World Socialist Web Site www.wsws.org |
WSWS: செய்திகள் & ஆய்வுகள்
Sri Lankan president relies on trade union leaders for support இலங்கை ஜனாதிபதி தொழிற்சங்கத் தலைவர்களின் ஆதரவில் நம்பிக்கை By Dianne Sturgess இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க 6 அமைச்சரவை அமைச்சர்களுடன் சேர்ந்து தனது அரசாங்கத்தின் அடக்குமுறை அவசரகால நடவடிக்கைகளுக்கும் தமிழீழ பிரிவினைவாதிகளுக்கு எதிராக இடம் பெற்று வரும் யுத்தத்துக்கும் ஆதரவு தரும்படி கோரும் முன்னொருபோதும் இடம்பெறாத வகையில் ஒரு கூட்டத்தை மே 16ம் திகதி மாலை நாட்டின் தொழிற்சங்கத் தலைவர்களுடன் நடாத்தினார். தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஒரு தொகை படுமோசமான இராணுவத் தோல்விகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஒரு ஐக்கிய அரசியல் முன்னணியை உருவாக்கும் ஒரு முயற்சியாக அனைத்து கட்சி கூட்டத்தை நாடாத்திய ஒரு நாளின் பின்னர் ஜனாதிபதி குமாரதுங்க தொழிற்சங்கத் தலைவர்களை அலரிமாளிகைக்கு அழைத்தார். அரசாங்கச் சார்பு 'டெயிலி நியூஸ்' பத்திரிகையின்படி குமாரதுங்கவும் அவரின் அமைச்சர்களும் 50 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 84 பிரதிநிதிகளுக்கு வடக்கில் உருவாகியுள்ள இராணுவ நிலைமையைப் பற்றி விளக்கி கூறியதோடு யுத்த நடவடிக்கைகளில் அவர்களின் நேரடி பங்காற்றலையும் வேண்டி நின்றனர். இந்தக் கூட்டத்தில் ஆளும் பொதுஜன முன்னணி அரசாங்கத்தில் இணைந்து கொண்டுள்ள சகல கட்சிகளையும்- ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி உட்பட- சேர்ந்த தொழிற்சங்கங்கள் மட்டுமன்றி எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வீ.பி. தலைமையிலான தொழிற்சங்கங்களும் 'இடதுசாரி' தலைமையிலான தொழிற்சங்கங்களான இலங்கை வர்த்தக ஊழியர் சங்கம் (CMU), இலங்கை வங்கி ஊழியர் சங்கம் போன்றவையும் கலந்து கொண்டன. இலங்கை மத்திய வங்கி ஊழியர் சங்கத்துக்கும் நவசமசமாஜக் கட்சி தலைமையிலான தொழிற்சங்கங்களுக்கும் மட்டும் அழைப்பு கிடைக்கவில்லை. கூட்ட ஒழுங்கமைப்பாளரான அமைச்சர் அலவி மெளலானா, இக்கூட்டத்தில் கலந்து கொள்ள உடன்பட்டு வருகை தந்த சகலரையும் பெரும் ஆரவாரத்துடன் வரவேற்றார். 'டெயிலி நியூஸ்' பத்திரிகை இதைப் பற்றிக் கூறுகையில் குறிப்பிட்டதாவது: "அமைச்சர் மெளலானா இக்கூட்டத்தை ஒரு முக்கிய திருப்பமாக வருணித்தார். சுதந்திர இலங்கையின் வரலாற்றில் அனைத்து பெரும் தொழிற்சங்கங்களும் அரசின் தலைவியை முதற்தடவையாகச் சந்தித்தினர்" என்றது. மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகளின் அமைச்சராகவும் செயற்படும் அலவி மெளலானா, குமாரதுங்கவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து கொண்டுள்ள தொழிற்சங்கங்களின் தலைவராகவும் தொழிற்சங்க கூட்டு சம்மேளன அதிபராகவும் செயலாற்றுகின்றார். இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஏனைய அமைச்சர்களுள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்த, பீ.எம். ஜயரத்ன, தர்மசிரி சேனாநாயக, மங்கள சமரவீர, சீ.வீ.குணரத்னவும் அடங்குவர். மெளலானா 'டெயிலி நியூஸ்' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் குமாரதுங்க "இன்றைய யுத்த நிலைமையைக் கையாள அனைத்து தொழிற்சங்கங்களதும் பூரண ஒத்துழைப்பை வேண்டினார். தொழிற்சங்கங்கள் தமது சேவையை கிராம மட்டத்தில் சோதனைச் சாவடிகளை நிர்வகித்தல், ஆஸ்பத்திரிகளின் உணவு விநியோகம் முதலான நடவடிக்கைகளில் சுயேச்சையாக ஈடுபட முடியும் எனத் தெரிவித்தன". ஏனைய அறிக்கைகளின்படி குமாரதுங்க "விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்கும் வரை" யுத்தத்தை முன்னெடுக்கும் தமது அரசாங்கத்தின் திட்டத்தை விளக்கினார்." அவர் வேலைத்தளங்களில் "சிவிலியன் பாதுகாப்பு கமிட்டிகளை" அமைக்கும் நடவடிக்கையில் உதவுமாறு தொழிற்சங்கங்களை வேண்டிக் கொண்டதோடு யுத்த நடவடிக்கைகளுக்கான வேறு சிபார்சுகளையும் வேண்டினார். "நிலைமை வழமைக்கு திரும்பும்" வரை தொழிற்சங்கத் தலைவர்கள் எதுவிதமான வேலை நிறுத்தங்களையோ அல்லது தொழிற்துறை நடிவடிக்கைகளையோ அனுமதிக்க கூடாது என வலியுறுத்தினார். மே 22ல் முக்கிய இராணுவத் தளமான ஆனையிறவில் இராணுவம் தோல்வி கண்டதன் பின்னர் அரசாங்கம் முழு அளவிலான செய்தி தணிக்கையை திணித்தது. வேலை நிறுத்தங்களை தடை செய்தது. அரசியல் கூட்டங்களையும் ஊர்வலங்களையும், மறியல் போராட்டங்களையும் கூட தடை செய்தது. துண்டுப் பிரசுரங்கள் சுவரொட்டிகள் விநியோகம் கூட தடை செய்யப்பட்டுள்ளது. இன்று எந்த ஒரு அடிப்படை அரசியல் அல்லது கைத்தொழில் நடவடிக்கைக்காக வாதிடுவதும் கூட ஒரு குற்றம் ஆகியுள்ளது. ஆனால் அத்தகைய படு கொடூரமானதும் ஜனநாயக எதிர்ப்பானதுமான நடவடிக்கைகளை நிறைவேற்றுவது ஒன்று. அவற்றை அமுல் செய்வது வேறொன்று. தொழிற்சங்கங்களுடனான இந்த மாநாடு, அரசாங்கம் இவற்றின் அங்கத்தவர்களுக்கு எதிரான நடிவடிக்கைகளை எடுப்பதை பாதுகாப்பதற்கு தொழிற்சங்க அதிகாரத்துவத்தில் பெரிதும் தங்கியுள்ளது என்பதை எடுத்துக் காட்டிக் கொண்டுள்ளது. அன்றைய தினம் இங்கு கூடிய தொழிற்சங்கங்களில் ஐந்து தொழிற்சங்கங்களைத் தவிர ஏனைய சகல தொழிற்சங்க அதிகாரிகளும் இதனை ஏற்றுக் கொள்ள இணங்கினர். யூ.என்.பி.யுடன் இணைந்த தேசிய ஊழியர் சங்கம் யுத்தத்துக்கும் அவசரகால விதிகளுக்கும் பூரண ஆதரவு வழங்கினர். ஆளும் பொதுஜன முன்னணியின் தொழிற்சங்க அதிகாரிகளின் சார்பில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தொழிற்சங்கத் தலைவர் டபிள்யூ.எச்.பியதாச, போர்வீரர்களை சோதனைச் சாவடிகளில் இருந்து விடுவித்து அவர்களை யுத்த முனைக்கு அனுப்பும் விதத்தில் யூனியன்கள் "பாதுகாப்பு வேலை" களில் பங்குகொள்ளும் ஒரு வேலைத்திட்டத்தை அபிவிருத்தி செய்யும்படி ஜனாதிபதி குமாரதுங்கவை வேண்டிக் கொண்டார். அரசாங்க சேவை தொழிற்சங்க சம்மேளனத் தலைவரான பியதாச கூறியதாவது: "நாம் இன்று ஒரு தீர்க்கமான கட்டத்தில் இருந்து கொண்டுள்ளோம். நாட்டின் பிரதேச ஒருமைப்பாடு பற்றிய ஒரு பிரச்சினை தலைதூக்கியுள்ளது. அரசாங்கம் இதைப் பற்றி யோசித்து, இதையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்." பியதாச, 1980ல் ஜனாதிபதி ஜெயவர்தன ஆட்சியில் இடம்பெற்றது போல் அரசாங்கம் அவசரகால விதிகளை வேலைநிறுத்தங்களை நசுக்கித் தள்ள பயன்படுத்தவில்லை எனக் கூறி புதிய அவசரகால சட்ட விதிகளுக்கான தமது ஆதரவை நியாயப்படுத்த முயன்றார். அதே மூச்சில் பொதுஜன முன்னணி அரசாங்கம் அடக்குமுறை நடவடிக்கைகளைத் தவிர்த்துக் கொள்வதில் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். லங்கா சமசமாஜக் கட்சி தொழிற்சங்கத் தலைவரான எஸ்.சிறிவர்தன அரசாங்க சட்டவிதிகளை வெளிவெளியாக ஆதரித்தார். "அவசரகாலச் சட்டவிதிகளை இயற்றுவதில் தவறேதும் கிடையாது." என அவர் சொன்னார். எவ்வாறெனினும் அவர் இந்தச் சட்டவிதிகளின் காரணமாக "வேலை கொள்வோர் தொழிலாளர்களை மீண்டும் சேவையில் சேர்க்க மறுத்துவிட்ட நிலையிலும்" தாம் "வேலைநிறுத்தங்களை நிறுத்திக் கொள்ள நேரிட்டதை" ஒப்புக் கொண்டனர். கொழும்பு நகர்புறத்தில் உள்ள "இன்டர்நஷனல் கிப்ட் டிசைன் பக்டரி" (International Gift Design Factory) யைச் சேர்ந்த வேலைநிறுத்தம் செய்து வந்த தொழிலாளர்களை வேலை நிறுத்தத்தை நிறுத்திக் கொள்ளும்படி லங்கா சமசமாஜக் கட்சியின் கட்டுப்பாட்டிலான தொழிற்சங்கம் அழைப்பு விடுத்தது தொடர்பாகவே சிறிவர்தன இதைத் தெரிவித்தார். பக்டரி முதலாளி தொழிலாளர்களை மீண்டும் சேவையில் அமர்த்த எதிர்ப்புத் தெரிவித்ததன் காரணமாக 54 தொழிலாளர்கள் வேலை இழந்தனர். வேலைக்குத் திரும்பிய தொழிலாளர்கள் வேறொரு சங்கத்தை அமைத்ததன் மூலம் தொழிற்சங்கக் காட்டிக் கொடுப்புக்குத் தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர். இதைப் பற்றிக் குறிப்பிடுகையில் ஒரு தொழிலாளி கூறியதாவது: "இந்தப் புதிய சட்டங்களின் காரணமாக நாம் ஒரு சட்டப்படி வேலை செய்யும் பிரச்சார இயக்கத்தை நடாத்துவதும் முடியாது போயுள்ளது. எமது தொழிற்சங்கத் தலைவர் அரசாங்கம் அடக்குமுறைச் சட்டங்களை திணிப்பதற்கு முன்னமே இந்த வேலை நிறுத்தத்தைக் கைவிடத் தயார் செய்து வந்தார்". என ஒரு தொழிலாளி குறிப்பிட்டார். கைத்தொழில் அமைதியின்மைக்கான வேறு அறிகுறிகளும் இருந்து வந்தன. அட்டனுக்குச் சமீபமாக உள்ள மஸ்கெலியாவில் உள்ள லக்கொம் தனியார் தோட்டத்தைச் சேர்ந்த சுமார் 225 தொழிலாளர்கள் மே 10ம் திகதி சம்பள வெட்டுக்கு எதிராக அவசரகாலச் சட்டத்தையும் மீறி திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து 13 தொழிலாளர்கள் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் நீண்ட நேரம் குறுக்கு விசாரணை செய்யப்பட்டனர். இந்த வேலை நிறுத்தத்துக்கு தோட்டத் துறையைச் சேர்ந்த நான்கு பெரும் தொழிற்சங்கங்களில்- இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலையக தொழிலாளர் சங்கம், இலங்கை தேசிய தொழிலாளர் காங்கிரஸ், லங்கா தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் - எதுவும் ஆதரவு வழங்கவில்லை. தேயிலைப் பெருந்தோட்டப் பகுதியில் ஒரு பரந்தளவிலான முரண்பாடு வெடிக்கும் சாத்தியங்கள் உண்டு. உயர்ந்த சம்பளத்துக்கான ஒரு போராட்டத்தை கோரி வந்த 600,000 தொழிலாளர்களைச் சாந்தப்படுத்த தொழிற்சங்கங்கள் பெரும் சிரமப்பட்டன. மே 6ம் திகதி சம்பள அதிகரிப்பு சம்பந்தமாக வேலை கொள்வோருடன் இடம் பெற்ற பேச்சுவார்த்தைகள் நான்காவது தடவையாகவும் பொறிந்து போயிற்று. ஆனால் தொழிற்சங்கங்களோ "இன்றைய நிலைமையின் அடிப்படையில்" வேலை நிறுத்தம் செய்யப் போவதில்லை எனத் தெரிவித்தனர். அரசாங்கத்தின் தனியார்மய திட்டங்களை எதிர்த்து வரும் தபால் ஊழியர்கள் நீண்டகாலமாக தபால், தொலைத் தொடர்பு தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளராக இயங்கி வருபவரைப் பதவிநீக்கம் செய்யும்படி கோரியுள்ளனர். தனியார்மயமாக்கத்துக்கான முதற் படியாக தபால் திணைக்களத்தை ஒரு கூட்டுத் தாபனமாக்கும் ஒரு மசோதாவை எதிர்த்து மே 8ம் திகதி இடம்பெற இருந்த எதிர்ப்பு வேலை நிறுத்தத்தை தொழிற்சங்கம் இரத்துச் செய்தது. இந்தப் பொதுச் செயலாளர் இம்மசோதாவை தயார் செய்ய அரசாங்கத்துக்கு உதவினார். இது அவரை ஒரு நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் செயற்குழு இடைநிறுத்தம் செய்யக் காரணமாகியது. அவரைப் பதவி நீக்கம் செய்யும் பொருட்டு தபால் ஊழியர் சங்கப் பிரதிநிதிகள் மே 28ம் திகதி கூடவுள்ளனர். தபால் சேவையை மீளமைக்கும் உலகவங்கி கடனுக்கான ஒரு நிபந்தனையாக ஜூன் மாதமளவில் ஒரு மசோதாவைக் கொணரும் அரசாங்கத்தின் திட்டங்களையும் இது அச்சுறுத்தியுள்ளது. ஏனைய தொழிற் சங்கங்களும் இதே விதத்திலேயே தொழிற்பட்டுக் கொண்டுள்ளன. அரசாங்கம் புதிய சட்டவிதிகளைத் திணித்ததுதான் தாமதம் அரசாங்க நில அளவையாளர் சங்கம், கடந்த ஏப்பிரல் 24ம் திகதி வரை வேலைநிறுத்தம் செய்து வந்த தனது அங்கத்தவர்களை வேலை நிறுத்தத்தை நிறுத்திக் கொள்ளும்படி வேண்டியது. "வடக்கு யுத்தமுனையில் உள்ள நிலைமை காரணமாக நாம் எமது வேலைநிறுத்த இயக்கத்தை மே 05ம் திகதியுடன் தற்காலிகமாக இடை நிறுத்துவோம்" எனத் தொழிற்சங்கம் தெரிவித்தது. "நாம் ஒரு இரத்ததான இயக்கத்தை வெள்ளிக் கிழமை (மே 05) ஏற்பாடு செய்வதோடு கொழும்பு தொடக்கம் களனி வரை நடாத்த இருந்த எதிர்ப்பு ஊர்வலத்தையும் இரத்துச் செய்துள்ளோம்" என இச்சங்கம் மேலும் தெரிவித்தது. அரசாங்க சேவை தொழிற்சங்க சம்மேளனம் உட்பட 17 அரசாங்கதுறை தொழிற்சங்கங்கள் இவை லங்கா சமசமாஜக் கட்சியுன் இணைந்து கொண்டவை- மே 8 -மே 21ம் திகதி வரை சம்பள உயர்வு கோரி நடாத்தவிருந்த மதிய போசன இடைவேலைக் கூட்டங்களையும் இரத்துச் செய்தது. அடக்குமுறைச் சட்டங்களும், தொழில், சேவை நிலைமைகள் மீதாக இடம்பெற்று வரும் தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாளர்களிடையே வளர்ச்சி கண்டு வரும் எதிர்ப்புக் காரணமாக ஐந்து தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தின் அவசரகால விதிகளை கண்டனம் செய்துள்ளன. பாலா தம்பு தலைமையிலான இலங்கை வர்த்தக, கைத்தொழில் ஊழியர் சங்கம் (CMU) இலங்கை வங்கி ஊழியர் சங்கம் (UPTO), தபால் தொழிலாளர் தொழிற்சங்கம் ஐக்கிய அரசாங்க தாதிமார் சங்கம், அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் (நிவிளிகி) என்பனவே அவையாகும்்். ஆனால் இந்தத் தொழிற்சங்கத் தலைவர்கள் இதனை அரசாங்கத்தின் அவசியங்களை நடைமுறைக்கிடும் புதிய சட்டங்கள் என்ற பேச்சளவிலான எதிர்ப்புக்களுடன் நின்றுவிடுகின்றார்கள். யூ.பி.ரீ.ஓ. (UPTO) தபால் தொழிற்சங்கத் தலைவர்களைப் போலவே இலங்கை வங்கி ஊழியர் சங்கமும் (CBEU) பெருமளவிலான பிரச்சார இயக்கத்தை நிறுத்திக் கொண்டுள்ளன. மே 15ம் திகதி அவர்கள் 35 வீத சம்பள உயர்வுக்கான சங்கத்தின் நீண்டகால பிரச்சார இயக்கத்தை நிறுத்தவும் தனியார் வங்கிகளின் 21 வீத சம்பள உயர்வினை அங்கீகரிக்கவும் தீர்மானம் செய்து கொண்டுள்ளன. ஏனைய கோரிக்கைகள் தொடர்பாக மூன்று வருடக் காலக் கெடுவையும் ஏற்றுக் கொண்டுள்ளனர். மேலும் இந்த ஐந்து தொழிற்சங்கங்களில் ஒன்று தன்னும் அவசரகாலச் சட்ட அதிகாரங்களுக்கு எதிராக ஒரு பிரச்சார இயக்கத்துக்கு அழைப்பு விடுக்கவும் இல்லை. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு (LTTE) எதிரான அரசாங்கத்தின் யுத்தத்தை எதிர்க்கவும் இல்லை. தாதிமார் சங்கம் யுத்தத்தை வெளிவெளியாக ஆதரித்துக்கொண்டுள்ளது. அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் சீ.எம்.யூ.வினதும் வங்கி ஊழியர் சங்கத்தினதும் நிலைப்பாட்டை அங்கீகரித்துள்ளது. ஆனால் முன்னர் வெளியிட்ட ஒரு பத்திரிகை அறிக்கையில் "சிவில் உரிமைகள்" மீதான தடைகளுக்கு மத்தியிலும் இது அரசாங்கத்தை "முழுமனதாக" ஆதரித்தது. சீ.எம்.யூ. இலங்கை வங்கி ஊழியர் சங்கங்களின் யுத்தம் தொடர்பான நிலைப்பாடு நழுவி ஓடுவதாக இருந்து கொண்டுள்ளது. இவை ஒரு யுத்த நிறுத்தத்துக்கும் அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான ஒரு "பேச்சுவார்த்தை மூலமான தீர்வுக்கு" அழைப்பு விடுத்துள்ளன. இது முற்றிலும் இலங்கை வர்த்தக சமூகத்தின் ஒரு பகுதியினரது கோரிக்கைகளுக்கும் மேற்கத்தைய வல்லரசுகளின் பேரம் பேசல்களுக்கும் இணங்கிப் போவதாகும். பொதுஜன முன்னணியுடன் கூட்டுச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் கூட முன்னர் அரசாங்கம் யுத்தத்தைத் தொடர பூரண ஆதரவு வழங்கும் அதே வேளையில் நோர்வேயோ அல்லது வேறு எந்த ஒரு நாடோ அனுசரணையாளராக தொழிற்பட அழைப்பு வடுத்திருந்தன. யுத்தத்துக்கு நிதியீட்டம் செய்யும் பொருட்டு அவர்கள் சுமக்கத் தள்ளப்பட்டுள்ள பிரமாண்டமான பளுவின் தாக்கம் காரணமாக- அதிகரித்த வரி, அரசாங்க சேவைகள் வெட்டு, வாழ்க்கைத் தரத்தின் வீழ்ச்சி- தொழிலாளர்களிடையே உருவான வெறுப்புக்கள் குவியுமோ, என்ற அச்சம் பொதுஜன முன்னணி அரசாங்கத்தைப் பீடித்துக் கொண்டுள்ளது. அரசாங்கம் படு கொடூரமான சட்டங்களினால் ஆயுதபாணிகள் ஆக்கப்பட்டுள்ள நிலையில் பெரிதும் வெடித்துச் சிதறும் நிலைமை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்துவதற்கு முற்றிலும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களிலேயே சார்ந்துள்ளது.
Copyright
1998-2000 |