World Socialist Web Site www.wsws.org |
WSWS: செய்திகள் & ஆய்வுகள்
Sri Lankan government pushes through new military spending Economic burden falls on working peopleஇலங்கை அரசாங்கம் புதிய இராணுவச் செலவீனங்களுக்கு அங்கீகாரம் பொருளாதாரச் சுமைகள் தொழிலாளர்களின் தலையில் கட்டியடிக்கப்பட்டுள்ளது By Dianne Sturgess தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தனது யுத்தத்தில் ஒரு தொகை இராணுவத் தோல்விகளைத் தொடர்ந்து, நாட்டினை "ஒரு யுத்த நிலைமையில்" இருத்தும் இலங்கை அரசாங்கத்தின் தீர்மானம், இலங்கைத் தொழிலாளர் வர்க்கம், நகர்ப்புற, நாட்டுப்புற ஏழைகள் மீது புதிய பொருளாதாரச் சுமைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் பொதுஜன முன்னணி அரசாங்கம் இராணுவச் செலவீனங்களின் பேரில் மேலதிகமாக 1200 கோடி ரூபாக்களை (167 மில்லியன் டாலர்கள்) வழங்கவும் புதிய கடன்களாக 2000 கோடி ரூபாக்களைத் திரட்டவும் அங்கீகாரம் வழங்கும் ஒரு சிறப்பு மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. இன்றைய பாதுகாப்பு வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடான 5243 கோடி ரூபாவுக்கு மேலதிகமான இந்தப் பெரும் அதிகரிப்பானது அரசாங்கத்தின் வருடாந்த மொத்த வருமானத்தில் 30 சதவீதத்தை முன்னொரு போதும் இல்லாத அளவில் யுத்த செலவீனங்களுக்காக அடித்துச் செல்கின்றது. இந்தப் பாதுகாப்புச் செலவீனங்கள் இலவசக் கல்வி, சுகாதார சேவைகளின் பேரிலான அரசாங்கத்தின் செலவீனத்தைக் காட்டிலும் அதிகம். இதற்கான முக்கிய நடவடிக்கையாக பாதுகாப்பு வரி 5.5 வீதத்தில் இருந்து 6.5 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசாங்கம் மேலதிகமாக 250 கோடி ரூபாக்களைத் திரட்டத் திட்டமிட்டுள்ளது. 2000 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்தப் பாதுகாப்பு வரி 4.5 வீதத்தில் இருந்து 5.5 வீதமாக அதிகரிக்கப்பட்டது. அத்தோடு முன்னர் இந்தப் பாதுகாப்பு வரியில் இருந்து விலக்களிக்கப்பட்ட பொருளாதாரத் துறைகளும் இப்போது இந்த வரி விதிப்புக்கு உள்ளாகியுள்ளன. அரசாங்கம் இந்தப் புதிய பாதுகாப்பு ஒதுக்கீடுகளை ஒரு "அவசர நடவடிக்கையாக" பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது. அதற்கு முன்னதாக இதற்கான அங்கீகாரத்தை நாட்டின் உயர்நீதி மன்றத்திடம் பெற்றுக் கொண்டது. இந்தச் சிறப்பு மசோதா பொதுஜன முன்னணி கூட்டரசாங்க அங்கத்தவர்களின் ஆதரவுடன் ஒரே நாளில் விவாதிக்கப்பட்டு, அமுல் செய்யப்பட்டது. இலங்கை ஸ்டாலினிச கம்யூனிஸ்ட்டுக் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சிகள் இதற்கு ஆதரவு வழங்கின. எதிர்க் கட்சியான யூ.என்.பி. வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாததன் மூலம் அதனது மறைமுக ஆதரவை வழங்கியது. அத்தோடு அரசாங்கம் புகையிலை, கலால் வரிகளை முறையே 105 வீதங்களால் அதிகரித்துள்ளது. நீதி அமைச்சின் பேச்சாளர்களின் படி இவை மூலம் "கிட்டத்தட்ட 150 கோடி ரூபாக்கள் யுத்த நடவடிக்கைகளுக்குக் கிடைக்கும்". தனது பொருளாதாரச் சாதனைகள் மதிப்பீட்டுக்கு உள்ளாகுவதில் இருந்து தலைதப்பும் பொருட்டு, அரசாங்கம் பாரிசில் மே 29ம் திகதி இடம் பெற இருந்த இலங்கைக்கு உதவி வழங்கும் குழுக் கூட்டத்தை ஒத்தி வைக்கும்படி கோரியுள்ளது. சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி பிரதிநிதிகளுக்கு உரை நிகழ்த்திய பிரதி நிதி அமைச்சரும், அரசியலமைப்புச் சட்ட விவகார அமைச்சருமான ஜீ.எல்.பீரிஸ் பின்வருமாறு குறிப்பிட்டார்: "பாரிஸ் உதவி வழங்கும் நாடுகளின் கூட்டத்தை ஒத்தி வைக்க அரசாங்கமே தீர்மானம் செய்தது. இது பெரிதும் பொருத்தமான ஒரு நேரத்தில் இடம்பெறும்" என்றார். இன்றைய யுத்தங்கள் வெடிப்பதற்கு முன்னதாகவே அரசாங்கம் நிதி அடிப்படையில் இழுத்துக் கட்டிய கயிற்றில் நடை போட்டுக் கொண்டிருந்ததோடு அரசாங்கத் திணைக்களங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளையும் வெட்டியது. மார்ச் மாதத்தில் திறைசேரியால் வெளியிடப்பட்ட ஒரு சுற்றறிக்கை அனைத்து அரசாங்க நிறுவனங்களையும்- சம்பளம், மருந்து விநியோகம், ஓய்வூதியம், உணவு தவிர- 5 வீதத்தினால் ஒதுக்கீடுகளை வெட்டும்படி வேண்டியது. இது சர்வதேச நாணய நிதியத்தினால் வரையறுக்கப்பட்ட விதத்தில் வரவு செலவுத்திட்டப் பற்றாக் குறைகளை முடக்கிக் கொள்ளும் நடவடிக்கையாக விளங்கியது. இந்த மே மாதத் தொடக்கத்தில் இலங்கை மத்திய வங்கி ஆளுனர், வங்கியின் ஆண்டறிக்கையை ஒட்டி நடாத்திய பத்திரிகையாளர் மகாநாட்டில் பேசுகையில், யுத்தம் உக்கிரம் கண்டதன் பெறுபேறாக பாதுகாப்புச் செலவீனங்கள் அதிகரித்ததாக எச்சரிக்கை செய்தார். அவரது பேச்சு, புதிய வரிகளைத் திணிப்பதையும் அபிவிருத்திப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட பணங்கள் யுத்தச் செலவீனங்களுக்காகத் திசைதிருப்பப்படப் போவதையும் முன் கூட்டியே சுட்டிக் காட்டின. அரசாங்கம் ஏற்கனவே சகல "குறுகியகால அபிவிருத்தித் திட்டங்களையும்" நிறுத்தும்படி அறிவித்துள்ளது. இந்நடவடிக்கை வேலையின்மையை- குறிப்பாக கிராமப்புற இளைஞர்களிடையே- உக்கிரமாக்கும். இந்த மத்திய வங்கி ஆண்டறிக்கை எரிபொருட்கள், போக்குவரத்து, தொலைபேசி சேவைகளின் "பகுத்தறிவுக்கு ஒவ்வாத" குறைந்த விலைகளைக் கண்டனம் செய்ததோடு இந்த அதிகரிப்புக்கள் தாமதம் இல்லாமல் அமுல் செய்யப்பட வேண்டும் எனவும் கோரியது. அரசாங்கம் முன்னர் தொலைபேசி கட்டணங்களை 20 வீதத்தினால் அதிகரிப்பது உட்பட இந்தத் துறைகளிலான விலை உயர்வுகளை நடைமுறைக்கிடுவதை ஒத்தி வைத்திருந்தது. அரசாங்கம் தபால் சேவையையும் மின்சார துறையையும் தனியார்மயமாக்குவதைத் தனது நிகழ்ச்சி நிரலில் கொண்டிருந்தது. இருந்தபோதிலும் இந்நடவடிக்கைகள் அரசாங்கத்தின் இராணுவ ஆயுதத் தளபாடச் செலவீனங்களின் பெருமளவிலான அதிகரிப்பை இட்டு நிரப்பும் சாத்தியம் இல்லை. கடந்த வார இறுதியில் வெளிநாட்டு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் 'சண்டே டைம்ஸ்' பத்திரிகைக்கு அளித்த ஒரு பேட்டியில் இலங்கை "சுமார் 800 மில்லியன் டாலர்கள்" பெறுமதியான ஆயுதங்களை கொள்வனவு செய்யும் பேச்சுவார்த்தைகளில் ஏழு நாடுகளுடன் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார். குண்டுவீச்சு விமானங்கள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட தகவல்களின் படி 8 கிபீர் குண்டு வீச்சு விமானங்களை இஸ்ரேலிடம் இருந்து கொள்வனவு செய்ய 24 மில்லியன் டாலர்கள் செலவாகும் என அறிவிக்கப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை இந்திய ஹிந்து (Hindu) பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரையின்படி "ஆயுதங்களைக் கொண்ட ஒரு பாகிஸ்தானிய கப்பல் பயணம் செய்துகொண்டுள்ளதாக விடயம் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தத் தொகுதியில் 122 மி.மீ பல குழாய் ஏவுகணை ஏவிகள் (MBRL) -1600 ரொக்கட்டுக்கள் உட்பட- அடங்கும். இதைத் தவிர பாகிஸ்தான் விமானங்கள் ஆயுத தளபாட விநியோகங்களை கொழும்புக்கு ஏற்றிக் கொண்டு சென்றுள்ளன. இலங்கை டாங்கிகளின் விநியோகத்தின் பேரில் செக் குடியரசுடன் தொடர்பு கொண்டுள்ளது அவற்றைச் சுணங்காது செய்யும் விதத்தில் கொழும்பு அவற்றை பிராகுவில் இருந்து விமானம் மூலம் தருவிக்கத் திட்டமிட்டுக் கொண்டுள்ளது". இந்தப் புதிய பொருளாதாரச் சுமைகளைத் திணிக்கும் பொருட்டு அரசாங்கமும் வெகுஜனத் தொடர்புச் சாதனங்களும் யுத்தவெறியை கிண்டிவிட்டு யுத்தத்துக்காகப் பொதுமக்களை தியாகங்கள் செய்யும்படி தூண்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இலங்கை ஜனத்தொகையில் நூற்றுக்கு 35 வீதத்தினர் ஏற்கனவே வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து கொண்டுள்ளனர். கட்ந்த வார இறுதியில் மிதவாத "சண்டே டைம்ஸ்" பத்திரிகையின் வர்த்தகப் பகுதி அதன் வாசகர்களுக்கு கூறியதாவது: "இதை (பொருளாதார வளர்ச்சி) எட்டுவதற்கு பொருளாதார செயற்பாடுகளுக்கும் யுத்த நடவடிக்கைகளுக்கும் இடையேயான இணைப்பை பற்றி பொது மக்களிடையே அறிவை ஏற்படுத்துவது மிக முக்கியமானது. ஒவ்வொருவரும் யுத்த முனையில் போரிட முடியாது. ஆனால் நுகர்ச்சியில் தியாகங்களைச் செய்வதன் மூலமும் உற்பத்தித் திறனை அதிகரிப்பதன் மூலமும் யுத்தத்துக்குச் சகலரும் பங்களிப்புச் செய்யமுடியும். நாம் எமது யுத்தச் செலவீனங்களைத் தாக்கிப் பிடிக்க வேண்டுமானாலும் யுத்தத்தை அதன் கசப்பான முடிவுக்கு இட்டுச் செல்லும் வரை தாக்கிப் பிடிப்பதை உத்தரவாதம் செய்ய வேண்டுமானாலும் நாம் பொருளாதார முனையில் யுத்தத்துக்கான பொதுஜன ஆதரவைத் திரட்ட வேண்டும்." யுத்தத்துக்கு ஆதரவு காட்டுவதில் பேர்போன 'த ஐலன்ட்' பத்திரிகை, மே 10ம் திகதி 'யுத்த நிலைமையில் இருத்துவது எங்கே' என்ற தலைப்பில் எழுதிய ஆசிரியத் தலையங்கத்தில் இன்னுமொரு படி மேலே போய் கூறுகையில்: "இரண்டாம் உலக யுத்த காலத்தில் வாழ்ந்தவர்கள்- இலங்கைப் போன்ற நாடுகளிலும் கூட- ஒரு யுத்தப் பொருளாதாரத்தின் அடிப்படையில் நாட்டைக் கொண்டு செல்ல பிரித்தானிய அதிகாரிகள் எடுத்த கண்டிப்பான நடவடிக்கைகளை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்... உணவு, துணிவகை, எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் பங்கீட்டு முறையில் வழங்கப்பட்டன. பொதுஜன கட்டிடங்கள் யுத்த நோக்கங்களுக்காக சுவீகரிக்கப்பட்டன. எடுக்கப்பட்ட இன்னும் பல நடவடிக்கைகள் பொது மக்களின் தினசரி செளகரியங்களை பாதித்தன." இதே நிலைப்பாட்டில் நின்று கொண்டு சிங்கள தீவிரவாத அமைப்புக்கள் இன்னும் பெரிதும் அதிர்ச்சி தரும் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. பொதுமக்கள் ஆதரவு இல்லை ஆனால் 60,000 க்கும் அதிகமான உயிர்களையும் கோடானுகோடி ரூபாக்களையும் ஏப்பமிட்ட கசப்பான 17 வருட கால யுத்தம் தொடர்வதற்கு பொதுமக்களின் ஆதரவு கிடையாது என்பதற்கு இந்தச் சூடேறிய வாய்வீச்சுக்கள் ஒரு அறிகுறியாகும். வரையறுக்கப்பட்ட கருத்துக் கணிப்புக்கள் மூலம் வெளிப்பாடான யுத்த எதிர்ப்பும், இறுதி இராணுவ ஆட்திரட்டல் தோல்வி கண்டதும் பெருமளவிலான படையாட்கள் விலகி ஓடும் வீதத்தின் அதிகரிப்பும் ஒரு பெரிதும் நனவான அரசியல் உருவம் எடுக்கும் என்பதையிட்டு பொதுஜன முன்னணி அரசாங்கம் பீதி கண்டுள்ளது. எனவேதான் தேசியவாத தம்பட்டமடிப்புக்களில் ஈடுபடுவதுடன் மட்டும் நின்றுவிடாது அரசாங்கம் மிகப் பயங்கரமான ஒரு தணிக்கை விதிகளைத் திணிக்கவும் ஒரு தொகை அவசரகாலச் சட்ட விதிகளை வெகுஜனத் தொடர்பு சாதனங்களுக்கும் எதிர்ப்புக்களுக்கும், வேலை நிறுத்தங்களுக்கும் பொதுக்கூட்டங்களுக்கும் எதிராகக் கொணர்ந்தது. ஏற்கனவே பல கம்பனிகள் புதிய அவசரகால ஆட்சியை நல்ல சம்பளத்துக்கும், சிறந்த வேலை நிலைமைகளுக்குமான வேலை நிறுத்தங்களை நிறுத்தும்படி தொழிலாளர்களைக் கட்டாயப்படுத்த பயன்படுத்திக் கொண்டுள்ளன. கடந்த மாதம் இந்நாட்டின் கொள்கை ஆய்வு நிலையம் வெளியிட்ட அறிக்கையில் யுத்தத்தின் பிரமாண்டமான பொருளாதார இழப்புக்களை சுட்டிக்காட்டியது: "மிகவும் பழமைவாத ஊகங்களின் கீழும் கூட நாடு இரண்டு வருட கால மொத்த உள்நாட்டு உற்பத்திகளை (GDP) 1996 வீதத்தில்) யுத்த இழப்புக்களாக கொண்டுள்ளது என்ற முடிவுக்கு வருவது நியாயமானது". எவ்வளவுக்கு எவ்வளவு இம்மோதுதல் தொடர்கின்றதோ அவ்வளவுக்கு "இதன் சுமை இந்நாட்டின் ஏழைகள், இளைஞர்கள் மீது மிகவும் பளுவை ஏற்படுத்தும்". கடந்த இரண்டு தசாப்தங்களில் ஏனைய "அபிவிருத்தியடையும் நாடுகளில்" இராணுவச் செலவீனங்கள் வீழ்ச்சி கண்டு வருகையில் இலங்கையில் பாதுகாப்பு செலவீனங்கள் 1970 பதுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 1/2 வீதத்தில் இருந்து 1995ல் 6 வீதமாக அதிகரித்துள்ளது எனவும் இந்த கொள்கை ஆய்வு நிலையம் (Institute of policy studies) தெரிவித்துள்ளது. பெரும் வர்த்தக நிறுவனங்களில் ஒரு பகுதியினர் இந்த யுத்தம் பொருளாதாரத்தின் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கத்தையிட்டு- குறிப்பாக வெளிநாட்டு முதலீட்டில்- கவலை கொண்டுள்ளனர். இலங்கை மத்திய வங்கி, அதன் ஆண்டறிக்கையில் குறிப்பிட்டதாவது: "மேற்சொன்ன பெறுபேறுகளுக்கான மாபெரும் சவாலாக (குறைந்த மட்ட பொருளாதார குறிப்பீடு) வடக்கிலும் கிழக்கிலும் இடம்பெறும் ஆயுதம் தாங்கிய மோதல் விளங்குகின்றது." இராணுவ மோதுதல் இல்லாது போனால் வருடாந்த முதலீடு 2-3 வீதத்தினால் அதிகரிப்பதோடு பொருளாதார வளர்ச்சி வீதமும் அதே தொகையால் அதிகரித்து இருக்கும் என இந்த ஆண்டறிக்கை வாதிட்டுள்ளது. "இந்த மோதுதல் தொடருமானல் வளங்களையும் மக்களின் சக்திகளையும் பாரதூரமான விதத்தில் காலி செய்வதோடு அனைத்துலக சமூகத்தில் நாட்டைக் குழிபறிந்து போகவும் செய்யும்" என அறிக்கை முடிவுரையில் குறிப்பிடுகின்றது. ஏற்றுமதிகளின் வீழ்ச்சியும் இராணுவச் செலவீனங்களின் அதிகரிப்பும் வர்த்தக நடைமுறைக் கணக்கை பற்றாக்குறை நிலைக்கு இட்டுச் சென்றுள்ளதோடு வெளிநாட்டுச் சொத்துக்களிலும் ஒரு நிலையான வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய வங்கி 2000 ஆண்டுகளில் பணவீக்க வீதம் 4.7 வீதத்தில் (1999) இருந்து 7 வீதமாக இருக்கும் எனவும் முன்கூட்டியே குறிப்பிட்டு இருந்தது. ஆனால் தற்சமயம் அந்த மதிப்பீடுகள் சிதறுண்டு போக வாய்ப்புண்டு.
Copyright
1998-2000 |