற்கான சாத்தியத்தை உத்திரவாதம் செய்யும். இப்படியான நேர்த்தியான சூத்திரங்கள் நிகரான தெளிவுடன் வெளிப்படுத்துவதானது, கடைசி இரண்டு கருத்துருக்களின் ஒரே சீரான தன்மை தாராளவாத மென்ஷிவிக் முன்னோக்குடன் இணக்கம் காணமுடியாத வேறுபாட்டைக் கொண்டதாய் இருப்பதையும், அதேபோல் புரட்சியின் சமூகத் தன்மை மற்றும் புரட்சியிலிருந்து உருவாக வேண்டிய "சர்வாதிகாரத்தின்" பணிகள் பற்றிய பிரச்சனையில் ஒன்றிலிருந்து ஒன்று மிக அதிகமான முக்கியமான வேறுபாட்டைக் கொண்டதான இரண்டையுமாகும். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கான வேலைத்திட்டம் 1905-ல் ''காலத்துக்கு முதிராததாக" இருந்தது என்று இன்றைய மாஸ்கோ தத்துவார்த்தவாதிகளின் எழுத்துக்களில் அடிக்கடி திரும்பக் கூறப்படும் புகார் அதன் உள்ளடக்கத்தில் முழுமையற்றதாகும். அனுபவவாத ரீதியில் பாட்டாளிகளின் விவசாயிகளின் ஜனநாயக சர்வாதிகார வேலைத்திட்டம் அதே மாதிரி "காலத்தே முதிராதது" என நிரூபிக்கப்பட்டது. முதலாவது புரட்சியின் காலத்தில் சாதகமற்ற சக்திகளின் உறவு, பொதுவாக புரட்சியின் வெற்றி என்ற வகையில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை அந்த அளவுக்குத் தடுக்கவில்லை. அதே சமயம் அனைத்து புரட்சிகர குழுக்களும் ஒரு முழுமையான வெற்றிக்கான எதிர்பார்ப்புக்களுடன் தொடங்கின. அப்படியான ஒரு எதிர்பார்ப்பின்றி மிக உயர்ந்த புரட்சிகரப் போராட்டம் சாத்தியமற்றதாக இருந்திருக்கும். கருத்து வேறுபாடுகள் புரட்சியின் பொது முன்னோக்குகளையும் அவற்றிலிருந்து ஊற்றெடுக்கும் மூலோபாயத்தையும் சம்பந்தப்படுத்தியிருந்தது. மென்ஷிவிசத்தின் முன்னோக்கு அடியோடு தவறாக இருந்தது: அது பாட்டாளி வர்க்கத்துக்கு ஒரு முழுமையான தவறான பாதையை சுட்டிக்காட்டியது. போல்ஷிவிசத்தின் முன்னோக்கு பூர்த்தியற்றதாக இருந்தது: அது போராட்டத்தின் பொது திசையை சரியாக எடுத்துக் காட்டியது, ஆனால் அதன் கட்டங்களை தப்பாக வரையறுத்தது. போல்ஷிவிசத்தின் முன்னோக்கின் பற்றாக்குறை 1905-ல் வெளிப்படுத்தப்படவில்லை, ஏனென்றால் புரட்சி மேலும் வளர்ச்சியைப் பெறாததினால் மட்டுமேயாகும். ஆனால் 1917-ன் தொடக்கத்தில் லெனின் அவரது கட்சியின் மூத்த காரியாளர்களுக்கு எதிரான ஒரு நேரடிப் போராட்டத்தில் அந்த முன்னோக்கை மாற்ற நிர்பந்திக்கப்பட்டார். அரசியல் முன் ஆய்வு கணக்கியல் ரீதியாக அதே துல்லியத்தைக் கொண்டுள்ளதாக பாசாங்கு செய்ய முடியாது, அது பொதுவான வளர்ச்சிப் பாதை சம்பந்தமாக சரியாக சுட்டிக்காட்டி ஒருவரை ஒன்றில் வலதுக்கோ, இடதுக்கோ தவிர்க்க முடியாதபடி மாற்றும் அடிப்படைப் பாதையைக் கொண்ட உண்மையான நிகழ்வுப் போக்குகளில் வழிநடத்த உதவி செய்யுமாயின், அது திருப்தியானதாகும். இந்த அர்த்தத்தில் வரலாற்று சோதனையில் நிரந்தரப் புரட்சி பற்றிய கருத்துரு முழுமையாகத் தேறியது என பார்க்காமல் விடுவது சாத்தியமற்றதாகும். சோவியத் ஆட்சியின் முதல் வருடங்களில் இது எவராலும் மறுக்கப்படவில்லை. நேர்மாறாக இந்த உண்மை எண்ணிறைந்த உத்தியோகபூர்வ வெளியீடுகளில் அங்கீகாரத்தைப் பெற்றது. ஆனால் சோவியத் சமூகத்தின் மேல்தட்டுக்களில் அக்டோபருக்கு எதிரான அதிகாரத்துவ பிற்போக்கு திறந்துவிடப்பட்டபோது, மற்றெதையும்விட முற்றிலும் முதலாவது பாட்டாளி வர்க்கப் புரட்சியைப் பிரதிபலித்த தத்துவத்திற்கு எதிராக உடனே திசைதிருப்பப்பட்டது, அதே சமயம் அதன் பூர்த்தியற்ற, மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் அரைகுறையான தன்மையை பகிரங்கமாக வெளிப்படுத்தியது. இவ்வாறு, கடும் வெறுப்பான முறையில், ஸ்ராலினிசத்தின் அடிப்படை வறட்டுச் சூத்திரமான தனியொரு நாட்டில் சோசலிசம் எனும் தத்துவம் தோன்றியது. |