World Socialist Web Site www.wsws.org


WSWS: செய்திகள் & ஆய்வுகள்

 

Sri Lankan government crisis deepens as Kumaratunga "postpones" constitutional reform bill

குமாரதுங்க அரசியலமைப்பு சீர்திருத்த மசோதாவை "ஒத்திவைத்ததை" தொடர்ந்து இலங்கை அரசாங்கத்தின் நெருக்கடி உக்கிரம் கண்டுள்ளது

By K. Ratnayake
9 August 2000

Back to screen version

இலங்கையின் பொதுஜன முன்னணி அரசாங்கம் தனது உத்தேச அரசியலமைப்பு சீர்திருத்த மசோதாவை நேற்று கைவிடத் தள்ளப்பட்டது. இது இலங்கையின் ஆட்சியாளர்களையும் ஆளும் வர்க்கத்தையும் ஒரு ஆழமான அரசியல் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. இந்த அரசியல் தீர்வுப் பொதிக்கு எதிரான இனவாத எதிர்ப்பு அதிகரித்து வந்த நிலையிலும் மூன்றில் இரண்டு பங்கு பாராளுமன்ற பெரும்பான்மையைப் பெறும் சாத்தியம் குடைசாய்ந்து போன நிலையிலும் அரசாங்கக் கட்சியில் இருந்து ஆட்கள் கட்சி தாவும் ஆபத்துக்கள் உருவான நிலையிலும் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இந்தப் புதிய மசோதாவை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். 17 வருடகால உள்நாட்டு யுத்தத்துக்கு முடிவு கட்டி, சமாதானத்தை ஏற்படுத்த இது அத்திவாரமாக அமையும் என அவர் பிரகடனம் செய்திருந்தார். இந்த விவாதம் திங்கட்கிழமை ஆரம்பமாகியதோடு மசோதாவை ஒரு மூன்று நாள் விவாதத்துடன் வாக்கெடுப்பிற்கு விட அவர் முடிவு செய்திருந்தார். எவ்வாறெனினும் நேற்று ஒரு சிரேஷ்ட அமைச்சரும் சபை முதல்வருமான ரத்னசிரி விக்கிரமநாயக்க இம்மசோதாவை வாக்கெடுப்பிற்கு விடாது "காலவரையறைன்றி ஒத்திப்போட" அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் திடீரென அறிவித்தார்.

காடைத்தனங்கள் நிறைந்த பாராளுமன்ற விவாதத்தின் இறுதித் தருணத்தில் பொதுஜன முன்னணி அரசாங்க அமைச்சர்கள் யூ.என்.பி எதிர்க்கட்சி சகாக்களுக்கு விடுத்த அழைப்பு செவியில் ஏறவில்லை. இங்கு உரைநிகழ்த்திய வெளிநாட்டு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் "இந்த நெருக்கடியை தீர்ப்பதற்கான இறுதி சந்தர்ப்பம் இதுவே" என எச்சரிக்கை செய்தார்.

அரசாங்கத்தின் பேரழிவுகளுக்கு யூ.என்.பி.யே காரணம் என பொதுஜன முன்னணி குற்றம் சாட்டியது. தொலைக்காட்சியில் உரை நிகழ்த்திய தகவல் தொலைத் தொடர்பு அமைச்சர் மங்கள சமரவீர, மசோதாவுக்கு சார்பாக வாக்களிக்க இருந்த பாரளுமன்ற உறுப்பினர்களை எதிர்க் கட்சியினர் ஒழித்து வைத்துள்ளதாக குற்றம் சாட்டினார். விடுமுறைகள், காசு, ஆடம்பர வீடுகள், கார்கள் போன்ற லஞ்சங்கள் வழங்கப்பட்டதாக கூறப்பட்ட போதிலும் இரண்டு யூ.என்.பி. பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே அரசாங்க கட்சி பக்கம் திரும்பினர். இது குமாரதுங்க மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறுவதற்கு அவசியமான வாக்குக்களில் மேலும் 10 வாக்குகள் பற்றாக்குறையை ஏற்படுத்தியது.

ஆனால் இந்த மசோதாவின் மரணத்துக்கான நிஜ காரணம், ஆளும் கட்சியினுள்ளான பிளவுகளிலும் முதலாளித்துவ தமிழ் கட்சிகள் தொடர்பான அதனது மூலோபாயத்தின் சரிவிலும் தங்கியுள்ளது.

நேற்றைய தினம் ஒரு சிரேஷ்ட அமைச்சரான மஹிந்த ராஜபக்ச கட்சி அணியில் இருந்து விலகி, சிங்கள சோவினிஸ்டுகளுடன் வெளிவெளியாக இணைந்து கொண்டார். இந்த மசோதா மீதான விவாதம் ஒத்திப்போடப்பட்டது தான் தாமதம் அவர் பாராளுமன்றத்துக்கு வெளியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டக்காரர்கள், பெளத்த பிக்குகள் முன் தோன்றி "பிரச்சினை தீர்க்கப்பட்டு விட்டது" எனத் தெரிவித்தார். அங்கு கூடியிருந்த கூட்டம் அவரை "சிங்கள மாவீரன்" எனக் கூறி கோஷமெழுப்பியது. வெள்ளிக்கிழமை பொதுஜன முன்னணி அரசாங்க பின்னாசன எம்.பி.யான ஜயசேன ராஜகருண, குமாரதுங்கவின் திட்டத்துக்கு எதிராக பாராளுமன்றத்தில் இருந்து இராஜினாமாச் செய்தார். அத்தோடு கடந்த திங்கட்கிழமை பொதுஜன முன்னணி பா.உ. டிக்சன் பெரேரா இந்த மசோதாவுக்கு எதிராக யூ.என்.பி.யுடன் சேர்ந்து கொண்டார்.

இந்த மூன்று கட்சித் தாவுதல்களும் சிங்கள பேரினவாதத்தையும், இனவாதத்தையும் நீண்டகாலமாகவே அடிப்படையாகக் கொண்ட குமாரதுங்கவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) பெளத்த பிக்குமாரின் பிரச்சாரத் தாக்கம் காரணமாக சிதறுண்டு போகத் தொடங்கியுள்ளதை எடுத்துக் காட்டுகின்றது.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு முக்கிய தமிழ் பாராளுமன்றக் கட்சிகளின் ஆதரவும் குமாரதுங்கவுக்கு அவசியமாக இருந்தது. இந்த அரசியலமைப்பு மாற்றங்கள் இந்நாட்டின் வடக்கு- கிழக்கு மாகாணங்களில் அரசாங்க படைகளுக்கு எதிராக ஒரு கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிரிவினைவாத இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகளை (LTTE) ஓரங்கட்டுவதற்கான ஒரு வரையறுக்கப்பட்ட அதிகாரப் பகிர்வு தீர்வினை இவர்களுடன் ஏற்படுத்துவதை இலக்காகக் கொண்டது. எவ்வாறெனினும் கடந்த திங்கட் கிழமை தமிழர் விடுதலைக் கூட்டணியின் (TULF) மத்திய குழு, பொதுஜன முன்னணியின் இம்மசோதாவை எதிர்ப்பதென முடிவு செய்தது. இதை ஆதரிக்குமாறு இந்திய தூதரகத்தினர் செய்த தூண்டுதலுக்கு இடையேயும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் பேசிய தமிழர் விடுதலைக் கூட்டணி எம்.பி.க்கள் சுயாட்சி வேண்டுமெனவும் பேச்சுவார்த்தைகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

தமிழ் சிறுபான்மையினருக்கு வரையறுக்கப்பட்ட அதிகாரங்களை வழங்கும் அரசியலமைப்பு திருத்தங்களுக்கு மேலாக குமாரதுங்க நாட்டின் தேர்தல் முறையை மாற்றியமைக்கும் மற்றொரு மசோதாவையும் கொணர இருந்தார். இன்றைய முறை ஒரு பலம் வாய்ந்த அரசாங்கத்துக்கு தடையாக இருப்பதாகக் கூறி- ஆளும் கட்சி எப்போதும் சிறிய கட்சிகளின் ஆதரவில் தங்கியிருக்க நேரிட்டது குமாரதுங்க பாராளுமன்றத்தில் ஆசனங்களை மேலும் 73ல் அதிகரிப்பதன் மூலம் மொத்த எண்ணிக்கையை 298 ஆக்க திட்டமிட்டிருந்தார். அத்தோடு ஒரு விகிதாசார பிரதிநிதித்துவ முறையையும் அறிமுகம் செய்ய இருந்தார். ஆனால் அவர் இந்த மசோதாவையும் வாபஸ் பெற வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த பாராளுமன்ற விவாதத்துக்கான காலப்பகுதியில் சமீபத்தில் அமைக்கப்பட்ட சிங்கள உறுமய (Sinhala heritage) கட்சி, பெளத்த பிக்குகளின் தேசிய சபை, ஜே.வி.பி. போன்ற சிங்கள பேரினவாத அமைப்புக்கள் புதிய மசோதா தமிழ் சிறுபான்மையினருக்கு நாட்டை "காட்டிக் கொடுப்பதாகும்" என குறிப்பிட்டு இருந்தன.

இந்த சக்திகளுக்கு அடிபணிந்து யூ.என்.பி. அரசியலமைப்பு கலந்துரையாடல்களில் இருந்து விலகிக் கொண்டதோடு, பொதுஜன முன்னணி எல்லாவற்றுக்கும் முதல் இந்த மசோதாவை பெளத்த சங்கத்தினரின் அங்கீகாரத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் எனக் கோரியது.

கடந்த வாரம் பெளத்த உயர் பீடங்களை சேர்ந்த மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியை சந்திக்க மறுத்து விட்டனர். நேற்றைய தினம் பல்வேறு பீடங்களையும் சேர்ந்த நால்வர் எம்.பீ.க்களை மசோதாவை நிராகரிக்கும்படி கோரி கூட்டு கடிதத்தை வரைந்தனர். இதே சமயம் புறக்கோட்டையில் சிங்கள உறுமய கட்சியைச் சேர்ந்த ஒரு பெளத்த பிக்கு "சாகும் வரை உண்ணாவிரதத்தில்" ஈடுபட்டார். சிங்கள உறுமய தலைவர்கள் அரசாங்கம் இந்த மசோதாவை வாபஸ் பெறும் வரை இந்த உண்ணாவிரதம் தொடரும் எனத் தெரிவித்துள்ளனர்.

பொதுஜன முன்னணி அரசாங்கம் அதிகாரப் பகிர்வு மசோதாவை கைவிட்டதை இந்த பாசிச சக்திகள் பெரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றன. சுடச்சுட ஒரு அறிக்கையை வெளியிட்ட ஜே.வி.பி. பெளத்த பிக்குகளின் நடவடிக்கையினாலேயே "வெற்றி சாத்தியமாகியது" என்றது. இதே சமயம் சிங்கள உறுமய கட்சி தமிழர்களுக்கு எதிரான கிளர்ச்சி தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் எனக் கோரியது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் குமாரதுங்க மீண்டும் ஆட்சியை கைக்குள் போட்டுக் கொள்வதற்காக தமிழர் எதிர்ப்பு உணர்வுகளுக்கும் சிங்கள பேரினவாதத்துக்கும் நேரடியாக அழைப்பு விடுத்தார். விடுதலைப் புலிகளின் இராணுவத் தாக்குதலை எதிர் கொள்ளும் பொருட்டு கடந்த மேயில் நாட்டை ஒரு புதிய "யுத்த நிலைமைக்கு" கொணர்ந்ததோடு படு கொடூரமான ஜனநாயக விரோத அவசரகால நிலைமையையும் அறிமுகம் செய்தார். சோவினிஸ்டுகள் சந்திரிகாவின் பின்னால் அணிதிரண்டனர். பொதுஜன முன்னணி அரசாங்கத்தின் பாராளுமன்ற ஆட்டங்கண்ட நிலைமைக்கான உடனடி உரித்தாளர்களாக இவை தென்படுகின்றன.

Top of Page

வாசகர்களே: உலக சோசலிச வலைத்தளம்(WSWS ) உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறது. தயவுசெய்து மின்னஞ்சல் அனுப்பவும்.


Copyright 1998-2000
World Socialist Web Site
All rights reserved