World Socialist Web Site www.wsws.org |
WSWS: செய்திகள் & ஆய்வுகள்
How war has shattered the life of a Sri Lankan village Pura Handa Kaluwara( Death on a Full Moon Day), written and directed by Prasanna Vithanageயுத்தம் இலங்கை கிராமத்தின் வாழ்க்கையை தவிடு பொடியாக்கியது எப்படி: "புர ஹந்த கலுவர" (பெளர்ணமி தின மரணம்) திரைக்கதை, நெறியாள்கை: பிரசன்ன வித்தானகே By Piyaseeli Wijegunasinghe இலங்கை அரசாங்கமும் அரச நிர்வாகத்துக்குட்பட்ட இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபனமும் பிரசன்ன வித்தானகேயின் "புரஹந்த கலுவர" திரைப்படம், திரையிடப்படுவதை திட்டமிட்டுத் தடை செய்து வருகின்றன. இதற்கான காரணம் தெளிவானது. 'புர ஹந்த கலுவர' (பெளர்ணமி தின மரணம்) தீவின் வடக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெறும் இலங்கை அரசின் 16 வருடகால காட்டுமிராண்டி யுத்தத்தினால் மக்களின் வாழ்க்கை நிலைமைகளில் ஏற்பட்ட பேரழிவைச் சித்தரிக்கின்றது. பிரசன்ன வித்தானகே இந்தத் திரைப்பட விமர்சனத்தை எழுதுபவர், இலங்கையில் உள்ள பிரான்சிய தூதரகத்துடன் இணைந்த 'அலயன்ஸ் பிரான்சிஸில்' (Alliance Francise) இடம் பெற்ற சமீபகால இலங்கைத் திரைப்பட விழாவில் கலந்து கொண்டதன் மூலம் இந்தத் திரைப்படத்தைத் தரிசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இந்தத் திரைப்பட விழாவில் படத்தின் ஒரு 'வீடியோ' ஒரு பெருந்திரையில் போட்டுக் காண்பிக்கப்பட்டது. இந்த இலட்சணத்தில் விமர்சகன் படத்தைத் தரிசிப்பதானது அதை ஒரு நியாயமான முறையில் ஆய்வு செய்வதைத் தடுக்கின்றது. இத்தகைய ஒரு பாதகமான நிலைமையிலும் கூட வித்தானகேயின் திரைப்படம் ஒரு சக்திவாய்ந்த படைப்பு; 55000 உயிர்களைப் பலிகொண்டதும் இன்னும் பல்லாயிரக் கணக்கானோரை அங்கவீனர்களாகவும், அகதிகளாகவும், வறியவர்களாகவும் ஆக்கியதுமான ஒரு யுத்தத்தின் எண்ணற்ற துயரங்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டவர்களின் வாழ்க்கையில் எதிரொலிக்கும் ஒன்று. 'புர ஹந்த கலுவர' 80,000 (அமெரிக்க) டாலர்கள் மட்டும் செலவழித்துத் தயாரிக்கப்பட்ட ஒரு திரைப்படம்; இலங்கையில் ஆண்டுதோறும் தயாரிக்கப்படும் ஒரு சில பழுவான படங்களில் ஒன்றாகும். பிரசன்ன வித்தானகேயின் சுயநம்பிக்கை மிக்கதும் உணர்ச்சி பூர்வமானதுமான நெறியாள்கையும் முக்கிய பாத்திரமான வன்னிஹாமியாக நடிக்கும் பிரபல நடிகர் ஜோ அபேவிக்கிரமவின் அபூர்வமான நடிப்பும் சங்கமமாகி, யுத்தத்தின் அவஸ்தை நிறைந்த துன்பங்களுக்கு எதிராகப் போராடும் ஒரு மனிதனைப் பற்றிய உன்னதமான கதை இங்கு சித்தரித்துக் காட்டப்பட்டுள்ளது. இத்திரைப்படம் இலங்கையின் வடபாகத்தின் உலர் வலயத்தில் உள்ள ஒரு சிங்களக் கிராமத்தில் வாழும் ஒரு முதிய விவசாயியான வன்னிஹாமியின் கதையைக் கூறுகின்றது. ஆரம்பத்தில் நாம் ஒரு நீண்ட வரட்சியினால் வரண்டு போன ஒரு நிலத்தையும், தண்ணீர் தட்டுப்பாட்டினால் பெரும் சங்கடங்களுக்குள்ளாகி உள்ள வன்னிஹாமி உட்பட்ட கிராமத்தவர்களையும் தரிசிக்கின்றோம். வன்னி ஹாமி கண் பார்வை இழந்து போன நிலையிலும் அனுபவம் மிக்க ஒரு விவசாயி. அவர் நான்கு நாட்களுக்குள் மழை பெய்யும் எனக் கட்டியம் கூறுகின்றார். எதிர்காலத்தில் தனது மருமகனாக வரவுள்ள ஒருவரின் துணையோடு பருவகால மழைக்குத் தாக்குப் பிடிக்கக் கூடிய விதத்தில் மண்குடிசையின் மைத்துப்போன கூரையை சீர் செய்வதில் ஈடுபடுகின்றார். வன்னிஹாமிக்கு இரண்டு பெண் பிள்ளைகளும் ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகளான சுமணா (நயனா ஹெட்டியாராச்சி) திருமணமாகி, வீட்டில் இருந்து வெளியிடத்தில் வாழ்கிறார். இளைய மகளான சுனந்தா (பிரியங்கா சமரவீர) கிராமத்தில் உள்ள ஒரு இளைஞனை மணம் செய்யும் எதிர்பார்ப்புடன் தந்தையுடன் வசிக்கிறாள். வன்னிஹாமியின் ஏக புத்திரன் வடக்கில் யுத்தம் செய்ய இராணுவத்தில் சேர்ந்து கொண்டுள்ளான். படம், பெளத்த சித்தாந்தங்களை இசைகூட்டி இசைக்கும் 'காதா' (Gathas) ஒலியுடன் (புத்தங் சரணங் கச்சாமி...) ஆரம்பிக்கின்றது. பெளத்தம் மக்கள் மீது கொண்டுள்ள செல்வாக்கின் ஆளுமை பின்னர் படத்தில் கடும் விமர்சனத்துக்கு இலக்காகின்றது. இந்தச் சித்தாந்தத்தை இசைப்பதானது பெளத்தம் வாழ்க்கையை உள்ளீர்த்துக் கொள்ளும் முறைக்கும், யுத்தத்தினால் நாசமாக்கப்பட்ட ஒரு நாட்டின் யதார்த்தத்துக்கும் இடையே இருந்து கொண்டுள்ள ஒரு மாபெரும் சமத்துவமின்மையை சினிமா ரசிகனும் புரிந்துகொள்ளச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பது தெளிவு. இங்கு இசைக்கப்படும் சித்தாந்தக் கவிகள் "மூன்று இரத்தினங்கள்" (Triple Gems) (புத்தர், அவரின் சித்தாந்தம், அவரின் சீடர்கள் -பெளத்த பிக்குகள்) கடவுள் பக்தி கொண்டவருக்கு ஆசீர்வாதங்கள் கிட்டும் என்பதையும் அவரை ஆபத்துக்களில் இருந்து பாதுகாக்கும் என்பதையும் இது இங்கு குறித்து நிற்கின்றது. படத்தின் தொடக்கத்தில் இந்தப் பாடல் வரிகளை பின்னணி இசையுடன் சேர்த்து இசைப்பதானது இப்படத்தைத் தரிசிப்பவருக்கு பாரம்பரியமான ஒன்றைத் தவிர வேறு எந்த அர்த்தத்தையும் வழங்கும் சாத்தியத்தைக் கொண்டதாக இல்லை. அந்தக் கீதமானது காற்றினால் அள்ளிச் செல்லப்பட்டு, கிராமத்தின் தூர அடிவானத்தில் எதிரொலிப்பதாகவும் கூட ஒருவர் குறிப்பிடலாம். அது ஒரு அஜாக்கிரதையான பார்வையாளர் மீது அதன் தலைமுறைக் கணக்கான பாரம்பரிய தாக்கங்களையும் ஏற்படுத்த முடியும். மனிதன் மீது இழைக்கப்பட்ட எந்த ஒரு சமூக அட்டூழியத்தையும் சிந்திக்காது ஏற்றுக்கொள் கொள்வதை ஸ்தம்பிக்க வைக்கவும் செய்யும். பெளர்ணமி தினம் பெளத்தர்களுக்கு மத ரீதியில் பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்த பெளர்ணமி தினம் வருகின்றது. பெளத்தர்கள்- இந்த நாள் "உலகளாவிய ரீதியில் அஹிம்சை" (எந்த உயிருக்கும் தீங்கிழைக்கக் கூடாது) நிலவ வேண்டிய ஒரு நாள் எனக் கொள்கிறார்கள். மனித இனத்தின் சிந்தனையிலும் செயலிலும் பேச்சிலும் சாந்தம் மேலாதிக்கம் செலுத்த வேண்டிய அன்றைய தினம் வன்னிஹாமியின் மகனது சவப் பெட்டி கிராமத்துக்கு வந்து சேர்கிறது. திரைப்படம் முக்கியமாக தனது மகனின் மரணம் பற்றிய வன்னிஹாமியின் உணர்வுகளைத் தொட்டுக் காட்டுகின்றது. தனது மகன் யுத்தத்தில் கொல்லப்பட்டு விட்டான் என்ற சகல சாட்சிகளுக்கும் முரணான விதத்தில் அவர் அதை நம்ப மறுக்கும் விதத்தைச் சிறப்பாகக் காட்டுகின்றது. இறந்த படையாளின் குடும்பத்தின் அங்கத்தவர்களுக்கு நஷ்டஈடாக வழங்கப்பட்ட பணத்தையும் வன்னி ஹாமி ஏற்றுக் கொள்ள மறுக்கிறார். அங்குதான் திரைப்படத்தின் முக்கியமான அடிப்படை இருந்து கொண்டுள்ளது. வடக்கில் இடம்பெறும் யுத்தம் தமது யுத்தம் என மக்களால் கணிக்கப்படவில்லை. சாதாரண மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் எந்த ஒரு பாத்திரமும் யுத்தத்தில் கலந்து கொள்வதையிட்டோ அல்லது அதை வெற்றி கொள்வதையிட்டோ உணர்ச்சி வசப்பட்டுப் பேசுவதாக இல்லை. இது உண்மையில் அவர்களின் வெறுத்துப் போன அடிப்படை அவசியங்களுக்கு அப்பாற்பட்டது. ஆனால் அது அதே சமயம் வாழ்க்கை நிலைமைகள் பெரிதும் கஷ்டமானதும் பிரச்சினைக்கு உரியதுமானதாகும் போது ஒரு ஜீவனத்துக்கு "அவசியமான கெடுதியாக" வரும் விதத்தில் கபடத்தனமான முறையில் நிர்வகிக்கப்படுகின்றது. யுத்தத்துக்கு ஆதரவான ஒரே பாத்திரமாக கிராம விகாரையின் பெளத்த பிக்குவே விளங்குகின்றார். அந்த பெளத்த பிக்குவே யுத்தத்துக்கு ஆதரவான தேசாபிமான உரை நிகழ்த்துகின்றார். அவர் வேறு சில கிராமவாசிகளுடன் துயரத்தில் ஆழ்ந்து போன வன்னி ஹாமியிடம் விஜயம் செய்கின்றார். இந்தப் பிக்கு, தாய் நாட்டுக்காகத் தன்னை அர்ப்பணம் செய்து கொண்ட படையாளான வன்னிஹாமியின் மகனை கெளரவிக்கும் விதத்தில் ஒரு பஸ்தரிப்பை அமைக்க வேண்டும் என கிராமவாசிகளிடம் கூறுகின்றார். ஒரு பஸ்தரிப்பை எதற்காகத்தான் அமைத்தாலும் அது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என வன்னிஹாமி எடுத்த எடுப்பில் பதிலளிக்கின்றார். இத்திரைப்படம் கிராமவாசிகள் பொருளாதார ரீதியில் அவஸ்தைக்குள் தள்ளப்பட்டுள்ள ஒரு நிலைமையில் மட்டுமே இராணுவத்தில் சேர முயற்சிக்கிறார்கள் என்பதைத் தெளிவுபடுத்துகின்றது. உதாரணமாக வன்னிஹாமியின் எதிர்கால மருமகனாக வர இருப்பவர், இந்த நிலை இப்படியே தொடருமானால் தானும் இராணுவத்தில் சேரவேண்டி நேரிடும் எனக் கூறுகின்றார். வன்னிஹாமியின் மகன் இராணுவத்தில் சேர்ந்தது, தனது குடும்பத்துக்கென ஒரு நல்ல வீட்டைக் கட்டவும், தனது இளைய சகோதரிக்கு ஒரு கண்ணியமான திருமணத்தை செய்து வைப்பதை உத்தரவாதம் செய்யும் நோக்கத்துடனுமே. யுத்த முனையில் இருந்து இளைஞன் அனுப்பிவைத்த கடிதம் அவனின் மரணத்தின் பின்னரே குடும்பத்துக்குக் கிடைக்கிறது. கடிதம் அவன் விரைவில் வீடு திரும்ப உள்ள விருப்பையும் தனது பொறுப்புக்களை நிறைவேற்றி வைப்பதில் ஈடுபட முடியும் என்பதையும் தெரிவிக்கின்றது. வன்னிஹாமி இந்தக் கடிதத்தை கையிலே வைத்திருக்கிறார். ஏனெனில் அது அவரது மகன் இறந்து போய்விடவில்லை என்ற அவரின் நம்பிக்கையினை மீண்டும் ஊர்ஜிதம் செய்கின்றது. சவப்பெட்டி, அதிகாரிகளால் "சீல்" வைக்கப்பட்ட நிலையில் வந்து சேர்கின்றது. அத்தோடு எவரும் மையத்தின் மிச்ச சொச்சங்களை பார்க்க முடியாது உள்ளமையானது முதியவரின் திட நம்பிக்கையை மேலும் பலப்படுத்துகின்றது. தனது மகன் இறந்து போய்விட்டான் என்பதை ஏற்றுக் கொள்ள வன்னிஹாமி மறுப்பதானது வாழ்க்கை பற்றிய அவரின் சொந்த மனோபாவத்துடன் பிணைந்துகொண்டுள்ளது. வன்னிஹாமி அவரின் பார்வையிழந்த பரிதாபமான உடல் பலவீனத்துக்கிடையேயும் படத்தின் சகல காட்சிகளிலும் வெற்றியீட்டிக் கொண்டுள்ளார். அவர் வயலில் வீழ்ந்து, கிராமத்தவர்களால் வீட்டுக்குத் தூக்கிச் செல்லப்படும் போது மட்டுமே நாம் அவரை ஒரு வலது குறைந்தவராகக் காண்கின்றோம். மற்றைய தருணங்களில் அவரின் சுறுசுறுப்பும், உஜாரும், தன்நம்பிக்கையும் அந்தளவுக்கு உயர்ந்து விளங்குவதால் பார்வையாளர்கள் வன்னிஹாமி ஒரு குருடர் என்பதை மறந்து போய்விடுகின்றார்கள். அவர் எதுவித சிரமமும் இல்லாத விதத்தில் படத்தில் ஒரு பலம் வாய்ந்த கதாபாத்திரமாக நின்று கொள்கிறார். கஷ்டங்களை வெற்றிகொள்ளும் தனது சக்தியில் வன்னிஹாமி கொண்டுள்ள நம்பிக்கை அவரை தனது மகனைப் பற்றி அத்தகைய விசுவாசம் கொள்ளச் செய்கின்றது. தனது குடும்பத்தின் முன்னோடிகளில் ஓடிய இரத்தம் தனது நரம்புகளிலும் தனது மகனின் நரம்புகளிலும் கூட ஓடிக் கொண்டுள்ளதாக அவர் கூறுகின்றார். இறந்து போன இளைஞனின் பேரில் ஒரு தானம் வழங்கும் வைபவம் இடம்பெறுவதற்கு ஒரு சில தினங்களுக்கு முன்னர், இரண்டு படையாட்கள், இருட்டில் வருகை தருகின்றனர். தாம் தானத்தின் பேரில் ஒரு அன்பளிப்பைக் கொண்டு வந்துள்ளதைக் கூற தனது குடிசையின் முன்னால் இருந்து கொண்டுள்ள வன்னிஹாமியை நெருங்குகின்றனர். அவரது மகனின் இராணுவப் பிரிவு அங்கத்தவர்கள் இந்த அன்பளிப்பை வழங்கியதாக அவர்கள் விளக்குகின்றனர். அவரின் மகனின் மரணத்தை நிரூபிக்கும் இந்தப் புதியதும் மறுக்க முடியாததுமான சாட்சியத்தை எதிர்கொள்ள முடியாமல் முதியவர் திண்டாடுவதை நாம் காண்கின்றோம். இது படத்தில் மனதை உருக்கும் மிகவும் சக்திவாய்ந்த ஒரு கட்டமாகும். மறுநாள் அதிகாலை அடி வானம் சிறிது செந்நிறமாக நிறம் பெயர்ந்தது தான் தாமதம் வன்னிஹாமி தனது மண்வெட்டியை தோளில் போட்டுக் கொண்டு வயல்புறமாகச் செல்வதை நாம் காண்கின்றோம். நாம் தனது மகன் இறந்து போனான் என்ற உண்மையை வன்னிஹாமி இறுதியாக ஒப்புக்கொண்டுவிட்டாரோ என ஆச்சரியப்படுகின்றோம். ஆனால் எதிர்பாராத ஒன்று இடம்பெறுகின்றது. வன்னிஹாமி தனது மகனின் புதைகுழிக்குச் சென்று அதைத் தோண்டத் தொடங்குகின்றார். தண்ணீர் அள்ள கிராமக் குளத்துக்கு வந்த ஒரு பெண் வன்னிஹாமியை கண்டுவிடுகிறாள். அதைக் கிராமத்தவர்களுக்குத் தெரிவிக்கின்றாள். அவர்கள் உடனடியாக ஸ்தலத்துக்குச் சென்று சவப்பெட்டியை தோண்டி எடுக்கும் பணியில் ஈடுபடுகின்றார்கள். வன்னிஹாமியை கிண்டிவிட்டுக் கொண்டுள்ள சந்தேகங்களைத் தணிய வைக்கும் நோக்குடன் அவர்கள் ஈடுபட்டுள்ளது தெளிவாகின்றது. அவர்கள் சவப்பெட்டியை தோண்டி எடுத்து, 'சீலை' உடைத்து, அதனைத் திறக்கின்றார்கள். இடம் பெற்று வரும் சகலதையும் கண்டு உற்சாகமாக இருந்து வந்த வன்னிஹாமி, சவப் பெட்டிக்குள் கை வைத்து அதனுள் இருப்பதை தடவுகின்றார். சவப் பெட்டிக்குள் சில மரக்கட்டைத் துண்டுகளும் ஒரு பெரும் கல்லுமே கிடந்தன. வன்னிஹாமியின் மகனின் மரணத்தை நிரூபிக்கும் எதுவுமே இருக்கவில்லை. சுடலையில் இருந்து வன்னிஹாமி வெளியேறும் போது அவர் ஒரு தோல்வி கண்டவராகவோ அல்லது மனமுடைந்து போனவராகவோ இல்லை. தனது மகன் இன்னமும் உயிருடன் இருக்கின்றான் என்பதில் நம்பிக்கை கொண்டவராக அவர் இருப்பது தெளிவாகின்றது. உதாரணகுணம் தனது மகன் இறந்துவிட்டான் என்பதை ஏற்றுக்கொள்ள விடாப்பிடியாக வன்னிஹாமி மறுப்பது பார்வையாளர்களிடையே பலமான உணர்வுகளைத் தூண்டுகின்றது. அவரது மகனின் மரணத்தின் சகிக்க முடியாத யதார்த்தத்துக்கு எதிராகச் செயற்படும் காப்பீட்டு பொறிமுறையின் (Protective mechanism) பெறுபேறாகும் என்ற நோக்கில் இருந்து இது அணுகப்படும் போது மட்டுமே அவரது மகனின் மரணத்தை ஏற்க மறுக்கும் முதியவரின் நம்பிக்கை முற்றிலும் உண்மையாகிறது. எவ்வாறெனினும் வன்னிஹாமி வெறுமனே ஒரு துயரமான மனிதா் மட்டும் அல்ல என்பதை வலியுறுத்தியாக வேண்டும். அவரது பாத்திரத்தில் ஏனைய கிராமவாசிகள் புரிந்து கொள்ள முடியாது போய்விடும் ஒரு உதாரணகுணம் இருந்து கொண்டுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக அவரது மகனின் மரணத்தின் பேரிலான நஷ்டஈடாக அரசு வழங்கும் பணத்தை அவர் ஏற்றுக் கொள்ள மறுப்பதன் மூலம் இந்தப் பண்பு வெளிப்பாடாகின்றது. வன்னிஹாமி தனது மகனுடன் கொண்டிருந்த நெருக்கமான பாசம், அவன் இறந்து போனதை எதிர்கொள்ளுவதை அசாத்தியமாக்கி விடுகின்றது. இதே பாசமும் தீவிரமான ஆன்மீக கெளரவமும் வன்னிஹாமி பணத்தைப் பெற்றுக் கொள்வதற்குக் குறுக்கே நின்று கொண்டுள்ளன. "இந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் எனது மகன் வீடு திரும்பினால் நாம் அவனுக்கு முகம் கொடுப்பது எப்படி"? என்று அவர் கேட்கின்றார். மற்றவர்களுக்கு வன்னிஹாமி சற்றுப் பைத்தியம் பிடித்தவர் போல் கூடத் தோன்றக் கூடும். எனினும், அவர் கொண்டுள்ள நிலைப்பாட்டில் ஒரு ஆழமான மனிதநேய தன்மை இருந்து கொண்டுள்ளது. இளைஞன் யுத்தத்துக்கு சென்றது, தனது கனவை நனவாக்குவதற்கான ஒரே வழியாக அது இருந்து கொண்டுள்ளதாக கண்டதே. இது அவரது மகனின் மகிழ்ச்சிக் கனவாக விளங்கியது. அவரது மரணத்தின் பேரில் வழங்கப்பட்ட நஷ்டஈட்டுப் பணத்தை பெற்றுக் கொள்வது, ஒரு காட்டிக்கொடுப்பாக மட்டுமன்றி, அவன் மனதில் கொண்டிருந்த கனவுகளையும் காட்டிக் கொடுப்பதாக இருந்திருக்கும். சவப்பெட்டி திறக்கப்பட்டதும் வன்னிஹாமி மீது உறவினர்கள் வசைபாடுவதோ அல்லது கிராம அரசாங்க அலுவலர் நஷ்டஈட்டுப் பணத்தை ஏற்றுக் கொள்ளும்படி நச்சரிப்பதோ நின்று போயிற்று. சவப்பெட்டி மீது வைக்கப்பட்டிருந்த உத்தியோக பூர்வமான 'சீலை' உடைத்ததன் பின்னர் பணத்துக்கு விண்ணப்பிப்பது சாத்தியமற்று போய்விடுகின்றது. திரைப்படத்தின் இறுதிக் கட்டங்களில் நாம் வன்னிஹாமியை படத்தின் தொடக்கத்தில் கண்டது போலவே ஒரு மனவுறுதியும் அமைதியும் நிறைந்த ஒரு மனிதனாகக் காண்கின்றோம். அவர் தண்ணீர் அள்ள கிராமக் குளத்துக்கு வருகின்றார். குளத்தில் நீராடும் இளைஞர்களின் சிரிப்பு ஒலியை ஆவலுடன் அவதானிக்கின்றார். அரிதாகக் காணக்கிடைக்கும் ஒரு சிரிப்பு அவரது உதட்டில் தோன்றுகின்றது- ஒரு வேளை தனது மகன் இந்தக் குளத்தில் நீச்சலடித்து விளையாடுவது அவரின் நினைவில் நிழலாடியிருக்க வேண்டும். இங்கு எதிர்பார்ப்புக்களைக் கொண்ட வன்னிஹாமி ஆழமான துயரம் நிறைந்த நிலையில் இருந்து கொண்டுள்ளார். இது வன்னிஹாமியை மட்டுமன்றி பார்வையாளரையும் இறுக்கமாகப் பீடித்துக் கொள்கிறது. எதிர்பாராத கடும் மழை வன்னிஹாமியின் தோள்களில் சடசடவெனப் பொழிந்து அவரைத் தணியச் செய்கின்றது. பல சர்வதேசத் திரைப்பட விழாக்களில் பரந்த அளவில் பாராட்டுக்களைப் பெற்ற இந்த ஏமாற்றம் தரும் சாதாரண படம், யுத்தத்துக்குப் பரந்த மக்களின் ஆதரவு கிடையாது என்பதையும் வடக்கில் வாழும் வறுமையினால் பீடிக்கப்பட்ட சிங்கள விவசாயிகள் உட்பட்ட மக்கள் மீது இலங்கை அரசினால் எதிர்பாராத விதத்திலும் பலாத்காரமான முறையிலும் யுத்தம் திணிக்கப்பட்டுள்ளதைத் தெளிவுபடுத்துகின்றது. இலங்கையில் இடம் பெறும் உள்நாட்டு யுத்தம் மனிதன் மீது ஏற்படுத்தும் தாக்கங்களைப் புரிந்து கொள்ள முயலும் ஒவ்வொருவரும் நிச்சயம் பார்க்க வேண்டிய படம், 'புர ஹந்த கலுவர'.
Copyright
1998-2000 |