World Socialist Web Site www.wsws.org |
WSWS: செய்திகள் & ஆய்வுகள்
Tamil doctor describes suffering in Jaffna யாழ்ப்பாணத்தில் மக்கள் துயரங்களை தமிழ் டாக்டர் விபரிக்கின்றார் By Dianne Sturgess இந்த பேட்டி தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணியாற்றும் யாழ்ப்பாணத்தில் கடமையாற்றிய ஒரு டாக்டருடையதாகும். "நான் இந்த யுத்தத்தை வெறுக்கின்றேன். ஏனையவர்களைப் போல் நானும் சமாதானமாக வாழ விரும்புகின்றேன். நாட்டில் சமாதானம் நிலவுமானால் நான் தொடர்ந்தும் இந்த நாட்டில் சேவை செய்யவதை விரும்புவேன். இல்லையென்றால் இங்கிருந்து என்ன பயன்? இலங்கையின் வடக்கில் உள்ள பிரதான நகரமான யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து கற்று தற்போது கொழும்பில் சேவை புரியும், ஒரு இளம் தமிழ் டாக்டரின் வார்த்தைகள் இவை. ஏனைய தமிழ் இளைஞர்களைப் போலவே, இவரது வாழ்க்கையின் பெரும் பகுதியும் 17 வருடங்களுக்கு முன்னர் 1983ல் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு (LTTE) எதிராக இலங்கை அரசாங்கம் ஆரம்பித்து வைத்த யுத்த நிலைமைகளின் கீழ் கழிந்து சென்றுள்ளது. இலங்கை இராணுவம் முக்கிய இராணுவத் தளமான ஆனையிறவு முகாமை இழந்ததைத் தொடர்ந்து, யாழ்ப்பாணத்தில் உள்ள இவரது உறவினர்களுடனோ அல்லது நண்பர்களுடனோ இவரால் தொடர்பு கொள்ள முடியாமல் உள்ளது. சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான பொதுஜன முன்னணி அரசாங்கம் யாழ்ப்பாணத்தில் உள்ள நிலைமைகளை மூடி மறைப்பதற்காக தொலைபேசி இணைப்புக்களையும் துண்டித்துள்ளது. வைத்தியத் துறையையும் சமூக நிலைமைகளையும பொறுத்தவரை அங்கு அங்கு கடைசியாக வாழ்ந்த போது இருந்ததை விட மிக மோசமான நிலைமைக்கே யாழ்ப்பாண மக்கள் முகம் கொடுப்பார்கள் என்பதை அவர் அறிந்திருந்தார். யாழ்ப்பாணத்தில் மக்களுக்கு வைத்திய வசதிகள் போதுமான அளவு உள்ளதா எனக் கேட்டபோது அவர் கூறியதாவது: "நிச்சயமாக இல்லை. யாழ்ப்பாணத்தில் தனியார் வைத்தியசாலைகள் கிடையாது. மக்களுக்கு அவசியமான வசதிகளைக் கொண்ட ஒரு சுகாதார நிலையம் கூட அங்கு கிடையாது. ஏழையானாலும் சரி பணக்காரனாலும் சரி, அவர்கள் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கே செல்ல வேண்டும். இங்குள்ள ஆஸ்பத்திரிகளுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைந்தளவிலான வசதிகளையே அது கொண்டுள்ளது. "போதுமான அளவு கட்டில்கள், நோய் நிர்ணய பரிசோதனை வசதிகள் கிடையாது. நோயாளர்களை பரிசோதிப்பதற்கு அடிப்படையான உபகரணங்கள் கூட கிடையாது. டோச் (Torches), கண் பரிசோதனை உபகரணம், தொண்டை பரிசோதிக்கும் உபகரணம் போன்ற மின்சார கருவிகளுக்கு பற்றறிகள் கிடையாது. ஆரோக்கிய வசதிகள் பற்றாக்குறையாக உள்ளது. நீங்கள் அங்குள்ள மலசல கூடத்திற்கு சென்றால், மூன்று நாட்களுக்கு உங்களால் சாப்பிட முடியாமல் போவது நிச்சயம். "அரசாங்கம் போதுமான அளவு மருந்துகளை விநியோகிக்க தவறியமை பெரும் பிரச்சினையாக உள்ளது. போதனா வைத்தியசாலைக்கு செஞ்சிலுவைச் சங்க கப்பல் மாத்திரமே மருந்துகளை அங்கு கொண்டு வரும். குறிப்பிட்ட திகதிக்கு கப்பல் வரத் தவறுமானால், தங்கியிருக்கும் நோயாளர்களுக்கும் முக்கியமாக தொடர்ச்சியாக சிகிச்சை பெறும் உயர் இரத்த அழுத்தம், நீரழிவு, வலிப்பு போன்ற நோய்களால் தவிக்கும் கிளினிக் நோயாளர்களுக்கும் அங்கு மருந்துகள் இல்லாமல் போகும். கெப்டோபிரில் (Captopril), இன்பெடிபின் (Nifedepine) போன்ற மருந்துகள் அங்கு ஒரு போதும் கிடைப்பதில்லை. வைத்தியசாலையில் இல்லாத மருந்துகளை நோயாளிகளை வெளியில் வாங்கச் சொன்னால் அது அவர்களால் முடியாத ஒன்று. ஒரு புறம் யாழ்ப்பாணத்தில் மருந்துகள் விலை அதிகம் மறுபுறம், உயர்ந்த வாழ்க்கைச் செலவினால், ஏழைகளால் அதற்குப் பணம் ஒதுக்க முடியாது. "பாரியதும் அவசரமானதுமான சிகிச்சைகளுக்கு உபகரணங்கள் இல்லாமல் போன பல சந்தர்ப்பங்கள் எனக்கு ஞாபகம். எல்லா சாதாரண சத்திர சிகிச்சைகளும் காலம் தாழ்த்தப்படும். மகப்பேறு மற்றும் சிசேரியன் (caesarian) சத்திர சிகிச்சைகளுக்குக் கூட உபகரணங்கள் பற்றாகுறையாக இருந்தது உண்டு. சில அடிப்படையான தேவைகளைக் கூட ஏன் அரசாங்கம் விநியோகிக்கத் தவறுகின்றது என்பது எனக்குப் புரியவில்லை." யாழ்ப்பாணத்தில் வாழ்க்கைச் செலவு எப்போதும் அதிகரித்துக் கொண்டே இருக்கும். "மாத வருமானம் 8,000-9,000 த்தில் கூட யாழ்ப்பாணத்தில் வாழ்க்கை நடாத்துவது கடினம். அரசாங்க ஊழியர்கள் உயிர் பிழைக்க விவசாயம் அல்லது வியாபாரம் செய்வார்கள்." 1995ல் இலங்கை இராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்கு முன்னதாக, விமானப் படையினர் நகரில் பொது மக்கள் வாழும் பிரதேசங்களில் கண்மூடித்தனமாக குண்டுமழை பொழிந்தனர். "ஒரு குண்டு எங்கள் வீட்டிலிருந்து மூன்றாவது வீட்டில் விழுந்தது. விடுதலைப் புலிகளின் (LTTE) முகாமில் இருந்து அரை மைல் தூரத்தில் அது அமைந்திருந்தது. மக்கள் விடுதலைப் புலிகளின் முகாமுக்கு செல்லவேண்டும். ஏனென்றால் அது மாத்திரமே குண்டு போடப்படாத ஒரே இடமாக உள்ளது என ஒரு முறை ஒரு பத்திரிகை கார்ட்டூன் வரைந்திருந்தது." ஒரு முறை இராணுவம் நகரத்தை ஆக்கிரமித்த போது, அவரும் அவரது மருத்துவ மாணவர்களும், பொது மக்களுடன் சேர்ந்து துன்பங்களை அனுபவித்தனர். இலங்கை இராணுவம் எமது ஆண்கள் விடுதியை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டது. எங்களை வாடகை வீடுகளை அல்லது விடுதிகளை தேடிக்கொள்ளுமாறு நெருக்கியது. சில சந்தர்ப்பங்களில் பெண்கள் விடுதியும் கூட ஆக்கிரமிக்கப்பட்டதுண்டு. எங்களுடைய பெண் மாணவிகளை தொந்தரவு செய்த இராணுவத்தினர், பெண் விடுதிகளை அடிக்கடி சோதனையிட்டார்கள். ஒவ்வொரு இளைஞர்களும் விடுதலைப் புலிகளாக (LTTE) கணிக்கப்பட்டதோடு, சில சந்தர்ப்பங்களில் மாணவிகளும் அங்ஙனம் கணிக்கப்பட்டனர். "குறைந்தபட்சம் மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது ஒரு சம்பவம் இடம் பெற்றாலோ இராணுவ தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெறும். குறிப்பிட்ட இடத்தில், 'விடுதலைப் புலி சந்தேக நபர்களை இனங்காணக் கூடிய' 'முகமூடி' அணிந்தவர் முன்னிலையில் மக்கள் அணிவகுத்து நிற்க நெருக்கப்பட்டனர். ஒவ்வொருவரும் கலவரமடைந்தனர். ஏனென்றால் அவர் ஒருவரை சுட்டிக்காட்டினால் அதுதான் அவரது வாழ்க்கையின் முடிவு. "வெய்யிலிலும், தாகத்திலும், பசியிலும் அதேபோல் பயத்துடனும் அனைவரும் ஆறு மணித்தியாலங்களுக்கு மேல் அங்கு நிற்கத் தள்ளப்பட்டனர். சிறு பிள்ளைகளும் குழந்தைகளும் அழுது கொண்டிருந்தன, இளைஞர்கள் மெதுவாக பேசினார்கள். இந்த அடக்குமுறைச் சம்பவங்கள் சிலரை விடுதலைப் புலிகளுடன் சேர்வதைப் பற்றி சிந்திக்கத் தள்ளியது, அல்லது இடம் பெயர்ந்து நாட்டின் வேறெங்காவது சென்று வாழத் தள்ளியது." 1995ல் இராணுவம் (யாழ்ப்பாணக் குடாநாட்டை) கைப்பற்றுவதற்கு முதல், விடுதலைப் புலிகளும் மக்களை மோசமாகவே நடாத்தினர். "விடுதலைப் புலிகள் பணமும் சில பெறுமதியானவற்றையும் எங்களிடமிருந்து பலாத்காரமாக திரட்டிக் கொண்டார்கள். சில சந்தர்ப்பங்களில் நாங்கள் எங்கள் வீடுகளை காலிசெய்ய அல்லது வேறு இடங்களுக்கு மாறி செல்ல வேண்டியிருந்தது. ஒரு முறை அவர்கள் எங்களை அவ்வாறு செய்யச் சொன்னார்கள். அவர்களுக்கு அங்குள்ள பெரும் வர்த்தகர்களுடன் தொடர்புகள் உள்ளன. அவர்களும் கூட (LTTE) வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார்கள். இலங்கை இராணுவத்தோடு ஒப்பிடுகையில் அவர்கள் குறைந்த தொந்தரவுகளையே எமக்கு கொடுத்தார்கள். ஏனென்றால் அவர்கள் இராணுவத்தினரை விட எம்மை அறிவார்கள். ஆனால் பொதுவாக இரண்டும் ஒன்றாகவே இருந்தது. "1995ல் இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பமான வேளையில், விடுதலைப் புலிகள் எங்களை இருப்பிடங்களிலிருந்து சாவகச்சேரிக்கு உடனடியாக இடம் பெயருமாறு அறிவித்தது. நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ, வெளியேறத் தள்ளப்பட்டோம். வயோதிபர்கள் செல்வதற்கு தயங்கிய போதும், விடுதலைப் புலிகள் ஆகாயத்தை நோக்கிச் சுடுவதன் மூலம் அவர்களை இடம்பெயரச் செய்தார்கள். இலங்கை இராணுவத்தின் கடுமையான ஷெல் தாக்குதல்கள் காரணமாக எங்களால் இலகுவில் எடுத்துச் செல்லக் கூடியவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு வீதிக்கு இறங்க வேண்டியதாயிற்று. எங்களால் நடக்க முடியாதளவு வீதிகளில் சன நெருக்கடி நிறைந்திருந்தது. மக்கள் 16 கிலோ மீற்றருக்கும் குறைவான தொலைவில் உள்ள சாவகச்சேரிக்கு செல்ல இரண்டு நாட்கள் பிடித்தது. சிலர் மரணமடைவதையும் சில தாயமார் பாதை ஓரங்களில் குழந்தைகளை பெற்றதையும் அந்த வழியில் கண்டோம். எந்தக் காரணங்கொண்டும் மக்களை பின்வாங்க விடுதலைப் புலிகள் இடமளிக்கவில்லை. "எட்டு மாதங்களின் பின்னர், நாங்கள் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு வரத் தள்ளப்பட்டோம். அப்போது அது இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. எங்களுடைய பெரும்பான்மையான வீடுகளும் வீட்டுத் தளபாடங்களும் நாசமாக்கப்பட்டிருந்தை நாம் கண்டோம். எங்களுடைய சொத்துக்கள், பைசிக்கள்கள் ஏனைய வாகனங்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாலோ அல்லது இராணுவத்தின் ஆதரவாளர்களாலோ கையாடப்பட்டிருந்தது." 1987-1990 காலப்பகுதியில் இந்திய அமைதி காக்கும் படை (IPKF) அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த போதும் இவர் அங்கு வாழ்ந்திருக்கின்றார். இலங்கை அரசாங்கத்தின் ஆட்சியின் கீழும் அதே போல் விடுதலைப் புலிகள் இந்திய அமைதி காக்கும் படையின் கீழும் தனது அனுபவங்களை அவர் பின்வருமாறு தொகுத்துக் கூறினார்: "பல விதமான சர்வாதிகார ஆட்சியின் கீழான சித்திரவதைகளும் ஒடுக்குமுறைகளும் பயமுறுத்தல்களுமே எங்களது அனுபவமாகும். எம் அனைத்து அடிப்படை மனித உரிமைகளும் அவசியங்களும் மறுக்கப்பட்டன." அவரது தொழிற்சங்கமான அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA), அரசாங்கத்தின் யுத்தத்திற்கு ஆதரவளிப்பதையிட்டு அவர் உண்மையில் வெறுப்படைந்திருந்தார். " யுத்தத்திற்கு ஆதரவளிக்கும் அ.வை.அ.சங்கத்தின் நடவடிக்கையை என்னால் அங்கீகரிக்க முடியாது. அ.வை.அ.சங்கம் எந்த ஒரு அரசியல் யந்திரத்துடனும் தொடர்பற்ற ஒரு சுயாதீனமான தொழிற் சங்கம் என முதலில் நாம் நினைத்தோம். ஆனால் அ.வை.அ.சங்கத்தின் தலைமை ஏதோ ஒரு நிச்சயமான அரசியலை கொண்டுள்ளதாக எனக்கு எண்ணத் தோன்றுகின்றது."
Copyright
1998-2000 |