World Socialist Web Site www.wsws.org |
WSWS: செய்திகள் & ஆய்வுகள் Sri Lankan government and opposition agree on a shaky plan for a negotiated end to the war இலங்கை அரசாங்கமும் எதிர்க் கட்சியும் யுத்தத்துக்கு பேச்சுவார்த்தை மூலம் முடிவுகாணும் ஈடாட்டங்கண்ட திட்டத்துக்கு இணக்கம் By Dianne
Sturgess இலங்கையின் ஆளும் பொதுஜன முன்னணி அரசாங்கமும் எதிர்க் கட்சியான யூ.என்.பி.யும் அரசியலமைப்பு சட்ட மாற்றங்கள் தொடர்பான தமது பேச்சுவார்த்தைகளை கடந்த வெள்ளிக்கிழமையுடன் முடித்துக் கொண்டன. நாட்டின் 17 வருடகால கசப்பான உள்நாட்டு யுத்தத்துக்கு முடிவு கட்டுவதற்கான அடிப்படையை ஸ்தாபிதம் செய்வதை இலக்காகக் கொண்ட ஒரு அதிகாரப் பகிர்வுப் பொதி சம்பந்தமாக தாம் "பரந்தளவிலான உடன்பாட்டை" எட்டியுள்ளதாக இவை பிரகடனம் செய்துள்ளன. இப்பிரேரணைகள், தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு தனித் தமிழ் அரசுக்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கென ஒரு இடைக்கால சபையை (Interim council) ஸ்தாபிதம் செய்யவும் பிராந்தியங்களுக்கு வரையறுக்கப்பட்ட சுயாட்சியையும் வழங்குகின்றன. இந்தப் பேச்சுவார்த்தைகளின் முடிவுகள் "வரலாற்றுப் புகழ் மிக்கவை" என ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆரவாரம் செய்துள்ளார். ஜனாதிபதி ஐரோப்பிய யூனியன் தூதுவர்களுக்கும் கொழும்பில் உள்ள ஐரோப்பிய கமிஷன் பிரதிநிதிகளுக்கும் செப்டம்பரில் அல்லது அக்டோபரில் இடம்பெற உள்ள பொதுத் தேர்தலுக்கு முன்னதாக இந்த அரசியலமைப்புச் சட்ட ஏற்பாடுகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக திங்கட்கிழமை தெரிவித்தார். குமாரதுங்க இந்த அதிகாரப் பகிர்வு திட்டத்தை தூக்கிப் பிடிக்கும் விதத்தில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகளை இறுக்கமாக்கும் நடவடிக்கையின் ஒரு பாகமாக சிறப்பு தூதுவர் லக்ஷ்மன் ஜயக்கொடியை இந்திய அரசாங்கத்துக்கு விடயத்தை எடுத்து விளக்க புதுடில்லிக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் இந்த உடன்பாடு- தமிழீழ விடுதலைப் புலிகளுடனான சமாதான பேச்சுவார்த்தைகளின் சாத்தியம் பற்றி கூற வேண்டியதில்லை- மிகவும் தற்காலிகமானதாக இருந்து கொண்டுள்ளது. குமாரதுங்கவே இதைச் சுட்டிக்காட்டியுள்ளார். "இதைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் பயனளிக்க கூடிய விதத்தில் அமுல் செய்வதற்கும்" முன்னதாக இன்னும் அதிகம் செய்யவேண்டியுள்ளது" என்றுள்ளார். யூ.என்.பி. தலைவர் ரணில் விக்கிரமசிங்க இதையிட்டு இன்னும் பெரிதும் அவதானமாக இருந்துகொண்டுள்ளார். கட்சிகள் "ஆரம்ப பேச்சுவார்த்தைகளை" மட்டுமே நிறைவு செய்து கொண்டுள்ளன. இப்பேச்சுவார்த்தைகள் "இப்போக்கின் முடிவு" ஆகிவிடாது எனத் தெரிவித்துள்ளார். பொதுஜன முன்னணியும் யூ.என்.பி.யும் கடந்த 4 வாரங்களில் 10 நாட்கள் தீவிரமான கலந்துரையாடல்களுக்காக ஒன்று கூடினர். இக்கலந்துரையாடல்கள் கடந்த ஏப்பிரல் கடைப் பகுதியில் முக்கிய இராணுவத் தளமான ஆனையிறவு முகாம் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து வடக்கில்- யாழ்ப்பாணக் குடாநாட்டில்- விடுதலைப் புலிகள் ஈட்டிய ஒரு தொகை இராணுவ வெற்றிகள் அரசியல் நெருக்கடியைத் தோற்றுவித்துள்ள நிலையில் இடம் பெற்றுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றம் செய்வது சம்பந்தமாக இக்கட்சிகளுக்கு இடையே முன்னர் இடம் பெற்ற பேச்சுவார்த்தைகள் நீண்ட காலதாமதங்களை கொண்டிருந்தது. அரசாங்கம், எதிர்க் கட்சி இரண்டும் ஒரு பேச்சுவார்த்தையின் மூலம் யுத்தத்துக்கு முடிவு கட்டுவதற்கான அடிப்படையை ஸ்தாபிதம் செய்யுமாறு கோரும் கணிசமான அனைத்துலக நெருக்குவாரங்களுக்கு உள்ளாகி இருந்தன. அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் தமிழீழ விடுதலைப் புலிகளின் வெற்றிகள் பிராந்தியத்தின் வேறு பாகங்களில் அரசியல் ஸ்திரமற்ற நிலைமையை தூண்டி விடுவதற்கான சாத்தியத்தையிட்டு கவலை கொண்டுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளின் தனித் தமிழ் அரசுக்கான கோரிக்கையை நிராகரிக்கும் அதே வேளையில் பெரும் வல்லரசுகள் யுத்தத்துக்கு ஒரு முடிவு காணும் மத்தியஸ்தத்தில் ஈடுபடுவதில் இந்தியாவையும் நோர்வேயையும் கூட்டாக செயற்படுமாறு வேண்டிக் கொண்டுள்ளன. பொதுஜன முன்னணிக்கும் யூ.என்.பி.க்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் கடந்த மாத இறுதியில் முற்றுப் பெற இருந்தன. இதன் போக்கு இழுபட்டுச் சென்றதைத் தொடர்ந்து கொழும்பு மீண்டும் நெருக்குவாரங்களுக்கு உள்ளாகியது. நோர்வேயின் விசேட தூதுவர் எறிக் சொல்ஹெயிம் இலங்கைக்கு மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டார். ஜூன் 19ம் திகதி தொடக்கம் இடம்பெற்ற இவ்விஜயத்தில் கட்சிகள் "பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்த வேண்டும்" எனவும் அரசியலமைப்பு பிரேரணைகளை நிறைவு செய்ய வேண்டும் எனவும் அப்போது தான் அவற்றை தாம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வழங்க முடியும் எனவும் அவர் கோரினார். கடந்த வாரம் இந்திய பிரதி வெளிநாட்டு அமைச்சர் அஜித் பஞ்சா ஒரு பத்திரிகையாளர் மகாநாட்டில் பேசுகையில் தமது அரசாங்கம் இலங்கைக்கென தமது சொந்த பிரேரணைகளை விருத்தி செய்து கொண்டுள்ளதாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையே பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்து வைக்க அது தயாராகி உள்ளதாகவும் தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை எட்டப்பட்ட உடன்பாடுகளுக்கு மத்தியிலும் அரசியல் தீர்வுப் பொதியை அமுல் செய்வது சம்பந்தமாக இந்த இரண்டு கட்சிகளுக்கும் இடையே கணிசமான அளவு வேறுபாடுகள் இருந்து கொண்டுள்ளன. குமாரதுங்க இன்றைய பாராளுமன்றத்தின் ஆயுட் காலம் ஆகஸ்ட் 24ம் திகதி முடிவடைவதற்கு முன்னதாக அரசியலமைப்பு திருத்தங்களை ஊர்ஜிதம் செய்ய முயன்று கொண்டுள்ளார். இதன் மூலம் அவசியமான பொதுஜன கருத்துக் கணிப்பை மேற்பார்வை செய்யும் பொறுப்பை அடுத்த பாராளுமன்றத்திடம் ஒப்படைக்க அவர் முயற்சிக்கின்றார். யூ.என்.பி.யோ அடுத்த பாராளுமன்றம் முன்னையதன் தீர்மானத்துக்கு கட்டுப்பட்டது அல்ல என வலியுறுத்திக் கொண்டுள்ளது. இரண்டு கட்சிகளும் இன்றைய நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்கும் காலகட்டம் தொடர்பாக முரண்பட்டுக் கொண்டுள்ளன. கடந்த டிசம்பரில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற குமாரதுங்க தனது ஐந்தாண்டு ஆட்சிக்காலத்தில் கண்ணும் கருத்துமாக உள்ளார். அவரது அரசியலமைப்பு விவகார அமைச்சரான ஜீ.எல். பீரிஸ், யுத்தம் முற்றுப் பெறும்வரை ஒரு உறுதியான நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை அவசியம் என உடன்பாடு தெரிவித்துள்ளார். ஆனால் எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் வெற்றியீட்டுவதை இலக்காகக் கொண்டுள்ள யூ.என்.பி. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை முன்கூட்டியே ஒழித்துவிட வேண்டும் என வலியுறுத்துகின்றது. அப்போது ஜனாதிபதி அல்லாது பாரளுமன்றமே அரசாங்கத்தை கட்டுப்படுத்தும். எளிதில் உடைந்து சிதறிப் போகக் கூடிய கடந்த வெள்ளிக்கிழமைய உடன்பாடு வெறுமனே பொதுஜன முன்னணியினதும் யூ.என்.பி.யினதும் அரசியல் சூழ்ச்சிகள் காரணமாக ஏற்பட்டது அல்ல. இரண்டு கட்சிகளும் பல்வேறு சிங்கள சோவினிச அமைப்புக்களின் நெருக்குவாரங்களுக்கு உள்ளாகியுள்ளன. அவை எந்தவிதமான அதிகாரப் பகிர்வையோ அல்லது விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகளையோ ஒரு "காட்டிக்கொடுப்புக்கு" நிகரானதாகக் கொள்கின்றன. ஆனையிறவில் இராணுவம் தோல்வி கண்டதன் பின்னர் குமாரதுங்க நாடு ஒரு "யுத்த நிலைமையில்" இருத்தப்படும் எனப் பிரகடனம் செய்தார். ஒரு தொகை படுபயங்கரமான அவசரகால விதிகளை திணித்தார். அத்தோடு அதிகரித்த அளவில் சிங்கள தீவிரவாதிகளின் ஆதரவில் சாய்ந்து கொண்டிருந்தார். தேர்தல் எதிர்வந்து கொண்டுள்ள ஒரு நிலைமையில் பொதுஜன முன்னணி, யூ.என்.பி. இரண்டும் இந்த அமைப்புக்கள் அதிகாரப் பகிர்வு தீர்வுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வதன் மூலம் இலாபமீட்டலாம் என்பதையிட்டு கவலை கொண்டுள்ளன. சிங்கள உறுமய கட்சி (Sinhala Heritage Party) எந்த ஒரு அதிகாரப் பகிர்வு தீர்வையும் தாம் அடியோடு எதிர்ப்போம் எனப் பிரகடனம் செய்துள்ளது. பெளத்த மத அமைப்புக்கள் (சங்க சபா) பொதுஜன முன்னணி அரசாங்கம் உத்தேச மசோதாவை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்குமானால் தாம் பொதுஜன முன்னணிக்கு எதிராக வாக்களிக்கும்படி கோரி வீட்டுக்கு வீடு பிரச்சாரத்தில் ஈடுபடுவோம் என இரண்டு வாரங்களுக்கு முன்னர் எச்சரித்தது. மற்றொரு சிங்கள சோவினிச அமைப்பான தேசிய கூட்டுக் கமிட்டி (National Joint committee) அரசியலமைப்புச் சட்ட மாற்றங்கள் "ஆயிரக்கணக்கான பிணங்களின் மீதாகவே" அமுல் செய்யப்படும் என அறிவித்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் அரசியல் தீர்வுப் பொதியை நிராகரிக்கிறது யூ.என்.பி.யுடனான பேச்சுவார்த்தைகள் பூராவும் குமாரதுங்க சிங்கள தீவிரவாதிகளின் விமர்சனங்களுக்கு அடிபணிந்து போனார். ஆரம்பத்தில் குமாரதுங்க, தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கு- கிழக்கு இடைக்கால நிர்வாக சபையில் பங்கு கொள்வதை எதிர்க்கப் போவதில்லை எனத் தெரிவித்தார். சிங்கள உறுமய கட்சியின் தாக்குதலுக்கு உள்ளானதைத் தொடர்ந்து அவர் தனது நிலைப்பாட்டை "தெளிவுபடுத்தினார்". அவர் "கொலைகார பயங்கரவாதிகளான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இடைக்கால நிர்வாக சபையில் பங்கு கொள்வதை தீவிரமாக நிராகரித்தார்". அது "அனைத்து கொலைகார பயங்கரவாத நடவடிக்கைகளையும் கைவிட்டு ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் நுழைவதன் மூலம் மட்டுமே கலந்துகொள்ள முடியும்" என்றார். இந்தத் தீர்வுப் பொதியானது 1995ல் பொதுஜன முன்னணி அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட பிராந்திய சுயாட்சிக்கான அசல் திட்டத்தை அடித்துச் செல்வதைப் பிரதிநிதித்துவம் செய்கின்றது. கலைச்சொல் மட்டத்திலும் கூட சிங்கள தீவிரவாதிகள் தமது முத்திரையைப் பதித்துள்ளனர். 1995ம் ஆண்டின் திட்டமும் 1996ம், 1997ம் ஆண்டின் சட்ட வரைவுகளும் இலங்கையை "ஒரு ஐக்கிய, இறைமை கொண்ட குடியரசாக" வருணிக்கின்றன. அது "கலைத்துவிட முடியாத பிராந்தியங்களின் ஒன்றியம்" ஆகும். அத்தகைய வார்த்தைகள் நாட்டின் ஒருமைப்பாட்டு அந்தஸ்துக்கு குழிபறிப்பதாக கூறும் விமர்சனங்களுக்கு முகம் கொடுத்த நிலையில், பொதுஜன முன்னணியும் யூ.என்.பி.யும் நாட்டை "இலங்கை குடியரசு" என வருணிக்க இணங்கியதோடு "அங்கு மத்தியும் பிராந்தியங்களும் அதிகாரத்தை அரசியலமைப்பு சட்டத்துக்கிணங்க பகிர்ந்து கொள்ளும்" என்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் ஏற்கனவே இந்த அதிகாரப் பகிர்வு திட்டத்தின் அடிப்படையில் எந்தவிதமான கலந்துரையாடலையும் நிராகரித்து விட்டது. சமீபத்தில் வழங்கிய ஒரு பேட்டியில் விடுதலைப் புலிகளின் கோட்பாட்டாளரான அன்டன் பாலசிங்கம் பிரேரணைகளைச் சாடினார். அவர் கூறியதாவது: "மூலத் தீர்வுப் பொதியில் இருந்து இரத்தத்தையும் சதையையும் உறிஞ்சி இழுத்ததன் பின்னர் இறுதி வரைவாக ஒரு எலும்புக் கூடு தான் எஞ்சியுள்ளது" என்றார். குறிப்பாக ஒரு பிராந்திய சபையைக் கலைக்கும் அதிகாரத்தை ஜனாதிபதி கொண்டிருக்கும் பிரேரணை மனதைப் புண்படுத்துவதாக பாலசிங்கம் குறிப்பிட்டார். "கடந்த 50 ஆண்டுகளாக போராடியதன் பின்னர் (25 வருட காலம் சாத்வீக முறையிலும் 25 வருடங்கள் ஆயுதம் தாங்கிய இயக்கமாகவும்) நாம் ஒரு நிலையற்ற தீர்வை ஏற்றுக் கொள்ள முடியாது". அத்தோடு அவர் ஒன்றிணைக்கப்பட்ட வடக்கு- கிழக்கு பிராந்தியங்களின் எதிர்காலம் தொடர்பாக ஐந்து ஆண்டுகளின் பின்னர் நடாத்தவுள்ள கருத்துக் கணிப்பையும் எதிர்த்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இந்த இரண்டு மாகாணங்களும் ஒரு ஐக்கிய தமிழர் தாயகத்தின் பகுதியாக விளங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. எவ்வாறெனினும் அவர் ஏதோ ஒரு வடிவிலான சுயாட்சித் திட்டத்தை ஏற்றுக் கொள்ளும் சாத்தியத்தை நிராகரிக்கவில்லை என்பதை முக்கியம் வாய்ந்த ஒன்றாக குறிப்பிட்டாக வேண்டும். "சுயநிர்ணய உரிமை என்பதன் அர்த்தம் நாம் சிங்கள அரசாங்கத்துடன் தொடர்புபடுவது அல்லது சமஷ்டி சுயாட்சியை தெரிவு செய்வதாகும். இலங்கை, சுயநிர்ணயம் என்பதை பிரிந்து செல்வதற்கான ஒரு உரிமையாக நோக்கக் கூடாது" என அவர் கூறியுள்ளார். பாலசிங்கம் அமெரிக்கா, இந்தியா பற்றிக் குறிப்பிடுகையில் மிகவும் இணக்கப்பாடு கொண்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் "அவற்றின் புவிசார் அரசியல் நலன்களையும்" "மோதிக் கொண்டுள்ள தரப்பினரை ஒரு பேச்சுவார்த்தை மூலமான அரசியல் தீர்வுக்கு ஊக்குவிப்பதன் மூலமும்" அவற்றின் முயற்சிகளையும் புரிந்து கொண்டுள்ளது. "நாம் ஏற்கனவே இந்தியாவின் நலன்களுக்கு பாதகமிழைக்கக் கூடிய அல்லது அதன் உள்நாட்டு அரசியலில் தலையிடும் எதையும் ஒரு போதும் செய்யமாட்டோம் என வழக்காறான விதத்தில் கூறியுள்ளோம்" எனப் பாலசிங்கம் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் உடனடிப் பேச்சுவார்த்தைகளை நிராகரித்தும் முழு யாழ்ப்பாணக் குடாநாட்டினையும் கட்டுப்பாட்டுக்குள் கொணர்வதை வலியுறுத்திக் கொண்டுள்ள போதிலும், பாலசிங்கத்தின் கருத்துக்கள் பேச்சுவார்த்தை மேசைக்கு வரும்படி பெரும் வல்லரசுகளின் நெருக்குவாரத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளாகியுள்ளதைச் சுட்டிக் காட்டுகின்றது. குமாரதுங்க அரசாங்கத்தின் கணிப்புக்களில் ஒரு பகுதி அதுவேயாகும்: தமிழீழ விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை நடாத்த இணங்கினாலும் சரி இணங்காவிட்டாலும் சரி அதிகாரப் பகிர்வு அரசியல் பொதி தமிழர்களிடையே அதற்கிருந்து வரும் ஆதரவை குழிபறியச் செய்வதோடு ஏனைய தமிழ் கட்சிகளின் கரங்களைப் பலப்படுத்தும். அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பாக குமாரதுங்க தமிழ் கட்சிகளுடனும் அத்தோடு சிங்கள உறுமய கட்சி போன்ற சிங்கள சோவினிச குழுக்களுடனும் ஒரு தொகை கலந்துரையாடல்களை நடாத்த திட்டமிட்டுள்ளார். ஆனால் பல தமிழ் அரசியல் கட்சிகள் ஏற்கனவே இன்றைய தீர்வு யோசனைகளை நிராகரித்துள்ளன. அத்தோடு எந்த ஒரு இடைக்காலச் சபையிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பிரதிநிதித்துவம் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைப் போலவே இந்த தமிழ் கட்சிகளும் வடக்கு- கிழக்கு மாகாண இணைப்பு மீதான ஒரு கருத்துக் கணிப்பு நடாத்தும் திட்டத்தை எதிர்த்துள்ளன. ஏழைச் சிங்கள கிராமவாசிகளை கிழக்கில் திட்டமிட்டுக் குடியேற்றும் அரசின் கொள்கையானது பிராந்தியத்தின் சனத்தொகை சேர்க்கையையும் அதன் மூலம் எந்த ஒரு கருத்துக் கணிப்பினதும் முடிபை மாற்றுவதுமேயாகும் என தமிழ்க் கட்சிகள் குறிப்பிட்டுள்ளன. இன்றைய திட்டங்கள் நிலம் தொடர்பான பிராந்தியங்களின் உரிமைகளை பலவீனப்படுத்தியுள்ளதாக அவை மேலும் சுட்டிக்காட்டியுள்ளன. 1995ம் ஆண்டின் அரசியல் தீர்வு பொதியின்படி மத்திய அரசாங்கம் அரச காணிகளைப் பயன்படுத்த வேண்டுமானால் அது ஒரு பிராந்திய சபையுடன் ஆலோசிக்க வேண்டும் என்றிருந்தது. யூ.என்.பி.க்கும் பொதுஜன முன்னணிக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் முடிவுகளின்படி மத்திய அரசாங்கம் பெருந்தோட்டங்கள், காடுகள், கரையோரப் பகுதி நிலங்கள், பிராந்தியக் கடல்கள் என்பவற்றுக்கு பொறுப்பாக இருக்கும். இவை தகராறுகளின் இணக்கப்பாட்டுக்கான ஒரு காணி சபையின் தீர்ப்புக்கு மட்டும் உட்பட்டதாக விளங்கும். "நாம் வேண்டுவது சமஷ்டி முறையே அல்லது பெரிதும் கழுவித் துடைக்கப்பட்ட 1995ம் 1997ம் ஆண்டுகளின் யோசனைகள் அல்ல" என தமிழ் முதலாளித்துவக் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியின் (TULF) சிரேஷ்ட உப- தலைவரான வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இடைக்கால சபையில் பங்கு கொள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அழைக்கப்படாது போனால் தமது கட்சி இடைக்காலச் சபையில் பங்கு கொள்ளாது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் செயலாளர் ஆர்.சம்பந்தன், முன்னர் குறிப்பிட்டு இருந்தார். இதே கருத்துக்களை முன்வைக்கும் பொருட்டு ஒரு தமிழர் விடுதலைக் கூட்டணி தூதுக் குழு அமெரிக்கத் தூதுவரையும் ஜூன் 26ல் சந்தித்தது. இதற்குச் சமமான நிலைப்பாட்டையே ஈழம் மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் (EPRLF) தமிழீழ விடுதலை அமைப்பும் (TELO) வெளியிட்டுள்ளன. ஆனால் தமிழீழ மக்கள் விடுதலை அமைப்பு (PLOTE) யோசனைகளை ஆய்வு செய்வதற்கான வாய்ப்புக் கிடைக்கவில்லை என கூறி கருத்து வெளியிட மறுத்துள்ளது. ஆளும் பொதுஜன முன்னணியின் ஒரு பங்காளியான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) தலைவரான டக்ளஸ் தேவானந்தா "ஒன்றும் இல்லாது இருப்பதை விட அற்ப சொற்பமாகத் தன்னும் கொண்டிருப்பது நல்லது" (Some thing is better than nothing) எனக் கூறி தனது அங்கீகாரத்தை வழங்கியுள்ளார். எவ்வாறெனினும் ஈ.பி.டீ.பி. ஒரு கூலிப்படைக்கு நிகரானதாகவே நின்று கொண்டுள்ளது. அது வடக்கில் அரசாங்கப் பாதுகாப்புப் படைகளதும் அரச அதிகாரத்துவத்தினதும் கையாளாகவே செயற்படுகின்றது. இனவாதப் பிளவுகளை மேலும் உக்கிரமாக்கவும் பகைமையைக் கொழுந்து விட்டு எரியச் செய்யவும் கூடிய சாத்தியத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) பிரதிபலிப்புக்கள் மூலம் அதிகாரப் பகிர்வு பொதி கோடிட்டுக் காட்டியுள்ளது. இக்கட்சி பொத்துவில், சம்மாந்துறை, கல்முனையை உள்ளடக்கிய ஒரு தனியான தென்கிழக்கு நிர்வாக மாவட்ட கோரிக்கையை மீண்டும் வலியுறுத்திக் கொண்டுள்ளது. ஸ்ரீ.ல.மு.கா. இந்தக் கோரிக்கையை தமிழீழ விடுதலைப் புலிகள் முஸ்லீம்களை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேற்றியும் கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம்களை தாக்குவதில் ஈடுபட்டதைத் தொடர்ந்தும் முன்வைத்தது. நாட்டினை மேலும் உப- பிரிவுகளாக பிரிக்கும்படி கோரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன் கோரிக்கை, எந்த ஒரு அதிகாரப் பகிர்வுத் திட்டமும் தொழிலாளர் வர்க்கத்தின் மீதான தமது பரஸ்பரம் சுரண்டல்களை உக்கிரமாக்கும் பொருட்டு சிறிய தீவினை இனவாத ரீதியில் முதலாளி வர்க்கத்தின் பல்வேறுபட்ட பகுதியினரிடையே கூறுபோடும் ஒரு ஆட்சி பங்கீட்டு ஏற்பாடாகும் என்ற உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.
Copyright
1998-2000 |