World Socialist Web Site www.wsws.org |
WSWS: செய்திகள் & ஆய்வுகள்
Splits in Peoples Alliance regime as Sri Lanka heads for general election இலங்கையில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள சமயத்தில் பொதுஜன முன்னணி ஆட்சியில் பிளவு By Wije Dias ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகஸ்ட் 18ம் திகதி இலங்கைப் பாராளுமன்றத்தை கலைத்ததோடு அக்டோபர் 10ல் பொதுத் தேர்தல் நடாத்தப்படும் எனவும் அறிவித்துள்ளார். இந்த பாராளுமன்றம் அதன் கால எல்லைக்கு ஆறு நாட்களுக்கு முன்னரே கலைக்கப்பட்டுள்ளது. தேர்தலை முன் கூட்டியே நடாத்தவும் எதிர்க் கட்சிகளின் பிரச்சாரங்களுக்கு குழிபறிக்கவுமே இங்ஙனம் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை, அவரது பொதுஜன முன்னணி அரசாங்கத்தின் உள்ளேயான ஆழமான நெருக்கடியில் இருந்தும், இந்த கூட்டு முன்னணியின் முக்கிய அரசியல் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினுள் தலையெடுத்துள்ள பெரும் பிளவுகளில் இருந்தும் பெருக்கெடுத்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் தீவின் வடக்கு- கிழக்கு மாகாணங்களை முடக்கியுள்ள 17 வருடத்துக்கும் மேலான ஒரு உள்நாட்டு யுத்தத்திற்கு தீர்வு காணும் இலக்கில் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பு திருத்த மசோதாவுக்கு அவசியமான 2/3 பங்கு பெரும்பான்மையை அரசாங்கம் பெறத் தவறியது. அரசாங்கமும் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் (UNP) வாக்குகளை திருப்பும் பொருட்டு மாறி மாறி இலஞ்சம் கொடுப்பதில் ஈடுபட்டன. இறுதியில் பொதுஜன முன்னணி வெட்கக் கேடான தோல்வியைத் தழுவிக் கொண்டது. ஒன்றரை நாள் விவாதத்தின் பின்னர் இது அரசியலமைப்புத் திருத்தம் மீதான சகல பாராளுமன்ற விவாதங்களையும் ஒத்திவைக்கத் தள்ளப்பட்டது. இந்த அரசியல் வீழ்ச்சிக்கு முன்னதாக ஏப்பிரல் 22ம் திகதி முக்கியமான இராணுவத் தளமான ஆனையிறவு முகாமை தமிழீழ விடுதலைப் புலிகளிடம் (LTTE) பறிகொடுத்ததன் மூலம் பெரிதும் பாரதூரமான இராணுவ பேரழிவுகள் ஏற்பட்டன. முழு தேர்தல் பிரச்சார இயக்கமும் அவசரகால விதிகளின் நிழலாட்டத்தின் கீழேயே இடம் பெறும். இந்த விதிகள் (படுமோசமான பத்திரிகைத் தணிக்கையுடன் சேர்ந்து இன்னமும் அமுலில் இருந்து கொண்டுள்ளது). இந்தத் தணிக்கை விதிகள், யுத்தம் சம்பந்தப்பட்ட விடயங்களைப் பற்றிப் பேசுவதையோ எழுதுவதையோ தடை செய்கின்றன. அத்தோடு அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் ஆபத்தும் இருந்து கொண்டுள்ளது. இதன் மூலம் இந்த தேர்தலில் மிகவும் தீர்க்கமான விடயமான 17வருட கால உள்நாட்டு யுத்தம் சம்பந்தமாக பூரணமானதும் வெளிவெளியானதுமான கலந்துரையாடல்கள் இடம்பெற அனுமதி கிடையாது. இதே சமயம் அரசாங்கம் சமீபத்தில் தருவித்த பெரிதும் தொழில்நுட்பம் நிறைந்த குண்டுவீச்சு சாதனங்களை கொண்டு யாழ்ப்பாணக் குடா நாட்டிலும், வடக்கின் ஏனைய பகுதிகளிலும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல்களை நடாத்துவதை உக்கிரமாக்கியுள்ளது. இதன் மூலம் அரசாங்கம் சிங்கள அதிதீவிரவாத அமைப்புகளுடனான உறவுகளைப் பலப்படுத்திக் கொண்டுள்ளது. பிரதான எதிர்க் கட்சியான யூ.என்.பி. அரசியலமைப்பு திட்டத்தை வரைவதில் பங்குகொண்டதோடு, நோர்வே, அனுசரணையாளர் பாத்திரத்தை வகித்தது. இதனை ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் ஆதரித்தன. பொதுஜன முன்னணியும் யூ.என்.பி.யும் அரசியலமைப்பு வரைவின் 95 சதவீதம் சம்பந்தமாக இரு தரப்பும் இணக்கப்பாட்டுக்கு வந்திருந்ததோடு யூ.என்.பி. இறுதி நேரத்தில் பெளத்த பிக்குகளதும் இனவாத சக்திகளதும் நெருக்குவாரத்தின் கீழ் தனது ஆதரவை விலக்கிக் கொண்டது. பொதுஜன முன்னணி ஆகஸ்ட் 11ம் திகதி தேசிய தொலைக்காட்சிக்கு ஜனாதிபதி குமாரதுங்க வழங்கிய ஒரு பேட்டியுடன்- உடனடியாகவே ஒரு வெகுஜனத் தொடர்பு சாதனங்களின் பிரச்சார இயக்கத்தை தொடுத்தது. அதில் பல மாதகால கலந்துரையாடல்களைத் தொடர்ந்து எட்டப்பட்ட இணக்கத்தை யூ.என்.பி. காட்டிக் கொடுத்துவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார். ஜனாதிபதி, மசோதாவை நிறைவேற்றி வைக்கும் முயற்சியை பொதுஜன முன்னணி கைவிடாது எனவும் அவசியப்படின் அடுத்த பாராளுமன்றத்தை ஒரு அரசியலமைப்பு நிர்ணய சபையாக மாற்றும் எனவும் யூ.என்.பி.யின் ஆதரவுக்கு காத்திராது, சாதாரண பெரும்பான்மை மூலம் மசோதாவை நிறைவேற்றும் எனவும் வலியுறுத்தினார். பொதுஜன முன்னணி ஆட்சியாளர்கள் யூ.என்.பி.க்கு எதிராக திட்டமிடப்பட்ட குற்றச்சாட்டுக்களை சுமத்திய அதே வேளையில் ஏகாதிபத்திய வல்லரசுகளும் இந்திய ஆளும் வர்க்கத்தின் சில பகுதியினரும் யூ.என்.பி. அதனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதையிட்டு அதிருப்தி தெரிவிக்க ஒன்றிணைந்தனர். குமாரதுங்கவின் தொலைக்காட்சி பேட்டி வெளியான அதே நாளில் வெளியான இரண்டு இந்திய தேசிய தினசரிகளான 'இந்துவும்' 'இந்தியன் எக்ஸ்பிரசும்' புதிய அரசியலமைப்பு சீர்திருத்தங்களுக்கு வாக்களிக்க யூ.என்.பி. மறுத்ததை கண்டனம் செய்தன. 'இந்து' பத்திரிகையின் ஆசிரியத் தலையங்கம் பின்வருமாறு குறிப்பிட்டது: "... ஐக்கிய தேசிய கட்சி- ஏனைய அரசியல் கட்சிகளைப் போல் இந்த (அரசியலமைப்பு) வரைவை உருவாக்குவதில் நெருக்கமாக பங்கு கொண்ட அது- புதிய அரசியலமைப்பு சட்டத்தை ஆதரிக்கப் போவதில்லை எனப் பிரகடனம் செய்தமை வருந்தத் தக்கது. இலங்கைப் பாராளுமன்றத்தில் உள்ள அரசியல் கணிதத்தின்படி இந்த புதிய அரசியலமைப்பை நிறைவேற்ற அவசியமான 2/3 பங்கு பெரும்பான்மை பலத்தை பெறுவது அடியோடு சாத்தியமில்லாது போய்விட்டது. யூ.என்.பி. மனதை மாற்றிக் கொண்டமை திருமதி. குமாரதுங்க அரசியலமைப்பு மசோதா மீதான வாக்கெடுப்பை ஒத்திவைப்பதாக அறிவிப்பதைத் தவிர வேறு பதிலீடுகளை இல்லாமல் செய்துவிட்டது." அவ்வாறே இன்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது: "பல தசாப்தகால சிங்கள அரசியல்வாதிகளின் தற்கொலைத் தனமான அரசியல் சீர்திருத்தங்களின் பின்னர் யூ.என்.பி. தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி குமாரதுங்கவுடனான பேச்சுவார்த்தைகளின் சுயாட்சி விவகாரத்தை கையாள்வது தொடர்பான பிரச்சினை முன்வைக்கப்பட்ட போது வரைவு யோசனைகளை ஆதரிப்பதாக காட்டிக்கொண்டதால் வெற்றிகரமான நம்பிக்கை தெரிந்தது. எவ்வாறெனினும் இது பற்களை நறும்பும் விடயமாக, உறுதியும் தூரதரிசனமும் கேள்விக்கிடமாகியதும் விக்கிரமசிங்க மனதை மாற்றிக் கொண்டார். இது ஒரு பொதுஜன அபிப்பிராயத்தின் காலதாமதமான ஒரு தாக்குதலாக அல்லது கோஷங்களை எழுப்பிய பிக்குகளின் எதிர்ப்பின் தாக்கமாக இருக்கலாம். அவர் ஒரு நிஜமான மறுசிந்தனையை கொண்டிருந்திருந்தால் ஒரு பொறுப்பு வாய்ந்த தலைவர் ஒருவர் அதைக் கண்டுபிடிப்பதற்கான உரிய சாத்தியமான தருணமாக விளங்கியிருக்கும்." இந்த நெருக்குவாரங்கள் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஒரு பொதுத் கூட்டத்தில் யூ.என்.பி. தலைவரை தமிழர் பிரச்சினைகான ஒரு அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்கும் தமது விருப்பத்தை பிரகடனம் செய்யும்படி தள்ளியது. முன்னாள் யூ.என்.பி. வெளிநாட்டு அமைச்சராக விளங்கி, காலமான ஏ.சீ.எஸ்.ஹமீட்டின் முதலாவது நினைவுதினத்தின் பேரில் கூடியிருந்தவர்கள் முன்னிலையில் பேசுகையில் அவர் கூறியதாவது; "ஒரு அனைத்துக்கட்சி இணக்கப்பாடும், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கான பொதுவான நிலைப்பாடுமே ஒரு தீர்வாக விளங்கும் என திரு.ஹமீத் கனவு கண்டார்". இது நோர்வேயின் மாஜி பிரதமர் கெஜல் பொன்டிவிக்கின் நினைவுப் பேருரையைத் தொடர்ந்தே இடம் பெற்றது. பொன்டிவிக் தமது பேச்சில் வலியுறுத்தியதாவது: "யுத்தம் முடிவுக்கு வந்து அரசியல் தீர்வு பூரணமாக்கப்படும் போது இலங்கை முன்னொரு போதும் இல்லாத அளவிலான முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும்." விக்கிரமசிங்க இனவாதிகளுக்கு இயைந்து போவது சம்பந்தமான அம்சத்தை சாடைகாட்டி கருத்து தெரிவிக்கையில் பொன்டிவிக் மேலும் கூறியதாவது: "கடந்த 39 ஆண்டுகாலமாக காலாநிதி. ஹமீட்டின் தொகுதியில் இடம்பெற்றவை, இலங்கை மக்கள் குறுகிய மத அல்லது இனக்குழு விவகாரங்களுக்கு மேலாக நின்று கொண்டுள்ளதை சுட்டிக் காட்டுகின்றது. பெளத்த சிங்கள சமூகத்தினரை பெரும்பான்மையினராகக் கொண்டவர்கள் ஒரு முஸ்லீமை தமது பாராளுமன்ற பிரதிநிதியாக திரும்பத் திரும்ப தெரிவு செய்ய முடியுமானால் அது மாபெரும் ஜனநாயக முதிர்ச்சியை சுட்டிக்காட்டுகின்றது." ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினுள்ளான பிளவு தேர்தல் பிரச்சார இயக்கத்துக்கு முன்னோடியாக பொதுஜன முன்னணியின் பிரதான அரசியல் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமைப் பீடத்தில் இரண்டு முக்கியமான மாற்றங்களைச் செய்தது. அரசியலமைப்பு சீர்திருத்த மசோதாவை வரைந்து வந்த காலப்பகுதியில் தலைதூக்கிய வேறுபாடுகளுக்கு ஒட்டுப்போடும் ஒரு நடவடிக்கையாகவே இது செய்யப்பட்டது. முதலாவது, ஜனாதிபதியின் தாயாரும் 84 வயதானவருமான பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் இடத்துக்கு ரட்ணசிரி விக்கிரமநாயக்கா நியமனம் செய்யப்பட்டார். இரண்டாவது, இக்கட்சி இளைஞர் விவகார, விளையாட்டு, சமுர்த்தி (சுபீட்சம்) அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க ஸ்ரீ.ல.சு.க.வின் பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். இந்த வெற்றிடம் மாஜி செயலாளர் காலமானதால் ஏற்பட்டது. அரசுடமை பத்திரிகையான 'டெயிலி நியூஸ்' ஆகஸ்ட் 19ம் திகதிய தனது முன்பக்க அரசியல் ஆய்வில் -புதிய பிரதமர் நியமனம் செய்யப்பட்ட பின்னர்- பின்வருமாறு குறிப்பிட்டது. "ரத்னசிரி விக்கிரமநாயக்கா மாபெரும் திறமையுடன் பெளத்த பிக்குகளுடனான பதட்ட நிலையைத் தணித்தார். அவரது இணக்க ரீதியான அணுகுமுறையும் நம்பிக்கையும் ஸ்ரீ.ல.சு.க. வின் பாரம்பரியமான வாக்காளர் இடையே ஏற்கனவே பலன் தந்துள்ளது. கட்சியில் உள்ள சில அரசியல் சந்தர்ப்பவாதிகள் முற்றிலும் ஸ்ரீ.ல.சு.க. கொள்கைகளின் அடிப்படையில் பொதுஜன முன்னணியை பிளவுபடுத்த எடுத்த முயற்சிகள் வெற்றிகரமான முறையில் முறியடிக்கப்பட்டுள்ளது" என்றது. அரசாங்கத்தின் ஊதுகுழலும் வெகுஜன தொடர்புசாதன அமைச்சர் மங்கள சமரவீரவின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதுமான ஒன்றில் இருந்து வெளிப்பட்ட "பிளவுபடுத்த எடுத்த முயற்சி" என்ற குறிப்பானது பெளத்த சாசன அமைச்சர் லக்ஷ்மன் ஜயக்கொடி, விவசாய அமைச்சர் டீ.எம்.ஜயரத்ன போன்ற சிரேஷ்ட ஸ்ரீ.ல.சு.க. தலைவர்கள் தொடர்பான ஒரு நேரடி விமர்சனமாக கணிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் பிரதமர் பதவி மீது கண் வைத்து இருந்தனர். தாம் நெருக்கடி நிலைமையில் என்றும் கட்சியுடன் நின்று வந்ததாக இவர்கள் கூறிக் கொண்டனர். மறுபுறத்தில், விக்கிரமநாயக்க 1960 பதுகளில் மக்கள் ஐக்கிய முன்னணியில் (MEP) இருந்து ஸ்ரீ.ல.சு.க.வில் சேர்ந்தார். 1980பதுகளில் ஸ்ரீலங்கா மக்கள் கட்சியை அமைக்க குமாரதுங்கவுடன் சேர்ந்து, கட்சியில் இருந்து வெளியேறினார். இவர்கள் இருவரும் மீண்டும் கட்சியில் சேர்ந்தது 1992ல் ஆகும். இக்கட்டுரை ஸ்ரீ.ல.சு.க.வின் "பாரம்பரியமான வாக்காளர்" எனக் கூறுவது விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட பரந்த அளவிலான கிராம்ப்புற குட்டி முதலாளிகளையேயாகும். இவர்கள் பெளத்த சித்தாந்தத்தின் ஆதிக்கத்துக்கு உட்பட்டவர்கள். இவர்களின் சமூக ரீதியான முக்கியத்துவமானது இந்த இரண்டு அமைச்சர்களும்- விவசாயமும், பெளத்தமும்- சிரேஷ்ட கட்சி பெரும் புள்ளிகளை கொண்டுள்ளதன் மூலம் வெளிப்பாடாகின்றது. ஆனால் கிராமப்புற வாழ்க்கையும், பெருமளவுக்கு நகர்ப்புற வாழ்க்கையும் கடந்த இரண்டு தசாப்த காலத்தில் தனியார்மயமாக்கம், சுதந்திர சந்தை கொள்கைகளின் அமுலாக்கத்துடன் பாரிய மாற்றத்துக்கு உள்ளாகியுள்ளன. ஒரு புதிய வசதிகள் கொண்ட மத்தியதர வர்க்கத் தட்டு, பாரம்பரிய வாழ்க்கை முறையிலான வேர்கள் இல்லாமல் தோன்றியுள்ளது. அமைச்சரவையில் உள்ள சமரவீரவும் எஸ்.பி.திசாநாயக்கவும் இந்த தட்டினருடன் மிகவும் நெருக்கமானவர்கள். இது அரசியல் ரீதியில் ஆட்டம் கண்டது; ஆட்சியாளர்களின் பொருளாதார, அரசியல் நெருக்கடி காரணமாக அதிகரித்த அளவில் அவஸ்தைக்கு உள்ளாகியுள்ளது. இதே சமயம் நாடு பூராவும் வறுமை பெருகி வரும் ஒரு நிலையில் திசாநாயக்கவின் அமைச்சின் கீழான 'சமுர்த்தி' வேலைத்திட்டம், வெகுஜனங்களில் வறுமையால் பெரிதும் பீடிக்கப்பட்ட பகுதியினரை மேற்பார்வை செய்யும் பல்லாயிரக் கணக்கான அதிகாரிகளை நியமனம் செய்துள்ளது. உணவு மானியங்களையும், மற்றும் சலுகைகளையும் வழங்கும்படி சிபார்சு செய்யும் அதிகாரங்களை இவர்கள் கொண்டுள்ளனர். இந்த 'சமுர்த்தி' அதிகாரிகள் கடந்த மாகாண சபைத் தேர்தல்களிலும் கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் பல்வேறுபட்ட பகுதிகளிலும் வாக்காளர்களை தூண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டதோடு கள்ளவாக்கு போடும் நடவடிக்கைகளை ஒழுங்கு செய்வதிலும் ஈடுபட்டனர். பொதுஜன முன்னணி அரசாங்கத்துக்கு இவர்களின் சேவை இந்த தேர்தலின் இன்னும் அதிகரித்த அளவில் அவசியமாகியுள்ளது. ஏனெனில் இது சிங்கள பெளத்த தேர்தல் தொகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்ட சிங்கள உறுமய கட்சி போன்ற இனவாத கட்சிகளின் கடும் போட்டியை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஸ்ரீ.ல.சு.க. பொதுச் செயலாளர் பதவிக்கு எஸ்.பி.திசாநாயக தெரிவு செய்யப்பட்டமை பொதுஜன முன்னணி ஆட்சியாளர்கள் வாக்குகளை கைப்பற்ற பெரிதும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் இறங்குவதற்கான ஒரு முக்கிய திருப்பமாக விளங்குகின்றது. ஆகஸ்ட் 22ம் திகதி 'டெயிலி மிரர்' பத்திரிகையின் செய்தி ஆய்வாளர் எழுதியதாவது: "எஸ்.பி.திசாநாயக்க வேலைகளை செய்து முடிக்கும் ஆற்றல் படைத்தவர் எனப் புகழ் பெற்றவர். சிறப்பாக தேர்தலில் வெற்றி ஈட்டுவது. அந்தக் கெளரவம் எவ்வளவுதான் போலியானதாக இருந்தாலும் 1999ம் ஆண்டின் வடமேல் மாகாண சபை தேர்தல், ஜனாதிபதி தேர்தல்களில் வெற்றியீட்டியதற்கான பெருமை அவரையே சாரும். இப்போது எஸ்.பி. கட்சி செயலாளர் என்ற விதத்தில், ஜனாதிபதி தனது உள்நோக்கத்தை தெளிவுபடுத்தியுள்ளார். எதிர்வரும் தேர்தலை எப்பாடுபட்டேனும் வெற்றிகொள்ள பொதுஜன முன்னணி சகல விதத்திலும் முயற்சிக்கும்". ஆனால் இந்த தேர்தல் ஒரு நேர்கோட்டு விவகாரம் அல்ல. திசாநாயக்க, சந்திரிகாவின் வாக்கு உட்பட மத்திய குழுவின் 16வாக்குகளை பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்டவருக்கு 12 வாக்குகள் கிடைத்தன. தோல்வி கண்ட வேட்பாளரான மகாவலி அபிவிருத்தி அமைச்சர் மைத்திரிபால சிறிசேன ஸ்ரீ.ல.சு.க. வில் 1968ல் சேர்ந்தவர். கட்சியின் துணைச் செயலாளராக நீண்டகாலம் செயற்பட்டவர். இவர் கட்சியின் "பாரம்பரிய வாக்காளர்களின்" ஆதரவைப் பெற்றுக் கொண்டதாக சொல்லப்படுகின்றது. மறுபுறத்தில் எஸ்.பி.திசாநாயக்க தமது ஆரம்ப அரசியல் கல்வியை ஒரு மாணவ தலைவராக ஸ்டாலினிச கம்யூனிஸ்ட் கட்சியில் பெற்றதன் பின்னர் 1980பதுகளின் கடைப் பகுதியிலேயே ஸ்ரீ.ல.சு.க.வில் சேர்ந்தார். லங்கா சமசமாஜக் கட்சி, ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சிகளில் உள்ளவர்கள் உட்பட பதவிக்கு வருவதற்கு முன்னர் பிக்குகளின் தலைமை பிக்குகளை தரிசிக்க செல்வது அரசியல்வாதிகளின் ஒரு வழக்காறாகிவிட்டது. இந்த சீர்கெட்டுப்போன வழக்காறு தீவில் பெளத்த மதத்தின் ஆளுமையை வீங்கச் செய்ய துணை போகின்றது. விக்கிரமநாயக்க புதிய பிரதமரானதும் இந்த வழக்காறான ஆசிகளை மல்வத்த பீடத்தைச் சேர்ந்த மகாநாயக்க தேரர்களிடம் பெற்றுக் கொண்டார். ஆனால் இதே பிக்கு திசாநாயக்கவை சந்திக்கவும் புதிய பதவிக்கான ஆசிகளை வழங்கவும் மறுத்துவிட்டார். இதே பிக்குவே இரண்டு வாரங்களுக்கு முன்னர் சந்திரிகா குமாரதுங்க இவரைச் சந்திக்க கண்டிக்கு சென்ற சமயம் அச்சந்திப்பை தவிர்த்துக் கொண்டவர். வருடாந்த பெளத்த விழாவின் (கண்டி பெறஹரவை) முடிவை உத்தியோகபூர்வமாக நிறைவு செய்யவே இவர் சென்றிருந்தார். ஸ்ரீ.ல.சு.க. வினுள் அபிவிருத்தி கண்டுள்ள இந்தப் பிளவுகள் இலங்கையின் முழு அரசியல் அமைப்பினதும் நெருக்கடியினை அப்பட்டமாக எடுத்துக் காட்டியுள்ளது. வாக்களிப்பில் வாக்காளர் பங்கு கொள்வது அதிகரித்த அளவில் வீழ்ச்சி கண்டுவரும் நிலையில் பிரதான முதலாளித்துவக் கட்சிகளிடையேயான தேர்தல் போட்டிகள் இரத்தம் தோய்ந்த மோதுதல்களாகியுள்ளன. வாக்காளர் வாக்களிப்பதை தடுக்கவும் வாக்கு கணக்கெடுப்பில் மோசடிகளை திணிக்கவும் குண்டர் கும்பல்கள் அணிதிரட்டப்படுகின்றன. வழக்கமாக அதிகாரத்தில் உள்ள கட்சி -யூ.என்.பி. அல்லது பொதுஜன முன்னணி- ஒரு குண்டர்களின் யுத்தத்தை நடாத்துவதற்கு பெரிதும் சாதகமான நிலையில் இருந்து கொண்டு உள்ளது.
Copyright
1998-2000 |