World Socialist Web Site www.wsws.org |
WSWS: செய்திகள் & ஆய்வுகள் What business does the US have with the Sinhala chauvinists in Sri Lanka? அமெரிக்கா சிங்கள சோவினிஸ்டுகளுடன் வைத்துக் கொண்டுள்ள உறவு என்ன? By Dianne Sturgess இலங்கையில் வெளியிடப்படும் ஆங்கில வார இதழான "சண்டே டைம்ஸ்" பத்திரிகையில் வெளியான ஒரு செய்தியின்படி இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பிரதி தூதுவரான அண்ரூ மான் (Andrew Mann) உட்பட மூன்று அமெரிக்க இராஜதந்திரிகள் ஜூன் 23ம் திகதி இந்நாட்டின் தமிழர்களுக்கு எதிரான படுமோசமான சிங்கள சோவினிசத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு தீவிர வலதுசாரி இயக்கமான 'சிங்கள உறுமய கட்சி' (Sinhala Heritage Party) யின் அங்கத்தவர்களைச் சந்தித்து கூட்டம் நடாத்தியுள்ளனர். இக்கூட்டம் அமெரிக்க இராஜதந்திரிகளின் வேண்டுகோளின் பேரில் இக்கட்சியின் தலைவரான எஸ்.எல்.குணசேகரவின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பான விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனால் "சண்டே டைம்ஸ்" அமெரிக்க பிரதிநிதிகளிடம் விபரம் கேட்டபோது அவர்கள் இத்தகைய ஒரு கூட்டம் இடம்பெற்றதை ஊர்ஜிதம் செய்துள்ளனர். பத்திரிகைச் செய்திகளின்படி இக்கூட்டம் குழப்பத்தில் முடிந்துள்ளது. அமெரிக்க இராஜதந்திரிகள் இலங்கையில் உள்ள தமிழ் சிறுபான்மையினரின் உரிமைகள், மனித உரிமைகள் தொடர்பாக இக்கட்சியின் நிலைப்பாட்டை விசாரித்தபோது இலங்கை அரசியல்வாதிகள் பதிலுக்கு அமெரிக்காவில் இவை தொடர்பான நிலைப்பாட்டை கேட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து மானும் அவரின் சகாக்களும் கூட்டத்தில் இருந்து வெளிநடப்புச் செய்ததாகத் தெரிகின்றது. ஆனால் முக்கியமான கேள்வி இவர்கள் அங்கு சென்றது ஏன்? இனவாத வலதுசாரி அமைப்புடன் ஒரு கலந்துரையாடல் நடாத்த இவர்கள் ஏற்பாடு செய்ததன் நோக்கம் என்ன? சிங்கள உறுமய கட்சி அதிதீவிர சிங்கள சோவினிச கூப்பாடு போடும் பகுதியினரை பிரதிநிதித்துவம் செய்கின்றது. இவர்கள் இன்னமும் ஒரு சிறுபான்மையினராக இருந்த போதிலும் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தினை உக்கிரமாக்கிய வேளையில் பொதுஜன முன்னணி அரசாங்கத்தை ஊக்குவித்ததோடு அதைத் தாங்கிப் பிடிக்கும் முக்கிய பகுதியினராகவும் விளங்கியது. இந்தச் சிங்கள உறுமய கட்சி, விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவத்தை ஒரு விரகி முக்கியத்துவம் வாய்ந்த முகாமான ஆனையிறவில் இருந்து விரட்டியடித்து, யாழ்ப்பாணக் குடாநாட்டில் மேலும் முன்னேறி வந்த ஒரு சில நாட்களுக்குள் (மே 26) உத்தியோகபூர்வமாக ஸ்தாபிதம் செய்யப்பட்டது. இராணுவ உயர்மட்ட பகுதியினருடன் சந்தேகத்துக்கு இடமற்ற வகையில் உறவுகளை வைத்துக்கொண்டுள்ள இந்த சிங்கள உறுமய கட்சி (SUP) தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சமரசம் வேண்டாம் எனவும் யுத்தத்தை உக்கிரமாக்க வேண்டும் எனவும் கோரி வருகின்றனர். இக்கட்சி நாட்டை ஒரு யுத்த நிலைமையில் வைக்கின்றதும் ஆர்ப்பாட்டங்களை, வேலைநிறுத்தங்களை, அல்லது பொதுக் கூட்டங்களை தடைசெய்கின்றதும், படுமோசமான வெகுஜனத் தொடர்பு சாதனச் செய்தி தணிக்கையை அமுல் செய்கின்றதும் கருவிகளையும் கட்டிடங்களையும் ஆட்களையும் கைக்குள் போடும் இராணுவ அதிகாரங்களை வழங்குகின்றதுமான பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு முழுமனதாக ஆதரவு வழங்கியது. இந்த சிங்கள உறுமய கட்சியின் மூன்று முக்கிய தலைவர்கள்- இவர்கள் சிங்கள சோவினிச அரசியல் வரலாற்றுக்கு பேர்போனவர்கள்- முப்பெரும் முதலாளித்துவக் கட்சிகளில் இருந்து வந்தவர்கள். இக்கட்சியின் தலைவரான குணசேகர இன்றைய பொதுஜன முன்னணி கூட்டரசாங்கத்தின் முக்கிய கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு நீண்ட கால அங்கத்தவர். அத்தோடு இதன் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராகவும் விளங்கியவர். சி.உ.க.வின் பொதுச் செயலாளர் திலக் கருணாரத்ன மே 9ம் திகதி அவர் யூ.என்.பி.யில் இருந்தும் பாராளுமன்றத்தில் இருந்தும் இராஜினாமாச் செய்யும் வரை யூ.என்.பி. பாராளுமன்ற உறுப்பினராக விளங்கியவர். 1993ல் யூ.என்.பி.க்கு கட்சி தாவுவதற்கு முன்னதாக ஒரு சி.ல.சு.க. (SLFP) பாராளுமன்ற உறுப்பினர். இவர் சி.ல.சு.க.வில் இருந்த நாட்களில் "சிங்கள மரபுரிமை" என்ற பேரில் அழைக்கப்பட்ட ஒரு சோவினிச கும்பலின் தலைவராகவும் கருணாரத்ன விளங்கினார். இவர் பல பன்னாட்டு கம்பனிகளுடன் தொடர்பு கொண்டுள்ள ரெக்கிட் அன்ட் கொல்மன் (Reckitt and Coleman) கம்பனியின் உரிமையாளர். சிங்கள உறுமய கட்சியின் தேசிய அமைப்பாளரான சம்பிக ரணவக்க 1988-89 காலப்பகுதியில் ஜே.வி.பி.யின் மாணவர் அமைப்பின் ஒரு தலைவராக விளங்கியவர். இக்காலப்பகுதியில் இக்கட்சியின் இராணுவப் பிரிவு யூ.என்.பி. அரசாங்கத்துடன் சேர்ந்து தொழிலாளர் வர்க்கத்தின் மீதும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதும் பாசிச தாக்குதல்களை நடாத்தியது. இன்றைய இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் மூன்று அங்கத்தவர்கள் உட்பட தொழிற்சங்கங்களதும் தொழிலாளர் வர்க்க கட்சிகளதும் தலைவர்கள் அங்கத்தவர்களினதும் கொலைகளுக்கு ஜே.வி.பி. பொறுப்பாகும். சம்பிக ரணவக்க ஜே.வீ.பி.யில் இருந்து பிரிந்து 'ஜனதா மித்துரோ' (Peoples Friends) என்ற ஒரு புதிய அமைப்பை ஸ்தாபித்தார். இது பொதுஜன முன்னணி அரசாங்கத்தை ஆதரித்ததோடு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் மீண்டும் ஆரம்பமாகுவதை பெரிதும் வரவேற்றது. 1998ன் ஆரம்பத்தில் இவர் இக்குழுவை பயங்கரவாதத்துக்கு எதிரான தேசிய இயக்கம் (NMAT) என மறுசீரமைத்தார். தமிழர்களுக்கு எதிரான ஒரு தொகை ஆத்திரமூட்டும் பிரச்சார இயக்கங்களுக்கு இது பொறுப்பாக இருந்தது. சிறப்பாக இலங்கையின் மத்திய மலைநாட்டில் உள்ள பெருந்தோட்டத்துறை தமிழ்ப் பேசும் தொழிலாளர்களுக்கு எதிரான வேட்டைகளில் ஈடுபட்டது. இந்த பயங்கரவாதத்துக்கு எதிரான தேசிய இயக்கத்தின் அனுசரணையாளராக சிங்கள வீரவிதான (Sinhala Heroes Forum) அமைப்பு விளங்கியது. இது சிங்கள வர்த்தகர்களைக் கொண்ட ஒரு தீவிர வலதுசாரி அமைப்பாகும். சிங்கள உறுமய கட்சி அமைக்கப்பட்ட போது அது பயங்கரவாதத்துக்கு எதிரான தேசிய அமைப்பையும் மற்றும் சிங்கள சோவினிச அமைப்புக்களையும் ஒன்றிணைத்தது. இக்கட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டபோது வெளியிட்ட அறிக்கையில் சிங்கள தேசத்தினை "காட்டிக் கொடுத்து" "பிளவுபடுத்தியதற்காக" யூ.என்.பி.யையும் பொதுஜன முன்னணியையும் ஏனைய கட்சிகளையும் குற்றம் சாட்டியதோடு தாம் சிங்கள மக்களின் "இழந்த உரிமைகளை" மீண்டும் வென்றெடுக்கப் போவதாகக் கூறியது. மே மாத்தில் அமெரிக்க பிரதிநிதியாக தோமஸ் பிக்கரிங் அரசாங்கத்துடனும் மற்றும் அரசியல் புள்ளிகளுடனும் பேச்சுவார்த்தை நடாத்த கொழும்புக்கு விஜயம் செய்த போது அவர் தமது விஜயம் யாழ்ப்பாணக் குடாநாட்டில் "ஒரு மனித பேரழிவு" ஏற்படுவதை தவிர்ப்பதே என வலியுறுத்தினார். அத்தோடு அவர் யுத்தத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவரும் எந்த ஒரு நேரடி இராஜதந்திர பாத்திரத்தை வகிக்கும் நோக்கமும் வாஷிங்டனுக்கு இருந்ததில்லை என்றுள்ளார். சிங்கள உறுமய கட்சி சிங்கள சோவினிச குண்டர்களுடன் அமெரிக்க இராஜதந்திரிகள் அடைத்த கதவுகளுக்குள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டமை அமெரிக்கா இலங்கையின் உள்நாட்டு அரசியலில் அநாவசியமாய் தலையிடமாட்டாது என்ற வாதத்தை அவமதிப்புக்கு உள்ளாக்கியுள்ளதோடு மட்டுமன்றி அமெரிக்கா "மனிதநேய" அக்கறை பதாகையை எவ்வளவு படுகேவலமான சிடுமூஞ்சித்தனமாகவும் மோசடியாகவும் பறக்கவிட்டுள்ளது என்பதையும் அம்பலமாக்கியுள்ளது. உண்மையில் அந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது என்ன என்பதை சரியாக நிர்ணயம் செய்வது சாத்தியமானது அல்ல. பேச்சுவார்த்தை என்னதான் சுருக்கமானதாக இருந்தாலும் ஒரு விடயம் மட்டும் தெளிவானது: அமெரிக்கா முயற்சிப்பது நன்மைக்கு அல்ல. அமெரிக்க இராஜதந்திரிகள் (கலந்துரையாடலுக்கு) அனுப்பிவைக்கப்பட்டது புதிதாக அமைக்கப்பட்ட அமைப்பினை ஒலியெழுப்பச் செய்யவும் அதனுடன் ஏதோ ஒரு வகையான நடைமுறை உறவுகளை ஸ்தாபிதம் செய்யும் சாத்தியத்தை பரீட்சிக்கவுமேயாகும். அமெரிக்கா, சிங்கள உறுமய கட்சி அதனது நிலைப்பாட்டை தணித்துக் கொள்ளச் செய்ய முயற்சி செய்யும் சாத்தியம் உள்ளது. ஐரோப்பிய வல்லரசுகளுடன் சேர்ந்து கிளின்டன் ஆட்சியாளர்கள் யுத்தத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவர தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தி ஒரு உடன்படிக்கையைச் செய்து கொள்வதற்கான அடிப்படையாக வடக்கு- கிழக்கில் உள்ள தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதிகளுக்கான ஒரு அதிகாரப் பகிர்வு பொதியை நிறைவு செய்யுமாறு பொதுஜன முன்னணி அரசாங்கத்தையும் எதிர்க் கட்சியான யூ.என்.பி.யையும் நெருக்கி வருகின்றன. சிங்கள உறுமய கட்சி எந்த விதத்திலான அதிகாரப் பகிர்வையும்- அது எவ்வளவுதான் வரையறுக்கப்பட்டதாக இருப்பினும்- அல்லது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் "பயங்கரவாதிகளுடன்" எந்த வகையிலான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதையும் காட்டிக் கொடுப்புக்கு சமமானதாக கணிக்கின்றது. எவ்வாறெனினும் அதிகாரப் பகிர்வு பொதியின் அடிப்படையிலான உடன்பாடு விரைவில் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இருள் சூழ்ந்து போயுள்ளன. பொதுஜன முன்னணிக்கும் யூ.என்.பி.க்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் நாளை முடிவடைய உள்ளன. எதிர்வரும் செப்டம்பரில் இடம்பெறும் தேசிய பாராளுமன்ற தேர்தல்கள் இடம் பெறும் வரை எதுவும் செய்யமுடியாது என்பதை இரு கட்சிகளும் காட்டிக்கொண்டுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு அதிகாரப் பகிர்வு பொதியை நிராகரித்துள்ளதோடு யாழ்ப்பாணக் குடாநாட்டை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொணரும் போராட்டத்தை தொடரப் போவதாகவும் அறிவித்துள்ளது. இதன் பெறுபேறாக அரசாங்கத்துக்கும் எதிர்க்கட்சிக்கும் எதிரான பரந்த அளவிலான அதிருப்தி நிலைமைகள் உக்கிரம் கண்டுள்ள நிலையில் யுத்தம் உக்கிரம் அடையும் சாத்தியம் உள்ளது. இது கொழும்பில் ஒரு பெரிதும் அரசியல் ஸ்திரமற்ற நிலையை உருவாக்கிக் கொண்டுள்ளது. அமெரிக்கா பொதுஜன முன்னணி அரசாங்கத்தின் எதிர்கால வாய்ப்புக்களையிட்டு பெரிதும் கவலை கொண்டுள்ளதோடு நிலைமையில் ஆழமான அரசியல் மாற்றங்களை எதிர்பார்ப்பதையும் தெளிவாகக் காட்டுகின்றது. சிங்கள உறுமய கட்சியுடனான அமெரிக்காவின் பேச்சுவார்த்தைகள் ஏனைய சாத்தியமான கூட்டுக்களை எடை போடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சிங்கள உறுமய கட்சித் தலைவர்களின் ஆத்திரமூட்டல்கள், பயங்கரங்களின் பட்டியல்கள் நீண்டுவரும் நிலைமையில்- குறிப்பாக ரணவக்க- இக்கலந்துரையாடல்கள் சிறப்பாக வஞ்சனைமிக்க பண்புகளைக் கொண்டுள்ளன. "ஜனநாயகம்", "மனித உரிமைகள்" பற்றிய கூப்பாடுகளுக்கிடையேயும் அமெரிக்கா இராணுவ ஆட்சியாளர்களை ஆதரித்தல், மத்திய கிழக்கு தொடக்கம் ஆசியா, லத்தீன் அமெரிக்கா வரை வலதுசாரி இராணுவங்களுக்கும் பரா- இராணுவக் குழுக்களுக்கும் (Para- military) பயிற்சியளித்தல் இராணுவத் தளபாடங்களை வழங்கல், நிதி உதவி செய்தல் என்று ஒரு நீண்ட வரலாற்றையே கொண்டுள்ளது. அமெரிக்காவிலும் இலங்கையிலும் மனித உரிமைகள் பற்றிய கருத்துப் பரிமாற்றங்களிடையேயும் அமெரிக்க இராஜதந்திரிகளுக்கும் சிங்கள உறுமய கட்சி குண்டர்களுக்கும் இடையேயான கலத்துரையாடல்கள், யுத்தத்துக்கு எதிரான பொதுமக்களின் எதிர்ப்பு வளர்ச்சி கண்டு வரும் ஒரு நிலையில் என்ன செய்வது என்பது உட்பட பரஸ்பரம் அக்கறைக்குரிய ஏனைய விடயங்கள் தொடர்பாகவும் திரும்பியதற்கான சாத்தியம் இருந்து கொண்டுள்ளது உண்மை.
Copyright
1998-2000 |