World Socialist Web Site www.wsws.org


WSWS: செய்திகள் & ஆய்வுகள்

 

President Kumaratunga's all-party meeting in Sri Lanka: a platform for the extreme right

இலங்கையில் ஜனாதிபதி குமாரதுங்கவின் அனைத்து கட்சி கூட்டம்: தீவிர வலதுசாரிகளுக்கு களம் அமைத்துக் கொடுத்துள்ளது

By Dianne Sturgess
17 May 2000

Back to screen version

மே 15, திங்கட்கிழமை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவினால் யாழ்ப்பாணக் குடாநாட்டில் இராணுவ நிலைமை மோசமடைந்து வருவதையிட்டு ஆராய்வதற்கெனக் கூட்டப்பட்ட அனைத்து கட்சி கூட்டம், பொதுஜன முன்னணி அரசாங்கம் பெரிதும் தங்கியுள்ள தீவிர வலதுசாரி, பாசிச அமைப்புக்களுக்கு அரசியல் களம் அமைத்துக் கொடுப்பதை விட வேறொன்றும் அல்ல என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்துக்கு வருகை தந்திருந்த கட்சிப் பிரதிநிதிகளை அரசாங்கத்தின் யுத்த நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும்படி கேட்டுக்கொண்டதோடு, ஜனாதிபதி குமாரதுங்க கூட்டத்தை ஆரம்பித்து வைத்தார். மூன்று கிழமைகளுக்கு முன்னர் (ஏப்பிரல் 22) பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு விரகி முக்கியத்துவம் வாய்ந்த ஆனையிறவு இராணுவ முகாமைக் கைப்பற்றியது. யுத்தம் இப்போது நாட்டின் இரண்டாவது பெரிய நகரமும் 5 இலட்சம் மக்களைக் கொண்டதுமான யாழ்ப்பாண நகரைச் சூழவுள்ள இடங்களில் இடம்பெற்று வருகின்றது.

"இந்தத் தீர்க்கமான தருணத்தில் நாம் சகல வேறுபாடுகளையும் மறந்து ஒரு ஒன்றிணைந்த ஸ்ரீலங்கா நாடு என்ற விதத்தில் பிளவுபடாத ஒரு ஸ்ரீலங்காவுக்காக செயற்பட வேண்டும்" என அவர் கோரினார். அவர் மேலும் கூறியதாவது: "அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்த நாம் தயார். ஆனால்" நாம் வடக்கு- கிழக்கில் இருந்து எமது படைகளை வாபஸ் பெறக் கோரும் கோரிக்கைகளுக்கு ஒரு போதும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை."

குமாரதுங்க "உண்மைகளைத் திரித்து வதந்திகளைப் பரப்பும் சில வெகுஜனத் தொடர்புசாதன அமைப்புகளை" சாடினார். அத்தோடு அவர் இராணுவத்துக்கு வழங்கும் அரசாங்கத்தின் ஆதரவை கட்டிக் காக்கும் விதத்தில் ஒரு அடிதடி வசைமாரியில் ஈடுபட்டார். பின்னர் "அஞ்சா நெஞ்சத்துடனும் மனவுறுதியோடும் எதிரிக்கு முகம் கொடுத்து வரும்" இராணுவத்தை பாராட்டிப் புகழ்ந்தார். குமாரதுங்க இராணுவ நிலைமையை பற்றிய விபரங்களை மட்டும் அல்லாது அரசாங்கத்தையும் அதன் கொள்கைகளையும் அரசியல் ரீதியில் விமர்சனம் செய்வதையும் இருட்டடிப்புச் செய்யும் விதத்தில் சகல வெகுஜனத் தொடர்புச் சாதனங்கள் மீதும் கடும் தணிக்கை விதிமுறைகளை திணித்துள்ளார்.

ஜனாதிபதியின் உரையைத் தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டன. அதன் பின்னர் சிங்கள சோவினிச மக்கள் ஐக்கிய முன்னணியின் (MEP) தலைவர் தினேஷ் குணவர்தனவினால் ஒரு பிரேரணை முன்மொழியப்பட்டது. அவர் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்ட சகல கட்சிகளையும் விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க ஆதரவு வழங்குகின்றதும் நாட்டைப் பிளவுபடுத்தும் முயற்சிகளை கண்டனம் செய்கின்றதுமான ஒரு கூட்டறிக்கையில் கையெழுத்திடும்படி வேண்டினார். தமிழீழ விடுதலைப் புலிகள் கடந்த 17 வருடங்களாக இலங்கையின் வடக்கு- கிழக்கு மாகாணங்களில் ஒரு தனித் தமிழ் நாட்டை அமைக்கப் போராடி வருகின்றது. அரசாங்க கட்டுப்பாட்டில் உள்ள 'டெயிலி நியூஸ்' பத்திரிகையில் வெளியான ஒரு செய்தியின்படி இந்த (தினேஷ் குணவர்தனவின்) பிரேரணை "பெரிதும் காலோசிதமானது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்."

அடுத்து பாசிச சிங்கள பூமிபுத்திர கட்சித் தலைவருக்கு களம் அமைத்துக் கொடுக்கப்பட்டது. அதன் பிரதிநிதி கணிசமான அளவு நீண்ட நேரம் உரை நிகழ்த்த இடமளிக்கப்பட்டார். அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் சகல ஆதரவாளர்களுக்கும் எதிராக மரண தண்டனை விதிக்கும்படி அரசாங்கத்தை வேண்டிக் கொண்டார். அத்தோடு தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்ய மறுக்கும் நாடுகளுடனான இராஜதந்திர உறவுகளை துண்டிக்கும்படி கோரும் கோரிக்கை உட்பட ஒரு தொகை கோரிக்கைகளையும் அவர் முன்வைத்தார். சமாதானப் பேச்சுக்களுக்கு முற்றுப் புள்ளி வைத்தல், யுத்த முயற்சிகளுக்கு தீங்கு விளைவிக்கும் பிரசுரங்களை தடை செய்தல், பாதுகாப்பு அமைச்சர் பதவியை மாற்றி அமைத்தல் என்பனவும் இதில் அடங்கும்.

இந்த சிங்கள பூமி புத்திர கட்சி (Sinhala's Sons of the Soil Party) 1990ல் அமைக்கப்பட்டதோடு, கடந்த தசாப்தத்தில் தோன்றிய அதிதீவிர வலதுசாரி குழுக்களில் ஒன்றாகவும் இது விளங்கியது. இவற்றினால் அதிக எண்ணிக்கையிலானோரை அணிதிரட்ட முடியாது போனாலும் சிங்கள இனவாதிகளின் ஊதுகுழல்களாக இருந்து கொண்டுள்ளன.

மே 8ம் திகதி குமாரதுங்க நாட்டு மக்களுக்கு நிகழ்த்திய ஒரு உரையில் இந்தப் பாசிசத் தட்டினருக்கு தாம் அரசியல் ரீதியில் கடமைப் பட்டுள்ளதை அவர் பகிரங்கமாக ஒப்புக் கொண்டார். "இந்தக் குழுக்களின் தீவிர இனவாத கொள்கைகளை" பகிரங்கமாக அங்கீகரிக்காது போனாலும் ஜனாதிபதி கூறியதாவது: "அவர்களது ஆதரவுக்கும் எமது முயற்சி பற்றிய அவர்களின் பாராட்டுக்களுக்கும் நாம் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளோம்" என்றார். ஒரு கிழமைக்கு பின்னர் மக்கள் ஐக்கிய முன்னணியும் (MEP) சிங்கள பூமிபுத்திர கட்சியும் குமாரதுங்கவின் அனைத்து கட்சி கூட்டத்துக்கான நிகழ்ச்சி நிரலைத் தயாரித்தன.

இந்தக் கூட்டம் கூட்டப்பட்டது ஒரு "ஆலோசனைக்காகவோ" அல்லது ஜனநாயக ரீதியிலான கலந்துரையாடலுக்காகவோ அல்ல. ஆனால் நாட்டை ஒரு "யுத்த சூழ்நிலையில்" இருத்தும் அரசாங்கத்தின் தீர்மானத்தை அங்கீகரிக்கவும் பரந்தளவிலான அவசரகால விதிகளைப் பிரகடனம் செய்யவுமே இக்கூட்டம் கூட்டப்பட்டது. புதிய அதிகாரங்கள் வெகுஜனத் தொடர்புச் சாதனங்களை தணிக்கை செய்ய மட்டுமன்றி வேலைநிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள், பகிரங்க கூட்டங்கள் ஆகியவற்றையும் சட்ட விரோதமாக்குகின்றது. இதன் மூலம் இராணுவ ஆள் அணிகளையும், சொத்துக்களையும் இராணுவ நடவடிக்கைகளுக்காகத் திரட்டுவதை சாத்தியமாக்குகின்றது. இந்த அனைத்து கட்சிக் கூட்டம் இடம்பெற்ற அன்றே நாட்டின் உயர் நீதிமன்றம் புதிய தணிக்கை விதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டு இருந்த மேன்முறையீட்டை தூக்கி வீசியது. இந்த புதிய கட்டுப்பாடுகள் நாட்டின் தேசிய பாதுகாப்பு நலன்களின் பேரில் விதிக்கப்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டது.

இந்தக் கூட்டத்தின் ஜனநாயக எதிர்ப்பு பண்பானது அக்கூட்டம் கூட்டப்பட்ட இலட்சணத்தின் மூலம் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. சனிக்கிழமை மாலையில் (13.05.2000) கட்சி அலுவலகங்களில் கடிதங்கள் நேரில் பட்டுவாடா செய்யப்பட்டன. இதனால் கட்சி பிரதிநிதிகள் இதற்குத் தயார் செய்யவோ அல்லது ஒரு அறிக்கையை வரைந்து கொள்ளவோ கால அவகாசம் அவா்களுக்கு கிட்டவில்லை. திங்கட்கிழமை காலை 10 மணிக்கு இக்கூட்டம் இடம்பெற இருந்த போதிலும், நேரமும் இடமும் தன்னிச்சையான முறையில் மாற்றப்பட்டது. பத்திரிகையாளர்கள் கூட்ட நிகழ்வுகளை அறிக்கை செய்யா வண்ணம் தடுக்கப்பட்டனர். அரசாங்கப் பத்திரிகையான 'டெயிலி நியூஸ்' இந்நிகழ்வு பற்றிய தனது கட்டுரையில் மாறுபட்ட கருத்துக்களுக்கு எதுவிதமான இடமும் வழங்கவில்லை எனக்கூறியது. இரண்டு வெகுஜனத் தொடர்பு சாதனங்கள் மட்டுமே நான்கு கட்சிகள் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள மறுத்துவிட்டதை அறிக்கை செய்திருந்தன. ஒரு பிரபல தமிழ் தினசரியான வீரகேசரியும், டெலிசன் தொலைக் காட்சி சேவையுமே இத்தகவலை வெளியிட்டன.

இந்தக் கூட்டத்தின் தன்மையானது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சி குமாரதுங்கவின் அழைப்பை நிராகரிக்க எடுத்த நிலைப்பாட்டை முற்றிலும் ஊர்ஜிதம் செய்து இருந்தது. திங்கட்கிழமை காலை சோ.ச.க. பொதுச் செயலாளர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கடிதத்தில் குறிப்பிட்டதாவது: "தங்கள் அரசாங்கத்தினால் தொடுக்கப்பட்டுள்ள பரந்த அளவிலான ஜனநாயக எதிர்ப்பு நடவடிக்கைகள் அதன் (கூட்டத்தின்) நிஜ கோலத்தை அம்பலமாக்கியுள்ளது. ஏற்கனவே அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டுவிட்ட விடயங்களுக்கு 'சீல்' குத்துவதும் அந்த விதிமுறைகளுக்கு நம்பிக்கை தேடுவதும் நாடு பூராவும் சிங்கள, தமிழ் தேசிய இனங்களைச் சேர்ந்த உழைக்கும் மக்களுக்கு பேரழிவினைச் சிருஷ்டித்துள்ள யுத்தத்தினை மேலும் முன்னெடுக்கும் விதத்தில் ஆதரவைத் திரட்டுவதுமேயாகும். இந்த மோசடி முயற்சியில் பங்குகொள்ளும் எந்தவொரு நோக்கமும் சோசலிச சமத்துவக் கட்சிக்கு கிடையாது."

மொத்தத்தில் 27 கட்சிகளின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். எதிர்க்கட்சியான யூ.என்.பி. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட போதிலும், அதன் பிரதிநிதிகள் தமது கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட போட்டிக் கூட்டத்தில் கலந்து கொள்ளவென நேரகாலத்துடனேயே வெளியேறிவிட்டனர். பெரும் வர்த்தகப் பிரமுகர்களிடையே யுத்தத்தின் பொருளாதார இழப்பீடுகள் பற்றி இருந்து கொண்டுள்ள கவலையை பிரதிபலிக்கும் விதத்தில் யூ.என்.பி. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ஒரு சமாதானப் பேச்சுவார்த்தைக்கான தீர்வை முன்வைத்துள்ளது. யூ.என்.பி. தலைவர் ரணில் விக்கிரமசிங்க தமது கட்சிக் கூட்டத்தில் யுத்தத்துக்கு முடிவுகட்ட இந்திய அரசாங்கம் மத்தியஸ்த்தம் வகிக்க முன்வந்துள்ளமையை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

வலதுசாரி யூ.என்.பி, பொதுஜன முன்னணி அரசாங்கத்தின் எதிர்ப்பாளனாக வேடம் போட்டாலும் சமாதானத்துக்கு அழைப்பு விடுக்கும் அதனது யோக்கியதை பெரிதும் வரையறைக்குட்பட்டது. யூ.என்.பி, அரசாங்கம் இந்த யுத்தத்தை உக்கிரமாக முன்னெடுத்தது; ஜனநாயக உரிமைகளை துவம்சம் செய்தது; ஒரு தசாப்த காலத்துக்கு மேலாக சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளை திணித்தது; இதன் காரணமாக ஆளும் வர்க்கம் அதன் முக்கிய இரண்டு அரசியல் தூண்களின்- யூ.என்.பி, பொதுஜன முன்னணி- வேண்டுகோள்கள் பெரிதும் சலித்துப் போய்விட்ட ஒரு நிலைமைக்கு முகம் கொடுத்துக் கொண்டுள்ளது.

ஜே.வி.பி. இக்கூட்டத்துக்கு பிரதிநிதிகளை அனுப்பி வைத்த போதிலும் இந்தக் கூட்டம் ஆரம்பமாவதில் ஏற்பட்ட தாமதத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதத்தில் அங்கிருந்து வெளிநடப்புச் செய்தது. ஆனால் ஜே.வி.பி.யின் 6 அம்சக் கோரிக்கைகள் அது பொதுஜன முன்னணியை இடதுசாரி நிலைப்பாட்டில் இருந்து அல்லாது வலதுசாரி நிலைப்பாட்டில் இருந்து எதிர்ப்பதை தெளிவுபடுத்தியுள்ளது. அவசரகாலச் சட்டவிதிகளுக்கு முடிவு கட்டுமாறு அழைப்பு விடுத்ததன் பின்னர், 'சமத்துவத்துக்கு' தெளிவற்ற அழைப்பையும் விடுத்துள்ளது. அதே கையோடு ஜே.வி.பி. அதிகாரப் பரவலாக்கத் திட்டத்தை உடனடியாக கைவிடும்படி அரசாங்கத்தை கோரியுள்ளது. இந்த அதிகாரப் பரவலாக்கம் "ஒரு தளர்ச்சி கண்ட சமஷ்டி அரசை ஸ்தாபிதம் செய்யும் பிரிவினைவாதத்தின் வெற்றியை நோக்கி நாட்டை இட்டுச் செல்லும்" என்றுள்ளது.

விடுதலைப் புலிகளுடனான சமாதானப் பேச்சுவார்த்தையின் ஒரு பாகமாக வடக்கு- கிழக்கு மாகாணங்களுக்கு ஒரு வரையறுக்கப்பட்ட சுயாட்சியை வழங்கும் குமாரதுங்கவின் திட்டம், சிங்கள சோவினிச அமைப்புக்களின் கடும் எதிர்ப்புக்கு உள்ளாகியது. இவை விடுதலைப் புலிகளுக்கு வழங்கும் எந்த ஒரு சலுகையும் 'சிங்கள தேசத்தை' காட்டிக் கொடுப்பதற்குச் சமனானது எனக் கொள்கின்றன. ஜே.வி.பி.யின் அறிக்கையானது எந்த ஒரு விதத்திலும் ஒரு சோசலிஸ்டுக்கு வெகு தூரத்தில் நின்று கொண்டு, இலங்கையின் முதலாளித்துவ அரசை ஆதரித்து வருவதோடு தன்னை அப்பட்டமான முறையில் தீவிர வலதுசாரி, பாசிச சக்திகளுடன் இணைத்துக் கொண்டு வருவதைச் சுட்டிக் காட்டுகின்றது.

சோசலிச சமத்துவக் கட்சியைத் தவிர நவ சமசமாஜக் கட்சியும் (ந.ச.ச.க) நவ சமசமாஜக் கட்சியின் தலைமையிலான புதிய இடதுசாரி முன்னணியும், மாஜி ந.ச.ச.க. பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள மறுத்துவிட்டன.

தொழிற்சங்க அதிகாரத்துவங்களதும் பாராளுமன்றவாத வயிற்றுப் பிழைப்புக்காரர்களதும் தலைமையிலான நவ சமசமசமாஜக் கட்சி வெளியிட்ட ஒரு அறிக்கையில் குமாரதுங்க வட்டமேசை மகாநாட்டு கலந்துரையாடல்களை பயன்படுத்தி "இந்த அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு நேரடியான அல்லது மறைமுகமான அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ள" முயற்சிக்கின்றார் என்றது. 1994ல் பொதுஜன முன்னணி அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கியதோடு, பெரிதும் செல்வாக்கு இழந்து போய்க் கிடந்த ஜே.வி.பி. புத்துயிர் பெற உதவிய ந.ச.ச.க. இன்று தொழிலாளர் வர்க்கத்தின் உள்ளே ஏதேனும் செல்வாக்கை கொண்டிருக்கும் ஒரு நடவடிக்கையாக குமாரதுங்கவுக்கும் யுத்தத்துக்கும் எதிரானதாக தன்னைக் காட்டிக் கொள்ள முயற்சிக்கின்றது.

ந.ச.ச.க. வின் ஜே.வி.பி.யுடனான புதிய இடதுசாரி முன்னணி வேகமாக சிதறுண்டு வருகின்றது. ஜே.வி.பி. அனைத்து கட்சிகளின் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டதோடு, கடந்த காலத்தில் ந.ச.ச.க. ஆதரித்து வந்த வரையறுக்கப்பட்ட சுயாட்சி திட்டத்தையும்- வடக்கு -கிழக்கிற்கு வரையறுக்கப்பட்ட சுயாட்சி வழங்குவதையும் கூட எதிர்த்துள்ளது. புதிய இடதுசாரி முன்னணியின் மற்றைய ஒரே பங்காளரான முஸ்லீம் ஐக்கிய விடுதலை முன்னணி (Muslim United Liberation Front) ந.ச.ச.க. வில் இருந்து பிரிந்து இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளது.

இடதுசாரி ஜனநாயக கூட்டின் (Left Democratic Alliance) வாசுதேவ நாணயக்கார இக்கூட்டத்தில் கலந்து கொள்ளாது போனாலும் இதுவரை எதுவிதமான அறிக்கையையும் அவர் வெளியிடவில்லை. இது அவர் ந.ச.ச.க.வில் இருந்து பிரிந்து சென்றதன் பின்னர் கடைப்பிடித்து வரும் சந்தர்ப்பவாத விதிமுறையின் ஒரு அறிகுறியாகும். அரசாங்கம் செல்வாக்கு கொண்டிருந்த சமயத்தில் ஆளும் பொதுஜன முன்னணி அரசாங்கத்தின் ஒரு பங்காளியான லங்கா சமசமாஜக் கட்சியில் மீண்டும் சேர்ந்த வாசுதேவ நாணயக்கார, அதன் அதிர்ஷ்டம் வீழ்ச்சி கண்டதைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி ஆசனத்துக்கு மாறினார்.

 

கொழும்பில் ஆழம் கண்டுவரும் அரசியல் நெருக்கடி

 

கடந்த மூன்று வாரங்களாக விடுதலைப் புலிகளுக்கு கிட்டிய இராணுவ ரீதியிலான முன்னேற்றங்கள், ஏற்கனவே ஒரு செல்வாக்கிழந்த அரசாங்கமாக விளங்கிய பொதுஜன முன்னணியின் நெருக்கடியை உக்கிரமாக்கியது. இராணுவ நிலை மோசமடைவதற்கு முன்னரே தொழிலாளர் வர்க்கத்தின் கணிசமான பகுதியினர், வாழ்க்கைத்தரம் தொடர்ந்து வீழ்ச்சி காண்பதற்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

மே 6ம் திகதி 600,000 பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புத் தொடர்பான பேச்சுவார்த்தைகள், ஒரு உடன்பாட்டுக்கு வரவும், தொழிற்சங்க அங்கத்தவர்களை சாந்தப்படுத்தவும் தொழிற்சங்கத் தலைவர்கள் எடுத்த முயற்சிகளுக்கு இடையேயும் நான்காவது தடவையாக பொறிந்து போயிற்று. இத்தகைய தகராறுகள் தபால் திணைக்கள ஊழியர்கள், அரசாங்க நில அளவை திணைக்கள ஊழியர்கள், இன்னும் பல தனியார்துறை நிறுவனங்களிலும் சம்பளம், தொழில் நிலைமைகள் தொடர்பாக வெடித்துள்ளது. மேலும் கிராமப்புறங்களிலும் இத்தகைய ஒரு அமைதியின்மைக்கான அறிகுறிகள் தென்படுகின்றன. மார்ச் 30ம் திகதி எப்பாவல பொஸ்பேட் வலயத்தை ஒரு பன்னாட்டுக் கம்பனிக்கு விற்பனை செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிராக 1500க்கும் அதிகமான தொழிலாளர்களுடன் பெருமளவிலான விவசாயிகளும் கொழும்பில் இடம்பெற்ற மறியல் போராட்டத்தில் பங்கு கொண்டனர்.

அவசரகால விதிகள் பிரகடனம் செய்யப்பட்டதும் அனைத்து பெரும் தொழிற்சங்க அமைப்புக்களும் வேலை நிறுத்தங்களை முடிவுக்குக் கொணரும் பொதுஜன முன்னணி அரசாங்கத்தின் கோரிக்கைக்கு ஆதரவு காட்டுவதில் ஈடுபட்டன.

கடந்த வாரம் தொழில் அமைச்சர் டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன சமசமாஜ, ஸ்டாலினிச கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் சேர்ந்து, பொதுஜன முன்னணி கூட்டரசாங்கத்துடன் இணைந்து கொண்டுள்ள தொழிற்சங்கத் தலைவர்களை சந்தித்தார். "கைத்தொழில் துறையில் அமைதியையும் ஒழுங்கையும் நிலை நாட்ட" தமது செல்வாக்கைப் பயன்படுத்துவதை அவர்கள் நிச்சயம் ஆக்கிக் கொள்ளவே இது இடம் பெற்றது. "சிவிலியன் பாதுகாப்பு கமிட்டிகளை" அமைக்க வேண்டுமென தொழில் அமைச்சர் தெரிவித்தார். "கைத்தொழில் தகராறுகளைக் கொண்ட வேலைத் தலங்களில் நிலைமை மோசமடையாது இருப்பதை ஊர்ஜிதம் செய்வது" இதன் ஒரு நோக்கமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

தொழிலாளர்களின் கண்களின் எதிரில் சமசமாஜ, கம்யூனிஸ்ட் கட்சிகள் பெருமளவிலான சமரசத்துக்கு வந்துள்ளன. இந்த இரண்டு கட்சிகளும் பொதுஜன முன்னணி அரசாங்கத்தின் பங்காளிகள். இந்த அரசாங்கம் 1994ல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் ஒரு சமாதான உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தை நடாத்தவும், உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் வாக்குறுதியளித்ததன் மூலம் ஆட்சிப் பீடம் ஏறியது. சமாதானத்துக்குப் பதிலாக குமாரதுங்க அரசாங்கம் யுத்தத்தை உக்கிரமாக்கியதோடு, சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைளான தனியார்மயமாக்கம், அற்ப சொற்ப சமூக சேவை செலவீனங்களை வெட்டுவதிலும் ஈடுபட்டது.

கடந்த டிசம்பரில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் குமாரதுங்க, முக்கியமாக விடுதலைப் புலிகளிடம் இருந்து யாழ்ப்பாணக் குடா நாட்டையும், ஏனைய பகுதிகளையும் திரும்பக் கைப்பற்றுவதில் அவரது அரசாங்கம் வெற்றி கண்டதை அடிப்படையாகக் கொண்டு, சிங்கள சோவினிச மூலகங்களுக்கு அழைப்பு விடுத்தார். இப்போது அவர் ஒரு இராணுவ பின்னடைவு நிலைக்கு தலைமை தாங்கிக் கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து இராணுவம் பாரிய இழப்புக்களுடன் ஓட்டிக் கலைக்கப்படும் ஒரு சாத்தியம் இருந்து கொண்டுள்ளது. இந்த வருட இறுதியில் இடம்பெற உள்ள பாராளுமன்றப் பொதுத் தேர்தல், பொதுஜன முன்னணி கூட்டரசாங்கத்துக்கு ஒரு தேர்தல் பேரழிவினைக் கொண்டதாக விளங்கும் என்பதை நிரூபிக்கும்.

மேலும் வடக்கிலான இராணுவ நெருக்கடி, ஒரு பேச்சுவார்த்தை மூலமாக யுத்தத்துக்கு முடிவுகட்ட வேண்டும் என அதிகரித்த அளவில் கோரிவரும் ஐக்கிய நாடுகள் சபையினதும், பெரும் வல்லரசுகளினதும் தலையீட்டுக்கு இட்டுச் செல்லுமோ என்பதையிட்டு அரசாங்கம் கவலை கொண்டுள்ளது. கடந்தவாரம் இலங்கை வெளிநாட்டு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர், இலங்கையில் இடம்பெறும் யுத்தத்தையிட்டு ஜ.நா. பொதுச் செயலாளர் கோபி அனான் வெளியிட்ட அறிக்கையை வன்மையாக எதிர்த்து தாக்கியுள்ளார். "மனித உரிமைகள்" என்ற பெயரில் தேசிய இறைமையை ஒதுக்கித் தள்ளிவிட்டு இராணுவ ரீதியில் தலையிடுவது பால்கனிலும் கிழக்கு தீமோரிலும் ஒரு மூடுதிரையாக இருந்து வந்துள்ளது. ஐ.நா. பாதுகாப்புச் சபை எடுக்கும் "ஒரு தீர்மானம் ஒரு அரசின் மீது திணிக்கப்படும்" ஆபத்து இருந்தது கொண்டுள்ளதை கதிர்காமர் வெளிப்படுத்தி உள்ளார்.

'அம்னாஸ்டி இன்டர்நஷனல்', கொழும்பில் உள்ள வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் சங்கம் போன்றவை ஏற்கனவே அவசரகால விதிகளை கண்டனம் செய்துள்ளதோடு, பெயர் குறிப்பிடப்படாத ஒரு ஐரோப்பிய நாடு இலங்கை பற்றிய ஒரு விவாதத்தை ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு கொணர முயன்று கொண்டுள்ளதாக அறிக்கைள் கூறுகின்றன. மே 15ம் திகதி இடம் பெற்ற அனைத்து கட்சி பேச்சுவார்த்தைகளின் பின்னர் 'டெயிலி மிரர்' பத்திரிகையின் ஆசிரியத் தலையங்கம் எச்சரித்ததாவது: "தேசியத் தலைவர்கள் தமது வேறுபாடுகளையும் தப்பபிப்பிராயங்களையும் தீர்த்துக் கொண்டு, ஒரே குரலில் பேசத் தவறுவார்களேயாயின் அனைத்துலக சமூகத்திடம் இருந்து உதவியையும் ஒத்துழைப்பையும் பெறும் முயற்சி ஒரு அர்த்தமற்ற நடவடிக்கையாகிப் போய்விடும்" என்றது.

குமாரதுங்க திடீரென ஒரு அனைத்து கட்சிகளின் கூட்டத்தை கூட்டியது, அனைத்துலக அரங்கில் ஒரு "தேசிய இணக்கப்பாடு" இருந்து கொண்டுள்ளதாகக் காட்டவும், உள்நாட்டில் ஈடாட்டம் கண்டுபோன அவரின் அரசாங்கத்துக்கு ஆதரவைத் திரட்டவுமேயாகும்.

 

சோசலிச சமத்துவக் கட்சி

 

கடந்த 17 ஆண்டுகளாக சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்டுக் கழகமும் மட்டுமே யுத்தத்தை உறுதியாக எதிர்த்து நின்றதோடு சிங்கள- தமிழ் தொழிலாளர் வர்க்கத்தை ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒன்றிணைக்கவும் பிரச்சாரம் செய்து வந்துள்ளன. சோ.ச.க. பொதுச் செயலாளர் விஜே டயஸ் குமாரதுங்கவுக்கு மே 15ம் திகதி அனுப்பிய தமது கடிதத்தில் பொதுஜன முன்னணி அரசாங்கத்தின் நடவடிக்கைளைக் கண்டனம் செய்ததோடு நாட்டின் வடக்கு- கிழக்கு மாகாணங்களில் இருந்து இலங்கை இராணுவத்தை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் வாபஸ் பெறும்படியும் வேண்டியுள்ளார். அடியோடு இலங்கை முதலாளி வர்க்கத்தின் நலன்களின் பேரில் இடம் பெறும் இந்த யுத்தத்தில் மேலும் ஒரு படையாள் மரணம் அடையக் கூடாது; மேலும் ஒரு ரூபா யுத்தத்தின் பேரில் செலவழிக்கக் கூடாது." என அவர் குறிப்பிட்டு இருந்தார்.

இரண்டு கிழமைகளுக்கு முன்னர் தான் சோசலிச சமத்துவக் கட்சி- 32 வருடங்களில் முதல் தடவையாக- தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனுடன் இணைந்த விதத்தில் குமாரதுங்க அனைத்துக் கட்சி கலந்துரையாடல்களில பங்கு கொள்ளுமாறு சோ.ச.க.வுக்கு அழைப்பு விடுத்தமை கணிசமான அளவு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். குமாரதுங்க ஆட்சியாளர்களைப் பொறுத்தமட்டில் சோ.ச.க. வை பொதுஜன முன்னணி அரசாங்கத்துடன் ஏதோ ஒரு வகையிலான இணக்கத்துக்கு வரச் செய்வது ஒரு பெரிதும் நனவான முயற்சியை பிரதிநிதித்துவம் செய்கின்றது. அரசாங்க கொள்கைகளுக்கு பரந்தளவிலான எதிர்ப்புக்கள் அபிவிருத்தி கண்டு வரும் ஒரு நிலைமையின் கீழ், தொழிலாளர் வர்க்கத்துக்கும் ஒடுக்கப்படும் மக்களுக்கும்- தமிழ் -சிங்கள மக்கள் இருதரப்பினருக்கும்- ஒரு சுயாதீனமான முன்னோக்கானது ஒரு பரந்த அளவிலான பிரதிபலிப்பை ஏற்படுத்தும் என்பதையிட்டு இலங்கை ஆளும் வர்க்கம் அஞ்சுகின்றது.

 

 

 

வாசகர்களே: உலக சோசலிச வலைத்தளம்(WSWS ) உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறது. தயவுசெய்து மின்னஞ்சல் அனுப்பவும்.



Copyright 1998-2000
World Socialist Web Site
All rights reserved