World Socialist Web Site www.wsws.org


WSWS: செய்திகள் & ஆய்வுகள்

 

EPDP thugs in the service of Colombo regime: A serious threat to the lives of SEP members in Sri Lanka

 

ஈ.பி.டீ.பி. குண்டர்கள் கொழும்பு அரசாங்கத்துக்கு சேவகம்:

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி அங்கத்தவர்களுக்கு உயிராபத்து

By our correspondent
5 May 2000

Back to screen version

இலங்கையின் வட மாகாணத்தில் இருந்து கொண்டுள்ள சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP) அங்கத்தவர்கள், ஆதரவாளர்களுக்கு எதிரான ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (EPDP) யின் உடல்ரீதியான தாக்குதல்களும் பாரதூரமான அச்சுறுத்தல்களும், ஈ.பி.டீ.பி. தமிழ் மக்களிடையே பொதுஜன முன்னணி அரசாங்கத்துக்கு இருந்துவரும் எதிர்ப்பை நசுக்கும் அதன் ஒரு கைக்கூலிக் குண்டர் குழுவாகத் தொழிற்பட்டுக் கொண்டுள்ளதைத் தெளிவுபடுத்தியுள்ளது.

கடந்த மார்ச் 20ம் திகதி உள்ளூர் ஈ.பி.டீ.பி. அதிகாரிகள் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு அப்பால் உள்ள ஊர்காவற்துறையில் உள்ள தமிழ் மீனவர்களையும் அவற்றின் குடும்பங்களையும் ஒரு கூட்டத்துக்கு வரும்படி அழைப்புவிடுத்தனர். இந்த ஈ.பி.டீ.பி., பொதுஜன முன்னணி அரசாங்கத்தின் ஒரு கூட்டாக இருந்து வருவதோடு உள்ளூராட்சி சபைகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுள்ளது. கொழும்பு அரசாங்கமும், இராணுவமும் விடுக்கும் கட்டளைகளை மக்கள் மீது திணிக்கும் நடவடிக்கையில் இது ஈடுபட்டுள்ளது. இதில் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிப்பதை தடுக்கும் கடும் கட்டளைகளும் அடங்கும். பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக யுத்தம் நடாத்துவதாகக் கூறி இராணுவம் யாழ்ப்பாணக் குடாநாடு பூராவும் ஒரு பிரகடனம் செய்யப்படாத இராணுவச் சட்ட விதிகளுக்கு (Martial Law) சமமான ஒன்றைத் திணித்துள்ளது.

ஆனால் இத்தடவை மீனவர்களும் அவர்களின் குடும்பத்தவர்களும் இந்த அழைப்பை கணக்கெடுக்கவில்லை. அவர்கள் கடலுக்கு செல்வதன் மூலம் வாழ்க்கையை ஓட்டும் வருமானத்தை தடை செய்யும் விதத்தில் இராணுவத்தினர் விதித்துள்ள கட்டுப்பாடுகளாலும், அடாவடித்தனங்களாலும் இனவாதக் கேலிக்கூத்துக்களாலும் வெறுப்பும் ஆத்திரமும் அடைந்திருந்தனர். அத்தோடு அந்தப் பிரதேசத்தை ஏதோ தமது சொந்த நிலமானித்துவ இராஜதானி போல் ஆட்சி நடாத்தும் ஈ.பி.டீ.பி. அதிகாரிகளின் நடவடிக்கைகளால் மக்கள் வெறுப்படைந்து போயுள்ளனர். இதனால் அவர்கள் இந்தக் கூட்டத்தை ஒரு எதிர்ப்பு நடவடிக்கையாகப் பகிஷ்கரித்தனர்.

அவர்களது வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சங்களிலும் இராணுவத்தின் கை மேலோங்கி உள்ளது. கடற்படையின் துப்பாக்கிப் படகுகளால் மீனவர்களின் படகுகள் சேதமாக்கப்படுகின்றது அல்லது நாசமாக்கப்படுகின்றது. பாதுகாப்பு வலயங்களுள் அவர்களின் படகுகள் அத்துமீறி ஊடுருவிக் கொண்டுள்ளதாகக் கூறி பல மீனவர்கள் கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளனர். பலாலி இராணுவ முகாமையும் விமானத் தளத்தையும் விஸ்தரிக்கும் பொருட்டு பல்லாயிரக் கணக்கான மீனவர் குடும்பங்கள் அவர்களின் வீடுகளில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர்.

கிராமவாசிகள் ஈ.பி.டீ.பி.காரர் கூட்டிய இந்தக் கூட்டத்தின் தன்மையை நன்கு அறிந்திருந்தனர். இராணுவத்தினர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஒரு எதிர்த் தாக்குதலுக்கு தயார் செய்து வருகையில் ஈ.பி.டீ.பி.காரர்களிடம் புதிய மீன்பிடி எல்லைக் கட்டுப்பாட்டு விதிகளை ஊர்ஜிதம் செய்யும் பணி ஒப்படைக்கப்பட்டது. கடற்படையினர் தமது ரோந்துப் படகுகளின் நடமாட்டத்துக்கு கடற்பிராந்தியத்தை தடையற்றதாக கொண்டிருக்க விரும்பினர். இதனால் மீனவர்கள் தமது மீன்பிடியை மேலும் துண்டித்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பிட்ட நேரத்தில் கூட்டத்துக்கு எவரும் வருகை தராததால் ஈ.பி.டீ.பி. யின் முக்கிய புள்ளியும் ஊர்காவற்துறை பிரதேச சபைத் தலைவருமான என். மதனராஜா வெறிகொண்டு அலைந்துள்ளார். அவர் தனது ஆயுதம் தாங்கிய குண்டர் கும்பல்களை 'பிக்கப் றக்கு'களில் ஏற்றி, மக்களைப் பலாத்காரமாக கூட்டத்துக்கு இழுத்து வரும்படி அனுப்பி வைத்தார். மக்கள் மறுப்புத் தெரிவித்த இடங்களில் அவர்களை பலாத்காரமாகப் பிடித்து இழுத்து, வாகனங்களில் போட்டனர்.

இராணுவத் திணிப்பையும் அதன் கையாட்களான ஈ.பி.டீ.பி. யையும் எதிர்த்து ஒரு பிரச்சார இயக்கத்தில் ஈடுபட்ட சோசலிச சமத்துவக் கட்சி அங்கத்தவர்களும் ஆதரவாளர்களும் ஈ.பி.டீ.பி.யின் பட்டியலில் இருந்து கொண்டுள்ளனர். ஒரு ஆயுதம் தாங்கிய கும்பல் சோ.ச.க. அங்கத்தவரான ஆர்.சுதர்சனின் வீட்டுக்கு வந்தது. கூட்டத்தில் கலந்துகொள்ள அவர் மறுப்புத் தெரிவித்த வேளையில் அவரும் அவரின் ஏனைய குடும்ப அங்கத்தவர்களும் பலாத்காரமாக கூட்டத்துக்கு நடந்து செல்லத் தள்ளப்பட்டனர். மற்றொரு சோ.ச.க. ஆதரவாளர் அவர்களின் தாக்குதலில் இருந்து தப்பியோட முயன்றுள்ளார். அச்சமயம் இந்த ஈ.பி.டீ.பி. கும்பல் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளது.

ஈ.பி.டீ.பி. காரர்களின் எதிர்ப்பானது பொதுஜன முன்னணி அரசாங்கத்தினாலும் முன்னைய யூ.என்.பி. அரசாங்கத்தினாலும் வடக்கு- கிழக்கு மாகாணங்களில் நடாத்தப்பட்டு வந்த இனவாத யுத்தத்துக்கு எதிராக தமிழ் மக்களின் உரிமைகளைக் காக்கும் சோ.ச.க. வின் உறுதியான நிலைப்பாடு காரணமாகவே தலையெடுத்துள்ளது. அதே சமயம் ஒரு சோசலிச முன்னோக்குக்கான சோ.ச.க.வின் போராட்டம் தமிழீழ விடுதலை புலிகளின் ஒரு பிரிவினை முதலாளித்துவக் குட்டி அரசு முன் நோக்கை நேரடியாக ஊடறுத்துச் செல்கின்றது. எனவே தான் சோ.ச.க. அங்கத்தவர்கள் அரசாங்கத்தினதும் அரச இயந்திரத்தினதும் விடுதலைப் புலிகளதும் தாக்குதல்களுக்கு உள்ளாகினர். சுதர்சன் தனது சொந்த இடமான ஊர்காவற்துறைக்கு கடந்த ஆண்டு ஜூனிலேயே சென்றார். அதற்கு முன்னர் அவர் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தெற்கேயுள்ள கிளிநொச்சியில் இரண்டு மாதங்கள் விடுதலைப் புலிகளால் சிறை வைக்கப்பட்டு இருந்தார். சுதர்சனும் ஏனைய சோ.ச.க. அங்கத்தவர்களும் உலக சோசலிச வலைத் தளத்தை (WSWS) மையமாகக் கொண்டு அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதல்களுக்கு எதிராக இடம் பெற்ற ஒரு உறுதியான அனைத்துலகப் பிரச்சார இயக்கத்தின் பின்னரே விடுதலை செய்யப்பட்டனர்.

இந்தக் கூட்டத்தில் உள்ளூர் ஈ.பி.டீ.பி. தலைவர் ஒரு சின்னத்தனமான முறையில் உடுத்திருந்த சாரத்தை தனது முழங்காலுக்கு மேல் உயர்த்திப் பிடித்த வன்னம் (சண்டைக்கு தயாராகும் பாணியில்) சுதர்சனை சிறப்பாக கையாளப் பொறுக்கி எடுத்தார். ஊர்காவற்துறை பகுதியில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை நிறுத்தாது போனால் "முதலும் கடைசியுமான எச்சரிக்கை" இதுதான் என அவருக்குக் கூறப்பட்டது. சுதர்சனுக்கு உதவி செய்தால் அவரின் கால் அடித்து முறிக்கப்படும் என ஒரு சோ.ச.க. ஆதரவாளருக்குக் கூறப்பட்டது. மூன்றாவது நபர், கடலில் மீன்பிடித்து வாழ்க்கை நடாத்த அனுமதிக்க முடியாது என எச்சரிக்கப்பட்டார்.

இப்பிராந்தியத்தில் உள்ள உள்ளூர் கிராமவாசிகளுக்கு எதிரான இலங்கை இராணுவத்தின் அட்டூழியங்கள் பற்றி மீனவர்கள் சோ.ச.க.வின் உதவியோடு மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பிய முறைப்பாடுகளையிட்டு இந்த பிரதேச சபை தலைவர் குறிப்பாக கவலை கொண்டுள்ளார். ஈ.பி.டீ.பி. தலைவரால் சுதர்சனை பயமுறுத்தி பணியவைக்க முடியாது போனதும் அவர் மீனவர்கள் பக்கம் திரும்பினார். அந்தப் பகுதியில் தனது சாதனைகளைப் பற்றி ஜம்பம் அடித்துக் கொண்ட மதனராஜா மீனவர்களைப் பயமுறுத்துவதில் ஈடுபட்டார். சோ.ச.க. வினால் ஸ்தாபிக்கப்பட்ட கடற் தொழிலாளர் சங்கத்துக்கு தொடர்ந்து ஆதரவளிப்பவர்களின் மானியங்களை வெட்டப் போவதாக எச்சரிக்கை விடுத்ததோடு, அச்சங்கத்தின் தலைமை "உடனடியாக மாற்றியமைக்கப்பட வேண்டும்" எனவும் குறிப்பிட்டார்.

அவரது குற்றச்சாட்டு வீச்சுக்களைத் தொடர்ந்து, காலை 6.30 மணிக்கு (வழமையாக காலை 2 மணிக்கு) முதல் மீன்பிடிக்க எவரும் செல்லக் கூடாது எனவும் கடற்படை பிராந்தியத்தில் மீன்பிடிக்கக் கூடாது எனவும் தெரிவித்தார். "எனவேதான் நாம் உங்கள் அனைவரையும் ஒரு கலந்துரையாடலுக்காக இங்கு கூப்பிட்டோம். நீங்கள் இராணுவத்தின் உத்தரவுகளைக் கடைப்பிடிக்க வேண்டும். இதில் இருந்து விலகிச் செல்வதை சகிக்க முடியாது" என அவர் கூச்சலிட்டார். பகல் நேர மீன்பிடியை காலை 6.30-11.30 மணிக்கும் இடையில் முடக்குவதானது தமது ஏழைக் குடும்பங்களின் உயிர்களைக் காக்கப் பல மணி நேரம் போராடுபவர்கள் மீது பெருந்தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த முழுச் சம்பவங்களும் ஈ.பி.டீ.பி. ஒரு ஆயுதம் தாங்கிய கும்பல் என்ற உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. சோ.ச.க. அங்கத்தவர்களுக்கும் உள்ளூர் மீனவர்களுக்கும் எதிரான அப்பட்டமான பயமுறுத்தல்களும் காடைத்தனங்களும் பலத்தின் அடையாளம் அல்ல; அரசியல் பலவீனத்தின் இலட்சனங்கள். சாதாரண தமிழ் மக்களின் கண்களின் எதிரில் ஆழமாக ஒட்டி உறவாடும் ஈ.பி.டீ.பி. க்கு எதுவிதமான நிஜ அரசியல் அத்திவாரமும் கிடையாது. பொதுஜன முன்னணி அரசாங்கத்தினது உத்தியோக பூர்வமான அங்கீகாரத்துடனும் ஈ.பி.டீ.பி. அங்கத்தவர்களை துப்பாக்கியும் கையுமாக பகட்டாக வெளிப்படையாக திரிய அனுமதித்துள்ள இராணுவத்தின் ஆதரவுடனுமே அது உயிர்வாழ்ந்து கொண்டுள்ளது.

ஈ.பி.டீ.பி. அமைக்கப்பட்ட காலத்தில் இருந்து அது என்றுமே சாதாரண உழைக்கும் மக்களின் அபிலாசைகளைப் பிரதிநிதித்துவம் செய்தது கிடையாது. உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொணரவும் இலங்கை அரசாங்கத்துக்கு தோள் கொடுக்கவும் இந்தியத் துருப்புக்களை வட-கிழக்கு மாகாணங்களுக்கு அனுப்புவதற்கான இந்திய- இலங்கை உடன்படிக்கை வீழ்ச்சி கண்டதைத் தொடர்ந்து ஈ.பி.டீ.பி. 1989ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இந்தியப் படைகள் அதிகரித்த விதத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மோத நேரிட்டு, அது இறுதியாக இங்கிருந்து வாபஸ் பெற நேரிட்டதைத் தொடர்ந்து, அதன் உள்நாட்டு கையாளாக இயங்கியதும் மாகாண சபையில் மேலாதிக்கம் கொண்டிருந்ததுமான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF) ஒரு அவஸ்த்தை நிலைமைக்குள் தள்ளப்பட்டது.

ஈ.பி.ஆர்.எல்.எப். பின் பெருவாரியான தலைவர்கள் விடுதலைப் புலிகளின் ஆத்திரத்தில் இருந்து தலைதப்ப நாட்டை விட்டு ஓட நேரிட்டது. ஈ.பி.ஆர்.எல்.எப். பின் இராணுவ பிரிவின் தலைவராக விளங்கிய டக்ளஸ் தேவானந்தா அந்த அமைப்பில் இருந்து விலகி ஈ.பி.டீ.பி. அமைப்பை ஸ்தாபிதம் செய்ததோடு விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொழும்பு ஆட்சியாளர்களின் தொடர்ச்சியான யுத்தத்துக்கு சேவையாற்றவும் முன்வந்தார்.

அவரது உள்நாட்டு ஆதரவின் அளவு கோலாக 1994 பொதுத் தேர்தல் முடிவுகள் விளங்கின. பதிவு செய்யப்பட்ட 6 இலட்சம் வாக்காளர்களில், விடுதலைப் புலிகளின் வேண்டுகோளின் பேரில் பெரும்பான்மையினர் தேர்தலைப் பகிஷ்கரித்தனர். இதன் பெறுபேறாக ஈ.பி.டீ.பி. ஒரு சில நூறு மொத்த வாக்குகளுடன் 9 பாராளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றிக் கொள்ள முடிந்தது. இது எவரையும் பிரதிநிதித்துவம் செய்யாது போனாலும் பொதுஜன முன்னணி அரசாங்கத்துக்கு ஒரு உறுதியான பாராளுமன்றப் பெரும்பான்மையை ஊர்ஜிதம் செய்வதில் ஈ.பி.டீ.பி. ஆசனங்கள் தீர்க்கமானதாக விளங்கியது. பாராளுமன்றத்தில் பொதுஜன முன்னணிக்கு ஆதரவு வழங்குவதன் பதிலுபகாரமாக ஈ.பி.டீ.பி.க்கு நிதியும், ஆயுதங்களும் கிடைத்தன.

1996ல் இலங்கை இராணுவம் யாழ்ப்பாணத்தை மீளக் கைப்பற்றியதைத் தொடர்ந்து ஈ.பி.டீ.பி. திரும்பவும் அந்தப் பிரதேசத்தினுள் நுழைந்து கொண்டதோடு, சலுகைகளையும் பாதுகாப்பு நிலைமைகளையும் அனுபவித்தது. எவ்வாறாயினும் இது ஒரு நிச்சயமற்ற வாழ்க்கையாகவே உள்ளது: உள்ளூர் ஈ.பி.டீ.பி. அலுவலர்கள் தமது செல்வாக்கைப் பயன்படுத்தி தமது சொந்தக் கூடுகளை இறக்கைகளால் காக்க முடிந்தது என்பதில் சந்தேகம் கிடையாது. ஆனால் அது அந்தப் பிராந்தியத்தின் மீதான இராணுவ ஆட்சிக்கு எதிரான தமிழ் மக்களின் எதிர்ப்பை முற்றாக ஒழித்துக் கட்டும் நடவடிக்கை சாத்தியமாக இருக்கும் வரை மட்டுமே தொடர முடியும்.

எவ்வளவுதான் வரையறுக்கப்பட்டதாக இருந்தாலும் ஈ.பி.டீ.பி. யின் ஆளுமைக்கு எதிரான எந்த ஒரு சவாலும் முழுக் கடதாசி வீட்டையும் வீழ்ச்சி காணச் செய்ய அச்சுறுத்தும். ஊர்காவற்துறையில் சோ.ச.க. ஒரு கடற்தொழிலாளர் சங்கத்தை அமைத்ததன் பின்னர், ஈ.பி.டீ.பி. தனது பிடி ஆட்டம் கண்டு போனதைக் கண்டது. கிராமவாசிகள் நம்பிக்கை பெற்றதோடு ஈ.பி.டீ.பி.யின் உருட்டல் மிரட்டல்களையும் மீறத் தொடங்கினர் அவ்வாறே அவர்கள் கூட்டிய கூட்டப் பக்கம் ஒருவரும் தலைவைத்துப் படுக்காததுதான் தாமதம், உள்ளூர் ஈ.பி.டீ.பி. குட்டி மன்னர்கள் தமக்குத் தெரிந்த விதத்தில் அதற்கு எதிரான நடவடிக்கையில் இறங்கினர். அவர் தனது ஆயுதக் குண்டர்களைக் கட்டவிழ்த்து விட்டார்.

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி, ஈ.பி.டீ.பி. நடவடிக்கைக்கு எதிராக வன்மையாக ஆட்சேபம் தெரிவித்ததோடு அதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தா தனது குண்டர்களின் பயமுறுத்தல்களையும் அட்டூழியங்களையும் பகிரங்கமாக கண்டனம் செய்ய வேண்டும் எனவும் கோரியது. எழுத்து மூலமான ஆட்சேபனைக் கடிதத்தை தேவானந்தா பெற்ற போதிலும் இன்னமும் அதற்குப் பதிலளிக்கவில்லை.

சோசலிச சமத்துவக் கட்சி, யாழ்ப்பாணத்தில் உள்ள அதன் அங்கத்தவர்களுக்கு அல்லது ஆதரவாளர்களுக்கு ஏதேனும் கெடுதி ஏற்படுமானால் அதற்கு தேவானந்தாவும் ஈ.பி.டீ.பி. தலைமையும் நேரடி பொறுப்புச் சொல்லியாக வேண்டும் எனக் கூறுவதோடு இலங்கையிலும் அனைத்துலகிலும் உள்ள தொழிலாளர், புத்திஜீவிகள் இளைஞர்களையும் ஏனையோரையும் இந்த அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான பாரதூரமான தாக்குதல்களை எதிர்த்துக் குரல் கொடுக்குமாறு வேண்டுகின்றோம்.

 

 

 

 

வாசகர்களே: உலக சோசலிச வலைத்தளம்(WSWS ) உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறது. தயவுசெய்து மின்னஞ்சல் அனுப்பவும்.



Copyright 1998-2000
World Socialist Web Site
All rights reserved