World Socialist Web Site www.wsws.org


WSWS: செய்திகள் & ஆய்வுகள்

 

Emergency laws used against Pura Handa Kaluwara by Prasanna Vithanage

Sri Lankan government bans anti-war film

அவசரகாலச் சட்டம் பிரசன்ன வித்தானகேயின் புரஹந்த கலுவர திரைப்படத்துக்கு எதிராக பயன்படுத்தப்பட்டுள்ளது

இலங்கை அரசாங்கம் யுத்த எதிர்ப்பு திரைப்படத்தை தடை செய்துள்ளது

By Diane Sturgess
7 August 2000

Back to screen version

கலையின் கருத்துச் சுதந்திரத்துக்கும் ஜனநாயக உரிமைக்கும் ஒரு நேரடியான தாக்குதலாக. பிரசன்ன வித்தானகேயினால் எழுதப்பட்டு நெறிப்படுத்தப்பட்ட ஒரு அனைத்துலகப் புகழ் பெற்ற திரைப்படமான புரஹந்த கலுவர (பெளர்ணமி தினத்தில் ஒரு மரணம்) திரைப்படத்தை இலங்கையின் பொதுஜன முன்னணி அரசாங்கம் தடைசெய்துள்ளது. இந்த திரைப்படம் ஜூலை 28ம் திகதி திரையிடப்பட இருந்த போதிலும் விசேட பணிகள் அமைச்சின் தலையீட்டின் பேரில் காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏப்பிரல் கடைப் பகுதியில் யாழ்ப்பாணக் குடா நாட்டில் ஏற்பட்ட இராணுவ பின்னடைவுகளைத் தொடர்ந்து அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட அவசரகாலச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட முதல் திரைப்படம் இதுவாகும்.

புரஹந்த கலுவர கடந்த வருடம் சிங்கப்பூர் திரைப்பட விழாவில், சிறந்த நடிகருக்கான விருது உட்பட பரந்தளவிலான அனைத்துலகப் பாராட்டை வெற்றி கொண்ட ஒரு திரைப்படமாகும். இது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு (LTTE) எதிரான 17 வருடகால யுத்தம், ஒரு குருடான ஒடுக்கப்பட்ட ஏழை சிங்கள கிராமத்தவர் மீது ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பான சக்திவாய்ந்த ஒரு சிருஷ்டியாகும். தனது பிரதேசத்தில் தொழில் கிடைக்காத பட்சத்தில் இராணுவத்தில் சேரத் தள்ளப்பட்ட அந்த கிராமவாசியின் மகன், இராணுவ நடவடிக்கையொன்றில் கொல்லப்படுகின்றான். அரசாங்கம் வழங்கிய நஷ்டஈட்டை நிராகரிக்கும் தந்தை, தனது மகன் இறந்து போய்விட்டதையும் நம்ப மறுக்கின்றார்.

பொதுஜன முன்னணியின் விசேட பணிகள் அமைச்சர் சரத் அமுனுகம, விதானகேயின் திரைப்படத்தை ஜூலை 21ம் திகதி தடை செய்தார். படம் திரையிடப்படுவதை நிறுத்துவதற்கு ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட முயற்சி, அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட தொடர்புசாதனங்கள் மீதான தணிக்கை, சட்டத்துக்கு ஒவ்வாதது என மே 3ம் திகதி உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து பலனற்றதாகியது. அரசாங்கத்தின் தொடர்புசாதன தணிக்கைக்கான தகுதிவாய்ந்த அதிகாரி நீதிமன்றத் தீர்ப்பிற்கு இணங்கும் வகையில் குறிப்பிட்டதாவது: தொடர்பு சாதனங்கள் "யுத்தம் சம்பந்தமான" விபரங்களை வெளியிடும் போது "சுய தணிக்கை" யை கடைப்பிடிக்க வேண்டும் அல்லது குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுக்க வேண்டும்.

இந்தத் தீர்ப்பு தேசியத் திரைப்படக் கூட்டுத்தாபனத்துக்கு (NFC) பிரயோகிக்கப்பட்டபோது, பலம்வாய்ந்த பொதுஜன கோரிக்கைகளுக்கு மத்தியில் ஜூலை 28ம் திகதி தொடக்கம் வித்தானகேயின் திரைப்படத்தை வெளியிட திரைப்படக் கூட்டத்தாபனம் தள்ளப்பட்டது.

ஜூலை 17ல், திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் திஸ்ஸ அபேசேகர திரைப்படத்தை வெளியிடுவது தொடர்பான சில பம்மாத்துகளின் பேரில் ஒரு பத்திரிகையாளர் மகாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார். உண்மையில் திரைப்படம் சட்டரீதியில் அல்லது சட்டவிரோதமான தாக்குதல்களுக்கு இலக்காகுமானால் அதைத் பாதுகாப்பதற்கான தயாரிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை என்பதை தே.தி.கூ. தலைவர் தெளிவுபடுத்தினார்.

தகுதிவாய்ந்த அதிகாரியால் அனுப்பிவைக்கப்பட்டிருந்த ஒரு கடிதத்தை திஸ்ஸ அபேசேகர வாசித்தார். அதில், எதிர்காலத்தில் இடம்பெறவிருக்கும் புரஹந்த கலுவர திரையிடல்களுக்கு தேசியத் திரைப்படக் கூட்டுத்தாபனமும் பிரசன்ன வித்தானகேயுமே பொறுப்பு எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. எவ்வாறெனினும் இறுதிப் பொறுப்பு தயாரிப்பாளர் மீதே சுமத்தப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் குறிப்பிட்டார்.

பயமுறுத்தல்களை நிராகரித்த வித்தானகே, திட்டமிட்டபடி ஜூலை 28ம் திகதி திரைப்படம் திரையிடப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

அவர் பத்திரிகையாளர் மகாநாட்டில் உரையாற்றுகையில், 'பொறுப்பு வாய்ந்த பதவியில் உள்ளவர்கள் அதன் பெறுமதியை உணராததனால்' திரைப்படம் அனைத்துலக ரீதியில் பெற்றுக் கொண்ட பரிசில்களையும் பாராட்டுக்களையும் பற்றி நான் பேசப்போவதில்லை. கலைஞர்களின் சொந்தக் கருத்துச் சுதந்திரத்துக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தைப் பற்றி மட்டுமே நான் பேசுவேன். இந்தத் திரைப்படத்தை திரையிடும் போது இராணுவத்தினரின் மனோதிடம் பற்றி எனக்கு அக்கறையில்லை.

இலங்கையில் நான் கண்ட ஆழமான சமூகப் பிரச்சினைகளின் தாக்கத்தை என் திரைப்படத்தின் ஊடாக மீள நிர்மாணம் செய்வதில் நான் தற்போது ஈடுபட்டுள்ளேன். எனது திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாத்திர வார்ப்புகளும் ஏனையவையும் இன்னமும் கிராமங்களில் இடம்பெற்று வருபவை. நான் எனது படத்தை திரையிடாமல் அவர்களின் உண்மையான அபிலாஷைகளை பலவந்தமாக என்னுள் முடக்கிக் கொள்வதா?

அரசாங்கம் சமாதானம் அவசியம் என சொல்லும் போது சமாதானத்திற்காக எதையாவது நிர்மாணிக்கவும், யுத்தம் அவசியம் என சொல்லும்போது யுத்தத்துக்காக எதையாவது நிர்மாணிக்கவும்- கலைஞர்கள் அரசாங்கத்தின் கோரிக்கைகளுக்கு இணங்க திரைப்படங்களை தயாரிக்க வேண்டிய அவசியம் இல்லை.

திரைப்படங்கள் மீதான இனவாதக் குண்டர்களின் தாக்குதல் அச்சுறுத்தல்களின் போது அரசாங்கத்தினதும் திரைப்படக் கூட்டுத்தாபனத்தினதும் பிரதிபலிப்புக்கள் எவ்வாறு அமைய வேண்டும் என ஒரு பத்திரிகையாளர் கேள்வியெழுப்பிய போது, அபேசேகர பல அர்த்தத்தில் குறிப்பிட்டதாவது: "விளம்பரப் பலகைகளுக்கு தீ மூட்டியும் வேறுவிதமான இடையூறுகளையும் ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இறுதி தீர்மானமானது திரைப்படக் கூட்டுத்தாபனத்தினதோ, நீதிமன்றத்தினதோ அல்லது கலைஞனின் கைகளிலோ அல்லாது, மக்களின் கைகளிலேயே உள்ளது. இந்த திரைப்படம் யுத்தத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு உளவியல் தாக்கத்தையோ அல்லது எதேச்சையான கோபத்தையோ தூண்டிவிடுமானால் அதற்கு முகம் கொடுக்க வேண்டி நேரிடும். மனித இனத்திற்கு அவதூறு விளைவிப்பதாக அமையுமானால், மக்களிடமிருந்து தப்பிக்க வழியில்லை."

திரைப்படத்தை தயாரித்த பின்னர் ஒன்றரை வருடகாலமாக தணிக்கை சபைக்கு முன்வைக்காத காரணத்தினால் வித்தானகே "சுய தணிக்கை" செய்துகொண்டதாக அபேசேகர தெரிவித்தார். ஆனால் செய்தியாளர் மகாநாட்டிற்குப் பின்னர், உலக சோசலிச வலைத் தளத்திற்கு வழங்கிய பேட்டியில் வித்தானகே திரைப்படக் கூட்டுத்தாபனத் தலைவரின் கருத்தை நிராகரித்தார்.

"அவர் குறிப்பிடுவது தவறானது. நான் எந்தவித சுய தணிக்கையையும் செய்துகொள்ளவில்லை" என வித்தானகே குறிப்பிட்டார். "இராணுவத்தினரதும், பாதுகாப்பு அமைச்சினதும் விசனத்திற்கு மத்தியில் திரைப்படம் உருவாக்கப்பட்டதனால், தணிக்கை குழு அதனை தடை செய்யும் ஆபத்து நிச்சயம் இருந்து கொண்டுள்ளதை எண்ணி நான் எச்சரிக்கையாக இருந்தேன். சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடுவதன் மூலம் அனைத்துலக அவதானத்தையும் பாராட்டுக்களையும் பயன்படுத்தி உள்நாட்டில் திரையிடுவதற்கு தடைவிதிக்கும் ஆபத்தில் இருந்து தப்பிக்கொள்வதே எனது நோக்கமாக இருந்தது".

ஆனால் பத்திரிகையாளர் மகாநாட்டில் "சுய தணிக்கையை" நிராகரிப்பதாக வித்தானகே அறிவித்த நான்கு நாட்களின் பின்னரும், படம் உத்தியோகபூர்வமாக திரையிடப்பட இருந்த ஒரு வாரத்திற்கு முன்னரும், திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரத்தின் கீழ், திரையிடப்படுவது காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட வேண்டும் என விசேட பணிகளுக்கான அமைச்சர் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு எழுத்து மூலம் பணித்திருந்தார். அமுனுகமவின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது: "நாடு தற்போது யுத்த சூழ்நிலையில் உள்ளதை கருத்தில் கொண்டு இந்த பணிப்புரையை நான் விடுக்கின்றேன்."

தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத யுத்தத்தை நேரடியாக சவால் செய்யும், கிராமப்புற சிங்கள ஏழைகள் மற்றும் இளைஞர்களை துன்பத்தில் ஆழ்த்தும் அரச அதிகாரத்துவத்தினதும் பெளத்த பிக்குகளினதும் நடவடிக்கைகளையும் வெளிக்கொணரும் புரஹந்த கலுவர, தனது யுத்த நடவடிக்கைகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என பொதுஜன முன்னணி அரசாங்கமும் ஏனைய இலங்கையின் ஆளும் வர்க்கங்களும் பீதி கொண்டுள்ளனர். தமிழர் விரோத இனவாதத்தை தூண்டிவிடுவதற்காக, அரசாங்கத்தினாலும் ஏனைய வலதுசாரி குழுக்களினாலும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிராக, தெற்கில் யுத்தத்துக்கு எதிரான சிங்கள மக்களின் எதிர்ப்பும் வளர்ச்சி கண்டுவருகின்றது. இது இராணுவத்தை விட்டு ஓட்டம் பிடிப்பவர்களின் தொகை அதிகரிப்பு, வீழ்ச்சியடைந்து வரும் மனோதிடம், இராணுவத்தினர் பிரிந்து செல்லல் என்பவற்றால் இராணுவத்தினர் மத்தியில் நெருக்கடி உருவாகியுள்ளது.

பங்களாதேஷ், கனடா, பிரான்ஸ், நோர்வே, சுவிற்சலாந்து, துருக்கி, ஐக்கிய அரேபியா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் தொடர்ச்சியாகத் திரையிடப்பட்ட புரஹந்த கலுவர திரைப்படத்தை தடை செய்வதற்கான தீர்மானமானது, அனைத்துலகக் கலைஞர்களுக்கும் ஜனநாயக உரிமைகளுக்கும் எதிராக தொடுக்கப்படும் மோசமான தாக்குதலாக அமைவதோடு, இலங்கையின் தொழிலாளர்- ஒடுக்கப்படும் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான தொடர்ச்சியான தாக்குதல்களுக்கான முன் எச்சரிக்கையாக விளங்குகின்றது. உலக சோசலிச வலைத் தளம் திரைப்படத் தயாரிப்பாளர்கள், கலைஞர்கள், மாணவர்கள் தொழிலாளர்களை அனைத்துலக ரீதியிலும், தேசிய ரீதியிலும் புரஹந்த கலுவர மீதான தடைக்கு எதிர்ப்புத் தெரிவிக்க முன்வருமாறு அழைப்பு விடுக்கும் அதே வேளை, திரைப்படத்தை இலங்கையில் திரையிடுவதற்கு பிரசன்ன வித்தானகேக்கு உள்ள உரிமையைக் காப்பது தொடர்பாக ஒரு நிலைப்பாட்டை எடுக்குமாறும் வேண்டுகின்றது. இந்தத் தடை சவால் செய்யப்பட்டு, தோற்கடிக்கப்படாவிட்டால் அரசாங்கம் தனக்கு ஆபத்தானதாகக் கருதும் அனைத்துலகத் திரைப்படங்களையும் ஏனைய கலைப் படைப்புகளையும் தணிக்கை செய்வதற்கு முயற்சி செய்யும்.

 

உங்களின் கண்டனக் கடிதங்களையும் அறிக்கைகளையும் அஞ்சல் அல்லது பக்ஸ் மூலம் அனுப்புங்கள்:

Sarath Amunugama,
Minister of Rehabilitation, Reconstruction and Development of North
No. 14, Fourth Floor
BOI Building
Sir Baron Jayathilake Mawatha
Colombo 01
Sri Lanka
Fax: 94-1-424109

Thissa Abeysekara
National Film Corporation of Sri Lanka
224 Bauddhaloka Mawatha
Colombo 07
Sri Lanka
Fax: 94-1-585526
E-mail: filmcorporation@net.lk

தயவுசெய்து உங்கள் கண்டனக் கடிதங்களினதும் அறிக்கைகளினதும் பிரதிகளை உலக சோசலிச வலைத்தள முகவரியான editor@wsws.org அனுப்பி வையுங்கள்.

Top of Page

வாசகர்களே: உலக சோசலிச வலைத்தளம்(WSWS ) உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறது. தயவுசெய்து மின்னஞ்சல் அனுப்பவும்.


Copyright 1998-2000
World Socialist Web Site
All rights reserved